ஆனந்தலஹரி   (26-41) 

-26-

विरिञ्चिः पञ्चत्वं व्रजति हरिराप्नोति विरतिं
विनाशं कीनाशो भजति धनदो याति निधनम् ।
वितन्द्री माहेन्द्री विततिरपि संमीलितदृशा
महासंहारेऽस्मिन् विहरति सति त्वत्पतिरसौ ॥

விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம்
வினாஶம் கீனாஶோ பஜதி தனதோ யாதி நிதனம் ।
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலிதத்ருஶா
மஹாஸம்ஹாரேஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸௌ॥

இந்த  ஸ்லோகத்தை  ஒவ்வொரு பௌர்ணமி அன்றும்
1000 முறை என, ஆறு மாதம் பாராயணம் செய்தால்
எதிரிகள் அழிவார்கள்

ஹே பராசக்தி
மஹா பிரளய காலத்தில் பிரம்மா , விஷ்ணு , யமன், குபேரன், தேவர்கள் மற்றும்  பதினான்கு இந்திரர்கள் முதல் அனைத்து ஜீவராசிகளும் முற்றிலும்  அழிந்து விடுகின்றன; ஆனால் சதாசிவன் மட்டும் அதில் அழிவதில்லை;  என்றுமே அழிவற்றவளான நீயும் அழிவது இல்லை; மீண்டும் புதிய பிரபஞ்சத்தை சதாசிவன் மூலம் படைக்க வேண்டும் என்பதினால்தான் உன் கற்பின் சக்தியால் சதாசிவனுக்கு அழிவைத்  தராமல் காப்பாற்றுகின்றாயோ ?

  • (விளக்கம்:
    இந்திரனின் ஆட்சி காலம் ஒரு மன்வந்திரம் ஆகும்.  ஒவ்வொரு மன்வந்திரத்திலும்  ஒரு புதிய  இந்திரன் தோன்றி தேவலோக அரசனாக இருப்பார்.  
  • நான்கு (4) யுகங்களும் சோ்ந்தது ஒரு மகா யுகம் எனப்படுகின்றது. பன்னிரண்டு (12) மகா யுகங்களைக் கொண்டது ஒரு மன்வந்திரம் ஆகும். ஒரு மன்வந்திரத்திற்கு ஒரு இந்திரன் ஆட்சி செய்கின்றார். பதினான்கு (14) மன்வந்திரங்களைக் கொண்டது ஒரு கல்பம். ஒரு கல்ப காலத்தில் பதினான்கு (14) இந்திரன்கள் ஆட்சி செய்கின்றார்கள். ஒரு கல்பம் முடிந்த பின் பிரளய காலத்தில்   பிரபஞ்சம் முழுவதும் அழிந்து விட்டு  புதிய பிரபஞ்சம் தோன்றுகிறது என்பது புராணங்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.
  • பிரளய காலத்தில் பிரபஞ்சம் அழிந்து விடும்போது அதில் பிரம்மா,விஷ்ணு, யமன், குபேரன், தேவர்கள் மற்றும் பதினான்கு இந்திரர்கள் முதல் அனைத்து ஜீவராசிகளும் முற்றிலும்  அழிந்து விடுகின்றார்கள். அடுத்து புதிய பிரபஞ்சம் தோன்றும் போது புதிய மனுக்கள் முதல் இந்திரன்கள்,  தெய்வங்கள் என  அனைவரும் தோன்றுவார்கள்.
  • ஆனால் பிரபஞ்சமே அழிந்தாலும் கூட  சதாசிவனும் பராசக்தியும் அழிவது இல்லை. சதாசிவன் பராசக்தியுடன் இணைந்து உள்ள ஆண் சக்தி ஆகும்.  ஆகவே பராசக்தி என்றுமே பதிவிரதை என்பதினால் அவரை அழிய விடுவதில்லை என்பதை விளக்குவதே இந்த ஸ்லோகம் ஆகும். இதன் மூலம் சதாசிவனின் மகிமை மற்றும் முக்கியத்துவம்  வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.
  • இந்த ஸ்லோகத்தில் காணப்படும் முக்கியமான இன்னொரு அம்சம், சதாசிவனால் படைக்கப்பட்ட மூன்று தெய்வங்களில் பிரும்மா, விஷ்ணு மற்றும் ருத்திரன் இருந்தாலும், பிரளய கால அழிவில் ருத்திரர் அழிவதாக கூறப்படவில்லை. அதன் காரணம்  பிரளய காலத்தில் ருத்திரன் அனைவரையும்  தன்னுள் விழுங்கி பிரபஞ்சத்தை அழித்த பின்னர், அவர் மீண்டும்  சதாசிவனில் இணைந்து மறைந்து விடுகின்றார்.  

———
-27-

जपो जल्पः शिल्पं सकलमपि मुद्राविरचना
गतिः प्रादक्षिण्यक्रमणमशनाद्याहुतिविधिः ।
प्रणामस्संवेशस्सुखमखिलमात्मार्पणदृशा
सपर्यापर्यायस्तव भवतु यन्मे विलसितम् ॥

ஜபோ ஜல்ப: ஶில்பம் ஸகலமபி முத்ராவிரசனா
கதி: ப்ராதக்ஷிண்யக்ரமணமஶனாத்யாஹுதிவிதி: ।
ப்ரணாமஸ்ஸம்வேஶஸ்ஸுகமகிலமாத்மார்பணத்ருஶா
ஸபர்யாபர்யாயஸ்தவ பவது யன்மே விலஸிதம் ॥

இந்த  ஸ்லோகத்தை  1000 முறை என, 45  நாட்கள்
பாராயணம் செய்தால் ஆத்ம சித்தி அடைவார்கள்

ஹே பராசக்தி
என்னுடைய உடல், பொருள், ஆவி என அனைத்து பதினான்குமே உன்னுடையதாகட்டும். என் பேச்சுகள் அனைத்துமே உன்னை ஜபிக்கும் மந்திரங்கள் ஆகட்டும்; என் கைகளின் அசைவுகள் அனைத்தும் உனது  முத்திரைகளாகட்டும்; நான் நடப்பது கூட உன்னை பிரதர்ஷணம் செய்வதாகட்டும்; நான் உண்பவை உனது ஹோம குண்டத்தில் போடுபவை ஆகட்டும்; நான் படுத்திருப்பது கூட உன்னை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கும் நிலையில் அமைந்ததாக இருக்கட்டும்; என் சுகங்கள் அனைத்துமே உன்னுடையதாகட்டும்; நான் என்னை ஆத்மார்த்தமாக உன்னிடம் சமர்ப்பணம் செய்து விட்டதினால் என்னுடைய அனைத்து செயல்களுமே  உன்னை ஆராதிக்கும் பூஜைகளாகட்டும்.

  • (விளக்கம்:
    தேவியின் பாதங்களில் முழுமையாக சரணாகதி அடைய விரும்புபவர்கள் தூய்மையான மனதுடன் அவளை இவ்வாறாக மனதில் வழிபட வேண்டும்.  இந்த ஸ்லோகம்  ஜீவன் முக்த அல்லது தேவி வழிபாட்டில் மேம்பட்ட  நிலையை அடைந்து விட்ட சாதகர்களை குறிப்பிடுகின்றது,  ஆனால்  முழுமையாக ஆத்ம விடுதலை பெற்று விட்ட சாதகர்களை குறிப்பிடவில்லை. 
  • மன ரீதியாக குடும்ப வாழ்க்கையில் இருந்து விடுதலை அடைந்து  தேவியின் பாதங்களில் சரணாகதி அடைந்து விட்டவர்களை ஜீவன் முக்தன் என்பார்கள்; கட்டாயத்தால் அவர்கள் குடும்ப வாழ்க்கையை தொடர்ந்து கொண்டு இருப்பவர்கள். மனத்தால் தூய்மை அடைந்து  விட்டவர்கள் இதயத்தின் உள்ளே, வெளித்  தெரியாமல்  தேவியை வழிபாடு செய்தவண்ணம் உள்ளவர்கள். இந்த நிலையை அடைந்து விட்டவர்கள், அதுவரை செய்து வந்திருந்த வெளிப்படையான பூஜை புனஸ்காரங்களை  தமது உள்ளத்துக்குளேயே செய்யத் துவங்கி விடுகின்றார்கள், அதாவது வெளி வழிபாடு, உள் மன வழிபாடாகி விடுகின்றது.   வழிபாடு என்பது சரணாகதியின் ஒரு வடிவம் ஆகும். தேவியை மனத்தால் வழிபடுகையில், சரண் அடைந்து விட்ட மேல் மட்ட நிலையிலான சாதகர்கள் மனம் பேரானந்த நிலையை பெறுகின்றது.
  • பொதுவாகவே, வழிபாட்டு முறைகள் சடங்கு சம்பிரதாயமான உருவ வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் இந்த ஸ்லோகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளவர்கள்,  தேவியின் வாசஸ்தலமான பிந்துவை தமது  இதயத்தில் பதித்து வைத்துக் கொண்டு அவளது நாமத்தை மனதிற்குள் உச்சாடனை செய்தவண்ணம் இருப்பவர்கள்.   அவர்கள் பூஜைப் பொருட்களை கொண்டு பூஜைகளை செய்வதில்லை,  தேவியின் பாதங்களில் பூக்களை வீசுவது, கைகளால் பல முத்திரைகளைக் காண்பிப்பது, மணிக் கணக்கில் தொடர்ந்து மந்திர ஜபம் செய்வது போன்ற வெளிப்புற வழிபாட்டில் ஈடுபட மாட்டார்கள். அவர்கள் தமது உடல், உயிர் மற்றும் ஆன்மாவை அவளிடம் முழு மனதுடன்  அர்ப்பணித்து  விட்டவர்கள். அவர்கள் இப்படியாக வழிபடுபவர்கள்:
  • ‘என் கைகளின் அசைவுகள் அனைத்தும் உன்னை ஆராதிக்கும் பத்து முத்திரைகள் ஆகட்டும், நான் நடப்பது உன்னை பிரதர்ஷணம் செய்வதாகட்டும்.  நான் உண்பவை உனது ஹோம குண்டத்தில் போடுபவை ஆகட்டும், நான் படுத்திருப்பது கூட உன்னை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கும் நிலையில் அமைந்ததாக இருக்கட்டும். என் சுகங்கள் அனைத்துமே உன்னுடையதாகட்டும். என்னுடைய அனைத்து செயல்களுமே  உன்னை ஆராதிக்கும் பூஜைகளாகட்டும்’
  • சிவானந்தலஹரி என்பது ஆதி சங்கரரால் சிவபெருமான் மீது இயற்றப்பட்ட ஸ்லோகம் ஆகும். ஆத்மார்த்தமாக தேவியின் பாதங்களில் சரண் அடைந்து விட்டவர்கள் தேவியை பூஜிக்க மலர்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டாம், வேறு விதங்களில் ஆன பூஜைகள் செய்ய வேண்டாம். மனத்தால் அர்ச்சனை செய்தால் மட்டுமே போதும். இதையே ஆதி சங்கரர் அவர் இயற்றி உள்ள சிவானந்தலஹரியின் ஒன்பதாம் ஸ்லோகத்தில் கீழே உள்ளவாறு  எடுத்துக் காட்டி உள்ளார்.  சிவானந்தலஹரி என்பதின் அர்த்தம்- ‘மங்களகரமான பேரின்பம்’ என்பதாகும்.   ‘உனக்கு பூஜை செய்யவேண்டும் என்ற விருப்பத்தில் ஆழமான மலைகளிலும்,  பள்ளங்களிலும், ஜன நடமாட்டமில்லாத காட்டிலும் மலர்களை தேடி அலைபவன் ஒரு மூடன். உமா தேவியின் நாயகனே, தனது மனமாகிய ஒரு தாமரைப் பூவை உனக்கு ஆத்மார்த்தமாக அர்பணித்தால் அதுவே போதுமானது  என்பதை அந்த மூடன் அறியாமல் இருப்பது ஏனோ?’  – சிவானந்தலஹரி: ஸ்லோகம்-9.
  • இந்த ஸ்லோகம் ஒரு மேம்பட்ட நிலையிலான தேவியின் சாதகர்களின்  மனநிலையை எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்து உள்ளது, ஆனால் ஏற்கனவே தேவியுடன் ஐக்கியம் ஆகிவிட்ட சாதகர்களை குறிப்பிடவில்லை.  

——-
-28-

सुधामप्यास्वाद्य प्रतिभयजरामृत्युहरिणीं
विपद्यन्ते विश्वे विधिशतमखाद्या दिविषदः ।
करालं यत्क्ष्वेलं कबलितवतः कालकलना
न शम्भोस्तन्मूलं तव जननि ताटङ्कमहिमा ॥

ஸுதாமப்யாஸ்வாத்ய ப்ரதிபயஜராம்ருத்யுஹரிணீம்
விபத்யந்தே விஶ்வே விதிஶதமகாத்யா திவிஷத: ।
கராலம் யத்க்ஷ்வேலம் கபலிதவத: காலகலனா
ந ஶம்போஸ்தன்மூலம் தவ ஜனநி தாடனகமஹிமா ॥

இந்த  ஸ்லோகத்தை  1000 முறை என,
45  நாட்கள் பாராயணம் செய்தால்

விஷ பயங்கள் அகலும், காரிய சித்தி அடையலாம்

ஹே பராசக்தி
பிரும்மா மற்றும் இந்திரன் போன்றவர்கள் கிழட்டுத் தன்மையை அழிக்கும் மற்றும் என்றும் மரணத்தை தராத அமிர்தத்தை உண்டும் கூட பிரளய காலத்தில் அழிகின்றார்கள். ஆனால் அந்த அமிர்தத்தை உண்ணாமல் ஆல கால விஷத்தை உண்ட உனது கணவர் சதாசிவன் மட்டும் பிரளய காலத்தில் கூட அழிவதில்லை என்பதின் காரணம் உனது காதில் உள்ள தாடங்கம்தானோ ?

  • (விளக்கம்:
    இந்த ஸ்லோகத்தின் மூலம் ஒரு உண்மை புரிகின்றது. எந்த ஒரு ஸ்த்ரீ என்றாலும் அவளது பதிவிரதைத்தனம் மட்டுமே அவளது கணவனைக் காப்பாற்றுகிறது. அந்த ஸ்த்ரீ பராசக்தியாகவே இருந்தாலும் அது அவளுக்கு பொருந்துகின்றது.
  • பராசக்தியின் பாதி உடல் சதாசிவனின் உருவம் ஆகும். பராசக்தியே இந்த பிரபஞ்சத்தைப் படைக்கின்றாள், அதே பிரபஞ்சத்தில் அசையும், அசையா மற்றும் பல்வேறு ஜீவன்களை படைக்கவும், காக்கவும், அழிக்கவும்  தேவையான தெய்வங்களை சதாசிவன் மூலமே உருவாக்குகின்றாள்.
  • பிரபஞ்சத்தின் அழிவின்போது அனைத்து தெய்வங்களும் அழிய வேண்டும் என்பதே நியதி என்றாலும் அந்த நியதியையும் தகர்க்கும் வகையில் சதாசிவனின் அழிவு ஏற்படுவதில்லை. காரணம் மீண்டும் அதே சதாசிவன் மூலமே பிரபஞ்சத்தைப் படைக்க வேண்டி உள்ளது. தனது உடலில் பாதியான சதாசிவன் அழிந்து விட்டால் தன்னுடைய சக்தியும் பாதி  அழிந்து விட்டது போல ஆகிவிடும் அல்லவா? 
  • பராசக்தி நிலையானவள், அழிவற்றவள் என்பதினால், மீதி பாதி உடலான சதாசிவனை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் அவள் தன்னுடைய காதுகளில் தாடங்கம் எனும் குண்டலங்களை அணிந்து கொண்டு இருக்கின்றாள் என்பதை எடுத்துக் காட்டுவதே இந்த ஸ்லோகம் ஆகும். சதாசிவனின் அழிவு, அவரது  துணைவியை  விதவை ஆகி விட்டால் அவளால் தடாகத்தை அணிய முடியாது. அப்படி ஒரு நிலை ஏற்படக் கூடாது  என்பதால், சதாசிவனுக்கு பிரளய காலத்தினால் பாதிப்பு  ஏற்படாமல் காப்பாற்றியது அந்த  தாடங்கத்தின் சக்தி என்று தத்துவார்த்தமாக  சொல்லப்பட்டு உள்ளது.
  • சிவனும் சக்தியும் தெய்வீக ஜோடியும் அல்ல, தம்பதிகளும் அல்ல. அவர்கள் இருவர் அல்ல, ஒருவரே ஆகும். காரணம் அவர்கள் இரண்டு வெவ்வேறு உடல்களில் கூட இல்லை, ஒரே உடலில் இரு சக்திகளாக உள்ளனர். இந்த வடிவத்தில் சிவம், சக்தி இரண்டும் நுட்பமாக  மற்றும் கண்ணுக்கு தெரியாத உருவிலும் உள்ளனர். சதாசிவனுக்கு பராசக்தியே  ஆத்மா, அது போலவே பராசக்திக்கு சதாசிவனே  ஆத்மா. எந்த ஒருவருக்கும் இரண்டு ஆத்மாக்கள் கிடையாது, அது தெய்வங்களுக்கும் பொருந்தும் என்பதினால் பிரளய காலத்திலும் சதாசிவனுக்கு அழிவே கிடையாது.
  • ஒரு காலத்தில் திருச்சி அகிலாண்டேஸ்வரி ஆலயத்தில், பராசக்தி, அகிலாண்டேஸ்வரி என்ற ரூபத்தில் இருந்தபோது அவள்  ருத்ர தேவி எனக் கூறப்பட்டாள். ருத்ரம் என்றால் சினம் மிக்கவள் என்பது அர்த்தம்.  அவளை எவராலும் சன்னதியில் நுழைந்து வழிபட முடியாத நிலைமை ஏற்பட்டது. அதைக் கேள்விப்பட்ட, சௌந்தர்யலஹரியை இயற்றிய ஆதி சங்கரர், அன்னையின் கோபத்தை தணிக்க   ‘ஸ்ரீ சக்கரம்’ மற்றும் ‘சிவ சக்கரம்’ ஒருங்கிணைந்த தாடகத்தை  வடிவமைத்து, அவளது கோபத்தை அந்த தாடங்கத்தில் அடக்கி வைத்துக்  கொள்ளுமாறு வேண்டுதல் விடுக்க, கருணை மிக்க பராசக்தியும் ஆதி சங்கரரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு சினத்தை அடக்கிக் கொண்டாளாம். அந்த தாடங்கம் இன்றும் அகிலாண்டேஸ்வரி காதுகளில் காணப்படுகின்றது . 
  • தாடகங்கத்தை அணிந்து கொண்டு இருந்தால் மரணம் சம்பவிக்காது. தாடங்கம் எனும் குண்டலத்தை குறித்த கதை ஒன்று   மகாபாரதத்தின்  பதிவிரதா மாஹாத்மியப் பர்வம் பகுதியில் உள்ளது (https://mahabharatham.arasan.info/2014/10/Mahabharatha-Vanaparva-Section308.html).  அதில் கர்ணனின் காதுகளில்  தாடங்கம் எனும் குண்டலம் இருக்கும்வரை அவனுக்கு அழிவில்லை என்பதை புரிந்து கொள்ளும் இந்திரன் அதை வஞ்சகமாக கர்ணனிடம் இருந்து தானமாகப் பெற்றுக் கொண்டு கர்ணனின்  அழிவிற்கான பாதையை வகுத்தான். அதனால்தான் யுத்தத்தில் வெல்லவே முடியாத கர்ணனுக்கு மரணம் ஏற்பட்டது என்பதான  கதை உள்ளது என்பதை கவனத்தில் கொண்டால் தாடங்கத்தின் மேன்மை புரியும்.
  • கர்ணனின் காதுகளில் இருந்த தாடங்கம் எனும் குண்டலத்திற்கே அத்தனை சக்தி இருந்தது என்றால் தேவியின் காதுகளில் இருந்த தாடங்கம் எனும் குண்டலத்தின் மேன்மையைக் குறித்து யாரால் கூற இயலும்?

