வெள்ளை வேப்பிலை
மாரியம்மன் ஆலயம்
 
சாந்திப்பிரியா 

நான் ஒருமுறை மாயவரம் சென்று இருந்தபோது இரண்டு அற்புதமான ஆலயங்களைக்  கண்டேன். இரண்டு ஆலயங்களில் முற்றிலும்  வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்திலான இலைகளைக் கொண்ட வேப்ப மரத்தின் அடியில் அன்னை மாரியம்மன்கள் குடி இருக்கிறார்கள் என கேள்விப்பட்டோம். அவர்களை ‘வெள்ளை  வேப்பிலைக்காரி’ என அழைக்கின்றார்கள். யாருமே எளிதில் நம்ப முடியாத செய்தியாக இருந்ததினால் அந்த ஆலயத்தைக் காண ஆவல் கொண்டோம்; அந்த ஆலயத்தை தேடி அங்கு சென்றோம்.

முதலாவது ஆலயம் மயிலாடுதுறையில் இருந்து திருவாடுதுறை ஆதீனம் செல்லும்  வழியில், மாயவரம்-ஆடுதுறை சாலையில் மாயவரத்தில் இருந்து சுமார் 17 கிலோ தொலைவில் உள்ள மல்லர்பெட் எனும் கிராமத்தில் இருந்தது. அங்குள்ள மாரியம்மனை ‘அன்னை வெள்ளை வேம்பு மாரியம்மன்’ எனும் பெயரில் அழைக்கிறார்கள். அந்த ஆலயத்தில் ஆலமரத்தைப் போல மிகப் பெரிய வேப்ப மரம் உள்ளது. அதில் ஒரு பக்கம் முழுவதும் வெள்ளை வெளேர் என இலைகள் இருக்க மறு பக்கத்து இலைகள் பச்சை பசேல்  என இருந்தனவாம். சில காலத்துக்குப் பிறகு வெள்ளை இலைகளைக் கொண்டு இருந்த வேப்ப மரத்தின் அந்தப் பகுதி மட்டும் பட்டுப்போய் விட்டதாம்.

 பட்டுப் போய் இருந்த கிளையின்  முறிந்திருந்த பாகம்
 மாரியம்மனைப் போல காட்சி அளிக்கிறது

அந்தக் கிளையின் வேர் பூமியில் சுமார் பத்து அடி தூரம் படர்ந்து சென்று அடுத்த மூலையில் பெரிய மரமாக வளர்ந்து இருந்தது. அதன் அடியில் தெற்கு நோக்கிப் பார்த்தபடி மாரியம்மன் அமர்ந்து இருக்கிறாள். ஆகவே அதன் மீதே கல்லினால் ஆன தரையைப் போட்டு, படர்ந்து உள்ள கிளையை மூடி அம்மனின் தாமரை மலரைப் போன்ற ஆசனத்தை அமைத்து அம்மனை அதன் மீது வைத்து உள்ளார்கள்.

தெற்கு நோக்கிப் பார்த்து அமர்ந்திருக்கும் அன்னை மாரியம்மன்  வேறு எங்குமே கிடையாது. சாதாரணமாக ஆலயங்களில் உள்ள அன்னை மாரியம்மன் உக்ரஹ  வடிவில் காணப்படுவாள். ஆனால் இங்குள்ள மாரியம்மன் கோபமான கோலத்தில் இல்லாமல் யோக வடிவில் அன்னை யோக மாரியம்மனாக இருக்கிறாள். முதலில் அன்னை மாரியம்மன் வேப்ப  மர உருவிலும், அதன் அடியில் சிறிய சிலையாகவும் எழுந்தருளி இருந்துள்ளாள்.  அந்த காலத்தில் அருகில் இருந்த வனங்களிலும், இந்த மரத்தின்  அடியிலும் முனிவர்கள் தவத்தில் இருந்திருக்கின்றார்கள். அவளை அங்கு வந்து வணங்கிய  சித்தர்கள் அவளை யோக வடிவில் இருக்குமாறும், அதே கோலத்தில் அன்னை மாரியம்மன் அவர்களுக்கு ஆசிகளை வழங்க வேண்டும் எனவும் வேண்டி இருந்திருக்கிறார்கள். மெல்ல மெல்ல அந்த ஊர் மக்கள் அன்னை மாரியம்மனின் அருளால் எந்த அளவு நன்மைகளை அடைய முடியும் என்பதை அனுபவபூர்வமாக உணராத துவங்கினார்கள். உடல் நலமின்றி இருப்பவர்கள் அங்கு வந்து அந்த மரத்தின் வெள்ளை வேம்பு இலையை கிள்ளி எடுத்து உண்டால் வியாதிகள் குணம் ஆகி வந்ததினால் அந்த வெள்ளை இலையை பலருக்கும் பிரசாதமாக தந்து வந்துள்ளார்கள். ஆகவே பலரும் அங்கு வந்து இலைகளை பறித்துக் கொண்டு சென்றதினால் அந்த மரத்துக்குள் இருந்த அன்னைக்கு உடலெல்லாம் ரணம் ஆகிவிட்டதாம். அதனால் வருத்தமுற்று அன்னை மாரியம்மன் அங்கிருந்து கிளம்பி வேறு இடத்துக்கு சென்று விட்டாள் என்பதினால்  மரம் பட்டுப்போய் விட்டதாக கூறுகிறார்கள். ஆனாலும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து அன்னை மீண்டும் அங்கு வந்து அங்கு அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்கி பக்தர்களுக்கு ஆசிகளை வழங்கத் துவங்கினாளாம்.

