மங்கை மடம்

யோகநாதஸ்வாமி 

சமேத

யோக தக்ஷிணாமூர்த்தி

பகவான் ஆலயம்

-சாந்திப்பிரியா- 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆரண்யேஸ்வரர் ஆலயத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் யோகநாதஸ்வாமி ஆலயம் எனும் பெயரில் தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமி ஆலயம் உள்ளது . இந்த ஆலயம் குறித்த வரலாற்று கதை சுவையானது. திருவெண்காட்டில் இருந்து இரண்டு கிலோ மீட்டர், அல்லது திருநாங்கூர் எனும் இடத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் மங்கை மடம் எனும் ஊரில்  உள்ள யோகநாதஸ்வாமி  ஆலயத்தில் சிவலிங்க வடிவில் ஸ்வயம்புவாக எழுந்தருளும் சிவபெருமான், யோகநாதஸ்வாமி  என்ற பெயருடன் தனி சன்னதியில் வணங்கப்படுகின்றார். அதே ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் இன்னொரு தனி சன்னதி ஒன்றில் யோக தக்ஷிணாமூர்த்தி பகவானாகவும் சிவபெருமான் காட்சி தருகிறார்

இந்த ஆலயத்தில் சில சிறப்பு அம்சங்கள் உள்ளன. அனைத்து ஆலயங்களிலும் தக்ஷிணாமூர்த்தி பகவான் தெற்கு நோக்கி  அமர்ந்த அல்லது நின்ற நிலையில் கருவறை சுவற்றின் வெளிப்பிராகாரத்தில் , சுவற்றில் அமைந்துள்ள சிறு சன்னதியில் காணப்படுவார். அபூர்வமாக சில ஆலயத்தில் மட்டும் அவருக்கு சிறு ஆலயம் அந்த ஆலய வளாகத்துக்கு உள்ளேயே காணப்படும்.  அதை போலவேதான் இந்த ஆலய வளாகத்துக்கு உள்ளேயும்  அவருக்கு தனி ஆலயம் உள்ளது. முதலில் யோக தட்சிணாமூர்த்தி யார் என்பதையும், அவருடைய முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்வது அவசியம்.

தட்சிணாமூர்த்தியின் அவதாரம் குறித்த சிறு கதை இது. தக்ஷனின் யாகத்தில் ஏற்பட்ட அவமானத்தினால் சிவபெருமானின் மனைவியான பார்வதி எனும் தாட்சாயணி இறந்ததும் அவளது உடலை சிவபெருமான் தனது தோளில் சுமந்து கொண்டு ஆவேசத்துடன் சென்றபோது, அவர் கோபத்தை தணிக்க விஷ்ணு பகவான் அவள் உடலை பல பாகங்களாக வெட்டி வீழ்த்தியவுடன் சிவபெருமான் மனம் அமைதி அடைகின்றது. ஆகவே சிவபெருமான் தான் வசித்து வந்த இமய மலைக்கு சென்று ஒரு ஆலமரத்தினடியில் யோக நிலையில் தெற்கு நோக்கி அமர்ந்து கொண்டு மனதை அமைதிப்படுத்திக் கொள்கின்றார். அந்த யோக நிலையில் அவர் அமர்ந்து இருந்தபோது அவரைத் தேடி வந்த ரிஷிகளுக்கு யோகத்தையும், ஞானத்தையும் மெளனமாக போதிக்கத் துவங்கினார்.  இப்படியாக இமய மலையில் தென் திசை நோக்கி அமர்ந்து இருந்த பரமேஸ்வரனின் ஐந்து பாவங்களில் ஒன்றான அகோர பாவம் (கோபத்தை வெளிப்படுத்தும் தோற்றம்) வெளிப்படுத்திய தோற்றமே சிவபெருமானின் அம்சமான தட்சிணாமூர்த்தி தோற்றமாயிற்று. தட்சிணம் என்றால் தென்திசை என்று பொருள், தென் திசையை நோக்கி அமர்ந்திருந்த தட்சிணாமூர்த்தியை எதற்காக தென் திசை கடவுள் என்று குறிப்பிடுகின்றார்கள் என்பதின் காரணமும்  இதுதான். இதனால்தான் ஆலயங்களில் சிவபெருமானின் கருவறையின் சுவற்றின் வெளிப்புறத்தில் தெற்குப் பகுதியில் தட்சிணாமூர்த்தி காணப்படுகின்றார்.

