சாந்திப்பிரியா – 9–
மகேஷ்வரில் இரண்டு ஆலயங்கள்
மகேஷ்வர் முன்னொரு காலத்தில் அதாவது கார்திவார்ஜுன் ஆண்டு வந்த காலத்தில் அவரது நாட்டின் தலை நகரமாக இருந்தது. அப்போது அதன் பெயர் என்ன என்று தெரியவில்லை. அநேகமாக மகிஸ்மதி என இருக்கலாம் என்று கற்றறிந்தவர்கள் கூறுகிறார்கள். பின்னர் ஐந்தாம் நூற்றாண்டில் மகிஸ்மதி என அழைக்கப்பட்ட இடத்தில்தான் மகேஸ்வர் உருவாயிற்று. மகேஸ்வர் என்ற இந்த இடம் அஹில்யா பாய் ராணியினார் தனது தலை நகரை இந்தூரில் இருந்து இங்கு மாற்றிய பின்னரே புகழ் அடைந்தது. மகிஸ்மதி குறித்து பெண்களை சம்மந்தப்படுத்திய ஒரு புராணக் கதையும் அங்கு நிலவுகிறது. அதன் காரணமாகவே அங்கு பெண்களுக்கு தனி கௌரவமும் உள்ளது.
முன்னொரு காலத்தில் அதாவது ராமாயண -மகாபாரத காலத்தில் நிலா என்றொரு மன்னன் வாழ்ந்திருந்தான். அவனுக்கு மிக அழகான பெண் ஒருவள் இருந்துள்ளார். அவள் அவளது அழகினால் ஈர்க்கப்பட்ட அக்னி பகவான் அவள் மீது ஆசை கொண்டு அவளை மணக்க விரும்பினார். ஆனால் தேவலோகத்தை சேர்ந்த அக்னி பகவானால் எப்படி மனித குலத்தில் இருந்தவளை மணக்க முடியும் என்பதினால் அவர் ஒரு பிராமணர் உருவில் வந்து அவளுடன் பழகி அவளைக் காதலித்தார். அவர்கள் இருவருடைய காதலைப் பற்றிய செய்தியும் மன்னனின் காதில் விழ கோபமுற்ற அவர் அந்த பிராமணரை தண்டிக்க முடிவு செய்து அவரை பிடித்து வருமாறு கூறினார். அந்த பிராமணர் உருவில் இருந்தது அக்னி பகவான் என்பது அரசனுக்குத் தெரியாது. தன்னுடைய விருப்பம் இன்றி தன்னுடைய பெண் வேறு யாரையும் அவளே விரும்பினால் கூட அவள் விரும்பியவரை மணக்கக் கூடாது எனவும் ஆணையிட்டார்.
அதைக் கேட்டுக் கோபமுற்ற பிராமணர் உருவில் இருந்த அக்னி தன் சுய ரூபத்தை மன்னனுக்குக் காட்ட அந்த மன்னன் அக்னியின் கோபத்திற்கு ஆளாயினர். அதனால் அக்னியிடம் அந்த மன்னன் மன்னிப்புக் கேட்டார். அப்போது அக்னி பகவானும் அது முதல் மகிஸ்மதியில் உள்ள எந்த பெண்ணையும் அவர்கள் விரும்புவர்களை மணக்க தடை போடக் கூடாது எனவும், அவர்கள் மனம் போன போக்கில் இருக்கலாம் எனவும் ஆணையிட்டு அங்கிருந்த பெண்களுக்கு விடுதலை தந்ததினால் மகிஸ்மதியில் இருக்கும் பெண்களை யாரும் மணக்க விரும்பாமல் போயிற்று. அங்கிருந்த பெண்களும் தன் போக்கில் தமக்கு பிடித்தவர்களை மணக்கத் துவங்கினார்களாம். ஆனால் முகலாய மன்னன் அக்பரிடம் இருந்த மகிஸ்மதியை ஹோல்கர் மகாராஜாக்கள் தம் வசப்படுத்திக் கொண்டு மராத்திய ராஜ்யத்தை உருவாக்கியவுடன் அந்த நிலைமை மெல்ல மெல்ல மாறி விட்டதாக கூறுகிறார்கள்.
