சாந்திப்பிரியா

இந்த ஆலயத்தில் ஒவ்வொரு மாத அம்மாவாசை தினத்தன்றும் காலை பத்து மணி முதல் பகல் ஒரு மணிவரை அந்த தேவிக்கு செய்யப்படும் நிகும்பலா யாகம் எனப்படும் யாகத்தில் மூட்டை மூடையாக சிவப்பு மிளகாயை யாகத் தீயில் கொட்டி யாகம் நடைபெறுகின்றது. அதில் தேவியின் சக்தியை காட்டும் அதிசயம் என்ன என்றால் அந்த தீயில் போடப்படும் மிளகாய் எந்த விதமான நெடியையும் ஏற்படுத்துவதும் இல்லை, எவருடைய கண்களும் எரிவதும் இல்லை. இந்த அதிசயத்தை உலகில் வேறு எங்குமே காண முடியாது. அந்த பிரத்யங்கரா தேவி யார்? எதற்காக அவதாரம் எடுத்தாள். இனி அவள் வரலாற்றுக் கதையை படியுங்கள்.
முன்னொரு காலத்தில் தனது பக்தன் பிரகலாதனை கொடுமைப் படுத்திக் கொண்டு இருந்த ஹிரண்யகசிபு என்ற அசுரனை அழிக்க மகா விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டி இருந்தது. அந்த அசுரன் பெற்று இருந்த வரத்தின்படி அவனை மனிதர்களோ, மிருகங்களோ அல்லது வேறு ஆயுதங்களினாலோ கொல்ல முடியாது. அவன் ரத்தம் கீழே சிந்தினால் அதில் இருந்து மீண்டும் மீண்டும் அவன் வெளிவருவான். ஆகவே மனிதரும் அல்லாமல், மிருகமும் அல்லாத மிருகத் தலைக் கொண்ட ஒரு பயங்கர உருவைக் கொண்ட ஜீவனாக அவதாரம் எடுத்த நரசிம்மர் அந்த அசுரன் பிரகலாதனுடன் நின்று கொண்டு இருந்த இடத்தில் இருந்த ஒரு தூணில் இருந்து அதை உடைத்துக் கொண்டு வெளிவந்து அந்த அசுரனை தன் தொடை மீது பிடித்து வைத்துக் கொண்டு அவன் உடலை தன் விரல் நகத்தினால் கீறி அவன் உடலில் இருந்து வெளி வந்த ரத்தத்தைக் குடித்து அவனை கொன்றார்.

அப்போது அவன் ரத்தம் பூமியில் சிந்தினால் மீண்டும் அவன் உயிர் பிழைப்பான் என்பதற்காக சிவபெருமான் சரபேஸ்வரர் என்ற உருவத்தை அதாவது சிங்கத்தின் முகம், உடலோ பாதி மனிதர், பாதி சரபு என்ற பறவை. அந்த பறவையின் ரக்கைகளாக காளி மற்றும் துர்க்கை இருந்தனர். அந்த உருவை எடுத்த சிவன் அசுரனைக் கொண்டு கொண்டு இருந்த நரசிம்மரை அசுரனுடன் சேர்த்து ஆகாயத்தில் தூக்கி வைத்துக் கொண்டார். அந்த அரக்கன் சிந்திய ரத்தத்தை பறவை கீழே விழாமல் குடித்தது. அசுரனின் ரத்தம் கீழே சிந்தாமல் அவன் உயிர் பிழைக்க வழி இல்லாமல் மரணம் அடைந்தான்.

ஆனால் அவனைக் கொன்றப் பின்னும் நரசிம்மரின் இரத்த வெறி அடங்கவில்லை. உலகம் முழுவதையும் அவர் அழிக்கத் துவங்க தேவர்கள் சரபேஸ்வரர் உருவில் இருந்த சிவபெருமானிடம் அடைக்கலம் ஆயினர். சிவபெருமானும் தனது மூன்றாவது கண்ணில் (சரபேஸ்வரர் நெற்றியில் இருந்து) இருந்து ஒரு பயங்கர தேவதையை வெளிப்படுத்தினார். அவள் ஆயிரத்தி எட்டு சிங்கத்தின் , இரண்டாயிரத்து பதினாறு கண்கள், அதைத் தவிர மூன்றாவது கண், இரண்டாயிரம் கைகள், அந்தக் கைகளில் இருந்த விரல்களில் புலியின் நகங்கள், யமனைப் போன்ற கரிய நிறம், நீல ஆடை, சரீரமோ யானயை விட பத்து மடங்கு பெரியது என்ற விஸ்வரூப தோற்றத்துடன் வெளி வந்தாள்.

இன்னொரு புராணக் கதை முமூர்த்திகளின் மனைவிகளான பார்வதி, லஷ்மி மற்றும் சரஸ்வதி போன்ற மூவருமே சிவ பெருமான் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி ஒன்று சேர்ந்து தமது சக்திகளை உள்ளடக்கிய பிரத்தியங்கரா தேவியை உருவாக்கினார்கள் எனக் கூறுகின்றது. அப்படி வெளிவந்த உடனேயே அவள் நரசிம்மரை நோக்கி ஓடினாள். தன்னை விட அதி பயங்கர ரூபத்துடன் வந்துள்ள ஜீவனைக் கண்ட நரசிம்மர் ஓடத் துவங்க அவரை துரத்திப் பிடித்த பிரத்தியங்கர தேவி அவரை தனது வாய்க்குள் போட்டுக் கொண்டு அப்படியே முழுங்கி விட்டாள். அவரை முழுங்கியதும் அவள் கோபம் தணிந்தது. சாந்தம் அடைந்தவள் தனது விஸ்வரூப தரிசனத்தைக் களைந்து மகா பிரத்தியங்கர தேவியாகி நின்றாள்.

