நாக தக்ஷக் எனும் தெய்வீகப் பாம்பு தலைவர் பிரபஞ்சத்தில் உள்ள எட்டு முக்கியமான பாம்புகளில் ஒன்றாகும். இந்த நாகத்தைக் குறித்த செய்தி மஹாபாரதத்தில் உள்ளது. நாக தக்ஷக்கைத் தவிற மற்ற ஏழு தெய்வீகப் பாம்புகள் நாகராஜா எனப்படும் நந்தா, உபனந்தா, சங்கரா, வாசுகி, மனசா, அனாவடப்டா எனும் ஆனந்தா மற்றும் உட்பாலகா என்பவை ஆகும். அர்ஜுனனின் பேரனான ஜனமேயா எனும் மன்னன் பாம்புகளின் இனத்தையே அழிப்பதற்காக மத்திய பிரதேசத்தில் பாம்பு இனங்கள் வசித்து வந்த கண்ட்வா எனும் இடத்தில் இருந்த வனத்தை எரித்தபோது அங்கிருந்து தப்பிய நாக மன்னன் தக்ஷக் என்பவர் தக்ஷசீலா எனும் இடத்தில் நகரத்தை அமைத்துக் கொண்டு அதை ஆண்டு வந்தார். இவர் இஷ்வாகு குலத்தை சேர்ந்தவர். பூர்வ ஜென்ம சாபத்தின் விளைவாக பாம்பாக பிறவி எடுத்து இருந்தார்.
ஒரு கிராம நாடோடிக் கதையின்படி நாக தக்ஷக் உஜ்ஜனியில் உள்ள மஹா காளேஸ்வர ஆலயத்தின் மேல் பகுதியில் உள்ள அறையில் தனிமையில் தவத்தில் அமர்ந்து உள்ளாராம். அந்த அறையில் நாக தக்ஷக் உடலின் மீது அமர்ந்து உள்ள சிவபெருமான் மற்றும் பார்வதியின் தரிசனத்தைப் பெற வருடத்துக்கு ஒரு முறை, அதாவது நாக பஞ்சமி தினத்தன்று மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் அந்த அறை திறந்து விடப்படுகின்றது. அந்த நாடோடிக் கதையின்படி வருடத்தின் அனைத்து நாட்களிலும் தன் மீது பார்வதி தேவியுடன் அமர்ந்து உள்ள சிவபெருமானை வேண்டியபடி அந்த அறையில் நாக தக்ஷக் தனிமையில் தவத்தில் அமர்ந்து உள்ளதாகவும், ஆகவே அதற்கு இடையூறு செய்யக் கூடாது என்பதினால் வருடம் முழுவதும் அந்த அறை மூடி வைக்கப்பட்டு உள்ளது எனக் கூறுகின்றார்கள். ஆனால் கடவுளின் ஆணைப்படி நாக பஞ்சமி தினத்தன்று மட்டும் அனைத்து தேவலோகவாசிகள் மற்றும் பிற கடவுட்கள் முன்னிலையில் மானிடர்கள் கண்களுக்கு புலப்படாமல் அங்கு உள்ள அந்த நாகம் சிவபெருமானுக்கு கோடி அர்ச்சனை செய்வதாகவும், அப்போது பக்தர்கள் அதை தரிசனம் செய்ய அந்த அறை திறக்கப்படுகின்றது என்பதும் ஐதீகம். இப்படியாக அங்கு வசிக்கும் நாக தக்ஷக்கின் கதை என்ன?
