கடையிற் ஸ்வாமிகள்
  
-சாந்திப்பிரியா-

 

நாம் சித்தர்களைப் பற்றி நிறையவே படித்திருந்தாலும், அவர்களில் பலரது வாழ்க்கை வரலாறு சரிவரத் தெரியவில்லை.   நமக்கு தெரிந்த உண்மைகளையும், வரலாறுகளையும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அவற்றை யார் வேண்டுமானாலும் பிரசுரித்துக் கொள்ளலாம் என்ற அனுமதியை தராமல் தம்முடைய இணையதளத்தில் மட்டுமே அவற்றைப் படிக்க வேண்டும் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் காப்புரிமை சட்டத்தின் கீழ் அவற்றை வெளியிட்டு வருவதினால் அனைவருக்கும் அனைத்தும் தெரிவது இல்லை. புத்தகங்களை பிரசுரிக்கும்போதும், தனிப்பட்ட அனுபவங்களை, முக்கிய நிகழ்ச்சிகளை இணையதளத்தில் பிரசுரிக்கும் போதும்  காப்புரிமை பெறுவதில் தவறில்லை. பொதுவான அனைத்து செய்திகளையும், ஏன் ராமாயணம், மகாபாரதம், அவற்றில் உள்ள கதைகள் , சித்தர்களின் வாழ்கை வரலாறு, ஆலய வரலாறு என அனைத்திற்கும் இணையதளங்கள் ஏன் காப்புரிமை பெற்று வெளியிடுகின்றன ? உண்மையில் ஆன்மிகம் பரவ  வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அப்படி ஏன் செய்ய வேண்டும்? இந்தக் கேள்வியை   அனைத்து இணைய மற்றும் வலை தளங்களும் யோசிக்க வேண்டும். இந்தியாவில் பல சித்தர்கள் இருந்துள்ளனர். அது போல அண்டை நாடான இலங்கையிலும் இங்கிருந்து சென்றுள்ள சில சித்தர்கள் தம்முடைய  மேன்மைகளை காட்டி தனி முத்திரைப் பதித்து உள்ளார்கள். ஸ்ரீ லங்காவில் இருந்த சில புகழ் பெற்ற சித்தர்கள் சிலரின் பெயர்கள் கீழே தரப்பட்டு உள்ளது . இவர்களைப் பற்றிய செய்திகள் இங்கொன்றும், அங்கொன்றுமாக உள்ளன.

  • கடையிற் ஸ்வாமிகள்
  • செல்லப்பா ஸ்வாமிகள்
  • சிவயோக ஸ்வாமிகள்
  • சித்தானைக் குட்டி ஸ்வாமிகள்
  • பெரியானைக் குட்டி ஸ்வாமிகள்
  • சிவ சித்தர் ஸ்வாமிகள்
  • பரமகுரு ஸ்வாமிகள்

இந்தியாவிலிருந்து அன்றைக்கு ஈழம் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீலங்காவிற்கு சென்ற நான்கு சித்தர்களின் பரம்பரை இன்று ஸ்ரீ லங்கா முழுவதிலுமே காலூன்றிப் பரவி உள்ளது.  இந்த நால்வரில் முதன் முதலாக  ஈழத்திற்கு சென்ற சித்தர்களில் ஒருவரே கடையிற் ஸ்வாமிகள் என்பவர் ஆவார். இவரை செட்டியார் இனத்தை சார்ந்தவர் என்கிறார்கள். ஆனால் நதி மூலமும் ரிஷி மூலமும் தெரியக் கூடாது என்பதினாலோ என்னவோ, அவர் யார், அவருடைய பெற்றோர்கள் யார், அவருடைய உண்மையான பெயர் என்ன என்பது எதுவுமே யாருக்கும் தெரியவில்லை.

