முன்னுரை

பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாற்றை நான் எதேர்ச்சையாக எழுதத் துவங்கினேன்.   நான் சிறுவயதில் அந்த மஹானை பலமுறை சந்தித்து உள்ளேன். நான் பிறந்து வளர்ந்தது அனைத்துமே சென்னை மயிலாப்பூரில்தான். அவர் நிறுவிய அகில இந்திய சாயி சமாஜம் மற்றும் ஸ்ரீ ஷீரடி  சாயி பாபாவின் ஆலயம் எங்கள் வீட்டின் அருகில் இருந்து ஐந்து நிமிட நடையில் இருந்தது. நாங்கள் இருந்த வீட்டிற்கும், ஆலயத்திற்கும் இடையே ஓடும் கூவம் நதி   (பக்கிங்ஹாம் கானால்) மீது ஒரு பாலம். பாலத்தை தாண்டினால் அந்த பக்கம் முதலில் இருந்தது சாயிபாபாவின் ஆலயம்.  பாலத்தின் இந்த பக்கம் இருந்த  தெருவின் முதல் வீடு எங்களுடையது.
அவர் யார் என்பது அப்போது எனக்குத் தெரியாது; ஆலயத்தில் இருந்து   ஐந்து நிமிட நடையில்  பி.எஸ். ஹைஸ்கூல் எனப்பட்ட எனது பள்ளி இருந்தது;  ஆகவே  பரீட்ஷைக்கு போகும் முன்னால் ஆலயத்திற்கு சென்று அவரை வணங்கி விட்டு அவர் தரும் வீபூதியை (‘உதி’ என்று நினைக்கின்றேன்) நெற்றியில் இட்டுக் கொண்டு செல்வோம்.  மற்றபடி ஸ்ரீ சாயி பாபாவின் ஆலயத்திற்கு இன்றைக்கு வரும் கூட்டத்தைப் போல எவரும் அன்றெல்லாம் வந்ததைக் கண்டது இல்லை. வியாழன் கிழமைகளில் மட்டும்  ஓரளவு கூட்டம் கூடும், மற்றபடி தினமும் ஒரு சிலர் மட்டுமே வருவார்கள்.
நாங்கள் ஸ்ரீ சாயி பாபாவின் சன்னதியில் சென்று ஸ்ரீ சாயிபாபா சிலையின் பாதத்தைத்  தொட்டு  வணங்கி விட்டு செல்வோம். பிற்காலத்தில் (சுமார் 20  ஆண்டுகளுக்கு முன்னால்தான்)  ஸ்ரீ சாயி பாபாவை குறித்து  நான் அறிந்து கொண்டபோது  பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் யார் என்பது புரிந்தது.  கடைசியாக சென்னை சென்று இருந்தபோது ஸ்ரீ சாயி பாபாவின் ஆலயத்தின் பின்னல் இருந்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் சமாதிக்கு சென்று வணங்கி விட்டு வந்தேன்.
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் ஆலயத்தில் ஸ்ரீ சாயி பாபாவின் சன்னதியின் முன்பாக  இருந்த பெரிய கூடத்தில் சற்று தள்ளி ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு இருப்பார். மெல்லிய துணியில் வெள்ளை வெளீர் என்ற அரைக்கை (ஸ்லீவ்ல்ஸ்) பனியன் போன்ற சட்டை. வெள்ளை வேஷ்டி  உடுத்தியபடி இருப்பார்.
ஆலயத்திற்கு வருகை தந்த பெரும்பாலோனோர் அவர் அருகில் சென்று அவரை நமஸ்கரித்து விட்டு செல்வதைக் பார்த்து உள்ளேன். அப்போதும் அவர் யார் என்பது எனக்குத் தெரியாது. காரணம் எங்கள் வீட்டில் இருந்த அனைவரும் காஞ்சி பரமாச்சார்யாரையும், அம்பாளையும் மட்டுமே  ஆராதித்துக் கொண்டு இருந்ததினால் மற்ற தெய்வங்களை பற்றியோ, மகான்களை பற்றியோ அதிகம் தெரியவில்லை.
அந்த ஆலயத்தின் உள்ளேயே ஒரு அச்சுக் கூடம் இருந்தது. அதில் இரண்டு ட்ரெடில் மெஷின் (Treadle Machine), மற்றும் கையில் அச்சு கோர்த்து அச்சடிக்கும்  அச்சகம் இருந்தது என்று நினைவில் உள்ளது. ஆலயத்தின் வெளி சுவரை ஒட்டி  இலவச சாயி மருத்துவ மனை. சாயி ஆலயத்தின் இடது புறம் ஒரு பெரிய கொட்டகை போட்ட  கூடத்தில் ‘சாயி கான சபா’ எனும்  பெயரில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் கூடம்  இருந்தது.  1960  ஆம் ஆண்டில்  இருந்த ஆலயத்தின் நிலை இதுதான். ஆனால் இன்று நான் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளைக் குறித்து அவர் வரலாற்றை எழுதுவது பெருமையாக உள்ளது. அவர் ஆசிகள் எனக்கு இருக்கும் என்று நினைக்கின்றேன். இன்று உலகமெல்லாம் புகழ்ந்து போற்றி வணங்கப்படும் ஷீரடி  சாயிபாபாவின் புகழை முதன் முதலில் இந்தியாவின் பல பாகங்களிலும் கொண்டு சென்ற பெருமை  சென்னையில் சாயி சமாஜத்தை உருவாக்கிய பூஜ்யஸ்ரீ  ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளையே சேரும்.
ஷீரடி  ஸ்ரீ  சாயிபாபா புகழ் பெறத் துவங்கிய கால கட்டத்தில், 1940  ஆம் ஆண்டுகளில், மராட்டிய மானிலத்தை தாண்டி பிற பகுதியில் இருந்த  மக்களிடையே ஷீரடி  ஸ்ரீ சாயிபாபா அறிமுகம் ஆகாமல் இருந்த நிலையில், 1956 ஆம் ஆண்டு முதல் ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் விழிப்புணர்வு எனும்  தனது ஆன்மீகப் பயணத்தை துவக்கி இந்தியாவின் தெற்கு தேசப் பகுதிகளில் ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின்  பெருமையை     எடுத்துச் சென்ற பெருமை பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளை மட்டுமே சேரும்.   அவரே சென்னையில் அகில இந்திய சாயி சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கி பல இடங்களிலும்   ஷீரடி  சாயியின் ஆலயங்கள் எழக் காரணமாக இருந்தவர்; ஷீரடி  சாயிபாபாவின் புகழை இந்தியா முழுவதும் பரப்பியவர்.
அப்படிப்பட்ட மேன்மையான மகானின் வாழ்க்கை வரலாறோ, துன்பங்களும் சோகங்களும் நிறைந்தவை. ஒரு மனிதன் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்ளக் கூடிய மிக முக்கியமான பாடம், இந்த உலக வாழ்க்கை என்பது  வலியால்  நிறைந்தது என்பது மட்டும் அல்ல, அதை மகிழ்ச்சியாக மாற்றுவது அவனால் சாத்தியமாகும் என்பதேயாகும்.
இந்த வாழ்க்கையின் தத்துவத்தை பூஜ்யஸ்ரீ நரசிம்ம  ஸ்வாமிகள் உணர்ந்து இருந்ததினால்தான் வாழ்க்கையின் சோகங்களையும் துயரங்களையும் பொருட்படுத்தாமல், முதல் கட்ட வாழ்க்கையில்  அடையாளம் தெரியாத தனது ஆன்மீக குருவை தேடித் தேடி அலைந்து கொண்டிருந்தவருக்கு ஷீரடி  சாயிபாபாவே குருவான கதையும், அவருடன் பயணித்த கதையும் ஆன்மீக பக்தர்களின் மனதுக்கு இனிமையானது, சுகம் அளிக்கக் கூடியது
அடையாளம் தெரியாத ஷீரடி  ஸ்ரீ சாயிபாபாவைக் காண, கலில் ஜிப்ரான்  பாடியதைப் போலவேதான் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் பயணித்து உள்ளார். கலில் ஜிப்ரான்  பாடினார் – ‘அன்பின் குரல் உன்னை அழைக்கும்போது  அதைப் பின் தொடர்ந்து செல். அன்பு உன்னை வழி நடத்தும். பாதைகள் கரடு முரடாகவும், நடப்பதற்குக் கடினமாகவும் இருந்தாலும், அன்பின் மெல்லிறகுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வாள் உன்னைத் துளைத்தாலும், அன்பின் சிறகுகளுக்குள் நீ அடைக்கலம் புகுவாய்’.
நான் எழுத ஆரம்பித்த சிறிய அளவிலான கட்டுரை ஒரு புத்தக வடிவில் உருவெடுத்து  விட்டதைக் கண்டு நானே அதிசயிக்கிறேன். அதுவும் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் விருப்பமோ என்னவோ தெரியவில்லை.
முன்னுரையை முடிக்கும் முன்னர் முக்கியமான ஒரு விஷயத்தைக் குறித்து நான் பதிவு செய்தாக வேண்டி உள்ளது. நான் எழுதிய இந்த புத்தகத்தை முழுவதுமாக படித்துவிட்டு அதில் காணப்பட்ட எழுத்துப் பிழைகள், சில வார்த்தை பிரயோகங்களின்  பிழைகள் மற்றும்  பிற புத்தகங்களில்  காணப்பட்ட  செய்திகளுடன் என்னுடைய கட்டுரையில் காணப்பட்ட ஒரு சில முரண்பட்ட வரலாற்று செய்திகளை எல்லாம்  எடுத்துக் காட்டி இந்த புத்தகம் எந்த பிழையும் இல்லாமல் வெளியாக வேண்டும் என்பதில் பெருமளவு அக்கரைக் காட்டிய, வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்மணிக்கு நன்றி கூறியே ஆக வேண்டும். அந்த பெண்மணி யார்?
நான் தூங்கிக் கொண்டிருந்த இயற்கையைப் பார்த்தேன்; அப்போது ஆழ்ந்த சிந்தனையுடன் ஒரு பரந்த மற்றும் எல்லையற்ற விஷயத்தின் யதார்த்தத்தைக் கண்டுபிடித்தேன்; எந்த சக்தியும் உரிமைக் கோரவோ, செல்வாக்கு செலுத்தவோ, செல்வத்தை கொடுத்து வாங்கவோ முடியாத ஒன்று அது; காலத்தின் கண்ணீரால் அழிக்கவோ, துக்கத்தால்  அழித்து விடவோ முடியாது அது; ஆமாம் அதுவே மனதில் ஆழமாக பதிந்துள்ள உண்மையான பக்தி பிரவாகம் என்பதாகும்.
வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தாலும், காலமெல்லாம்   ஷீர்டி சாயிபாபாவின் தூய்மையான பக்தி  பிரவாகத்தை  மனதிலும், மூச்சிலும் ஏந்தியவாறு,  நினைவெல்லாம் ஷீர்டி சாயிபாபாவே என்று வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி ஆஷாலதாவிற்கே எனது புத்தகத்தை திருத்தி அமைக்க உதவியதிற்கு  நான் நன்றி செலுத்த வேண்டும். இந்த புத்தகத்தைக் கூட அவருக்கே அர்பணிப்பதுதான்  சரியானதாக இருக்கும் என்றே கருதி அதை நிறைவேற்றுகிறேன்.

பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள்

தமிழ்நாட்டில் ஒரு பணக்கார பிராமணர் குடும்பத்தில் பிறந்த மஹான் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள், மனிதர்களை மனிதர்களாக மதிக்கப் பழகியவர். அவரே தான் தனது குருவைத் தேடி அலைந்த கால கட்டத்தின் பயணத்தைக் குறித்து ஒரு கட்டத்தில் நெஞ்சுருகி  தனது எண்ணத்தை வெளிப்படுத்தி  இருக்கின்றார்   ‘எனது வாழ்க்கைப் பயணத்தின் முதல் கட்டத்தில் நான் அடையாளம் தெரியாத எனது சத்குருவைத் தேடியவண்ணம் இடமிடமாக, அனைத்து திக்குக்களிலும், திசைகளிலும் சுற்றியும் அலைந்து கொண்டிருந்தேன். போகாத ஊர் இல்லை, செல்லாத இடங்கள் இல்லை; அங்கங்கே பல மகான்களையும், சத் புருஷர்களையும் சந்தித்தேன்; அங்கங்கே நான் சந்தித்தவர்களில்  அதிகமாக பேசுபவரிடமிருந்து மெளனத்தையும், சகிப்புத்தன்மை அற்றவர்களிடம் இருந்து  சகிப்புத் தன்மையையும், இரக்கம் அற்றவர்களிடம் இருந்து இரக்கத்தையும் கற்றுக் கொண்டேன். அவர்களே எனது குரு என நினைத்து, ஆனந்தமான மன நிலையில்  அவர்களிடம்  சரண் அடைய நினைத்தபோது, எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது; என்னால் அவர்களிடம் இருந்து நற் போதனைகளையும், ஆன்மீக  பாடங்களை மட்டுமே   பெற முடிந்ததே ஒழிய, என்னை அவர்களது சிஷ்யர் என ஏற்றுக் கொண்டு ஆன்மீக விழிப்புணர்வை கொண்டிருக்க முடியவில்லை’.
1874 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று, தமிழ்நாட்டின் கோயம்பத்தூர் மாவட்டத்தில்  ஈரோட்டில்,  பவானி எனும் சிற்றூரில், மிகவும் ஆசாரமான ஒரு  அந்தணர் குடும்பத்தில் பிறந்தவரே பூஜ்யஸ்ரீ  நரசிம்ம ஸ்வாமிகள் ஆவார். அவருடைய தந்தையின் பெயர் திரு B.வெங்கடகிரி ஐயர் மற்றும் தாயாரின் பெயர் திருமதி அனந்த லட்சுமி அம்மாள் என்பதாகும்.
மூன்று நதிகளான-வாணி நதி, காவேரி நதி  மற்றும் அமுத நதி  ஒருங்கே சங்கமிக்கும் தக்ஷிண த்ரிவேணி நதி சங்கமம் எனப்படும் பவானி நதி என்பது ஈரோட்டில் இருந்து சுமார் 12 மைல் தொலைவிலும் சேலத்தில் இருந்து சுமார் 60 கிலோ தொலைவிலும் உள்ள சிற்றூர்  ஆகும்.  அது கம்பளித் தொழிலுக்கு பெயர் பெற்ற நகரம் என்பதினால் அதை கம்பளி நகரம் என்பார்கள்.
கொங்கு மாவட்டத்தில்  உள்ள ஏழு சிவன் ஆலயங்களில் ஒன்றான சங்கமேஸ்வரர் ஆலயம் அங்கு உள்ளது. அதற்கு வருகை தரும் பக்தர்கள், நதிக்கரையில் மூதாதையர்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து சங்கமேஸ்வரர் கோயிலில் பிரார்த்தனை செய்கிறார்கள்.  பவானி – சத்தியமங்கலம் சாலையில் அருள்மிகு பண்டார அப்பச்சி பகவதியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தின்  கருவறையின் நடுவே நின்ற கோலத்தில் பகவதி அம்மன் அருள் பாலிக்கின்றார். செல்லியண்டியம்மன் ஊரின் காவல் தெய்வமாக காட்சியளிக்கிறாள். இவ்வளவு சிறப்பு மிக்க பவானி நகரை ஆன்மீக நகரம் என்றே அழைக்க வேண்டும். அதனால்தான் அந்த இடத்தில் நமது பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி அவதாரம் எடுத்து உள்ளார்.
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் பெற்றோர்கள் பெரும் பண வசதி படைத்தவர்கள்; செல்வந்தர்கள். அந்த ஊரில் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் தந்தை திரு B.வெங்கடகிரி ஐயர், ஒரு பிரபலமான வழக்கறிஞர். பவானி ஆற்றின் பக்கத்தில் பெரிய நிலப் பரப்பில் பல மரங்கள் இருந்த தோப்புடன் கூடிய இடத்தில் அவருடைய வீடு அமைந்திருந்தது.  வீடு, நிலபுலன்கள், தோட்டம், மாடுகள், மாட்டுக் கொட்டகை என அனைத்தும் அவரது பங்களாவில் இருந்தன.
ஸ்ரீவத்ச கோத்திரத்தை சேர்ந்த அந்த தம்பதியினர் வெகு காலமாக தமக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று பவானி தேவியிடம் பிரார்த்தனை செய்து வந்தார்கள். அதே பிரார்த்தனையுடன் அவர்கள் பல ஆலயங்களுக்கும் சென்று பிரார்த்தனை செய்து  வந்தபோது, ஒருமுறை அவர்களை சந்தித்த ஒரு மகான், அவர்களது பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்றால் அவர்கள் காஞ்சிபுரத்திற்கும், திருப்பதிக்கும் இடையில் அமைந்து இருந்த,   3-ம் நூற்றாண்டை சேர்ந்த,  108 திவ்ய தேசங்களில், 65-வது திவ்ய தேசமான சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயத்திற்கு சென்று வழிபடுமாறு கூறினாராம். தாம்பத்ய பிரச்சினை, குழந்தையின்மை, திருமணத் தடை நீங்க பக்தர்கள் அந்த ஆலயத்திற்கு சென்று  பிரார்த்தனை செய்கின்றார்கள்.
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியின் பெற்றோர்கள் அந்த மஹான் கூறிய அறிவுரையை மனதார ஏற்றுக் கொண்டு, சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயத்திற்கு சென்று அங்கு அவரிடம் தமக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று மனம் உருகி, பிரார்த்தனை செய்து விட்டு ஊருக்கு திரும்பினார்கள். அவர்களது வேண்டுகோளை சோளிங்கர் யோக நரசிம்மர்  நிராகரிக்கவில்லை;   அடுத்த சில மாதங்களில்   திருமதி அனந்த லட்சுமி அம்மாள் கருவுற்றார். அந்த காலங்களில் பெண்கள் கருத்தரித்து இருந்தாலும், பிரசவ காலம்வரை தம்முடைய  வேலைகளை தானே செய்து கொண்டுதான் இருப்பார்கள். அதனால்தான் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியின் பிறப்பே ஒரு விசித்திரமான சூழ்நிலையில் அமைந்தது.
ஒருநாள்,   திருமதி அனந்த லட்சுமி அம்மாள்  வீட்டின் பின்புற முற்றத்தில் இருந்த மாட்டுக் கொட்டகையை நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்தார்.   பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி, தான் மற்ற மானிடர்கள் போன்றவராக இருக்கப் போவது இல்லை, வித்தியாசமான தெய்வீக குழந்தை என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் தன்னுடைய பிறப்பு அமைய வேண்டும் என்று  நினைத்தாரோ என்னவோ, மாட்டுக் கொட்டகையை நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்த திருமதி அனந்த லட்சுமி அம்மாளுக்கு பிரசவ வலி போன்று மனதில் தோன்ற, நதிகளின் காற்று இதமாக உடல் மீது வீசிக் கொண்டு இருக்க, ஆராவாரம் ஏதும் இல்லாத சூழ்நிலையில்,  மாட்டுக் கொட்டகையின் வெளிப்புறத்தில், அகண்ட ஆகாயத்தின் கீழே முற்றத்தில் அமர்ந்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே, அங்கேயே,  தெய்வீக குழந்தை பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி பிறப்பை எடுத்து  விடுகின்றார்.
ஸ்வாமிகள் 1874 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதியன்று மாலை 6.15திற்கு, வான் வெளியின் கீழே, யாருமற்ற, ஆராவாரம் இல்லாத சூழ்நிலையில் பிறந்தாராம்.  அவர் பிறந்த தினம் ஸ்ராவன் பஞ்சமி தினம் ஆகும்.   ஸ்ராவன் பஞ்சமி என்பது ஸ்ராவன மாதத்தின்  ஐந்தாவது நாளாகும், அது   நாக பஞ்சமி தினம் என்றும் கர்நாடகாவில் பசவ பஞ்சமி என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்ராவன் பஞ்சமியில்  நாக தெய்வங்களை வணங்குவது வழக்கம். ஆகவே இதை மிகப் புனிதமான நாளாகவே கருதுவார்கள்.  ஆகவே பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் பிறந்த தினம் மிக புண்ணியமான தினமாகவே கருதப்பட்டது.
அவர் பிறந்தபோது அவருடைய தாயார் கூச்சல் இடவில்லை, குழம்பவில்லை, ஆரவாரம் செய்யவில்லை. உங்களுடைய தாயோ,  என்னுடைய தாயோ நம்மை பிரசவிக்கையில் அனுபவித்த மரண வேதனையை எண்ணி பயந்திருந்தால்,  நிச்சயமாக நீங்களும் நானும் பிறந்திருக்கவே மாட்டோம். ஆனால் அப்படி எல்லாம் தன்னுடைய தாயாருக்கு வேதனைகள் தரக் கூடாது என்று எண்ணித்தான்  எந்த விதமான வலிகளையும் தனது தாயாருக்கு கொடுக்க விரும்பாத பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள், அமைதியாக தாயின் உடலில் இருந்து அவதரித்தார்; அவருடைய  தாயாருக்கு அமைதியாக பிரசவம் ஏற்பட்டு விடுகின்றது.  எத்தனை பாக்கியவான் பாருங்கள் ஸ்வாமிகளின் பெற்றோர்கள்! எந்த விதமான பிரசவ வலியும் இன்றி, யாருடைய துணையும் இன்றி, தனிமையான சூழ்நிலையில் மகன் பிறக்கிறார், தாயார் பெரும் மகிழ்ச்சி அடைந்து குழந்தையோடு வீட்டுக்குள் சென்று விடுகின்றார். பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி பிறந்தவுடன் அவரது பெற்றோர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. சோளிங்கர் யோக நரசிம்மரை வேண்டியதின் பயனாக கிடைத்த  குழந்தை என்பதற்காக அந்த குழந்தையின் எடைக்கு எடை தங்கமும், வெள்ளியும் சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயத்திற்கு கொடுத்தார்களாம். அப்படி என்றால் எத்தனை பெரும் செல்வந்தர்களாக அவர்கள் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்!
‘இறைவனுக்கு கொடுக்க நினைப்பதை இல்லாதவர்களுக்கு கொடுங்கள், ஏனென்றால் கடவுள் யாரிடமும் கையேந்தி யாசகம் கேட்பதில்லை’ என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள். ஆகவேதான் ஒரு பக்கம் இறை பணியை செய்தவண்ணம்  இருந்தாலும், இன்னொரு பக்கம் தமது சமுதாயக் கடமையையையும்  செய்யத் தவறியது இல்லை. ஏழைகளின் சந்தோஷத்தில் கடவுளின் அருள் கிடைக்கும் என்பது உண்மை அல்லவா. பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் பெற்றோர்கள் தாராள மனப்பான்மைக் கொண்டவர்கள். பெரும்  செல்வந்தர்களாக இருந்தாலும் தமது வீட்டு தோட்டத்தில் விளையும் காய்கறிகள், கனிகள், தேங்காய், மாங்காய் போன்ற அனைத்தையும்   தமக்கு தேவையான அளவில்  மட்டுமே வைத்துக் கொண்டு மீதியை தமது வீட்டில் பணி புரியும் வேலையாட்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்து விடுவார்களாம்.   அவர்களுக்கு பாரபட்ஷம் என்ற எண்ணம் சிறிதளவும் கிடையாது;  கொடையாளிகளாகவே வாழ்ந்து வந்துள்ளார்கள், அப்படிப்பட்டவர்கள் தெய்வத்திற்கு கொடுப்பதில் எங்கே தயக்கம் காட்டுவார்கள்  என்பதை எடுத்துக் காட்டவே இந்த சிறிய உதாரணம்  கூறப்பட்டு உள்ளது. பெற்றோர்களின் பரோபகார செயல்பாடுகள்    பிற்காலத்தில் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் குணத்திலும் வெளிப்பட்டது.
பிறந்த குழந்தை ராம அவதாரத்தின் புனர்வசு நட்ஷத்திரத்தில், கடக ராசியில் பிறந்ததினால்,  பெயர் சூட்டும் விழா வைத்து,  ராமநாதன் என்று நாமகரணம் செய்தார்கள். ஆனால் அதே சமயத்தில் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி, சோளிங்கர் யோக நரசிம்மர் ஆலயத்தில் சென்று பிரார்தித்ததின் பலனாகவே பிறந்தார் என்ற நம்பிக்கையும் வலுவாக இருந்ததினால், குழந்தைக்கு நரசிம்மர் என்று இன்னொரு பெயரையும் சூட்டினார்கள். இப்படியாக பிறந்த குழந்தை ராமநாதன் மற்றும் நரசிம்மன் என்ற இரண்டு பெயர்களை பெற்றது.
குழந்தையின் ஜாதகத்தை கணித்த ஜோதிடர்கள் அந்த குழந்தை பிற்காலத்தில் பெரிய மகானாக திகழ்வார் என்ற கருத்தையும் கூறினார்களாம். பூஜ்யஸ்ரீ  நரசிம்ம ஸ்வாமிக்கு மூன்று வயதானபோது, அதாவது 1877 ஆம் ஆண்டு, அவருடைய தாயார் திருமதி அனந்த லட்சுமி அம்மாள் இன்னொரு மகனை பெற்று எடுத்தாள். அந்த குழந்தைக்கு லக்ஷ்மணா என்ற பெயரை சூட்டினார்கள். முதலாவது குழந்தையான பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிக்கு ராமனின் பெயர், இரண்டாவது குழந்தைக்கு ராமபிரானின் சகோதரர் லக்ஷ்மணனின்  பெயர்.
அந்த காலங்களில் சிறு குழந்தைகளுக்கு இடுப்பிலும் கழுத்திலும் சில நகைகளை போட்டு வைத்திருப்பது  வழக்கம்.  அவற்றில் சில திருஷ்டி கழிக்கவும் போடப்பட்டு இருக்கும். இது அந்த காலத்தில் நிலவிய ஒரு பழக்கம் ஆகும். அதுவே குழந்தைகளுக்கு ஆபத்தாகக் கூட முடிந்து விடும் என்பதை அவர்கள்  அறிந்து கொள்ளவில்லை.  இதே காரணத்தினால்தான் பெரும் செல்வந்தர்களாக இருந்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின்  பெற்றோர்களும்  தமது இரண்டு குழந்தைகளுக்கும் நிறைய நகைகளை போட்டு இருந்தார்கள்.
நிறைய நகைகளை அணிந்து கொண்டிருந்த    இரண்டாவது மகன் லக்ஷ்மணன்,  1880 ஆம் ஆண்டு மூன்று வயதை எட்டியபோது, அந்த குழந்தையை யாரோ கடத்திச் சென்று விட்டார்கள். கடத்திச் சென்று விட்டதும் அல்லாமல் அதன் உடலில் இருந்த நகைகளை பறித்துக் கொண்டு அந்த குழந்தையை கொன்று வீசி விட்டுப் போய் விட்டார்கள். ராமபிரானின் வாழ்க்கை சரித்திரத்தைப் போலவேதான் ராம, லக்ஷ்மணர்களில் முதலில் இளையவர் லக்ஷ்மணர் மறைந்து விடுகின்றார். அதன் பின்னர்தான் ராம பிரானும் மீதம் இருந்த சகோதரர்களுடன் மறைந்து விடுகின்றார். இது ராமாயணத்தில் காணப்படும்  கதை.  இளைய மகன் லக்ஷ்மணன் மறைவு குடும்பத்தினருக்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.
‘உங்கள் வாழ்க்கையில் சூரியன் மறைந்து விட்டது என்று நீங்கள் அழுது கொண்டே இருந்தால், உங்கள் கண்ணீர் நீங்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதைத் தடுத்து விடும். ஆகவே அழுவதை நிறுத்தி விட்டு அடுத்த செயலை செய்யுங்கள்’ என்ற தத்துவத்தைப் போல, மறைந்து விட்ட மகனின் சோகம் மனதில் நிறைந்து இருந்தாலும், அது முதல் உயிருடன் இருந்த  பூஜ்யஸ்ரீ  நரசிம்ம ஸ்வாமியை மிகவும் கவனமாக கவனித்துக் கொள்ளத் துவங்கினார்கள்.  அவரை எங்குமே தனிமையில் செல்ல விட்டது இல்லை.
அப்படி இருந்தும் 1889 ஆம் ஆண்டு, ஐந்து வயதான குழந்தை பூஜ்யஸ்ரீ  நரசிம்ம ஸ்வாமிகள்  ஒருநாள் பவானி ஆற்றங்கரை அருகில் விளையாடிக் கொண்டு இருக்கையில் நதிக்குள் கால் இடறி விழுந்து விட்டார். அதை வயலில் வேலை பார்த்து வந்த வேலைக்காரர் கவனித்து விட்டு ஓடி வந்து, குழந்தையை ஆற்றில் இருந்து வெளியில் எடுத்து வந்து காப்பாற்றினார். அது மிகப் பெரிய கண்டமாக இருந்தது என்றாலும் அதில் இருந்து அவர் தப்பி விட்டார். அவரது ஜாதகத்தை ஆய்வு செய்ததில்  மூன்று வயதில் வரவிருந்த  கண்டத்தில் இருந்து அவர் தப்பி விட்டால் எண்பது ஆண்டுகள் வரை அவர் வாழ்வார் என்று இருந்ததாம்.
அது மட்டும் அல்ல அந்த ஜோதிடர் ‘அந்த குழந்தை பிற்காலத்தில் பெரும் புகழ் பெற்றவராக, பலரது நன்மைக்கும் பாடுபடும் மாமனிதராக விளங்குவார் என்றும், அவர்கள் தற்போது வசிக்கும் வீடு ராசியானது இல்லை என்பதினால், வேறு இடத்திற்கு குடி போகுமாறும்’ அறிவுரை கூறினாராம். மேலும் அவர்களது மகன் சந்நியாசி போன்ற வாழ்க்கையில் கூட செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் சூசகமாக தெரிவித்தாராம்.
‘வாழ்க்கை என்பதே ஒரு விசித்திரமான கலவைதான். நாம் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும், அதைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும், பின்னர் அதை மேம்படுத்த வேண்டும்’ என்ற உண்மையை பிரதிபலிப்பதை போல அனைத்து நிலைமைகளையும் நன்கு  ஆராய்ந்து பார்த்த பின் ஸ்வாமியின் தந்தையான திரு வெங்கடகிரி ஐயரும் அவர் மனைவியும்  ‘ஏற்கனவே ஒரு குழந்தையை பறி கொடுத்து விட்டோம், அந்த  சோகமே   இன்னும் மறைய மறுக்கின்றது;  இங்கிருக்கும்வரை அது தொடரும், ஆகவே ஜோசியர் கூறியபடி இடத்தை மாற்றிக் கொள்ள வேறு ஊருக்கு சென்று விடலாம்’ என்ற மனநிலையில் பவானியில் அவர்கள் வசித்து வந்த வீட்டை விற்று விட்டு சேலத்திற்கு குடி பெயர்ந்து சென்று விட்டார்கள்.
அங்கு செல்லும் முன்னர் அவர்கள் சங்கமேஸ்வரர் மற்றும் பவானி தேவியின் ஆலயங்களுக்கு சென்று, தம்முடைய மகன்  ராமநாதன் (பூஜ்யஸ்ரீ  நரசிம்ம ஸ்வாமி) எந்த காலத்திலும் சன்யாசியாக மாறி விடக் கூடாது என்ற வேண்டுதலை வைத்தார்கள். அதற்காக  அவருக்கு பதிலாக தாம்  இருவருமே சன்னியாச வாழ்க்கையில் இருப்பதாக சபதம் செய்து   கொண்டு சேலத்திற்கு கிளம்பிச் சென்றார்கள்.

பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின்  இளமைப்  பருவம்
 
பூஜ்யஸ்ரீ  நரசிம்ம  ஸ்வாமிகளின் பெற்றோர்கள் மிகவும் பணக்காரர்கள் என்பதினால்,  பவானியில் இருந்தவரை, குழந்தை பருவத்தில் இருந்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுக்கு வீட்டிலேயே ஆசிரியரை வரவழைத்து பாடங்களை போதிக்க வைத்தார்கள். இப்படியாக துவக்க கால படிப்பு அமைந்து இருந்தது.  பவானியில் வீட்டில் ஆசிரியர் மூலம் சிறு வயதில் கல்வி கற்று வந்திருந்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள், அவரது பெற்றோர்கள் சேலத்திற்கு சென்று வசிக்கத் துவங்கியதும் அங்கு ஒரு பள்ளியில் சேர்ந்தார்.
குழந்தை பூஜ்யஸ்ரீ  நரசிம்ம ஸ்வாமிகள்  வளர்ந்து சிறுவனாகியதும் மிகவும்  சூட்டிகையான  இளைஞராகவே வளர்ந்து வரலானார். அவர் நல்ல புத்திசாலி மட்டும் அல்ல, துறுதுருப்பானவர், அனைவருடனும் நன்கு பழகி வந்தார். வீட்டில் அவருக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார்கள். கேட்டதெல்லாம் கிடைத்தது, எதற்கும் பஞ்சம் இல்லை என்ற வாழ்வு முறையில்  வளர்ந்து வந்தாலும் அதனால் அவருக்கு தலை கனம் ஏற்படவில்லை. ஒற்றையாக இருக்கும் பூ, ஏராளமாக இருக்கும் முட்களைப் பார்த்து பொறாமைப் பட வேண்டியதில்லை. இந்த உண்மையை  பூஜ்யஸ்ரீ  நரசிம்ம ஸ்வாமிகள் சிறு வயதிலேயே உணர்ந்திருக்க வேண்டும் என்பதின் அடையாளமாக பிற்காலத்தில் அவர் தலை கனமில்லாத  வாழ்க்கை நெறி முறையை கடைபிடித்து  வந்தார்.
பூஜ்யஸ்ரீ  நரசிம்ம ஸ்வாமி தமது நண்பர்களுடன் கலகலப்பாக பழகுவார்; அனைவருடன் சமமாகவே பழகுவார்,  விளையாடுவார் என்றாலும் மற்றவர்கள் மீது ஓரளவு ஆதிக்கம் செலுத்துபவராகவே இருந்தாராம்.  அந்த குணம் அவருக்கு இயற்கையாகவே அமைந்து இருந்தது. அதனால் மற்றவர்களை அடக்கி ஆள்பவராக திகழ்ந்தார். எவரோடும் வலு சண்டைக்கு போனது இல்லை, ஆனால் வலிய வந்த சண்டையைக் கண்டு விலகி ஓடவும் இல்லை என்ற மனப்பான்மையுடன் இருந்தார்.
‘உங்கள் அன்பினை மற்றவர்களுக்கு  அள்ளிக் கொடுங்கள், ஆனால் உங்கள் சிந்தனைகளை அவர்கள் மீது திணிக்காதீர்கள். ஏனெனில், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையிலான எண்ணங்கள் உண்டு’ என்பதை அவர் நன்கு உணர்ந்தவர் என்பதினால் மற்றவர்கள் மீதும் தனது கருத்தை திணிக்க மாட்டார், மற்றவர்களையும் தன் மீது ஆதிக்கம் செலுத்துவதை  விரும்பியதில்லை  என்பதினால் தனக்கென தனித் தன்மையைக் கொண்டவராகவே இருந்தார்;  பூஜ்யஸ்ரீ  நரசிம்ம ஸ்வாமிகளின் மன நிலை மற்றவர்களை விட பெருமளவில் மாறுபட்டு இருந்ததினால், படிப்பில் சிறந்து விளங்கினார்; மனிதனுக்கு பெருமை அவன் எதை அடைகிறான் என்பதில் இல்லை, அவன் எதை அடைய விரும்புகிறான் என்பதில்தான் உள்ளது என்பதினால் தாம் கற்றவற்றை எல்லாம் தானே மனதில் ஆராய்ந்து, அதன் பிறகே  பார்த்து மனதில் ஏற்றிக் கொண்டார்.   சிறு வயதிலேயே எளிதில் உணர்ச்சி வசப்படுபவர் என்பதினால் அதிகம் யாருடனும் நெருங்கிப் பழக முடியாமல் இருந்தார்.  இயற்கையிலேயே சுறுசுறுப்பான இளைஞராகவே இருந்ததினால் அவரால் எத்தனை கடினமான வேலைகளையும் எளிதில் செய்ய முடிந்தது, வேலையை ஒரு பளுவாக நினைக்கவில்லை, எத்தனை வேலைக் கொடுத்தாலும் முகம் சுளிக்காமல் செய்வாராம்.
அவருடைய பெற்றோர்கள் பக்திமான்களாக  விளங்கி வந்தார்கள். ‘தெய்வ சன்னதியில் சென்று தெய்வங்களின் பாதத்தில் பூக்களை வைக்க ஆலயத்திற்கு செல்லும் முன், உங்கள் சொந்த வீட்டை தெய்வீக வாசனையால்  நிரப்புங்கள். தெய்வத்தின்  பலி பீடத்தின் முன் விளக்கு  ஏற்றி வைக்க ஆலயத்திற்கு செல்லும் முன்னால் உங்கள் இதயத்திலிருந்து பாவ இருளை அகற்றுங்கள்’ என்ற தத்துவத்தை நன்கு புரிந்து கொண்டிருந்தவர்கள் அவர்கள் என்பதினால்தான் அவர்கள் அடிக்கடி தமது வீட்டில், பூஜை,  சத்சங்  போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்கள். அதில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொள்வார்கள். அவற்றைத் தவிர பண்டிகை நாட்களிலும் விசேஷ தினங்களிலும் பெரும் பண்டிதர்களையும், சாது சன்யாசிகளையும் வீட்டிற்கு வரவழைத்து கௌரவிப்பார்கள். ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவு கொள்ளாது.
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் தந்தையான   திரு வெங்கடகிரி ஐயருக்கு நன்கே தெரியும் கருவறை இருளுக்கும் கல்லறை இருட்டுக்கும் நடுவில் உள்ள வெளிச்சமே வாழ்க்கை என்பதினால் அந்த வெளிச்சத்தை தருபவன் யாராக, எந்த ஜாதியை சேர்ந்தவனாக இருந்தால் என்ன? அவன் மனிதனாக இருக்க வேண்டும்  என்ற எண்ணத்தைக் கொண்டவராக  இருந்து அந்த காலத்திலேயே சனாதன தர்மத்தைக் கடை பிடித்தார்.
அவருக்கு ஜாதி பேதங்கள் கிடையாது. ஆகவே பிராமண சாதுக்கள், மஹான்கள், சன்யாசிகளை போன்றவர்களை தமது வீட்டிற்கு அழைத்ததை பிற மதத்தினரையும் அவர்கள் வீட்டிற்கு அழைப்பார்.  அப்போது சிறுவனான பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகளும்  உட்கார்ந்தபடி அவர்களது விவாதங்களையும் போதனைகளையும் ஆழ்ந்து கவனித்தவாறு  கேட்டுக் கொண்டு இருப்பார்.  அதனால்தானோ என்னவோ, முஸ்லீம் மற்றும் இந்து மதத்தினர் இருவரையும் ஒன்றாகவே பாவித்து வந்திருந்த  ஷீரடி  பாபா பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுக்கு குருவாக ஆனார் என்பது வியப்பான செய்தி அல்ல.
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியின்  பெற்றோர்களே அவருடைய பிற்கால வாழ்க்கை நெறிமுறைக்கு வழிகாட்டியாக அமைந்து இருந்தவர்கள்.  அவர்களது ஊரில் எந்த ஒரு சாது அல்லது சன்யாசி வந்தாலும் வெங்கடகிரி ஐயரின் இல்லத்திற்கு விஜயம் செய்யாமல் திரும்பியதில்லை என்ற அளவில் சேலத்தில்  அவர்களது இல்லத்தின் நிலை இருந்தது. மாபெரும் மகான்களான சுரைக்காய் ஸ்வாமிகள் மற்றும்  சிருங்கேரி சங்கர மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ    நரசிம்ம பாரதி மஹா ஸ்வாமிகள் கூட அவரது இல்லத்திற்கு வருகை தந்துள்ளார்கள். அவர்தான் அந்த குடும்பத்தின் ஆச்சாரியார் ஆவார். அவர்களை தமது  வாழ்நாளில் சந்தித்தது பெரிய  பாக்கியம் என்பதாக பிற்காலத்தில்  பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி கூறுவாராம்.  அதனால்தானோ என்னவோ  இளம் வயதிலேயே பூஜ்யஸ்ரீ நரஸிம்ஹ ஸ்வாமிக்கும்  தாமும் அவர்களைப் போல சாதுவாக , சன்யாசியாக  மாற வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஆழமாக பதியலாயிற்று.
குறிப்பாக சிருங்கேரி ஸ்ரீ சங்கர மடத்தைச் சேர்ந்த நரசிம்ம பாரதி மஹா  ஸ்வாமிகளின் பளபளத்த கண்களைக் கவனித்தவர் அதில் எதோ ஒரு தெய்வீக காந்தம் இருப்பதை உணர்ந்தார். அவர் தரையில் கால்கள் படாமல் நடந்து சென்றதைக் கவனித்த  பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள், கண்டிப்பாக  சிருங்கேரி சங்கர மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ நரசிம்ம பாரதி மஹா ஸ்வாமிகள்  சாதாரண மானிடர் அல்ல, அவர் சாதாரண மானிடர்களுக்கு அப்பாற்பட்டவர்  என்ற எண்ணத்தை மனதில் வலுப்படுத்திக் கொண்டார். சிருங்கேரி சங்கர மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ நரசிம்ம பாரதி மஹா ஸ்வாமிகள் வருகை அவருக்கு ஒரு புதிய அனுபவமாக அமைந்து இருந்தது.
சுரைக்காய் சித்தர் என்பவர் 1700 ஆம் ஆண்டு அவதரித்து  இருநூறு ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்தவர், ஆங்கிலேய அரசாங்கத்தினரின் அனுமதியுடன் ஜீவ சமாதி அடைந்தவர்.  அவரது பிறப்பு குறித்த  தகவல்கள் எதுவும் சரிவர கிடைத்கவில்லை. அவர்தான் பூஜ்யஸ்ரீ  ஸ்வாமிகளின் பெற்றோர்கள் நெருங்கிப் பழகி வந்திருந்த சுரைக்காய் ஸ்வாமிகள்  என்று அழைக்கப்பட்டவரா என்று  தெரியவில்லை. அவரோடு பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகளும் நெருங்கிப் பழகி வந்துள்ளார் என்பது மட்டும் தெரிகின்றது.
