கனக மகாலஷ்மி ஆலயம் 
சாந்திப்பிரியா  

ஆந்திரப்பிரதேசத்தில் விசாகப்பட்டினம் என்பது மிகப் பெரிய நகரம். அந்த நகரத்தின் மத்தியப் பகுதியான புருஜுபெடா எனும் இடத்தில் உள்ளது  இந்த ஆலயம். சுஇந்த ஆலயத்தில் அம்மாவாறு என்று மக்களால் அழைக்கப்படும் கனகலஷ்மியின் சிலை நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு  முற்பட்டது என்கிறார்கள். இந்த ஆலய தேவியின் ஸ்தல புராணம் பற்றிய முழு விவரங்கள் கிடைக்கவில்லை. அனைத்தும் வாய்  மொழிக் கதையாகவே உள்ளன. ஆனால் இந்த ஆலயம் 1917 ஆம் ஆண்டுகளில்  இந்த இடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆலயத்தைப் பற்றிக் கூறப்படும் கதை இது.

1912 ஆம்  ஆண்டு வாக்கில் ஒரு கிணற்றில் இந்த தேவியின் சிலை கிடைத்ததாகவும் அங்கு வசித்து வந்த மக்கள் அதை வெளியில் எடுத்து அந்த சாலையிலேயே ஆலயம் அமைத்தார்களாம்.  ஆனால் சில  ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1917 ஆண்டுவாக்கில் உள்ளூர் நகராட்சியினர்  அந்த சாலையை விஸ்தரித்துக் கொண்டு இருந்த போது சாலையின் நடுவில் இருந்த அந்த தேவியின் ஆலயத்தை அகற்றிவிட்டு அந்த சிலையை வேறு ஒரு இடத்தில் கொண்டு சென்று வைத்து விட்டார்களாம்.  அதன் பின் அதே ஆண்டின் பின் பகுதியில் அந்த நகரம் முழுவதும் கொடிய பிளேகு என்ற நோய் பரவி பல மக்கள் இறந்து போயினர்.  அந்த நோயைக் கட்டுப் படுத்த முடியவில்லை.  அந்த நிலையில்  ஒருவருக்கு கிடைத்த அருள் வாக்கில் தன்னை அங்கிருந்து அகற்றியதினால்தான் இந்த நிலை ஏற்பட்டது என்று அந்த அம்மன் கூற அதைக் கேட்டு  பயந்து போன மக்கள் சாலையின் நடுவில் அமர்ந்து இருந்த அந்த தேவியை அகற்றியதினால் கோபமுற்றவளின் சாபத்தினால் அந்த கேடு வந்துள்ளது என நினைத்து மீண்டும் அந்த தேவியை அந்த பழைய இடத்திலேயே வந்து பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைக்குமாறு நகர அதிகாரிகளிடம் கூற அவர்களும் அந்த தேவியை மீண்டும் பழைய இடத்தில் கொண்டு வந்து வைத்து பிரதிஷ்டை செய்த மறுநாள் முதலே  பிளேகு நோயின் கடுமை மறையத் துவங்கியதாம். அது முதல் அந்த  தேவியை  ‘கனகலஷ்மி அம்மாவாரி’  என்று  அழைக்கின்றார்கள் .

இன்னொரு உள்ளூர் புராணக் கதையின்படி  இந்த அம்மன் விசாகப்பட்டினத்தை ஆண்டு வந்த மன்னர்களின் பரம்பரை பரம்பரையாக  அவர்களின் குலதெய்வமாக இருந்தது என்றும், அந்த மன்னனின் அரண்மனை புருஜு பேட்டை எனப்படும் இந்த இடத்தில்தான்  இருந்தது என்றும்,  அந்த அரண்மனை கிணற்றில்தான் இந்த அம்மன் சிலை கிடைத்தது என்றும் கூறுகிறார்கள்.  அந்த காலத்தில் விசாகப்பட்டினம் கோட்டைகள் இருந்த இடம் என்பது  உண்மையே. நடந்த பல யுத்தங்களில் அங்கிருந்த கோட்டைகள் முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புகளினால் அழிந்தும் உள்ளன. ஆகவே அந்த மன்னன் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டு ஓடியபோது அந்த தேவியின் சிலையை பாதுகாப்பாக மறைத்து வைக்க அந்தக் கிணற்றில் போட்டு வைத்து இருக்கலாம் என்றும் இந்த அம்மனைப் பற்றி கூறப்படும்  கதை நம்பக் கூடிய அளவில் உள்ளது.

