பாண்டூர்

வைத்தீஸ்வரன்

ஆலயம்

-சாந்திப்பிரியா-

மூன்றாவது வைத்தீஸ்வரன் ஆலயம் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பாண்டூர் எனும் கிராமத்தில் உள்ளது. மாயவரத்தில் இருந்து சுமார் 9 அல்லது 10 கிலோ தொலைவில்  வயல்வெளி சூழ்ந்த பாண்டூர் கிராமத்தின் நடுவே  இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் மாயவரத்தில் இருந்து திருமங்கலம் மற்றும் காசி எனும் கிராமத்தின் வழியே சென்று அன்னியூர் எனும் கிராமத்தில் இருந்து வலப்புறம் திரும்பிச் செல்ல வேண்டும்.  இது முதலில் பாண்டவர்களின் ஊர் என்பதைக் குறிக்கும் சொல்லான பாண்டவ ஊர் என்ற பெயரில்  இருந்தது. அதை போல பாண்டவ சகோதரர்களின் பாண்டு எனும் நோயை குணப்படுத்திய தலம் என்பதைக் குறிக்கும் வகையிலும் பாண்டூ நோய் விலகிய இடம் எனக் குறிப்பிடும் வகையில் இந்த கிராமம் பாண்டூர் எனப்பட்டது. 

மஹாபாரத யுத்தம் முடிந்த  பின் எதற்காக பாண்டவ சகோதரர்கள் பல சிவன் ஆலயங்களுக்கும் சென்று வழிபட வேண்டி இருந்தது என்பதைக் கூறும் நாடோடிக் கதை இது. கிருஷ்ண பரமாத்மாவின் உதவியோடு மஹாபாரத யுத்தத்தில் வெற்றி பெற்ற பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தை சென்றடைந்து அரியணை ஏறினார்கள்.  தனது கடமை முடிந்து விட்டதை தெரிந்து கொண்ட கிருஷ்ண பரமாத்மாவும் துவாரகைக்கு சென்று அங்கிருந்து தன்  அவதாரத்தை முடித்துக் கொள்ள விரும்பினார். ஆகவே அவர் துவாரகைக்கு திரும்பும் முன் பாண்டவ சகோதரர்களை அழைத்து அவர்களுக்கு சில அறிவுரைகளை கொடுத்தார். அவர் கூறினார் “பாண்டவ சகோதரர்களே, நான் கூறும் இவற்றை கவனமாகக் கேளுங்கள். மஹாபாரத யுத்தத்தில் கௌரவர்களை  அழித்து உங்களிடம் ஆட்சியைக் கொடுத்தப் பின்  நான் எடுத்த அவதாரத்தின் கடமை முடிந்து விட்டது என்றே எண்ணினேன்.  ஆனால் காந்தாரி எனக்கு கொடுத்த சாபத்தின் விளைவினால் எனக்கு  இன்னொரு கடமை சாப உருவில் வந்துள்ளது. அதையும் நான் முடித்தால் மட்டுமே என்னுடைய அவதாரம் முடிவுக்கு வரும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது. தன்னுடைய  குல மக்கள் அழிவதற்கு நான்தான் காரணம் என அவள் தவறாக புரிந்து கொண்டு நானும் என்னுடைய சந்ததியினரும் அடுத்த 36 வருடத்தில் அழிய வேண்டும், அதற்கும் நானே காரணமாக இருக்க வேண்டும் என்பது அவள் கொடுத்துள்ள சாபம். அவளுடைய சந்ததியினர் அழிந்ததின் காரணம் அவர்களுடைய ஊழ்வினைப் பலனே என்பதை அவள் எண்ணிப் பார்க்கவில்லை.  அதை போலவே நான் எனது சந்ததியினரும் அழியக் காரணமாக இருந்து, அவர்களை அழித்தப் பின்னரே இந்த பூத உடலை துறக்க வேண்டும் என்பது காந்தாரியின் சாபத்தினால் ஏற்பட்டு உள்ள விதியாக அமைந்து விட்டது. ஆகவே இனி என் உதவியை நீங்கள் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் வரும் காலம் குறித்து நான் கொடுக்கும் இந்த எச்சரிக்கையை கவனமாகக் கேளுங்கள். தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் உங்களுடைய சொந்த பந்தங்களை கொன்று விட்டதினால் ஏற்பட்டு உள்ள தோஷத்திற்கான தெய்வ தண்டனையை நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும்.  அந்த தண்டனை என்ன என்றால் இன்று முதல் நான்கு ‘கால’ வருடங்கள் முடிவடைய உள்ள நிலையில் உங்களுக்கு மனபலம் இழப்பும், உடல் ரோக நோய்களும் ஏற்படும் (கால வருடங்கள் எத்தனை என்பதைக் குறித்த எண்ணிக்கை தெரியவில்லை). அந்த தண்டனைகளின்  பலனாக உங்களுக்கு கடுமையான உடல் நோய் ஒன்று பாண்டு ரோகம் எனும் பெயரில் ஏற்படும். (பாண்டு ரோகம் என்பது ரத்த சம்மந்தப்பட்ட நோய் ஆகும். அது ரத்தத்தை சுண்டி, தோலில் வெண் குஷ்டம் போன்ற நிலையை உருவாக்கி, அப்படியே ஒருவரை களைப்படைய வைத்துக் கொண்டே இருக்கும். முடிவில் அவர்களால் ஒன்றுமே செய்ய இயலாது போய் விடும்).  நான்கு ‘கால’ வருடங்களின் முடிவில் அந்த நோய்  ஏற்பட்ட உடனேயே உங்களுடைய வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை நீங்கள் எட்டி விட்டீர்கள் என்பதை உணர வேண்டும். ஆனால் அப்போது உங்களுக்கு உதவிட நான் இங்கு இருக்காமல் துவாரகையில் என்னுடைய இறுதிக் கட்ட வாழ்க்கையுடன் போராடிக்கொண்டு இருப்பேன். நீங்கள் வனவாசத்தில் இருந்தபோதே உங்களுக்கு ஏற்பட்டு இருந்த ஒரு சாபத்தினால் அந்த நோய்  உங்களுக்கே தெரியாத வகையில் உங்கள் உடம்பில் தொற்றிக் கொண்டு விட்டது. அது வெளியே தெரியும் காலமே உங்களுடைய இறுதிக்  கட்டக் காலம் ஆகும்.