பூஜ்யஸ்ரீ  ஸ்வாமிகளின் பெற்றோர்கள் நெருங்கிப் பழகி வந்திருந்த ‘சுரைக்காய் ஸ்வாமிகள்’ காளஹஸ்தியில் இருந்தவர் எனக் கூறப்படுகின்றது.  ஆனால் ‘சுரைக்காய் சித்தர்’  நாராயணவனத்தில் இருந்ததாக கூறுகின்றார்கள்.  இருவரும் ஒரே மகானாக இருக்கலாம் என்பதின் காரணம் நாராயணபுரம் மற்றும் காளஹஸ்தி இரண்டுமே ஆந்திர பிரதேசத்தில்தான் உள்ளன. செய்திகளின்படி பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகள்,  அன்றைய சிருங்கேரி சங்கர மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ நரசிம்ம பாரதி மஹா ஸ்வாமிகள்  மற்றும்  சுரைக்காய் ஸ்வாமிகள் என்கின்ற இரண்டு மகான்களைத்தான் மானசீகமாக   ஏற்றுக் கொண்டு இருந்துள்ளார்  என்பது தெரிகின்றது . பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுக்கு தெரியும் மஹான்களுடனான அனுபவங்களை சேர்த்து வைத்துக் கொள், அது பிற்காலத்தில் உதவும் என்பது.
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் தாயார், ஸ்வாமிகளின் குழந்தைப் பருவம் முதலே தெய்வீக பாடல்களை பாடிக் காட்டுவார்.  முக்கியமாக ஸ்வாமிகளுக்கும்  அந்த பாடல்களை பாடுமாறு பயிற்சி அளிப்பார். தினமும் வீட்டில் துளசி மாடத்தில் இருந்த துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றுமாறு கூறுவார். துளசி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி ஆராதிப்பது மனதில் அமைதியான சூழ்நிலையையும், ஆன்மீக பற்றுதலையும் வளர்க்கும் என்பது பொதுவான நம்பிக்கை ஆகும். தினமும் வீட்டில் துளசி மாடத்தில் இருந்த துளசி செடிக்கு தண்ணீர் விட்டு வந்ததினாலோ என்னவோ பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியின் மனதில் தெய்வீக எண்ண அலைகள் எப்போதும் வீசிக் கொண்டே இருந்திருக்க வேண்டும்.
1892 ஆம் ஆண்டு பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுக்கு வயது எட்டு ஆயிற்று. அந்த காலங்களில் பிராமணர்கள் தமது பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே பூணூல் போடுவதை ஒரு முக்கியமான நியமமாகவே வைத்துக் கொண்டு இருந்ததினால் எட்டு வயதான ஸ்வாமிகளுக்கு பூணூல் போட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பூணூல் அணிவது என்பது ஒரு ஆன்மீக ரீதியில் அடுத்த கட்ட வாழ்க்கைக்கு தன்னைத் தயார்படுத்திக்  கொள்ளும் நிலை ஆகும். பூணூல் போட்ட பின்னர் ஸ்வாமிகள் சந்தியாவந்தனம் செய்வது மற்றும் காயத்ரி மந்திரங்களை உச்சரிப்பது போன்ற நியமங்களை விடாமல் கடைபிடித்தார்.
அதன் பின்னர் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள்  ஒரு  வேத பாடசாலையில் சேர்க்கப்பட, அந்த பாட சாலையில் ருத்ரம், சமகம், ஸ்ரீ சூக்தம்  மற்றும் புருஷ சூக்தங்களை ஓதுவதை கற்றறிந்தார். அதே சமயத்தில் வீட்டிலேயே திருமதி அலமேலம்மா என்பவரிடம் இருந்து  விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் லலிதா சஹஸ்ரநாமம் போன்ற ஸ்லோகங்களையும் கற்று அறிந்து கொண்டார்.  இது   சிறு வயதிலேயே ஆன்மீகத்தின் மீதான பற்றை அவருக்குள் ஏற்படுத்தியது.
‘தமது தாயார்தான் முதன் முதலில் தன்னை முழுமையான ஆன்மீகவாதியாக்கியவர். அதனால்தான் அவர் தமக்கு முழுக்க, முழுக்க தெய்வீக பாடல் மற்றும் ஸ்தோத்திரங்களையும்  கற்றுக் கொடுத்து உள்ளார்’ என்பதாக பூஜ்யஸ்ரீ  நரசிம்ம ஸ்வாமிகள் பின்னாளில் ஒரு நண்பரிடம் குறிப்பிட்டாராம். அப்படிப்பட்ட ஆன்மீக பாடங்களை போதனை செய்து வந்திருந்தாலும், இடை இடையே அவற்றில் பொதிந்து இருந்த தத்துவங்களையும், அர்த்தங்களையும் எளிய முறையில் எடுத்துரைத்தே வந்திருக்க வேண்டும். இல்லை எனில் போதிக்கப்படும் ஒவ்வொன்றின் அர்த்தங்களும்  புரியாமல் போய் விடும். ஒரு இயந்திரம் போல பெறப்படும் ஸ்லோகங்கள் மனதில் நிலைக்கலாம், ஆனால் எதற்காக அதை தெரிந்து கொள்ள வேண்டுமோ    அதன் அர்த்தமே இல்லாமல் போய் விடும் என்பது பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுடைய தாயாருக்கு தெரிந்திருக்க வேண்டும்.
இவற்றை எல்லாம் பார்க்கையில்  பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் தாயார் ஒரு வகையில் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின்  அறிவாற்றல் பெருகியதற்கு  ஒரு  அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார் என்றே கருத தோன்றுகிறது. அறிவாற்றல் என்பது  போதிக்கப்படும் பாடங்களை மனதில் நிலை நிறுத்திக் கொள்வது மட்டும் அல்ல,  அவற்றில் உள்ள தத்துவங்களை புரிந்து கொண்டு வாழ்க்கையில்  சிக்கலான சூழ்நிலைகளை நாம் எப்படி சமாளிக்கிறோம் என்பதையும், ஒரு தொலை நோக்குப் பார்வையுடன் முடிவெடுக்கும்  நமது திறமையையும் வெளிப்படுத்துகின்றது.
இதில் சிக்கல்களைத் தீர்க்கும் திறன், படைப்பாற்றல் மற்றும் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தன்னிலை படுத்திக் கொள்ளும் நமது  தன்மை ஆகிவை அனைத்தும் உள்ளன. அறிவாற்றல் பெருகும்போது அனுபவங்களும் பெருகுகின்றன.  அனுபவங்கள் என்பது தனியாக வருவதில்லை. வாழ்க்கையில் நாம் அனைத்தையும் இழந்து நிற்கும்போது நம்மிடம் எஞ்சி நிற்கும் தத்துவங்களே அனுபவங்கள் ஆகின்றன.
பிறருக்கு உதவி செய்யும் குணம் என்பது ஒரு நல்ல பண்பு. இது மற்றவர்களின் வாழ்க்கையில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். உதவி செய்பவர் மன நிறைவு பெறுவதோடு, உதவி பெறுபவருக்கும் ஒரு மகிழ்ச்சி கிடைக்கும் என்ற தத்துவத்தை நன்கு உணர்ந்திருந்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியின் பெற்றோர்கள் எப்போதுமே மற்றவர்களுக்கு உதவி செய்தவண்ணம்  இருந்ததினால்தானோ என்னவோ,  சிறு வயதிலேயே  ஸ்வாமிகளுக்கு, தம்மை அண்டியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம்  வேரூன்றி ஆலமரம் போல  வளரத் துவங்கி இருந்தது.
‘நாம் பிறந்ததே சேவை செய்வதற்குத்தான், பிறப்பு எடுத்த எவரும் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பது கிடையாது, அவரவர் வாழ்ந்து, வளர்ந்த சூழ்நிலை, அவரவருக்கு இருந்த பொருளாதார நிலைகள் என அனைத்தையும் உருவாக்கியவை அவரவர்களது  கர்ம வினைகளே.  அந்த நிலையே  மானிடப் பிறவி எடுத்தவர்களில் பேதங்களை உருவாக்கி உள்ளன’ என்ற எண்ணம் அவருக்குள்  உருவாகி  இருந்தது.  அவருக்கு சேவை மனப்பான்மை  மனதில் ஆழமாக விதைத்தவர் அவரது தாயார் ஆவார். அந்த அம்மையார் யாருக்கு உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் செய்பவர். பொருளால் மட்டும் அல்லாமல் உடல் உழைப்பாலும் பிறருக்கு சேவை செய்தவர்.
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் அவரது சிறு வயதிலேயே அவரது தாயார்  பிறருக்கு சேவை செய்வதை கவனித்து வந்துள்ளார். ஒருமுறை பக்கத்து வீட்டுப் பெண்மணி ஒருவருக்கு உடல் நலமின்றி போய் விட, ஸ்வாமிகளின் தாயார் அவரது வீட்டிற்குச் சென்று அவர்களுக்கான சமையலை செய்து கொடுத்து விட்டு வந்ததை கவனித்து உள்ளார். அத்தகைய சேவை மனப்பான்மை அனைவருக்கும் இருக்க முடியாது  என்பதை பெருமையாக பிற்காலத்தில்   பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் கூறி உள்ளார்.  மேலும் தனக்கு ஏற்பட்டுள்ள ஆன்மீக வலிமை, சேவை மனப்பான்மை மற்றும் பிறருக்கு உதவிடும் பரோபகாரம் போன்ற அனைத்திற்கும் காரணம் தனது தாயாரே என்பதையும் பெருமையாக குறிப்பிட்டு உள்ளாராம்.
அவரது தாயாரே உண்மையான ஒரு கர்ம யோகியாக இருந்துள்ளார் என்பதை பிற்காலத்தில் ஸ்வாமிகள் பெருமையாக கூறுவது உண்டு. ‘எவர் ஒருவர்  தனது கடமையை முழுமையாக, சேவை மனப்பான்மையுடன், சுயநலமின்றி செய்வார்களோ,  எவர் ஒருவர் தான் ஈடுபட்டுள்ள  பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, அதிக பட்ச செயல் திறனுடன்  செயல்படுகின்றாரோ அவரே உண்மையான கர்ம யோகி. கர்மம் என்பதை கடமைக்காக மட்டும் செய்யக் கூடாது. உண்மையான  செயல்களால், உலகிற்கு நன்மை செய்யும் நோக்கில் செயல்பட வேண்டும்’ என்பதாக ஸ்வாமி  விவேகானந்தர்  கூறுவார். அதற்கு எடுத்துக் காட்டாக ஸ்வாமிகளின் தாயார் திருமதி அங்கச்சி அம்மாள் இருந்துள்ளார்கள்.
இப்படியான குடும்ப சூழ்நிலையில் வளர்ந்து வந்திருந்த இளம் வயதினராக பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள், மெல்ல மெல்ல பள்ளிப் படிப்பை சேலத்தில் முடித்துக் கொண்டார். அடுத்து மேற்படிப்பைத் தொடர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டபோது, அவர் சேலத்தில் இருந்து வேறு நகருக்கு செல்ல வேண்டியதாயிற்று.

பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகளின் மேற் படிப்பும் திருமணமும்

மேற்படிப்பைத் தொடருவதற்காக சென்னைக்கு சென்று அங்கு கிறிஸ்டின் காலேஜில் சேர்ந்து    படித்தார்.  அவர் அங்கு இருந்தபோது யார் வீட்டில் தங்கினார், ஹாஸ்டலிலா அல்லது வீட்டிலா என்பது தெரியவில்லை. 1900 ஆம் ஆண்டு பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிக்கு வயது பதினாறை எட்டியபோது, ஜூனியர் இடைநிலைத் தேர்வு முடித்து விடுமுறையில் வீட்டிற்கு சென்றபோது அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்த  பெற்றோர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.  அந்த விடுமுறையிலேயே அவருக்கு கள்ளக்குறிச்சியை சேர்ந்த திரு வைத்தியநாத ஐயர் மற்றும் சீதாலட்சுமி தம்பதியினர் மகளான பத்தே வயதான சீதாலட்சுமி எனும் சிறுமியுடன்  திருமணம் நடந்தது.
அந்த காலங்களில் பல குடும்பங்களில்  சிறுவர்கள் குழந்தைகளாக இருக்கும்போதே  திருமணம் செய்து வைக்கப்பட்டனர். அதற்கு காரணம் குழந்தைத் திருமணங்களை தடை செய்யும் சட்டம் அந்த காலத்தில் கடைபிடிக்கப்படவில்லை. இந்தியாவில், பழங் காலத்திலிருந்தே குழந்தை திருமணம் நடைமுறையில் இருந்து உள்ளது;  இளம் குழந்தைகள் மற்றும் டீனேஜர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் முதிர்ச்சியடைவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்பட்டார்கள். அதனால் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுக்கு சிறுமியான சீதாலெட்சுமியை மணம் முடித்து வைத்தது வியப்பைத் தரவில்லை.
திருமணம் முடிந்ததும் மீண்டும் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் தனது படிப்பைத் தொடர்வதற்கு சென்னைக்கு சென்று கிறிஸ்டின் காலேஜில் படிப்பைத் தொடர்ந்தார். கல்லூரியில் நல்ல முறையில் படித்தார்;  பரீட்ஷைகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று  கல்லூரி முதல் மாணவராக தேறினார். அப்போது  அவர் தனக்கு வாழ்க்கையில் நெறிமுறைகளையும், தத்துவங்களையும் புரிந்து கொள்வதற்கு எந்த அளவில் தனது பெற்றோர்களின் வழிகாட்டுதல் அமைந்து இருந்தது என்பதை உணர்ந்தது மட்டும் அல்ல, அதை மற்றவர்களிடமும் பெருமையாக கூறிக் கொண்டார்.
மேல் படிப்பிற்கான படிப்பினை வெற்றிகரமாக முடித்த பின்னர் சட்ட படிப்பிற்குத் தேவையான மேற் படிப்பை படிக்கத் துவங்கி, அதையும் வெற்றிகரமாக முடித்துக்  கொண்டு மீண்டும் சேலத்திற்கே திரும்பச் சென்றார். அங்கு சென்றவர் வழக்கறிஞர் தொழிலை துவக்க முடிவு செய்து நேரடியாக பார் கவுன்சில் எனப்படும் வழக்குரைஞர் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) என்பது இந்தியாவில் சட்ட  நடைமுறை மற்றும் சட்டக் கல்வியை ஒழுங்குபடுத்தும் வழக்கறிஞர்கள் சட்டம் 1961 இன் பிரிவு 4 இன் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப் பூர்வ அமைப்பாகும். அதில் உள்ளவர்கள் வழக்கறிஞ்சர்களாக, வழக்கு மன்றங்களில்  வாதாட முடியும்.

வழக்கறிஞ்சர் வாழ்க்கை

பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுக்கு வாதிடும் திறமை, வாதப் பிரதிவாதங்களில் நுணுக்கமான அணுகுமுறை போன்றவை இயற்கையிலேயே அமைந்து இருந்தது.  அதோடு சேர்ந்து பட்டப் படிப்பும் அவருடைய திறமைக்கு மெருகூட்டின. அதனால் அவருடைய பெயர் பரவலாக புகழ் பெறத்  துவங்க அவர் பார் கவுன்சிலின் முக்கியமான உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதன் பின் வெகு விரைவில் அவர் பார் கவுன்சிலின் தலைவரானார். அவருக்கு பெரிய அளவிலான கட்சிக்காரர்கள், ராஜா மஹாராஜா போன்றவர்கள் வாடிக்கையாளர்கள் (Client) ஆயினர். வழக்கு மன்றங்களில் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் சட்டங்களின் நுணுக்கங்களை தமது திறமையான வாதத்தினால் எடுத்துரைத்து, எதிராளி வழக்கறிஞ்சர்களின் கவனத்தை சற்றே திருப்பியும், அவர்களை குழம்பவும் வைத்து தமது பக்க வாதங்களை வைத்து வழக்குகளில் வெற்றி பெறத்    துவங்கினார். உண்மையில்  திறமை உள்ள வழக்கறிஞர்களே தமது தொழிலில் பெரும் புகழை  அடைகின்றார்கள் என்பதினால் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் புகழ் எளிதில் பரவ வேறு என்ன தேவை இருந்து இருக்க முடியும்?
முன் காலங்களில் சமூகத்தில் அந்தஸ்து பெற்று பிரபலமாக  இருந்த பெரிய மனிதர்கள் சின்ன சின்ன தகராறை எல்லாம் இரு தரப்பு வழக்கறிஞர்களையும்  கூட்டி வைத்து, நியாயங்களை எடுத்துரைத்து, இரு தரப்பினரையும் சமாதானம் செய்து வைத்து வழக்கு மன்றங்களைத் தாண்டிய நிலையில்  நீதி கிடைக்க வைத்து விடுவார்கள். அதை பஞ்சாயத்து செய்வது என்பார்கள். அது இரண்டு பக்க வாதிகளுக்கும் நேரம் மற்றும், பண விரயத்தை தடுத்தது.  அதே போன்ற செயலைதான்   பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் மிகவும் நியாயமான முறையில்  செய்து வந்தார். இதனால் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுக்கு உள்ளூரில் பேரும் புகழும் பெருகிக் கொண்டே  இருந்ததினால் அதன் மூலம், பல செல்வந்தர்கள் மற்றும் பிரபலமான மனிதர்களின் தொடர்பும் கிடைத்தது.
அதில் முக்கியமானவர்கள் சமூகத்தில் அந்தஸ்து பெற்று  பிரபலமாக  இருந்த,  கவர்னர் ஜெனரல் பதவியில் இருந்த திரு ராஜாஜி எனும் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள், அன்றைய சென்னை தலைமை நீதிபதியாக இருந்த திரு சுந்தரம் செட்டியார், அன்றைய காங்கிரஸ் தலைவராக இருந்த திரு விஜயராகவாச்சாரியார் மற்றும் விடுதலை வீரரும்,  ‘பார் அட் லா’ (Bar at Law) எனப்படும் பாரிஸ்டருமான திரு முத்துகிருஷ்ண ஐயர் போன்றவர்கள் அடக்கம். ஆவர்.
‘பார் அட் லா’ (Bar at Law) என்னும் சொல் வழக்கறிஞர்களை தான் குறிக்கிறது; பாரிஸ்டர் (Barrister-at-Law) என்றால் இங்கிலாந்து நாட்டில் உபயோகிக்கப்படும் ஒரு சட்டத் தொழில் வல்லுநர் தகுதி. சட்டத் துறையில் அந்த நிலையை அடைய ஒருவருக்கு ஐந்து ஆண்டுகள் ஆகும்.
மூன்று ஆண்டுகள் சட்டப் படிப்புக்கு பிறகு ஒரு வருட பார் படிப்பு படித்து அதன் தேர்வில் தேற வேண்டும். பின்னர், ஒரு ஆண்டுக்கு அப்ரெண்டீஸ் போல பாரில் பயிற்சி பெற வேண்டும். இது அந்த படிப்பின் கடைசி தேவையாகும். இந்த பயிற்சிக்கு பிறகு அதில் வெற்றிகரமாக தேர்ச்சி அடைந்தவர்கள் பார் கவுன்சில் உறுப்பினராக சேர்க்கப்படுவர்.  அவர்கள்  நீதிமன்றத்தில் வழக்குகளை வாதிடுவதற்கு சிறப்பு பயிற்சி பெற்றவர்கள், வழக்குகளை வாதிடுவதில் நிபுணர்கள்.

பொது வாழ்க்கை

செல்வம் சேர்ப்பது ஒன்றே தன்னுடைய வாழ்க்கையின் குறிக்கோள் எனக் கருதாமல் பொது மக்களுடைய சேவைக்கும் தன்னை அவர் அர்பணித்துக் கொண்டதினால் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளைத்   தேடி தலைமைப் பதவிகள் தாமாகவே வந்தன. பொது வாழ்க்கையில் தூய்மையை கடை பிடித்ததினாலும், நாணயஸ்தராக இருந்ததினாலும்,  பெரும்பாலான மக்களின் நம்பிக்கையை பெற்று  இருந்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள்  1902 ஆம்  ஆண்டில் சேலம் மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார். சேலம் கூட்டுறவு சங்கத்தின் தலைமை அதிகாரியாக பதவி ஏற்றார்.  1904  ஆம் ஆண்டு  சேலம் மகராட்சி தலைவரானார்.  சேலம் கூட்டுறவு   வங்கியின் மேலாளரானார்.  இப்படியாக அடுக்கடுக்கான பதவிகள்  தாமாகவே அவரை தேடி  வந்தன.
எங்கே வாழ்க்கை தொடங்கும்; அது எங்கே எவ்விதம் சென்று முடியும்; இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது. பாதையெல்லாம் மாறி மாறி வரும் என்கின்ற கூற்றுகள் அனைத்தும் உண்மைப் போல  உள்ளம் முழுவதும் ஒரு ஆன்மீகவாதியான பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் அரசியலில் புகுந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்பது விசித்திரம் இல்லைதான். கடவுள் தனது ஆலயத்தை அன்பினால் கட்டப்படுவதற்காக காத்திருக்கும் பொழுது, மனிதர்கள் கற்களைக் கொண்டு கட்ட வருகிறார்கள் என்பார்கள். அதை போல ஆன்மீகவாதியாக  இருக்க வேண்டிய பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளோ திசை மாறி அரசியலில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது; அதுதான் விதி என்பது.
ஆனாலும் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் எந்த அளவிற்கு தொழிலில் ஈடுபாடுடன் இருந்தாரோ, அதிலேயே மூழ்கி செல்வத்தை வளர்த்துக் கொள்ள விரும்பாமல், தமது மனநிலையை சற்றே  மாற்றி வைத்துக் கொள்ள விரும்பி சற்று நேரத்தை விளையாட்டிற்காகவும் ஒதுக்கினார். அவர் அனு தினமும் மாலை வேளையில் சற்று நேரம் டென்னிஸ் மற்றும் பில்லியர்டு விளையாட்டுகளில்  தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதிலும் கூட  அளவிற்கு அதிக நேரத்தை ஒதுக்கிக் கொள்ளாமல்  மாலை  மங்கியதும்  உடனே விளையாடுவதை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்று விடுவார். சற்று நேரம் பூஜை மற்றும் தியானங்களில் ஈடுபடுவார். அதனால்தான் அவரால் ஒரே நேரத்தில் தொழில், விளையாட்டு மற்றும் தெய்வ பக்தி போன்ற மூன்றிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடிந்தது.
 
