நைமிசாரண்ய நீதிக் கதை
சாந்திப்பிரியா
 
ஒரு காலத்தில் நைமிசாரண்யத்தில் சௌனர் முதலிய மகா முனிவர்கள் கூடி மோட்ஷம் அடைய சரியான வழி எது என்பதைப் பற்றிய விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அமர்ந்து இருந்த சூதக முனிவரை நோக்கி அவர்கள் கேட்டார்கள் ‘ ஹே பவித்ரமான முனிவரே, புராணங்களிலும், இதிகாசங்களிலும், தர்ம சாஸ்திரத்திலும் பல விதமான நெறி முறைகள் கூறப்பட்டு உள்ளன. மனிதர்களும், ரிஷி முனிவர்களும், ஏன் சன்யாசிகளும் கூட சாஸ்திர சம்பிரதாயங்களிலும், கடவுள் பக்தியிலும் ஈடுபட்டுக் கொண்டு இருந்தாலும், அவர்கள் அனைவருக்குமே இறுதியில் மோட்ஷம் கிடைப்பது இல்லை. சிலருக்கு மட்டுமே அது கிடைக்கின்றது. இந்த கலி காலத்தில் கடவுள் மீது மிக மிக அதிக பக்தி வைத்துக் கொண்டும்,  ஆலய வழிபாட்டை பிரதானமாகக் கொண்டும் இருக்கின்றார்கள். ஊருக்கு ஊர் ஆஸ்ரமங்களும், தெய்வப் பிறவிகளும், மகான்களும் பெருகிக் கொண்டே இருக்கின்றார்கள். ஆலயங்கள் போதாது என்று அங்கெல்லாம் மக்கள் சென்று இறை வழிபாட்டை கடை பிடிக்கிறார்கள். ஆனாலும் கலி காலத்தில் வாழும் மக்கள் அற்பாயுசு உள்ளவர்களாகவும், மந்த புத்தி படைத்தவர்களாகவும், வியாதிகளினால் பீடிக்கப்பட்டும் மன அமைதி இன்றியுமே இருக்கிறார்கள். இவற்றைப் பார்க்கும்போது  பகவான் கண்களை மூடிக் கொண்டு இருக்கின்றாரா என மக்கள் நினைக்க மாட்டார்களா?  இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் எங்களுக்கு விளக்குவீர்களா?” என பௌயமாகக் கேட்டார்கள்.
அவர்கள் அனைவரும் கூறியதைக் கேட்ட  சூதக முனிவர் கூறினார் ‘ ரிஷி, முனிவர்களே, நீங்கள் கூறிய அனைத்துமே உண்மைதான். ஆனால் அவற்றுக்கு மூல காரணம், நம் மனதில் இருந்து நாம் எதை விலக்கி வைத்து இருக்க வேண்டுமோ அதை விலக்கி வைக்காமல் எத்தனைதான் கடவுள் மீது பக்தி செலுத்தி வந்தாலும், பக்தி என்பது வேறு, ஆஸாபாசங்கள், இச்சைகள் வேறு என நாம் நம்மக்குள் நாமே ஒரு எல்லையை வகுத்துக் கொண்டு விட்டதினால்தான் நமக்கு நாம் செலுத்தும் பக்தி முழுமையான பக்தியாக அமைந்து  இருப்பதில்லை. முக்கியமாக பலவிதமான விரும்பத்தகாத உணர்ச்சிகளே மனிதர்களின் மனதில் அலை பாய்ந்து கொண்டும் அவர்களை ஆக்ரமித்திக் கொண்டும்  இருப்பதினால் அவர்கள் எத்தனை விதமான  இறை பக்தியை மேற்கொண்டாலும், அவர்கள் பக்தி முழுமையாக இருப்பது இல்லை. இறை பக்தி செலுத்தும்போது எதை அடக்காவிடிலும் பொருளாசையும், காமத்தையும்  அல்லவா அடக்கிக் கொள்ள வேண்டும். ஆஸாபாசங்கள், இச்சைகள் என நம் மனதை களங்கப்படுத்திக் கொண்டே இருந்து கொண்டு சற்று நேரம் பக்தி செலுத்தி விட்டு  நமக்கு முக்தி வேண்டும், ஆண்டவனின் அருள் வேண்டும்  என எதிர்பார்ப்பது நியாயமில்லையே. ”
