கதிராமங்கல வன துர்க்கை
சாந்திப்பிரியா
 வன துர்கை

மாயவரம் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் தல வழிபாட்டுக்குச் செல்பவர்கள் காண வேண்டிய மிகவும் முக்கியமான இடங்களில் வன துர்க்கை ஆலயமும் ஒன்று. மாயவரத்தில் இருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் ஒரு கிராமமான கதிராமங்கலத்தில் உள்ளது இந்த ஆலயம். சுமார்  2500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஆலயம் என்று அதைப் பற்றிக் கூறுகிறார்கள்.   மேலும் ராகு தோஷ பரிகாரத்துக்கு வன துர்க்கை ஆலயத்தை விட வேறு சிறந்த ஆலயமே  இல்லை என்றும்  கூறுகிறார்கள்.  மற்றும் ஒரு விசேஷம். எவர் ஒருவருக்கு தனது குல தெய்வம் யார் என்பது தெரியவில்லையோ அவர்கள் இந்த ஆலயத்தில் வந்து  தமது குல தெய்வமாகவே வன துர்காவை வணங்கினால் அவர்களின் குல தெய்வத்திடம் அதை அவள் சமர்பித்து விடுவதாக ஒரு ஐதீகம் உள்ளதாம். இதை அங்குள்ள பண்டிதர் விளக்கினார்.  திருக்கடையூருக்கு அறுபதாவது வயது திருமணம் செய்து கொள்ளப் போகின்றவர்கள், அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள மார்க்கண்டேயர் ஆலயம் மற்றும் அங்கிருந்து சிறிது தூரம்  தள்ளி உள்ள இந்த வன துர்க்கை ஆலயமும் சென்றுவிட்டு திரும்பினால்  மட்டுமே   அந்த வைபவம் நிறைவு பெற்றதற்கான பூரணப் பலன் கிடைக்கும் என்றும் படித்தப் பண்டிதர்கள்  கூறுகிறார்கள். கதிராமங்கல வனத்தில் வந்து குடியேறிய வன துர்க்கை யார்?

 மகிஷாசுரமர்த்தினியின் ஒரு காட்சி 

வேத  காலத்தில் மகிஷாசுரன் என்ற அசுரன் அனைவரையும் துன்புறுத்திக் கொண்டு இருந்தான். அவன் பெற்று இருந்த வரங்களினால் அவனை தேவ லோகத்திலும் பிற லோகத்திலும் இருந்தவர்களால் அழிக்க  முடியவில்லை.  அவனை இந்த லோகத்தில் பிறந்த எவராலும் அழிக்க  முடியாது என்ற வரத்தைப் பெற்று இருந்தான். அவனுடன் சும்பன், நிசும்பன் போன்ற அசுரர்களும் இருந்தார்கள். அந்த அசுரர்கள் அனைவரும் மக்களையும் தேவர்களையும் துன்புறுத்தி வந்தார்கள். அந்த அசுரர்களின் கொடுமைகளை தாங்க முடியாமல் போன தேவர்கள் பிரும்மாவுடன் சேர்ந்து மகாவிஷ்ணுவை சந்திக்கச் சென்றார்கள். அப்போது அவர் ஆனந்தசயனத்தின் மீது அமர்ந்தவாறு அங்கு இருந்த சிவபெருமானுடன் பேசிக்கொண்டு இருந்தார். அங்கு தேவர்களுடன் சென்ற பிரும்மா மகிஷாசுரனினால் ஏற்பட்டுள்ள தொல்லைகளை விலாவாரியாக எடுத்துக் கூற அதைக் கேட்ட மகாவிஷ்ணுவும் சிவபெருமானும் கோபமுற்றனர். அவர்களுடைய உடம்பில் இருந்து வெளிவந்த கோபக் கனல் இரண்டும் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய ஒளியை தோற்றுவித்தது. சிறிது நேரத்தில் அந்த ஒளியில் இருந்து பல ஆயுதங்களையும் கையில் ஏந்திய சாந்தமான முகத்தைக் கொண்ட பெண் ஒருவள் வெளி வந்தாள். வெளி வந்தவள் ரிக்வேதத்தின் மொழியில் தன்னை காத்தாயி எனும் துர்க்கை என்று கூறிக் கொண்டு தான் அனைத்து கடவுட்களையும் படைத்த பரப்பிரும்மனின் உருவம் எனவும், தான் எவராலும் படைக்கப்படவில்லை எனவும், அனைவரது சக்தியினாலேயே தான் இயற்கையாக உருவானவள் எனவும் எனவேதான் இந்த பூமியில் பிறந்தவர்களால் அழிக்க முடியாத அந்த மகிஷாசுரனை அழிக்க இயற்கையாக தோன்றியவளான  தான் வந்துள்ளேன்  எனவும் கூற தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அவளுக்கு அனைத்து கடவுட்களும் தம்மிடம் இருந்த ஆயுதங்களை அவளிடம் கொடுத்து அந்த அசுரனை அழிக்க வேண்டினார்கள். அவளும் அவர்களின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து அவர்களை அழிக்க  கிளம்பினாள்.

