கும்பகோணம்-திருவாரூர் வழித் தடத்தில் துணை மாவட்டத் தலைமையகமான குட வாசலில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சேங்காலிபுரம் எனும் ஒரு சிறிய கிராமம். இந்த சிறிய கிராமத்தில் பதினெட்டுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றே வரலாற்று புகழ் பெற்ற ஸ்ரீ தத்தாத்திரேயர் ஆலயம் ஆகும், இந்த ஆலயத்தில் ஸ்ரீ தத்தாத்திரேயர், ஸ்ரீ தத்தாத்திரேயரின் பாதுகைகள் மற்றும் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனாவின் மிக சக்தி வாய்ந்த யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுகின்றன. இப்படிப்பட்ட சக்தி வாய்ந்த யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள ஒரே ஆலயம் இதுவேயாகும்.
இந்து மத புராண இதிகாசங்களில், பரபிரும்மனில் இருந்து பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மும்மூர்த்திகள் வெளிப்பட்டார்கள். பிரபஞ்சம் படைக்கப்பட்ட சில காலத்திற்கு பின்னர் அவர்களது மூவரின் சக்திகளும் ஒன்றிணைந்த ஒரு அவதாரமாக, வேத காலத்தில் வாழ்ந்திருந்த அத்ரி முனிவர்-அனுசுயா தம்பதியினர் மூலமாக, மானிட உருவில், லோகத்தின் குருவாக, ஒரு அவதூதராக ஸ்ரீ தத்தாத்திரேயர் அவதரித்தார். அவருடைய மூன்று தலைகளும் கொண்ட தோற்றம் மும்மூர்த்திகளை வெளிப்படுத்தினாலும், ஸ்ரீ தத்தாத்திரேய அவதாரம் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அம்சம் ஆகும்.
தம்மிடம் சரணடைந்த ஒவ்வொருவரையும் ஆன்மீகத்தின் மேன்மையான நிலைக்கு, அதாவது தம்மை படைத்தவரிடமே மீண்டும் ஐக்கியம் ஆகும் ஆனந்த நிலைக்கு அழைத்துச் செல்பவர் அவதூதர். அவர் தன்னை முற்றிலும் உணர்ந்துள்ள மெய்யுணர்வாளர், தூல, காரண மற்றும் சூக்கும எனும் மூன்று உடல்களிலும் இருந்தவாறு இறை பணியில் ஈடுபட்டுக் கொண்டு தம்மை நாடி வந்தவர்களுக்கு ஆன்மீக மன விடுதலை தருபவர் ஆகும்.
எந்த ஒரு தெய்வமுமே, அவ்வப்போது, பரபிரும்மன் படைத்த பூமியில், ஆங்காங்கே தோன்றும் தீய சக்திகளை அழித்து, பிரபஞ்சத்தின் தன்மைகளை பாதுகாத்து, மானிடப் பிறவிகளை நல் வழிப்படுத்த பல்வேறு உருவங்களில் பூமியில் தோன்றுவார்கள். அவர்களில் சிலர் ஒரு தாயின் வயிற்றின் மூலமாக பிறப்பார்கள், சிலர் யார் மூலம் அவதரித்தார் என்பதோ, எங்கு சுயமாக தோன்றினார் என்பதோ வெளிப்படுவது இல்லை. பூமியில் மானிட உருவெடுத்து உலவும் தெய்வங்கள் மனிதர்களிடையே பட்டும் படாமலும் வாழ்ந்து கொண்டு, மனிதர்களுக்கு நன்னெறி வழிமுறைகளை காட்டியவாறு, அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்து கொண்டு இருப்பார்கள். அவர்களது தெய்வீகம் வெளித் தெரியாது. ஆனால் வெகு காலத்திற்குப் பிறகே அவர்கள் யார் என்பதும், எப்படி மறைந்தார்கள் என்ற உண்மையும் வெளிப்படும்.
ஸ்ரீ தத்தாத்திரேயர் எதற்காக அவதரித்தார்? அவதாரங்கள் எதற்காக தோன்றுகின்றன என்பதைக் குறித்த செய்திகள் புராணங்களில் உள்ளன. அவற்றில் காணப்படும் கதையின்படி உலகம் தோன்றி சில யுகங்கள் உழன்றன. யுக யுகமாக பூமியில் படைக்கப்பட்ட பூவுலகப் பிறவிகள் தங்கள் இஷ்டப்படி கட்டுக்கோப்பின்றி வாழத் துவங்கினர். ஆகவே பூவுலகப் பிறவிகள் தான் தோன்றித்தனமாக வாழ்வதைக் கட்டுப்படுத்தி அவர்களுக்கு நல் வழியில் செல்லும் மார்கத்தைத் காட்ட வேண்டும். நல்வழி நெறிமுறைகள் அழியும் நிலையை அடையும்போது, நன்னெறி முறைகளை மீண்டும் செழிக்க வைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு அவதாரம் தேவை என்ற பரபிரும்ம தெய்வ நியதி இருந்ததினால், ஸ்ரீ தத்தாத்திரேயர் எனும் அவதாரம், அதே பரபிரும்ம தெய்வ நியதியின்படி அத்ரி முனிவர்-அனுசுயா தம்பதியினர் மூலம் வெளிப்பட்டது. இதுவே ஸ்ரீ தத்தாத்திரேயர் அவதரித்ததின் சிறு கதை.
தத்தா என்றால் தன்னையே தந்தவர் என்பது பொருள் என்பதினால்தான் உலக நலனுக்காக அவதூதராக காட்சி அளித்த பரபிரும்மமான, பரிபூரண தெய்வத்தை ஸ்ரீ தத்தாத்திரேயர் என அழைத்தார்கள்.
ஆனால் பல தெய்வங்களும் பூமியிலே அவதரித்து, தமது அவதார நோக்கம் நிறைவேறிய பின்னர், அதே பூமியில் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தமது அவதாரங்களை முடித்துக் கொண்டு மீண்டும் தேவலோகத்துக்கு சென்று விடுவார்கள். ஆனால் ஸ்ரீ தத்தாத்திரேயர் மட்டுமே தனது அவதாரத்தை முடித்துக் கொள்ளாமல், பல்வேறு தெய்வீக மஹான்கள் உருவங்களில் இன்னமும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு இருக்கின்றார் என்பதுதான் அந்த அவதாரத்தின் ஒரு மாபெரும் அற்புதம் ஆகும்.
