ஆலயங்கள்

ஒரு காலத்தில் சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆட்சி இருந்தபோது தற்போது அழிந்து விட்ட காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த வியாபாரிகளான ஒரு சமூகத்தினர் கடல் கடந்து வியாபாரம் செய்து செழிப்பான நிலையில் இருந்தவர்கள். அந்த காலத்தில் பணக்காரர்களையும் பெரிய மனிதர்களையும் சேட்ஜி என்றே அழைப்பார்கள். சேட்ஜி என்பது சமிஸ்கிருத சொல். மரியாதைக்குரிய பெயர். சேட்ஜி என்றால், பெரிய மனிதரே என்று பொருள் வரும். அதுவே வியாபாரிகளான அவர்களை சேட்ஜி…. செட்டிஜி… என கூறத் துவங்கி கால கட்டத்தில் அந்த பெயர் செட்டி என ஆக்கியதாம். சோழர்கள் ஆண்ட காலத்தில் வணிக வியாபாரத்தில் ஈடுபட்டு நல்ல நிலையில் காவேரி பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்த அவர்கள் அந்த நகரம் கடல் சீற்றத்தினால் அழிந்தபோது அங்கிருந்து தப்பி வந்து பிற இடங்களில் குடியேறினார்கள். அப்படி இடம் பெயர்ந்து வந்தவர்கள் பரவலாக தமிழ் நாட்டில் முக்கியமாக காரைக்குடி, தேவக்கோட்டை, கோட்டார், கன்யாகுமரி , நாகர்கோவில் போன்ற தென்கோடி தமிழ்நாடு, மற்றும் அதை ஒட்டி உள்ள கேரளாவின் சில பகுதிகளில் குடியேறினார்களாம் . அப்படி வந்து குடியமர்ந்த செட்டியார்களில் பல பிரிவினர் உண்டு. அந்த ஒரு பிரிவினரில் கன்யாகுமரி மற்றும் கேரளா எல்லைகளில் வந்து குடியேறிய சமுதாயத்தினர் தம்மை ஏழூர் செட்டியார்கள் அல்லது செட்டுக்கள் எனக் கூறிக் கொண்டார்கள். அவர்கள் தமிழ் மொழி பேசும் சமூகத்தினர். அந்த இனத்தவர் ஏழு ஊர்களில் மட்டுமே தங்கி இருந்ததினால் அந்த ஏழு ஊர்களில் தங்கி இருந்தவர்களை ஏழூர் செட்டிகள் என அழைத்தார்களாம். அவர்கள் கடவுள் பக்தி மிகுந்தவர்கள். அவர்களில் சிலர் தம் பெயரில் பிள்ளை என்றும் வைத்துக் கொண்டு உள்ளார்கள்.
முதலில் அவர்கள் இரண்டு தெய்வங்களை வணங்கி வந்தவர்கள். ஒன்று விநாயகர், இரண்டாவது நாகத்தின் உருவில் இருந்த அம்மன்கள். அந்த நாக அம்மனை அவர்கள் நாகம்மன் என்றும் நாகம்மை என்றும் அழைத்து உள்ளார்கள். அதுவே பின்னர் மருவி நாகரம்மன் என ஆயிற்று. நாகம்மை என்பது ஒரு அம்மன் அல்ல, அது இரண்டு அம்மனைக் குறிப்பது. நாகங்கள் பூமிக்கு அடியில் உள்ள நாக லோகத்தில் மறைந்து இருக்குமாம். நாகம்மையை ஏன் அவர்கள் நாக தேவதையாக வணங்கினார்கள் என்பதற்கு இரண்டு சுவையான கதை ஒன்று உண்டு.