———–
-29-

किरीटं वैरिञ्चं परिहर पुरः कैटभभिदः
कठोरे कोटीरे स्खलसि जहि जम्भारिमुकुटम् ।
प्रणम्रेष्वेतेषु प्रसभमुपयातस्य भवनं
भवस्याभ्युत्थाने तव परिजनोक्तिर्विजयते ॥

கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடபபித:
கடோரே கோடீரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரிமுகுடம் ।
ப்ரணம்ரேஷ்வேதேஷு ப்ரஸபமுபயாதஸ்ய பவனம்
பவஸ்யாப்யுத்தானே தவ பரிஜனோக்திர்விஜயதே ॥

இந்த  ஸ்லோகத்தை  1000 முறை என, 45  நாட்கள் பாராயணம்
செய்தால் தீயவர் அடங்குவார்கள், சுக பிரசவம் ஏற்படும்

ஹே பராசக்தி,
உன்னைக் காண பரமேஸ்வரர் உனது வீட்டிற்கு வரும்போது உன் பாதங்களை  பிரும்மா, விஷ்ணு மற்றும் இந்திரன் முதலியோர் வணங்கி கொண்டு இருக்கின்றார்கள். பரமசிவன் வருவதைக் கண்டதும் நீ வேகமாக எழுந்து  அவரை வரவேற்க செல்லும்போது, ஆவரண தேவதைகள்  கவலையில்,  ‘பிரும்மா மற்றும் இந்திரனின் கிரீடத்தை ஒதுக்கி விட்டுச் செல்’, ‘விஷ்ணுவின் கிரீடம் உனது காலில் பட்டு  இடறி விழப் போகின்றாய்’, அந்த கிரீடங்களை ஒதுக்கி விட்டு செல்’  என்று உனது  காதுகளில் மட்டும் கேட்கும்படியாக குரல் எழுப்புகிறார்கள்.

  • (விளக்கம்:
    இந்த ஸ்லோகத்தின் மூலம் பராசக்தி அனைத்து தேவர்களுக்கும் தெய்வங்களுக்கும் மேலானவள் என்பதும்,  அவளை சுற்றி உள்ள ஆவரண தேவதைகள் எனப்படும் காவல் தேவதைகள்  எந்த அளவு பராசக்தி மீது  அன்பை செலுத்துகிறார்கள்  என்பதையும் எடுத்துக் காட்டும் வகையில்  கூறப்பட்டு உள்ளது.
  • இந்த ஸ்லோகம் ‘பிரும்மா, விஷ்ணு போன்ற தெய்வங்களும், தேவலோக அதிபதி இந்திரனும் அனு தினமும் வந்து தேவியின் பாதங்களை வணங்கி கொண்டு இருக்கின்றார்கள் என்பதை  மீண்டும்  வெளிப்படுத்துகின்றது.  இந்த நிலை ஏற்கனவே 25 ஆம் ஸ்லோகத்தில் கூறப்பட்டு உள்ளது என்றாலும், இதிலும் கூறப்பட்டு உள்ளதின் காரணம் பராசக்தியின் ஆவரண தேவதைகள் பராசக்தி எங்கேயாவது செல்லும்போது, அவளுக்கு எந்த விதமான இடையூறும் ஏற்பட்டு  விடக் கூடாதே என்று  எத்தனை கவலைபடுகின்றார்கள் என்பது  வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.
  • பராசக்தியின் இல்லத்திற்கு திடீர் என வருகை தந்த பரமேஸ்வரரை வரவேற்க பராசக்தி வேகமாக எழுந்து செல்லும்போது அவளது பாதங்களை வணங்கி கொண்டிருக்கும் தெய்வங்களின் கிரீடங்கள் அவள் பாதத்தில் பட்டு அவளது பாதங்களுக்கு இடையூறு செய்யக் கூடாதே என்ற கவலையில் ஆவரண தேவதைகள் அந்த கிரீடங்களை தவிர்த்து விட்டு செல்லுமாறு பராசக்திக்கு குரல் கொடுப்பதாக இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டு உள்ளது.
  • அதே சமயம் பராசக்தி அவசரமாக எழுந்து பரமசிவனை வரவேற்க   செல்லுகையில் கிரீடத்தோடு தலையை குனிந்து பராசக்தியை  வணங்கி கொண்டிருந்த தெய்வங்களை அலட்ஷியப்படுத்துவது போல அவர்களது கிரீடங்களை பராசக்தி தமது காலால் உதைத்து விட்டு சென்றாள் என்ற அவப்பெயர் பராசக்தி மீது விழுந்து  விடக் கூடாதே என்ற கவலையிலும் குரல் எழுப்பினார்கள் என்பது இதில் மறைந்து உள்ள இன்னொரு அர்த்தம் ஆகும். இவற்றில் இருந்து எவ்வளவு நுணுக்கமாக ஒவ்வொரு ஸ்லோகத்தையும் ஆதி சங்கரர் அமைத்து  உள்ளார் என்பதும்  தெரிகின்றது.  

——–
-30-

स्वदेहोद्भूताभिर्घृणिभिरणिमाद्याभिरभितो
निषेव्ये नित्ये त्वामहमिति सदा भावयति यः ।
किमाश्चर्यं तस्य त्रिनयनसमृद्धिं तृणयतो
महासंवर्ताग्निर्विरचयति नीराजनविधिम् ॥

ஸ்வதேஹோத்பூதாபிர்க்ருணிபிரணிமாத்யாபிரபிதோ
நிஷேவ்யே நித்யே த்வாமஹமிதி ஸதா பாவயதி ய: ।
கிமாஶ்சர்யம் தஸ்ய த்ரினயனஸம்ருத்திம் த்ருணயதோ
மஹாஸம்வர்தாக்னிர்விரசயதி நிராஜனவிதிம் ॥

இந்த  ஸ்லோகத்தை  1000 முறை என
96  நாட்கள் பாராயணம் செய்தால்

–கூடு விட்டு கூடு பாயும் வித்தை கைகூடும்

ஹே பராசக்தி,
‘ஆதியும் அந்தமும் இல்லாத தாயே, உன்னுடைய பாதங்களில் இருந்து வெளிவரும்  அணிமா மற்றும் மகிமா போன்ற எட்டு சித்திகளால் (தேவதைகள்) நாலாபுறமும் சூழப்பட்டு உள்ள  தேவியே’ என்று உன்னை போற்றியவாறு எந்த ஒரு உபாசகன் உன்னை தியானிக்கின்றானோ, அவனுக்கு பிரளய காலத்தில் தோன்றும் பஞ்சாக்னி கூட கற்பூர ஆரத்தி எடுப்பதை போலவே தோன்றும்.  அவன் சிவஸாயுஜம் போன்ற ஐஸ்வரியங்களையும் கூட ஒரு புல்லை போலவே பாவிப்பான் என்பதில் என்ன ஆச்சர்யம்?

  • (விளக்கம்:
    இந்த ஸ்லோகத்தில் பராசக்தி தேவியின் உடலில் இருந்து வெளிப்படும் அமானுஷ்ய  சக்திக் கதிர்கள், எதிரில் உள்ளவர்களை சுற்றி  ஒளிக் கதிர்கள் போல பரவி விடுகின்றன  என்றும், அந்த நிலையில்   தேவியை  தியானிப்பவர்களுக்கு   பல நன்மைகள் கிடைக்கின்றன   என்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.
  • அவளை சுற்றி காவலில் உள்ள எட்டு ஆவரண தேவதைகளுக்கு அந்த சித்திகள் எனும் ஆற்றல்களை அந்த தேவியே அளித்து இருக்கின்றாள் என்றாலும் அந்த அமானுஷ்ய சக்திகளை பராசக்தியின் அடிப்படை இயல்பில் காண முடியாது என்பதைத்தான் இந்த  ஸ்லோகம் குறிப்பிடுகிறது. அந்த எட்டு ஆவரண தேவதைகளும் அணிமா, மஹிமா, கரிமா, லஹிமா, ப்ராப்தி, பிரகாம்யா, இசித்வா மற்றும் வசித்வா என்பவர்கள் ஆவர்.
  • எட்டு சித்திகள் அல்லது ஆற்றல்கள் என்பவை – அணிமா: ஒரு அணுவைப் போல சிறியதாக தன்னை மாற்றிக் கொள்ளுதல் / மஹிமா: உடலின் அளவை எல்லையற்ற அளவில், விண்வெளியைத் தொடும் அளவில் பெரியதாக்கிக் கொள்ளும் திறன் / கரிமா: ஒருவராலும் அசைக்க முடியாத அளவில் உடல் எடையை அதிகரித்துக் கொள்வது  / லஹிமா: காற்றில்   கூடப் பறக்கும் அளவில் உடலின் எடையை பஞ்சு போல ஆக்கிக் கொள்வது /ப்ராப்தி: உலகின் எந்த மூலைக்கும்  க்ஷணத்தில் சென்றடையும் திறன் /பிரகாம்யா: ஒருவரின் மனதில் புகுந்து அவர்கள் நினைப்பதை அறிந்து கொள்ளும் திறன் /இசித்வா: தெய்வங்களுக்கு இணையான சக்தியை அடைவது / மற்றும்  வசித்வா: எந்த மனிதரையும் அடக்கி ஆள  முடிந்த திறன், பறவை மற்றும் விலங்குகளைக் கூட அடக்க  முடியும்.
  • பராசக்தியை தியானிக்கும் உண்மையான சாதகர்கள், அஷ்டமா சித்திகளான ஆற்றல்களை அடைய எண்ணி தியானிப்பது இல்லை. மாறாக பராசக்தியுடன் இணைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மட்டுமே தியானிக்கின்றார்கள் என்றாலும் அவர்கள் பராசக்தியை சென்றடைய அவளை சுற்றி உள்ள பாதையில் காவலில் உள்ள ஆவரண தேவதைகளைக் கடந்தே செல்ல வேண்டி உள்ளது.
  • தேவியின் பாதங்களுடன் கலந்து விட வேண்டும் என விரும்பி தியானிப்பவர்கள் ஒரு க்ஷணம் கூட தனக்கு அஷ்டமா சக்திகள் கிடைக்க வேண்டும் என நினைப்பது இல்லை. அந்த சக்திகளை பெற்றுக் கொண்டு மற்றவர்கள் பார்வையில் தன்னை ஒரு பெரிய ஆன்மீகவாதியாக காட்டிக் கொள்ளவும் விரும்புவது இல்லை. அவர்களது எண்ணம் முழுவதுமே மோட்ஷ நிலையை விட மேலான நிலையான  தேவியின் பாதங்களில் கலந்து விட வேண்டும் என்பதாகவே இருக்கும் .
  • அவர்கள் சிவசாயுஜ்யம் எனும் நிலையை  கூட  வெறும் புல்லை போன்றது என்றே நினைக்கின்றார்கள்.   சிவசாயுஜம்  என்பது, சிவபெருமானுடன்  ஒன்றிணையும் நிலை ஆகும். இந்த நிலை ஒருவரை கைலாயத்திற்கு  அனுப்பி வைக்கும் நிலை ஆகும்.   
  • உபாசகர்களின் உண்மையான பிரார்த்தனை, ‘அயமாத்மா’ (‘இந்த ஆத்மாவே பிரம்மம்’), ‘தத்வமசி’ (‘நான் அது’ அல்லது ‘நீ அதுதான்’) மற்றும் ‘அஹம் பிரம்மா’ (‘நான் பிரம்மன்’, அல்லது ’நான் தெய்வீகமானவன்’) என்பதாகவே உள்ளது. புனித தேவியின் காலடியில் இணைவது என்பது இவற்றின்  பொதுவான பொருள் ஆகும்).

———
-31-

चतुष्षष्ट्या तन्त्रैः सकलमतिसंधाय भुवनं
स्थितस्तत्तत्सिद्धिप्रसवपरतन्त्रैः पशुपतिः ।
पुनस्त्वन्निर्बन्धादखिलपुरुषार्थैकघटना-
स्वतन्त्रं ते तन्त्रं क्षितितलमवातीतरदिदम् ॥

சதுஷ்ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகலமதிஸந்தாய புவனம்
ஸ்திதஸ்தத்தத்ஸித்திப்ரஸவபரதந்த்ரை: பஶுபதி: ।
புனஸ்த்வன்னிர்பந்தாதகிலபுருஷார்தைககடனா-
ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதலமவாதீதரதிதம் ॥

இந்த  ஸ்லோகத்தை  1000 முறை என, 45 நாட்கள் பாராயணம் செய்தால்
அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு,
செல்வங்களையும் ஈட்ட முடியும்.

ஹே பராசக்தி
அனைத்து ஆத்மாக்களின் இறைவனான சிவபெருமான் ஒவ்வொருவரும் தாம் விரும்பும் சக்தியை அடைந்து கொள்ள, அறுபத்து நான்கு தந்திரங்களைப் (மந்திரக் கலைகளை) படைத்த பின்னர் அமைதியாகி விட்டார். ஆனால் திரும்பவும் உனது கட்டாயத்தினால்  சகல   சக்திகளையும் ஒருங்கே கொடுக்கும்  உன்னுடைய ஸ்ரீ வித்யா மந்திரமான   ‘பஞ்சதசாக்ஷரி ’  எனும் கலையை உலகிற்கு கொடுத்தார்.

  • (விளக்கம்:
    ஐம்புலன்களையும் கொண்டு சம்சார வாழ்க்கையில் மூழ்கிக் கிடப்பவர்களை பசுக்கள் என்று ஆன்மீக ரீதியில் கூறுவார்கள். அந்த மனிதர்கள் கர்மா, மாயை மற்றும் மோகம் எனும் மூன்று நிலைகளில் மூழ்கிக் கிடக்கிறார்கள்
  • மோகம் என்பது காம இச்சைகள் ஆகும். மாயை என்பது அறியாமை, மற்றும் கர்மா என்பது பூர்வ ஜென்ம  பாவ மற்றும் புண்ணியங்களினால் ஏற்படும் பலன்கள் ஆகும். இவற்றினால் ஒவ்வொருவரும் பிறப்பு – இறப்பு எனும் நிலைகளில் சுழன்று கொண்டு உள்ளார்கள்.
  • அவர்களில் பரமேஸ்வரரை உபாசிப்பவர்கள்  மோட்ஷம் பெறுவார்கள், அவரை உபாசிக்காதவர்களுக்கு  மீண்டும், மீண்டும்  பந்தத்திலான பிறப்பும், இறப்பும்  ஏற்படுகின்றது. இது ஒரு பொது நிலை ஆகும்.
  • பக்தர்களுக்கு மேலான அருளை தருபவரே பரமசிவன் என்பதினால் அவரை மனிதர்களின் அதிபதி எனும் பொருளில் சமஸ்கிருதத்தில் பசுபதி என அழைக்கின்றார்கள். ‘பசு’ என்றால் மானிடர்கள் என்றும் ‘பதி’ என்றால் ரட்ஷிப்பவர் என்பது பொருள்.  அதனால்தான் இந்த ஸ்லோகத்திலும் சிவபெருமானைக் குறிப்பிடுகையில் ‘பசுபதி:’  எனக் கூறப்பட்டு உள்ளது.
  • அந்த பரமேஸ்வரனே பிரபஞ்சம் உருவாகிய பின்னர், சில காலங்களிலேயே பராசக்தியையும் கலந்து ஆலோசனை செய்யாமல் மானிடர்களின் ஆசைகளை அவரவர்களே பூர்த்தி செய்து கொள்ளும் விதத்திலான   64 விதங்களில் ஆன தந்திர சாஸ்திரங்களை உருவாக்கி விட்டார்.
  • அந்த 64 கலைகளும் சாதாரணக் கலைகள் அல்ல. அவற்றை 64  தாந்த்ரீக யோகினிகள் எனப்படும் எட்டு சித்தி தேவதைகள், சக்தி தேவியிடம் இருந்து பெற்றுக் கொண்டு இருந்தவைகள் ஆகும்.  ஒவ்வொரு சித்தி தேவதைகளும் எட்டு விதமான சித்திகளை பெற்று இருந்தார்கள்.  அந்த எட்டு சக்திகளுக்கும் தனித்தனியிலான தேவதைகள் இருந்தார்கள்.  இப்படியாக ஏற்பட்டதே தந்திர சாஸ்திரத்தில் காணப்படும் 64  தேவதைகள் ஆவார்கள். அந்த எட்டு சித்தி தேவதைகளை  ஆராதித்து  அவர்களிடம் இருந்து அந்த சித்திகளை அடைய முடியும் .
  • அவர்கள் அனைவருமே பரமேஸ்வரியின் காவல் தேவதைகள் என்றாலும் அவர்கள் கொண்டிருந்த சக்தியை பெற்றுக் கொண்ட சாதகர்கள், சாஸ்திரங்களுக்கு விரோதமான பல்வேறு தீய செயல்களில் ஈடுபட்டார்கள். அந்த சக்திகளினால் நன்மை,  தீமை, காம, மோக இச்சைகளை பெறவும் முடிந்தது. இதனால்தான் பல இடங்களிலும் மோகினி மற்றும் யோகினி ஆலயங்களும் ஏற்பட்டன (மேலும் அவற்றை அறிந்து கொள்ள தரப்பட்டு உள்ள  லிங்கைப் பார்க்கவும் :  https://santhipriya.com/2020/12/யோகினிகள்.html ).
  • இந்த நிலையைக் கண்டு பரமேஸ்வரன் மனம் கலங்கி நின்றபோது, பராசக்தியானவள், அந்த சக்திகளை எல்லாம் முறியடித்து நல்லவர்களுக்கு சுகத்தைக் கொடுக்கும் ஸ்ரீ வித்யா எனும் உபாசனையையும் சகல   சக்திகளையும் ஒருங்கே கொடுக்கும்    தந்திரக் கலையான ‘பஞ்சதசாக்ஷரி’  எனும் கலையையும் அதே சிவபெருமான் மூலம்  உலகிற்கு கொடுக்க வைத்தார்.
  • பதினைந்து எழுத்துக்களை  கொண்ட  லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் பதினைந்து பீஜங்களை கொண்ட பஞ்சதசாக்ஷரி  எனும் மஹா மந்திரமாகும். பஞ்சதச என்றால் பதினைந்து என்று பொருள். இந்த மந்திரம் பதினைந்து எழுத்துக்களை கொண்டுள்ளது, அதனால் பஞ்சதசாக்ஷரி எனப்படுகிறது.
  • பீஜம் என்பது தனியே ஒரு சம்ஸ்கிருத எழுத்தினை மட்டும் கொண்டதல்ல. உதாரணமாக ‘ஸ’ என்பது ஒரு சமஸ்கிருத எழுத்தினை கொண்ட பீஜம் ஆகும். அதே போல ‘ஹ்ரீம்’ என்பது பல எழுத்துக்களை கொண்ட பீஜம் ஆகும். சமஸ்கிருதத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அர்த்தம் உண்டு.
  • பதினைந்து பீஜங்களை கொண்ட பஞ்சதசாக்ஷரி முன்று பகுதிகளாக உள்ளது. ஒவ்வொரு வரியும் ஒரு கூடம் எனப்படும், இந்த மூன்று கூடங்களும் முறையே வாக்ப கூடம், காமராஜ கூடம், சக்தி கூடம் எனப்படும்.
  • வாக்ப கூடம் லலிதாம்பிகையின் முகத்தினையும், காமராஜ கூடம் கழுத்தில் தொடங்கி  இடை வரையிலான பகுதியையும், இடைக்கு கீழே உள்ள பகுதி சக்தி கூடத்தினையும் குறிக்கும்.
  • இந்த மூன்று கூடங்களும் லலிதாம்பிகையின் முழு வடிவத்தினால் ஆக்கப்படிருக்கின்றது. இந்தக் காரணத்தினால்தான் பஞ்சதசாக்ஷரி மிக சக்தி வாய்ந்த மந்திரமாக கருதப்படுகிறது.
  • சிவனுக்கு பஞ்சாக்ஷரி மந்திரம் போலவும், விஷ்ணுவிற்கு அஷ்டாக்ஷரி மந்திரம் போலவும், பராசக்திக்கு பஞ்சதசாக்ஷரி மந்திரம் அமைந்து உள்ளது).