கடையிற் ஸ்வாமிகளைக் குறித்து பொதுவாக கூறப்படும் செய்தி என்ன என்றால் ‘கடையிற் ஸ்வாமிகள் கர்நாடக மாநிலத்தில் பெங்களுர் நகரில் ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் ஒரு நீதிபதியாக பொறுப்பில் இருந்தவர். அவர் நீதிபதியாக இருந்தபோது அவருடைய வழக்கு மன்றத்தில் வந்திருந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை கொலையாளி எனக் கருதி அவருக்கு தூக்கு தண்டனை தர வேண்டிய நிலையில் தள்ளப்பட்டார். ஆனால் அவர் மனதிற்கு அந்த தண்டனை சரியானதாக  தெரியவில்லை. அன்று இரவு முழுவதும் அவர் மனதில் ஓடிய எண்ணம் ஒன்றுதான்.  இந்த பூமியில் பிறந்தவனுக்கு தூக்கு தண்டனை கொடுப்பதற்கு நான் யார்? அந்த எண்ணம் மனதில் ஏற்படுத்திய அதிர்வு அலையில் மறுநாளே நீதிபதி பதவியை தூக்கி எறிந்து விட்டு எங்கோ சென்று விட்டார்’.

அந்த காலகட்டத்தில்தான் ஸ்ரீ லங்காவை சேர்ந்த யாழ்பாணத்தை சேர்ந்த வணிகரான திரு வைரமுத்து செட்டியார் என்பவர் அவ்வப்போது தமிழ் நாட்டிற்கு வருகை தந்து கொண்டு இருந்துள்ளார். அவர் ஆன்மீகவாதி. அவர் சிருங்கேரி சங்கராச்சாரியார்  ஸ்ரீ நரசிம்ம பாரதியின் பக்தராக இருந்திருக்க வேண்டும்.  ஸ்ரீ நரசிம்ம பாரதி தனது வாழ்நாளில் சுமார் நாற்பது ஆண்டுகளை அங்கும் இங்கும், கிராமம் கிராமமாக அலைந்து கொண்டு ஆன்மீகத்தைப் பரப்பி வந்தவர். தமிழ்நாட்டில் அந்த காலத்தில் வாழ்ந்து இருந்த ஆன்மீகவாதிகளில் பெரும் புகழ் பெற்று இருந்தவர். அவரை தரிசிக்க திரு வைரமுத்து செட்டியார் தமிழ்நாட்டிற்கு வருவது  உண்டு. ஸ்ரீ நரசிம்ம பாரதி ஸ்வாமிகளை ஸ்ரீ லங்காவிற்கு (அன்றைய ஈழம்) அழைத்து வந்ததும் வைரமுத்து செட்டியார் என்பார்கள்.  அப்படிப்பட்ட ஸ்ரீ நரசிம்ம பாரதி ஸ்வாமிகளை  சந்திக்க தமிழ் நாட்டிற்குச் சென்று இருந்த ஒரு கட்டத்தில்தான் திரு வைரமுத்து செட்டியாருக்கு கடையிற் ஸ்வாமிகளை சந்திக்கும் பாக்கியம்  ஏற்பட்டு இருக்க வேண்டும். அதனால்தான் திரு வைரமுத்து செட்டியார் கடையிற் ஸ்வாமிகளை அன்றைய ஈழ நாட்டிற்கு 1862 ஆம் ஆண்டில் அழைத்து வந்துள்ளார். இது குறித்து சரியான தகவல் கிடைக்கவில்லை என்றாலும், கடையிற் ஸ்வாமிகளை ஈழத்திற்கு 1860 அல்லது 1862 ஆம் ஆண்டு வாக்கில் அழைத்து வந்தவர் திரு வைரமுத்து செட்டியார் என்பது அங்கிருந்த வாய் மொழிச் செய்திகள் மூலம் தெளிவாகின்றது .

கடையிற் ஸ்வாமிகள் அனைத்து இடங்களுக்கும் கால் நடைப் பயணத்தையே மேற்கொண்டு இருந்துள்ளார்.  ஈழத்துக்கு வந்தபோது மட்டும் கப்பலில் பயணித்து உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் கடையிற் ஸ்வாமிகள் யாரிடம் தீட்ஷை பெற்று இருந்தார் என்பது தெரியவில்லை.