மகிஷாசுரமர்த்தினியின்  இன்னொரு  காட்சி

தன்னை வேண்டும் என்றே ஒரு அழகிய பெண்ணாக மாற்றிக் கொண்டு மலைப் பகுதிகளில் சுற்றித் திரிந்தாள். அவளைக் கண்ட அசுரர்கள்  அவள் அழகில் மயங்கி அவளை அடைய அவளை துரத்திக் கொண்டு சென்றபோது அவள்  தனது சக்தியினால் ஒரு பெரிய சேனையே உருவாக்கிக் கொண்டு அவர்களுடன் யுத்தம் செய்யத் துவங்கினாள்.  சண்டை ஆரம்பித்தது. ஒன்பது தினங்கள் நடந்த சண்டையில் ஒன்பது அவதாரங்களை எடுத்து சண்டை போட்டவள்,  ஒவ்வொரு நாளிலும் பல்வேறு உருவங்களில் மாறி மாறி வந்து சண்டையிட்ட அந்த மகிஷாசுரனை  ,  ஒன்பதாம் நாள்  சிங்க உருவில் வந்த வந்த அவனை   தனது வாளால்  வெட்டிக் கொன்றாள்.  துன்பங்களை துடைக்க வந்தவள்  என்று பொருள் தரும் துர்கா என்ற சொல்லினால் அவள் பெயர் துர்கா என்ற மகிஷாசுரமர்தினி என ஆயிற்று. இன்னொரு கதையின்படி  துர்க்கை என்பவள் சிவபெருமானின் மனைவியான பார்வதியே எனவும் அவளே சிவனுடைய கோபக் கனலில் இருந்து அந்த அசுரனை வதம் செய்யத்  தோன்றினாள் என்று தெரிகின்றது. எது எப்படியோ, துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி போன்றவர்கள் பார்வதியின் அவதாரங்களே என்பதே உண்மை.

மகிஷாசுரமர்த்தினியின் இன்னொரு  காட்சி

அதன் பின் பல இடங்களிலும் அவள் கோபமான முகத்தையும் பல கைகளையும் கொண்டு  தனது காலடியில் தான் வதம் செய்த அசுரனின் உடல் மீது நின்ற நிலையில்  மகிஷாசுரமர்தினியாகவும்   , மேலும் நவ துர்க்கை ரூபங்களிலும் காட்சி தந்து கொண்டு  இருந்தவள்  அனைவராலும் பூஜிக்கப்படத் துவங்கினாள்.  ஒரு கால கட்டத்தில் யுத்தத்தினால் சலிப்பு அடைந்தவள் சிறிது காலம் ஏகாந்தமாக இருக்க நினைத்து  அந்த காலத்தில் சிவ மல்லிகை  என்று அழைக்கப்பட்ட கதிராமங்கலத்தில் வந்து அங்கிருந்த ஒரு வனத்தில் தங்கினாள்.  அங்கு வந்தவள் தனது கோலத்தை மாற்றிக் கொண்டாள். சாந்தமான முகம், நான்கு கைகள், தான் கொன்ற அசுரன் மீது நின்ற காட்சி  மற்றும் யுத்தவெறி இல்லாத தோற்றம் போன்றவற்றைக் கொண்டு அங்கு  வனத்தில் அமர்ந்து கொண்டு இளைப்பாறி சிவபெருமானுடன் மீண்டும் இணைய வேண்டும் என தவம் செய்து வந்தாள். தினமும்  ஆகாயமார்கமாக வாரணாசிக்குச்   சென்று அங்குள்ள கங்கையில் நீராடிவிட்டு இங்கு வந்து தவம் இருப்பாளாம்.  அனைவரது துயரங்களையும் தூளாக்கி இன்பத்தை தருபவள் என்ற அர்த்தத்தை தரும் துர்கா என்ற பெயரை ஏந்தி  வனத்தில் வந்து அமர்ந்ததினால் வன துர்காவாக மாறினாள்.  அப்போதெல்லாம் அந்த வனத்தில் சிவ பூஜைக்காக தினமும் மலர்களை பறிக்க வந்து கொண்டு இருந்த  ராகு பகவான் அங்கு வந்து தங்கி இருந்த வன துர்காவை அடையாளம் கண்டு கொண்டு  தினமும் அவளை அங்கேயே வந்து வணங்கி பூஜிக்கலானார் .  அவர் வேண்டுகோளை ஏற்ற அவளும் அங்கேயே  ஒரு சிலையாக அமர்ந்தாள். இப்படியாக அந்த வனத்தின் தோன்றியவளே வன துர்க்கை.