 ———-
-32-

शिवः शक्तिः कामः क्षितिरथ रविः शीतकिरणः
स्मरो हंसः शक्रस्तदनु च परामारहरयः ।
अमी हृल्लेखाभिस्तिसृभिरवसानेषु घटिता
भजन्ते वर्णास्ते तव जननि नामावयवताम् ॥

ஶிவ: ஶக்தி: காம: க்ஷிதிரதரவி: ஶீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ: ஶக்ரஸ்ததனு ச பராமாரஹரய: ।
அமீ ஹ்ருல்லேகாபிஸ்திஸ்ருபிரவஸானேஷு  கடிதா
பஜந்தே வர்ணாஸ்தே தவ ஜனநி நாமாவயவதாம் ॥

இந்த  ஸ்லோகத்தை  1000 முறை என,
45 நாட்கள் பாராயணம் செய்தால்

–வியாபாரங்களில் வெற்றி பெறலாம்.

ஹே பராசக்தி,
உன்னை முதல் பகுதியான  ‘க  ஏ   ஈ   ல   ஹ்ரீம்’, இரண்டாம் பகுதியான ‘ஹ  ஸ  க  ஹ   ல    ஹ்ரீம்’  மற்றும் மூன்றாம் பகுதியான ‘ஸ   க  ல மற்றும்  ஹ்ரீம் எனும்   பதினைந்து  அக்ஷரங்களினால்  ஆன பஞ்சதசாக்ஷரி  எனும் மந்திரத்தினால்  உபாசனை செய்கின்றார்கள்.

  • (விளக்கம்:
    ஏற்கனவே முந்தைய ஸ்லோகத்தில் குறிப்பிட்டு உள்ளதை போல தேவியின் உருவம் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகின்றது.
  • பஞ்சதச என்றால் பதினைந்து என்று பொருள். இந்த மந்திரம் பதினைந்து எழுத்துக்களை கொண்டுள்ளது, அதனால் ‘பஞ்சதசாக்ஷரி’ எனப்படுகிறது.
  • ஒவ்வொரு வரியும் ஒரு கூடம் எனக் கூறப்படும். பஞ்சதசாக்ஷரி மந்திர பீஜங்கள் முறையே வாக்ப கூடம், காமராஜ கூடம், சக்தி கூடம்- எனப்படும் முன்று பகுதிகளாக உள்ளன.
  • வாக்ப கூடம் என்பது ஸ்ரீ லலிதாம்பிகையின் முகத்தையும், காமராஜ கூடம் என்பது ஸ்ரீ லலிதாம்பிகையின் கழுத்தில் இருந்து இடை வரையும், சக்தி கூடம் என்பது இடைக்கு கீழ் பகுதியையும்  குறிக்கும்.
  • இந்த மூன்று கூடங்களும் ஸ்ரீ லலிதாம்பிகையின் முழு வடிவை தியானிக்கும் வகையில் அமைந்து உள்ளன.
  • ஞான சக்தியைக் குறிக்கும் மேல் கூடம் எனப்படும் தேவியின் முக பாகத்தை ‘க ஏ ஈ ல ஹ்ரீம்’  என்ற முதல்  ஐந்து அட்ஷரங்களை கொண்டு  தியானிக்கின்றார்கள். இந்த பாகத்தை அக்னி கண்டம் என்றும் கூறுவார்கள்.
  • இச்சா சக்தியைக் குறிக்கும் தேவியின் கழுத்திலிருந்து இடுப்பு வரையிலான  மத்திய கூடத்தை ‘ ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்’ என்னும் அக்ஷரங்களினால்  தியானிக்கின்றார்கள். இந்த பாகத்தை சூர்ய கண்டம் என்றும்  கூறுவார்கள்.
  • கிரியா சக்தியை வெளிப்படுத்தும் சக்தி கூடமான தேவியின் இடுப்பின் கீழ் பகுதியை மந்திரத்தின் இறுதிப் பகுதியான ‘ஸ க ல ஹ்ரீம்’ எனும் நான்கு அக்ஷரங்களினால் தியானிக்கின்றார்கள். இந்த பாகத்தை சந்திர கண்டம் என்றும்  கூறுவார்கள்.
  • இந்த காரணத்தினால்தான் பராசக்தி எனப்படும் ஸ்ரீ லலிதா மஹா பராசக்தியின்  உபாஸனைக்கு  உச்சரிக்கப்படும் பஞ்சதசாக்ஷரி மந்திரம் மஹா சக்தி வாய்ந்த மந்திரமாக கருதப்படுகிறது.  பதினைந்து அட்ஷரங்களை இந்த மந்திரம் கொண்டு உள்ளதினால் இந்த மந்திரத்தை ‘பஞ்சதசாக்ஷரி’  என்பதாகவும்  கூறுவார்கள்.
  • எப்படி காயத்ரி மந்திரம் போன்றவை குரு முகமாக உபதேசம் செய்து கொள்ளுவது அவசியமோ அது போன்றே இந்த மந்திரத்தையும் குரு மூலமே  உபதேசம் பெற்றுக் கொண்டு  ஜபிக்க வேண்டும்).
  • ஒவ்வொரு கூடத்தின் முடிவிலும் வரும் ஹ்ரீம் எனும் அக்ஷரமானது சாதகர்கள் கடக்க வேண்டிய மூன்று படிகளை குறிக்கின்றதாம்  அவற்றுக்கு கிரந்தி என்று பெயர். அக்னி கண்டத்தில் வரும் ஹ்ரீம் என்பதை ருத்ர கிரந்தி  என்றும் சூர்ய கண்டத்தில் வரும் ஹ்ரீம் என்பதை விஷ்ணு கிரந்தி என்றும் சந்திர கண்டத்தில் வரும் ஹ்ரீம் என்பதை பிரும்ம கிரந்தி என்பதாகவும் குறிப்பிடுகின்றார்கள்.  


———–
-33-

स्मरं योनिं लक्ष्मीं त्रितयमिदमादौ तव मनो-
र्निधायैके नित्ये निरवधिमहाभोगरसिकाः ।
भजन्ति त्वां चिन्तामणिगुननिबद्धाक्षवलयाः
शिवाग्नौ जुह्वन्तः सुरभिघृतधाराहुतिशतैः ॥

ஸ்மரம் யோனிம் லக்ஷ்மீம் த்ரிதயமிதமாதௌ தவ மனோ-
ர்னிதாயைகே நித்யே நிரவதிமஹாபோகரஸிகா: ।
பஜந்தி த்வாம் சிந்தாமணிகுனநிபத்தாக்ஷவலயா:
ஶிவாக்னௌ ஜுஹ்வந்த: ஸுரபிக்ருததாராஹுதிஶதை: ॥

இந்த  ஸ்லோகத்தை  1000 முறை என, 45 நாட்கள் பாராயணம் செய்தால்
–பணம் விருத்தி ஆகும்.

 ஹே பராசக்தி
என்றும் நிலையானவளும்,  அழிவற்றவளுமான  பரமேஸ்வரி, உன்னை உபாசிக்கும் சாதகர்கள், கயிற்றில் கோர்க்கப்பட்டுள்ள சிந்தாமணி மாலையை கையில் ஏந்திய வண்ணம்  உன்னை ஆராதிக்கும்  போது, அவர்கள் உச்சாடனம் செய்யும் பதினைந்து அக்ஷரமான  பஞ்சதசாக்ஷரி மந்திரத்தின் முன், காம பீஜமான ‘க்ளீம்’ எனும் அக்ஷரத்தையும், புவனேஸ்வரி பீஜமான ‘ஹ்ரீம்’ எனும் அக்ஷரத்தையும்,  லட்சுமி பீஜமான  ‘ஸ்ரீம்’ எனும் அக்ஷரத்தையும் சேர்த்து மந்திர உச்சாடனைகள் செய்தபடி, த்ரீகோணமான அக்னி குண்டத்தில், பசு நெய்யை ஊற்றியவாறு, ஸ்ரீ சக்கரத்தில் இருக்கும் உன்னை தியானித்து சேவிக்கின்றார்கள். 

  • (விளக்கம்:
    32 ஆம் ஸ்லோகத்தில் கூறப்பட்டது பஞ்சதசாக்ஷரி எனும் மஹா மந்திரம் ஆகும். ஆனால் இந்த ஸ்லோகத்தில் (33) கூறப்பட்டு உள்ளதோ சௌபாக்கிய பஞ்சதசாக்ஷரி மந்திரம் என்பதாகும். 
  • கையில் சிந்தாமணி மணியினால் ஆன மாலையை வைத்துக் கொண்டு பஞ்சதசாக்ஷரி மந்திரத்துடன் காம அக்ஷரத்தையும், புவனேஸ்வரி மற்றும் லட்சுமி அக்ஷரத்தையும் சேர்த்து உச்சாடனம் செய்தவண்ணம், சிவாக்கினி எனப்படும் முக்கோண ஹோம குண்டத்தில்  சுத்த பசும் நெய்யை ஊற்றி தேவியை ஆவாஹிக்கும்போது  அவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது தத்துவம் ஆகும்.  
  • ஹோம குண்டங்கள் பெரும்பாலும் சதுரமாகவே இருக்கும். ஆனால் சௌபாக்கிய பஞ்சதசாக்ஷரி மந்திரத்தை உச்சரித்தபடி செய்யப்படும் ஹோம குண்டம் மட்டும் சிவபெருமானுக்கு உகந்த முக்கோண வடிவில் இருந்தால்தான் பராசக்தியின் முழுமையான  கடாக்ஷம் கிடைக்கும்).  

 ——-
-34-

शरीरं त्वं शम्भोः शशिमिहिरवक्षोरुहयुगं
तवात्मानं मन्ये भगवति नवात्मानमनघम् ।
अतश्शेषश्शेषीत्ययमुभयसाधारणतया
स्थितः संबन्धो वां समरसपरानन्दपरयोः ॥

ஶரீரம் த்வம் ஶம்போ: ஶஶிமிஹிரவக்ஷோருஹயுகம்
தவாத்மானம் மன்யே பகவதி நவாத்மானமனகம் ।
அதஶ்ஶேஷஶ்ஶேஷீத்யயமுபயஸாதாரணதயா
ஸ்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸபரானந்தபரயோ: ॥

இந்த  ஸ்லோகத்தை  1000 முறை என, 45 நாட்கள் பாராயணம் செய்தால்
–கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும் 

ஹே பராசக்தி,
நீ சூரியன் மற்றும் சந்திரனை உன்னுடைய  ஸ்தனங்களாகக்  கொண்டு, ஆனந்த பைரவரின் (பரமேஸ்வரன்) உடலாக காட்சி தருகின்றாய்.  எனவே, நான் உன்னை  தூய்மையான சிவனாகக் கருதுகிறேன். உன்னுடைய சரீரம் ஆனந்த பைரவரின் சரீரமாகவும், ஆனந்த பைரவரின் சரீரம் உன்னுடையதாகவும் உள்ளதினால்தான்  இருவருமே சமமான குணங்களை உடையவராக இருக்கின்றீர்கள். அனைத்து குணாதிசயங்களும் இருவருக்குமே பொதுவாக உள்ளதினால் நீங்கள் பேரானந்த நிலையிலான ஆனந்த பைரவராகவும், ஆனந்த பைரவியாகவும் காட்சி தருகின்றீர்கள்.

  • (விளக்கம்:
    இங்கு சந்திர சூரியர்கள் பராசக்தியின் மார்பகங்களாக கூறப்பட்டு உள்ளது வெளிப் பார்வைக்கு விகாரமாக தோன்றலாம். ஆனால் ஸ்லோகத்தில் அப்படி கூறப்படவில்லை. இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டு உள்ள  உள்ளர்த்தம் மிகவும் ஆழமானது, அற்புதமான தத்துவத்தைக் கொண்டது ஆகும். 
  • பராசக்தியின் இரு மார்பகங்களும் ஒரு தாயின் தன்மையை வெளிப்படுத்துகின்றன. பிரபஞ்சத்தில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் தாயின் அரவணைப்பு தேவை; பிறந்த குழந்தையை அரவணைத்து,  தனது மார்பகங்களிலிருந்து  ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவான பாலை தந்து  வளர வைக்கின்றாள்.  ஒரு  தாயின் உணவு இல்லாமல் எந்த குழந்தையும் வாழ முடியாது; எப்படி சந்திரனும் சூரியனும்  பிரபஞ்சத்திற்கு இன்றி அமையாததாக உள்ளதோ அதை போலவேதான் ஒரு தாயின் தாயின் ஸ்தனமும்    குழந்தைக்கு மிக அவசியமானது என்பதை வெளிப்படுத்தவே பராசக்தியின் ஸ்தனங்களை சந்திரன் மற்றும் சூரியனாக கூறி உள்ளார்.
  • இந்த பிரபஞ்சத்தை படைத்தவள் பராசக்தி. அவளது குழந்தைகளே அனைத்து ஜீவன்களும் ஆவார்கள். அத்தனை ஏன், சந்திரன் மற்றும் சூரியன் கூட அவளால் வெளிப்படுத்தப்பட்டவர்களே என்பதினால் அவர்களும் அவளது குழந்தைகள் ஆவார்கள்.
  • பூமியில் உள்ள ஒரு செடியியோ, மரமோ, குழந்தை பிறப்பதைப் போல புதிய துளிர்களை வெளியிடுகின்றன. அந்த செயலை செய்ய அவற்றுக்கு வெப்பமும் தேவை, குளுமையும் தேவை. அனைத்து நாட்களின் காலமும் சூரிய ஒளியாக மட்டுமே இருந்து விட்டால் அதன் வெப்பத்தினால் பயிர்கள் தழைப்பது இல்லை, மரங்கள் துளிர் விடுவதில்லை. அதனால்தான் வசந்த காலம் மற்றும் கோடைக் காலம் என மாறி மாறி வருகின்றன.
  • மரங்களும் செடி கொடிகளும் மானிடர்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவை ஆகும்.   மானிடர்களுக்கும், விலங்குகளுக்கும் உயிர் வாழ ஆக்ஸிஜன் தேவை. அதை ஒளிச் சேர்க்கை எனப்படும் செயல் முறையில் தாவரங்களே வெளியிடுகின்றன. அந்த செயலை செய்ய தாவரங்களுக்கு சூரிய ஒளி தேவைப்படுகிறது.  தாவரங்களின் ஒளிச் சேர்க்கை என்பது தாவரங்கள் சூரிய ஒளி, நீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவற்றை உறிஞ்சிக் கொண்டு ஆக்ஸிஜன் மற்றும் ஆற்றலை உருவாக்கும் செயல் முறையாகும். 
  • அப்படி ஒளிச் சேர்க்கையினால் தாவரங்கள் மானிடர்களுக்கு தேவையான ஆக்சிஜனை வெளிப்படுத்தாவிடில் நாம் உயிர் வாழ முடியாது. சூரியனில் இருந்து வெளிவரும் வெப்பம் இல்லாவிடில் பூமி உறைந்து விடும்.
  • அது மட்டுமின்றி, பல விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் உணவுக்கு தாவரங்கள் தேவை. எனவே, தாய் மற்றும் குழந்தையின் இணைப்பைப் போன்றே அனைத்து ஜீவராசிகளுடன் சூரியனின் இணைப்பும் உள்ளது.
  • சூரிய ஒளியைப் போன்றே சந்திரனின் நிலவு வெளிச்சமும் பிரபஞ்சத்திற்கு  தேவை. காரணம் இரவில் ஒரு நுட்பமான ஒளி      மனிதர்கள் உட்பட தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உயிர் வாழும் நிலைக்கு அத்தியாவசியமாக உள்ளது.  சந்திரனின் ஒளிக் கதிர்கள்   பல்வேறு உயிரியல் செயல் முறைகளை பாதிக்கிறது. தாவர வளர்ச்சி மற்றும் விலங்குகளின் நடத்தை சந்திர ஒளியின் சுயற்சியுடன் பிணைக்கப்பட்டுள்ளது. தாவரங்களின் பூக்கள் பூக்க நிலவொளி தேவை. பூமி நாள் முழுவதும் வெப்பமடைகிறது; அந்த வெப்பத்தைத் தணித்து  பூமி குளிர்வடைய நிலவொளி அவசியம்.
  • ஒரு தாய் குழந்தையை பாலூட்டி வாழ வைத்து காப்பதை போல, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவன்களையும்  வாழ வைப்பது சந்திர சூரியன்கள் ஒளி வெள்ளங்களே என்பதாலும்,  அதே சந்திர சூரியனை பிறப்பு எடுக்க வைத்ததும் அதே பராசக்தி என்பதினாலும், அவை இன்றி எந்த ஜீவ ராசிகளும்  உயிர் வாழ முடியாது என்பதினாலும்,   சூரியன் மற்றும் சந்திரனை பராசக்தியின் மார்பகங்களாக, ஒரு உவமையாக இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டு உள்ளது.
  • சக்தி தேவியே சிவபெருமானுக்கு கண்ணாடி போல இருந்து அவருடைய சுயத்தை அவரால் பார்க்க முடிந்தவாறு செயல்படுகிறாள். சக்தி என்பவள் சிவபெருமானை இயக்கும் ஆற்றல் ஆகும். அவர் சிவ பெருமானாகவே மட்டுமே இருந்துவிட்டால் உணர்வுகள் அற்ற ஜடமாக இருந்திருப்பர்  என்று கூறப்படுகிறது. பிரம்மன் என்பது  ஜட நிலையில்  இருக்க முடியாது. (சதாசிவ வடிவில் உள்ள – சிவம் மற்றும் சக்தி ) சிவ பெருமான் ஜடமாக இருந்தாலும், பராசக்தியானவள் பிரபஞ்சத்தின் உருவாக்கம், வாழ்வாதாரம் மற்றும் அழிவு ஆகிய செயல்களை செய்யும்   ஆற்றல் மிக்க  சிவனின்  சக்தியாக இருந்தவாறு செயல்படுகிறாள். எனவே, சக்தி இல்லாத சிவன் அல்லது சிவன் இல்லாத சக்தி என்பது உணர்ச்சி அற்றதாகவே இருந்து விடும்.
  • பிரம்மத்தின் இரண்டு மிக முக்கியமான அம்சங்கள் விழிப்புணர்வு மற்றும் பேரின்ப நிலை ஆகும்.  விழிப்புணர்வு என்பது பராசக்தியின் ஆற்றல் ஆகும். அதனால்தான் சக்தி என்பவள்  சிவபெருமானுக்கு  உள்ளே மறைந்துள்ள ஆற்றல் என்று கூறப்படுகிறது. சிவனும் சக்தியும் எந்த சூழ்நிலையிலும் பிரிக்க முடியாதவர்கள் என்பதினால்தான் அவர்கள்   பிரபஞ்சத்தின்  தாய் -தந்தையர்  என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் இருவருமே பேரானந்த நிலையில் இருக்கும்போது இந்த பிரபஞ்சமும் பேரானந்த நிலையில் இருக்கும் என்பதே இந்த ஸ்லோகத்தில் காணப்படும்   உள் அர்த்தம் ஆகும் .
  • சௌந்தர்யலஹரியின் பல ஸ்லோகங்கள் தேவியின் அங்க அழகை விவரமாக விவரித்து உள்ளன. அவை  வெளிப் பார்வைக்கு விரசமாக தோற்றம் அளிக்கலாம். ஆனால்  அதை படிக்கும் உண்மையான பக்தர்கள், தனது தாயார் ஸ்தானத்தில் உள்ள அன்னை சாமுத்ரிகா லஷணத்தை பிரதிபலிக்கின்றாள் என்பதை உணர்வார்களே தவிர அன்னையின் அழகை வேறு கோணத்தில் பார்க்க மாட்டார்கள்.
  • ஆதி சங்கரர் ஒரு பரிசுத்தமான யோகி. அவர் தியான நிலையில் இருந்தபோது பராசக்தியையும் பரமேஸ்வரரையும் நேரடியாக பார்த்தபோது, அவர்கள் எப்படி அவருக்கு தோற்றம் அளித்தார்களோ அவற்றைத்தான்   ஸ்லோகங்களில் விளக்கிக் கூறி உள்ளார்.
  • பராசக்தி இந்த ஜகத்திற்கே தாயார் என்பதினால், ஒரு பிறந்த குழந்தை தனது தாயாரின் அழகை அதன் மனதிற்குள்ளேயே, அது என்ன என்று தெரியாமல் ரசிப்பதை போலவேதான் ஆதி சங்கரரும் அன்னையின் உருவத்தை ஒரு குழந்தையாக இருந்தவாறு விளக்கி உள்ளார்.