அவர் தனது தெய்வீக சக்தி அலைகளை, ஒரு சில குறிப்பிட்ட தாய்மார்களின் வயிற்றில் செலுத்தி, அந்த தாய்மார்கள் மூலம் பிறந்த சில மகான்களுக்கு தனது தெய்வீகத்தை அளித்து, அவர்களே தம்முடைய அம்சம் என்ற உண்மையை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றார். அவற்றில் சில மஹான்கள் சம காலத்தில் வாழ்ந்தவர்கள். அவர்கள் மறைந்த விதமும் அனைவர் முன்னிலையிலும் வெளிப்படையாக நடந்தது. ஆனால் அவதூதர் உருவிலான ஸ்ரீ தத்தாத்திரேயர் மட்டுமே தடயமே இல்லாமல் மறைந்து நிற்கின்றார் என்பது அவர் அவதார சரித்திரத்தின் இன்னொரு வியப்பான செய்தி ஆகும்.
ஆன்மீக மகான்கள் தெய்வங்களின் சக்தி குறித்து இப்படியாகக் கூறுகின்றார்கள். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு குறிப்பிட்ட அளவிலான தெய்வீக சக்தி அலைகள் பரபிரும்மனால் தரப்பட்டு உள்ளன. தெய்வீக சக்தி அலைகளை அவர்களது கலசம் என்பதாகக் கூறுவார்கள். ஒவ்வொரு கலசமும் லட்ஷக்கணக்கான தெய்வீக சக்தி அலைகளை உள்ளடக்கிக் கொண்டு இருக்கும். பல தெய்வங்கள், அவரவர்கள் தெய்வ லோகத்தில் பெற்று இருந்த சாபங்கள் காரணமாகவும், வேறு சில காரணங்களினாலும் பூமியிலே அவதரிக்கும். அந்த நிலையில் அவர்களால் தம்மோடு தமது முழுமையான சக்தி கலசங்களை எடுத்துக் கொண்டு அவதரிக்க முடியாது. அதன் காரணம் அவை சாப விமோசனம் பெற மற்றும் வேறு காரணங்களினால் பூமியில் பிறப்பை எடுக்கின்றன எனும்போது சக்திகள் குறைந்தே இருக்கும். அதே நேரத்தில் பரிபூரண அவதார தெய்வங்களால் மட்டுமே தமக்குள்ள முழுமையான தெய்வீக சக்திகளுடன் பூமியில் வாழ்ந்து கொண்டு இருக்க முடியும். இந்த நிலையில் உள்ள ஒரே தெய்வம் ஸ்ரீ தத்தாத்திரேயர் மட்டுமே ஆவார் என்பதினால்தான் முழுமையான தெய்வீக சக்திகளைக் கொண்ட பூர்ண அவதாரமாக, ஒரு அவதூதர் வடிவில் தனித் தன்மையோடு, எந்த குடும்ப சம்மந்தங்களும் இன்றி ஸ்ரீ தத்தாத்திரேயரால் பூமியில் வாழ முடிந்தது.
ஸ்ரீ தத்தாத்திரேயரைத் தவிர்த்து வேறு எந்த தெய்வமும் பூர்ண தெய்வ அவதாரமாக பூமியில் பிறப்பு எடுக்கவில்லை என்பதாகவே ஆன்மீகப் பண்டிதர்கள் கூறுகின்றார்கள் என்பதின் காரணம் ஸ்ரீ தத்தாத்திரேயர் உருவமற்ற பரபிரும்மனின் இன்னொரு தோற்றம் ஆகும்.
பரபிரும்மனின் அவதாரமான ஸ்ரீ தத்தாத்திரேயரின் அவதார மகிமையை உணர்ந்த, சேங்காலிபுரத்தில் பிறந்த மகான் ஸ்ரீ ரமனானந்த ஸ்வாமிகள் என்பவர் காசிக்கு சென்று, அங்கு வாழ்ந்து கொண்டிருந்த, 120 வயதான, படகு ஸ்வாமிகள் எனும் மாபெரும் முனிவரை சந்தித்து அவரிடமிருந்து மகா மந்திர தீட்சையை பெற்றார். தீட்ஷை பெற்று திரும்பக் கிளம்பியவரிடம், தென் இந்தியாவில் ஸ்ரீ தத்தாத்திரேயருக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு படகு ஸ்வாமிகள் கூறினார். அதனால் சேங்காலிபுரத்திற்கு திரும்பிய ஸ்ரீ ரமனானந்த ஸ்வாமிகள் முதலில் சேங்காலிபுரம் ஸ்ரீ ரங்கநாதர் ஆலயத்தில் ஸ்ரீ தத்த ஜெயந்தியை கொண்டாடிய பின்னர், மெல்ல மெல்ல ஸ்ரீ தத்த ஆலயம் அமைக்க முயற்சிகளை மேற் கொண்டபோது, ஒருமுறை ஸ்ரீ தத்தாத்திரேயரும் அவரது கனவில் தோன்றி, பிரஹலதா புஷ்கரணி என்ற பெயரிடப்பட்ட குளத்தின் வடக்குப் பக்கத்தில் உள்ள அரச மரத்தின் கீழ் தனக்கு ஒரு ஆலயத்தை அமைக்குமாறு கூறினாராம். அதைக் கேட்ட ஸ்ரீ ரமனானந்த ஸ்வாமிகள் சற்றும் தாமதிக்காமல் அவதூத குருவான ஸ்ரீ தத்தாத்திரேயரின் கட்டளைப்படி சேங்காலிபுரத்தில் ஸ்ரீ தத்தாத்திரேயருக்கு ஒரு ஆலயத்தை அமைத்து அதற்கு ஸ்ரீ தத்த குடில் எனப் பெயரிட்டார்.
இப்படியாக சேங்காலிபுரத்தில் ஸ்ரீ தத்தாத்திரேயருக்கு நிறுவிய ஆலயத்தில் 1008 பீஜ மந்திர அட்சரங்கள் கொண்ட ஸ்ரீ தத்தாத்திரேயர் யந்திரம், மற்றும் ஸ்ரீ கர்த்தவீர்யாஜுனரின் யந்திரத்தையும் முறைப்படி ஆவாஹனம் செய்து பிரதிஷ்டை செய்தார். இப்படிப்பட்ட யந்திரங்கள் வேறு எந்த ஸ்ரீ தத்தாத்திரேயர் ஆலயத்திலும் கிடையாது என்பது இந்த ஆலயத்தின் மகிமைக்கு ஒரு சான்றாகும்.
