கோள் தீர்த்த
விநாயகர் கதை
சாந்திப்பிரியா
சாந்திப்பிரியா
நவகிரக ஆலயங்களில் கும்பகோணத்தில் உள்ள சூரியனார் ஆலயம் செல்லும் முன் திருமங்கலக்குடி என்ற ஆலயத்துக்கே முதலில் சென்று பிரார்த்தனையை தொடர வேண்டும் என்பது ஒரு விதி. அந்த ஆலயத்தில் முக்கியமாக முதலில் ஆலயத்தில் உள்ள கோள் தீர்த்த விநாயகரை வணங்க வேண்டும். அந்த கோள் தீர்த்த விநாயகர் யார் ? அவர் கதை இது.
முன்னொரு காலத்தில் பல ரிஷி முனிவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஹிமய மலையின் ஒரு மலைப் பிரதேசத்தில் தவத்தில் இருந்தார்கள். அவர்களில் கால முனிவர் என்பவரும் ஒருவர். அவர் கடந்த காலம், தற்காலம் மற்றும் வரும் காலத்தை பற்றி ஜோதிடம் கூறக் கூடிய தன்மை கொண்டவர். அப்போது அந்த முனிவர்களில் ஒருவர் அனைவரது வரும் காலத்தையும் தெரிவிக்கும் அவருடைய வரும் காலத்தைப் பற்றிக் நினைத்துப் பார்த்தது உண்டா எனக் கேட்டார். அதனால் அந்த கால முனிவர் வரும் காலத்தில் தன்னுடைய நிலை என்ன என பார்த்தார். அதைப் பார்த்தவர் துணுக்குற்றார். காரணம் அவர் பூர்வ ஜென்மத்தில் தவளையின் கால்களை சமைத்து உண்டு இருந்ததினால் அந்த தவளையின் மீது பரிதாபப்பட்ட பிரும்மா இந்தப் பிறவியின் கடைசி காலத்தில் அவர் தொழு நோயாளியாக வேண்டும் என சாபம் கொடுத்து இருந்ததே. அதை தெரிந்து கொண்டவர் மனம் ஒடிந்து போனார். ஆனால் அந்த முனிவர்களில் நல்ல விவேகியான ஒருவர் அவரை அது குறித்து கவலைக் கொள்ளாமல் தெற்குப் பக்கம் சென்று நவக்கிரகங்களின் வழிபாட்டை மேற்கொண்டால் அந்த சாபத்தில் இருந்து அவர் மீளலாம் என கூறினார். அந்த அறிவுரையை கேட்டு கால முனிவர் தென் நாட்டிற்கு வந்து திருமங்கலக்குடி உள்ள இடத்துக்கு வந்து நவகோள்களை வேண்டிக் கொண்டு தவம் இருந்தார். அவர் தவத்தை மெச்சிய கோள்கள் அவர்முன் தோன்றி அவருக்கு என்ன வேண்டும் எனக் கேட்க அவர் தன் நிலையை கூறினார். அவர் வேண்டுகோளை ஏற்று அவருக்கு சாப விமோசனம் தருவதாக அவர்கள் வாக்கு தர அதைக் கேட்ட பிரும்மா கோபம் அடைந்தார். அவர் நவக்கிரகங்கள் பூமியில் தனித்தனியாக பிறந்து தொழு நோயால் அவதிப் படவேண்டும் என அவர்களுக்கு சாபமிட்டார்.
அவர்கள் பிரும்மாவிடம் தம்மை மன்னித்துவிடுமாறுக் கேட்க அவரும் அவர்களை பூமிக்குச் சென்று அர்காவனம் எனும் இடத்தில் காவேரி நதிக்கரையில் எழுபத்தி எட்டு திங்கள் கிழமை விரதம் இருந்து மங்களாம்பிகை ( பார்வதி) சமேத பிரணவர்தரை ( சிவன்) வேண்டிக்கொண்டு சாப விமோசனம் பெறுமாறு கூறினார். அவர்களும் அந்த இடத்துக்குச் சென்று தொழு நோயாளியாயினர். அவர்க்குள் அங்கிருந்த அகஸ்திய முனிவரின் அறிவுரையைக்கு ஏற்ப அவர்கள் செய்யும் தவத்துக்கு இடையூறு இல்லாமல் வேண்டுகோள் நிறைவேற கோலங்களை தீர்க்கும் ஒரு விநாயகரை உருவாக்கி வைத்து முதலில் அவரை வணங்கிவிட்டே தமது விரதத்தை செய்து வந்தனர். விநாயகரும் அவர்களின் தவங்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் தான் பார்த்துக் கொள்வதாக உறுதி கூறினார். கால முனிவரும் அவர்களுடன் சேர்ந்து அந்த இடத்தில் தவம் இருக்க அனைவரது சாபங்களும் எந்த விதமான தடங்கல்களும் இல்லாமல் நடந்து முடிய சிவ -பார்வதி அவர்கள் முன் தோன்றி சாப விமோசனம் தந்தனர். அதன் பின் அவர்களை அந்த இடங்களிலேயே குடி கொண்டு பக்தர்களுக்கு நவகிரக தொல்லைகளினால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்குன்மாறு கூறினார்கள். அந்த ஒன்பது கிரகங்களும் அதை ஏற்று அந்த இடத்தை சுற்றி பல இடங்களில் இடம் பிடித்துக் கொண்டு அமர்ந்தனர். அவர்களுக்கு தலைவரான சூரியனார் தன்னை வந்து வேண்டும் பக்தர்களை முதலில் கோள் தீர்த்த விநாயகரை தொழுத பின்னரே தன்னிடம் வர வேண்டும் எனக் கட்டளை இட்டார். அந்த வினாயகரே கோள் தீர்த்த விநாயகர் என்ற உருவில் திருமங்கலக்குடி ஆலயத்தில் மங்களாம்பிகை சமேத பிரணவர்தருடன் எழுந்தருளி இருக்கின்றார்.