———
35-

मनस्त्वं व्योम त्वं मरुदसि मरुत्सारथिरसि
त्वमापस्त्वं भूमिस्त्वयि परिणतायां न हि परम् ।
त्वमेव स्वात्मानं परिणमयितुं विश्ववपुषा
चिदानन्दाकारं शिवयुवति भावेन बिभृषे ॥

மனஸ்த்வம் வ்யோம த்வம் மருதஸி மருத்ஸாரதிரஸி
த்வமாபஸ்த்வம் பூமிஸ்த்வயி பரிணதாயாம் ந ஹி பரம் ।
த்வமேவ ஸ்வாத்மானம் பரிணமயிதும் விஶ்வவபுஷா
சிதானந்தாகாரம் ஶிவயுவதி பாவேன பிப்ருஷே ॥

இந்த  ஸ்லோகத்தை  1000 முறை என, 45 நாட்கள் பாராயணம் செய்தால்
–க்ஷயரோகம்  (காச நோய்) நிவர்த்தி ஆகும்

ஹே பராசக்தி,
ஆக்ஞா சக்கரத்தில் உள்ள  மனஸ் தத்துவம் நீதான், விசுத்தி சக்கரத்தில் உள்ள ஆகாய தத்துவமும் நீயே, அனாஹத சக்கரத்தில் உள்ள வாயு  தத்துவமும் நீதான்,  ஸ்வாதிஷ்டான சக்கரத்தில் உள்ள அக்னி தத்துவமும் நீதான், மணிப்பூரா சக்கரத்தில் உள்ள ஜலத் தத்துவமும் நீயே, மூலாதாரத்தில் உள்ள பிருதிவி தத்துவமும் நீதான். நீயே இந்த பிரபஞ்சமாக  இருப்பதை வெளிப்படுத்துவதற்காக மஹேஸ்வரனின் மனைவியான காமேஸ்வரியாக பேரானந்த நிலையில் காட்சி தருகின்றாய்.

  • (விளக்கம்:
    இந்த ஸ்லோகத்தின் மூலம் இரண்டு தத்துவங்களை நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது.
  • முதலாவது இது. ஒரு விதை படிப்படியாக முளை விட்டவாறு ஒரு கட்டத்தில் பெரிய மரமாகி விடும். ஒரு மரம் திடீரென்று தோன்ற முடியாது, அது படிப்படியாகவே வளர்கின்றது  என்பதை போலவே, ஒரு விதை போல,   குண்டலினி வடிவில் சுருண்ட பாம்பைப் போல மூலாதான சக்கரத்தில்  ஓய்வெடுத்துக் கொண்டு உள்ள குண்டலினி சக்தியை எழுப்பும் சாதகர் அதனுடன் பல சக்கரங்களைக் கடந்து சஹஸ்ராரத்தை சென்றடைகின்றார். அங்கு பரமேஸ்வரர் பரமேஸ்வரியுடன் பேரானந்த நிலையில் காட்சி தருகின்றார். அதைக் காணும் சாதகனோ அந்த பேரானந்த நிலையிலான கடலில் பேரானந்தமாக நீந்துகின்றார். இதைத்தான் ஆதி சங்கரர்,  ஒவ்வொரு சக்கரத்திலும் பராசக்தி இருக்கின்றாள், எப்படி ஒரு விதை படிப்படியாக முளைவிட்டு பெரிய மரமாகின்றதோ அதை போல, அவளோடு பயணிக்கையில் சாதகர் பேரானந்த நிலையை அடைகின்றார்   என்பதாக இந்த ஸ்லோகத்தில் கூறி உள்ளார்.
  • இந்த ஸ்லோகத்தின் மூலம் நமது சரீரத்தில் உள்ள ஒவ்வொரு சக்கரங்களும் எத்தனை தாமரை மலர்களின் இதழ்களுக்கு ஒப்பானவை என்றும், அவை எந்தெந்த தத்துவங்களைக் குறிக்கின்றன என்றும், அந்த தத்துவங்களைக் கொண்ட ஷேத்திரங்களைக் குறித்தும்  அறிந்து கொள்ள முடிகின்றது.
  • பிரிதிவி தத்துவத்தைக் குறிக்கும் மூலாதார சக்கரத்தை நான்கு தாமரை இதழ்களுக்கும், காளஹஸ்தி ஷேத்திரத்திற்கும்,
  • அக்னி தத்துவத்தைக் குறிக்கும் ஸ்வாதிஷ்டான சக்கரத்தை எட்டு தாமரை இதழ்களுக்கும், திருவண்ணாமலை ஷேத்திரத்திற்கும்,
  • ஜலத் தத்துவத்தைக் குறிக்கும் மணிப்பூரா சக்கரத்தைக் ஆறு இதழ் தாமரை மற்றும் திருவானைக்கா கோவில் ஷேத்திரத்திற்கும்
  • வாயு தத்துவத்தைக் குறிக்கும் அனாஹத சக்கரத்தை பத்து இதழ் தாமரை மற்றும் ஆவுடையார் ஷேத்திரத்திற்கும்,
  • ஆகாய தத்துவத்தைக் குறிக்கும் விசுத்தி சக்கரத்தை பன்னிரண்டு இதழ் தாமரை மற்றும் சிதம்பர ஷேத்திரத்திற்கும்
  • மனசு தத்துவத்தைக் குறிக்கும் ஆக்ஞா சக்கரத்தை இரண்டு  இதழ் தாமரை மற்றும் காசி ஷேத்திரத்திற்கும்,
  • காமேஸ்வரி-காமேஸ்வரனின் இருப்பிடமானதும் பேரானந்த நிலையை தருவதுமான சஹஸ்ரார சக்கரத்தை ஆயிரம்  
  • இதழ் தாமரைக்கும்   ஒப்பானவை என்று கூறி உள்ளார். 
  • இதுவே ஸ்ரீ வித்யா, ஸ்ரீ சக்கரத்தின்  தத்துவம் ஆகும். பராசக்தி பிரபஞ்சத்தை தன்னுள் இருந்து படிப்படியாக வெளிப்படுத்துகிறாள்.
  • பராசக்தி நிலையானவள்;அழிவற்றவள்; நமது கண்களுக்கு தெரியாத பரபிரும்ம ரூபத்தில் உள்ளவள்; தூய உணர்வு  கொண்டவள்; அவளுக்கு உடலியல் போன்ற எந்த குணங்களும் கிடையாது.

 ——–
-36-

तवाज्ञाचक्रस्थं तपनशशिकोटिद्युतिधरं
परं शम्भुं वन्दे परिमिलितपार्श्वं परचिता ।
यमाराध्यन् भक्त्या रविशशिशुचीनामविषये
निरालोकेऽलोके निवसति हि भालोकभुवने ॥

தவாஜ்ஞாசக்ரஸ்தம் தபனஶஶிகோடித்யுதிதரம்
பரம் ஶம்பும் வந்தே பரிமிலிதபார்ஶ்வம் பரசிதா ।
யமாராத்யன் பக்த்யா ரவிஶஶிஶுசீனாமவிஷயே
நிராலோகேலோகே நிவஸதி ஹி பாலோகபுவனே ॥

இந்த  ஸ்லோகத்தை  1000 முறை என, 45 நாட்கள் பாராயணம் செய்தால்
–எல்லா விதமான நோய்களும்  நிவர்த்தி ஆகும்

ஹே பராசக்தி
உன்னுடைய  திருமேனியில் புருவங்களின் நடுவே குடி கொண்டுள்ள ஆக்ஞா சக்கரத்தில் வசிப்பவரான காமேஸ்வரன், ஆயிரம்  கோடி சூர்ய சந்திரர்களின் ஒளியை விட அதிக பிரகாசமானவர்; அவர் தன்னுடைய இன்னொரு பக்க உடலில் பேரானந்தத்தை தரும் பரமேஸ்வரியை உள்ளடக்கியவர். அப்படிப்பட்ட  பரமசிவனையும், உன்னையும் எவன்  ஒருவன் தியானம் செய்கிறானோ அவன் ஆயிரம் கோடி சூர்ய சந்திரனை விட (கண்ணுக்கு புலப்படாத) ஒரு ஜோதி மயமான உயர்ந்த  உலகத்தை அடைகிறான்.

  • (விளக்கம்:
    இந்த ஸ்லோகம் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிவது என்ன என்றால், தேவியின் இரு புருவங்களுக்கு இடையே உள்ள ஆக்ஞா சக்கரத்தில்   சிவபெருமான் அக்னி, சூரியன் மற்றும் சந்திரன் போன்ற மூன்று பேர்களின் ஒளியையும் ஒன்று சேர்த்தால் எத்தனை பிரகாசம் கிடைக்குமோ  அதை விட பல்லாயிரம் மடங்கிலான ஒளி கிரணங்களை வீசிக் கொண்டு அமர்ந்து உள்ளார்.
  • அவரை சுற்றி பராசக்தியினால் வெளிப்பட்ட ஒளியும் வியாபித்து  இருக்க, சிவபெருமானின் உடலில் இருந்து வீசிக் கொண்டு உள்ள  ஒளி வெள்ளமானது, அக்னி, சூரியன் மற்றும் சந்திரன் போன்ற  எவருமே நுழையக் கூட வெட்கப்படும் அளவிலான இடமாக உள்ளது.  
  • சிவபெருமானின் உடலில் இருந்து வீசிக் கொண்டு இருக்கும்  ஒளி வெள்ளம் இந்த பிரபஞ்சத்தையே   பிரகாசமாக வைத்துக் கொண்டு  உள்ளது என்றால், அவருக்கு அப்படிப்பட்ட ஆற்றலை  பராசக்தியே தருகின்றாள். 
  • சஹஸ்ரார சக்கரத்தில் பரமேஸ்வரியுடன் உள்ள பரமேஸ்வரன் எப்போதெல்லாம் பிரபஞ்சத்தைப் படைக்க ஆணை கிடைக்கிறதோ அப்போதெல்லாம் ஈஸ்வரன் எனும் சிவன் ரூபத்தில்  ஆக்ஞாவில் வந்து தங்கி பிரபஞ்சத்தைப் படைக்கின்றார். ஆகவே ஆக்ஞாவும் அவர் இருப்பிடம் என்பதினால்தான்  அந்த இடமும் அத்தனை பிரகாசமாக உள்ளது.   
  • அந்த ஒளியை, தியானம் மற்றும் யோகா நிலை மூலம் ஆக்ஞா சக்கரத்தை  எட்டி விட்ட சாதகர்களால் மட்டுமே காண முடியும். அத்தகைய ஒளி, தேவியின் புருவங்களுக்கு மத்தியில் சாதகர்களுக்கு தெரிவதின் காரணம், அந்த நிலையை எட்டும் சாதகர் இருள் முழுவதும்  மறைந்து உள்ள மனநிலையில் இருக்கின்றார்.
  • அந்த நுழை வாயில் மூலமே, காமேஸ்வரன்-காமேஸ்வரி இருவரும் இணைந்து காட்சி அளிக்கும் சஹஸ்ரார சக்கரம் எனும் இடத்தை சென்று அடைந்து மோட்ஷ நிலையை பெற முடியும் என்பதினால், அவர்களை சென்று அடையும் வழி முழுவதையுமே சிவபெருமான்  உடலின் இருந்து வெளியாகும் ஒளி வெள்ளம் பிரகாசமாக வைத்துக் கொண்டு உள்ளது).

——–
-37-

विशुद्धौ ते शुद्धस्फटिकविशदं व्योमजनकं
शिवं सेवे देवीमपि शिवसमानव्यवसिताम् ।
ययोः कान्त्या यान्त्याः शशिकिरणसारूप्यसरणे-
विधूतान्तर्ध्वान्ता विलसति चकोरीव जगती ॥

விஶுத்தௌ தே ஶுத்தஸ்படிகவிஶதம் வ்யோமஜனகம்
ஶிவம் ஸேவே தேவீமபி ஶிவஸமானவ்யவஸிதாம் ।
யயோ: காந்த்யா யாந்த்யா: ஶஶிகிரணஸாரூப்யஸரணே-
விதூதாந்தர்த்வாந்தா விலஸதி சகோரீவ ஜகதீ ॥

இந்த  ஸ்லோகத்தை  1000 முறை என, 45 நாட்கள் 
பாராயணம் செய்தால் பூத பிரேதங்களின் பயம் ஒழியும்

ஹே பராசக்தி,
ஆகாய தத்துவத்தின் மூலமானவரும், சுத்தமான ஸ்படிகமணி போன்று  தெளிவானவருமான பரமேஸ்வரனையும், உன்னையும் எவன் ஒருவன் விசுத்தி சக்கரத்தில் ஆராதனை செய்கிறானோ, அங்கு  உங்கள் இருவரிடமும் இருந்து வெளியாகும் பிரகாசமான ஒளிக் கிரணங்களினால் அவர்களது அறியாமை  எனும் மன இருட்டு அகன்று, முழு நிலவை கண்ட    சகோர பட்ஷி  மனம் மகிழ்வதை போல, அமிர்தம் அருந்திய மன நிலையில் ஆனந்தமாக இருப்பான் .

  • (விளக்கம்:
    இந்த ஸ்லோகம் வெளிப்படுத்துவது என்ன என்றால் பராசக்தியின் ஆணையை ஏற்று, பிரபஞ்சத்தை உருவாக்க முடிவு செய்த பரமேஸ்வரர், முதலில் ஆக்ஞா சக்கரத்தில் நுழைகிறார். அங்கு அவர் பிரபஞ்சத்தை எப்படி படைப்பது என்ற எண்ணத்தை வலுப்படுத்திக் கொண்ட பின்னர்  விசுத்தி  சக்கரத்தில் சென்று விண்வெளி எனும் ஆகாயத்தை உருவாக்குகிறார். எப்படி பராசக்தியின் இருந்து வெளியான சதாசிவன், ஈஸ்வரனை வெளிப்படுத்த, அவரிடம் இருந்து அனைத்து பிற தெய்வங்களும் தோன்றினவோ, அதே போலவே ஆகாசத்தில் இருந்தே பிரபஞ்சத்தின் அனைத்தும் தோன்றின.
  • பரமேஸ்வரர் ஒவ்வொரு சக்கரங்களுக்கும்  செல்லுகையில் தனியே பயணிப்பதில்லை. அவரிடம் ஒப்படைக்கப்பட்ட கடமையை  செய்யத் தேவையான சக்திகளை  தர வேண்டும் என்ற எண்ணத்தில், வெளித் தெரியாமல் அவரோடு இணைந்து உள்ள பராசக்தியும் செல்கின்றாள். 
  • சந்திரன் தன் குளிர்ந்த கதிர்களால் விசுத்தி சக்கராவின் இடத்தை நிரப்பி உள்ளதினால் விசுத்தி சக்கரா குளிர்ச்சியாக உள்ளது .
  • சகோரா என்ற பறவை சந்திரனைக் கண்டதும் கண் விழித்து, நிலவின் ஒளியில் மகிழ்ச்சியில் எப்படி பறக்குமோ, அதுபோல, சாதகர்கள்  விசுத்தி சக்கராவில் நுழைந்து சிவ-சக்தியின் தரிசனத்தைப் பெற்றதுமே அவர்களது ஆன்மீக அறியாமை மறைந்து விடுகின்றது.  அவனது பயணத்தின் இறுதி இலக்கான சஹஸ்ராரத்திற்கு  சிறிது தூரத்தில் மட்டுமே உள்ள அவன் விழிப்புணர்வு பெற்றவனாக ஆகின்றான் . 
  • ஒரு பழம் பெரும் பறவையான ‘சகோர’ எனும் பறவை குறித்து இந்து புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ளது (இதன் சமஸ்கிருத பெயர்: चकोर e. Chakor; கிரீக் நாட்டு ரோமானியத்தில் பெயர்: சகோரா என்பதாகும்). இது சந்திரனின் கதிர்களை குடிப்பதாக நம்பப்படுகிறது.  சகோரா மற்றும் சந்திரனின்  தொடர்பு  குறித்த பல நாட்டுப்புற காதல் கதைகள் வட மொழியில் உள்ளன என்கின்றார்கள்).

