திருநிலை பெரியாண்டவர் ஆலயம்
சாந்திப்பிரியா
திருக்கழுக்குன்றத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும், செங்கல்பட்டில் இருந்து 14 கிலோ தொலைவிலும், திருப்போரூரில் இருந்து 12 கிலோ தொலைவிலும் உள்ளது திருநிலை பெரியாண்டவர் ஆலயம் . பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்துள்ள ஆலயம் இது. மலைகளும் குன்றுகளும் சூழ்ந்த அடர்ந்த காடு போன்ற பகுதியில் உள்ளது திருநிலை கிராமம். இரு குளங்களின் மத்தியில்- கிழக்கு பகுதியில் ஒரு குளமும் தெற்குப் பக்கத்தில் மற்றொரு ஏரியும் உள்ள இடத்தில்தான் சிவபெருமான் வந்து தன்  பாதத்தைப் பதித்து நின்றார் என்பது தல வரலாற்றின் ஒரு செய்தி. மேலும் அங்கு சுயம்புவாகத் தோன்றிய வரை சுற்றி இருபத்தி ஒரு சிவ கணங்கள் மண் உருண்டை உருவில் அவரை வணங்கியபடி உள்ளன. இவை அனைத்தும் இங்கு வந்தக் கதை சுவையானது.
கைலாயத்தில் ஒரு நாள் சிவபெருமான் பார்வதியோடு அமர்ந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த நாரத முனி  அவர்களை வந்து வணங்கினார். வந்தவர் ஏழேழு உலகங்களிலும் -தேவலோகம் முதல், அனைத்து உலகிலும் அதர்மம் பெருகி விட்டது என்றும், தேவர்களும், தேவகணங்களும் அசுர கணங்களின் தொல்லையை தாங்க முடியாமல் தத்தம் இடங்களை விட்டு ஓடி காட்டிலும், பிற இடங்களிலும் மறைந்தவாறு வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்றும், அதை கட்டுப்படுத்த முடியாமல் திருமால் கஷ்டப்படுவதாகவும், சிவபெருமான் அவருக்கு உதவி அதர்மங்களை ஒழிக்க உதவுமாறு வேண்டிக் கொண்டார்.
 சிவன்  பாதம் 
அதைக் கேட்ட சிவபெருமான் வருத்தம் அடைந்தார். கோபத்தில் அவர் உடலில் வியர்வை வழிந்தது . உடனே  அந்த வியர்வை துளிகளில் இருந்து தனது சக்திகளைக் கொண்ட இருபத்தி ஒரு சிவகணங்களை உருவாக்கினார். சிவபெருமானினால் தோற்றுவிக்கப்பட்ட சிவகணங்கள் சிவன் மற்றும் பார்வதியை வணங்கி நின்று, தாம் என்ன செய்ய வண்டும் என அவரைக் கேட்டு பணிந்து நின்றன. சிவபெருமானும் அவர்களை உடனே அனைத்து உலகங்களுக்கும் சென்று அதர்மங்களை அழித்து விட்டு வருமாறு கூற அந்த சிவகணங்களும் உடனேயே அனைத்து இடங்களுக்கும் சென்று அதர்மங்களை அழித்தப் பின் சிவபெருமானை சென்று தாம் முடித்து விட்ட வேலையைப் பற்றிக் கூறாமல் பூலோகத்துக்கு சென்றுவிட்டன. அந்த சிவகணங்களுக்கு பூலோக மனிதர்களின் பக்திமுறை பிடித்து இருந்ததினால் இன்னும் சில நாட்கள் பூலோகத்தில் தங்கிவிடலாம் என அங்கு வந்தார்கள். அதே நேரத்தில், தமக்கு இட்ட பணியை முடித்து விட்டதாக சிவபெருமானிடம் சென்று கூற வேண்டும் என அவைகளுக்கு தோன்றவில்லை. அந்த சிவபெருமானின் பூதகணங்களுக்கு பூமியில் இன்னமும் சில வேலைகள் மீதம் இருந்தன என்பதினால் அந்த இருபத்தி ஒரு கணங்களும் பூலோகத்துக்கு சென்று அங்கு ஒரு வனப் பகுதியில் வாழத் துவங்கின.  அசுரர்களால் அவதிப்பட்ட தேவர்களும், தெய்வ கணங்களும் அசுரகணங்கள் அழிந்துடன் தத்தம் இடங்களுக்கு மகிழ்ச்சியுடன் திரும்பிச் சென்றார்கள்.