புராணக் கதைகளின்படி, படைப்புக்  கடவுளான பிரம்மாவின் மூலம் வெளிவந்த சனகாதி முனிவர்கள், தமக்கு ஞானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக  ஒரு குருவை தேடித் சென்றார்கள். தமது தந்தையான பிரம்மா படைப்பு தொழிலில் மூழ்கியதாலும், திருமால் இல்லறத்தில் ஈடுபட்டு இருந்ததினாலும் அவர்களிடம் யோக நிலை குறித்தும், மேன்மையான ஞான நிலை என்பதில் மறைந்து கிடைக்கும்  தத்துவத்தையும் தெரிந்து கொள்ள இயலாது என்பதை உணர்ந்து கொண்ட சனகாதி முனிவர்கள் சிவபெருமானை தேடிச் சென்றார்கள். அவர்கள் வருவதை அறிந்து கொண்ட சிவபெருமான் தானும் அவர்களுக்கு போதனை தராவிட்டால் பிரம்ம தேவரின் மகன்களான சனகாதி முனிவர்கள் எனப்படும் சனத்குமாரர்கள் ஏமாற்றம் அடைந்து விடுவார்கள் என்று எண்ணி, உடனடியாக தன்னை பதினாறு வயது சிறுவனாக உரு மாற்றிக் கொண்டு ஒரு ஆல மரத்தின் அடியில் சென்று அமர்ந்து கொண்டு விடுகின்றார்.

சிவபெருமானை தேடித் சென்ற சனகாதி முனிவர்கள் அங்கு ஆல மரத்தடியில் ஒளி வெள்ளம் வீசிக் கொண்டு, ஆனந்த வடிவில், அமைதியாக அமர்ந்து கொண்டிருந்த  இளம் வயதானவர்  நிச்சயம் மாபெரும் யோக புருஷராகவே இருக்க வேண்டும் என்ற முடிவுடன், அவரிடம் சென்று யோக நிலை குறித்தும், மேன்மையான ஞான நிலை மற்றும் யோகா நிலைக் குறித்து அவர் தமக்கு போதனை செய்ய வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொண்டார்கள். அதைக் கேட்டு  மனம் மகிழ்ந்து போன  சிவபெருமானும், தான் யார் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் முன்னர் யோக நிலையில் இமய மலையில் அமர்ந்திருந்த அதே யோக நிலை தோற்றத்திலேயே சனகாதி முனிவர்கள் எனும்  பிரம்ம குமாரர்களுக்கு காட்சி தந்து அவர்களது கேள்விகளுக்கு பதில் தரத்  துவங்கினார்.  அந்த யோக நிலையில் ஞானத்தை போதனை செய்த அவதாரமே யோக தக்ஷிணாமூர்த்தி ஆகும்.

பிரம்ம குமாரர்களின் வேண்டுதல்களை ஏற்று ஞானம், யோகம் போன்றவற்றின் உட்கருத்துக்கள் மற்றும் அவற்றின் தத்துவம் பற்றி யோக தக்ஷிணாமூர்த்தி அவதாரத்தில் இருந்த சிவபெருமான் அவர்களுக்கு எடுத்துரைத்தார். அந்த போதனையை எப்படி செய்தார் என்றால், எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் மெளனமாய், தன் மனதோடு அவர்கள் மனதை இணைத்துக் கொண்டு, அந்த மௌன மொழியில் அனைத்தையும் புரிய  வைக்கத் துவங்க அவர்களுடைய கேள்விகளும்  அதிகரித்தவண்ணம் இருந்தன. ஆகவே அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கும் விதத்தில், யோக தட்சிணாமூர்த்தி தன் கையினால் அவர்களுக்கு சின் முத்திரையை காட்ட,  அந்த  சின் முத்திரையில் இருந்து வெளிவந்த சக்தியின் மூலம்  அவர்கள் ஜீவாத்மா – பரமாத்மா எனும் ஐக்ய நிலையின் தாத்பர்யத்தை  முற்றிலுமாக  கிரகித்துக் கொண்டார்கள் என்பதாக கூறுவார்கள். அதன் பின் அந்த பிரம்ம குமாரர்கள் மென்மையான ஞானம் பெற்று மனதில் அமைதியும், ஆனந்தமும் பெற்று  உடனடியாக யோக தட்சிணாமூர்த்தியின் பாதத்தைத் தொட்டு அவரை வணங்கிய பின் அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு தேவலோகம் சென்றார்களாம்.

