COPYRIGHT : United hands Trust Ltd, UK
யுனைடெட் ஹேண்ட்ஸ் அறக்கட்டளை உருவான விதம்
திருமூலர் எழுதியுள்ள திருமந்திரத்தின் விநாயகர் காப்பில், “இந்தின் இளம்பிறை போலும்” என்று ஒரு வரி உண்டு. இந்து என்றால் அடர்ந்த கரி போன்ற இருள் என்று பொருள்படும். அமாவாசைக்கு பிறகு அடர்ந்த இருளாக இருக்கும் வானத்தில் நிலவு தோன்றுவது போல் இறைவன் உயிர்களை தோற்றுவிப்பதைக் குறிக்கிறது. சூன்யத்தில் இருந்து இறைவன் உயிர்களை தோற்றுவித்ததை குறிக்கும்படி இந்த வரி அமைந்துள்ளது. “இந்தின் இளம்பிறை” போன்று இறைவனால் தோற்றுவிக்கப்பட்டதுதான் யுனைடெட் ஹேண்ட்ஸ் அறக்கட்டளை. இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட இந்த அறக்கட்டளைக்கு வரும் ஒவ்வொரு நன்கொடையும், எந்தெந்த திருப்பணி மற்றும் தர்ம காரியத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை இறைவன் தீர்மானித்து செயல்படுத்துகிறார். இதனை ஒரு உவமை மூலம் சொல்ல வேண்டுமென்றால், இந்த உலகில் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு உடல், அதற்குரிய உடல் அமைப்புகள் என்று இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு உயிரின் உடல் அமைப்புகளும், உள்ளுறுப்புகளும் இறைவனால் மட்டுமே முடிவு செய்யப்படுகிறது. தன்னுடைய உள்ளுறுப்புகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை எந்த ஒரு உயிரினமும் முடிவு செய்ய இயலாது. நாம் சாப்பிடும் சாப்பாடு எவ்வாறு செரிமானம் ஆகிறது? எவ்வாறு சக்தியாக அது மாற்றப்படுகிறது? என்பது எதுவும் நம் கையில் இல்லை.
நம் உடலின் உள்ளே உள்ள சொந்த உறுப்புகளை கட்டுப்படுத்தும் சக்தி அல்லது அதிகாரம் நமக்கு இல்லை என்பதுதான் சத்தியம்! ஆனாலும் நாம் எந்த ஒரு விஷயம் எடுத்தாலும் நான் செய்தேன், என்னால் செய்யப்பட்டது, நான்தான் பெரியவன் என்று மூச்சுக்கு முன்னூறு முறை ஆணவத்தால், கர்வத்தால் சொல்கிறோம். செய்வது அனைத்தும் இறைவன் என்பதை உணரும் பக்குவம் நமக்கு இல்லை. யுனைடெட் ஹேண்ட்ஸ் அறக்கட்டளையை பொறுத்தவரை இந்த அறக்கட்டளையை உருவாக்கியவரும் இறைவனே! அதனை நடத்துபவரும் இறைவனே! என்பதை பங்களிக்கும் அனைத்து அடியவர்களும் உணர்ந்து இருக்கிறார்கள். அதுபோல் அடியவர்கள் பங்களிக்கும் அனைத்து நிதியும் எங்கெங்கு செல்ல வேண்டுமோ அது இறைவனால் தீர்மானிக்கப்பட்டு அவ்வாறு சென்று கொண்டிருக்கிறது. இந்த அறக்கட்டளை 2021 ஆம் ஆண்டு தை அமாவாசை அன்று ஆரம்பிக்கப்பட்டது. யுனைடெட் ஹேண்ட்ஸ் அறக்கட்டளையின் அடிப்படை மூலம் என்று பார்த்தால் அது செஞ்சி பானம்பாக்கம் கைலாசநாதர் கோவில் திருப்பணியின் மூலமாகத்தான் தொடங்கியது. இந்தக் கோவில் திருப்பணிக்கு நிதியுதவி கேட்டு திரு. சாய்குமார் அவர்கள் திருவாசகம் பாராயணம் செய்யும் எங்களின் குழுவை அணுகினார். அவருடைய வேண்டுதலின் படி, பானம்பாக்கம் கைலாசநாதர் கோவில் திருப்பணிக்கு நிதி திரட்ட எண்ணிய பொழுதுதான் இறைவன் இந்த அறக்கட்டளையை உருவாக்கினார்.
அப்படி உருவாகிய இந்த அறக்கட்டளை, இறைவனின் திருவுளப்படி தற்பொழுது பானம்பாக்கம் கைலாசநாதர் கோவில் திருப்பணி, வணக்கம்பாடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் திருப்பணி, மதுராம்பட்டு சொக்கநாதேஸ்வரர் கோவில், பசு தானம், பசுக்களை பராமரித்தல், ஆதரவற்று அனாதைகளாக இறப்பவர்களின் இறுதிச் சடங்குகளுக்கான செலவுகளை ஏற்றல், கைவிடப்பட்ட முதியோர்களுக்கு தினம் இரண்டு வேளை அன்னதானம் அளித்தல், மிகமுக்கிய யாகங்கள் நடத்த உதவுவது, ஏழைகள் மற்றும் சாதுக்களுக்கு அன்னதானம் செய்வது, வேஷ்டி, துண்டு, புடவை போன்றவை கொடுப்பது, ஏழை குழந்தைகளின் படிப்பு மற்றும் உடைகளுக்கு உதவுவது, ஏழைப் பெண்களின் கல்யாணத்திற்கு உதவுவது, கிருமி தொற்றினால் இயல்பு நிலை பாதிக்கப்பட்ட பொழுது இருளர்கள் சமுதாய மக்களுக்கும் மற்றும் கிராமங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவுவது என இறைவன் வழிகாட்டிக் கொண்டிருக்கும் அனைத்துவிதமான தர்ம காரியங்களையும் செய்து கொண்டிருக்கிறது. “சுயநலமின்றி செய்யும் அத்தனையும் சிவம்” என்பதை யுனைடெட் ஹேண்ட்ஸ் அறக்கட்டளை உணர்ந்து இறைவன் காட்டும் வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
மேலே உள்ள சிவ வாக்கியர் பாடல் சொல்வது போல், அருட்பெருஞ் சோதியான ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகிறோம். அவன் நம் ஆன்மாவின் உள்ளே கலந்து சோதியாக இருப்பதை உணராது, அவனையே நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடி அலைந்து காண முடியாமல், நம் ஆயுளையும் பிறவியையும் வீணாக்கிக் கொண்டிருக்கிறோம். அப்படி வீணாகிக் கொண்டிருந்த நம் வாழ்க்கையில், சுயநலமின்றி பல்வேறு விதமான தர்ம காரியங்கள் செய்ய வைத்து, அப்படி செய்வதன் மூலம் தன்னை உணர வைத்த இறைவனின் திருப்பாதங்களை வணங்கி போற்றுகின்றோம்!
அன்புடன்
யுனைடெட் ஹேண்ட்ஸ் அறக்கட்டளை
அன்பின் உருவமான ஶ்ரீ தத்தாத்ரேயர் குறித்து
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வரஹ
குரு சாட்சாத் பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
மும்மூர்த்திகளின் உருவமாக இருக்கும் குரு உண்மையில் பரப்பிரம்மம்! குரு உருவில் இருக்கும் அந்த பரப்பிரம்மத்தை வணங்குகிறேன்! என்பதுதான் மேலே உள்ள ஸ்லோகத்தின் பொருள். இந்த ஸ்லோகமாக, இந்த ஸ்லோகத்தின் பொருளாக இருப்பவர்தான் ஸ்ரீ தத்தாத்ரேயர்.
ஶ்ரீ தத்தாத்ரேயர் குருவிற்கெல்லாம் குருவானவர், அதாவது ஆதி குரு! பரசுராமருக்கு, கார்த்தவீர்ய அர்ஜுனனுக்கு குருவாக இருந்தவர் ஸ்ரீதத்தாத்ரேயர் என்பது நிறைய பேருக்குத் தெரியும். ஆனால் மாணிக்கவாசகருக்கு அந்தணர் உருவில் வந்தவரும் ஸ்ரீதத்தாத்ரேயர் என்பது நிறைய பேருக்குத் தெரியாது.
திருவாசகத்தின் 20வது பதிகமான திருப்பள்ளியெழுச்சி பதிகத்தில் இது குறித்து மறைபொருளாக கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பள்ளியெழுச்சி என்றால் அவதாரமாக தரிசனம் தருதல் என்று பொருள். இந்தப் பதிகத்தின் 10வது பாடலின் பொருளை இங்கு பார்ப்போம்.
புவனியில் போய்ப்பிறவாமையில் நாள்நாம்
போக்குகின்றோம் அவமே! இந்தப்பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே.
பொருள்:
புவனி – பூமி
போய் – பிறந்து
பிறவாமை – இறப்பு
இந்தப்பூமி – பூமியில் உள்ள உயிர்கள்
உய்ய – மீட்க, காப்பாற்ற
கொள் – தனக்குள் சேர்த்துக் கொள்ளல்
வாறு – அடையத் தக்க பெரும் பேறு
நோக்கி – நோக்கம்
திருப்பெருந் துறையுறை வாய் – திருப்பெருந் துறையுறையில் வாழ்பவன்
திருமாலாம் அவன்விருப் பெய்தவும் – நாராயணன் விருப்பப்படவும்,
மலரவன் – பிரம்மா,
அலர்ந்த – முழுவதுமாய் மலர்ந்த, பெருகிய
நீயும் – தத்தம் செய்தல்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் – இந்த பூமியில் வந்து என்னை ஆட்கொள்ள வந்தவனே
ஆரமுதே – பரிபூரணமானவனே
பள்ளி எழுந்தருளாயே – அடைக்கலம் தருவாயே
இப்பொழுது பாடலின் முழுப் பொருளையும் முழுமையாக பார்ப்போம். பூமியில் சென்று மனிதராய் பிறப்பதற்கு அரிய காரணம் இருக்கிறது, ஆனால் அது புரியாமல் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து, பிறவிச் சுழற்சியில் நாட்களை வீணாக்குகிறோம். இந்த பூமி சிவனால் மீட்கப்பட்டு முக்தி அடைய வேண்டுமென்றால் திருப்பெருந்துறையில் வாழ்பவனுமான சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மூவரும் ஆசைப்பட்டு தங்களை தத்தம் செய்ய, மும்மூர்த்திகளின் அம்சமாய் குருவாய் பூமியில் என்னை ஆட்கொள்ள வந்த பரிபூரணமானவனே, அடைக்கலம் தருவாய் என்பதுதான் முழுப்பொருள்.
திரு – தோற்றரவு, அவதாரம், ஊனுருக் கொள்ளுதல்
பள்ளி – பூமி
எழுச்சி – தோன்றுதல். தரிசனம், அவதாரம், உருக்கொள்ளுதல்
திருப்பள்ளி எழுச்சி என்றால் இறைவன் பூமியில் ஊனுடம்பு எடுத்து அவதாரமாக வருதல்
‘திருப்பள்ளியெழுச்சி’ என்கின்ற தலைப்பு, பூமியில் பரப்பிரம்மம் குருவாக அதாவது நம்மை உயர்நிலைக்கு அழைத்துச் செல்லும் ஆசிரியராக வந்ததைக் குறிக்கிறது. திருப்பள்ளி எழுச்சி பதிகத்தை திரோதான சுத்தி என்று சொல்வார்கள். மும்மூர்த்திகளும் படைத்தல், காத்தல், அழித்தல் என்கின்ற மூன்று வேலைகளை செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பரப்பிரம்மமோ படைத்தல், காத்தல், அழித்தல் மட்டுமல்லாது மறைத்தல், மறைத்தலை நீக்கி அருளல் என்கிற ஐந்து வேலைகளையும் செய்கிறது. பரப்பிரம்மமே குருவாக வந்து தன்னுடைய வழிகாட்டுதல்களினால் மறைத்தலை நீக்கி அருளி, எண்ணம், சொல், செயல் மூன்றையும் பரிசுத்தமாக்கி திரிகரணசுத்தியை கொடுத்து தன்னை அடைய வழி வகுக்கிறது.
அனுமனை போல ஶ்ரீ தத்தாத்ரேயரரும் ஒரு சிரஞ்சீவி, அவருக்கு அழிவு என்பது கிடையாது. ஸ்ரீ தத்தாத்ரேயரை அன்புடன் ஆத்மார்த்தமாக வணங்குபவர்களுக்கு வழிகாட்டும் குருவாக ஸ்ரீ தத்தாத்ரேயர் இந்த பிரபஞ்சம் முழுவதும் சூட்சும உருவத்திலும், பல சமயங்களில் தன் பக்தர்களுக்கு உதவுவதற்காக பல்வேறு விதமான வடிவங்களையும் எடுக்கிறார்.
ஸ்ரீ தத்தாத்ரேயர் என்கிற பரப்பிரம்மத்திற்கு எந்தவிதமான வரையறையும் இல்லை. அதாவது காலத்தினால், இடத்தினால், உருவத்தினால் அல்லது வேறு எந்த ஒரு விஷயத்தையும் கொண்டு ஸ்ரீதத்தாத்ரேயரை வரையறுக்க இயலாது.
திருவாசகத்தின் முதல் பதிகமாக சிவபுராணத்தில் ‘கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க’ என்கிற வரியில் ‘கோ”என்றால் பசு. பசு என்றால் உயிர்கள் மற்றும் தர்மம் என்று இரு விதமாக பொருள் கொள்ளலாம். தர்மத்தை காக்கவும், உயிர்களை உய்விக்கும் பொருட்டும், ஆதிகுருவாக, முதல் குருவாக பரப்பிரம்மம் பூமியில் அவதரித்தது. இதைத்தான் மாணிக்கவாசகர் “குருமணிதன்” என்று குறிப்பிடுகிறார். குருமணி என்றால் குருவுக்கே குரு என்று பொருள், ‘தன்’ என்றால் திட்டவட்டமான என்று பொருள். அதாவது மாணிக்கவாசகர் இவர்தான் ஆதிகுரு என்பதை திட்டவட்டமாக குருமணிதன் என்கிற வார்த்தையின் மூலம் சொல்கிறார்.
மாணிக்கவாசகருக்கு அந்தணர் உருவில் குருவாக வந்த தத்தாத்ரேயர், நமக்கு ஸ்ரீ தத்தாத்ரேயர் சரித்திரத்தின் வாயிலாக குருவாக வந்து வழிகாட்டி உய்விக்க வந்திருக்கிறார்.
இந்த புத்தகத்தின் விலை ரூபாய் 116. எண் 116 என்பதின் மகிமை அனைத்து தத்தாத்திரேயர் அடியவர்களுக்கும் தெரிந்ததே ! விலை என்று சொல்வதை விட குருதட்சினை என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கும் ஒவ்வொருவருடைய வாழ்விலும் குருவாக வந்து மாயை என்னும் மறைத்தலை நீக்கி இவ்வுலக வாழ்க்கையில் மட்டுமன்றி, மறுவுலக வாழ்க்கையிலும் நம்முடைய ஆன்மாவை பாதுகாக்கும் பாதுகாவலராக இருக்கும் ஸ்ரீதத்தாத்ரேயர் திருவடியை பரிபூரணமாக சரணடைவோம்.
குருவே சத்தியம்! குருவே நித்தியம்! குருவே ஆனந்தம்!
குரு கடாட்சம் பரிபூரணத்தை கொடுக்கும்!
சர்வ மங்கள மங்களம்!
அன்புடன்
வள்ளி திருமுருகன் (UK) — ஶ்ரீ தத்தாத்ரேயர் அடியவர்
ஸ்ரீ அனகாலஷ்மி விரத பூஜை செய்யும் முறையும் அதன் பலன்களும்
ஸ்ரீ தத்தாத்ரேயர் பரப்பிரம்மம் என்பதினால் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியவர் அவரே! இந்த பிரபஞ்சத்தின் தாயும், தந்தையும், குருவும் அவரே! என மிகத் தெளிவாக ஶ்ரீபாத ஸ்ரீ வல்லப சரித்திரத்தில் நான்காம் அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. தாய் உருவத்தில் அவரை நாம் வழிபட விரும்பினால் நாம் அனகாலஷ்மியாக வழிபடலாம். அனகா லஷ்மியை தாயாக வழிபடும் பொழுது தாய்க்கு உரிய கருணையோடு நம்முடைய கர்மவினைகளை வெகுவாக குறைத்து நம்முடைய கர்ம வினைகளின் பாதிப்பை வெகுவாக குறைப்பவள் என்று ஸ்ரீ பாத சரித்திரத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீ அனகாலஷ்மி ஆனவள், சரஸ்வதி, லஷ்மி, பார்வதி ஆகிய முப்பெரும் தேவியரையும் உள்ளடக்கிய தேவி. ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் ஸ்ரீ அனகாலஷ்மி விரத பூஜை செய்து வழிபடலாம். சமஸ்கிருத மொழியில் பூஜை செய்வதற்கு ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகள் அவர்களுடைய இணையதளத்தில் அனைத்து விபரங்களையும் மிக அழகாக வெளியிட்டிருக்கிறார்கள். யூடியூப் இணையதளத்திலும் ஶ்ரீ அனகாலஷ்மி விரதம் என்று தேடினால், அந்த விரத பூஜை செய்வதற்குரிய முறைகள் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த அனகாலஷ்மி விரதம் சமஸ்கிருதத்தில் இருப்பதினாலும், பல்வேறுவிதமான விதிகளை நாம் முறைப்படி பின்பற்ற வேண்டி இருப்பதாலும், இந்தப் பூஜை செய்வது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் ஸ்ரீ பாத ஸ்ரீவல்லபர் சரித்திரத்தின் படி நாம் மிக எளிய வழியில் ஸ்ரீ அனகாலஷ்மி விரத பூஜை செய்து, மிகச் சிறந்த பலனைப் பெற முடியும்.
சித்த மங்கல ஸ்தோத்திரத்தை பரிபூரண நம்பிக்கையுடன் நாம் சொல்லும் பொழுது, ஸ்ரீ அனகாலஷ்மி விரத பூஜையை அதற்குரிய சாஸ்திரங்களோடு அனுசரித்த பலனையும், ஆயிரம் பிராமணர்களுக்கு, அவரவர் தனது சொந்த வருமானத்தில் உணவளித்த பலனையும் கொடுக்கும் என்று ஸ்ரீபாத ஶ்ரீவல்லப சரித்திரத்தின் 17வது அத்தியாயம் சொல்கிறது.
இந்தப் புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என்று ஸ்ரீபாதரால் சொல்லப்பட்டிருக்கிறது. ஏலக்காய், கிராம்பு, பச்சைக் கற்பூரம், சிறிது பனங்கற்கண்டு ஆகிய அனைத்தும் சேர்த்து அரைத்த பொடியை எண்ணையில் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளலாம். அந்த எண்ணெயை தினமும் விளக்கில் ஊற்றி விளக்கேற்றி, சித்த மங்கல ஸ்தோத்திரத்தை பரிபூரண நம்பிக்கையுடன் காலையிலும் மாலையிலும் சொல்வது எளிய முறையில் செய்யும் அனகாலஷ்மி விரதமாகும். விரதம் என்றால் சாப்பிடாமல் இருப்பது என்று பலர் நினைத்துக் கொள்கிறோம். இது மிகவும் ஒரு தவறான கருத்தாகும். ஒரு விஷயத்தை நினைத்து அதை மனஉறுதியுடன், வைராக்கியத்துடன் செய்வதே விரதமாகும். விளக்கேற்றும் பொழுது சித்த மங்கல ஸ்தோத்திரம் சொல்கிறோம் என்று முடிவெடுத்தபின் அதை தினமும் விடாது தொடர்ந்து செய்வதுதான் வைராக்கியம்.
ஒருவேளை நாம் ஊருக்கு செல்கிறோம், நம்மால் விளக்கேற்றி சித்த மங்கல ஸ்தோத்திரம் சொல்ல இயலாத நிலை என்றால் நம்முடைய மனதில் மானசீகமாக விளக்கேற்றி சித்த மங்கல ஸ்தோத்திரத்தை மனதில் சொல்வதும் நம்முடைய விரதத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க உதவும். மானசீகமாக செய்யப்படும் எந்த ஒரு விஷயமும் மிகவும் வலிமையானது.
எந்த ஒரு விஷயத்தின் பலனும் ஒருவர் எந்த அளவு ஒரு விஷயத்தை ஆத்மார்த்தமாக செய்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான் அமையும். எனவேதான் ஒருவருக்கு மிகுந்த பலன் அளிக்கும் விஷயம் அடுத்தவருக்கு அந்த அளவு பலன் இல்லாமல் இருக்கிறது. நம்முடைய பரிபூரண நம்பிக்கை மற்றும் ஆத்மார்த்தமாக செய்வதின் அடிப்படையிலேயே நாம் செய்யும் விஷயங்களின் பலன்கள் அமைகிறது.
விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் பல சமஸ்கிருத ஸ்லோகங்களில் பலஸ்ருதி என்கின்ற ஒன்றை பார்ப்போம். இந்த வார்த்தையில் ஸ்ருதி என்றால் ஆத்மார்த்தமாக என்பது பொருள். அதாவது பலஸ்ருதி என்றால் ஆத்மார்த்தமாக செய்வதன் பலன் என்று பொருள். இறைவனை ஆத்மார்த்தமான சரணாகதியுடன் எந்த சூழ்நிலையிலும் அவர் நம்மை காப்பார் என்கின்ற பரிபூரண நம்பிக்கையுடன் போற்றித் துதிப்போம்! என்னை நினைத்து ஏங்குபவர்களின் துயர் துடைத்து அவர்களின் தேவைகளை தாராளமாக நிறைவேற்றுவேன் என்று தாயாக, தந்தையாக, குருவாக நம்மை பாதுகாக்கும் பரப்பிரம்மமான ஶ்ரீ தத்தாத்ரேயர் உறுதியளிக்கிறார்.
ஸ்ரீபாத ராஜம் சரணம் பிரபத்யே!
பதிப்பாளர் உரை
முழு முதற்கடவுளான கணபதியின் திருப்பாதங்களை வணங்கி, மொழி மற்றும் வாக்கின் அதிபதியான சரஸ்வதி தேவியின் திருப்பாதங்களை வணங்கி, பிறவிப் பெருங்கடலில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கும் நம்மைக் காப்பாற்ற, நம் வாழ்வில் குருவாய் வந்திருக்கும் ஆதிகுரு ஶ்ரீ தத்தாத்ரேயர் அவர்களின் திருப்பாதங்களை வணங்கி, ஶ்ரீ தத்தாத்ரேயர் சரித்திரப் புத்தகத்தை, அன்புடனும், நம்பிக்கையுடனும், நன்றியுடனும் பாராயணம் செய்யும் அடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும், விலை மதிக்கமுடியாத பொக்கிஷமான மன அமைதி கிடைக்க வேண்டும் என்று ஆத்மார்த்தமாக வேண்டி, எங்கும் நிறைந்திருக்கும் பரப்பிரம்மத்தின் அருளால் வெளியிடுகிறோம்!
சஞ்சித கர்மா (பூர்வ ஜென்ம வினை) பிராரப்த கர்மா (இந்தப் பிறவியில் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்பத் துன்பங்கள்) மற்றும் ஆகாமிய கர்மா (இந்தப் பிறவியில் செய்யும் நன்மை தீமைகள்) ஆகிய இந்த மூன்றும் அழிக்கப்பட்டால் மட்டும்தான் பிறவிச் சுழற்சியில் இருந்து தப்பிக்க முடியும். பிறவி என்று எடுத்துவிட்டால் கர்மா என்ற ஒன்றிலிருந்து தப்பிக்க முடியாது. நாம் செய்யும் நன்மை தீமைகள் நம்முடைய கணக்கில் சேர்க்கப்பட்டே ஆகவேண்டும் என்பது கர்ம விதி. இந்தக் கர்ம விதியின் பிடியில் இருந்து தப்பிக்க ஒரு எளிய வழி உண்டு. அந்த எளிய வழி என்னவென்றால், குருவின் வழிகாட்டுதலை நாம் பின்பற்றும் பொழுது கர்மாவின் பிடியிலிருந்து நம்மால் தப்பிக்க இயலும். குரு நம் வாழ்வில் வரும் பொழுது நமக்குள் ஒரு விழிப்புணர்வு ஏற்படுகிறது. அந்த விழிப்புணர்வு ஏற்படும் பொழுது, நான் என்ற அகங்காரம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடத்தில் இருந்து அழிக்கப்படுகிறது. நான் என்கின்ற அகங்காரம் அழிக்கப்படும் பொழுது, செய்வது அனைத்தும் இறைவன் என்கின்ற உணர்வு நமக்குள் அழுத்தம் திருத்தமாக பதியும். செய்வது அனைத்தும் இறைவன் என்ற உணர்வுடன் செய்யும் பொழுது எந்தவிதமான புண்ணிய கர்மா, பாவ கர்மா எதுவும் நம்முடைய கணக்கில் ஏற்றப்படுவதில்லை.
“யத் பாவம் தத் பவதி (yad bhavam tad bhavati)” என்று சொல்வார்கள். இதன் பொருள் என்னவென்றால் “நம்முடைய உள்மனதின் மனோபாவத்திற்கு ஏற்பவே அனைத்தும்” என்பது பொருள். எப்பொழுது ஒருவன் ஆத்மார்த்தமாக கடவுளை நினைத்து விட்டு ஒரு விஷயத்தை செய்கிறானோ அப்பொழுது அந்த விஷயத்தின் நன்மை, தீமை இறைவனிடம் சேர்கிறது. ஒருவர் கசாப்பு கடைக்காரர் ஆக பிறக்க வேண்டும் என்பது அவருடைய கர்ம விதி. தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற கசாப்பு கடைக்காரர் உயிர்களை வெட்ட வேண்டும் என்பது அவருடைய கடமை. அந்தக் கடமையை அவர் இரு வழிகளில் செய்யலாம். அதாவது தினமும் தான் உயிர்களை வெட்ட வேண்டி இருக்கிதே என்று எண்ணி, இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு அமைந்து விட்டதே என்று நொந்து நொந்து தன்னுடைய கடமையை செய்யலாம். இவ்வாறு அந்த கசாப்புக் கடைக்காரர் தன்னுடைய கடமையை செய்யும் பொழுது அந்த உயிர்களை வெட்டும் பாவம் அனைத்தும் அவருடைய கணக்கில் ஏற்றப்படுகிறது. அதற்குப் பதிலாக கசாப்பு கடைக்காரராக பணி செய்ய இறைவன் என்னை அனுப்பி வைத்திருக்கிறான் என்று இறைவனை நினைத்து, வெட்டும் வேலையை அந்த கசாப்புக் கடைக்காரர் செய்யும் பொழுது அவருடைய கணக்கில் எந்தவிதமான பாவக் கணக்கும் ஏற்றப்படுவது இல்லை. நம் வீட்டில் பாம்பு நுழைந்துவிட்டால் நம்மையும் நம் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள அடிக்க வேண்டி இருக்கும் பொழுது, அதை இறைவனை நினைத்து அடித்து விட்டு பின் அதனை முற்றிலும் மறந்து நம்முடைய வேலையை நாம் கவனிக்கும் பொழுது நம்முடைய கணக்கில் பாம்பை கொன்ற பாவம் ஏற்றப்படுவது இல்லை. அதற்குப் பதிலாக நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடம், நான் நேற்று பாம்பை அடித்து விட்டேன் அதனால் ஏதேனும் தோஷம் வருமா என்று திரும்பத் திரும்பக் கேட்பது, அதையே நினைத்து பயந்து, “நான் கொன்று விட்டேன், நான் கொன்று விட்டேன்” என்று எண்ணும் பொழுது நம்முடைய கணக்கில் பாவங்களும், புண்ணியங்களும் ஏற்றப்படுகிறது. ஶ்ரீ தத்தாத்ரேயரை நாம் வடிவியல் (Geometry) வடிவில் கீழே பார்ப்போம்.
மூன்று கோடுகள் கொண்ட சமபக்க முக்கோணம், நடுவில் ஒரு புள்ளி. படத்தில் சொல்லப்பட்டிருப்பது போல் மூன்று கோடுகளும் ஆணவம், கன்மம் (கர்மா), மாயயைக் குறிக்கிறது. புள்ளிதான் தத்தாத்ரேயர் என்கின்ற பரப்பிரம்மம். வடிவியல் படி புள்ளிக்கு எந்த ஒரு வரையறையும் இல்லை. புள்ளிதான் அனைத்திற்கும் அடிப்படை. ஒரு கோடு வரைய வேண்டும் என்றால் பல புள்ளிகள் சேர்ந்ததுதான் ஒரு கோடு. ஒரு புள்ளியை பல புள்ளிகளாக பிரிக்க முடியும். அதாவது ஒரு புள்ளியில் அனைத்துப் புள்ளிகளும் அடக்கம். நம்மிடமுள்ள நான் என்கின்ற ஆணவம் நீக்கப்படும் பொழுது, நம்முடைய கர்மாக்களும், மாயையும் கடவுளால் நீக்கப்படுகிறது. இது மூன்றும் நீக்கப்பட்ட பின் ஒரு ஆன்மா கடவுளிடம் ஐக்கியமாகி விடுகிறது. அதாவது கோடாக இருந்த ஆன்மா புள்ளி (இறைவன்) ஆகிவிடுகிறது.
நான் என்ற அகங்காரம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடத்தில் இருந்து மறையும் பொழுது, நம்முடைய சஞ்சித, பிராரப்த மற்றும் ஆகாமிய கர்மா முற்றிலுமாக நம்முடைய குருவின் அருளினால் எரிக்கப்படுகிறது. மாயையும் குரு நீக்குகிறார். நான் என்ற அகங்காரம் மறையும் பொழுது, செய்வது அனைத்தும் இறைவன் என்கின்ற உணர்வு நிலையில் பரிபூரண சரணாகதியை உணர முடியும்! அது மட்டுமன்றி நமது ஆன்மா இந்த உடலைவிட்டு நீங்கும் பொழுது எந்தவிதமான பயம், கவலை மற்றும் பற்று எதுவுமின்றி இறைவனின் நாமத்தை நினைத்தவாறு எந்த ஒரு வலியும், வேதனையும் இன்றி உடலை விட்டு நீங்க முடியும், இறைவனின் திருவடியை அடைந்து ஆனந்தமாக இருக்க முடியும். இந்த நிலை சட்டென யாருக்கும் கிடைத்துவிடாது. குருவின் மேல் பரிபூரணமான நம்பிக்கை கொண்டு குருவின் வழிகாட்டுதலை மதித்து நடக்கும் பொழுது, இறப்பு குறித்த பயம் இல்லை. இவ்வுலக வாழ்வில் மட்டுமன்றி மறுவுலக வாழ்விலும் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைத்து ஆனந்தமாக இருக்க முடியும்.
ஶ்ரீ தத்தாத்ரேயரை அடைய பணிவு மிக மிக அவசியம்! நான் என்ற அகங்காரம் மறையும் பொழுதுதான் நமக்குள் பணிவு வரும். உண்மையான அன்பு, பணிவு, நம்பிக்கையுடன் தத்தாத்ரேயரை வழிபடும் பொழுது, தத்தாத்ரேயர் நமக்கு அனைத்து விதமான மங்களங்களையும் கொடுக்கிறார். இந்த உட்கருத்தைத்தான் ஶ்ரீ தத்தாத்ரேயர் சரித்திரம் மூலமாக சாந்திப்பிரியா என்று அன்புடன் அழைக்கப்படும் ஜெயராமன் அவர்கள் மிக எளிமையான முறையில், குழந்தைகளும் படித்தால் புரியும் வகையில் தமிழில் அளித்திருக்கிறார்.
இந்தப் புனித ஶ்ரீ தத்தாத்ரேயர் சரித்திரத்தை வெளியிடும் பாக்கியத்தையும், இந்தப் புத்தகம் மூலமாக கிடைக்கும் அனைத்து இலாபங்களும் முழுமையாக தர்ம காரியங்களுக்கு பயன்படுத்த யுனைடெட் ஹேண்ட்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட்டிற்கு அனுமதி அளித்த சாந்திப்பிரியா என்றழைக்கப்படும் ஜெயராமன் அவர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்தினருக்கும் நம்முடைய அறக்கட்டளை சார்பில் ஆத்மார்த்தமாக நன்றி செலுத்துகிறோம்.
“குருவைத் தேடி அலையாதே, குரு உன்னைத் தேடி வருவார்” என்று சொல்வார்கள். ஒருவர் எப்பொழுது பக்குவப்படுகிறாரோ அப்பொழுது குரு அவரைத் தேடி வருவார்” என்று அருணகிரிநாதர் சொல்கிறார். ஆங்கிலத்தில் “The teacher will appear when the student is ready” என்று சொல்லுவார்கள். குரு என்பவர் மானுட ரூபத்தில் நம்முடன் இருந்து வழிகாட்ட வேண்டும் என்பது அவசியமில்லை. கலியுகத்தில் குரு புத்தகம் மூலமாக, வாட்ஸ்அப் மெசேஜ் மூலமாக, நம்மைச் சுற்றியுள்ள உயிர்களின் மூலமாக நமக்கு பல விஷயங்களை உணர்த்த முடியும். மகான்களைப் பற்றியும், தெய்வீக குரு அவதாரங்கள் பற்றியும் படிக்கக்கூடிய வாய்ப்பு பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் மட்டும்தான் கிடைக்கும்.
மகான்களைப் பற்றிய புத்தகங்கள் ஒருவரிடம் ஏதோ ஒரு விதத்தில் கிடைக்கும் பொழுது, அது அவர்கள் செய்த பூர்வ புண்ணிய பலனாக மட்டுமேதான் கிடைக்கிறது என்பதை உணர்தல் வேண்டும். இந்தச் சரித்திரப் புத்தகத்தை வெறும் பாராயணமாக படிக்க வேண்டும் என்று மட்டும் நினைக்காமல், இந்தப் புத்தகத்தில் உள்ள விஷயங்களை உள்வாங்கி, உணர்ந்து படிக்கும் பொழுது படிப்பவர்கள் உள்மனதில் ஒரு அற்புத மாற்றம் ஏற்படும். ஶ்ரீ தத்தாத்ரேயர் உணர்த்தும் விஷயங்களை உணர்ந்து படிப்பவர்களுக்கு, பல கோடி கொடுத்து வாங்க நினைத்தாலும், வாங்க இயலாத அமைதியை கொடுக்கும் ஒரு புத்தகமாய் ஶ்ரீ தத்தாத்ரேயர் சரித்திரம் அமையும். இந்தச் சரித்திரப் புத்தகத்தில் முழுவதும் நிறைந்திருப்பது பொக்கிஷங்களே!. இந்த தெய்வீகப் பொக்கிஷங்களை மனம் திருப்தி அடையும் அளவிற்கு உணர்ந்து எடுத்துக் கொள்ளும் பக்குவம் அடியவர்கள் கையில்தான் உள்ளது. குருவின் அருளால் அந்தப் பக்குவம் அடியவர்களுக்கு கிடைக்க யுனைடட் ஹேண்ட்ஸ் அறக்கட்டளை ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்து இந்தப் புத்தகத்தை குருவருளால் வெளியிடுகிறது.
நடந்ததும், நடப்பதும், நடக்கவிருப்பதும், அனைத்தும் இறைவன் செயலே! இதை உணர்த்திய குருவின் திருப்பாதங்களை அன்புடனும், நன்றியுடனும் பணிந்து வணங்குகிறோம்!
அன்புடன்
யுனைடெட் ஹேண்ட்ஸ் அறக்கட்டளை
கார்த்தவீர்யார்ஜுனன், பரசுராமர்,
மற்றும் விஷ்ணுதத்தர் நமக்கு உணர்த்துவது என்ன?
கண்ணால் பார்ப்பதும் பொய்! காதால் கேட்பதும் பொய்! தீர விசாரிப்பதே மெய்! என்று மிக அழகான ஒரு பழமொழி உண்டு. அதாவது ஒரு விஷயத்தை நம் கண்ணால் பார்த்து விட்டு அல்லது காதால் கேட்டு விட்டு தீர்மானித்து விட முடியாது. அதனால்தான் கார்த்தவீர்யார்ஜுனனிடம் அவருடைய உறவினர்கள் திரும்பத் திரும்ப தத்தாத்ரேயரின் உருவத்தைப் பார்த்து அல்லது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை பார்த்து ஏமாந்து விடாதே. ஶ்ரீ தத்தாத்ரேயர் குடிகாரர் போல், பெண் போகத்தை விரும்புவது போல் காட்சியளிப்பார். வெளி உருவத்தை தாண்டி உள்ளே அவரை உணர் என்று சொல்லி அனுப்புவார்கள். விஷ்ணுதத்தர் இரண்டு முறை ஶ்ரீ தத்தாத்ரேயரின் வெளி உருவத்தை பார்த்தும் அவர் செய்யும் செயல்களைக் கொண்டும், அவரை எடைபோட்டு அவர் ஶ்ரீ தத்தாத்ரேயராக இருக்க மாட்டார் என்று எண்ணி தவற விட்டு விடுவார். நாமும் நம்மைச் சுற்றி உள்ள அனைவரையும் அவர்களின் உடை, அந்தஸ்து போன்றவற்றை கொண்டு மட்டும் எடை போடுகிறோம். யாரேனும் ஒருவர் அழுக்கான உடையுடன், பரட்டை தலையுடன் நம்மை நோக்கி வந்தால் அல்லது பேச முயற்சித்தால் அவர்களை விட்டு விலகிப் போக நினைக்கிறோம். சித்தர்கள் அனைவரும் அழுக்கான உடையுடன் பிச்சைக்காரர்கள் போல்தான் உலவி வருகிறார்கள். அவர்கள் டிப்டாப்பாக மிக அழகாக உடை உடுத்தி வந்தால் எல்லா நேரங்களிலும் அவர்களை சுற்றி பெரும் கூட்டம் கூடிவிடும். இது போன்ற கூட்டங்களை தவிர்ப்பதற்காகவே சித்தர்கள், ஏன் தத்தாத்ரேயரும் பலநேரங்களில் அழுக்கான உடையுடன் கூடிய பிச்சைக்காரராக மட்டுமே வலம் வருகிறார். தத்தாத்ரேயரின் இந்த சரித்திரம் நம்மை நமக்குள் உள்ள இறைவனை பார்ப்பதற்கு உதவும் ஒரு கருவியாக இருக்கும். நம்மை சுற்றி உள்ளவர்களை வெறும் பணத்தினாலும், அந்தஸ்தினாலும் எடை போடக்கூடாது என்பதை உணர்த்தும் விதமாக இந்தச் சரித்திரம் அமைகிறது. விஷ்ணுதத்தர் இரண்டு முறை தவற விட்டாலும் மூன்றாவது முறை உணர்ந்துகொண்டார். நாம் ஶ்ரீ தத்தாத்ரேயரை உணர்ந்து கொள்வோமா அல்லது தவறு விட்டுவிடுவோமா என்பது நம் மனதின் பக்குவத்தில்தான் இருக்கிறது!
அன்புடன்
யுனைடெட் ஹேண்ட்ஸ் அறக்கட்டளை
நூலாசிரியர்
1945 ஆம் ஆண்டில் பிறந்த என்னுடைய பெயர் ஜெயராமன். மத்திய அரசின் ஒரு பிரிவில் உயர் அதிகாரியாக பதவி புரிந்தப் பின் 2005 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நான், பொழுதை கழிப்பதற்காக சாந்திப்பிரியா என்ற புனைப் பெயரில் தமிழில் ஆலயங்கள், மகான்கள், விரதங்கள் போன்ற ஆன்மீக கட்டுரைகளை எழுதி அவற்றை என் இணைய தளத்தில் (https://santhipriya.com/) பிரசுரித்து வருகின்றேன். கடந்த ஆண்டுகளில் நான் எழுதிய ஐநூறுக்கும் மேற்பட்ட ஆன்மீக கட்டுரைகள் வெளியாகி உள்ளன. ஸ்ரீ சிவபால யோகி, ஸ்ரீ மானிக் பிரபு, ஸ்ரீ அய்யா வைகுண்டர் போன்ற மகான்கள் பற்றிய வாழ்க்கை வரலாறு, ஸ்ரீ தத்தாத்திரேயர் சரித்திரம் (பாராயணம்), குரு சரித்திரம், திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதி பாராயணம் போன்ற ஆன்மீக கட்டுரைகளை எழுதி உள்ளேன். அச்சக படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையிலான கட்டுரைகள் மற்றும் கேள்வி பதில்களை என்னுடைய இன்னொரு இணைய தளத்தில் வெளியிட்டு வருகிறேன் (https://printing.santhipriya.com/). ஸ்கந்த முருகன் பக்தி இணைய தளத்தில் (http://murugan.org/research/98papers.htm) நான் தமிழாக்கம் செய்துள்ள இருபத்தி ஐந்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாகி உள்ளன. ஐரோப்பாவைச் சேர்ந்த டேவிட் காட்மன் என்ற இரமணமகரிஷி பக்தருடைய இணைய தளத்திலும் (https://www.davidgodman.org/translated-articles/) இரமண மகரிஷியின் பல கட்டுரைகளை தமிழாக்கம் செய்ய அவைகளும் பிரசுரமாகி உள்ளன. சீரடி சாய்பாபா இணைய தளத்திலும் (https://shirdisaibabatamilstories.blogspot.com/) நான் பல கட்டுரைகளை மொழி பெயர்த்து உள்ளேன்.
நான் தமிழில் எழுதக் காரணமாக இருந்தவரும், எனக்கு அதில் ஊக்கம் தந்தவரும், 1980-85 ஆம் ஆண்டுகளில் வெளியாகி வந்த தாய் என்ற வார இதழில் ஆசிரியராக இருந்தவரும், என்னுடைய நல்ல நண்பருமான காலம் சென்ற இலக்கியச் சித்தர் திரு. வலம்புரி ஜான் ஆவார். அவர்தான் எனக்கு சாந்திப்பிரியா என்ற பெயரை சூட்டினார். இன்றைக்கு என்னால் தமிழில் எழுத முடிகின்றது என்றால் அந்த பெருமை முழுவதும் காலம் சென்ற திரு.வலம்புரி ஜான் அவர்களையே சேரும்.
விளக்க உரை
மூன்று தலைகளையும் ஆறு கைகளையும் கொண்டு, மும்மூர்த்திகளின் சின்னங்களையும் கைகளில் ஏந்தி இருக்க, தெய்வீக பசுவான காமதேனுவும், நாய்களும் அவரை சுற்றி இருக்க, உடலெங்கும் விபூதி பூசி, மாபெரும் அவதூத ரூபத்தில் காட்சி தருபவரே ஶ்ரீதத்தாத்ரேயர். தமிழில் அவதூதம் என்கின்ற சொல்லுக்கு முற்றும் துறந்தவர் அதாவது நிர்வாண நிலை என்று அர்த்தம். ஸ்ரீதத்தாத்ரேயர் கலியுகத்தில் மும்மூர்த்திகளை உள்ளடக்கி ஒரு திகம்பரராக அவதரித்தவர்.
திகம்பரர் என்றால் திசைகளையே ஆடையாக அணிந்தவர் அதாவது நிர்வாணமான நிலை என்று பொருள். திகம்பரர் என்றால் பரிசுத்தமானவர் என்றும் பொருள். நம்மைப் போன்ற மனிதர்களுக்கு உருவம், அணிந்திருக்கும் ஆடைகள், வைத்திருக்கும் பொருட்கள் இவையெல்லாம் முக்கியமானது. இவற்றைக் கொண்டு தான் நாம் ஒருவரை எடை போடுகிறோம் அல்லது மதிக்கிறோம்.
முற்றும் துறந்தவர்கள் எந்த ஒரு உயிரையும் வேறுபடுத்திப் பார்ப்பது இல்லை. அவர்களுக்கு விலங்குகள், புழு, பூச்சிகள், மனிதர்கள் இதுபோன்ற அனைத்தும் சமமே!.
நைமிசாரண்ய ஷேத்திரத்தில் முனிவர்களுக்கு தெய்வீக கதைகளையும், போதனைகளையும் செய்து வந்த சூதக முனிவர், விஷ்ணு பகவானின் அவதாரங்களை பற்றிக் குறிப்பிடுகையில் ஶ்ரீதத்தாத்ரேயரை விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக குறிப்பிட்டு உள்ளாராம். விஷ்ணு பகவானின் ஆறாவது அவதாரம் பரசுராம அவதாரமாயிற்றே என்று சிலர் கேட்கலாம். ஆனால் பல நேரங்களில் சம காலத்தில் தெய்வங்கள் சில காரணங்களுக்காக இரண்டுக்கும் மேற்பட்ட அவதாரங்களை எடுத்துள்ளன என்பதை பல புராணக் கதைகள் மூலம் அறிய முடியும். மூல தெய்வங்களுக்கு அப்படிப்பட்ட சக்திகள் உண்டு. காரணம் அனைத்து அவதாரங்களும் மூல தெய்வங்களின் உடலுக்குள் உள்ள சக்திக் கதிர்களில் இருந்து வெளியானவை என்பதே.
ஶ்ரீ தத்தாத்ரேயரைக் குறித்து கருட புராணம், பிரும்ம புராணம் போன்ற நூல்களிலும் செய்திகள் உள்ளன. இந்துக்கள் இவரை குருவிற்கெல்லாம் குருவானவர் என்று நம்புகின்றார்கள். யோகக் கலையின் குருவும் அவரே. வடநாட்டில் நாத் எனும் சமூகத்தினர் இவரை ஆதி குரு என்றே அழைக்கின்றார்கள். மராட்டிய மாநிலம், ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களில் ஶ்ரீ தத்தாத்ரேயர் புகழ் வானளாவியது.
ஶ்ரீ தத்தாத்ரேயரின் அவதாரத்துக்கு பின்னரே குரு பரம்பரை தோன்றியது. அந்த குரு பரம்பரையில் அவருடைய அவதாரங்களாக, சத்குரு என்ற பெயருடன் வெளி வந்தவர்கள் ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர், ஸ்ரீ நிருசிம்ம சரஸ்வதி, (தமிழில் ஶ்ரீ நரசிம்ம என்று அழைக்கிறார்கள்) ஸ்ரீ மாணிக் பிரபு, ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகள், ஸ்ரீ கஜானன் மஹராஜ், ஸ்ரீ தேம்பே ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ சீரடி சாயிபாபா போன்றவர்கள். தன்னை ஆராதிக்கும் பக்தர்களுக்கு தத்தா அதாவது கொடுப்பது என்கின்ற அர்த்தத்தைக் தரும் வகையில், தன்னையே தந்தவர் தத்தர் என்பதினால்தான், அவருக்கு தத்தர் என்ற பெயர் ஏற்பட்டது என்பதாக பண்டிதர்கள் கூறுவார்கள். இன்னும் சிலரோ தத்தா என்றால் தருவது மற்றும் அத்ரி என்பது அத்ரி முனிவரை குறிக்கிறது, எனவேதான் அவரை அத்ரி முனிவர் மூலம் தன்னைக் கொடுத்தவர் என்ற அர்த்தத்தில் தத்தாத்ரேயர் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுவார்கள்.
தெய்வ வழிபாட்டில் பூஜை முறை மற்றும் பாராயண முறை என்பவை உண்டு. வேத காலம் தாண்டி நடைமுறையில் வந்திருந்த பூஜை புனஸ்காரங்களை அனைவராலும் கைக்கொண்டு, ஆராதனை செய்ய முடியாமல் இருந்தது. அதன் காரணம் பூஜை புனஸ்காரங்களை செய்வதற்கு பல கட்டுப்பாடுகள் உண்டு, நியமங்கள் உண்டு, ஆசாரங்களையும், விதி முறைகளையும் கடை பிடிக்க வேண்டும். அதுவும் தெய்வீக யந்திர பூஜையை செய்யும்போது மிக கவனமாக செய்ய வேண்டும். ஒரு குருவின் தீட்ஷயைப் பெற்றே சில பூஜைகளை செய்ய வேண்டும். பண்டிதர்களை கொண்டு சில பூஜைகளை செய்யலாம். சில பூஜைகளை நாமாகவே செய்யலாம். செய்யப்படும் பூஜைகளில் மந்திர உச்சாடனை மிகவும் முக்கியமான பங்கு பெறுகின்றது. தவறான உச்சாடனைகள் மூலம் செய்யப்படும் ஆராதனைகளும் பூஜைகளும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
இந்த நிலைமையில்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அனைவரும் எளிதாக கடைபிடிக்கும் வகையிலான வழிபாட்டு முறை தோன்றியது. அதை பாராயண பூஜை என்பார்கள். அந்த வழிபாட்டு முறை சில மகான்கள் மூலம் துவக்கப்பட்டு, மக்களிடையே பரவி வரத் துவங்கின. அந்த நியமங்கள் எந்த காலகட்டத்தில் யாரால் தோற்றுவிக்கப்பட்டன? என்பது தெரியவில்லை. இறந்த பின் பல்வேறு காரணங்களுக்காக பிரேத ஆன்மாவாக, பிசாசு ஆன்மாவாக கஷ்டப்பட்ட ஆன்மாக்களுக்காக தொடர்ந்து ஏழு நாட்கள் சப்தாகமாக பாராயணம் செய்யப்பட்ட பாகவதத்தை அந்த ஆன்மாக்கள் பரிபூரண நம்பிக்கையுடன் கேட்டதால் தங்களுடைய பிரேத பிசாசு ரூபத்தில் இருந்து விடுபட்டு நற்கதி அடைந்தார்கள் என்று பாகவதம் சொல்கிறது. இன்றும் இறந்தவர்களுக்காக ஆத்மார்த்தமாக வேண்டி பாகவத பாராயணம் செய்யப்படுகிறது.
பாராயணம் செய்வதிலும் இருவகை இருந்தன, கூட்டுப் பாராயணம் அல்லது தத்தமது வீடுகளில் தனி நபர்கள் பாராயண புத்தகத்தை படிக்கும் முறை. இரண்டிற்குமே சில விதி முறைகள் இருந்தாலும், சாதாரண மக்கள் எளிதில் செய்யக் கூடிய வகையிலான பாராயண முறை என்ன என்றால் சில குறிப்பிட்ட தெய்வங்கள் மற்றும் மகான்களின் வாழ்க்கை வரலாற்றை, சில குறிப்பிட்ட தினங்கள் தொடர்ந்து படித்து வருவது ஆகும்.
பாராயணம் செய்வதின் மூலம் சில பலன்களை அடையலாம் என்ற நம்பிக்கை உள்ளதினால் பாராயண முறை வழிபாடு மக்களிடையே மெல்ல மெல்ல பரவலாயிற்று. இந்த பாராயண முறையில் முதலில் படிக்கப்பட்டு வந்தவை ஸ்ரீமத் பாகவதம், துர்கா சப்த சதி, சௌந்தர்யலஹரி, லட்சுமி புராணம், சீதா கல்யாணம், திருப்புகழ், திருவாசகம், ராமாயணத்தின் சில பாகங்கள், மகாபாரதத்தின் சில பாகங்கள், பகவத் கீதை, குரு கீதை, குரு கோவிந்தம், கந்தர்சஷ்டி, கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் போன்றவை அடக்கம். அவை அனைத்துமே பாமர மக்களினால் எளிதில் படிக்க முடிந்தவை என்பதினால் அதிக வரவேற்பை பெற்று இருந்தன.
இந்த நிலையில்தான் சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்து அதாவது 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டில் இருந்து சில மகான்களின் வரலாற்றை பாராயணம் என்ற பெயரில் படிக்கத் துவங்கினார்கள். அதில் முதன் முதலாக வெளித் தெரிய வந்ததே ‘குரு சரிதை’ அல்லது ‘குரு சம்ஹிதா’ எனும் நூல் ஆகும். ஸ்ரீ நிருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி தன்னுடைய சிஷ்யரான நமத்ஹரகா என்பவருக்கு ஸ்ரீ நிருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமி மற்றும் ஶ்ரீ தத்தாத்ரேயரின் மகிமைகளை கூறுவது போல அமைந்துள்ள அந்த பாராயண நூல் முதன் முதலில் மராட்டிய மொழியில்தான் வெளி வந்து மக்களிடையே பரவிற்று.
பல காலம் பொறுத்து அதைப் பின்பற்றி ஸ்ரீ ஷீரடி சாயிபாபாவின் சரித்திரம் வெளியாயிற்று. ஶ்ரீ தத்தாத்ரேயர் வரலாறும், பாராயணமாக சில இடங்களில் படிக்கப்பட்டு வந்திருந்தாலும், சத்சங் எனப்படும் சொற்பொழிவுகள் மூலம் கூறப்பட்டு வந்தாலும் அதுவும் அதிக அளவில் வெளித் தெரியவில்லை, தென் நாட்டிலும் பரவவில்லை.
