கர்நாடக மானிலத்தில் உள்ள சின்ன திருப்பதி எனும் ஆலயம் திருமலை வெங்கடேஸ்வரர் ஆலயத்தின் துணை ஆலயம் என்கின்றார்கள். துவாபர யுகத்தில் மகாபாரத போர் நடந்து முடிந்தது. அந்த யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாண்டவர்களும் கௌரவர்களும் பல்வேறு யாகங்களையும், பூஜைகளை செய்தும், ஹோமம் வளர்த்து தெய்வங்களின் அருளைப் பெற பல்வேறு உணவு பண்டங்களையும் நெய்யையும் ஆஹூதியாக தீயில் படைத்து ஆராதித்தார்கள். ஹோமத் தீயில் போடப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களையும் அக்னி பகவான் உண்ண வேண்டி இருந்ததினால் அளவுக்கு மீறிய அளவில் உணவை உண்டதினால் அஜீரணம் ஆகி அவர் வயிற்று வலியினால் துன்பப்பட்டார். ஆகவே என்ன செய்வது எனத் தெரியாமல் கிருஷ்ண பகவானிடம் சென்று அதற்கு நிவாரணமாக என்ன செய்யலாம் எனக் கேட்டார். பகவான் கிருஷ்ணரும் கர்னாடக மானிலத்தில் கண்டவா எனும் பகுதியில் இருந்த (அந்த காலத்தில் அவை அந்தப் பெயரில் இருந்திடவில்லை) அடர்ந்த காட்டில் வயிற்று வலியை குணப்படுத்தும் பல இயற்கை மூலிகைகள் உள்ளது என்றும் அவை எங்கெங்கு உள்ளன என்பது தெரியாததினால் அந்த காட்டில் உள்ள செடி கொடிகளை அப்படியே உண்டு விடுமாறும் அறிவுரை தந்தார். ஆனால் அந்த காட்டில் நாகர்களின் மன்னனான தக்ஷனின் பல குடும்பத்தினர் வசித்து வந்ததும், அவர்களில் ஒரு நாகம் விரைவில் திருப்பதியில் எழுந்தருள உள்ள விஷ்ணு பகவானின் அவதாரமான வெங்கடேசப் பெருமாளை வேண்டிக் கொண்டு தவத்தில் அமர்ந்து இருந்ததும் கிருஷ்ணருக்கு தெரியவில்லை. அந்த அறிவுரையை ஏற்றுக் கொண்ட அக்னி பகவானும் கண்டவா வனத்துக்கு சென்று அங்கிருந்த அனைத்து வன மரங்களையும் செடி கொடிகளையும் ஸ்வாகா செய்ய ஆரம்பிக்க அந்த வனமே தீயினால் எரிந்து அழியத் துவங்கியது. அங்கு குடி இருந்த தக்ஷனின் பல குடும்பத்தினர் மரணம் அடைந்தார்கள். தவத்தில் அமர்ந்து இருந்த நாகம் எப்படியோ தப்பி தீக்காயங்களுடன் வெளியேறியது. ஆனால் அதனால் கடும் கோபமுற்ற அந்த நாகமோ அக்னி பகவான் தமது சக்தியையும் பிரகாசத்தையும் இழக்கட்டும் என சாபம் தந்தது.
இப்படியாக தவத்தில் இருந்த நாகத்தினால் சாபம் பெற்ற அக்னியின் சக்தி குறையத் துவங்கியது, அவருடைய தேஜஸ்சும் குறையலாயிற்று. அதனால் கவலைக் கொண்ட அக்னி பகவான் மீண்டும் பகவான் கிருஷ்ணரிடமே ஓடிச் சென்று அதற்கான நிவாரணம் கேட்க, பகவான் கிருஷ்ணரோ பகவான் இந்த விஷயத்தில் தன்னால் எதுவும் செய்ய இயலாது என்றும், சிவபெருமானிடம் சென்று அவரை வேண்டுமாறு கூறி விட்டார். பகவான் சிவபெருமானிடம் ஓடிச் சென்று தனக்கு ஏற்பட்டுள்ள சாபம் தீர வழி கேட்ட அக்னி பகவானிடம் ‘பகவான் விஷ்ணுவின் அனந்த சயனப் படுக்கையாக உள்ள நாகத்தின் வம்சத்தை சார்ந்த நாகம் அக்னி பகவானுக்கு சாபம் தந்து விட்டதினால், அக்னி பகவான் அறியாமையினால் செய்துவிட்ட தவறுக்கு கிடைத்த சாபத்தை விஷ்ணு பகவானால் மட்டுமே விலக்க முடியும்’ என்ற உண்மையை எடுத்துரைத்த சிவபெருமான், அந்த சாபம் விலக விஷ்ணுவை வேண்டுமாறு அக்னி பகவானை விஷ்ணுவிடம் அனுப்பினார்.