இப்படியாக பூலோகத்துக்கு வந்து பிரம்ம குமாரர்கள் போதனை பெற்ற இடமே தற்போது மங்கை மடத்தில் உள்ள யோக தக்ஷிணாமூர்த்தி ஆலயம் என்பதாக ஐதீகம் உள்ளது. இதனால்தான் இந்த ஆலயத்தில் ஆழ்ந்த யோக நிலையில் உள்ள தக்ஷிணாமூர்த்தி, தனது காலடியில் உள்ள சேனாதி முனிவர்களுக்கு (பிரம்ம குமாரர்கள்) போதனைகளை தந்திடும் நிலையில் காணப்படும் காட்சி உள்ளது என்பதான ஐதீகம் உள்ளது. அந்த நான்கு சனகாதி முனிவர்களுக்கும் சிவபெருமான் காட்டிய உருவமே இங்குள்ள ஆலயத்தில் காணப்படும் ‘யோக தட்சிணாமூர்த்தி’ தோற்றம் என்பதாக கூறுகின்றார்கள்.

சிவபெருமானின் அம்சமாக சிவபெருமானின் அகோரா பாவத்தில்  இருந்து வெளிவந்த யோக தக்ஷிணாமூர்த்தி பகவான், தன்னிலை மறந்த நிலையில் காணப்படுபவர், ஆழ்ந்த ஆன்மீக ஞானத்தின் மெத்த உருவம், மன அறியாமையை விலக்கி அழிப்பவர்  மற்றும் அளவற்ற அறிவாற்றலைக் கொண்டவர், அறியாமையை அழிக்கும் ஆதி குருவான அவர் என்றும் இளமை ததும்பும் தோற்றத்தில் காணப்படுபவர் என்பதாக பண்டிதர்கள் கூறுவார்கள். உலகில் அனைவராலும், அனைவரையும் விட மேன்மையான குரு என ஏற்கப்பட்டவர் யோக தக்ஷிணாமூர்த்தி பகவான். அவர் போதிக்கும் போதனைகள் மற்றவர்களின் செவிகளில் கேட்க முடியாத நிலையிலான, மென்மையான, மௌன மொழியிலானவை.

இந்து தத்துவத்தில் நான்கு விதத்திலான போதனை வழிமுறைகள் உள்ளன என்று கூறப்பட்டு உள்ளது. அவை வாய் வழி வார்த்தை மூலம் தரப்படுவது, போதனைகளை மெளனமாக ஒருவருடைய சிந்தனையில் இணைப்பது, போதனைகளை மனக்கண்ணில் நிழல் படம் போல காட்டுவது மற்றும் மேலான தன்னிலை கடந்த தியான நிலையில் போதனைகளை புரிய வைப்பது. இதில் யோக தக்ஷிணாமூர்த்தி போதிப்பது தன்னிலை கடந்த தியான நிலையில் புரிய வைக்கும் போதனை வழிமுறை ஆகும். அதனால்தான் வெளி உலகிற்கு கேட்காத வகையில் அவரது மௌனமான மொழியில் வெளிப்படுத்தும் போதனைகளை ஈர்ப்பதற்காக ரிஷிகள் அவர் காலடியில் தன்னிலை கடந்து, கண்களை மூடிய நிலையில் அமர்ந்து உள்ளார்கள்.

இந்த ஆலயத்தின் வெளிப்பகுதியில் தனி சன்னதியில் கண்களை மூடி யோக நிலையில் அவர் அமர்ந்திருக்க, அந்த சன்னதியில் அசாதாரணமான அமைதி நிலவுவதை நம்மால்  உணர முடியும். அடிக்கடி யாருடைய கண்களுக்கும் புலப்படாமல் பல ரிஷிகளும், மாமுனிவர்களும் இங்கு வந்து, அவரது காலடியில் கிடந்து யோக நிலை போதனை பெறுகின்றார்கள் என்பதான ஐதீகம் உள்ளத்தினால்தான், அங்கு வரும் பக்தர்கள் மூலம் தமக்கு எந்த விதமான இடைஞ்சலும் ஏற்படக் கூடாது என்பதற்காகவே அமைதியான தனி சன்னதியில் யோக தக்ஷிணாமூர்த்தி அமர்ந்து உள்ளாராம்.

மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகும் நேரத்தில் தக்ஷிணாமூர்த்தியின் சந்நதியில் அவருக்கு முன்பாக அமைதியாக அமர்ந்து கொண்டு தியானத்தில் ஈடுபட்டால், குழப்பங்கள் அகன்று மனம் தெளிவடையும். தக்ஷிணாமூர்த்தியை வழிபடுவதற்கு வாரத்தின் எந்த கிழமையும் முக்கியமில்லை. தட்சிணாமூர்த்தியை குரு என்ற பெயரில் அழைக்கின்றார்கள் என்றாலும், நவக்கிரகத்தில் வியாழ பகவான் எனக் கூறப்படும் குரு பகவானும் இவரும் வெவ்வேறானவர்கள். ஆகவே குரு எனவும் கூறப்படும் தக்ஷிணாமூர்த்தி பகவானை வியாழக் கிழமைகளில்தான் வழிபட வேண்டும் என்று கூறப்படுவது தவறானது. வியாழ பகவான் எனக் கூறப்படும் குரு பகவானுக்கு உரிய வியாழக் கிழமைக்கும் தக்ஷிணாமூர்த்திக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. வியாழ பகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள் நிறமாகும்.  யோக தக்ஷிணாமூர்த்தி பகவானுக்கோ வெளீர் நிறமான வெண்மை நிறமே உகந்ததாகும்.

இந்த ஆலயத்தில் உள்ள மூல மூர்த்தியான யோகநாதஸ்வாமி தாமாகவே சிவலிங்க உருவில் வெளியானவர். அவருடைய துணைவியாக பார்வதி தேவியானவள் யோகம்மாள் எனும் பெயரில் அமர்ந்து உள்ளார். இந்த ஆலயம் மேற்கு நோக்கி அமைந்து இருக்க, ஆலய நுழை வாயில் கிழக்கு நோக்கி அமைந்து உள்ளது. ஒவ்வொரு வருடமும் தை மற்றும் பங்குனி மாதங்களில் (அதாவது ஜனவரி மற்றும் மார்ச் மாத மத்தியில்) மாலை நேரங்களில் சூரிய பகவானின் சூரிய ஒளி இங்குள்ள சிவலிங்கத்தின் மீது விழுந்து மெல்ல மெல்ல மறைவதை , யோகநாதஸ்வாமிக்கு சூரிய பகவானே நேரில் வந்து பூஜைகளை செய்வதாக ஐதீகம் உள்ளது. ஆலயத்தில் ஒரு பெரிய பலா மரம் உள்ளது. இதுதான் ஆலயத்தின் தல மரமா என்பது தெரியவில்லை. ஆலய வளாகத்துக்குள் விநாயகப் பெருமான், முருகப் பெருமான், பைரவப் பெருமான், சூரிய பகவான், துர்கை தேவி மற்றும் மஹாலக்ஷி தேவி போன்றவர்களுக்கு தனித் தனியே சிறு ஆலயங்கள் உள்ளன.