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் அரசியல் பயணம்
 
நாட்கள் செல்லச் செல்ல  அவருக்கு அரசியல் ஆர்வம் தோன்றியது. அந்த காலத்தில் விடுதலை வீரரான பால கங்காதர திலகர் நெருப்புப் பொறி போன்ற சொற்பொழிவை தந்து  மக்களிடையே தியாக உணர்வை கிளறுவார். அவர் தீவிரவாதி என்று கூறப்பட்டார்.  திரு லோகமான்ய பால கங்காதர திலகர் மூத்த காங்கிரஸ்காரர்,  விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி. பல முறை  சிறையில் வைக்கப்பட்டவர். 1907 ஆம் ஆண்டில்  நாக்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், அக்கட்சி மிதவாதிகள்,  தீவிரவாதிகள்  என இரு பிரிவுகளாக பிரிந்தது. திரு திலகரின் தலைமையில் உருவான தேசப்பற்றாளர்கள், தீவிர கருத்துடையவர்களாக அந்நிய ஆட்சியை எதிர்த்து தீவிரமாக செயல்பட்டனர். இதனால், மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இப்படியான பின்னணியைக் கொண்ட திரு லோகமான்ய பால கங்காதர திலகர் பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகளின் மனதில்  ஒரு நாயகனாக  உருவானார்.
திரு லோகமான்ய பால கங்காதர திலகரால் ஈர்க்கப்பட்ட பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் அன்றைய காங்கிரஸ் கட்சியிலும் உறுப்பினராக இணைந்து கொண்டார்.  பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள்  1914 ஆம் ஆண்டு சென்னை மாகாண கவுன்சலில் சேலம்-நீலகிரி -கோயம்பத்தூர் நகரங்களின் பிரதிநிதியாக இருந்தார்.  வழக்கறிஞர்  தொழிலில்  நிறைய  பணம் சம்பாதித்து 1915 ஆம் ஆண்டு சேலத்திலேயே இன்னொரு பெரிய பங்களா ஒன்றையும் வாங்கினார். ஆனால் அவர் வகித்து வந்திருந்த பதவிகளினால் எந்தவிதமான ஆதாயங்களையும் அவர் பெறவில்லை என்பதினால் மக்களிடையே நன் மதிப்பை பெற்று இருந்தார்.
1920  ஆம் ஆண்டு திரு பாலகங்காதர திலகரின் மரணத்திக்குப் பிறகு  அன்னி பெசன்ட் அம்மையாருடைய செயல்பாடுகளினால் ஈர்க்கப்பட்ட பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் அந்த அம்மையாரோடு   பயணம் மேற்கொண்டு  மதராஸ் ப்ரெசிடென்சி (Madras Presidency – அன்றைய தமிழ்நாடு) முழுவதும் பரப்புரை மேற்கொண்டார். இதன் மூலம் முதன் முதலில் இந்தியாவில் நேரடியான பொதுஜன சந்திப்பு (Mass Contact Program) என்ற சித்தாந்தத்தை பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் உருவாக்கினார்.
நம் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பல பெண்கள் ஈடுபட்டிருந்தாலும், அயர்லாந்து நாட்டை பூர்வீகமாக கொண்ட, ஆங்கிலேய பெண், அன்னி பெசன்ட் அம்மையாரின் பங்கு குறிப்பிடத்தக்கது. அவர்தான்  1893ல் சென்னை அடையாறில் தங்கி பிரம்ம ஞான சங்கத்தின் தலைமை நிலையத்தைத் நிறுவினார். இந்தியாவுக்கு சுய ஆட்சி வழங்க வேண்டும்’ என்ற கோஷத்தை எழுப்பிய, முதல் ஆங்கிலேய பெண்மணி, அன்னி பெசன்ட் அம்மையார் ஆவார். 1915 ஆம் ஆண்டுகளில்  ஆங்கில அரசுக்கு எதிராக இவர் செயல்பட்டதினால் அவருடைய பொதுக் கூட்டங்களுக்கு  ஆங்கிலேய அரசு தடை விதித்தது. அவர்தான் நமது  நாட்டுக்கான தேசிய கொடியை உருவாக்கினார். 1917 ஆம் ஆண்டு ஹோம் ரூல் இயக்கத்தின் போது டாக்டர் அன்னி பெசன்ட் அம்மையார் வடிவமைத்த தேசியக் கொடி, இன்றுள்ள நமது  தேசியக் கொடியிலிருந்து வேறுபட்டது. அந்த கொடியை, தான் சிறை வைக்கப்பட்டிருந்த பங்களாவில் ஏற்றவும் செய்தார். எனினும், இந்திய சுயாட்சி இயக்கத்தை துவங்கி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அதை வலுப்பட செய்தார்.
1917 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் பொது தேர்தல் நடந்தபோது, இந்தியாவிற்கு விடுதலை தர   வேண்டும் என்ற கருத்தை புதியதாக எழ இருந்த ஆங்கிலேய அரசிடம்  வலியுறுத்த  வேண்டும் என்ற எண்ணத்துடன் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுடன், மஞ்சேரி ராமா ஐயர் மற்றும் ஜார்ஜ் ஜோசப் என்பவர்களை காங்கிரசின் தேசிய தலைமை அனுப்பி வைத்தபோது, அதை தெரிந்து கொண்ட, இந்தியாவில் ஆட்சி செய்து வந்திருந்த பிரிட்டிஷ் அரசாங்கம், அவர்களை கைது செய்து பதினைந்து நாட்கள் ஜிப்ரால்டர் எனும் இடத்தில் இருந்த சிறையில்  அடைத்தார்கள். அதனால் எல்லாம்  பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியின் மன வைராக்கியம் குறையவில்லை.
இந்தியர்களின் விடுதலை இயக்கத்தின் தாக்கத்தினால், 1917-1922 வரை இந்தியாவிற்கான செயலாளராக இருந்த எட்வின் மாண்டேகு (Edwin Montague), மற்றும் 1916-1921 வரை இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த லார்ட் செம்ஸ்போர்டு (Lord Chelmsford) ஆகிய இருவரும் ஒன்றிணைந்து,  பிரிட்டிஷ் இந்தியாவின் நிர்வாகத்தில் இந்தியர்களின் பங்களிப்பை அதிகப்படுத்தவும், படிப்படியாக தன்னாட்சி அமைப்புகளை ஏற்படுத்தவும் கொண்டு வந்த  சீர்திருத்தங்கள்  மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் (Montague-Chelmsford Reforms) என்று அழைக்கப்பட்டன.  அதன் விளைவாக  1919 ஆம் ஆண்டில் புதிதாக அமைக்கப்பட்ட மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்த சபையின் அங்கத்தினராக   பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் தேர்ந்து எடுக்கப்பட்டார்.  1920 ஆம் ஆண்டுவரை அந்த பதவியில் இருந்தார்.
அவர் தேசிய காங்கிரஸ்  உறுப்பினராகவும் இருந்ததினால் அந்த கட்சியின் தேசிய  கருத்தை  சீர்திருத்த சபை கூட்டத்தில் வெளிப்படுத்தி வரலானார். அதுவரை பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் சேலத்திலேயே தங்கி இருந்தாலும் அவ்வப்போது சென்னைக்கு சென்று முக்கியமான கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தார்.
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள்  பல மொழிகளைக் கற்றறிந்தவர். ஆகவே அவர் சென்னை பல்கலைக் கழகத்தில் கிரேக்க மற்றும் ரோமானிய நாட்டின் வரலாற்றுப் பாடங்களை ஒரு பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி போதனை  செய்யலானார்.
மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் முன்  நடைபெற்ற சபை கூட்டங்களில் சென்னை மாகாண கவர்னரே  கூட்டத்திற்கு  தலைமைத் தாங்கி வந்தார்.  ஆனால் ஒருமுறை பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் அந்த கூட்டத்தில் தலைமைத் தாங்கி தமிழிலேயே உரை ஆற்றி அனைவரையும் அதிர வைத்தார்.  அவர் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் புலமை பெற்றவர் என்பதினால் அவரால் சபையின் விவாதங்களில் சரளமாக தனது கருத்தை எடுத்து உரைக்க முடிந்தது.
அந்த காலத்தில் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சபைகளில் விவாதிக்கப்பட்ட  விஷயங்களை பொது வெளியில் கூறத் தடை இல்லை என்றாலும், சபைகளில் விவாதிக்கப்பட்ட  விஷயங்களை வெளியில் கூற மாட்டார்கள் என்பதினால் சபையில் நடைபெற்ற வாத, விவாதங்களைக் குறித்து மக்களுக்கு தெரியாமலேயே இருந்தது. ஆனால் அந்த நிலையை பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் அடியோடு மாற்றினார். சபைகளில் தாம் கலந்து கொண்ட விவாதங்களில் என்ன நடந்தது, விவாதிக்கப்பட்டவை என்னென்ன, என்பதை எல்லாம் தம்மை தேர்ந்து எடுத்த மக்களுக்கு பொதுக்கூட்டம் வாயிலாக தெரியப்படுத்தி வந்தார்.
அவரது பேச்சுத் திறனையும் அறிவாற்றலையும் கண்டு வியந்த மக்கள் அவரை சேலத்திலும், சென்னையிலும் பல பொதுக் கூட்டங்களிலும் பேச அழைத்தார்கள். அதே நேரத்தில் அவர் வழக்கறிஞர் தொழிலையும் விட்டு விடாமல் அதிலும் பயணித்தார். இப்படியாக வாழ்ந்து கொண்டிருந்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் பொது வாழ்க்கை மிகவும் வேகமாக உச்ச சிகரத்தை நோக்கி பயணிக்கலாயிற்று.

