கரையூர் ஈஸ்வர வாசல்

மங்கள சனீஸ்வரர்

ஆலயம்

-சாந்திப்பிரியா-

திருவாரூரில் இருந்து சுமார் ஆறு அல்லது எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதே கங்களாஞ்சேரி எனும் கிராமம். அங்கிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளதே கரையூர் எனும் இன்னொரு சிறிய கிராமம் ஆகும்.

அந்த சிறிய கிராமத்தில் உள்ளது சனீஸ்வர பகவானுக்கு பெருமை தரும் மங்கள சனீஸ்வரர் என்ற ஒரு ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தின் பக்கத்தில் வெண்ணாறு எனும் நதி ஓடுகின்றது. காவேரியின் கிளை நதியான இது அனைத்து மேன்மைகளிலும் கங்கை நதிக்கு இணையானதாம்.

இந்த ஆலயம் சனி பகவானுக்கு மேன்மை தரும் ஆலயம் என்பதாக கூறினாலும் ஆலயத்தின் பெயர் சங்கரநாராயண ஆலயம் என்பதாகும். அதன் காரணம் இந்த ஆலயத்தின் முன் சன்னதியில் சிவபெருமான் தங்கி இருக்க அதன் உள்ளேயே இன்னொரு தனி சன்னதியில் அவரது மனைவியான அம்பாளும் உள்ளார். ஆலயத்தின் பின்புறத்தில் உள்ள இன்னொரு தனி சன்னதியில்   விஷ்ணு பெருமாள் தனது மனைவியான லட்சுமி தேவியுடன் தங்கி உள்ளார். இது சிவபெருமானும் விஷ்ணு பெருமானும் ஒன்றே என்ற தத்துவத்தை எடுத்துக் காட்டும் விதத்தில் உள்ளது.

ஆலயம் உள்ள பகுதிக்கு சென்றதும் ஆலயத்தை சென்றடைய வெண்ணாற்றின் மீது கட்டப்பட்டு உள்ள சுமார் இருபது அல்லது முப்பது அடிகள் நீளமான சிறிய ஆனால் பலமான மூங்கில் கட்டை பாலத்தை கடந்து செல்ல வேண்டும். காரி என்றால் தமிழில் சனி என்ற அர்த்தமும் உள்ளதினால் இந்த ஊரை காரையூர் என்று அழைப்பதாகக் கூறுகின்றார்கள்.

நவகிரகங்களுள் மிகவும் சக்தியும், பலமும் வாய்ந்தவர் சனி பகவான். ஒருவரது ஜாதகத்தில் உள்ள கிரகங்களில் சனி பகவான் அமர்ந்துள்ள இடத்தைக் கொண்டே அவர்கள் ஒன்று கோடீஸ்வரராக இருப்பார்கள், இல்லை எனில் நடுத் தெருவில் வந்து நிற்பார்கள் என்பது ஒரு பொதுவான கருத்தாகும். ஆலய வரலாற்று மேன்மையை சுட்டிக் காட்டிய பண்டிதர் கூறினார் ”ஏழரை நாட்டு சனி பிடித்து உள்ளவர்கள் மனக் கஷ்டப்படத் தேவை இல்லை. அவர்கள் இங்குள்ள மங்கள சனீஸ்வரர் ஆலயத்துக்கு வந்து சனி பகவானை வேண்டித் துதித்தால் ஏழரை நாட்டு சனியால் ஏற்படும் கஷ்டங்களின் தாக்கத்தை அவரே பெருமளவு குறைத்து வாழ்க்கை வசந்தமாக இருக்க அருள் புரிகின்றார்”

ஒரு நிரபராதியை தண்டிப்பதும், குற்றம் செய்பவனை தப்பிக்க விடுபவர்களும் இறைவனின் தீர்ப்பில் இருந்து எந்த காலத்திலும் தப்பாக கூடாது என்பது தெய்வ நியதியாகும். பாவங்களின் தன்மைக்கேற்ற தண்டனையை அவர்கள் அனுபவித்தே தீரவேண்டும் என்பதும் தெய்வ நியதி. பாபம் செய்து தண்டனை பெறுபவனுக்கு அது ஒரு பாடமாக இருக்க வேண்டும், அதே போல அது மற்றவர்களுக்கும் ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தெய்வ தண்டனை தரப்படுகின்றது. அந்த தண்டனையை தெய்வலோகத்தின் நியதிப்படி சனி பகவான் நிறைவேற்றுகின்றாராம். கொடுமையான பாபத்தை செய்தவர்களுக்கு அவர்களது அடுத்த ஜென்மத்தில் சனி பகவான் 7½ வருட காலம் அவர்களை பல கஷ்ட நஷ்டங்களுக்கு உட்படுத்துவாராம்.