——–
-38-

समुन्मीलत् संवित् कमलमकरन्दैकरसिकं
भजे हंसद्वन्द्वं किमपि महतां मानसचरम् ।
यदालापादष्टादशगुणितविद्यापरिणति-
र्यदादत्ते दोषाद् गुणमखिलमद्भ्यः पय इव ॥

ஸமுன்மீலத் ஸம்வித் கமலமகரந்தைகரஸிகம்
பஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மானஸசரம் ।
யதாலாபாதஷ்டாதஶகுணிதவித்யாபரிணதி-
ர்யதாதத்தே தோஷாத் குணமகிலமத்ப்ய: பய இவ॥

இந்த  ஸ்லோகத்தை  5000 முறை என, 45 நாட்கள் பாராயணம் செய்தால்
குழந்தைகளின் நோய்கள் அகலும்

ஹே பராசக்தி,
இந்த ஸ்லோகத்தில் நீங்கள் இருவருமே  (பரமேஸ்வரனையும் பரமேஸ்வரியையும்) இரண்டு அன்னப் பறவைகளாக காட்டப்பட்டு உள்ளீர்கள்.  நீங்கள் இருவரும்தான் (பரமேஸ்வரரும், பரமேஸ்வரியும்) அஷ்டாதச வித்தைகள்  வெளிப்பட மூல காரணமாக இருந்தவர்கள்.  அன்னப் பறவையின் குணம் பாலில் உள்ள நீரை பிரித்து எடுத்து விட்டு பாலை மட்டும் பருகும். அதை போலவேதான்  உங்களை பிரார்திப்பவர்களின் தோஷங்களை, அன்னப் பறவைகள் போன்று நீங்கள் விலக்கி, அவர்களுடைய மனதில் குடி இருப்பீர்கள்; மேலும் அவர்களுக்கு அஷ்டாதச வித்தைகளையும் நீங்களே தருகின்றீர்கள்  என்பதினால் அனாஹத சக்கரத்தில் நான் உங்களை வணங்கி தியானிக்கின்றேன்.

  • (விளக்கம்:
    அஷ்டாதச வித்தைகள் என்பவை பதினெட்டு வித்தைகள் -நான்கு வேதங்கள், ஆறு வேதாங்கங்கள், எட்டு சாஸ்திரங்கள் ஆக பதினெட்டு நூல்களில் உள்ள சாரம் ஆகும்.
  • பரமேஸ்வரி மற்றும் பரமேஸ்வரரை ‘ஹம்ஸத்ந்த்வம்: (हंसद्वन्द्वं)’ என ஸ்லோகத்தில் ஆதி சங்கரர் கூறி உள்ளார். ஹம்ச என்பது அன்னப் பறவையை குறிக்கின்றது. மேலும் ஹம்ச எனும் வார்த்தையில் உள்ள ‘ஹம்ஸ’ என்பதில் முதல் இரு எழுத்துக்கள் ஆன ‘ஹம்’ என்பது புருஷனாகிய சிவனையும், ‘ஸ:’ என்பது பராசக்தியையும்  குறிக்கும். எனவே ‘ஹம்ஸ:’ என்பதே பரமேஸ்வரி மற்றும் பரமேஸ்வரரை குறிக்கும் சொல்லாகவே உள்ளது.
  • வேதாங்கங்கள் என்பது வேதத்தின் ஆறு உறுப்புகள் என்று சொல்லப்படுகின்றன. வேத ஒலிகளையும் அக்ஷரங்களையும் புரிந்து கொண்டு சரியான முறையில் பயன்படுத்த வேதாங்கங்கள் மிக முக்கியமாக இருக்கின்றன. வேதங்களைக் கற்பிப்பதில் வேதாங்கங்களுக்கு முதன்மை இடம் அளிக்கப்படுகிறது.
  • தாமரை மலர்கள் பூக்கும் நீர் நிலைகளில் அன்னப் பறவைகள் நீந்திக் கொண்டும், மிதந்து கொண்டு இருப்பதைக் காணலாம். அவை உயிர் வாழ்வதற்கு தேவையான ஆகாரத்தை தாமரை வேர்களில்  இருந்து எடுத்துக் கொள்கின்றன.  நீண்ட மற்றும் அழகான கழுத்துக்களை உடைய அன்னப் பறவைகள் நீர் நிலைகளின் உள்ளே சென்று தாமரை செடியின் மென்மையான, உண்ணக் கூடிய வேர்களை வெளியே இழுத்துக்  கொண்டு வந்து அவற்றை உணவாக உண்ணும். அன்னப் பறவைகள் பக்ஷிகள் (ஹம்ஸ பக்ஷி) வசிக்கும் இடத்தை ‘மானஸ ஸரஸ்’ என்பார்கள்.   மானஸம் என்னும் பொய்கையில் அந்த நதி உற்பத்தியாகி பாய்வதால், அது  சரயூ நதி என்ற பெயரைப் பெற்று,  தேவர்களால் போற்றப்பட்டது. 
  • எதனால் இந்த ஸ்லோகத்தில் உள்ள இரண்டு தெய்வங்களையும் நீர் நிலைகளில் காணப்படும் அன்னப் பறவையுடன் ஒப்பிட வேண்டும்? சாதகர்கள் அனாஹத சக்கரத்தை அடையும் போது, ​​அவர்கள் மனம் முழுவதும் பரமேஸ்வரி மற்றும் பரமேஸ்வரரின் சிந்தனைகளில் மூழ்கிக் கிடந்தாலும் மனதில் உள்ள சில அசுத்தங்கள் அவர்களைத் தொந்தரவு செய்ய முயற்சிக்கும்.  பேரின்ப நிலையை அடைய விரும்பி சாதனாக்களில், அனாஹத சக்கரத்தை அடைந்து விட்ட  சாதகரின் உற்சாகமான முயற்சியின் தீவிரத்தை உணர்ந்து, இரட்டை தெய்வங்களும் அன்னப் பறவை போல  அந்த சாதகர்கள் எண்ண அலைகளில் நீந்திச் சென்று  அசுத்த எண்ணங்களை அழித்து விடுகின்றார்கள் என்பதினால் தத்துவார்த்தமாக இந்த உவமை கூறப்பட்டு உள்ளது.
  • அனாஹத சக்கரம் ஒருவரின் உடலுக்குள் உள்ள மிக முக்கியமான சக்கரம் ஆகும். அங்கு சென்று விட்டால் கல்பதாரு மரத்தைப் போல நாம் விரும்புவதை அடைய வழி வகுக்கும்.

———-
-39-

तव स्वाधिष्ठाने हुतवहमधिष्ठाय निरतं
तमीडे संवर्तं जननि महतीं तां च समयाम् ।
यदालोके लोकान् दहति महति क्रोधकलिते
दयार्द्रा या दृष्टिः शिशिरमुपचारं रचयति ॥

தவ ஸ்வாதிஷ்டானே ஹுதவஹமதிஷ்டாய நிரதம்
தமீடேஸம்வர்தம் ஜனநி மஹதீம் தாம் ச ஸமயாம் ।
யதாலோகே லோகான் தஹதி மஹதி க்ரோதகலிதே
தயார்த்ரா யா த்ருஷ்டி: ஶிஶிரமுபசாரம் ரசயதி ॥

இந்த  ஸ்லோகத்தை  5000 முறை என, 45 நாட்கள் பாராயணம் செய்தால்
அனாவசிய மன பயங்கள் விலகும்

ஹே பராசக்தி,
பிரளய காலத்தில் லோகங்களை அழிப்பவரும், எட்டு தாமரை தளங்களைக் கொண்ட ஸ்வாதிஷ்டான சக்கரத்தில் அக்னி ஸ்வரூபத்தை வெளிப்படுத்தியவாறு உள்ள, காலாக்னி மற்றும் ஸம்வர்த்தா மற்றும் ருத்ரன் எனும் பெயர்களைக் கொண்ட உன் கணவரை, குளிர்ந்த நிலவைப் போன்ற பார்வையினால் பார்த்து உக்கிரத்தை தணிப்பவளும், நீரின் அம்சத்தோடு கூடியவளுமான ஸம்வர்த்தினி எனும் பெயரைக் கொண்ட  உன்னை, ஸ்வாதிஷ்டான சக்கரத்தில் வணங்கி தியானிக்கின்றேன்.

  • (விளக்கம்:
    பெரும்பாலான ஸ்லோகங்கள், பரமேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி இருவருமே ஒன்றிணைந்துள்ள, சிவன் மற்றும் சக்தி எனும் பிரிக்க முடியாத சக்திகள் என்பதை காட்டுகின்றன.   எனவே, தங்கள் பயணப் பாதையில் சஹஸ்ரார சக்கரத்தில் நுழைய விரும்பும் சாதகர்கள், ஒவ்வொரு சக்கரத்திலும் சிவ-சக்தியின்   பல்வேறு வடிவங்களிலான ஸ்வரூபங்களை  தியானித்த பிறகே சஹஸ்ராரத்தை சென்று  அடைய முடிகின்றது.
  • இந்த ஸ்லோகத்தில் பரமேஸ்வரர் பிரளய காலத்தில் ருத்திரர் எனும் ரூபத்தைக் கொண்டு, கோபத்துடன் நெருப்பை வெளிப்படுத்தி, பிரபஞ்சத்தை அழிப்பவராக காட்டப்படுகிறார். இந்தச் செயலில் ஈடுபடும் அவர் காலாக்னி என்றும், ஸம்வர்த்தர் என்றும் அழைக்கப்படுகிறார். அவரே மூன்று உலகங்களையும் எரித்தவர் மற்றும் மூன்று வகையான நெருப்புகளை கொண்டவர் எனும் பெருமைகளைக் கொண்டவர். அவற்றுக்கு அப்பால்,  ஆக்ஞா சக்கரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அவர் ஒளியின் உச்ச கட்ட பிரகாசத்தைக் கொண்டவர் என்பதும்  புரிகின்றது என்றாலும்,  அனைத்து சக்திகளுமே அவரோடு    பிரிக்க முடியாத துணையாக இருக்கும் அதே பராசக்தியினால்தான் வழங்கப்படுகின்றன என்பதும் புரியும்.
  • ருத்திர ரூபத்தில் பரமேஸ்வரர்  பிரபஞ்சத்தை எரித்தாலும், கருணை வடிவமான பரமேஸ்வரி,  பிரபஞ்சத்தில் உள்ள உயிரினர்களின் ரணங்களுக்கு குளிர்ச்சியை தந்து, அவற்றுக்கு ஆறுதல் தரும் வகையில்  அதே சதாசிவன் மூலம் புதிய பிரபஞ்சத்தை எழுப்புகின்றார்.
  • பரமேஸ்வரன் கோபத்தோடு மன்மதனை எரித்து விட்டாலும், அவளது கருணை உணர்வினால், அவளுடன் மகிழ்ச்சியான மன நிலையில் பரமேஸ்வரர் இருந்தபோது அதே பரமேஸ்வரன் மூலம் எரிக்கப்பட்ட மன்மதனின் உயிருக்குப் புத்துயிர் அளிக்க வைக்கிறாள் என்பதில் இருந்தே, காதலின் வலிமையினால்  அவளிடத்தில் பரமேஸ்வரர் அடங்கிக் கிடந்தது தெரிகின்றது.
  • எனவே, இந்தச் சக்கரத்தில் சிவன் மற்றும் சக்தி ஆகிய இருவரையும் வழிபடுவது, மோகத்திலான உடல் உணர்வுகளை அழித்து, அறிவாற்றல் மிக்க மன நிலையையும், ஆன்மீக அறிவாற்றலையும் உயர்த்துகின்றது என்பது தெரிகின்றது.

 ——–
-40-

तटित्त्वन्तं शक्त्या तिमिरपरिपन्थिस्फुरणया
स्फुरन्नानारत्नाभरणपरिणद्धेन्द्रधनुषम् ।
तव श्यामं मेघं कमपि मणिपूरैकशरणं
निषेवे वर्षन्तं हरमिहिरतप्तं त्रिभुवनम् ॥

தடித்வந்தம் ஶக்த்யா திமிரபரிபந்திபுரணயா
ஸ்புரன்னானாரத்னாபரணபரிணத்தேந்த்ரதனுஷம் ।
தவ ஶ்யாமம் மேகம் கமபி மணிபூரைகஶரணம்
நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிரதப்தம் த்ரிபுவனம் ॥

இந்த  ஸ்லோகத்தை  1000 முறை என, 45 நாட்கள் பாராயணம் செய்தால்
நாம் நினைப்பதை ஸ்வப்னத்தில் காணலாம்

ஹே பராசக்தி,
கருநீல வண்ணத்தில் சூழ்ந்து உள்ள மணிபூரக சக்கரத்தில் உள்ள இருளை போக்கும் மின்னல் ஒளியாக நீ  இருக்கிறாய். நீ அணிந்துள்ள பல்வேறு அணிகலன்களும், ஆபரணங்களும் வெளிப்படுத்தும்  ஒளியில் அந்த கருமை நிற சக்ரமானது பல   வண்ணங்களைக் கொண்ட  வானவில்  போல காட்சி தருகின்றது.  ருத்திரனின் கோபத்தினால் பிரளய காலத்தில் தகிக்கப்பட்ட பிரபஞ்சத்தை, அமிர்தம் போன்ற மழையினால் குளிர வைக்கும்  உனது சதாசிவ ரூபத்தை அந்த சக்கரத்தில் வணங்கி தியானிக்கின்றேன்.

  • (விளக்கம்:
    இந்த ஸ்லோகத்தில் மணிப்பூரா சக்கரத்தின் மேன்மை வெளிப்படுத்தப்பட்டு  உள்ளது. மனித உடலின் தொப்புள் பகுதியில் உள்ள இது மிக முக்கியமான சக்கரம் ஆகும்.
  • இந்த சக்கரத்தில் பரமேஸ்வரரை வலிமை கொண்ட கருமை நிறத்திலான மழை பொழியும் மேகம் போலவும், அதில் அவருக்கு சக்தியை அளிக்கும் மின்னல் போல தோன்றும் பரமேஸ்வரியையும் உவமையாக கூறி பராசக்தி அணிந்துள்ள அணிகலங்களின் வெளிச்சமே வானவில்லை போல அந்த மேகத்தில் தோன்றுவதாகவும் வர்ணனை செய்யப்பட்டு உள்ளது.
  • பரமேஸ்வரனுக்கு எப்போதெல்லாம் ஆற்றல் தேவையோ அப்போதெல்லாம் அவள்  மீண்டும் மீண்டும் தோன்றி, அவருக்கு ஆற்றலை  கொடுத்தபடி இருக்கின்றாள் எனும் தத்துவத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.
  • இது எடுத்துக் காட்டுவது என்ன என்றால் பரமசிவனையும் பரமேஸ்வரியையும் பிரிக்க முடியாது, அவர்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து உள்ளார்கள் என்பதினால் அதில் சிவன் யார் சக்தி யார் என்பது தெரியாமல் உள்ளது.
  • இரண்டாவதாக, மேகத்தில் தோன்றும் வானவில்லை பற்றி மிகவும் சுவாரஸ்யமான கேள்வி எழுகிறது. மேகத்தில் தோன்றும் வானவில்லின் வண்ணங்கள் என்பது பராசக்தி அணிந்திருக்கும் ஆபரணங்களால் வெளிப்படும் பிரகாசமான ஒளிக் கதிர்களை தவிர வேறில்லை. இருபுறமும் எல்லை இல்லாத காட்சியில் வானவில் உள்ளது என்பதினால் அது பராசக்தியின் கைகளில் காணப்படும்  நாண்கள் இல்லாத கரும்பினால் ஆன  வில் ஆகும்.  வில்லின்  இரு முனைகளும் நம்மால் காண முடியாத எல்லையற்ற தூரத்திலுள்ளது  என்பதால், அதற்கு எந்த  நாண்களும் இல்லை.
  • இந்த சக்கரத்தில் பரமேஸ்வரர் மற்றும் பரமேஸ்வரியை தியானம் செய்யும்போது அறியாமை அகலத் துவங்கும் என்பதாக கூறப்பட்டு உள்ளது.

——-
-41-

तवाधारे मूले सह समयया लास्यपरया
नवात्मानं मन्ये नवरसमहाताण्डवनटम् ।
उभाभ्यामेताभ्यामुदयविधिमुद्दिश्य दयया
सनाथाभ्यां जज्ञे जनकजननीमज्जगदिदम् ॥

தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்யபரயா
நவாத்மானம் மன்யே நவரஸமஹாதாண்டவனடம் ।
உபாப்யாமேதாப்யாமுதயவிதிமுத்திஶ்ய தயயா
ஸனாதாப்யாம் ஜஜ்ஞே ஜனகஜனநீமஜ்ஜகதிதம் ॥

இந்த  ஸ்லோகத்தை  4000 முறை என, 30 நாட்கள் பாராயணம் செய்தால்
அடி வயிற்று நோய்கள் தீரும்

ஹே பராசக்தி,
திரிகோண ரூபமான மூலாதார சக்கரத்தில் நடனப் பிரியையான  சமயா எனும் தேவியுடன், மஹா பைரவர் எனும் ஸ்வரூபத்தில் இருந்தவாறு, சிங்காரம் போன்ற ஒன்பது விதமான தாண்டவத்தை (நடனத்தை) ஆடி வரும் உங்கள் இருவரையும் இந்த சக்கரத்தில் வணங்குகின்றேன். அழிந்து விட்ட பிரபஞ்சத்தை மீண்டும் வெளிப்படுத்த இப்படியான ஒரு ஸ்வரூபத்தில் இணைந்து உள்ள நீங்கள் இந்த பிரபஞ்சத்தின் தாய்-தந்தையாக விளக்குகின்றீர்கள்.

  • (விளக்கம்:
    சஹஸ்ராரத்தை அடைய விரும்பும் சாதகன், அவர்கள் கடக்கும் சக்கரங்கள் ஒவ்வொன்றிலும் பல்வேறு வடிவங்களில் தோற்றம் தரும் பரமேஸ்வரரையும் பரமேஸ்வரியையும் தியானிக்கிறார்கள். மூலதாரா சக்கரத்தில் சமயா தேவி எனும் ரூபத்தில் உள்ள பரமேஸ்வரி, ஆனந்த பைரவியாகவும், பரமேஸ்வரர் ஆனந்த பைரவராகவும்,  காட்சி தருகின்றார்கள். இருவரும் ஒன்றாக லாஸ்யம் மற்றும் தாண்டவம் எனும் ஏழு வித  நடனங்களை வெளிப்படுத்துகிறார்கள். அந்த இரு வகையிலான நடனங்களும் ஒன்பது விதமான மன நிலைகளை வெளிப்படுத்துகிறது.
  • தாண்டவ நடனங்கள் ஆணுடன் தொடர்புடையவை, அதே சமயம் லாஸ்யம் எனும் நடனங்கள் பெண்ணுடன் தொடர்புடையவை.  சிவபெருமானின் வீரிய தாண்டவ நடனத்திற்கு இணையாக இருக்கும் வகையில்  பார்வதி தேவியும் லாஸ்யம் எனும் நடனத்தை ஆடியதாக  நம்பப்படுகிறது.

    சிவபெருமான் நடனமாடிய ஏழு தாண்டவங்கள்:

  • ஆனந்த தாண்டவம்
  • ருத்ர தாண்டவம்
  • திரிபுரா தாண்டவம்
  • சந்தியா தாண்டவம்
  • சம்ஹார தாண்டவம்
  • காளிகா தாண்டவம் மற்றும்
  • உமா தாண்டவம் என்பன ஆகும்.