ஆகவே நான்காம் ‘கால’ வருட முடிவில் உடனடியாக உங்கள் ஆட்சிப் பொறுப்பை தக்க நபரிடம் ஒப்படைத்து விட்டு நதிக்கரைகளில் உள்ள எத்தனை சிவன் ஆலயங்களுக்கு செல்ல முடியுமோ  அத்தனை சிவபெருமான் ஆலயங்களுக்கும் சென்று அங்கு அவரை வழிபடுங்கள். முக்கியமாக எங்கெல்லாம் சிவபெருமான் ஸ்வயம்புவாக எழுந்து உள்ளாரோ அங்கெல்லாம் நீங்கள்  சென்று அவர் காட்சி தரும் வரை தவத்தில் அமர்ந்து கொண்டு அவரை தரிசித்தப் பின் பயணத்தை மீண்டும் தொடருங்கள்.  இறுதியாக வைத்தியநாத கடவுளே உங்கள் முன் காட்சி தந்து மோட்ஷம் பெற அருள் புரிந்ததும் உங்கள் நோய்களும் விலகும், உங்களுக்கு மோட்ஷமும் கிடைக்கும். வைத்தியநாத கடவுள் என்பவரே பல நோய் நொடிகளை தீர்க்கும் வல்லமை கொண்ட தெய்வம் ஆவர்.  நோய் நொடிகள் இருந்த  பல்வேறு  ரிஷி முனிவர்கள் மற்றும் தேவர்கள் கூட வைத்தியநாத பெருமானை வேண்டி வணங்கி  தம் துயரங்களையும், நோய் நொடிகளையும் விலக்கிக் கொண்டு உள்ளார்கள். வைத்தியநாத பெருமான் யார் என்று யோஜனை செய்கின்றீர்களா? அவர் வேறு யாரும் அல்ல. பிரும்மா, விஷ்ணு, மற்றும் அனைத்து ஆண் மற்றும் பெண் கடவுட்களும், அத்தனை ஏன் விஷ்ணுவின் அவதாரமாக அவதரித்து உள்ள நான் கூட வணங்கித் துதிக்கும் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியினரே அந்த வைத்தியநாத கடவுள் ஆவார்.  யுக, யுகமாக வைத்தியநாதராக அவதரித்துக் கொண்டே இருக்கும் அவர் ஆயிரத்துக்கும் அதிக நாமங்களால் பூஜிக்கப்படும் தெய்வம் ஆவார். அவரை எளிதில் காண முடியாது. மனதார அவரை துதிப்பவர்களுக்கும், எவர் ஒருவருக்கு பிராப்தம் உள்ளதோ அவர்களுக்கும் மட்டுமே  அவர் காட்சி தருகின்றார். அவரே இந்த பிரபஞ்சத்தின் தலைவர். இத்தனை பெருமைகளைக் கொண்ட அவரால் மட்டுமே உங்கள் நோயை குணப்படுத்த இயலும்.