வடநாட்டில், முக்கியமாக மராட்டிய மாநிலம் மற்றும் கர்நாடகா, ஆந்திராவின் சில பகுதிகளில் மட்டுமே அந்தந்த மொழிகளில் வெளியாகி இருந்த புத்தகங்களை பாராயணத்திற்காக பயன்படுத்தி வந்துள்ளார்கள். என்ன காரணங்களினால் இப்படிப்பட்ட புனிதமான நியமங்கள் குறிப்பிட்ட இன மக்களின் வளையங்களுக்குள்ளேயே வெகு காலம் இருந்துள்ளது என்பதோ, எப்படி அவை வெளித் தெரிந்தன என்பதற்கோ சரியான விளக்கம் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
என்ன காரணத்தினாலோ சில சமூகத்தினர் வணங்கித் துதிக்கும் தெய்வ வரலாறும், லீலைகளை கூறும் புனித நூல்களும் அந்த சமுதாய மக்களைத் தாண்டி வெளித் தெரிவது இல்லை. இந்த பின்னணியினால்தான் ஶ்ரீ தத்தாத்ரேயர் வரலாறும் தென் நாட்டில் அதிகம் தெரியவில்லை. 1971 ஆம் ஆண்டு சேந்தமங்கலம், நாமக்கல் தாலுக்கா என்ற ஒரு ஊரில் தத்த பீடம் அமைந்த பின்னரே சற்று ஶ்ரீ தத்தாத்ரேயர் வரலாறும், மகிமையும் வெளித் தெரியத் துவங்கின. அதன்பின் ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஸ்வாமிகள் மூலமே மேலும் பல இடங்களிலும் ஶ்ரீதத்தாத்ரேயர் மகிமைகளும் வரலாறும் வெளித் தெரியலாயின.
கீழுள்ள காரணங்களுக்காகவே பாராயண முறை துவங்கியது.
- விருப்பங்கள் அல்லது ஆசைகள் நிறைவேற
- உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவது, குழந்தை பாக்கியம் அடைய மற்றும் அதன் தொடர்புடைய பிரச்சனைகள் தீர
- எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அல்லது துன்பங்களைப் போக்க
- நல்ல கல்வி/அறிவு பெற /குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த / காரிய வெற்றி
- வேலைவாய்ப்பு மற்றும் நேர்காணலில் வெற்றி பெற
- செல்வம் விருத்தி அடைய, குடும்ப ஒற்றுமை நிலவ
- ஆன்மீக பாதையில் செல்ல
- உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, தான் என்ற அகங்காரத்தை அழிக்க
- அவர்களின் குடும்பத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக.
அவரவர் பிரச்சனைகளுக்கு ஏற்ப, அவற்றுக்கு தீர்வு காண, பாராயண நூல்களை சப்தாகமாக பாராயணம், அதாவது ஏழு நாட்கள் அல்லது, ஏழு நாட்களில் ஏழு முறை அதாவது 49 நாட்கள் தொடர்ந்து ஏழு பாகங்களையும் பாராயணமாக படிக்க வேண்டும் என்றெல்லாம் கூறுவார்கள். பொதுவாக பாராயண புத்தகங்களை ஒரு நாளைக்கு ஒரு முறை முழுவதுமாக படித்து முடித்து விடவேண்டும் என்பார்கள். ஒரே நேரத்தில் தொடர்ந்து படித்து முடிக்க நேரம் இல்லை என்றால் பல பாகங்களாக பிரித்து வைத்துக் கொண்டு மூன்று அல்லது நான்கு வேளைகளாகவும் படித்து முடிக்கலாம் என்றும் கூறப்பட்டது.
மகான்கள், பண்டிதர்கள் மற்றும் ஞானிகளினால் பல்வேறு நிலைகளில் மக்களிடையே போதனை செய்யப்பட்டு வந்துள்ளவை அவை. எதற்காக பாராயணங்களை படிக்கக் கூறி உள்ளார்கள்? என்பதற்கு ஒரு வலுவான காரணம் உள்ளது. பாராயணங்களை செய்யும் காலகட்டத்தில் அலைபாயும் நமது எண்ண அலைகள் கட்டுக்குள் அடங்குகின்றது என்பது முதல் காரணம். இரண்டாவதாக நாம் பல்வேறு காரணங்களினால் துன்பத்திலும், துயரங்களிலும் மூழ்கி உள்ள பொழுது, நம் மனதில் எழும் எதிர்மறை எண்ணங்கள் நம்மை அறியாமலேயே உடலுக்குள் இருந்து வெளியேறி நம்மை மேலும் மேலும் பலவீனப்படுத்திக் கொண்டு இருக்கும். அது மட்டுமல்ல, அவை நம்மை சுற்றி உள்ளவர்களையும் அந்த நிலைக்கு அழைத்துச் சென்று விடும். அப்போது நம்மை சுற்றி தெளிவற்ற எண்ணங்களைக் கொண்டவர்கள்தான் இருப்பார்கள். அவற்றில் இருந்து விடுபட வேண்டும் எனில் அந்த எண்ண அலைகள் துயரமற்ற அமைதியான எண்ணங்களைக் கொண்டதாகவும், மகிழ்ச்சியான எண்ண அலைகளைக் கொண்டதாகவும், நேர்மறை (Positive) அலைகளாகவும் இருக்க வேண்டியது அவசியம். பாராயணம் செய்யும் கட்டத்தில் அலைபாயும் மனம் கட்டுப்படுத்தப்பட்டு ஒரே சிந்தனையில் – தெய்வம் அல்லது மகான் மீதே – நிலை கொண்டிருக்கும். அப்பொழுதான் நமது சிந்தனையும் வலுப்பெறும், நமது துயரங்களில் இருந்து விடுதலை பெற நமக்கு ஒரு வழியையும் காட்டும்.
பாராயணம் செய்யும் காலத்தில் முதல் நாளில் இருந்தே இல்லை என்றாலும், அடுத்தடுத்த நாட்களிலேயே நம்மை அறியாமல் சில மணி நேரமாவது நமது மனம் அமைதியாகத் துவங்கி, எதிர்மறை எண்ணங்கள் குறைந்து, நேர்மறை எண்ணங்கள் உருவாகத் துவங்கும்.
அந்த நேர்மறை எண்ண அலைகள் நம்முள் இருந்து வெளியேறி நாம் எவரைப் பற்றி நினைப்போமோ, அவர்கள் எத்தனை தூரத்தில் இருந்தாலும், அவர்கள் மனதில் ஊடுருவி, நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் என்பது தியான நிலை தத்துவங்களில் ஒன்று.
நம்முள் இருந்து வெளியேறும் நேர்மறை எண்ணங்கள், நாம் யாருக்காக பிரார்த்தனை செய்கிறோமோ அவர்களிடம் உள்ள எதிர்மறை எண்ண அலைகளை தாக்கி அழிக்கும். பிரார்த்தனை செய்பவர் மீதான எண்ணங்களும் நேர்மறை எண்ணங்களாக மாறும். அப்போது நம் பிரார்த்தனை மூலம் நாம் வேண்டியது நடக்கத் துவங்க வழி பிறக்கின்றது. இது ஒரு சிறிய உதாரணமே.
எண்ண அலைகளின் தாக்கமே மாறுதலுக்கு காரணம் என்பதினால், நாம் குறிப்பிட்ட சில காரணத்திற்காக பிரார்த்தனைகளை பாராயண மார்க்கமாக செய்யும்பொழுது, நம்மை அறியாமலேயே சில மணி நேரமாவது நம் மனதுக்குள் ஜபிக்கும் அந்தந்த தெய்வங்களின் நாம கீர்த்தனையின் அலைகள், தெய்வங்களின் பாதங்களில் சென்று சேரும்.
அந்த காரணங்கள் நியாயமானவைகளாக இருக்கும்போது, பிரார்த்தனை செய்யும் பக்தனின் உணர்ச்சி பூர்வ உணர்வுகளின் தன்மைக்கேற்ப அந்தந்த தெய்வங்களும் அவற்றை நிறைவேற்ற ஆவன செய்கின்றன என்பதே பாராயண மார்க்கத்தின் அடிப்படை தத்துவம் ஆகும்.
ஆனால் பாராயண வரலாற்றை தொடர்ந்தோ அல்லது பல வேளைகளாக பிரித்துக் கொண்டோ அல்லது முழுவதுமாகவோ படித்து முடிக்கலாம் என்றாலும் பொதுவாக ஏழு என்ற எண்ணிக்கை வரும் வகையில்தான் பாராயண புத்தகங்களை படிக்க வேண்டும் என்கின்றார்கள். அதாவது பாராயண புத்தகத்தை முழுவதும் ஏழுநாட்கள் படிக்க வேண்டும். ஒரு கோரிக்கைக்காக ஏழு நாட்களில் முழுமையான அளவில் பாராயணம் செய்ய வேண்டும் என்பதே நியதி.
ஏழு நாட்கள் கணக்கு என்ன என்று நான் ஆராய்ந்தபோது என்னுடைய சில சந்தேகங்கள் தெளிவடைந்தன. இந்த உலகில் உள்ள முக்கியமான அனைத்துமே ஏழு எனும் எண்ணை
கொண்டு அமைந்து உள்ளது என்பதினால் ஏழு என்பது மகத்துவமான எண்ணாயிற்று.
ஒரு வாரம் என்பது ஏழு நாட்கள், கடல்கள் ஏழு, மூல நிறங்கள் ஏழு (வானவில்), சப்த கன்னிகைகள் ஏழு, பிரபஞ்சத்தில் உள்ளது ஏழு உலகம், ஆதார அல்லது மூல இசை என்பது ஏழு ஸ்வரங்களைக் கொண்டது, குண்டலினியை அடைய கடக்க வேண்டிய நிலைகளும் ஏழு என்று தெய்வீக சம்மந்தப்பட்ட அல்லது இயற்கையின் முக்கியமான அனைத்துமே ஏழு என்ற எண்ணில் அடங்கி உள்ளன. ஆகவே நல்லவை எதை செய்தாலும் அது தெய்வீக எண்ணான ஏழாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையே இதற்கும் காரணமாக இருந்திருக்க வேண்டும். குருச் சரித்திரத்தைப் பொறுத்தவரை சித்த முனிவர் கனகாபூருக்கு ஏழு நாட்கள் நடந்து கொண்டே சென்றபோது நமத்ஹரகாவுக்கு ஸ்ரீநிருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் கதையை ஏழு நாட்களும் தொடர்ந்து கூறியதினால்தான் அதை ஏழு நாட்கள் பாராயணம் செய்ய வேண்டும் என்பது ஆயிற்றே தவிர அதற்கு வேறு எந்த மகத்துவமும் இல்லை. 49 நாட்கள் பாராயணம் செய்தாலும், ஏழு நாட்கள் பாராயணம் செய்தாலும் ஒரே பலனே கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஶ்ரீ தத்தாத்ரேயர் வழிபாட்டினால் வேறென்ன பலன் கிடைக்கும்? ஸ்ரீ தத்தாத்ரேயரின் பாராயண புத்தகத்தை படிப்பதின் மூலம் என்னென்ன பயன் கிடைக்கும்? மேலே ஒரு பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளையும் தாண்டி ஸ்ரீதத்தாத்ரேயரின் பாராயண புத்தகத்தை படிப்பதினால் பித்ரு தோஷம் நிவர்த்தியாகும். குடும்பத்தில் அமைதியும் நல்லிணக்கமும் ஏற்படும். பேய், பிசாசு மற்றும் தீய ஆத்மாக்களின் தீய விளைவுகளை ஒழிக்க முடியும் மற்றும் ஞான மார்க்கத்தில் செல்ல தெளிவான வழி கிடைக்கும்.
மற்ற பாராயண நூல்களை போலவே ஶ்ரீதத்தாத்ரேயர் சரித்திரத்தை பாராயணம் செய்வதற்கு வசதியாக, ஒரு நாளைக்கு ஒரு அத்தியாயம் என்று ஏழு நாட்களுக்குள் அதை படித்து முடிக்கும் வகையில் ஏழு அத்தியாயங்களாக பிரித்து தொகுத்துள்ளேன். மத்தியப்பிரதேசத்தில் ஒரு சிறிய மாவட்டமான தேவாஸில் நான் பணியில் இருந்தபோது எனது மராட்டிய நண்பர்கள் சிலர் ஶ்ரீ தத்தாத்ரேயர் ஆலயத்திற்கு செல்வார்கள். அதனால்தானோ என்னவோ, எனக்கும் ஸ்ரீ தத்தாத்ரேயர் மீது ஈடுபாடு ஏற்பட்டு இருக்க வேண்டும்.
தேவாஸிலிருந்து உஜ்ஜயினி செல்லும் வழியில் பாமன்கேதா என்ற சிறிய கிராமத்தில் உள்ள மிகப் பழமையான தத்தாத்ரேயர் கோவிலுக்குச் செல்வதை நான் வழக்கமாக்கினேன். அந்த ஆலயத்தின் விஜயம் ஶ்ரீ தத்தாத்ரேயர் உடனான எனது தொடர்பை வலுப்படுத்தியது.
ஆண்டு நினைவு இல்லை. கலாவல்லி என்ற ஒரு பத்திரிகை எனக்கு வந்து கொண்டு இருந்தது. அதில் திரு. நாகராஜ சர்மா என்பவர் தத்த தரிசனம் என்று எழுதி வந்தார். அதை விடாமல் படித்தேன். ரேணுகா தேவி, ஶ்ரீ தத்தாத்ரேயர், பரசுராமர் மற்றும் அத்தி மரம் என்ற வார்த்தைகளைக் படித்த பொழுது மனதில் இனம் புரியாத இன்பம் ஏற்பட, படிக்கப் படிக்க இன்னமும் படிக்க வேண்டும் எனத் தோன்றியது. கலாவல்லியை அதற்காகவே விரும்பிப் படித்தேன். நடுவில் அது வருவது நின்று விட்டது. நாட்கள் நகர்ந்தன.
கடைசி சில வருடங்களாக அலுவலக விஷயமாக அடிக்கடி வெளி இடங்கள் செல்ல நேர்ந்தது. அப்பொழுது ஒரு முறை பெங்களுரில் ஒரு கடையில் ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகள் எழுதிய ஶ்ரீ தத்தாத்ரேயர் சரித்திரப் புத்தகம் கிடைக்க அதை வாங்கிப் படித்தேன். மனதுக்கு மிகவும் பிடித்து இருந்தது. மைசூர் சென்று ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஸ்வாமிகளை தரிசித்தேன். அவர், தான் எழுதி இருந்த புத்தகத்தையும் தந்து அதில் இருந்த விஷயங்களையும் எடுத்துக் கொண்டு ஶ்ரீ தத்தாத்ரேயர் சரித்திர புத்தகத்தை எழுதுமாறு ஆசி கூறினார்.
இதற்கிடையில் நான் ஶ்ரீதத்தாத்ரேயர் மீதான வேறு சில புத்தகங்களை வாங்கிப் படித்தும், இணையதளங்கள் மூலம் கிடைத்த சில தகவல்களை படித்தும், ஸ்ரீகணபதி சச்சிதானந்த சுவாமிகள் எழுதிய புத்தகம் உட்பட அனைத்து புத்தகங்களைப் படித்தும் ஶ்ரீ தத்தாத்ரேயர் பாராயண புத்தகத்தை தமிழில் எழுதி என் இணையதளத்தில் வெளியிட்டேன். பல ஆண்டுகளாக இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருந்தாலும் குருவின் அருள் மற்றும் கருணையினால், யுனைடட் ஹேண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தினால் புத்தகமாக வெளியிடப்பட்டு இப்பொழுது உங்கள் கைகளில் தவழ்கிறது. இந்தப் புத்தகத்தை பாராயணம் செய்யும் அனைவருக்கும் குருவின் அன்பும், கருணையும் அதன் மூலம் மன அமைதியும் கிடைக்க என்னுடைய ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள்! குருவின் திருவடி சரணம்!
ஶ்ரீ தத்தாத்ரேயர் துணை
அன்புடன்
சாந்திப்பிரியா
(N.R.ஜெயராமன்—-nrj1945 @gmail.com)
முதல் நாள் பாராயணம்
ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
யோகீஸ்வராய தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத்
பிரம்மாவின் படைப்பு
ஜென்ம ஜென்மாந்திரங்களுக்கு முற்பட்ட காலம் அது. பிரபஞ்சத்தின் துவக்கமே இல்லாத காலம். புராணங்களின்படி உருவமற்று இருந்த பரமாத்மன் என்கிற ஏதோ ஒரு சக்தி மட்டுமே இயங்கிக் கொண்டிருந்த காலம் அது. பரமாத்மன் என்ற சக்தியே, பராசக்தி எனப்படுபவள் என்று சௌந்தர்யலஹரி, சக்தி புராணங்கள் போன்ற நூல்களில் இருந்து அறிகிறோம். மூன்று தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு , சிவன் மூவரையும் உள்ளடக்கியவள் பராசக்தி.
ஒரு முறை பரமாத்மன் என்ற அந்த உருவமற்ற சக்தி பதினான்கு உலகையும் படைக்க எண்ணி அதற்கு தேவையானவர்களான பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரனை முதலில் படைத்தாள். பிரபஞ்சத்தின் முதல் பகுதி துவங்கியது. படைக்கப்பட்ட அந்த மூவரில் படைக்கும் ஆற்றலைப் பெற்ற பிரம்மாவோ, சற்றும் தாமதிக்காமல் தான் தோற்றுவிக்கப்பட்ட உடனேயே பன்னிரண்டு உலகங்களையும், அற்புதமான எண்ணற்ற ஜீவராசிகளையும் படைக்கத் துவங்கினார். மனித குலம் உயிர் பெறத் துவங்கியது.
சிருஷ்டியை துவங்கிய பிரம்மாவோ அதன் ஆரம்பமாக ஏழு தேவ ரிஷி முனிவர்களான அங்கீரச, அத்ரி, வசிஷ்டர், புலசா, புலத்தியா, மார்கசி, மற்றும் க்ராது என்பவர்களை படைத்தார். அப்படி படைக்கப்பட்ட பிரம்மாவின் மானசீக புத்திரர்களில் அத்ரி முனிவர் இரண்டாமவர் ஆவார். அவரைத் தொடர்ந்து பிரம்மாவின் உடலின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பல்வேறு குணங்களைக் கொண்ட படைப்புக்கள் மெல்ல மெல்லத் வெளித் தோன்றிய வண்ணமே இருக்க, முனிவர்களிலும் மேலான முனிவரான கர்த்தபிரஜாபதியும் பிரம்மாவின் ஒரு பக்கத்தில் இருந்து அவதரித்தார்.
இப்படியாக உலகம் தோன்றி சில காலம் உழன்றது. படைக்கப்பட்ட பலவுலகப் பிறவிகள் தங்கள் இஷ்டப்படி கட்டுக்கோப்பின்றி வாழத் துவங்கினர். தன்னால் கஷ்டப்பட்டு படைக்கப்பட்ட பிறவிகள் கட்டுக் கோப்பின்றி வாழத் துவங்கினதினால் பல காலத்திற்குப் பிறகு உலக வாழ்கையினால் ஏற்பட இருந்த பின் விளைவுகளைப் பற்றி மனக் கண்ணால் கண்ட பிரம்மா கவலையுற்றார். வாழ்கையில் ஒழுக்கமின்றி, உன்னதமான ஆன்மீக வாழ்கையை உருக்குலைத்த வண்ணம் தான்தோன்றித்தனமாக பூவுலகப் பிறவிகள் வாழ்வதைக் கட்டுப்படுத்தி அவர்களை நல்ல நிலைக்கு வழி நடத்திச் செல்லும் ஒரு மார்க்கத்தை துவக்க எவரையாவது படைக்க வேண்டும் என்ற அவசியம் எழுந்து விட்டதை உணர்ந்தார். மனதில் நீண்ட நேரம் பல்வேறு நிலைமைகளையும் தீர ஆலோசித்தார். பிரகதியைப் படைத்த பொழுது அவர்களுடன் வெளி வந்திருந்த நியதிகளும் வேத மறைகளும் ஒரு உண்மையை வெளிப்படுத்தி இருந்தன. பூவுலகப் பிறவிகள் தான் தோன்றித்தனமாக வாழ்வதைக் கட்டுப்படுத்தி நல்ல நிலைக்கு அவர்களை வழி நடத்திச் செல்லும் மார்கத்தைத் காட்ட வேண்டும் எனில் ஆரம்பத்தில் அவர் படைத்திருந்த ஏழு தேவ ரிஷி முனிவர்களில் ஒருவரான அத்ரி முனிவருக்குப் பிறக்கும் பிள்ளையினால் மட்டுமே அதை செய்ய முடியும் என்பதே அந்த உண்மை. என்ன செய்யலாம் என நிதானமாக பல்வேறு பிரச்சினைகளையும் ஆராய்ந்து யோசித்துப் பார்த்த பொழுது அவருக்குப் புரிந்தது அந்த உண்மை.
அத்ரி முனிவர் திருமணம்
அத்ரி முனிவர் திருமணமாகாதவர். நியதிகளின் விதிப்படி அத்ரி முனிவர் மற்றும் அவருடைய மனைவிக்கு ஒரு உத்தமமான பிள்ளை பிறக்க வேண்டும். அப்படி பிறக்கும் மகன் மூலமே சீரழிந்து கொண்டிருக்கும் ஆன்மீக வாழ்கையை சீர்படுத்த முடியும். அதை அவர் மூலம் பிறக்கும் பிள்ளையினால் மட்டுமே செய்ய முடியும் என்று இருந்ததினால் திருமணமே ஆகாத அத்ரி முனிவர் மூலம் அந்த செயலை எப்படி செய்வது என்பது ஒரு பிரச்சினையாக இருந்தது. அதற்கு முன்னோடியாக திருமணமாகாத அத்ரி முனிவரை திருமணம் செய்து கொள்ள அவரை சம்மதிக்க வைக்க வேண்டும். அதற்கான காரணங்களை அவரிடம் விளக்கமாகக் கூற வேண்டும். இல்லையெனில் அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்து விடுவார். ஆகவே அவருக்கு எப்படித் திருமணத்தை நடத்தி வைப்பது?, யாரை மனைவியாக அமைப்பது?, இதற்கு என்ன செய்யலாம் என யோசனை செய்த பொழுது ஒரு நல்ல வழி தெரிந்தது.
முனிவர்களைப் படைத்த பொழுது பிரம்மாவினால் படைக்கப்பட்ட ஒரு மாமுனிவர் கர்த்தபிரஜாபதி என்பவர் ஆவார். கர்த்தபிரஜாபதிப் பிறந்த பல காலத்திற்குப் பின்னர் பிரம்மாவின் பேத்தியையே திருமணம் புரிந்து கொண்டு அவள் மூலம் ஒன்பது பெண்களைப் பெற்று எடுத்து இருந்தார். கர்த்தபிரஜாபதிக்குப் பிறந்திருந்த அந்த ஒன்பது பெண்களில் அதி உத்தமமானவளும் நற்குணங்கள் அனைத்தும் ஒருங்கே அமைந்து இருந்தவள் அனுசூயா என்கிற ஒரு பெண். அவளை எப்படியாவது சம்மதிக்க வைத்து அத்ரி முனிவருக்கு அவளையே திருமணம் செய்து கொடுத்து விட்டால் அவர்கள் மூலம் ஒரு பிள்ளையை பிறக்க வைத்து அந்தப் பிள்ளை மூலம் மனிதர்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் அதர்ம வாழ்கையை கட்டுப்படுத்தி, அவர்களை நல் வழியில் கொண்டு சென்றால் உலகில் ஆன்மீக வாழ்கை சிறப்பாக இருக்கும் என்று நம்பி அதற்கான முயற்சிகளை துவக்கினார்.
அதற்கேற்றபடி அரங்கேறி நடந்த பல்வேறு நிகழ்சிகளினால் அத்ரி முனிவர் கர்த்தபிரஜாபதிக்குப் பிறந்திருந்த அனுசூயாவை மணந்து கொண்டார். ஆனால் விதிப் பயனாக அதிலும் பிரம்மா நினைத்தபடி நிகழ்சிகள் நடந்தேறவில்லை. திருமணம் ஆகி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகி இருந்தபோதிலும் அந்தத் தம்பதியினருக்கு எந்த ஒரு மழலை செல்வமும் கிடைக்கவில்லை. எனவே அந்த தம்பதியர் மனதில் வருத்தத்துடன் வாழ்ந்து கொண்டு இருந்தனர். இன்னமும் தனக்கு ஒரு மழலை செல்வம் கிடைக்கவில்லையே என்று வருத்தமுற்ற அத்ரி முனிவர் தனக்கு ஒரு மழலைச் செல்வம் வேண்டும், உலகைப் படைத்த ஈசனின் அனைத்து தன்மைகளை ஒத்த குழந்தை தனக்கு பிறந்தால் நான் அந்த ஈசனையே முழுமையாக சரண் அடைந்து விடுகின்றேன் என்ற கோரிக்கையுடன் ஒற்றைக் காலில் நின்றபடி பல வருடங்கள் கடுமையான தவத்தில் இருக்கலானார்.
ஒற்றைக் காலில் நின்றபடி பல வருடங்கள் கடுமையான தவத்தில் இருந்த அவருடைய வைராக்கியத்தைக் கண்டு தேவர்கள் திகைத்து நின்றனர். இதுவே தக்க தருணம் என பிரம்மா நினைத்தார். மூன்று தனித் தெய்வங்களாக – பிரம்மா, விஷ்ணு, சிவன்- என்று தனித் தன்மைகளுடன் தாங்கள் படைக்கப்பட்டிருந்தாலும், தன் எண்ணம் ஈடேற வேண்டும் என்றால், கடுமையான தவத்தில் ஆழ்ந்து இருக்கும் அத்ரி முனிவரின் தவத்தை மெச்சும் வகையில் அவர் முன் மூம்மூர்த்திகளாகச் சென்று காட்சி தர வேண்டும். அப்பொழுது தனக்கு ஒரு மழலைச் செல்வம் வேண்டும் என்று வேண்டியபடித் தவமிருக்கும் அத்ரி முனிவரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு அவர் விரும்பும் வளமான மழலைச் செல்வத்தை அளிக்க வேண்டும். அப்படிச் செய்வதின் மூலமே பிரச்சனைக்கு ஒரு வழி பிறக்கும்.
பிரம்மா நினைத்தபடியே அடுத்தடுத்து நிகழ்சிகள் நடைபெறலாயின. அத்ரி முனிவரின் தவத்தினை மெச்சி அவருக்கு மும்மூர்த்திகளும் காட்சி தந்தனர். விரைவிலேயே அவருக்கு தங்கள் அம்சமாகவே ஒரு பிள்ளை தோன்றுவார் என்று ஆசி கூறிச் விட்டுச் சென்றனர் என்றாலும் உண்மையில் மும்மூர்த்திகளில் பகவான் விஷ்ணுவே பின்னர் அந்தப் பிள்ளையாக பிறக்க இருந்தார். அதற்கு ஒரு பின்னணிக் காரணம் இருந்தது. மும்மூர்த்திகளும் தாங்கள் அம்சமாகவே ஒரு பிள்ளை அவர்களுக்குப் பிறப்பார் என்று ஆசி கூறிச் விட்டுச் சென்றதினால் அத்ரி முனிவர்- அனுசூயா தம்பதியினர் அடைந்த மகிழ்சிக்கு எல்லையே இல்லை. அந்த அத்ரி முனிவரும் அனுசூயாவும் எப்படிப்பட்ட தம்பதியினர் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். கற்பின் சின்னம் அனுசூயா, தவ வலிமையின் சின்னம் அத்ரி முனிவர். நன்கு சீவி முடித்த தலை, கழுத்தில் ருத்திராட்ச மாலைகள், ஒரு கையில் கமண்டலம், இன்னொரு கையில் ஒரு தண்டம் (கழி) இதுவே அத்ரி முனிவர் வைத்து இருந்தவை.
அத்ரி முனிவரின் பெருமைகள்
அத்ரி முனிவரின் பெருமை எப்படிப்பட்டது தெரியுமா? ஒருமுறை வசிஷ்டருக்கும், விஸ்வாமித்திர முனிவருக்கும் தீராத அளவுக்குப் பகை உண்டாயிற்று. அந்த சமயத்தில் வசிஷ்ட முனிவர் இருந்த நாட்டை ஆண்டு வந்த கல்மசபாதா என்ற மன்னன் ஒரு நாள் காட்டில் வேட்டையாடச் சென்ற பொழுது அங்கு வசிஷ்டரின் மகனைக் கண்டான். மன்னன் கல்மசபாதாவிற்கு வசிஷ்டரின் மகன் யார் என்று தெரியாததினால், காட்டில் வேட்டையாடச் சென்ற பொழுது அங்கு இருந்த வசிஷ்டரின் மகனைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டான். அதனால் தன்னை மரியாதைக் குறைவாக நடத்தி விட்டான் என்று வசிஷ்டரின் மகன் சக்தி என்பவர் தவறாக எண்ணிக் கொண்டு கல்மாசபாதாவை ஒரு இராக்ஷசன் ஆகும்படி சாபமிட்டு விட்டார். அந்த சாபத்தினால் இராக்ஷசனாக மாறினான் கல்மபாதா. இராக்ஷசனாக மாறிய கல்மசபாதாவோ தெரியாமல் செய்த தன் தவறுக்கு இப்படி ஒரு தண்டனையை வசிஷ்டரின் மகன் சக்தி தந்து விட்டாரே என மனம் புழுங்கிப் போய் அதற்கு வஞ்சம் தீர்த்துக் கொள்ள எண்ணினான். வசிஷ்டரின் பரம எதிரி போல செயல் பட்டுக் கொண்டு இருந்த விஸ்வாமித்திர முனிவரிடம் சென்று தனக்கு உதவுமாறு வேண்டி நின்றான். வசிஷ்டருக்கு அப்படி ஒரு நிலைமை வராதா என்று எதிர் பார்த்துக் காத்திருந்த விஸ்வாமித்திர முனிவரும் உடனடியாக தன் முழு ஆதரவையும் கல்மபாதாவுக்குத் தர, அதைப் பெற்றுக் கொண்டவன் தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் வசிஷ்டரின் அனைத்து மகன்களையும் பிடித்து கொன்று விழுங்கினான். மகன்கள் அனைவரையும் இழந்து நின்ற வசிஷ்டர், மனம் துடித்துப் போய் வருத்தத்தில் ஆழ்ந்து, செய்வதறியாது அதற்கு ஒரு வழி தேடிய வண்ணம் தவத்தில் அமர்ந்து விட்டார்.
அந்த சமயத்தில்தான் வசிஷ்டரின் மகன் சக்தியின் மனைவி கர்பமுற்று இருந்தாள். கணவனைப் பறி கொடுத்த வருத்தத்தில் இருந்த அவளுக்கு சில மாதங்களுக்குப் பின்னர் ஒரு மகன் பிறந்தான். பிறந்த மகன் வளர்ந்து பெரியவன் ஆனான். மெல்ல மெல்ல நடந்த முடிந்திருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் பற்றி அறிந்து கொண்டான். மனதில் கோபம் துளிர் விட்டது, அது கோபக் கனலாய் மாறியது. தன்னுடைய குடும்பத்திற்கு கல்மாசபாதா என்ற இராக்ஷசனால் ஏற்பட்ட கொடுமைக்கு பழி தீர்க்கும் வகையில் அங்கிருந்த அனைத்து இராக்ஷசர்களையும் பூண்டோடு அழிக்க எண்ணி பெரிய யாகம் செய்யத் துவங்கினான். அந்த யாகம் வளரத் துவங்கி வெற்றி பெற்றால், வசிஷ்டர் மற்றும் விஸ்வாமித்திர முனிவர்களுக்கு இடையிலான பகை இன்னமும் அதிகரிக்கும். அது உலகிற்கு நல்லது அல்ல என்பதை உணர்ந்து கொண்ட அத்ரி முனிவர், யாகம் நடந்து கொண்டிருந்த இடத்திற்குப் போய் அந்த யாகத்தின் பலனால் ஏற்படக் கூடிய பின் விளைவுகளைப் பற்றி வசிஷ்டரின் பேரனிடம் விரிவாக எடுத்துக் கூறி அவன் மனதைத் தேற்றிய பின்னர் அவர் நடத்திக் கொண்டு இருந்த யாகத்தை நிறுத்தினார். அதன் விளைவாக வசிஷ்டர் மற்றும் விஸ்வாமித்திர முனிவர்களுக்கு இடையே வளர இருந்த பகை குறையலாயிற்று.
அத்ரி முனிவரின் சக்திக்கு மற்றும் ஒரு சம்பவம். ஒருமுறை அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் கடுமையான போர் மூண்டதில் இரு பக்கத்தில் இருந்தும் பறந்து வந்த அம்புகளும், ஆயுதங்களும் தொடர்ந்து மழை பெய்வது போல வானில் பறந்து விழுந்த வண்ணம் இருக்க, அம்பு மழைகள் சூரிய-சந்திர ஒளிகளையே முழுவதுமாக மறைத்துக் கொண்டு நின்றன. அதனால் தேவர்கள் அந்த இருட்டில் யுத்தம் செய்ய முடியாமல் தடுமாறத் துவங்கினர். பயந்து போன தேவர்கள் அத்ரி முனிவரின் துணையை நாடி ஓட, இருட்டில் தடுமாறத் துவங்கிய தேவர்களைக் காப்பாற்ற தன் தவ வலிமையினை உபயோகித்து அத்ரி முனிவர் தானே சூரிய-சந்திரனாக அவதரித்து ஒளி கொடுத்து தேவர்களைக் காத்தார்.
அனுசூயாவின் கதை
அத்ரி முனிவர் அப்படிப்பட்ட குணம் உடையவர் என்றால் அவருடைய மனைவி அனுசூயா மட்டும் சளைத்தவராகவா இருப்பார்? இந்த உலகில் மானிட உருவில் அவதரிக்க வேண்டிய நிர்பந்தங்கள் சில தெய்வங்களுக்கு ஏற்பட்டபோது அந்த தெய்வங்கள் பல பெண்கள் மூலம் தனித் தனியே பிறவி எடுத்து, அந்த அவதாரத்தின் நோக்கம் முடிந்தவுடன் மீண்டும் மறைந்து போனாலும், ஒரே தினத்தில் க்ஷண நேரத்தில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவபெருமானை தான் பெற்றெடுத்த குழந்தையாக ஆக்கி, தனது தாய் பாலையும் தந்த பெருமையைப் பெற்ற ஒரே தாயார் அத்ரி முனிவரின் மனைவியான அனுசூயா மட்டுமே. அது மட்டும் அல்ல அந்த தெய்வத் குழந்தையும் நிலையான, அழிவற்ற தன்மையைக் கொண்ட குழந்தை ஆகும். மார்கண்டேய புராணத்தில் கூறப்பட்டுள்ள இந்தக் கதையை படித்தால் அவளுடைய பெருமை புரியும்.
பல காலத்துக்கு முன், கௌசிகா என்றொரு பிராமணண் வாழ்ந்து வந்தான். பூர்வ ஜென்மத்தில் ஏற்பட்டிருந்த கர்ம வினைப் பாவத்தினால் அவன் தன்னுடைய அனைத்து செல்வங்களையும் ஒரு விலைமாதுவிடம் இழந்து விட்டான். பல காலமாக அவளுடன் அவன் தொடர்ந்து கொண்டிருந்த அளவுக்கு மீறிய காம வேட்கை அவன் உடலில் தீராத நோயை தந்திருந்தது. அவனுக்கு ஷீலாவதி என்ற அதி உத்தமமான நற்குணங்கள் நிறைந்த மனைவி அமைந்து இருந்தாள். ஷீலாவதி கணவனின் சுகமே தன்னுடைய வாழ்க்கை என்று எண்ணியபடியே பதிவிரதையாக வாழ்ந்து வந்தார். கணவன் எப்படி இருந்தாலும் பதிவிரதைகளுக்கு கணவனே கண்கண்ட தெய்வம் என்பது அவளது எண்ணம். அவன் உயிருடன் உள்ளவரைதான் தனக்கும் பெருமை என்று தாலி பாக்கியத்தை நினைத்தே வாழ்ந்தவள். அனுசூயாவிற்கு நிகராகவே கணவனுக்கு பணி விடை செய்து வந்த கற்புக்கரசி அந்த ஷீலாவதி.
நோயுற்று வீட்டில் முடங்கிக் கிடந்த கணவனோ ஒருமுறை அவன் வீட்டு வழியே சென்ற அந்த விலை மாதுவைப் மீண்டும் பார்த்து விட்டான். அவள் மீதான ஆசை அவன் மனதை அரிக்கத் துவங்கியது. அவளிடம் மீண்டும் சென்று சல்லாபிக்க ஆசைப்பட்டான். மனதைக் கட்டுப் படுத்த இயலாமல் போய் மனைவியிடம் தன் ஆசையைக் கூறி அவளிடம் ஒரு முறை தன்னை அழைத்துச் செல்லுமாறு கெஞ்சிக் கேட்டான். கணவன் மகிழ்சியே தனக்கு தேவை என்று எண்ணிய ஷீலாவதியும் வேறு வழித் தோன்றாமல் இருட்டு ஆனதும் கணவனைத் தன் தோளில் தூக்கிக் கொண்டு அந்த தாசி வீட்டிற்கு செல்லத் துவங்கினாள். போகும் வழியில் அவன் கால்கள் ஈட்டி போன்ற ஆயுதத்தால் குத்தப்பட்டு மரணத்துடன் போராடிக் கொண்டு, வழியில் கிடந்த மாண்டவ்ய முனிவர் என்பவர் மீது பட்டு விட்டது. மாண்டவ்ய முனிவர் அங்கு எப்படி வந்தார்?
மாண்டவ்ய முனிவர் விழுந்து கிடந்த அந்த இடத்தில்தான் சில நாட்கள் முன்னர் அவர் மௌன விரதம் பூண்டு தவத்தில் ஆழ்ந்து இருந்தார். அப்பொழுது அரச சேவகர்கள் சில திருடர்களைத் துரத்திக் கொண்டு அந்த வழியாக ஓடி வந்து கொண்டிருந்தனர். மாண்டவ்ய முனிவர் தவத்தில் இருந்த இடத்தின் அருகில் இருந்த புதரில் புகுந்து திருடர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்கள் எப்படித் தப்பிச் சென்றனர் என்றும் அவர்கள் தப்பிச் சென்ற வழியும் தெரியாமல் விழித்த அரச சேவகர்கள் அந்த இடத்தில் மௌன விரதம் பூண்டு தவத்தில் இருந்த முனிவரிடம் சென்று அந்தத் திருடர்கள் எந்தப் பக்கம் ஓழுனார்கள் என்று திரும்பத் திரும்பக் கேட்டனர். அவர் மௌன விரதம் பூண்டு தவத்தில் இருந்ததினால் பதில் எதுவும் கூற முடியாமல் மௌனமாக இருக்க, அவரும் திருடர்களுக்கு உதவியாக இருக்கிறார் என்று அரச சேவகர்கள் தவறாக நினைத்து விட்டனர்.
அவர் ஒன்றும் கூறாமல் மௌனமாக இருப்பதைக் கண்டு கோபப்பட்டு அவரை அழடித்து உதைத்தும் அவமானப் படுத்திய பின், அரசன் ஆணையிட்டபடி அவர் உடலில் ஒரு ஈட்டியை குத்தி , ஒருவரும் உதவிக்கு வராமல் தவித்து இறந்து போகட்டும் என அந்தச் சாலையின் ஒருபுறம் அவரைத் தூக்கிப் போட்டு விட்டுச் சென்று விட்டனர். வலியினால் துடித்தபடி அவர் கிடந்த பொழுதுதான், கணவனைத் தன் தோளில் ஏற்றிக் கொண்டு தாசி வீடு சென்ற வண்ணம் அந்தப் பக்கம் வந்தாள் ஷீலாவதி. இருட்டில் வலியினால் துடித்தபடிக் கிடந்த அவரைக் கவனிக்காமல் ஒரு ஓரமாக சென்று கொண்டிருந்தவளின் தோளில் அமர்ந்து இருந்த கௌசிகாவின் பாதங்கள் தவறுதலாக அவர் மீது பட்டுவிட்டது.
அதை அறியாமல் ஏற்கனவே வலியால் துடித்துக் கொண்டு இருந்த மாண்டவ்ய முனிவர், தன்னை வேண்டும் என்றே கௌசிகன் எட்டி உதைத்து விட்டான் என்று எண்ணியபடி, விடிந்தவுடன் அவன் மண்டை வெடித்து மரணம் அடையட்டும் என கோபத்தில் சாபமிட்டார். ஷீலாவதிக்குத் தெரியும் முனிவர்களின் சாபம் வீண் போகாது என்று. அதனால் விடிந்தால் நிச்சயமாக கொளசிகன் மண்டை வெடித்து மரணம் அடைந்து விடுவான் என பயந்து போன அந்தப் பதிவிரதை கௌசிகன் மரணத்தைத் தடுக்க வேண்டும், விடிந்தால்தானே அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்று நினைத்த பின் இனி சூரியனே உதிக்கக் கூடாது என மறு சாபமிட்டாள்.
அவளும் உத்தமி என்பதால் சாபம் தரும் அளவுக்கு சக்தி பெற்று இருந்தாள். இரவு கழிந்ததும் மறுநாள் காலை சூரியன் எழவில்லை. காரணம் பதிவிரதை கொடுத்த சாபத்தை சூரியனால் மீற முடியவில்லை. சூரியன் உதிக்காமல் இருக்கத் துவங்க, உலகத்தில் இருந்த அத்தனை ஜீவ ராசிகளும் பாதிக்கப்பட்டனர். பத்து நாட்கள் கழிந்தன. சூரிய ஒளி இன்றி உயிரினங்கள் மெல்ல மெல்ல அழியத் துவங்கின. என்ன செய்வது என்று எவருக்கும் தெரியவில்லை. ஆகவே அனைத்து முனிவர்களும் ஒன்று சேர்ந்து ஆலோசித்த பின் ஒரு பதிவிரதையின் சாபத்தை ஒரு பதிவிரதையால் மட்டுமே முடிவுக்குக் கொண்டு வர இயலும் என்று உணர்ந்து அனுசூயாவிடம் சென்று ஷீலாவதியை சந்தித்து எப்படியாவது அவளுடைய சாபத்தை நீக்கிக் கொண்டு சூரியனை உதிக்க விடுமாறு அனுசூயா கேட்டுக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
அனைவரின் வேண்டுகோளுக்கும் இணங்க அனுசூயாவும் ஷிலாவதியிடம் சென்று நிலைமையை பக்குவமாக எடுத்துக் கூறி விட்டு அவள் கொடுத்த சாபத்தை திரும்பப் பெறுமாறு அவளிடம் வேண்டிக் கொண்டாள். சூரியனும் உதித்தது. உலகம் அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டது. அதே சமயத்தில் சூரியன் உதித்த உடன் அவள் கணவன் மரணம் அடைந்து விடுவான் என்கிற சாபத்தையும் நீக்கும் விதத்தில், ஷீலாவதியுடனேயே இருந்து சூரியன் உதித்த உடன் மண்டை வெடித்து இறந்துப் போன கௌசிகனைத் தன் கற்பின் வலிமையால் மீண்டும் உயிர்ப் பிழைக்க வைத்தாள் அனுசூயா. இறந்தவன் மீண்டும் உயிர் பிழைத்து எழ தேவர்கள் அனுசூயா மீது மலர்மாரிப் பொழிந்தனர். அவள் முன் தோன்றிய தேவர்களும், முனிவர்களும், இதர தெய்வங்களும் அவளை ஆசிர்வதிக்க, அதன் பின் தோன்றிய மும்மூர்த்திகளும் அவள் முன் தோன்றி அவளுக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்டனர். முதலில் அவர்கள் தோன்றிய பொழுது தன் கணவர் வேண்டிக் கொண்டபடியே தனக்கு மழலைச் செல்வம்தான் வேண்டும் என அவளும் கேட்டாள். மும்மூர்த்திகளும் ததாஸ்து என்று கூறி விட்டு அவளை ஆசிர்வதித்தனர். ஏன் எனில் பின் நாளில் அவளுக்குப் அவர்கள்தானே பிள்ளையாகப் பிறக்கப் போகின்றனர் .
மும்மூர்த்திகளின் திருவிளையாடல்
இப்படிப்பட்ட பெருமையும் குணாதிசயமும் கொண்ட அத்ரி முனிவரின் மனைவியின் மீது பொறாமை கொண்டனர் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று தெய்வங்களின் மனைவிகளான சரஸ்வதி, லஷ்மி மற்றும் பார்வதி தேவியினர். அனுசூயா என்ன அத்தனை உயர்ந்தவளா?, என்ற பொறாமைத் தலைத் தூக்க அனுசூயாவை மட்டம் தட்ட வேண்டும், அவளுடைய கற்பின் வலிமையை சோதிக்க வேண்டும் என தீர்மானித்தனர். இடையிடையே வந்து கொண்டிருந்த நாரதர் வேறு அவர்களின் எண்ணத்தில் இன்னமும் தூபம் போட்டபடி இருந்தார். அதனால் ஒருமுறை மும்மூர்த்திகளின் மனைவிகள் இரும்பு குண்டினால் ஆன கடலைகளை நாரதரிடம் கொடுத்து அதை அனுசூயாவிடம் கொண்டு போய்த் தந்து வறுத்துக் கொண்டு வருமாறு கூறினர். அனுசூயாவா சளைத்தவள்? தன் கற்பின் வலிமையால் அதையும் அவள் செய்து கொடுக்க அவள் மீது மும்மூர்த்திகளின் மனைவிகள் இன்னும் அதிக ஆத்திரம் அடைந்தனர்.
தங்களுடைய தோல்வியை சகித்துக் கொள்ள முடியாத மும்மூர்த்திகளின் மனைவிகள் மீண்டும் நாரதர் கொடுத்த யோசனைப்படி தங்களுடைய கணவர்களை அனுப்பி அனுசூயாவின் கற்பின் வலிமையை சோதிக்க நினைத்தனர். அதற்கான நேரத்திற்காக காத்திருந்தனர். காலமும் ஓடியது. மும்மூர்த்திகளின் மனைவிகள் மும்மூர்த்திகளை அவர்களின் ஜம்பம் அனுசூயா போன்ற பதிவிரதைகள் முன்பு எடுபடுமா என்று அடிக்கடி கேலி செய்தபடியும் சவால் விட்டபடியும் இருக்க, தங்களுடைய மனைவிகளின் எண்ணத்தை முறியடிக்க வேண்டும் என்று எண்ணிய மும்மூர்த்திகளும் அனுசூயாவின் கற்பை சோதிக்க தருணம் பார்த்து காத்திருந்தனர்.
ஒரு நாள் காலைப் பொழுது. அத்ரி முனிவர் எப்பொழுதும் போல தவம் செய்யத் துவங்கும் முன் நதியில் குளிக்கச் சென்றார். அதுவே தக்க தருணம் என எண்ணிய மும்மூர்த்திகளும், மூன்று துறவிகள் போன்ற உருவில் அனுசூயாவின் குடிலுக்குச் சென்று பசிக்கு உணவு கேட்டனர். வந்து இருப்பவர்களோ துறவிகள். அவர்கள் பசிக்கு ஆகாரம் கேட்டால் கொடுக்காமல் இருப்பது பாவம் அல்லவா.
மூன்று துறவிகள் போன்ற உருவில் இருந்த மும்மூர்திகளின் உள் எண்ணத்தை அறியாத அனுசூயாவும் அவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்து அமரச் சொன்னாள். உள்ளே சென்று சமைத்து முடித்த பின் இலையைப் போட்டு பறிமாற வந்தாள். உணவு பறிமாற வந்தவளைத் தடுத்தனர் துறவிகள் உருவில் இருந்த மும்மூர்த்திகள். தாங்கள் உணவு அருந்த வேண்டும் எனில் அனுசூயா உடலில் எந்த ஆடையும் இன்றி பிறந்த மேனியுடன் வந்து உணவு பரிமாறினால்தான் சாப்பிட முடியும் என்று கூறி விட அதைக் கேட்ட அனுசூயா ஒரு கணம் திகைத்து நின்றாள்.
வந்துள்ள துறவிகள் ஏன் இப்படி பேசுகின்றனர் என மனம் குழம்பி ஒரு கணம் நின்றவள். துறவிகளுக்கு உணவு தராமல் அனுப்புவது பெரும் பாவம், அதே நேரத்தில் கணவனைத் தவிர வேறு எவர் முன்பும் ஆடை இன்றி பிறந்த மேனியுடன் நின்றால் அது கற்பு இழந்ததிற்கு சமானம் ஆகிவிடும், ஆகவே என்ன செய்வது?, என யோசித்தாள். ஒரு கணம், சிந்தித்தவள் கண்களை மூடியபடி தன் கணவனை பிரார்த்தனை செய்தாள். தன் கணவனையே நினைத்து அவள் பிரார்த்தனை புரிய அங்கு இலை முன் அமர்ந்திருந்த மும்மூர்த்திகளும் அனுசூயாவின் கற்பின் வலிமையினால் சிறு குழந்தைகளாக மாறி அழத் துவங்கினர். அவ்வளவுதான், அவள் மார்பில் பால் சுரக்கத் துவங்கியது. அழத் துவங்கிய குழந்தைகளை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு பால் தரலானாள்.
அந்த நேரத்தில் அங்கு வந்து விட்ட அத்ரி முனிவரிடம் நடந்ததைக் கூறினாள் அனுசூயா. அவரும் அனைத்தையும் தன்னுடைய ஞான திருஷ்டி மூலம் தெரிந்து கொண்டார். நடந்து முடிந்திருந்த நாடகமும், நாடகத்தின் காரணமும் அதன் பின்னணியில் இருந்த மும்மூர்த்திகளின் மனைவிகளின் எண்ணமும் அவருக்கு நன்கு புரிந்தது. அவர் சப்த ரிஷிகளில் ஒரு மாபெரும் முனிவரல்லவா .
அத்ரி முனிவரும் அனுசூயாவும் மனம் மகிழ்ந்து குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடத் துவங்கினர். நாட்கள் கடந்தன. அனுசூயாவை சோதிக்கச் சென்ற தங்களுடைய கணவர்கள் திரும்பி வராததைக் கண்ட மும்மூர்த்திகளின் மனைவிகள் கலக்கம் அடைந்து நாரதரிடம் அவர்களைப் பற்றி விசாரித்து வருமாறு கூறினர். அவரும் அத்ரி முனிவரின் ஆசிரமத்தை சென்றடைந்தார். அங்கே சென்று நடந்த விவரங்களை முழுவதும் அறிந்து கொண்ட நாரதர் ஓடிச் சென்று மும்மூர்த்திகளின் மனைவிகளிடம் அவர்களுடைய கணவர்கள் அனுசூயாவின் சிறு குழந்தைகளாக மாறி இருப்பதைப் பற்றிக் கூறினார். தங்களுடைய கணவர்கள் குழந்தைகளாகி விட்டதைக் கேள்விப்பட்டு திக்கித்துப் போய் அனுசூயாவிடம் ஓடி வந்தனர் சரஸ்வதி, லஷ்மி மற்றும் பார்வதி மூவரும். நடந்து விட்ட தவறுக்கெல்லாம் தாங்களே காரணம் என்பதை விளக்கிக் கூறி தங்களுடைய கணவர்களை மீண்டும் பழைய உருவில் தங்களுக்கு திரும்பக் கொடுக்குமாறு அவளிடம் வேண்டினர்.
மனைவிகளின் முட்டாள் தனத்தினால் குழந்தைகளாகியிருந்த அவர்களுடைய கணவர்களான மும்மூர்த்திகளை எண்ணி பரிதாபப்பட்டாள் அனுசூயா. சரஸ்வதி, லஷ்மி மற்றும் பார்வதி மூவரின் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து, மீண்டும் அவர்கள் பழைய உருவை பெற்று அவர்களுடைய மனைவிகளுடன் ஒன்று சேரும் விதத்தில் குழந்தைகளாக மாறி இருந்தவர்களை தன் தவ வலிமையால் பழைய உருவத்திற்கு மாற்றினார் அனுசூயா. அவர் செயலைக் கண்டு மகிழ்ந்த மும்மூர்த்திகளும் ஒன்றிணைந்து தத்தாத்திரேயராக காட்சி தந்த பின் மழலைச் செல்வம் அற்ற அவர்களுக்கு தாங்களே மகன்களாகப் பிறப்பதாக மீண்டும் வரம் கொடுத்து விட்டு மறைந்தனர்.
ஸ்ரீ தத்தாத்ரேயர் பிறப்பு
காலம் ஓடிற்று. கர்ப்பமுற்ற அனுசூயாவிற்கு மும்மூர்த்திகளும் மூன்று புதல்வர்களாகப் பிறந்தனர். சிவபெருமான், தமஸ் குணத்தைக் குறிக்கும் வகையில் துர்வாச முனிவராகவும், ரகு குணத்தைக் குறிக்கும் வகையில் அத்ரியின் கண் மூலம் பிரம்மா சந்திரனாகவும் பிறக்க, மகாவிஷ்ணுவோ, சாத்வ குணத்தைக் குறிக்கும் வகையில் தத்தாத்திரேயராகவே அவர்களுக்குப் பிறந்தார். விஷ்ணுவே தத்தாத்திரேயராக பிறக்க இருந்தார் என்பதற்கும் ஒரு பின்னணிக் காரணம் உண்டு என்று முன்னர் கூறினேன் அல்லவா , அது என்ன ?