செட்டிகள் எனப்பட்டவர்கள் கடவுள் பக்தி கொண்டவர்கள். அவர்கள் வீட்டு பெண்கள் அழகானவர்கள். சாதாரணமாகவே நிறைய அணிகலன்களை அணிபவர்கள். தலை நிறைய பூக்களை சூட்டிக் கொண்டு ஆலயத்துக்கு செல்பவர்கள். அதுவும் வியாபாரிகள் என்றால் கேட்க வேண்டுமா? முன் ஒரு காலத்தில் அந்த சமூகத்தினர் காவேரி பூம்பட்டினத்தில் இருந்தபோது அவர்கள் வீட்டுப் பெண்கள் வாயிலில் கோலம் போடுவது, வாசலில் அமர்ந்து கொண்டு பூக்களை தொடுப்பது போன்றவற்றை செய்து வருவது வழக்கம். அப்போது அந்த நாட்டை ஆண்டுவந்த சோழ மன்னன் தனது பரிவாரங்களுடன் அந்த வழியே சென்று கொண்டு இருந்தான். அவன் சென்று கொண்டு இருந்த வழியில் தங்கம்மை மற்றும் தாயம்மை என்று பெயர் கொண்ட அழகான இரண்டு பெண்கள் வாயிலில் அமர்ந்து கொண்டு பூக்களை தொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களை கண்ட மன்னனுக்கு அவர்களின் மீது ஆசை வந்து விட அந்தப் பெண்களின் பெற்றோர்களுக்கு அவர்களை தன்னுடைய அரண்மனைக்கு அழைத்து வரச் சொல்லி செய்தி அனுப்பினான். பெண்களை மன்னன் தனது அரண்மனைக்கு அழைத்தாலே அவர்களை தனக்கு உரிமை ஆக்கிக் கொள்ளத்தான் என்பது நடை முறையில் இருந்த பழக்கம். பல மனைவிகளுடன் அவர்களும் வைப்பாட்டியாக வைக்கப்படுவார்கள் என்பதினால் அப்படிப்பட்ட திருமணத்தை பெரிய இடத்துப் பெண்கள் ஏற்றது இல்லை. மன்னன் அழைத்ததினால் அந்த இரண்டுப் பெண்களின் பெற்றோர்களும் என்ன செய்வது எனப் புரியாமல் விழித்தார்கள். போகாமலும் இருக்க முடியாது. மன்னனிடம் இருந்து தம் மகள்களைக் காப்பாற்ற வேண்டுமே என்ற கவலை வர அவர்கள் மன்னனிடம் தம்முடைய பெண்களுக்கு உடல் நலம் சரி இல்லாததினால் என்னும் சில நாட்களில் அழைத்து வருவதாகக் கூறி விட்டு ஒரு நாள் இரவோடு இரவாக யாரிடமும் கூறாமல் ஊரை விட்டு தமது பெண்களுடன் ஓடி விட்டார்கள். எங்கு சென்றாலும் துரத்திக் கொண்டு வந்து பிடித்து விடுவார்கள் என்று பயந்ததினால் அந்த இரண்டு பெண்களும் தம்முடைய கற்பை காப்பாற்றிக் கொள்ள தம்மை ஒரு இடத்தில் இருந்த கிணற்றில் தள்ளி அதை மண்ணைப் போட்டு மூடி விடுமாறு கேட்டுக் கொள்ள அவர்களுடைய பெற்றோர்களும் அப்படியே செய்தார்கள். அந்த மாதிரி மரணத்தை ஏய்தியவர்கள் மரணம் அடைந்தாலும் ஆவியாக அலைந்து கொண்டு தம்மை காத்தவர்களை காத்து வருவார்கள் என்ற நம்பிக்கை கிராமிய மக்களுக்கு உண்டு. அதனால் தாயம்மை மற்றும் தங்கம்மையும் கிராம தேவதையாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள்.
இப்படியாக அம்மனான அவர்களே ஏழூர் செட்டிகள் அல்லது செட்டுக்கள் எனப்படும் சமூகத்தினர் வணங்கும் தேவதைகள் ஆனார்கள். ஏழூர் செட்டிகள் பல இடங்களிலும் சென்று தங்கியபோது அவர்கள் தங்கி இருந்த இடங்களில் ஆலயங்களை தமது சமூகத்தினருக்காக அமைத்துக் கொண்டார்கள். அவர்கள் அமைத்த ஆலயங்களில் கன்யாகுமரியில் நாகர்கோவிலில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இரணியால் என்ற சிற்றூரில் உள்ள விநாயகர் ஆலயம், கோட்டார் என அந்த காலத்தில் அழைக்கப்பட்ட நாகர்கோவிலில் உள்ள பிள்ளையார் ஆலயம், ஓடுப்புறை நாகரம்மன் ஆலயம், திருவிதாம்கோடு சுடலை மாடன் ஆலயம், கொளச்சல் முத்தாரம்மன் மற்றும் தேசிய விநாயகர் ஆலயம், பரக்கை செட்டி தெரு முத்தாரம்மன் ஆலயம் போன்றவை உண்டு. அந்த சமூகத்தினரின் ஒரு குடும்பத்தினர் காட்டாலை என்ற இடத்தில் ஏழு காட்டாலை நாகரம்மன் ஆலயம் என்பதை பராமரித்து வருகிறார்கள். விநாயகர் ஆலயம் நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் காத்தாலை நாகரம்மன் ஆலயம் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்றும் கூறுகிறார்கள்.