மஹாபாரதம் நிகழ்ந்த காலகட்டத்தில் அர்ஜுனனின் பேரனும், அபிமன்யுவின் மகனுமான பரீக்ஷித் என்பவர் பூமியை ஆண்டு வந்தார். அவர் ஒருநாள் வனத்துக்கு வேட்டை ஆடச் சென்று இருந்தபோது தன்னை அறியாமல் தன்னுடன் வந்து கொண்டு இருந்த படையினரை விட்டு விலகி வனத்துக்குள் சென்று விட்ட பின் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் திண்டாடினார். வழி தெரியாமல் வனத்தில் சுற்றித் திரிந்தவருக்கு பசி எடுத்தது, தாகமும் சேர்ந்து கொள்ள ஏதேற்சையாக தவத்தில் அமர்ந்து இருந்த ஒரு ரிஷியை பார்க்க நேரிட்டது. அவர் அருகில் சென்று தாகத்துக்கு நீரும் பசிக்கு உணவும் கேட்டபடி அவரை எழுப்ப முயல அந்த ரிஷியோ தன்னை மறந்த தவ நிலையில் இருந்ததால் எழுந்திருக்கவில்லை. கோபமுற்ற பரீக்ஷித் அருகில் இறந்து கிடந்த ஒரு பாம்பை எடுத்து அவர் மீது போட கண்களை திறந்த ரிஷி அடுத்த ஏழாவது நாள் பரீக்ஷித் பாம்பு கடித்து இறக்க வேண்டி வரும் என சாபம் தந்தார். தன் தவறை உணர்ந்த மன்னனும் தான் கோபத்தில் செய்துவிட்ட தவறுக்கு அவரிடம் மன்னிப்புக் கேட்க, அந்த ரிஷியும் அவர் மீது கருணை கொண்டு ஏழாவது நாள் பாம்பு கடித்து அதன் விஷம் அவன் உடலில் முழுமையாக ஏறும் முன் தன்வந்தரி பகவான் அங்கு வந்து அவருக்கு ஆசி கூறினால் அவர் பிழைத்து விடுவார் என அந்த சாபத்தை மாற்றி அமைத்தார்.
அவ்வளவுதான் மன்னன் பரீக்ஷித் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக பகவான் தன்வந்திரியை வேண்டி தவத்தில் அமர்ந்தார். அடுத்த எட்டு நாட்களும் தேவலோகத்தினருக்கு வைத்தியம் செய்யும் பகவான் தன்வந்தரி தனது அரண்மனையில் தன்னுடன் வந்து தங்கி இருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என வேண்டிக் கொள்ள, மன்னனின் தவத்தினால் மனம் மகிழ்ந்து போன தன்வந்தரி பகவானும் உடனே கிளம்பி அவர் அரண்மனையை நோக்கி வரலானார். பகவான் தன்வந்தரி மன்னனைக் காப்பாற்ற வந்து கொண்டு இருக்கும் செய்தியை கேட்ட நாக தக்ஷக் கவலையில் ஆழ்ந்தார். அதன் காரணம் கடவுளின் ஆணைப்படி அவர்தான் மன்னன் பரீக்ஷித்தை கடித்து மரணம் அடைய வைக்க வேண்டும். ஆகவே எப்படியாவது பகவான் தன்வந்தரியை மன்னனுடைய அரண்மனைக்கு செல்லாமல் தடுத்து விட வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தார்.
மன்னனின் அரண்மனையை நோக்கிச் சென்று கொண்டு இருந்த பகவான் தன்வந்தரி மத்திய பிரதேசத்தின் மண்டசூர் ஜில்லா அருகில் தனது மனைவி மற்றும் மகனுடன் தங்கி இருந்த நாக தக்ஷக்கின் இருப்பிடத்துக்கு அருகில் வந்ததும் களைப்பு அடைந்து அங்கு இருந்த ஒரு மரத்தடியில் இளைப்பாறினார். அதுதான் தக்க சமயம் என்பதை உணர்ந்த நாக தக்ஷக் தனது சக்தியை பிரயோகித்து அவர் முதுகில் கடுமையான அரிப்பை ஏற்பட வைத்தார். அதே சமயம் தன்னை ஒரு சின்ன கட்டையாக உருமாற்றிக் கொண்டு அந்த மரத்தின் மீது இருந்து பகவான் தன்வந்தரி அருகில் விழுந்தார். தனது முதுகில் ஏற்பட்ட தாங்க முடியாத அரிப்பை போக்கிக் கொள்ள அந்தக் கட்டையை எடுத்து தன் முதுகில் பகவான் தன்வந்தரி சொரிந்து கொள்ள, அவர் உடலைத் தொட்ட நாக மன்னன் மீண்டும் தன் பழைய உருவை எடுத்துக் கொண்டு தனது சக்தியை பயன்படுத்தி பகவான் தன்வந்தரியை அந்த மரத்திலேயே தற்காலிகமாக சிறை வைத்தார். தனக்கு இடப்பட்டு இருந்த கடமையை – மன்னன் பரீக்ஷித்தைக் கொல்வது- செய்தபின் பகவான் தன்வந்தரியை வந்து விடுவிக்கலாம் என முடிவு செய்துவிட்டு அங்கிருந்துக் கிளம்பிச் சென்றார்.