ஸ்ரீ தத்தாத்திரேயர் வழிபாட்டிற்கான புனிதமான, தெய்வீக மற்றும் ஆற்றல் மிக்க ஸ்ரீ தத்தாத்திரேய யந்திரம் என்பது என்ன? அதை வழிபடுவதால் ஒருவர் பெறும் நன்மைகள் என்ன? இந்த ஆலயத்தில் இந்த யந்திரத்தை வழிபடும்போது:
• எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் அச்சங்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்
• தன்னம்பிக்கை, ஞானம் மற்றும் அறிவாற்றல் பெருகும்
• நியாயமான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்
• வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் இடையே நல்லிணக்கம் நிலவும்
• முன்னோர் சாபங்கள் விலகும்
• செய்வினை, கண் திருஷ்டி போன்றவை அழியும்
• வாழ்க்கையில் எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகள் விலகும்
• ஸ்ரீ தத்தாத்ரேயரின் ஆசி கிடைக்கும்
அதே போலவேதான் இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள கார்த்தவீர்யார்ஜுன யந்திரம் என்றால் என்ன, அதை வழிபடுவதால் ஒருவர் பெறும் நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளும் முன்பாக ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனன் யார் என்பதை குறித்தும், எதனால் கார்த்தவீர்யார்ஜுன யந்திரத்திற்கு அத்தனை சக்தி உள்ளது என்பதைக் குறித்தும் சிறு அளவில் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனன் ஹேஹாய வம்ச மன்னர் கிருதவீர்யா என்பவரின் மகன். கார்த்தவீர்யார்ஜுனன் முன் பிறவியில் ஸ்ரீ விஷ்ணுவின் கைகளை அலங்கரித்தபடி இருந்த, ஆயிரம் இரும்புத் கம்பிகளை கொண்ட சுதர்சன சக்கரமாக இருந்தவர். ஸ்ரீ விஷ்ணுவின் சாபத்தினால் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனனாக பிறப்பு எடுத்து ஸ்ரீ தத்தாத்திரேயரின் சிறந்த பக்தர் ஆனவர்.
முன் ஒரு காலத்தில் சுதர்சன் என்பவன் மகாவிஷ்ணுவின் சேனையில் முக்கியமான ஒரு வீரனாக இருந்தான். அந்த கால கட்டத்தில் பல்வேறு நிலைகளில் திருமால் பல அரக்கர்களை அழிக்க வேண்டி வந்தது. அந்த சமயங்களில் எல்லாம் திருமாலிற்கு பெரும் துணையாக ஆயுதங்களை ஏந்திய வண்ணம் சுதர்சனே நின்றிருந்தான். யுத்தங்களில் விஷ்ணு வெற்றி பெற்ற பொழுதெல்லாம் தன்னால்தான் அந்த வெற்றி கிடைத்தது போல பிறர் எதிரில் காட்டிக் கொண்டிருந்தான். அதை விஷ்ணுவும் மறைமுகமாக கவனித்துக் கொண்டேதான் இருந்தார். அவன் அப்படி செய்து வந்த பைத்தியக்காரத்தனமான எண்ணத்தை என்றாவது ஒரு நாள் மாற்றிக் கொள்வான் என எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தார். ஆனால் அவன் கர்வத்தைக் குறைத்துக் கொள்ளவும் இல்லை, தான் செய்து வந்த முட்டாள்தனத்தை மாற்றிக் கொள்ளவும் இல்லை. ஒரு நாள் திருமாலுக்கு கோபம் வந்தது. அவனைக் கூப்பிட்டு அனுப்பினார்.
‘என் வெற்றிக்குக் காரணம் நீதான் என்று அனைவரிடமும் தொடர்ந்து பொய் கூறி வரும் உனக்கு இனி என் எதிரில் நிற்கக் கூடத் தகுதி இல்லை. ஓடிப் போ…… நீ செய்த காரியத்திற்கு அடுத்த பிறவியில் கையில்லா முடமாகப் பிறந்து மீண்டும் என்னையே சரணடைந்து என் கையாலேயே மடிவாய்’ என சாபமிட்டார். அந்த சாபத்தினால்தான் இப்போது அவனே கிருதவீர்யரன் தம்பதியினருக்கு குழந்தையாகப் பிறந்திருந்தான்.
கார்த்தவீர்யார்ஜுனன் என்ற பெயர் சூட்டப்பட்ட குழந்தை வளர்ந்து பெரியவனாயிற்று. வம்சாவளிப் பெயரையும் சேர்த்து அவனுக்கு கார்த்தவீர்யார்ஜுனன் என்று பெயர் சூட்டினார்கள். அதோடு கூட அவனுக்கு அர்ஜூனன் என்ற பெயரையும் வைத்தனர். அங்கஹீனத்தைத் தவிற வேறு எந்த குறையும் இல்லை கார்த்தவீர்யார்ஜுனனுக்கு. மிகவும் புத்திசாலியாகவே வளர்ந்து வந்தான். காலப்போக்கில் முடமாக இருந்து வந்த கார்த்தவீர்யார்ஜுனனின் கவலையில் உழன்றே தந்தை கிருதவீர்யனும் இறந்து போனான்.
கிருதவீர்யன் பதவிக்கு வரும் முன்பு கிருதவீர்யனின் முன்னோர்கள் அந்தணர் வம்சத்தினரருக்குப் பெரும் உதவிகள் செய்து இருந்தனர். அவர்கள் கொடுத்த செல்வத்தையும், உதவிகளையும் பெற்ற அந்தணர்கள் மெல்ல மெல்ல நல்ல நிலைக்கு உயர்ந்து ஷத்திரியர்களுக்கு இணையான செல்வந்தர்களாக ஆயினர்.
கிருதவீர்யன் இறந்து சில காலம் கழிந்த பொழுது அந்தண வம்சத்தினர் செல்வம் பெருகி அவர்கள் செழிப்புடன் இருக்க, பல்வேறு காரணங்களினால் ஷத்திரியர்களின் வாழ்க்கை நலிவுற்றது. செல்வத்தை இழந்த ஷத்திரிய வம்சாவளியினர் அந்தண வம்சத்தினரிடம் சென்று தங்களுக்கு உதவுமாறு கேட்டனர். அந்தணர்களோ உதவி செய்ய மனமில்லாது அதற்கு மறுத்து விட்டனர். அதுவே மெல்ல மெல்ல ஷத்திரிய -அந்தணர்களின் பகை துவங்கக் காரணமாயிற்று.