கால காலத்திற்கு முற்பட்ட சமயத்தில் கஷ்யபன் என்ற அரசன் ஒரு நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு, கஷ்யபு என்ற மகன் இருந்தான். அந்த அரசன் பெரும் கொடுமைக்காரன். ஒருமுறை அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் கடுமையான போர் மூண்ட பொழுது கஷ்யபு இறந்து விட்டான். அந்த யுத்தம் பல ஆண்டுகள் பல்வேறு அசுர மன்னர்களால் தொடந்து நடத்தப்பட்டது. அந்த யுத்தத்தில் தேவர்கள் சார்பாக இந்திரனும் கலந்து கொண்டிருந்தான். இந்திரனிடம் மீண்டும், மீண்டும் தோற்றுப் போய் ஓடிக் கொண்டு இருந்த அசுரர்களுக்கு உதவுவதற்காக அசுரர்களின் குருவான சுக்ரா என்ற முனிவர் இமயமலைக்குச் சென்று சிவபெருமானை நோக்கி தவம் இருக்கலானார்.
அவர் தவத்தில் இருந்தபோது அசுரர்களை பாதுகாக்கும் பொறுப்பு சுக்ராச்சாரியாரின் தாயாருக்கு வந்துவிட்டது. யுத்தத்தில் தோல்வியை தழுவிக் கொண்டு இருந்த அசுரர்கள் தேவர்களிடம் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள சுக்ராச்சாரியாரின் தாயாரிடம் ஓடிச் சென்றார்கள். சுக்ர முனிவரின் தாயாரும் தம்மிடம் அடைக்கலம் நாடி வந்த அசுரர்களுக்கு பாதுகாப்பு தந்தாள் . அதை தெரிந்து கொண்டு அவர்களை தாக்க அங்கு வந்த தேவர்கள், அசுரர்களை தாக்கத் துவங்க, அவர்களிடம் இருந்து அசுரர்களை பாதுகாக்க, தனது தவ சக்தியினால் பெற்று இருந்த கிடைத்த, இந்திரனால் கூட ஊடுருவ முடியாத, கண்ணுக்குத் தெரியாத பாதுகாப்புக் கவசத்தை சுக்ராச்சாரியாரின் மனைவி போட்டதும் அல்லாமல் அனைத்து தேவர்களையும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தினாள். அதைக் கண்டு கோபமுற்ற ஸ்ரீ விஷ்ணு பகவான் அந்த பாதுகாப்பு கவசத்தை உடைக்க தனது ஆயுதமான சுதர்சன சக்கரத்தை ஏவியபோது , அந்த சக்கரம் பாதுகாப்பு கவசத்தை தகர்த்து, தவறுதலாக சுக்ரா முனிவரின் தாயாரின் தலையையும் சேர்த்து துண்டித்து விட்டது. இப்படியாக சுக்ரா முனிவரின் தாயார் மரணம் அடைந்து விட, அதை நேரிலே பார்த்து விட்ட பிருகு முனிவர் கோபமுற்றார். என்ன இருந்தாலும் ஒரு பெண், அதுவும் ஒரு முனிவரின் தாயான ஒரு வலிமையற்ற பெண் மரணம் அடைய ஸ்ரீ விஷ்ணுவே காரணமாகி விட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது மட்டும் அல்ல ஸ்ரீ விஷ்ணு பல்வேறு தாய்மார்களின் கருவில் சென்று வளர்ந்து அவர்களின் மகன்களாகப் பல்வேறு பிறவிகளில் பிறக்க வேண்டும் என சாபமிட்டார். அதனால்தான் விஷ்ணு இந்த ஜன்மத்தில் ஸ்ரீ தத்தாத்ரேயர் என்ற உருவில் அத்ரி முனிவரின் மகனாக பிறக்கும்படி ஆயிற்று. அனுசூயா-அத்ரி முனிவர் தம்பதிகளுக்குப் மூன்று தலைகளுடன், மும்மூர்த்திகளின் அம்சமாகப் பிறந்த பிள்ளை தத்தாத்திரேயரோ சாமானியக் குழந்தையாக வளரவில்லை. அவர் போக்கே விசித்திரமாக இருந்தது. அதிகம் எவருடனும் பழகுவதில்லை.
ஸ்ரீ தத்தாத்திரேயரின் வாழ்க்கை முறைகள்
வயது ஆக ஆக தத்தாத்திரேயரின் போக்கில் இன்னமும் மாறுதல் தோன்றலாயின. அவை எதுவுமே உண்மை அல்ல. வெளித் தோற்றமே அவை என்பது எவருக்கும் தெரியாது. அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறிச் சென்று பல இடங்களிலும் சுற்றுவார். ஆனால் ஸ்ரீ தத்தாத்ரேயர் மாபெரும் யோக புருஷர், மகா ஞானி, வேதங்கள் அவருக்கு அத்துப்படி என்ற நிலையில் இருந்தார் என்பதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. உலக நன்மையைக் கருதியே அவர் ஒரு அவதூதராகப் பிறந்து இருந்தார். அதனால்தான் அவரைப் புரிந்து கொண்டவர்கள் மட்டும் அவரிடம் சிஷ்யர்களாகச் சேர்ந்தனர். வந்தவர் அனைவரையும் உடனடியாக அவர் சிஷ்யனாக ஏற்றதில்லை. பால்ய லீலைகளாக அவர் செய்து காட்டிய யோக சாதனைகள், ஆயிரம் ஆண்டுகளாக தவத்தில் இருந்த ரிஷி முனிவர்களாள் நினைத்துப் கூட பார்க்க முடியாதது. ஓழுங்கற்ற வாழ்க்கையை மேற்கொண்டவர் போலத் வெளியில் தோற்றம் அளித்தார். ஆனால் அவர் சாமானியர் அல்ல. அதனால்தான் அவரிடம் சிஷ்யர்களாக வந்த ரிஷி முனிவர்கள் நாடி வந்தபோது வேண்டும் என்றே ஆடைகள் கலைந்த நிலையில், இறைச்சியை கடித்தபடி, கள் குடித்த வண்ணம், பல பெண்களுடன் சல்லாபம் செய்தபடி அவர்கள் முன் காட்சி அளிப்பார் மனித உருவில் யோகப் புருஷனாக இருந்த ஸ்ரீ தத்தாத்ரேயர்.
வந்தவர்கள் அனைவரும் அதை ரசித்தது இல்லை. என்ன கேடு கெட்ட மனிதன் இவன் என்று அவரைப் புரிந்து கொள்ளாமல் வெறுத்து ஓடியவர்களும் உண்டு. இல்லை, இல்லை, அவர் ஆடுவது நாடகமே, நம்மை சோதிக்கின்றார் என கை கூப்பி வணங்கி நின்று அவரைக் கெட்டியாக மனதில் பிடித்தபடி ஓடாமல் நின்று அவருடைய சிஷ்யனானவர்களும் உண்டு. பரப்பிரும்மமான தத்தாத்திரேயருக்கு மற்றவர்களை எல்லாம் அப்படி சோதனை செய்வதில் அலாதியான ஆனந்தம் உண்டு.
ஸ்ரீ தத்தாத்ரேயர் எதிலும் பற்றின்றி ஏகாந்தமாக அலைவார். அவர் மனது எந்த விதத்திலும் களங்கம் அடைந்தது இல்லை. ஜடத் தன்மையுடன் வெளியில் தெரியும் உடலுக்கும், உள்ளிருக்கும் புனிதமான ஆத்மாவிற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை என்பவர். அவர் எந்த நேரத்தில் எங்கு போவார், எங்கு இருப்பார் என எவருக்கும் தெரியாத, புரியாத புதிர் அவர். ஒருமுறைப் பார்த்தாலோ பிச்சைக்காரனைப் போல தோற்றம் தந்தபடி, அறைகுறை ஆடைகள் அணிந்தபடி அங்கும் இங்கும் அலைந்தபடித் தெரிவார். நான்கு நாய்கள் பின் தொடர, பசு மாடு பின் நின்றிருக்க காட்சியும் தருவார் அவர். இன்னொரு சமயத்திலோ ஏரிகள், குளங்களில் முதலியவற்றில் மூழ்கி நின்றும், சுடுகாடுகளில் உருண்டு புரண்டபடிக் கிடந்தும் நாட்கணக்கில் ஏகாந்தத்தை அனுபவித்தபடியும் இருப்பார். ஏரிகளில் சென்று அதன் உள்ளே முழுகிக் கிடந்தபடி பல மணி நேரம் இருப்பது சர்வ சாதாரணம். இப்படியாக அவருடைய வாழ்க்கை நிலை பல காலம் கழிந்தது.
மும்மூர்த்திகளை ஒன்றடக்கிய மகத்தான அவதாரமே என்றாலும், மானிட வடிவில் அவதரித்து விட்டதினால், மாபெரும் அவதூதராகவே வாழ்ந்து கொண்டு இருந்தார். பல்வேறு இடங்களுக்கும் சென்று அலைந்த வண்ணம் இருந்தாலும் அவருக்குப் பிடித்த இடம் நெல்லி மரத்தின் அடியில் அமர்ந்து இருப்பதே. உடல் முழுவதும் சுடுகாட்டு சாம்பலை வீபுதியைப் பூசிக் கொண்டும் புலித் தோலை உடை போல அணிந்து கொண்டும் இருப்பார். அமைதியான ஆனால் ஜொலிக்கும் முகத்தைக் கொண்ட உருவம்.
ஸ்ரீ தத்தாத்ரேயர் சின்னங்களின் சிறப்புக்கள்
ஸ்ரீ தத்தாத்ரேயர் தன்னுடன் எப்பொழுதும் வைத்து இருக்கும் சில பொருட்களின் சிறப்பினைப் பற்றி எப்படிக் கூறுவது !
- கேட்ட அனைத்தையும் தந்தபடி, உலகையும், தர்மத்தையும் காப்பதைக் குறிக்கும் வகையிலான காமதேனு என்ற பசு.
- ஆன்மீக வேத நூல்களான நான்கு வேதங்களும் என் கீழ் படிந்து இருப்பவையே என்பதைக் குறிக்கும் வகையில் அவர் காலடியில் நான்கு நாய்கள்.
- தான் என்ற அகந்தையை அழிப்பதைக் குறிக்கும் வகையில் திரிசூலம்.
- அறியாமையை அழித்து ஒருவனுடைய மன சாட்சியைத் தட்டி எழுப்புவதைக் குறிக்கும் வகையில் கையில் குடுகுடுப்பை.
- முக்காலங்களையும் கடந்து நிற்பவர், அனைத்து காலத்தையும் தானே இயக்குபவர், ஆரம்பமும் முடிவும் அற்றவர் என்பதை குறிக்கும் வகையிலான சுதர்சன சக்கரம்.
- உள் ஆத்மாவை தட்டி எழுப்பும் விதத்தில் ஓம் என்ற என ஒலிக்கும் சங்கு
- வைராக்கியத்தையும், பிறந்த எதற்கும் அழிவு நிச்சயம் என்பதைக் குறிக்க வீபுதி
- நம்மிடம் உள்ளவற்றில் பகிர்ந்து கொள்ள முடிந்தவைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை காட்ட கையில் ஒரு பிட்சைப் பாத்திரம்.
- எப்பொழுதும் பகவானுடைய நாம ஜெபம் செய்து கொண்டு இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக ஒரு ஜெபமாலை.
திகம்பரா திகம்பரா, ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப திகம்பரா!
திகம்பரா திகம்பரா, ஸ்ரீ தத்ததேவா திகம்பரா
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ
இரண்டாம் நாள் பாராயணம்
ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
யோகீஸ்வராய தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத்
ஸ்ரீ தத்தாத்ரேயர் யார்? யதுகுல மன்னனின் சந்தேகம்
இப்படியாக பல்வேறு சின்னங்களைக் கொண்டிருந்த ஸ்ரீ தத்தாத்ரேயர் தான் யார்?, தன்னுடைய குரு யார்? என்பதை ஒரு மன்னனுக்கு விளக்கியதாக ஸ்ரீமத் பாகவதப் புராணத்தில் கூறப்படும் கதை சுவையானது. அதுவே இந்தக் கதை.
குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிபப் பருவத்தை எட்டிய ஸ்ரீ தத்தாத்ரேயர் வீட்டை விட்டு வெளியேறி சுதந்திரமாக காடுகள், மலைகள் என அங்கும் இங்கும் பல்வேறு இடங்களிலும் சுற்றி அலையலானார். பார்ப்பதற்கே விசித்திரமாகவும், ஒழுக்கமற்றவர் போலும் தோன்றிய அவர், பல நேரங்களில் நிர்வாணமாக காணப்பட்டார். வெளித் தோற்றத்திற்கும் ஆத்மாவிற்கும் சம்மந்தம் இல்லை என்று உணர்த்தும் விதமாக அவருடைய செயல்பாடுகள் இருந்தன. தன்னை நாடி வருபவர்கள் இந்த உலக வாழ்க்கை ஒரு மாயை என்பதைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு மனப் பக்குவம் பெற்றவர்களா?, என்று நன்கு சோதித்த பின்னரே அவர்களை சீடர்களாக ஏற்றுக் கொள்வார். இதை நன்கு புரிந்து வைத்திருந்த பல ரிஷிகளும் முனிவர்களும் அவரிடம் தீட்சைப் பெற அவரைத் தேடி அலைந்தனர். அவர் ஒரு யோக புருஷர் என்பதை முற்றிலுமாக அவர்கள் உணர்ந்து இருந்தனர்.
அப்படிப்பட்ட ஒரு பின்னணியில் வாழ்ந்து கொண்டிருந்த அவர் இருந்த இடம் கிருஷ்ண பரமாத்மா அவதரித்த காலத்துக்கு முற்பட்ட காலத்தில் ஆட்சியில் இருந்த யதுகுல மன்னன் ஒருவனின் ஆதிக்கத்தில் இருந்தது. அந்தக் காலங்களில் மன்னர்கள் மாறு வேடங்களில் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று அலைந்து திரிந்தபடி நாட்டின் நிலைமைகளை கவனித்துக் கொண்டு இருப்பது வழக்கம். ஒருநாள் அப்படி நகர்வலம் சென்று கொண்டிருந்த அந்த நாட்டு யது குல மன்னன் பிச்சைக்காரன் போல தோற்றம் அளித்தபடி தெருவில் அலைந்து கொண்டிருந்த தத்தாத்திரேயரை பார்த்தான். அவனுக்கு அப்பொழுது அவரைப் பற்றிய எந்த விவரமும் தெரியாது. கவலையின்றி பாடிக் கொண்டே பிச்சைக்காரன் உருவில் அலைந்து திரிந்து கொண்டிருந்த ஸ்ரீ தத்தாத்ரேயர் முகத்தில் எந்த விதமான கவலைக் கோடுகளும் தெரியவில்லை. அவருடைய முகத்திலோ அபரிதமான தேஜஸ் ஒளி விட்டுக் கொண்டு இருந்தது. அந்த பிச்சைக்காரன் உருவில் அலைந்து திரிந்து கொண்டிருந்த தத்தாத்திரேயரை எதேச்சையாகக் கண்ட யதுகுல மன்னன் பின்வருமாறு யோசனை செய்யலானான்.
இத்தனை தேஜஸ்ஸான முகத்துடன் தோற்றம் தரும் இவன் பிச்சைக்காரனாக இருக்க முடியுமா? முகத்தில் எந்த விதக் கவலைக் கோடுகளும் தெரியவில்லை, ஏதோ தானே இந்த இராஜ்யத்தை ஆண்டு வரும் மன்னன் போல் அல்லவா கம்பீரமாக அலைந்து திரிந்து கொண்டு இருக்கின்றான். இத்தனை பெரிய சம்ராஜ்யத்தை ஆண்டு கொண்டும், அளவற்ற செல்வங்களும் அடியாட்களும் இருந்தும், அனைத்து சுக போகங்களையும் அனுபவித்துக் கொண்டும் உள்ள எனக்கே நிம்மதி இல்லை. ஒன்றும் அற்றவன் போலத் தெரியும் இந்த அனாதைப் பிச்சைக்காரன் எப்படி கவலையே இன்றி இத்தனை தேஜஸ்ஸான முகத்துடன் காணப்படுகின்றான்?
மனதில் பல்வேறு எண்ணங்கள் அலை பாய்ந்து கொண்டே இருக்க அவர் சென்ற பாதையிலேயே சென்று கொண்டு அவரையே கவனித்துக் கொண்டிருந்த யதுகுல மன்னனுக்கு ஆச்சரியமும், ஆவலும் அடங்கவில்லை. என்ன இருந்தாலும் மன்னனும் பண்டிதம் பெற்றவன் அல்லவா, அவரைப் பற்றி ஒன்றுமே தெரிந்திராத நிலையில் தன்னுடைய ஆவலை அடக்க முடியாமல் அவரிடமே சென்று கேட்டு விடலாம் என எண்ணியபடி பிச்சைக்காரன் உருவில் இருந்த தத்தாத்திரேயிடம் சென்று பணிவோடு கேட்டான் ‘அன்பனே உங்கள் முகத்தில் உள்ள தேஜஸ்ஸைப் பார்த்தால் நீங்கள் நிச்சயமாக பிச்சைக்காராக இருக்க முடியாது என என் உள் மனம் கூறுகிறது. நீங்கள் எதோ ஒரு சன்யாசி அல்லது முனிவராகத்தான் இருக்க வேண்டும் என்றும் என் மனம் நினைக்கிறது. நீங்கள் உண்மையிலேயே யார் என்பதை இந்நாட்டின் அரசனான நான் தெரிந்து கொள்ளலாமா?’ இந்த நாட்டின்இந்நாட்டின் அரசனான நான் தெரிந்து கொள்ளலாமா?”’ பிச்சைக்காரன் உருவில் இருந்த ஸ்ரீ தத்தாத்ரேயர் கூறினார், “’மன்னா, காடு மேடுகளிலும், மலைப் பிரதேசங்களிலும், தெருவிலும் சுற்றி அலையும் பிச்சைக்காரப் பரதேசி எனக்கும், வணங்கத் தக்க மாபெரும் சாதுக்களுக்கும், சன்யாசிகளுக்கும் என்னப்பா சம்பந்தம்? இந்த சாதாரணப் பிச்சைக்காரனைப் போய் அத்தனைப் பெரிய மகான்களோடு ஏன் ஒப்பிடுகிறாய்?”. அவர் கூறிய பதிலால் மன்னனின் சந்தேகம் இன்னமும் வலுத்தது. பிச்சைக்காரன் உருவில் உள்ள இந்த மனிதன், ஒரு மன்னன் என்று என்னைக் கண்டு வணங்கவும் இல்லை, பயப்படவும் இல்லை, ஏதோ ஒரு நண்பனுடன் பேசுவது போல் அல்லவா சர்வ சாதாரணமாகப் பதில் தருகிறார், இல்லை ….. இவர் நிச்சயமாக பிச்சைக்காரனாக இருக்க முடியாது. ஏன் எனில் இவர் பதில் கூறும் பொழுது கூட பயமின்றி சாதாரணமாக அல்லவா கூறுகிறார். என்னிடம் எதையோ மறைக்கிறார் என்று எண்ணி தன்னுடைய ஆவலை அடக்க முடியாமல், இல்லை அன்பரே, உங்களைப் பற்றி எதையோ நீங்கள் மறைக்கின்றீர்கள் என்று என் மனம் மீண்டும், மீண்டும் கூறுகிறது. ஆனால் அதற்கான காரணம் மட்டும் புரியவில்லை. தயவு செய்து உங்களைப் பற்றி எனக்குள்ள ஐயத்தைப் போக்குவீர்களா?” என்று மன்னன் தத்தாத்ரேயரிடம் மீண்டும் கேட்டார்.
அதற்கு, ஸ்ரீ தத்தாத்ரேயர் முகத்தில் எந்த விதமான சலனமும் இல்லை. ‘என்னப்பா உன் ஐயத்திற்கு நான் என்ன விளக்கம் அளிக்க முடியும், நீயோ இந்த தேசத்தையே ஆள்கிறாய், உனக்கு தெரியாத விஷயம் எனக்கு எப்படி தெரிந்து இருக்க முடியும்? சொல் அப்பனே என்றார்’
மன்னனுக்கு இப்பொழுது புரிந்து விட்டது. விசித்திரமாகவும், ஒழுக்கமற்றவர் போலவும் தோன்றும் இவர் நிச்சயமாக பிச்சைக்காரர் அல்ல!. வேஷம் போடுகின்றார். தான் யார்? என்று கூறிக் கொள்ள விரும்பாத இவர் ஒரு மகா யோக புருஷராகவே இருக்க வேண்டும்!, ஏனெனில் இவர் பார்வையில் அகம்பாவம் தெரியவில்லை, முகத்தில் ஆணவமும் இல்லை. மாறாக பேச்சில் அன்பு ஒழுக, அச்சமற்றவராக, தன்னை மறைத்துக் கொள்ளும் விதமாக, அடக்கமாக பதில் தருகின்றார் என்று எண்ணியவாறே மீண்டும் பணிவோடு கேட்டான்.
‘ஸ்வாமி என்னைப் போன்ற அரசர்களிடம் இல்லாதது இல்லை என்ற அளவில் என்னிடமும் வயிற்றுக்கும், வாழ்க்கைக்கும் தேவையான உலகப் பொருட்கள் அனைத்தும் உள்ளன. பெரிய தேசத்தை ஆளுகின்றேன். இட்டப் பணியையும் செய்ய ஆயிரம் பேர் காத்துக் கிடக்கின்றனர். ஆனால் அத்தனை சுகபோகங்கள் இருந்தும் நிம்மதியோ மன அமைதியோ இன்றி, அதற்கு விடி மோட்சம் வேண்டும் என மகான்களையும் ஞானிகளையும் தேடி அலைகின்றேன். ஆனால் உங்களால் எந்தவித அச்சமும் இன்றி, ஆசையும் இன்றி, உலகப் பற்றும் இன்றி எப்படி அன்பரே இத்தனை சுதந்திரமாத் திரிய முடிகின்றது, தயவு செய்து முதலில் என் வணக்கத்தை ஏற்றுக் கொண்டு பிச்சைக்காரர் தோற்றத்தில் காட்சி தரும் நீங்கள் உண்மையிலேயே யார்?, உங்களுடைய குரு யார்?, என்று இந்த எளியவனுக்கு விளக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை’ என்றார்.
‘என்னை தடுத்து நிறுத்தி என்னுடைய நேரத்தை வீணடிக்காதே’ என்று அந்த மன்னனை தள்ளி விட்டார் ஸ்ரீ தத்தர். அவன் அசைவதாக இல்லை. தன்னுடைய காலை பிடித்துக் கொண்டு மீண்டும் மீண்டும் தன்னைப் பற்றியே கேட்டுக் கொண்டு இருந்த அந்த மன்னனை, எட்டி உதைத்து விட்டு ஓடத் துவங்கினார் மாபெரும் அவதூதரான ஸ்ரீ தத்தர். அந்த மன்னனும் சளைக்காமல் அவரை பின் தொடர்ந்து பின் தொடர்ந்து ஓடினார். மனம் மகிழ்ந்து போன ஸ்ரீ தத்தாத்ரேயர் அவன் முன் தேஜஸ்ஸாக நின்றார். இறைவனை அடைவதற்கு தேவையான தகுதிகளான பணிவு, பொறுமை, விடா முயற்சி இவை அனைத்தும் அந்த மன்னனிடம் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுற்றார் ஸ்ரீ தத்தாத்ரேயர். அந்த மன்னன் ஒழுக்கம் மிக்கவன், சாது சன்னியாசிகளை மதித்து நடப்பவன், நல்லவன் என்றாலும் “நான்“ என்கிற அகங்காரம் அழிந்து பணிவு ஒருவனுக்கு வரவில்லை எனில் இறைவனிடம் நெருங்க முடியாது. எனவேதான் ஸ்ரீ தத்தாத்ரேயர் அந்த மன்னனை எட்டி உதைத்து, பரிட்சை செய்துப் பார்த்தார். ஒரு பிச்சைக்காரன் தன்னை எட்டி உதைத்த பொழுதும் கூட, கோபப்படாமல் அந்த பிச்சைக்காரர் உருவில் இருப்பவர் இறைவன் என்பதை உணர்ந்து மீண்டும் மீண்டும் பணிவுடன் தன்னை தொடர்ந்து வந்த மன்னனைக் கண்டு ஸ்ரீ தத்தாத்ரேயர் மகிழ்ச்சி அடைந்தார். எனவே மன்னனைப் பார்த்து, ‘இனிய குணம் மிக்க மன்னா, வா, அதோ அந்த ஒதுக்குப் புறமான இடத்தில் அமர்ந்து கொண்டு பேசுவோம்’ என்றார்.. மும்மூர்த்திகளின் சக்தியை உள்ளடக்கி அவதரித்த அவதூதர் ஆன தத்தாத்ரேயரும், தத்தாத்ரேயரை தொடர்ந்து சென்ற மன்னனும், தூரத்தில் சென்று ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டார்கள். பின் அமைதியான சூழ்நிலையில் ஸ்ரீ தத்தாத்ரேயர் ஒரு உபதேசம் போல அந்த மன்னனுக்கு கூறலானார்.
‘மன்னா, இப்போது நான் கூறப் போவதைப் பொறுமையாகக் கேள். சற்று நேரத்திற்கு முன்னால் சுகபோகப் பொருட்கள் மற்றும் செல்வங்கள் என அனைத்துமே உன்னிடம் உள்ளதாகக் கூறினாயே, அவை அனைத்துமே வெறும் மாயைதான். உடல் என்பது வெறும் ஜடப்பொருள் என்பதை முதலில் புரிந்து கொண்டு நான் கூறுவதைக் கேள். உன்னிடம் உள்ள ஜடங்களான வெளிப் பொருளை மட்டும் வைத்துக் கொண்டு உன்னை என்னுடன் சம்பந்தப்படுத்திப் பார்க்கின்றாய். நானோ நானாகவே இருப்பவன். என்னை சுற்றி உள்ள ஜடப் பொருட்களைக் சுட்டிக் காட்டிக் என்னை நான் பெருமைப் படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அந்தப் பொருட்கள் என்னிடம் இருந்தால் அவற்றுக்குத்தான் என்னால் பெருமையே தவிர, அவற்றினால் எனக்கு பெருமை அல்ல என நினைப்பவன் நான். அதனால்தான் மன மகிழ்ச்சியோடு இப்படித் திரிகின்றேன். நான் யார்? என அறிய ஆவலோடு இருக்கின்றாய் அல்லவா, இப்பொழுது நான் கூறப்போகும் அனைத்தையும் கவனமாக முழு மனதை செலுத்திக் கேள். அவற்றை எல்லாம் கேட்ட பின், நீ என்னைப் முழுமயாகப் புரிந்து கொண்டு, நான் யார்? என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்வாய் என்று சொன்னார்.’
அடடா …….. அற்புதமான ஒரு தத்துவத்தை என்ன சாதாரணமாகக் கூறுகின்றார். ‘தன் மர மண்டையில் யாரோ சம்மட்டியால் அடித்ததை போல இருக்கின்றதே’ என நினைத்த மன்னன், தத்தாத்ரேயர் கூறியதை உன்னிப்பாகக் கேட்கலானார்.
ஸ்ரீ தத்தாத்ரேயர் தொடர்ந்தார். ‘இந்த உலகைப் படைத்து விட்ட பரமாத்மன் பல்வேறு குணமுடைய ஜீவன்களையும் படைத்து விட்டான். ஒற்றைக்கால் ஜீவன் முதல் பல கால், கைகளைக் கொண்ட ஜீவன்கள் என விதவிதமாக எத்தனை எத்தனை வகைகளைப் படைத்தான். ஆனால் அத்தனை ஜீவன்களிலும் இல்லாத அந்தராத்மா என்ற ஒன்றை மனிதர்களிடம் மட்டுமே வைத்து விட்டான். அவனுக்குள் மட்டும் ஆழ்ந்து யோசிக்கும் தன்மையையும் வைத்து உள்ளான். அதனால்தான் மனிதனால் தியானிப்பதின் மூலம் தன் உள்ளே உள்ள அந்தராத்மாவைக் கூட அறிந்து கொள்ள முடிகின்றது, பரமாத்மனையும் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனாலும் அதை அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முடியாமல் உள்ள உன்னைப் போன்றவர்கள் மற்ற ஞானிகளைத் தேடி அலைகிறார்கள்.
உள்ளுக்குள்ளே உள்ள அந்தராத்மாவும், அதை இயக்கும் சக்தியான எண்ணங்களையும் தவிர மற்ற அனைத்தும் சுதந்திரமான உன் ஆத்மாவை உன் உடலுக்குள் ஒளித்து வைத்து உள்ள ஜடப் பொருளாக, சதைப் பிண்டமாக, தசைகளுடன் கூடிய ஒரு தோற்றம் அளித்தபடி உள்ளது. நீ கூறியபடியே, அந்த ஒரு உடல் படும் வேதனையையும், இல்லாத ஒன்றை தேடி இடமிடமாக ஓடி அலையும் மூடத்தனத்தையும் எண்ணிப் பார். ஒரு உடல் மேலும் மேலும் பல உடல்களை தேடி ஓடிக் கொண்ட வண்ணம் உள்ளது. மனைவி, குழந்தைகள், சந்ததிகள், சன்தானங்கள், சேவகர்கள் என அனைத்தும் கிடைத்தும் கூட, போதும் என்ற மனம் வரவில்லை. இன்னமும் வேண்டும் என ஏங்கி, ஏங்கி அலைவது ஏன் ? பற்று……. உலகப் பொருட்கள் மீது வைத்து விட்ட அளவற்ற பற்று …….. அளவற்ற ஆசை. ஒவ்வொருவருக்குள்ளும் ஆழ்ந்து யோசிக்கும் தன்மை இருந்தும் அவைகளைப் பற்றி நினைத்துப் பார்க்க அவன் மனம் மறுப்பது ஏன் ? இந்த உடலே ஒரு மாயை, இதற்கு அழிவு நிச்சயம் எனும் பொழுது இருப்பதைக் கொண்டு திருப்தி அடையாமல் இல்லாத ஒன்றைத் தேடி அலைந்த வண்ணம் எதற்காக நிம்மதியை இழந்து நிற்கிறோம் என ஒரு கணம் மனிதர்கள் யோசித்துப் பார்க்கிறார்களா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
ஸ்ரீ தத்தாத்ரேயரின் குருக்கள் யார் ?
சாதாரணத் துறவியான நான் யார் என்பதை தெரிந்து கொள்வது முக்கியம் அல்ல. அதை விட முதலில் எனக்கு போதனை செய்த ஆசிரியர்கள் யார் என்று தெரிந்து கொள். எனக்கு ஆசிரியர்களாக இருந்தவர்கள் இந்த உலகில் இயற்கையோடு உலகெங்கும் பிணைந்து உள்ள இருபத்தி நான்கு குருமார்கள்.’
தான் கூறிக் கொண்டு இருந்ததை இடையிடையே நிறுத்தி, நிதானமாக ஸ்ரீ தத்தாத்ரேயர் கூறிக் கொண்டே இருக்க, தன்னை மறந்து அதைக் கேட்டபடி அவர் காலடியில் அமர்ந்து இருந்தான் அந்த யதுகுல மன்னன். அவனை அறியாமலேயே அவன் மனதை மெல்ல மெல்ல ஆழ்ந்த அமைதி ஆக்ரமிக்கத் துவங்கியது.
ஸ்ரீ தத்தாத்ரேயர் தொடர்ந்தார் ‘எவர் அந்த இருபத்தி நான்கு குருமார்கள் என்று குழம்புகின்றாயா ,……… கேள் மன்னா…..கேள் …… என் குருமார்கள் பூமி, தண்ணீர், நெருப்பு, காற்று, சிலந்தி, பிங்களை என்ற வேசி, சந்திரன், சூரியன், ஆகாயம், கடல், நுரை, மலைப் பாம்பு, புறா, மீன், மான், யானை, குழந்தை, தேனி, விட்டில் பூச்சி, தேன் சேகரிப்பவன், சிறு பறவை, அம்பு செய்பவன், பாம்பு, புழு, சிறுமி போன்றவர்களே. அவர்கள் ஒவ்வொருவரும் எனக்கு கற்றுத் தந்த பாடம் என்ன என்பதை நீ அறிந்தால் இன்னும் வியப்படைவாய்.’
ஸ்ரீ தத்தாத்ரேயர் கூறிக் கொண்டு இருந்ததை மெய் மறந்து கேட்டபடி, வியப்போடு அவரை நோக்கியபடி அவர் காலடியில் அமைதியாக அமர்ந்திருந்தான் அந்த யதுகுல மன்னன்.
ஸ்ரீ தத்தாத்ரேயர் தொடர்ந்து கூறலானார் ‘……அந்த குருக்களிடம் இருந்து நான் கற்றுக் கொண்டவை எவைத் தெரியுமா?,…….. அவர்களின் குணத்தையும் அவர்கள் கற்றுத் தந்த பாடத்தையும் கவனமாகக் கேள் –
- பூமி : இந்த பூமி மீதுதான் இறைவனால் படைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் எத்தனை விதமான எண்ணங்கள், குணாதிசயங்கள், செயலாற்றல்களை கொண்ட மானிட மற்றும் பிற ஜீவராசிகள்,மிருகங்கள் போன்ற அனைத்தும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. அவற்றின் அனைத்து இயக்கங்களும் வழிமுறைகளும் வெவ்வெறானவை. அவர்களைத் தவிர செடி கொடிகளின் வேர்கள் மற்றும் பூமிக்கு உள்ளே வசிக்கும் ஜீவன்கள் கூட பூமியின் உடலை கிழித்துச் சென்று வாழ்வதையும் பூமி தடுப்பது இல்லை. ஒவ்வொரு சூழ்நிலையிலும் தத்தம் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப மாற்றி அமைத்தவண்ணம் வாழும் உயிரினங்கள் அனைத்துமே இயங்குவது அதே பூமி மீதுதான் என்றாலும் அத்தனை குணாதிசயங்களினாலும் சூழப்பட்டு உள்ள அதே உயிரினங்கள் இயங்கத் தேவையான அனைத்து உதவிகளையும் தன்னுள் இருந்து செய்தபடி, பொறுமையைக் கடைபிடித்தபடி மெளனமாக இருந்துகொண்டு, தான் என்ற அகம்பாவத்தைக் காட்டாமல், அனைவரையும் அணைத்தபடி இருக்கும் பூமியே பொறுமை என்ன என்பதை காட்டுபவள்.
- காற்று : உலகின் அனைத்திடங்களிலும் பரவி உள்ள, அத்தனை ஏன் நம் உடலுக்குள்ளும் வாசம் செய்யும் காற்றானது எத்தனை மென்மையானது என்பதை உணர முடியுமே தவிர, அதன் மூல உருவையோ அல்லது அதனுள் அடங்கி உள்ள தன்மைகளையோ வெளிப் பார்வை மூலம் பார்க்க இயலாது. ஆனால் அனைத்து இடங்களிலும் தவழ்ந்து செல்லும் அந்த காற்றானது மணம் வீசும் அல்லது துர்நாற்றம் தரும் பொருட்களை தொட்டவண்ணம் தவழ்ந்து சென்றாலும் தன் மீது அமர்ந்துகொண்டு பயணிக்கும் மணத்தை ஒரு எல்லைவரை சுமந்து சென்ற பின் அவற்றை அப்படியே துறந்து விட்டு, தூய்மையான தன் இயல்பு நிலையோடு பயணத்தை தொடர்கின்றது. இது உணர்த்தும் தத்துவம் என்ன எனில் காற்று எந்த இடத்தில் பயணித்தாலும் தன் இயற்கை நிலையை மாற்றிக் கொள்வதில்லை, தன்மீது ஒட்டிக் கொண்டு தற்காலிகமாக பயணிக்கும் குணங்களினால் மாற்றமும் அடைவதும் இல்லை. அதை போலவேதான் வாழ்க்கையில் ஒருவர் பெறும் இன்ப துன்பங்கள் அனைத்துமே தான் தற்காலிகமாக குடி உள்ள அந்த உடலுக்கே ஒழிய தனக்கல்ல என்று காற்றின் தனித்துவ தன்மையின் தத்துவத்தை வெளிப்படுத்தியவண்ணம் உடலுக்குள் மிதந்து கொண்டிருக்கும் ஆத்மாவை சுமந்து செல்லும் யோகியும், தான் எங்கு பயணித்தாலும், எங்கு தங்கி இருந்தாலும், எந்த நிலையிலும் தன்னை களங்கப்படுத்திக் கொள்ளாமல், தூய்மையான காற்றின் தத்துவத்தை வெளிப்படுத்தும் விதத்திலான வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.
- ஆகாயம் : காற்றைப் போலவே ஆரம்பமும் முடிவும் இன்றி, எல்லையும் தெரியாமல், உலகெங்கும் வியாபித்திருக்கும் ஆகாயமும், கண்களுக்கே தெரியாமல் அணைத்திடத்திலும் படர்ந்திருக்கும் பரபிரும்மனின் நிலையை எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்துள்ள ஒரு படைப்புதான். பரபிரும்மனின் தன்மையைக் கொண்ட ஆகாயமும் தன் மீதே ஊர்ந்து செல்லும் மேகங்கள் , மின்னல், மழை மற்றும் இடி ஓசை போன்றவற்றினால் தன் உருவை எந்த விதத்திலும் மாற்றிக் கொள்ளாமல் அமைதியாக தான் தானாகவே இருப்பதை போலவே, எந்த சூழ்நிலையினாலும் பாதிக்கப்படாமல் ஒரு யோகி அமைதியோடு இருக்க வேண்டும் எனும் அற்புதமான தத்துவத்தை அல்லவா ஆகாயம் எடுத்துரைக்கின்றது.
- தண்ணீர் :- இயற்கையான தண்ணீர் இனிமையானது, தூய்மையானது. தண்ணீர் இன்றி எந்த உயிரினத்தினாலும் வாழ முடியாது என்பதே உண்மை என்றாலும் அந்த தண்ணீருக்கு அகங்காரம் இல்லை, ஆணவமும் இல்லை. அதை எந்த விதத்திலும் அது வெளிப்படுத்துவதும் இல்லை. மானிடரைப் படைத்த இறைவன் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இன்றி எப்படி தன்னிடம் சரணம் அடைந்தவராது மனதில் உள்ள அழுக்குகளை தானே நீக்குகின்றாரோ, அதை போலவேதான் கடலிலும், குளத்திலும் ஏரிகளிலும் உள்ள தண்ணீரும் தன்னுள் வந்து விழும் அழுக்குகளை கால ஓட்டத்தில் தானே அகற்றி தூய்மை ஆகிவிடும் என்பதை போலவேதான் ஒரு யோகியும் தாமரை இலையில் பட்டும் படாமலும் இருக்கும் நீரைப் போல வாழ்ந்து கொண்டு, தன்னிடம் வருபவர்களின் அதீத உலகப் பற்றையும், மன அழுக்குகளையும் நீக்கி, ஆன்மீக தாக்கத்தைப் போக்கி, அவர்களது வரவால் தன்னையும் மாசுபடுத்திக் கொள்ளாமல் என்றும் தன் மனதை தூய்மையாக வைத்துக் கொண்டு இருக்க வேண்டும் எனும் தத்துவத்தை தண்ணீர் அல்லவா வெளிப்படுத்துகின்றது.
- நெருப்பு : – பிரபஞ்சத்தை படைத்தவன் எப்படி எவரையும் தள்ளி வைப்பது இல்லையோ அதை போலவே நெருப்பும் தனது இயற்கை தன்மையோடு இருந்தவண்ணம், தன்னுள் போடப்படும் எதையுமே தள்ளி வைக்காமல், அனைத்தையும் பேதம் இன்றி எரித்து விடும். அதன் ஜுவாலையும் அதற்குள் போடப்படும் பொருளையும் அதன் அளவையும் பொறுத்தே அமைந்து இருக்கும். அதை போலவேதான் ஒரு யோகியின் ஆன்ம சக்தியும் அவருடைய யோக நிலையின் அளவைப் பொறுத்தே அமைந்து இருக்கும். அனைத்தையும் ஒரே நிலையில் இருந்தவாறு நோக்கும் பக்குவத்துடன் இருந்தவாறு, தன்னிடம் வந்தவர்களின் பாவங்களைக் களைந்து தன் தனித் தன்மையையும் இழக்காமல் இருக்க வேண்டும் என்பதை மட்டும் அல்ல அனைவரையும் எப்படி ஒதுக்கி வைக்காமல் தன்னுள் அடக்கிக் கொண்டு விட வேண்டும் எனும் இறைவனது தத்துவத்தையும் நெருப்பே வெளிப்படுத்துகின்றது.
- சந்திரன் :– சந்திரனுக்கு தனித் தன்மையிலான ஒளி கிடையாது. அது சூரியனின் வெளிச்சத்தைதான் பிரதிபலிக்கிறது என்றாலும் அது பெறும் ஒளியின் மாற்றங்களினால் எந்த சூழ்நிலையிலும் சந்திரனின் உண்மையான உருவத்துக்கு எந்த விதமான இழப்பும் ஏற்படுவது இல்லை. கர்ம வினைகளுக்கு ஏற்ப தோன்றும் தற்காலிக இன்ப துன்பங்களை போலவே, இயற்கை மாற்றங்களினால் ஏற்படும் வளர்பிறை மற்றும் தேய்பிறைகளில் காணப்படும் சந்திரனின் மாறுபட்ட உருவங்களும் தற்காலிக மாய உருவங்களே அன்றி உண்மை நிலை அல்ல. அதை போலவேதான் வாழ்க்கையில் நிலையாமை என்பதை வெளிப்படுத்தும் மாயையான வெளித் தோற்ற உடலின் செயல்களினால் அந்த உடலுக்குள் குடி உள்ள ஆத்மா எந்த நிலையிலும் எந்த மாறுதலையும் அடைவது இல்லை எனும் தத்துவத்தை வெளிப்படுத்துவது சந்திரன் அல்லவா
- சூரியன் :– சூரிய ஒளி இல்லை எனில் எந்த ஒரு உயிரினங்களும் உயிர் வாழ முடியாது. படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களிலும் ஊடுருவி உள்ள பரபிரும்மனின் தத்துவத்தை பிரதிபலிப்பது போல உலகெங்கும் தனது ஒளிக் கற்றைகளினால் ஊடுருவி வெளிச்சம் தரும் சூரியன், பூமியில் இருந்து நீரை மேலிழுத்துக் கொண்டு அதில் தனக்கென எந்த பங்கையும் வைத்துக் கொள்ளாமல், நியதிகளுக்கு ஏற்ப மீண்டும் மழையாக பூமிக்கே திருப்பித் அனுப்பும். அந்த சூரிய தத்துவத்தை பிரதிபலிப்பதை போலவே ஒரு யோகியும் தான் பெறும் அறிவற்றல்களின் பலன்களை, தன்னுளேயே, தனதாகவே வைத்துக் கொண்டு விடாமல், அனைவருக்கும் பயனளிக்கும் விதத்தில், பிறருக்கும் பாடமாக போதனை செய்தவண்ணம் இருக்க வேண்டும். பல இடங்களிலும் , பல நாடுகளிலும் வெவ்வேறு தன்மையிலான ஒளிக்கதிர்களை வீசியபடி காட்சி தருவது பல்வேறு சூரியன்கள் அல்ல, அனைத்து இடங்களிலும் வெளிப்படும் ஒளிக்கற்றைகளை வீசுவது ஒரே சூரியனே என்பது உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா? உடல்கள் பல்வேறாக இருந்தாலும் அவற்றின் உள்ளே குடி உள்ள உள்ள ஆத்மாக்கள் அனைத்துமே ஒன்றில் இருந்தே வெளிவந்தவை என்ற உண்மையை வெளிப்படுத்துவதே ஆகும்.
- புறா : – அதீத அன்பும் பாசமும் கொண்டு தன்னைத் தானே அழித்துக் கொள்ளக் கூடாது. ஒரு வேடன் வீசிய வலையில் பிடிபட்ட தனது குஞ்சுகளின் மீது இருந்த பாசத்தினால், அதைக் காப்பாற்ற நினைத்து அதன் தாய் மற்றும் தந்தை புறாக்களும் அதே வலையில் சென்று அகப்பட்டுக் கொண்டன. தனது குழந்தைகள் மீதுள்ள பாசத்தினால் குழந்தைகளின் தவறான நடத்தைகளை கண்டிக்காமல், ஆசா பாசங்களினால் கட்டுண்டு அவர்களை கண்மூடித்தனமாக தாங்கி நின்று தன் பிறவித் தன்மைகளையும், தனது குழந்தைகளின் பிறவித் தன்மையையும் அழித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களின் நிலையை எடுத்துக் காட்டியதே அந்த புறாவின் நிலையும். அளவற்ற ஆசா பாசங்களும், உலகப் பற்றுமே அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்பதை குழந்தை பாசத்தினால் வேடனின் வலையில் தானே சென்று சிக்கிக் கொண்ட புறாவின் கதை அல்லவா உணர்த்துகின்றது.
- மலைப் பாம்பு:- மலைப்பாம்பின் இயற்கை குணம் என்ன என்றால் பிடித்தது, பிடிக்காதது, பெரிய மற்றும் சிறிய இறை என்ற எந்தவிதமான பாகுபாடுகளையும் வைத்துக் கொள்ளாமல், பசித்த நேரத்தில் தனக்கு கிடைத்த இரையை மட்டும் உண்டு விட்டு, அடுத்த உணவு கிடைக்கும்வரை காத்துக் கொண்டு இருக்கும். இரை எதுவும் கிடைக்கவில்லை என்றால் பட்டினியோடு இருந்தாலும் இரையை தேடி அலைவதில்லை. அதை போலவேதான் கர்ம வினைகளுக்கு ஏற்பவே நன்மையும், தீமையும் மாறி மாறி வரும், தனக்கு எது கிடைக்க வேண்டுமோ அதுவே கிடைக்கும் என்ற தத்துவத்தை முழுமையாக புரிந்து கொண்டு சுகம் மட்டுமே வேண்டும் என அதை தேடிக் கொண்டு அலையாமல் வாழ்பவனே மகிழ்ச்சியோடு இருக்க முடியும் என்பதை மலைப் பாம்பின் வாழ்க்கை எடுத்துக் காட்டுகின்றது.
- கடல் :- கடல் நீர்தான் சூரியனின் வெப்பத்தால் ஆவியாகி மேலே சென்று சூரியனின் செயலினால் பல்வேறு இடங்களிலும் மழையாக பொழிகின்றது. அந்த மழை நீரினால்தான் குளங்களும், ஏரிகளும் நதிகளும் நிறம்புகின்றன. அந்த நீர் நிலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீரும் பல்வேறு வகைகளில் அதே கடலில் சென்று கலக்கின்றன. இப்படியாக தானே உருவாக்கிய தண்ணீர் பல்வேறு நிலைகளில் தன்னுள் வந்து கலந்தாலும் எந்த நிலையிலும் கடல் தனது கரையை தாண்டுவதும் இல்லை, அந்த தண்ணீர் தன்னுடன் வந்து கலக்கவில்லை என்றால் வற்றிப் போவதும் இல்லை. அதை போலவேதான் ஒரு ஞானியும் தன் விருப்பங்கள் நிறைவேறினால் மகிழ்ச்சியோ, இல்லை எனில் துயரமோ அடையாமல், அந்த நிலை எங்கிருந்து வந்தாலும் தன்னை இழக்காமல், தன் கடமையை செய்தபடி இருக்க வேண்டும். இந்த தத்துவத்தை எடுத்துக் காட்டுவதே கடல் ஆகும்.
- தேனீ :- நறுமணம் கொண்ட பூக்களோ இல்லை மணமற்ற காட்டுப் பூக்களோ எதுவாயினும் ஒரு தேனீ பல் வேறு இடங்களிலும் உள்ள பூக்களில் இருந்து, அந்த மலர்களை சிதைக்காமல், அதில் உள்ள தேனை மட்டுமே உறிஞ்சி வந்து தனது கூட்டில் தேனை சேகரிக்கின்றது. அதை போலத்தான் கர்ம வினையினால் பிறந்துள்ள ஒவ்வொருவரும் வேறு எவருடைய மனதையும் புண்படுத்தாமல் அவர்களிடம் இருந்து நல்ல குணங்களை மட்டும் கற்று அறிந்தபடி வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை எடுத்துக் காட்டுவது தேனீயின் வாழ்க்கை முறையே ஆகும்.
- தேன் சேகரிப்பவன் — பலநாட்களாக அங்கும் இங்கும் அலைந்தபடி மலர்களில் இருந்து தேனை எடுத்து வந்து தனது கூட்டில் சேகரித்து வைக்கும் தேனீ அதை உண்பது இல்லை. அப்படியாக தேனீக்கள் சேமித்து வைத்த தேன் கூடு நிறைந்து விட்டால், தேன் எடுப்பவன் புகையை மூட்டி தேனிக்களைத் துரத்தி விட்டு கூட்டில் உள்ள தேனை எடுத்துக் கொண்டு கூட்டை தூக்கி எறிந்து விடுவதை போல, அழியப் போகும் உடலை சுமந்து கொண்டிருக்கும்ஆண்டியோ, அரசனோ, தான் சேமிப்பதை தானும் அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுக்காமல், தனது தேவைக்கு மேலாக சேமித்து வைத்தால் அவர்களது உடலில் உள்ள ஆத்மா வெளியேறிய பின்னர் வேறு எவராவது அல்லவா அவற்றை அனுபவிப்பார்கள். எனவே தேவைக்கு மேல் சேமித்து வைக்கப்பட்ட எந்த ஒன்றுமே நிரந்தரம் அல்ல, அதன் கால விதிப்படி எவர் மூலமாவது அழிந்து போகும் என்ற தத்துவத்தை தேன் எடுப்பவன் செயல் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
மன்னா, ஐம்புலன்களில் அகப்பட்டுக் கொண்டு நாம் பிறந்த நல்பிறவியை எப்படி வீணடித்துக் கொள்கின்றோம் என்ற தத்துவத்தை விட்டல் பூச்சி , யானை, மீன் மற்றும் மான் போன்றவற்றின் வாழும் முறையில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். அதையும் கேள் என்று கூறிய ஸ்ரீ தத்தாத்திரேயர் தொடர்ந்து கூறலானார்.
- யானை :- ஆண் யானையின் தந்தத்தை எடுப்பதற்காக, வேடர்கள் பெண் யானை ஒன்றை குழிக்குள் மறைத்து வைத்து இருப்பார்கள். பெண் யானையின் மீதான மோகத்தில் அதை பிடிக்க வரும் ஆண் யானை அந்த நாயக் குழிக்குள் விழுந்து விழும்போது அதை எளிதில் பிடித்து விடுவார்கள். இது எடுத்துக் காட்டும் தத்துவம் என்ன என்றல் எந்த ஒரு யோகியும் வெளித் தெரியும் நிரந்தரம் அற்ற மோகத்தில் மயங்கி அவற்றில் வீழ்ந்து விடாமல், பேரானந்த நிலையான ஆன்மாவின் தேடுதலில் மட்டுமே தனது கவனத்தை செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்பதே ஆகும்.
- வீட்டில் பூச்சி : புலன்களை வெல்ல முடியாதவன் விளக்கு ஒளியில் எழும் வெளிச்சத்தில் மயங்கி அதன் தீயில் வீழ்ந்து மடியும் வீட்டில் பூச்சி போன்றவன். மாயையால் உண்டாக்கப்பட்ட பெண், பொன், ஆபரணம், ஆடை ஆகியவற்றால் வசீகரிக்கப்படும் அஞ்ஞானி அறிவைத் தொலைத்து அதனாலேயே அழிவான் என்பதை போல இல்லாமல் ஒரு யோகியும் ஐம்புலன்களின் மோக மாயையில் சிக்கி தன்னை அழித்துக் கொள்ளாமல், ஜ்யோதியாகவே காட்சி தரும் இறைவனுடன் ஐக்கியமாகி விடவேண்டும் என்ற தத்துவத்தை வெளிப்படுத்துவதே விட்டல் பூச்சி ஆகும்.
- மான் :- மானைப் பிடிப்பதற்கு முன் அதை பிடிக்க வலை விரிக்கும் வேடன் எழுப்பும் இசையில் மயங்கி, தனக்கு வரும் ஆபத்தையும் சூழ்நிலையையும் உணராமல் கண்ணை மறைக்கும் ஆசையினால் துள்ளிக் குதித்து ஓடிச் சென்று அவன் விரித்து வைத்துள்ள வலையில் சிக்கிக் கொள்ளும். அதனால்தான் யோகியானவன் வெளியுலக மாயையான ஆடல், பாடல், இசைகளில் மயங்கி தம்மை அழித்துக் கொண்டு விடக் கூடாது எனும் தத்துவத்தை மானின் செயல் மூலம் மூலம் உணர முடிகின்றது.