குடும்ப வாழ்க்கை
 
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் தெய்வ பக்தி மிக்கவர், ஆன்மீக உணர்வும் கொண்டவர் என்பதினால் தினமும் மூன்று  வேளையும் சந்தியாவந்தனம் செய்வதுண்டு; தாயார் கூறி இருந்தபடி தினமும் துளசிக்கு தண்ணீர் ஊற்றுவார்; லலிதா சஹஸ்ரநாமம் படிப்பார்;  வாரங்களில் ஒரு நாள் பசு மாட்டு பூஜை செய்வார்; வார இறுதியில் வீட்டின் அருகில் இருந்த லட்சுமி நாராயணன் ஆலயத்திற்கு சென்று பஜனைப் பாடல்கள் பாடுவார்.
இடையே சுரைக்காய் ஸ்வாமிகள் மற்றும் சிருங்கேரி ஸ்ரீ பாரதி சரஸ்வதி ஸ்வாமிகளை சந்தித்து விட்டு வருவார். பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் ஒரு பக்கத்தில் மக்களிடையே நல்ல பெயரும் புகழும் சம்பாதித்து வந்திருந்த வேளையில், 1890 ஆம் ஆண்டு  திருமணம் ஆனது முதல்   குடும்ப வாழ்க்கையிலும் தன்னை  இணைத்துக் கொண்டு வாழ்ந்து வந்ததினால்  காலப் போக்கில் அவருக்கும் சீதாலெட்சுமிக்கும் ஐந்து குழந்தைகள் பிறந்தார்கள். அவர்களின் பெயர்கள் வெங்கட்ராமன், ராஜலக்ஷ்மி, சாரதா, ஜெயராமன் மற்றும் சாவித்ரி என்பதாகும். இப்படியாக அவருக்கு இரண்டு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் பிறந்தனர். 1916 ஆம் ஆண்டு வாக்கில்  பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் மகனான ஜெயராமன் மற்றும் மகள் சாவித்ரி என்பவர்களைத் தவிர மற்ற மூன்று பேருக்கும் திருமணம் ஆகி இருந்தது.
பொது வாழ்க்கையில்  பல்வேறு சங்கடங்களை பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் சந்தித்துக்  கொண்டிருந்தாலும், சொந்த வாழ்க்கையிலும் சில சோகங்களையும் துயரங்களையும் அவர் சந்திக்க வேண்டி இருந்தது. அதில் முக்கியமானது 1917 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு சம்பவமாகும். அந்த ஆண்டில்தான் உலகம் முழுவதையும் பிளேக் எனும் கொடிய நோய் தாக்கியது. லட்ஷக்கணக்கானவர்கள் அந்த நோய்க்கு பலியானார்கள். அவர்களில் ஒருவர் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் தாயாரான திருமதி அனந்த லட்சுமி  அம்மாளும்  ஆவார். அது அவருக்கு பெரிய இடியாக இருக்கையில், அந்த சோகம் மறையும் முன்னரே 1918 ஆம் ஆண்டில் கொடிய காலரா நோய்க்கு அவர் தந்தை திரு வெங்கடகிரி ஐயரும் பலியானார்.  அடுத்தடுத்து நடந்த இரண்டு பேரிழப்புகளால் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் சற்றே நிலை குலைந்தார் என்றே கூற வேண்டும்.
கிடைத்ததெல்லாம் நிலைக்கும் என்ற நம்பிக்கையினால்தான் இழப்பு என்பதே நிகழாதிருக்க விரும்புகிறோம்; வலிகளுக்கான அடிப்படை காரணம்  விருப்பங்கள்தான்;  போனதை நினைத்து அழுது கொண்டே இருப்பது எதையும் மாற்றாது அதை அப்படியே விட்டு விடுவது நல்லது என்ற தத்துவத்தை  பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் நன்கு உணர்ந்திருந்தாலும் சோர்வுடன் இருக்கும் தருணங்களில் அவருக்கு ஆறுதலாக நின்றவர்கள் திடீர், திடீர் என காணாமல் போய் விட்டது, எப்போதாவது  தமது துக்கங்களை  பரிமாறிக் கொள்ள முடியாமல், யாரும் இல்லாமல் போய் விட்டார்களே  என மனம் புழுங்கினார்.  ஆனால் அவற்றில் இருந்து எல்லாம் மன திடத்துடன் மீண்டு வந்து தமது பொது வாழ்க்கையின்  பயணத்தை மீண்டும் தொடரலானார்.
காலம் உழன்றது. மீண்டும் ஒரு சோகம் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளை பற்றிக் கொண்டது. 1921 ஆம் ஆண்டு  47 வயதே ஆன பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி தமது தாயாரின் வருடாந்திர சடங்குகளை செய்து கொண்டிருந்தார்.  சிரார்த்த காரியங்கள் நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது, அவருடன் தங்கி இருந்த விஸ்வநாதனும்,  15 வயதான கடைசி மகன் ஜெயராமனும், 13 வயதே ஆன  கடைசி மகள் சாவித்திரியும்  வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். விளையாடிக் கொண்டு இருக்கையில் கால் தவறி இருவரும் அங்கிருந்த பாழ் கிணற்றுக்குள் விழுந்து விட்டார்கள், நீச்சல் தெரியாது என்பதினால் இருவரும் அந்த கிணற்று நீரில் மூழ்கி மரணம் அடைந்து விட்டார்கள்.
அதை பார்த்து விட்ட, அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்ட,  வீட்டில் இருந்த  வேலைக்காரன், சிரார்த்தம் முடிந்து புரோகிதர்கள் சாப்பிட இலையில் அமர வேண்டிய தருணமும் வந்து விட்ட நேரத்தில்,    வந்து அந்த செய்தியை ஸ்வாமிகளின் காதில்  மெல்ல முணுமுணுத்தார். ஆனால் அந்த சோகத்தை மனதில் முற்றிலும் மறைத்துக் கொண்டு புரோகிதர்கள் அனைவரும் உணவருந்தி விட்டு  போகும்வரை காத்திருந்து அவர்களை வழி அனுப்பிய பின்னரே பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள்  இறந்து கிடந்த தமது குழந்தைகளை பார்க்கச் சென்றாராம். அது அவருடைய மன  உறுதிக்கு மேலும் ஒரு சான்றாக அமைந்து இருந்தது.
பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆறுதல் கிடைத்தாலும், பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுக்கு மனதில் அந்த சோகம் எளிதில் மறையவில்லை. அவருக்கு ஆறுதல் கூற வந்த எவராலுமே அவருடைய அந்த கேள்விக்கு பதில் தர இயலவில்லை. அவருடைய சோகம் மறைய வெகு காலம் பிடித்தது. அப்போதுதான் வாழ்க்கை என்றால் என்ன? எதனால் ஒரு சோகம் ஏற்பட்டால், மேலும் பல சோகங்கள் தொடர்கின்றன போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் நிலை குலைந்தார். சோகத்தை மனதில் ஏந்திக் கொண்டு வாழ்க்கையின் பயணத்தை அப்படியே தொடர முடியாது. வாழ்வில் இன்ப துன்பங்கள் வந்து கொண்டுதான் இருக்கும், சிலருக்கு அவை அதிகம் இருக்கலாம், சிலருக்கு குறைவாக இருக்கலாம். சோகம் என்பது ஒரு தற்காலிக நிலை; மனதின் சோகம் என்பது நாள் முழுவதும் ஏற்ற இறக்கமாக இருக்கலாம்; அதை தொடர விட்டால் ஒரு கனமான போர்வை போல அது நம்மை சுற்றிக் கொண்டு, அன்றாட வாழ்க்கையின் உணர்வுகளையும் மகிழ்ச்சியையும் அடக்கி விடும்.
மனச் சுமை அதிகமாக உணரப் படும்போது மனமே  மரத்துப் போகலாம் அல்லது சோர்வடையலாம்; எதிலும்  கவனம் செலுத்த கஷ்டப்படலாம். ஆனால் அவை காலப் போக்கில் மறைந்து விடும். அந்த நிலையை தைரியமாக எதிர்கொள்ளும்  மன திடம்  உள்ளவர்கள், விதி வரைந்த பாதையில் என் வாழ்க்கை பயணம் தொடரட்டும் என்று எண்ணத் துவங்குவார்கள், அவர்களது துக்கம்  லேசாகத் மறையத் துவங்கும். அந்த நிலையில் ‘விருப்பங்கள் ஏதுமில்லை விரும்பியவற்றை  இழந்த பிறகு’ என்ற தத்துவம் மனதில் ஆழமாகப் பதியும். அந்த நிலையில்தான்  பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் இருந்தார்.
இதற்கு  உதாரணமாக ஒரு சின்ன கதை உண்டு.  ‘குருவே, வாழ்க்கை மிகவும் கடினமாயிருக்கிறது. கவலை, சோகம், வருத்தம் போன்றவற்றால் மட்டுமே வாழ்க்கை நிறைந்திருக்கிறது. வாழ்க்கை இன்பமாகவே இருக்க ஏதாவது வழியிருக்கிறதா சொல்லுங்கள்’ என்று ஒரு சிஷ்யன் தனது குருவிடம் கேட்டார்.
‘சரி உனக்கு பதில் கூறுகிறேன், அதற்கு முன் காப்பி சாப்பிடுகிறாயா?,  என்று ஞானி அவரிடம் கேட்டார். தலையசைத்தார் வந்தவர். உள்ளேயிருந்து ஒரு கிண்ணத்தில் காப்பித் தூள் கொண்டு வந்தார் ஞானி. ‘இந்தா, சாப்பிடு.’ என்று அவர் சொல்ல, அங்கு   வந்தவருக்கு ஒன்றுமே  புரியவில்லை. காப்பிக்கு பதில் காப்பி தூளை எப்படி சாப்பிடுவது?
அவர் தடுமாற்றத்தைக் கண்ட ஞானி   கூறினார்  ‘சரி, பாலைக் கொண்டு வருகிறேன், அதோடு இதை சாப்பிடு’. இப்படிக்கு கூறிவிட்டு உள்ளே சென்று இன்னொரு கிண்ணத்தில் பாலைக் கொண்டு வந்தார் ஞானி. இப்படியாக கேட்டுக் கொண்டே    தண்ணீர், சர்க்கரை எல்லாம் கிண்ணங்களில் கொண்டு வந்து கொடுத்தார். வந்தவர் துறவியிடம் கேட்டார்  ‘குருவே, இவற்றை எப்படி தனித்தனியே சாப்பிடுவது?’.
ஞானி அமைதியாகக் கூறினார்  ‘காப்பியையே உன்னால் தனித் தனியாகச் சாப்பிட முடியவில்லை. வாழ்க்கையும் அப்படித்தான். இன்பத்தையும், துன்பத்தையும் பிரித்து பார்த்து இன்பத்தை மட்டுமே அனுபவிக்க முடியாது’.   இப்படி   இன்பத்தையும்  துன்பத்தையும்  பிரித்துப்  பார்க்க  முடியாத  நிலையில்  பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் வாழ்க்கையும் அமைந்து இருந்தது. அதுதான் பிறந்ததிற்கான உண்மையான வாழ்க்கை என்பது பூஜ்யஸ்ரீ   நரசிம்ம ஸ்வாமிகளின் உள்ளுணர்விற்கு   நன்கே தெரிந்து இருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ அவருக்கு சோகங்கள் ஏற்படும் முன்னரே அவரை அறியாமலேயே சிறு வயதிலேயே தன்னுடைய  இன்னொரு மகனை நன்றாக படிக்க வைத்து திருமணமும் செய்து கொடுத்து விட்டார். மற்ற இரு மகள்களும் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு சென்று விட்டு இருந்தார்கள்.
அவருடைய நான்காவது மகன் விஸ்வநாதனும் அவருடைய மனைவியும் அவருடன் தங்கி இருக்கவில்லை, தனியே வசித்து வந்திருந்தார்கள்.  ஆகவே அவருடன் அவருடைய சோகத்தை பரிமாறிக் கொள்ள அவருடைய மனைவி மட்டுமே பாக்கி இருந்தாள்.  அமைதியாக அமர்ந்து சிந்தித்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுக்கு ஒரு உண்மை மனதில் ஆழமாக பதிந்தது. எவர் தனக்கு வாழ்க்கையை தந்தாரோ, அவரேதான் தனக்கு சோகங்களையும் தந்துள்ளார். ஒருவேளை  மனைவி மற்றும் மக்களுடன் தான் குடும்ப வாழ்க்கையில் முழுமையாக இணைந்து  இருந்தால், மக்களோடு மக்களாக இருந்தவாறு அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால், சொத்து சுகம் என செல்வத்தின் பிடியில் கட்டப்பட்டு விட்டால்,   தான் பிறப்பிக்கப்பட்டதற்கான அர்த்தமே இல்லாமல் போய் விடும் என்பதற்காக தன்னிடம் இருந்து ஒவ்வொருவராக பிரிக்கப்படுகின்றார்களோ என்ற எண்ணம் மெல்ல, மெல்ல மனதில் தோன்றத் துவங்கியது. ஆன்மீகத்தில் தன்னை முழுமையாக ஈடுபட வைக்க வேண்டும்  என விரும்பியே கடவுள் தனக்கு இப்படி எல்லாம் சோதனைகளைத் தருகின்றாரோ என்ற எண்ணம் வலுப்பெற்றது.
எப்படி தனது செல்ல மக்களின் உயிரானது இறைவனுடன் கலந்து விட்டனவோ அவ்வாறே தானும் உயிருள்ளவரை இறை பணியில் ஈடுபட்டவாறு இருக்க வேண்டும் என்ற வைராக்கியம் மனதில் தோன்றத் துவங்கியது. அதுவே அவரது வாழ்க்கையின் திருப்பு முனைக்கு காரணமாக அமைந்து விட்டது.
 
வாழ்க்கையின் திருப்பு முனை
 
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் மெல்ல மெல்ல தன்னை அரசியல் மற்றும் குடும்ப பந்தத்தில் இருந்து விலக்கிக் கொள்ளத் துவங்கினார். அதுவே சரியான பாதை என்று கடவுள்  நினைத்தாரோ என்னவோ, 1922 ஆம் ஆண்டில் அவருக்கு இருந்த  குடும்ப பந்தம் அறுந்து போகும் அளவில் திடீர் என அவரது மனைவி சீதாலெட்சுமியின் மரணமும் நிகழ்ந்தது. பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகள் தனி மரமானார்.
மனதில் மீண்டும் சோகம் கொந்தளித்தது, விம்மினார்  ‘நாம் வளர்த்த மரங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டிருக்கையிலேயே பட்டுப் போய் விட்டன; நெடிய உயர்ந்து நின்று நிழல் கொடுக்கும் என நினைத்து  நான் அருந்தும் நீரை கூட மழையாய் அந்த மரங்களுக்கு தந்தேன். கொளுத்தும் வெய்யிலுக்கு நிழல் தரும் என்றல்லவா நினைத்து நீர் ஊற்றி வளர்த்தேன், ஆனால் சீதாலட்சுமி  நீயும் அல்லவா மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து கொண்டு  ஓர் வெம்மை காலத்தில் என்னை வெட்ட வெளியில் நிறுத்தி விட்டு சென்று விட்டாய். நான் இனி தனி மரமாகி விட்டேன்.  தனி மரம் கூட மீண்டும் தோப்பாகும் என்பதை எனக்குள்  பக்குவப்படுத்திக் கொள்ள சீதாலட்சுமி, நீ  எனக்கு ஆத்மார்த்தமாக உதவிட வேண்டும்’.
மெல்ல மெல்ல அனைத்து சோகங்களையும் தாங்கி கொண்டு  வாழ்க்கையின் பயணத்தை  ஒரு சோகத்துடனேயே தொடர்ந்து கொண்டிருந்தார். இன்னும் சில காலம் கடந்தது. அவருடைய நான்காவது மகன் விஸ்வநாதனுக்கு திருமணம் ஆகிய பின்னர், மகன் விஸ்வநாதனும் அவருடைய மனைவியும் அவருடன் தங்கி இருக்கவில்லை, தனியே வசித்து வந்திருந்தார்கள். இந்த நிலையில்தான் பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகள் ஒரு நாள் திடீர் என முடிவு  எடுத்தார். 1925 ஆம்  ஆண்டு தான் செய்து வந்திருந்த வழக்கறிஞர் தொழிலை துறந்தார். தான் அதுவரை கடைப்பிடித்து வந்திருந்த அனைத்து பணிகளையும் மெல்ல மெல்ல விலக்கிக் கொண்டு, இனி தனக்கு என்ன பணி என்பதை கடவுளிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற மன உத்வேகத்துடன், சொத்து சுகம் என அனைத்தையும் உயிருடன் இருந்த தனது மகன்களுக்கும் மகள்களுக்கும் கொடுத்து விட்டு கடவுளைக் காண முதலில் தனக்கு ஒரு குரு தேவை என்ற எண்ணத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார்.  அடையாளம் தெரியாத தனது குருவைத் தேடி  தனது பயணத்தை துவக்கினார்.
அதற்கு மூல காரணம் அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்களுடைய குடும்ப ஆச்சாரியார் வழங்கிய ஆலோசனைதான். இனி அவருக்கு தேவை மன அமைதி என்றும், அது கிடைக்க வேண்டும் எனில் அவர் குடும்ப பந்தங்களில் இருந்து விலகிக் கொண்டு  ஆன்மீக வாழ்வில் இணைத்து விட்டால் மன அமைதி பெறுவார் என்ற ஆலோசனைக் கூறி இருந்தார்களாம்.
‘அழியக் கூடிய  மனிதனான என்னிடம்  நிறைந்துள்ள மகிழ்ச்சி, பலம் மற்றும் புகழ் என்று அனைத்தும் அந்த எல்லையில்லாத கடவுள் தந்ததாகும். நான் எந்தப் பாடல்களை எல்லாம் பாடுவதற்காக இங்கு படைக்கப்பட்டு வந்துள்ளேனோ அவை எதுவுமே இன்றுவரை பாடப்படாமலேயே உள்ளது. அதை உணராமல் இத்தனைக் காலமும் நான் என் இசைக் கருவிகளை  சரி செய்வதிலேயே என் நாட்களைக் கழித்து விட்டேன். அலை பாயும் என்  எண்ணங்களில் ஆனந்த பைரவி நீ….குருவே … உன்னைக் காண இதோ புறப்பட்டு விட்டேன்’ என்று பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகள் மனதில் எண்ணிக் கொண்டு குருவைத் தேடி புறப்பட்டு விட்டார்.
அனைத்து சொத்துக்களையும் தனது மகன் மற்றும் மகளுக்கு பிரித்துத் தந்தாகி விட்டது. கையில் ஒரு காசைக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு பரதேசி போல அனைத்தையும் துறந்து விட்டு ‘என்னைப் படைத்த கடவுளே ஒரு குருவின் மூலம் எனக்கு வழிகாட்டுவார்’ என்று மனதில் திடமாக எண்ணி கிளம்பினார்.
 
