திருவண்ணாமலை பயணம்
1925 ஆம் ஆண்டு சேலத்தில் இருந்து கிளம்பி சிருங்கேரிக்கு சென்று, சிருங்கேரி ஸ்வாமிகளிடம் இருந்து பஞ்சாக்ஷரி மற்றும் ஓம் நமச்சிவாய மந்திர தீட்ஷை பெற்றுக் கொண்டு, அவரது வழிகாட்டுதலின்படி நடை பயணம் மேற்கொண்டார். நடந்து சென்று கொண்டு இருக்கையில் ஆங்காங்கே எவருடனாவது வண்டியில் ஏறி இலவசமாக பயணித்துக் கொண்டு பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் திருமண்ணாமலையில் இருந்த ரமண மஹரிஷியின் ஆஸ்ரமத்தை அடைந்தார்.
காலை எழுந்தவுடன் காப்பி, அடுத்து எட்டு மணிக்கு சிற்றுண்டி மற்றும் காப்பி , மதியம் சாப்பாடு, மாலை சிற்றுண்டி, காப்பி, இரவு உணவு என்ற வித விதமாக, ராஜ கம்பீரமாக சாப்பிட்டுக் கொண்டு இருந்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள், கையில் காசில்லை என்பதினால் ஆங்காங்கே யாராவது கொடுத்த உணவையோ அல்லது ஆலயங்களில் கிடைத்த பிரசாதங்களையோ உண்டவாறு பயணத்தை மேற்கொண்டு திருவண்ணாமலையை அடைந்தது மிகப் பெரிய சாதனை ஆகும். அது அவருடைய வைராக்கியத்தை எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்து இருந்தது.
திருவண்ணாமலையின் பெருமை எப்படிப்பட்டது என்றால் ஆன்மீகத் தேடலில் வரும் பக்தர்களுக்கு அது ஒரு தபோ வனமாக விளங்குகிறது. அண்ணாமலை என்பதன் பொருள் அணுகுதல் அல்லது நெருங்குதல் என்பதாகும். அதில் உள்ள பாதி வார்த்தையான அண்ணா என்றால் நெருங்கவே முடியாதது என்பதாகும். கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. அதனால்தான் பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத லிங்கமான நெருப்பு மலையாக அது இருந்தது என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது. ஒரு வகையில் பிரம்மன் மற்றும் திருமாலின் ஆணவம் அழிந்த தலம் அது எனலாம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம் திருவண்ணாமலை மட்டுமே என்பதினால்தான் ஸ்ரீ ரமண மஹரிஷி அங்கு தங்கி இருந்துள்ளார் என்பதில் வியப்பு இல்லை.
அப்படிப்பட்ட மகானிடம் சிருங்கேரி ஸ்வாமிகள் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியை அனுப்பினார் என்பதற்கும் ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும். இந்த உலகில் காரணம் இன்றி எதுவும் நடப்பது இல்லை. எதுவும் தன்னிச்சையாக நடப்பதில்லை; இரவுக்கு ஒரு காரணம் என்றால் பகலுக்கு ஒரு காரணம் உண்டு ; தோல்விக்கு ஒரு காரணம் என்றால் வெற்றிக்கு ஒரு காரணம் இருக்கும்; கவலைக்கு ஒரு காரணம் என்றால் மகிழ்ச்சிக்கும் ஒரு காரணம் இருக்கும்; வீழ்ச்சிக்கு ஒரு காரணம் என்றால் எழுச்சிக்கும் ஒரு காரணம் இருக்கும்; இழந்ததற்கு ஒரு காரணம் என்றால் அடைவதற்கும் ஒரு காரணம் இருக்கும்; காரணம் இன்றி மரங்களின் இலைகளும் அசைவதில்லை, மழையும் பொழிவது இல்லை, மனிதர்களும் பிறப்பது இல்லை.
திருவண்ணாமலைக்கு சென்ற பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் முதலில் அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்கு சென்று வழிபாடு நடத்திய பின்னர் ஸ்ரீ ரமண மஹரிஷியைத் தேடி அவர் மலையின் சற்று மேல் பகுதியில் தங்கி இருந்த ஸ்கந்தாஸ்ரமத்தை அடைந்து அவரை வணங்கினார். தன்னை சிருங்கேரி ஸ்வாமிகள் அவரிடம் அனுப்பி வைத்த காரணத்தையும் கூற, ஸ்ரீ ரமண மஹரிஷி ஒன்றுமே கூறாமல் அவரை அங்கிருந்த ஒரு குகையில் அமர்ந்து கொண்டு, கண்களை மூடிக்கொண்டு, வேறு சிந்தனை இன்றி தொடர்ந்து ‘நான் யார்’ என்ற கேள்வியை எழுப்பிய வண்ணம் இருக்குமாறும், அதற்கு விடை கிடைக்கும்வரை அந்த ஆஸ்ரமத்திலேயே தங்கி இருக்குமாறும் கூறினார். மலை அடிவாரத்தில் பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகள் தவம் இருந்த கட்டிடத்தை கீழே உள்ள படத்தில் காணலாம்.
ஸ்ரீ ரமண மஹரிஷி அறிவுறுத்தியபடி ஒரு குகையில் 3 ஆண்டுகள் தியானம் செய்தார். அங்கே, அவர் தனக்குள் ஒரு விழிப்புணர்வை வளர்த்துக் கொண்டார். அவர் தியானம் செய்த கட்டிடம் கீழே காணப்படுகின்றது.
ஸ்ரீ ரமண மஹரிஷியின் முக்கியமான உபதேசம் ‘நான் யார்’ என்னும் ஆன்மாவின் ஆய்வு அல்லது ஆத்ம விசாரணை ஆகும். ஞான மார்க்கத்தில் தன்னை அறிதல் அல்லது முக்தி பெறுதலே அவரது இந்த போதனையின் நோக்கம். ‘நான் யார்?’ என்ற கேள்வியின் மூலம் சுயத்தின் தன்மையை ஆராயும் முறையை ஸ்ரீ ரமணர் தொடர்ந்து பின்பற்றி வந்துள்ளார். ஸ்ரீ ரமண மஹரிஷி அருணாசலேஸ்வர அக்ஷரமணிமாலா மற்றும் அருணாச்சல ஸ்துதி பஞ்சகம் போன்றவற்றை இயற்றி உள்ளார்.
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் அவற்றில் இருந்த அக்ஷரங்களை படித்துக் கொண்டு, தான் கடைப்பிடித்து வந்திருந்த நித்ய கடமைகளையும் செய்து கொண்டு, ஆஸ்ரமத்தில் நடைபெற்ற அனைத்து சத்சங் நிகழ்வுகளிலும் பங்கேற்றுக் கொண்டு, கிரி வலமும் சென்று கொண்டு காலத்தைக் கடத்தினாலும், ‘நான் யார்’ எனும் தாரக மந்திரத்தை இடைவிடாமல் மனதில் கூறிக் கொண்டே இருந்தார். நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன. ‘நான் யார்’ என்பதற்கு விளக்கம் கிடைக்கவில்லை. ஆனால் அதனால் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் மனம் தளரவில்லை. மனம் அமைதியாகவே இருந்து வந்தது.
அவர் தங்கி இருந்த நாட்களில் பலரிடமும் இருந்து கிடைத்த, ஸ்ரீ ரமண மஹரிஷி குறித்த அறிய தகவல்களை, குறிப்புகளாக எழுதி வைத்துக் கொண்டு இருந்தார். இடை இடையே ஸ்ரீ ரமண மஹரிஷி ஸ்வாமிகளை சந்திக்க வந்து கொண்டிருந்த ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகளிடமும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்.
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் பக்தி மிக்க பஜனைப் பாடல்களோடு அதற்கேற்ற நடனங்களை ஆடுவதையும் விரும்பியவர். ஆகவே ரமணாஸ்ரமத்தில் இருந்தபோது அங்கு அவ்வப்போது அவர் பஜனைப் பாடல்களை மக்களோடு சேர்ந்து பாடி பக்தி பூர்வமாக நடனம் ஆடுமாறு கூறுவார். பஜனைப் பாடல்களை பாடுவது அவருக்கு அவர் பெற்றோர்களுடன் வாழ்ந்த காலத்தில் இருந்தே பழக்கம் ஆகும்.
தெய்வ பக்தி நடனங்களும் பாடல்களும்
உணர்வு நமது நரம்புகளை தூண்டி விட்டு மனதை தெய்வீகத்துடன் இணைத்து விடுகின்றது. பஜனைப் பாடல்களைப் பாடும்போது, மனநிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. பஜனைகள் நம் உடலில் பிராண சக்தியின் ஓட்டத்தை மேம்படுத்தும்; குறிப்பாக, மன அழுத்தம் குறைகிறது, அதனால் நமது உடலின் ரத்த அழுத்தமும் குறைகிறது; மனநிலை மேம்படுகிறது, மேலும் பக்தியும் ஆன்மீக உணர்வும் வளர்கின்றன; பாடும்போது மனதை அமைதிப்படுத்தி, கவனத்தை ஒருமுகப்படுத்த முடிகிறது. பஜனைகள் ஆன்மீக உணர்வுகளை வளர்க்கின்றன. இது நம்மை தெய்வத்திடம் மேலும் நெருங்க வைக்கிறது ‘ஹே கிருஷ்ணா, முகுந்தா,என்னைக் காப்பாற்று’ என வாயை விட்டு வார்த்தைகளைக் கூறி பிரார்த்தனை செய்து பாருங்கள், அது மனதை இளக வைக்காது; அதை ஸ்லோகமாக கூறிப் பாருங்கள், அதுவும் இதயத்தை தொடாது; ஆனால் அதையே அனைவருடன் சேர்ந்து ஒரு ராகத்தோடு பஜனையாக பாடிப் பாருங்கள். உங்கள் மனது அதில் ஒருஷணமாவது லயித்து நிற்கும், அந்த கானம் இதயத்துக்குள் ஊடுருவிச் செல்லும். இந்த உண்மையை உணர்ந்திருந்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் பஜனைப் பாடல்களோடு அதற்கேற்ப நடனங்களையும் ஆடுவதை ஊக்குவித்து வந்திருந்தார். இதை அவரது ஆசிரியர்கள் அவருக்கு பாடல்களை கற்றுவித்து வந்தபோது அவருக்கு கூறி இருந்தார்களாம். அதற்கு உதாரணமாக கிருஷ்ண லீலா நடனங்களை கதையாகக் கூறி உள்ளாராம். இதையும் அவர் ரமணாஷ்ரமத்தில் பஜனைகளைப் பாடிக் கொண்டு இருந்தபோது கூறி மகிழ்வாராம்.