ஆகவே நீங்கள் இமயமலையை நோக்கி பயணிக்க துவங்கியதும் முதலில் தென் பகுதியில் இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். உங்களுடைய பாண்டு ரோக நோய் வெளியில் தெரியத் துவங்கியதும், வைத்தியநாதக் கடவுளைத் தேடித் கொண்டு, அவரிடம் சென்று அதை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். வழியில் எங்கெல்லாம் உங்களுக்கு சிவபெருமானுக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என உள்ளுணர்வு ஏற்படுமோ அங்கெல்லாம் அவருக்கு ஆலயமும் எழுப்புங்கள். வைத்தியநாத பெருமானை தரிசனம் செய்து உங்கள் நோய் விலகியதும் நீங்கள் இமயமலைக்கு செல்வீர்கள். அங்கு நீங்கள் நடந்து செல்லும்போது ஒருவருக்குப் பின் ஒருவராக மரணம் அடைந்து சொர்கத்துக்கு செல்வீர்கள். அதற்கு முன்பாகவே நானும் உங்கள் அனைவரையும் விட்டு விலகி துவாரகையில் இருந்து இந்த பூத உடலை நீக்கிக் கொண்டு மேலுலகம் சென்றிருப்பேன்”. இவ்வாறாக கிருஷ்ண பகவான் பாண்டவர்களுக்கு போதனை செய்தார்.

அதைக் கேட்ட பாண்டவ சகோதரர்கள் கிருஷ்ண பகவான் இல்லாமல் தாங்கள் அனாதைகளாகி விட்டோமோ என துயரம் அடைந்தார்கள். ஆனால் விதியை  மீற முடியாது என்பது அவர்களுக்கு நன்கே தெரியும்.  அடுத்து கிருஷ்ணரிடம் விடை பெற்றுக் கொண்டு அவர்கள் தம் நாட்டிற்கு சென்றார்கள். 

காலம் கடந்தது. மெல்ல மெல்ல பாண்டவ சகோதரர்களுக்கு வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டது, மன பலமும் உடல் பலமும் அழியத்  துவங்கின. மனம் வெறுமை அடைந்தது. அவர்களால் ஆட்சியில் தொடர முடியவில்லை. ஆகவே அவர்கள் ஆட்சிப் பொறுப்பை அபிமன்யுவின் மகனான பரிக்ஷித்திடம் ஒப்படைத்து விட்டு கிருஷ்ண பகவானின் அறிவுரையின்படி தென் இந்திய பகுதியில் இருந்து தமது ஹிமயமலைப் பயணத்தை துவக்கினார்கள். 

ஹஸ்தினாபுரத்தில் இருந்துக் கிளம்பியவர்கள் துவாரகைக்கு சென்று கிருஷ்ண பகவானிடம் ஆசிகளை பெற்றுக் கொண்டு கடற்கரை வழியே தென் இந்திய பகுதியை நோக்கி தமது பயணத்தை துவக்கினார்கள். அவர்கள் பல்வேறு பிராந்தியங்கள் மூலமாக சென்று அங்கங்கே இருந்த வழிபாட்டுத் தலங்களில்  சிவபெருமானை வணங்கித் துதித்தார்கள். மஹாராஷ்டிரா, கோவா, ஆந்திரா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளா போன்ற பிராந்தியங்களில் சில இடங்களில் சிவபெருமானுக்கு ஆலயங்களையும் நிறுவினார்கள். (அப்போதெல்லாம் அந்த பெயர்களில் பிராந்தியங்கள் இருந்திடவில்லை. அனைத்துமே ஒரே நில பூமியாகவே இருந்தன. அங்கங்கே பல இடங்களிலும் இருந்த அடர்ந்த நீண்ட காடுகளும், நதிகளும் பிராந்தியங்களை பல்வேறு பூமிகளாக பிரித்து வைத்திருந்தன). இந்த நிலையில் காவேரி ஆற்று கரை அருகே பாண்டவ சகோதரர்கள் வந்தடைந்தபோதுதான் அதுவரை  வெளித் தெரியாமல் அவர்கள் உடலுக்குள் மறைந்து இருந்திருந்த கடுமையான ‘பாண்டு’ என்ற நோய்  வெளித் தெரிந்தது. அவர்கள் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டதை அது காட்டியது. காவேரி நதியில் குளித்துக் கொண்டு இருந்தவர்களிடம் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து அங்கு வைத்தியநாத பெருமானை துதித்து தவம் இருந்து நோயை போக்கிக் கொள்ளுமாறு ஆசிரி ஒன்று கூறியது. அந்த ஆசிரியே விஷ்ணு பகவானுடைய குரல் ஆகும். அது தெரியாமல் பயத்துடன் குரல் வந்த திசையை நோக்கிக் கொண்டு இருந்த பாண்டவ சகோதரர்கள் முன் திடீர் என கிருஷ்ண பரமாத்மாவே விஷ்ணு பகவான் உருவில் காட்சி தந்த பின் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கூறி அங்கு சென்று மண்ணிலான சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, அதற்கு பூஜை செய்து சிவபெருமானின் அருளை வேண்டிக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டு மறைந்து போனார்.

