பேய் பிசாசுகளை விரட்டும் 
புனித கனகாப்பூர்  ஆலயம் 
சாந்திப்பிரியா  
 தத்தாத்திரேயரின் இரண்டாவது  அவதார புருஷரான 
ந்ருசிம்ஹ ஸரஸ்வதி  ஸ்வாமிகள்
கர்னாடகா மாநிலத்தில் உள்ளது கங்காபூர் எனும் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள தத்தாத்திரேயர் ஆலயம் மிகவும் புகழ் பெற்றது.  இதை தத்தாத்திரேயாரின் ஷேத்திரம் என்கிறார்கள். இங்குதான் இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக  தத்தாத்திரேயரின் இரண்டாவது  அவதார புருஷரான  ந்ருசிம்ஹ ஸரஸ்வதி  ஸ்வாமிகள் (1378 AD−1458 AD) வசித்து வந்தாராம். தத்தாத்திரேயரின் முதலாவது  அவதார புருஷர் ஸ்ரீபத் ஸ்ரீ வல்லபா (1320 AD – 1350 AD) என்பவர். அவர்களுடைய  வரலாறு  குரு சரித்திரம் என்பதில் விவரமாக உள்ளது. பல ஆண்டுகளாக அவரைப் பற்றி ஒரு வரலாறு எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. விரைவில் எழுதுவேன் என நினைக்கின்றேன்.  ந்ருசிம்ஹ ஸரஸ்வதி  ஸ்வாமிகள் அங்கு வசித்து வந்தபோது பல மகிமைகளை செய்து உள்ளார். அங்கு உள்ள தத்தாத்திரேயர் ஆலயத்தில் அவருடைய நிர்குண பாதுகைகள் வைக்கப்பட்டு  உள்ளன. அங்கு செல்பவர்கள் அதை வணங்குவதை முக்கியமான ஒன்றாகக் கருதுகிறார்கள்.
 தத்தம் கோரிக்கைகள் நிறைவேற  இங்குள்ள ஆலயத்தில்  
உள்ள  அரச மரத்தை சுற்றி  கயிறுகளைக் கட்டி 
வேண்டிக் கொள்வது வழக்கம்
அந்த கிராமத்தில் அந்த  மிகப் பெரிய  தத்தாத்திரேயரின் ஆலயம்  பீமா நதிக்கரையின் அருகில் அமைந்து  உள்ளது.  பீமா மற்றும் அமர்ஜா எனும் நதிகள் சங்கமிக்கும் அந்த நதி மிகவும் புனிதமானதாக போற்றப்படுகின்றது.  அந்த நதிக்கரையில் அஸ்வதா என்ற ஒரு மிகப் பெரிய அரச மரம் உள்ளது. அதை கால விருஷம் என்று கூறுகிறார்கள். அதாவது அதன் வயது யாருக்குமே தெரியாது. காலகாலமாக உள்ள அதை ந்ருசிம்ஹ ஸரஸ்வதி  ஸ்வாமிகள் காலம் முதல்  அங்கு உள்ளதாக நம்புகிறார்கள். அந்த மரத்தின் மகிமைக் குறித்து ஒரு கதை உள்ளது.
முன்னொரு காலத்தில் ந்ருசிம்ஹ ஸரஸ்வதி  ஸ்வாமிகள் கனகாபுரத்தில் வசித்து வந்தபோது அங்கு வயதான ஒரு பிராமணத் தம்பதியினர் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் இருவருக்குமே அறுபது வயதுக்கு மேலாகி இருந்தது. குழந்தை பாக்கியம் கிடையாது. ஆகவே கங்குபாய் என்ற பெயர் கொண்ட அந்த பிராமணப் பெண்மணி தினமும் அந்த மடத்திற்கு வந்து  அங்கு எரிந்து கொண்டு இருந்த விளக்கின் திரியை சரி செய்து எண்ணை ஊற்றி விட்டுச் ஸ்வாமிகளை வணங்கியப் பின் வீடு செல்வார். ஒரு நாள் அவளை ஸ்வாமிகள் அழைத்தார். நீ தினமும் வந்து எண்ணை விளக்கை சரி செய்து விட்டுச் செல்கின்றாயே, உனக்கு என்ன வேண்டும் என்றார். அந்த மாதுவோ தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை, தாங்களோ யாரும் அற்ற அனாதைகள், அதனால்   யாருக்காக  வேண்டிக் கொள்வது என்று கூற ஸ்வாமிகள் சிரித்தார். அப்படிக் கூறாதே தாயே, உனக்கு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் பிறப்பார்கள். நீ தினமும் இங்குள்ள சங்கம் நதியில் குளித்துவிட்டு அதன் அருகில் உள்ள அரச மரத்தை பக்தி சிரத்தையுடன் மூன்று முறை சுற்றிவிட்டு அதற்கு பூஜை செய்.  உனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றார். அவளுக்கு ஒரு பழத்தை தந்து அதை சாப்பிடுமாறும் கூறினார்.
அவளுக்கு ஒரே ஆச்சர்யம்.  நான்  அறுபது வயதாய் எட்டி விட்டேன். தனக்கு மாத விலக்கு கூட நின்று விட்டது. குழந்தை எப்படி பிறக்கும் என அவள் நினைத்தாலும் நம்பிக்கையை இழக்காமல் அவள் ஸ்வாமிகள் கூறியதை செய்யத் துவங்கினாள்.  திடீரென நின்று விட்டு இருந்த மாத விலக்கு மீண்டும் திரும்பியது. அவள் கருவுற்றாள். இரண்டு குழந்தைகளும் அவளுக்குப் பிறந்தன. அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவர்கள் குருவிடம் சரணாகதி அடைந்து அவருக்கே சேவை செய்தவண்ணம் வெகு காலம் வாழ்ந்து இருந்தார்கள். அந்த அரச மரத்தின் மகிமை அப்படிப்பட்டது என்பதற்குக் காரணம் அதன் அடியில்தான்  பிரும்மா, விஷ்ணு மற்றும் சிவன் என்ற மும்மூர்த்திகளும் அமர்ந்து இருப்பார்கள் என்றார் .
ஒரு முறை  ந்ருசிம்ஹ ஸரஸ்வதி  ஸ்வாமிகள் மூலம் தத்தாத்திரேர் அங்குள்ள மக்களிடம் கூறினாராம்  ” நான் இந்த இடத்தில்தான் வாசம் செய்து வருகிறேன்.  விடியற்காலை தினமும் இந்த நதியில் குளித்து விட்டு ஆலயத்தில் சென்று அமர்கிறேன். அங்கு நீங்கள் எனக்கு செய்யும் பூஜைகளை ஏற்றுக் கொண்டப் பின் மதியம் ஐந்து வீடுகளுக்குச் சென்று பிச்சை எடுத்து அந்த உணவையே உண்கிறேன்.  என்னுடைய பாதுகைகளை இங்கு விட்டுச் செல்கிறேன். அதை வணங்குவத்தின் மூலம் உங்கள் துயரங்கள்  அனைத்தும் தீரும்”.
கனகாபூர் ஆலயத்தில் உள்ள புனித  நிர்குண பாதுகைகள்
படம் நன்றி: http://srikshetraganagapur.com/photo-gallery.asp  

