‘ஸ்வாமி நீங்கள் சொல்வதைக் கேட்டால் எனக்கு பயமாக உள்ளது. எனக்கு ஏன் இத்தனை சோதனைகள் வர வேண்டும். அவை வராமல் தடுக்க என்ன உபாயம் உள்ளது?’ என்று ஜனமேஜயன் கேட்டதும் வியாசர் கூறினார் ‘ஜனமேஜயா உன் துன்பங்கள் அனைத்துக்கும் காரணம் நீ பெற்று உள்ள சாபங்கள்தான். உன்னால் அவற்றை தடுத்து நிறுத்திக் கொள்ள முடியாது. அதற்குக் காரணம் நீ அழித்த சர்பங்களில் மகாவிஷ்ணுவிற்கு படுக்கையாக உள்ள ஆதிசேஷனின் வம்சாவளியினரும் அடக்கம். ஆகவே மகாவிஷ்ணுவின் சாபமும் உனக்கு உள்ளது. அது போலவே உன் சந்ததியினரால் விரட்டி அடிக்கப்பட்டு காயமுற்ற நாயும் பூர்வ ஜென்மத்தில் மஹா விஷ்ணுவின் உண்மையான பக்தையாக இருந்து சில காரணங்களினால் நாயாகப் பிறந்து இருந்தது.  விஷ்ணுவின் பரம பக்தையான அதன் தாய் கொடுத்த சாபமும் சேர்ந்து உள்ளதினால் உனக்கு சாப விமோசனமும் மகாவிஷ்ணுவின் அவதாரமான பத்ரினாதர் மூலமே கிடைக்கும் என்பது விதியாகும். ஆகவே நீ எச்சரிக்கையாக இருந்து பிராமணரைக் கொன்ற பிரும்மஹத்தி தோஷத்தை ஒரு பெண்ணால் அடையாமல் இருக்க முடியுமா என்று முயன்று பார். ஆனால் அது மிகவும் கடினம். நீ ஒரு காட்டுக்குச் சென்று அங்கு ஒரு பெண்ணின் மோகத்தில் வீழ்ந்து பதினெட்டு பிராமணர்களைக் கொன்று பிரும்மஹத்தி தோஷத்தைப் பெற உள்ளாய் என்பதையும் மனதில் வைத்துக் கொண்டு அந்த தோஷம் வராமல் இருக்க மகாவிஷ்ணுவையே தியானம் செய்து கொண்டு இருக்க வேண்டும்.  அப்படி மகாவிஷ்ணுவையே தியானம் செய்து கொண்டு   பெண் வயப்படாமல் இருந்தால் மட்டுமே உனக்கு வரவுள்ள தோஷம் களைய வாய்ப்பு உண்டு’ என்று கூறி விட்டு தான் மட்டும் பத்ரினாத்துக்குக் கிளம்பிச் சென்று விட்டார்.

விதி யாரை விட்டது? வியாசர் கிளம்பிச் சென்றதும் பலவற்றையும் நன்கு யோசனை செய்த ஜனமேஜயன் அங்கு இருந்தால்தானே தனக்கு தோஷம் வரும். ஆகவே தானும் பத்ரினாத்துக்குச் கிளம்பிச் சென்று அந்த தோஷ காலம் முடியும் வரை மகாவிஷ்ணுவையே தியானம் செய்து கொண்டு அங்கு இருந்து விட்டால் அந்த தோஷம் ஏற்படாமல் தடுத்துக் கொள்ளலாமே என எண்ணிக் கொண்டு யாத்திரைக்கு செல்ல தயார் செய்து கொள்ளத் துவங்கினார். ஆனால் மகாவிஷ்ணுவின் உண்மையான பக்தர்களின் மனத்தைக் காயப்படுத்திய நிகழ்ச்சிகளினால் ஜனமேஜயனுக்கு கிடைத்த சாபங்கள் நிறைவேறவில்லை என்றால் விஷ்ணுவின் சக்திக்கு என்ன அர்த்தம் ?

யாத்திரைக்கு செல்லக் கிளம்பிய ஜனமேஜயன் நல்ல குதிரையை தயார் செய்து வைக்குமாறு கூறினார். அதுவே அவருக்கு தோஷம் துவங்க விதி நகர்த்திய முதல் காயாக அமைந்தது.  அன்று காலையில்தான் அந்த ஊருக்கு சிந்து நாட்டில் இருந்து குதிரைகளை விற்கும் வியாபாரி ஒருவன் விற்பனை செய்வதற்காக  சில  குதிரைகளை கொண்டு வந்து இருந்தான்.  அவன் கொண்டு வந்திருந்த குதிரைகள் வெகு வேகமாய் ஓடுபவை.  காண்பதற்கே கவர்ச்சியாக இருந்தன. அதனால் அந்த குதிரைகளை முதலில் அரசருக்கு விற்கலாம் என எண்ணிக் கொண்டு அரண்மனைக்கு வந்தான் அந்த வியாபாரி. அவன் கொண்டு வந்திருந்த குதிரைகளில் ஒன்று மன்னனின் மனதுக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆகவே அந்த குதிரையில் ஏறிக் கொண்டு யாத்திரைக்குச் செல்ல முடிவு செய்து ஜனமேஜயனும் அதை வாங்கி விட்டார்.