சித்தர்கள் யாருடைய வீட்டிலும் ஒரு நாளைக்கு மேல் பிட்ஷை எடுத்து உண்டதில்லை. அது சித்தர்களின் ஒரு நியதியாக இருந்தது. அந்த நிலையில் ஈழத்துக்கு வந்த கடையிற் ஸ்வாமிகள் முதன் முதலாக உணவு அருந்தியது கந்தர் மட அன்னாதான சத்திரம் என்பதை நிறுவி இருந்த திரு வைரமுத்து செட்டியாரின் வீட்டில்தான். ஆனால் பிற்காலத்தில் பெரும் புகழ் பெற்று விளங்கிய  பால ஸ்வாமிகள் என்ற சித்தரின் தாயாரான சின்னாச்சிப் பிள்ளை என்ற பெண்மணியின் கையால்தான் அதே கடையிற் ஸ்வாமிகள் சில நாட்கள் உணவு அருந்தி உள்ளார் என்று கூறப்படும் செய்தியானது அதிசயமான செய்தியாக உள்ளது. அதன் காரணம் அந்த தாயார் கையால் உணவு அருந்தியவர்கள் சித்தர்களாகவோ அல்லது மகான்களாகவோ மட்டுமே இருந்துள்ளார்கள். அந்த காலத்தில் யாழ்ப்பாண நகரின் மத்தியிலே பெரிய கடை என்று அழைக்கப்படும் கட்டிடம் ஒன்று இருந்துள்ளது. அங்கு வணிக நிறுவனங்கள் நிறைய இருந்தன. அனைத்து வியாபாரிகளும் வந்து கூடும் இடமாக அந்தக் கட்டிடம் அமைந்து இருந்தது.  அந்தக் கட்டிடத்திற்குப் பக்கத்தில் இருந்த பெரிய மரத்தின் கீழ்தான் கடையிற் ஸ்வாமிகள் வந்து அமர்ந்து கொண்டு இருப்பார். உடை, உணவு, தூக்கம் மற்றும் அனைத்தையும் மறந்து ஒரு பைத்தியக்காரரைப் போல அங்கு அமர்ந்து இருப்பார். அகவே யாரோ ஒரு பைத்தியம்தான்  மரத்தின் கீழ் இருக்கிறது என்றே முதலில் மக்கள் கருதினர். சந்தடி நிறைந்த சந்தையின் மத்தியிலே அமைதியுடன் இருந்தவரை  எல்லோரும் பைத்தியம் என்று கூற அவர்களுக்கு பதில் ஏதும் கூறாமல் புன்முறுவல் பூத்தபடிதான் அவர் அமர்ந்து இருப்பார்.

கடையிற் ஸ்வாமிகளின் நடவடிக்கைகள் மற்றும் உருவம் போன்றவை ஒரு பைத்தியக்காரரைப் போலவே  இருந்ததினால் ஒருமுறை காவல் துறையினர் இவரைப் பிடித்து யாழ்பாணத்தில் இருந்த மனநல மருத்துவ மனையில் சேர்க்க வேண்டும் என்பதற்காக சிறையில் அடைத்து வைத்திருந்தனர். மறுநாள் பூட்டி இருந்த சிறைக் கதவுகளை திறந்து  பார்த்தபோது இவர் சிறையில் இருக்கவில்லை என்றும், பூட்டிய கதவும் பூட்டியபடியேதான் இருந்துள்ளதாகவும் கூறுகின்றார்கள். அந்த நிலையில் யாழ்பாணத்திற்கு தனக்கு தீக்ஷை தர  ஒரு ஆன்மீக ஆசான் தேவை என்பதற்காக அங்கு வந்த ஸ்வாமி செல்லப்பா கடையிற் ஸ்வாமிகள் பைத்தியம் அல்ல, அவர் மாபெரும் சித்தர் என்பதைக் கண்டு பிடித்தது மட்டும் அல்லாமல்  தானே அவருக்கு சிஷ்யராக மாறினார்.