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் திருவண்ணாமலை ஆஸ்ரமத்தில் தங்கி இருந்தபோது ஸ்ரீ ரமண மகரிஷி மற்றும் ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகளைக் குறித்த பல தகவல்களை அங்கு தரிசனத்திற்கு வந்து சென்ற பக்தர்கள் மூலம் அறிந்து கொண்டு அவற்றைக் குறிப்புகளாக எழுதி வைத்துக் கொண்டார். தனக்கு கிடைக்கும் முக்கியமான விஷயத்தைக் குறித்த குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்வது அவர் வழக்கறிஞர் பணி புரிந்த நாட்களில் இருந்தே இருந்து வந்த பழக்கம் என்பதினால் ஆஸ்ரமத்தில் இருந்தபோதும் அதே பழக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
1929 ஆம் ஆண்டு ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகள் சமாதி அடைந்து விட்டார். அவரது மறைவு ஒரு பெரிய இடியாக பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுக்கு இருந்தது. காரணம் அடிக்கடி ஸ்ரீ சேஷாத்திரி மஹான் ஸ்வாமிகளுடன் அவர் மனம் விட்டு உரையாடி தனது சந்தேகங்களுக்கு விடைக் கேட்டுப் பெற்று தெளிவு பெறுவாராம்.
அந்த காலக் கட்டத்தில் தான் ஒரு கட்டத்தில்தான் அங்கு அடிக்கடி வந்து கொண்டிருந்த ஸ்ரீ குழுமணி நாராயண சாஸ்திரி என்பவர் ஒருமுறை ஸ்ரீ சேஷாத்திரி மஹான் குறித்த ஒரு புத்தகத்தை எழுத உள்ளதாக பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளிடம் கூறியபோது அவர் சற்றும் தயங்காமல் ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகளைக் குறித்த குறிப்புகளை அவரிடம் தந்து விட்டார். உண்மையில் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் தானே ஸ்ரீ சேஷாத்திரி மஹான் குறித்த புத்தகம் ஒன்றை எழுத எண்ணி பல குறிப்புக்களை தொகுத்து வைத்து இருந்தார். என்ன காரணத்தினாலோ அது நடைபெறவில்லை என்பதினால்தான் அவற்றை ஸ்ரீ குழுமணி நாராயண சாஸ்திரிகளிடம் தந்து விட்டார்.
ஸ்ரீ சேஷாத்திரி மஹான் குறித்த புத்தகம் ஒன்றை எழுத எண்ணி இருந்து, அது நடைபெற முடியவில்லை என்பது ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுக்கு பெரிய மனக் குறையாகவே இருந்தது என்பதாக பின்னாளில் தெரிந்தது. அதனால்தான் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் ஸ்ரீ ரமண மஹரிஷியைத் குறித்து தாமே ஒரு புத்தகத்தை எழுத விரும்பினாராம். பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் 1931 ஆம் ஆண்டில் Self realization – The Life and Teachings of Bhagavan Ramana Maharishi என்ற நூலை வெளியிட்டாராம். அதற்கு அவருக்கு உதவியவர் அவருடைய முன்னாள் நண்பரும் நீதிபதியாக இருந்த திரு சுந்தரம் செட்டி என்பவர் ஆகும். அந்த புத்தகம் வெளிவந்த பின்னர்தான் ஸ்ரீ ரமணரின் புகழ் பரவலாக அனைத்து இந்தியாவிலும், உலகிலும் பரவியது என்பதே உண்மை.
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுடன் நடந்த ஒரு நேர்காணலில், தான் விழிப்புணர்வு பெற்ற கதையை அவருக்கு கூறுகையில் ஸ்ரீ ரமண மகரிஷி கூறினாராம் ‘நான் விழிப்புணர்வு பெற்ற நாளில் இருந்து என் மனதில் இருந்த மரண பயம் மறைந்து விட்டது. அதற்கு என் எண்ணங்களில் இடமில்லாமல் போய் விட்டது. எனது வாழ்வே ஒரு நீரோட்டமாக இருப்பதால் மரணத்திற்கு பயப்பட வேண்டிய அவசியம் இன்றி போய் விட்டது’.
மற்றொரு முறை ஸ்ரீ ரமண மகரிஷி இன்னொரு பக்தரான போஸ்ட் மாஸ்டர் ஸ்ரீ நாராயணசாமியார் என்பவருடன் பேசிக் கொண்டு இருந்தபோது அந்த பக்தர் தனக்கு ‘வியாதிகளினால் பயமாக உள்ளது’ என்று கூறியபோது ஸ்ரீ ரமண மகரிஷி கேட்டாராம் ‘வியாதி உனக்கா, அல்லது உனது உடலுக்கு வருகின்றதா?’ அதற்கு விடையளித்த பக்தர் கூறினாராம் ‘என்னுடைய உடலுக்குத்தான் வருகின்றது’. மீண்டும் ஸ்ரீ ரமண மகரிஷி கேட்டாராம் ‘நீ யார் ? உனக்கு உண்மையிலேயே மரணம் உண்டா?’. பக்தருக்கு ஒன்றும் புரியவில்லை.
மெளனமாக இருக்க ஸ்ரீ ரமண மகரிஷி கூறினாராம் ‘நீ என்பது ஒரு ஆத்மா என்பதை உணர்ந்து கொள். உனது ஆத்மா என்பது உனது உடல் அல்ல, அது சுதந்திரமானது என்பதினால் அதற்கு மரணம் இல்லை. இந்த உண்மையை மனதில் ஆழமாக பதிவு செய்து கொள், அப்போது உனக்கு மரண பயம் ஒழிந்து விடும்’. இந்த செய்தியைக் அருகில் இருந்து கேட்ட பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகள் இந்த உரையாடலையும் குறிப்பெடுத்துக் கொண்டாராம்.
ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமத்தில் பல ஸ்வாமிகள் அவருக்கு சீடர்களாக இருக்க தவம் கிடந்தார்கள், அவர்களில் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளும் ஒருவராவர். ஸ்ரீ ரமண மகரிஷி மஹா சமாதி அடைந்த பின்னர், 1950 முதல் 1964 வரை ஆசிரமத்தின் செயல்பாடுகளிலும் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் பங்கு பெரும் அளவில் இருந்தது. தன்னை ஸ்ரீ ரமண மகரிஷியிடம் சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியான ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் அனுப்பியதால் தனக்கு ஸ்ரீ ரமண மகரிஷியே குருவாக கிடைப்பார் என்ற நம்பிக்கையில்தான் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளும் அங்கு தங்கியிருந்தார் என்று நினைக்க தோன்றுகிறது.
நன்னிலம் நாராயண தேசிகரின் மாணவர் அருள் திரு தாண்டவராய ஸ்வாமிகள் அருளிய கைவல்ய நவநீதம் தமிழ் அத்வைத நூல்களில் தலை சிறந்தது. இந்நூல், ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே நிகழும் உரையாடலாகவும், ஒரு தந்தை மகனுக்கு அறிவுரை கூறுவது போலவும் எழுதப்பட்டுள்ளது; 293 பாடல்களைக் கொண்டுள்ளது. ஆகவே கைவல்ய நவநீதம் எனும் நூல் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியால் அவரிடம் வந்த சாதகர்களுக்கு போதிக்கப்பட்டது. வேதாந்தக் கல்வியின் ஒரு பகுதியாக, பகவான் ஸ்ரீ ரமணரிடம் தனக்கு ‘கைவல்ய நவநீதத்தை’ போதனை செய்யுமாறு பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் வேண்டுகோள் விட அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட ஸ்ரீ ரமண மகரிஷி அதை பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுக்கு கற்றுக் கொடுத்தார். ஒரு வாரத்தில் தனது போதனையை முடித்தார்.
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் அற்புதமான புத்திசாலித்தனம் மற்றும் புரிதலை பற்றி பகவான் இப்படியாக குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது. ‘பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் கூர்மையான மனம் கொண்டவராக மட்டுமே இல்லாமல் கூர்மையான அறிவும் கொண்டவராக உள்ளார்’. பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் ஒரு துறவியைப் போன்ற வாழ்க்கையில் இருந்து கொண்டு ஸ்ரீ ரமணரின் அனுமதியுடன் பல சாதுக்களையும் ஸ்ரீ ரமண மஹரிஷியின் அருளை பெற்றுக் கொள்ள கொள்ள உதவினாராம்.
1925 ஆம் ஆண்டு சேலத்தில் இருந்து கிளம்பி சிருங்கேரிக்கு சென்று, 1926 ஆம் ஆண்டு அங்கிருந்து கிளம்பி ரமணாஸ்ரமத்தை சென்று அடைந்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள், 1929 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை அங்கு தங்கினார். சுமார் மூன்று ஆண்டுகள் அங்கிருந்தவர் வந்த நோக்கத்தை தன்னால் அடைய முடியவில்லை என்ற விரக்தியில் ஸ்ரீ ரமண மகரிஷியை ஒரு நாள் சந்தித்து தனக்கு இன்னமும் மன அமைதி கிடைக்கவில்லையே, தனக்கு தீட்ஷை தரமாட்டீர்களா கேட்டதும், சற்று நேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ ரமண மகரிஷி கூறினாராம் ‘நான் உனக்கு குரு அல்ல, உன்னுடைய குரு உனக்காக மேற்கு பகுதியில், வட நாட்டில் காத்துக் கொண்டு இருக்கின்றார். அங்கு செல்’.