இப்படியாக தத்தாத்திரேயர் வந்து பிட்சை எடுப்பதான ஐதீகம் உள்ளதினால் அங்கு மதியம் பிச்சைக் கேட்டு வருபவர்களை மக்கள் துரத்துவது இல்லை. காரணம் தத்தாத்திரேயர் யாருடைய உருவத்தில் வருகிறார் என்பது எவருக்கும் தெரிவது இல்லை. அதனால் அந்த கிராமத்தில் வேலை செய்யாமல் பிச்சை எடுத்து உண்பவர்கள் நிறையவே உள்ளனர்.  பிச்சைக்காரர்களைப் போல, பைத்தியக்கரர்களைப் போல என பல வேடங்களில் வந்து பக்தர்களை சோதிப்பது  தத்தரின் பழக்கமும் கூட.

ந்ருசிம்ஹ ஸரஸ்வதி  ஸ்வாமிகள்  தத்தாத்திரேயாரின் இரண்டாவது அவதார புருஷராக கருதப்படுவதினால் அவர் விட்டுச் சென்றுள்ள பாதுகைகளையே தத்தாத்திரேயரின் பாதுகைகளாக கருதுகிறார்கள்.  பீமா மற்றும் அமர்ஜா எனும் நதிகள் சங்கமிக்கும் இங்கு தினமும் தத்தாத்திரேயர் வந்து நீராடுவதினால் அதை கோடி தீர்த்தம் என்கிறார்கள். காரணம் மூவுலகிலும் அதாவது தேவ, பாதாள மற்றும்  பூமியின் பல பாகங்களிலும் ஓடுவதாகக் கருத்தப்படும் கோடிக்கும் மேற்பட்ட நதிகள் தத்தாத்திரேயர் காலடி பட்டவை. ஆகவே கோடி தீர்த்தங்களில் நனைந்து உள்ள தத்தாத்திரேயர் காலடி படும்  பீமா -அமர்ஜா நதியை கோடி புண்ணிய தீர்த்தம் என்றும், அதி புனித தீர்த்தம் என்று கூறுவதில் என்ன வியப்பு?