கொளச்சல் முத்தாரம்மன் ஆலயம்
படம் நன்றி:-http://en.wikipedia.org/wiki/Elur_Chetty
இரணியலில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஒடுபரை நாகரம்மன் ஆலயம். அந்த அம்மனை மிகவும் சக்தி வாய்ந்த ஆலயமாகவே கருதுகிறார்கள். வேண்டியது நடக்கும் என்கிறார்கள். அந்த அம்மன் ஆலயத்து விசேஷம் என்ன என்றால் பல வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கொழுக்கட்டை விழாவில் அந்த சமூகத்தினர் அநேகமாக அனைவரும் வந்து கலந்து கொண்டு கொழுக்கட்டை செய்து நைவித்தியம் படைக்கின்றனர். ஒவ்வொரு குடும்பத்தினரும் எத்தனை கொழுக்கட்டை செய்ய வேண்டும் என்பதற்கு கூட விதி முறைகள் உள்ளது. அது மட்டும் அல்ல அந்த கொழுக்கட்டையின் அளவு நம் வீடுகளில் செய்யப்படும் சிறிய அளவு அல்ல. ஒரு செங்கலைப் போன்ற அளவில் இருக்குமாம்!! அம்மன் ஆலயத்தில் கொழுக்கட்டையா? கேட்பதற்கு ஆச்சரியமாகத்தான் உள்ளது. அதற்கான பின்னணி ஒன்று உள்ளது. வணிக வியாபாரத்தில் ஈடுபட்டு நல்ல நிலையில் காவேரி பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்தவர்கள் அந்த நகரம் கடல் சீற்றத்தினால் அழிந்தபோது அங்கிருந்து தப்பி வந்து பிற இடங்களில் குடியேறினார்கள். அப்படி இடம் பெயர்ந்து வந்தவர்களில் ஒரு பகுதியினர் இராணியல் அருகில் வள்ளி எனும் நதிக் கரையில் வந்தபோது அது சித்திரை மாதம், ஆயில்ய நட்சத்திர தினமாக இருந்தது. அவர்கள் தம்முடன் கொண்டு வந்து இருந்த நாகரம்மன் மற்றும் தங்கம்மை, தாயம்மை சிலைகளை அங்கே வைத்து அன்று இரவு அவற்றுக்கு பூஜை செய்து நெய்வித்தியம் படைத்தார்களாம். அந்த தின்பண்டம் அரிசி மாவு, வாழைப் பழம், சுக்கு, ஏலக்காய், தேங்காய் மற்றும் வெல்லத்தினால் செய்யப்பட்டது. அதுவே நாம் செய்யும் கொழுக்கட்டை. ஆனால் அதன் வித்தியாசம் அது செங்கலைப் போல அளவில் இருந்ததாம். அதுவே இன்னமும் கொழுக்கட்டை விழாவாக தொடர்கின்றது. ஆனால் அது மிக முக்கியமான விழாவாகும். அந்த கொழுக்கட்டை திருவிழா பற்றிய முழு செய்தியையும் அறிந்து கொள்ள http://ssrvderaniel.com/kozhukkattai-08.html என்பதின் மீது கிளிக் செய்து அவர்களின் இணையதளத்தை பார்க்கவும். இந்த சமுதாயத்தினர் காவடி எடுத்து முருகப் பெருமானையும் வணங்குகிறார்கள்.


கன்யாகுமரி மாவட்டத்தில் பெரும்சிலம்பு எனும் சிறு கிராமத்தில் உள்ள காட்டாலை ஆலயம் ஊரின் உள்ளே ஒரு காடு போன்ற பகுதியில் அமைந்து உள்ளது. அந்த ஆலயம் 500 வருடத்துக்கும் அதிக காலத்துக்கு மேற்பட்டது என்று கூறுகிறார்கள். அதை அமைத்தவர்கள் யார் என்ற எந்த விவரமும் கிடைக்கவில்லை என்றாலும் அதுவும் ஏழூர் செட்டிகள் வணங்கும் ஆலயமே. சிதைந்த நிலையில் ஆலயம் காணப்பட்டாலும் அதன் மகிமை குறையவில்லை. அங்கிருந்த பல சிலைகள் பழுதடைந்து உள்ளன. மூல சன்னதியில் அம்மன் உள்ளார். அவரே நாகம்மன். ஆலயத்தின் பாதுகாவலராக சிவமாடன் என்ற கிராம தேவதை உள்ளார். அந்த ஆலயத்திற்கு ஒரு காலத்தில் கந்தன் கோவில் என்ற பெயர் இருந்ததாம். ஆனால் தற்போது அந்த ஆலயத்தின் பெயர் காட்டாலை அம்மன் ஆலயம் என்பதே. வருடா வருடம் சிறப்பான முறையில் ஆலய விழா நடைபெறுகின்றது.
——————————
பின்: 629802
தொடர்புக் கொள்ள
( Mobile : +91-9443657529 )
ekcsssrvd@gmail.com