- மீன் :- தன்னை பிடிக்க தூண்டிலில் இரையை வைத்து நீரினுள் போடப்படுகிறது என்பதை உணராத மீனும் உணவின் மீதுள்ள ஆசையினால் அந்த இரையை எடுக்கப் போய் அந்த தூண்டிலில் தானே அகப்பட்டுக் கொள்ளும். ஐம்புலன்களின் தடுமாற்றத்தின் அடிப்படையே நாக்கின் ருசி என்பதினால் தனது நாக்கின் ருசியை யோகிகள் அடக்கிக் கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தை எடுத்துக் காட்டுவதே ஒரு மீனின் செயல் ஆகும்.
- வேசி :- பல காலம் தன் உடலை விற்று வாழ்ந்திருந்த பிங்களை என்ற வேசி, மீண்டும் வருவதாக கூறியவன் வரவில்லை என்ற உண்மையை உணர்ந்தபோது, ஒருநாள் அழியப்போகும் நரகர்களின் மீது வீண் ஆசையை ஏன் வைத்தேன் என மனத் தெளிவு பெற்று தான் கொண்டிருந்த அந்த தொழிலை துறந்தாள். மோகம் மற்றும் ஆசை என்ற அனைத்துமே மாயை எனும் தற்காலிக தோற்றங்களே, அவை நிரந்திரமானதல்ல என்பதை எண்ணிய அவள் உள்ளத் தூய்மையுடன் தன் சிந்தனையை இறைவனிடம் திருப்பினாள். அன்று முதல் அவள் மனம் அமைதி அடைந்தது, வைராக்கியம் வளர்ந்தது. அதனால்தான் பல பிறவிகளைக் கொண்டுள்ள நாமும் ஏதாவது ஒரு பிறவியில் மோகம் மற்றும் வெளியுலக இன்பங்களை துறந்து, இனி வேறொரு பிறவி வேண்டாம் என்ற யோக வழி மார்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டால் யோக சித்தம் கிடைக்கும் என்பதை அந்த வேசியின் வாழ்க்கை விளக்குகின்றது.
- குர்ரம் (பறவை) :- இறைச்சித் துண்டைக் கவ்விச் கொண்டு பறந்து செல்லும் குர்ரம் பறவையை பல பறவைகள் துரத்தித் சென்று துன்புறுத்தும்போது, தன்னை அந்தப் பறவைகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள, தன் வாயில் உள்ள இரையை கீழே போட்டு விடும். குர்ரம் பறவையை துரத்தி வரும் பறவைகளும் அந்த இரைச்சித் துண்டை பிடிக்க ஓடும். இது எடுத்துக் காட்டும் தத்துவம் என்ன என்றால் இன்ப துன்பங்களின் சுயற்சியில் இருந்து விடுதலை பெற்று இறைவனின் காலடியில் ஐக்கியம் ஆகி விட வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு இருக்காமல், மாயையான செல்வங்களின் மீதான ஆசா பாசங்களையும் துறக்காமல், அளவிற்கு மீறியவற்றை சுமந்து சென்றால் துன்பமே நேரிடும்.
- குழந்தை : – பிறந்து சில காலம் மௌன மொழியிலேயே தன்னுடைய தாயாருடன் தனது உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் குழந்தை, தன்னுடைய தாய் தனக்கு பாதுகாப்பாக இருப்பாள், தேவை அனைத்தையும் நிறைவேற்றுவாள் என்ற உள்ளுணர்வுடன் இருக்கும். அவளது அரவணைப்பில் வளர்ந்து வரும் குழந்தைக்கு அதுவாகவே சிந்திக்கும் நிலையை எட்டும்வரை அவளது துணை தேவையாக இருக்கும். அதைப் போலவேதான் ஒரு குருவின் வழிகாட்டுதலில் ஆன்மீக பயணத்தை தொடரும்போது, மெல்ல மெல்ல ஒரு குழந்தை வளர்வதை போல யோக சித்தியும் ஞானமும் வளர்ந்து கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் பரபிரும்மனே அனைத்தும் என்ற உண்மையை முழுமையாக புரிந்து கொள்ளும் ஞான நிலையை யோகியால் எட்ட முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதே குழந்தை எனும் வடிவின் தத்துவம் ஆகும்.
- சிறுமி:- திருமணம் ஆகாத பெண் ஒருவள் நெல்லில் இருந்து அரிசியை பிரிக்க நெல்லை இடித்தபோது, அவளது கைகளில் போட்டிருந்த வளையல்கள் உரசி, உரசி தேவையற்ற சப்தத்தை எழுப்பின. அதனால் அந்த சத்தத்தை நிறுத்த அவள் சில வளையல்களை அகற்றினாள். சத்தம் சிறிது குறைந்தாலும் அதற்குப் பிறகும் சப்தம் நிற்காமல் தொடர்ந்தது. எனவே அவள் ஒரு வளையலை மட்டும் போட்டுக் கொண்டு மற்ற அனைத்து வளையல்களையும் அகற்றி விட்டு நெல்லை இடிக்கத் துவங்க, வளையல்கள் உரசும் சப்தமும் நின்றது, வேலையும் முடிந்தது. அதனால் மனதிலுள்ள தேவை அற்ற அனைத்து எண்ணங்களையும் நீக்கிக் கொண்டு, திடமான ஒரே எண்ணத்துடன் தனது இலக்கை நோக்கி பயணிக்கும் யோகியும் தனது இலக்கை அமைதியோடு அடைவான் எனும் தத்துவத்தை திருமணம் ஆகாத பெண் போட்டிருந்த வளையல் சப்தம் மூலம் உணர்ந்து கொண்டேன்.
- ஆயுதம் செய்பவன்– கூர்மையான ஆயுதத்தை செய்பவனைப் பார்த்தாயானால் எந்த நிலையிலும் அவன் தனது கவனத்தை சிதற விடாமல், முழு கவனத்தையும் ஆயுதம் செய்வதிலேயே செலுத்தி அதை செய்து முடிப்பான். அதைப் போலவேதான் ஒரு யோகியும் ஒரு நிலைபட்ட, திடமான எண்ணத்துடன் தியான நிலையில் தனது பயணத்தை தொடரும் போது ஆத்மன் எனும் உண்மையை புரிந்து கொள்ளும் நிலையை உறுதியாக எட்ட முடியும் என்ற பாடத்தை ஆயுதம் செய்பவன் தருகிறான்.
- பாம்பு – ஒரு பாம்பானது தனது பாதுகாப்பை கருதி, தனக்கென ஒரு இடத்தை வைத்துக் கொள்ளாமல் பாம்பானது இங்கும் அங்கும் அலைந்து கொண்டு கரையான்கள் கட்டும் புற்றுக்களில் வசித்துக் கொண்டு இருக்கும். அதை போலவேதான் ஒரு துறவியும், தற்காலிகமான வெற்று உடலுக்கு தேவை என ஒரு தனி வீட்டை வைத்திருக்காமல், அங்கும் இங்கும் கிடைத்த இடங்களில் இருந்தவாறு தனது ஆன்மீகப் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை பாம்பே எனக்கு உணர்த்தியது.(விளக்கம் :- பாம்பிற்கு இயற்கையாகவே உள்ள ஒரு குணம் என்ன எனில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை அவை தங்கள் உடல் மீதுள்ள தோலை உரித்துவிட்டு புதிய தோலை வளர்த்துக் கொள்ளும். அதன் செயலைப் போலவேதான் துறவிகள் உடலுக்குள் உள்ள ஆன்மாவும் அந்தந்த பிறவியின் கர்ம வினைகளை அழித்துக் கொண்டு மீண்டும் ஒரு புதிய உடல் மூலம் பிறவி எடுக்க வேண்டும் எனும் ஒரு ஆழமான தத்துவத்தை ஸ்ரீ தத்தாத்திரேயர் எடுத்துக் காட்டி உள்ளார்.
- சிலந்தி : – தன் வாயில் இருந்து நூலை வெளியேற்றி வலை பின்னிய பின்னர் அதனுள்ளேயே விளையாடிவிட்டு, உண்டு, உறங்கி பின் அதையே விழுங்கி விட்டு , மீண்டும் இன்னொரு வலையை சிலந்தி பின்னும். அதை போலவேதான் பரபிரும்மனும் தானே படைத்த சிருஷ்டியில் தனது லீலைகளை முடித்துக் கொண்ட பின்னர் யுக முடிவில் தான் படைத்த அதே சிருஷ்டியை மீண்டும் தன்னுள் அடக்கிக் கொண்டு இன்னொரு சிருஷ்டியை படைப்பார் என்கின்ற பரப்பிரும்மனின் தத்துவத்தை சிலந்தியே எனக்கு எடுத்துக் காட்டியது.
- குளவி : – ஒரு வகை குளவியானது, கம்பளிப் பூச்சியின் உடலில் தன்னுடைய முட்டைப் புழுக்களை செலுத்தி விடும். குளவியின் புழுக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு அந்த கம்பளிப்பூச்சியின் உடல் தேவைப்படுகிறது. புழுக்கள் அந்த கம்பளிப் பூச்சியின் உள்ளே இருந்து அந்த கம்பளிப் பூச்சியின் உடலிலுள்ள சத்துக்களை உண்டபடியே வளர்ந்தாலும், கம்பளிப் பூச்சியை இறக்க விடாமல் பார்த்துக் கொள்ளும். ஏனெனில் இந்தப் புழுக்கள் வளர்ந்து குளவியாக அந்த கம்பளிப் பூச்சியின் உடல் தேவைப்படுகிறது. அதைப்போலதான் ஒரு குருவின் வழிகாட்டுதலுடன் இருந்தவாறு இறைவனையே தியானிக்கும் பக்தன் யோக நிலையின் இறுதிக் கட்டத்தை எய்தியவுடன் ஜீவன் முக்தியாகி விடலாம் எனும் தத்துவம் குளவியின் வாழ்க்கை முறை மூலம் தெரிய வந்தது.(விளக்கம் :- குளவியை தனது குரு எனக் கூறி ஒரு ஆழமான தத்துவத்தை ஸ்ரீ தத்தாத்திரேயர் எடுத்துக் காட்டி உள்ளார். உண்மையில் ஸ்ரீ தத்தர் குறிப்பிட்டு உள்ள ‘குளவியின்’ செயல் தீய ஆத்மாக்களின் செயலை எடுத்துக் காட்டுகின்றது . அதாவது தற்கொலை, விபத்து போன்ற வகையில் அகால மரணத்தை அடைந்து நர்கதி பெற முடியாமல், பிரபஞ்சத்திலேயே சுற்றித் தவிக்கும் ஆன்மாக்கள், துர்த்தேவதைகளின் பிடியில் சிக்கிக் கொண்டு அழிந்து விடக் கூடாது என்பதற்காக நர்கதி கிடைக்கும்வரை வேறு எவருடைய உடலிலாவது சென்று தங்கி கொண்டிருக்கும் என்பதே ஆகும். ஆன்மாக்களுக்கு இந்த நிலை ஏற்படாது இருக்க அவர்களது சந்ததியினர் செய்யும் தான தர்மங்கள் மற்றும் பாராயணப் பிரார்த்தனைகள் உதவும்.)
ஸ்ரீ தத்தாத்ரேயர் தொடர்ந்து கூறலானார், ‘மன்னா இந்த உடலே ஒரு மாயை. நம் உடல் முழுவதும் படர்ந்து உள்ள அங்கங்கள் போதாது என்று அளவற்ற ஆசைகளையும் நாம் பெருக்கிக் கொள்கின்றோம். நமக்கு வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் அனைத்திற்கும் இந்த உடல் கொண்டுள்ள காமக் குரோத இச்சைகளே காரணம். இருக்கும் ஒரு உடல் போதாது என்று ஒவ்ஒருவரும் நான், எனக்கு, என்று தன்னுடன் மனைவி, மக்கள், செல்வம் என்று ஒன்றன் பின் ஒன்றாகப் பெருக்கிக் கொண்டே போகின்றனர். இன்று உள்ள இந்த உடல் நாளை இருக்காது என்பதே உண்மை எனத் தெரிந்தும் அதே உடலுக்கு பல்வேறு வகைகளினால் ஆன சுகம் தேவைப்படுகின்றது. அதனால்தான் மாயையான இந்த உடலின் மீது பற்றை விலக்கி விட்டு, ஆசைகளையும் அழித்து விட்டு, நான், எனக்கு என்ற அகந்தையை விட்டு விட்டு, எல்லாமே அந்த பரப்பிரும்மன் என்று நான் இருக்கின்றேன். அனால்தான் என்னால் எந்தவித அச்சமும் இன்றி, ஆசையும் இன்றி, உலகப் பற்றும் இன்றி இத்தனை சுதந்திரமாத் திரிந்து அலைய முடிகின்றது’.
(சிறு குறிப்பு :- இந்த பிரபஞ்சத்தை படைத்த பரப்ரும்மனே , அவரது மாயத் தோற்றமான ஒரு அவதூதர் உருவில் வந்துள்ளபோது அவருக்கு குருவா என ஒருவர் வியக்கலாம். ஆனால் உண்மை நிலை வேறு ஆகும். வாழ்கையின் தத்துவத்தில் ஆழமாக அடங்கி உள்ள அனைத்து நிலைகளையும் தக்க முறையில் மானிடர்களுக்கு எடுத்து உரைக்க வேண்டும் என்பதற்காகவே பரபிரும்மன் பிரபஞ்சத்தை படைத்தபோது பல்வேறு நியதிகளையும் பரிமாணங்களையும் கொண்ட நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி எனும் இயற்கை படைப்புக்களையும், பல்வேறு தன்மைகளிலான மானிடப் பிறவி, மிருக பிறவி, பறவை என்பவற்றை படைத்து அவற்றின் செயல்பாடுகளிலும் தான் உலகிற்கு தெரியப்படுத்த நினைத்திருந்த தத்துவங்களை அடக்கி வைத்திருந்தார். ஸ்ரீ தத்தாத்திரேயரான உருவில் தோற்றம் தந்த பரபிரும்மன், தன்னால் படைக்கப்பட்ட அவை அனைத்தும்தான் தமக்கு குரு என்ற மாயத் தோற்றத்தை தரும் வகையில், தனது சீரடாகி நின்ற மன்னனுக்கு எடுத்துக் காட்டி விளக்கும் பேரானந்த தத்துவ போதனையே தத்தாத்திரேய சரித்திரத்தின் மிக முக்கியப் பகுதி ஆகும்.
ஸ்ரீ தத்தாத்திரேயர் தன்னுடைய குருமார்கள் என்று கூறிய 24 குருமார்களின் குணாதிசயங்கள் அனைத்துமே கடவுள், ஆன்மா (Atman) மற்றும் மனித நேயங்களின் இயல்பு மற்றும் குணாதிசயங்கள் போன்ற தத்துவங்களை அல்லவா மறைமுகமாக எடுத்துக் காட்டுவதாக அமைந்து உள்ளன. ஆகவே அவற்றின் உள்ளே புதைந்து உள்ள ஆழமான உள் அர்த்தங்களை புரிந்து கொள்வது அவசியம், அப்பொழுதுதான் இறை உணர்வை முற்றிலும் புரிந்து கொள்ளும் மன நிறைவும் மனப் பக்குவமும் கிடைக்கும். நன்மையும், தீமைகளும் நம்மை கடுமையாக தீண்டும்போது, அதீத தீமைகளை செய்து வருபவர்கள் சுகபோகங்களில் வசிக்கும்போது நமக்கு மட்டுமே ஏன் தொடர்ந்து கஷ்ட நஷ்டங்கள், எதற்காக இத்தனை சோதனைகள் என்று நம் அனைவரும் விரக்தி அடைவதற்கான அடிப்படைக் காரணமே இந்த உடல் கொண்டுள்ள காமக் குரோத இச்சைகளே காரணம் என்ற மாபெரும் உண்மையை எத்தனை எளிதாக குருமார்கள் குறித்த குணாதிசயங்கள் மூலம் ஸ்ரீ தத்தாத்திரேயர் நமக்கு வெளிப்படுத்துகின்றார்).
ஆதி சக்தியின் வெளிப்பாடுகளான பூமி, காற்று, நீர், ஆகாயம், நெருப்பு போன்ற ஐம்பூதங்களினாலும் நம்மை வாழ வைக்கவும் முடியும் மற்றும் அழிக்கவும் முடியும் என்பதை எடுத்துக் காட்டுவது போல அல்லவா. எந்த ஆதிசக்தி அந்த பஞ்ச பூதங்களை படைத்தாளோ, அந்த சக்தியே எதற்காக அவற்றை அழிக்கிறார் என்ற கேள்விக்கு தத்துவார்த்தமாக விடை கூறுவது போல அல்லவா ஒரு சிலந்தியின் வாழ்க்கையையும் வடிவமைத்து உள்ளார். சிலந்தியின் வாழ்க்கை போலவேதான் ஆதி சக்தியும் அவரது வெளிப்பாடுகளான பூமி, காற்று, நீர், ஆகாயம், நெருப்பு போன்ற ஐம்பூதங்களினாலும் நம்மை வாழ வைக்கவும் முடியும் மற்றும் அழிக்கவும் முடியும் என்பதை நிலை நாட்டி உள்ளார். நன்மை மற்றும் தீமை போன்ற அனைத்தையும் உருவாக்குபவரும் அவரே, அழிப்பவரும் ஆதி சக்தியே என்பதால்தான் இந்த பிரபஞ்சமே நன்மை தீமைகளை கொண்ட குணாதிசயங்களைக் கொண்டதாக அமைந்து உள்ளது என்பதை கூறாமல் கூறுவது போல நல்லவர், தீயவர், விஷம் கலந்த இயற்கை பொருட்கள், பல்வேறு குணாதிசய ஜந்துக்கள், அத்தனை ஏன் விஷத் தன்மை கொண்ட மானிட மனதையும் அல்லவா உருவாக்கி அனுப்பி உள்ளார் என்பதை எத்தனை எளிமையாக குருமார்கள் மூலம் தத்தர் நமக்கு உணர்த்தி உள்ளார் என்று மனதிற்குள் எண்ணியவாறு யது குல மன்னன் வியந்தான்.
ஸ்ரீ தத்தாத்திரேயர் இன்னென்ன தெய்வங்களை துதிக்க வேண்டும், இன்னென்ன முறையில் துதிக்க வேண்டும், பூஜை செய்ய வேண்டும் என்று கூறவில்லை. ஆனால் ஆத்மன் எனும் ஆத்மாவுடன் தியான நிலையில் உன்னை இணைத்துக் கொள் கொள் என்றல்லவா கூறுகின்றார். அதாவது ஆத்மா என்பது மானிடர்களாலோ அல்லது வேறு எவராலோ படைக்கப்படவில்லை. யோகி உருவில் காட்சி தரும் பரபிரும்மனும் ஆதி சக்தியுமான ஸ்ரீ தத்தாத்திரேயர் ‘தியான நிலையில் இருந்துகொண்டு, ஆத்மா எனும் என்னுடன் இணைத்துக் கொள்’ என்று கூறாமல் கூறி தன்னை சரணடையுமாறு கூறுகின்றார். ஆத்மாவை புரிந்து கொண்டுவிட்டால் அனைத்தும் நமக்கு விளங்கும் என்பதை தியானம் என மறைமுகமாக வலியுறுத்துகின்றார். உன்னையே நீ அறிந்து கொள் எனும் வழிமுறைக்கானதல்லவா தியான நிலை. இறைவனது வெளிப்பாடான ஆத்மாவுடன் ஒருவன் தன்னை இணைத்துக் கொண்டால் படைத்தவனுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் நிலை ஏற்படுகின்றது எனும் தத்துவமல்லவா அது என்று ஸ்ரீ தத்தாத்ரேயர் கூறிய அனைத்தையும் கவனத்துடன் கேட்ட வண்ணம் இருந்தவன் கண்ணில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
மன்னன் இப்பொழுது அவரைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொண்டான். தடாலென அவர் காலடியில் விழுந்து வணங்கினான். ‘அற்புதம் , ஐயா …. அற்புதம் . இனியாவது உங்களின் இந்த மாறு வேடத்தைத் களைந்து விட்டு உண்மையில் நீங்கள் யார் என இப்பொழுதாவது கூறுங்கள்’ என மன்னன் அவரிடம் வேண்டிக் கொள்ள அவன் முன் தன் சுய உருவில் தோன்றினார் ஸ்ரீ தத்தாத்ரேயர். வாழ்க்கை என்பது என்ன, அதில் எப்படி தன்னை அடக்கிக் கொண்டு இருக்க வேண்டும் என்ற பாடத்தைப் தத்தாத்திரேயரிடம் இருந்துப் பெற்ற யதுகுல மன்னனும் தெளிவு பெற்றான். அதன் பின் அந்த மன்னனும் தத்த பக்தனாகவே மாறி வாழ்நாள் முழுவதும் மன அமைதி பெற்று வாழ்ந்து வந்தான்.
திகம்பரா திகம்பரா, ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப திகம்பரா!
திகம்பரா திகம்பரா, ஸ்ரீ தத்ததேவா திகம்பரா
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ
மூன்றாம் நாள் பாராயணம்
ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
யோகீஸ்வராய தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத்
ஸ்ரீ தத்தாத்ரேயர் ஆசி பெற்ற காத்தவீர்யன் கதை
மார்கண்டேய புராணத்தில் ஸ்ரீ தத்தாத்ரேயர் எப்படி எல்லாம் தன்னை பூஜிப்பவர்களுக்கு உதவி செய்து உள்ளார் என விரிவாக கூறப்பட்டு உள்ளது. ஆனாலும் பிரகிருதியில் (பூமி) நடந்த ஒவ்வொரு சம்பவத்திற்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. அதனால் வரங்களைப் பெற்று அழிந்தவர்களும் உண்டு, பிறர் அழியக் காரணமான சம்பவங்களும் உண்டு. ஸ்ரீ தத்தாத்ரேயர் சரித்திரத்தில் அவர் வாழ்க்கையில் முக்கியமாக பங்கு பெற்ற கார்த்தவீர்யன், பரசுராமர், மற்றும் ரேணுகாதேவி போன்றவர்களின் கதையைக் கூறாமல் இருந்தால் அது நிறைவான தத்த சரித்திரமாக இருக்க முடியாது. கார்த்தவீர்யன் கதையின் மூலமாக ஒரு பகுதியில், பரசுராமர் மற்றும் ரேணுகாதேவியின் மகிமைகளையும் ஸ்ரீ தத்தாத்ரேயர் கூறுகின்றார்.
முதலில் கார்த்தவீர்யன் என்பவன் யார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் சூர்ய குலத்தில் உதித்தவன் அவன். கிருதவீர்யன் என்ற மன்னனுக்கும், அவன் மனைவி சுகந்தை என்பவளுக்கும் பிறந்தவன் கார்த்தவீர்யன். சூர்ய நாட்டை ஆண்டு வந்தவர்கள் ஷத்திரிய வம்சாவளியினர். அவர்களின் பிற்கால சந்ததியினரே வடநாட்டில் உள்ள ஜெயஸ்வால் என்பவர்கள் என்றும் கூறுகின்றனர். அவர்களுடைய குருக்கள் பார்கவா என்ற பிராம்மண வம்சத்தினர். அவர்களை பிருகு என்றும் கூறுவர். உண்மையில் ஷத்ரியர்களும் வேதங்களை நன்கு கற்று அறிந்தவர்களே. அவர்கள் பண்டிதத்தில் பிராமணர்களுக்கு இணையானவர்கள் என்பதில் ஐயம் இல்லை. அவர்கள் கொண்டிருந்த உடல் அமைப்புக்களினால் யுத்தங்களில் சண்டை போட தகுதியானவர்களாக இருந்தனர், ஆட்சிப் பொறுப்புக்களையும் ஏற்று இருந்தனர். பண்டிதர்கள் என்ற பிராமணர்களோ அவர்களின் வழிகாட்டிகளாக இருந்தனர். சூர்ய மன்னர்கள் கொடையாளிகள். அவர்களில் முக்கியமானவர் கார்த்தவீர்யனின் தந்தையான கிருதவீர்யன் என்பவர். வீர்யன் என்பது அவர்களின் வம்சப் பெயராகவே விளங்கியது. கிருதவீர்யன் பூர்வ ஜென்மத்தில் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த சம்பன் என்பவன். அந்த ஜென்மத்தில் அவன் செய்த சில பாவங்களினால் அடுத்த ஜென்மத்தில் ஒரு புத்திரன் மூலம் அவனுக்கு சோகம் ஏற்படும் என்ற சாபத்தை ச்யவன முனிவரின் மூலம் பெற்று இருந்தார்.
அப்படி ஒரு சாபம் பெற்றவர் தன்னுடய அடுத்த ஜென்மத்தில் மகா பலசாலியாகவும் வித்வானாகவும் பிறந்தார். பெரிய நாட்டை தன் கீழ் கொண்டு வந்து ஆண்டு வந்தார். பல்வேறு யாகங்களை வெகு சிறப்பாகச் செய்து முடித்திருந்தார். சோமவேதா என்ற யாகத்தை செய்து பிருகு போன்ற முனிவர்களுக்கு நிறைய தானம் செய்தார். யமராஜனின் சபையை அலங்கரித்தவர்களில் அவரும் ஒருவர். ஆனால் அவருக்கு இருந்த ஒரே குறை, முந்தைய ஜென்மத்தில் கிடைத்து இருந்த முனிவரின் சாபத்தின் பலனாக கிருதவீர்யனுக்குப் பிறந்த எந்தக் குழந்தைகளுமே உயிருடன் இருக்கவில்லை. கிருதவீர்யனுக்கு வயதும் ஏறிக் கொண்டே இருந்தது. தனக்குப் பிறகு இத்தனைப் பெரிய நாட்டை எவரிடம் ஒப்படைப்பது என்ற கவலைப் பிறந்தது. அந்த நிலையில் அரச சபைப் பண்டிதர்களாக இருந்தவர்கள் சிலர், கிருதவீர்யன் யக்கியவால்யரிடமும் பிரகஸ்பதியிடமும் சென்று அவர்களுடைய ஆலோசனையைப் பெற வேண்டும என்று கூறினர். ஆனால் யக்கியவால்யரிடம் நேரடியாகச் சென்று அது குறித்துக் கேட்க மன தைரியம் இல்லாத அரசன் அதற்காக முதலில் தன்னுடைய மனைவியை யக்கியவால்யரின் மனைவியிடம் அனுப்பி அவளிடம் உதவி கோருமாறு அனுப்பினார்.
யக்கியவால்யருக்கோ கல்யாணி மற்றும் மைத்திரேயி என்ற இரு மனைவிகள் இருந்தனர். அவர்களில் மைத்திரேயி மகா பண்டிதம் பெற்றவள். என்ன இருந்தாலும் ஒரு மாபெரும் முனிவரின் மனைவி அல்லவா. மைத்திரேயியை சந்தித்த கிருதவீர்யனின் மனைவி அவளை வணங்கிவிட்டு அவளிடம் வந்ததிற்கான காரணத்தைக் கூறி அழுதாள். முந்தைய ஜென்மத்தில் ச்யவன முனிவரின் மூலம் பெற்ற சாபத்தினால் இந்த ஜென்மத்தில் கிருதவீர்யனுக்குப் பிறந்த எந்தக் குழந்தைகளுமே உயிருடன் இல்லை, உயிருடன் இருக்கவும் மாட்டார்கள் என்பதினால் தனக்கு பிறக்கும் ஒரு குழந்தையாவது உயிருடன் இருக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறுமாறு அவளிடம் வேண்டினாள். மைத்திரேயியும் கிருதவீர்யனின் மனைவிக்கு சில கடுமையான விரதங்களைக் அனுஷ்டிக்குமாறு அறிவுறை கூறினாள்.
அவற்றை அவள் நியமபூர்வமாக அனுஷ்டித்தால் மட்டுமே பாவ விமோசனம் பெற முடியும் என்றும் கூறினாள். அதே சமயத்தில் கிருதவீர்யனும் மாமுனிவரான பிரகஸ்பதியிடம் சென்று தான் அவரிடம் வந்ததிற்கான காரணத்தைக் கூறினார். பிரகஸ்பதியும் ஸ்ரீ தத்தாத்ரேயர் தனக்கு உபதேசித்த சூர்ய மந்திரத்தைப் பற்றி கூறி அதை உபாசனை செய்து ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட்டால் விமோசனம் நிச்சயம் கிடைக்கும் என்றார். கிருதவீர்யனும் அவன் மனைவியும் சற்றும் தயங்காமல், பிரகஸ்பதி கூறிய சூர்ய உபாசனையையும், மைத்திரேயியும் கூறிய விரதத்தையும் விதிப்பூர்வமாக செய்து முடித்தனர். அடுத்த சில மாதங்களிலேயே கிருதவீர்யனின் மனைவி கர்ப்பமுற்று ஒரு ஆண் மகனைப் பெற்று எடுத்தாள்.
ஆனால் அப்படி பிறந்த அழகான குழந்தையோ முடமாகிய கைகளுடன் பிறந்தது. இருந்தாலும் தத்தாத்ரேயரின் அருளினால் ஒரு குழந்தையாவது உயிரோடு பிறந்ததே என ஆறுதல்பட்டு அதை மகிழ்ச்சியோடு ஏற்றனர் கிருதவீரன் தம்பதியினர். குழந்தை முடமாகப் பிறந்ததற்கும் ஒரு பின்ணணிக் காரணம் இருந்தது. பூர்வ ஜென்மத்தில் அது பெற்றிருந்த ஒரு சாபமே அதற்கான காரணம். அந்தக் கதை என்ன?
முன் ஒருகாலத்தில் சுதர்சன் என்பவன் மகாவிஷ்ணுவின் சேனையில் முக்கியமான ஒரு வீரனாக இருந்தான். அந்த கால கட்டத்தில் பல்வேறு நிலைகளில் திருமால் பல அரக்கர்களை அழிக்க வேண்டி வந்தது. அந்த சமயங்களில் எல்லாம் திருமாலிற்கு பெரும் துணையாக ஆயுதங்களை ஏந்திய வண்ணம் சுதர்சனே நின்றிருந்தான். யுத்தங்களில் விஷ்ணு வெற்றி பெற்ற பொழுதெல்லாம் தன்னால்தான் அந்த வெற்றி கிடைத்தது போல பிறர் எதிரில் காட்டிக் கொண்டிருந்தான். அதை விஷ்ணுவும் மறைமுகமாக கவனித்துக் கொண்டேதான் இருந்தார். அவன் அப்படி செய்து வந்த பைத்தியக்காரத்தனமான எண்ணத்தை என்றாவது ஒரு நாள் மாற்றிக் கொள்வான் என எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தார். ஆனால் அவன் கர்வத்தைக் குறைத்துக் கொள்ளவும் இல்லை, தான் செய்து வந்த முட்டாள்தனத்தை மாற்றிக் கொள்ளவும் இல்லை. ஒரு நாள் திருமாலுக்கு கோபம் வந்தது. அவனைக் கூப்பிட்டு அனுப்பினார். ‘என் வெற்றிக்குக் காரணம் நீதான் என்று அனைவரிடமும் தொடர்ந்து பொய் கூறி வரும் உனக்கு இனி என் எதிரில் நிற்கக் கூடத் தகுதி இல்லை. ஓடிப் போ…… நீ செய்த காரியத்திற்கு அடுத்த பிறவியில் கையில்லா முடமாகப் பிறந்து மீண்டும் என்னையே சரணடைந்து என் கையாலேயே மடிவாய்’ என சாபமிட்டார். அந்த சாபத்தினால்தான் இப்போது அவனே கிருதவீர்யரன் தம்பதியினருக்கு குழந்தையாகப் பிறந்திருந்தான்.
குழந்தை வளர்ந்து பெரியவனாயிற்று. வம்சாவளிப் பெயரையும் சேர்த்து அவனுக்கு கார்த்தவீர்யன் என்று பெயர் சூட்டினார்கள். அதோடு கூட அவனுக்கு அர்ஜூனன் என்ற பெயரையும் வைத்தனர். அங்கஹீனத்தைத் தவிற வேறு எந்த குறையும் இல்லை கார்த்தவீர்யனுக்கு. மிகவும் புத்திசாலியாகவே வளர்ந்து வந்தான். காலப்போக்கில் முடமாக இருந்து வந்த காத்தவீர்யனின் கவலையில் உழன்றே தந்தை கிருதவீர்யனும் இறந்து போனான். கிருதவீர்யன் பதவிக்கு வரும் முன்பு கிருதவீர்யனின் முன்னோர்கள் அந்தணர் வம்சத்தினரருக்குப் பெரும் உதவிகள் செய்து இருந்தனர். அவர்கள் கொடுத்த செல்வத்தையும், உதவிகளையும் பெற்ற அந்தணர்கள் மெல்ல மெல்ல நல்ல நிலைக்கு உயர்ந்து ஷத்திரியர்களுக்கு இணையான செல்வந்தர்களாக ஆயினர். காலம் ஓடியது. கிருதவீர்யன் இறந்து சில காலம் கழிந்த பொழுது அந்தணர் வம்சத்தினர் செல்வம் பெருகி அவர்கள் செழிப்புடன் இருக்க, பல்வேறு காரணங்களினால் ஷத்திரியர்களின் வாழ்க்கை நலிவுற்றது. செல்வத்தை இழந்த ஷத்திரிய வம்சாவளியினர் அந்தணர் வம்சத்தினரிடம் சென்று தங்களுக்கு உதவுமாறு கேட்டனர். அந்தணர்களோ உதவி செய்ய மனமில்லாது அதற்கு மறுத்து விட்டனர். அதுவே மெல்ல மெல்ல ஷத்திரியர்கள்-அந்தணர்களின் பகை துவங்கக் காரணமாயிற்று.
ஷத்திரியர்கள் அந்தணர்களைப் பழி வாங்கத் துவங்கினர். அவர்கள் பதுக்கி வைத்து இருந்த செல்வத்தையும் பறித்துக் கொள்ளத் துவங்கினர். ஷத்திரியர்களின் கொடுமையைத் தாங்க முடியாமல் பல அந்தணர் அங்கிருந்து தப்பி ஓடிச் சென்று இமயமலை அடிவாரங்களில் வசிக்கலாயினர். அந்த நேரத்தில்தான் பிருகு வம்சத்தில் (அந்தணர்களின் இன்னொரு பெயர்) அத்ரி ரிஷியும், ஷத்திரிய வம்சத்தில் கார்த்தவீர்யனும் பிறந்திருந்தனர். ஷத்திரியர்கள்-அந்தணர்களின் இடையில் ஆரம்பம் ஆன பகை அப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
கிருதவீர்யன் இறந்த பிறகு முடமாகி* பிறந்து இருந்தவனை கிருதவீர்யனின் அமைச்சர்கள் வம்சாவளியின் பெருமையைக் காக்க இராஜ்ய பரிபாலனத்தை ஏற்கும்படி காத்தவீர்யனிடம் வற்புறுத்தத் துவங்க, முடமான தன்னால் ராஜ்ய பரிபாலனத்தை சிறப்பாக நடத்த முடியாது என்ற காரணத்தைக் கூறி அதனால் இராஜ்ய பரிபாலனத்தை ஏற்க அவன் மறுத்தான். (*முடம் என்பது இங்கு முற்றிலும் செயல் இழந்த நிலை என்பதான அர்த்தத்தில் கூறப்படவில்லை. ஒரு சராசரி மனிதனுக்கு இருக்க வேண்டிய பலத்துடன் கூடிய, உறுதியான கைகால்களை கொண்டு இருக்கவில்லை. அதாவது மெல்லிய கைகால்களுடன் மற்றவர்கள் போல முற்றிலும் இயல்பாக செயல்பட முடியாத, ஆனால் சிறிய அளவில் செயல்படும் கைகால்களைக் கொண்டு இருந்தார் என்பது பொருள்). ஆனால் அவர்களின் வாதங்களைக் கேட்ட பின் அவர்களின் கோரிக்கையைத் தட்ட முடியாமல் காத்தவீர்யன் முடமான நிலையிலும் இராஜ்ய பரிபாலனத்தை ஏற்றான். அவன் ராஜ்ய பரிபாலனத்தை ஏற்கும் முன் கிருதவீர்யனின் அமைச்சரவையில் இருந்த கர்கா என்ற முனிவர் அவனிடம் உடல் அங்கஹீனங்களினால் கவலைப்படாமல் இராஜ்ய பரிபாலனத்தை ஏற்ற பின் ஸ்ரீ தத்தாத்ரேயரை சென்று சந்தித்து அவருடைய ஆசிகளினால் விளங்காமல் இருந்த கைகளுக்கு விடி மோட்சம் பெறலாம் என அறிவுறுத்தினார். அவர் கூறிய அந்த அறிவுரைப்படி காத்தவீர்யனும் இராஜ்ய பரிபாலனத்தை ஏற்றப் பின் ஸ்ரீ தத்தாத்ரேயரை தரிசிக்க நினைத்தான்.
அப்பொழுது ஸ்ரீ தத்தாத்ரேயர் மிகவும் பிரபலமான ஒரு யோகப் புருஷராக ரிஷி முனிவர்களால் போற்றப்பட்டு வந்தவர். அதனால் உடனே சென்று அவரை தரிசிக்க விரும்பினான் கைகள் விளங்காத கார்த்தவீர்யன். கர்கா முனிவரிடம் சென்று தன் ஆசையைக் அவரிடம் கூறினான். அவரும் ஸ்ரீ தத்தாத்ரேயர் விஷ்ணுவின் ஒரு அம்சமே என்றும், நர்மதை நதியில் குளிக்க அவர் வருவது உண்டு எனவும், அப்போது அவரிடம் சென்று வணங்கிய பின் தூய மனதுடன் அவரை ஆராதித்தால் நிச்சயமாக அருள் புரிவார் என்று ஆசி கூறி அவனை அனுப்பினார். அது போலவே அவரை சந்திக்க வந்த நாரத முனிவரும் நர்மதை நதியில் பத்திரதீப பிரதிஷ்டா என்ற யாகம் செய்யும்படி கார்த்தவீர்யனுக்கு நர்மதை நதியில் பத்திரதீப பிரதிஷ்டா என்ற யாகம் செய்யும்படி கார்த்தவீர்யனுக்கு அறிவுரைக் கூறினார். ஸ்ரீ தத்தாத்ரேயர் விசித்திரமானவர் என்பதால் வந்தவர் அனைவருக்கும் உடனேயே தரிசனம் தந்து ஆசி கூறியதில்லை. வேண்டும் என்றே வந்தவர்களை சோதிக்க எண்ணி அவர்கள் வரும் பொழுது பலமுறை ஆடைகள் கலைந்த நிலையிலும், இறைச்சியை கழுத்தபடி, கள்ளும் குடித்த வண்ணம், பல பெண்களுடன் சல்லாபம் செய்தபடியும் தோன்றுவார். ஸ்வாமி ஆடுவது நாடகமே, நம்மை சோதிக்கின்றார் என விடாப் பிடியாக நின்றால் ஒழிய அவருடைய ஆசிகளைப் பெற முடியாது என கர்கா முனிவரும் மற்றவர்களும் கார்த்தவீர்யனுக்கு தத்தாத்ரேயரைப் பற்றி கூறி இருந்தனர்.
கார்த்தவீர்யனுக்கு சுமார் பன்னிரண்டு வயது ஆனபொழுது அந்த முனிவர்களின் அறிவுரைப்படியே நர்மதை நதிக்குச் சென்று குளித்து விட்டு ஹோமம் செய்து முடித்த பின் நர்மதை நதியின் கரையில் ஸ்ரீ தத்தாத்ரேயர் இருந்த இடத்தைத் தேடி அலைந்தான். ஒரு வழியாக மலையின் அடிவாரத்தில் இருந்த ஸ்ரீ தத்தாத்ரேயர் ஆசிரமத்தை அடைந்தான். அவனுக்கு மற்றவர்கள் கூறி அனுப்பியபடியே தத்தரும் அலங்கோலமான நிலையில் இருந்தாலும் அவரை சென்று சரணடைந்து அவருக்கு சேவைப் புரிய தன் மனம் விரும்புவதாகவும் அவருடைய அருள் தனக்குத் தேவை எனவும் பலவாறு அவரை துதித்தான். அவன் வந்த காரணம் தத்தருக்குப் புரியாதா என்ன, ஆனாலும் அவனை சோதிக்க வேண்டும் என அவர் விரும்பினார். அப்பொழுதுதான் அவரிடம் வரும் மற்றவர்களுக்கும் தன்னிடம் வருபவர்கள் தீவிரமான பக்தி கொண்டு வந்தால்தான் அவர்களை தான் ஏற்றுக் கொள்வேன் என்பதைப் புரிய வைக்க முடியும் என்பதை மனதில் கொண்டு நாடகத்தைத் துவக்கினார்.
பாவம், வந்துள்ளவன் கை கால்கள் விளங்காமல் உள்ளவன். அவன் கஷ்டப்படுகின்றானே எனவும் யோசிக்கவில்லை. இதை செய், அதை செய் என ஓயாமல் பல வேலைகளைச் செய்யுமாறு கூறினார். கார்த்தவீர்யனும் லேசுப்பட்டவன் அல்ல. தன்னால் முடிந்த அளவிற்கு அவர் இட்ட அத்தனை வேலைகளையும் அவருக்குச் செய்யலானான். கால்களைப் பிடித்து விடுவது, மலர்கள் பறித்து வருவது, காய் கனிகளை கொண்டு வருவது என அத்தனை வேலைகளையும் முகம் சுழிக்காமல் செய்தான். நடு நடுவில் ஸ்ரீ தத்தாத்ரேயர் அவனை வாய்க்கு வந்தபடி கண்டபடி திட்டுவார். அனைத்து உணவையும் தானே அருந்தி விடுவார். மிச்சம் இருந்தால் மட்டுமே அவன் உணவு அருந்துவான். இப்படியாக சில காலம் நாடகமாடிக் கொண்டு இருந்த வண்ணம் அவன் மனதை சோதித்துக் கொண்டிருந்தவர், அவனை எத்தனைக் கொடுமைப்படுத்தினாலும் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையையோ பக்தியையோ சற்றும் குறைத்துக் கொள்ளாமல் தனக்கு பணி விடைகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்ததைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அவனுடைய அங்கஹீனத்தைக் கண்டு மனமும் வருந்தினார்.
அவனிடம் இருந்த பவ்யமான குணத்தையும், அவனுடைய தந்தையின் பிறவி பற்றியும் புரிந்து கொண்டிருந்த தத்த ஸ்வாமிகள் ஒரு நாள் அவன் முன் சென்று தன் சுய உருவைக் காட்டி அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதை எதிர்பார்த்துக் காத்திருந்தவன்போல தன் இரு கைகளையும் கூப்பிக் கொண்டு அவர் பாதங்களில் விழுந்து வணங்கியபடிக் கேட்டான் ‘ஸ்வாமி, இன்றுதான் என் வாழ்வில் வசந்தம் வீசுகின்ற நாள் என நினைக்கின்றேன். எனக்கு என் குடி மக்களை காப்பாற்றுவது முதல் கடமை. ஆனால் அதை செய்ய முடியாமல் இந்த அங்கஹீனமான கைகள் என்னைத் தடுக்கின்றன. அதனால் அங்கஹீனமானவனாக உள்ள எனக்கு ஆயிரம் கைகளையும், திடமான கால்களும் கொடுக்க வேண்டும். என்னை எதிர்ப்பவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் தோற்று ஓட வேண்டும். என் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே தீமைகள் செய்வோரும், ஏன் அந்த தீமைகளுமே கூட ஓடி ஒளிய வேண்டும். செல்வத்துக்குக் குறை வரக் கூடாது. என்னை நல் வழியில் நடத்திச் செல்ல நற்குணங்கள் கொண்டவர்களின் துணை என்றும் எனக்கு இருக்க வேண்டும். நான் என்றும் இளமையுடனும் இருக்க வேண்டும். நான் தர்ம வழியில் இருந்து தவறி செல்லும் கால கட்டத்தில் என்னை விட பலசாலியும் பெருமை மிக்கவனால் மட்டுமே என் உயிரை பறிக்க முடியும் என்பதான வரங்கள் வேண்டும்’ என்றான். அப்படிப்பட்ட வரங்களைத் தந்து தன்னைக் காத்து அருளும்படி அவரிடம் வேண்டி நின்றான்.
ஸ்ரீ தத்தாத்ரேயரும் அவன் கேட்ட அனைத்து வரங்களையும் தயங்காமல் தந்தார். கூடவே அவன் மானிடப் பிறவியில் இருந்தாலும் எங்கும் சென்று வர ஒரு விசேஷமான தேர் ஒன்றையும் அவனுக்குத் தந்தார். கை, காலில்லாமல் பிறந்த கார்த்தவீர்யன் இப்படியாக தத்தாத்திரேயரிடம் வரமும் உபதேசமும் பெற்றான். அவற்றைப் பெற்றுக் கொண்டு மனம் மகிழ்ந்து திரும்பி வரும் பொழுது வழியில் ஒரு அசரீரி கூறியது ‘அதிகம் இறுமாப்புக் கொள்ளாதே மூடனே, நீ பெற்ற வரங்களுக்குக் காரணம் அந்தணர்களே என்பதை மறந்து விடாதே. அவர்கள் துணை இன்றி ஷத்திரியன் நீ நாட்டை ஆள முடியாது என்பதைப் புரிந்து கொள்’. இது என்ன அபசகுனமாக இருக்கின்றதே என ஒரு கணம் கலங்கினான் கார்த்தவீர்யன். சற்று யோசனை செய்தவனுக்கு தோன்றியது. தன் மீது உள்ள பொறாமையினால் வாயு பகவான்தான் அந்த செய்தியை கூறி இருக்கின்றார். எனவே அதை மனதில் இருந்து ஒதுக்கி விட்டு நடந்தார்.
அதன் பின் கார்த்தவீர்யன் அடிக்கடி ஸ்ரீ தத்தாத்ரேயரை சென்று வணங்கி அவருடைய ஆலோசனைகளைக் கேட்டறிந்தபடி மிக உயர்வான நிலையில் ராஜ்ய பரிபாலனம் செய்து கொண்டிருந்தான். கார்த்தவீர்யன் ஆட்சி செய்த நாட்டின் பெயர் மகிஷ்மதி என்பது. கார்த்தவீர்யன் 85000 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நாட்டை ஆண்டவன் என்பார்கள். இவனுக்கு அர்ஜூனன் என்றும் பெயர் உண்டு. அதனால்தான் ஸ்ரீ தத்தாத்ரேயர் சரித்திரத்தில் ஸ்ரீ தத்தர் அவனை அர்ஜூனா என அழைப்பதைக் காணலாம். அவன் ஆட்சியில் குறைகள் ஒன்றுமின்றி ஜனங்கள் வாழ்ந்து வந்தனர். தேவ முனிவர்கள் அவனிடம் மிகவும் அன்பும் மரியாதையும் வைத்து இருந்தனர். தான தர்மங்களை தம் மூதாதையோர் செய்ததை விட அதிகம் செய்தான். அநீதி நடந்த இடங்களுக்குத் தானே சென்று அவற்றை அடக்கினான். எளியவர்களை வலியோர் கொடுமை படுத்துவதைத் தடுத்தான். அப்படிப்பட்ட நிலைமை அவன் ஆண்ட பூமி முழுவதும் இருந்து கொண்டு இருக்க மக்களோ கடவுள் என்றாலே கார்த்தவீர்யன் என்று சொல்லும் அளவுக்குச் சென்று விட்டனர். இப்படியாக நல்ல ஆட்சி நடத்தி வந்தவன் மீது பொறாமைக் கொண்ட இராவணனன் திக்விஜய யாத்திரை என்ற பெயரில் பல இராஜ்ஜியங்களை வென்றபடி காத்தவீர்யன் இருந்த இராஜ்யத்திற்கும் வந்து அவனுடன் போரிட ஆயத்தமானான். மகா பலசாலி என கருதப்பட்ட இராவணணின் அகங்காரத்தை அடக்க வேண்டும் என்று எண்ணி அவனுடன் கார்த்தவீர்யனும் போரிடச் சென்றான்.
ஆனால் இராவணன் அப்போது நாட்டில் இல்லை. சிவ பூஜை செய்ய ஆற்றங்கரைக்குச் சென்று இருந்தான். அதே நதியில் கார்த்தவீர்யனும் குளிக்கச் சென்றான். வேண்டும் என்றே சிவ பூஜை செய்து கொண்டிருந்த இராவணன் அமர்ந்து இருந்த பக்கமாக தன்னுடைய ஆயிரம் கைகளால் ஒரு அணைக்கட்டைப் போன்று தேக்கி வைத்திருந்த தண்ணீரை விடுவித்தான். அவ்வளவுதான். இராவணனின் சிவ லிங்கம் அந்த தண்ணீரில் மூழ்கியது. பூஜை நின்றது. இதனால் கடும் கோபமுற்ற இராவணனும் கார்த்தவீர்யன் மீது போர் தொடுத்தான். கடுமையாக நடந்த போரில் ஸ்ரீ தத்தாத்ரேயர் ஆசி பெற்று சிவ பெருமானின் பக்தரான இராவணனை வென்று சிறை பிடித்தான். அதன் பின் புலத்தியர் என்ற முனிவரின் வேண்டுகோளை ஏற்று சிறை பிடித்த இராவணனை விடுவித்தான்.
இன்னும் காலம் ஓடியது. கார்த்தவீர்யன் மனம் தளராமல் தன் கடமைகளை செய்தவண்ணம் மக்களின் நலனையே மனதில் வைத்துக் கொண்டு இராஜ்யத்தை ஆண்டு வந்தான். தத்தாத்ரேயரின் அனகாஷ்டமி விரதத்தை நாடு முழுவதும் அனுசரிக்கும்படி கட்டளை இட்டான். நேரம் கிடைத்த பொழுதெல்லாம் தத்தரின் ஆசிரமத்துக்குச் சென்று பல மணி நேரம் அமர்ந்து கொண்டு அவரை பூஜைப்பான். ஆனாலும் மெல்ல மெல்ல மனதுக்குள் இனம் புரியாத வகையில் ஒரு துயரம் தோன்றலாயிற்று. நமக்கு இல்லாதது இல்லை, இனி என்ன இருக்கின்றது இந்த வாழ்வில் என்று எண்ணத் தொடங்கினான். வாழ்க்கையின் தத்துவம் என்ன என்ற பெரும் கேள்வி மீண்டும் மீண்டும் மனதில் தோன்றியது. விடை கிடைக்கவில்லை. வயது ஏற ஏற வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டது. துறவறத்தை ஏற்று அனைத்தையும் துறந்து விட்டு தத்தரிடமே சென்று விடலாம் என மனதில் ஆசை எழும்பியது. உடனே சென்று ஸ்ரீ தத்தரை பார்க்க வேண்டும் என மனம் விரும்பியது. கிளம்பி விட்டான்.
ஸ்ரீ தத்தாத்ரேயர் ஆசிரமத்தை அடைந்தவன் முதல் முறையாக அவர் தன்னுடைய கண்களை மூடியபடி தியானத்தில் அமர்ந்து இருப்பதைக் கண்டான். தியானத்தில் இருக்கிறாரா, இல்லை ஏதும் யோசித்தபடி அமர்ந்து இருக்கிறாரா?, என்று புரியாமல் குழம்பினான். யாரைக் கேட்பது? அந்த நேரத்தில் எவருமே அங்கு இல்லை. போகட்டும், ஸ்வாமிகள் கண் விழிக்கும்வரை இருந்து அவரை மனதார கண்டு களிக்கலாம், அவரையும் அதுவரை அவரை தொழுது கொண்டு இருக்கலாம் என்று எண்ணியவன் அவர் எதிரே அமர்ந்தபடி தியானித்தபடியும், பூஜை செய்தும், ஆராதித்தும், நமஸ்காரம் செய்தும் பொழுதைக் கழித்தான். அன்று முழுதும் தத்தர் கண் விழித்துப் பார்க்கவே இல்லை. அதனால் மனதில் பெரும் துயருற்றவன் அவரைத் தோத்திரம் செய்யலானான்.
‘தேவா உனக்கு என் வணக்கம், ஞானத்தைத் தந்து அகங்காரத்தை அழித்தவரே உமக்கு என் வணக்கம். நீர் சச்சிதானந்த ஸ்வரூபம்,…….முனிவர்களாலும், ரிஷிகளாலும் கூட புரிந்து கொள்ள முடியாத உம்மை மாயையான உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கும் நான் எப்படிப் புரிந்து கொள்ள இயலும் என்பதை அறிந்து கொள்ளாத ஜடம் அல்லவா? நான் …….அதனால்தான் உன் பாதங்களில் இப்போது சரணடைந்து விட்ட என் வணக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் பரப்பிரும்மனே……சம்சார வாழ்வில் இருந்து விடுதலைக் கோரி உன்னிடம் வந்துள்ள இந்த அபலைக்குக் கை கொடுத்து கரை ஏற்று பிரபுவே…….கேட்ட அனைத்தையும் அள்ளித் தந்தாய் ……. நான் கேட்டேன், ……. நீ கொடுத்தாய் …….ஆனால் பிரபு எல்லாமே உள்ள இந்த வாழ்வு ஒரு மாயை என்பதைப் புரிந்து கொண்டு உன்னிடம் சரணடைய வந்துள்ள என்னை ஆசிர்வதித்து இந்த சம்சாரம் என்கிற கடலில் இருந்துக் கரை ஏற்றுவாயா?…….தயாநிதியே……. தாமரைக் கண்ணா,……. யோகிகளுக்கெல்லாம் மகா யோகியாக உள்ளவரே, நீங்கள் இன்றி நாங்கள் இல்லை……. உம்மிடம் அடைக்கலமாகி வந்திருக்கும் இந்த எளிய பக்தனை கண் திறந்து பார்த்து ஆசிர்வாதம் செய்வீர்களா? இறைவனுக்கும் இறைவனாவனே’ என்றெல்லாம் பலவாறு பிரார்த்தித்துக் கொண்டு இருந்தும் ஸ்ரீ தத்தர் கண்களைத் திறக்கவே இல்லை.