ஷத்திரியர்கள் அந்தணர்களைப் பழி வாங்கத் துவங்கினர். அவர்கள் பதுக்கி வைத்து இருந்த செல்வத்தையும் பறித்துக் கொள்ளத் துவங்கினர். ஷத்திரியர்களின் கொடுமையைத் தாங்க முடியாமல் பல அந்தணர் அங்கிருந்து தப்பி ஓடிச் சென்று இமயமலை அடிவாரங்களில் வசிக்கலாயினர். அந்த நேரத்தில்தான் பிருகு வம்சத்தில் (அந்தணர்களின் இன்னொரு பெயர்) அத்ரி ரிஷியும், ஷத்திரிய வம்சத்தில் கார்த்தவீர்யார்ஜுனனும் பிறந்திருந்தனர். ஷத்திரியர்கள்-அந்தணர்களின் இடையில் ஆரம்பம் ஆன பகை அப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
கிருதவீர்யன் இறந்த பிறகு முடமாகி* பிறந்து இருந்தவனை அமைச்சர்கள் வம்சாவளியின் பெருமையைக் காக்க இராஜ்ய பரிபாலனத்தை ஏற்கும்படி கார்த்தவீர்யார்ஜுனனிடம் வற்புறுத்தத் துவங்க, முடமான தன்னால் ராஜ்ய பரிபாலனத்தை சிறப்பாக நடத்த முடியாது என்ற காரணத்தைக் கூறி இராஜ்ய பரிபாலனத்தை ஏற்க அவன் மறுத்தான். (*முடம் என்பது இங்கு முற்றிலும் செயல் இழந்த நிலை என்பதான அர்த்தத்தில் கூறப்படவில்லை. ஒரு சராசரி மனிதனுக்கு இருக்க வேண்டிய பலத்துடன் கூடிய, உறுதியான கைகால்களை கொண்டு இருக்கவில்லை. அதாவது மெல்லிய கைகால்களுடன் மற்றவர்கள் போல முற்றிலும் இயல்பாக செயல்பட முடியாத, ஆனால் சிறிய அளவில் செயல்படும் கைகால்களைக் கொண்டு இருந்தார் என்பது பொருள்). ஆனால் அவர்களின் வாதங்களைக் கேட்ட பின் அவர்களின் கோரிக்கையைத் தட்ட முடியாமல் கார்த்தவீர்யார்ஜுனன் முடமான நிலையிலும் இராஜ்ய பரிபாலனத்தை ஏற்றான்.
அவன் ராஜ்ய பரிபாலனத்தை ஏற்கும் முன் கிருதவீர்யனின் அமைச்சரவையில் இருந்த கர்கா என்ற முனிவர் அவனிடம் உடல் அங்கஹீனங்களினால் கவலைப்படாமல் இராஜ்ய பரிபாலனத்தை ஏற்ற பின் ஸ்ரீ தத்தாத்ரேயரை சென்று சந்தித்து அவருடைய ஆசிகளினால் விளங்காமல் இருந்த கைகளுக்கு விடி மோட்சம் பெறலாம் என அறிவுறுத்தினார். அவர் கூறிய அந்த அறிவுரைப்படி கார்த்தவீர்யார்ஜுனனும் இராஜ்ய பரிபாலனத்தை ஏற்றப் பின் ஸ்ரீ தத்தாத்ரேயரை தரிசிக்க முடிவு செய்தான்.
அப்பொழுது ஸ்ரீ தத்தாத்ரேயர் மிகவும் பிரபலமான ஒரு யோகப் புருஷராக ரிஷி முனிவர்களால் போற்றப்பட்டு வந்தவர். அதனால் உடனே சென்று அவரை தரிசிக்க விரும்பினான் கைகள் விளங்காத கார்த்தவீர்யன். கர்கா முனிவரிடம் சென்று தன் ஆசையைக் அவரிடம் கூறினான். அவரும் ஸ்ரீ தத்தாத்ரேயர் நர்மதை நதியில் குளிக்க அவர் வருவது உண்டு எனவும், அப்போது அவரிடம் சென்று வணங்கிய பின் தூய மனதுடன் அவரை ஆராதித்தால் நிச்சயமாக அருள் புரிவார் என்று ஆசி கூறி அவனை அனுப்பினார்.
அது போலவே அவரை சந்திக்க வந்த நாரத முனிவரும் நர்மதை நதியில் பத்திரதீப பிரதிஷ்டா என்ற யாகம் செய்யும்படி கார்த்தவீர்யார்ஜுனனுக்கு அறிவுரைக் கூறினார். ஸ்ரீ தத்தாத்ரேயர் விசித்திரமானவர் என்பதால் வந்தவர் அனைவருக்கும் உடனேயே தரிசனம் தந்து ஆசி கூறியதில்லை. வேண்டும் என்றே வந்தவர்களை சோதிக்க எண்ணி அவர்கள் வரும் பொழுது பலமுறை ஆடைகள் கலைந்த நிலையிலும், இறைச்சியை கழுத்தபடி, கள்ளும் குடித்த வண்ணம், பல பெண்களுடன் சல்லாபம் செய்தபடியும் தோன்றுவார். ஸ்வாமி ஆடுவது நாடகமே, நம்மை சோதிக்கின்றார் என விடாப் பிடியாக நின்றால் ஒழிய அவருடைய ஆசிகளைப் பெற முடியாது என கர்கா முனிவரும் மற்றவர்களும் கார்த்தவீர்யார்ஜுனனுக்கு ஸ்ரீ தத்தாத்ரேயரைப் பற்றி கூறி இருந்தனர்.
கார்த்தவீர்யார்ஜுனனுக்கு சுமார் பன்னிரண்டு வயது ஆனபொழுது அந்த முனிவர்களின் அறிவுரைப்படியே நர்மதை நதிக்குச் சென்று குளித்து விட்டு ஹோமம் செய்து முடித்த பின் நர்மதை நதியின் கரையில் ஸ்ரீ தத்தாத்ரேயர் இருந்த இடத்தைத் தேடி அலைந்தான். ஒரு வழியாக மலையின் அடிவாரத்தில் இருந்த ஸ்ரீ தத்தாத்ரேயர் ஆசிரமத்தை அடைந்தான். அவனுக்கு மற்றவர்கள் கூறி அனுப்பியபடியே தத்தரும் அலங்கோலமான நிலையில் இருந்தாலும் அவரை சென்று சரணடைந்து அவருக்கு சேவைப் புரிய தன் மனம் விரும்புவதாகவும் அவருடைய அருள் தனக்குத் தேவை எனவும் பலவாறு அவரை துதித்தான். அவன் வந்த காரணம் தத்தருக்குப் புரியாதா என்ன, ஆனாலும் அவனை சோதிக்க வேண்டும் என அவர் விரும்பினார். அப்பொழுதுதான் அவரிடம் வரும் மற்றவர்களுக்கும் தன்னிடம் வருபவர்கள் தீவிரமான பக்தி கொண்டு வந்தால்தான் அவர்களை தான் ஏற்றுக் கொள்வேன் என்பதைப் புரிய வைக்க முடியும் என்பதை மனதில் கொண்டு நாடகத்தைத் துவக்கினார்.