    பார்வதி தேவி நடனமாடிய ஏழு லாஸ்யங்கள்:

  • சுத்த லாஸ்யம்
  • தேசி லாஸ்யம்
  • பிரேரனா லாஸ்யம்
  • பிரேரங்கணா லாஸ்யம்
  • குண்டலினி லாஸ்யம்
  • தண்டிகா லாஸ்யம் மற்றும்
  • கலச லாஸ்யம் என்பன ஆகும்.

    சிவபெருமான் மற்றும் அவரது மனைவி பார்வதியின் தாண்டவ மற்றும் லாஸ்யங்களுடன் தொடர்புடைய ஒன்பது மனநிலைகள்:

  • சிருங்காரம் (காதல்/ஈர்ப்பு),
  • ஹாஸ்ய (சிரிப்பு/நகைச்சுவை),
  • கருணா (துக்கம்/கருணை),
  • ரௌத்ரா (கோபம்),
  • வீரம் (வீரம்/தைரியம்) ),
  • பயனகா (பயங்கரவாதம்/பயம்),
  • பிபஸ்தியா (வெறுப்பு),
  • அத்புதா (ஆச்சரியம்/ஆச்சரியம்) என்பன ஆகும்.
  • பிரளய காலத்தில் காலாக்னியால் அழிக்கப்பட்ட பிரபஞ்சத்தை மீண்டும் உருவாக்க, பரமேஸ்வரர் மற்றும் பரமேஸ்வரி இருவரும் தாய் மற்றும் தந்தையாக காட்சி தந்தார்கள். பிரபஞ்சத்தின் தாயாக சமய தேவி மற்றும் பிரபஞ்சத்தின் தந்தையாக  ஆனந்த பைரவர் உருவில், இருவரும்   மூல தாரா சக்கரத்தில் இணைந்து நடனமாடினார்கள்.
  • 41 வது ஸ்லோகங்கள் முடிய ஆனந்த லஹரி என்றும் இனி வரும் 59 ஸ்லோகங்கள் செளந்தர்யலஹரி என்றும் சொல்லப்படுகிறது. இதுவரையில் சொல்லப்பட்டது மந்த்ர சாஸ்திரம், உபாசனை முறைகள் போன்றவற்றைக் கொண்ட ஸ்லோகங்கள் ஆகும். இந்த 49 ஸ்லோகங்கள் ஆதி சங்கரருக்கு சிவபெருமானே நேரடியாக தோன்றி கூறியதாக கூறப்படுகின்றது.  ஆனந்தலஹரி என்பதை ஆனந்தம் என்பது ‘மகிழ்ச்சி’யை குறிக்க லஹரி என்பது ‘அலை’களைக் குறிக்கின்றது. ஆகவே ஆனந்தலஹரி என்றால் ‘ஆனந்தமான அலைகள்’ என்பது அர்த்தம் . அதே போல சௌந்தர்யலஹரியில் சௌந்தர்யம் என்றால் ‘அழகு’  என்றும் லஹரி என்பது ‘அலை’களைக் குறிக்க, சௌந்தர்யலஹரி என்பது ‘அழகின் அலைகள்’ என்பதைக் காட்டுகின்றது.
  • அதை தொடர்ந்து 42ஆம் ஸ்லோகத்தில் இருந்து எழுதப்பட்டு உள்ள 59 ஸ்லோகங்களையும் ஆதி சங்கரர் இயற்றியதாக கூறப்படுகின்றது.  42 ஆம் ஸ்லோகத்தில் இருந்து காணப்படும் ஸ்லோகங்களில் அம்பாளின் அற்புதமான  அழகு விவரிக்கப்பட்டு உள்ளன.  இந்த பகுதிக்கு  செளந்தர்யலஹரி என்று  பெயர். சௌந்தர்யம் என்றால் அழகு என்பது பொருள் லஹரி என்றால் உரை என்பதாகும். 

ஆனந்தலஹரி முடிவு :   சௌந்தர்யலஹரி துவக்கம் (42-50)

-42-

गतैर्माणिक्यत्वं गगनमणिभिः सान्द्रघटितं
किरीटं ते हैमं हिमगिरिसुते कीर्तयति यः ।
स नीडेयच्छायाच्छुरणशबलं चन्द्रशकलं
धनुः शौनासीरं किमिति न निबध्नाति धिषणाम् ॥

கதைர்மாணிக்யத்வம் ககனமணிபி: ஸாந்த்ரகடிதம்
கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்தயதி ய: ।
ஸ  நீடேயச்சாயாச்சுரணஶபலம்  சந்த்ரஶகலம்
தனு: ஶௌனாஸீரம் கிமிதி ந நிபத்னாதி திஷணாம் ॥

இந்த  ஸ்லோகத்தை  1000 முறை என, 45 நாட்கள் பாராயணம் செய்தால்
ஜல ரோக நிவாரணம் பெறலாம்

ஹே பராசக்தி
மலை அரசனின் மகளே, உன்னுடைய தலையில் நீ சூட்டிக் கொண்டு உள்ள தங்க  கிரீடத்தில் உள்ள மாணிக்கக் கற்கள், பன்னிரண்டு சூரியன்கள் ஒரே நேரத்தில் தோன்றும்போது வெளிப்படுத்தும்  ஒளிக் கற்றைகளை போல ஜொலிக்கின்றது. அவை பலவிதமான வண்ணங்களில் மின்னுவதினால் அதை சந்திரனால் ஏற்பட்ட இந்திரா  தனுஷ் எனும் வானவில் என்றே அந்த கிரீடத்தை  பார்க்கும் சாதகன் நினைப்பான்.

  • (விளக்கம்:
    இந்த ஸ்லோகத்தில் தேவியின் தலை முடி மீது காணப்படும் ரத்தினைக் கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான கிரீடத்தின் மகிமை விளக்கப்பட்டு உள்ளது.
  • தேவர்களில் ‘த்வாத சாதித்தியாள்’ என்று ஒரு பிரிவு உள்ளதாக தெரிகின்றது. சூரிய பகவான் தன்னை பன்னிரண்டு ரூபங்களில் பிரித்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு மாதமும்  ஒவ்வொரு ரூபத்தில் பிரபஞ்சத்தில் காட்சி அளிக்கின்றார். அந்த பன்னிரண்டு சூரியன்களையே  ‘த்வாத சாதித்தியாள்’ என்று அழைக்கின்றார்கள்.
  • ‘த்வாத சாதித்தியாள்’ என அழைக்கப்படும் பன்னிரண்டு சூரியர்களுக்கும் பராசக்தியின் அருகில் இருந்தவாறு அவளுடைய தரிசனத்தைப் பெற வேண்டும் என்ற ஆவல் உண்டு. ஆனால் அவர்களால் பராசக்திக்கு அருகில் கூட செல்ல முடியவில்லை என்பதினால் அந்த பன்னிரண்டு சூரியன்களும் பன்னிரண்டு நவரத்னக் கற்களாக தம்மை மாற்றிக் கொண்டு விட்டார்கள்.
  • பராசக்தி அணிந்திருந்த கிரீடம் தயாரிக்கப்பட்டபோது அதில் ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டபோது  அந்த பன்னிரண்டு சூரியன்களும் அந்த கிரீடத்தில் நவரத்தினக் கற்களாக  அமர்ந்து கொண்டு விட்டார்கள். ஆகவே அவர்களால் தினமும் அன்னையை தரிசித்துக் கொண்டே இருக்கும் பாக்கியம் கிடைத்தது.  
  • அன்னையின் கிரீடத்தில் வானவில்லை போன்ற வண்ணங்கள் தோன்றுவதற்கு சந்திரக் கலையே காரணம் என்பதான நம்பிக்கை உண்டு. சந்திரனைச் சுற்றி ஒரு பிரகாசமான வெள்ளை ஒளி வளையம்  எப்போது வேண்டுமானாலும் தோன்றும். அதுவே தேவியின் கிரீடத்தின் மீது படும்போது வண்ணமயமான வானவில்லாக காட்சி அளிக்கின்றதாம்.
  • இப்படியாக சூரியனும் சந்திரனும் அன்னையின் அருகில் செல்வதற்கு பல முயற்சிகள் எடுக்க வேண்டி உள்ள நிலையில் சாதகர்களால் அத்தனை எளிதில் அன்னையின் பாதத்தில் சரண் அடைந்து விட முடியுமா?
  • அதற்குத் தேவை அன்னையின் கருணை, சாதகனின் விடா முயற்சி மற்றும் முழு மனதிலான வைராக்கியம் போன்றவை ஆகும் என்பதை வெளிப்படுத்துவதே இந்த ஸ்லோகம் ஆகும்) .

———
-43-

धुनोतु ध्वान्तं नस्तुलितदलितेन्दीवरवनं
घनस्निग्धश्लक्ष्णं चिकुरनिकुरुम्बं तव शिवे ।
यदीयं सौरभ्यं सहजमुपलब्धुं सुमनसो
वसन्त्यस्मिन् मन्ये वलमथनवाटीविटपिनाम् ॥

துனோது த்வாந்தம் நஸ்துலிததலிதேந்தீவரவனம்
கனஸ்னிக்தஶ்லக்ஷ்ணம் சிகுரனிகுரும்பம் தவ ஶிவே ।
யதீயம் ஸௌரப்யம் ஸஹஜமுபலப்தும் ஸுமனஸோ
வஸந்த்யஸ்மின் மன்யே வலமதனவாடீவிடபிநாம் ॥

இந்த  ஸ்லோகத்தை  1000 முறை என,
45 நாட்கள் பாராயணம் செய்தால்
நோய்கள் தீரும், வசீகரம்
அடைவார்கள், அனைத்திலும் வெற்றி கிடைக்கும்

ஹே பராசக்தி,
பரமேஸ்வரரின் துணைவியே, மலர்ந்த நீலோத்பல புஷ்ப காடுகளைப் போன்றதும், வழுவழுப்பானதுமான உனது கேசம் எங்கள் மனதில் உள்ள அறியாமை எனப்படும் மன இருளை போக்கட்டும். இந்திரனின் நந்தவனத்தில்  உள்ள செடிகளின் புஷ்பங்கள், உங்கள்  தலை முடியின் வாசனையைப் பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டு உங்கள் தலை முடியையே நந்தனமாகக் கருதி அங்கு வசிக்கின்றன போலும் என்று நினைக்கின்றேன். அதனால்தான் இயற்கையின் மணத்துடன் உங்கள் கூந்தல் உள்ளது.   

  • (விளக்கம்:
    இந்த ஸ்லோகத்தில் பராசக்தியின் கூந்தல் இயற்கையான மணம் கொண்டது என்று விவரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்லோகம் 1000 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி சங்கராச்சாரியாரால் தொகுக்கப்பட்டது. அடர்ந்த காட்டில் உள்ள பல வகையான செடி கொடிகளிலும், மரங்களிலும் பூக்கும் பூக்கள் மலர்ந்து நறுமணத்தை வெளியிடுவதை போல, பராசக்தியின் கூந்தல் இயற்கையான மணத்தை வெளிப்படுத்துவதாக இந்த ஸ்லோகத்தில் அவர் கூறி உள்ளார். பராசக்தியின் கூந்தலானது  மனதை மயக்கும் வகையிலான நறுமணத்தைக் கொண்ட நீலோத்பல மலர்களின் நறுமணத்தை வெளிப்படுத்துவதாகவும்  தேவேந்திரன் தோட்டத்தில் உள்ள செடிகளும் மரங்களும்  கூட நறுமணத்தைப் பெற்றுக் கொள்ள  பராசக்தியின் தலை முடி மீது அவ்வப்போது வந்து தங்கிச் செல்வதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
  • இது இந்த ஸ்லோகத்தின் ஒரு அம்சம் என்றாலும் மற்றொரு அம்சம் அறியாமை எனப்படும் மன இருளை விரட்டுவதாகும். மன இருட்டை பராசக்தியின் கருமை நிறத்திலான கூந்தலோடு ஒப்பிட்டுக் கூறி உள்ளார். பராசக்தியை தியானிக்கையில் ஒருவரது மனதில் சூழ்ந்துள்ள அறியாமை எனப்படும் இருண்ட எண்ணங்களிலிருந்து  ஆன்மீக எண்ணங்கள் மற்றும்  உணர்வுகள் விழித்து எழுகின்றன. இருண்ட இரவு சூரியனின் ஒளியினால் பிரகாசமடைவதை போல, பராசக்தியின் அருளினால்  இருண்ட மனதின் ஆன்மீக உணர்வுகள் விழித்து எழுகின்றன என்பதாக இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டு உள்ளது.
  • நக்கீரன் என்ற கவிஞருக்கும் சிவபெருமானுக்கும் இடையேயான சர்ச்சையை விவரிக்கும் ஒரு கதையை சிவபுராணத்தில் காணலாம். பார்வதியின் கூந்தலில் இருந்து  வெளி வருவது  இயற்கையான நறுமணம் என்று சிவபெருமான் கூற,  அதை ஏற்க மறுத்த நக்கீரன் பராசக்தியின் கூந்தல் இயற்கையிலேயே மணம் கொண்டது அல்ல, அது அவள் தலையில் உள்ள பூக்களில் இருந்து எழுபவையே  என வாதிட்டார். அதற்கு முடிவு எட்டப்படவில்லை என்பதினால் சிவபெருமானின் சாபத்தைப் பெற்று பாஸ்கரராயர் எனும் பண்டிதராக அடுத்த ஜென்மத்தில் பிறப்பு எடுத்து அதில் மோட்ஷம் பெற்றார்)

 ——-
-44-

तनोतु क्षेमं नस्तव वदनसौन्दर्यलहरी-
परीवाहस्रोतःसरणिरिव सीमन्तसरणिः ।
वहन्ती सिन्दूरं प्रबलकबरीभारतिमिर-
द्विषां वृन्दैर्बन्दीकृतमिव नवीनार्ककिरणम् ॥

தனோது க்ஷேமம் நஸ்தவ வதனஸௌந்தர்யலஹரீ-
பரீவாஹஸ்ரோத:ஸரணிரிவ ஸீமந்தஸரணி: ।
வஹந்தீ ஸிந்தூரம் ப்ரபலகபரீபாரதிமிர-
த்விஷாம் ப்ருந்தைர்பந்தீக்ருதமிவ நவீனார்ககிரணம்॥

இந்த  ஸ்லோகத்தை  1000 முறை என, 12  நாட்கள்
பாராயணம் செய்தால் நோய்கள் தீரும்

ஹே பராசக்தி,
உன் அழகிய கூந்தலின் நடுவில் ஒரு மெல்லிய கால்வாய் ஓடுவது போல உள்ள வகிடு, உன் முகத்திற்கு அழகு சேர்க்கின்றது. உன் அடர்த்தியான மற்றும் கருமையான  கூந்தலின் நடுவில் உள்ள வகிட்டின் முனையில் மின்னும் குங்குமம், காலையில் ஒளிரும் இளம் சூர்ய கிரணம் போல காட்சி தருகின்றது.  அந்த குங்குமமும், கூந்தலின் நடுவே உள்ள வகிடும் எங்களுக்கு எல்லாவிதமான நன்மைகளையும் தரட்டும்.

  • (விளக்கம்:
    பொதுவாக அனைத்து பெண்களுமே தமது தலை முடியை இரண்டு பகுதிகளாகப் பிரித்து சீவி இருப்பார்கள். நடுத் தலையில் இருந்து  நெற்றி வரை ஓடும் மெல்லிய வெற்று இடம் வகிடு அல்லது மகிடு எனப்படும்.  அந்த வகிட்டின் நுனி பகுதியில்  கரும் சிவப்பு அல்லது சிவப்பு நிறத்திலான  குங்குமம் எனப்படும் ஒரு பெரிய பொட்டும் வைப்பார்கள்.
  • தலையில் காணப்படும் வகிட்டை  சமஸ்கிருதத்தில்  ‘சீமந்த சரணி’ என்று கூறுவார்கள்.  நெற்றியில் மையத்தில் வைக்கப்படும்  குங்குமம் எனப்படும் சிவப்பு பொட்டின்   இருபுறமும் அடர்த்தியான மற்றும் கருமை நிறத்திலான முடி காணப்படுவது, அந்த சிவப்பு புள்ளியை தலை முடியானது இருபுறங்களிலும் சுற்றி வளைத்து சிறை பிடித்து வைத்துள்ளனவோ என்பதை போலத் தோன்றும்.
  • இந்த ஸ்லோகத்தில் ஆதி சங்கரர், தேவியின் தலை பகுதியில் வகிட்டின் அருகில் காணப்படும் சிவப்பு நிறத்திலான பொட்டை, உதிக்கும் சூரியனுடன்  ஒப்பிடுகிறார். அந்த  பொட்டானது  ஒருவரின் மன  இருளை அகற்றும்.  மங்கலான மண்டை ஓட்டின் நிறத்தை வெளிப்படுத்தும் வகிடு  தண்ணீரால் நிரம்பி வழியும் ஓடைக்கு ஒப்பானது என்பதாக ஆதி சங்கரர் கூறுகின்றார்.
  • ‘நீர் நிரம்பி வழியும் ஓடை’ என்பதின் தத்துவார்த்தமான பொருள் என்ன என்றால் குங்குமப் பொட்டினால் அகலும் மன இருள்   வழிந்து ஓடி விட அமைந்துள்ள  பாதை என்பதாகும். பராசக்தியின் கருமையான கூந்தல் இருள் எனப்படும் மாயையைக் குறிக்கின்றது.  அந்த மாயை என்பதே பராசக்தியிடம் இருந்து தோன்றியதே ஆகும் அல்லவா. 
  • அன்னையின் நெற்றியில் காணப்படும்  நெற்றி பொட்டும், தலையின் மெல்லிய கூந்தலில் காணப்படும் மெல்லிய கோடும் பராசக்தியின்  முகத்திற்கு கடலைப் போன்ற அளவிலான அழகை சேர்க்கின்றன. அந்த அழகை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாது, அவளது அழகை புரிந்து கொள்ளவோ அல்லது வர்ணிக்கவோ முடியாது என்று இந்த ஸ்லோகம் கூறுகிறது. நெற்றியின் உச்சியில் சிவப்பு நிறத்திலான பொட்டு வைப்பது மங்களகரமானது). 

 ——-
-45-

अरालैः स्वाभाव्यादलिकलभसश्रीभिरलकैः
परीतं ते वक्त्रं परिहसति पङ्केरुहरुचिम् ।
दरस्मेरे यस्मिन् दशनरुचिकिञ्जल्करुचिरे
सुगन्धौ माद्यन्ति स्मरदहनचक्षुर्मधुलिहः ॥

அராலை: ஸ்வாபாவ்யாதலிகலபஸஶ்ரீபிரலகை:
பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பனகேருஹருசிம் ।
தரஸ்மேரே யஸ்மின் தஶனருசிகிஞ்ஜல்கருசிரே
ஸுகந்தௌ மாத்யந்தி ஸ்மரதஹனசக்ஷுர்மதுலிஹ: ॥

இந்த  ஸ்லோகத்தை  1000 முறை என, 12  நாட்கள்
பாராயணம் செய்தால் வாக்கு பலிக்கும்

ஹே பராசக்தி,
உனது அழகிய முகம் மீதுள்ள  சுருண்ட தலை முடி, தாமரை மலரில் சுற்றி அலையும் வண்டுகளை போன்ற தோற்றத்தில் காணப்படுகின்றது. இயற்கையாகவே  பளபளப்பான சுருண்ட முடியோடு காணப்படும் உனது நெற்றியானது, வண்டுகள் சூழப்பட்ட தாமரை மலரின் அழகையும் தோற்கடிப்பதாக உள்ளது. அழகிய  முகத்தில் நீ வெளிப்படுத்தும் புன்னகையில் வெளிப்படும் பற்களின்  அழகு உனது அழகிற்கு மேலும் மெருகேற்றும்  வண்ணம் உள்ளது. அதனால்தான் காமனை எரித்த பரமசிவனின்  கண்கள் கூட  அந்த வண்டுகளை போல உன்னை சுற்றியே அலைகின்றது.