ஏழரை நாட்டு சனி பிடித்தவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் இந்த ஆலயம் உள்ளது. இங்கு வந்து மங்கள சனீஸ்வரரை வழிபடும் பக்தர்களின் தண்டனையின் தாக்கத்தை அதாவது அவர்களுக்கு ஏற்படும் கஷ்டங்களைக் கூட பெரிதளவு குறைத்து விட்டு, அந்த குறைந்த அளவிலான தண்டனையை தெளிவான மன நிலையில் எதிர்கொள்ளும் மனோதிடத்தை தருகிறார் என்பது ஆலய நம்பிக்கை ஆகும்.  இதுவே இந்த ஆலயத்தின் மகிமை என்பதாகும்.

ஆலய வரலாற்றின்படி ஒருமுறை சனீஸ்வர பகவான் திருகொள்ளிக்காட்டில் இருந்து கிளம்பி திருநள்ளாறுக்கு தனது தெய்வ வாகனமான காக்கையின் முதுகில் அமர்ந்து கொண்டு பயணம் செய்து கொண்டு இருந்தார். இரவு ஆகி விட்டால் காக்கைக்கு கண் தெரியாது. சனி பகவானோ முன் பிறவியில் நள மகாராஜன் செய்திருந்த பெரிய பாபத்துக்காக அவருக்கு தக்க தண்டனையை தர வேண்டிய காலம் வந்து விட்டதினால் அவருக்கு சனி தோஷத்தை தருவதற்காக திருநள்ளாறுக்கு சென்று கொண்டு இருந்தார். சனி தோஷம் பெறும் வகையில் நள மகாராஜன் என்ன பாவத்தை செய்து இருந்தார் ? முந்தைய ஒரு பிறவியில் நள மகாராஜன் மன்னனாக இருந்தபோது நிரபராதியான ஒரு துறவிக்கு 12 வருட காலம் கொடும் சிறை தண்டனையைக் கொடுத்த பாவத்திற்காக அவரது அடுத்த பிறவியில் அவரும் 12 வருட காலம் சனி பகவானின் தோஷத்தினால் பல கஷ்டங்களை பெற வேண்டும்  என்பது விதியாக இருந்திருந்தது. அதனால்தான் அந்த தண்டனையை நள மகாராஜன் அனுபவிக்க வேண்டிய நேரம் வந்தபோது, அதை நிறைவேற்ற சனி பகவானும் திருகொள்ளிக்காட்டில் இருந்து திருநள்ளாறுக்கு சென்று கொண்டு இருந்தார். 

இப்படியான நிலையில்தான் சனீஸ்வர பகவான் காகத்தின் மீதேறிக் கொண்டு திருநள்ளாறுக்கு சென்று கொண்டு இருந்தபோது கரையூரில் உள்ள தற்போதைய ஆலய நிலப்பரப்பை அடைந்தபோது இரவு வந்து விட்டது. காகத்துக்கு இரவில் கண் தெரியாது என்பதினால் வேறு வழி இன்றி கரையூரில் இறங்கியவர் தற்செயலாக அங்கு சிவலிங்கமாக அமர்ந்திருந்த சிவபெருமானை சந்திக்க நேரிட்டது. தனது நிலையை எடுத்துக் கூறி இரவு அங்கு தங்கிக் கொள்ள சிவபெருமானின் அனுமதியை சனீஸ்வர பகவான் கேட்டபோது அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் சிவபெருமானும் அவருக்கு அனுமதி தந்தார்.

