சாந்திப்பிரியா – 12–
அடுத்து அங்கிருந்துக் கிளம்பி நேராக உஜ்ஜயினியில் சிப்ரா நதிக்கரையில் இருந்த சிந்தாமணி வினாயகர் ஆலயத்துக்குச் சென்றோம்.
உஜ்ஜயினி நகரம் பல ஆலயங்களைக் கொண்டுள்ள மிகப் பழமையான நகரம். இங்குள்ள பல ஆலயங்கள் மந்திர தந்திர சக்திகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது என்று கூறுகிறார்கள். சிப்ரா நதிக் கரையில் அமந்துள்ள இந்த வினாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள வினாயகர் தானாகத் தோன்றிய ஸ்வயம்பு வினாயகர். அவருக்கு இருபுறத்திலும் அமர்ந்துள்ளவர்கள் அவருடைய மனைவிகளான ரித்தி மற்றும் சித்தி என்பவர்கள். ஸ்வயம்புவாகத் தோன்றியதாக கூறப்படும் சுமார் ஐந்து அடி நீளமும் மூன்று அல்லது நான்கு அடி பருமனும் உள்ள இந்த வினாயகரின் காலம் தெரியவில்லை. ஆனால் 12-13 ஆம் நூற்றாண்டில் மால்வா பிரதேசத்தை ஆண்டு வந்த பர்மார் மன்னர்கள் காலத்தில்தான் இந்த ஆலயம் அமைக்கப்பட்டு உள்ளது என்பது தெரிகிறது. இந்த ஆலயத்தின் காலம் தெரியவில்லை என்றாலும், இது மிகப் பழமை வாய்ந்த ஆலயம் என்பது நிச்சயம். ஆலயம் சிறிது என்றாலும் கீர்த்தி பெரியது. இந்த ஆலயம் மிகவும் புகழ் பெற்ற ஆலயம்.
இந்த நகரில் உள்ள பெரும்பாலான மக்கள் தத்தம் வீடுகளில் நடைபெறும் முக்கிய விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் முடிவை எடுத்தவுடன் இங்கு வந்து இவருக்கு பூஜைகளை செய்துவிட்டுப் போவார்களாம். அது போலவே வீட்டுத் திருமணங்களில் அடிக்கப்படும் அழைப்பிதழ்களை முதலில் இந்த வினாயகரின் ஆலயத்தில் வந்து வைத்து விட்டுத்தான் மற்றவர்களுக்கு வினியோகத் துவங்குகிறார்கள் என்பது ஐதீகமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. தினமும் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தாலும், புதன் கிழமைகளில் உள்ளே நுழைய முடியாத அளவு கூட்டமாக மக்கள் இங்கு வருகிறார்கள்.
இந்த ஆலயத்தில் உள்ள வினாயகர்
-தடைகளை நீக்குவார்
-வேண்டுதலை நிறைவேற்றுவார்
-வாழ்வில் வளம் தருவார்
-மன அமைதியையும், சந்தோஷத்தையும் தருவார்
-உஜ்ஜயினியில் உள்ள சிவ கணங்களின் அதிபதியாக இருக்கின்றார் என்று கூறுகிறார்கள்.
ஆலயத்தில் உள்ள தூண்களில் காணப்படும் சிற்பங்கள் அற்புதமானவை. அவை பர்மார் மன்னர்கள் காலத்தை சேர்ந்தவை. சிந்தாமணி என்றால், மனத் துயரங்களை தீர்ப்பவர் என்று பொருள். இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் பெருமளவுக்கு வந்து அவரை வணங்குவதின் காரணம் தம்முடைய பிரச்சனைகளை தீர்ப்பவர் இவர் என்ற நம்பிக்கைதான். அதனால்தான் அவருடைய ஆலயத்திற்கு சிந்தாமணி கணேஷ் அதாவது மனக் கலக்கங்களையும் சிந்தனைகளையும் நிவர்திப்பவர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆலயத்தில் உள்ள ஸ்வயம்பு வினாயகரை விக்னேஷ்வரர் எனவும் அழைக்கின்றனர் . இந்து தர்மத்தின்படி நமக்கு தடங்கல்கள் ஏற்படக் கூடாது என்பதற்காக விக்னங்களைக் களையும் வினாயகப் பெருமானையே முதலில் வணங்கவேண்டும். ஆகவே உள்ளூர் மக்கள் ஆலயத்தில் உள்ள வினாயகரை சிந்தாமன் அதாவது கலக்கம் அற்ற மனதைத் தருபவர் என்று போற்றி வணங்குவதில் வியப்பில்லைதான்.
இந்த ஆலயத்துக்குச் செல்ல ரயில் நிலையத்தில் இருந்தும், பஸ் நிலையத்தில் இருந்தும் டெம்போ, மற்றும் வாடகைக் கார்கள் நிறையக் கிடைக்கின்றன. அவற்றைத் தவிர நிறைய பஸ்களும் அங்கு செல்கின்றன. நகரின் ஒரு கோடியில் உள்ள இது நகர மத்தியில் இருந்து அதிக தூரத்தில் இல்லை. உஜ்ஜயினிக்கு வருகை தரும் யாத்ரீகர்கள் இந்த ஆலயத்துக்குச் செல்லாமல் இருக்க மாட்டார்கள். அத்தனை பிரசித்தி பெற்ற ஆலயம் இது.
சன்னதியில் சிந்தாமணி வினாயகர்
சன்னதியில் சிந்தாமணி வினாயகர் -இன்னொரு தோற்றம்