அதைக் கேட்ட பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள், அவரிடம் ஆசிகளை பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டாராம். அவர் 1931ல் பகவான் ரமணரின் வாழ்க்கை மற்றும் போதனைகளின் முதல் பதிப்பைத் தொகுத்தார், என்று ஸ்ரீ ரமண ஆசிரமம் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் ரமணாஸ்ரமத்தை விட்டு கிளம்பிச் சென்று விட்ட சில நாட்களுக்குப் பிறகு அது குறித்து ஒருமுறை ஸ்ரீ ரமண மகரிஷியிடம் சில பக்தர்கள் கேட்டபோது ஸ்ரீ ரமண மகரிஷி அவர்களிடம் கூறினாராம் ‘யார் யாருக்கு, யார் குருவாக இருக்க வேண்டுமோ அவர்களிடம்தான் குருவை தேடி அலைபவர்கள் செல்ல முடியும். இவர் இன்னொருவரின் சிஷ்யர் எனும் விதி உள்ளபோது அவர் அங்கு சென்றதில் என்ன தவறு உள்ளது?’. அதன் பின்னர் எதற்காக பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் ஷீரடி பாபாவை தேடித் சென்றார் என்ற அந்த கேள்விக்கான விவாதம் முற்றுப் பெற்று விட்டதாம். இதுதான் வெளியில் தெரிந்தது. ஆனால் பல காலம் பொறுத்து, பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் ஷீரடி பாபாவின் புகழை தீவீரமாக பரப்பிக் கொண்டு இருந்த சமயத்தில், உண்மையில் நடந்தது என்ன என்பதை பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் பின் நாளில் ஸ்ரீ ரமண மகரிஷியின் தீவிர பக்தரான திரு P.V. ராமச்சந்திர ஐயர் என்பவரிடம் அது குறித்துக் கூறினாராம்.
திருவண்ணாமலையை சேர்ந்த T.P. ராமச்சந்திர ஐயர் ஆன்மிகம் மற்றும் தத்துவத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். தீவிரமான ஸ்ரீ ரமண மஹரிஷியின் பக்தராக இருந்தவர் 1920 ஆம் ஆண்டுகளில் ஸ்ரீ ரமண மஹரிஷிகளின் ஆஸ்ரமத்தில் சேர்ந்தார். சென்னையில் ஒரு வழக்கறிஞராக, இருந்தவாறு ஆசிரமத்தின் சட்டப் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தவர். ஆஸ்ரமத்தில் மொழிபெயர்ப்பாளராகவும், மகரிஷியின் ஹாலில் உதவியாளராகவும் பணியாற்றினார். திரு ராமச்சந்திர ஐயர் அவர்கள் ஸ்ரீ ரமண மகரிஷியுடன் மிக நெருக்கமாக இருந்திருந்தாலும், அதை அவர் பெருமையாக கூறிக் கொண்டு தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டது இல்லை; அவருடன் பழகிய அனைவருமே, ஸ்ரீ ரமண மகரிஷி மீதான திரு ராமச்சந்திர ஐயரின் பக்தி மட்டும் அல்ல, ஸ்ரீ ரமண மகரிஷியின் போதனைகளைப் பற்றிய அவரது புரிதல்களும் எவ்வளவு ஆழமானது என்பதை நன்கே அறிந்து இருந்தார்கள்.
ரமணாஸ்ரமத்தை விட்டு பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் கிளம்பிச் சென்று விட்ட பல நாட்களுக்குப் பின்னர் ஒருமுறை அவரை சந்தித்த திரு P.V. ராமச்சந்திர ஐயர் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளிடம் கேட்டாராம் ‘நீங்கள் ஸ்ரீ ரமண மகரிஷியிடம் அத்தனை பக்தி பூர்வமாக இருந்தீர்கள். இப்போது ஷீரடி பாபாவிடம் சென்று விட்டீர்கள். ஸ்ரீ ரமண மஹரிஷியின் ஆஸ்ரமத்தில் இருந்து திடீர் என ஏன் விலகி வந்து விட்டீர்கள் என்பதும், எதற்காக ஷீரடி பாபாவின் சிஷ்யராகி விட்டீர்கள் என்பதும் பலருக்கும் ஒரு ஆச்சர்யமான செய்தியாகவும், விடை தெரியாத புதிராகவும் உள்ளது. நீங்கள் தவறாக நினைக்கவில்லை எனின் எதற்காக அந்த முடிவை மேற்கொண்டீர்கள் என்பதைக் கூற வேண்டும்’.
திரு ராமச்சந்திர ஐயர் அவ்வாறு கேட்டதும் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் கண்கள் சற்றே பனித்தன. சற்றே தயக்கத்துடன், ஆனால் தீர்க்கமாக பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் அவரிடம் கூறினாராம் ”நான் உண்மையில் ஸ்ரீ ரமண மகரிஷி ஆஸ்ரமத்தில் இருந்து விலகி விடும் நோக்கத்தில் எப்போதுமே இருந்தது இல்லை. ஒருநாள் நான் என்னை மீறி வாழ்க்கையில் விரக்தி அடைந்து தனிமையில் இருந்த ஸ்ரீ ரமண மகரிஷியை சந்தித்து மனம் விட்டுப் பேசினேன். அப்போது அவரிடம் நான் கூறினேன், ‘இனி நான் பஜனை பாடல்களை பாடியவண்ணம் வாழ்க்கையை கழித்துக் கொண்டு இங்கேயே இருந்து விடுகின்றேன்’. ஆனால் ஸ்ரீ ரமண மஹரிஷியோ தீர்மானமாக என்னிடம் கூறினார் ‘நான் உனக்கு குரு அல்ல. உனக்கு குரு கிடைக்க வேண்டிய காலம் வரட்டும் என்பதற்காக காத்திருந்தேன். அந்த காலம் வந்து விட்டது நீ உடனே வடக்கே சென்று ஷீரடி பாபாவிடம் சரண் அடைந்து விட்டு அவரது வாழ்க்கையை அனைவருக்கும் வெளிப்படுத்தும் விதத்தில் ஈடுபட்டவண்ணம் இரு, அவரே உனக்கு குரு தீட்ஷை தருவார். ஆகவே நீ பஜனைப் பாடல்களிலும், பக்தி நடனங்களிலும் கவனத்தை செலுத்தியது போதும். அதை நிறுத்தி விட்டு இனியும் நேரத்தை வீணடித்துக் கொண்டு இருக்காமல் உடனே கிளம்பிச் செல்’ என்று கட்டளை இட்டார். அதனால்தான் பிற்காலத்தில் நான் ஷீரடி பாபாவை குருவாக ஏற்றுக் கொண்டேன்”. (இந்த செய்தி திரு V. கணேசன் என்பவர் எழுதிய உள்ள ‘ரமண பெரியவா புராணம்’ எனும் புத்தகத்தில் உள்ளது. அவர் எனக்கு இந்த செய்தியையும் ஸ்ரீ ரமண மஹரிஷியுடன் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் உள்ள புகைப்படத்தையும், பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் இன்னொரு தனி புகைப்படத்தையும் பிரசுரித்துக் கொள்ள அன்புடன் அனுமதி அளித்து உள்ளார். அவருக்கு எனது நன்றி).
ஸ்ரீ ரமண மகரிஷியின் கட்டளை ஏற்றுக் கொண்டு ஸ்ரீ ரமண ரமணாஷ்ரமத்தில் இருந்து கிளம்பி வடக்கு நோக்கி பயணத்தை துவக்கிய பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் மனதில் ஒரு சின்ன குழப்பம். ‘ஷீரடி சாயி பாபா 1918 ஆம் ஆண்டிலேயே சமாதி அடைந்து விட்டார் எனும்போது அவர் எப்படி எனக்கு குருவாக முடியும்? எதனால் ஸ்ரீ ரமண மகரிஷி என்னை ஷிரடிக்கு அனுப்பி வைக்க வேண்டும்? ‘ ஸ்ரீ ரமண மகரிஷி அவரை ஷிரடிக்கு அனுப்பி வைத்த உடனேயே பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் அங்கு சென்றிருந்தால், பல்வேறு மஹான்கள் மூலம் அவருக்கு கிடைக்க இருந்த ஆன்மீக அனுபவங்கள் அவருக்கு கிடைக்காமேலேயே போய் இருக்கும். ‘பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் வாழ்க்கையில் பல சோதனைகளையும், துன்பங்களையும் அனுபவிக்க வேண்டும், அப்போதுதான் அவருடைய பூர்வ ஜென்ம கர்ம வினைப் பலன்கள் அனைத்தும் அழியும், அவரும் தெய்வீக நிலையை எட்டி விடுவார் என்ற விதி அவருக்கு இருந்திருக்க வேண்டும்’; அதை பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் ரமணாஸ்ரமத்தை விட்டு வெளியேறி சென்றபோது உணரவில்லை. ஆனால் அப்படிப்பட்ட எண்ணத்தை தான் கொண்டிருந்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை பின்னாளில் அறிந்து கொண்ட பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் பெருமளவு வருந்தினார்.
ஸ்ரீ சித்தரூடா ஸ்வாமி மடத்தில் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள்
ஸ்ரீ ரமண மஹரிஷியின் கட்டளையை ஏற்றுக் கொண்டு வடக்கு நோக்கி பயணத்தை மேற் கொண்டவரிடம் சல்லி காசு கிடையாது. அனைத்தையும் துறந்து விட்டல்லவா அவர் வந்து விட்டார். மனம் முழுவதும் சஞ்சலம்; ஸ்ரீ ரமண மஹரிஷி கட்டளைப்படி வடக்கு நோக்கி செல்கின்றோம், ஆனால் அங்கு யாரை சந்திக்க உள்ளோம்? அவர் யார்? விடைக் கிடைக்காத கேள்வி மனதில் சூழ்ந்து கொண்டிருக்கையில் நடந்து கொண்டும், யாருடனாவது இலவசமாக வண்டிகளில் ஏறிக் கொண்டும், வழியில் கிடைத்ததை உண்ட வண்ணம் பயணித்துக் கொண்டு இருந்தவரிடம் விதி மீண்டும் விளையாடியது.