அதைக் கேட்டு ”சூதக முனிவரே, நீங்கள் கூறுவது அனைத்தும் சரி. ஒப்புக் கொள்கிறோம். ஆனால் ஆடி-ஓடி ஒய்ந்து விட்டவர்கள் , தினமும் ஆலயங்களுக்கு சென்று வணங்கித் துதித்தபடி, ஆலயங்களில் முழு நேர சேவைகளை செய்தபடி, ஆஸ்ரமங்களில் தன் சேவைகளை தொடர்ந்தபடி  புனிதமான அந்த இடங்களில் தம் வாழ்கையை ஓட்டிக் கொண்டு இருப்பவர்களுக்கு  குடும்பத்தின் மீதான ஆசைகள் வேண்டுமானால் இருக்கலாம், காமங்கள் போன்ற இச்சைகள் எப்படி இருக்க முடியும் ? அது எப்படி அவர்களுக்குப் பொருந்தும் ? அவர்களுக்கும் ஏன் முக்தி கிடைப்பது ?” என சிலர் கேட்டபோது, இதை விளக்க நாரத முனிவர் நடத்திய நாடகத்தைக் கூறுகிறேன் கேளுங்கள் என்று கூறி விட்டு நாரத முனிவர் நடத்திய லீலையைக் கூறினார்.
நாரத  முனிவர்  அஸ்த்தைய தேவனுக்கு  
விளக்குகிறார் 
 
ஒரு முறை அஸ்த்தைய தேவன் என்ற மன்னன் நாரத முனிவரை சந்தித்தான். அவன் திருமாலின் பெரும் பக்தன். திருமாலை வேண்டி பல வரங்களை பெற்றவன். நாரதரை சந்தித்தவருக்கு மேற் கூறிய விஷயம் பற்றிய சந்தேகம் எழுந்ததினால் அதற்கு அவரிடம் விளக்கம் கேட்டார் ” நாரத முனிவரே, எனக்கு ஒரு சந்தேகம். என் நாட்டில் அனைவரும் கடவுள் பக்தி கொண்டு ஆலய வழிபாடுகளை செய்த வண்ணம், சச்சரவின்றி வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். நாட்டில் கொள்ளை இல்லை, கொலை இல்லை, பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்கள், நீதியும் நேர்மையும் தலை தூக்கி நிற்கின்றன. ஆலயங்களிலும், ஆஸ்ரமங்களிலும்  மக்கள் வெள்ளம் அலை மோதியபடி உள்ளது.  மகான்கள் அங்காங்கே பிரவசனம் செய்து மக்களை ஆன்மீகத்தின்பால் ஈர்த்துக் கொண்டு வருகிறார்கள். நான் மேலும் மேலும் ஆலயங்களைக் கட்டுவதில் மன நிம்மதி பெறுகிறேன். ஆனாலும் ஒரு சின்ன சந்தேகம் மனதில் அவ்வப்போது எழுகின்றது. இத்தனை நல்ல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருந்தாலும், என் நாட்டில் கடவுள் மீது மிக மிக அதிக பக்தி வைத்து இருக்கும் மனிதர்கள், ஆலயங்களுக்கு தவறாமல் சென்று வழிபாட்டு பக்திபூர்வமாக உள்ளவர்கள் என அனைவருமே அற்பாயுசு உள்ளவர்களாகவும், மந்த புத்தி படைத்தவர்களாகவும், வியாதிகளினால் பீடிக்கப்பட்டும், மன அமைதியை இழந்துமே காணப்படுகிறார்கள். வீடுகளிலும், நாட்டிலும் சுபீட்ஷம் இல்லை, இவற்றை எல்லாம் பார்க்கும்போது நாம் பக்தி எனும் பெயரில் செல்வத்தை விரயம் செய்து, பொன்னான வாழ்கையையும் வீணாக்கிக் கொள்கிறோமோ என  அவ்வப்போது வெறுப்பு ஏற்படுகின்றது. அதன் காரணம் என்ன என எனக்கு விளக்க வேண்டும்.