இங்கு வந்து குழந்தை பாக்கியம் பெற வேண்டினால் எத்தனை ஆண்டுகள் குழந்தைகள் இல்லை என்றாலும் குழந்தை பிறக்கும் என்கிறார்கள். இந்த மாரியம்மன் அத்தனை சக்தி உள்ளவளாம். பட்டுப்போய் இருந்த கிளையின்  முறிந்திருந்த பாகம் மாரியம்மனைப் போல காட்சி அளிக்கிறது ஒரு அதிசயம்.

 
 

அந்த ஆலய பூசாரியான திரு வீரமணி எனும் பூசாரியின் தகவலின்படி அந்த வேப்ப மரம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அப்போது ஆலயம் உள்ள இடத்தில் ஒரு நதி இருந்ததாம். நதியோரம் அமர்ந்துள்ள மாரியம்மன் சுயம்பு தேவியாகும். அந்த வேப்ப  மரத்தின் அடியில் பல சித்தர்கள் தவத்தில் இருந்து இருக்கிறார்கள். திருமூலர் எனும் சித்தர் இங்கு வந்து வழிபட்டு தவத்தில் இருந்திருக்கிறார். இயற்கையின் சீற்றங்களினால் ஏற்பட்ட மாற்றத்தினால் தற்போது அந்த நதி விலகி சென்று விட, ஆலயத்தின்  எதிரில் மஞ்சனாறு எனும்  பெரிய  நீர் வாய்க்கால் ஓடுகிறது. அது வீரசோழன் நதியின்  கிளை நதியாகும். அந்த மரத்தின் முன்காலத்தைய  புகைப்படம் – வெள்ளை வெளேர் என்று வெண்மையான இலைகளுடன் இருந்த படம்- ஆலயத்தில் மாட்டி வைக்கப்பட்டு உள்ளது.

மாரியம்மன் சில நேரங்களில் தனக்கு ஓய்வு எடுக்க வேண்டும் எனில் அங்கிருந்து கிளம்பி இன்னொரு இடத்துக்கு சென்றுவிட்டு வருவது உண்டாம். அந்த இரண்டாவது இடம்  மாயவரம் மற்றும் கும்பகோணம் செல்லும் பாதையின் இடையில் உள்ள திருவிளங்காடு என்பதாகும். அங்கிருந்து கிளம்பி  மயிலாடுதுறை  கும்பகோணம் மெயின் ரோடு வழியில் உள்ள  திருவலன்காடு எனும் இடத்துக்குச் சென்று இரண்டாவது வெள்ளை வேப்பிலைக்காரி ஆலயத்தை பார்த்தோம். அங்கு எங்களை திகைக்க வைக்கும் வகையில் அங்குள்ள வேப்ப மரத்தின் அடியில் பாலைப் போன்ற வெள்ளை நிறத்தில் வேப்ப இலை கொத்துக் கொத்தாக இருந்தன.  அதைவிட இன்னோர் அதிசயம் அங்கிருந்து சுமார் பத்தடி தூரத்தில் இருந்த இன்னொரு வேப்ப மரத்தின் அடியில் இருந்த இலைகள் மஞ்சளைப் போல மஞ்சள் நிறத்தில் இருந்தது.

