திக்குவாய் முனிவர் சொன்ன புராணக் கதை 
வசிஷ்டரின் சாபமும்
பீஷ்மர் பெற்ற சாப விமோசனமும் 
சாந்திப்பிரியா

முன்னொரு காலத்தில் தேவலோகத்தில் அஷ்டவசு எனும் எட்டு கண தேவதைகள் இருந்தார்கள். அவர்கள் தக்ஷனின் இன்னொரு மகளான வசு என்பவளுக்குப் பிறந்தவர்கள் . அவர்களை காஷ்யப முனிவருக்குப் பிறந்தவர்கள் என்று இன்னொரு புராணக் கதை உள்ளது. திருமண வயதை அடைந்ததும் அவர்கள் எட்டு பேருக்கும் திருமணம் நடந்தது. அவரவர் மனைவிகளுடன் ஆனந்தமான வாழ்கையை அனுபவித்து வந்தார்கள். ஒற்றுமையாக ஒன்றாகவே அங்கும் இங்கும் சுற்றித் திரிந்தார்கள். இப்படியாக அவர்கள் சுற்றித் திரிந்து கொண்டு இருந்தபோது அவர்களில் ஒருவருடைய மனைவி வசிஷ்டரிடம் இருந்த காமதேனுப் பசுவிற்கு இணையான நந்தினி எனும் பசுவை பார்த்தாள். அதன் அழகில் மயங்கியவள் அதை அடைய ஆசைப் பட்டாள். ஆனால் அதை வசிஷ்டரிடம் இருந்து எப்படிப் பெறுவது. அவர் அதைத் தரமாட்டார். அவருடன் அவர்கள் சண்டைப் போடவும் முடியாது. காரணம் தேவலோகத்தில் வசிஷ்ட முனிவருடன் சண்டை போடுவதை யாரும் அனுமதிக்க மாட்டார்கள். அதனால் வேறு வழித் தெரியாமல் அவளுடைய கணவர் அதை ஒரு நாள் அந்தப் பசுவை திருடிக் கொண்டு வந்து விட்டார். மற்றவர்கள் அதற்கு உதவினார்கள். ஆனால் வசிஷ்டரால் அதைக் கண்டு பிடிக்க முடியாதா என்ன? ஞானக் கண்ணால் நடந்ததை அறிந்து கொண்டு அவர்களை அழைத்து சபித்தார். அவர்கள் அனைவரும் பூமியில் சென்று மனிதர்களாகப் பிறக்க வேண்டும் என்பதே அந்த சாபம். அவர்களுக்கு பூமியிலே சென்று மனிதராக வாழ விருப்பம் இல்லை. என்னதான் இருந்தாலும் தேவ கணங்கள் அல்லவா. ஆகவே தாம் செய்த தவறை உணர்ந்து கொண்ட அவர்கள் வசிஷ்டரிடம் சென்று மன்னிப்புக் கேட்டார்கள். அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அவர் தனது சாபத்தை சற்று தளர்த்திக் கொண்டார். அதன்படி அவர்கள் பூமியில் சென்று மனிதர்களாகப் பிறப்பார்கள். பிறந்த உடனே அவர்களில் ஏழு பேர்கள் மரணத்தை அடைந்து மீண்டும் தேவலோகத்து கணங்களாக சென்று விடுவார்கள். ஆனால் அந்தப் பசுவை உண்மையாகத் திருடியவர் பூமியில் பெரும் மனத் துயரை அனுபவித்தப் பின்னரே மரணம் அடைந்து தேவலோகத்துக்குத் திரும்புவார் .இப்படியாக சாபம் பெற்றவர்களில் பூமியிலே மனத் துயரை அடைந்து அதன் பின் மரணம் அடைய சாபம் பெற்றவர் வேறு யாரும் அல்ல. அவரே மகாபாரத கதாநாயகர்களில் ஒருவரான பீஷ்ம பிதாமகன்.

அஷ்டவசுக்களுக்கு சாப விமோசனம் 
பெற உதவிய   கங்கா  தேவி   

மற்றவர்களுக்கு சாப விமோசனம் எப்படி கிடைத்தது ?

அந்த அஷ்டவசுக்கள் கங்கா தேவியிடம் சென்று தமது சங்கடத்தைக் கூறி அதற்க்கு உதவுமாறு அவளை வேண்டினார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு உதவ கங்காதேவி முன் வந்தாள் . அதற்கேற்ப பூமியிலே ஒரு அழகிய மங்கையாக அவள் பிறப்பு எடுத்து சான்தனு மன்னனின் தந்தையின் முன்னால் வேண்டும் என்றே சென்று அவரிடம் வேடிக்கையாக விளையாட்டுக் காட்டி அந்த விளையாட்டின் முடிவில் மன்னனின் விருப்பபடி அவரது மகனான சன்தனுவை மணம் செய்து கொள்ள சம்மதித்தாள். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை போட்டாள் . அது என்ன நிபந்தனை ? தனக்குப் பிறக்கும் குழந்தைகளை தான் நதியில் வீசி எறிந்து விடுவேன் என்றும், அதன் காரணத்தை தன்னால் கூற முடியாது என்றும், தான் செய்ய உள்ள அந்த செயலை அதற்கான காரணத்தைக் கேட்டு சந்தனு அதை தடுக்கக் கூடாது என்பது நிபந்தனை. அதை ஏற்றுக் கொண்ட மன்னனும், சந்தனுவும் திருமணத்துக்கு சம்மதிக்க அவர்களின் திருமணம் நடந்து முடிந்தது. சந்தனுவை மணந்த கங்கா தேவிக்கு எட்டுக் குழந்தைகள் பிறந்தன. ஒவ்வொரு குழந்தைப் பிறந்தபோதும் அவள் அவற்றை நதியில் தூக்கி வீசி எறிந்து விட அவை மரணம் அடைந்து தேவ லோகத்துக்கு சென்றன . அந்த செயலைக் கண்டு மிக அதிகமான துக்கத்தை அடைந்தாலும் சந்தனுவும் அதற்கான காரணத்தை அவளிடம் கேட்கவில்லை. என்ன இருந்தாலும் பிறந்தப் பச்சிளக் குழந்தையை உயிருடன் நதியில் வீசி எறிந்தால் எப்படி அதைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியும்? இப்படியாக ஏழு குழந்தைகளும் பலியாக எட்டாவது குழந்தை பிறந்தது.

 பீஷ்மர் 

பிறந்த எட்டாவது குழந்தையை அவள் நதியில் எறியப் போனபோது ஏற்கனவே ஏழு குழந்தைகளை பறிகொடுத்த துக்கத்தை தாங்க முடியாமல் இருந்த சந்தனு அவள் வீசி எறிந்த எட்டாவதுக் குழந்தையையை தாவிப் பிடித்து விட குழந்தை பிழைத்தது. உடனே கங்கா தேவியும் மறைந்து போனாள். இப்படியாக உயிர் பிழைத்த எட்டாவது குழந்தையே பீஷ்மராக வளர்ந்தது. அதன் பின் அவர் யுத்தத்தில் அர்ஜுனனின் அம்பினால் உயிர் இழந்து மரணம் அடைந்து தேவலோகம் சென்ற கதை மகாபாரதத்தில் உள்ளது.