ஒருநாள் அவர் ஒரு லாரியில் ஏறிக் கொண்டு வண்டி ஓட்டுபவருடன் (Driver) பயணிக்கையில், பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகளின் குருவைத் தேடி பயணிக்கும் நோக்கத்தை அறிந்து கொண்டபோது வண்டி ஓட்டுநர் தான் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹூப்ளி எனும் நகரத்திற்கு செல்வதாகவும், அங்கு ஸ்ரீ சித்தரூடா ஸ்வாமிகளின் மடம் ஒன்று உள்ளதாகவும் அங்குள்ள சித்தரூடா ஸ்வாமிகள் சிவபெருமானின் அவதாரம் எனவும் அவரைக் குறித்து அவருடைய பல்வேறு மகிமைகளையும் பெருமையுடன் கூற, பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் அங்கு சென்று அந்த ஸ்வாமிகளை சந்திக்க விரும்பி விட்டார்.
ஸ்ரீ சித்தரூடா மடம் மிகவும் அமைதியான அழகான சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஹூப்ளி நகரில் அமைந்து உள்ளது. 1836 ஆம் ஆண்டில் பிறந்தவராக கூறப்படும் ஸ்வாமிகள் 1929 ஆம் ஆண்டு இறுதி கட்டத்தில் சமாதி அடைந்துள்ளார். அவரது வாழ்நாள் முழுவதும் அவர் துறவியாக வாழ்ந்து வந்துள்ளார். அவர் ஜாதி மத பேதம் பார்த்தது இல்லை. மிகவும் இளம் வயதிலேயே துறவியாக மாறி விட்டவர். சித்தரூடா ஸ்வாமிகள் அத்வைதத்தை போதித்தவர். ஆன்மீக வழியை தேடுபவர்களுக்கும், பக்தர்களுக்கும் ஒரு முக்கிய மையமாக அவரது மடம் விளங்குகிறது. தம்மிடம் வந்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளை அன்போடு அழைத்தார். அவரது முகத்தைப் பார்த்த உடனேயே அவர் வர உள்ள காலத்தில் பிரபலமான தெய்வீக மஹான் ஆவார் என்பதை உணர்ந்தவர் அவரை தன்னோடு அங்கேயே தங்கி கொள்ளுமாறு கட்டளை இட்டார். அவரது மடத்தில் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் போய் சேர்ந்தார்.
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் அங்கிருந்தபோது சமிஸ்கிருத மொழியை நன்கு கற்றறிந்தது மட்டும் அல்லாமல் சித்தரூடா ஸ்வாமிகளிடம் இருந்து சமிஸ்கிருத வேதாந்தங்களான விசார ஸாகரா, பஞ்சதசாஷரி, யோக வசிஷ்ட மற்றும் பஞ்ச காரண வேத நூல்களை சமஸ்கிருத மொழியில் கற்று அறிந்தார். மேலும் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் அழிவற்ற நிலையான உண்மை என்பதைத் தவிர வேறு எதுவும் மனதிற்கு இன்பத்தை தராது என்ற தத்துவத்தை ஆழமாக உணர்ந்தார். மெல்ல மெல்ல சித்தரூடா ஸ்வாமிகள் தம்மிடம் வந்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளை குறித்த மேலான அபிப்பிராயத்தையும் அனைவர் முன்னிலையிலும் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தபோது அவர் மீது மற்றவர்கள் பொறாமைக் கொண்டு அவர் மனதை காயப்படுத்தும் விதத்திலான செயல்களை செய்தவண்ணம் இருக்கத் துவங்கினார்கள்.
இப்படியாக இருந்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளை விதி விடவில்லை. 1929 ஆம் ஆண்டு இறுதியில் திடீர் என சித்தரூடா ஸ்வாமிகள் சமாதி அடைந்தார். அவர் மறைவிற்குப் பின்னர் தன்னை அங்கு நிம்மதியாக இருக்க விட மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்ட பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள், சித்தரூடா ஸ்வாமிகள் சமாதி அடைந்த சில நாட்களிலேயே அங்கிருந்து கிளம்பி விட்டார், தனது குருவைத் தேடும் பயணத்தைக் தொடர்ந்தார். எங்கு செல்வது என்பது புரியவில்லை என்பதினால் மனம் போன வழியில் சென்று கொண்டு இருந்தவர் 1930 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பண்டார்பூர் நகரை சென்று அடைந்தார்.
பண்டரிபுரத்தில் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் வாழ்க்கை
மகராஷ்டிரா மானிலத்தில் ஷோலாப்பூர் மாவட்டத்தில் பீமா ஆற்றின் கரையில் உள்ள பண்டரிபுர் ஒரு சின்ன நகரமாகும். பண்டார்பூர் அல்லது பண்டரிபுரம் என அழைக்கப்படும் அந்த சின்ன நகரம் ஸ்ரீ கிருஷ்ணனின் பட்டத்து ராணி ருக்மணி தேவியுடன் தங்கிய புண்ணிய பூமியாகக் கருதப்படுகிறது.
இங்கு உள்ள விட்டலா கோயில் இந்துக்களின் முக்கிய வைணவத் திருத்தலங்களில் ஒன்று. நாள் முழுவதும் எங்காவது ஒரு இடத்தில் ‘ விட்டலா, விட்டலா அல்லது பாண்டுரங்க விட்டலா என்ற கோஷம் ஒலித்தபடியே இருக்கும். தனது குருவைத் தேடி நடந்து கொண்டிருந்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் பண்டரிபுர் நகரை சென்று அடைந்தார். அங்கு ஒரு தர்ம ஸ்தாபன மடத்தில் தங்கினார்.
அவருக்கு இயற்கையாகவே பஜனைகளும், பக்தி கீதங்களும் பிடித்தவை என்பதினால் அந்த நகரம் அவருக்கு மனத்திற்குப் பிடித்த இடமாக இருந்தது. காரணம் பண்டரிபுரத்தில் தினமும் எங்கேயாவது விட்டலா மீதான பஜனைகளும், அதற்கேற்ப ஆடல் பாடல்களும் நடந்து கொண்டே இருக்கும். மாலையில் அவை ஆனந்த கீதங்களாக காற்றில் மிதந்து வந்தவண்ணம் இருக்கும்.
சுமார் இருபது மாத காலம் அந்த ஊரில் தங்கி இருந்தவர் மராட்டிய மொழியை கற்றார். தினமும் விட்டலா ஆலயத்திற்குச் சென்று அவரை வணங்கி துதித்த பின்னர் அங்கேயே அமர்ந்து இருப்பார். தமது குருவை எங்கே போய் தேடுவது என்ற எண்ணத்தில் மிதப்பார். ‘பாண்டுரங்கா நீயாவது ஒரு வழியைக் காட்டுவாயா’ என்று மனதிலேயே மனம் உருகிக் கேட்பார். இப்படியாக சில காலம் கடந்தபோது உள்ளூரில் அவருக்கு சிலர் நண்பர்கள் ஆனார்கள். ஒரு முறை பேச்சுவாக்கில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டு இருக்கையில் அந்த ஊரிலேயே பாபுமாய் எனும் பெண் சித்தர் உள்ளதாகவும், அவரை சந்தித்தால் ஒருவேளை அவரது கேள்விக்கான விடைக் கிடைக்கலாம் என்றும் அந்த நண்பர் கூறினார். அவரது ஆலோசனையை ஏற்று பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் அந்த பெண் சித்தரான பாபுமாய்யைத் தேடலானார். அந்த யோகினி பெரும்பாலும் சுடுகாட்டு அருகில்தான் தென்படுவார் என்றும் கேள்விப்பட்டார். அவளைத் தேடி அலைந்தவர், ஒருநாள் அவளைக் கண்டு பிடித்து விட்டார்.
அந்த யோகினியோ மிகவும் அழுக்கடைந்த உடைகளை உடுத்தி இருந்தார். அவை கிழிந்த நிலையிலும் இருந்தன. யோகினி என்பது இங்கு பெண் சித்தரைக் குறிக்கின்றது. தலைமுடி சீக்கு பிடித்து இருந்தது. விட்டலா ஆலயத்திற்கு சென்று வணங்குவார். தன்னை நெருங்குபவர்களிடம் ஒரு பைசா மட்டுமே யாசகம் கேட்பார், அந்த காசையும் மாலையில் அருகில் இருந்த சந்திரபாகா நதியில் தூக்கி எறிந்து விட்டு சுடுகாட்டிற்கு சென்று அமர்ந்து கொண்டு விடுவாராம். பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் அவரிடம் சென்று வணங்கினார், தான் குருவைத் தேடி அலைவதாகவும் , தனக்கு வழி காட்டுமாறும் அவரிடம் வேண்டிக் கேட்டார். அதைக் கேட்ட அந்த யோகினியோ முதலில் தன்னுடன் சுடுகாட்டிற்கு பயம் இன்றி வர முடியுமா என்று கேட்ட பின்னர், அங்கு வந்தால் அவரது வினாக்களுக்கு விடை தருவதாக கூறினார். பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளோ விரக்தியின் எல்லையில் இருந்தார், மனம் முழுவதும் வெறுமையாகவே இருந்தது, எங்கு செல்வது, என்ன செய்வது, எப்படி குருவின் தரிசனத்தைப் பெறுவது என்பதே அவருக்கு அப்போதிருந்த பெரும் பிரச்சனை. அந்த மன நிலையில் இருந்தவர் அந்த சித்தருடன் எங்கு வேண்டுமானாலும் செல்லத் தயாராக உள்ளதாகக் கூற அவரை அந்த யோகினி தன்னுடன் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்ற அந்த யோகினி பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் பசியாக உள்ள நிலையைக் கண்டார். முதலில் உணவை அருந்துமாறு கூறியவர் ஒரு க்ஷணம் எங்கேயோ பார்க்க, முன்பின் தெரியாத ஒரு நபர் தட்டு நிறைய உணவை எடுத்து வந்தார். அவற்றை பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளிடம் தர பசியின் கொடுமையினால் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் அவற்றை உண்ட பின் அவரிடம் அந்த யோகினி கேட்டார் ‘நீ ஏதோ கேட்க வேண்டும் என்றாயே, அதை இப்போது கேள்’.