வன துர்கையின்  இன்னொரு  காட்சி

 ஒரு கால கட்டத்தில் அங்கு கம்பர்  ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தார். அவர் அந்த வனத்தில்  இருந்த துர்காவின் சிலையை  ஒரு தேவதையின் சிலையாகக் கருதி பூஜித்து வந்தார்.  ஒரு நாள் நல்ல மழை, காற்று. குடுசையே பறந்து விடும்போல இருந்தது.  தான் வீட்டை காப்பற்றி தன்னையும் காத்தருளுமாறு மனமுருகி கம்பர் அந்த வன தேவதையை வேண்டினார். என்ன ஆச்சர்யம் அவர் குடுசை மீது நெல் கதிரால் ஆன தடுப்பு தானாகவே தோன்றியது.  அதைக் கண்ட கம்பர் அந்த தேவதையை நெல்லால் ஆன கதிரை தடுப்பை தந்தவள் என்ற அர்த்தத்தில் ‘கதிர் தேவி’ என ஆராதித்தார். இப்படியாக அந்த இடத்தின் பெயர் கதிரால் ஆன இடம் என  ஆகி அது மருவி கதிராமங்கலம் ஆயிற்று.

அடுத்து இன்னொரு காட்சி நடந்தது.  அகத்திய முனிவரும் அங்கு வந்து தங்கி இருந்தார்.  அவரும் அந்த தேவியின் சிலையை யார் என்று அறியாமல் வழிபட்டு வந்தார். ஒருநாள் அவர் சிவபெருமான்-பார்வதியின் திருமணத்தைக் காண இமயமலையை நோக்கிச் சென்றபோது வழியில் ஒரு அசுரன் அவரை தடுத்து நிறுத்தினான்.  அகத்தியரோ உருவத்தில் சிறியவர்.  பூதாகாரமான அந்த அசுரனை எப்படி சண்டை இட்டு சமாளித்து மேலே செல்வது?  வனத்துக்குத் திரும்பினார். அங்கு இருந்த அந்த தேவியின் சிலையை மகிஷாசுரனைக் கொன்ற துர்கையாக பாவித்து மனமுருகி பிரார்த்தனை செய்தார். அவர் வேண்டுகோளை  ஏற்றுக் கொண்டவள் அவருக்கு சக்தி தந்தாள். அந்த சக்தியைக் கொண்டு அகத்தியர் மீண்டும் இமயமலைக்கு கிளம்பிச் சென்றார். மீண்டும் அதே அசுரன் அவரை வழிமறிக்க அவனை நொடிப்பொழுதில் அவர் துர்க்கை தந்த சக்தியால் சம்ஹாரம் செய்துவிட்டு மேலே தொடர்ந்து பயணம் செய்தார்.  அப்போதுதான் அவர் அங்குள்ள தேவதையின் சிலை பார்வதியின் அவதாரமான துர்க்கையே என்பதை புரிந்து கொண்டு வனத்தில் இருந்து கொண்டு தனக்கு வாழ்வளித்த துர்க்கை என்ற பொருளில் பாடித் துதிக்க அவள் அங்கு வன துர்க்கை என்ற பெயரைப் பெற்றாள்.