நாரதர் சிரித்தார்,” மன்னா நீ கூறுவது சரிதான். நாம் கேட்பதற்கும், பார்ப்பதற்கும், நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் வித்தியாசம் மிக அதிகம். நாம் வெளிப்படையாக தெரிவதை மட்டுமே நம்புகிறோம். எதையும் ஆராய்ந்து பார்ப்பது இல்லை. பக்தி என்பது புனிதமானது. அதை மக்கள் கொச்சைப்படுத்துகிறார்கள். அதனால்தான் பக்தி பெருகுவது போல வெளித் தோற்றம் தந்தாலும், பெருகுவது பக்தி அல்ல, ஆசாபாசங்களும், காமங்களுமே. அது வெளியில் தெரிவது இல்லை. அதனால்தான் எத்தனை ஆலயங்கள் தோன்றினாலும் , கடவுளுக்கு பூஜைகளும், ஹோமங்களும் செய்யப்பட்டாலும், அதில் கலந்து கொள்பவர்கள் அனைவருமே நன்மை பெறுவார்கள் என்பது கிடையாது.  கலிகாலத்தில் ஆலயங்களுக்கும், ஆஸ்ரமங்களுக்கும் செல்வது ஒரு  கௌரவமாக கருதப்படுகிறது. அங்கு செல்வதும் அனைவருமே பக்தி பூர்வமாக வணங்குபவர்கள் அல்ல.  பலருக்கு அந்த இடம் ஒரு பொருட்காட்சி சாலையைப் போல அல்லவா உள்ளது.  தாம் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளாமல் புனிதமான ஆலயங்களில் சென்று இன்னும் பாவங்களை பெருக்கிக் கொள்கிறார்கள். அதனால்தான் எத்தனை ஆலயம் தோன்றினாலும் , பூஜைகளும் செய்தாலும், பக்தி மார்க்கம் பெருகினாலும், உண்மையான பக்தி இல்லாதவரை நல்லவை நடைபெறுவதே இல்லை.  உன் நாட்டில் உள்ளவர்கள் காட்டும் இறை பக்தி எத்தகையது என்பதை பார்த்து விட்டு அதற்கான விடையை நீயே தெரிந்து கொள்  என்றவர் மாறு வேடத்தில் மன்னனை அழைத்துக் கொண்டு சில ஆலயங்களுக்கும் ஆஸ்ரமங்களுக்கும் சென்றார்.
மனசு எங்கே போகிறது  பார்த்தாயா ?
 
ஆலய சன்னதியில் அதிக மக்கள் இல்லை. வந்திருந்தவர்களில் நடுத்தர வயதினர்,  கிழவர்கள்,யுகவதிகள் என பலதரப்பட்டவர்களும் இருந்தார்கள். எடுப்பாக உடை அணிந்து கொண்டு வந்து சன்னதியில் நின்று இருந்தார்கள். அர்ச்சகர் பூஜை செய்தவாறு இருந்தார். உண்மையான பக்தி கொண்டவர்கள் சன்னதியில் இருந்த கடவுளின் சிலையை பார்த்தபடி கண்களை மூடிக் கொண்டு  ஸ்லோகங்களை கூறிக் கொண்டு இருந்தார்கள்.  கண்களை திறந்தாலோ தெய்வ சிலையைத் தவிர வேறு எங்குமே பார்க்கவில்லை. ஆனால்  ஆண்களில் சிலர் அழகிய பெண்களை நோக்கிக் கொண்டும், இடையிடையே பூஜையை நோக்கியவாறும் இருந்தார்கள். பாதி கவனம் சன்னதிக்குள்ளும், பாதி அழகை ரசிப்பதிலுமே இருந்தது. அதில் ஆச்சர்யம் என்ன என்றால், அப்படி இருநிலை கொண்டு இருந்தவர்களில்  சில வயதானவர்களும் அடக்கம். சில நிமிடங்கள்தான் அத்தனை காட்சிகளும், ஆனால் அதிசயமாக அத்தனை பேரும், அர்ச்சகர் மணியடித்தபடி கல்பூர ஹாரத்தி எடுக்கத் துவங்கியதும்  கனவு கலைந்தது போல தெய்வங்களின் சிலையை பார்த்தவாறு பக்தி பூர்வமாக வேண்டி வணங்கினார்கள். அது முடித்ததும், ஆலயவளாகத்துக்குள் மீண்டும் அவரவர்கள் பார்வை அவ்வப்போது அங்காங்கே  திரும்பியது. மொத்தத்தில் பக்தி கால் பாகம், காம எண்ணங்களும் பிற எண்ணங்களும் அலை பாய்ந்து கொண்டு இருந்தது  மீதி பாகம்.