அந்த ஆசிரி கூறிய இடமே மாயவரத்தில் அருகில் உள்ள பாண்டூர் எனும் கிராமம் ஆகும். அவர்களும் விஷ்ணு பகவான் கூறிய இடத்துக்கு சென்று அங்கு சிவபெருமானை வேண்டி கடுமையான தவத்தை மேற்கொண்டார்கள். முடிவில் அவர்கள் தவத்தைக் கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமானும் அவர்கள் முன் தனது துணைவியார்  பார்வதி தேவியுடன் காட்சி  தந்தார். அப்படி காட்சி தந்த கோலத்தில் இருந்தவர்களே வைத்தியநாத பெருமான் மற்றும் பாலாம்பிகா எனும் தையல் நாயகி ஆவார்கள். பாண்டவ சகோதரர்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் தனது துணைவியார்  பார்வதி தேவியுடன்   அவர்கள் அமைத்த ஆலயத்தில் அமர்ந்து கொண்டு அங்கு வந்து அவர்களை வழிபட்ட வேண்டியவர்களுக்கு வியாதி நிவாரணமும் தந்து ஆசி வழங்கி வரலானார்கள்.

பாண்டவ சகோதரர்கள் அந்த கிராமத்தில் இருந்தபோது அவர்களுக்கு உதவி செய்த தேவகணமே பின்னர் சகாய பெருமான் எனும் உருவில் அங்கு தனி சன்னதியில் அமர்ந்தார். இந்த ஆலயத்தில் தென்மேற்கு சன்னதியில் விநாயகப் பெருமானும், மேற்கில்  சகாய பெருமானும் அமர்ந்து இருக்க,  தனி சன்னதியில் ஐயனார் மற்றும் பிடாரியும் உள்ளார்கள். ஆலயத்தில் கால பைரவருக்கு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அவர் பக்தர்களின் துயரங்கள் அனைத்தையும் துடைக்கின்றார். ஆலயம் சிறியது என்றாலும் மேன்மை மிக்கது. பாண்டவ சகோதரர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த ஆலயத்தில் உள்ள வைத்தியநாத பெருமானே சீர்காழி அருகில் உள்ள பெரிய வைத்தீஸ்வரன் ஆலயத்தில் உள்ள வைத்தியநாத பெருமானுக்கு  மூத்தவர் என ஆலயத்தை நிர்வாகிப்பவர்கள் கூறுகின்றார்கள்.

இத ஆலயம் குறித்த முழுமையான  தகவல்கள்  கிடைக்கவில்லை. அதன் எதிரில் சூர்ய புஷ்காரனி எனும் குளம் உள்ளது. அதில் குளித்தால் தீராமல் உள்ள நோய்கள் விலகத் துவங்கும் என்பதும் ஐதீகமாக உள்ளது. ஆலயத்தின் அருகில் உள்ள வயல் வெளியில் மத்தியில் ஐந்து பிடாரி எனும் பெயரில்  கிராம தேவதையின் பெயரில் உள்ளது. பாண்டூரில் உள்ள வைத்தியநாத பெருமானின் ஆலயத்தில் வந்து வணங்கித் துதிப்பவர்கள் பிடாரியையும் தரிசனம் செய்துவிட்டு போக வேண்டும், அப்போதுதான் அவர்களுக்கு அந்த ஆலயத்தை வந்தடைந்த முழு பலனும் கிடைக்கும் என்பதும் ஐதீகமாம். பிடாரி எனும் தெய்வம் சிவ சக்தியின் தோற்றம், அவள் காளியின் அவதாரமாக அவதரிக்கின்றாள் என்று நம்பிக்கை உள்ளது. அவள் சிவபெருமானின் ஆலயங்களை ஆலயத்திற்கு வெளியில் இருந்து கொண்டு காப்பவளாம். பேய், பிசாசுகள் மற்றும் தீய சக்திகளை விரட்டி அடிக்கும் சக்தி கொண்ட அவளை தாந்த்ரீகர்கள் அதிகம் வணங்கித் துதிக்கின்றார்கள். அதனால்தான் தீய சக்திகளை விரட்டி அடிக்கும் சக்தி கொண்ட அவள்  பல  கிராமங்களின் கிராம தேவதையாக இருக்கின்றாள்.

ஆலய  படங்கள்