கடையிற் ஸ்வாமிகள் ஜாதி பேதம் பார்த்தது இல்லை. அவரைப் பொறுத்தவரை அனைவரும் ஒன்றே. ஸ்வாமிகள் விசித்திரமான குணத்தைக் கொண்டவராகவே இருந்தார். அவரை சுற்றி இருந்தவர்கள் அவருக்கு இறைச்சி உணவு, சாராயம் போன்றவற்றைக் கொடுத்தாலும் அவற்றையும் அவர் அன்புடன் பெற்றுக் கொண்டு அவற்றை உண்டு அவர்களை திருப்திப்படுத்தினார். வெளிப் பார்வைக்கு அவற்றை அவர் உண்டது போலவும், குடித்தது போலவும் மாயத் தோற்றத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். உண்மையில் ஸ்வாமிகள் அவை எவற்றையும்  தன கையால் கூடத் தொடவில்லை  என்பதே சத்தியமான உண்மை.  இப்படிப்பட்ட விசித்திரமான குணங்கள் தத்தாத்திரேய அவதாரத்திற்கு மட்டுமே அமைந்து இருந்துள்ளது. ஆகவே கடையிற் ஸ்வாமிகள் தத்தாத்திரேய மரபை சார்ந்து இருந்திருக்கலாம்.  ஆத்மா வேறு, உடல் வேறு. அவர்கள் உண்பது போலவும், குடிப்பது போலவும் வெளிப் பார்வைக்கு தோற்றம் இருந்தாலும், அவை எதுவுமே அவர்கள் உடலில் சென்றது இல்லை. அவை ஆவியாகி சென்று விடுகின்றன என்பதை உண்மை. அதற்கு ஒரு உதாரணமாக நடந்த ஒரு நிகழ்ச்சி இது.

கடையிற் ஸ்வாமிகள் வீடு வீடாக சென்று பிச்சை எடுத்து உண்பார். ஜாதி பேதம் பார்த்ததில்லை. யார் எதைக் கொடுத்தாலும் உண்பார் என்பதினால்  மக்கள் மத்தியில் அவருக்கு ஆழ்ந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது. இப்படியாக இருக்கையில் ஸ்வாமிகள்  மது அருந்துகிறார் என்று கேள்விப்பட்டபோது அவருடைய சிஷ்யரான ஸ்வாமி செல்லப்பா ஆச்சர்யம் அடைந்தது மட்டும் அல்ல கோபமும் கொண்டார். என்ன இது, கடையிற் ஸ்வாமிகள் மது அருந்துகிறாரா? நானே சென்று அதை சோதனை செய்கிறேன் என முடிவு செய்து ஒரு பாட்டில் சாராயத்தை வாங்கிக் கொண்டு கடையிற் ஸ்வாமிகளிடம் சென்றார். சாராய பாட்டிலை தன் ஆடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு அமர்ந்தார். உண்மையான சித்தருக்கு நடப்பது தெரியாதா என்ன. சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு, கடையிற் ஸ்வாமிகள் புன்முறுவலோடு, ‘டேய்,  நீயும் நானும் சேர்ந்து இப்போ குடிக்கலாம்டா….எடு ..பாட்டிலை வெளியில் எடுடா… இரண்டு பேருமே மொந்தையை சேர்ந்தே அடிப்போம்’ என்றிருக்கிறார். செல்லப்பருக்கு தூக்கி வாரிப் போட்டது. தான் கொண்டு வந்திருந்த புட்டியை எடுத்து கடையிற் ஸ்வாமிகள் முன் வைத்திருக்கிறார். ‘மூடியைத் திறடா’ என கடையிற் ஸ்வாமிகள் கூற , ஸ்வாமி செல்லப்பாவும் பாட்டிலின் மூடியைத் திறந்தார். என்ன அதிசயம் . திறந்த பாட்டிலில் இருந்த அத்தனை சாராயமும் ஆவியாகி  இருந்தது. உள்ளே ஒன்றுமே இல்லை. அப்போதுதான் ஸ்வாமி செல்லப்பாவிற்கு  கடையிற் ஸ்வாமிகள் குடிப்பதாக கூறிய சாராயம் மற்றும் உண்பதாகக் கூறிய மாமிசத்தின் கதை மட்டும் அல்ல கடையிற் ஸ்வாமிகளின் தெய்வீகமும் புரிந்தது.