இந்த ஆலயம் குறித்து கூறப்படும் கதைகள் மேன்மையானவை, அதில் முதலாவதானது இது. முன்னொரு காலத்தில் மருத்துவாசுரன் எனும் அசுரன் ஒருவன் இருந்தான். அவன் சிவபெருமானை கடுமையாக துதித்து வேண்டி அவரிடம் இருந்து அதி உன்னத ஆயுதமான ஒரு சூலத்தை பெற்றுக் கொண்டான். அது கிடைத்தப் பின் அதைக் கொண்டு அவன் தேவர்களை வாட்டி வதைத்தான், அனைவரையும் துன்புறுத்தினான். தேவலோகவாசிகளையும், தேவர்களையும் கொல்லத் துவங்கினான். ஆகவே அனைவரும் சென்று சிவபெருமானிடம் முறை இட்டார்கள். அதைக் கேட்டுக் கொண்டு இருந்த சிவபெருமானின் வாகனமான நந்தி தேவர் கோபமடைந்து, அங்கிருந்து கிளம்பிச் சென்று அந்த அசுரனுடன் யுத்தம் செய்தார். ஆனால் அவனிடம் சிவபெருமான் கொடுத்து இருந்த ஆயுதம் இருந்ததினால் அவனை நந்தி தேவரால் வெல்ல  முடியவில்லை. நடைபெற்ற சண்டையில் அந்த அசுரன் நந்தி தேவரின் உடலில் ஒன்பது இடங்களில் சூலத்தினால் குத்தி விட, அந்த குத்தப்பட்ட இடங்களில் இருந்து ரத்தம் கொட்டிக் கொண்டு இருக்க, அதே நிலையில் நந்தி தேவர் ஸ்வேதாரண்யேஸ்வரர் அவதாரத்தில் இருந்த சிவபெருமானுடைய இடத்துக்கு சென்று விழுந்தார் (புதன் ஸ்தலம்).

தனது வாகனமான நந்தி தேவரை காயப்படுத்திய மருத்துவாசுரன் மீது கோபமுற்ற ஸ்வேதாரண்யேஸ்வரர், உடனடியாக தன்னை அகோரா மூர்த்தி உருவில் மாற்றிக் கொண்டு அவனை தேடித் சென்று, அவனைக் கொன்று, தான் கொடுத்து இருந்த சூலத்தை திரும்ப எடுத்துக் கொண்டு வந்து விட்டார். அவனைக் கொன்ற தோஷத்தை தொலைத்துக் கொள்ள ஒரு நதியில் குளிக்க எண்ணியபோது காவேரி நதியின் கிளை நதியாக ஸ்வேதாரண்யேஸ்வரர் அருகில் ஒரு ஆறு பாய்ந்து  வந்தது.  ஈசனும் அதில் குளித்து விட்டு தன் இருப்பிடத்துக்கு சென்று விட்டார். அவர் சென்று அமர்ந்த இடமே திருவெண்காடு புதன் ஸ்தலமாகும். 

மங்கை மடத்தில் இருந்த யோக தக்ஷிணாமூர்த்தியே அந்த ஆற்றை ஈசனுக்காக அங்கு வரவழைத்ததாக ஐதீகம் உள்ளது. இதில் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியது என்ன என்றால், நான் ஏற்கனவே முன்னர் ‘ஸ்வாமி வைத்தீஸ்வரர்’ கட்டுரைகளில் குறிப்பிட்டு இருந்ததை போல, ஒரே தெய்வம் பல இடங்களிலும் ஒரே நேரத்தில் பல தோற்றங்களில் அவதரிக்க முடியும் என்ற உண்மையை நினைவில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உலக நன்மையைக் கருத்தில் கொண்டு மங்கை மடத்தில், யோகநாதஸ்வாமி  ஆலயத்துக்கு வந்து, இன்னோர் தனி சன்னதியில் யோக தக்ஷிணாமூர்த்தி பகவானாக  அமர்ந்து கொண்ட  சிவபெருமான், அங்கு தன்னை தேடி அலைந்து கொண்டு  வந்த சனகாதி முனிவர்களை வரவேற்று அவர்களுக்கு ஞானோபதேசம் செய்யத் துவங்கினாராம். அவர்களே யோகா தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் அவரது காலடியில் காணப்படும் முனிவர்கள் என்பதாகவும் கருத்துக்கள் உள்ளன.

இந்த ஆலயம் குறித்து கூறப்படும் இரண்டாவது  கதை இது. ஒருமுறை இந்த ஆலயத்தை புனரமைக்க முடிவு செய்தவர்கள், சிவலிங்கத்தையும் அங்கிருந்து அகற்ற முடிவு செய்தார்கள். ஆகவே ஸ்வயம்பு சிவலிங்கத்தை அடியோடு பெயர்த்து எடுக்க கருவறையின் பூமியை தோண்டியபோது, எத்தனை தோண்டியும் அந்த ஸ்வயம்பு சிவலிங்கத்தின் அடிப்பாகத்தைக் கண்டு பிடிக்க முடியாமல், சிவலிங்கத்தின் அடிப்பாகம்  நீண்டு கொண்டே இருந்ததைக் கண்டு பிரமித்துப் போய் அதை திட்டத்தை அப்படியே கைவிட்டு விட்டார்களாம். ஸ்வயம்புவாக சிலலிங்கம் தோன்றிய அதே இடத்தில் சிவலிங்கத்தின் கருவறையையும் அமைத்து விட்டார்களாம்.