மும்மூர்த்திகள் எவர் ஒருவருக்கு சில கடமைகளை செய்ய கட்டளை கொடுப்பார்களோ அப்போது அவர்களுக்கு சில விஷேச சக்திகளையும் தருவார்கள். அந்த சக்திகளை உபயோகிப்பவர்களால் மட்டுமே அதை விலக்கவும் முடியும். அதே சமயம் குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் அந்த சக்திகளும் தானாகவே வலுவிழந்து விலகி விடும், அல்லது அதை மும்மூர்த்திகளில் ஒருவரே விலக்க முடியும் என்பது தெய்வ நியதியாக இருந்தது.
மன்னன் பரிக்ஷித்துக்கு தரப்பட்டு இருந்த சாப காலத்தின் ஏழாவது நாளும் வந்தது. பகவான் தன்வந்தரியும் வந்து சேராததினால் கவலைக்கு கொண்ட மன்னனும் தன்னை பாம்பு கடிக்காமல் இருக்க ஒரு அறைக்குள் சென்று பாதுகாப்பாக அமர்ந்து கொண்டார். அந்த அறையில் ஒரு இடம் கூட திறந்து வைக்கப்படாமல் அனைத்து இடமும் மூடி வைக்கப்பட்டு இருந்ததினால் எந்த பாம்பும் அறைக்குள் நுழைய முடியாது. சாப்பாடு கூட சிறு துவாரம் வழியே தரப்பட்டது. சாப்பாடு தந்த பின் அதை மீண்டும் அடைத்து விடுவார்கள். ஆகவே நாக தக்ஷக் தன்னை சிறு எறும்பாக மாற்றி வைத்துக் கொண்டு சாப்பாட்டு தட்டின் அடியில் அமர்ந்து கொண்டு அறைக்குள் நுழைந்தார். மீண்டும் தன் பழைய உருவை எடுத்துக் கொண்டு மன்னனைக் கொத்திக் கொன்ற பின் உள்ளே செல்லும்போது எடுத்த அதே உருவத்தில் வெளியில் வந்து சென்று விட்டார். தம் இருப்பிடத்துக்கு வந்தப் பின் பகவான் தன்வந்தரியையும் விடுதலை செய்து அவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
தனது தந்தை ஒரு பாம்பினால் மரணம் அடைந்து விட்டதைக் கேள்விப்பட்ட ஜனமேயான் ஆத்திரம் அடைந்து பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பாம்புகளையும் அழிக்க முடிவு செய்து நாகங்களின் அழிவிற்கு ஒரு யாகத்தை துவங்கினான். உலகில் இருந்த பாம்புகள் யாகத் தீயில் வந்து விழுந்து மரணம் அடையத் துவங்கின. இன்னும் சில நாகங்கள் மட்டுமே உயிருடன் இருந்தன என்பதினால் யாகத்தை தொடர்ந்து செய்யலானார் .
அடுத்து நாக தக்ஷக்கின் மரணம் அடைய வேண்டிய வேளை வந்தது. பாம்புத் தலைவர்களில் முக்கியமான பாம்பான வாசுகி யாகத்தின் தன்மையைக் கண்டு கவலைக் கொண்டு நாக தக்ஷக்கனையும் பிற பாம்புகளையும் பாதுகாக்க தனது சகோதரியின் மகனான ஆஸ்தீக் எனும் நாகத்திடம் உதவி கேட்டது. நாகங்களின் இனத்தில் ஆஸ்தீக் பெரிய பாண்டித்தியம் பெற்ற நாகம் ஆகும். வாசுகியின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஆஸ்தீக்கும் யாகம் நடைபெற்ற இடத்துக்கு ஒரு பிராமணன் உருவில் சென்றது. யாகத்தின் பெருமையை விளக்கும் வகையில் இனிய கானத்தை பாடத் துவங்கியது.