பாவம், வந்துள்ளவன் கை கால்கள் விளங்காமல் உள்ளவன். அவன் கஷ்டப்படுகின்றானே எனவும் யோசிக்கவில்லை. இதை செய், அதை செய் என ஓயாமல் பல வேலைகளைச் செய்யுமாறு கூறினார். கார்த்தவீர்யார்ஜுனனும் லேசுப்பட்டவன் அல்ல. தன்னால் முடிந்த அளவிற்கு அவர் இட்ட அத்தனை வேலைகளையும் அவருக்குச் செய்யலானான். கால்களைப் பிடித்து விடுவது, மலர்கள் பறித்து வருவது, காய் கனிகளை கொண்டு வருவது என அத்தனை வேலைகளையும் முகம் சுழிக்காமல் செய்தான். நடு நடுவில் ஸ்ரீ தத்தாத்ரேயர் அவனை வாய்க்கு வந்தபடி கண்டபடி திட்டுவார். அனைத்து உணவையும் தானே அருந்தி விடுவார். மிச்சம் இருந்தால் மட்டுமே அவன் உணவு அருந்துவான். இப்படியாக சில காலம் நாடகமாடிக் கொண்டு இருந்த வண்ணம் அவன் மனதை சோதித்துக் கொண்டிருந்தவர், அவனை எத்தனைக் கொடுமைப்படுத்தினாலும் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையையோ பக்தியையோ சற்றும் குறைத்துக் கொள்ளாமல் தனக்கு பணி விடைகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்ததைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவனுடைய அங்கஹீனத்தைக் கண்டு மனமும் வருந்தினார்.
அவனிடம் இருந்த பவ்யமான குணத்தையும், அவனுடைய தந்தையின் பிறவி பற்றியும் புரிந்து கொண்டிருந்த தத்த ஸ்வாமிகள் ஒரு நாள் அவன் முன் சென்று தன் சுய உருவைக் காட்டி அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதை எதிர்பார்த்துக் காத்திருந்தவன்போல தன் இரு கைகளையும் கூப்பிக் கொண்டு அவர் பாதங்களில் விழுந்து வணங்கியபடிக் கேட்டான் ‘ஸ்வாமி, இன்றுதான் என் வாழ்வில் வசந்தம் வீசுகின்ற நாள் என நினைக்கின்றேன். எனக்கு என் குடி மக்களை காப்பாற்றுவது முதல் கடமை. ஆனால் அதை செய்ய முடியாமல் இந்த அங்கஹீனமான கைகள் என்னைத் தடுக்கின்றன. அதனால் அங்கஹீனமானவனாக உள்ள எனக்கு ஆயிரம் கைகளையும், திடமான கால்களும் கொடுக்க வேண்டும். என்னை எதிர்ப்பவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் தோற்று ஓட வேண்டும். என் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே தீமைகள் செய்வோரும், ஏன் அந்த தீமைகளுமே கூட ஓடி ஒளிய வேண்டும் என்றெல்லாம் பல வரங்களைக் கேட்டான்’
ஸ்ரீ தத்தாத்ரேயரும் அவன் கேட்ட அனைத்து வரங்களையும் தயங்காமல் தந்தார். கூடவே அவன் மானிடப் பிறவியில் இருந்தாலும் எங்கும் சென்று வர ஒரு விசேஷமான தேர் ஒன்றையும் அவனுக்குத் தந்தார். கை, காலில்லாமல் பிறந்த கார்த்தவீர்யார்ஜுனனும் இப்படியாக தத்தாத்திரேயரிடம் வரமும் உபதேசமும் பெற்றான். அவற்றைப் பெற்றுக் கொண்டு மனம் மகிழ்ந்து திரும்பி வரும் பொழுது வழியில் ஒரு அசரீரி கூறியது ‘அதிகம் இறுமாப்புக் கொள்ளாதே மூடனே, நீ பெற்ற வரங்களுக்குக் காரணம் அந்தணர்களே என்பதை மறந்து விடாதே. அவர்கள் துணை இன்றி ஷத்திரியன் நீ நாட்டை ஆள முடியாது என்பதைப் புரிந்து கொள்’. இது என்ன அபசகுனமாக இருக்கின்றதே என ஒரு கணம் கலங்கினான் கார்த்தவீர்யார்ஜுனன். சற்று யோசனை செய்தவனுக்கு தோன்றியது. தன் மீது உள்ள பொறாமையினால் வாயு பகவான்தான் அந்த செய்தியை கூறி இருக்கின்றார். எனவே அதை மனதில் இருந்து ஒதுக்கி விட்டு நடந்தார். அதன் பின் கார்த்தவீர்யார்ஜுனன் அடிக்கடி ஸ்ரீ தத்தாத்ரேயரை சென்று வணங்கி அவருடைய ஆலோசனைகளைக் கேட்டறிந்தபடி மிக உயர்வான நிலையில் ராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டிருந்தான்.
கார்த்தவீர்யார்ஜுனன் ஆட்சி செய்த நாட்டின் பெயர் மகிஷ்மதி என்பது. கார்த்தவீர்யன் 85000 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நாட்டை ஆண்டவன் என்பார்கள். இவனுக்கு அர்ஜூனன் என்றும் பெயர் உண்டு. அதனால்தான் ஸ்ரீ தத்தாத்ரேயர் சரித்திரத்தில் ஸ்ரீ தத்தர் அவனை அர்ஜூனா என அழைப்பதைக் காணலாம். அவன் ஆட்சியில் குறைகள் ஒன்றுமின்றி ஜனங்கள் வாழ்ந்து வந்தனர். தேவ முனிவர்கள் அவனிடம் மிகவும் அன்பும் மரியாதையும் வைத்து இருந்தனர்.
தான தர்மங்களை தம் மூதாதையோர் செய்ததை விட அதிகம் செய்தான். அநீதி நடந்த இடங்களுக்குத் தானே சென்று அவற்றை அடக்கினான். எளியவர்களை வலியோர் கொடுமை படுத்துவதைத் தடுத்தான். அப்படிப்பட்ட நிலைமை அவன் ஆண்ட பூமி முழுவதும் இருந்து கொண்டு இருக்க மக்களோ கடவுள் என்றாலே கார்த்தவீர்யார்ஜுனன் என்று சொல்லும் அளவுக்குச் சென்று விட்டனர். இப்படியாக நல்ல ஆட்சி நடத்தி வந்த கார்த்தவீர்யார்ஜுனன் ஸ்ரீ தத்தாத்ரேயரின் அனகாஷ்டமி விரதத்தை நாடு முழுவதும் அனுசரிக்கும்படி கட்டளை இட்டான். நேரம் கிடைத்த பொழுதெல்லாம் தத்தரின் ஆசிரமத்துக்குச் சென்று பல மணி நேரம் அமர்ந்து கொண்டு அவரை பூஜைப்பான். ஆனாலும் மெல்ல மெல்ல மனதுக்குள் இனம் புரியாத வகையில் ஒரு துயரம் தோன்றலாயிற்று. வயது ஏற ஏற வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டது. துறவறத்தை ஏற்று அனைத்தையும் துறந்து விட்டு தத்தரிடமே சென்று விடலாம் என மனதில் ஆசை எழும்பியது. உடனே சென்று ஸ்ரீ தத்தரை பார்க்க வேண்டும் என மனம் விரும்பியது. கிளம்பி விட்டான். ஆனால் இரண்டு நாளாகியும் ஸ்ரீ அவனை உதாசீனப்படுத்துவதை போல தத்தாத்திரேயர் அவனைப் பார்க்கவே இல்லை. அதனால் மனதில் பெரும் துயருற்றவன் அவரைத் தோத்திரம் செய்யலானான்.