அந்த ஆலயத்துக்கு வரும் பெண் பக்தர்கள் தாங்கள் தாலி பாக்கியம்  பெறவும், தமது குழந்தைகள் நல்லபடியாக இருக்கவும், தம்முடைய குடும்பம் வளமாக இருக்கவும் இந்த தேவியிடம் வந்து பிரார்த்தனை செய்து பால் அபிஷேகம், சந்தன அபிஷேகம் போன்றவற்றை செய்கிறார்கள். முக்கியமாக மார்கசீரா மாத காலம்  -மார்கழி மாதம்- என அழைக்கப்படும் காலமான டிசம்பர் மாத  கடைசி முதல் ஜனவரி  மாதம் முழுவதும் ஆலயத்தில் கூட்டம் திரளாக இருக்கும். வியாழர் கிழமை அந்த தேவிக்கு உகந்த நாளாம். ஆகவே ஒவ்வொரு வாரமும் வியாழர் கிழமைகளிலும் கூட்டம் அதிகமாகவே உள்ளது. ஆலயத்தின் ஒரு விசேஷம் என்ன என்றால் இங்கு பூசாரிகள் கிடையாது. அவரவர் வந்து தாமே சாமியை தொட்டு பூஜிக்கலாம். மேலும் ஆலயத்திற்கு மேற் கூரையும் கிடையாது. காரணம் அவள் அதை விரும்பவில்லை. தான் சர்வ வியாபி என்பதினால் தான் ஒரு கூரையின் அடியில் இருக்க விரும்பவில்லை என்று கூறினாளாம். ஒரு நாளைக்கு மூன்று முறை பஞ்சாமிருத அர்ச்சனை செய்யப்படுகின்றது.

இந்த ஆலயத்தின் வருடாந்திர மார்கசீரா மகோற்சவம் எனப்படும் ஒரு மாத பண்டிகையில் தினமும் 300 பேர்களுக்கு அன்னதானம் செய்ய  வேண்டும். வியாழக்  கிழமையில் 600 பேர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும், மற்றும் பண்டிகையின் கடைசி நாள் அன்று பத்தாயிரம் பேர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்பது விதியாம். அதன் கணக்கிற்கான அர்த்தம் தெரியவில்லை என்றாலும் அது  அம்மனின் அருள் வாக்காக இருந்ததினால் அதை கடை பிடிக்கின்றார்களாம்.

பக்தர்கள் காணிக்கையாக 1,116 /- ரூபாய் தரலாம்.  அதை DD அல்லது காசோலையாக கீழ் கண்ட முகவரிக்கோ அல்லது நேரடியாக ஆலய வங்கிக் கணக்கில் Savings Bank A/c No. 060810011050085 என்ற எண்ணில்  ஆந்திரா பேங்க், விசாகப்பட்டினம்  கிளைக்கு நேரடியாகவும்  பணத்தை அனுப்பலாம். இந்த எண்ணிக்கைக்கான  அர்த்தமும் தெரியவில்லை.  மிகவும் பிரசித்தமான, பழமையான இந்த ஆலய நிர்வாகம் அரசாங்க அதிகாரியின் கீழ் உள்ளது. ஆலய விலாசம் :-

D. Bramaramba M.A
Deputy Commissioner & Executive Officer
Sri Kanaka Maha Lakshmi Ammavari Devasthanam
Burujupeta, Visakhapatnam. A.P., INDIA.
Ph:0891-2566515, 2568645, 2711725, Cell: 9491000651.
Email : dc_eo_kanakamahalaxmi@yahoo.co.in