சாந்திப்பிரியா 
பாகம்-8

இப்படியாக குளக்கோட்டான் திருக்கோணேஸ்வரர் ஆலயம் அமைத்தப் பின் ஆலய மேற்பார்வைக்காகவும், பூஜை புனஸ்காரங்கள் மற்றும் பிற காரியங்களுக்காகவும் பாதுகாப்புக்குமாக பல இனப் பிரிவினரை பல்வேறு இடங்களிலும் அழைத்து வந்து ஆலயப் பகுதியிலும் அதைத் தொட்டிருந்தப் பகுதியிலும் குடி அமர்த்தினார். பிற தானும் தனது மனைவியான ஆடகசௌந்தரியுடன் அடிக்கடி அந்த ஆலயத்துக்கு வந்து வணங்கிச் சென்றார். அவர்கள் திருகோணமலையையே தலை நகரமாகக் கொண்ட திரிகோணமலை ராஜ்ஜியம் எனும் நகரை உருவாக்கிக் கொண்டு அங்கு ஆண்டு வந்தார்கள்.

நாட்டின் வளத்தை நன்கு கவனிக்க வேண்டும் என்பதினால் அந்தப் பகுதியை வடக்கு, கிழக்கு மற்றும் மத்தியப் பகுதி என மூன்றாகப் பிரித்து அதை உப ஆளுநர்களைக் கொண்டு நிர்வாகித்து வரலானார். அப்படி அவர் ஏற்படுத்திய மத்தியப் பகுதியில் இருந்ததே இன்னொரு திருக்கோணேஸ்வரர் ஆலயம் அமைந்த தம்பலகமலம் எனும் ஊரும் ஆகும். தம்பலகாமம் கிராமத்துள் கால் பதித்ததும், நம் கண்ணில் முதலில் படுவது, பார்க்குமிடமெங்கும் காலத்துக்கும் பசுமை நிறைந்து மரகதக் கம்பளம் விரித்தது போலத் தோற்றமளிக்கும் பச்சை பசேல் என்ற வயல்வெளிகள், பூத்துக் குலுங்கும் நெற்கதிர்கள் , அதை சுற்றிலுமே தண்ணீர் தேங்கி நிற்கும் பெரும் குளமாகவும் அந்த பிரதேசம் காட்சி தரும்.

தான் அழைத்து வந்து குடியேற்றியவர்கள் ஆலய பரிபலனங்களை நெறி முறை தவறாமல் செய்து கொண்டு இருந்ததைக் கண்டு ஆனந்தம் அடைந்து வாழ்ந்து கொண்டு இருந்தபோது ஆடகசௌந்தரி கர்பமுற்று ஒரு நல்ல பிள்ளையைப் பெற்றெடுத்தப் பின், சில காலத்தில் அவள் மரணம் அடைந்து விட்டாள். அதனால் குளக்கோட்டான் வருத்தம் அடைந்தாலும் அவன் மனதில் ஒரு பயம் தோன்றியது. தாம் இவ்வளவு கஷ்டப்பட்டு உருவாக்கிய ராஜ்யத்தில் உள்ள ஆலயத்தை தன் காலத்துக்குப் பிறகும் நன்கு பராமரிக்க வேண்டுமே என்ற பயமே அது. அதனால் தான் சோழ மன்னனாக இருந்தாலும், தனக்கு கீழ் இருந்த பாண்டிய மன்னர்களில் ஒரு இளவரசரை அங்கு வரவழைத்து அவருக்கு பூபாலவன்னிபம் என்ற சிறப்புப் பட்டதைத் தந்து அவரையும் தன் மகனுடன் சேர்த்து தன் ராஜ்யத்தை பரிபாலனம் செய்ய ஆட்சியில் அமர்த்தியப் பின் தான் உலக வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

ஆன்மீக வாழ்வில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு சில காலம் வாழ்ந்திருந்த அவர் ஒரு நாள் மரணம் அடைந்தார். ஆனால் அது மரணம் என அழைக்கப்பட மாட்டாது என்பதற்கு வாய் மொழிக் கதை ஒன்று கூறப்படுகிறது. பெரும் சிவபக்தராகவும் , தேவர்களுக்கு பிரியமானவராக இருந்தவரும், நல்ல உள்ளம் படைத்தவருமான அவர் ஒருநாள் ஆலயத்துக்குள் சென்று கருவறையில் நுழைந்து கதவை மூடக் கொண்டார். அப்படியாக அதற்கு முன்னர் அவர் பல முறை செய்தது உண்டு. கருவறையை மூடிக் கொண்டு பூஜை செய்தப் பின் வெளி வருவார். ஒருநாள் அப்படிப்பட்ட நிலையிலேயே கருவறைக்கு உள்ளே சென்றவர் சிவபெருமானிடம் தன்னை அவர் பாதத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கொண்டார். வெகு நேரம் ஆகியும் குளக்கோட்டான் வெளியில் வரவில்லையே, எந்த விதமான பூஜை செய்யும் ஓசையும் வரவில்லையே என கவலைக் கொண்டவர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது, அங்கு குளக்கோட்டான் காணப்படவில்லை. மாறாக சிவனார் பாதத்தின் அடியில் புத்தம் புதிய தாமரை மலர் மலர்ந்து கிடந்ததைக் கண்டார்கள். அவரை ஆலயத்திலும் வேறு எங்குமே காணவில்லை. மூடிய கருவறைக்குள் புத்தம் புதிய தாமரை மலரும் திடீர் எனத் தோன்றிய அதிசயமும் யாருக்கும் விளங்கவில்லை. ஆனால் மெத்தப் படித்த பண்டிதர்கள் மூலமே நடந்த உண்மையை அறிந்து கொண்டார்கள். குளக்கோட்டான் தேவர்களில் ஒருவராகவே இருந்து மானிட உடலை எடுத்து இந்த ஆலயத்தை நிர்மாணிக்க வந்திருந்தார் என்றும், வந்த காரியம் முடிந்தப் பின் தேவ லோகத்துக்கு சிவன் பாதம் மூலம் சென்று விட்டார் என்றும் அதனால்தான் அவர் உடலை அங்கு காணவில்லை என்றும் ஒரு நம்பிக்கை மீதான கதை உள்ளது.

முன்னர் கூறியபடி திரேதா யுகத்தில் ராவணன் இந்த ஆலயப் பகுதியில் வந்திருந்தபோது, மரணம் அடைந்துவிட்ட அவனுடைய தாயாருக்கு கர்மாக்களை அந்தணர் உருவில் இருந்த விஷ்ணுவின் மூலம் செய்தான். அப்போது விஷ்ணு பகவான் அவனுக்கு அந்த தலத்தின் பெருமைகளை எடுத்துரைத்துக் கொண்டு இருந்தபோது அங்கு ஏழு இடங்களில் தனது தடியினால் தட்டி ஏழு சுனைகளை எழுப்பினார். அதைக் கண்ட ராவணன் வந்துள்ளவர் விஷ்ணு என்பதை அறிந்து கொள்ளாமல் ஒரு அந்தணருக்கு அத்தனை மகிமை உள்ளதா என வியந்தான். பாதாளத்தில் இருந்து எழுந்திருந்த அந்த ஏழு சுனைகளையே விஷ்ணு பகவான் உருவாக்கிய கன்னித் தீர்த்தம் என்கிறார்கள் . அதன் கரையில் இறந்து போன ஆத்மாக்களுக்குப் பிண்டம் இடுவது கங்கையில் பிண்டம் வைப்பதை விட மேலும் சிறப்பானதாகும் என்று கருதப்படுகிறது என்பதற்குக் காரணம் அங்குதான் ராவணனின் தாயாருக்கு ராவணனை பிண்டம் இட வைத்து விஷ்ணு பகவானே அதற்கான கர்மாக்களை ஒரு அந்தணர் உருவில் நடத்தினார் என்பதே. அந்த ஆலயப் பகுதி முழுவதிலுமே உள்ள அனைத்துமே – கட்டிடங்கள், குளங்கள், மண்டபங்கள் என – கட்டி முடிக்கப்பட்ட அனைத்துமே தேவ கணங்களுடன் மனிதர்கள் சேர்ந்து செய்தவை என்பதினால் மேலும் அந்த இடம் சிறப்பு மிக்க ஒன்றாக அமைந்தது.

இந்த நிலையில் பல ஆண்டுகள் கழிந்தன. 1500 ஆண்டு இறுதி கட்டவாக்கு மற்றும் 1600 ஆம் ஆண்டு துவங்கியபோது, போர்த்துகீசியர் – அவர்கள் பறங்கியர் என கூறப்பட்டனர்- தமது நாட்டை விரிவு படுத்திக் கொள்ளும் நோக்கிலும் தமது மதத்தைப் பரப்பும் நோக்கிலும் இலங்கை மீது படையெடுத்து வந்தார்கள். வந்தவர்கள் கண்களில் திருகோணமலைப் பிரதேசத்து ஆலயம் கண்களில் பட்டுவிட அதைக் கண்டு பொறாமைக் கொண்டார்கள்.

….தொடரும்