ஆலமரத்து அடியில் கேட்ட சக்தி தேவியின் செய்திகள்  -28
காஷ்மீரில்
கீர் பவானி ஆலயம்

சாந்திப்பிரியா

ஸ்ரீநகரில் இருந்து பதினான்கு மைல் தொலைவில் உள்ள துலா முல்லா எனும் கிராமத்தில் உள்ளது மற்றுமொரு வரலாற்று சிறப்பு மிக்க இந்துக்களின் ஆலயம். துர்கையின் அம்சம் எனக் கூறப்படும் கீர் பவானி எனப்படும் ஆலயம் ஒரு தண்ணீர் ஊற்றின் நடுவில் அமைந்து உள்ளது. அந்த ஊற்றின் பெயர் ராகினி குண்ட என்பது. மிகப் பெரிய ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அந்த இடத்தில் பல சிறு ஆலயங்களும் அதை சுற்றி அமைக்கப்பட்டு உள்ளன. அவை அனைத்தையுமே கீர் பாவானி ஆலயங்கள் என்றே கூறுகிறார்கள். அந்த ஆலயம் உள்ள ஊற்றின் விசேஷம் என்ன எனில் அந்த நீருடைய நிறம் மாறிக்கொண்டே இருக்குமாம். கேட்டது நடக்க உள்ளது என்பதை தெரியப்படுத்த அந்த நீரின் நிறம் கருப்பாக மாறிவிடுமாம். பாகிஸ்தான் நாடு 1965 ஆம் ஆண்டு இந்தியா மீது படையெடுத்த நாளின் சில நாள் முன்னால் அந்த ஊற்றின் நிறம் கருப்பாக மாறி இருந்தது அந்த சக்தி தேவதையின் சக்திக்கு எடுத்துக் காட்டு என்கிறார்கள்.

அந்த தேவியின் பெயரை மகாராக்யா எனவும் அழைகின்றார்கள். ராமாயணம் நடந்தேறிய காலத்தில் ராவணன் அந்த தேவியை ஸ்ரீலங்காவில் வணங்கி பூஜித்து வந்தாராம். ஆனால் அவனுடைய தீய குணங்களைக் கண்ட தேவி அவனை வெறுத்து ஹனுமாரை அழைத்து தன்னை அங்கிருந்து கொண்டு போய் வேறு இடத்தில் விட்டு விடுமாறு கேட்டுக் கொள்ள ஹனுமாரும் அவளை அங்கிருந்து தூக்கி வந்து துலு முல்லாவில் இருந்து தொலைவில் உள்ள சடிபோரா என்ற இடத்தில் வைத்தாராம். அந்த ஆலயம் உள்ள இடத்தை அப்போது ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவனும் கொடுங்கோலன். பிராமணர்களை துன்புறுத்தி வந்தான். அவனால் பல பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அப்போது ஒரு பிராமணரின் கனவில் தோன்றிய தேவி தான் அந்த இடத்தில் உள்ள ஊற்றில் உள்ளதாகவும் தன்னை வெளியில் எடுத்து ஆலயம் அமைக்குமாறும் கூற அவரும் அந்த இடத்தில் பரவலாக இருந்த நீர் தேக்கத்தின் இடையில் இருந்த ஊற்றை கண்டு பிடித்து ஆலயம் அமைத்தாராம். அந்த ஊற்றின் அடியில்தான் ஆலயம் புதைந்து கிடந்ததாகக் கூறுகிறார்கள். அவர் அந்த நாட்டு மன்னனை அவன் செய்து வந்த கொடுமையை எடுத்துக் கூறி சாபமிட அவன் மீது ராஜகுடை மீது இருந்த கம்பு விழுந்து மரணம் அடைய அந்த ஆலயத்தை பின்னர் துலு முல்லாவிற்கு மாற்றி அமைத்தனர்.

 ஆலயத்தில் உள்ள பிற சன்னதிகள் 

அந்த ஆலயத்தின் சக்திக்கு எடுத்துக் காட்டாக இன்னொரு கிராமியக் கதையையும் கூறுகிறார்கள். முன்னர் ஒரு காலத்தில் சக்தி வழிபாட்டை கொண்டு இருந்த சந்நியாசி ஒருவர் அந்த ஆலயம் வருவதற்கு முன்னால் அந்த இடத்தில் வந்து மாமிசம் படைத்து மற்றும் சாராயத்தை ஊற்றி ஒரு தேவியை அங்கு வணங்குவாராம். ஆனால் ஆலயம் வந்தபின் ஒரு முறை அவர் அங்கு வந்து தான் எப்போதும் செய்வதைப் போலவே பூஜை செய்ய அந்த மாமிசங்களும் சாராயமும் பூக்களாக மாறிவிட்டதாம். ஆலயம் உள்ள இடத்தில் உள்ள நீரில் குளித்தால் புனிதமானது என்ற நம்பிக்கை உள்ளது. லட்ஷக்கணக்கில் மக்கள் வந்து அந்த தேவியை வணங்குகிறார்கள்.

 ஆலயக் குளத்தில் பாயசம் ஊற்றி வழிபடும் காட்சி 

பல நூற்றாண்டுகளுக்கு முன்பான அந்த பழைய ஆலயத்தை 1912 ஆம் ஆண்டில்தான் புதிய இடத்தில் கட்டி உள்ளதாகக் கூறுகின்றனர். மகாராக்யா என்ற பெயர் பின்னர் ராகா தேவி எனவும் ஆயிற்றாம். அந்த தேவியை ராமபிரானும் ஸ்ரீலங்காவின் மீது படையெடுத்துச் சென்றபோது வணங்கித் துதித்ததாக கிராமியக் கதை உள்ளது. பக்தர்கள் பாயசம் செய்து வந்து ஆலய ஊற்றில் ஊற்றி வழிபடுவார்கள். ஆகவேதான் அந்த ஆலயம் கீர் பவானி (இந்தியில் கீர் என்றால் பாயசம்) எனப் பெயர் பெற்றது.