உடனடியாக கிளம்பிச் சென்ற அக்னி பகவானும் விஷ்ணு பகவான் எங்குள்ளார் எனத் தேடியபோது அவர் கர்னாடக மாநிலத்தில் இருந்த கண்டவா வனத்தில் ஒய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறார் என்பதை அறிந்ததும் அங்கு சென்று அவரை தேடினார். ஆனால் கண்டவா வனமோ மிகப் பெரியதாக இருந்தது. அடர்ந்த காட்டில் பள்ளங்களும், குகைகளும் காணப்பட்டன. அனைத்து இடங்களிலும் அவரைத் தேடி அலைந்த அக்னி பகவானுக்கு எளிதில் காட்சி தர விரும்பாத பகவான் விஷ்ணுவும் அவருடன் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடினார். விஷ்ணு பகவானைக் காண முடியாமல் தவித்து, களைத்துப் போன அக்னி பகவான் வேறு வழி இன்றி தற்போது சின்ன திருப்பதி ஆலயம் உள்ள இடத்தில் அமர்ந்து கொண்டு தான் இழந்துவிட்ட சக்திகளை திரும்பப் பெற அருள் புரியுமாறு விஷ்ணு பகவானை வேண்டித் துதித்தபடி தவத்தில் அமர்ந்தார். விஷ்ணு பகவானிடம் அக்னி பகவான் செல்ல ஒரு காரணம் இருந்தது. அந்த நாடகத்தை நடத்தியவர் வேறு யாரும் அல்ல, விஷ்ணு பகவானின் அவதாரமான கிருஷ்ண பகவானாக அவதரித்து இருந்த கிருஷ்ணரேதான். அவரே தன்னிடம் அக்னி பகவான் வர வேண்டிய கட்டாயத்தை ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக அரங்கேற்றி இருந்தார்.
இந்த நாடகம் நடைபெற்றதற்கு பல காலம் முன் நாக மன்னனான தக்ஷன் தனது சந்ததியினர் பலரும் கண்டவா வனப்பகுதியில் வசித்து வருவதாகவும், திருப்பதியில் எழுந்தருளி உள்ள வெங்கடேஸ்வரரான விஷ்ணு பகவானை தரிசிக்கச் செல்லும் வழியில் பக்தர்களினால் தமது இனத்தினர் கொல்லப்படுவதினால், அதை தடுக்க விஷ்ணு பகவான் கண்டவா வனத்திலேயே அந்த நாகங்களின் நன்மைக்காக எழுந்தருள வேண்டும் என வேண்டியது. அதைக்கேட்ட விஷ்ணு பகவானும் தான் அந்த வனத்தில் எழுந்தருளுவேன் என்றும், அங்கு ஒரு சின்ன திருப்பதி என்ற பெயரில் ஒரு ஆலயம் எழும்ப உள்ளது என்றும், அந்த ஆலயத்தில் குடி இருக்க உள்ள தன்னை வந்து நாக தோஷங்கள் உள்ளவர்கள் வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நாக தோஷங்கள் விலகும் என்றும், திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்துக்கு பல காரணங்களினால் செல்ல முடியாதவர்கள் அந்த ஆலயத்துக்கு வந்து தன்னை திருப்தி வேங்கடேஸ்வரராக வணங்கி துதித்தால் திருப்பதிக்கு சென்று வழிபடும் அதே அளவிலான பலன்கள் சின்ன திருப்பதி வந்து தன்னை வழிபடுபவர்களுக்கும் கிடைக்கும் என்று உறுதி அளித்தார். அதற்காக சில காலம் பொறுத்து இருக்க வேண்டும் என்றும் நாகத்துக்கு அறிவுரை தந்தார்.
இங்கு ஒரு விளக்கம் தர வேண்டி உள்ளது. இந்த சம்பவங்கள் நடந்த காலத்தில் சின்ன திருப்பதி அல்லது திருப்பதி வெங்கடாசலபதி என்ற பெயரில் ஆலயங்கள் எதுவும் இருந்திடவில்லை. பலவேறு அவதாரங்களை சில நியதிகளுக்காக எடுக்க வேண்டி இருந்த விஷ்ணு பகவானுக்கு தான் எந்தெந்த இடத்தில் என்னென்ன அவதாரங்களை எடுக்க உள்ளேன் என்பதும், எங்கெல்லாம் ஆலயங்கள் எழும்ப உள்ளது என்றும், கண்டவா வனத்தில் நாகங்களின் வேண்டுதலுக்காக அவதாரம் எடுக்க உள்ள நிலையில் திருப்பதி மற்றும் சின்ன திருப்பதி என்ற பெயர்களில் ஆலயங்கள் எழும்ப உள்ளதும் தெரியும் என்பதினால் அந்தந்த ஆலயங்கள் எழும்ப சில நாடகங்களை அவர் நடத்த வேண்டி இருந்தது. அந்த நாடகத்தில் அவர் அரங்கேற்றியத்தில் ஒன்றுதான் சின்ன திருப்பதியின் கதையும். ஆகவே பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே திருப்பதி மற்றும் சின்ன திருப்பதி ஆலயங்கள் இருந்துள்ளதா என்ற குழப்பம் ஏற்படத் தேவை இல்லை.