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் நேரடியாகவே அந்த யோகினியிடம் கூறினார் ‘எனக்கு எனது குருநாதரை அடையும் வழியைக் கூறி உதவிட வேண்டும்’. அந்த யோகினி அவரைப் பார்த்து சிரித்து விட்டுக் கூறினார் ‘ நீ இன்னும் உனது குருநாதரைக் காணும் மனப் பக்குவத்தைப் பெறவில்லை மகனே; சற்று முன் உனக்கு உணவு எடுத்து வந்த விட்டோபா தெய்வத்தை கூட அடையாளம் காண முடியாத நிலையில் உள்ள உன்னால் எப்படி உடனடியாக குருவை அடைய முடியும். அதற்கு இன்னும் சில காலம் உள்ளது. எனவே மகனே, நீ வடக்கு நோக்கி செல், உனக்கு என்றாவது ஒருநாள் உனது குரு தென்படுவார்’. இப்படியாகக் கூறிவிட்டு அவரிடம் இருந்து பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து மின்னல் போல சென்று விட்டார். சற்றே மனம் கலங்கிய பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் அங்கிருந்து மீண்டும் கிளம்பி, முடிவு தெரியாத ஏதோ இலக்கை நோக்கி தனது பயணத்தை துவக்கினார் .
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளும் பல்வேறு மகான்களும்
பண்டரிபுரத்தில் இருந்து 1931 ஆம் ஆண்டு இறுதியில் பயணத்தை மீண்டும் துவங்கியவர், ஊர் ஊராக அலைந்து கொண்டு இலக்கே தெரியாமல் சென்று கொண்டு இருந்தார். சென்ற வழிகளில் எல்லாம் மஹான்கள் எவரையாவது குறித்து கேள்விப்பட்டால் அவர்களை சந்தித்து தமக்கு அவர்கள் மூலம் தான் தேடிவரும் குருவைக் குறித்த ஏதாவது துப்பு கிடைக்குமா என்றெல்லாம் முயற்சிகள் செய்தார். ஆனால் அவர் விரும்பியது நடக்கவில்லை.
பல இடங்களுக்கும் சென்று கொண்டே இருந்தவருக்கு இடை இடையே பல்வேறு சோதனைகள், இன்னல்கள், உடல் நலக் குறைவுகள் ஏற்பட்டன. அவற்றை எல்லாம் மன வைராக்கியத்துடன் தாங்கி கொண்டே சென்ற வண்ணம் இருந்தார். மரங்களின் அடியிலும், பாலங்களின் அடியிலும் இரவில் உறங்கினார். கிடைத்த உணவை, அவைகளும் கிடைத்தபோது மட்டுமே உண்ண முடிந்தது. பல நாட்கள் பட்டினியில் வாடினார். மாற்றிக் கொள்ள உடைகள் கூட இல்லாமல் அவதிப்பட்டார். இருந்த கந்தல் உடைகளையே துவைத்து உடுத்திக் கொண்டார். நடு நடுவில் போலீஸ் அராஜகங்களையும் சந்திக்க வேண்டி இருந்தது.
வெய்யிலுக்கும், மழைக்கும் தங்க இடம் கூட கிடைக்காமலும் அவதி பட்டார். ஒரு முறை மூன்று நாட்கள் உணவே கிடைக்கவில்லை. வயிற்றை பசி பிடுங்க அழாத குறையாக அமர்ந்து இருந்தவரை நோக்கி யாரோ ஒரு சாது வந்தார், சிறிது உணவை கொடுத்து விட்டு சென்றார். ஆங்காங்கே ஆலயங்களிலும் மடங்களிலும் கிடைத்த பிரசாதங்களும், அன்ன தானங்களும் அவரை சற்றே வாழ வைத்துக் கொண்டு இருந்தன. அவை அனைத்துமே தான் பூர்வ ஜென்மங்களில் செய்த கர்ம வினைப் பலன்களே என்பதை மனது உணர்ந்தாலும் வயிற்றின் பசி அதைக் கேட்க மறுத்தது. சரியான உணவின்றி அவரது உடல் நலமும் மிகவும் மோசமாகிக் கொண்டே இருந்தது.
அந்த நிலையில் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் மனம் மெளனமாக இப்படி எண்ணி இருக்கும். ‘விதியை நம்பிக் கொண்டு இருப்பவன் என்றும் வாழ்க்கையில் எழுவது இல்லை, அதே சமயத்தில் தன் மீதான நம்பிக்கையோடு இருப்பவன் என்றும் தோற்க மாட்டான். சோகங்களும் வலிகளும் அனைவரது வாழ்விலும் இருக்கும்; அவற்றை எல்லாம் மறந்து விட்டு நமது இலக்கை நோக்கி நகர வேண்டும்; ஆயிரம் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்காத பாடத்தை வாழ்க்கை கற்றுக் கொடுக்கின்றதே அந்த அந்த பாடத்தை கற்க மறுத்தால் வாழ்க்கை கடினமாகி விடும் அல்லவா? வாழ்க்கையில் வலிகளை அனுபவித்தவர்கள் காட்டும் வழிகள் எப்போதும் சிறந்ததாகவே இருக்கும். நான் சந்தித்த பல மகான்களும் சாதுக்களும், சன்யாசிகளும் பல வேதனைகளை அனுபவித்த பின்னர் அல்லவா வாழ்க்கையின் உச்சத்தை அடைந்திருக்க வேண்டும். ஆகவே நமது மன உறுதியை இழக்கக் கூடாது. பாதை நீண்டு இருக்கலாம், ஆனாலும் நமது பயணத்தை தொடர்ந்து கொண்டே செல்வோம்’ என்ற வைராக்கியத்துடன் நடைப் பயணத்தை நிறுத்தவில்லை. தொடர்ந்து இலக்கு என்னவென்றே தெரியாமல் நடந்து கொண்டே இருந்தார்.
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் தாம் சென்று கொண்டிருந்த வழியில் வஜ்ரேஸ்வரி ஸ்வாமி நித்யானந்தா, துறவி ஹஸ்ரத் பாபா ஜான், மஹான் ஜிப்ருன்ணா மற்றும் மஹான் ராமதாஸ் போன்ற மகான்களை சந்தித்தார். அவர்கள் அனைவரும் யார்? பண்டரிபுரத்தில் இருந்து கிளம்பிய பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் ஜல்கான், ஷேகான், நாசிக் போன்ற இடங்களைக் கடந்து பூனாவை அடைந்தபோது அங்கிருந்த தர்கா ஒன்றில் இருந்த பெண் துறவியான ஹஸ்ரத் பாபா ஜான் என்பவரை சந்தித்தார்.
ஸ்ரீ ஹஸ்ரத் பாபா ஜான் ஒரு பஷ்டூன் முஸ்லிம் துறவி ஆவார், அவர் ஒரு சத்குரு அல்லது குதுப் என்று கருதப்படுகிறார். ஆப்கானிஸ்தானின் பலுசிஸ்தானில் பிறந்த அவர், கடைசி இருபத்தைந்து ஆண்டுகள் பூனேயில் வாழ்ந்து இறந்தார். மெஹர் பாபாவின் சீடர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். அவர்களையும் ஸ்ரீ ஹஸ்ரத் பாபா ஜான் எனும் துறவியையும் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் சந்தித்தார் என்றாலும் என்ன காரணத்தினாலோ அவரிடம் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுக்கு ஈடுபாடு ஏற்படவில்லை.
அதேபோல வஜ்ரேஸ்வரி ஸ்வாமி நித்யானந்தா எனும் மஹானையும் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் சந்தித்தார். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில், பகவான் நித்யானந்தா கேரளாவின் கோழிக்கோட்டில் அமைந்துள்ள துனேரி என்ற சிறிய கிராமத்தில் பூமியில் தோன்றினாராம். அவரது வருகை மிகவும் மர்மமான கதையாக உள்ளது, சரியான பதிவுகள் எதுவும் இல்லை. இது வஜ்ரேஸ்வரி மராட்டிய மாநிலத்தில் உள்ள கணேஷ்புரி என்ற இடத்தில் அமைந்துள்ளது.
மக்கள் வஜ்ரேஸ்வரி ஸ்ரீ நித்யானந்தாவை அவதூதராகப் கருதினார்கள்; அவரை ஒரு ஆன்மீக குருவாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் கருதினார்கள். இவர் அடர்ந்த வனப் பகுதியை ஞானம் பெற விரும்பும் அனைவருக்கும் ஆன்மீக மையமாக மாற்றியவர். அவர் உபதேசித்த சிடாகாச கீதை’ என்பது, ஆன்மீகப் பாடங்களை வழங்குகிறது, ஆன்மீகத்தை நோக்கி ஒரு வழியை காட்டுகிறது, ஆன்மீக தத்துவத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதைப் பின்பற்றுவதன் மூலம், மனதின் ஆழத்தில் உள்ள உணர்வுகளையும், ஆன்மாவின் நிலைகளையும் அறிய முடியும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த மஹானிடமும் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுக்கு எந்த ஈடுபாடும் ஏற்படவில்லை.
அடுத்து ஜல்கானுக்கு சென்ற பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் அங்கிருந்த வஜ்ரேஸ்வரி ஆலயத்தின் அருகில் இருந்த ஜிப்ருன்ணா எனும் மஹானை சந்தித்தார். அவர் குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை. அவரது குறிப்பு நித்யானந்தா ஸ்வாமிகளின் சிஷ்யரான முக்தானந்தா எனும் ஸ்வாமிகள் மூலமே சிறிதளவு தெரிகின்றது. ஸ்வாமி முக்தானந்தா கூறினார் ‘ஆன்மீக துறவியான ஸ்ரீ ஜிப்ருன்ணா ஒரு பெரிய துறவி அவர் எப்போதுமே குப்பைக் குவியலில் நிர்வாணமாக அமர்ந்து, தன்னைச் சுற்றியுள்ள அழுக்குகளுடன் விளையாடிக் கொண்டு இருப்பார்.