ஸ்ரீ தத்தாத்திரேயரோ அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் வேறு இடத்தில் சென்று அமர்ந்தார். எங்கிருந்தெல்லாமோ வந்திருந்த முனிவர்கள், ரிஷிகளுடன் சேர்ந்து கொண்டு நதிக் கரைக்குச் சென்றார். திரும்பி வந்து தன் இருக்கையில் அமர்ந்தார். ஒரு மூலையில் கண்களில் நீர் வழிந்து ஓடியவண்ணம் ஏக்கத்துடன் அவரையே பார்த்தபடி நின்று கொண்டு இருந்த கார்த்தவீர்யார்ஜுனனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
சில மணி நேரம் கழிந்ததும் எதேச்சையாக அவன் பக்கம் திரும்புவதை போல பாவனை செய்து கொண்டு திரும்பிய ஸ்ரீ தத்தர் அவனை தன் அருகில் அழைத்தார். என்ன வேண்டும், என செய்கையிலேயே கேட்டதுதான் தாமதம் பொல பொல என்று கண்களில் ஆறு போல கண்ணீர் வழிய அவர் காலடியில் விழுந்தான் கார்த்தவீர்யார்ஜுனன். தனது மனதில் இருந்த துயரங்கள் அனைத்தையும் கூறினான்.
அவனுக்கு விதமான உபதேசங்களையும், வாழ்க்கையைக் குறித்த போதனைகளையும் செய்தபின் அருகில் இருந்த ஒரு புனிதமான மலையில் தனிமையாக உள்ள குகைக்குள் சென்று தன்னை தியானித்தபடி தவத்தில் இருக்குமாறு கூறினார். இடை இடையே எழுந்து வந்து சில சந்தேகங்களைக் கேட்டவன் சந்தேகங்களை தீர்த்த பின்னர் மீண்டும் அங்கேயே சென்று தவத்தில் இருக்குமாறு கூறினார். காலம் கடந்தது. ஒருநாள் அவனை அழைத்து மீண்டும் நாட்டிற்கு சென்று அரசாளுமாறு கூறி அனுப்பினார்.
அவன் அழிவு காலம் நெருங்கத் துவங்க, கார்த்தவீர்யார்ஜுனன் தன்னையும் அறியாமல் தவறான வழிகளைக் கடை பிடித்தபடி அரசாண்டான். ஸ்ரீ தத்தாத்ரேயர் தந்திருந்த விசேஷமான தங்கத் தேரில் ஏறி தன் மனதிற்குத் தோன்றியபடி மூவுலகமும் செல்லத் துவங்கினான். ஒரு நேரத்தில் ஒரு முறை இந்திரன் தன் மனைவியுடன் உல்லாசமாக இருந்த பொழுது அங்கு சென்று அவனை நையாண்டி செய்தான். தன்னை எவராலும் அழிக்க முடியாது என தத்தர் வரம் அளித்துள்ளதாக நினைத்தான். இதை எல்லாம் கண்டு மனம் வெதும்பிய தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று கார்த்தவீர்யார்ஜுனன் செய்து வந்த அக்கிரமங்களை பற்றி விவரமாகக் கூறினார். விஷ்ணு அவர்களை அமைதிப்படுத்திக் கூறினார் ‘அஞ்ச வேண்டாம் அவன் அழிவு காலம் தொடங்கி விட்டது’. இன்னும் சில காலம் கழிந்தது.
வேறு ஒரு நாட்டுடன் அவன் தொடுத்திருந்த யுத்தத்தில் வெற்றிப் பெற்ற பின் ஒரு பெரும் சேனையுடன் தன் நாட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த கார்த்தவீர்யார்ஜுனன் வழியில் இருந்த காட்டில் மாபெரும் தபஸ்வியான ஜமதக்கினி முனிவரைக் கண்டு அவருக்குத் தன் வணக்கத்தைத் தெரிவிக்கச் சென்றான். வந்திருந்த சேனைகளுக்கும் களைப்பும் பசியும் எடுக்கத் துவங்க சாப்பிட உணவு எங்கு கிடைக்கும் எனத் தேடலாயினர்.
தன்னைக் கண்டு ஆசி பெற்றுச் செல்ல வந்தவனை அமரச் சொல்லிய ஜமதக்கினி முனிவரும் ‘களைப்புத் தீர உணவு அருந்தி விட்டுப் போ’ என்று கூறிவிட்டு தன்னிடம் இருந்த நந்தினி எனும் காமதேனு பசுவின் மூலம், போட்டார். அனைவரும் எங்கிருந்து வந்தது உணவு, எங்கிருந்து வந்தது உணவு என தெரியாமல் அதிசயத்துடன் பார்த்து பிரமித்து போனாலும் அனைவரும் வயிறாற உணவு அருந்தினர். வந்திருந்த அனைவருமே முனிவரின் பெருந்தன்மையை பெரிதாகக் போற்றிப் புகழத் துவங்க கார்த்தவீர்யார்ஜுனன் மனதில் தோன்றிய பொறாமை வெறுப்பாக மாறியது. விதி தன் வேலையை வேகமாகச் செய்யத் துவங்கியது.‘இத்தனை பெரிய சாம்ராஜ்யம் இருந்தும் நான் செய்ய முடியாத ஒரு வேலையை கேவலம் காட்டில் உள்ள ஒரு முனிவன் செய்து விட்டானே. இந்த பசு மட்டும் நம்மிடம் இருந்தால் நாட்டில் பஞ்சமும் பட்டினியும் உருக் குலைந்துப் போய் விடுமே’ என எண்ணியவன் அந்த பசுவை தனக்கு விற்று விடுமாறு பலவிதமான ஆசைகளைக் காட்டியும் அவர் அந்த தெய்வப் பசுவை தர மறுத்ததினால் அதை கட்டாயமாக ஓட்டிச் செல்லும்படி தன் சேனைக்கு கட்டளை இட்டு விட்டான். முனிவர் அத்தனை பெரிய சைனியத்துடன் எப்படி சண்டையிட முடியும்? இடிந்து போய் அமர்ந்தார். பேச முடிவில்லை. கண்களில் நீர் கடல் போலக் கொட்டியது. பேச்சு மூச்சே நின்று விட்டது போல அமர்ந்த இடத்திலேயே எழுந்திருக்க முடியாமல் கிடந்தார். அந்த தெய்வீகப் பசுவும் தன் தந்தையை விட்டுப் போகின்றோமே எனக் கதறியவாறு அந்த சைனியர்கள் இழுத்துச் செல்ல கண்ணீர் விட்டபடி நடை பிணமாக நடந்து செல்லலாயிற்று.
