ஆலமரத்து அடியில் கேட்ட ஆலய செய்திகள் -30
ஆந்திரா விசாகப்பட்டினத்து 
கனக மகாலஷ்மி அம்மன் ஆலயம்

 சாந்திப்பிரியா

ஆந்திராவில் விசாகப்பட்டின  நகரத்தின்  மத்தியில் ரயில் நிலையம் மற்றும் பஸ்டாண்டில் இருந்து சுமார் நான்கு அல்லது ஐந்து கிலோ தொலைவில் உள்ளதே கனக மஹாலஷ்மி அம்மன் ஆலயம். அவளை லஷ்மியின் அவதாரம் எனக் கூறுகிறார்கள். விசாகப்பட்டினத்தின் மிகப் பிரபலமான ஆலயம் அது. சாதாரணமாக வட நாட்டில்தான் ஆலயங்களில் நாமே சென்று சுவாமியின் சிலைகளை தொட்டு வணங்க அனுமதிப்பார்கள். தென் நாட்டில் அனைத்து ஆலயத்திலும் பூசாரிகள் மட்டுமே சுவாமியை தொட்டு பூஜிக்க முடியும். ஆனால் இந்த ஆலயத்தில் நாமே தேங்காயை உடைத்து சுவாமிக்கு ( அம்மனுக்கு) அபிஷேகம் செய்யலாமாம், அம்மனுக்கு குங்குமம் இடலாம், மஞ்சள் பூசலாம் . நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில்  வரும் வருடாந்திர விழாவின்போது அந்த அம்மனை லஷ்மி தேவியாகவே கருதி ஆராதித்து பூஜிக்கிறார்கள். 1912 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக கூறப்படும் அந்த ஆலயத்தைப் பற்றிய கிராமியக் கதை இது.
 பருஜிப்பேட்டா என்ற இடத்தில் முன்னர் இருந்த அரண்மனைக்கு பக்கத்தில் உள்ள ஆலயத்தில் உள்ள அந்த தேவி அந்த ஊரை ஆண்டு வந்த மன்னர் பரம்பரைக்கு சொந்தம் என்கிறார்கள். ஆலயம் இருந்த இடத்தில் முன்னர் ஒரு கிணறு இருந்ததாம். ஒரு நாள் அந்த இடத்தை ஆண்டு வந்த மன்னரின் கனவில் தேவி தோன்றி தான் அந்த கிணற்றில் முழுகி உள்ளதாகவும் தன்னை வெளியில் எடுத்து ஆலயம் அமைத்து பூஜிக்குமாறும் கூறினாள். அந்த மன்னனும் அவளை வெளியிலெடுத்து அங்கேயே ஆலயம் அமைத்தாராம். அதன் சில ஆண்டுகளுக்குப் பின் அதாவது 1917 ஆம் ஆண்டுவாக்கில் நடுத் தெருவில் உள்ள அந்த ஆலயம் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளது எனக் கருதி அதை பெயர்த்து வேறு இடத்துக்கு மாற்றினார்களாம். அதை செய்த சில நாட்களிலேயே அந்த ஊரில் பெரிய அளவு பிளேகு எனும் கொடிய நோய் பரவி பலர் மடிந்தார்களாம். . ஆகவே அந்த ஆலயத்தை மாற்றியதினால்தான் அது ஏற்பட்டது என சாமியாடிகள் கூற ( குறி கூறுபவர்கள்) அதை மீண்டும் பழைய இடத்துக்கே மாற்றி ஆலயம் அமைக்க நோய் தீர்ந்ததாம். அது முதல் அந்த அம்மனை பிளேகுநோய் தீர்த்த அம்மன் எனவும் அவள் மிகவும் சக்தி மிக்கவள் எனவும் கருதி மக்கள் வணங்குகிறார்கள். ஆலய விலாசம் இது:-
The Executive Officer
Sri Kanakamahalakshmi Ammavari Temple
22-91-6, Buruju Peta
Visakhapatnam
Andhra Pradesh
India