உண்மையான  பக்தி இல்லாமல் இல்லை. 
அதுவும் சிலரிடம் உள்ளது.
பெண்கள் பக்கம் நோக்கினாலோ, அவர்களில் உண்மையான பக்தி கொண்டவர்கள் சன்னதியில் இருந்த கடவுளின் சிலையை விட்டு தனது கண்களை அசைக்கவில்லை. ஆனால் வேறு சிலரோ வைத்த  கண்ணனை நகர்த்தாமல் மற்றப் பெண்கள் அணிந்து இருந்த புடவைகளையும், நகைகளையும் பார்த்தவாறு இருந்தபடி, இடையிடையே கடவுள் சன்னதியை நோக்கிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் அணிந்து இருந்த உடையோ காம உணர்ச்சியை தூண்டுவதாகவே இருந்தது. அவர்கள் பாவனையோ அழகை வெளிப்படுத்தவே அங்கு வந்தது போல இருந்தது.
வயதானவர்களோ நடுநடுவே எதையோ பேசிக் கொண்டே அவ்வபோபது சன்னதிக்குள் நோக்கியபடி இருந்தார்கள். இந்த காட்சியும் சில நிமிடங்கள்தான் என்றாலும்  அர்ச்சகர் மணியடித்தபடி கல்பூர ஹாரத்தி எடுக்கத் துவங்க அந்த சப்தத்தைக் கேட்டு  கனவு கலைந்தது போல தெய்வங்களின் சிலையை பார்த்தவாறு நின்றபடி பக்தி பூர்வமாக வேண்டி வணங்கினார்கள். அது முடித்ததும், மீண்டும் அவரவர்கள் பார்வை மீண்டும் அவ்வப்போது அங்கும் இங்கும் அலைந்தது. மொத்தத்தில் பக்தி கால் பாகம், காம எண்ணங்களும் பிற எண்ணங்களும் அலை பாய்ந்து கொண்டு இருந்தது  மீதி பாகம்.
நாரதர் சிரித்துக் கொண்டே அந்த சஞ்சலமான இருத்தலை மக்கள் மனதில் ஓடுவது என்ன என்பதையும், அவர்கள் என்ன பேசிக் கொண்டு  இருக்கிறார்கள் என்பதையும்  உனக்குக் காட்டுகிறேன் பார் என்று கூறியபடி அவனை கண்களை மூடிக் கொண்டு அமருமாறு கூறினார். மூடிக் கொண்ட மன்னன் கண்களுக்குள் ஆலயக்  காட்சிகள் தெரிந்தன.
ஒருவன் நினைத்தான் ”ஆஹா, எத்தனை எடுப்பாக அவள் இருக்கிறாள், எனக்கு இப்படி ஒருவள் கிடைத்தால்….”
இன்னொருவன் அவள் அங்க அவயங்களை வெகுவாக ரசித்துக் கொண்டு இருந்தான்.
இன்னொருவன் அங்கிருந்த இரண்டு பெண்களின்- தாயும், மகளையும் – பார்த்து அவர்களின் நடை அழகையும், முக அழகையும் எடைப் போட்டுக் கொண்டு அவர்கள் எண்டு இருப்பார்கள் என எண்ணியவாறு இருந்தான்.
அடுத்து பெண்களின் காட்சி தெரிந்தது:
ஒருவள் தன் தோழியிடம் சற்று தள்ளி நின்று கொண்டு இருந்தவளைக் சைகையால் காட்டி கூறிக் கொண்டு இருந்தாள் ” அவள் காதில் உள்ளது எட்டுக் கல் பேஸரியை பார்த்தாயா?”
இன்னொருவள் மனதில் ”ஆஹா…அந்தப் புடவையை எங்கே வாங்கி இருப்பாள்? ”
இன்னொருவள் ” அந்தப் பையனின் டிரஸ் அழகாக இருக்கிறது இல்லை? ”
வயதானவர்கள் காட்சி:
ஒருவள் இன்னொருவளிடம் கூறிக் கொண்டு இருந்தால் ‘வரவர என் நாட்டுப் பெண் ஒழுங்காக சமைப்பதே இல்லை. ஊரை சுற்றிக் கொண்டே இருக்கிறாள். தரித்திரம் என் பிராணன் போகிறது  ‘
இன்னொருவள் ‘ இந்த மாசம் என்ன செய்வது என்றே தெரியலை. ஏகப்பட்ட செலவு. இதில் ஊருக்கு வேறு பணம் அனுப்பனும்’.