  • (விளக்கம்:
    பெரும்பாலான சமஸ்கிருத இலக்கியப் படைப்புகளில் பெண்ணின் அழகு, குறிப்பாக அவர்களின் முகம் தாமரை மலர்கள் அல்லது சந்திரனுடன் ஒப்பிடப்பட்டு உள்ளதைக் காண முடியும். அந்த அம்சத்தில் இந்த ஸ்லோகம் மாறுபடவில்லை. பராசக்தியின் முக அழகு ஒருவரால் விவரிக்க முடியாதது என்பதினால் பராசக்தியின்  முகம் மலர்ந்த தாமரை மலருடன் ஒப்பிடப்பட்டு,  தாமரை மலரில் உள்ள தேனை உறுஞ்சுவதற்காக அதன் மீது சுழன்று கொண்டிருக்கும் கருப்பு நிறத்திலான வண்டுகளை  அவளது சுருண்ட கேசத்துடன் ஒப்பிட்டு உள்ளார்.
  • தேன் உறிஞ்சும் கறுப்பு தேனீக்கள் உண்மையில் அவள் முகத்தைச் சுற்றிக் கொண்டே இருக்கவில்லை என்றாலும் பராசக்தியின் நெற்றியின் மேல் காணப்படும்  சுருள் முடியின் இயற்கை அழகு அந்தத் தேனீக்கள் கூட்டத்தைப் போலவே  இருப்பதாக, இந்த ஸ்லோகத்தில்  ஆதி சங்கரர் கூறுகிறார்.
  • இந்த ஸ்லோகத்தின் இரண்டாவது அம்சம் பராசக்தியின் மென்மையான புன்னகை; அவள் சிரிக்கும் போது, ​​புதிதாக மலர்ந்த மல்லிகைப் பூக்கள் பூப்பதை போல அவளது வெண்ணிறமான பற்கள் காணப்பட்டு அவளது அழகை அதிகரிக்கின்றன; இப்படியாக தாமரை மலரில் காணப்படும்  வெள்ளை தண்டு பராசக்தியின் பற்களுடன் ஒப்பிடப்படுகிறது.
  • மூன்றாவது அம்சம், தாமரையைச் சுற்றி ஓடும் இளம் தேனீக்கள் சிவனின் கண்களுடன் ஒப்பிடப்படுகின்றன. எப்படி தேனீக்கள் தாமரை மலர் மீது சுற்றிக் கொண்டே உள்ளனவோ அப்படித்தான் மன்மதனை எரித்த சிவபெருமானின் கண்கள் கூட பராசக்தியின்  அழகிய முகத்தைப் பார்த்தபடியே இருந்தவாறு அவள் மீது அதிக மோகம் கொள்கின்றார் என்பதாக இந்த  ஸ்லோகம் கூறுகிறது)

———
-46-

ललाटं लावण्यद्युतिविमलमाभाति तव य-
द्द्वितीयं तन्मन्ये मकुटघटितं चन्द्रशकलम् ।
विपर्यासन्यासादुभयमपि संभूय च मिथः
सुधालेपस्यूतिः परिणमति राकाहिमकरः ॥

லலாடம் லாவண்யத்யுதிவிமலமாபாதி தவ ய-
த்த்விதீயம் தன்மன்யே மகுடகடிதம் சந்த்ரஶகலம் ।
விபர்யாஸன்யாஸாதுபயமபி ஸம்பூய ச மித:
ஸுதாலேபஸ்யூதி: பரிணமதி ராகாஹிமகர: ॥

இந்த  ஸ்லோகத்தை  1000 முறை என
45  நாட்கள் பாராயணம் செய்தால்
குழந்தை பாக்கியம் கிடைக்கும்

ஹே பராசக்தி,
உன்னுடைய முகத்தில் இருபுறமும் வளைந்து காணப்படும் வெண்ணிறத்திலான நெற்றிப் பகுதி சந்திரனின்  கீழ் பகுதியை  வெளிப்படுத்தும் விதத்தில்  தோற்றம் தருகின்றது. உனது கிரீடத்தில் காணப்படும் சந்திரனோ அதன் மேல் பாகத்தை (பிறைச் சந்திரன்) வெளிப்படுத்துவதாக மேல்புறம் வளைந்து காணப்படுகின்றது.  ஆகவே கிரீடத்திலும், உனது முகத்திலும் தோற்றம் அளிக்கும் இரு சந்திரன்களையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கும்போது, அற்புதமான உனது முழு முகம் அமிர்தம் போன்ற  பூரண சந்திரனை வெளிப்படுத்துவதாக உள்ளது.

  • (விளக்கம்:
    பொதுவாகவே அழகிற்கு   சந்திரனே ஆதாரமாக உள்ளதினால், பெரும்பாலான பாடல்களிலும் கவிதைகளிலும் பெண்களின் வளைந்து காணப்படும்  முக லக்ஷணங்களை சந்திரனுடன் ஒப்பிடுவது உண்டு.
  • பராசக்தியும் பரமசிவனும் அணிந்துள்ள கிரீடத்தில் மேல் நோக்கி  வளைந்து உள்ள பாதி சந்திரன் காணப்படுகின்றது. வளர்பிறை தோன்றும்போது முதல் பாதி நாட்களில், அதாவது அஷ்டமி எனப்படும் எட்டாவது தினத்தில் பாதி சந்திரன் தெரியும்.  அது பராசக்தி அணிந்துள்ள கிரீடத்தில் மேல் பகுதியில் காணப்படும் பாதி வடிவிலான பிறை சந்திரனுக்கு ஒப்பானது.
  • பராசக்தியின் புருவங்களுக்கு கீழே முகவாய்கட்டை வரை அழகிய வடிவில் வளைந்து தோன்றும் முக லட்ஷணம் சந்திரனின் மீதி பாதியைப் போல காட்சி அளிக்கின்றது.
  • அஷ்டமிக்கு அடுத்த ஏழாவது நாள் முடிவில் பௌர்ணமி அன்று முழுமையாக காட்சி தரும் சந்திரனின் தோற்றம் போன்றே கிரீடம் அணிந்துள்ள பராசக்தியின் முழு முகமும் அமிர்தம் போன்ற பூரண சந்திரனை  பிரதிபலிக்கும் விதத்தில் காட்சி அளிப்பதாக இந்த ஸ்லோகத்தில் ஆதி சங்கரர் கூறி உள்ளார்.
  • இந்த ஸ்லோகத்தின் மகிமையை எடுத்துரைக்கும் விதத்திலான ஒரு கதை உண்டு. பல நூறாண்டுகளுக்கு முன்னர் ரத்னகேட தீக்ஷதர் என்றொரு பண்டிதர் இருந்தார். அவருடைய இயற்கையான பெயர் ஸ்ரீனிவாச தீக்ஷதர் என்பதாகும். அக் காலத்தில் அவர்  ஸ்ரீ காமாக்ஷி தேவியின் கிருபையினால் மஹா வித்வானாக வலம் வந்து கொண்டிருந்தார். சூரப்பநாயகன் என்ற அரசனின் ஆஸ்தான வித்வானாக இருந்தார்.  அந்த காலத்தில் அவரது  பெயர் ஸ்ரீநிவாஸ தீக்ஷிதர் என்று இருந்த போதிலும் ரத்னகேட தீக்ஷிதர் என்ற பெயரையும் சேர்த்து ரத்னகேட ஸ்ரீநிவாஸ தீக்ஷிதர் என்றே கூறி வந்தார்கள்.
  • காமாக்ஷி தேவியோ பராசக்தியின் அம்சம். ஆகவே ரத்னகேட ஸ்ரீநிவாஸ தீக்ஷிதர் தினமும் சௌந்தர்யலஹரியில் உள்ள இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வந்தார். அதனால் அவ்வப்போது அவருக்கு  பராசக்தியின் முழு நிலையிலான முகம் நேரில் தோன்றுவது உண்டு. 
  • அவர் ஒருமுறை தொண்டை நாட்டுக்கு சென்று இருந்தார். 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொண்டை நாடு   சின்ன பொம்ம ராஜா என்ற மன்னன் ஆட்சியில் இருந்தது. மன்னனின் அரண்மனைக்கு சென்ற ரத்னகேட ஸ்ரீநிவாஸ தீக்ஷிதர் சில விவாதங்களில் பங்கேற்றார். அப்போது அவரைப் பார்த்த மன்னன் இன்று என்ன திதி என்று கேட்க அவரும் இன்று பூரண பௌர்ணமி என்று வாய் தவறி கூறி விட அனைவரும் சிரித்தார்கள். காரணம் அன்று முழு அம்மாவாசை திதியாகும்.
  • ரத்னகேட ஸ்ரீநிவாஸ தீக்ஷிதர் ஒரு நிமிடம் கண்களை மூடினார், கண்களில் காமாட்சி அம்மன் முகம் முழு நிலவாக காட்சி அளிக்க, கண்களை திறந்த தீக்ஷதர் அன்று இரவு நிச்சயமாக முழு நிலவில் சந்திரன் தோன்றும், தான் கூறியதை உண்மை என நிரூபிக்கும் என்று சபதம் செய்ய, மன்னனும் மற்ற அனைவரும் இரவு வரும் வரை  காத்திருந்தார்கள். என்ன அதிசயம். முழு அம்மாவாசை  தினத்தன்று முழு நிலவான முகத்தோடு அம்மன்  ஆகாயத்தில் காட்சி அளிக்க  அனைவரும் வெட்கி தலை குனிந்து அவரிடம் மன்னிப்பைக் கோரினார்கள்.  

 ——-
-47-

भ्रुवौ भुग्ने किंचिद्भुवनभयभङ्गव्यसनिनि
त्वदीये नेत्राभ्यां मधुकररुचिभ्यां धृतगुणम् ।
धनुर्मन्ये सव्येतरकरगृहीतं रतिपतेः
प्रकोष्ठे मुष्टौ च स्थगयति निगूढान्तरमुमे ॥

ப்ருவௌ புக்னே கிஞ்சித்புவனபயபனகவ்யஸனினி
த்வதீயே நேத்ராப்யாம் மதுகரருசிப்யாம் த்ருதகுணம் ।
தனுர்மன்யே ஸவ்யேதரகரக்ருஹீதம் ரதிபதே:
ப்ரகோஷ்டே முஷ்டௌ ச ஸ்தகயதி நிகூடாந்தரமுமே ॥

இந்த  ஸ்லோகத்தை  1000 முறை என
25  நாட்கள் பாராயணம் செய்தால்
அனைத்திலும் வெற்றி கிடைக்கும்

ஹே பராசக்தி
அனைத்து உயிர்களுக்கும் அபயமளிக்கும் உமா தேவியே, சற்றே வளைந்து காணப்படும் உனது புருவங்கள் மன்மதனின் கையில் உள்ள கரும்பு வில்லிற்கு ஒப்பானதாக தெரிகின்றது. உன்னுடைய கருமை நிறைந்த கண்களோ  வண்டுகளால் பின்னப்பட்ட நாண் கயிறு போல காட்சி அளிக்கின்றது. புருவங்களின் இடைப் பகுதியானது (மூக்குப் பகுதி) அந்த வில்லை மன்மதன் கையில் பிடித்திருப்பதினால் மறைந்து காணப்படும்  கரும்பு வில்லின் நடுப் பகுதி போல தெரிகின்றது.

  • (விளக்கம்:
    இந்த ஸ்லோகத்தில் பராசக்தியை ஆதி சங்கரர் உமா என்று அழைத்து உள்ளார். உமா தேவியும், பார்வதியும், பரமேஸ்வரியும், பராசக்தியின் வேறு வேறு பெயர்கள்தான். இங்கு உமா என்றால் சிவபெருமானின் மகிமை என்று பொருள்.
  • இந்த ஸ்லோகத்தில் பரமேஸ்வரியின் முகத்தில் உள்ள புருவங்களின் அழகு விவரிக்கப்பட்டு உள்ளது. அவளது முகத்தில்  வளைந்து காணப்படும் புருவமானது மன்மதனின் கையில் உள்ள கரும்பு வில்லின் இரு பகுதிகளாக தோற்றம் தருவதாகவும்,  இரண்டு காதுகளின் அருகில் வரை  நீண்டு இருக்கும் மீன் விழி போன்ற இரண்டு கண்களும் மன்மதனின் வில்லின் நாண் போன்ற வண்டுகளின் அணிவகுப்பாகவும் காணப்படுகின்றது என்று வர்ணித்து உள்ளார்.
  • மேலும் மன்மதனின் கையில் ஏந்தி உள்ள கரும்பு வில்லின் நடுப் பகுதியை அவர் இடது கையினால் பிடித்துக் கொண்டு உள்ளதினால் வில்லின் நடுப்பகுதி தெரியாமல்,  புருவங்களின் இடையே உள்ள இடைவெளி  (மூக்குப் பகுதி) கரும்பு வில்லை மறைப்பது போல உள்ளது  என்று வர்ணிக்கிறார்.
  • வில்லை ஏந்திய வண்ணம் உள்ளவர்கள் எப்போதும் அதன் நடுப் பகுதியை தமது இடது கையில் பிடித்துக் கொண்டு நிற்கையில் தூரத்தில் இருந்து பார்க்கும்போது வில்லின் நடுப் பகுதியைக் காண முடியாமல் அவர்களது கை முட்டி வில்லை மறைத்துக் கொண்டு இருக்கும். அந்த தத்துவத்தை இந்த புருவங்களின் தோற்றங்களாக ஆதி சங்கரர் வர்ணித்து உள்ளார்.
  • சிவபெருமானின்  மனைவியை  உமா மற்றும் பார்வதி எனும் இரண்டு ரூபங்களில் அழைக்கின்றார்கள். பிரபஞ்சம் தோன்றியது  முதலேயே  அவளை ஒரு   உயர்ந்த பெண்  தெய்வமாகவே பார்க்கின்றார்கள் . சிலர் உமா தேவியை துர்கா என்று அழைக்கிறார்கள். சிவபெருமானின் மனைவியான பராசக்தியை (பார்வதி என்றும் பெயர் உண்டு) 10,000 க்கும் மேற்பட்ட பெயர்களில் வணங்குகின்றார்கள் என்றாலும் பொதுவாக அவளை  ‘பார்வதி’ என்ற பெயரில் அழைக்கின்றார்கள். வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் புராணங்களில் ‘உமா’ என்ற பெயர் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
  • உமாவின் கதை படிக்க சுவாரசியமாக உள்ளது. ஒரு முறை ஜனமேஜய என்ற மன்னன் வியாச முனிவரிடம் சென்று கேட்டார் ‘மகா சக்தி எனும் தெய்வம் அனைத்து தெய்வங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு உள்ளதாக கூறப்படும் நிலையில் நாம் ஏன் பல தெய்வங்களை தனித் தனியே வணங்க வேண்டும்? மஹா சக்தி யார், அவள் தங்குமிடம் எங்கே என்று எனக்கு விளக்குவீர்களா?’.  அதைக்  கேட்ட வேத வியாசர் ஒரு சிறிய கதை மூலம் அதற்கான பதிலைக் கூறினார் .
  • அவர் சொன்னார் ‘ஒருமுறை  தலை கனம் பிடித்த அசுர குலத்தினர் தேவர்களுடன் போர் தொடுத்தனர், அது 1000 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது என்றாலும் இரு தரப்பில் எவருக்கும் வெற்றி கிடைக்கவில்லை.  அசுரர்களின் படைகளை தேவர்களால் வெல்ல முடியாததால், போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களால் பிரபஞ்சம் அழிந்து விடும் என்று வானவர்களும் மற்றவர்களும் உணர்ந்தனர். வானோர்களின்  நிலையை கவனித்த மஹா சக்தி  தேவர்களுக்கு தெரியாமல் அவர்களுக்கு அளவற்ற சக்திகளை தந்ததும் அல்லாமல்,  தானே  யக்ஷனி எனும் வடிவில் யுத்தகளத்தில் சென்று அசுரர்களை கொன்று  குவிக்க, அதனால் அச்சமுற்ற  அசுரர்கள் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஆயுதங்களை போட்டு விட்டு தப்பிச் சென்று பாதாள லோகத்தில் பதுங்கிக் கொண்டார்கள். யுத்தத்தில் வெற்றி பெற்ற தேவர்கள் மகிழ்ந்தனர், ஆனால் அவர்கள் தமக்கு எங்கிருந்து அத்தனை சக்தி கிடைத்தது, எப்படி அசுரர்களை வெல்ல முடிந்தது என்று ஆச்சரியப்பட்டார்கள்’.
  • வேத வியாசர் கூறிக் கொண்டு இருந்த கதையை சற்று நிறுத்திய பின்னர் கதையைத் தொடர்ந்தார் ‘உண்மையில் மஹா சக்தி  என்ற பராசக்திதான்  தேவர்களுக்கு உதவ, ஆயிரக்கணக்கான சூரிய  பிரகாசத்துடன் கூடிய, திகைப்பூட்டும் ஒளி வடிவில் யக்ஷனி எனும்  வேடத்தில் போர்க்களத்தில் இறங்கினார். யக்ஷனி என்பவள் உமா தேவி ஆகும்.
  • போர் முடிந்ததும், தேவர்கள் யக்ஷனியை அணுகி அவளைப் பற்றி விசாரிக்க முடிவு செய்தனர். முதலில் அக்னி தேவர் யக்ஷனியிடம் சென்று, உலகம் முழுவதையும் எரிக்கும் சக்தி கொண்ட அக்னி தேவன் தான்  என்று தன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டு  அவள் யார் என்று கேட்டார். யக்ஷனி, அக்னியின் முன் சிறிய வைக்கோல் துண்டை  வைத்து, அவர்  முன் வைக்கப்பட்ட வைக்கோல் துண்டை அவர்  எரித்து விட்டால் தான் யார் என்பதை வெளிப்படுத்துவேன் என்று கூறினாள். அக்னியும் தனது முழு ஆற்றலையும் பயன்படுத்திய போதிலும், அந்த வைக்கோல் துண்டை எரிக்க முடியாமல் தோற்றுப் போனதினால் வருத்தத்துடன் திரும்பிச் சென்றார். 
  • அடுத்து வாயு பகவான் யக்ஷனியிடம் சென்றதும் அவளும் வேண்டுமென்றே பணிவுடன் அவர் யார் என்று கேட்டாள். அவரும் தான்  வாயு தேவன்  என்றும், பிரபஞ்சத்தை தன்னிடமே வைத்திருக்கும் அனைத்து சக்திகளையும் கொண்டவர் என்றும் தன்னைக் குறித்து பெருமிதத்துடன் பதிலளித்தார். யக்ஷனி மீண்டும் அதே வைக்கோல் துண்டை அவர் முன் வைத்து, அந்த வைக்கோல் துண்டை எவ்வளவு விரைவாக அகற்ற முடியுமோ அவ்வளவு வேகமாக அகற்றும்படி கூறினார். தனது முழு ஆற்றலையும் பயன்படுத்திய போதிலும், வாயுவினால் அந்த  வைக்கோல் துண்டை சற்று கூட அசைக்க முடியவில்லை  என்பதினால் அவமானப்பட்டு வீடு  திரும்பினார்.
  • யக்ஷனி யார் என்று எவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதினால் அவர்கள் தேவேந்திரனை யக்ஷனியை சந்திக்க  அனுப்பினார்கள், ஆனால் அவர் அங்கு செல்வதற்குள், அவள் மறைந்து விட்டாள்.  அவளைச் சந்திக்கும் முயற்சியில் தோல்வியுற்று தேவேந்திரன், பராசக்தியிடம் உண்மையாகவும் முழு மனதுடன் சரணடைந்து, யக்ஷனி என்பவள் யார் எனும் புதிரைத் தீர்க்க அவளது அருளை வேண்டினார்.
  • அனைத்து வானவர்களும் தியானத்தில் இருந்த அவரை சூழ்ந்து கொண்டு அமர்ந்திருந்தபோது சில நாட்கள் கழிந்தன. திடீரென்று ஒரு நாள் தேவேந்திரன் தியானம் செய்யும் இடத்தில் ஆயிரம் சூரிய  ஒளியைப் போன்ற ஒரு திகைப்பூட்டும் ஒளி தோன்றியது. நான்கு கைகளுடன் நான்கு முத்திரைகளைக் காட்டிய ஒரு அழகான பெண் தோன்றினாள். பிரகாசத்தின் மத்தியில் தோன்றிய தேவி, தான் பார்வதியின் மற்றொரு வடிவமான உமா என்றும், தானே மகா மாயா அதாவது மாபெரும் சக்தி தேவி என்றும் தன் உருவை வெளிப்படுத்தினாள் – போரில் தோற்றுப் போக இருந்த தேவர்களை மீட்க  யக்ஷனி வடிவில் தோன்றி மகா சக்தியான தான் அவர்களுக்கு யுத்தத்தில் வெற்றி பெற தேவையான சக்தியைக் கொடுத்ததாகக் கூறினாள்’.  வேதா வியாசர் கூறிய பதிலால் திருப்தியடைந்த ஜனமேஜயன் திரும்பிச் சென்றார்.)  