மூன்றாவது கதையின்படி ஒருமுறை நவகிரகத்தில் ஒன்றான குரு எனப்படும் வியாழ பகவான் தேவலோகத்தில் செய்த பிழையினால் தோஷம் அடைந்தார். அந்த தோஷத்தை களைந்து கொள்ள அவர் இங்கு வந்து குரு தக்ஷிணாமூர்த்தியையே தமது குருவாக ஏற்றுக் கொண்டு அவர் அருளை பெற்றுக் கொண்டு தோஷ விமோசனம் பெற்றாராம். அதனால்தான், தனது தந்தையான சிவபெருமானுக்கே உபதேசம் செய்து, குருவுக்கே குருவானவர் எனப் பெயர் கொண்ட முருகப் பெருமானைப் போலவே, நவக்கிரகத்தில் ஒருவரான குரு பகவானுக்கே குருவாக ஆகி விட்ட குரு தக்ஷிணாமூர்த்தியை, குருவுக்கு குருவானவர் என இந்த ஆலயத்தில் போற்றி வணங்குகின்றார்கள் என்ற ஐதீகமும் உள்ளதாம்.

நான்காம் கதை என்ன என்றால் ஒரு காலத்தில் இந்த ஆலயம் இருந்த இடம் தஞ்சை சரபோஜி மன்னர் பரம்பரையை சேர்ந்த மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. அப்போது இந்த ஆலயம் இருந்த இடத்தில் சதாசிவ பிரும்மேந்திராவின் குரு ஒருவர் ஆழ்ந்த தவத்தில் அமர்ந்து இருந்தார். அவர் கட்டைப் போல ஒரே இடத்தில் அசையாது அமர்ந்து இருந்ததினால் காலப்போக்கில் அவர் காதில் வண்டு ஒன்று கூடு கட்டி தங்கி இருந்தது. ஒருநாள் அந்த நாட்டு மன்னன் நகர்வலம் சென்று கொண்டு இருந்தபோது, தவத்தில் உள்ளவர் காதில் வண்டு புகுந்து கொண்டு விட்டதே என அந்தக் காட்சியைக் கண்டு, பதறிப்போய் உடனடியாக அரண்மனை மருத்துவரை அழைத்து, அவருடைய காதில் இருந்த வண்டை எடுத்து விட்டு அவருடைய காதை சுத்தப்படுத்துமாறு ஆணை இட்டப் பின் சென்று விட்டார். அரண்மனை மருத்துவரும் அங்கு வந்து தவத்தில் அமர்ந்து இருந்தவர் காதில் இருந்த புழுவை எடுத்து விட்டு அவருடைய காதினை சுத்தம் செய்தார். அதன் விளைவாக சதாசிவ பிரும்மேந்திராவின் குருவின் தவமும் கலைந்து போயிற்று. கண் விழித்த குரு, மன்னனை அழைத்து, அவர் செய்த செயலுக்கு கண்டனம் தெரிவித்ததும் அல்லாமல் சாபமும் கொடுத்து விட்டார்.

