ஸ்ரீமான் நிம்பாசல
நரசிம்மர்- ஆந்திரா
சாந்திப்பிரியா
ஸ்ரீமான் நிம்பாசல நரசிம்மர் ஆலயம்  எனப்படும் இந்த ஆலயம் நிஜாமாபாத் எனும் மாவட்டத்தில் உள்ள பீம்கல் எனும் தாலுக்காவின் மலைப் பகுதியான லிம்பாத்ரி கட்டா எனும் மலை மீது உள்ளது . பல ஊர்களில் இருந்து நேரடியாக நிஜாமாபாத்திற்குச் செல்ல ரயில் தொடர்பு உள்ளது. நிஜாமாபாத்தில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆலயத்துக்குச் சுலபமாகச் செல்ல முடியும்.
பிரும்ம வார்த்தக புராணத்தில் வரும் ஸ்ரீமான் நிம்பாசல மகாத்மியம் எனும் ஸ்தல புராண தலைப்பில் ஸ்ரீமான் நிம்பாசல நரசிம்மரின் அவதாரம் குறித்துக் கூறப்பட்டு உள்ளது. இந்த ஸ்தலப் புராணத்தின்படி தம்மை வேண்டி வணங்கித் தவமிருந்த பிரும்மா மற்றும் பிரஹலாதரின் வேண்டுகோளை ஏற்று நரசிம்மர் அவதாரத்தில் இருந்த விஷ்ணு பகவான் இங்கு உள்ள ஆலயத்தில் குடி இருக்க சம்மதித்தாராம்.
ஹிரண்யகசிபுவை வதம் செய்தப் பின் உக்ரஹமாக இங்கு வந்த நரசிம்மர் சாந்தமானார். ஹிரண்ய கசிபு வேறு யாரும் அல்ல. வைகுண்டத்தில் அவர் அரண்மனையின் காவலர்களாக இருந்த ஜெயா-விஜயா என்பவர்கள் ஒருமுறை பிரும்மாவின் மானச புத்திரரை அவமானப்படுத்தியதினால் ஏழு ஜென்மங்கள் மனிதப் பிறவி எடுக்குமாறு பிரும்மா சாபம் கொடுத்து விட்டார். அவர்களால் விஷ்ணுவைப் பிரிந்து ஏழு ஜென்மங்கள் இருக்க முடியாது என்பதினால்  நடந்த தவறுக்கு  விஷ்ணுவிடம் சென்று மன்னிப்புக்  கேட்க அவரும் ஒரு நிபந்தனையுடன்அந்த ஏழு ஜென்மத்தை மூன்று ஜென்மங்களாகக் குறைத்தார். அதாவது அவர்கள் மூன்றுப் பிறவிகளில் மூன்று அசுரர்களாக பிறவி எடுத்து விஷ்ணுவின் கையால் மடிவார்கள். அப்படிப்பட்ட  ஒரு பிறவியில் அவர்கள் எடுத்த உருவே ஹிரண்யகசிபு. ஆகவே விஷ்ணு அதை மனதில் கொண்டு ஹிரண்யகசிபுவை வதம் செய்து   அடைந்தக் கோபத்தில் இருந்து விரைவாகவே சாந்தம் அடைந்தார். அதன் பின் இந்த ஆலயத்தில் வந்து அமர்ந்தார்.
இந்த ஆலயம் உள்ள இடத்தில் பிரும்மா வந்து தவம் செய்ய வேண்டியத்தின் அவசியம் என்ன?  சிவன் – பார்வதி திருமணம் நடந்தபோது பிரும்மச்சாரியாக இருந்த ஒரு அவதாரத்தில் பிரும்மா அந்த திருமணத்தை நடத்தி வைத்தப் புரோஹிதராக இருந்தாராம். அப்போது அவர் பார்வதியின் கால் அழகைக் கண்டு ரசிக்க அதனால் கோபமுற்ற சிவ பெருமான் அவரது ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிந்து விட்டாராம். அதனால் சிவனும் பிரும்மஹத்தி தோஷத்தை பெற்றார். பிரும்மாவுக்கும் மாற்றான் மனைவியின் அழகைக் கண்டு ரசித்த தோஷம் கிடைத்தது. அந்த இருவருமே இந்த இடத்தில் தோஷ விமோசனம் பெற வந்தார்கள்.

இந்த ஆலய பெருமைகள்  பலவும்  உண்டு. அவை:

  • இங்கு வந்து சிவன் மற்றும் பிரும்மா போன்றவர்கள் தோஷ நிவாரணம் அடைந்தார்கள்.