ஸ்ரீ ஜிப்ருன்ணா குப்பைக் குவியலில் தவத்தில் அமர்ந்திருந்தாலும், அவரது உடலில் தூசி, அழுக்கு அல்லது அருவருப்பான வாசனை எதுவும் இல்லாமல் இருந்தது. குப்பைக் கூளங்களில் ஆன்மீக துறவியான ஜிப்ருன்னா அமர்ந்து இருந்தாலும் , அவரது உடலில் இருந்து ஒரு இனிமையான நறுமணம் வெளிப்பட்டவாறே இருந்தது’. அத்தகைய மேன்மையான மகானிடம் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் சென்றபோது துவக்கத்திலேயே பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளிடம் தான் அவரது குரு இல்லை என்பதை தெளிவாக கூறி விட்டாராம். அது மட்டும் அல்ல அவருக்கு இருந்த தீராத தலை வலியையும் அந்த துறவி தீர்த்து வைத்த பின் அவரை வஜ்ரேஸ்வரி ஆலயத்தின் அருகில் இருந்த காட்டிற்கு சென்று தபத்தில் இருக்குமாறு கூறினாராம். பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் தனிமையில் அமர்ந்து கொண்டு தவத்தில் ஈடுபட்டாலும் அவருக்கு மனதில் முழுமையான திருப்தி ஏற்படவில்லை.
மும்பை நகரத்தில் இருந்து 75 மைல் தொலைவில் உள்ள வஜ்ரேஸ்வரி ஆலயம் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். தனது தந்தையின் யாகத்தின் நெருப்பில் தன்னைத்தானே எரித்துக் கொண்ட சதி தேவியின் உடல் பாகங்களில் சதி தேவியின் இடது மார்பகம் இந்த இடத்தில் விழுந்ததாக நம்பப்படுகிறது, எனவே இந்த ஆலயம் ஸ்ரீ தேவி வஜ்ரேஸ்வரி யோகினி சக்தி பீடம் என்று அழைக்கப்படுகிறது. அந்த ஆலயத்தின் அருகில்தான் மஹான் ராமதாஸ் என்ற மற்றொரு மஹான் வாழ்ந்து கொண்டு இருந்தாராம். அவரோடும் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுக்கு தொடர்ப்பு ஏற்பட்டது. அவருடைய மாட்டுத் தொழுவத்தில் இருந்த மாடுகளை அவ்வப்போது பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகள் பாதுகாத்து வந்தார். மஹான் ஸ்ரீ ராமதாஸி சாதுவிடம் இருந்தே துளசி ராமாயணம் மற்றும் ராம சரித்திர மனாஸ் போன்றவற்றையும் கற்று அறிந்து கொண்டார். அங்கு தவத்தில் இருந்த நாட்களில் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுக்கு உணவு கிடைத்துக் கொண்டே இருந்தாலும் அவர் எளிமையாக இருந்தவாறு எலுமிச்சை ஜூஸ், மோர் அல்லது பால் போன்றவற்றை மட்டுமே பெரும்பாலும் குடித்தவாறு வாழ்ந்து கொண்டு இருந்தார். அருகில் இருந்த மலை முகட்டுகள், வனப் பகுதிகள் நீரோடைகள் என அனைத்து இடங்களிலும் சுற்றித் திரிந்தார். மனதில் மீண்டும் மீண்டும் தமக்கு என்று குருநாதர் கிடைப்பார் என்ற கவலை எழுந்து கொண்டேதான் இருந்தது. காரணம் அத்தனை சாது சன்யாசிகளை அவர் தொடர்ப்பு கொண்டே இருந்தாலும் அவருக்கு தேவையான ஆன்மீக தாக்கத்தை எவராலும் குறைக்க முடியவில்லை என்பதே ஆகும்.
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளும் , சத்குரு ஸ்ரீ பெட் நாராயண மஹாராஜும்
இன்னும் சில காலம் கழிந்தது. அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் மும்பை நகரத்தில் இருந்து 75 மைல் தொலைவில் இருந்த வஜ்ரேஸ்வரியில் இருந்து கிளம்பி, புனே நகரிலிருந்து கிழக்கே முப்பது மைல் தொலைவில் இருந்த ஒரு கிராமமான கெட்கான் (Khedgaon) எனும் இடத்தை அடைந்தார். இங்குதான் 20 ஆம் நூற்றாண்டின் முற் பகுதியில் வாழ்ந்து இருந்த இந்து துறவி நாராயண் மகாராஜும் வசித்து வந்தார். கெட்கான் கிராமத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் பக்தர்களுக்கு புனித யாத்திரைக்கான இடமாகும். 1933 ஆம் ஆண்டு வாக்கில் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுக்கு ‘சத்குரு பெட் நாராயண மஹராஜ்’ என்ற இன்னொரு மகானிடம் தொடர்பு கிடைத்தது. அவர் தத்த பரம்பரையை சேர்ந்தவர்.
1885 ஆம் ஆண்டில் பிறந்த ஸ்ரீ சத்குரு பெட் நாராயண் மகாராஜ் குழந்தைப் பருவங்களிலேயே பெரும் சிக்கல்களை சந்திக்க வேண்டி இருந்தது. தனது பெற்றோரை மிகச் சிறிய வயதிலேயே இழந்தார்; அவரது பாட்டியிடம் வளர்ந்தவர், அவளது செயல்கள் பிடிக்காமல் அமைதியைத் தேடி வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. ஒரு சிவன் கோவிலில் தனிமையில் தங்கினார்.
சிவன் கோவிலில் தியானத்திற்காக தனியாக தங்கியிருந்தபோது, ஒரு புலி மகாராஜுக்கு எந்தத் தீங்கும் செய்யாமல் கோயிலுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. தத்தாத்ரேயரின் தெய்வீக அருளால் அவர் கங்காபூருக்குச் சென்று தவம் செய்து ஆன்மீக உச்சத்தை அடைந்தார். இறுதியாக புனேவுக்கு அருகிலுள்ள கெட்கான்-பேட் என்ற இடத்திற்கு வந்து, தங்கி மெல்ல மெல்ல தத்தாத்ரேயரின் உபாசகராகி ஒரு கம்பீரமான ஆலயம் அமைத்தார்.
அந்த ஆலயத்திற்கு சென்று அப்படிப்பட்ட அந்த மஹானுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் ஒரு வினோத அனுபவத்தை பெற்றார். ஆலயத்தின் உச்சியில் பல பறவைகள் பறந்து கொண்டிருந்தன. கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் அமர்ந்து கொண்டவர் உண்மையில் தத்தாத்ரேயரின் அருள் இருக்கும் என்றால் அதில் ஒரு பறவை தனது தலையில் வந்து அமர்ந்து விட்டு செல்ல வேண்டும் என வேண்டிக் கொண்டார். என்ன அதிசயம், ஒரு பறவை பறந்து வந்து அவர் தலையை தட்டி விட்டு சென்றது. தனது எண்ணம் நிச்சயம் நிறைவேறும் என்ற தன்னம்பிக்கை மீண்டும் எழுந்தது.
சத்குரு ஸ்ரீ பெட் நாராயண மஹராஜ் ஆலயத்தில் இருந்த குடிலில் தங்கி இருந்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள், தனக்கு ஒரு விடிவு காலம் பிறக்க உள்ளதையே அந்த பறவையின் செயல் வெளிப்படுத்துவதாக அவர் நம்பினார். சத்குரு ஸ்ரீ பெட் நாராயண மஹராஜிடாமே சென்று தனது நிலையைக் கூறலாம் என நினைத்தவாறு அவரிடம் சென்றபோது அவரை சுற்றி பல பக்தர்கள் சூழ்ந்து இருந்ததைக் கண்டார். ஆகவே சற்று தொலைவில் நின்று இருந்தபடியே அவருக்கும், சத்குரு பெட் நாராயண மஹராஜ் அவர்களுக்கும் மட்டுமே புரிந்த சங்கேத சைகையில் தனது மனதில் இருந்த ஏக்கத்தைக் கூற, ஸ்ரீ பெட் மஹாராஜும் ‘கவலைப் படாதே உனது எண்ணம் நிறைவேறும்’ என்ற செய்தியை அதே சங்கேத மொழியில் பதிலை தந்தார். அது பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுக்கு தற்காலிகமான மன நிறைவை தந்தது. அங்கிருந்த சமயங்களில் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுக்கு ஸ்ரீ தாத்திரேயரின் அவதாரம் எனக் கருதப்பட்ட ஸ்ரீ மெஹர் பாபா எனும் மஹானைக் குறித்த செய்தி கிடைத்தது.
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளும் ஸ்ரீ மெஹர் பாபாவும்
கெட்கான் (Khedgaon) கிராமத்தில் இருந்து மீண்டும் கிளம்பி நடை பயணமாக சென்ற பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள், மஹாராஷ்ர மானிலத்தில் உள்ள பூனா அருகில் வாழ்ந்து வந்திருந்த ஸ்ரீ மெஹர் பாபாவிடம் வந்து சேர்ந்தார்.
ஸ்ரீ மெஹர் பாபா என்று அழைக்கப்படும் ஆன்மீக குருவான மெர்வான் ஷெரியர் இரானி என்பவர், 1894 அன்று பூனாவில் பாரசீக பெற்றோருக்குப் பிறந்தார். 1916 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஷீரடியில் சிறு வயதில் ஸ்ரீ மெஹர் பாபா அவர்கள் ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவை சந்தித்தாராம். அவருக்கு தமது பார்வையினாலேயே ஞானத்தை பாபா அளித்து விட்டாராம். அதன் பின்னர்தான் ஸ்ரீ மெஹர் பாபா அவர் பஷ்டூன் முஸ்லிம் துறவியான ஹஸ்ரத் பாபா ஜான் என்ற பெண் துறவியிடம் இருந்து ஆன்மீக பயிற்சி பெற்றதாக கூறப்படுகின்றது. அடுத்த ஏழு ஆண்டுகளில் ஸ்ரீ தத்தாத்திரேயரின் ஒரு அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ உபாசனி மகாராஜ் தம்மிடம் வந்த ஸ்ரீ மெஹர் பாபாவின் ஸ்தூல உணர்வோடு ஆன்மீக உணர்வை ஒருங்கிணைத்து அவரை இன்னொரு அவதார புருஷனாக்கினார்.
