சாந்திப்பிரியா – 10–
ஆந்த ஆலயத்திற்கு செல்லும் பல பக்தர்கள் கூறும் கதைகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. எங்களுக்கே கஜரானா வினாயகரின் மகிமையைக் குறித்த ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு முறை தேவாஸ் நகரில் எங்கள் வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள பணமும் தங்க, வைர நகைகளும் திருட்டுப் போய் விட்டன. திருடனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. எங்களுடைய ஒரு நண்பர் வற்புறுத்தலினால் நாங்கள் மறுநாள் காலையில் காளியை வழிபடும் ஒரு மாந்த்ரீக ஜோதிடரிடம் சென்று திருட்டைக் குறித்து கேட்ட பொழுது அவரும் எங்கள் வீட்டில் திருடியவன் வெளியூரை சேர்ந்தவன் எனவும், அவன் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவன் எனவும், அவன் திருட்டுத் தொழிலில் கைதேர்ந்தவன் எனவும், அடுத்த மூன்று நாட்களுக்குள் அவனைப் பிடிக்காவிடில் அதன் பிறகு அந்த திருடனை பிடிக்கவே முடியாது, அவன் பிடிக்க முடியாத இடத்திற்கு சென்று விடுவான் எனக் கூறி அவன் அந்த நேரத்தில் தங்கி இருந்த இடத்தைக் குறித்து சில தகவல்களைக் கூறினார். அதாவது தேவாஸில் இருந்து போபால் செல்லும் வழியில் சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்தில்தான் இருக்கிறான் என்று கூறினார்.
அவர் குறிப்பிட்ட பகுதியில் இருந்தது சிறு கிராமம். அது திருட்டிற்கு பெயர் பெற்ற இடம். போபாலுக்கு செல்லும் பஸ்கள் அங்கு நின்று விட்டுச் செல்லும். அந்த கிராமத்தருகில் இரவு ஒன்பது மணிக்கு மேல் தனியே வாகனங்கள் மற்றும் காரில் செல்பவர்கள் செல்ல மாட்டார்கள். காரணம் தனியே செல்லும் வாகனத்தை மடக்கி அவர்களை கொள்ளையடித்துக் கொண்டு செல்பவர்கள் அங்கு அதிகம். கொள்ளையடிப்பது மட்டும் அல்ல, அவர்களைக் அங்கேயே தள்ளி விட்டு வாகனத்தையும் எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள். அதன் பின் வாகனங்களின் ஒரு பொருள் கூட கண்டு பிடிக்க முடியாத அளவு அதை அடுத்த சில மணி நேரத்தில் பிரித்து அவற்றை எடுத்துச் சென்று விடுவார்கள். ஆகவே தனியாக காரில் செல்பவர்களை எல்லையிலேயே போலிஸ் தடுத்து நிறுத்தி பாதுகாப்பிற்காக அங்கிருந்து ஐந்து அல்லது பத்து வாகனங்களை ஒன்றன் பின் ஒன்றாக செல்லும் வகையில் அனுப்பி வைப்பார்கள். ஆனால் ஒருவித பயத்தினால் அரசாங்க வாகனம் மற்றும் பஸ்ஸை கொள்ளை அடிக்க அந்த திருடர்கள் வரமாட்டார்கள்.
நாங்கள் காவல் நிலைய அதிகாரியிடம் (அவரும் ஒரு முஸ்லிம் மதத்தவர்) அது குறித்து கூறியும் அவர்கள் வேண்டும் என்றே அவனைப் பிடிப்பதில் அசட்டையாக இருந்தார்கள். அதற்கான காரணம் அவர்களுக்கு இடையே இருந்த தொடர்ப்புக்கள்தான் என்பது பின்னர் தெரிந்தது. ஜோதிடர் கொடுத்திருந்த கெடுவும் முடிந்தது. திருடனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. மாதங்கள் ஓடி விட்டன. காவல் நிலையத்திலும் அவனைப் பிடிப்பதில் எந்த அக்கறையையும் காட்டவில்லை. மனம் வெறுத்துப் போய் இருந்த எங்களிடம் எதேற்சையாக ஒருவர் நீங்கள் கஜரானா ஆலயம் சென்று அங்கு வேண்டிக் கொள்ளுங்கள் அவர் நிச்சயமாக வேண்டுதலை நிறைவேற்றுவார் எனக் கூறி எங்களை ஆலயத்திற்கு தாமே அழைத்துச் சென்றனர். நாங்களும் அங்கு சென்று வேண்டிக் கொண்டு திரும்பினோம்.