இனி கதைக்கு வருவோம். இங்கு வந்து தவம் இருந்த அக்னிக்கு விஷ்ணுவின் அருள் கிடைக்க அக்னி பகவானுடைய பழைய சக்திகளும் தேஜஸ்ஸும் அவருக்கு திரும்பின. பின் ஒரு காலத்தில் அக்னி பகவான் திருப்பதிக்கு சென்று விஷ்ணுவை வழிபடச் செல்லும்போது மீண்டும் இந்த வழியே சென்றார். அப்போதுதான் அவருக்கு தான் முன்பு நாகங்களுக்கு கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது. அதன்படி அந்த வனத்திலேயே அவர் தான் முன்னர் தவம் இருந்த இடத்திலேயே காட்டில் இருந்த நாகங்கள் வழிபட வசதியாக பகவான் விஷ்ணுவிற்கு ஒரு ஆலயம் எழுப்பினார். அதுவே சின்ன திருப்பதி என்றாயிற்று. அதனால்தான் கர்னாடக மானிலத்தில் உள்ள பல ஆலயங்களிலும் நாக தேவதைகளுக்கு பல்வேறு அவதாரங்களில் சன்னதிகள் உள்ளன, நாகங்களை யாரும் இங்கு கொல்வது இல்லை.
சின்ன திருப்பதி மற்றும் திருமலை திருப்பதி வெங்கடாசலபதி ஆலயங்களில் விஷ்ணு பகவான் தனது மனைவிகளான ஸ்ரீ தேவி மற்றும் பூதேவியுடன் சன்னதியில் காட்சி தருகிறார். சின்ன திருப்பதியில் உள்ள மூலவர் பிரசன்ன வெங்கடேஸ்வரா என அழைக்கப்படுகிறார். இரண்டு ஆலயங்களிலும் ஒரே மாதிரியான பூஜா விதிகளும், நியமங்களும் கடைபிடிக்கப்படுகின்றன. நாக தோஷத்தினால் பீடிக்கப்பட்டவர்கள் சின்ன திருப்பதிக்கு வந்து சாப விமோசனம் பெறுகிறார்கள். இந்த ஆலயத்தில் குடி கொண்டுள்ள வெங்கடேஸ்வரப் பெருமான் தனது வலது கையை மேல்புறம் காட்டியவாறு காட்சி தருகிறார். அதன் அர்த்தம் ‘கவலைப்படாதே, ‘உன்னைக் பாதுகாக்க நான் இருக்கிறேன்’ என்பதைக் குறிக்கும் ‘அபய முத்திரை’ ஆகும். அதே பெருமாள் திருமலை திருப்பதியில் தனது வலது கையை கீழே நோக்கி காட்டிய நிலையில் வைத்து உள்ளார். அதன் அர்த்தம் ‘என்னிடம் வேண்டும் உன்னுடைய வேண்டுகோளை நிறைவேற்றித் தருவேன்’ என்பதைக் காட்டும் ‘வரத முத்திரை’ ஆகும்.
இந்த ஆலயம் அக்னி பகவானினால் கட்டப்பட்டது என்ற நம்பிக்கை உள்ளதினால் இந்த வழிபாட்டுத் தலம் கட்டப்பட்ட கால விவரம் தெரியவில்லை. ஆனால் பிற்காலத்தில்தான் சோழ மன்னன் காலத்தில் இந்த ஆலயம் கட்டிடமாக எழுப்பப்பட்டு உள்ளது.
சின்ன திருப்பதி பெங்களூரில் இருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் கோலார் மாவட்டத்தில் மாலூர் தாலுக்காவில் உள்ளது. இங்கு செல்ல வேண்டும் எனில் சர்ஜாபூர் எனும் இடத்தை அடைந்து அங்கிருந்து செல்லலாம். இல்லை எனில் ஹோசூர் பஸ் நிலையத்தில் இருந்து பாகலூர் செல்லும் சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவு பயணித்து, சர்ஜாபூரை அடைந்து அங்கிருந்து சிக்க திருப்பதி என போடப்பட்டு உள்ள பெயர் பலகையை தொடர்ந்து சென்றால் ஆலயத்தை அடையலாம். ஹோசூரில் இருந்து சின்ன திருப்பதி சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இன்னொரு பாதை மாரதஹள்ளியில் இருந்து ஹோப் பண்ணை வழியே சென்னைசந்திரா எனும் (NH-2017) வழியே சனித்தசந்தரா, எட்டுக்குடி மற்றும் கல்குண்டே அக்ரஹாரம் சென்று அங்கிருந்து ஆலயத்தை அடையலாம்.
ஆலய விலாசம் கீழே உள்ளது :
Chikka Tirupathi , Pin : 563 156
Temple Land Line : 08151 238623.