ஸ்ரீ மெஹர் பாபா சடங்குகள் அல்லது விழாக்களுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை; ஆனால் கடவுள் மீதான அன்பிற்கு மிக உயர்ந்த முக்கியத்துவத்தை இணைத்தார். ஸ்ரீ மெஹர் பாபா ஒரு இந்திய ஆன்மீக குரு ஆவார், இவர் தன்னை அவதாரம் (அதாவது மனித வடிவில் கடவுள்) என்று கருதினார். மெஹர் பாபா என்றால் இரக்கமுள்ள தந்தை என்று அர்த்தம் .
மெஹர் பாபா ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவை ஒரே முறைதான் சந்தித்து உள்ளாராம். அவருக்கு ஷீரடி ஸ்ரீ சாயிபாபா மீது அளவற்ற மரியாதை உண்டு. ஒருமுறை ஸ்ரீ மெஹர் பாபா சிலரோடு ஔரங்காபாத்துக்குச் சென்றார். அங்கிருந்த குல்தாபாத் எனும் பகுதியில் சென்றபோது ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் பூர்வ ஜென்மக் கதையை குறித்து தமது பக்தர்களிடம் இப்படியாகக் கூறினாராம். ‘பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த மஹான் ஸ்ரீ ஸர் ஸாரி ஸர் பக்ஷ் உயிருடன் இருந்தபோது, முந்தைய அவதாரத்தில் ஷீரடி ஸ்ரீ சாயி அவரது சீடராக இருந்தார்.
அவர் மறைந்த பின்னர் பூர்வ ஜென்மத்தில் ஸ்ரீ சாயி பாபா தனது குரு ஸ்ரீ ஸர் ஸாரி ஸர் பக்ஷ் இருந்த குகைக்குள் நுழைந்து அவரது கல்லறையைப் பார்த்தபடி உணவு மற்றும் தண்ணீரை கூட உட் கொள்ளாமல் பல வருடங்கள் இருந்தார். அந்த கால கட்டத்தில் அவர் கடவுளை உணர்ந்தார்.
தனது சொந்த மனித உடலையும் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தையும் முற்றிலும் மறந்து விட்டார். பூர்வ ஜென்மத்தில் ஸ்ரீ சாயி பாபா நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மெலிந்த பக்கீரின் ‘மயக்க’ நிலையில் இருந்தார்’. அந்த நேரத்தில் குருவின் அருள் அவர் மீது இறங்கியது; அது தொடர்ந்து வந்து எழுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு அவரை முழுமையடைய மஹானாக்கியது. ஜர்சாரி பக்ஷ் என்றால் செல்வச் செழிப்பைக் கொடுப்பவர் என்று பொருள். அந்த சக்தியைத்தான் ஸ்ரீ ஷீரடி சாயிபாபாவிற்கு ஸ்ரீ ஸர் ஸாரி ஸர் பக்ஷ் கொடுத்தார்’.
ஹஸ்ரத் ஸ்ரீ ஸர் ஸாரி ஸர் பக்ஷ் இந்திய துணைக் கண்டத்தில் உள்ள அனைத்து சூஃபி பிரிவுகளிலும் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் சிஸ்டி பிரிவின் (Sufi’s of the Chisty Order) ஆரம்ப கால சூஃபிகளில் ஒருவர். கி.பி 14 ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் டெல்லியின் ஹஸ்ரத் ஷேக் நிஜாமுதீன் அவுலியாவால் மனித குலத்தின் வழி காட்டுதலுக்காக அவர் தக்ஷிண பகுதிக்கு அனுப்பப்பட்டார். 700 சீடர்களுடன், ஸர் ஸாரி ஸர் பக்ஷ் அவுரங்காபாத்திற்கு வந்தார். அவர் தனது 34 ஆம் வயதில் சமாதி அடைந்தாராம். ‘ஸ்ரீ சாயிபாபாவின் குருவான மஹான் ஸ்ரீ ஜர்சாரி பக்ஷ் (Zar ZariI Zar Baksh) அவர்களின் கீழே காணப்படும் படத்தில் உள்ள கல்லறை (Tomb of Zar ZariI Zar Baksh) குல்தாபாத்தில் உள்ளது.
அப்படிப்பட்ட அவதார புருஷரான ஸ்ரீ மெஹர் பாபாவைப் பற்றிக் கேள்விப்பட்ட பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் சத்குரு ஸ்ரீ பெட் மஹாராஜின் அனுமதியை பெற்றுக் கொண்டு ஸ்ரீ மெஹர் பாபாவை சந்திக்க பூனாவில் இருந்த மெஹெர்பாத் நகருக்கு சென்றார். ஸ்ரீ மெஹர் பாபா அவர்கள் தனது சீடர்களிடம் ஜூலை 10, 1925 முதல் மௌனத்தைக் கடைப் பிடிப்பதாகக் கூறி விட்டு தனது வாழ்நாளின் இறுதி வரை அதாவது 1969 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சமாதி அடையும் வரை இந்த மௌனத்தைக் கடைப் பிடித்தார். தன் சிஷ்யர்கள் கேட்ட கேள்விகளுக்கான பதிலை அவர் பலகையில் எழுதிக் காட்டுவதை மட்டுமே பழக்கமாக வைத்துக் கொண்டு இருந்தார்.
1933 ஆம் ஆண்டு பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் ஸ்ரீ மெஹர் பாபாவிடம் சென்றபோது ஸ்ரீ மெஹர் பாபா அவர்கள் மௌன விரதத்தில் இருந்தார். அதனால் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் அவருடன் பேச முடியவில்லை என்றாலும், தனக்கான குருவின் தேடுதலைக் கூறி விட்டு அவர் எங்கு இருக்கின்றார் என வழிகாட்டி உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதற்கு ஸ்ரீ மெஹர் பாபா, ‘உனக்காக வடநாட்டில் குரு காத்துக் கொண்டு இருக்கின்றார், அங்கு சென்று அவரை சந்திக்கலாம்’ என்று அவருக்கு சிலேட்டில் எழுதிக் காட்டினார். ஆகவே வேறு வழி இன்றி பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் அங்கிருந்த ஆஸ்ரமத்தில் சில நாட்கள் தங்கி இருந்து ஸ்ரீ மெஹர் பாபாவின் வரலாற்றை ஆழமாக தெரிந்து கொண்டார். அப்படி அங்கு அவர் தங்கி இருந்த கால கட்டத்தில் ஸ்ரீ உபாசினி மஹாராஜினால் ஸ்ரீ மெஹர் பாபாவிடம் அனுப்பி வைக்கப்பட்ட பல சீடர்களிடம் இருந்து ஸ்ரீ உபாசினி மஹாராஜின் வாழ்க்கையை குறித்த செய்திகளை அறிந்து கொண்டார். சில நாட்களில் அங்கிருந்து கிளம்பிய பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள், ஸ்ரீ உபாசினி மஹாராஜை சந்திக்க ஆர்வம் கொண்டு அவர் தங்கி இருந்த சகோரி நகருக்கு தனது பயணத்தை துவக்கினார்.
பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளும் ஸ்ரீ உபாசினி மஹராஜூம்
ஸ்ரீ உபாசினி மஹராஜ் 1870 ஆம் ஆண்டு ஒரு பிராமண குலத்தில் பிறந்தவர். சன்னியாச வாழ்க்கையில் இணைவதற்கு முந்தைய வாழ்க்கையில், அவர் மகாராஷ்டிராவில் பண்டிட் காஷிநாத் என்று அழைக்கப்பட்டார். குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சனைகளை எதிர் கொண்ட ஸ்ரீ உபாசினி மஹராஜ் 1910 ஆம் ஆண்டு ஸ்ரீ நாராயண் பெட் மகாராஜைத் தொடர்பு கொண்டார். அங்கு அவருக்கு ராஹுரியைச் சேர்ந்த குல்குர்னி மஹராஜிடம் ஏற்பட்ட சந்திப்பு ஸ்ரீ சாய் பாபாவிடம் செல்ல உதவியது. ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவுடனான அந்தத் தொடர்பு அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
நான்கு வருட காலத்திற்கு, ஒரு குறுகிய இடைவெளியில், பகவான் ஸ்ரீ ஷீரடி சாயிபாபாவின் கடுமையான கண்காணிப்பின் கீழ் ஸ்ரீ உபாசினி மஹராஜ் கடுமையான ஆன்மீக பயிற்சியை மேற் கொண்டார். அந்த அக்னி சோதனையில் இருந்து ஸ்ரீ உபாசினி மகாராஜ் தூய்மையான தங்கமாக வெளிப்பட, ஸ்ரீ ஷீரடி சாயி பாபா அவரை மகாராஜ் என்று அழைத்து, தனது பக்தர்களுக்கு முன்பாக, ‘கருவூலத்தின் சாவிகளை’ ஸ்ரீ உபாசினி மகாராஜின் கைகளில் விட்டுச் செல்வதாக அறிவித்தார்.
அப்படிப்பட்ட பெருமைக் கொண்டிருந்த ஸ்ரீ உபாசினி மஹாராஜின் ஆஸ்ரமத்திற்கு சென்று அவரை சந்தித்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள், சுமார் 30 மாதங்கள் அங்கேயே தங்கி அவரிடம் இருந்து ஆன்மீக பாடங்களை பயின்றார். 1934 ல் சகோரிக்குச் சென்று ஸ்ரீ உபாசனி மஹராஜை சந்தித்து சில நாட்கள் அங்கேயே தங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறிய பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் எதிர்பாராத விதமாக சிறிது நேரம் கழித்து மீண்டும் அதே சகோரிக்குத் திரும்பி வந்து ஸ்ரீ உபாசினி மஹாராஜின் ஆஸ்ரமத்தில் தங்கினார்.
இப்படியாக எந்த நோக்கமும், திசையும் இல்லாமல் அவர் அலைந்து கொண்டிருந்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளை வரவேற்ற ஸ்ரீ உபாசினி மஹராஜ் அவரை நோக்கிக் கூறினாராம் ‘உன்னைத்தான் எதிர் நோக்கி இத்தனை காலமும் காத்திருந்தேன்’. அங்கு தங்கி இருந்தபோது பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் ஷீரடி ஸ்ரீ சாய் பாபாவைப் பற்றி ஸ்ரீ உபாசனி மஹராஜ் மூலம் பல செய்திகளை கேட்டறிந்தார்.