இதெல்லாம் நடந்த பொழுது முனிவரின் மகன் பரசுராமன் அங்கு இல்லை. காட்டிற்கு சென்று இருந்தவர் திரும்பி வந்தார். தன் தந்தை பேச முடியாமல் அமர்ந்து இருந்ததைக் கண்டார். என்ன ஆயிற்று, என்ன ஆயிற்று எனப் பல முறை கேட்டும் பதில் கூற முடியாமல் பிரமை பிடித்தபடி அமர்ந்து இருந்தவரைக் கேட்டுப் பிரயோசனம் இல்லை என்பதால் இடிந்து போய் அமர்ந்து இருந்த மற்றவர்களையும் உலுக்கிக் கேட்டதில் நடந்த விவரத்தைக் கூறினார்கள் அவர்கள்.
இரத்தம் கொதித்தது பரசுராமனுக்கு. தன் தந்தையை அவமானப்படுத்தி விட்டுச் சென்று விட்ட கார்த்தவீர்யார்ஜுனன் திமிரை அடக்காமல் இருப்பது தவறு என நினைத்தவர் தன் கோடாலியை எடுத்துத் தோள் மேல் வைத்துக் கொண்டார், பிற அம்பு, ஆயதங்களையும் எடுத்துக் கொண்டு கார்த்தவீர்யார்ஜுனனை தேடி சென்று அந்த பசுவை மீண்டும் தன்னிடம் ஒப்படைத்து விடுமாறு கத்தினார்.
இப்படி பயம் இல்லாமல் என்னை அழைக்கும் அவன் யார், எங்கிருந்தோ வந்து என்னையே மிரட்டும் அளவு துணிவு கொண்டவன் என் நாட்டிலும் இருக்கின்றானா என கார்த்தவீர்யார்ஜுனன் நினைத்துக் கொண்டிருந்தபோதே மீண்டும் இடி முழக்கம் போல ‘பசுவை விடுகின்றாயா இல்லையா’ என கர்ஜித்தார் பரசுராமர்.
‘ஷத்திரியனான நான் இதற்கெல்லாம் பயந்து பணிந்து விட்டால் இராஜ்யத்தை எப்படி ஆளுவது? வந்து உள்ளவன் தனியாகத்தான் வந்து உள்ளான். அவனுடன் சைனியமும் இல்லை. தனியாக வந்தவனை சேனை மூலம் அடக்குவது கோழைத்தனம் என நினைத்தவன் வந்திருப்பவனின் பலம் தெரியாமல் ‘பசுவை விட முடியாது’ என்று கூறி விட்டு ‘உனக்கு உயிர் மீது ஆசை இருந்தால் ஓடிப் போ’ என திமிருடன் கூறினான். போர் வீரர்களோ ஓகோ……. ஓகோ எனச் சிரித்தவாறும் எள்ளி நகைத்தபடியும் குதித்தாட நெருப்புப் போல ஆனார் பரசுராமர். ‘அற்பப் பதரே என்னையா எள்ளி நகையாடுகின்றாய்……. வா, வந்து மோதிப் பார்’ என யுத்த கோஷம் போட்டார் பரசுராமர்.
யுத்தம் துவங்கியது. நொடிப் பொழுதில் பாதி சேனை அழிந்தது. திடுக்கிட்டான் கார்த்தவீர்யார்ஜுனன். என்ன நடக்கின்றது, இத்தனை நாட்களும் எனக்கு நிகர் எவனும் இல்லை என நினைத்து இருந்தேன். இவன் யார், எங்கிருந்து வந்து என்னிடம் இத்தனை பராக்கிரமமாக யுத்தம் செய்கிறான். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும், எனக்கு தத்தர் துணை இருக்கையில் கவலை எதற்கு என எண்ணியவாறு உக்கிரமாகப் போரிடத் துவங்கினான். அம்பு மழை பொழிந்தபடி இருவரும் போரிட்டனர். பரசுராமன். கார்த்தவீர்யார்ஜுனன் கைகளை வெட்ட வெட்ட புதிது புதிதாக கைகள் முளைத்துக் கொண்டே இருந்தன.
அந்த நேரத்தில் கார்த்தவீர்யார்ஜுனன் தான் செய்த பிழையை நினைக்கலானான். ‘தவறுதான், ஒரு அந்தணனின் பசுவை அநியாயமாக பிடுங்கிக் கொண்டு வந்து தவறு செய்து விட்டேன். ஓரு எளியவனின் சொத்தை பறிப்பதை தத்தர் கூட அனுமதிக்க மாட்டார். மேலும் எனக்கு நிகரானவன் பிறக்கவில்லை என்றுதான் நினைத்தேன். இறுமாப்புடன் இருந்திருக்கின்றேன்’. ஸ்ரீ தத்தர் வரம் கொடுத்தபோது அவர் கூறியது நினைவுக்கு வந்தது. ‘உன்னை விட வலியவன் மட்டுமே உன்னைக் கொல்ல முடியும்’. ‘அப்படி என்றால் எவனோ ஒரு பலசாலி பிறக்க இருந்தது அவருக்குத் தெரியும், இல்லை நான் செய்த பாவத்திற்கு தண்டனை அளிக்க அவரேதான் யாரையோ அனுப்பி உள்ளார்.’ இப்படி நினைத்துக் கொண்டு இருக்கையில் அடுத்து வஷிஷ்டர் கொடுத்த சாபம் மனதில் தோன்றியது.’ உன்னை ஒரு அந்தணனே அழிப்பான்’
தவறு செய்தாகி விட்டது. இனி யோசனை செய்து என்ன பயன். வந்துள்ளவன் பராக்கிரமசாலிதான். இல்லை எனில் என் முன் இத்தனை நேரம் தாக்கு பிடிக்க முடியுமா, ஆயுதங்கள் தீர்ந்து போன நிலையில் மல்யுத்தம் செய்தபடி இருவரும் கடும் யுத்தம் புரிந்தனர். முடிவாக பரசுராமர் பரமேஸ்வரனைத் துதித்துக் கொண்டே பிரம்மாஸ்திரத்தை ஏவினார். ஸ்ரீ தத்தரின் மற்றோரு பகுதி சிவனல்லவா. கார்த்தவீர்யார்ஜுனனை அழிக்க வேண்டியது தத்தரின் கடமை. இல்லை எனில் பூர்வ ஜென்மப் பாவத்தைப் போக்குவது எப்படி? வசிஷ்டரின் சாபத்துக்கும் ஒரு நல்ல முடிவு வேண்டும், ஏன் எனில் அவர் மாபெரும் முனிவர். ஆகவே அனைத்தும் ஒன்று சேர்ந்து கொள்ள கார்த்தவீர்யார்ஜுனன் ஆயுள் முடிவிற்கு வந்தது.