சிறு குறுகலான வழியில் இருந்த கிராமத்துக்கு உள்ளே இருந்த ஒரு பெரிய வயல் வெளியில் இருந்தது அந்த ஆலயம். நமது வாகனத்தை ரோட்டிலேயே நிறுத்தி விட்டு, சிறிய பாதை மூலம் சுமார் 100 அடி உள்ளே நடந்து சென்றால் ஆலயத்தை அடையலாம். அங்குள்ள அன்னை மாரியம்மனையும் ‘வெள்ளை வேப்பிலை மாரியம்மன்’ என்றே கூறுகிறார்கள். இளம் பச்சைக் கூட இல்லாமல் வெள்ளை வெளேர் என்று கொத்து கொத்தாக வேப்ப இலைகள் இருந்ததைக் கண்டு வியந்து நின்றோம். அந்த ஆலயத்தின் கதையும் சுவையானது.  மல்லார்பேட்டையில் இருந்த மரத்தின் வெள்ளை இலையை வியாதிகளைக் குணப்படுத்தும் இலையாக கருதி அதை மாரியம்மனின் பிரசாதமாக மக்கள் பறித்துக் கொண்டு சென்றதினால் தனது உடல் முழுவதும் ரணமாகி விட வேதனை அடைந்த மாரியம்மன் சமயபுரம் மாரியம்மனை  சந்தித்து அவளிடம் அழுதாளாம். அவளும் அந்த வெள்ளை வேப்பிலைக்காரியை தன்னுடன் இங்கு வந்து அமர்ந்து கொள்ளுமாறு  அறிவுறுத்த வெள்ளை இலை வேப்ப மரத்தின் அடியில்  குடியிருந்த அன்னை மாரியம்மன்  அங்கிருந்து கிளம்பி இங்கு வந்து அமர்ந்து கொண்டாளாம்.  இப்படியாக பெரியவள் வெள்ளை நிற இலைகளுடனான வேப்ப மரத்திலும், அவள் தங்கை மஞ்சள் நிறை இலையுடன் இருந்த  வேப்ப மரத்திலும் அமர்ந்து கொண்டார்களாம். அன்னை மாரியம்மனின் தங்கை தங்கி இருந்த வேப்ப மரத்தின் இலை மஞ்சளாக காட்சி தருகிறது. அவளை ‘மஞ்சள் பூ பாவாடைக்காரி’ என்று  அழைக்கிறார்கள்.

 
வெள்ளை இலைகளைக் கொண்ட வேப்ப  மரம் 
 
அங்குள்ள ஆலயத்தை பாதுகாத்து வரும் சாவித்திரி அம்மா எனும் பெண்மணி அந்த நிலத்தின் சொந்தக்காரர். ஒருநாள் அவர் கனவில் வந்த மாரியம்மன் அந்த நிலத்தில் ஒரு இடத்தைக்  காட்டி அங்கு தனக்கு தங்க சிறிது இடம் தருவாயா எனக் கேட்டதும், விழித்து எழுந்தவர் காலையில் அவர் கனவில் வந்த இடத்தில் சென்று பார்த்தபோது அங்கு சின்னஞ் சிறிய  வேப்ப மரமும் அதன் அருகில் ஒரு பாம்புப் புற்றும் இருந்ததைக் கண்டார். உடனேயே அந்த இடத்தை சுற்றி சுத்தம் செய்து அந்த புற்றையும் வேப்ப மரத்தையும் வணங்கத்  துவங்கினார். நாளடைவில் அந்த வேப்ப மரம் சற்று வளராத துவங்கியதும் அதன் இலைகள் வெண்மை நிறத்துடன் இருந்தன.   இன்னும் சில நாட்களில் அந்த வேப்ப மரத்தின் அருகில் இன்னொரு வேப்ப மரம் மஞ்சள் நிறத்திலான இலைகளுடன் தோன்றின. அப்போதும் அவள் கனவில் வந்த மாரியம்மன் அந்த புதிய மரத்தில் தனது தங்கை வசிப்பதாகவும் அவளுக்கும் அங்கு தங்க இடம் வேண்டும் எனக் கேட்க அந்த கிராமத்து பெண்மணி அந்தக் கட்டளையையும் ஏற்று வழிபாட்டு தலம்  அமைத்து வழிபடத் துவங்கினாள். அந்த இரு மரங்களுக்கும் இடையே அருகில் உள்ள ஒரு பெரிய பாம்புப் புற்றில் ஐந்து தலை நாக உருவில் அவர்கள் இருவரும் வசிக்கிறார்களாம். வெளிச் சாலையில் ‘வெள்ளை வேப்பிலைக்காரி ஆலயம் செல்லும் வழி’ என்ற விளம்பர போர்டு காணப்படுகிறது. எந்தவிதமான விளம்பரமும் இன்றி  இந்த இடத்து ஆலயத்தை திருமதி சாவித்திரி எனும் பெண்மணி அமைதியாகப் பாதுகாத்து வருகிறார்.
  
பின் குறிப்பு: 

——————

நான் முன்னரே அன்னை மாரியம்மனின் உருவங்களில் பல அம்மன்கள் உண்டு என்பதை எழுதி உள்ளேன். பார்வதியின் ஒரு அவதார உருவமே அன்னை மாரியம்மன் என்பவள். ஆகவே சமயபுரம் அன்னை மாரியாம்மனுடைய குடும்பத்தை சேர்ந்த அனைவருமே மாரியம்மன் எனப்படுவர். அவர்கள் பல இடங்களில் குடி இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் அன்னை மாரியம்மனின் விசேஷ சக்தி உண்டு. அவர்களில் பெரியவளே சமயபுரம் அன்னை மாரியம்மன் ஆவார். அவர் பார்வதி தேவியின் அவதாரம் ஆகும். பார்வதியே அன்னை மாரியம்மனாக பல அவதார ரூபங்களில், கிராமங்களிலும், நகரங்களில் காணப்படுகிறாள். கிராமத்தில் உள்ள ஆலயத்தில் அவளை கிராம தேவதை என்றும், நகர ஆலயங்களில் அம்மன் என்றும் அம்பாள் என்றும் கூறுகிறார்கள்.