மறுநாள் எங்கிருந்தெல்லாமோ முனிவர்கள், ரிஷிகள் என்ற பலர் அங்கு வந்து தத்தரை வணங்கி விட்டுச் சென்றனர். வந்தவர்கள் மாபெரும் முனிவர்கள், ரிஷிகள். அவர்கள் காத்தவீர்யனை ஒரு பொருட்டாக கருதவும் இல்லை, அவனிடம் எதுவும் கேட்கவும் இல்லை. ஆனாலும் கார்த்தவீர்யன் மனம் தளராமல் அங்கேயே ஒரு மூலையில் தனியாக நின்றிருந்தபடி இருந்தான். திடீர் எனக் கண் விழித்த தத்தரோ அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் வேறு இடத்தில் சென்று அமர்ந்தார். எங்கிருந்தெல்லாமோ வந்திருந்த முனிவர்கள், ரிஷிகளுடன் சேர்ந்து கொண்டு நதிக் கரைக்குச் சென்றார். அங்கு ஸ்நானம் செய்த பின் தினசரி செய்யும் பூஜைகளை முடித்த பின் மீண்டும் தன் இருக்கையில் வந்து அமர்ந்தார். கார்த்தவீர்யன் இன்னமும் ஒரு மூலையில் கண்களில் நீர் வழிய நின்று கொண்டுதான் இருந்தான். எதேச்சையாக அவன் பக்கம் திரும்பிய ஸ்ரீ தத்தர் அவனை தன் அருகில் அழைத்தார். என்ன வேண்டும், என செய்கையிலேயே கேட்டதுதான் தாமதம் பொல பொல என்று கண்களில் ஆறு போல கண்ணீர் வழிய அவர் காலடியில் விழுந்தான் காத்தவீர்யன்.
அவனை தன் கரம் கொடுத்து எழுப்பினார். எழுந்தவனை ‘ஊம்………..ம்……..கூறு…… இன்னும் என்ன வேண்டும், என்ன கேட்க வந்துள்ளாய்’ என்று கேட்டதும் எழுந்த கார்த்தவீர்யனும் கூறத் துவங்கினான் ‘ஸ்வாமி, இந்த எளியவனுக்கு இன்னும் என்ன வேண்டும், என்ன கொடுக்காமல் விட்டு இருந்திருக்கின்றீர்கள்?…… கேட்ட அனைத்தையுமே தந்து விட்டீர்கள்……இனி மேலும் கேட்டால், நான் மகா பாவி ஆகி விடுவேன். இந்த உலகில் உங்கள் கருணையினால், உங்கள் அருளினால் எத்தனை அனுபவிக்க வேண்டுமோ அத்தனையும் அனுபவித்து விட்டேன், செல்வத்துக்கு குறையில்லை, என் பலத்துக்கும் குறை இல்லை. ஆனாலும் மனதில் ஒரு சலனம்……ஆசாரம், நியமனம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சாஸ்திரங்களை கோடிட்டுக் காட்டி அதை செய், இதை செய் என்று கூறுகின்றனரே. அப்படி என்றால் எந்த ஆசாரங்களைத்தான் நாங்கள் கடை பிடிப்பது? ஒருபுறத்தில் உங்களையே பரப்பிரம்மம் என்றும் கூறுகின்றனர். ஆனால் நீங்களோ ஆசாரங்களை மீறியவாறு காட்சி தருகின்றீர்கள். நான் வந்த பொழுது கூட நீங்கள் தியானத்தில் இருந்தீர்கள். அப்படி என்றால் பரப்பிரம்மம் எனப்படும் நீங்கள் யாரைக் குறித்து தியானத்தில் இருந்தீர்கள்? உங்களையும் விட மேலானவர் இந்த உலகில் வேறு எவர் இருக்க முடியும், மோட்சத்தை அடைய என்னதான் வழி உள்ளது? இவற்றை எனக்கு விளக்கி விட்டால் போதும் ஸ்வாமி, நான் அனைத்தையும் துறந்து விட்டு எங்காவது சென்று உம்மை பிரார்த்தித்தபடி தியானம் செய்தபடி அமர்ந்து கொள்வேன்’ என்றான் .
ஸ்ரீ தத்தாத்ரேயர் முகத்தில் ஒரு பெரிய ஒளி தோன்றியது. சுற்றி நின்ற முனிவர்கள், ரிஷிகள் அனைவரும் ஸ்ரீ தத்தாத்ரேயர் என்ன கூறப் போகின்றார் என ஆவலுடன் அவரை நோக்கி கைகளை கூப்பிய வண்ணம் நின்றிருந்தனர். ஸ்ரீ தத்தாத்ரேயர் மெல்ல கூறலானார் ‘அர்ஜூனா, நீ இன்றுதான் உண்மையிலேயே என் மனதில் அதிக இடத்தைப் பெற்று நிற்கின்றாய். நீ வந்தது முதல் உன்னை நான் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். உன் வாயில் இருந்து வெளிவந்த அத்தனை தோத்திரங்களையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். நான் யாரைக் குறித்து தியானத்தில் இருந்தேன்? என்னையும் விட மேலானவர் யார் இருக்கின்றார்?, என்பதையோ ஒரு சரியான தருணத்தில் கூறுவேன். அதற்கான காலம் இன்னமும் வரவில்லை. அது ஒரு தனிக் கதை. இப்போதைக்கு நான் கூற விரும்புவது இதுவே. நான் தியானித்தது என்னுள் இருக்கும் ஆத்மாவையே. உன்னுடைய மற்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் வேண்டுமாயின் அதற்கு சில கதைகளை நீ தெரிந்து கொள்ள வேண்டும்’ என்றார். ஒருவன் எப்படி வாழ்ந்து கொண்டு இருந்தாலும், எதிலும் மயங்கிவிடாமல் அவனவன் காரியங்களை அவனவன் மனச் சாட்சிக்கு நியாயமாகப்படும் வகையில் நீதி நியதி பிறழாமல், செய்யும் காரியங்கள் ஒவ்வொன்றையும் செய்து வந்தால், அவை அனைத்தும் ஒருவனைத் தானாகவே மோட்சத்திற்கு செல்லும் வழியில் கொண்டு சென்று விடும்’ எனக் கூறியவர் அவற்றினை விளக்கும் சில உதாரணக் கதைகளையும் அவனுக்குக் கூறினார்.
‘மேலும் கூறினார் ‘அர்ஜூனா நான் கூறியவற்றை நன்கு கிரகித்துக் கொண்டாயா , சந்தேகங்கள் தோன்றுவது இயற்கை. அதுவும் நீ கேட்ட விளக்கங்களுக்கு நான் உனக்காகக் கூறும் கதைகள் வெறும் கதைகள் அல்ல. நாம் உடல் அல்ல, ஆன்மா என்பதை புரிந்து கொள்வதற்காகவும், ஆன்ம நலத்தை பாதுகாக்க, சொல்லப்பட்ட விளக்கங்கள். இந்த பூமியில் உள்ள அனைத்துமே ஒரு மாயை. இருட்டில் அமர்ந்து கொண்டு வெளிச்சத்தை தேடி அலையக் கூடாது. நாம் எதை நினைத்துப் பார்கின்றோமோ அது அதுவாகவே தெரியும் மனப்பக்குவத்திற்கு போக நன்கு பழகிக் கொள்ள வேண்டும். ஒரு குரு நமக்கு உபதேசித்ததை, வேத வாக்கியங்களை முழு மனதுடன் கேட்டும், அதை ஆராய்ந்தும், குரு உபதேசித்ததை எல்லாம் தியானம் செய்த வண்ணமும் இருந்தபடி, மனதை தூய்மையாக வைத்திருக்கக் கற்றுக் கொண்டு, பற்றற்ற நிலையில் வாழ்ந்து பார். ஆத்மா மட்டுமே தெரியும். ஆத்மாவை உணரும் பொழுது அனைத்து விளக்கங்களையும் உணர முடியும்.
ஸ்ரீ தத்தாத்ரேயர் கூறிய அனைத்தையும் கேட்ட கார்த்தவீர்யன் ‘ஸ்வாமி இன்று நீங்கள் கூறிக் கொண்டே இருந்த பொழுது எனக்குக் கிடைத்த ஆனந்தத்தை என்ன என்று சொல்வது, எப்படி விவரிப்பது?, என்றே தெரியவில்லை. ஆனாலும் குருதேவா, நீங்கள் எனக்கு முன்னர் உபதேசித்ததை முழுமையாக புரிந்து ஆயுளுக்கும் ஆனந்தத்தை அடைய முடியாமல் என் உள்ளம் தவிக்கின்றதே என்ன செய்யட்டும்?, மகா பிரபுவே’ என கண்களில் நீர்மல்க கேட்டான் கார்த்தவீர்யன்.
ஸ்ரீ தத்தாத்ரேயர் கூறினார் ‘அர்ஜூனா, காதில் கேட்டவை, மனதில் பதியாததின் காரணம், அலை பாயும் மனமே…… முதலில் மனதை அடக்க வேண்டும். அதற்கான வழி என்ன எனில் பிராணாயாமத்தை முழுவதும் கற்க வேண்டும். பிராணன் என்பது நம் உயிர். அதைக் கட்டுப்படுத்தி விட்டு நாம் விரும்பும்படி மட்டும் அதை செல்ல விட்டால் நம் மனதும் அடங்கும். ஒரு வண்டி சக்கரத்துக்கு அச்சாணி போல ஒருவன் மனதுக்கும் பிராணன் உள்ளது. அதைக் கட்டுப்படுத்தி விட்டால் மனது தானாகவே கட்டுப்பட்டு விடும். பிராணனை எப்படி அடக்குவது? அதற்கு பிராணாயாமம் செய்ய வேண்டும். பிராணாயாமம் என்பது நம் உடலுக்குள் செல்லும் காற்றை அடக்கி ஆள்வது. அதை வெற்றிகரமாகச் செய்தால் முதல் படியை கடந்து விடுவோம். அதற்குப் பிறகு தன்னுடைய குரு உபதேசித்ததை எல்லாம் மீண்டும் மீண்டும் மனதில் நிலைப் படுத்திக் கொள்ளும் பொழுது தியான நிலையை எட்டுகின்றோம். அந்த தியான நிலையை அடைந்த பின், நான் ஆத்மா நான் பிரம்மம் என்ற பிரவாகத்தை மனதுக்குள்ளே ஏற்படுத்திக் கொண்டே இருந்தால் அத்தனை சித்திகளும் தாமாகவே உன்னை வந்து அடையும். சலனமற்ற நிலையில் நீயும் இருப்பாய். சில நாட்களிலேயே ஜீவன் முக்தி அடைவாய். இப்பொழுது நீ பற்றற்ற வாழ்க்கையில் இருந்து கொண்டு இருப்பதாகக் கூறுகின்றாய். உனக்குள் உள்ள அலை பாயும் மனதிற்கு நிம்மதி வேண்டும் என்கின்றாய். இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு அல்லவா உள்ளது. உனக்கு மன நிம்மதி வேண்டும் எனில் அதற்கு நீ ஒன்று செய்ய வேண்டும். புனிதமான இந்த மலையில் தனிமையாக உள்ள குகைக்குள் சென்று நான் உபதேசித்தவற்றை மனதிலே கொண்டு ஏகாந்தமாக இருந்த வண்ணம் தவமிரு. அதன் பின் நீ சமாதி நிலையை அடைவாய்’ என்று கூறி விட்டு அவன் தலை மீது தன் கையை வைத்து ஆசி கூறினார். அவருடைய ஆசியை பெற்றுக் கொண்டு எழுந்தவன் எதிரிலே தெரிந்த மலை குகைக்குள் சென்று தவமிருக்கலானான்.
பல மாதங்கள் கடந்தன. தியானம் சற்றே கலைந்தது. மீண்டும் ஸ்ரீ தத்தாத்ரேயரிடம் சென்று அவரை வணங்கினான். இப்பொழுது எப்படி இருக்கின்றது? எனக் கேட்ட தத்தரிடம் ’பேரானந்த உலகில் இருந்தேன், ஆனால் மீண்டும் தடங்கல் ஏற்பட்டு விட்டது ஸ்வாமி. அதனால் மீண்டும் உங்கள் ஆணையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் ஸ்வாமி’ என்றவனை மீண்டும் அதே குகைக்குச் சென்று இன்னமும் சிறிது காலம் தவத்தில் இருக்குமாறு கூறி அனுப்பினார் ஸ்ரீ தத்தர். சிறிது காலம் சென்றது. மீண்டும், மீண்டும் இடையிடையே பலமுறை வெளி வந்தான் கார்த்தவீர்யன். ஒவ்வொரு முறையும் அவன் வந்த பொழுது அவனை மீண்டும் சென்று தவத்தைத் தொடருமாறுக் கூறி அனுப்பினார் தத்தர். இப்படியாகப் பல காலம் கடந்த பின் ஒரு முறை தவம் கலைந்து இடையே வந்தவனை மீண்டும் சென்று தவத்தைத் தொடர அறிவுறுத்தாமல் நாடு திரும்பி தர்ம வழிப்படி இராஜ்ய பரிபாலனம் செய்யுமாறு கட்டளை இட்டார். தான் செய்த தவத்தினால் இன்னமும் அதிக மனபலம் பெற்ற கார்த்தவீர்யன் நாடு திரும்பினான், நல்லாட்சி செலுத்தி வரலானான்.
எவ்வளவு சிறந்த மனிதனாக ஒருவன் இருந்தாலும், ஞானம் பெற்றாலும் காலப் போக்கில் தான் என்ற அகங்காரம் மெல்லத் தோன்றத் துவங்கும் என்பதே உலக நியதி. கார்த்தவீர்யன் மட்டும் இதில் எப்படி மாறுபட்டு இருக்க முடியும்? எது வேண்டாம் என நினைக்கின்றோமோ அதுதான் நம்மை ஆக்ரமிக்கும். கர்வம் கூடாது என அவன் நினைக்க நினைக்க அந்த கர்வமே அவன் மண்டையில் நிற்கலாயிற்று. அரச சபை நடவடிக்கைகளில் பண்டிதர்களின் தர்க்கங்களை உன்னிப்பாகக் கேட்டான். அந்தணர்களின் கேள்விகள், மற்றும் அவர்களுடைய வாதங்களை கவனித்தான். அவன் மனம் எண்ணலாயிற்று. இவர்கள் கூறுவது அனைத்தும் எனக்கே புரிகின்றது. வேதங்களை வைத்துக் கொண்டு அவரவர்களுக்கு தோன்றிய எண்ணங்கள் படி தர்க்கமும் வாதமும் செய்து கொண்டிருப்பதால், வேதமே ஒரு குழப்பமான ஒன்றாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அந்த வேதங்களை நான் ஏன் படிக்க வேண்டும், அந்தணர்கள் காலையில் எழுந்து அதை செய், இதை செய் என ஆயிரம் கர்ம அனுஷ்டானங்களை கூறுகிறார்களே.
மகா ஸ்நானம் அது இது என பல்வேறு புண்ணிய நதிகளில் சென்று நிஷ்டா நியமங்களுடன் குளித்துவிட்டு வருகின்றார்களே, அப்படி எல்லாம் செய்யும் அவர்கள் என்ன பெரிய சுகமான வாழ்வை பெற்று விட்டார்கள்? எத்தனை வேத பண்டிதர்கள் யாசகம் செய்த வண்ணம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் நான் என்ன பெரிய கர்ம நிஷ்டங்களை அனுசரித்தா தத்தரிடம் இருந்து இத்தனை சக்திகளையும் பெற்றேன்? இத்தனை விரதங்கள், நியமனங்களை அனுஷ்டிக்கும் அந்த அந்தணர்களும், எந்த விதமான விரதங்களையும், நியமனங்களையும் அனுஷ்டிக்காத என்னிடம் அல்லவா யாசித்தபடி இருக்கிறார்கள். அவர்களை விட நான் என்ன தாழ்ந்து விட்டேன்?’ என்றெல்லாம் எண்ணத் துவங்கியவன் மனதில் அந்தணர்கள் பற்றி இருந்த நல்ல அபிப்பிராயம் களங்கப்படத் துவங்கியது.
ஒரு முறை ஸ்ரீ தத்தாத்ரேய ஸ்வாமிகளின் தரிசனத்திற்குச் சென்றவன் தன் மனதில் எழுந்த அந்த சந்தேகங்களைக் குறித்து அவரிடமே கேட்டு விட்டான். “மகா பிரபோ…… அந்தணர்கள் அனைவரும் மகா ஸ்நானம், மகா ஸ்நானம், என்று இந்த நதியில் குளி, அந்த நதியில் குளி என்று எல்லாம் கூறுகின்றார்களே, உண்மையில் நதிகளுக்கு அத்தனை சக்தி உள்ளதா?’. சிரித்தபடியே ஸ்ரீ தத்தஸ்வாமி அவனுக்கு நதிகளின் பெருமைகளையும், அதில் குளிப்பதால் ஏற்படும் பலன்களையும் விவரமாக எடுத்துக் கூறிய பின், பல கதைகளையும் அதற்கு ஆதாரமாகக் கூறி அவன் மனதில் எழுந்த சந்தேகங்களுக்கு விடை கூறினார். ஆனால் அவற்றை அவனுடைய உள் மனம் ஏற்கவில்லை. ஸ்வாமிகள் கூறி விட்டதால் அவைகளை மீறவும் முடியவில்லை. ஸ்வாமிகளின் அருள் தனக்கு இருப்பதால் வேறு எதுவுமே வேண்டாம் என்றே மனது எண்ணியது.
வீடு திரும்பிய அவன் சுய அறிவோடு ஒருவன் சிந்தித்தால் தக்க விடை கிடைக்கின்றதே என நினைக்கத் துவங்கினான். அந்த மாதிரி நினைக்கத் துவங்கியதுமே அந்தணர்கள் அனுஷ்டிக்கும் அனைத்துமே ஒரு மாயைப் போலத் தோன்றலாயிற்று. அதே நேரத்தில் அவனை சுற்றி இருந்த மற்றவர்களுக்கோ அவன் உயர்ந்த நிலையில் இருந்ததினால் அவன் மீது பொறாமை ஏற்பட்டது. அவனைக் கவிழ்க்க தக்க தருணம் பார்த்துக் காத்துக் கிடந்தனர்.
இப்படி ஒரு மன மாற்றம் கொண்டு வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கையில் ஒருநாள் அவனுடைய அரச சபையில் அந்தணர்களைப் பற்றி வேண்டாத விவாதம் துவங்கியது. என்றும் இல்லாமல் அன்று பெரும் கோபம் கொண்ட மன்னன் கார்த்தவீர்யன் ஒன்றுமற்ற விவாதத்தில் எதை எதையோ அந்தணர்களுக்கு எதிராகப் பேசினான். அதற்கு முன் அவன் அந்தணர்களை அப்படி அவமானப் படுத்தும் வகையில் பேசியதே இல்லை.
நடுச் சபையில் தங்களை அவமதிக்கும் முறையில் அவன் பேசுகின்றானே என அந்தணர்கள் மனம் வருந்தினர். மற்றவர்கள் அந்தணர்களை எக்காளத்துடன் பார்க்க, தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருக்கும் நிலைமை அந்தணர்களுக்கு ஏற்பட்டது. அதுவே தக்க தருணம் என்று காத்திருந்தது போல வாயு பகவான் எவர் கண்களிலும் புலப்படாத தோற்றத்தில் அவன் முன் தோன்றி அவன் நடந்து கொண்ட விதத்தை கடுமையாகக் குறை கூறினார். ‘ஒன்றும் இன்றி சரீரப் பிண்டமாக கிடந்து இருந்த உனக்கு வஷிஷ்டர், பிருகு, காஷ்யபர், அத்ரி என பல முனிவர்களுக்கு இணையாக இத்தனைப் பெரிய வாழ்வு தந்தாரே ஸ்ரீ தத்தாத்ரேயர் அது மறந்து விட்டதா? அது மட்டும் அல்ல, ஸ்ரீ தத்தாத்ரேயர் உனக்குக் கொடுத்த அத்தனை புத்திமதிகளையும் மீறி, இன்று அவையில் அந்தணர்களை அவமானப் படுத்தும் முறையில் நீ பேசியது இத்தனை நாளும் காத்து வந்த அனைத்து நற்பண்புகளையும் காற்றோடு பறக்க விட்டு விட்டது. நீ அப்படி நடந்து கொள்வாய் எனத் தெரியாமல் உன்னை வளர்த்து விட்டும், உன் உண்மையான மன நிலையைத் தெரிந்து கொள்ளாமல் உன்னை அந்தணர்களுக்கு இணையாக இத்தனைப் பெரிய நிலையில் ஏற்றியும் விட்டுள்ள அந்த ஸ்ரீ தத்தாத்ரேயர்தான் உன் இந்த மாறுதலைக் கண்டு அவமானப்பட வேண்டும்’ என அவனை உசுப்பி விட்டார்.
ஸ்ரீ தத்தாத்ரேயர் பெயரைக் கேட்ட உடனேயே கார்த்திவீர்யன் மனம் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தது. தான் செய்த பிழைக்கு தன் குருநாதர் எப்படி பொறுப்பேற்பார் என நினைத்தவன் சற்றும் தயங்காமல் எழுந்தான். அனைவர் முன்னிலையிலும் சற்றும் கவலைப்படாமல் தான் கூறிய அனைத்து கருத்துக்களுக்கும் தானே பொறுப்பு ஏற்பதாகக் கூறி விட்டு, அப்படி ஒரு தவறான கருத்துக்களைக் கூறி விட்டதற்கு தான் மிகவும் வருந்துவதாகவும் கூறி மன்னிப்புக் கேட்டான். எந்த ஒருவன் தன் குற்றங்களை பகிரங்கமாக தவறு எனக் கூறி விட்டு மன்னிப்புக் கேட்கின்றானோ அந்த நிமிடத்திலேயே அவன் மற்றவர்களை விட உயர்ந்து விடுகின்றான் என்பது ஒரு தத்துவம். அதுவே இவன் விஷயத்திலும் நடந்தது. வாயுதேவன் நினைத்ததிற்கு மாறாக நல்லதே நடந்தது. மன்னன் கார்த்தவீர்யன் அனைவர் மனதிலும் முன்பை விட அதிகம் உயர்ந்தான். வாயு பகவான் போட்ட திட்டம் தோல்வி அடைந்து விட, கார்த்தவீர்யன் அழிய விரைவில் வேறு வழி ஏதாவது கிடைக்காதா என தவித்தவாறு அடுத்து என்ன செய்து எப்படி அவனை கவிழ்க்கலாம் என தேவர்களுடன் கலந்து யோசிக்கலானார்.
பல தேவ முனிவர்கள் கார்த்தவீர்யன்மீது மிகவும் அன்பும் மரியாதையும் வைத்து இருந்தனர் என்றாலும் சிலருக்கு அவன் மீது பொறாமையும் உண்டு. அதனால் அவன் புகழைக் கெடுக்க விரும்பிய அக்னி பகவான் ஒரு அந்தணர் உருவில் சென்று கார்த்தவீர்யனிடம் பிச்சைக் கேட்டார். எத்தனை கொடுத்தும் அவை எதுவுமே தனக்குப் போதவில்லை என்று வந்தவர் கூற வேறு வழித் தெரியாமல் வந்தவர் கேட்ட பிட்சையாக செடிகள், கொடிகள், மரங்கள் போன்றவற்றை உணவாக உட்கொள்ளுமாறு கூறி விட்டான். கூடவே அங்கு வந்து பிட்சைக் கேட்டு வந்தவர் அக்னி தேவன் என்பதையும் தன்னை களங்கப்படுத்தவே அவர் ஒரு திட்டத்துடன் வந்துள்ளார் என்பதையும் நொடிப் பொழுதில் புரிந்து கொண்டான். போகட்டும் எத்தனை ஆட்டம் போட்டால் என்ன, என்னை அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது என மமதைக் கொண்டான். அந்த தைரியத்தில் தாராளமாகச் சென்று மனம் திருப்தி அடையும் அளவு சாப்பிட்டு விட்டுப் போங்கள் எனக் கூறி விட்டான். தருகிறேன் என்று கூறி விட்டால் அதில் இருந்து பின் வாங்க முடியாது. அவனுக்குத் தெரியும் அக்னி பகவான் என்ன செய்தாலும் அதனால் பாதிக்கப்பட இருப்பது காட்டில் உள்ள முனிவர்களும் ரிஷிகளும்தான். அவர்கள் சாபமிட்டால் அக்னி மட்டுமே அதற்கு பலியாவான் என்று நினைத்தான்.
ஆனால் பாவம் அவனுக்கு அப்போது புரிந்திருக்கவில்லை. பிறந்து விட்ட எவனுக்கும் மரணம் உண்டு. மரணத்தைத் தள்ளிப் போட முடியுமே தவிர தடுத்து நிறுத்த முடியாது. ஸ்ரீ தத்தரின் கருணையினால் சில விதி விலக்கோடு சாகா வரங்களைப் பெற்று உள்ளவனுக்கு முடிவு காலம் துவக்கப்பட வேண்டும் என்ற நியதிக்கு உட்பட்டு இயற்கை தன் வேலையைத் துவக்கி விட்டது என்பது அவனுக்கு அப்போது புரிந்திருக்கவில்லை. மன்னனின் சம்மதம் கிடைத்ததும் அக்னி பகவான் மனம் மகிழ்ந்தது. சாப்பிட்டு விட்டுப் போங்கள் என அவர் கூறியதை எதிர்பார்த்து நின்று இருந்த அக்னியும் காட்டில், மலைகளில் என தான் சென்று கொண்டிருந்த வழிகளில் எல்லாம் இருந்த அனைத்து மரங்களையும் செடி கொடிகளையும் எரித்த வண்ணமே சென்றார். அதில் ஊர்வ முனிவரின் ஆசிரமமும் எரிந்து போயிற்று. மக்கள் மட்டும் அல்ல முனிவர்களும், ரிஷிகளும் அலறினர். அவர்களின் அலறல் காடுகள் முழுதும் எதிரொலித்தது.
அந்த அலறல் தவத்தில் இருந்த வஷிஷ்டர் காதுகளிலும் விழுந்தது. அவர் தவம் கலைந்தது. என்ன நடந்தது என்று வஷிஷ்டர் யோசிக்கவில்லை. மன்னன் தானம் கொடுத்ததினால்தானே இந்த நிலைமை ஏற்பட்டது என மனதில் கோபம் கொந்தளித்தது. மனதில் எழுந்த கோபத் தீயில் இத்தனைக்கும் காரணமானவர் யார் என்றும் யோசிக்கவில்லை. பொறாமையினால் அக்னி பகவான் செய்த சதியில் சிக்கிய மன்னன் தெரியாத்தனத்தினால்தான் தானம் செய்தான் என்றும் புரிந்து கொள்ளவில்லை. ஆத்திரம் அறிவை மறைத்தது. கடும் கோபமுற்ற வசிஷ்ட முனிவர் நடந்த உண்மைகளைத் தெரிந்து கொள்ளாமல் கார்த்தவீர்யனுக்கு சாபமிட்டார் ‘நீ தானே அக்னியை காட்டில் சென்று அங்கு உள்ள செடி, கொடிகளை உணவாக உட்கொள்ளுமாறு கூறினாய் அதனால் அந்தணர்களின் ஆசிரமங்களும் எரிந்து விட்டன. ஆகவே உனக்கு ஒரு அந்தணர் கைகளினால் விரைவில் மரணம் சம்பவிக்கட்டும்’. பின்னாளில் அதுவே நடந்தது.
காலம் ஒடியது. கார்த்தவீர்யனின் இராஜ்ய பரிபாலனம் நல்லபடியே நடந்து வந்தது. ஆனால் அவன் அழிவு காலம் நெருங்கத் துவங்க கார்த்தவீர்யன் தன்னையும் அறியாமல் தவறான வழிகளைக் கடை பிடித்தபடி அரசாண்டான். ஸ்ரீ தத்தாத்ரேயர் தந்திருந்த விசேஷமான தங்கத் தேரில் ஏறி தன் மனதிற்குத் தோன்றியபடி மூவுலகமும் செல்லத் துவங்கினான். செல்லக் கூடாத இடங்களிலும் நுழையத் துவங்கினான். அப்படிப்பட்ட ஒரு நேரத்தில் ஒரு முறை இந்திரன் தன் மனைவியுடன் உல்லாசமாக இருந்த பொழுது அங்கு சென்று அவனை நையாண்டி செய்தான். தன்னை எவராலும் அழிக்க முடியாது என தத்தர் வரம் அளித்துள்ளதாக நினைத்தான். இதை எல்லாம் கண்டு மனம் வெதும்பிய தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று காத்தவீர்யன் செய்து வந்த அக்கிரமங்களை பற்றி விவரமாகக் கூறினார். விஷ்ணு அவர்களை அமைதிப் படுத்திக் கூறினார் ‘அஞ்ச வேண்டாம் அவன் அழிவு காலம் தொடங்கி விட்டது’. இன்னும் சில காலம் கழிந்தது.
வேறு ஒரு நாட்டுடன் அவன் தொடுத்திருந்த யுத்தத்தில் வெற்றிப் பெற்ற பின் ஒரு பெரும் சேனையுடன் தன் நாட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்த கார்த்தவீர்யன் வழியில் இருந்த காட்டில் மாபெரும் தபஸ்வியான ஜமதக்கினி முனிவரைக் கண்டு அவருக்குத் தன் வணக்கத்தைத் தெரிவிக்கச் சென்றான். வந்திருந்த சேனைகளுக்கும் களைப்பும் பசியும் எடுக்கத் துவங்க சாப்பிட உணவு எங்கு கிடைக்கும் எனத் தேடலாயினர். தன்னைக் கண்டு ஆசி பெற்றுச் செல்ல வந்தவனை அமரச் சொல்லிய ஜமதக்கினி முனிவரும் ‘களைப்புத் தீர உணவு அருந்தி விட்டுப் போ’ என்று கூற, கார்த்தவீர்யன் தயங்கினான் ‘இல்லை ஸ்வாமி, நான் கிளம்புகின்றேன், என்னுடன் பெரும் சைனியமே வந்துள்ளது. அவர்களுக்கும் சாப்பிட நான் எதாவது செய்தாக வேண்டும். அவர்கள் பட்டினியுடன் இருக்கையில் நான் மட்டும் உணவு அருந்துவது தர்மம் அல்ல’ என்றான். முனிவர் சர்வசாதாரணமாக நகைத்தபடிக் கூறினார் ‘மன்னா நீ என்னைப் பார்க்க வந்த பின் உணவு அருந்தாமல் போகலாமா , கூடாது அப்பனே…. கூடாது…… நீ ஏன் கவலைப்படுகிறாய், நான் உணவு அருந்த உன்னை மட்டும் அல்ல உன் சைனியங்களையும் சேர்த்துத்தான் அழைத்தேன். அனைவரும் உணவு அருந்திவிட்டுச் செல்லட்டும். அவர்களையும் கூப்பிடு’ என்று கூறி விட்டு ‘அம்மா வந்துள்ள விருந்தாளிகளுக்கு வயிறாற உணவு தந்து அனுப்பம்மா’ என்று உள்ளே எவரையோ பார்த்துக் கூறினார். மன்னன் அதிர்ந்து நின்றிருந்தான். இத்தனை பெரிய சைனியத்திற்கு இவர் எப்படி உணவு தரப் போகின்றார்?
முனிவரின் வீட்டின் உள்ளிருந்தது வெளி வந்தது ஒரு வெண்மை நிறப் பசு. சற்று நேரம்தான். போடப் போட எங்கிருந்து வந்தது உணவு, எங்கிருந்து வந்தது உணவு என பிரமித்து நின்ற பொழுதுதான் தெரிந்தது அத்தனை உணவையும் தந்தது அந்தத் தெய்வப் பசுதான் என்று. அனைவரும் வயிறாற உணவு அருந்தினர். வந்திருந்த அனைவருமே முனிவரின் பெருந்தன்மையை பெரிதாகக் போற்றிப் புகழத் துவங்க மன்னன் மனதில் தோன்றிய பொறாமை வெறுப்பாக மாறியது. விதி தன் வேலையை வேகமாகச் செய்யத் துவங்கியது. ‘இத்தனை பெரிய சாம்ராஜ்யம் இருந்தும் நான் செய்ய முடியாத ஒரு வேலையை கேவலம் காட்டில் உள்ள ஒரு முனிவன் செய்து விட்டானே . இந்த பசு மட்டும் நம்மிடம் இருந்தால் நாட்டில் பஞ்சமும் பட்டினியும் உருக் குலைந்துப் போய் விடுமே’ என எண்ணியவன் மனதில் பொறாமை எழுந்தது. முனிவரோ அவன் மீண்டும் எதையோ கூறத் தயங்குகின்றானே என்பதைப் பார்த்து விட்டுக் கேட்டார் ‘என்ன மன்னா என்ன யோசனை செய்கிறாய், சாப்பிட இன்னமும் எதுவும் வேண்டுமா?’ மன்னன் பார்த்தான், இதுவே தக்கத் தருணம் என நினைத்து துணிந்து கேட்டு விட்டான் ‘உங்களுக்கு எத்தனைப் பணமும் பொருளும் வேண்டுமோ அத்தனையையும் தந்து விடுகின்றேன். ஸ்வாமி எனக்கு இந்தப் பசுவை விற்று விட வேண்டும்’. தீயை மிதித்தவர் போல அதிர்ந்து நின்றார் முனிவர். ‘இந்தப் பசுவையா, நான் விற்க வேண்டுமா, என்ன மன்னா கேலி செய்கிறாயா ? அந்தணர்களுக்கு நீங்கள்தான் யாசகம் தர வேண்டும். ஆனால் நீங்கள் ஒரு அந்தணரிடமே பொருளை யாசகம் கேட்கலாமா?’ என்றார்.
அவர் மிக அதிகமான பணத்தையும், பொருளையும் எதிர்பார்த்துக் கொண்டு அதனால் பசுவைத் தர மறுப்பதாக எண்ணினான் மன்னன். இன்னமும் இது தருகிறேன், அது தருகிறேன் என பல பொருட்களைத் தருவதாக ஆசை காட்டினான். முனிவரோ பசுவை இழக்க எந்த நிலையிலும் தயாரில்லை. அந்தப் பசு தன் தாயைப் போன்றது என மன்றாடிக் கூறினார். மன்னனும் விடுவதாக இல்லை. அந்தப் பசு எனக்கு வேண்டும் என கோபத்துடன் கூறலானான். அவன் என்ன கூறியும் அந்தப் பசுவைத் தர அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்பதினால் தன் சேனையினரை அழைத்து அதை கட்டாயமாக ஓட்டிச் செல்லும்படி கட்டளை இட்டு விட்டான். முனிவர் அத்தனை பெரிய சைனியத்துடன் எப்படி சண்டையிட முடியும்?. வந்து உள்ளவன் ராக்ஷசனாக இன்று காட்சி தருகிறான். தத்தருடைய அனுக்கிரகம் இருப்பதால் அவனை லேசில் வெல்ல இயலாது. இடிந்து போய் அமர்ந்தார். பேச முடிவில்லை. கண்களில் நீர் கடல் போலக் கொட்டியது. பேச்சு மூச்சே நின்று விட்டது போல அமர்ந்த இடத்திலேயே எழுந்திருக்க முடியாமல் கிடந்தார். அந்த தெய்வீகப் பசுவும் தன் தந்தையை விட்டுப் போகின்றோமே எனக் கதறியவாறு அந்த சைனியர்கள் இழுத்துச் செல்ல கண்ணீர் விட்டபடி நடை பிணமாக நடந்து செல்லலாயிற்று.
இதெல்லாம் நடந்த பொழுது முனிவரின் மகன் பரசுராமன் அங்கு இல்லை. காட்டிற்கு சென்று இருந்தவர் திரும்பி வந்தார். தன் தந்தை பேச முடியாமல் அமர்ந்து இருந்ததைக் கண்டார். என்ன ஆயிற்று, என்ன ஆயிற்று எனப் பல முறை கேட்டும் பதில் கூற முடியாமல் பிரமை பிடித்தபடி அமர்ந்து இருந்தவரைக் கேட்டுப் பிரயோசனம் இல்லை என்பதால் இடிந்து போய் அமர்ந்து இருந்த மற்றவர்களையும் உலுக்கி, உலுக்கிக் கேட்டதில் நடந்த விவரத்தைக் கூறினார்கள் அவர்கள். இரத்தம் கொதித்தது பரசுராமனுக்கு. ஒரு ஷத்ரியன் தன் தந்தையை அவமானப்படுத்தி விட்டுச் சென்று விட்டானா? அவன் திமிரை அடக்காமல் இருப்பது தவறு என நினைத்தவர் தன் கோடாலியை எடுத்துத் தோள் மேல் வைத்துக் கொண்டார், பிற அம்பு, ஆயதங்களையும் எடுத்துக் கொண்டு காத்தவீர்யனைத் தேடிப் போகத் துவங்கினார். தூரத்தில் சென்று கொண்டிருந்தவர்களைப் பார்த்துக் கத்தினார். ‘ஏ, அயோக்கியனே, நில்…… எதற்காக என் தந்தை ஜமதக்கினியிடம் இருந்து பசுவைப் பிடுங்கிச் சென்றாய்?’. இப்படி பயம் இல்லாமல் என்னை அழைக்கும் அவன் யார், எங்கிருந்தோ வந்து என்னையே மிரட்டும் அளவு துணிவு கொண்டவன் என் நாட்டிலும் இருக்கின்றானா என கார்த்தவீர்யன் நினைத்துக் கொண்டிருந்தபோதே மீண்டும் இடி முழக்கம் போல ‘பசுவை விடுகின்றாயா இல்லையா’ என கர்ஜித்தார் பரசுராமர்.
‘ஷத்திரியனான நான் இதற்கெல்லாம் பயந்து பணிந்து விட்டால் இராஜ்யத்தை எப்படி ஆளுவது? வந்து உள்ளவன் தனியாகத்தான் வந்து உள்ளான். அவனுடன் சைனியமும் இல்லை. தனியாக வந்தவனை சேனை மூலம் அடக்குவது கோழைத்தனம் என நினைத்தவன் வந்திருப்பவனின் பலம் தெரியாமல் ‘பசுவை விட முடியாது’ என்று கூறிவிட்டு ‘உனக்கு உயிர் மீது ஆசை இருந்தால் ஓடிப் போ’ என திமிருடன் கூறினான். போர் வீரர்களோ ஓகோ……. ஓகோ எனச் சிரித்தவாறும் எள்ளி நகைத்தபடியும் குதித்தாட நெருப்புப் போல ஆனார் பரசுராமர். ‘அற்பப் பதரே என்னையா எள்ளி நகையாடுகின்றாய்……. வா, வந்து மோதிப் பார்’ என யுத்த கோஷம் போட்டார் பரசுராமர். யுத்தம் துவங்கியது. நொடிப் பொழுதில் பாதி சேனை அழிந்தது. திடுக்கிட்டான் கார்த்தவீர்யன். என்ன நடக்கின்றது, இத்தனை நாட்களும் எனக்கு நிகர் எவனும் இல்லை என நினைத்து இருந்தேன். இவன் யார், எங்கிருந்து வந்து என்னிடம் இத்தனை பராக்கிரமமாக யுத்தம் செய்கிறான், என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் எனக்கு தத்தர் துணை இருக்கையில் கவலை எதற்கு என எண்ணியவாறு உக்கிரமாகப் போரிடத் துவங்கினான். அம்பு மழை பொழிந்தபடி இருவரும் போரிட்டனர். பரசுராமன் அவன் கைகளை வெட்ட வெட்ட புதிது புதிதாக கைகள் முளைத்துக் கொண்டே இருந்தன. அந்த நேரத்தில் காத்தவீர்யன் தான் செய்த பிழையை நினைக்கலானான். ‘தவறுதான், ஒரு அந்தணனின் பசுவை அநியாயமாக பிடுங்கிக் கொண்டு வந்து தவறு செய்து விட்டேன். ஓரு எளியவனின் சொத்தை பறிப்பதை தத்தர் கூட அனுமதிக்க மாட்டார். மேலும் எனக்கு நிகரானவன் பிறக்கவில்லை என்றுதான் நினைத்தேன். இறுமாப்புடன் இருந்திருக்கின்றேன்’. ஸ்ரீ தத்தர் வரம் கொடுத்தபோது அவர் கூறியது நினைவுக்கு வந்தது. ‘உன்னை விட வலியவன் மட்டுமே உன்னைக் கொல்ல முடியும்’. ‘அப்படி என்றால் எவனோ ஒரு பலசாலி பிறக்க இருந்தது அவருக்குத் தெரியும், இல்லை நான் செய்த பாவத்திற்கு தண்டனை அளிக்க அவரேதான் யாரையோ அனுப்பி உள்ளார்.’ இப்படி நினைத்துக் கொண்டு இருக்கையில் அடுத்து வஷிஷ்டர் கொடுத்த சாபம் மனதில் தோன்றியது. ‘…உன்னை ஒரு அந்தணனே அழிப்பான்’
தவறு செய்தாகி விட்டது. இனி யோசனை செய்து என்ன பயன். வந்துள்ளவன் பராக்கிரமசாலிதான். இல்லை எனில் என் முன் இத்தனை நேரம் தாக்கு பிடிக்க முடியுமா, ஆயுதங்கள் தீர்ந்து போன நிலையில் மல்யுத்தம் செய்தபடி இருவரும் கடும் யுத்தம் புரிந்தனர். யுத்த வித்தைகளைக் கண்ட இருவரும் எதிரியின் யுத்தக் கலையைக் கண்டு மனதுக்குள் வியந்தனர். தனக்கு எதிராகப் போர் செய்பவனுக்கு எந்த தெய்வத்தின் அருள் இருந்தது என்று புரியவில்லை. முடிவாக பரசுராமர் பரமேஸ்வரனைத் துதித்துக் கொண்டே பிரம்மாஸ்திரத்தை ஏவினார். வெட்டப்பட்ட கைகள் முளைக்கவில்லை. வந்தவன் விஷ்ணுவின் அம்சம். விஷ்ணுவோ தத்தரின் ஒரு பகுதி. பரசுராமரோ சிவனை நினைத்தபடி பிரும்தாஸ்திரத்தை ஏவினார். ஸ்ரீ தத்தரின் மற்றோரு பகுதி சிவனல்லவா. ஆக பரசுராமரின் வேண்டுகோளும் மறைமுகமாக தத்தரைத்தான் போய்ச் சேர்ந்தது. அதே நேரத்தில் காத்தவீர்யனை அழிக்க வேண்டியது தத்தரின் கடமை. இல்லை எனில் பூர்வ ஜென்மப் பாவத்தைப் போக்குவது எப்படி? வஷிஷ்டரின் சாபத்துக்கும் ஒரு நல்ல முடிவு வேண்டும், ஏன் எனில் அவர் மாபெரும் முனிவர். ஆகவே அனைத்தும் ஒன்று சேர்ந்து கொள்ள கார்தவீர்யனின் ஆயுள் முடிவிற்கு வந்தது. அவன் செய்த நற்குணங்களினால் ஸ்ரீ தத்தாத்ரேயரின் அருள் பெற்ற, அவருடைய முக்கியமான சிஷ்யன் என்பதால் சொர்க்கத்தை அடைந்தான். யுத்தம் முடிந்ததும் பசு ஓடி வந்து பரசுராமர் பக்கத்தில் நின்று கண்ணீர் விட அதைத் தேற்றியவாறே தன் தந்தையிடம் அழைத்துச் சென்றார் பரசுராமர்.
திகம்பரா திகம்பரா, ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப திகம்பரா!
திகம்பரா திகம்பரா, ஸ்ரீ தத்ததேவா திகம்பரா
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ
நான்காம் நாள் பாராயணம்
ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
யோகீஸ்வராய தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத்
ஸ்ரீ தத்தாத்ரேயரும் பரசுராமரும்
பரசுராமர் பிறப்பு பற்றி அறியும் முன் அவருடைய தந்தை எப்படி அவதரித்தார் எனத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அம்வசு வம்சத்தினரான குசும்பா என்ற நாட்டைச் சேர்ந்த புருரவன் என்ற மன்னனின் பிள்ளை காதி என்பவர். குசும்பாவிற்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உண்டு. அவர்களில் சிலர் மட்டுமே ரிஷி, முனிவர்களாக இருந்தனர். காதி ஒரு முனிவர் என்பதால் காட்டில் வசித்து வந்தார். அவருக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் சத்தியாவதி. நல்ல அழகும், நற்பண்புகளும் நிறைந்தவள். அந்தக் காட்டில் பிருகு முனிவரும் இருந்து வந்தார். அவருடைய மகன் ரீக்கா என்பவர் சத்யவதியின் மீது ஆசைக் கொண்டு அவளை மணக்க விரும்பினார். பெண் வீட்டினர்தான் பிள்ளை வீட்டிற்கு வரதட்சணைத் தருவதுண்டு. ஆனால் அதற்கு மாறாக ரீக்காவோ ஒரு பக்கம் காது கறுப்பாக இருந்த ஆயிரம் குதிரைகளை காதிக்குக் கொடுத்து அவருடைய மகளான சத்யாவதியை மணந்து கொண்டார். காதியின் மனைவிக்கு ஒரு விபரீத ஆசை தோன்றியது. தன் பெண் சத்யவதி கருதரித்து குழந்தைப் பெற்று எடுக்கும் பொழுது தானும் ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டும். தன்னுடைய ஆசையை சத்தியாவதியிடமும் கூறி இருந்தாள்.
சத்தியவதிக்கு திருமணமாகி சில காலம் சென்றது. பிருகு முனிவர் ஏதோ வேலையாக அங்கு வந்திருந்தார். வந்தவரிடம் சத்யவதி தனக்கும் தன்னுடைய தாயாருக்கும் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது என்றும் அதற்கு அவர் அருள் புரிய வேண்டும் எனவும் அவரிடம் வேண்டினாள். அவரும் மிகவும் மனம் மகிழ்ந்து இரண்டு பாத்திரங்களில் சில உணவுப் பொருட்களை வைத்துக் அவளிடம் கொடுத்த பின் அவற்றில் ஒன்றை சுட்டிக் காட்டிக் கூறினார் ‘சத்யவதி இது உனக்கு, மற்றொன்று உன் தாயாருக்கு என மந்திரம் ஓதி இந்த பிரசாதத்தைப் படைத்துள்ளேன். நாளை காலை எழுந்து குளித்த பின் நீயும் உன் தாயாரும் இதை சாப்பிட்டால் உன் வேண்டுகோள் பலிக்கும். ஆனால் ஒன்றை மிகக் கவனமாகக் கேட்டுக் கொள். பாத்திரத்தில் உனக்கு உள்ளதை உன் தாயாரோ, உன் தாயாருக்கு கொடுத்ததை நீயோ சாப்பிட்டு விடாதீர்கள்’ என அறிவுரை கூறி விட்டுச் சென்றார்.
மறு நாள் காலை தன் பெண் எழுந்திருக்கும் முன்பே அவளுடைய தாயார் எழுந்து குளித்து விட்டு அந்த பிரசாதத்தை புசிக்கச் சென்றாள். அந்த பிரசாதத்தைப் நோக்கிய அவளுக்கு மனதில் ஒரு ஆசை எழுந்தது. ஒரு வேளை தன் மருமகள் சத்யவதிக்கு நல்ல லட்சணமான குழந்தை பிறக்க வேண்டும் என்று எண்ணி ஏதாவது விசேஷ பூஜை செய்த பிரசாதத்தை அவளுக்கு வைத்து இருப்பாரோ என எண்ணியவள், தன்னுடைய மகளுக்கு வைத்திருந்த பிரசாதத்தை தான் உண்டு விட்டு தனக்கு வைத்திருந்ததை தன் மகளுக்கு மாற்றி வைத்து விட்டாள். எழுந்து குளித்து விட்டு வந்த தன் மகளிடம் தான் தவறுதலாக அவளுக்கு வைத்திருந்தப் பாத்திரத்தில் இருந்ததை சாப்பிட்டு விட்டதாகப் பொய் கூறி விட்டாள். மகள் பாவம் என்ன செய்ய முடியும், நடக்கக் கூடாதது நடந்து விட்டது. வேறு வழி தெரியாமல் பிரசாதத்தை வேண்டாம் எனக் கூறி முனிவரை அவமானப்படுத்தக் கூடாது என்று எண்ணிய மகளும் மாற்றி வைத்திருந்த பிரசாதத்தை உண்டு விட்டாள்.
இருவரையும் நலம் விசாரிக்க வந்த பிருகு முனிவரிடம் நடந்து விட்ட தவறை சத்தியாவதி கூறினாள். நடந்ததை தன் ஞானக் கண் மூலம் தெரிந்து கொண்டார். நடந்தது நடந்ததுதான் என்பதால் சத்யவதிக்கு பிறக்க இருந்த குழந்தைக்கு இருக்க வேண்டிய குணங்களை அவளுக்குப் பிறக்க இருக்கும் பேரன் எடுத்துக் கொள்ளட்டும் என ஆசி கூறி விட்டுச் சென்று விட்டார். காலா காலத்தில் இருவருக்கும் பிள்ளைகள் பிறந்தனர். சத்யவதிக்கு ஜமதக்னி பிறக்க, அவளுடைய தாயாருக்கோ விஸ்வாமித்திரர் பிறந்தார். அதனால்தான் சத்யாவதியின் அடக்க சுபாவத்தைப் போலவே சாத்வீகக் குணம் கொண்டு பிறந்து இருந்த ஜமதக்கினி முனிவருக்கு தன்னிடம் இருந்து பசுவைப் பறித்துச் சென்ற கார்த்தவீர்யனுடன் சண்டைப் போடத் தெரியவில்லை.
ஜமதக்னி முனிவருக்கு திருமணம் ஆயிற்று. அவர் மனைவி ரேணுகா தேவி கணவருக்குப் பணிவிடை செய்வதில் மாசற்று இருந்தாள். அவர்களுக்கு பரசுராமரையும் சேர்த்து சில பிள்ளைகள் பிறந்தன. இருவரும் மன மகிழ்வோடு வாழ்ந்து வந்தனர். ஆனாலும் விதி சில சம்பவங்களை நடக்கச் செய்ய வேண்டும் என நினைப்பதினால் தன் பங்கிற்கு அது விளையாடிற்று. ஒரு நாள் ரேணுகா குளிப்பதற்கு நதிக் கரைக்குச் சென்றாள். எதேச்சையாக சற்று தொலைவில் மற்றோரு நாட்டின் மன்னன் தன் மனைவியுடன் அதே நதியில் குளிப்பதைக் கண்டாள். அவர்களோ ஜலக்கிரீடை செய்து கொண்டு ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தபடி விரசமான லீலைகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அதைக் கண்ட ரேணுகாவின் மனதில் ஒரு நிமிடம் காம உணர்வு எழுந்தது. எத்தனை இன்பமாக உல்லாசம் அனுபவித்தபடி இருக்கின்றனர் என நினைத்தவள், அடுத்த கணமே தன் கணவன் நினைவு வர அவசரம் அவசரமாகக் குளித்து விட்டுக் வீட்டிற்குக் கிளம்பினாள். வீடு வந்து சேர்ந்த மனைவியின் முகத்தில் தோன்றி மறைந்திருந்த காமம் அவர் கண்களில் பட்டுவிட்டது. நடந்ததை தன் மனக் கண்களால் பார்த்தார். என்ன இருந்தாலும் தபஸ்வி அல்லவா, அவள் புனிதம் கெட்டு விட்டதை அறிந்தவர் தன் பிள்ளைகளை அழைத்தார். ‘தர்ம நெறி கெட்டு விட்ட இவள் தலையை வெட்டி வீசி எறியுங்கள்’ என்று ஆணையிட்டார்.