அவன் செய்த நற்குணங்களினால் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனன் முடமாக பிறந்து ஸ்ரீ விஷ்ணு பகவானின் அம்சத்தை உள்ளடக்கி இருந்த ஸ்ரீ தத்தாத்திரேயரின் சீடனாக மாறி, அவருடைய அருளால் ஆயிரம் கைகளைப் பெற்று, பலமிக்கமவனாக ஆனாலும் மீண்டும் ஸ்ரீ விஷ்ணு பகவானின் அம்சமாக இருந்த பரசுராமரின் கைகளில் மரணத்தை சந்தித்தார். அந்த நாடகத்தையும் ஸ்ரீ தத்தாத்ரேயரே நடத்தி முடித்தார். மரணம் அடைந்த ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனன் ஸ்ரீ தத்தாத்திரேயரின் பாதங்களில் கலந்து மீண்டும் சுதர்சன சக்கரமாக மாறி பகவான் ஸ்ரீ விஷ்ணுவிற்கு சேவை செய்யச் சென்றார்.
ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனன் மரண வாயிலில் இருக்கையில் ஸ்ரீ தத்தாத்திரேயர் அவர் முன் தோன்றி ‘அவர் கடவுளுடன் இருந்த நிலையை இழந்து மீண்டும் அதே நிலையை எப்படி அடைந்தாரோ’ அதை போலவே பக்தர்கள் ‘தாம் இழந்த பொருள், பெருமை, சொத்துக்கள் மற்றும் அதை போன்றவற்றை மீண்டும் அடைய வேண்டும்’ என்பதற்காக அவரது இந்த ஆலயத்தில் வந்து ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனாவிற்கு வழிபாடு செய்து அவருடைய மந்திரத்தை உச்சரித்தால், இழந்த அனைத்தையும்- ‘பொன், பொருள், புகழ், உறவினர்கள் என அனைத்தையும் மீண்டும் பெறுவார்கள்’ என வரம் அளித்து கௌரவித்தார். அந்த வரம் உண்மையில் சுதர்சன சக்கரத்திற்கு ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனாவின் பெயரால் கிடைத்தது ஆகும்.
இத்தனை சக்தி வாய்ந்த யந்திரங்கள் என்பதினால்தான் ஸ்ரீ ரமனானந்த பிரம்மேந்திர ஸ்வாமிகளினால் ஸ்ரீ தத்த குடீர ஆலயத்தில் 1008 பீஜ மந்திர அட்ஷரங்களை கொண்ட ஸ்ரீ தத்தாத்திரேய யந்திரம், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுன யந்திரம், குபேர யந்திரம் மற்றும் காயத்ரி யந்திரம் என நான்கு யந்திரங்கள் ஸ்ரீ தத்தாத்திரேயரின் சன்னதிக்குள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன.
இந்த ஆலயத்தின் இன்னொரு மகிமை என்ன என்றால் ஸ்ரீ ரமனானந்த பிரம்மேந்திர ஸ்வாமிகள் 1967 ஆம் ஆண்டில் ஜீவ சமாதியை அடைந்தார். அவருடைய ஜீவ சமாதி ஸ்ரீ தத்தாத்ரேயரின் சன்னதியின் நேர் எதிரில் அமைந்து உள்ளது என்பதினால் அந்த ஜீவ சமாதியையும் சேர்த்து சன்னதியை சுற்றி வர வேண்டும். அப்படி பிரதர்ஷணம் செய்பவர்கள் மன நோயிலிருந்து விடுபடுவார் என்று கூறப்படுகிறது.
ஸ்ரீ தத்த யந்திர வழிபாட்டைப் போலவே, ஸ்ரீ தத்தாத்திரேயரின் பக்தர்கள் புனித நூலான குரு சரித்ராவைப் படித்தோ, பாராயணம் செய்தோ பலன் அடைகின்றார்கள். ஸ்ரீ தத்தாத்திரேயரின் வழிபாடு துவங்கிய ஆரம்ப காலங்களில் பெரும்பாலான ஸ்ரீ தத்தாத்திரேயரின் சிலைகள் ஒற்றை முக தோற்றத்தில் இருந்தன. ஆனால் மெல்ல மெல்ல அவருடைய உண்மை வடிவமான மூன்று முகங்களைக் கொண்ட ஸ்ரீ தத்தாத்திரேயரின் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடலானார்கள். மேலும் அவரது பாதுகைகள், நெல்லி-அத்தி மரங்கள் அடிவாரங்களில் அவரை வழிபாடு செய்தார்கள். ஸ்ரீ தத்த குடீரத்தில் பஞ்சலோகம் என்று அழைக்கப்படும் ஐந்து உலோகங்களால் ஆன ஸ்ரீ தத்தாத்திரேயரின் சிலை நிறுவப்பட்டு அதன் அடியில் அவருடைய யந்திரம் மற்றும் அவரது சிஷ்யர் கார்த்தவீர்யார்ஜுனாவின் யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. பொதுவாக நில சம்பங்கி அல்லது வெண்மையான மல்லிகள் மலர்களைக் கொண்டே ஸ்ரீ தத்தாத்திரேயர் வழிபடப்படுகிறார். அவரது சந்நிதானத்தை குறைந்தது ஏழு அல்லது ஏழு மடங்காக (7, 14, 21, 28,49 என) இருக்கும் வகையில் சுற்றுவதே சிறப்பாகும்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் (டிசம்பர் மாதத்தில்) ஸ்ரீ தத்த குடீரத்தில் ஸ்ரீ தத்தாத்திரேய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. பல்வேறு புனித பூஜைகள் நடைபெறுகின்றன. புகழ் பெற்ற தொட்டில் உற்சவம் (தொட்டில் திருவிழா) மற்றும் பாலூட்டும் வைபவம் (பால் கொடுக்கும் விழா) ஆகியவையும் நடைபெறுகின்றது. மழலை செல்வம் அற்றவர்கள் இங்கு வந்து குழந்தை வரம் வேண்டிக் கொண்டு ஸ்ரீ தத்தாத்திரேயருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.