மூன்றாவது சம்பவம். மிருகுண்டு முனிவர் தனது மகன் மார்க்கண்டேயனின் மரணம் நிகழ இருந்த சமயத்தில் அங்கு வந்தார். அங்கு பார்வதி தேவி துர்கையின் உருவில் சிவனை நோக்கி தவத்தில் இருந்த காட்சியைக் கண்டார். தனது மகனின் உயிரை காப்பாற்றுமாறு அவளிடம் மனமுருகி வேண்டிக் கொண்டார். அவளோ அவரை திருக்கடையூருக்குச் சென்று அங்குள்ள சிவனை வேண்டிக் கொண்டால் அவர் மார்க்கண்டேயனின் உயிரை காப்பாற்றுவார் எனக் கூற அந்த முனிவரும் திருக்கடையூருக்குச் சென்று சிவனை பிராத்திக்க மார்கண்டேயர் உயிர் பிழைத்த  தனிக் கதை பிறந்தது. ( அந்தக் கதை திருக்கடையூர் ஆலய கட்டுரையில்  தனியாக வெளியாகும்) . அதனால்தான் திருக்கடையூருக்கு செல்பவர்கள் மறக்காமல் மார்க்கண்டேயர் மற்றும் இந்த வன துர்க்கை ஆலயங்களுக்கும் செல்வதினால் மட்டுமே  பூரண அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

காலம் ஓடியது. அங்கிருந்த மக்கள்  ஒரு கீற்றுக் கொட்டகைப் போட்டு அந்த வன துர்கை பிரதிஷ்டை செய்து போற்றி வணங்கத் துவங்கினார்கள். மெல்ல மெல்ல சாமியாடிகள் மூலமும் அசரி வாக்கு மூலமும் அந்த ஆலய  தேவியின் மகிமைகள் வெளியில் தெரியத் துவங்கின. அந்த ஆலயத்தில்  உள்ள சிலை சுயம்புவாகத் தோன்றியது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு அந்த ஆலயம் எழுந்துள்ளது.  அந்த காலங்களில் ஆலயம் என்றால் கட்டிடம் அல்ல.  எந்த இடத்தில் எந்தக் கடவுள் பூஜிக்கப்பட்டாரோ அந்த இடத்தை ஆகாயத்தின் கீழுள்ள லயம் ( கொட்டகை என்று அர்த்தம்), அதாவது  ஆலயம் என்று அழைத்தார்கள் . அந்த வேத காலத்தில் அந்த இடத்தின் பெயர் சிவ மல்லிகை வனம்  என்றே கூறப்பட்டு வந்தது.

ஆகவேதான் அந்த ஆலயத்தில்  ராகு  பகவான் வந்து அவளை பூஜிப்பதினால்  ராகு தோஷம் உள்ளவர்கள் வன துர்கையான அவளை அந்த ஆலயத்துக்கு வந்து பூஜித்தால், அங்கே வந்து அவளை பூஜிக்கும் ராகு தேவர்  அந்த பக்தர்களின் தோஷங்களை களைவார் என்ற நம்பிக்கை தோன்றியது .  அதற்கு ஆதாரமாகவோ என்னவோ அந்த தேவியின் சிலையின்  முன்புறப் பகுதியில் சாந்த முகம் கொண்ட அம்பாளின் தோற்றமும், பின்புறப் பகுதி  படமெடுத்து நிற்கும் நாகத்தின் உருவாகவும்  அமைந்து உள்ளது என்பது அதிசயம்.  அந்த அழகை அந்த ஆலயத்தில் தேவியின் சிலைக்கு  மேல் வைக்கப்பட்டு உள்ள கண்ணாடி மூலம் காணலாம்.  அங்குள்ள வன துர்க்கை அற்புதமான சாந்த முகத்தோடு ஒரு தாமரை மலரில் நின்று கொண்டு தனது நான்கு கைகளில் இரண்டில்  சங்கு, சக்கரம் ஏந்தியும்  மூன்றாவதில் அபய முத்திரைக் காட்டி, நான்காவதை தனது இடுப்பில் வைத்தவாறு கிழக்கு நோக்கி  காட்சி தருகிறாள்.  இதுவும் இந்த வன துர்க்கை ஆலயத்தின் ஒரு தனிச் சிறப்பே. ஏன் எனில் மற்ற அனைத்து ஆலயங்களில் அவள் வடக்கு அல்லது தெற்கு நோக்கியை  காட்சி தருபவள். ஆகவேதான் ராகு நாயகர் பூஜிக்கும் அந்த  நேரமான ராகு காலத்தின் போது  அங்கு வந்து எலுமிச்சை  பழத்தில் நெய் விளக்கு ஏற்றி  அந்த துர்கையை வழிபட ராகு தோஷம் விலகும் என்ற ஐதீகம் தோன்றியது.  வன துர்கையின் முன்னிலையில் ராகு பகவானிடம் தனது தோஷங்களை களையுமாறு பக்தர்கள் வேண்டிக் கொள்ளும்போது அவள் ராகுவிடம் தன்னை பூஜிக்கும் அந்த பக்தர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு  அவர்களுக்கு அருளுமாறு ஆணையிடுவதாகவும்,  அதனால்தான் ராகு பகவான் பூஜிக்கும் நேரத்தில் சென்று வழிபடும்போது  ராகு தோஷம் விலகுவதாகவும் நம்புகிறார்கள்.