தேவலோகத்தில் அமைதி திரும்பியதும், நாரதரின் அறிவுரையை ஏற்று தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று தம் நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள். அப்போது அவர்கள் அசுரர்களை அழித்த சிவ கணங்களுக்கும் நன்றி தெரிவிக்க அவர்களை தேடிய போது, சிவ கணங்கள் அங்கு இல்லை. ஆகவே அவர்களை தேவர்கள் உடனே சிவபெருமானின் தர்பாருக்கு வருமாறு செய்தி அனுப்ப சிவகணங்களும் அங்கு வந்து சிவனை வணங்கினார்கள். தான் கொடுத்த வேலையை முடித்ததும்  வந்து தமக்கு சேதியை அந்த சிவகணங்கள் சொல்லவில்லை என்பதினால் கோபமுற்ற சிவபெருமானும் தாமதமாக அங்கு வந்து சேர்ந்த சிவ கணங்களை இனி பூமியிலே சென்று  மண்ணாக கிடைக்குமாறு சபித்தார். தாம் செய்துவிட்ட தவற்றுக்கு மனிப்புக் கோரிய சிவகணங்கள் அவரிடம் தம்மை மன்னித்து மீண்டும் சிவகணங்களாக மாற அருள் புரிய வேண்டும் எனக் கேட்டார்கள். சிவபெருமானும் அவர்களை பூமியிலே சென்று மண்ணாகக் கிடந்தால் தான் தக்க சமயத்தில் வந்து அவர்களை ஆசிர்வதித்து மீண்டும் சிவகணங்களாக மாற்றுவதாக உறுதி கூறினார். சிவ கணங்களும் வருத்தத்துடன் பூமிக்கு சென்று விட்டன.

