ஆலயங்கள்
நாங்கள் சில நாட்களுக்கு முன்னால் மாயவரம்- கும்பகோணத்துக்கு சென்று இருந்தபோது சில ரெட்டை ஹனுமார் ஆலயங்களை பார்க்க நேரிட்டது. ஒரே சன்னதியில் இரண்டு தெய்வங்களாக ஹனுமார் சிலைகளை பிரதிஷ்டை செய்து இருந்தார்கள். ஒரே சன்னதியில் இரண்டு வினாயக பகவான் சிலைகள் உள்ள ஆலயங்களை பார்த்து இருக்கின்றோம். ஆனால் இரட்டை தெய்வமாக ஹனுமான் உள்ள ஆலயங்களை பார்த்தது இதுவே முதல் முறை ஆகும். சாதாரணமாக ஆலயங்களில் மூல சன்னதியில் பல தோற்றங்களில் ஆலயத்தின் பிரதான தெய்வம் அமர்ந்திருந்தாலும், அவர்களுடைய இரண்டு சிலைகள் இருக்காது. ஆனால் இந்த மூன்று ஆலயத்திலும் ஒரே சன்னதியில் பகவான் ஹனுமாரின் இரண்டு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன. அவற்றில் இரண்டு ஆலயங்களைக் குறித்த வரலாறு புராணங்களில் காணப்படவில்லை என்றாலும் அவற்றில் இரண்டு ஆலயங்கள் கிராமியக் கதைகளை மையமாகக் கொண்டவை. மூன்றாவதில் சிறு புராணக் கதை உள்ளது.
ரெட்டை ஹனுமார் ஆலயத்தின் படங்கள்
மேலப்பாதி கிராம ஆலயம் குறித்து கூறப்படும் கதை என்ன என்றால் பல நூறு வருடங்களுக்கு முன் இங்குள்ள காவேரி நதியின் அந்தக் கரைக்கு செல்ல கிராம மக்கள் சிறு பாலம் போன்ற அமைப்பை ஏற்படுத்தியபோது, அங்கு பல காலமாக வாழ்ந்திருந்த இரண்டு குரங்குகளும் அவர்களுக்கு உதவின. பாலத்துக்குத் தேவையான கட்டுமான சாமான்களை கொண்டு சென்று உதவின. பாலமும் அமைந்தபின் பல காலத்துக்குப் பிறகு அந்த இரண்டு குரங்குகளும் காணவில்லை. அவை மரணம் அடைந்திருக்க வேண்டும் என எண்ணிய மக்கள் அவற்றை தேடக் கூட இல்லை. அந்த கிராமம் விவசாய நிலங்கள் அதிகம் இருந்த இடமாகும்.
அப்போது அங்கு ஒரு பகுதியில் இருந்த வாழைத் தோட்டத்தில் அந்த தோட்டத்து சொந்தக்காரர் தோண்டிக் கொண்டு இருந்தபோது பூமிக்குள் இரண்டு ஹனுமான் தெய்வ சிலைகள் புதைந்து இருப்பதைக் கண்டு அவற்றை வெளியில் எடுத்தார். இரண்டுமே வெவேறாக பாறை மீது அமைந்து இருந்தனவாம். வியப்புற்றவர் அதை வெளியில் எடுத்து வைத்த பின் மறுநாள் ஊர் ஜனங்களை கேட்டு அவற்றை என்ன செய்யலாம் என்பதைக் குறித்து முடிவெடுக்கலாம் என வீட்டுக்கு சென்றார். அன்று இரவு அவர் கனவில் வந்த தெய்வம் ஹனுமான் அவரிடம் தனக்கு அதே இடத்தில் ஆலயம் அமைத்து வழிபட்டால் அந்த ஊரை காத்தவண்ணம் இருந்து கொண்டு, ஊர் ஜனங்களுக்கும் அருள் புரிவதாகக் கூறினார். மறுநாள் ஊர் ஜனங்களுடன் ஆலோசனை செய்த பின் அந்த சிலைகள் கண்டெடுக்கப்பட்ட அதே இடத்தில் ஆலயம் அமைத்து எந்த நிலையில் பூமிக்குள் அந்த சிலை காணப்பட்டதோ அதே நிலையில் அவற்றை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடலானார்களாம். மேல்பாதி கிராமத்தில் அதுவே முக்கியமான ஆலயம் ஆகும். வயலில் அறுவடைக்கு செல்லும் முன் அங்குள்ளவர்கள் இந்த ஆலயத்துக்கு சென்று வழிபட்ட பின்னரே அறுவடைக்கு செல்வார்களாம். இங்குள்ள ஆலயத்தில் ரெட்டை தெய்வீக ஹனுமாரை வேண்டி வணங்கினால் நினைத்த காரியம் நிறைவேறுவதாக கிராமியக் கதை கூறுகின்றது.
ஆனால் இந்த கிராமத்து மக்களும் மற்றும் அதன் மேன்மையையும் அறிந்தவர்கள் மட்டுமே இந்த ஆலயத்துக்கு வருவதினால் எப்போதும் ஆலயத்தில் கூட்டம் இருப்பதில்லை. ஆகவே ஆலயம் எந்நேரமும் திறந்து வைக்கப்பட்டு இருப்பதில்லை. அந்த ஆலயத்தை மேற்பார்வை இட்டு வரும் பண்டிதர் காலையும் மாலையும் ஆலயத்தில் வந்து எண்ணெய் விளக்கேற்றி பூஜை செய்த பின் சற்று நேரம் இருந்துவிட்டு செல்கின்றார். விழாக் காலத்திலும், விடுமுறை தினங்களில் மட்டும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருகை தருகிறார்கள். காலை 11 மணிக்கு முன்னாலும், மாலையில் 5 முதல் ஆறு மணி வரையிலும் அநேகமாக ஆலயம் திறந்துள்ளது. ஆனாலும் அதற்குப் பிறகு அங்கு செல்பவர்கள் அருகிலேயே குடி உள்ள பண்டிதரை அழைத்து ஆலயத்தை திறக்குமாறு கேட்டுக் கொண்டால் ஆலயத்தை திறக்கின்றார்கள். இந்த நிலை மாயவரம் மற்றும் கும்பகோணத்தில் உள்ள பல கிராம ஆலயங்களிலும் நிலவுகின்றது. இந்த ஆலயத்தில் உள்ள தெய்வமான இரட்டை ஹனுமார் இரண்டு சிறுவர்கள் நிற்பதை போல அழகுடன் காணப்படுகிறார்கள்.
ரெட்டை ஹனுமார் ஆலயத்தின் படங்கள்
ரெட்டை ஹனுமார் ஆலயத்தின் படம்