அப்போது ஆட்சியில் இருந்த ராணி அஹில்யாபாய் முன்னர் மகாராஷ்ராவுடன் இணைந்து இருந்த குஜராத்தின் சோண்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். 1725 ஆம் ஆண்டு பிறந்த அவர் மகாராஜா மல்ஹார் ராவ் ஹோல்கர் என்பவரின் மகனான கண்டிராவ் ஹோல்கர் என்பவரை மணந்து கொண்டிருந்தார். மல்ஹார் ராவ் ஹோல்கர் இந்தூரில் ஆட்சி செய்து கொண்டு இருந்தார். 1754 ஆம் ஆண்டு கண்டிராவ் ஹோல்கர் யுத்தத்தில் கொல்லப்பட்டு இறந்தார். அவருடைய தந்தையும் அதற்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்தார். ஆகவே அஹில்யாபாய் ஹோல்கர் ராஜ்யத்தின் ஆளுமை பொறுப்பை ஏற்க வேண்டி இருந்தது. சுமார் 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அஹில்யாபாய் பல நற் காரியங்களை செய்துள்ளார். இந்து ஆலயங்களைக் கட்டி உள்ளார். பல ஆலயங்களை புனரமைத்து யாத்ரீகர்கள் இலவசமாக வந்து தங்க விடுதிகளையும் அமைத்து இருக்கிறார். அதே சமயத்தில் அவர் பிற மதத்தினரின் மனதையும் புண்படுத்தாமல் இருந்துள்ளார்.
இப்படியாக ஆட்சி செய்து கொண்டு இருந்தவர் தமது தலை நகரை இந்தூரில் இருந்து மகேஸ்வருக்கு மாற்றிக் கொண்டு இங்குள்ள நர்மதை நதிக் கரையில் தமது அரண்மனையை அமைத்துக் கொண்டார். இயற்கை அவருக்கு பிடித்தமானது. மன அமைதியை அவர் விரும்பியவர். 1766 ஆம் ஆண்டில் அவர் அந்த அரண்மனையை நிர்மாணித்துக் கொண்டு அதற்குள்ளேயே தாம் வழிபடுவதற்காக ஒரு ஆலயத்தையும் அமைத்துக் கொண்டு உள்ளார்.
தாம் அங்கிருந்தும், இங்கிருந்தும் கொண்டு வந்திருந்த பல்வேறு வகைகளிலான சிவலிங்கங்களை அதில் வைத்து வழிபட்டுள்ளார். அங்குள்ள சிவலிங்கங்கள் கல்லில் இருந்து பலவிதமான உலோகங்கள், தங்கம், வெள்ளி, மரகத, மாணிக்க லிங்கங்கள் போன்றவற்றினால் ஆனவை. அப்படிப்பட்ட சிவலிங்கங்களை நாம் வேறு இடத்தில் காண்பதே அபூர்வமானது என்கிறார்கள். பல்வேறு வகைகளினாலான, பல்வேறு உருவ அமைப்புக்களில், சிறிதும் பெரிதுமாக 1008 சிவலிங்கங்களை அவர் அங்கு வைத்துள்ளார் என்கிறார்கள். ஆனால் நாம் அவற்றின் அருகில் சென்று பார்க்க முடியாதபடி இரும்பு கம்பியால் ஜன்னல் போட்டு வைத்துள்ளார்கள். அஹில்யாபாயியின் அரண்மனை வளாகத்துக்கும் சென்று பார்க்க அனுமதிக்கிறார்கள். அவர் அமர்ந்து மற்றவர்களுடன் விவாதித்த இடம் போன்றவை காணமுடிகிறது. அவர்கள் அமர்ந்திருந்த படுக்கைகள் அப்படியே வைக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள தோட்டத்தில் அற்புதமான ஒன்பது இலை கொண்ட வில்வ மரம் உள்ளது. சாதாரணமாக மூன்று இலைகள் உள்ள வில்வ மரங்களை மட்டுமே நாம் பார்த்து இருப்போம். ஆனால் இங்கோ ஒன்பது இலை உள்ள வில்வம் உள்ளது அதிசயமானது.
அங்குள்ள நர்மதை நதியின் இடையே பாணலிங்க ஆலயம் உள்ளது. அங்கு சென்று வழிபட படகுகள் வாடகைக்குக் கிடைக்கின்றன. அது மட்டும் அல்ல அந்த நதியில் உலா சென்று விட்டு வருவதற்கும் படகோட்டிகள் வாடகைக்கு கிடைக்கிறார்கள். நாங்களும் படகில் பயணித்து பாணலிங்க ஆலயத்தைப் பார்த்தோம்.
வரலாற்று செய்தி, இயற்கையின் அற்புதம், அமைதியான சூழ்நிலை, அற்புதமான ஆலயம் போன்றவற்றை காண விரும்பும் மக்கள் இங்கு ஒரு முறையாவது செல்ல வேண்டும். இங்குள்ள இடத்தில் முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனையும் உள்ளது.
மகேஸ்வரின் இன்னோர் முக்கியமான செய்தி என்ன என்றால் இங்கு கையினால் நெய்யப்படும் மகேஸ்வரி சேலைகள் உலகப் புகழ் வாய்ந்தவை. இதை கைத்தறி தொழிலாக மாற்றி உள்ளூர் மக்களின் வாழ்கை தரத்தை உயர்த்த எண்ணிய ராணி அஹில்யா பாய் அதற்கு தனது ராஜாங்கத்தின் மூலம் பல உதவிகளை செய்துள்ளார்.
நர்மதை நதிக் கரையில் நண்பர்களுடன்