ஸ்ரீ உபாசனி மஹாராஜின் ஆன்மீக பயணத்திற்கு ஷீரடி ஸ்ரீ சாயிபாபாதான் வழி காட்டினார் என்பதை முழுமையாக அறிந்து கொண்ட பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுக்கு மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. அதனால் ஸ்ரீ உபாசினி மஹாராஜின் செய்திகளைப் பரப்புவதில் பல முயற்சிகளை மேற்கொண்டு ‘சகோரி முனிவர்’ என்ற புத்தகத்தையும் எழுதினார். ஆன்மீக சாதகர்களுக்கு உபாசினி மஹாராஜின் வாழ்க்கை ஒரு நடைமுறை வழிகாட்டியாக விளங்கும் என்பதால் ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் இந்த நூலை எழுதினார்.
அந்த புத்தகம் வெளியான பிறகுதான் ஸ்ரீ உபாசினி மஹராஜை குறித்து தெரிந்திருக்காத இடங்களிலும் கூட ஸ்ரீ உபாசினி மஹராஜின் பெருமையும் புகழும் பரவலாயின. ஸ்ரீ உபாசினி மஹராஜ் அந்த காலத்தில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் விடுதலைப் பெற்று யாகமும், பூஜைகளையும் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும், வேதங்களை ஓத வேண்டும் என்று விரும்பினார். ஆனால் சமூகத்தில் பரவலாக அதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
அவற்றை சட்டை செய்யாமல் இருபத்தி ஐந்திற்கும் குறைவான வயதான கன்னிகா ஸ்திரீகள் விரும்பிய சுய விடுதலையைத் தரும் வகையில் சத்குரு ஸ்ரீ உபாசினி மஹராஜ், தம்மை நாடி சிஷ்யைகளாக வந்த 65 கன்னிப் பெண்களை, வெளிப் பார்வைக்காக மணம் புரிந்து கொண்டு, அவர்களை தம்முடைய ஆசிரமத்தில் தங்க வைத்துக் கொண்டு, அவர்களுக்கு ஆன்மீக பயிற்சியையும், வேதங்கள் ஓதுவது, யாகங்கள் செய்வது, மந்திர பூஜைகள் செய்வது போன்றவற்றைக் கற்றுக் கொடுத்தார். அது ஒரு சமுதாய புரட்சியை ஏற்படுத்தியது.
அதனால் அவர் மீதும் பல பொய்யான வழக்குகள் போடப்பட்டன. அந்த நேரத்தில்தான் அங்கிருந்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் தாம் முன்னர் தூக்கி எறிந்து விட்டு வந்திருந்த வக்கீல் தொழிலை மீண்டும் கையில் எடுத்தார். ஸ்ரீ உபாசினி மஹாராஜின் மீது பல நகரங்களிலும் பதிவு செய்யப்பட்டு இருந்த வழக்குகளில் வாதாடி எதிராளிகளின் வாதங்களை தவிடு பொடியாக்கி உபாசினி மஹராஜுக்கு முழுமையான விடுதலையை நீதி மன்றங்களில் இருந்து பெற்றுத் தந்தார்.
இப்படியாக பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுக்கு ஸ்ரீ உபாசினி மஹராஜிற்கும் நெருங்கிய தொடர்ப்பு இருந்து வந்திருந்தாலும் மெல்ல மெல்ல பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் மனதில் இருந்த தனது குரு யார் என்ற குழப்பங்கள் மறையவில்லை; மனதில் அமைதி ஏற்படவில்லை.
பகவத் கீதையின் ஒரு வசனத்தில் (6.34) கூறப்பட்டுள்ளது என்ன என்றால் ‘மனம் அமைதியற்றது, கொந்தளிப்பானது, வலிமையானது மற்றும் பிடிவாதமானது. கடவுளே, காற்றை விட வேகமான அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்று எனக்குத் தோன்றுகிறது’.
அலைபாயும் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது காற்றைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது போன்றது. ஒருவர் எவ்வளவு கடினமாக முயற்சி செய்வார்களோ, அது தோல்வியுறும் போது அதே வேகத்தில் விரக்தியும் அடைவார்கள். ஸ்ரீ ரமண மகரிஷியின் போதனைகள் அமைதி மற்றும் உள் அமைதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.
உபாசினி மஹராஜை பலமுறை தனக்கு குரு உபதேசம் செய்யுமாறு கேட்டுக் கொண்டும் அவர் அதற்கான காலம் வரவில்லை என்றும், ஆனால் அவருக்கு தான் குரு இல்லை என்பதையும் அவ்வப்போது தெளிவு படுத்திக் கொண்டே இருந்தாலும், பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள், தான் தேடி அலையும் குருவின் நிழலைக் கூட காண முடியவில்லையே என்ற ஏக்கத்தினால் தன்னை மீறி விரக்தியின் உச்சிக்கு சென்று விட்டார்.
இனியும் தமது பயணத்தை தொடர்வது முட்டாள்தனம் என்ற மன நிலையை எட்டியவர், ஆன்மீக வாழ்க்கையை தொடர்வதை விட மீண்டும் குடும்ப வாழ்கைக்கு சென்று விடலாம், மனதிற்கினிய பொதுத் தொண்டு செய்தவண்ணம் மிச்ச காலத்தைக் கழித்து விடலாம் என்ற எண்ணம் ஆழமாக மனதில் பதிய, அங்கிருந்து கிளம்பிச் சென்று விட முடிவு செய்தார்.
ஆகவே 1936 ஆம் ஆண்டு ஸ்ரீ உபாசினி ஆசிரமத்தை விட்டு வெளியேறி, மீண்டும் சென்னைக்கே சென்று தனது மகனுடன் தங்கி வாழத் துவங்கலாம் என்ற முடிவு எடுத்திருந்தாலும் ஸ்ரீ உபாசினி மஹராஜின் ஆஸ்ரம வாழ்க்கையே அவருடைய குருவின் தேடுதலுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது என்பதில் சந்தேகமே இல்லை.
அது 1927 ஆம் ஆண்டு. சகோரியில் இருந்த ஸ்ரீ உபாசினி மஹராஜை ஷீரடி ஸ்ரீ சாயிபாபா தனது வாரிசாக உருவாக்க விரும்பினார். ஸ்ரீ உபாசினி மஹராஜ் ஒரு சிறந்த சத்குருவாக இருந்த போதிலும், ஸ்ரீ சாயி பாபாவிற்கு இணையாக தான் வணங்கப்படுவதை அவர் விரும்பவில்லை, மேலும் ஸ்ரீ சாயி பாபாவின் வாரிசுரிமையை அவரது மனம் ஏற்க மறுத்தது. ஸ்ரீ சாயி பாபாவின் சிஷ்யராக சேர்ந்த ஸ்ரீ உபாசினி மஹராஜ், ஸ்ரீ சாயி பாபாவால் நிர்ணயிக்கப்பட்ட நான்கு வருட பயிற்சி காலத்தில், நான்கு வருடங்களுக்கு சற்று குறைவான காலத்தில் ஷீரடியை விட்டு வெளியேறினார். அப்படிப்பட்ட மேன்மையான உபாசினி மஹராஜின் போதனைகள் பெரிதும் மாறுபட்ட நிலையில் இருந்தது.
அவை அனைத்துமே தனது மன நிலைக்கு முரணாக இருந்தன என்பதை பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் உணர்ந்தார். ஆனாலும் அவர் மனதில் உபாசினி மஹராஜ் பெரிய மஹான் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. ஸ்ரீ ஷீரடி சாயி பாபா 1918 ஆம் ஆண்டே சமாதி ஆகி விட்டார் என்பதினால் இனி அவரை எங்கே சந்தித்து குரு உபதேசம் பெறுவது என்று மனதில் தோன்றத் துவங்கி விட்டது. ஆகவே இனி சென்னைக்கே சென்று விடலாம் என்ற முடிவுடன் சகோரி ஆஸ்ரமத்தில் இருந்து வெளியேறினார். ஆனால் அதை உபாசினி மஹாராஜுக்கு தெரிவிக்கவில்லை. அதைக் குறித்துக் கூறினால் எங்கே தன்னை தடுத்து விடுவாரோ என்று பயந்தார். உபாசினி மஹராஜின் ஆஸ்ரமம் சுடுகாட்டை ஒட்டி இருந்தது என்பதினால் அதைத் தாண்டி வெளியே வந்தவரை நீண்ட அங்கி அணிந்திருந்த, பதான் போன்ற தோற்றத்தில் இருந்த, முன்பின் தெரியாத ஒருவர் சந்தித்து கேட்டார் ‘ஐயா, நீங்கள் எங்கே போகின்றீர்கள்?’.
அதற்கு பதில் அளித்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் தான் தனது சொந்த ஊருக்கு செல்வதாகக் கூறியதும், அந்த பதான் அவரிடம் அந்த எண்ணத்தைக் கை விடுமாறு கூறினார். சொந்த ஊருக்கு செல்லும் முன் அருகில் இருந்த ஷீரடி சாயிபாபாவின் சமாதிக்கு சென்று விட்டு ஊருக்குப் போகுமாறும், ஷீர்டி சாயிபாபா சமாதியின் தரிசனம் ஆன்மீக ரீதியாக பயன் அளிக்கும் என்றும் அறிவுரை கொடுத்து விட்டு சென்று விட்டார். முன்பின் தெரியாதவர் தன்னிடம் வந்து அப்படிக் கூறுவதற்கான காரணம் என்ன என்பதைக் குறித்து பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் ஒரு நிமிடம் கூட யோஜனை செய்து பார்க்கவில்லை.
பஷ்டூன்கள் அல்லது பதான்கள் என்று அழைக்கப்படும் மக்கள் தெற்கு மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் வடமேற்கு பாகிஸ்தானில் வசிக்கும் ஒரு ஈரானிய இனக்குழு ஆகும். அவர்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகள் உட்பட உலகின் பிற பகுதிகளிலும் புலம் பெயர்ந்தோரிலும் காணப்படுகிறார்கள்.
………….. தொடர்கின்றது: ஷீரடி நோக்கிப் பயணம்