தந்தையே கூறினாலும் எந்தப் பிள்ளைக்குத் தன் தாயாரின் தலையை வெட்டத் தோன்றும்? அந்தக் காரியத்தைச் செய்ய எவரும் முன் வரவில்லை. வந்தது கோபம் ஜமதக்கினிக்கு ‘என் சொல்லை மீறிய நீங்கள் அனைவரும் காட்டு விலங்குகள் போல அலைவீர்கள்’ என சாபமிட்டார். ரேணுகா தலை குனிந்தபடி நின்று கொண்டு இருந்தாள். கடைசியாக வெளியே போய் இருந்த பிள்ளை பரசுராமர் வந்தார். நிலைமை சரியாக இல்லை. தந்தை கண்களில் கோபம் கொந்தளித்தபடி நிற்கின்றார். சகோதரர்களும் தாயும் தலை குனிந்தபடி உள்ளனர். என்ன நடந்து இருக்கும், யோசனை செய்யத் துவங்கியவரிடம் அதே உத்தரவைப் பிறப்பித்தார் அவர் தந்தை ஜமதக்கினி. ‘தர்ம நெறி கெட்டு விட்ட இவள் தலையை வெட்டி எறி’ அத்தனைதான், அதைக் கூறி விட்டுத் திரும்பிய ஜமதக்னியின் முன் வந்து விழுந்தது ரேணுகாவின் தலை. பெரும் ஆச்சரியம் அடைந்தார் ஜமதக்கினி ‘உண்மையான பிள்ளை அவனே என மகிழ்ச்சி அடைந்துக் கேட்டார் ‘மகனே நீதான் என் உண்மையான மகன். கேள்……உனக்கு என்ன வரம் வேண்டும்…. கேள்…… நான் செய்த புண்ணியங்களால் அது உடனே நிறைவேறும்’ என்றார். அதையே எதிர்பார்த்து நின்றவர் கூறினார் ‘தந்தையே அறியாமல் என் தாய் செய்த பிழையை மன்னித்து விட்டு அவள் உயிர் பெற்று எழ உதவுங்கள். அது போலவே தாய் மீது பாசம் கொண்டு அவளைக் கொல்ல முடியாமல் தவித்து நின்று உங்களிடம் சாபம் பெற்ற என் சகோதரர்களுக்கும் சாப விமோசனம் வேண்டும்’.
முனிவர் கண்களில் நீர் நிறைந்தது. ‘எத்தனை தத்துவார்த்தமான பிள்ளை இவன், என் சொல்லை புறக்கணிக்கவில்லை. தாய் மீதும் தன் குடும்பத்தின் மீதும் எத்தனை பாசம் வைத்து உள்ளான் இவன்’ என மனம் மகிழ்ந்து அவர் கேட்ட வரங்களைத் …ததாஸ்து… என்று கூறி சாப விமோசனம் கொடுக்க, இறந்து கிடந்த ரேணுகா உயிர் பெற்று எழுந்தாள். கணவர் கால்களில் விழுந்து வணங்கினாள். மற்ற பிள்ளைகளும் அவ்விதமே செய்தனர். அதன் பிறகு அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக பல ஆயிரம் வருடங்கள் வாழ்ந்து வரலாயினர். ரேணுகாவும் தன் கணவனைத் தவிர வேறு எவர் தென்பட்டலும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இப்படி இனிமையான வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது. அதற்குப் பின்னர்தான் காத்தவீர்யன் வந்து பசுவைக் கவர்ந்து சென்றதும், அதை மீட்க அவனை பரசுராமர் துரத்திச் சென்று அவனை அழித்த சூறாவளிக் காட்சிகளும் நடைபெற்று முடிந்திருந்தன. அதனால் கோபத்தின் உச்சியில் இருந்த காத்தவீர்யனுடைய ஆட்களோ தம் மன்னனைக் கொன்று விட்ட பரசுராமரின் தந்தையைக் கொன்று அதன் மூலம் பரசுராமரை அவமதிக்க எண்ணி தருணம் பார்த்து காத்திருந்தனர். ஏன் எனில் பரசுராமரை அவர்களால் நேரடியாகப் போரிட்டு ஜெயிக்க இயலாது. அவர்களை அவர் அழித்து விடுவார். அதற்கு ஒரே வழி பேடித்தனமாக பரசுராமர் இல்லாத பொழுது அவர் தந்தையைக் கொல்ல வேண்டும் என நினைத்தனர்.
அவர்கள் எண்ணம் நிறைவேறும் வகையில் ஒரு நாள் பரசுராமர் வீட்டில் இல்லாத சமயத்தில் ஒரு பெரிய சேனையுடன் காத்தவீர்யனுடைய ஆட்கள் ஜமதக்கினியின் ஆசிரமத்தில் நுழைந்தனர். அனைத்துப் பொருட்களையும் நாசம் செய்தனர். அவரை இழுத்துப் போட்டு அடித்துப் போட்டு சித்திரவதை செய்து கொன்றனர். கூட இருந்தவர்களையும் கொன்றனர். ரேணுகா அலறினாள். அவரை விட்டு விடும்படிக் கெஞ்சினாள். மசியவில்லை முரடர்கள். கெஞ்சிய அவளையும் அவமானப்படுத்தினர். அனைத்து அக்கிரமங்களையும் செய்து விட்டு பரசுராமர் வரும் முன் ஓடி விட்டனர்.ரேணுகா …பரசுராமா…….. …பரசுராமா… என இருபத்தி ஒரு முறை மார்பில் அடித்துக் கொண்டபடி கத்தினாள், தொண்டைக் கிழியும் வகையில் அலறினாள். அவளுடைய கதறலின் ஒலி காட்டில் எங்கோ ஒரு மூலையில் இருந்த பரசுராமர் காதில் ஒலித்ததும் என்ன ஆயிற்றோ என அலறியபடி ஓடி வந்தவர் கண்களில் பட்டது அந்த அலங்கோலமான காட்சிகள். …தந்தையே என்னால்தானே உங்களுக்கு இந்த கதி வந்தது… எனப் புலம்பியவர் இடிந்து போய் சிதைந்து கிடந்த வீட்டில் இருந்து தன் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வெறி பிடித்தவர் போல் அந்த ஷத்ரியக் கூட்டத்தைத் தேடிப் போனார்.
வெற்றி மிதப்பில் ஆடிக் கொண்டு இருந்த ஷத்ரிய கும்பலில் இருந்த அனைவரையும் துண்டு துண்டாக வெட்டி எறிந்தார். அவருடைய தாக்குதலைப் தாங்க முடியாமல் போன ஷத்ரியர்கள் நகருக்குள் ஓடி ஒளியலாயினர். அப்படி ஓடிப் போய் ஒளிந்து கொண்ட அனைத்து ஷத்ரியர்களையும் தேடித் தேடி வெளியில் இழுத்துப் போட்டு அவர்களையும் வெட்டிக் கொன்றார். இனி அங்கு ஒரு ஷத்ரியர் கூட இல்லை எனத் தெரிந்தவுடன் வெறி தீர்ந்த வேங்கைப் போல வீடு திரும்பினார்.
இரத்த வெள்ளத்தில் தந்தை இறந்து கிடந்த உடலைக் கட்டிப் பிடித்தபடி விக்கி விக்கி அழுது கொண்டிருந்த தாயைக் கண்ட பரசுராமனும் குழுந்தைப் போல உரத்த குரலில் அழத் துவங்கினார். “தந்தையே, இத்தனை பராக்கிரமசாலி நான் இருந்தும் உன்னைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டேனே….எனக்கு வாழ்க்கையில் இனி என்ன இருக்கிறது” என அழுது புலம்பிக் கொண்டு இருந்த மகனை, ரேணுகா வந்து சமாதானம் செய்தாள். “ஆனது ஆகி விட்டது மகனே, உன் தந்தைக்கு இறுதிக் காரியங்களையாவது உடனே செய்…….. இந்த பூமி இப்போது களங்கப்பட்டு விட்டது . இங்கு இறுதிக் காரியங்கள் செய்யக் கூடாது. எழுந்திரு. எழுந்து போய் ஒரு காவடி கொண்டு வா.. ஒரு புறம் உன் தந்தையின் உடலை வை. மறு புறம் என்னை வைத்துக் கொண்டு அதை எடுத்துச் செல். எந்த இடத்தில் அசரீரி நில் என்று கூறுகின்றதோ, அங்கே உன் தந்தைக்கு செய்ய வேண்டிய காரியங்களை செய்து விடு. நானும் அவர் சிதையில் விழுந்து உயிர் துறக்கிறேன். அதன் பின் இருவருக்கும் சேர்த்தே ஈமச் சடங்குகளை அங்கே நடத்து’. கூடி இருந்த மற்ற பெரியவர்களும் அதுவே சரி என்று அவள் கூறியதை ஆமோதிக்க தாயின் சொற்படி ஒரு காவடியைக் கொண்டு வந்த பரசுராமன் அதில் ஒரு புறம் தந்தையையும், மறு புறம் தாயையும் வைத்துக் கொண்டு மேற்கு திசை நோக்கி நடக்கலானார்.
காடுகள், செடிகள், கொடிகள் என பல்வேறு பகுதிகளையும் கடந்து சென்று கொண்டே இருந்தார். வெகு தொலைவு நடந்து சென்றும் அவரை நிற்குமாறு கூறும் சப்தம் எங்கிருந்தும் வரவில்லை. அதனால் நிற்காது நடந்து கொண்டு இருந்தார். நடந்து கொண்டிருந்தவர், ஸ்ரீ தத்தாத்ரேயர் வசித்து வந்த மலைப் பகுதியின் அருகில் சென்று கொண்டிருந்த பொழுது ‘நில், மேலும் போகாதே’ என்ற குரல் ஒலித்தது. ஆனால் எவரும் தென்படவில்லை. யாராக இருக்கும் என யோசித்தவாறு தன்னுடையத் தாயாரைக் கேட்கலாம் என்று திரும்பினார். தவத்தில் அமர்ந்து இருந்தவள் போன்று காணப்பட்ட தாயின் வாயில் இருந்து மெல்லிய சப்தம் மட்டும் வந்து கொண்டிருந்தது. ‘என் அன்புப் புதல்வனே உனக்கு அடிக்கடி உன் தந்தை போதிப்பாரே தத்தரைப் போய் பார், தத்தரிடம் செல் என, அவருடைய ஆசிரமம்தான் அங்கே உள்ளது. போ, அங்கே போய் அவரிடம் சென்று எங்களுக்கு எப்படி இறுதி காரியங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டு விட்டு அவர் எப்படி அதை செய்யுமாறு கூறுகின்றாரோ அது போலச் செய்…… அவரைக் காண முடியவில்லை என்றால் அவருடைய ஆசிரமத்தில் உள்ள நெல்லி மரத்தின் அடியில் சென்று அமர்ந்து கொண்டு அவரைப் நினைத்தபடி தியானம் செய். உடனே அவர் எங்கு இருந்தாலும் உன்னைத் தேடி வருவார்’. தாயின் சொல்லைக் கேட்ட பரசுராமர் ஆசிரமத்தில் நுழைந்து தத்தாத்திரேயரைத் தேடினார். ஆனால் அவர் காணவில்லை.
தாய் கூறியதற்கு மாறாக அங்கு அலங்கோலமான நிலையில் ஒருவர் கெட்ட நடத்தை கொண்ட பெண் போல் இருந்தவளிடம் சல்லாபம் செய்து கொண்டு இருந்தார். உள்ளே கருவாட்டு வாசனை, கூடவே சாராய நெடியும் மூக்கைத் துளைத்தது. ஏற்கனவே தன் தந்தை தத்தரின் லீலைகளைப் பற்றிக் கூறி இருந்ததினால் எதிரே உள்ளவர் தத்தரே எனவும் தன்னை சோதிக்கவே அப்படி நாடகம் ஆடுகின்றார் என்பதையும் பரசுராமர் புரிந்து கொண்டார். அவரிடம் சென்று அவரை சேவித்த பின் தன் தந்தைக்கு இறுதிக் கடன் செலுத்த தான் வந்திருப்பதாகவும் அதற்கு அவர்தான் தனக்கு ஒரு வழி காட்ட வேண்டும் என்றும் வேண்டினார். ‘இறுதிக் கடன் பற்றி எனக்கென்னடா தெரியும்.. வேண்டுமானால் நீயும் இங்கு அமர்ந்து கொண்டு இந்த சாராயத்தை என்னுடன் சேர்ந்தே குடி. அதை விடுத்து இறுதிக் கடன் செய்ய என்னுடைய உதவி கேட்டு இங்கு வந்து என்னை ஏன் கேலி செய்கிறாய்?’ என்றார் தத்தர். பரசுராமருக்கு வைராக்கியம் அதிகம். அசைந்து கொடுக்கவில்லை. ‘ஸ்வாமி தயவு செய்து நாடகத்தைத் தொடராதீர்கள். நீங்கள் கூறும்படித்தான் என் தந்தைக்கும் தனக்கும் இறுதிக் கடன் செய்ய வேண்டும் என என் தாய் விரும்பியுள்ளதால் என்னையும் அவள்தான் இங்கு அழைத்து வந்திருக்கிறாள்’.
‘என்ன சொன்னாய், நான் சொல்லியபடித்தான் இறுதிக் கடன் செய்ய வேண்டும் என கூறியவள் உன் தாயாரா, அவளும் வந்திருக்கிறாளா, யாரடா அவள்? என்று ஆச்சர்யத்துடன் கேட்ட அந்த அகோர மனிதன் முன்பு பெரிய ஒளி வெள்ளம் தோன்றியது. அனைத்து நாடகக் காட்சிகளும் மறைந்து விட்டிருந்தன. பரசுராமர் எதிரில் ஜ்யோதி ஸ்வரூபமாக ஸ்ரீ தத்தர் நின்று கொண்டிருந்தார். ‘வா, உன் தாயார் யார் என நான் பார்க்க வேண்டும்’ என்று கூறிவிட்டு அவருடன் சென்றவர் ரேணுகாவைப் பார்த்தார். அவ்வளவுதான், ‘என் தாயே’ என பய பக்தியுடன் அவளை வணங்கிய பின் அவளைக் குறித்து தோத்திரம் செய்து ஆராதிக்கலானார். ‘தேவி, ஏக வீரா, அனைத்துலகத்துக்கும் தாயானவளே, நீயே அனைவருக்கும் தாயானவள், நீயே இந்த உலகை இயக்குபவள், நீயே அனைத்து ஜீவன்களையும் காத்து அருள்பவள். உன்னை நான் வணங்குகிறேன்’ என்று பலவிதமாக புகழும் தோத்திரங்களைக் கூறிக் கொண்டே அவளைத் துதித்தபடி அவள் முன்பாக அவர் நின்று கொண்டு இருந்த பொழுதும் சலனமற்று கம்பீரமாக ஜெகத் ஜ்யோதி போல ஒளித் தரும் பின்னணியில் அமர்ந்து இருந்தாள் ரேணுகா தேவி.
நடந்து கொண்டிருந்த அனைத்தையும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு நின்ற பரசுராமரை தன் அருகில் அழைத்த ஸ்ரீ தத்தாத்ரேயர் பரசுராமரை அனைத்து புண்ணிய நதிகளிலும் குளித்து விட்டு வரும்படிக் கூறிவிட்டு இறுதிக் கடன்களை செய்ய வேண்டிய முறைகளைச் சொல்லிக் கொடுத்தார். பரசுராமரும் தத்தர் கூறியபடி இறுதி ஸம்ஸ்காரங்களை செய்து முடித்தார். ரேணுகா தேவியும் தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டு ஜமதக்னியின் சிதைக்கு மூட்டிய தீயில் தானும் விழுந்து அவருடன் பயணித்து விட்டாள். அனைத்து காரியங்களும் நடந்து முடித்த பின் பரசுராமரும் அவருடன் கூட வந்தவர்களும் ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கி துதித்தப் பின் அவருடைய ஆசிகளைப் பெற்றுக் கொண்டு திரும்பினர். தன்னுடைய தாயார் ஜமதக்கினியை காத்தவீர்யனின் ஆட்கள் கொன்ற பொழுது தன்னை கூப்பிட அவலக் குரல் எழுப்பி தன் மார்பில் இருபத்தி ஒன்று முறை அடித்துக் கொண்ட தன் தாயாரின் நினைவாக இருபத்தி ஒரு முறை பூமியின் பல பகுதிகளுக்கும் சென்று ஷத்திரியர்களை அழித்தார். எத்தனை மனிதர்களைத்தான் கொன்று தீர்ப்பது, மனம் வெறுப்பு அடைய தன் தாயாரும் தந்தையும் கூறி இருந்தபடி மீண்டும் தத்தரிடமே சென்று அவரிடம் சரணடையலாம் என எண்ணியவாறு தத்தரைக் காணச் சென்றார். அவர் போகும் வழியில் ரேணுகா தேவியும் தந்தை ஜமதக்கினியும் அவர் முன் தோன்றி அவருக்குக் காட்சி தந்த பின் அவர் அத்தனை கொலைகள் செய்ததினால் ஏற்பட்டு உள்ள பாவத்தைத் தொலைக்க ஒரு யாகம் செய்யும்படிக் கூறி விட்டு மறைந்தனர்.
என்ன யாகம் செய்வது, அதை எப்படிச் செய்வது எனத் தெரியாமல் மனம் குழம்பிய வண்ணம் ஸ்ரீ தத்தாத்ரேயரிடமே மீண்டும் போய் சேர்ந்தார். வழியில் தனக்குக் காட்சி தந்த பெற்றோர்கள் கூறிய அறிவுரையை ஸ்ரீ தத்தாத்திரேயரிடம் தெரிவித்த பின் திருமணம் ஆகாத தன்னால் எப்படி யாகம் செய்ய முடியும் எனத் தான் தவிப்பதாகவும் அதுவே மனதில் வேதனை தருவதாகவும் கூறினார். ஸ்ரீ தத்தாத்ரேயர் ஆறுதல் சொன்னார் ‘கவலைப் படாதே ராமா, எந்த ஒரு செயலுக்கும் ஒரு மாற்று வழி உண்டு. உன்னை அவர்கள் செய்யச் சொன்ன யாகத்திற்கு ரேணுகா யாகம் எனப் பெயர் அளிக்கின்றேன். அதை செய்து முடிக்கும் வரை நானே உனக்கு வழி காட்டிக் கொண்டிருந்து அதில் பங்கு பெறுவேன்’ என்று கூறினார். யாகத்திற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்த பின், பரசுராமரின் பிரும்மச்சரியத்தை முடிவிற்குக் கொண்டு வந்து யாகம் செய்யும் வகையில் ஒரு தங்கப் பதுமையிலான பெண் உருவைப் படைத்து அதை அவருடைய பக்கத்தில் வைத்துக் கொண்டு மனைவி ஸ்தானமாக அதை மனதில் கருதிக் கொண்டு யாகத்தைத் துவக்கும்படிக் கூறினார்.
தத்தர் கூறியது போல் யாகம் நடந்தது. ஒரு பக்கம் ஸ்ரீ தத்தரே ஒரு ருத்வியாக அமர்ந்து கொள்ள மறு புறம் காஷ்யப முனிவர் அமர்ந்தபடி காரியங்கள் நடந்தேற அதை அங்கு கூடி இருந்த அனைத்து ரிஷி முனிவர்களும் பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்பொழுது அவர்கள் மனதில் எழுந்து நின்ற கேள்வி ‘ஸ்ரீ தத்தர் இந்த யாகத்திற்கு ஏன் ரேணுகா யாகம் என்று பெயரிட்டார், அது மட்டும் அல்ல இப்பொழுதெல்லாம் ஸ்வாமி ……ரேணுகா… , …ரேணுகா… என்று அடிக்கடி உச்சரித்துக் கொண்டு இருக்கின்றார். அந்த ரேணுகாவிற்கும் இவருக்கும் என்ன தொடர்பு இருக்கும்? அவள் உண்மையிலேயே பரசுராமனின் தாயார்தானா இல்லை எனில் வேறு ஒரு பெண்மணியா? மனதில் எழுந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் அதைப் பற்றி தத்தாத்திரேயரிடம் சென்று கேட்கவும் எவருக்கும் துணிவும் இல்லை. யாகத்தின் இடையிடையே அவர் ‘இதை செய் அதை செய்’ என பரசுராமனை வழி நடத்திக் கொண்டு இருக்கிறார். திடீரென பரசுராமர் மீது அவருக்கு என்ன அக்கறை ? கேள்விகள் அவர்கள் மனதைக் குடைந்தவண்ணம் இருந்தன. அது போலவே பரசுராமரும் இடையிடையே யோசித்தவண்ணம் இருந்தார். யாகம் நன்கு நடந்து முடிந்தது. ருக்விக்களாக வந்த முனிவர்களுக்கு எந்த மனக் குறையும் இன்றி நிறைய தானங்கள் கிடைத்தன. அனைவரும் ஸ்வாமிகளை சேவித்துக் கொண்டு இருக்கையில் அத்தனை நேரமாக தன் மனதில் அடக்கி வைத்திருந்த சந்தேகத்தை பரசுராமர் கேட்டு விட்டார்.
“ஸ்வாமி என் பெற்றோர்கள் சொர்கத்திற்கு செல்லும் முன் என்னை வழியிலே சந்தித்தனர். அவர்கள் என்னிடம், ஸ்ரீ தத்தாத்ரேயர் கூறும்படி இறுதி ஸமஸ்காரங்களை செய்து முடித்த பின் தத்தரிடமே தீட்சைப் பெற்றுக் கொண்டு தத்தரிடமே சிஷ்யனாகும்படியும் கூறினர். உங்களிடம் வந்த நான் என் தாயாரின் பெயரைக் கூறிய உடனேயே என்னுடன் வந்து அவளை வணங்கினீர்கள். அப்பொழுதே நினைத்தேன் இத்தனைப் பெரிய யோக குருவும் மூம்மூர்த்தியின் அவதாரமுமான நீங்கள் எப்படி என் தாயாரை வணங்கினீர்கள், என் தாயார் ரேணுகாவை முன்பே உங்களுக்குத் தெரியுமா, அதற்கும் மீறி இந்த யாகத்திற்கு ரேணுகா யாகம் எனப் பெயர் வைத்தீர்கள். அதன் காரணம் என்ன என்று அடியேனுக்கு விளக்கினால் மனம் தெளிவாகும்” என்று வேண்டினார். அவர் கூறியதை அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருந்த ஸ்ரீ தத்தர் முகத்தில் எந்த விதமான சலனமும் இல்லை.
‘உங்களுக்கும் என் தாயாருக்கும் என்ன பந்தம் என்று கேட்டாய் அல்லவா சொல்கிறேன் கேள். உன் தாயார் சாகாரம் என்ற தூல சரீரமும், நிராகாரம் என்ற ஜேஷ்ம சரீரமும் கொண்ட இரு வடிவங்களைக் கொண்டவள். அந்த இரு வடிவங்களில் சாகரம் எனும் ஆகாயம், வாயு, அக்கினி, நீர், பூமி எனும் பஞ்சபூதங்களால் ஆன தூல உடலையும், கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஐந்து ஞானேந்திரியங்கள், வாய், கை, கால், குதம், குறி ஆகிய ஐந்து கர்மேந்திரியங்கள் மற்றும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் ஆகிய பஞ்ச பிராணன்கள் கொண்ட சூட்சும சரீரத்தையும் கொண்டவள். இவை அனைத்துக்கும் அப்பால், உலகெங்கும் வியாபித்துள்ள ஜொலிக்கும் ஒளியில், ஒரு பிரளய காலம் முதல் இன்னொரு பிரளய காலம்வரை ஏகாந்தமாக பரவி நிற்கும் அவளது ஆன்மா அழிவற்ற நிலையிலானது. பிரும்மத்தில் மட்டுமே ஐக்கியம் ஆகி நிற்கும் தன்மையிலானது. அவளே உலகு அனைத்தையும் காக்கும் லோக மாதா.
உன்னுடையத் தாயார் இந்தப் பிறவியில் ஜமதக்னி முனிவரின் மனைவியாகப் பிறந்ததின் காரணம் லோகத்தின் நன்மையைக் கருதி என் மூலம் அனைவருக்கும் நல்வழிப் போதனைத் தர வேண்டும் என்பதினால்தான். ரேணுகாவாகப் பிறந்த அவள் தன் ஸ்தூல உருவத்தை விட்டு விட்டு தன் இடத்திற்கு சென்று விட்டாள். கார்த்தவீர்யன் முன் பிறவியில் விஷ்ணுவிடம் பெற்ற சாபத்திற்கு அவருடைய ஒரு அம்சமான உன் மூலம் விமோசனம் பெற வேண்டும் என்பதற்காகவே உன்னையும் தன்னுடைய பிள்ளையாக அவதரிக்க வைத்தார். உன் அன்னை ஒரு ஏக மாதா, அவளே சந்தியா தேவி, அனைத்து உலகின் தாயாக, காயத்திரியாக நிற்பவள். காலமற்ற காலத்தில் வாழ்பவளான அவளை வணங்குவதற்கு காலமோ நேரமோ இல்லை என்றாலும் அவளை மூன்று முக்கியமான வேளைகளிலும் வணங்குபவர்கள் எண்ணற்ற ஆனந்தத்தைப் பெறுவார்கள். எல்லா காலத்திலும் நிறைந்து இருக்கும் அவளுக்கு எந்த இடத்தில் இருந்தாலும், எப்படி இருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் சந்தி என்பதின் மூலம் வந்தனம் செய்யலாம். சந்தி என்றால் காலம். ஆனால் அதற்காக அவளை அந்த மூன்று வேளைகளில் மட்டும் வணங்க வேண்டும் என்பதல்ல இதன் சாரம். அதனால்தான் என்னைப் போன்ற யோகிகளும் கூட அவளை வணங்குகின்றோம். இதோ இங்கு தெரிகின்றதே ஒரு குளம், அதில்தான் உன் தாயாரும் நீராடுவாள். அதனால்தான் அதை ரேணுகா தீர்த்தம் என்று கூறுகிறோம்.
இதோ உள்ளதே நெல்லி மரம், அதன் அடியில்தான் உன் தாயார் அமர்ந்து இருப்பாள். எவர் வேண்டுமானாலும் அங்கு சென்று ஓய்வு எடுத்தாலும் அந்த மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டாலும் அவர்களின் மனதில் அமைதி கிட்டும். உனக்கு நினைவிருக்கின்றதா? உன் தாயார் உன்னிடம் கூறியது, யாகம் முடிந்ததும் அந்த நெல்லி மரத்தடியில் சென்று ஓய்வு எடுத்துக் கொள் என்று கூறினாளே, அது இதனால்தான்’ இப்படி எல்லாம் பலவாறாக ரேணுகா தேவி குறித்து ஸ்ரீ தத்தாத்ரேயர் வர்ணித்துக் கொண்டு இருக்கையிலேயே ரேணுகா தேவி அங்கிருந்த நெல்லி மரத்தின் அடியில் தோன்றினாள். அவளைக் கண்ட ஸ்ரீ தத்தாத்ரேயர் ‘…ஹே தேவி, ஹே ஜகன்மாதா ஹே அம்பா தேவி…’ எனப் பலவாறு அவளைப் புகழ்ந்தவாறு அங்கேயே அவளை பூஜிக்கத் துவங்கினார். அதற்குப் பிறகுதான் முனிவர்களுக்கும் பரசுராமருக்கும் புரிந்தது ரேணுகா யார் என.
யாகம் முடிந்தது. அனைவரும் சென்று விட்டனர். பரசுராமரும் அங்கேயே சில நாட்கள் தங்கி ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கிக் கொண்டும், தன்னுடைய தாயாரைத் துதித்தபடியும் நெல்லி மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டும், ஓய்வு எடுத்துக் கொண்டும் பல நாட்கள் இருந்தார். அவர் மனதில் துக்கம் இல்லை, மனதில் கோபம் இல்லை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல பரசுராமர் மனம் மீண்டும் மீண்டும் அமைதி இன்றி இருந்தது. என்ன செய்வது எனப் புரியாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தவர் கடைசியாக தசரதனின் மைந்தனான ராமனிடம் சண்டையிட்டுத் தோற்றுப் போய் மனம் ஒடிந்து காட்டிற்குத் திரும்பி வந்தபின் ஒன்றும் செய்வதறியாது அலைந்துத் திரியலானார். அங்கு நிர்வாணமாகவே திரிந்து கொண்டு, வெகு அபூர்வமாகவே மற்றவர்கள் முன் காணப்படும் சம்வார்த்தா என்ற ஒரு மாமுனிவரை சந்தித்தார். அவரிடம் சென்று ‘ஐயா, என் மனதில் அமைதி இல்லை……என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறுகிறேன். எனக்கு மனதில் அமைதி கிடைக்க ஒரு வழி கூறுவீர்களா’ என்று கேட்டார்.
அவர் கூறிய அறிவுரை பரசுராமர் கண்களைத் திறந்தது. ‘விளக்கைக் கையில் வைத்துக் கொண்டே வெளிச்சத்தைத் தேடுகின்றாயே’ என அவர் ஸ்ரீ தத்தாத்ரேயரின் மகிமைகளைக் கூற தவறு செய்து விட்டு எங்கெங்கோ அலைகின்றோமே என வருத்தம் அடைந்தார். சம்வார்த்தா மாமுனிவர் கொடுத்த அறிவுரைப்படியே தத்தாத்திரேயரின் பாதங்களில் சென்று விழுந்தார். ‘ஸ்வாமி எத்தனை பெரிய பைத்தியக்காரன் நான் என இப்போதுதான் புரிந்தது. என் மனதில் அமைதி இல்லை, உள்ளத்தில் நிம்மதியும் இல்லை. நீங்கள்தான் அமைதியுடன் நான் வாழ்ந்து கொண்டு இருக்க எனக்கு ஒரு வழி காட்ட வேண்டும்’ என சிறு குழந்தைப் போல அவர் கால்களைப் பற்றிக் கொண்டு அழலானார். ‘கவலைப்படாதே குழந்தாய்’ என ஆறுதல் கூறியவர் அவருக்குப் பல பாடங்களைச் சொல்லித் தந்து அங்கேயே ஒரு இடத்தில் குடில் அமைத்துக் கொண்டு அதில் வசித்து வந்து தினமும் தியானம் செய்யுமாறு அறிவுரைக் கூறினார். பரசுராமரும் மகேந்திர மலை அடிவாரத்தில் தங்கியபடி தவம் செய்யலானார். அந்த சமயத்தில் அவருக்கு ஸ்ரீ தத்தாத்ரேயர் செய்த உபதேசமே திரிபுரா இரகசியம் என்பது. பல கதைகளை உதாரணமாகக் கொண்டு கூறப்பட்டதே திரிபுரா ரகசியம் என்பது. திரிபுரசுந்தரியான திரிபுராவை மையமாகக் கொண்டு பரசுராமருக்கு உபதேசித்தார். சக்கர வழிபாடு, யந்திர வழிபாடு, தேவியை எப்படி வழிபட வேண்டும் என்ற அனைத்தையும் ஸ்ரீ தத்தர் அவருக்கு விரிவாகக் கூறினார்.
ஏக்நாத்தும் ஸ்ரீ தத்தாத்திரேயரும்
ஸ்ரீ தத்தாத்ரரேயருடைய வரலாற்றில் மராட்டிய மாநிலத்தில் அவருக்கு பெரும் அளவிலான பக்கர்கள் உண்டு என்பது தெரிய வருகின்றது. ஸ்ரீ தத்தாத்ரேயர் எதற்காக, எப்படி எல்லாம் ஒருவருக்கு உதவி செய்வார் என்பது தெரிவது இல்லை. தத்தத்திரரேயருடைய பெருமைகளை விவரிக்கும் பல கதைகளில் இதுவும் ஒன்று. மராட்டிய மாநிலத்தில் ஸ்வாமி ஞானதேவா வழியைச் சார்ந்தவரும், வராகாரி குலத்தைச் சேர்ந்தவரும், 17-18 ஆம் நுரற்றாண்டில் இருந்தவருமான முனிவர் ஏக்நாத் மற்றொரு முனிவர் தத்தோபந்த் என்பவருடன் வசித்து வந்தார். இருவருமே மராட்டிய மாநிலத்தில் பிறந்த அந்தணர்கள்தான்.
அந்த காலங்களில் ஒவ் ஒருவரும் ஒரு குருவை ஏற்றுக் கொண்டுதான் சன்யாசப் பாதைக்கு செல்வது உண்டு. அந்த வழியைப் பின்பற்றியே ஏக்நாதரும் ஸ்வாமி ஜனார்தனா என்பவரை பத்தாவது வயதிலேயே தன் குருவாக ஏற்றுக் கொண்டு இருந்தார். ஏக்நாதர் பாண்டுரங்க விட்டலாவின் தீவிரமான பக்தர். ஸ்வாமி ஜனார்தனா இன்று மகாராஷ்டிராவில் உள்ள சத்தாரா என்ற மானிலத்தில் தௌதாபாத் என்ற இடத்தில் உள்ள தேவகிரி எனறும் தேவகட் என்றும் கூறப்படும் ஒரு மலைப் பகுதியில் இருந்த நெல்லி மரத்தின் அடியில் ஆத்ம ஞானம் பெற்றவர். அடிக்கடி ஸ்ரீ தத்தாத்ரேயரை நேரிலே சந்தித்தவர் என்றும் கூறுவார்கள். தத்தாத்திரேய பக்தரான ஸ்வாமி ஜனார்தனா பிறப்பால் ஒரு அந்தணர் என்ற பொழுதிலும் ஜாதி பேதமற்றவர். அதனால்தான் அவர் தேவகட் என்ற நகரில் இருந்த ஒரு முகமதிய மன்னனின் கோட்டையை பாதுகாக்கும் பணியில் இருந்து கொண்டே தியானத்தையும் தொடர்ந்து கொண்டு இருந்தவர். அவர் தியானத்தில் இருக்கும் பொழுது அவரை எவரும் தொந்தரவு செய்யக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவு உண்டு. அவர் தியானத்தில் இருக்கும் பொழுதெல்லாம் ஏக்நாத் அவருக்கு காவல் இருப்பார்.
இப்படிக் காலம் சுழன்று கொண்டு இருந்தது. ஒரு முறை ஒரு முகலாய மன்னன் அந்த நகரின் மீதுப் படை எடுத்து வந்து விட்டான். ஸ்வாமி ஜனார்தனா தியானத்தில் இருந்தார். எதிரிப் படைகளோ வேகமாக முன்னேறி வந்த வண்ணம் இருந்தனர். என்ன செய்வது, தியானத்தில் இருக்கும் ஸ்வாமி ஜனார்தனாவை எழுப்புவது குரு துரோகம் ஆகி விடுமே என்று கவலைப்பட்ட ஏக்நாத், குருவை மனதில் தியானித்தார். அவருடைய யுத்த உடைகளை அணிந்து கொண்டு யுத்த பூமிக்குச் சென்று விட்டார்.
யுத்தம் நடந்து கொண்டு இருக்கையில் தன் பக்கத்தில் ஒரு குதிரை மீது அமர்ந்தபடி சிவந்த கண்களும் ஆக்கிரோஷ முகத்துடன் ஒரு முஸ்லிம் படை வீரன் எதிரிகளுடன் போரிட்டபடி யுத்தத்தில் ஈடுபட்டிருந்ததைக் கண்டார். வெற்றி பெற்ற பின் அது பற்றி தன் குருவிடம் கூறிய பொழுது யுத்தகளத்தில் அப்படி படைவீரன் உருவில் வந்து தங்களுக்கு உதவியவர் வேறு யாரும் அல்ல. ஸ்ரீ தத்தாத்ரேயரே யுத்த வீரன் உருவில் வந்து காப்பாற்றினார் என்ற உண்மையைத் தன் குருவின் மூலம் உணர்ந்து கொண்டார்.
இன்னொரு முறை ஏக்நாத்திற்கு ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஸ்ரீ தத்தர் தன்னுடன் சில நாய்களையும், ஒரு வயதான பெண்மணியையும் அழைத்துக் கொண்டு பகீர் போன்ற உருவில் அவரிடம் வந்து தன்னுடன் உணவு அருந்துமாறு அழைத்தார். ஆனால் ஏக்நாத் தான் ஒரு ஆசார பிராமணர் என்பதால் ஒரு முகமதியருடன் அமர்ந்து கொண்டு எப்படி உணவு அருந்துவது எனச் சங்கடப்பட்டுக் கொண்டு இருக்கையில் அங்கு வந்த அவருடைய குருநாதர் வந்துள்ளது தனது குருதேவனான ஸ்ரீ தத்தாத்ரேயரே என்று அவருக்கு எடுத்துக் கூறி அவர் கொடுத்த உணவை அருந்துமாறு கூறினார். அதற்குள் வந்தவர் மாயமாக மறைந்து விட்டார். ஏன் இப்படி ஏக்நாத் என்ற ஒரு தனி மனிதருக்கு, ஸ்ரீ தத்தாத்ரேயரிடம் தன்னை முழுமையாக சமர்பித்துக் கொள்ளாத ஒரு சன்யாசிக்கு ஸ்ரீ தத்தர் கருணை காட்டுகின்றார் என்ற கேள்வி எழுந்தால் அது நியாயம் அல்ல. ஏன் அதற்கும் காரணம் இருந்தது என்பது அவர் பிறந்த பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு பிறந்த தத்தோத்பாவாவின் வாழ்க்கையின் ஒரு அத்தியாயம் மூலம் விளங்கும்.
திகம்பரா திகம்பரா, ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப திகம்பரா!
திகம்பரா திகம்பரா, ஸ்ரீ தத்ததேவா திகம்பரா
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ
ஐந்தாம் நாள் பாராயணம்
ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
யோகீஸ்வராய தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத்
ஸ்ரீ தத்தோத்பவாவும் ஸ்ரீ தத்தாத்திரேயரும்
தத்தோத்பவா என்பவர் இளமைக் காலம் முதலே தத்தாத்திரேயரின் பக்தர். அவருடைய ஆசிகளைப் பெற்று சன்யாச வாழ்வை மேற் கொண்டவர். தத்தோபந்தின் வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது உண்டு. அவர் பன்னிரண்டு வயதான பொழுது அரசனிடம் வேலை செய்து கொண்டிருந்த அவருடைய தந்தை மன்னனிடம் கடன்பட்டு விட்டார். அதைத் திருப்பித் தர முடியாமல் போய்விட அந்த மன்னன் தத்தோத்பாவை பணய கைதியாக வைத்துக் கொண்டு பணத்தைப் முழுவதும் கொடுத்தப்பின் அவனை அழைத்துக் கொண்டு போகுமாறு கூறி விட்டான். அவருடைய குடும்பத்தினர் தத்தாத்திரேயரின் பக்தர்கள் என்பதினால் தத்தரிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யலாயினர். தங்களுடைய மகன் தத்தோத்பா மன்னனிடம் எப்படி எல்லாம் சித்திரவதைப்பட்டு வேலை செய்கின்றானோ என மனம் கதறி அழுதனர். தன் பக்தனின் மகன் சிறை பிடிக்கப்பட்டு கொடுமைகளை அனுமதிக்க விரும்புவாரா ஸ்ரீ தத்தாத்ரேயர். ஆகவே ஒரு நாள் திடீர் என அந்த நாட்டு மன்னனிடம் ஒரு புதியவர் போலச் சென்று தன்னை தத்தோத்பாவின் தந்தை அனுப்பி உள்ளார் என்றும் கடன் பட்டிருந்த பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டு சிறை வைக்கப் பட்டு உள்ள தத்தோத்பாவை திரும்ப அழைத்து வரும்படிக் கூறினார் என்று கூறிய பின்னர் பணத்தைக் குறித்த காலத்திற்கு முன்பே தந்துவிட்டு தத்தோத்பாவிற்கு விடுதலை வாங்கிக் கொண்டு அங்கிருந்து அவரை அழைத்துச் சென்றார். உண்மையில் நடந்தது எதுவுமே தத்தோத்பாவின் தந்தைக்குத் தெரியாது. விடுதலைப் பெற்று வீடு திரும்பி வந்த மகன் அனைத்து செய்திகளையும் கூறிய பின்னரே அப்படி ஒரு கருணையை செய்து உள்ளவர் ஸ்ரீ தத்தாத்ரேயர் எனத் தெரிந்து கொண்டு ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினர்.
அதன் பின்னர் தத்தோத்பாவும் ஸ்ரீ தத்தர் பக்தியில் இன்னமும் தீவிரம் அடைந்தார். மனம் எப்பொழுதும் தத்தரையே நினைத்த வண்ணம் ஏங்கியது. இளம் வயது. நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க முடியவில்லை. மனம் முழுவதும் தத்தரைக் காண வேண்டும், தத்தரைக் காண வேண்டும் என்றே துடிக்கலாயிற்று. அந்த வேட்கையின் விளைவாக தத்தரை எங்காவது பார்க்க முடியுமா என மலைப் பகுதிகளில் இருந்த காடுகளின் உள்ளே சென்று தேடலானார். தியானம் செய்யலானார். உணவு பற்றியோ, உடைகளைப் பற்றியோ கவலைப்படவில்லை. மண் மீதும், வெற்று பூமி மீதும் படுத்து உறங்கினார். கற்கள் மீதும் பாறைகள் மீதும் படுத்து உறங்கினார். காலம் உருண்டது. சுமார் இருபதுக்கும் மேலான ஆண்டுகளை காட்டில் தொடர்ந்தார். இதனால் மிகவும் மனம் மகிழ்வுற்ற ஸ்ரீ தத்தாத்ரேயர் ஒரு நாள் திடீரென அவர் முன் வந்து நின்று தன்னுடன் சேர்த்து அவரைக் கட்டி அணைத்துக் கொண்டார். அப்படிக் கட்டிப் பிடித்த நேரத்தில் அவரை தெய்வீகப் பிறவியாக மாற்றினார். தத்தோத்பாவின் மன மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அனைத்து உலகையும் மறந்து நின்றார்.
அங்கிருந்து சென்று அம்பாகூரகிரி என்ற இடத்தில் தங்கலானார். காட்டை விட்டு வெளியில் வந்த அந்த நேரத்தில்தான் ஏக்நாத்தையும் எதேச்சையாகச் சந்தித்தார். இரு முனிவர்களும் மனம் விட்டுப் பேசினர். காலம் உருண்டது. ஒரு முறை ஏக்நாத் இருந்த இடத்தில் கிருஷ்ண ஜெயந்தி நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக தத்தோத்பாவும் சென்றிருந்தார். விழா நடக்கும் இடத்திற்குச் சென்ற பொழுது வாசலில் ஸ்ரீ தத்தாத்ரேயர் காவல்காரன் உருவில் நின்றிருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்து ஓடிச் சென்று அவர் கால்களில் விழுந்து வணங்கினார். எதற்காக இப்படி காவல்காரன் உருவில் இங்கு இருக்கின்றீர்கள் எனக் அவரிடம் கேட்ட பொழுது, தான் காவல் காத்துக் கொண்டு இருந்தது ஏக்நாத் என்ற தனி மனிதனுக்கு அல்ல, காவலில் இருப்பது அவர் உருவில் உள்ள பாண்டுரங்க பகவானுக்கே எனவும், ஏக்நாதர் பாண்டுரங்கனே என்ற உண்மையையும் கூறி விட்டு அதனால்தான் அவருக்கு அத்தனை மரியாதைத் தருவதாகவும் கூறினார்.
தத்தரிடம் தன்னை முழுமையாக சமர்பித்துக் கொள்ளாத ஒரு சன்யாசிக்கு, ஏக்நாத் என்ற ஒரு தனி மனிதருக்கு ஏன் ஸ்ரீ தத்தர் கருணை காட்டுகின்றார் என்ற கேள்விக்கு விடை அளிக்கும் விதத்தில் அவர் பிறந்த பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு பிறந்த தத்தோத்பாவாவின் வாழ்க்கையின் இந்த சம்பவம் உள்ளது. அதன் பின்னர் தத்தோத்பாவும் கோதாவரி நதிக் கரையில் தத்தரின் பாதுகைகளைப் பெற்றுக் கொண்டு ஞான உபதேசமும் பெற்றார். ‘அஹம் பிரம்மஸ்மி’ அதாவது நானே பிரும்மம் என்ற உண்மையை உணர்த்தும் மாபெரும் தத்துவம் அவர் பெற்ற ஞான உபதேசம்.
சத்ருஜித்தும் ஸ்ரீ தத்தாத்திரேயரும்
ஸ்ரீ தத்தாத்திரேயருடைய மகிமைக்கு எடுத்துக்காட்டாக இன்னும் ஒரு கதை உண்டு. முன்னொரு காலத்தில் சத்ருஜித் என்ற மன்னன் இருந்தான். நல்ல ஒழுக்கங்களும் நேர்மையும் கொண்டு அரசாண்டு வந்தவன். அவனுக்கு ருதுத்வஜன் என்ற மகன் இருந்தான். அப்பாவிற்கு தப்பாமல் பிறந்த பிள்ளை என்று போற்றும் அளவிற்கு ருதுத்வஜன் திறமைசாலியாகவே இருந்தான். அது மட்டும் அல்ல, நல்ல குணங்களிலும், சாஸ்திர அறிவுகளிலும் குறைவின்றி இருந்தான். அத்தனை இருந்தும், தான் ஒரு இளவரசன் என்பதையும் மறந்துவிட்டு தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அங்கும் இங்கும் அலைந்து திரிந்த வண்ணம் உல்லாசமாக இருந்து வந்தான். அவனுக்கு இருந்த பல நண்பர்களில் இருவர் மட்டும் அவனிடம் மிக நட்புடன் பழகிக் கொண்டு இருந்தனர். அவர்கள் நாகலோகத்தைச் சேர்ந்தவர்கள். நாகலோகத்தைச் சேர்ந்த அவர்கள் அந்தணர்களின் வேடத்தில் அங்கு வந்து தங்கி வாழ்ந்து கொண்டு ருதுத்வஜனுடைய நல்ல நண்பர்களாக இருந்ததின் காரணம் ருதுத்வஜனுடைய நல்ல பண்பும் குணமும்தான். அவர்கள் நாகலோகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மை ருதுத்வஜனுக்குத் தெரியாது.
இப்படியாக அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கையில் ஒருமுறை முனிவர் ஒருவர் சத்ருஜித்தின் அரசவையில் வந்து தனக்கு ஏற்பட்டிருந்த ஒரு சங்கடத்தைப் பற்றிக் கூறினார் ‘அரசே, நான் பல ஆண்டுகளாக காட்டில் தவம் செய்து கொண்டு இருப்பவன். ஆனால் கடந்த சில நாட்களாக ஒரு அரக்கன் அங்கு வந்து என் தவத்தை கலைத்தவாறு இருக்கின்றான். நான் இத்தனை நாட்களாக கஷ்டப்பட்டு செய்த தவத்தின் பலனை துஷ்ப்ரயோகம் செய்து கேவலமான ஒரு அரக்கனை அழிக்க விரும்பாமல், அவனை அழிக்குமாறு தெய்வத்தை வேண்டிக் கொண்டு நின்றிருந்த பொழுது ஆகாயத்தில் இருந்து ஒரு அசரீரி கூறியது, ‘நான் உனக்கு சூரியனின் வாகனங்களுக்கு இணையான சக்தி கொண்ட ஒரு தேவலோகக் குதிரையை அனுப்புகிறேன். அதைக் கொண்டு போய் அரசன் சத்ருஜித்திடம் தந்து அந்த குதிரையை அவனுடைய மகனிடம் கொடுத்து அதில் ஏறிச் சென்று அரக்கர்களை அழிக்கச் சொல்’ என்று ஆணையிட்டது. அதே சமயத்தில் என் எதிரில் ஒரு குதிரையும் வந்து நின்றது. அதை எனக்கு அசரீரி கூறிய கட்டளைப்படியே உன்னிடம் கொண்டு வந்து விட்டேன் மன்னா. நீதான் அந்த அரக்கர்களை அழித்து என்னுடைய தவத்தினைத் தொடர உதவ வேண்டும்’ என்று கூறிவிட்டு தன்னுடன் அழைத்து வந்திருந்த குதிரையை அரசனிடம் தந்தார்.
அரசன் பண்பு மிக்கவன், ரிஷி முனிவர்களைக் காப்பது தன் கடமை என நினைப்பவன். ஆகவே சற்றும் தயங்காமல் தன் மகன் ருதுத்வஜனை அழைத்து முனிவர் கூறிய செய்தியைக் கூறி அவருக்கு துணை சென்று அந்த அரக்கர்களை அழித்து விட்டு வருமாறு ஆணையிட்டான். மகனும் மறு வார்த்தைக் கூறாமல் முனிவருடன் கிளம்பினான். அந்த குதிரையிடம் சென்று கை கூப்பி வணங்கி நின்று தனக்கு துணை புரியுமாறு அவன் வேண்டிக் கொள்ள அந்த குதிரையோ குனிந்து உட்கார்ந்து கொண்டு அவனைத் தன் முதுகில் ஏறிக் கொள்ளுமாறு சைகைக் காட்டியது. தன்னுடன் அந்த முனிவரையும் அமர வைத்துக் கொண்ட இளவரசன் முனிவரின் பர்ணசாலையை அடைந்தான். முனிவர் தவத்தினைத் தொடர, இளவரசனோ இரவு பகலாக அந்தக் குடிலுக்கு காவலாக அங்கு இருந்து வந்தான்.
அப்போது ஒரு நாள் ஒரு அரக்கன் காட்டுப் பன்றியின் உருவில் அங்கு வந்து தவத்திற்கு இடையூறு விளைவிக்கலானான். அதைப் பார்த்த இளவரசன் ருதுத்வஜன் அதை அம்பு எய்தி தாக்கலானான். கடுமையாக அம்பு அடிபட்ட அந்த காட்டுப் பன்றி உருவில் இருந்த அரக்கன் ஓடத் துவங்க, அதை விடக் கூடாது என்று எண்ணிய இளவரசன் தேவலோக குதிரை மீது எறி அதைத் துரத்தலானான். தான் தப்பி ஒடாவிடில் தன்னை அவன் கொன்று விடுவான் என்பதை உணர்ந்தான் அந்த அரக்கன். ஆகவே பூமியைக் குடைந்து கொண்டு பாதளத்துக்குள் ஓடலானான். ருதுத்வஜனும் அதை விடாமல் துரத்திய வண்ணம் பாதளத்துக்குள் சென்றான். அவன் அமர்ந்து இருந்தது ஒரு தேவலோக குதிரை என்பதால் அதன் சக்தியால் பாதாளத்திலும் புகுந்து பன்றியைத் துரத்த முடிந்தது. பாதாளத்தில் நுழைந்து கொண்ட அந்த காட்டுப்பன்றி எங்கோ சென்று மறைந்து கொண்டது. அந்தப் பாதாள உலகிலோ கண்களைக் கவரும் வண்ண மயமான கட்டிடங்கள் நிறைந்து இருக்க, இளவரசன் அந்த பளிங்கு மண்டபங்களின் அழகை ரசித்துக் கொண்டு எந்த வீட்டில் சென்று அந்தக் காட்டுப் பன்றி மறைந்து கொண்டது என எண்ணியவாறு அதைத் தேடலானான்.
அப்படி அவன் தேடி அலைகையில் வழியிலே ஒரு அழகிய பெண்மணியைக் கண்டான். நல்ல முகப் பொலிவு, தங்க ஆபரணங்கள் அணிந்து இருந்தாள். ஆனால் கிழிந்திருந்த ஆடைகள், முகத்தில் சோகத்தின் சாயல் என்றபடி காட்சி தந்தாள் அந்தப் பெண். ருதுத்வஜன் அவளை வியப்போடு நோக்க அவளும் அவனை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள். ஆகவே அந்தப் பெண்மணியின் அருகில் சென்ற இளவரசன் அவளைப் பார்த்துக் கேட்டான் ‘அம்மணி நான் ஒரு காட்டுப் பன்றியைத் துரத்திக் கொண்டு இங்கு வந்தேன். அது இந்த கட்டிடத்தில் நுழைந்து ஓடியது. அதைக் கண்டு பிடித்து அழிக்க வேண்டும். இந்த கட்டிடத்துக்குள் யார் வசிக்கின்றார்கள்’. அவன் அப்படிக் கேட்டதும் அந்தப் பெண்மணியோ சட்டென உள்ளே ஓடி விட்டாள். அந்த வீட்டில் எந்த வித சலனமும் தெரியவில்லை. ருதுத்வஜனுக்கு வியப்பாக இருந்தது. இதென்ன மாயமாக இருக்கின்றதே, காட்டுப் பன்றியும் ஓடி மறைந்து விட்டது. தான் கண்ட பெண்ணையும் காணவில்லை. எங்கே மறைந்து விட்டாள் அவள் என எண்ணியபடி, தைரியமாக மீண்டும் தேவலோகக் குதிரை மீது ஏறி அந்தக் கட்டிடத்தின் மேல் மாடியை அடைந்து குதிரையை அங்கேயே கட்டிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தான்.