  • இந்த ஆலயத்தில் மடி மீது லஷ்மி தேவியை அமர வைத்துக் கொண்டு காட்சி தரும் நரசிம்மரின் இடது பக்கத்தில் நர நாராயணர்களுடன் (கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனன் என்பவர்களே நர நாராயணர்கள்) காட்சி தருகிறார்கள் . இந்த உலகில் நர நாராயண  சிலை  உள்ள ஆலயங்கள் இரண்டு மட்டுமே. அவற்றில் ஒன்று பத்ரிநாத், இரண்டாவது நிம்பாசலம் மட்டுமே. ஆகவே இந்த ஆலயம் தென் பத்ரிநாத் என்றும் அழைக்கப்படுகின்றது.
  • இந்த லிம்பாத்ரி கட்டா ஆலய நரசிம்மரின் உத்சவ மூர்த்தி உள்ள ஆலயம் கீழ் பகுதியில் உள்ள பீம்கல்லில்  உள்ளது. ஆகவே ஒவ்வொருவரும் மூல மூர்த்தியை வணங்கியப் பின் மலையின்  கீழ் பகுதியில் உள்ள உத்சவ மூர்த்தி ஆலயத்திலும் சென்று நரசிம்மரை  வணங்காவிடில்  ஸ்ரீமான் நிம்பாசல நரசிம்மரின் ஆலயத்திற்குச் சென்றப் பலன் கிடையாது.
  • இங்கு வந்த சிவபெருமானை விஷ்ணு இங்கேயே இருக்குமாறு வேண்டிக் கொள்ள சிவன் ஸ்வயம்பு லிங்க உருவை எடுத்துத் தங்கினார்.
  • ஹரிச்சந்திர ராஜா இங்கு வந்து தவம் இருந்து மனைவியை விற்ற  குற்றத்தின் தோஷத்தைக் களைந்து கொண்டார்.
  • ராமபிரான் தன் மனைவி சீதை மற்றும் தம்பி லஷ்மணருடன் தென் இந்தியப் பகுதிக்கு வந்தபோது இங்கு வந்து, தம் பயணம் வெற்றிப் பெற ஹனுமாரை தன் சார்பில் இங்கு தவம் இருக்குமாறுக் கூறினாராம்.
  • பிரும்மாவின் ஆணையை ஏற்று யமதர்மராஜன் இங்கு வந்து நரசிம்மரை வேண்டித் தவமிருந்து ஆலய தல விருத்ஷமான பத்ரி மரமாக அமர்ந்து உள்ளாராம்.
  • விஷ்ணு ஆணையிட்டதின் பேரில் சிந்தாமணி நதி இங்கு வந்து ஒரு குளமாக அமர்ந்து கொள்ள விராஜ நதி இங்கு  நதியாக ஓடுகின்றது.
  • தர்மபாலா ராஜ்யத்தை சேர்ந்த ஒரு மன்னன் இங்குள்ள சிந்தாமணி குளத்தில் குளித்து விட்டு முப்பதாயிரம் வருடங்கள் தவம் செய்து தனது பாவத்தைப் போக்கிக் கொண்டாராம்.
  • அது போல காசியில் இருந்த பிராமணன் ஒருவர் தன் மகளுடன் தகாத உறவு கொண்டு அந்த பாவத்தைக் களைந்து கொள்ள இங்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய்தாராம்.
கிருஷ்ண அவதாரம் முடிந்ததும் கிருஷ்ணரைப் பிரிந்த துக்கத்தில் யுதிஷ்டர் ஆழ்ந்து இருந்தபோது அவர் முன் தோன்றிய கிருஷ்ணர் தான் இந்த தலத்தில் அர்ஜுனனுடன் நரஹரியாக இருப்பேன் என்றும், அங்கு வந்து தன்னை வணங்குமாறும் கூறினாராம். இந்த தலத்தில் நரசிம்மருடன் உள்ள மற்றவர்கள் சிவபெருமான், ஹனுமான், நரஹரி, விநாயகர் மற்றும் கால பைரவர் போன்றவர்கள்.
இங்கு வந்து நரசிம்மரைத் துதித்து  வணங்கினால் பல வருட தோஷங்கள் விலகி, மனம் அமைதி பெரும். வாழ்வில் வளம் வரும். தடங்கல்கள் விலகும் என்கிறார்கள்.
ஆலய விலாசம்
Nambi Limbadri,
Founder Trustee,
Shri Laxmi Nrusimha Swamy Temple,
Bheemgal – 503307.
Phone: 238397 (91+8463)