ஆலய பகுதியில் தங்கி இரவு தங்கிவிட்டு காலை எழுந்ததும் வெண்ணாறு நதியில் குளித்தப் பின் காலை அனுஷ்டானங்களை செய்து முடித்து விட்டு சிவபெருமானையும் பெருமாளையும் வணங்கித் துதித்தப் பின் சிவபெருமானிடம் தாம் கிளம்பிச் செல்வதாகக் கூறிவிட்டு கிளம்பியபோது அவரை ஒரு கணம் நிற்குமாறு சிவபெருமான் கூறிய பின் எதற்காக அத்தனை அவசரமாக அங்கிருந்து புறப்பட்டு செல்கிறாய் என சனீஸ்வர பகவானிடம் வினவியபோது சிவபெருமானின் முந்தைய கட்டளைபடியே சாபத்தினால் உந்தப்பட்டு இருந்த நள மகாராஜனுக்கு தண்டனைப் பெறும் நேரம் வந்து விட்டதினால் தான் உடனடியாக திருநள்ளாறுக்கு செல்ல வேண்டும் என்று கூறியதும், சிவபெருமான் கூறினார் ‘உனக்கு நான் இட்ட கட்டளையை நிறைவேற்ற கிளம்பி உள்ளாய் என்பதை கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் அதற்கு முன்னால் உனக்கு நான் இன்னொரு கட்டளையையும் இடுகிறேன். உனக்கு நான் இங்கே இரவு தங்க அடைக்கலம் கொடுத்ததினால், இங்கு மங்கள சனீஸ்வர பகவானாக இங்கு அமர்ந்து கொண்டு இங்கு வந்து என்னை வணங்கிய பின் உன்னையும் வணங்கிச் செல்லும் பக்தர்கள் சனி தோஷத்தினால் எத்தனை கஷ்டங்களை சுமந்து வந்தாலும், அவர்களது ஜாதகத்தில் உன்னால் தரப்பட்ட தோஷங்கள் எத்தனை இருந்தாலும் அவற்றை குறைத்து அவர்கள் வாழ்க்கை மங்களமாக இருக்கும் வகையில் அருள் புரிந்து அனுப்ப வேண்டும்’ என்றார்.

சனீஸ்வர பகவானும் மற்ற அனைத்து தெய்வங்களை போலவே சிவபெருமானுக்கு அடங்கி நிற்பவர், சிவபெருமானுடைய கட்டளையை மீற முடியாது. ஆகவே அவர் இந்த ஆலயத்திலும் மங்கள சனீஸ்வரராக அமர்ந்து கொண்டு இங்கு வந்து சிவபெருமானை வணங்கிய பின் தன்னையும் வணங்கிச் செல்லும் பக்தர்களுடைய கஷ்டங்களை, அது தன்னால் ஏற்படும் 7½ நாட்டு சனி தோஷம் என்றாலும் கூட அவற்றின் தாக்கத்தைக் குறைத்து அவர்கள் வாழ்வில் மங்களமாக இருக்கும் வகைக்கு அருள் புரிந்து அனுப்புகிறார். இங்கு ஒன்றை குறிப்பிட வேண்டும். ஒரே தெய்வம் பல இடங்களிலும் ஒரே நேரத்தில் பல உருவங்களில் அமர்ந்து கொள்ள முடியும் என்பது தெய்வீக உண்மை ஆகும். அவர்களது சக்தி அப்படிப்பட்டது என்பதினால் இங்கு எப்படி மங்கள சனீஸ்வரராக இருந்து கொண்டு பிற ஆலயங்களிலும் இருக்க முடியும் என வியப்பு அடைய வேண்டியதில்லை.

இங்குள்ள வெண்ணாறு நதியின் மேன்மைப் பற்றி ஒரு செய்தி. இங்கு வருகை தரும் பக்தர்கள் கை கால்களை அலம்பிக் கொண்டு இறந்து விட்ட தத்தம் சந்ததியினரின் ஆத்மாக்கள் தாகம் எடுக்காமலும், பசியால் வாடாமல் இருக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டு எள்ளையும் தண்ணீரையும் இந்த வெண்ணாறு நதியில் விட்டால் அந்த வேண்டுதல் தெய்வத்தினால் நிறைவேற்றித் தரப்படுவதாக நம்பிக்கை கதை உள்ளது.

இத்தனை மகிமையும் மென்மையான இங்குள்ள ஆலயம் சிறிய கிராமத்தில் உள்ளதினால் எந்நேரமும் அது திறந்து இருப்பது இல்லை. காலை மற்றும் மாலையில் சற்று நேரமே பூஜைக்காக திறந்திருக்கும் என்பதினால் அங்கு செல்லும் பக்தர்கள் ஆலய குருக்களை தொடர்ப்பு கொண்டு தாம் வருகை தரும் நேரத்தை குறிப்பிட்டால் அவர்கள் ஆலயத்தை திறந்து வைத்து இருந்து பூஜை மற்றும் அர்ச்சனைகளை செய்து தருவார்கள். ஆலய விலாசம் :

திரு தியாகராஜ குருக்கள்
ஈஸ்வர வாசல்
காரையூர் தபால் வழி
கங்களாஞ்சேரி வழித் தடம்
திருவாரூர் மாவட்டம்
தொலைபேசி எண்: +91 97906 76748 அல்லது 9447 11048

 

ஆலயத்தின் படங்கள்