பதறிப் போன மன்னன் அவர் காலில் விழுந்து தான் அவருக்கு நல்லதை செய்வதற்காக தவறாக தவத்தைக் கலைத்து விட்டதற்கு மன்னிப்பையும் கேட்டார். ஆனாலும் கொடுத்த சாபத்தை விலக்கிக் கொள்ள முடியாது என்பதினால், சதாசிவ பிரும்மேந்திராவின் குரு, அந்த மன்னனிடம் அந்த கிராமத்தில் உள்ள 108 பிராமணர்களுக்கு நில தானம் செய்து அதற்கான பட்டயமும் கொடுத்தால் சாபம் விலகும் என்று கூற, மன்னனும் உடனடியாக 108 பிராமணர்களுக்கு நிலங்களை தானம் செய்து அதற்கான பட்டயங்களையும் கொடுக்க ஏற்பாடு செய்தார். 107 பிராமணர்களுக்கு நிலங்களையும் அதற்கான பட்டாக்களையும் தந்த பின் 108 வது  பிராமணரை தேடினார். எங்கு சென்று அலைந்து தேடியும் 108 வது பிராமணர் கிடைக்கவில்லை. மனக் கவலை அடைந்த மன்னனும் மனமுருகி சிவபெருமானை வேண்டிக் கொள்ள அவரும் தானே ஒரு பிராமணர் உருவில் அங்கு வந்து, நிலத்தைப் பெற்றுக் கொண்டு பட்டயத்தையும் பெற்றுக் கொண்டாராம். அதன் பின் அவர் மறைந்து விட சதாசிவ பிரும்மேந்திராவின் குருவும், அந்த மன்னனும் சிவபெருமானின் லீலையை எண்ணி ஆனந்தம் அடைந்தார்களாம்.

அப்படி  ஈசனே மன்னனிடம் இருந்து பெற்றுக் கொண்ட நிலமே மங்கை மடத்தில் இன்றைய யோகநாதஸ்வாமி ஆலயம் உள்ள இடம் என்பதாக சிலர் கூறுகின்றார்கள். ஆனால் இவற்றுக்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இந்த செவி வழிக் கதைகள் மூலம் ஒன்று நன்கு விளங்குகின்றது. இந்த ஆலயம் மற்றும் திருவெண்காட்டில் உள்ள புதன் ஆலயமும் ஒன்றுடன் ஒன்று எதோ ஒரு வகையில் சம்மந்தப்பட்ட இருக்க வேண்டும். அதன் காரணம், ஸ்வேதாரண்யேஸ்வரர் தனது வாகனமான தெய்வீக நந்தியை காயப்படுத்திய அசுரனை அழித்த மேலே கூறப்பட்டு உள்ள கதை மூலம் தெரியவரும். எதோ ஒரு காரணத்தினால் அந்த காலத்து மன்னர்களினால் புதன் ஆலயத்தைப் போல இந்த ஆலயத்தின் மகிமையும் பரவலாக பரப்பிடப்படவில்லை. அதன் பின்னரும்  இந்து அறநிலைய அமைப்பின் கீழுள்ள இந்த மென்மையான ஆலயத்தின் புகழ்  வெளி படுத்தப்படவில்லை. அதன் காரணமும் விளங்கவில்லை.

மணிக்கையாறு கரையில் உள்ள ஒரு மகானின் சமாதி சதாசிவ பிரும்மேந்திராவின் குருவின் சமாதி என்று கூறுகின்றார்கள். ஆனால் அவர் இந்த ஆலய வளாகத்துக்குள்தான் இறுதி வரை வாழ்ந்து இருந்தார் என்றும், இறுதியில் இங்குதான் சித்தியும்   அடைந்தார் என்றும், அவர் விரும்பியதை போலவேதான் மணிக்கையாறு கரையில் அவருடைய சமாதியை அமைத்தார்கள் என்றும் கூறுகின்றார்கள். 

சதாசிவ பிரும்மேந்திராவின் குரு யார் என்பது குறித்தும் சில முரண்பட்ட தகவல்கள் உள்ளன. சதாசிவ பிரும்மேந்திராவின் ஒரு வரலாற்று செய்தியின்படி காஞ்சி காமகோடி மடத்தின் 57வது பீடாதிபதியான ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களே  சதாசிவ பிரும்மேந்திராவின் குரு என்று கூறுகின்றார்கள். இன்னொரு வரலாற்றில், நல்லை ஆத்வாரி என்பவரே காஞ்சி காமகோடி மடத்தின் 57வது பீடாதிபதியான ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுடைய சீடர் என்றும், அவருடைய ஒரு குருவே சதாசிவ பிரும்மேந்திரா என்றும் காணப்படுகின்றது. ஆகவே நல்லை ஆத்வாரி அவர்களை போலவே சதாசிவ பிரும்மேந்திராவும் காஞ்சி காமகோடி மடத்தின் 57வது பீடாதிபதியான ஸ்ரீ பரமசிவேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுடைய நேரடி சீடரா என்பதில் குழப்பம் உள்ளது.