என்ன அதிசயம் அந்த வீட்டின் ஒரு பெரிய அறையில் கண்களே பூரித்துப் போகும் அளவில் ஒரு கட்டழகி மஞ்சத்தில் படுத்து இருந்தாள். அவன் வந்ததை அவள் கவனித்ததாகத் தெரியவில்லை. படுத்திருந்தவள் அழகில் சொக்கி நின்றிருந்தான் ருதுத்வஜன். அவன் அப்படி அவளைப் பார்த்தபடி நின்று கொண்டு இருக்கையில் எதேச்சையாக திரும்பிப் படுத்தவள் தன் எதிரில் முன் பின் பார்த்திராத ஒரு மானிடன் வந்து நின்றதைக் கண்டு முதலில் பயந்து போனாலும் அந்த மங்கையும் அவனுடைய அழகைப் பருகலானாள். இருவரும் தம்முடைய நிலையை மறந்துபோய் காதல் மயக்கத்தில் விழத் துவங்க இருந்த நேரத்தில் தன்னை உடனடியாக சுதாகரித்துக் கொண்டான் ருதுத்வஜன். தான் வந்த காரியம் தடைபடலாகாது என எண்ணியபடி அவளிடம் கேட்டான் ‘அழகிய பெண்ணே, உன் முகத்தில் எதோ சோகக்களை தெரிகின்றதைக் காண்கின்றேன். நீ யார், உனக்கு என்ன கவலை என்பதையும், இங்கு என்ன செய்கிறாய் எனவும் நான் தெரிந்து கொள்ளளாமா?’. அவள் பதில் கூறாமல் மௌனம் சாதிக்க இன்னும் இரு முறை அவளிடம் அந்தக் கேள்விக் கணைகளை வீசினான். மெல்ல அவள் வாய் பேசத் துவங்கியது. குண்டலி என எவளையோ நோக்கி அவள் குரல் கொடுக்க, உள்ளே இருந்து இளவரசன் முதலில் வெளியில்பார்த்த பெண்மணி அங்கு வந்தாள். வந்தவள் தலை குனிந்தபடிக் கூறினாள் ‘ஐயா, வெளியில் நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற இயலாத நிலைமை எங்களுக்கு. மன்னித்து விடுங்கள். நாங்கள் ஒரு ஆபத்தில் சிக்கி உள்ளோம். அது பற்றி இப்போது கூற இயலாது. ஆகவே முதலில் நீங்கள் யார் என்பதைக் கூறுவீர்களா?
இளவரசன் புரிந்து கொண்டான். அந்த பெண்கள் எதோ ஆபத்தில் சிக்கி உள்ளனர். அவர்களைக் காக்க வேண்டும். இப்படியாக எண்ணியவாறே அவன் கூறினான் ‘மங்கைகளே, நான் சத்ருஜித் என்ற பூலோக மன்னனின் மகனான ருதுத்வஜன் என்பவன். நான் ஒரு காட்டுப் பன்றியின் உருவில் பூலோகம் வந்து முனிவரின் தவத்தைக் கலைக்க முயன்ற அரக்கனைத் தேடி இங்கு வந்தேன். என் மீது நம்பிக்கை இருந்தால் உங்களுடைய துயரம் என்ன என்று கூறினால் என்னால் முடிந்த அளவு உங்களுக்கு உதவுகிறேன்’, என்று கூற அவன் மீது நம்பிக்கைக் கொண்டு அவனிடம் முதலில் அவனை வெளியில் கண்ட பெண்மணி கூறினாள். ‘நன்றி இளவரசே, நன்றி. எங்களின் துயரத்தைக் கேளுங்கள். இதோ நிற்கின்றாளே என் தோழி மதாலசை என்பவள், அவள் மீது காதல் கொண்டு அவளை கட்டாயமாக மணந்து கொள்ள நிர்பந்தம் செய்தான் இந்த பாதாள உலகின் அரசனின் புதல்வன். பூவுலகில் உள்ளவர்கள் எப்படி பாதாளத்தில் உள்ளவனை அதுவும் அரக்கனை மணக்க சம்மதிப்பாள்?
அதனால் அதற்கு மறுத்த இவளை பிடித்து கொண்டு வந்து இந்த பாதாள உலகில் சிறை வைத்து இருக்கின்றான். இன்னும் இரண்டு நாட்களில் இவளை கட்டாயமாக மணக்கப் போவதாக கூறி விட்டு சென்றதினால் அவள் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாள். ஆனால் இவளை எதேர்ச்சையாக பார்த்த காமதேனுப் பசு அந்த தற்கொலை முயற்சியைக் கை விடுமாறு அறிவுறுத்தியதுடன் அல்லாமல், இந்த அரக்கனை எவன் கொல்ல முயலுவானோ அவனே மதாலசையான உன்னை மணப்பான் என்று தைரியம் கூறிவிட்டுச் சென்றாள். அதற்கேற்ப இன்று பூலோகம் சென்று வந்த அந்த அரக்கன் தன் உடல் முழுதும் எவனோ அடித்த அம்புகளினால் துளைக்கப்பட்டு வந்துள்ளான் என்று நாங்கள் நினைத்துக் கொண்டு இருந்த பொழுதுதான் நீங்களும் அவனைத் துரத்திக் கொண்டு வந்து உள்ளீர்கள். இதை நல்ல சகுனம் என்றே நினைக்கின்றோம்’ என்று கூறிய பின் தங்களுக்கு உதவ முடியும் எனில் பாதாளத்தில் இருந்து அவளை மீட்டுக் கொண்டு போக முடியுமா எனக் கேட்டனர்.
இளவரசனுக்கோ அந்த மங்கையை மிகவும் பிடித்து இருந்ததினால் அவளை தான் மணந்து கொண்டு அங்கிருந்து அழைத்துச் செல்ல விரும்பினான். ஆனாலும் தன் குல வழக்கப்படி அவளை தன் குருவின் ஆசி இன்றி, வேத ஹோமம் மூட்டி வளர்க்காமல் மணம் செய்து கொள்ள விரும்பவில்லை. அந்த பெண்களும் அதை அறிந்து கொண்டு அவனுடைய வேத குருவை நினைத்து வேண்டத் துவங்கியதும் அவரும் அங்கே பிரசன்னமாகி, இருவரின் விருப்பத்தையும் அறிந்து கொண்ட பின் அங்கேயே தன் சக்தியினால் ஹோம குண்டம் வளர்த்து அக்னி சாட்சியாக அவர்களுக்கு விவாகம் செய்து வைத்தார். அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு பூலோகம் நோக்கிப் புறப்பட்டவன் மீது போர் தொடுத்தான் பாதாளகேது. ஆனால் இளவரசன் அதிக சக்தி பெற்றவனாக மட்டும் இல்லாமல் பராக்கிரமான குதிரையையும் வைத்து இருந்ததினால் அனைத்து அசுரர்களையும் கொன்ற பின் அவளை மீட்டுக் கொண்டு தன் ராஜதானியை அடைந்தான். அவன் செல்லும் முன்பே அனைத்து விவரங்களையும் அவனுக்கு விவாகம் செய்து வைத்த அரச குரு மன்னரிடம் கூறி இருந்ததினால் அவர்கள் வரவை ஆவலோடு எதிர் பார்த்துக் காத்திருந்தவர்கள், ஒரு மனைவியுடன் திரும்பிய மகனை மிக ஆடம்பரமாக வரவேற்றனர்.
திரும்பி வந்தது முதல் இளவரசன் பழக்க வழக்கங்களில் பெரிய மாற்றம் தோன்றியது. முன்புபோல் இன்றி நண்பர்களுடன் சுற்றித் திரிவதைக் குறைத்த பின் தன் மனைவியுடனும் ராஜ பரிபாலனத்திலும் அதிக நேரம் செலவு செய்யலானான். அவன் மனதில் மற்றோரு தாகம் எழுந்தது. ரிஷி முனிவர்களை அடிக்கடி சென்று பார்த்தபடியும் அவர்களின் அறிவுறைகளைக் கேட்டபடியும் பொழுதைக் கழிக்கலானான். அதே நேரத்தில் மனைவியுடனும் மிகவும் மகழ்சியாக வாழ்ந்த வண்ணம் இருந்தான். நாட்கள் கடந்து சென்றன. அரசனும், அரசியும் தங்கள் மகனின் மனப் போக்கை கண்டு வாழ்கை முறையை வெகுவாகப் புகழ்ந்து கொண்டும் மதாலசை மீதும் அன்பு கொண்டு வாழ்ந்தனர். இப்படியாக இனிமையாக கடந்து கொண்டிருந்த வாழ்கையைக் கண்டான் போரில் இறந்து போன பாதாளகேதுவின் சகோதரன் தாளகேது. அவன் மனதில் வெறுப்பு துளிர் விட்டு வளர்ந்தபடி, சில நாட்களில் மரமாகி பிரம்மாண்டமாக வளர்ந்தது. ருதுத்வஜனை எப்படி பழி வாங்க வேண்டும் என வழி தேடி அலைந்து கொண்டிருந்த நேரத்தில் அவனுக்கு பரிசு கிடைத்தது போல நடந்தது ஒரு நிகழ்ச்சி.
காடுகளுக்குள் அடிக்கடிச் சென்று ரிஷி முனிவர்களை சந்தித்து வந்த இளவரசன் ஒரு நாள் வழி தவறி படையினரை விட்டு விலகி காட்டுக்குள் வெகு தூரம் சென்று விட்டான். அப்படி காட்டில் சுற்றிக் கொண்டு அலைந்தவன் கண்களில் பட்டது ஒரு அற்புதமான இடம். பெரிய ஆசிரமம் போன்று தோற்றம் தந்தது அந்த இடம். பழம், பூக்கள், அழகான செடி, கொடிகள் என பூத்துக் குலுங்கிய அற்புதமான இடம் அது. அந்த அடர்ந்த காட்டில் இப்படி ஒரு இடமா என வியந்த வண்ணம், அதற்குள் சென்று வழி தவறி நிற்கும் தனக்கு ஊர் திரும்பிச் செல்ல வழி காட்டி உதவ எவரும் தென்பட்டால் வேண்டிக் கொள்ளலாம் என உள்ளே சென்றவனை வரவேற்றார் ஓரு துறவி.
அவர் வேறு யாரும் அல்ல. துறவி உருவில் இருந்து கொண்டு, செயற்கையான அந்த பசும் சோலையைப் படைத்து, இளவரசனை அங்கு வர சூழ்ச்சி செய்திருந்த பாதாளகேதுவின் சகோதரன் தாளகேதுதான். அந்த தேவலோக குதிரை அந்த இளவரசனிடம் இருக்கும் வரையிலும் மற்றும் அவனுக்கு இருந்த பல வரங்களின் பயனினாலும் இளவரசனை தாளகேதுவினால் நேரடியாகக் கொல்ல முடியாது என்பதினால் வேறு ஏற்பாடு செய்து வஞ்சகமாக அவனை அங்கே வரும் நிலைக்கு ஆளாக்கி இருந்தான். அவன் செய்த உபசாரத்தினால் மயங்கி மனம் மகிழ்ந்து போன இளவரசனும் அவருக்கு தன்னிடம் இருந்து என்ன உதவி வேண்டும் என்று கேட்க சற்றும் தயக்கம் இன்றி அந்த மாற்று உருவில் இருந்த தாளகேது தான் ஓரு யாகம் செய்ய இருப்பதால் அதற்கு இளவரசன் உதவியின் சின்னமாக அவன் கழுத்தில் அணிந்து இருந்த ஒரு இரத்தின சாரம் மட்டும் தேவை என்று கேட்டான். கழுத்தில் அணிந்து இருந்த இரத்தின மாலையை அவனுக்குத் திருமணம் நடந்த பொழுது அவன் மனைவி மதாலசை தன்னுடைய அன்புப் பரிசாகத் தந்திருந்தாள். ஆனால் யாசகம் கேட்டு விட்ட முனிவரிடம் எப்படி அதைத் தர மறுக்க முடியும் என யோசித்த பின் வேறு வழி இன்றி அதைக் கயற்றிக் கொடுத்து விட்டான். முனிவரும் அவனை அங்கேயே இரவு தங்கிவிட்டு காலையில் எழுந்து செல்லும்படிக் கூறிய பின் தனக்கு வேறு ஒரு வேலை இருப்பதாகக கூறிவிட்டு கிளம்பி விட்டார். மறுநாள் காலை அவர் கூறிய இருந்த வழியைப் பின் பற்றிக் கொண்டு தன் ராஜதானிக்குக் கிளம்பினான் இளவரசன்.
இதற்கு இடையில் ராஜதானிக்குக் இளவரசன் போய் சேரும் முன்பே தாளகேது துறவி உருவிலேயே அரண்மனைக்குப் சென்று மன்னனை சந்தித்து சோகமான ஒரு செய்தியைக் கூறினான். மன்னனிடம் சென்றவன் இளவரசனிடம் இருந்து வஞ்சித்துப் பெற்ற இரத்தின மாலையைக் கொடுத்து விட்டுக் கூறினான் “மன்னனே அடர்ந்த காட்டின் நடுவில் உன் மைந்தனை அவனுடைய விரோதிகள் கொன்று போட்டு விட்டுச் சென்று விட்டனர். அங்கு எதேற்சையாக சென்ற என்னிடம் இறக்கும் தருவாயில் இருந்த அவன் இந்த மாலையைக் கொடுத்து விட்டு ‘மதாலஸை’, ‘மதாலஸை’ என்று கதறியபடி இறந்து விட்டான். என்னால் அவன் உயிரைக் காக்க முடியவில்லை மன்னா” எனப் பொய் அழுகை அழுது விட்டுக் கிளம்பிச் சென்று விட்டான். அந்த துக்கத்தில் அதிர்ந்து போன அனைவரும் வந்தவர் யார் என்பதைப் பற்றி கவனிக்க மறந்து விட்டனர். மாலையைக் கண்ட மதாலஸையும் உண்மையில் அவன் இறந்து விட்டான் என எண்ணியவாறு மடிந்து விழுந்தாள்.
அவளுக்கு இறுதிக் கடன்கள் செய்து முடிக்க ராஜ்யமே துயரத்தில் ஆழ்ந்து இருந்தது. அவற்றை எல்லாம் வெற்றிகரமாக செய்து விட்டு வெளி வந்த தாளகேது கொக்கரித்த வண்ணம் ‘அவனைப் பழி வாங்கி விட்டேன்.. எனக்குக் கிடைக்க இருந்த மதாலஸை அவனுடனும் வாழ முடியாமல் இறந்து விட்டாள், என் விரோதம் ஒழிந்தது’ என மகிழ்சியுடன் கூவியவாறு சென்றான். இதற்கு இடையில் அங்கும் இங்கும் அலைந்து திரிந்த பின் நகரத்திலே நுழைந்த இளவரசன் அங்கு நிலவி இருந்த காட்சியைக் கண்டு துணுக்குற்றான். என்ன இது, நகரமே சோகமயத்தில் இருக்கிறதே, என்ன ஆயிற்று என விடை தெரியாமல் அவசரம் அவசரமாக அரண்மனைக்குள் சென்றவனைக் கண்டு அதிர்ச்சி உற்றனர் அனைவரும். சற்று நேர அவகாசத்தில் நடந்து முடிந்த அத்தனை நிகழ்ச்சிகளையும் குறித்து இரு தரப்பினரும் பரிமாறிக் கொள்ள எவனோ ஒருவன் இப்படிப்பட்ட ஒரு சங்கடத்தை வேண்டும் என்றே ஏற்படுத்தி இருப்பதை உணர்ந்தனர். ஆனால் என்ன செய்வது?
நடந்தது நடந்து விட்டது. மனைவி இறந்த சோகம் மனதில் இருந்து மறைய மறுத்தது. குமுறிக் குமுறி எத்தனை நாட்கள்தான் அழுது கொண்டு காலத்தைக் கழிப்பது, காலம் எதையும் தேற்றும் என்ற நம்பிக்கை உண்டு. மெல்ல மெல்ல இளவரசன் தன் பழைய நண்பர்களுடன் மீண்டும் கூடி இருந்தபடி பொழுதைக் கழிக்கலானான். அவன் நண்பர்களும் அவனைத் தேற்றி ஆறுதல் கூறி அவனை காத்து நின்றனர். இன்னமும் காலம் சுழன்றது. முன்பு கூறினேன் அல்லவா. இரண்டு நாகலோக இளைஞர்கள் இளவரசனின் நெருங்கிய நண்பர்கள் இருந்தனர் என. அவர்களும் நாகலோகம் செல்லாமல் மனித உருவிலேயே இருந்து கொண்டு ருதுத்வஜனுடன் பொழுதைக் கழித்துக் கொண்டு பூலோகத்தில் இருக்க, அதைக் கண்ட அவர்களுடைய தந்தை கவலையுற்றார். ஒரு நாள் அவர்களை அழைத்து ‘குழந்தைகளே, இத்தனை நாட்களும் நீங்கள் எங்கு செல்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் எனக் கேட்காமலே இருந்து விட்டேன். எனக்குக் கவலையாக உள்ளது. நீங்கள் ஏன் மனித உருவில் திரிகின்றீர்கள், எங்கு சென்று எவருடன் பழகுகிறீர்கள் என்று கேட்டார். அவர்களும் தங்களுடைய நண்பனான இளவரசன் ருதுத்வஜனைப் பற்றிக் கூறினர். அவர்களுடைய தந்தையோ முதலில் அவர்கள் ஒரு மனிதப் பிறவியுடன் சம்மந்தம் வைத்திருப்பதை விரும்பாமல் கோபமுற்றாலும், அந்த இரண்டு புதல்வர்களும் ருதுத்வஜனின் அற்புதமான குணாதிசயங்களை தந்தைக்கு எடுத்துக் கூறினதும் அவர் மனம் நிம்மதி அடைந்தார்.
ஆயினும் அவர்கள் முகத்தில் சூழ்ந்து கொண்டிருந்த சோகத்தைக் கண்ட அவர் அவர்களின் வருத்தத்திற்கான காரணத்தைப் பற்றி வினவியதும், துக்கத்துடன் இருந்த அந்த இரு புதல்வர்களும் தம்முடைய நண்பனுக்கு ஏற்ப்பட்ட துயரக் கதையை விவரமாக எடுத்து உரைத்தனர். தங்களுக்காக உயிர் தியாகம் புரியும் அளவு குணத்தில் சிறந்தவன் என்றும் எப்படி எல்லாம் அரக்கர்களை அழித்து முனிவர்களின் தவத்தைக் காத்து வந்தவன் எனவும், எப்படிப்பட்ட நேரத்தில் அவன் பழி வாங்கப்பட்டான் என்பதையும் விளக்கமாக எடுத்து உரைத்தனர். அந்த நாகலோக மன்னனும் சத்ருஜித்தின் ராஜ்ய பரிபாலனத்தைப் பற்றிக் ஏற்கனவே கேள்விப்பட்டு இருந்தான். அவன் காலத்தில் நல்ல ஆட்சி நடைபெறுகிறது என்பதையும், அவன் மகன் ருதுத்வஜனும் அவனுக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளையாகவே உள்ளான் என்பதையும் அறிந்து கொண்ட பின், மானிடப் பிறவிகளுடன் உறவு கொள்ளக் கூடாது என அவர்களைப் பற்றி தான் தவறாக எண்ணி விட்டதற்கு வருந்தினான்.
அவனுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என நினைத்தான். அது மட்டும் அல்ல இறந்து போனவளை எப்படி உயிர் பிழைக்க வைக்கலாம் எனவும் மன்னன் யோசிக்கலானான். முடிவாக அதற்கு ஒரு வழி இருந்தது அவனுக்குத் தெரிந்தது. தன்னுடைய ராஜ பரிபாலனத்தை கவனித்துக் கொள்ளும்படி தன் பிள்ளைகளிடம் கூறி விட்டு, தானே இமயமலை அடிவாரத்தில் சென்று சரஸ்வதி தேவியை வேண்டிக் கொண்டு தவம் செய்யலானான். கடுமையான தவத்தில் இருந்த அவன் முன் தோன்றினாள் சரஸ்வதி தேவி. மன்னனோ சற்றும் யோசிக்காமல் வந்த வேலையை மட்டும் நினைத்துக் கொண்டு அவளிடம் வேண்டினான், ‘தேவி பல வருடங்கள் முன்பு மாண்டு போய்விட்ட என் சகோதரனின் நினைவு என் மனதை விட்டு அகல மறுக்கின்றது. அவனை உயிர் பெறச் செய்து எங்கள் இருவருக்கும் பரிபூரணமான கான வித்தைகளை தந்து அருள வேண்டும்’ என்றான். சரஸ்வதி தேவியும் அவன் தவத்தினால் மனம் மகிழ்ந்து போனதால் அவன் கேட்ட வரங்களைத் தந்து அருளினாள். உயிர் திரும்பப் பெற்ற சகோதரனோ தன் சகோதரனைக் கட்டித் தழுவி கண் கலங்கி நலம் விசாரித்தான். நாக மன்னனும் தான் அங்கு வந்ததிற்குக் காரணமாக இருந்த ருதுத்வஜனனின் கதை முழுவதையும் கூறிவிட்டு இருவரும் சிவபெருமானிடம் சென்று அந்த பிரச்சனைக்குத் தீர்வு பெற வரம் கேட்க வேண்டும் என்றான். அவர்கள் ஒரு முடிவு செய்தனர். இருவரும் கயிலைக்குச் சென்று சிவபெருமானைத் துதித்துப் பாடிவிட்டு அவரிடம் தன் குடும்பத்தில் ஒரு மகளாக மதாலஸை பிறக்க வழி செய்ய வேண்டும் என வேண்டிக் கொள்ளலாம் எனவும், அப்படி பிறக்கும் அவளை மீண்டும் ருதுத்வஜனனுக்கு மணம் செய்து கொடுத்து அவன் துயரைப் போக்கலாம் என முடிவு செய்தனர்.
அதற்கு ஏற்ப கயிலைக்குச் சென்ற நாகலோக சகோதரர்கள் இருவரும் அதுவரை கேட்டிருக்க முடியாத அளவிலான கான மழையை சிவன் சன்னதியில் பொழிந்தனர். அதைக் கேட்டு அப்படியே மயங்கினார் சிவனார். அவர்களுக்கு என்ன வரம் வேண்டுமோ அதைத் தருவதாக வாக்குறுதி தர, அவர்களும் மதாலஸை தங்கள் குடும்பத்தில் பிறக்க வைத்து அவள் இறந்த பொழுது இருந்த அதே உணர்வுடனும், உடலுடனும் மாற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். சிவடிபருமானும் அதை அவர்களுக்கு அருளினார். வரத்தைப் பெற்றுக் கொண்ட சகோதரர்களும் சந்தோஷமாக நாடு திரும்பினர். வரம் கிடைத்தது போலவே மதாலஸை அவனுக்கு மகளாகப் பிறந்து பழைய உருவை அடைந்தாள். ருதுத்வஜனனின் நண்பர்கள் அளவற்ற மகிழ்சி அடைந்தனர். அடடா, நம் நண்பனின் மனைவியே நமக்கு சகோதரியாக வந்து விட்டாளே என இன்பத்தின் உச்சிக்கே சென்றனர். அவர்களின் தந்தை மனசாஸ்திரம் அறிந்தவர். உடனே சென்று ருதுத்வஜனை அழைத்து வந்து அவளைக் காட்டினால் அவனால் அதை ஏற்க முடியாது எனத் தெரிந்ததினால், அரண்மனையிலேயே அவளை எவர் கண்களிலும் படாமல் மறைந்து இருக்கச் செய்த பின் ருதுத்வஜனை வேறு சாக்கில் அங்கு அழைத்து வரும்படி பிள்ளைகளை ருதுத்வஜனிடம் அனுப்பினான். அவர்களும் பூலோகம் சென்று அன்று இரவு முழுவதும் ருதுத்வஜனனுடன் கழித்த பின் தங்களுடைய தந்தை அவனைக் காண விரும்புவதாகக் கூறி தம் வீட்டிற்கு வருமாறு அழைத்தனர்.
முதலில் எதை எதையோ கூறிவிட்டு அந்த அழைப்பை ஏற்க மறுத்தவன், இறுதியாக நண்பர்களின் தந்தை என்றால் தனக்கும் தந்தைக்கான சமானம் உள்ளவர் அல்லவா என நினைத்ததினால் அவர்களுடன் சென்றான். நதிக் கரைக்கு அந்த பக்கத்தில் இருந்த வீட்டிற்கு செல்வதாகக் கூறி விட்டு ஓரு படகில் ஏறி நடுக்கடலில் சென்ற பின் தங்களுடைய தந்திர வித்தையால் அவன் கண்ணளைக் கட்டி விட்ட பின் கடலின் அடியில் இருந்த நாகலோகத்திற்கு அவனை அழைத்துச் சென்றனர். பல மணி நேரமாக எங்கேயோ சென்று கொண்டிருந்த படகு நின்றது. முடிக் கொண்ட கண்கள் தாமாகத் திறந்து கொண்டன. விசித்திரமான உலகில் தான் இருப்பதை உணர்ந்தான் ருதுத்வஜன். அவனுக்கு இரு புறமும் இரண்டு நாக முகம் கொண்டவர்கள் நின்றிருந்தனர். அவர்களில் ஒருவன் கூறினான் ‘நண்பனே, எங்களை மன்னித்து விடு. நாங்கள் நாக லோகத்தைச் சேர்ந்தவர்கள். உன் அன்பையும் நட்பையும் பெற பிராமண உருவில் பூலோகம் வந்திருந்து உன்னுடன் நட்பு கொண்டோம். எங்கள் தந்தை உன்னைப் பார்க்க விரும்பியதால்தான் உன்னை இங்கு அழைத்து வந்தோம். தவறாக நினைக்காதே’. அவர்களுடைய குரலைக் கொண்டு அவர்களை அடையாளம் கண்டு கொண்ட பின் அவர்களுடைய நேர்மையை மதித்த இளவரசனும் அவர்களை மன்னிக்கும் அளவுக்குத் தான் உயர்ந்தவன் அல்ல எனவும், அவர்கள் செய்யாத தப்பிற்கு எதற்காக மன்னிப்புக் கோருவது எனவும், நண்பனின் தந்தையும் தன் தந்தையே என நினைப்பவனே உண்மையான நண்பன் என்றும் பலவாறு கூற அந்த நாக லோக நண்பர்களுக்கு அவன் மீதான மதிப்பு இன்னமும் உயர்ந்தது.
அவனைத் தங்களுடைய தந்தையிடம் அழைத்துப் போனார்கள். நல்ல வயதான நாக மன்னன். சாந்தம் கமழும் முகம். அவரைக் கண்ட மாத்திரத்திலேயே அவர் கால்களில் விழுந்து வணங்கியவனை மார்போடு தூக்கிக் கொண்டு அணைத்து பலவாறு அவன் பெருமைகளைப் பற்றி தன்னுடைய மகன்கள் கூறியதை எல்லாம் அவனிடம் விவரமாகக் கூறிய பின், வேண்டும் என்றே ஒன்றும் தெரியாதது போல் அவன் மூலம் நல்ல மகட்பேறு உண்டாகட்டும் என ஆசி கூறினார். திகைத்து நின்ற ருதுத்வஜனிடம் மேலும் அவனுக்கு என்ன உதவி வேண்டும் எனக் அவர் கேட்க, அவனும் ‘பெரியவரே அனைத்துமே நிறைந்து இருக்கும் எனக்கு என்ன வேண்டும்’ என்று பதில் தந்த பின் அமைதியாக நின்றான். அவன் மனதில் மதாலஸையின் நினைவுகள் மட்டுமே அலையாக ஓடின. அதை தன் தவ வலிமையால் நாக மன்னன் உணர்ந்து கொண்டாலும் வெளிக் காட்டாமல் தன் மகன்களிடம் அவனை அழைத்துப் போய் உணவு தந்து சற்று நேரம் களைப்பாறிய பின் அங்கு அழைத்து வருமாறுக் கூறினார். களைப்பாறிய பின் வந்தவனிடம் குசலம் விசாரித்தப் பின் மீண்டும் வேண்டும் என்றே அவனிடம் ‘என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தன் தவ வலிமையால் முடியும்’ எனக் கூற மீண்டும் அவன் மனதில் மதாலஸையின் முகமே தோன்றியது. அவன் ஏக்கத்துடன் தன் நண்பர்களின் முகத்தை நோக்க, அதுவே தருணம் என காத்திருந்தவர்கள் கூறினார்கள், ‘தந்தையே எங்கள் நண்பனுக்கு இல்லாதது எதுவும் இல்லை. ஆனால் அவன் மிகவும் நேசித்து ஆசையுடன் மணந்திருந்த மனைவியை தன்னுடைய வஞ்சத்தின் முலம் அழித்து விட்டான் ஒரு அரக்கன். அவளைக் காண முடியாமல் தவிக்கும் எங்களுடைய நண்பனுக்கு அவளை மீண்டும் உயிர் பிழைக்க வைத்துக் கொடுக்க முடியுமானால் அதையே மிகவும் மகிழ்சியோடு அவன் ஏற்பான் எனக் கருதுகின்றோம்’ என்றனர்.
அதைக் கேட்டு சிரித்த அந்த நாகலோக மன்னன் ‘குழந்தாய் உன் மனதில் ஓடும் எண்ண அலைகளை நான் நன்கு உணர்ந்தேன். இறந்தவளைத் திரும்பக் கொண்டு வர இயலாது. ஆனால் என் தவ வலிமையால் அவளை ஒரு முறை உனக்குக் காட்டுகிறேன். அவளை நீ தொடக் கூடாது சம்மதமா? எனறவரிடம் ருதுத்வஜன் அதற்கு தான் மிகவும் ஆவலுடன் தயாராக இருப்பதாகத் தெரிவித்தான். சற்று நேரத்தில் அங்கு மறைத்து வைத்திருந்த மதாலஸையை அவன் முன் கொண்டு வந்து நிறுத்தினார் அவர். இருவரின் கண்களிலும் கண்ணீர் பெருகி ஓழுயது. அழுதனர். ஆனால் தொடக் கூடாது என்ற கட்டுப்பாடு இருந்ததினால் இருவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவள் சிறிது நேரத்தில் மறைந்து போய் விட்டாள். அவள் நினைவோடு வருத்தமாக அமர்ந்து விட்டான் ருதுத்வஜன். சற்று நேரம் அப்படிப்பட்ட நிலையில் இருந்தவன் தன்னுடையத் தோள்களை எவரோ தொடுவதைப் போல் உணர்ந்து திரும்பினான்.
அவனுடைய நண்பர்களின் தந்தை அங்கே நின்றிருந்தவாறு அவன் தோள்பட்டையை வருடியபடிக் கூறினார் ‘குழந்தாய், எதற்கும் கவலைப்படாதே, உனக்கு உன் மனைவி திரும்பக் கிடைப்பாள். அதற்கு முன் இந்தக் கதையைக் கேள் என்று கூறிவிட்டு, தன்னுடைய மகன்கள் இருவரும் அவனுடன் சினேகமான துவக்கத்தில் இருந்து, அவனுக்காக எப்படி அவர்கள் தன்னிடம் வந்து அவன் மனைவி மீண்டும் கிடைக்க வழி கூறுமாறு வேண்டினர் என்பதையும், தான் எப்படி தன் சகோதரனை உயிர் பிழைக்க வைத்து இருவரும் சிவபெருமானிடம் சென்று அவரிடம் இருந்து வரம் பெற்று மதாலஸையை உயிர் பிழைக்க வைத்தனர் என்பதை விவரமாக எடுத்து உரைத்தார். ஆனாலும் சில சாபங்களின் காரணமாகவே அவனை சற்று நேரம் சோகத்தில் ஆழ்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கூறிய பின் மதாலஸாவை அவனிடம் சேர்த்து வைத்து இருவரையும் மகிழ்ச்சியுடன் இருக்குமாறு ஆசி கூறி விட்டு அவர்களை மீண்டும் பூவுலகிற்கு அனுப்பி வைத்தார். ருதுத்வஜன் கதை தொடர்கிறது……….
திகம்பரா திகம்பரா, ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப திகம்பரா!
திகம்பரா திகம்பரா, ஸ்ரீ தத்ததேவா திகம்பரா
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ
ஆறாவது நாள் பாராயணம்
ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
யோகீஸ்வராய தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத்
………………….ருதுத்வஜன் கதை தொடர்கிறது
மனைவியுடன் நாடு திரும்பிய புதல்வன் கூறிய அனைத்துச் செய்திகளையும் கேட்ட அரச குடும்பத்தினர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். காலம் ஓடியது. சத்ருஜித் மரணம் அடைந்தான். அவன் புதல்வன் ருதுத்வஜன் அரியணை ஏறி ஆட்சி செலுத்தலானான். பொறுப்பு ஏற்ற ருதுத்வஜனும் தன் தந்தைப் போலவே நல்லாட்சி நடத்தி வரலானான். இன்னமும் பல காலம் உருண்டது. மதாலஸை கர்பமுற்று அழகிய ஆண் மகனைப் பெற்று எடுத்தாள். பெயர் வைக்கும் விழாவில் அந்தக் குழந்தைக்கு நல்ல ஒரு பெயரை அரசன் சூட்டினான். ஆனால் அந்த அந்த அரச சபையின் விழாவில் அவன் குழந்தைக்குப் பெயரிட்டதும் உடனேயே மதாலஸை ஒரு கிண்டல் பார்வைப் பார்த்தபடிச் சிரித்தாள். சபையில் மற்ற எவரும் அப்படிச் செய்தால் அது அவமானமாக கருதப்படும். ஆனால் சிரித்ததோ இராணி என்பதால் அனைவரும் அமைதியாக இருந்தனர். மன்னனும் அதை பெரியதாகக் கருதாமல் விட்டுவிட்டது அல்லாமல் அவளிடம் அது குறித்துக் கேட்கவும் இல்லை. அந்தக் குழந்தையும் நல்ல பண்போடு வளர்ந்தது மட்டும் இன்றி அதி புத்திசாலியாகவும் திகழ்ந்தது.
அந்தக் குழந்தையை வளர்த்த நேரங்களில் மதாலஸை பல தத்துவப் பாடல்களைப் பாடி தூங்க வைப்பாள். அந்தப் பாடல்கள் அனைத்துமே, ‘இந்த பாழாய் போன பூமியில் ஏன் பிறந்தாய் என்றும், உலகமே ஒரு மாயை, அதில் பற்றற்று இருக்க வேண்டும்’ என்ற கருத்துக்களை உள்ளடக்கியே இருந்தன. சில நாட்கள் அதை கவனித்த மன்னன் குழந்தைக்கு போய் ஏன் அவள் தத்துவப் பாடல்களைப் பாடி உறங்க வைக்கிறாள், அதற்கு அந்த வயதில் என்ன புரியும் என வியந்தது உண்டு. அவள் தனக்குத் தெரிந்ததைதானே பாடுவாள் என்று எண்ணிக் கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்து வந்தான். அது மட்டுமா ‘தூய்மையான ஆத்மாவுடன்தான் நீயும் பிறந்து உள்ளாய் என்பதினால் நான் கூறுவதைக் கேள் மகனே, ஒரு இடத்துத் தண்ணீரும் இன்னொரு இடத்துத் தண்ணீரும் ஒன்றாகக் கலந்தால் இரண்டும் தண்ணீர் ஆகத்தான் இருக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. ஆனால் அசுத்தமான தண்ணீரும் சுத்தமான தண்ணீரும் கலந்தால் நல்ல நீர் கூட அசுத்தம் ஆகி விடுவது போல, கூடா நட்பு கேடாய் விளையும் என்பதினால், தூய ஞானிகளுடன் மட்டுமே நீ தொடர்ப்பு கொண்டு அவர்கள் தரும் நல் போதனைகளை பெற்றுக் கொண்டு உன் மனதை தூயமாக வைத்துக் கொள்ள வேண்டும். தூய்மை என்பது வெளித் தெரியும் தோற்றம் அல்ல, அது உன் உள் மனதில் உள்ள ஆத்மா ஆகும்’ என்றெல்லாம் தத்துவார்த்தமான போதனைகளை செய்தாள். அவள் ஏன் இந்த சிறுவயதிலேயே உள்ள மகனுக்கு, கூட உள்ள மனிதர்களை தவிர்த்து ஞானிகளுடன் தொடர்ப்பை வைத்திருக்க வேண்டும் என அறிவுரைக்கு கூறுகின்றாள் என்பது எவருக்கும் விளங்கவில்லை. ஆனால் அந்த போதனைகள் மகனின் மனதில் ஆழமாகப் பதியலாயிற்று. இந்த நிலையில்தான் சிறு சலசலப்பைத் தோற்றுவிக்கும் வண்ணம் அந்தக் குழந்தை பன்னிரண்டு வயதானதும் பெற்றோர்களை விட்டு விலகி காட்டுக்குச் சென்று துறவறத்தில் தன்னை இணைத்துக் கொண்டு விட்டது. அதைக் கண்ட மன்னன் ஆடிப் போனான். மதாலஸையோ ஒன்றுமே நடக்காதது போல கவலை இன்றி இருந்தாள். அவள் எந்தப் பதற்றமும் அடையவில்லை. மன்னனால் இராணியின் போக்கைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
இன்னமும் காலம் ஓடிற்று. மதாலஸை மீண்டும் கர்பம் தரித்து இன்னொரு ஆண் மகனைப் பெற்றாள். அதற்கு பெயர் சூட்டும் தருமணத்திலும் மதாலஸையின் கேலிச் சிரிப்பு தொடர்ந்தது. அந்தக் குழந்தையை வளர்த்த நேரங்களிலும் மதாலஸை பாடிய பாடல்கள் பழையபடியே இந்த பாழாய் போன பூமியில் ஏன் பிறந்தாய் என்றும், உலகமே ஒரு மாயை, அதில் பற்றற்று இருக்க வேண்டும் என்ற கருத்துக்களையே உள்ளடக்கி இருந்தன. அவனுக்கும் இப்படியான போதனைகளை செய்தாள் ‘இந்த உலகில் உள்ள அனைத்துமே உருவமற்ற ஒன்றான அவன் மட்டுமே. உருவமற்றவன் அவன் , கானல் நீரைப் போன்று காட்சி அளிக்கும் அவன் இருக்கிறான் என்பதை எப்படி நம்புவது என யோஜனை செய்யாதே. உன் உடலே உருவமற்ற ஒரு ஆத்மாவினால் இயங்குகின்றது எனும்போது, உலகத்தையே தன்னுள் அடக்கி உள்ள உருவமற்ற ஒன்றான இறைவன் உள்ளார் என்பதையும் நீ நம்ப வேண்டும். உன் உள்ளுக்குள்ளும் வெளியிலும் இருப்பது யார் தெரியுமா, என் உடலில் இருந்து வெளிவந்த நீயும் அல்ல, உன்னுள் ஓடும் எண்ண அலைகளை தந்த நானும் அல்ல. அது அந்த பரமாத்மனே. உனக்குள் தோன்றும் உருவமற்ற இலட்சக் கணக்கான உன் சிந்தனைகள் கூட அவனால்தான் என்பதை உணர்ந்து கொள்’. சில நாட்கள் அதை கவனித்த மன்னன் இந்தக் குழந்தைக்கும் ஏன் தத்துவார்த்தமான போதனைகளையே அவள் ஏன் செய்கின்றாள்? அதற்கும் அந்த வயதில் என்ன புரியும் என எண்ணினான். அவளிடம் அது குறித்துக் கேட்க எண்ணினான். ஆனாலும் இனம் புரியாத எதோ ஒரு காரணத்தினால் அவளிடம் அது குறித்துக் கேட்பதைத் தவிர்தான். இன்னும் சில நாட்கள் கழியட்டும் என இருந்தான். அந்தக் குழந்தையும் அதி புத்திசாலியாக வளர்ந்து வயதுக்கு வந்ததும் பெற்றோர்களை விட்டு விலகிக் காட்டிற்கு சென்று துறவறத்தில் தன்னை இணைத்துக் கொண்டு விட்டது.
மன்னன் உடைந்து போனான், மாறாக மதாலஸையோ அப்போதும் கவலையுற்றே இருந்தாள். அந்த நிலையிலும் ஆச்சரியப்படும் வகையில் கணவனை மகிழவிப்பதிலோ, இல்லை அவருக்கு பணிவிடை செய்வதிலோ எந்த குறையும் அவள் வைக்கவில்லை. அவனுடன் இருக்கும் நேரங்களில் மிகவும் மகிழ்சியுடன் கூத்தாடிக் கொண்டுதான் இருப்பாள். ஆனால் அந்த நேரங்களைத் தவிற பிற நேரங்களில் எவருடனும் பேசாமல் கற்சிலைப் போலவே தனியாக அமர்ந்து கொண்டு யோசனை செய்தபடி இருப்பாள். அவளை அரசனால் மட்டும் அல்ல மற்றவர்களினாலும் புரிந்து கொள்ள முடியவில்லை. மூன்றாம் முறையாக மதாலஸை கர்பமுற்றாள்.
இப்போதாவது நிலைமை மாறும் என காத்திருந்த மன்னன் முன்பு போலவே பெயர் சூட்டும் தருமணத்தில் மீண்டும் மதாலஸை கேலியாக சிரிப்பதைக் கண்டான். அந்தக் குழந்தைக்கும் முன்பு மற்றக் குழந்தைகளுக்கு பாடியது போலவே தத்துவப் பாடல்களை பாடி வளர்த்தாள். ‘ஒரு யோகி எப்படி இருக்க வேண்டும் தெரியுமா, நேற்றல்ல, இன்றல்ல, நாளை கூட எனக்கு ஒன்றும் இல்லை என எவற்றிலும் பற்றின்றி, எதனுடனும் ஐக்கியம் ஆகாமல் இருக்க வேண்டும். தனியாக வாழ பழகிக் கொள்ள வேண்டும். மனம் அமைதியாக ஆனந்தமாக, நிறைவுடன் இருக்க வேண்டும். ஒரு குடிசையிலோ, நதிக் கரையிலோ, இல்லை மலைப் பகுதியிலோ எங்கிருந்தாலும் ஒரு யோகி பிரும்மனுடன் கலந்தே இருக்க வேண்டும். அவர் இறுதிப் பயணம் வேதங்கள் மீதோ, தோற்றங்கள் மீதோ, எண்ணற்ற செல்வங்கள் மீதோ இல்லாமலும், உலகின் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கியோ அமைவதில்லை. அவர் இறுதிப் பயணம் பிரும்மனை நோக்கியே அமைய வேண்டும். அதனுடன் இரண்டரக் கலப்பதையே தன் வழிப் பயணமாக இருக்க வேண்டும்’ என்றெல்லாம் அந்த சிறுவனுக்கும் போதனைகளை செய்து வந்தாள் . ஒன்று நன்கே புரிந்தது மன்னனுக்கு. தன் மனைவி மதாலசை கூறும் தத்துவங்கள் அனைத்துமே அவதூதரான ஸ்ரீ தத்தாத்ரேயரின் போதனைகள். அவள் ஏன் மீண்டும் மீண்டும் இல்லற வாழ்வில் தனக்கு பிறந்த தனது குழந்தைகளுக்கு ஸ்ரீ தத்தாத்ரேயரின் போதனை செய்கின்றாள் ? குழம்பிக் கிடந்தான் மன்னன். காலம் ஓடியது. அதி புத்திசாலியாக வளர்ந்தவண்ணம் இருந்த அந்த குழந்தையும் வயதுக்கு வந்ததும் பெற்றோர்களை விட்டு விலகிக் காட்டிற்கு சென்று துறவறத்தில் தன்னை இணைத்துக் கொண்டு விட்டது என நிகழ்சிகள் தொடர அவன் மனம் வருத்தம் அடைந்தது. எவருக்கும் புரியாதப் புதிராகவே மதாலஸை விளங்கினாள். மன்னன் தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்தான். அவன் எண்ணியபடியே நான்காம் முறையும் மதாலஸை கர்பமுற்று ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றாள்.
பெயர் வைக்கும் விழாவில் இம்முறை ஒரு மாறுதலுக்காக தன் மனைவியை நோக்கி அந்தக் குழந்தைக்கு ஒரு பெயர் வைக்குமாறு கூறினான். அவள் பெயர் வைத்தாவலாவது தன் மகன் உருப்படியாக நாட்டை ஆளுவான் என நம்பியே அப்படி செய்தான். அந்தோ பரிதாபம் முந்தைய எல்லா நிகழ்சிகளையும் தோற்கடிக்கும் விதத்தில் அனைவரும் கேலி செய்யும் வகையில் அவள் அந்தக் குழந்தைக்கு ‘அலர்கன்’ எனப் பெயர் சூட்டினாள். அலர்கன் என்றால் வெறி நாய் என்று அர்த்தம். மன்னன் அவமானத்தில் புழுங்கினான். அனைவரும் வெறுப்புடன் எழுந்து சென்று விட்டனர்.
முதன் முறையாக அன்றுதான் அரசன் தன் மனைவியிடம் சற்றுக் கோபத்துடன் பேசினான். ‘எதற்காக குழந்தையின் பெயரை வெறி நாய் என்ற பொருள் தரும்படி வைத்தாய், ஏன் ஒவ்ஒரு முறையும் நான் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டிய பொழுது சபை நடுவே சிரித்து என்னை அவமானப்படுத்தினாய், இதனால் உனக்கு என்ன மன மகிழ்ச்சி கிடைத்தது, எனக் கோபமாகக் கேட்டான். அவள் சற்று நேரம் மௌனமாக இருந்தாள். பிறகு மிகவும் சாந்தமாகக் கூறினாள் ‘மன்னா ஒவ்ஒரு முறையும் நீங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைத்த பொழுது உங்களை அவமதிக்க வேண்டும் என்று எண்ணி நான் சிரிக்கவில்லை. ஒரு முறையும் நீங்கள் குழுந்தைகளுக்குப் பெயர் வைத்த பொழுது நான் நினைத்தேன் இது என்ன பெயர், இதன் அர்த்தம் என்ன, பெயர் வைத்தது குழந்தையின் உடலுக்கா, இல்லை அதனுள் உள்ள ஆத்மாவிற்கா?
உடல் அழியக் கூடியது, ஆனால் ஆத்மாவிற்கோ அழிவில்லை. ஆத்மா உடலை விட்டு வெளியேறிய பின் அது எங்கே போகும் என எவருக்காவதுத் தெரியுமா, இல்லை அது தன்னுடன் தன் பெயரையும் கொண்டு செல்லுமா, வைத்தப் பெயருக்கும் அது வாழும் முறைக்கும் எதுவும் சம்மந்தம் இருக்கின்றதா, இந்திரன் எனப் பெயர் வைத்தால், இந்திரனைப் போல குணத்தைக் கொண்டுதான் நடக்கிறதா? ஒவ்ஒருவரும் அத்தனை சாஸ்திரோதயமாக மந்திரம் ஓதி வைக்கும் ழுபயர் ஒரு அடையாளத்துக்குத்தானே. அதற்காக இப்படி கஷ்டப்பட்டு ஒவ் ஒருவரும் தத்தம் குழந்தைகளுக்கு வைக்கும் பெயருக்கும் அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்து கொள்ளும் முறைகளுக்கும், வாழும் வாழ்க்கைக்கும் எந்த விதமான சம்மந்தமும் இன்றி இருக்கும் பொழுது, இதற்கு என்ன வைபவம், இதற்கு ஏன் முக்கியத்துவம? தங்களுக்கு வைத்தப் பெயருடன் எந்த வித பந்தமும் இன்றி வாழும் உயிர்களுக்கு மிகவும் யோசனை செய்து பொருளற்ற பெயர்களில் பெயரிட்டுக் கொண்டிருந்த சடங்குகளை குறித்து யோசித்தேன். என்ன பைத்தியக்காரத்தனமான சடங்குகள் இவை என எண்ணினேன். சிரிப்பு வந்தது, சிரித்தேன். அதனால்தான் நான்காம் குழந்தைக்குப் பெயர் வைக்குமாறு என்னிடம் கோரிய பொழுது, இத்தனை முறையும் பெயர்களுக்கும் வாழ்க்கைக்கும் சம்மந்தம் இல்லாமல் இருக்கும் விதத்தில் வளரப் போகும் குழந்தைகளுக்கு பெயர் வைத்து விட்டு, அது அழைப்பதற்காக வைக்கப்பட்ட பெயர் என்று கூறும் பொழுது, நானும் அழைப்பதற்காக மட்டுமே இருக்கட்டும் என்று பந்தமும் பொருளும் அற்ற அல்ர்கன் என்ற பெயரை வைத்ததை ஏன் உங்கள் மனம் ஏற்க மறுக்கின்றது?
அரசி கேள்விக் கணைகளைத் தொடுக்கத் தொடுக்க அவனால் பதில் எதுவும் கூற முடியவில்லை. மனதிலே என்ன நினைத்து இப்படிக் கூறுகிறாள் எனத் தெரியாத பொழுது என்ன செய்வது, சற்று நேரம் இப்படியாக தொடர்ந்து கொண்டிருந்தன அவர்களுடைய சம்பாஷணைகள்.
முடிவாக மன்னன் அவளிடம் ஒரு வேண்டுகோள் வைத்தான். ‘ஆனது ஆகட்டும். முதல் மூன்று குழந்தைகளுக்கும் தத்துவப் பொருட்களை உள்ளடிக்கிப் பாடி, தாலாட்டி அவர்களுக்கு புத்திமதி கூறும் விதத்தில் பாடிய நீயோ அந்த போதனைகளில் எவற்றிலுமே தான் பூமியில் பிறந்ததற்கான கடமைகளை செய்ய வேண்டும் என்ற கருத்தினை உள்ளடக்கிப் போதிக்கவில்லை. மாறாக பட்டற்று வாழ வேண்டிய வாழ்கையின் தத்துவங்களையே, வழி மார்கங்களை அவற்றின் மூலம் குழந்தைகளுக்கு போதித்து இருக்கின்றாய். ஆகவே இந்தக் குழந்தைக்காவது பூமியில் ஒரு அரச குடும்பத்தில் பிறந்து விட்டதினால், மக்களுக்கு தான் ஆற்ற வேண்ழுய கடமை என்ன என்ற உண்மையைக் கூறும் பாடல்களை மட்டும் பாடி வளர்க வேண்டும்.
அவற்றைக் கேட்ட மதாலஸை எந்த வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. முகத்தில் கோபமோ, வெறுப்போ, மகிழ்சியோ, எதையும் காட்டவில்லை. நான்காவதாகப் பிறந்த குழந்தையை பொறுப்புணர்ச்சி கொண்ட, கடமை உணர்வு கொண்டவனாக மாற்றுவதாகக் கூறினாள். அதற்கேற்ப அடுத்த நாள் முதல் அவனுக்கு உலகப் பற்றோடு வாழத் தேவையான மனதை வைத்திருக்கும் வகைக்கான பாடல்களைப் பாடியவண்ணம் வளர்த்தாள். தத்தாத்திரேயரின் பல மகிமைகளையும் அவனுக்கு அடிக்கடி கதைகளாக போதனை செய்தாள். நாட்கள் நகர்ந்தன. அல்ர்கன் சாத்திரம் படித்தான், அரசியல் அறிவு பெற்றான், படிப்படியாக இராஜாங்க சாத்திரம் முழுவதையும் தெரிந்து கொள்ளும் வகையில் பாடங்கள் பெற்றான். வளர்ந்து வந்தவன் வயதுக்கு வந்ததும் ருதுத்வஜன் அவனுக்கு திருமணம் செய்து வைத்தான். தன் முழு அரசு பொறுப்பையும் அவனிடம் ஒப்படைத்து விட்டு மனைவியுடன் கானகம் சென்று விட்டான்.
தன் பெற்றோர்கள் தன்னை விட்டுப் போவதை அல்ர்கனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அழுதான். ஆனால் அவன் தாயார் அவன் கையில் ஒரு மோதிரத்தை அணிவித்து விட்டுக் கூறினாள் ‘அலர்க்கா, உன் கடமைகளை சரிவர செய்து கொண்டு இரு. பொது வாழ்கைக்கு வந்து விட்டவன் அனைத்து சோதனைகளையும் எதிர் கொள்ளத்தான் வேண்டும். என்றைக்கு உன்னால் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையை நீ அடைவாயோ, அன்றைக்கு இந்த மோதிரத்தை எடுத்து உற்றுப் பார்த்தால் உனக்கு ஒரு வரி கிடைக்கும். அது வரை இந்த மோதிரத்தை போட்டுக் கொண்டு இரு. உன்னால் சமாளிக்க முடியாத அளவு பிரச்சனை உள்ளவரை நான் கூறியதை நினைத்தும் பார்க்காதே.
அதைக் கூறிய பின் தன் கணவருடன் சேர்ந்து கானகம் சென்று விட்டாள். காலம் ஓடிற்று, அலர்கன் அனைத்தையும் மறந்தான். அரசு காரியங்களை கவனித்தபடியும், தன் மனைவி மக்களின் இன்பங்களிலும் முழ்கியபடிக் கிடந்தான். அப்பொழுது ஒருமுறை இளம் வயதிலேயே இல்லறத்தைத் துறந்துவிட்டு வனவாசம் செய்யச் சென்றிருந்த அலர்கனின் இரண்டாவது சகோதரன் அந்த நாட்டிற்குள் பிரவேசித்தான். தன்னுடைய இளையவன் அரசணையில் ஏறி உள்ளான் எனத் தெரிந்து கொண்டதும் மனித உணர்வுகள் சற்றே அவனைத் தாக்கின. என்னதான் யோகி என்றாலும் தனக்குப் பிறகுதான் மற்றவனுக்கு என்ற எண்ணம் வந்து விடுவது இயற்கை அல்லவா, தனக்கு பதில் தன் தம்பி சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பதைக் கண்ட பின் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் காசியை அடைந்தான். அவனுக்குத் தெரியும் காசியின் மன்னன் தன் தம்பியின் மீது பொறாமைக் கொண்டவன். அவனிடம் சென்றவன் தான் உயிருடன் இருக்கையிலேயே தன்னுடைய இளைய சகோதரன் நாடாளுவதைத் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் அதனால் தனக்கு உதவி செய்து தன் தம்பியிடம் இருந்து இராஜ்யத்தைப் பறித்துத் தன்னிடம் தருமாறு வேண்டினான்.