பின்னர் அவளுக்கு இந்த இடத்தில் ஆலயம் எழும்பியது. ஆனால் அதன் கால விவரம் தெரியவில்லை. இங்கு ஏன் அவளுக்கு ஆலயம் எழுந்தது என்பதற்கான விசேஷ காரணம் தெரியவில்லை என்றாலும், ஒரு முறை இந்திரஜித் ஸ்ரீ ராமபிரானுடன் போரிட்ட போது அவரை வெல்ல வேண்டும் என்பதற்காக இங்கு வந்து எட்டு திக்குகளிலும் பிரேதங்களை வைத்து நிகும்பலா என்ற யாகத்தை துவக்கி, பிரத்தியங்கரா தேவியை ஆராதித்தான். அந்த யாகம் வெற்றி பெற்றுவிட்டால் அதன் பிறகு அவன் ராமரை அழித்து விடுவான் என்பதினால் லஷ்மணர் தனது சகோதரரான ராமனுக்காக இங்கு ஹனுமாருடன் வந்து எந்த காரணத்தைக் கொண்டும் அக்கிரமத்தை வெல்ல விடக்கூடாது என அந்த தேவியை வேண்டினார். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த தேவியும் தர்மமே வெல்லும் எனக் கூறி இந்திரஜித்துக்கு அவன் வேண்டிய வரத்தை தர மறுத்து விட்டாள்.
மேலும் இந்த பூமியில்தான் பஞ்ச பாண்டவர்களும் கூட வந்து பூஜைகளை செய்தனராம். அகத்திய முனிவரும் தன்னுடன் பதினெட்டு சித்தர்களை அழைத்து வந்து இந்த இடத்தில் அமர்ந்து கொண்டு பிரத்தியுங்கரா தேவியை பூஜித்ததாகவும் ஆகவே அவள் அகத்தியருக்கு மட்டும் காட்சி தந்ததாகவும் வாய் மொழிக் கதை உள்ளது.
ஆலயத்துக்குள் அமர்ந்து உள்ள பிரத்தியங்கா தேவி நான்கு சிங்கங்கள் பூட்டப்பட்ட ரதத்தில் அமர்ந்தவாறு எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள். முகம் சிங்கத்தினுடயது . கழுத்திலோ மனித கபாலத்தில் கோர்த்த மாலைகள். தலை மீது படம் எடுத்து ஆடும் எழு தலை நாகம். பயங்கரமான தோற்றம். பிரத்தியுங்கரா தேவி அதர்வண வேதத்தின் அதிபதியாம்.

அவள் சன்னதியின் நுழை வாயிலில் அவளுக்கு வலதுபுறம் மிகப் பெரிய சரபேஸ்வரர் மற்றும் அகஸ்தியர், இடது புறம் இரண்டு ரிஷிகளான பிரத்தியங்கரா மற்றும் அங்கீரசா போன்றவர்கள் என அவர்களின் உருவம் அந்த சுவற்றில் பதிக்கப்பட்டு உள்ள தாமிரத் தட்டில் காணப்படுகின்றது. சன்னதிக்கு உள்ளே அனைத்து பக்க சுவர்களிலும் பல கதைகளை ஓவியமாக வரைந்து உள்ளார்கள். அங்கு பிரத்யங்கரா தேவிக்கு துணையாக அறுபத்தி நான்கு பைரவர்கள் உள்ளனராம். அவர்களை எட்டு பிரிவாக வகுத்து உள்ளார்கள். அவற்றில் முக்கியமானது எட்டு பைரவர்களின் தோற்றமே. அந்த ஓவியங்களில் பைரவர் அன்னம், மாடு, மயில், இரண்டு விதமான நாய்கள், கழுகு, குதிரை, யானை மற்றும் கழுதை போன்ற வாகனங்களுடன் காட்சி தருகிறார்.

( இவை போன்ற வேறு வண்ண உருவங்களே ஆலயத்துக்குள் உள்ளன )
இந்த ஆலயத்தில் அர்ச்சனைகள் செய்யப்படுவது இல்லை. தேவிக்கு பூஜை மட்டுமே செய்யப்படுகின்றது. ஆலய சன்னதிகள் முழுவதும் மேல் கூரையில் உத்ராக்ஷ மணிகளினால் ஆன மாலைகள் பந்தல் போடப்பட்டு உள்ளதைப் போல தொங்க விடப்பட்டு உள்ளன என்பதினால் அங்கு யாரும் தீபம் எற்றுவதையோ, கற்பூரம் கொளுத்துவதையோ அனுமதிப்பதும் இல்லை. ஆலய தல விருஷத்தில் ஐந்து விதமான இலைகளைக் கொண்ட அரச மரம் உள்ளது. ஆலயத்தின் எட்டு திக்குகளிலும் மயானம் உள்ளது. இரவில் ஆலயத்துக்குள் எவருமே தங்க அனுமதிப்பது இல்லை.
இங்கு வந்து இந்த தேவியை வணகுவதின் மூலம்:
– ஏவல், பில்லி, சூனிய வைப்புக்கள் போன்றவை விலகுகின்றன
-எதிரிகள் நாசம் அடைவார்கள்
-நமது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறுகின்றன
-பூர்வ ஜென்ம பாபங்கள் விலகுகின்றன
– நமக்கு தொல்லை தருபவர்களின் எண்ணம் நிறைவேறாது .