அந்த ஆலயத்தின் மற்றும் ஒரு விசேஷம்  என்ன என்றால் அனைத்து ஆலயங்களிலும் உள்ளதைப் போல அங்கு விநாயகரின் சன்னதி இல்லை. விநாயகரை வணங்கியப் பின்னரே ஆலயங்களில் உள்ள மற்ற மூர்த்திகளை வணங்க வேண்டும் என்ற விதிக்கு மாறாக இங்கு அந்த துர்கையுடனே  அவர் கலந்து இருப்பதான ஐதீகம் உள்ளதினால் (பார்வதியின் மகனானவர் அல்லவா) அவருக்கு தனி சன்னதி எழுப்பப்படவில்லை.  ஆலயத்தின் மீது மேல் கூரையில் ஒரு பெரிய துவாரம் அமைந்து உள்ளது  என்பது மற்றும் ஒரு சிறப்பு அம்சம் . அந்த  ஐதீகத்தின் பின்னணி காரணம் என்ன என்றால்  முன்னர் அந்த துர்க்கை தினமும்  வாரணாசிக்குச்   சென்று அங்குள்ள கங்கையில் நீராடிவிட்டு இங்கு வந்து தவம் இருந்து வந்ததினால் இன்றும் தினமும் அவள் விடியற்காலை ஆகாயமார்கமாக  வாரணாசிக்குச் சென்று கங்கையில் நீராடிவிட்டு  வருகிறாள் என்பதற்காகவே அந்த துவாரம் அமைக்கப்பட்டு உள்ளதாம் .  ஆலயத்தின் எதிரில் ஒரு தாமரைக் குளம் உள்ளது. அதில் வெள்ளைநிற மீன்களும், தாமரை மலர்களும் உள்ளன.

இந்த ஆலயத்தில் வந்து  நெய்விளக்கேற்றி பூஜிப்பதினால்:-
– ஆயுள் பெருகும்
-ராகு தோஷம் விலகும்
-செல்வம் கொழிக்கும்
-சத்ருக்கள் நாசம் அடைவார்கள்
-திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் நல்ல வரன் அமையும்
மனம் அமைதி பெரும் மற்றும்
நோய் நொடி தீரும்.

பூஜை விவரங்களை அறிந்து கொள்ள  வசதியாக  சில பண்டிதர்களின் தொலைபேசி எண் கிடைத்தது.  அவை கீழே  தரப்பட்டு உள்ளது. அவர்களை தொடர்ப்பு கொள்வது அவரவர்களின் பொறுப்பே.
B.ராமானந்த குருக்கள்   04364 232555 / 232999
R.சுரேஷ் குருக்கள்   094432 61999
B. கும்பேஸ்வர குருக்கள்  094867 67735
R . சந்த்ரு குருக்கள்  094430 71765
S .பாலாஜி குருக்கள்  094422 11122
ஆலய விலாசம்
ஸ்ரீ வன துர்க்கை ஆலயம்
கதிராமங்கலம்
தஞ்சாவூர் மாவட்டம்
பின் : 612 106
தொலைபேசி எண் : 04364 232555