ந்ருசிம்ஹ ஸரஸ்வதி  ஸ்வாமிகள் கங்காப்பூரில் வசித்து வந்தபோது பேய் -பிசாசு மற்றும் பில்லி சூனியங்களினால் அவதிப்பட்ட மக்கள் வந்து அவரிடம் நிவாரணம் பெற்றுச் சென்று உள்ளார்களாம்.  தத்தாத்திரேயர் உள்ள இடங்களில் பேய் பிசாசுகள் நுழைய முடியாது. அவர் அவைகளை அழித்து விடுபவர். அவரைக் கண்டாலே அவை அலறி ஓடி ஒளியும். ஆகவேதான் தத்தாத்திரேயர் ஆலயங்களில்   தீய சக்திகளின் பீடிக்கப்பட்டவர்கள்  வந்து நிவாரணம் பெறுகிறார்கள். அதுவும் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி  தினங்களில்  அவர் ஆலயத்துக்குச் சென்று வேண்டிக் கொள்வது விசேஷமாம்.

 ஆலயத்தில் சுவாமிகளின் சிலை 
படம் நன்றி: http://srikshetraganagapur.com/photo-gallery.asp  

இந்த ஆலயத்தில் காலை ஆறு மணி , மதியம் 12 .30 மணி  மற்றும் இரவு 8.30 மணிக்கு மூன்று கால பூஜைகள்  நடை பெறுகின்றன. அந்த பூஜை நடைபெறும் நேரங்களில் அடிக்கப்படும் மத்தள ஓசையினைத் தொடர்ந்து மன வியாதி பிடித்தவர்களும்,  தீய ஆவி பிடித்தவர்களும் வந்து கலந்து கொள்ளும்போது திடீர் திடீர் என அலறுவார்கள். அதை யாரும் சட்டை செய்வது இல்லை. காரணம் அப்படிப்பட்ட காட்சிகள் அவர்களுக்கு பழகிவிட்டது. அவர்கள் வருவது அந்த தீய ஆவிகளை விரட்டத்தானே.

அந்த பூஜையை முடித்துக் கொண்டப் பின் நாம் பிட்ஷையை வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்க்குக் காரணம் தத்தாத்திரேயரே  அங்கு வந்து பிட்ஷை எடுத்து உணவு அருந்துவதினால் நாமும் அங்கு உணவை அருந்த வேண்டும்.

சாதாரணமாக அந்த ஆலயத்துக்கு செல்லும் முன் நாம் நம்மை புனிதப் படுத்திக் கொள்ள பீமா நதியில் குளித்து விட்டு அங்குள்ள கல்பக விருட்ஷ மரத்தின் அடியில் சென்று அங்கு பூஜைகளை முடிக்க வேண்டும். பிறகு அங்குள்ள சனி பகவானை தரிசிக்க வேண்டும். அதன் பின்னர்தான் தாதரின் ஆலயத்துக்குச் சென்று அங்கு பூஜிக்க வேண்டும்.

 சனிபகவானின் சன்னதி 
படம் நன்றி:  http://saiamrithadhara.blogspot.com

கனகாபூர் என்பது கர்னாடகாவின் குல்பர்கா நகரில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து ஒரு  காரிலோ பஸ்சிலோ செல்லலாம். ஆலய விலாசம் மற்றும் அங்குள்ள பூசாரிகளின் தொடர்ப்பு கொள்ள வேண்டிய முகவரி:-

Ganagapur Temple
Shri Dattatreya Temple,
Shri kshetra Ganagapur – 585 212
Tq. Afazalpur, Dist. Gulbarga – Karnataka, India.
———————————–
Shri Sadashi Divakarbhatt Pujari
09886920273 / 08472–230495
Shri Vilas Pujari
98675 62002 / 022-66991045