கடையிற் ஸ்வாமிகள் உயிருடன் இருந்தவரை அவரை யாருமே புகைப் படம் எடுத்திருக்கவில்லை என்பது இன்னொரு அதிசயமான விஷயம் ஆகும். அவரைப் போலவே  பெங்களூரில் இருந்த இன்னொரு  முனிவரான ஒடுக்கத்தூர் ஸ்வாமிகளையும் யாரும் புகைப்படம் எடுத்ததில்லை. இதை எதற்காக கூற வேண்டி உள்ளது என்றால் உண்மையான தெய்வீக மகான்கள் மற்றும் சித்தர்கள் என்பவர்கள் தம்முடைய உருவங்கள் மக்கள் மனதில் பதிந்து இருக்க வேண்டுமே தவிர விளம்பரத்திற்காக படங்களை எடுப்பதையும், ஆடம்பரங்களையும் என்றுமே விரும்புவதில்லை. ஆகவே கடையிற் ஸ்வாமிகளின் உருவம் எப்படி இருக்கும் என்பதை வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு ஓவியர் வரைந்துள்ள சித்திரமே இந்த உலகிற்குக்  கிடைத்து உள்ளது. அதேயே மேலே பதிவு செய்து உள்ளேன்.

தனக்கென எதையும் ஸ்வாமிகள்  வைத்துக் கொண்டது இல்லை. மண், பெண், பொன் என எந்த ஆசையும் இல்லாதவர்.  அவரால் ஆன்மீக அமைதி பெற்றவர்கள் ஏராளம் உண்டு. அவருடைய மகிமைகளை நேரடியாக அனுபவித்தவர்களும் பலர் உண்டு. பிரச்சனைகளுடன் அவரிடம் சென்றால் வந்தவர்களுடைய துன்பங்கள் தாமாகவே விலகி இருப்பதைக் கண்டார்கள்.  பலருடைய நோய் நொடிகள்  இவரைப் பார்த்த மட்டில் குணமாகி உள்ளன. தீராத வியாதிகள் குணமடைந்து உள்ளனவாம்.  இவருடைய அருளினால் பலருக்கும்  பல நன்மைகள்  கிடைத்துள்ளன .  கடும் குளிரோ, வெயிலோ அவருக்கு எந்த விதமான உபாதையும் ஏற்படுத்தவில்லை. மேலாடை இல்லாமலேயே வாழ்ந்து கொண்டு இருந்தார். அவருக்கு என பெரிய அடியார் கூட்டமே அந்த காலத்தில் இருந்தது எனக் கூறுகிறார்கள். எளிமையாக மரத்தடியில் வாழ்ந்திருந்தவாறு  தன்னிடம் வந்த அனைவருக்கும் அருள் புரிந்து மக்களின் மனதில் அவர் மீது தீராத பக்தியை ஏற்படுத்தி உள்ளார். அவர் சித்து வல்லபத்தைக் கைக் கொண்டவர். இரும்பை தங்கமாக மாற்றிக் காட்டியவர் என்கிறார்கள். ஆனால் அதை யாருடைய தனி வளத்திற்காகவும் செய்ததில்லையாம். கடையிற் ஸ்வாமிகள் தமது இறுதிக் காலத்தில் இவர் வண்ணார்பண்ணை எனும் இடத்தில் இருந்த சேர்ந்த நீராவியடி என்ற இடத்துக்குச் சென்று அங்கு தங்கினார். அதன் பின் அங்கிருந்து வெளியில் எங்கும் செல்லாது வாழ்ந்து வந்தவர் அங்கேயே சமாதி அடைந்தாராம். அவருடைய சமாதி வடக்கே யாழ்ப்பாணத்தில் நீராவியடியில் ஒரு ஆலயத்தில் உள்ளதாம்.

 

ஸ்வாமிகளின்  சமாதி ஆலயம்