
கேரளத்தில் வயநாட்டில் உள்ள மனந்தவாடி எனும் இடத்தில் இருந்து சுமார் முப்பது கிலோ தொலைவில் உள்ள பிரும்மகிரி மலைப் பகுதியில் பாபநாசினி நீர்வீழ்ச்சி ஓடும் இடத்தில் உள்ளதே திருநெல்லி விஷ்ணு ஆலயம். ஆலயம் ஆயிரத்துக்கும் முற்பட்டது. ஆலயம் முழுமையாக கட்டப்படாமல் இருக்கின்றது என்றாலும் அந்த ஆலயம் மிகவும் புகழ் பெற்று உள்ளது. ஆலயம் எவரால் கட்டப்பட்டது என்பது குறித்து விவரங்கள் கிடைக்கவில்லை.

அநேகமாக ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் அது கட்டப்பட்டு இருக்கலாம் எனவும் இரண்டு மன்னர்களுக்கு இடையே எழுந்த தகராறினால் ஆலயம் முழுமையாகக் கட்டப்படாமல் நின்றுள்ளது எனக் கிராமியக் கதையைக் கூறுகிறார்கள். அதனால்தான் ஆலயத்தின் மேற்கூரை பாதி கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது. மேலும் அந்த நாட்டை ஆண்டு வந்த மன்னனின் ஒரு இளவரசி அங்கு வந்தபோது ஆலயத்தில் பகவானுக்கு அர்ச்சனை செய்ய தண்ணீர்கூட இல்லையே என அந்த ஆலயத்தின் நிலையைக் கண்டு வருந்தி அருகில் இருந்த பிரும்மகிரி மலைப் பகுதியில் இருந்து பாறைகளில் வாய்கால் போல வெட்டி அந்த ஆலயத்துக்கு பூஜைகளுக்கு தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்தாளாம் . அது இன்னமும் உபயோகத்தில் உள்ளது.ஆலயம் வந்த கதை சுவையானது.

ஒரு காலத்தில் பிரும்மா தனது ஒரு சாபத்தை விலக்கிக் கொள்ள அனைத்து லோகத்தையும் சுற்றிக் கொண்டு வந்தபோது மழைப் பகுதியில் இருந்த இந்த இடத்துக்கு வந்தாராம். மலையில் காடுகளால் சூழப்பட்டு இருந்த ஒரு இடத்தில் ( தற்போது ஆலயம் உள்ள இடத்தில்) இருந்த ரம்யமான சூழ்நிலை உள்ளதைக் கண்டு தாம் சாப விமோசனம் பெற அங்கே தவம் இருக்கலாம் என நினைத்து அங்கு இறங்கினாராம். அப்போது அந்த காட்டின் நடுவில் ஒரு நெல்லி மரம் இருக்க அங்கே விஷ்ணுவானவர் அமர்ந்து உள்ளது போல இருக்க, அருகில் சென்றால் அது வைகுண்டம் போலவே காட்சி தந்ததாம். ஆகவே அவர் மற்ற தேவர்களையும் அங்கு அழைத்து வந்து அந்த இடத்தில் விஷ்ணுவின் சிலையை பிரதிஷ்டை செய்து அதை வணங்கி வந்தாராம். அருகில் ஓடிய பாபநாசினி தீர்த்தத்தில் அவர் குளித்துவிட்டு விஷ்ணுவிற்கு பூஜை செய்வாராம். அதைக் கண்டு மகிழ்ந்த விஷ்ணுவும் அந்த நீர்வீழ்ச்சியில் இருந்து விழும் நீரில் குளித்தால் அனைத்து பாபங்களும் விலகும் என்று அருள் செய்ய அந்த நீர்நிலையும் புனிதமாயிற்று. அந்த இடத்தின் அருகில் பத்ம தீர்த்தம் என்ற குளமும் உள்ளது. அதன் நடுவில் உள்ள பாறை ஒன்றில் கால் தடம் உள்ளது. அதை விஷ்ணுவின் கால் தடம் என்றும், அங்கு நின்றபடித்தான் விஷ்ணு பகவான் பிருமாவுக்கு தரிசனம் தந்தார் எனக் கதை ஒன்றும் உள்ளது. பின்னர் அந்த இடத்தில் விஷ்ணுவிற்கு ஆலயம் அமைந்தது.
பரசுராமர் தனது தந்தையைக் கொன்றவர்களை பழி தீர்த்துக் கொன்றதும் தமது பிருமஹத்தி தோஷத்தைக் களைய அந்த புனித இடத்தில் வந்து (பாபனாசினியில்) குளித்துவிட்டு பித்ரு கர்மாவை செய்தாராம். அது போலவே ராமபிரானும் அந்த இடத்தில் வந்து தனது தந்தைக்கு பித்ரு கர்மா செய்தார் எனக் கதை உள்ளது. ஆகவே அந்த இடத்தில் வந்து பித்ருக்களுக்கு கர்மா செய்வது சிறந்தது என்பதினால் பலரும் அங்கு வந்து தமது பித்ருக்களுக்கு கர்மாவை செய்கின்றனர்.

இன்னொரு கதையின்படி ஒரு காலத்தில் அந்த மலைப் பகுதிக்கு தவமிருக்க வந்த சில முனிவர்கள் குடிக்க நீரும் உண்ண உணவும் கிடைக்காமல் தவித்தபோது அவர்கள் விஷ்ணுவை தமக்கு உதவுமாறு வேண்டினார்கள். அவரும் அவர்களுக்கு அந்த நெல்லி மரம் இருந்த இடத்தையும் நீர் நிலையையும் காட்ட அவர்கள் அந்த பழங்களை உண்டு தண்ணீர் அருந்தி தாகத்தை தீர்த்துக் கொண்டனர். ஆகவே அந்த மரத்தை திரு நெல்லி அதாவது அருள் புரிந்த நெல்லி என்ற பெயரில் திருநெல்லி எனப் போற்றி அந்த மரத்தின் பக்கத்தில் வசித்து விஷ்ணுவை வழிபட்டனர். அதனால்தான் அந்த இடம் திருநெல்லி என்ற பெயரை அடைந்தது.விஷ்ணுவின் ஆலயமும் அங்கு அமைந்ததாம்.