அதி பராக்கிரமசாலி என்றாலும் தர்ம நெறிகளும், சாஸ்திரங்களும், யுத்த நெறி முறைகளையும் நன்கு கடை பிடித்து வந்தவன் காசியை ஆண்டு வந்த மன்னன். தன்னிடம் வந்து அலர்கன் மீது போர் தொடுத்து, அவன் இராஜ்யத்தைப் பறித்து தருமாறு உதவி கேட்டு வந்தவன் அலர்கனின் அண்ணனே என்றாலும், தான் அல்ர்கன் மீதுப் பொறாமைக் கொண்டிருந்தாலும் எந்த காரணத்தைக் கூறி அல்ர்கன் மீது படை எடுப்பது என குழம்பியபடி இருந்தான் காசி மன்னன். மன்னனின் குழப்பத்தை நன்கு பயன் படுத்திக் கொண்டான் அலர்கனின் இரண்டாவது சகோதரன். தினமும் மன்னனிடம் சென்று இல்லாததையும் பொல்லாததையும் கூறி அவனை உசுப்பி விட கடைசியில் தன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழி இன்றிப் போக முடிவாக அலர்கன் ஆண்டு வந்த நாட்டின் மீது படையெடுக்க முடிவெடுத்தான்.
பெரும் போர் மூண்டது. ஒவ்ஒரு இடமாக தோற்றுக் கொண்டே நாட்டின் பெரும் பகுதியை இழந்த அலர்கன் நிலை குலைந்துப் போய் அரண்மணை இருந்த கோட்டையின் கதவுகளை மூடிவிட்டு உள்ளுக்குள் இருந்தபடி போரிடலானான். கோட்டை முற்றுகைக்கு உட்பட்டது. நிலை குலைந்துப் போன அலர்கன் மனம் துயரத்தில் ஆழ்ந்தது. ஏதேச்சையாக தன் தாய் தனக்குக் கொடுத்த மோதிரம் நினைவுக்கு வர அதை எடுத்து உற்று நோக்கினான். அதில் எழுதப்பட்டு இருந்த வாசகங்கள் ‘பற்றை நீக்க வேண்டும், முடியாவிடில் அதற்கு சீரியோர் உதவியை நாட வேண்டும்’ அது மட்டும் இல்லாமல் அவன் தாயின் நினைவும், அவள் அடிக்கடி கூறும் ஸ்ரீ தத்தாத்ரேயர் மகிமைகளும் நினைவுக்கு வந்தன.
ஒரு நாள் எவரிடமும் கூறாமல் தன் ரகசிய சுரங்கப் பாதை மூலம் கோட்டையை விட்டு வெளியேறி ஸ்ரீ தத்தாத்ரேயர் இருந்த சஞ்யாத்திரி மலையை அடைந்தான். அங்கு சென்று அவர் காலடியில் விழுந்து அழுதான். ஸ்ரீ தத்தாத்ரேயர் அவனை எழுப்பி தேற்றலானார். அவருக்கு மதாலஸை யார் என்பதும், அவளுடைய மகனே அலர்கன் என்பதும் நன்கு தெரியும். அவர் கூறலானார், ‘குழந்தாய் நீ என் இப்படி ஒன்றும் அற்ற விஷயத்திற்காக அழுது புலம்புகின்றாய்? அலர்கன் தன்னுடைய சங்கடத்தை அவரிடம் எடுத்துக் கூறினான். தனக்கு உதவி செய்யுமாறு வேண்டினான்.
ஸ்ரீ தத்தர் அவனுக்கு அறிவுறைக் கூறினார். ’அலர்கா..நீ ஏன் ஒன்றும் அற்ற விஷயத்திற்காக அழுது புலம்புகின்றாய், ஒரு கணம் நினைத்துப் பார், நீ யார் , நீ …… நீயே அல்ல. உயிரற்ற ஜடமான உடலில் உழன்று கொண்டிருக்கும் ஆத்மாவே நீ என்ற உன் உள்ளே இருப்பது. நான் எனும் அந்த ஆத்மாவின் உருவம் என்ன, மரமா, மண்ணா, விண்ணா, காற்றா, என்ன உருவம் அதற்கு என்று நினைத்துப் பார்த்தாயா?, உன் ஜடமான உடலின் எந்த அங்கமாவது நீ என்ற அந்த ஆத்மாவை யார் என்று கூற முடியுமா அல்லது எண்ணிப் பார்கத்தான் முடியுமா, நான் என்ற அந்த ஆத்மாவிற்கு துன்பம் இல்லை, துயரம் இல்லை, விருப்போ வெறுப்போ இல்லை. அது சுதந்திரமானது, தனித் தன்மையானது. நீ இப்போது இங்கு இருக்கின்றாயே, துன்பப்படுகிறாயே, எதற்காக? உன்னுள் உள்ள எந்த பந்த பாசங்களும், எவருக்கும் கட்டப்படாமல் உள்ள ஆத்மாவிற்காகவா, இல்லை ஜடமான உடலுக்கா?’
‘அலர்க்கா இந்த உலகம் எத்தனை விசித்திரமானதோ அது போலத்தான் நம்முள் உள்ள இதயமும் விசித்திரமாக நடக்கும். சாதாரணமாக இருந்த இதயம் உலகின் மீது பற்றுக் கொள்ளத் துவங்கியதுமே மமதையால் சூழப்பட துவங்குகின்றது. பிறகு ஆசைத் தோன்றத் தோன்ற இல்லறம், செல்வ விருத்தி விரிவடையத் துவங்க அது அப்படியே வளரத் துவங்குகின்றது. மற்றவர்கள் சேர்க்கையே ஒருவன் மனதை அலைபாய விடுகின்றது. அது துக்கத்தையும் தருகின்றது. ஆகவே அந்த மாதிரியான சேர்கைகளை விலக்க வேண்டும். அது மமதையை நீக்கும். அப்போதுதான் யோகம் சித்திக்கும். யோகம் சித்தித்தால் அலைபாயும் மனது கட்டுப்பட்டு விடும். மனம் ஸ்திரப்படும். மனதை ஸ்திரமாக வைத்துக் கொள்ளப் பழகி விட்டால் சஞசல பாபம் விலகி வைராக்கியம் வரும். வைராக்கியம் வந்தால் பார்க்கும் பொருட்களில் குறைகள் தோன்றத் துவங்கும். குறைகள் தோன்றத் தோன்ற அந்தப் பொருட்கள் மீதான நாட்டமும் குறையத் துவங்கும். அந்த நிலைத் தொடரும் பொழுது முக்தி கிடைக்கும். ஒருவன் ஞானியாகத் துவங்குகின்றான்’
அலர்கன் அமைதியாக கேட்டுக் கொண்டு இருக்க, ஸ்ரீ தத்தாத்ரேயர் தொடர்ந்து கூறலானார். ‘ஞானி என்பவனுக்கு அவர்கள் எங்கு தங்குகின்றார்களோ-மரத்தடி நிழல், ஆற்றுப் படுக்கை, நீர் நிலைகள், குகைகள், பாறை இடுக்குகள், அத்தனை ஏன் வெட்ட வெளியும் கூட அவர்கள் வீடுகள்தான் என்ற நினைப்பே இருக்க வேண்டும். அத்தனை மனப் பக்குவம் அவர்களுக்கு வேண்டும். தாம் தாங்கும் இடத்துக்குகேற்ப தம் மனதை அதனுடன் இணைத்துக் கொண்டு விட வேண்டும். அதை போல தங்கும் இடங்களில் என்ன கிடைக்கிறதோ அதையே உணவாகவும் உண்ண பழக வேண்டும். சில நேரங்களில் ஒன்றுமே கிடைக்காமலும், தண்ணீர் மட்டுமே கிடைத்துக் கொண்டும் இருக்கலாம். அவை போதும் என்று நினைவை ஸ்திரமாக்கிக் கொண்டு விட்டால் போதும், ஞான நிலையின் முதல் படியில் காலை வைத்து விட்ட நிலைக்கு சென்று விடலாம். இந்த தன்மைகளில் ஆன மன நிலையில் வாழத் துவங்கினால், தான் உள்ள இடமே தன் உலகம் என்ற பற்றற்ற மன நிலைக்கு சென்று விடலாம். எந்த உலகப் பொருட்களிலும் பற்று இருக்காது. இதை எல்லாம் எளிதில் அடைய முடியாது. முதலில் கடினமாக தோன்றும் இந்த பாதையில் செல்ல வேண்டும் எனில் இதை ஒரு குருவின் தீட்சைப் பெற்றே துவங்க வேண்டும். மனப்புலன்களை அடக்க முயல வேண்டும். குரு கொடுக்கும் ஞான மார்கத்தைக் கடை பிடிக்க வேண்டும். அவர் எதிரே அமர்ந்து கொண்டு அப்பியாசம் செய்து, மூச்சை அடக்கி, பிராணாயம் முதலியன செய்த வண்ணம் தியான மார்கத்தை ஏற்றுக் கொண்டு அதில் முழுமையாக தன்னை இணைத்துக் கொண்ட பின்னரே சமாதி நிலையை அடைகின்றான்.
அப்போது பல சித்திகளைக் கை கொள்ளும் வாய்ப்புத் தோன்றும். அதை முறைகேடாகப் பயன்படுத்தாமல், மனதை நழுவ விட்டுவிடாமல் இருந்தால் யோகம் தானே சித்திக்கும். அதற்குத் தேவை விடாமுயற்சி, தொடர்ந்து விடாமுயற்சி செய்ய வேண்டும். அதற்கு உதாரணமான எறும்புக்களைப் பார், அவற்றிற்கு எத்தனை சிறிய வாய் இருக்க வேண்டும். ஆனால் அவைகள் வசிக்கும் இடத்தைப் பார்த்தாயா, அத்தனை சிறிய ஜீவன்கள் எத்தனைப் பெரிய பொந்தில் வசிக்கின்றன. மரத்தைப் பார், அதில் உள்ள இலைகளையும், பழங்களையும் பறிக்கப் பறிக்க அவைகள் மீண்டும் மீண்டும் அவற்றை வளர விட்டபடி வளர்ந்துதான் வருகின்றன. இலைகளைப் பறித்து விட்டானே என அவை சோர்ந்து விடவில்லை. மீண்டும், மீண்டும் அதை உற்பத்தி செய்ய மரம் சளைப்பது இல்லை. அப்படித்தான் விடா முயற்சியுடன் யோகப்பியாசனம் செய்பவன் யோகி ஆகிறான். அனைத்துப் புலன்களையும் தனக்குள் அடக்கி வைத்துக் கொள்கின்றான். இப்படியாக தன் புலன்களை அடக்கி மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் பொழுதுதான் நான், எனது என்ற மமதையும் அகங்காரமும் நீங்கும். அது நீங்கினாலே மனம் நிம்மதி பெறும்’
இப்படியாகப் பல்வேறு உதாரணங்களைக் காட்டி ஸ்ரீ தத்தாத்ரேயர் உபதேசிக்கத் துவங்கியதுமே தன் மனம் அமைதி அடையத் துவங்கியதை உணர்ந்தான் அலர்கன். எத்தனை பேதையாக இருந்திருக்கின்றேன் நான் என எண்ணியவாறே தத்தரின் காலடியில் விழுந்து மீண்டும் வணங்கினான். ‘ஸ்வாமி நான் இன்றுதான் இருட்டில் இருந்து வெளியே வந்து வெளிச்சத்தை நோக்குகின்றேன். என் அஞ்ஞானம் அழிந்தது. உள்ளத்தில் யோகம் என்ற செடியை துளிர் விடச் செய்து இருக்கின்றீர்கள். என் மனம் அமைதி பெற்றது… அமைதி பெற்றது’ என்று கூறிய பின்னர் ஸ்ரீ தத்தர் மீது பல்வேறு தோத்திரங்கள் பாடி, அவரைத் துதிக்கும் பல பாடல்களைப் பாடிவிட்டு அவரிடம் விடை பெற்றுக் கொண்டு மீண்டும் சுரங்கப் பாதை வழியே தன் அரண்மனைக்குத் திரும்பிச் சென்றான்.
படையினர் அனைவரையும் அழைத்து அவர்களிடம் கூறினான். ‘இனி இந்த யுத்தத்தை நான் தொடர்ந்து நடத்தப் போவது இல்லை. முடிவுக்குக் கொண்டு வந்து விட்டேன். எது நடக்குமோ அது நடக்கும் என்பதை நினைவில் கொண்டு நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருங்கள். இனி நான் மீண்டும் கூறும் வரை ஆயுதங்களைப் பயன்படுத்தாதீர்கள்’ என்று தன் படையினருக்குக் கட்டளை இட்ட பின் அரண்மனையை விட்டு தான் மட்டும் தனியாக வெளியேறினான்.
தன் மீது படையெடுத்து அரண்மனையை முற்றுகை இட்டபடி நின்றிருந்த காசி மன்னன் முன் திடுதிடுப்பெனச் சென்று நின்ற அலர்க்கனைக் கண்ட காசி மன்னன் திடுக்கிட்டான். கைகளில் ஆயுதங்கள் இன்றி நிராயுதபாணியாக அல்லவா வந்துள்ளான். அப்படி என்றால் வேறு எந்த விதத்தில் தன்னை தாக்க வந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தன்னுடைய வாளை உருவ நினைக்கும் முன்னரே அமைதியாக அலர்க்கன் கூறினான் ‘காசி ராஜனே போ, போய் என் அரசை நீயே எடுத்துக் கொள் இல்லை எனில் என் சகோதரனுக்குக் கொடு. அது உன் விருப்பம். நான் நாட்டை விட்டு வெளியேறுகிறேன்’.
இத்தனை நாட்கள் ஆகியும் கோட்டையில் இருந்து எந்த வித எதிர்ப்புமே காணப்படவில்லையே, ஒற்றர்களும் அரசன் கோட்டைக்கு உள்ளே இல்லை என்று கூறினார்களே, அப்படிப்பட்ட நிலையில், தர்மத்திற்கு விரோதமாக அரசன் இல்லாத பொழுது உள்ளே நுழைவது பாவம் என்று எண்ணியபடி மனக்குழப்பத்தில் இருந்த காசி ராஜன் தன் முன் வந்து நின்ற அலர்கனைப் பார்த்துக் கேட்டான் ‘திடீர் என உனக்கு என்ன ஆயிற்று , உயிருக்குப் பயந்து சரண் அடைந்து இப்படி நடிக்கின்றாயா, இல்லை வேறு எந்த திட்டத்துடனும் வந்து நிற்கின்றாயா’ என வினவியதுமே கல கல என்று சிரித்தான் அலர்கன். “பயமா, எனக்கு எதற்கு இனி பயம் வேண்டும். என் மனது மிகத் தெளிவாகத்தான் உள்ளது ராஜனே. உள்ளது ஒரே உயிர். அதுவும் தனக்கு விதிக்கப்பட்ட கால வரம்பு முடிந்ததும் எப்பொழுது வேண்டுமானாலும் போகும். நீ வெளியே முற்றுகை இட்டபோது நான் ரகசியமாக வெளியேறி தத்தாத்திரேய ஸ்வாமியை சந்தித்தேன். அவர் எனக்கு கொடுத்த ஞான உபதேசத்தினால்தான் இந்த மனமாற்றமே தவிற எனக்கு உன்னிடமோ, வேறு எவரிடமோ இனி பயம் தேவை இல்லை. என் இந்த மன மாற்றத்திற்கு காரணமே நீயும் என் சகோதரனும்தான். உங்களுக்கு அதற்காக நான் நன்றி கூற வேண்டும். என் மீது தக்க சமயத்தில் படை எடுத்து என் படை பலத்தைக் பலவீனப்படுத்தி இருக்காவிடில் என்னால் ஸ்ரீ தத்தஸ்வாமியை சந்தித்து இருக்க முடியாது என்பதினால் மீண்டும் மீண்டும் உங்களுக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்’என்று பதில் தந்தான் அலர்கன்.
அதைக் கேட்டுக் கொண்டு இருந்த அலர்கனின் சகோதரன் தன் குதிரையை விட்டு கீழே குதித்த பின் தன் தம்பியை அணைத்துக் கொண்டுக் கூறினான் ‘தம்பி, என் மனம் இன்றுதான் மிகவும் மகிழ்சியாக இருக்கிறது. நல்ல குருவைக் கண்டு பிடித்து துணையாக்கிக் கொண்டாய். நல் வழியில் சென்று விட்டாய்’ இப்படிக் கூறிய பின் காசிராஜனைப் பார்த்துக் கூறினான் ‘மன்னா நான் நினைத்த காரியம் நடந்து விட்டது. நீ எனக்கு உதவியதற்கு நன்றி மன்னவா, மிக்க நன்றி. இனி எவர் வேண்டுமானாலும் இந்த அரசை ஏற்றுக் கொண்டு நாடாளுங்கள்’ என்று கூறி விட்டு செல்லத் துவங்கியவனை தடுத்து நிறுத்தினான் காசிராஜன். ‘அன்புச் சகோதரனே, இது என்ன கூத்து, உனக்காக ராஜ்யத்தைப் பறித்துத் தர நான் இங்கு படையெடுத்து வந்தால் உன் சகோதரனும் ராஜ்யத்தை வேண்டாம் என்கிறான், நீயும் அதை ஏற்க மறுக்கிறாய். இங்கு என்ன நடக்கிறது இப்போது? என் மூளையைப் போட்டு ஏன் குழப்புகின்றிர்கள? என்று கேட்டான்.
அலர்கனின் சகோதரன் கூறினான் “காசிராஜா நல்ல கேள்வி கேட்டாய் அப்பனே…. நல்ல கேள்விதான் இது. உனக்கு அதன் காரணத்தை விளக்குகிறேன் கேள். எங்களுடைய தாயார் உடலளவில் மட்டுமே எங்களுடைய தந்தை ருதுத்வஜனின் மனைவியே தவிற அவள் ஒரு யோக மாதா ஆவாள். விதிப்படி என் தந்தையின் மனைவியாக மாற வேண்டிய கட்டாயம் இருந்தது அவளுக்கு. அவள் மூலம் நாங்கள் நால்வர் பிறந்தோம். அவள் யோகமாதா என்பதினால் எங்களுக்கு உலக ஆசையைத் துறந்து இல்லறத்தை விட்டு விலகி பரமானந்தத்தை அனுபவிக்கும் வகையில் செல்லும் வகைக்கான அறிவு புகட்டினாள். ஆனால் துரதிஷ்டவசமாக என் கடைசி சகோதரனுக்கோ உலகப் பற்றுடன் கூடிய வாழ்வை வாழும்படியான அறிவு புகட்டும்படி கட்டாயம் ஏற்பட்டது. அவனும் இல்லற சுகமே பெரும் சுகமென வாழ்ந்து வந்தான். அந்த சமயத்தில் இங்கு வந்த நான் அதைக் கண்டு கவலையுற்றேன். ஒரு யோகேஸ்வரியின் வயிற்றில் பிறந்த என் சகோதரன் இப்படி காட்டு மிருகம் போல சல்லாபத்தில் முழ்கிக் கிடப்பது அந்த உத்தம யோகேஸ்வரிக்கு அல்லவோ மகாபாபம் என்று எண்ணியே உன் உதவியை நாடி அவனை மீண்டும் யோக வாழ்க்கைக்கு மீட்டுக் கொண்டு வர முயன்றேன். அதற்கு ஒரே வழி அவனை முதலில் துக்கப்படுத்தி, தனிமைப்படுத்தி, மனம் மற்றும் உடல் வலிமையையும் இழக்க வைக்க வேண்டும் என்பதே. அதை செய்ததும் நான் விரும்பியது நிறைவேறிவிட்டது. என் கடமையும் முடிந்து விட்டது’ என்றான்.
காசிராஜனும் தான் இத்தனை நாட்களும் எப்படி இப்படி ஒரு உன்னத வாழ்க்கையை தெரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேன் என வருந்தி, அந்த ராஜியத்தை அலர்கனின் வம்சமே ஆளட்டும் என்று கூறிவிட்டு தன் இராஜ்யத்திற்குத் திரும்பச் சென்று விட அலர்கனும் தன் ராஜயத்தை தன் பிள்ளையிடம் ஒப்படைத்து விட்டு தன் சகோதரனுடன் கானகம் சென்று விட்டான். இப்படியாக அலர்கன் என்பவனின் கதை மூலம் எப்படியான பாக்கியத்தை தன்னை நாடி வரும் பக்தர்களுக்குத் ஸ்ரீ தத்தர் தந்து கொண்டு அவர்களை நல்வழியில் அழைத்துச் செல்கின்றார் எனத் தெரிய வருகின்றது.
திகம்பரா திகம்பரா, ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப திகம்பரா!
திகம்பரா திகம்பரா, ஸ்ரீ தத்ததேவா திகம்பரா
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ
ஏழாவது நாள் பாராயணம்
ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
யோகீஸ்வராய தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத்
விஷ்ணுதத்தரும் ஸ்ரீ தத்தாத்திரேயரும்
முன்னொரு காலம். விஷ்ணுதத்தன் என்ற ஒரு நல்ல அந்தணன் தன் மனைவியுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டு இருந்தான். வேத ஒழுக்கங்களை கடைபிடித்த வண்ணம் மனதில் கடவுள் பக்தி நிறையவே கொண்டு வாழ்ந்து வந்தவன். அவனுடைய நல்ல நடத்தையைக் கண்டு அனைவரும் அவனிடம் பெரிதும் மரியாதை கொண்டு இருந்தனர். அவன் வீட்டுக்கு அருகில் ஒரு புளிய மரம் இருந்தது. புளிய மரங்கள் பேய், பிசாசுகள் வசிக்கும் என்று நம்புவார்கள். அது உண்மை என்பது போல அந்த மரத்திலும் ஒரு பிசாசு வசித்து வந்தது. தினமும் பூஜை புனஸ்காரங்களை முடித்த பின் விஷ்ணுதத்தன் அங்கு வந்து நைவத்தியம் செய்த அன்னத்தில் சிறிது அன்னத்தை எதாவது பிராணிகள் சாப்பிடட்டும் என்று எண்ணி அந்த மரத்தின் அடியில் கொண்டு வந்து வைத்தப் பின்னர் உணவு அருந்துவது வழக்கம். தினமும் நடக்கும் ஒரு நியமம் அது. அந்த மரத்தின் கீழ் அவன் கொண்டு வந்து வைக்கும் அன்னத்தை அவன் சென்ற பின் புளிய மரத்தில் இருந்த அந்த பிசாசு வந்து சாப்பிட்டு விடும். ஆனால் விஷ்ணுதத்தனுக்கு தான் வைத்து விட்டுப் போகும் உணவை பிசாசுதான் சாப்பிடுகின்றது என்ற விவரம் தெரியாது. விஷ்ணுதத்தன் கொடுத்து வந்த உணவினால் அவனுக்கு அது எந்தக் கெடுதலையும் செய்வது இல்லை. ஆனால் மற்றவர்களுக்கு அது நிறைய தொல்லைகளைக் கொடுத்து வந்தது. நாட்கள் செல்லச் செல்ல விஷ்ணதத்தன் கொடுத்த உணவை அருந்திய அதற்கும் அவனைப் போலவே நல்ல குணங்கள் தோன்றலாயின. தான் பிறருக்கு கொடுக்கும் தொல்லைகள் தவறு எனத் தோன்றியது. தான் செய்து வந்த தீய காரியத்தை விட்டு விட்டது மட்டும் அல்ல தனக்கு உணவு தந்து வரும் விஷ்ணுதத்தனுக்கு எதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்தது.
தானோ ஒரு பிசாசு, எப்படி செய்வது, பல நாட்கள் அது பற்றி யோசித்த பின் ஒரு நாள் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உணவு கொண்டு வந்து அந்த மரத்தின் கீழ் வைத்துக் கொண்டு இருந்த விஷ்ணுதத்தன் முன் திடீர் என்று சென்று, தன் உருவத்தைக் காட்டியபடி நின்றது. அது மட்டும் அல்ல விஷ்ணுதத்தன் சுதாகரித்துக் கொள்ளும் முன்பே அவனிடம் ‘ஐயா உனக்கு என்ன உதவி வேண்டும், என்னிடம் கேள். செய்கிறேன்’ என்றது. விஷ்ணுதத்தனுக்கு ஒரே வியப்பு. ஒரு பிசாசு வந்து நம்மிடம் வந்து என்ன வேண்டும் கேள் என்று கூறுகின்றதே. ஆச்சரியத்தில் நின்றவனிடம் மீண்டும் கூறியது அது ‘பயப்படாதே அந்தணா, நான் உன் உப்பைத் தின்று வளர்ந்தவன். உன்னை எதுவும் செய்து விடமாட்டேன். இது சத்தியம். உனக்கு என்ன வேண்டும் என்று கேள். என்னால் முடிந்தவரை அதை நிறைவேற்றித் தருகின்றேன்’
பிசாசு இத்தனைக் கூறுகின்றதே, சத்தியம் வேறு செய்கிறதே. உண்மையாக இருக்குமா, சரி உண்மையோ, பொய்யோ, அதனிடம் என்ன வரம் கேட்பது, இப்படியாக எண்ணியவாறு தன் மனைவியுடன் அது குறித்து கேட்டு ஆலோசித்தப் பின் மறுநாள் தனக்கு என்ன தேவை என்று வந்து கூறுவதாக சொல்லிவிட்டுச் சென்றான். இரவு முழுவதும் அவனும் அவனுடைய மனைவியும் அது குறித்து ஆலோசித்தனர். அவர்களுக்கு நெடுநாட்களாக மனதில் ஒரு ஆசை இருந்தது. தாங்கள் வசிக்கும் பகுதியின் எங்கேயோ ஒரு இடத்தில்தான் ஸ்ரீ தத்தாத்ரேயர் இருப்பதாகக் கேள்விப்பட்டு இருந்தனர். மாபெரும் யோகியான அவரை சந்தித்து ஆசி பெற பலமுறை முயன்றும், பல்வேறு இடங்கள் சென்றும் இன்று வரை அவரை பார்க்க முடியவில்லை.
ஆகவே அந்த பிசாசின் உதவி பெற்று அவர் இருக்கும் இடத்துக்கு தங்களை அழைத்துச் செல்லும்படிக் கூறலாம் என முடிவு செய்தனர். மறுநாள் தன் எதிரில் மீண்டும் வந்து நின்ற பிசாசிடம் ‘உன்னால் முடிந்தால் எனக்கு தத்தாத்திரேயரின் தரிசனம் கிடைக்க வழி சொல்ல முடியுமா. அந்த உதவி செய்தால் மட்டும் போதும். வேறு எதுவும் தேவை இல்லை’ எனக் கேட்டார். ஸ்ரீ தத்தர் பெயரைக் கேட்டதுமே பயந்து அலறித் துடித்தது அந்தப் பிசாசு. ‘அந்தணரே, என்னிடம் என்ன உதவி கேட்கிறாய், உன்னை இந்நாள் வரை புத்திசாலி என நான் நினைத்தேனே அதைத் தவறு என்று காட்டுவது போல என்னைப் போய் தத்தாத்திரேயரிடம் அழைத்துப் போவாயா என்று கேட்கின்றயே, அது நடக்கக் கூடிய காரியமா? என்னைப் போன்றவர்கள் அவர் எதிரில் போய் நிற்க முடியுமா என யோசித்தாயா, அவர் என்னை பொசுக்கி விடமாட்டாரா, போகட்டும் வேறு எதுவும் வேண்டுமானால் கேள் தருகிறேன்’ என்றது. விஷ்ணுதத்தனுக்கு வேறு எதுவும் தேவை இல்லை என்றே தோன்றியது. வேதமுறைகளில் தங்களுடைய வாழ்க்கை அமைதியாக ஓடிக் கொண்டு இருக்கையில் லௌகீக வாழ்விற்கு என்ன வேண்டும் என்று எண்ணிய பின் ‘பரவாயில்லை விட்டு விடு. நான் எதோ கேட்டு விட்டேன் என்பதால் அதை நிறைவேற்ற முடியவில்லையே என வருந்தாதே. நீ இப்படிக் கேட்டதே கூட எனக்கு எதோ உபகாரம் செய்து விட்டதாகவே நினைக்கின்றேன். ஆகவே மனம் வருந்தாமல் திரும்பச் செல். எங்களுக்கு வேறு எந்தத் தேவையுமே இனி இல்லை. எதோ தத்தாத்ரேயரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அதனால்தான் கேட்டேன். விட்டு விடு’ என்று கூறி விட்டு வீட்டிற்குத் திரும்பச் செல்லத் துவங்கியவனை தடுத்து மீண்டும் அழைத்தது அந்தப் பேய்.
தனக்கு அத்தனை நாட்களும் உணவு தந்தவனுக்கு வாக்கு கொடுத்த பின் முடியாது என்று திருப்பி அனுப்புவது தவறல்லவா என சங்கடப்பட்டுக் கூறியது ‘அந்தணரே, என்னால் முடியுமோ முடியாதோ பரவாயில்லை . நீ கேட்டு விட்டதினால் உனக்காக ஒரு காரியம் செய்கிறேன். எங்காவது ஸ்ரீ தத்தாத்ரேயர் கண்களில் தென்பட்டால் அவர் இருக்கும் இடத்தைத் உடனே வந்து உனக்கு தெரிவிக்கின்றேன். ஆனால் அங்கு என்னால் வர முடியாது. தூரத்தில் இருந்து அவரை அடையாளம் காட்டுகிறேன். நீதான் அவரிடம் சென்று சரணடைய வேண்டும். ஒன்றை கவனித்தில் பதித்துக் கொள். ஸ்ரீ தத்தாத்ரேயர் லேசில் காட்சி அளிக்க மாட்டார். அவரை அடையாளம் கண்டு கொள்வதும் எளிது அல்ல. அவர் ஒரு மாயாவி. எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் இருப்பார். ஆகவே புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு நீதான் அவரை பிடித்துக் கொள்ள வேண்டும்’ எனக் கூறிய பின் சென்று விட்டது. சரி நீண்ட நாட்களாக நம் மனதில் இருந்த ஆசை அதன் மூலமாவது நிறைவேறுகிறதா பார்க்கலாம் என்று எண்ணியவாறு விஷ்ணுதத்தன் போய் விட்டான்.
சிறிது நாள் சென்றது. ஒரு நாள் அந்தப் பேய் விஷ்ணுதத்தனிடம் ஓடி வந்து உடனே தன்னுடன் வருமாறு கூப்பிட்டது. அதனுடன் சென்ற விஷ்ணுதத்தனிடம் சற்று தூரத்தில் இருந்த ஒரு இறைச்சிக் கடையைக் காட்டி ‘அதோ அங்கு செல், ஸ்ரீ தத்தர் புலப்படுவார்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓட்டம் எடுத்தது. விஷ்ணுதத்தனால் அந்த இறைச்சியின் நாற்றத்தை சகித்துக் கொள்ள இயலாமல் போயிற்று. அதனால் சற்று தூரத்தில் இருந்தே அங்கு நோக்கினான். சிலர் வந்து இறைச்சியை வாங்கிக் கொண்டு இருந்தனர். பின் வெகு நேரமாக ஒரு கந்தல் உடை உடுத்தியும் கண்கள் சிவப்பேறி கள்ளைக் குடித்திருந்த ஒருவன் மட்டும் அங்கேயே நின்று கொண்டிருந்ததைக் கண்ட விஷ்ணுதத்தன் ‘அருவருப்புடன் இருக்கும் அவனா தத்தராக இருப்பார்.. சேச், சே .. நான் அந்த கேடு கெட்டப் பிசாசை நம்பி இப்படிப்பட்ட ஆசாரமற்ற இடங்களில் வந்து நின்றது கூடப் பாவம்’ என மனதில் சந்தேகப்பட்ட வண்ணம் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருக்கயிலேயே, அவர் கண் எதிரிலேயே அந்த கந்தல் உடை உடுத்தி இருந்தவன் மறைந்து விட்டான். அடடா….. எங்கு போய் விட்டான் அந்த கந்தல் உடை உடுத்தி இருந்தவன் என்று நினைத்தவாறே அங்கும் இங்கும் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தவன் முன் வந்து நின்றது அந்தப் பிசாசு. ‘அந்தணா நான் உனக்குக் முன்னரே கூறினேன் அல்லவா, ஸ்ரீ தத்தர் ஒரு மாதிரியான ஆள், அவர் பக்தர்களைப் பரிட்சிக்க எந்த வேடத்திலும் வருவார் என. நீ இன்று உன் கண் முன் நின்றவரைக் கோட்டை விட்டு விட்டாயே. பரவாயில்லை . இன்னொரு சந்தர்பத்தைப் எதிர்பார்த்துக் காத்திருக்கலாம்’ என்று சொல்லி விட்டு சென்று விட்டது. விஷ்ணுதத்தன் மனம் வருந்தி வீடு திரும்பினான்.
இன்னும் சில நாட்கள் கழிந்தன. அந்தப் பேய் திடீரென வந்து உடனே தன்னுடன் வருமாறு அவரை அழைத்தது. சாலையில் சில நாய்கள் குரைத்தபடி பின் தொடர்ந்து கொண்டிருக்க ஒரு பிச்சைக்காரன் தூரத்தில் சென்று கொண்டு இருந்தான். தூரத்தில் இருந்தவாறே அவனைக் காட்டிய பிசாசு, ‘போ..போய் அவரைப் பிடித்துக் கொள் அவர்தான் ஸ்ரீ தத்தாத்ரேயர்’ என்று கூறி விட்டு ஓடி விட விஷ்ணுதத்தனும் அந்தப் பிச்சைக்கரானிடம் முன் சென்று அவரை விழுந்து வணங்கினான். தன்னை வந்து வணங்கியவனை தன் கையில் இருந்த ஒரு கம்பியினால் அடித்தார். ‘ஓடிப் போடா பரதேசிப் பயலே…. என்னை வந்து ஏன் தொந்தரவு செய்கின்றாய்’ என்றவாறு கத்திக் கொண்டே பயங்கரமாக அடிக்கலானார் அந்தப் பிச்சைக்காரர் உருவில் இருந்த ஸ்ரீ தத்தர். ஐயோ என அலறிக் கொண்டு விபுந்த விஷ்ணுதத்தன் வலி பொறுக்க முடியாமல் ‘போதுமடா சாமி அந்தப் பிசாசை நமபிக் கொண்டு இங்கு வந்தால் முன் பின் தெரியாத இவன் என்ன ஏது என்று கேட்காமலேயே நம்மை இப்படி அடிக்கிறானே.. இனி வேண்டாம் இந்தப் பைத்தியக்காரத்தனம்’ என்று வலி தாள முடியாமல் கத்தியபடி வீட்டிற்கு ஓடி வந்து தன் மனைவியிடம் விவரம் கூறிய பின் ‘நமக்கு உள்ள மகிழ்சி போதும் அம்மா, இனி நாமும் முன் போலவே நம்பாடு உண்டு, நாம் உண்டு என்று இருந்து விடலாம். என்னால் இப்படி முன் பின் தெரியாத மூடர்களிடம் சென்று அடிவாங்க முடியாது’ என்று கூறி விட்டு வலி தாங்க முடியாமல் படுத்து உறங்கினர்.
இரவு நல்ல உறக்கம். அப்பொழது விஷ்ணுதத்தக்கு மனதில் துயரம் எழுந்தது. ‘என்ன பைத்தியக்காரத்தனம் இது……ஒரு வேளை நான்தான் தவறு செய்து விட்டேனோ, இது என்ன பாழாய்ப் போன உடம்பு, அவன் அடித்ததும் ஏன் அடித்தாய் என்று கூடக் கேட்காமல் பேடிபோல எழுந்து ஓடி வந்து விட்டேனே. ஓருவேளை அந்த நாடகமும் ஸ்ரீ தத்தர் வேண்டும் என்றே போட்டாரோ , இன்னும் அடி பரவாயில்லை என்று கூறி விட்டு அவரைப் பின் தொடர்ந்து சென்று இருந்தால் ஒருவேளை தத்தரை சந்தித்து இருப்பேனோ?’, என மனம் எண்ணியது. மறுநாள் காலை உணவு படைக்கும் நேரத்தில் மீண்டும் அந்த பிசாசு வந்தது. ‘அந்தணா என்ன காரியம் செய்து விட்டாய் நீ, தத்தரின் அத்தனை சமீபத்தில் சென்று கூட உன் புத்தியை உபயோகிக்காமல் அவர் அடித்ததும் பேடி போல ஓடி வந்து விட்டாயே. நான் எத்தனை முறைக் கூறினேன். ஸ்ரீ தத்தர் தன்னிடம் வருபவர்களை நன்கு சோதித்த பின்தான் அவர்களுக்கு காட்சி தருவார் என்று. போகட்டும் நான் வாக்கு தந்தபடி கடைசியாக இன்னும் ஒரே ஒரு முறை அவரை அடையாளம் காட்டுகின்றேன். அதிலும் நீ அவரைப் பிடித்துக் கொள்ளாவிடில் உனக்கு தத்தரின் பாக்கியம் இல்லை என்றுதான் கருத வேண்டும’ எனக் கூறி விட்டுச் சென்று விட்டது.
இன்னும் சில நாட்கள் சென்றது. தினமும் அந்தப் பிசாசு வரும் என எதிர்பார்த்துக் காத்திருந்தார் விஷ்ணுதத்தன். ஒரு நாள் வழக்கம் போல வந்தது அந்தப் பிசாசு. ‘சீக்கிரம் வா, உனக்கு அவரைக் காட்டுகின்றேன்’ எனக் கூறிய பின் தன்னுடன் விஷ்ணுதத்தனை அழைத்துச் சென்றது. தூரத்தில் ஒரு பரதேசி போலத் தோற்றம் தந்து கொண்டிருந்தவன் இறந்து கிடந்த கழுதை ஒன்றின் இறைச்சிகளை எடுத்து பறவைகளுக்குப் போட்டபடியும் அந்த மிருகத்தின் தோலை உறித்துப் பக்குவப் படுத்திக் கொண்டும் இருந்ததைக் கண்டான் விஷ்ணுதத்தன் . அதுவே ஸ்ரீ தத்தர் என்று கூறி விட்டு ஓடி விட்டது அந்தப் பிசாசு. மனதில் திடம். ‘என்ன வேண்டுமானாலும் வரட்டும் இன்று அவரை விடக் கூடாது’ என்ற தீர்மானத்துடன் அவன் எதிரே சென்று ‘ஸ்வாமி சரணம்’ என இரு முறைக் கூறினான். கூறிவிட்டு அவர் பாதங்களில் விழுந்து அவர் பாதங்களை கெட்டியாகப் பற்றிக் கொண்டான். தன் கால்களைப் பற்றிக் கொண்டு இருந்த அவனை எட்டி உதைத்தார். திரும்பத் திரும்ப வந்து தன் கால்களைப் பற்றிக் கொண்டு …தத்தா சரணம், தத்தா சரணம் என கூறிக் கொண்டு இருந்தவனை எத்தனை வேகமாக அடித்தும், …தத்தா தத்தா… எனக் கதறியவாறு அவர் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருந்தபடி வலியைத் தாங்கிக் கொண்டு இருந்தான் விஷ்ணுதத்தன். ‘எழுந்திரு மகனே உனக்கு என்ன வேண்டும்’ என்ற இதமான வார்த்தைகள் மேல் இருந்து வர, வலிகள் மறைந்து போக அண்ணார்ந்து பார்த்த விஷ்ணுதத்தனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. அற்புதமான தோற்றத்தில் காட்சி தந்தபடி நின்று கொண்டு இருந்தார் ஸ்ரீ தத்தாத்ரேயர்.
அவரைச் சுற்றி எந்த மிருகமும், நாய்களும் இல்லை. பன்னீர் பூக்களின் மணம் மூக்கைத் துளைத்தது. எழுந்தான் தேவா சரணம், தேவா சரணம் எனக் கூறியவாறே மனம் திருப்தி தரும் அளவில் அவரை வலம் வந்த பின் அவர் எதிரில் வந்து நின்றான் விஷ்ணுதத்தன். பித்துப் பிடித்தவன் போல் அவரிடம் எதை எதையோ கூறிக் கொண்டு இருந்தவனை சாந்தப்படுத்தினார் ஸ்ரீ தத்தர். ‘உனக்கு என்ன வேண்டும்’ என மீண்டும் கேட்டார் ஸ்ரீ தத்தர். சற்று நேரம் யோசித்தவன் வீட்டிற்கு சென்று மனைவியை கேட்டு விட்டு சொல்கிறேன் எனக் கூறுவது மடத்தனம் என நினைத்தான். வந்தது வரட்டும் என முடிவாக அவரிடம் ஒரு வேண்டுகோளை வைத்து விட்டான். ‘ஸ்வாமி நாளைக்கு என் தந்தைக்கு திவசம். நீங்கள் அங்கு வந்து உணவு அருந்த வேண்டும்’. ஸ்வாமி எந்த விதமான உணர்சிகளையும் காட்டாமல் சரி வருகிறேன் என்று கூறி விட்டார்.
பரம சந்தோஷம் விஷ்ணுதத்தனுக்கு. நம் வீட்டில் உணவு அருந்த ஸ்ரீ தத்தர் வருகிறார் என்ற மகிழ்சி மேலிட வீட்டிற்கு ஓடிச் சென்று மனைவியிடம் அதைச் சொல்ல அவளும் பைத்தியம் பிடித்தவள் போல் ஆகி, அவருக்கு என்ன சமைக்கலாம், எப்படிப் பறிமாறலாம் என்றெல்லாம் எண்ணியவாறு மனக் கோட்டைகள் கட்டியபடி இரவு முழுவதும் தூங்காமல் கணவருடன் அது குறித்துப் பேசிக் கொண்டு இருந்தப் பின் உறங்கினர். மறுநாள் காலை, திவசம் முடிந்தது. சாப்பிட வருகின்றேன் என்பவர் வந்திருப்பாரா என பார்க்க வெளியே வந்தவன் முன் நின்றார் ஸ்ரீ தத்தர். வந்து விட்டார் தத்த பகவான் என்ற மகிழ்சி மேலிட இலைப் போட்டுப் பறிமாற ஆயத்தம் ஆனவளிடம் ஸ்ரீ தத்தாத்ரேயர் கேட்டார் ‘ஆமாம் திவசத்திற்கு சாப்பிட இரண்டு பிராமணர்கள் வேண்டுமே, இன்னொரு பிராமணண் எங்கே? விஷ்ணுதத்தன் அதிர்ந்து போனான். இன்னொரு பிராமணரை இப்போது போய் எங்கு தேடுவது, எப்படி அழைப்பது, … இதோ மனைவியிடம் அவள் யாரைக் கூப்பிட்டு இருக்கின்றாள் எனக் கேட்டுச் சொல்கின்றேன்’ எனறு உள்ளே சென்று மனைவியிடம் விவரம் கூற அவளும் ஒரு கணம் திகைப்புற்றாலும் வருவது வரட்டும் என எண்ணியவாறு கண்களை மூடியபடி சூரிய பகவானிடம் பிரார்தனை செய்தாள். அவரிடம் நீங்கள்தான் பிராம்ணணாக வந்து எங்கள் சங்கடத்தைத் தீர்க்க வேண்டும் என்று வேண்டினாள். கற்புக்கரசி அழைத்தால் செல்லாமல் இருக்க முடியாது என்பதால் அவள் முன் மற்றோரு பிராமணணாக வந்து நின்றார். அடடா, தத்தருடன் அமர்ந்து சாப்பிட நான் அல்லவா கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என மிகவும் மகிழ்ச்சியோடு கூறியவர் உடனே சென்று இரண்டாவது பிராமணராக ஸ்ரீ தத்தர் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.
முதல் பரிட்சையில் தேறிவிட்டான் விஷ்ணுதத்தன், அடுத்த சோதனையைத் துவக்க வேண்டும் என எண்ணிய ஸ்ரீ தத்தர் மீண்டும் கூறினார், ‘கேட்க மறந்து விட்டேனே, விஷ்ணு இலையில் சாப்பிட யார் வருகிறார்கள்?’ மீண்டும் ஒரு குழப்பம். இம்முறையும் அவன் மனைவி சற்றும் தயங்காமல் அக்னி தேவனையே வேண்டிக் கொண்டாள். அவள் சமைத்த அடுப்பில் இருந்தே வெளி வந்த அக்னி பகவானிடம் தங்கள் சங்கடத்தைக் கூறவும் அவர் ‘கரும்பு சாப்பிட கூலியா, தத்தாத்திரேயருடன் அமர்ந்து சாப்பிட வேண்டும் எனில் அதற்கு நான் அல்லவா கொடுத்து வைத்திருக்க வேண்டும், ஓன்றும் யோசிக்காதே நான் வந்து சாப்பிடுகின்றேன் என பிராமணண் உருவில் வந்து இலையில் அமர்ந்தார். ஸ்ரீ தத்தர் முகத்தில் புன்சிரிப்பு. இப்படிப்பட்ட திவசமே நடந்தது இல்லை என்று கூறும்படி அமைந்தது அது. சாப்பிட்ட பின் மனம் மகிழ்ந்த ஸ்ரீ தத்தர் அவனுக்கு ‘நீ நினைத்த காரியம் நிச்சயமாக நடைபெற உனக்கு ஒரு மந்திரோபதேசம் செய்கின்றேன்’ எனக் கூறி விட்டு அவருக்கு ஒரு மந்திரம் சொல்லித் தந்த பின் அனைவரும் சென்று விட்டனர். அவர்கள் சென்ற பின்னரே தங்களுடைய சுயநிலைக்குத் திரும்பிய அந்த தம்பதியினர் அடைந்த மகிழ்சிக்கு எல்லையே இல்லை. இப்படியாக வேறு எந்த விதமான காரியமும் செய்யாமல் நற்பண்புகளுடன் மட்டுமே வாழ்ந்து கொண்டு தன் கர்மங்களை முறைப்படி செய்து கொண்டிருந்து, நல் புத்தியுடனும் தெய்வ நினைவுகளுடன் மட்டும் வாழ்ந்து கொண்டிருந்த அந்தத் தம்பதியினருக்கு தத்தரின் அருள் கிடைத்ததில் வியப்பு ஏது?
காலம் சென்று கொண்டு இருந்தது. தத்தரிடம் அத்தனை வரங்கள் பெற்று இருந்தும் விஷ்ணுதத்தனுக்கு இறுமாப்பில்லை, அந்தத் தம்பதியரின் நடத்தையிலும் எந்த மாற்றமும் இல்லை. அவரிடம் இருந்து கிடைத்த வரத்தினையும் துஷ்பிரயோகம் செய்யவில்லை. எப்பொழுதும் போலவே வாழ்க்கைத் தொடர்ந்து கொண்டு இருந்தது. அப்பொழுது அவர்கள் இருந்த கிராமத்திற்கு சற்று தள்ளி இருந்த ஓரு கிராமத்தில் மிகவும் துக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தனர் ஒரு அந்தணத் தம்பதிகள். நன்றாக இருந்த அவர்கள் வாழ்க்கையில் சூறாவளி வீசுவது போல அந்த அந்தணன் சொல்ல முடியாத வியாதிகளினால் பீடிக்கப்பட்டு விட்டான். அவன் மனைவியோ இன்னமும் வயதுக்குக் கூட வரவில்லை. அந்த காலத்தில் செய்யப்பட்டு வந்த குழந்தைகள் திருமணத்தில் அவனுக்கு குழந்தைப் பருவத்திலேயே மனைவியாகி, தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தவள். வயதுக்கு வந்ததும்தான் கணவனுடன் சேர்ந்து இருக்க அனுமதிப்பார்கள்.
ஒரு நாள் திடீர் என அவனுடைய பெற்றோர்கள் இறந்து விட்டமையால் அவனைக் கவனித்துக் கொள்ள ஆள் இல்லை. வயதுக்கு வந்ததும்தான் அங்கு போக வேண்டும் என்ற நியதியை உடைத்து எறிந்தாள். வியாதியினால் பீடிக்கப்பட்டு படுத்திருக்கும் கணவனுக்கு பணிவிடை செய்யவில்லை எனில் எதற்கு மனைவி என்ற பட்டம் வேண்டும். உடல் சுகத்துக்கு மட்டும்தானா கணவன், இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று அந்த இளம் வயதிலும் நிதானமாக சிந்தித்தாள். தன் பெற்றோர்களிடம் நியாயத்தை எடுத்துக் கூறிவிட்டு தானே அவன் வீட்டிற்கு சென்று அந்த இளம் பெண் அவனுக்கு சேவை செய்யத் துவங்கினாள். அப்படிப்பட்ட சமயத்தில் எவர் எவரோ அவளுக்கு விஷ்ணுதத்தனின் பெருமைப் பற்றித் கூறியதால் தன் கணவனை அவரிடம் அழைத்துச் செல்ல முடிவு செய்தாள். ஆனால் அவனால் செல்ல முடியாத அளவு உடல் நிலை கெட்டு இருந்தது அவனுக்கு. ஆகவே அவனுக்குத் துணையாக தன் தந்தையை வீட்டில் வைத்து விட்டு தனியாகவே விஷ்ணுதத்தனிடம் சென்று தங்களுடைய நிலைமையைக் குறித்துக் கூறி அழுதாள்.
வந்தவள் நிலையைக் கண்ட விஷ்ணுதத்தன் தன் ஞான திருஷ்டியால் அவனுக்கு வந்திருந்த வியாதி பற்றி அறிந்து கொண்டார். வந்திருந்த வியாதிக்கான காரணம் அவன் செய்து இருந்த அளவற்ற பாபங்களே காரணம் என்பதினால் ஸ்ரீ தத்தர் கொடுத்த மந்திரத்தை பயன்படுத்தி உடனே அவனைக் குணப்படுத்தினாலும் மீண்டும் அவன் அந்த பாபங்களினால் வியாதியை திரும்பப் பெறுவான் என்று தெரிந்து கொண்டு வந்தவளிடம் அவற்றை விவரமாக எடுத்துக் கூறினார். அந்தப் பாபங்கள் தொலைக்கப்பட்டால்தான் அவனுடன் இனிய வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும் என்று விவரமாக அவர் எடுத்துரைத்ததும் அந்தப் பதிவிரதை தன்னுடைய கணவன் குணம் அடைய தான் என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருப்பதாகக் கூறியதால் முப்பத்தி மூன்று வருடங்கள் சில விரதங்கள் இருக்க வேண்டும் என்றார். முன்னரே கூறியபடி தன் கணவன் குணம் அடைய தான் என்ன வேண்டுமானாலும் செய்வதாகக் அவள் கூறியதால் அவளுக்கு அந்த விரதங்களை எடுத்து வைத்து தீட்சைத் தந்தார். கணவன் வீடு திரும்பிய அவளும் அவற்றை முறைப்படி கடைபிடிக்கத் துவங்க விரதத்தின் ஒவ்ஒரு பகுதியும் அவள் செய்து முழுக்க, முழுக்க அவன் வியாதிகளும் அவற்றுடன் விலகத் துவங்கி முற்றிலும் குணம் அடைந்து அந்த மங்கையுடன் சேர்ந்து இனிய வாழ்வை வாழத் துவக்கலானான்.
தந்த மந்திரோபாசனையை ஸ்ரீ தத்தர் கூறியபடியே பயன்படுத்தி தன்னால் முடிந்த அளவில் மக்களுக்கு சேவை செய்து வந்தார். அதைக் கண்காணித்துக் கொண்டே இருந்த ஸ்ரீ தத்தாத்ரேயர் மிவும் மகிழ்சி அடைந்து அந்த விஷ்ணுதத்தனின் சக்தியை அவருக்கு அறியாமலேயே பெருக்கிக் கொண்டு இருந்தார். அதுவே தத்தரின் பெருமைக்குச் சான்று. ஆக தத்தரிடம் சரணாகதி அடைந்தவர்கள் வாழ்வில் வளம் மட்டும் அல்ல நிம்மதியையும் பெறுவார்கள் என்பதில் ஐயம் இருக்க முடியுமா? தத்தரின் புகழை இப்படிக் கூறுவர். ‘ஓ, ஸ்ரீ தத்தத்ரேயா, பேரானந்தத்தைத் தரும் சிவனும், கிருஷ்ணருமானவனே, நீ நிர்வாண கோலத்தில் இருந்தாலும் நீயே குழந்தையானவர், அமைதிக்கு வழி காட்டுபவர், கடல் போன்ற விவேகத்தைத் தருபவர். எங்களுக்கு நீயே தேவன், கருணாமயி, எங்களைக் காத்து அருள்பவன், உன் நினைவோடு என்றென்றும் நாங்கள் வாழ்வதற்கு நீதான் அருள் புரிய வேண்டும்’.
திகம்பரா திகம்பரா, ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப திகம்பரா!
திகம்பரா திகம்பரா, ஸ்ரீ தத்ததேவா திகம்பரா
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ
பாராயணம் நிறைவு பெற்றது