இரண்டொரு நாட்கள் அதன் மீது ஏறி அதை தன் விருப்பம் போல நடக்க பழக்கி  வைத்துக் கொள்ளலாம் என எண்ணிய மன்னன் அன்று மாலை அந்த குதிரை மீது ஏறிக் கொண்டு சவாரி செய்யத் துவங்க அந்த குதிரையும் அங்கும் இங்கும் சுற்றி வளைந்து ஓடிச் சென்று மன்னன் யோசனை செய்யும் முன்னரே அரண்மனையை விட்டு வெளியில் இருந்த காட்டுக்குள் புயலாக ஓடியது. அதை மன்னனும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நடுக் காட்டில் சென்று நின்ற குதிரை மீது இருந்து இறங்கிய மன்னன் சுற்றுமுற்றும் பார்த்தார். எங்கு செல்லக் கூடாது என எண்ணினோமோ அங்கேயே வந்து விட்டோமே என அஞ்சியவர் நின்றிருந்தபோதே அழகிய மங்கை ஒருவள்  சற்று தொலைவில் ஒரு பெரிய மரத்தின் பின்புறத்தில் இருந்து வெளியில் வந்து ஒய்யாரமாக நிற்பதைக்  கண்டார்.  அதே சமயம் ஜெயமேஜயனை பார்த்து விட்ட அந்த மங்கையும்  இங்கு வந்துள்ளவர்  யார்  என்பதைப் போல அவரை வியந்து நோக்கினாள் .

ஜனமேஜயனின் மனம் சற்று தடுமாறியது. அழகான மங்கை. அற்புதமான உடல் அமைப்பு. அங்கங்கள் அனைத்தும் தெரிய நழுவிய ஆடைகளை கட்டி இருந்தவளைக் கண்டதும் அடுத்த சில நிமிடங்களிலேயே தலைக்கு மீறிய காமம் மனதில் சுழல தன்னை மறந்து ஓடிச் சென்று அவளை தழுவிக் கொண்டு நின்றார்.  ஆனால் அவளும் அவர் அணைப்பை விரும்பியது போலவே காட்டிக் கொண்டு சுற்று முற்றும் பார்த்து விட்டு தான் அந்த கானகத்தில் பதினெட்டு கணவன்களுக்கு மனைவியாக வாழ்ந்து வருபவள் என்றும், அவர்கள் அவரைப் பார்த்து விட்டால் அவளுக்கு ஆபத்தாகி விடும் எனவும் பயந்து கொண்டு கூற, ஜனமேஜயனும் அவர்களை எண்ணி அஞ்ச வேண்டாம் என்றும், மன்னனான தான் அவர்களை பார்த்துக் கொள்வதாகவும் கூறிவிட்டு அவளுடன் அந்த பதினெட்டு ஆண்களும் தங்கி இருந்த பர்ணசாலைக்குச் சென்று உறங்கிக் கொண்டு  இருந்த அவர்களை வெட்டி வீழ்த்தினார்.  அதன் பின்னர்தான் அவருக்கு புரிந்தது தான் வெட்டிக் கொன்ற அனைவருமே அந்தணர்கள்   என்று!

எது நடக்கக் கூடாதது என கவனமாக இருக்க எண்ணினோமே அதுவே நடந்து விட்டதே என மனதார வருந்திக்  கொண்டு தன்னை மயக்கிய அந்தப் பெண்ணை தண்டிக்கத் திரும்பியவருக்கு முன்னாலேயே அந்தப் பெண் ஆகாய மார்கமாக பறந்துச் சென்று மறைந்து விட்டதைக் கண்டார். மாயையில் சிக்கி அநியாயமாக உறங்கிக் கொண்டு இருந்த அந்தணர்களைக்  கவனிக்காமல் கொன்று விட்டோமே என பிரும்மஹத்தி தோஷத்தை பெற்று விட்ட  ஜனமேஜயன் குதிரை மீது ஏறிக் கொண்டு  வருத்தத்துடன்  அரண்மனைக்கு திரும்பினார்.

மறுநாளே பரிவாரங்களுடன் கிளம்பி பத்ரி நாராயனை தரிசிக்க பத்ரிக்குச் சென்றவர் அங்கு  வியாச முனிவரை வேண்டி  தவம்  இருக்க  அவரும் ஜனமேஜயனுக்கு முன்னால்  வந்து  நின்று பலவிதமான உபதேசங்களை செய்தும், பத்ரி ஸ்தல புராணத்தையும் போதித்தார். ஜனமேஜயனும் சில நாட்கள் அங்கேயே தங்கி இருந்து வியாச முனிவர் கூறிய அறிவுரையின்படி  பத்ரினாதரை வழிபட்டு தமக்கு ஏற்பட்டு இருந்த அனைத்து சாபங்களையும் விலக்கிக்  கொண்டார். பத்ரினாதரை வணங்கி வேண்டியவருடைய வேண்டுகோளுக்கு ஏற்ப அவருக்கு காட்சி தந்த விஷ்ணு பெருமாள் ஜனமேஜயரின் அனைத்து சாபங்களையும் விலக்கி அவருக்கு மீண்டும் ஆன்மீக பலத்தை கொடுத்து அருள்  புரிய தனது ராஜ்யத்துக்கு திரும்பிய ஜனமேஜயன் நல்ல ஆட்சி புரிந்து வந்தார்.  இப்படியாக பத்ரினாதரை வணங்கி வேண்டுபவர்களுடைய அனைத்து  துயரங்களும், துன்பங்களும் விலகும் என்பது ஐதீகமாயிற்று.

………..தொடரும்