சாந்திப்பிரியா – 8 –
மகேஷ்வரில் இரண்டு ஆலயங்கள்
சஹஸ்ரார்ஜுனன் ஆலயம்
ஒம்காரீஸ்வரர் ஆலய தரிசனத்தை முடித்துக் கொண்டப் பின்னர் இந்தூருக்கு திரும்பும் வழியில் மகேஸ்வர் எனும் இடத்தில் நர்மதை நதிக்கரையில் உள்ள அஹில்யாபாய் அரண்மணை வளாக ஆலயம், ராஜராஜேஸ்வரி ஆலயம் மற்றும் சஹஸ்ரார்ஜுனன் ஆலயத்துக்கும் சென்றோம். அவை அனைத்தும் உள்ள இடம் கார்கோன் எனும் மாவட்டம் ஆகும். இந்த ஆலயங்கள் இந்தூரில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மால்வாவை மராட்டிய மன்னர்கள் ஆண்டு வந்த காலத்தில் இந்தூர் ராஜதானியை ஹோல்கர் எனும் மகராஜா ஆண்டு வந்துள்ளார். அவரும் மராட்டியரே. அவர்கள் ஆண்ட காலத்தில் 1800 ஆம் நூற்றாண்டில் இந்த இடம் மால்வா பிரதேசத்தின் தலை நகரமாக இருந்துள்ளது. மகேஸ்வர் குறித்த செய்திகள் மகாபாரத காலத்திலும் இராமாயண காலங்களிலும் இருந்துள்ளன என்பதின் காரணம் சஹஸ்ரார்ஜுனன் கதைதான்.
சஹஸ்ரார்ஜுனன் மகாபாரத கதாநாயகனான அர்ஜுனனின் மகன் அல்ல. அவர் கர்தவீர்யா அர்ஜுன் அதாவது சோமவம்ச சஹஸ்ரார்ஜுனன் என்பவற்றின் வம்சத்தை சார்ந்தவர். மேலும் இவர் தத்தாத்திரேயருடைய பக்தரும் ஆவார். தத்தாத்திரேயர் இவருக்கு பல கலைகளையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுத்து தன்னுடைய சீடராக ஏற்றுக் கொண்டார். சஹஸ்ரார்ஜுனன் ஆயிரம் கைகளை கொண்டவர். சஹஸ்ரார்ஜுனன் ஆலயமும் அஹில்யாபாய் ஆலயத்தின் அருகிலேயே உள்ளது.
ஒருமுறை சஹஸ்ரார்ஜுனன் தனது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனைவிகளுடன் நர்மதை நதிக்கரையில் ஆனந்தமாக இருக்கச் சென்றபோது அவர்கள் விளையாடுவதற்கு வசதியாக நர்மதை நதியின் தண்ணீரை சஹஸ்ரார்ஜுனன் தனது ஆயிரம் கைகளால் தடுத்து நிறுத்தி இருந்தார். அதே நேரத்தில் அமைதியான ஒரு இடத்தில் இறங்கி சிவபூஜை செய்ய எண்ணிய ராவணன் அதற்கான நல்ல இடத்தை ஆகாயத்தில் தனது புஷ்பக விமானத்தில் பறந்து கொண்டு இருந்தபடி தேடிக் கொண்டு இருக்கையில் தண்ணீரே இல்லாமல் காணப்பட்ட அந்த இடத்தில் இறங்கி வற்றி இருந்த நதியின் மணலினால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி வைத்து அதற்கு அங்கேயே பூஜை செய்யலானார்.
அப்போது தனது மனைவிகளுடன் அங்கு வந்திருந்த சஹஸ்ரார்ஜுனன் தனது மனைவிகளின் கேளிக்கைகள் முடிந்ததும் திரும்பிச் செல்ல எழுந்தபோது அவர் தடுத்து நிறுத்தி இருந்த நதியின் நீர் வேகமாக வெளியேறி ராவணன் பூஜை செய்து கொண்டு இருந்த சிவலிங்கத்தையும் அடித்துக் கொண்டு போயிற்று. அதைக் கண்டு கோபமுற்ற ராவணன் தன்னுடைய பூஜைக்கு தடையை ஏற்படுத்தியது யார் என்பதைக் காண கோபத்துடன் எழுந்து வந்து சஹஸ்ரார்ஜுனனை துரத்திப் போய் அவருடன் சண்டைப் போடலானார். உக்ரஹமாக நடந்த அந்த சண்டையில் ராவணனை வெற்றி கொண்ட சஹஸ்ரார்ஜுனன் அவரை பூமியிலே அழுத்தி மல்லாக்காக படுக்க வைத்து ராவணன் நகர முடியாதபடி அவர் தலையில் பத்து விளக்கையும், கையில் ஒரு விளக்கையும் ஏற்றி வைத்தார். அதன் பின் சிறை பிடிக்கப்பட்ட ராவணனை சஹஸ்ரார்ஜுன் ராவணனை தனது குழந்தையின் தொட்டிலோடு கட்டி வைத்து விட்டான். இப்படிய ராவணன் அனுபவித்து வந்த கொடுமைகளைக் கேள்விப்பட்ட அவருடைய தந்தையான புலகேஷு என்ற முனிவர் சஹஸ்ரார்ஜுனனிடம் வந்து ராவணனை விடுவிக்குமாறுக் கோரி ராவணனுக்கு விடுதலை கிடைக்க ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்ச்சியை எடுத்துக் காட்டும் விதத்தில் இன்றும் தினமும் அந்த ஆலயத்தில் பதினோரு விளக்குகளை ஏற்றி வைக்கிறார்கள். அந்த ஆலயத்தில் சஹஸ்ரார்ஜுனனின் சிலை அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது. அதை ஜெய்ஸ்வால் எனும் சமூகத்தினர் அமைத்து உள்ளார்களாம்.
சஹாஸ்ரார்ஜுனன் உள்ள ஆலயம் ராஜராஜேஸ்வரி ஆலயம் என்ற ஆலய வளாகத்துக்குள் உள்ளது. அங்குள்ள 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாம். அந்த ஆலய வளாகத்துக்குள் இன்றுவரை அணையாமல் எறிந்து கொண்டு உள்ள அணையா நெய் விளக்கும் வைக்கப்பட்டு உள்ளது. அது எந்த காலத்தில் யாரால் ஏற்றி வைக்கப்பட்டு உள்ள விளக்கு என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்த இடத்தை மஹிஸ்மதி என்றும் கூறுகிறார்கள்.
சஹஸ்ரார்ஜுனன்
ஆலயப் படங்கள்
அஹில்யாபாய் அரண்மணை மற்றும்
சஹாஸ்ரார்ஜுன் ஆலய வளாக நுழை வாயில்
ஆலயத்தில் சஹஸ்ரார்ஜுனன் சன்னதி
ஆலயத்தில் பதினோரு அணையா விளக்கு உள்ள சன்னதி
ஆலயத்தில் ஹனுமான் சன்னதி
ஆலயம் செல்லும் வழி