———-
-48-

अहः सूते सव्यं तव नयनमर्कात्मकतया
त्रियामां वामं ते सृजति रजनीनायकतया ।
तृतीया ते दृष्टिर्दरदलितहेमाम्बुजरुचिः
समाधत्ते संध्यां दिवसनिशयोरन्तरचरीम् ॥

அஹ: ஸூதே ஸவ்யம் தவ நயனமர்காத்மகதயா
த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜனீனாயகதயா ।
த்ருதீயா தே த்ருஷ்டிர்தரதலிதஹேமாம்புஜருசி:
ஸமாதத்தே ஸந்த்யாம் திவஸனிஶயோரந்தரசரீம் ॥

இந்த  ஸ்லோகத்தை  1000 முறை என
9  நாட்கள் பாராயணம் செய்தால்
நவ கிரஹ தோஷங்கள் விலகும்

ஹே பராசக்தி
உனது வலது பக்க கண்ணில் சூரியனின் ஸ்வரூபத்தை நீ அடக்கி வைத்துக் கொண்டு  உள்ளதினால் பகல் நேரத்தில் வெளிச்சம் தருகின்றாய். உனது இடது கண்ணிலோ சந்திரனின்  ஸ்வரூபத்தை அடக்கிக் கொண்டு உள்ளதினால் இரவில் குளிர்ச்சி நிறைந்த வெளிச்சத்தைத் தருகின்றாய். உனது நெற்றியில் உள்ள நடுக் கண்ணோ தங்கத் தாமரைப் பூப்போல் மலரும்  விடியற் காலை மற்றும் மாலையில் சந்தி வேளைக்கு தேவையான  ஒளியை தருகின்றது.

  • (விளக்கம்:
    இந்த ஸ்லோகத்தின் மூலம் ஆதி சங்கரர் சில முக்கியமான விஷயங்களை எடுத்துக் காட்டுகிறார். முதலாவது அம்சம் சூரியனும் சந்திரனும் பராசக்தியின் கண்களின்  ஸ்வரூபங்கள் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்துகின்றார்.
  • இரண்டாவது அம்சம், பராசக்திக்கும் மூன்று கண்கள் உள்ளன என்பதாக தெரிவிக்கின்றார். அதன் காரணம் அவள் பரமேஸ்வரனின் ஒரு பாதி என்பதினால், அவர்கள் இருவரும் ஒன்றிணைந்த நிலையிலான சதாசிவனாக இருக்கும்போது  அவரது மூன்றாம் கண்ணிலும் அவளுக்கு பாதி கிடைத்து விடுகின்றது.
  • சூரியனும் சந்திரனும் முறையே பிரபஞ்சத்திற்கு விழிப்பை தருகின்றார்கள்   அல்லது பிரபஞ்சத்தை உறக்கம் போன்ற முழுமையான அமைதியில் வைத்து விடுகின்றார்கள்.  அப்படிப்பட்ட இரண்டு செயல்களுமே வாழ்க்கைக்கு அத்தியாவசியம் ஆகும். ஆகவே   பராசக்தியின் கண்களை நான்கு கால கட்டங்களுடன் அவர் ஒப்பிடுகிறார்.
  • – பகல், இரவு, விடி காலை (முழு இரவு மற்றும் சூரிய உதயத்திற்கு இடையில் தோன்றுவது) மற்றும் சந்தியா காலம்   (மாலை நேரம் மற்றும் முழு இரவுக்கு இடையில் தோன்றும் காலம்)  எனும் நான்கு நிலைகளை  பராசக்தியின்  கண்கள் வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டு உள்ளார். சந்தியா காலம் மற்றும் விடி காலை என்ற இரண்டுமே பகல் மற்றும் இரவு என்கின்ற இரண்டு காலங்களையும் இணைக்கிறது.
  • ஆதி சங்கரர் பராசக்தியின் கண்களின் அழகை விடிகாலை மற்றும் சந்தியா காலத்துடன் ஒப்பிடுகிறார். விடிகாலை பூக்கும் அழகான தாமரை மலர் மலர்வது போலவும், மாலை சந்தி  வேளையில் தாமரை மலர்களின் இதழ்களை மூடுவது போலவும் அவளது கண்கள் முடித்த திறக்கின்றன என்கின்றார். மேலும், விடி காலையில் சந்தியா தேவியாகவும், அந்தி நேரத்தில் சாயா தேவியாகவும் அவள் வழிபடப்படுகிறார். அப்போது அவளது கண்கள் பாதி மூடிய நிலையில் உள்ளன.
  • இந்த ஸ்லோகத்தில் மூன்றாவது அம்சம் அவளை தியானிக்கும் சாதகனின் நிலை. பராசக்தியின் இரண்டு கண்கள், சூரியன் மற்றும் சந்திரனின் அவதாரங்கள் என்பதினால் அவை இரண்டுமே பராசக்தி மீதான தியான நிலையில் உள்ள சாதகர்களின் மனதிலுள்ள அறியாமை எனும் இருட்டை அழித்து அவர்களை விழித்து எழ வைக்கின்றன.
  • மூன்றாவது கண்ணால் ருத்ர ரூபமான பரமேஸ்வரன் பிரளய காலத்தின் போது பிரபஞ்சத்தை அழிக்கிறார். அதே போல  இரக்கமுள்ள பரமேஸ்வரியின் மூன்றாவது கண்ணால் மீண்டும் மூன்று குணங்களான ரஜஸ், சத்வ மற்றும் தமஸ் ஆகியவற்றைக் கொண்ட  பிரபஞ்சத்தையும் அவற்றுக்கான தெய்வங்களாக பிரம்மா, விஷ்ணு மற்றும்  ருத்திரனை மூன்று தொழில்களான  ஆக்கல், காத்தல் மற்றும் அழித்தலுக்கு படைக்கின்றாள்.    
  •    
  • அதனால்தான் சந்தி வேளை மற்றும் விடியற்காலை எனும் கால கட்டங்களையே மூன்றாம் கண்ணுடன் ஒப்பிட்டு, அதை  பிரபஞ்சத்தின் அழிவிற்கு முற்பட்ட மற்றும் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னர் உள்ள காலமாக உவமையாக கூறி உள்ளார். 
  • பராசக்தி கண்களை மூடி விட்டால் உலகமே அழிந்து விடும் என்பதினால்தான் அவள் சந்தி வேளையிலும், விடியற் காலையில் கூட பாதி திறந்த கண்களுடன்தான் இருக்கின்றாள். அவளது இரண்டு கண்களும் சந்திரன் மற்றும் சூரியன் என்பதினால் இரவிலும் ஒரு கண்ணால் உலகை பார்த்தபடியேதான் இருக்கின்றாள். இதனால்தான் அவள் கண்களை பிரளய காலத்தில் மூடும் வரை இந்த பிரபஞ்சமும் அழியாமல் உள்ளது).

 ——–
-49-

विशाला कल्याणी स्फुटरुचिरयोध्या कुवलयैः
कृपाधाराधारा किमपि मधुराभोगवतिका ।
अवन्ती दृष्टिस्ते बहुनगरविस्तारविजया
ध्रुवं तत्तन्नामव्यवहरणयोग्या विजयते ॥

விஶாலா கல்யாணீ ஸ்புடருசிரயோத்யா குவலயை:
க்ருபாதாராதாரா கிமபி மதுராபோகவதிகா ।
அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுனகரவிஸ்தாரவிஜயா
த்ருவம் தத்தன்னாமவ்யவஹரணயோக்யா விஜயதே ॥

இந்த  ஸ்லோகத்தை  1000 முறை என
10  நாட்கள் பாராயணம் செய்தால்
புதையல்களைக் கண்டுபிடிக்க முடியும்

ஹே பராசக்தி
உனது அழகிய கண்கள் விசாலமாகவும், மங்களகரமானதாகவும், ஜொலிப்பதாகவும், நீலோத்பல பூக்கள் கூட தோற்கும் அளவிலான வசீகரத்தைக்  கொண்டதாகவும், கருணைக்கு ஆதாரமாகவும், விவரிக்க முடியாத அழகுடனும், கருத்த நீல நிறத்திலும்,  பக்தர்களுக்கு அருள் புரிபவைகளாகவும், பல்வேறு வெற்றிகரமான நகரங்களை  குறிப்பதாகவும் காணப்படுகின்றன.

  • (விளக்கம்:
    உத்தம ஸ்த்ரீகளுடைய பார்வை எட்டு வகைகளிலானது என்றும், இந்த ஸ்லோகத்தின் உள் அர்த்தம் மூலம் பராசக்தி அந்த பார்வைகளை  வெளிப்படுத்தி  யுத்தங்களில் சத்ருக்களை அழித்தாள் என்பதாகவும் உணர முடிகின்றது. ஒரு காலத்தில் இந்த லோகத்தில் எட்டு நகரங்கள் இருந்தன என்றும், அவை பராசக்தியின் எட்டு பார்வைகளைக்  குறிப்பதாகவும், எனவே அந்த எட்டு பார்வைகளில் உள்ளவளாக அவளை மனதில் ஏந்திக் கொண்டு சாதகர்கள்  ஆராதிக்க வேண்டும் என்பதாகவும் கூறப்படுகின்றது.
  • அன்னை பராசக்தியின் எட்டு பார்வைகளும் அதற்கான பெயர்களும் கீழே தரப்பட்டு உள்ளன.
  • கண்கள் விசாலமாக இருப்பதால் அவளை விசாலா என்றும்,
  • மங்களகரமாக உள்ளதினால் கல்யாணி என்றும்,
  • நீலோத்பவ புஷ்பத்தை விட அழகிய பார்வையைக் கொண்டவள் என்பதினால் அயோத்யா என்றும்,
  • கருணை பொழியும் பார்வையை தாரா என்றும்,
  • வர்ணிக்க முடியாத அழகினைக் கொண்ட பார்வையை மதுரா என்றும்,
  • ஸ்நேகத்தைக் காட்டுவதை போகவதீ என்றும்,
  • தனது விழிகளின் பார்வையினால் சகல உலகங்களையும் காத்தபடி இருப்பதினால் அதை அவந்தீ என்றும்
  • அநேக குணங்களை உள்ளடக்கிக் கொண்டு உள்ளதினால்  விஜயா என்றும் கூறுகின்றார். 
  • விசாலை, கல்யாணி, அயோத்தி, தாரை, மதுரா, பகவதி, அவந்தி மற்றும் விஜயா என்று கூறப்படும்  நகரங்களில் அயோத்தி,  மதுரா,  அவந்தி போன்றவற்றை தாண்டி தற்காலத்தில்   பிற நகரங்கள் என்னென்ன, அவை எங்குள்ளன என்பது நமக்கு விளங்கவில்லை.

    சாதாரண பெண்களின் எட்டு பார்வைகளை

  • உள்ளார்ந்த,
  • ஆச்சர்யமான,
  • முழுக்க மலர்ந்த,
  • களைப்போடு கூடிய,
  • சஞ்சலமான,
  • ப்ரியத்துடன் கூடிய,
  • மயங்கிய நிலையில்,
  • மற்றும் பாதி மூடிய நிலையிலான என்பதாகக் கூறுகின்றார்கள்.
  • இந்த எட்டும் கூட அன்னையின் எட்டு பார்வைகளில் அடங்கியவைகள்தான் என்பதாக ஆதி சங்கரர் கருதி உள்ளார்).

——–
-50-

कवीनां संदर्भस्तबकमकरन्दैकरसिकं
कटाक्षव्याक्षेपभ्रमरकलभौ कर्णयुगलम् ।
अमुञ्चन्तौ दृष्ट्वा तव नवरसास्वादतरला-
वसूयासंसर्गादलिकनयनं किंचिदरुणम् ॥

கவீநாம் ஸந்தர்பஸ்தபகமகரந்தைகரஸிகம்
கடாக்ஷவ்யாக்ஷேபப்ரமரகலபௌ கர்ணயுகலம் ।
அமுஞ்சந்தௌ த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாததரலா-
வஸூயாஸம்ஸர்காதலிகனயனம் கிஞ்சிதருணம் ॥

இந்த  ஸ்லோகத்தை  1000 முறை என
5  நாட்கள் பாராயணம் செய்தால்
அம்மை போன்ற நோய்கள் தீரும்

ஹே பராசக்தி
உன்னை துதித்து கவிஞர்கள் பாடும் பாடல்களிலும் கவிதைகளிலும் இருந்து வெளியாகும் அமிர்தம் போன்ற சப்தங்களை,  புஷ்பங்களில்  உள்ள தேனை, வண்டுகள் உறிஞ்சி எடுப்பதை   போல  இரண்டு காதுகளும் கேட்டு மகிழ்ந்து கொண்டு இருக்கையில், மீன் விழி   போன்ற உன்னுடைய கண்களும் அந்த அமிர்தத்தை சுவைக்க ஆவல் கொண்டு,  சிறிய தேனீ வண்டுகள் பறப்பதை போல, காது வரை நீண்டிருக்கும் கண்களால் காதுகளை பார்க்கின்றன.  அந்த கண்களைக் காணும் நெற்றியில் உள்ள மூன்றாவது கண்ணோ பொறாமை மிகக் கொண்டு சிவந்த நிறத்தில் காணப்படுகின்றது.

  • (விளக்கம்:
    கவிஞர்கள் தங்கள் இதயத்தையும் உள்ளத்தையும் முழுமையாக செலுத்தி பராசக்தியை துதித்து பாடும்  அமிர்தம் போன்ற உணர்ச்சி மிக்க கவிதை மற்றும்  பாடல்களின்  அலைகளை கேட்டவண்ணம் உள்ள, காதுகள் வரை நீண்டிருக்கும், பராசக்தியின் கரிய நிறத்திலான, தேனிக்களைத்  போன்ற நீண்ட இரண்டு அழகிய கண்களும்,  இரு காதுகளையும் உற்று நோக்கிய வண்ணம் இருந்தவாறு,  உணர்ச்சி மிக்க கவிதை மற்றும்  பாடல் அலைகளின் ரீங்காரங்களை ரசித்தபடியே  உள்ளன.  அமிர்தம் போன்ற உணர்ச்சி மிக்க பாடல்கள் என்று இங்கு கூறப்பட்டு உள்ளது அந்த பாடல்களில் உள்ள  இனிமையான சொற்களால் மட்டும் ஏற்படுவதில்லை. அதை விட முக்கியமானது பாடுபவர்களில்  குரல் வளம் ஆகும்.  பாடல்களின் இனிமைக்கும், ஸ்தோத்திரங்களை அழகிய உணர்வோடு வெளிப்படுத்தும் தன்மைக்கும்  குரல் வளம் பெரும் பங்கு வகிக்கின்றது. 
  • அப்படிப்பட்ட இனிமையான  குரல் வளத்தைக் கொடுப்பது  தொண்டையில் உள்ள சக்கரமே.  தொண்டையில் உள்ள விசுத்த சக்கரத்தின் ஆற்றல் சக்தியாக சரஸ்வதி எனும் வடிவில் பராசக்தியே அமர்ந்து உள்ளாள் என்பதினால் அவளே குரல் வளத்தை  தருகின்றாள்.  மேலும் தேவியின் மீதான தோத்திரங்களை, பாடல்களையும் தன்னை மறந்து உணர்ச்சியுடன் ஒருவர் பாடும்போதோ அல்லது  உச்சரிக்கும்போதோ  பெருமூளையில் சுரக்கும்  மூளை தண்டு வட  திரவம் என்பது உருகி தொண்டையில் பாய்கின்றதாம். அமிர்தம் போன்ற அந்த திரவம் பாடுபவர் அல்லது துதிப்பவர்களது குரலை மனதை உருக்கும் வகையில் இருக்குமாறு மாற்றி அமைத்து விடுகின்றது என்பதை ஆதி சங்கரர் கூறாமல் கூறி உள்ளார்.  
  • கவிஞர்கள் தங்கள் இதயத்தையும் உள்ளத்தையும் முழுமையாக செலுத்தி பராசக்தியை துதித்து பாடும்  அமிர்தம் போன்ற உணர்ச்சி மிக்க கவிதை மற்றும்  பாடல்களின்  இனிமையை கேட்டவண்ணம் உள்ள காதுகளையும், அதை உன்னிப்பாக பார்த்தபடி இருந்து  ரசிக்கும் கரு விழிகளையும் பார்க்கும் மூன்றாவது கண்ணோ   தனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்ற பொறாமையினால்  சிவந்து விடும்.  சிவபெருமானின் மூன்றாவது கண் சிவந்து, திறக்கும் போதெல்லாம், அது பிரபஞ்சத்தை அழிக்கிறது. அதே நேரத்தில் பராசக்தியின் சிவந்திருக்கும் மூன்றாவது கண் திறக்கும்போது அது தனது பக்தர்களின் மீது இரக்கத்தையும் அன்பையும் வெளிப்படுத்துகின்றது).

………….சௌந்தர்யலஹரி தொடர்கின்றது : 51 -75