என்ன அதிசயம் அதற்கு அடுத்த சில நாட்களிலேயே வெளியூருக்குத் தப்பி ஓடி விட்டிருந்த அதே திருடன் மீண்டும் எங்கள் வீட்டை ஒட்டியபடி பின்னால் இருந்த வீட்டில் திருட வந்தான். சொன்னால் நம்ப மாட்டீர்கள். எதிர்பாராத விதத்தில் அவன் வீதியில் விளையாடிக் கொண்டு இருந்த சிறு பையன்களினால் மாட்டிக் கொண்டான். (பிடிபட்ட திருடன் முஸ்லிம் மதத்தவர்தான் என்பதைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்தோம். காளி ஜோதிடர் கூறியது எத்தனை உண்மை! அது மட்டும் அல்ல திருடன் பிடிபட்ட பின்னர் ஜோதிடர் கூறிய அதே இடத்தில் தான் மூன்று நாட்களும் தான் தங்கி இருந்ததை அவன் வழக்கு மன்றத்தில் ஒப்புக் கொண்டான். அதன் பின் அவன் போபாலுக்கு திரும்பிச் சென்றுள்ளான். திருடுவதை தொடர்ந்து தொழிலாகவே செய்து கொண்டு இருந்தவன் மீது போபாலில் மட்டும் 35 வழக்குகள் பதிவாகி இருந்தன) களவு போன நகைகளில் பத்து சதவிகித தொகை கூட திரும்பக் கிடைக்கவில்லை என்றாலும் நாங்கள் மிகவும் போற்றி வைத்திருந்த முக்கியமான ஒரு பொருள் கிடைத்தது. திருடனை பிடிக்க முடியாதென ஜோதிடர் முதல் காவல்துறையினர்வரை பலர் கூறியும் பல மாதங்களுக்குப் பின் நாங்கள் கஜரானா கணபதியிடம் வேண்டிக் கொண்டப் பின் அதே திருடன் மீண்டும் கிடைத்தான். அந்த மகிமையை என்னவென்று சொல்வது? அதனால்தான் எனக்கு இந்தூருக்குச் சென்றால் கஜரானா ஆலயம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் எப்போதும் இருக்கும்.
அப்படிப்பட்ட சம்பவங்கள் பலருக்கும் நடந்துள்ளன. பிளவு பட்ட குடும்பம் ஒன்றானது, பிழைப்பது சாத்தியம் இல்லை என கைவிடப்பட்டவர் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் அந்த காயம் கூடத் தெரியாமல் நல்ல வாழ்கையை கொண்டு வாழ்ந்து வந்தார். வருடக் கணக்கில் தேங்கிக் கிடந்த வழக்கினால் மன அமைதியை இழந்தவர் ஆலயத்தில் சென்று வேண்டிக் கொண்ட அடுத்த சில நாட்களில் வழக்கு மீண்டும் எடுக்கப்பட்டு அவருக்கு சாதகமாக முடிந்தது. இப்படி பல பல கதைகள் உண்டு.
கஜரானா ஆலய வளாகத்துக்குள் கால பைரவர், மகாலஷ்மி, சாயி பாபா, ஹனுமான், ராமபிரான், சிவலிங்கம், மற்றும் சனி பகவான் போன்றவர்களுக்கு தனித் தனி சன்னதிகள் உள்ளன. இத்தனை மகிமைகளைக் கொண்ட ஆலயத்துக்கு மீண்டும் விஜயம் செய்ததில் மனம் மகிழ்ச்சி அடைந்தது. இனி மீண்டும் இப்படிப்பட்ட பயணம் மேற்கொள்ள முடியாது என்கின்ற உடல் நிலையில் உள்ள நாங்கள் மன மகிழ்ச்சியோடு அங்கிருந்து கிளம்பி இந்தூர் கடை வீதிகளில் சுற்றி அலைந்தப் பின் தேவாஸ் திரும்பினோம். மறுநாள் மீண்டும் உஜ்ஜயினிக்கு பயணித்து அங்கு பல ஆலயங்களில் தரிசனம் செய்ய எண்ணி இருந்ததினால் அன்றைக்கு இந்தூரில் வேறு ஆலயத்துக்கு செல்லவில்லை.