இன்னொருவர் ‘ பேசாமல் வயதானோர் இல்லத்துக்கு போய் விடு என்று என் மகன் கூறுகிறான். வீட்டில் நிலைமையே சரி இல்லை’.
இப்படியே பல விதமான தேவை அற்ற சம்பாஷணைகள்.
ஆனால் அதே சமயத்தில் பக்தி பூர்வமாக வேண்டிக் கொண்டு இருந்தவர்கள் மனதில் கடவுளை வேண்டிக் கொண்டே இருந்தார்கள் ‘ தெய்வமே, என் பிரச்சனையை நீதான் தீர்த்து வைக்க வேண்டும். உனக்கு உண்டியலில் காசு போடுகிறேன், விரதம் எடுக்கிறேன், நீதான் எனக்கு வழிகாட்ட வேண்டும்’ . அவர்கள் மனதை அங்கு முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு இருந்தது கடவுளே.
நாரதர் கூறினார் ‘பார்த்தாயா மன்னா, இதைதான் பக்தி என்கிறாயா ?’ மன்னன் வெட்கி தலை குனிந்து கொண்டான். அவனால் பதில் தர முடியவில்லை. நாரதர் மீண்டும் கூறினார் ‘ மன்னா பக்தி என்பது ஆத்மார்த்தமாக வர வேண்டும். மனதில் ஆழமாக இருக்க வேண்டும் . குடும்பஸ்தர்கள் அவரவர் வீட்டில் அவரவர் கடமையை செய்து கொண்டு இருந்தாலும்- கணவனாக மனைவியுடனும், மனைவியாக கணவனிடமும் தந்தையாக குழந்தைகளிடமும், மனிதாபிமான மிக்க மனிதர்களாக சமூகத்திலும் இருக்க வேண்டும். கணவன்-மனைவிக்கு இடையே உருவாகும் காமத்தையும், ஆசைகளையும், ஆசாபாசங்களையும், விருப்பு வெறுப்புக்களையும்  ஆலய சன்னதியிலும் , பூஜைகள் நடைபெறும் இடங்களிலும், யாகசாலைகளிலும் வெளிப்படுத்தலாமா?  ஆலய சன்னதிகள் வீண் பேச்சு பேசுவதற்கான இடம் அல்ல.  அங்கு இறைவன் தியானத்தை தவிர வேறு எதுவுமே இல்லாமல் இருந்தால்தான் அது பக்தி என்பதாகும். வீட்டிலே உள்ள பிரச்சனைகளை ஆலயத்தில் தெய்வத்திடம் கூறாமல் அவரவர் பேசிக் கொண்டு இருந்தால் எப்படி ? அதை வெளியிலேயே பேசிக் கொள்ளலாமே. இப்படியாக புனித இடங்களில் செய்யும் தவறுகளினால் அவர்களுடைய பாபங்கள் அதிகரித்துக் கொண்டேதான் போகின்றனவே தவிர, குறைவதே இல்லை.கடவுளின் அருள் கிட்டுவதும்  இல்லை. எப்போது இப்படிப்பட்ட காம, ஆசாபாச மற்றும் பிற உணர்வுகளை நம்மால் புனித இடங்களில் கூட அடக்க முடியவில்லையோ, கடவுள் எனக்கு கருணைக் காட்டுவதில்லை என்று அவர்கள் கடவுளை நொந்து என்னப் பயன் ? அவர்களுக்கு முக்திதான் கிடைக்குமா ?
சூதக முனிவர் இந்தக் கதையைக் கூறிவிட்டு கேட்டார் ” இது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?” முனிவர்கள் மௌனம் சாதித்தார்கள்.
–பின் குறிப்பு: – இந்தக் கதை காலத்துக்கு ஏற்ப  சிறிது மாற்றம் 
செய்து தரப்பட்டு உள்ளது . மன்னிக்கவும்   —