அந்த இனிய இசையை கேட்டுக் கொண்டு இருந்த ஜனமேயன் தனது மனதின் குழப்பம் அகன்றதை உணர்ந்தான். மனமும் தெளிவாயிற்று. அதுவரை அத்தனை இனிய, அர்த்தமுள்ள கானத்தை அவன் கேட்டதே இல்லை. நேராக ஆஸ்தீக்கிடம் சென்று அவரை வணங்கித் துதித்தப் பின் அவருக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்டால் தான் தருவதாக சத்திய வாக்கு கொடுக்க, ஆஸ்தீக்கும் அந்த மன்னன் ஜனமேயான் உடனடியாக யாகத்தை நிறுத்துவதும் அல்லாமல், யாகத் தீயில் மரணம் அடைந்த பாம்புகளுக்கு உயிர் தருமாறும் வேண்டுகோள் விடுத்தார். அதைக் கேட்டு திடுக்கிட்ட ஜனமேயன் அந்த வேண்டுகோளைத் தவிர வேறு எதைக் கேட்டாலும் தருவதாக ஆஸ்தீக்கிடம் எத்தனைக் கேட்டும் அதை ஏற்காத ஆஸ்தீக் ‘இந்த பிரபஞ்சத்தில் பிரம்மனால் பலவிதமான உயிரினங்கள் சில காரணங்களுக்காக படைக்கப்பட்டு உள்ளன. அவற்றை அழிக்கும் உரிமை படைப்பவருக்கு மட்டுமே உண்டு. தனி மனித க்ரோதத்தின் அடிப்படையில் அந்த காரியத்தை செய்ய ஜனமேயனுக்கு எந்த உரிமையும் கிடையாது’ என விளக்கிக் கூறிய ஆஸ்தீக், தனது வேண்டுகோளை மன்னன் ஏற்காததினால் கோபமுற்று எழுந்து செல்லத் துவங்கினார். வேறு வழி இன்றி அவர் கேட்ட வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஜனமேயன் யாகத்தையும் நிறுத்தி, அதில் விழுந்து மரணம் அடைந்து இருந்த பாம்புகளுக்கும் மீண்டும் உயிர்பிச்சை தரும் யாகத்தையும் செய்து அவற்றை உயிர் பிழைக்க வைத்தார். அதை போல தனது விஷேச சக்தியை மீண்டும் நாக தக்ஷக் பயன்படுத்தி அகாலத்தில் உழன்று கொண்டு இருந்த பரிக்ஷித்தின் ஆத்மா சொர்கலோகம் செல்ல ஏற்பாடு செய்தார். பரிக்ஷித்தின் ஆத்மாவுக்கு எத்தனை காலம் உயிர் வாழ வேண்டும் என்ற விதி இருந்ததோ அதற்கு மேலாக அதன் உயிரை நீட்டிக்க முடியாது என்பதினால் இந்த ஏற்பாட்டை செய்தார்.
தன்னால் பாம்புகள் இனத்துக்கே பெரிய தீமை விளைந்து விட்டதே என்பதினால் மனம் வருந்திய நாக தக்ஷக் மனா அமைதி பெற சிவபெருமானை வேண்டி வருடத்துக்கு ஒரு கோடி நாம ஜெபம் என ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். அதைக் கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமானும் நாகத்தின் முன் தோன்றி அவருக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்க நாக தக்ஷக்கும் ‘ தனக்கு இறவாமை வரம் வேண்டும் எனவும், அதன் காரணம் தனது உடலையே என்றும் சிவபெருமான் அவருடைய படுக்கையாக பயன்படுத்திக் கொண்டு தன மீது அமர்ந்து இருக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வைக்க அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சிவபெருமானும் அந்த வரத்தை நாக தக்ஷத்துக்கு அருளினார். அது மட்டும் அல்ல தான் நாகபஞ்சமி தினத்தன்று நாக தக்ஷத்துக்கு காட்சி தந்து வரம் தந்ததினால், அதே இடத்தில் ஓவ்வொரு நாக பஞ்சாமிக்கும் அந்த நாகம் தனக்கு கோடி நாம அர்ச்சனை செய்தால் அதை தான் மனதார ஏற்பேன் எனவும், தானும் பார்வதி தேவியும் அந்த நாகத்தின் மீது அமர்ந்து இருக்கும் அந்தக் காட்சியுடன் இருக்கும் அந்த நாகத்தின் பெயர் நாகசந்தரேஸ்வர் என்றாக இருக்கும் எனவும் கூறினார்.