 அங்காள பரமேஸ்வரியாக பார்வதி 
காலம் ஓடியது. மீண்டும் அசுரர்களின் தொல்லை துவங்கியதும் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று அவர்களை அழித்து தம்மைக் காக்குமாறு வேண்டினார்கள். அந்த அசுரர்களில் சுந்தரபத்மன் என்பவன் ஒருவன். அவன் முன்னர் சிவபெருமானிடம் பெற்று இருந்த வரத்தின்படி சிவபெருமான் பூமியிலே மனித அவதாரம் பெற்று சிவன் பாதி- உமை பாதியாக வந்தால் மட்டுமே, அவரால் அவனை அழிக்க முடியும். இப்படியான வினோத  வரம் பெற்று இருந்தவன் இந்திரன் முதலான தேவர்களை விரட்டியடித்து அவர்களின் ஆட்சியை கைப்பற்றி பல வகையில் தொல்லை கொடுத்து வந்தான். ஆகவே சிவபெருமான் மனித உருவெடுத்து அவனை அழிக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்த நாரத முனிவர் நடத்திய நாடகத்தினால் ஒரு  சம்பவம் நடந்தது.
ஒருநாள் கைலாயத்தில் பார்வதி கண்களை மூடியபடி தியானத்தில் இருந்தாள். அதைக் கவனிக்காத சிவபெருமான் அங்கு சென்று அவளிடம் ‘உடனே புறப்படு, அசுரர்களை அழிக்க வேண்டிய நேரம் நமக்கு வந்து விட்டது ‘ என்று அழைத்தார். ஆனால் தியானத்தில் இருந்த பார்வதி அவர் கூறியதைக் கேட்கவில்லை. அதைப் புரிந்து கொள்ளாத கோபமுற்ற சிவபெருமான் தன்னை அவள் அவமதித்துவிட்டால் என நினைத்து, அவளை  பூமியிலே சென்று மனிதப் பிறவி எடுத்து வாழுமாறு சாபம் இட்டார். அவர் கோபமாகக் கூறியது பார்வதியின் காதுகளில் விழ அவளும் அவரை பூமியிலே சென்று மனிதப் பிறவி எடுத்து தன்னுடன் பாதியாக இணையுமாறு திருப்பி சாபமிட சிவபெருமான் அடுத்த வினாடி மனிதனாக மாறி பூலோகம் செல்ல வேண்டியதாகி விட்டது .
பல இடங்களிலும் சுற்றித் திரிந்தவண்ணம் இருந்த அவருடைய இயக்கம் நின்றுவிட மூன்று உலகிலும் இயக்கங்கள் தடைபெறலாயின .உலகமே அழிந்துவிடும் அளவுக்கு நிலைமை செல்லத் துவங்கியது. தேவர்கள் பயந்து நடுங்கினார்கள். யாராலும் சிவனைக் கண்டு பிடிக்கவும் முடியவில்லை. இந்நிலையைக் கண்டு பார்வதி அச்சமுற்றாள். என்ன செய்வது எனப் புரியாமல் சற்றும் தயங்காமல் தனது பெண் சக்தியை உள்ளடக்கிய சூலாயுதத்தை வீசி பூமியில் எறிந்தாள். அது விழும் இடத்தில் இருந்து வெளியேறிச் செல்லும் ஒளிக் கதிர்களால் சிவனார் ஈர்க்கப்பட்டு அங்கு வந்து சேருவார் என்பது அவளுக்கு தெரியும். அதுவும்  பிரகாசமாய் சென்று பூமியில் தற்போது ஆலயம் உள்ள இடத்தில் நிலையாய் நின்றது. சூலாயுதம் வீழ்ந்த வேகத்தில் அந்த இடத்து பூமியில் இருந்து இருபத்தி ஓர் மண் உருண்டைகள் சிதறி சுற்றி விழுந்தன.   அவை ஒவ்வொன்றும் சிவகணங்களாக உருமாறி அங்கேயே சுற்றி அலைந்தவாறு சிவபெருமானின் வருகைக்காக காத்து நின்றன.
 இருபத்தி ஒரு சிவகணங்கள் சுற்றி நிற்க 
சிவலிங்க வடிவில் சிவபெருமான் 
எங்கேயோ இருந்த சூவன் அந்த சூலாயுத ஒளியைக் கண்டு ஓடோடி வந்து அங்கு தனது பாதத்தைப் பதித்து நிலையாக நின்றார். பார்வதியும் ஓடோடி வந்து அவரை வணங்கி நிற்க மண் உருண்டை வடிவில் அங்கு இருந்த சிவ கணங்களும் தமது உருவைப் பெற்று சிவபெருமானை சுற்றி நின்றவாறு அவரை வணங்கி நின்றார்கள். வானில் இருந்து தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். தனது பாதத்தை அங்கு பதித்து நிலையாக நின்ற அந்த இடத்தின் பெயர் திரு+ நிலை = திருநிலை என ஆயிற்று. பெரிய மனிதராக உலகெங்கும் சுற்றி விட்டு இங்கு வந்த சிவபெருமான் பெரிய ஆண்டவர் என்ற பெயரில் பெரியாண்டவராக ஆனார். அங்கு வந்து தன்னை  வழிபட்டு வேண்டுபவர்கள் இருபத்தி ஒரு மண் உருண்டையை வைத்தே தனக்கு பூஜிக்க வேண்டும் என அவர் கூறி அந்த இடத்தில் சாப விமோசனம் பெற்ற சிவகணங்களுக்கும் பெருமை சேர்த்தார். பார்வதியும் சிவனுடன் ஐக்கியமாக, அந்த உருவில் இருந்த சிவபெருமானும் அங்கிருந்து சென்று சுந்தரபத்மனையும் அசுரர்களையும் அழித்து தேவர்களைக் காத்து அருளினார்.
பின்னர் வெகு காலத்துக்குப் பின்னர் அங்கு பெரியாண்டவருக்கு ஆலயம் எழும்பியது. அதில் அண்டத்துக்கும் அன்னையான பார்வதி பார்வதி அங்காள பரமேஸ்வரி ரூபத்தில் வந்து அமர்ந்தாள். ஆலயத்தில் நீண்ட சதுரத்தில் இருபத்தி ஒரு சிவகணங்கலான லிங்கங்கள் சூழ ஒரு பெரியாண்டவரான சிவலிங்கம் உள்ளது காணுவதற்கு அறிய காட்சியாகும்.
இந்த ஆலயத்தின் அருகில் உள்ள சித்தாமிர்த குளத்தில் நீராடி இறைவனை வணங்கி நெய் திபம் ஏற்றினால் குழந்தைகள் இல்லாத எந்த ஒரு  தம்பதியும் குழந்தை பேறு பெருவார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக விளங்குகிறது. அது போல சாப விமோசனங்கள் பெறவும் இங்கு வந்து வேண்டுதல் செய்கிறார்கள்.

 

ஆலய விலாசம் மற்றும் தொடர்ப்பு கொள்ள வேண்டிய முகவரி
Periyandavar Temple
Thirunilai Village, Oragadam post,
Chengalpat Taluk.
Near Thirukkalukundram,
Kanchipuram District,
Pin 603 109
Cell No: 98427 40957
E Mail: egaseeelan28@gmail.com


CONTACT
Mr. G. Egaseelan,
Aalaya Parambarai Nirvagi,
(Temple Trustee)