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின்  முதல் கட்டப் பயணம்குருவைத் தேடி 
 
கூடுகட்டி முட்டை இட்டு, குஞ்சு பொறித்து, அது சிறகுகளை பெற்று பறக்கத் துவங்க வேண்டிய வேளை வந்து விட,  அதற்கு அனுமதி கொடுத்து விட்ட தாய் பறவை போல பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் எனும் பறவை சம்சாரம், மக்கள், சொத்து, சுதந்திரம் என அனைத்தையும் விலக்கி வைத்து விட்டு சுதந்திர பறவையாக பறக்க ஆயத்தம் ஆகி விட்டார். 1925 ஆம் ஆண்டில் அந்தப் பயணம்  துவங்கியது. ஆனாலும் தனது பயணத்திலும் அவர் தான் செய்து வந்திருந்த நித்ய அனுஷ்டானங்களைக் கைவிடவில்லை.
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் ஒரு ஆன்மீக குருவிடம் சரணாகதி அடைய அதிக  கஷ்டப்பட வேண்டியது இல்லை என்ற நிலையில்தான் இருந்தார். காரணம் அவருக்கு தெரியாதவை என்னதான் இருந்தது? இராமாயண, மஹாபாரத, வேத, இதிகாச பாடங்கள் அனைத்தும் அத்துப்படி, லலிதா ஸஹஸ்ரநாமம், தேவி பாகவதம், அஷ்டோத்திர நாமாவளிகள் போன்றவற்றிலும் அதிக புலமை இருந்தது.  அவற்றை தாண்டி கிருஸ்துவ போதனைகளில் கூட அளவில்லா   புலமை இருந்தது என்பதினால் வேறென்ன வேண்டும்?
 
சிருங்கேரி பயணம்
 
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் தமது ஆன்மீக பயணத்தை துவங்கியபோது அவரது எண்ணத்தில் இருந்தவை இரண்டே இரண்டு இடங்கள்தான்.  அவை காளஹஸ்திக்கு சென்று சுரைக்காய் ஸ்வாமிகளிடம் தீட்ஷை பெற்றுக் கொள்வது அல்லது சிருங்கேரி சங்கர மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ நரசிம்ம பாரதி மஹா ஸ்வாமிகளை சந்தித்து தீட்ஷை பெறுவது. அதிலும் என்ன சோதனைப் பாருங்கள். பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகள் பயணத்தை துவக்கிய நேரத்தில் சுரைக்காய் ஸ்வாமிகள் இல்லை. அவர் 1925 ஆம் ஆண்டிலேயே சமாதி அடைந்து விட்டார்.
அவருக்கு நன்கு அறிமுகமாயிருந்த சிருங்கேரி சங்கர மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ நரசிம்ம பாரதி மஹா ஸ்வாமிகளும் 1912 ஆம் ஆண்டிலேயே சமாதி அடைந்து விட்டார்.


பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் பயணத்தை துவக்கிய நேரத்தில் சிருங்கேரி மடாதிபதியாக இருந்தவர்  சிருங்கேரி சாரதா பீடத்தின் 34  வது ஆச்சார்யரான ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகா ஸ்வாமிகள்  ஆவார்.  சிருங்கேரி மடாதிபதி ஸ்ரீ  சந்திரசேகர மஹா ஸ்வாமிகள்  20 வயதிலேயே  சிருங்கேரி சாரதா பீடத்தின் தலைவரானவர்.
இந்த நிலையில் சேலத்தில் இருந்து கையில் சல்லிக் காசு கூட எடுத்துக் கொள்ளாமல் ஒரு துறவியாக பயணத்தை மேற்கொண்ட பூஜ்யஸ்ரீ நரசிம்ம  ஸ்வாமிகள் சேலத்தில் இருந்து சுமார் 400  கிலோ மீட்டர் தொலைவில் இருந்த சிருங்கேரியை நடை பயணத்திலேயே சென்று அடைய வேண்டும். அவர் நல்ல வசதியோடு இருந்த நாட்களில் சேலத்தில் இருந்து சிருங்கேரிக்கு தனது சொகுசு காரில் பயணித்தவர்! ஆனாலும் எந்தவிதமான மனக் குழப்பமும் இல்லாமல்   சிருங்கேரி சங்கர மடத்தைச் சேர்ந்த  ஸ்ரீ சந்திரசேகர மஹா ஸ்வாமிகளிடம் இருந்து தீட்ஷை பெற்றுக் கொள்ளும் எண்ணத்துடன் செப்டம்பர் மாதம் கிளம்பிய பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள், சுமார் ஒரு மாதம் பயணம் செய்து, அக்டோபர் மாதம் சிருங்கேரியை சென்றடைந்தார்.
‘வாழ்வின் இன்பங்கள் விரைவில் திகட்டி விடும்; துக்கங்கள் என்றும் தொடர்ந்து வரும் என்றாலும் வாழ்வில் நாம் வைத்துள்ள குறிக்கோள் நம்மைச் சீராக இயக்கிச் செல்லும்; சொந்த வாழ்வின் சோகங்களை  புறந்தள்ள வைக்கும்; வாழ்க்கையில் நம்பிக்கைகள் முக்கியம்; நமக்கேற்ற பிடிமானங்களைத் தேர்வு செய்து கொள்வது மிக முக்கியம்; இப்போது எனக்குத்  தேவை ஒரு நல்ல ஆசான்….எனக்கு விழிப்புணர்வு தரவல்ல ஆசான். அதன் மூலம் நான் ஆன்மீகப் பயணத்தை தொடர்ந்து கொண்டு எனது மிஞ்சிய வாழ் நாட்களைக் கழித்து விட வேண்டும்’ என்ற எண்ண அலைகளில் மிதந்தவாறு மன வைராக்கியத்துடன் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் சிருங்கேரி மடத்தை சென்று அடைந்தார்.
அங்கு சென்றவர் யாருடனும் பேசவில்லை; யார் கேட்ட கேள்விகளுக்கும்   ஒரு விரக்தி கலந்த சிரிப்பும், மௌனமுமே அவரது பதிலாக அமைந்து இருந்தது. சிருங்கேரி மடத்தில் மூன்று அல்லது நான்கு மாதம் தங்கி இருந்து அங்கு நடைபெற்ற அனைத்து நியமங்களிலும் மெளனமாக இருந்தபடி பங்கு கொண்டார். ஒரு நாள் மனம் திறந்து சிருங்கேரி மஹா ஸன்னிதானத்திடம் தனது  மன நிலையை எடுத்துக் கூறி தனக்கு  தீட்ஷை  தந்து  அங்கு தங்கி கொள்ள அருள் புரியுமாறு கேட்டுக் கொண்டார்.
சிருங்கேரி சாரதா பீடத்தின் 34வது ஆச்சார்யரான ஸ்ரீ சந்திரசேகர பாரதி எனும் மஹா ஸ்வாமியின்  நினைவாற்றல் அபாரமானது, அவரது புத்திசாலித்தனம் பிரகாசமானது; தொலை நோக்குப் பார்வைக் கொண்டவர். எந்தவொரு உலக ஆசைகளும் இல்லாமல் எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு இருந்து வந்ததினால்,  அவர் உண்மையிலேயே  சிறந்த துறவியாக கருதப்பட்டார். கடவுளை நம்பாதவர்களைக் கூட, தமது பார்வையிலேயே தெய்வ நம்பிக்கைக் கொண்டவர்களாக மாற்றும் அரிய சக்தி அவருக்கு இருந்தது.  அவரால் எந்த ஒரு விஷயத்தையும் மிக எளிமையாக விளக்க முடிந்தது.  மக்களை தர்ம வழியில் அழைத்துச் செல்வதற்காகவே தன்னை முற்றிலும் அர்பணித்துக் கொண்டிருந்தவர்.
காஞ்சி சங்கர மடத்தை பரமாச்சார்யா எனப்பட்ட ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள்  நிர்வகித்துக் கொண்டிருந்த தருணத்தில், சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியாக  இருந்த  ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள்   என்ற இருவருமே தெய்வீகமான அருளாளர்கள். ஒரே தருணத்தில் இரண்டு ஸ்ரீ சந்திரசேகரர்கள் இரு வேறு மடங்களின் தலைமையை ஏற்று நடத்தியது  பராசக்தியின் விளையாட்டு அல்லவா?
கல்ப விருக்ஷத் தோட்டத்தில் எண்ணற்ற மரங்கள் உள்ளன,  அந்த தோட்டத்தில் அநேக  பூக்களும் உள்ளன. அந்த மரங்களும், அந்தப் பூக்களில் இருக்கும் தேனீக்களும் எண்ணிக்கையில் அடங்காதவை.  அதே போன்ற எண்ணிக்கையில் அடங்காத  அளவிலான ஞானம், நினைவாற்றல், தொலை நோக்குப் பார்வையைக் கொண்டவர் சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியான ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஆவார்.
அப்படிப்பட்டவரிடம் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் சென்று தனது மனக் குமுறல்களைக் கூறி விட்டு   தீட்ஷை கேட்டபோது, அவரது வாழ்க்கை எப்படிப்பட்டதாக   இருக்க உள்ளது என்பதை ஞான திருஷ்டி மூலம் அறிந்து கொண்டவர் அவருக்கு ‘பஞ்சாக்ஷரி மந்திரமான ‘ஓம் நமச்சிவாய எனும் மந்திரத்தை’  தீட்ஷையாக  கொடுத்து, அதை ஜெபித்துக் கொண்டிருக்கும்படி இருக்குமாறும்,   சிருங்கேரியில் இருந்து  கிளம்பி திருமண்ணாமலையில் இருந்த ஸ்ரீ ரமண மஹரிஷி அவர்களின் ஆஸ்ரமத்தில் சென்று இருக்குமாறும், அங்கு அவருக்கு குருவின் தீட்ஷை கிடைக்கும் வழி  தெரியும் என்றும் அறிவுறுத்தி அனுப்பி விட்டார்.
அதுவரை பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளை அனைவரும் ஸ்ரீ நரசிம்மர் என்றே அழைத்து வந்தார்கள். ஆனால்  எப்போது சிருங்கேரி ஸ்வாமிகளிடம் இருந்து   பஞ்சாக்ஷரி மந்திர உபதேச தீட்ஷை பெற்று விட்டாரோ அது முதல் ஸ்ரீ நரசிம்மர் என அறியப்பட்டவர் ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் ஆகி விட்டார். ஸ்வாமிகள் என்ற அடைமொழி இங்கு, தெய்வீக மகான் என்ற நிலையின் முதல் படி ஆகும்.

……………… தொடர்கின்றது : திருவண்ணாமலை பயணம்