இதனால்தான் நாக பஞ்சமி தினத்தன்று லட்ஷக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து நாக தக்ஷக்கின் மீது அமர்ந்துள்ள சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை வணங்கிச் செல்கின்றார்கள். அன்று அங்கு சென்று நாகசந்தரேஸ்வரரை தரிசனம் செய்தால் அவர்களது குடும்பத்தில் உள்ள எந்த ஒருவருக்கும் எத்தனை சர்ப்ப தோஷம் இருந்தாலும் அத்தனையும் அப்போதே விலகி விடும் என்பதாக ஐதீகம் உள்ளது.
இந்த நாகசந்தரேஸ்வரர் ஆலயத்தில் காணப்படும் சிலை 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது எனக் கூறுகிறார்கள். நேபாளத்தை ஆண்டு வந்த மன்னர் ஒருவரே கடவுளின் ஆணைப்படி அதை மஹாகாளீஸ்வரர் ஆலயத்தின் மேல் மாடியில் கொண்டு வந்து ஸ்தாபித்ததாகவும் கூறுகின்றார்கள். இந்த உருவில் வடிவமைத்த சிலை- நாகத்தின் உடல் மீது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி அமர்ந்துள்ள காட்சி – உலகில் வேறு எங்குமே கிடையாது. ஒரு நாகத்தின் மீது படுத்த நிலையில் விஷ்ணு பகவான் மட்டுமே காணப்படுவார், ஆனால் இங்கோ சிவபெருமான் அதே காட்சியில் காணப்படுகின்றார் என்பது அதிசயம் ஆகும். தன் உடல் மீது அமர்ந்துள்ள சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் தலைப்பு பகுதியின் மீது தனது பத்து தலைகளையும் குடை போல பிடித்த காட்சியில் நாக தக்ஷக் காணப்படுகின்றார்.
உஜ்ஜயினியை ஆண்ட போஜ ராஜன் எனும் மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான் நாகசந்தரேஸ்வரர் ஆலயத்தை நிறுவுமாறு கட்டளைகொடுத்ததாகவும், ஆகவே அந்த போஜ ராஜனே இந்த ஆலயத்தை 1050 AD காலகட்டத்தில் நிறுவியதாகவும், 1732 ஆம் ஆண்டு குவாலியரில் ஆட்சி செய்த ரானோஜி சிந்தியா எனும் மன்னரே சீரழிந்துக் கிடந்த மஹாகாளீஸ்வரர் ஆலயத்தை பின்னர் புனரமைத்ததாகவும் கூறுகின்றார்கள்.
அதை போலவே உலகில் இருந்த நாகங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து தமது சந்ததியினரைக் காப்பாற்றிய நாக மன்னன் தக்ஷக்கிற்கு, அவர் எங்கு தங்கி இருந்து, எங்கு பகவான் தன்வந்ரியை சிறை வைத்து இருந்தாரோ அதே இடத்தில் ஒரு ஆலயம் அமைத்து வழிபாட்டு வந்தனவாம். அதுவே பிற்காலத்தில் மாண்டசூரில் தற்போது நாக தக்ஷக்கின் ஆலயம் உள்ள இடத்தில் நாகம் தக்ஷக் எனும் பெயரில் அமைந்த ஆலயமாயிற்றாம். உலகில் நாக தக்ஷக்கிற்கு உள்ள ஒரே ஆலயம் இது மட்டுமே என்கின்றார்கள். இந்த ஆலயத்தை உள்ளூர் மக்கள் ‘தக்காஜி ஆலயம்’ என்றும், ‘தக்தேஸ்வரர் ஆலயம்’ என்றும் கூறுகின்றார்கள். இந்த ஆலயத்தில் தனது மனைவி மற்றும் மகனுடன் நாக தக்ஷேஸ்வரர் காட்சி தருகின்றார். தன்வந்தரி பகவான் சிறை வைக்கப்பட்ட அதே மரமே அதன் அருகில் உள்ள மரம் என்பதாகவும் கூறுகின்றார்கள். அந்த ஆலயத்தின் சில காட்சிகள் கீழே உள்ளவை: