ஆனந்தலஹரி   (1-25)   

-1-

शिवः शक्त्या युक्तो यदि भवति शक्तः प्रभवितुं
न चेदेवं देवो न खलु कुशलः स्पन्दितुमपि ।
अतस्त्वामाराध्यां हरिहरविरिञ्चादिभिरपि
प्रणन्तुं स्तोतुं वा कथमकृतपुण्यः प्रभवति ॥

ஶிவ: ஶக்த்யா யுக்தோ யதி  பவதி ஶக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குஶல: ஸ்பந்திதுமபி ।
அதஸ்த்வாமாராத்யாம் ஹரிஹரவிரிஞ்சாதிபிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருதபுண்ய: ப்ரபவதி॥

இந்த  ஸ்லோகத்தை  தினமும்
1000 முறை 12  நாட்கள் தொடர்ந்து  
பாராயணம் செய்தால்  சகல
காரியமும் சித்தி ஆகும்

ஹே பராசக்தி
பரசிவன் உன்னோடு   இணைந்து  இருக்கும்போது மட்டுமே
, பரமசிவன்  எனும் ரூபத்தில் இருந்து வெளி வந்த, மூன்று ரூபங்களில் தோன்றிய அவரால்,   படைத்தல்; காத்தல்; மற்றும் அழித்தல் முப்பது நாட்களும் எனும் செயலை  செய்ய முடியும்.  அவர் உன்னோடு இல்லாவிடில் அவரால்  சிறு துரும்பைக் கூட அசைக்க முடியாது.  அதனால்தான் பிரும்மா; விஷ்ணு; ருத்ரன் (மஹேஸ்வரர்) போன்றவர்களால் பூஜிக்கப்படும் உன்னை, பூர்வ  ஜென்மங்களில் அளவில்லா புண்ணியங்களை செய்து இருந்தவர்களினால்  மட்டுமே  ஆராதனை செய்து துதிக்க இயலும்.

  • (விளக்கம்:
    இந்த ஸ்லோகத்தின் மூல தத்துவம் என்ன என்றால் – ‘இந்த ஜகத்தின் (பிரகிருதி) அதிபதி, வெளியில் தெரியாத சக்தி தேவியான திரிபுராசுந்தரி என்பவள் ஆவாள். அவளே ஈஸ்வரி  எனும் பெண் சக்தியையும்,  ஈஸ்வரன் எனும்  (சதாசிவன்) ஆண் சக்தியையும் உள்ளடக்கி  உள்ளவள். அவள் விரும்பினால் மட்டுமே இந்த ஜகத்தை படைக்க  தனது ஆண் சக்தியான ஈஸ்வரா எனும் ரூபத்தை வெளிப்படுத்தி, அதன்  மூலம்  மூன்று தெய்வங்களான பிரும்மா, விஷ்ணு மற்றும் ருத்ரனையும் (சிவபெருமானின் இன்னொரு அம்சம்)  படைக்கின்றாள்’.  இந்த உண்மை வேதங்களிலும்,  புராணங்களிலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.  இது  ஸ்ரீ தத்தாத்திரேயர், ஸ்ரீ பரசுராமருக்கு அருளிய திரிபுரா ரகசியம் எனும் போதனையிலும் கூறப்பட்டு உள்ளது.
  • ஆண் மற்றும் பெண் உறவின்றி பிறப்பில்லை என்பதினால் சிருஷ்டியை ஏற்படுத்தக் கூட பரமேஸ்வரர் மற்றும் பராசக்தி இணைய வேண்டும் என்பதாகவே ஆதி சங்கரர் கருதி இருக்க வேண்டும். சக்தி தத்துவமான ஐந்து த்ரிகோணங்களும் சிவ தத்துவமான நான்கு த்ரிகோணங்களும் இணைந்தால்தானே ஸ்ரீ சக்ரமே உருவாகின்றது  என்பது இதற்கு ஒரு உதாரணம். இரண்டு த்ரிகோணங்களும் இணையவில்லை என்றால் எப்படி நடுவில் பிந்துவாக பராசக்தி அமர முடியும்?
  • அவள் விருப்பம் இன்றி இந்த ஜகத்தில் அணு அளவில் கூட எதுவுமே இயங்க முடியாது. அத்தனை ஏன், அவளால் வெளிப்படுத்தப்பட்ட பரமேஸ்வரனே கூட இயக்கம் இல்லாதவராகவே இருப்பார். அத்தனை சக்தி வாய்ந்த, இந்த ஜகத்திற்கே தாயாரான அந்த பராசக்தியை,  அவள் விரும்புவதினால் மட்டுமே, அவளால் வெளிப்படுத்தப்பட்ட,  மும்மூர்த்திகளான பிரும்மா, விஷ்ணு மற்றும் ருத்ரர் (சிவன்) போன்றவர்களால் மட்டும் அல்லாமல் அவர்களது  கட்டுப்பாட்டில், தேவலோகங்களில் உள்ள அனேக  கோடி தேவ, தேவர்களாலும்,  பூஜித்து வணங்க முடிகின்றது.
  • அவர்களைப் போலவே பூமியில் மானிடர்களாக பிறப்பு எடுத்து வந்துள்ள  அனைவராலும் அவளை ஆராதனை செய்ய முடியுமா என்றால் அது முடியாது என்பதே உண்மை. மானிடப் பிறவி எடுத்து வந்துள்ளவர்களில், எவர் ஒருவர் பூர்வ ஜென்மங்களில் அநேக கோடி புண்ணியங்களை செய்து அரிதான மானிடர்களாக பிறப்பு எடுத்துள்ளார்களோ, அவர்களால் மட்டுமே அவள் பெயரை உச்சரிக்கவோ அல்லது அவளை பூஜித்து ஆராதிக்கவோ முடியும் என்பதை எடுத்துக் காட்டுவதே இந்த ஸ்லோகம்  ஆகும்).

——–
-2-

तनीयांसं पांसुं तव चरणपङ्केरुहभवं
विरिञ्चिस्सञ्चिन्वन् विरचयति लोकानविकलम् ।
वहत्येनं शौरिः कथमपि सहस्रेण शिरसां
हरस्संक्षुद्यैनं भजति भसितोद्धूलनविधिम् ॥

தனீயாம்ஸம் பாம்ஸும் தவ சரணபனகேருஹபவம்
விரிஞ்சிஸ்ஸஞ்சின்வன் விரசயதி லோகானவிகலம் ।
வஹத்யேனம் ஶௌரி: கதமபி ஸஹஸ்ரேண ஶிரஸாம்
ஹரஸ்ஸங்க்ஷுத்யைனம் பஜதி பஸிதோத்தூலனவிதிம்॥

இந்த ஸ்லோகத்தை தினமும்
1000 முறை 55 நாட்கள் தொடர்ந்து
பாராயணம் செய்தால் மற்றவர்களை
தன்பால் இழுக்கும் திறனையும்,
சக்தியையும் பெறுவார்கள்

ஹே பராசக்தி
நீ நடக்கும்போது  உன்னுடைய பாதத்தில் இருந்து விழுந்த சிறு தூசிகளை திரட்டி வைத்துக் கொண்டு
, அந்த துளிகளைக் கொண்டே பிரும்மாண்டமான பதினான்கு லோகங்களையும் பிரும்மா படைத்தார்.  ஆயிரம் தலைகளைக் கொண்ட ஆதிசேஷனாக தன்னை  உருமாற்றிக் கொண்ட மஹாவிஷ்ணுஉனது பாதத் துளிகளினால் படைக்கப்பட்ட அத்தனை லோகங்களையும், தனது தலைகளில் தாங்கி கொண்டு அனைவரையும் பாதுகாத்து வருகின்றார். அவற்றைக் கண்ட ருத்திரனோ, உனது பாதத் துளிகளுக்கு ஆசைப்பட்டு, உனது பாதத் துளியினால் படைக்கப்பட்ட லோகங்களை, பிரளய காலத்தில் பொடிப் பொடியாக ஆக்கி அழித்து விட்டு, அந்த தூள்களை  தனது உடல் முழுவதும் வீபூதியைப் போல பூசிக் கொள்கின்றார்.   

  • (விளக்கம்)
    இந்த ஸ்லோகம்  ‘இந்த ஜகத்தைப் படைத்த பராசக்தி நடந்து சென்றபோது அவளது பாதங்களில் இருந்து கீழே விழுந்த சிறிய தூசிகளின்  மகிமை கூட  எந்த அளவிலான மேன்மையைக் கொண்டவைகளாக  இருந்தது’  என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்து உள்ளது.
  • ஜகம் வெளிப்படுவதற்கு முன், அகண்டத்தின்  தேவி அவளிடத்தில் இருந்த  மேன்மையினாலும், சுதந்திரத் தன்மையினாலும், சிவனும் சக்தியுமாக இணைந்து  இருந்த அவள் சதாசிவா எனும் தனது தத்துவத்தில் இருந்து (ஆண் பாகத்தில் இருந்து)  முதலில் ஈஸ்வரா எனும் சக்தியை வெளிப்படுத்த, அந்த ஈஸ்வரன் தன்னுள் இருந்து மூன்று தன்மைகளில் ஆன தெய்வங்களான பிரும்மா, விஷ்ணு மற்றும் ருத்திரன்  என்பவர்களை வெளிபடுத்தினார்.  அதை தொடர்ந்து  பராசக்தியின் சக்தியினால் தேவலோகங்களும், தேவர்களும்  தோற்றுவிக்கப்பட்டனர். பராசக்தி  தங்குவதற்காக  தேவலோகத்தில்திரிபுராவில், ஸ்ரீபுரம் எனும் மாளிகை அமைந்தது.
  • விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம் ஆகிய மூன்று (= மூன்று) நகரங்களில் (= புரா) வாழ்கிறாள் என்பதினால் ஆன்மீகவாதிகள் அவள் வாழும் இடத்தை தேவலோகத்தில் உள்ள திரிபுரா என்று கூறுகின்றார்கள்.
  • லோகங்களை படைக்க தோற்றுவிக்கப்பட்ட பிரும்ம தேவனோ லோகங்களை எப்படி படைப்பது என்ற சிந்தனையுடன் இருந்தவாறு, அந்த பரமேஸ்வரியையே தரிசனம் செய்து அதற்கான விளக்கத்தைப் பெறலாம் என்று ஸ்ரீபுரத்திற்கு சென்றபோது, அங்கிருந்த தோட்டத்தில்  பரமேஸ்வரி நடந்து கொண்டிருந்தபோது, அவளது காலில் இருந்து விழுந்த சிறு தூசிகளைக் கண்டார். அது போதுமே லோகங்களைப் படைக்க என்ற எண்ணம் கொண்டவர்தேவியின் பாதங்களில் இருந்து கீழே விழுந்த தூசிகளை தனது  கைகளில் ஒற்றி எடுத்துக் கொண்டு எடுத்துக் கொண்டு வந்தார்.
  • அவளது பாதங்களில் இருந்து கீழே விழுந்த தூசிகளைக் கொண்டே மேல் லோகங்களான பூலோகம் /புவர் லோகம்/சுவர் லோகம்/மஹர் லோகம்/ஜனோ லோகம்/தபோ லோகம் மற்றும் சத்ய லோகம் என ஏழு மேல் லோகங்களையும், அதல லோகம்/விதல லோகம்/சுதல லோகம்/தலாதல லோகம்/மகாதல   லோகம்/ரஸாதல லோகம் மற்றும் பாதாள லோகம் என்ற ஏழு கீழ் லோகங்களை படைத்தார்.
  • இப்படியாக பதினான்கு லோகங்களையும் படைத்தவர் மூன்று தன்மைகளில் ஆன உயிரினங்களை  அவற்றில் உற்பத்தி செய்ய வைக்கின்றார். ஆக பதினான்கு லோகங்களும் அதே ஈஸ்வரியின் பாதத்தில் இருந்து விழுந்த சிறு தூசிகளினால் தோற்றுவிக்கப்பட்டது எனும்போது அந்த பாதத் துளிகளின் மேன்மையைக் குறித்து என்ன என்று கூற முடியும்?
  • அதை பார்த்த மஹா விஷ்ணுவும், அந்த தேவியின் பாதத் துளிகள் தனக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டு, தன்னை ஆயிரம் தலைகளைக் கொண்ட ஆதிசேஷனாக உருமாற்றிக் கொண்டு, பராசக்தியின் பாதத் துளிகளினால் ஏற்படுத்தப்பட்ட அத்தனை லோகங்களையும் தனது தலை மீது ஏந்தி வைத்துக் கொண்டார். இப்படியாக அவருக்கும் பராசக்தியின் பாதத்தில் இருந்து விழுந்த சிறிய தூசிகள் கிடைக்கின்றது.
  • பராசக்தியின் பாதத்தில் இருந்து விழுந்த சிறிய தூசிகள் பிரும்மாவிற்கும் மஹாவிஷ்ணுவிற்கும் கிடைத்து விட்டதே என்பதைக் கண்ட ருத்திரர் சும்மா இருப்பாரா? பராசக்தியின் சக்தி மூலம் படைக்கப்பட்ட லோகங்கள் அழிய வேண்டிய பிரளய காலம் தோன்றும் வரை அமைதியாக இருந்தார். பிரளய காலம் தோன்றி பிரபஞ்சம் அழிய வேண்டிய வேளை வந்தபோது, பராசக்தியின் பாதத் துளிகளினால் தோற்றுவிக்கப்பட்ட லோகங்களை பொடிப் பொடியாக தூசிகளாக்கி அழித்த பின்னர், அந்த தூசிகளை எல்லாம் வாரி எடுத்து  தனது உடல் முழுவதிலும் வீபூதியை பூசிக் கொண்டதை போல பூசிக் கொண்டு ஆனந்தம் அடைந்தாராம்.
  • இப்படியாக மூன்று தெய்வங்களும்  பராசக்தியின் பாதத்தில் இருந்து விழுந்த தூசிகள் தமக்கு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு மேன்மை அடைந்தார்கள் என்றால்அந்த தேவியின் பாதங்களை துதித்து ஆராதிக்கும் நமக்கு எத்தனை பெரிய அளவிலான மேன்மை கிடைக்கும் என்பதை  எடுத்துக் காட்டுவதே இந்த ஸ்லோகத்தில் காணப்படும் ஆழமான தத்துவம் ஆகும்).

———
-3-

अविद्यानामन्त-स्तिमिर-मिहिरद्वीपनगरी
जडानां चैतन्य-स्तबक-मकरन्द-स्रुतिझरी ।
दरिद्राणां चिन्तामणिगुणनिका जन्मजलधौ
निमग्नानां दंष्ट्रा मुररिपु-वराहस्य भवति ॥

அவித்யானாமந்த-ஸ்திமிர-மிஹிரத்வீபனகரீ
ஜடானாம் சைதன்ய-ஸ்தபக-மகரந்த-ஸ்ருதிஜரீ ।
தரித்ராணாம் சிந்தாமணிகுணனிகா ஜன்மஜலதௌ
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய பவதி ॥

இந்த ஸ்லோகத்தை தினமும்
2000 முறை 45 நாட்கள் தொடர்ந்து
பாராயணம் செய்தால் சகல வித்யா
பிராப்தி அடையலாம்

ஹே பராசக்தி
மனம் அறியாமையினால் சூழப்பட்டு கிடப்பவனின்  மன இருளை அகற்றும் விதத்திலான  ஒளியைத் தரும் சூரியனைப் போல  நீ திகழ்கின்றாய். மந்த புத்தி கொண்டவர்களுக்கோ
, பூவில் உள்ள அமிர்தம் போன்ற தேனாக இருந்து அறிவாற்றாலைத் தருகின்றாய். ஒன்றுமற்ற அனாதைகளுக்கோ, சிந்தாமணியைப் போல இருந்து ஐஸ்வர்யங்களைக் கொடுக்கின்றாய். எப்படி கடலில் மூழ்கிக் கொண்டிருந்த பூமியை காப்பாற்ற, மஹாவிஷ்ணு வராகி அவதாரம் எடுத்து, துதிக்கையைப் போன்ற தனது இரண்டு தந்தங்களினால்  பூமியை பற்றிக் கொண்டு, மேலெழுந்து வந்து கரை சேர்த்தாரோ, அவ்வாறே பிறப்பும் இறப்பும் கொண்ட ஸம்ஸார ஸாகரத்தில் மூழ்கிக்  கிடந்து தத்தளிப்பவர்களை கரை சேர்க்கும் விதமாக நீ அவர்களுக்கு அருள் புரிகின்றாய்.

  • (விளக்கம்:
    இந்த ஸ்லோகமும் முன் கூறப்பட்ட இரண்டாவது ஸ்லோகத்துடன் சம்மந்தப்பட்டது ஆகும். இந்த ஸ்லோகமும் பராசக்தியின் பாத  தூசிகள் எந்த அளவு மேன்மையானவைகளாக  இருந்தது என்பதை எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்து உள்ளது.சம்சார சாகரத்தில் மூழ்கிக் கிடப்பவன்  மீண்டும், மீண்டும்  பிறப்பு எடுத்து மரணத்தை  அடைகின்றான்.  கரையில்லாததும் கடக்க முடியாததுமான சமுத்திரத்தில் அகப்பட்டுக் கொண்டவனைப் போன்றது அவனது நிலை. அதனால்தான் மீண்டும், மீண்டும் பிறப்பும், இறப்பையும்  கொண்டவன் மண் ஆசை, பெண் ஆசை மற்றும் பொன் ஆசைகளைக் கொண்டவனாக இருந்தவாறு பல்வேறு வேதனைகளையும் துன்பங்களையும் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டி உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் இருந்து  விடுதலை பெற்று, பிறப்பும் இறப்பும் இல்லாத, மோட்ஷ நிலையை அடைய வேண்டும் என்றால், இந்த ஜகத்தைப் படைத்த  பராசக்தியின் தாமரைப் பூவைப் போன்ற பாதங்களை இறுக பற்றிக் கொண்டு அவளது பாதத் துளிகளில் சரண் அடைவதுதான் ஒரே வழி ஆகும்.
  • இதை யார் செய்ய விரும்புகின்றார்கள்? சம்சார பந்தங்களில் இருந்தாலும் மனப் பூர்வமாக ஆத்ம விடுதலை பெற்று மோட்ஷத்தை அடைய வேண்டும் என விரும்பும் முக்ஷுக்கள்தான் அப்படிப்பட்ட நிலை வேண்டும் என விரும்பி, ஜகத்தைப் படைத்த பராசக்தியின் பாதங்களில் சரண் அடைகின்றார்கள்.
  • இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டு உள்ள தத்துவத்திற்கு வலு சேர்க்கும் விதமாக, ஒரே வரியிலான சில உவமைகள்  இந்த ஸ்லோகத்தில் காணப்படுகின்றன.
  • முன் ஒரு காலத்தில் ஹிரண்யாக்ஷகன் எனும் அசுரனினால் தேவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு வந்தார்கள். ஒருமுறை அவன் பூமாதேவியை கடத்திக் கொண்டு போய் கடலுக்கு அடியில் மறைத்து வைத்து விட்டான். ஆகவே பூமாதேவியைக் காப்பாற்ற மஹாவிஷ்ணு இரண்டு தந்தங்களைக் கொண்ட பன்றி உருவம் கொண்டு, கடலுக்குள் சென்று அந்த அசுரனைக் கொன்று பூமா தேவியை மீட்டு வந்தார். இங்கு கடல் என்பது சம்சார சாகரத்தைக் குறிப்பிடுகின்றது. எப்படி கடலில் மூழ்கி இருந்த பூமாதேவியை மஹாவிஷ்ணு காப்பாற்றி கரை சேர்த்தாரோ அப்படித்தான் சம்சார சாகரத்தில் மூழ்கி உள்ள முமுக்ஷுக்கள் (பந்தங்களில் இருந்து விடுதலை பெற்று மோட்ஷத்தை அடைய துடிப்பவன்)பராசக்தியின் பாதத் துளிகளில்  சரண் அடைந்து விட்டால், அந்த தேவி அவர்களை பிறப்பும், இறப்பும் கொண்ட சம்சார சாகரத்தில் இருந்து மீட்டு,   மோட்ஷ பாதையில் அனுப்பி விடுகின்றாள் என்பது இந்த கதை மூலம் உணர்த்தப்பட்டு உள்ளது.
  • இந்த ஸ்லோகத்தில் சிந்தாமணி எதற்காக கூறப்பட்டு உள்ளது?  சிந்தாமணி ரத்தினம் ஸ்வர்க்க லோகத்தைச் சேர்ந்த ரத்தினக் கல் ஆகும். அதை ஆராதிப்பவர்களுக்கு குபேரனை போன்ற செல்வத்தையும், ஈஸ்வரனைப் போன்ற அந்தஸ்த்தையும், மஹாலக்ஷ்மியை போன்ற புகழையும் அது தரும் என்பதாக புராணங்களில் குறிப்புக் காணப்படுகின்றது. அனைத்திற்கும் மேலாக இந்திரனுக்குச் சமமான அதிகாரம் கிடைக்கும். அதன்  காரணம்  பராசக்தியின் பூரண அருளைப் பெற்றது சிந்தாமணி ரத்தினம் என்பதாகும்.  உலகில் உள்ள நல்லவை அனைத்தையும் சிந்தாமணிக் கல் நமக்குத் தரும்.  அதனால்தான் எவர் ஒருவர் பொருள் இன்றி, மேன்மை இன்றி, ஏழ்மை நிலையில் உள்ளாரோ, அவர் மனமார  பராசக்தியின் பாதத்துளிகளில் சரண் அடைந்து  அவளுடைய மகிமையை விளக்கும் இந்த ஸ்லோகத்தை கூறி அவளை மனதார வேண்டி வந்தால் அவர்கள் பணக் கஷ்டங்கள் விலகி வாழ்வில் மேன்மை நிலையை அடைவார்கள் என்பதாக எடுத்துக் காட்டப்பட்டு உள்ளது.
  • மூடர்களும், மந்த புத்தியினரும் அவர்களுக்குள் உள்ள அறியாமையினால் தவறான பாதையில் சென்று, மீள முடியாத துன்பங்களையும் துயரங்களையும் சந்திக்கும்போது, அந்த நிலையில் இருந்து மீண்டு வந்து அமைதியான வாழ்வைப் பெற வேண்டும் என நினைக்கும் போது லலிதா சஹஸ்ர நாமாவளியில் காணப்படும் இந்த மூன்றாவது ஸ்லோகத்தை முறையாக கூறிக் கொண்டு பராசக்தியின் பாதத்துளிகளில் சரண் அடைந்து விட்டால்   அந்த நிலையில் பராசக்தி நமது மன இருளை அகற்றி, நல் வழியில் செல்ல வழிகாட்டுவாள். அதன் மூலம் நாமும் வாழ்க்கையின் துன்பங்களில்  இருந்து விடுதலை  பெற  முடிகின்றது என்பதை சூசகமாக  எடுத்துக் காட்டும் விதத்தில் இந்த ஸ்லோகம்  அமைந்து  உள்ளது.

———–
-4-

त्वदन्यः पाणिभ्यामभयवरदो दैवतगणः
त्वमेका नैवासि प्रकटितवराभीत्यभिनया ।
भयात् त्रातुं दातुं फलमपि च वाञ्छासमधिकं
शरण्ये लोकानां तव हि चरणावेव निपुणौ ॥

த்வதன்ய: பாணிப்யாமபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாஸி ப்ரகடிதவராபீத்யபினயா ।
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சாஸமதிகம்
ஶரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ॥

இந்த ஸ்லோகத்தை தினமும்
3000 முறை 36 நாட்கள் தொடர்ந்து
பாராயணம் செய்தால் மன பயங்கள்
அகலும், வியாதிகள் குணமடையும்.

ஹே பராசக்தி
பிரும்மா
, விஷ்ணு மற்றும் சிவபெருமான் உட்பட அனைத்து தெய்வங்களும் தம்மிடம் வரம் கேட்டு வரும் பக்தர்களுக்கு,  ‘உன்னைக் காப்பாற்றுவேன்எனும் அபய முத்திரை, மற்றும் உன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றுவேன்எனும் வர முத்திரை சின்னங்களை தமது கைகளால் காட்டி அருள் புரிகிறார்கள். ஆனால் அனைத்து உலகங்களின் புகலிடமான பராசக்தி தாயேநீ மட்டுமே அப்படிப்பட்ட முத்திரை சின்னம் எதையுமே கைகளால்  காட்டாமல், உனது கமலத் திருப்பாதங்களே அவை அனைத்தையும் விட மேலான பலன்களை அளிக்கும் என்பதை வெளிப்படுத்துவதினால், நீ மற்ற தெய்வங்களை விட மகிமை வாய்ந்தவளாக காணப்படுகின்றாய்.  

  •  (விளக்கம்:
    இந்த ஸ்லோகத்தின் மூலம் பராசக்தியின் தாமரை மலர் போன்ற பாதங்களின் மேன்மையும், மகிமையும் எடுத்துக் காட்டப்பட்டு உள்ளது. உலகில் உள்ள அனைத்து தெய்வங்களும் தமது கைகளினால் ஏதாவது ஒரு முத்திரை சின்னங்களைக் காட்டிக் கொண்டு காட்சி தருகின்றார்கள். அந்த சின்னங்கள் மூலமே அவர்கள் தம்மை நாடி வரும் பக்தர்களுடைய வேண்டுகோட்களை நிறைவேற்றுகிறார்கள். அனைத்து ஆலயங்களிலும் உள்ள பெரும்பாலான தெய்வங்களின் கைகள் அபய மற்றும் வர முத்திரைகளைக் காட்டிய நிலையில் காணப்படுகின்றன.
  • அபய முத்திரைஎன்பது ‘நான் உனக்கு அபயம் தருகின்றேன்என்றும், ‘வர முத்திரைஎன்பது ‘நீ வேண்டிய வரங்களை நான் உனக்கு அளிப்பேன்என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும் உள்ளது.
  • ஆனால் இந்த உலகத்தையே ரட்ஷிக்கும் பராசக்தி  ஒருவள் மட்டுமே தனது கைகளால் எந்த சின்னத்தையும் காட்டாமல், தெய்வங்களின் கைகளால் காட்டப்படும் முத்திரை சின்னங்கள் மூலம்  பெறப்படும் வரங்களை விட  அதிக அளவிலான சக்தி வாய்ந்த வரங்களை  எனது தாமரை மலர் போன்ற பாதங்களை தரிசிப்பதின் மூலம் பெறலாம் என்பதை வெளிப்படுத்துவதை போல காட்சி தருகின்றாள்.
  • அதற்கும் ஒரு காரணம் உள்ளது. பக்தர்கள் அனைவருமே தெய்வங்களை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கும்போது தலை பகுதி தரையை தொட்டபடி இருப்பதினால், அந்த நிலை நமஸ்கரிப்பவர் தெய்வங்களின் பாதங்களில் சரண் அடைந்து விட்ட நிலையைக் காட்டுகின்றது.  அதனால்தான் தனது பாதங்களை நமஸ்கரிக்கையிலேயே பக்தர்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை தனது பாதங்களே நிறைவேற்றுகின்ற என்பதை வெளிப்படுத்தும் விதமாக  அந்த தேவியானவள் தனது கைகளினால் எந்த முத்திரை சின்னங்களையும் வெளிப்படுத்துவது இல்லை.
  • அனைத்து தெய்வங்களும் தமது கைகளால் கொடுக்கும் அருளை, தமது தாமரை மலர் போன்ற பாதங்களினால் கொடுத்து விடுகின்றாள் என்பதில் இருந்தே அந்த தேவியின் பாத மகிமையை உணர முடியும்.

——-
-5-

हरिस्त्वामाराध्य प्रणतजनसौभाग्यजननीं
पुरा नारी भूत्वा पुररिपुमपि क्षोभमनयत् ।
स्मरोऽपि त्वां नत्वा रतिनयनलेह्येन वपुषा
मुनीनामप्यन्तः प्रभवति हि मोहाय महताम् ॥

ஹரிஸ்த்வாமாராத்ய ப்ரணதஜனஸௌபாக்யஜனநீம்
புரா நாரீ பூத்வா புரரிபுமபி க்ஷோபமனயத்।
ஸ்மரோபி த்வாம் நத்வா ரதினயனலேஹ்யேன வபுஷா
முனீனாமப்யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம் ॥

இந்த ஸ்லோகத்தை தினமும்
2000 முறை 8 நாட்கள் தொடர்ந்து
பாராயணம் செய்தால்
ஸ்த்ரீ வசியத்தை தரும்.

 ஹே பராசக்தி
மனம்
, வாக்கு, சரீரம் முதலிய இயக்கம் அல்லது செய்கைகளினால்  உன்னை ஆராதிப்பவருக்கு  சகல விதமான பாக்கியத்தையும் நீ அளிக்கின்றாய் என்பதினால்தான் முன் ஒரு காலத்தில் மஹாவிஷ்ணு கூட உன்னை பூஜை செய்து, நீ கொடுத்த சக்தியினால் திரிபுரசுந்தரனைக் அழித்த பரமசிவனை ஸ்த்ரீ வேடம் கொண்டு மோகிக்க வைத்து அவரது கோபத்தை அடக்கினார். மன்மதனும்  உன்னை ஆராதனை செய்தே,   அவனது மனைவி ரதியின் கண்களில் மட்டுமே நிற்கும்  வகையிலான வசீகர தோற்றத்தை அடைந்து, கடுமையான தவத்தில் இருந்த முனிவர்களின் மனதில் கூட மோகத்தை ஏற்படுத்த முடிந்தது.

  • (விளக்கம்:
    இந்த ஸ்லோகத்தின் மூலம் தேவி  பராசக்தியின்  மகிமை மட்டும் அல்ல, அவளை ஆராதிக்கும் முறையிலான ஸ்ரீ சக்கர ஆராதனையின் மகிமையும்  இரண்டு தேவலோகக் கதைகள்  மூலம்  கூறப்பட்டு  உள்ளன.
  • அதில் முதலாவதான கதை இது. அசுரன் திரிபுரசுந்தரனை அழித்து விட்டு வந்த சிவபெருமானின் கோபம் என்ன செய்தும் அடங்கவே இல்லை.  அது பல கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த  தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்  கொண்ட மஹாவிஷ்ணுசிவபெருமானின்  கோபத்தை தணிக்க  என்ன செய்யலாம் என்ற யோசனையில் அமர்ந்து இருந்தபோதுஅவரிடம் சென்ற நாரத முனிவர்,  சிவபெருமானுடைய கோபத்தை அடக்கும்  சக்தியை பெற வேண்டும் எனில் தேவி பராசக்தியின்  அனுக்கிரஹம் தேவை என்றும்,  அதை பெற மஹாவிஷ்ணு   பராசக்தியை  ஸ்ரீ சக்கர  பூஜை மூலம் ஆராதனை செய்யுமாறு  அறிவுரை வழங்கினார்.
  • அந்த அறிவுரையை ஏற்றுக் கொண்ட மகாவிஷ்ணுவும் அந்த  ஆராதனையை முறைப்படி செய்ய ஒரு குரு தேவை என்பதை உணர்ந்துஅதற்கு எவரை அணுகலாம் என்ற  யோஜனை செய்து கொண்டு இருந்தபோது அந்த பராசக்தியே  அவர் எதிரில் தோன்றி அவருக்கு ஸ்ரீ சக்கர பூஜா விதி மற்றும் பஞ்சதசாக்ஷரி எனும் மஹா மந்திரத்தை  உபதேசித்தாள்.  
  • அவற்றை சித்தி செய்து கொண்டதினால்தான் மஹாவிஷ்ணுவிற்கு தான் நினைத்த எந்த  ரூபத்தையுமே  எடுக்க முடியும் என்ற அளவிலான அபார  சக்தி கிடைத்தது. அந்த சக்தியைக் கொண்டே அவர் மோகினி எனும் பெண் ரூபத்தை  எடுத்துக் கொண்டு, பரமசிவனை மயக்கி அவருடைய கோபத்தை அடக்கினார்.
  • இரண்டாவது கதை மன்மதனைக் குறித்தது. மன்மதனும் ஸ்ரீ சக்கரம் மற்றும் பஞ்சதசாக்ஷரி எனும் மஹா மந்திரத்தையும் உபாசனை செய்தே அசாத்திய சக்திகளைப் பெற்றவர், தனது மனைவி ரதியின் கண்களிலிருந்து மறைய மறுக்கும் அளவிற்கான கவர்ச்சியான, வசீகர மற்றும் கண் கவர் தோற்றத்துடன் கூடியவராக மாறினார். அதனால்தான்  அவரால்  கடுமையான தவத்தில் இருந்த முனிவர்கள் மற்றும் துறவிகளின் மனதைக் கூட கலக்க முடிந்தது.
  • இந்த இரண்டு கதைகள் மூலம் ஸ்ரீ சக்கர தேவியின் மகிமை மட்டும் அல்ல ஸ்ரீ சக்கரத்தின் மேன்மையும் விளக்கப்பட்டு உள்ளது. பஞ்சதசாக்ஷரி  மந்திரம் என்பது என்ன? பஞ்சதச என்றால் பதினைந்து என்று பொருள். இந்த மந்திரம் பதினைந்து மந்திர அஷ்சரங்களைக் கொண்டுள்ளது, அதனால் பஞ்சதசாக்ஷரி எனப்படுகிறது. ஒவ்வொரு வரியும் பீஜ மந்திரங்களை கொண்ட (விதை மந்திரங்கள்) ஒரு கூடம்  எனக் கூறப்படும். பஞ்சதசாக்ஷரி மந்திரங்கள்  முன்று கூடங்களாகவாக்ப கூடம், காமராஜ கூடம், சக்தி கூடம்- எனப்படும் பகுதிகளாக உள்ளன.   வாக்ப கூடம் என்பது ஸ்ரீ  பராசக்தியின் முகத்தையும், காமராஜ கூடம் என்பது ஸ்ரீ பராசக்தியின் கழுத்தில் இருந்து இடை வரையும், சக்தி கூடம் என்பது இடைக்கு கீழ் பகுதியையும்  குறிக்கும். இந்த மூன்று கூடங்களும் பராசக்தியின் முழு வடிவை தியானிக்கும்  வகையில் அமைந்து உள்ளன.  இந்த காரணத்தினால்தான் பஞ்சதசாக்ஷரி மந்திரம் மஹா சக்தி வாய்ந்த மந்திரமாக கருதப்படுகிறது. பராசக்தியே ஸ்ரீ லலிதாம்பிகை ஆவாள்.
  • பஞ்சதசாக்ஷரி என்பது பராசக்தியின் மகா மந்திரம் ஆகும். அதன் விரிவாக்க வடிவத்தில் அது  பதினாறு எழுத்துக்களைக் கொண்ட மந்திரமான ஷோடசி அல்லது ஷோடசாக்ஷரி என்று அழைக்கப்படுகிறது. சாதகர்கள் இந்த மந்திரத்தின் தீட்சை நேரடியாக ஒரு குருவிடமிருந்து பெற வேண்டும்அதை விடுத்து தன இச்சையாக  அந்த மந்திர உச்சாடனைகளை  செய்யக்  கூடாது. இது மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் ஆகும் என்பதினால், அந்த மந்திரத்தின் உச்சரிப்பு   சரியாக இல்லை என்றால் அது சாதகருக்கு  தீமையை  விளைவிக்கும். எனவேதேர்ச்சி பெற்ற ஒரு குருவிடமிருந்து நேரடியாக தீட்ஷை  பெறுவது அவசியம்.
  • நவ சக்கரம் என்ற பெயரில் அழைக்கப்படும் ஸ்ரீ சக்கரத்தில்தான் அனைத்து சக்திகளும் அடங்கியிருக்கின்றன என்பதின் காரணம் இதில் 64 கோடி ஆவரண  தேவதைகள் வசிக்கிறார்கள்.  ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர்.  அவற்றைக் காக்கும் தேவதைகளை ஆவரண தேவதைகள் என்பார்கள்.  ஒன்பது அடுக்குகளைக்  கொண்ட இந்த ஸ்ரீ சக்கரம் பராசக்தி அமர்ந்து உள்ள  இடமாகும்.
  • ஸ்ரீ சக்கரத்தில் ஆவரணங்கள் என்று சொல்லக் கூடிய ஒன்பது சுற்றுக்கள் இருக்கின்றன.  இவற்றின் நடுவில் திரிகோணத்தின் மத்தியில் தான் ஸ்ரீ பராசக்தி என்று போற்றப்படும் பராசக்தியானவள் பிந்து என்கிற புள்ளியாகக் காட்சித் தருகிறாள். இந்த சக்கரத்தில் சாதாரண கோடுகளும் முக்கோணங்களும் தான் நம் கண்களுக்கு தெரியும். மற்ற தேவதைகளோ, ஸ்ரீபுரம் தேவியோ நமது கண்களுக்கு  புலப்படாமல் அதற்குள் உள்ளார்கள்.
  • பரமேஸ்வரி, பராசக்தி மற்றும் ஸ்ரீ லலிதாம்பிகை என்பவர்கள் அனைவருமே வேறு, வேறு பெயர்களில் அழைக்கப்படும்  பராசக்திதான்.

——–
-6-

धनुः पौष्पं मौर्वी मधुकरमयी पञ्च विशिखाः
वसन्तः सामन्तो मलयमरुदायोधनरथः ।
तथाप्येकः सर्वं हिमगिरिसुते कामपि कृपाम्
अपाङ्गात्ते लब्ध्वा जगदिद-मनङ्गो विजयते ॥

தனு: பௌஷ்பம் மௌர்வீ மதுகரமயீ பஞ்ச விஶிகா:
வஸந்த: ஸாமந்தோ மலயமருதாயோதனரத: ।
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபாம்
அபானகாத்தே லப்த்வா ஜகதித-மனனகோ விஜயதே॥

இந்த ஸ்லோகத்தை தினமும்
500 முறை 21 நாட்கள் தொடர்ந்து
பாராயணம் செய்தால் மழலை
செல்வம் இல்லாதவர்களுக்கு
கூட குழந்தை பிறக்கும்.

 ஹே பராசக்தி
ஹிமவானின் மகளே
, மன்மதனின் வில் கரும்பிலானது;  தேன் உண்ணும் வண்டுகள் அதன் நாண் கயிறாக  இருக்க, ஐந்து அம்புகளை கொண்டவனுக்கு, வசந்த காலம் தோழனாகவும், மலைய மலையில் இருந்து வரும் தென்றல் காற்று ரதமாகவும் உள்ளன. அத்தனை  சக்தி உள்ள  மன்மதனுக்குகாம பாணத்தினால் (அசோகா  மரம், வெள்ளை தாமரை, நீலத்  தாமரை, மல்லிகை மற்றும் மாங்காய்  மர மலர்களால் ஆன பாணங்கள்)  உலகத்தை வெற்றி கொள்ளஉன்னுடைய  கடைக் கண்ணில் இருந்து வெளிவரும் கருணை  தேவையாக உள்ளது.   

  • (விளக்கம்:
    பராசக்தியின் மேன்மையையும், சக்தியையும் எடுத்துக் காட்டவே இந்த ஸ்லோகத்திலும் காமதேவன் என வர்ணிக்கப்படும் மன்மதன் குறிப்பிடப்பட்டு உள்ளார்.   உருவம் அற்ற அவன் யுத்த பூமிக்கு செல்ல முடியாதவன் என்றாலும், அனைவரின் எண்ண அலைகளுடன் யுத்தம் செய்து அவர்களை தன் எண்ண அலைகளான மோகத்தில் வீழ்த்தி விடுகின்றான். அதற்காகவே அவன் படைக்கப்பட்டு உள்ளான்.
  • காட்டில் கிடைத்ததை உண்டு வாழும் தபஸ்விகள் முதல் முனிவர்கள் வரை அனைவரையும்  தனது சக்தியினால் ஆக்ரமித்துக் கொண்டு இருந்தவன் ஒரு முறை சிவபெருமானுக்கும் அப்படி ஒரு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றான். அதனால் கோபமுற்ற சிவபெருமான்  அவனை தனது நெற்றிக்  கண்ணால் எரித்து விட்டார். எரிந்து சாம்பலானவனுக்கு மீண்டும்  உயிர் கொடுக்குமாறு  அவனது மனைவியான ரதி வேண்டிக் கொள்ள சிவபெருமானும் அவளது வேண்டுகோளுக்கு இணங்கி அவனுக்கு சரீரம் இல்லாத உருவை கொடுக்கின்றார்.
  • அதனால் அவன் அனங்கன் எனும் பெயரையும் அடைகின்றான். அனங்கன் என்றால் அங்கங்கள் அற்றவன் என்பது அர்த்தம். ஆனால் அவன் எதற்காக படைக்கப்பட்டானோ, மற்றவர்களை மோக வலையில் வீழ்த்தும் அனங்க வித்தை எனும் அந்த அந்த சக்தியும் எரிந்து போய் விட்டதினால் அவற்றை மீண்டும் பெறுவதற்காக அவன்  ஸ்ரீ சக்கர பூஜை செய்தும், பஞ்சதசாக்ஷரி மகா மந்திரத்தை ஜபம் செய்தவண்ணமும் இருந்தான்.
  • அதனால்  மனம் மகிழ்ந்து போன பராசக்திஉடலே இல்லாத அவனுக்கு மனிதர்களின் மன எண்ணங்களை உடைத்து  மோக வலையில் சிக்க வைக்கும்  விதத்திலான ஆயுதங்களாக தேன் உறிஞ்சும் வண்டுகள் நாணாக உள்ள கரும்பிலான  வில்;  ஐந்து மலர்களால் ஆன அம்புகள், நண்பனாக வசந்த காலம் மற்றும் மலைய மலையில் இருந்து வீசும் காற்றானது தேராகவும் இருக்கும் வகையிலான சக்தியை  கொடுத்தாள்.  
  • அதைக் கொண்டே அவன் உலகில் உள்ள அனைவரையும் ஜெயிக்கின்றான். பராசக்தியின் கருணை இல்லாமல் அவனால் அந்த சக்திகளை பெற்று இருக்க முடியாது என்பதினால் அவனும் பராசக்தியை உபாசனை செய்பவர்களில்  ஒருவனாகி விட்டான்.
  • சாம்பலாகி விட்டவனுக்கு, சரீரமே இல்லாதவனுக்கு உயிரையும் கொடுத்து, அவனுடைய  பல்வேறு சக்திகளை மீண்டும் கொடுத்த தேவியைஸ்ரீ  சக்கர பூஜை மற்றும் பஞ்சதசாக்ஷரி மகா மந்திரத்தை ஜெபித்து  நாமும் மனதார ஆராதனை செய்தால், நமக்கு எத்தனை பெரிய பாக்கியங்களை அவள் தருவாள் என்பதை விளக்குவதே இந்த ஸ்லோகத்தின் தத்துவம் ஆகும்.

———
-7-

क्वणत्काञ्चीदामा करिकलभकुम्भस्तननता
परिक्षीणा मध्ये परिणतशरच्चन्द्रवदना ।
धनुर्बाणान् पाशं सृणिमपि दधाना करतलैः
पुरस्तादास्तां नः पुरमथितुराहोपुरुषिका ॥

க்வணத்காஞ்சீதாமா கரிகலபகும்பஸ்தனநதா
பரிக்ஷீணா மத்யே பரிணதஶரச்சந்த்ரவதனா ।
தனுர்பாணான் பாஶம் ஸ்ருணிமபி ததானா கரதலை:
புரஸ்தாதாஸ்தாம் ந: புரமதிதுராஹோபுருஷிகா ॥

இந்த ஸ்லோகத்தை தினமும்
1000 முறை 12 நாட்கள் தொடர்ந்து
பாராயணம் செய்தால்
எதிரிகள் அழிவார்கள்.

ஹே பராசக்தி,
உனது  இடுப்பு பகுதியில் தரித்து  உள்ள  ஒட்டியாணம் ஜல்
, ஜல் என சலங்கை ஒலி எழுப்பியவண்ணம் இருக்கமதம் பிடித்த யானையின் கும்பம் போன்ற தலைக்கு நிகரான பெருத்த தெய்வீக ஸ்தனங்களின் பாரத்தினால் சற்றே குனிந்து நினைப்பவளாகவும், மெல்லிய இடுப்பைக் கொண்டவளாகவும், பௌர்ணமி நிலவைப் (முழு நிலவு)   போன்ற மலர்ந்த  முகத்துடனும், நான்கு கைகளிலும் கரும்பிலான வில், புஷ்ப பாணங்கள், பாசக் கயிறு, மற்றும் ஈட்டியை ஏந்திய வண்ணம் அலங்காரமாக காட்சி தரும், பரமேஸ்வரனனின் ரூபிணியான பராசக்தி, உன் மீதான எங்கள் பக்தி என்றும் நிலைத்து நிற்கட்டும். 

  •  (விளக்கம்:
    இந்த ஸ்லோகத்தில் தேவி பராசக்தியின் ரூப வர்ணனை- அதாவது அவளது அழகின் மேன்மையைக் குறித்து கூறப்பட்டு உள்ளது. ஆதி சங்கரர் சிவபெருமானின் அவதாரம் என்று நம்பப்படுகிறது. அன்னையின் பக்தர்கள் அவளை உருவ வழிபாடு செய்வதினால்    அவளுடைய உருவ அழகை  அவர்களுக்காக அப்படியே வர்ணித்து உள்ளாரென்றே கருத வேண்டி உள்ளது. இடுப்பிலே அநேக இரத்தின மணிகள் அடங்கிய ஒட்டியாணம் கட்டி இருக்க, அந்த தேவியானவள் நடந்து வரும்பொழுது அவற்றில் இருந்து வெளிவரும்  ஜல், ஜல் என்ற சலங்கை ஒலி அனைவரையும் கட்டி இழுக்கும் வண்ணம் உள்ளது.
  • தேவியின் அங்க அழகுகளே  சமுத்திரிகாலக்ஷணம்  வெளி வந்திருக்க காரணமாக இருந்திருக்க வேண்டும் என்பதாக ஆதி சங்கரர் எண்ணி இருக்க வேண்டும். அவ்வளவு தெய்வீக அழகைக் கொண்ட தேவியின் தோற்றத்தின் காரணம் காமேஸ்வரன் எனப்படும் பரமசிவன் ஆகும். அவர்தான் சமுத்திரத்தைக் கடைந்து அமிர்தத்தை எடுத்ததை போல, தேவியின் பீஜ மந்திரங்களை தனது மனதில் கடைந்து கொண்டிருந்தபோது  அவளுடைய அழகிய தோற்றம் வெளி வந்தது.
  • பீஜ மந்திரம் என்பது ஒரு சமிஸ்கிருத வார்த்தை. அதன் பொருள் ‘விதை-மந்திரம்’ என்பதாகும்.   இது ஒரு தெய்வத்தின் அம்சங்களைக் குறிக்கும்  ஒரு ஓரெழுத்து மந்திரமாகும்.
  • சௌந்தர்யலஹரியின் பல ஸ்லோகங்கள் தேவியின் அங்க அழகை விவரமாக விவரித்து உள்ளன. அவை  வெளிப் பார்வைக்கு விரசமாக தோற்றம் அளிக்கலாம். ஆனால்  அதை படிக்கும் உண்மையான பக்தர்கள், தனது தாயார் ஸ்தானத்தில் உள்ள அன்னை பராசக்தி சாமுத்ரிகா லட்ஷணத்தை பிரதிபலிக்கின்றாள் என்பதை உணர்வார்களே தவிர அன்னையின் அழகை வேறு கோணத்தில் பார்க்க மாட்டார்கள்.
  • பராசக்தி இந்த ஜகத்திற்கே தாயார் என்பதினால், ஒரு பிறந்த குழந்தை தனது தாயாரின் அழகை அதன் மனதிற்குள்ளேயே, அது என்ன என்று தெரியாமல் ரசிப்பதை போலவேதான் ஆதி சங்கரரும் அன்னையின் உருவத்தை ஒரு குழந்தையாக இருந்தவாறு விளக்கி உள்ளார்.
  • உடலில் அமைந்துள்ள அங்கங்களின் அமைப்பைக் பற்றிக் கூறுவது தான் சாமுத்ரிகா சாஸ்திரம் (லட்ஷணம்). மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று சமுத்திரிகாலக்ஷணம் இலக்கணம் வகுத்துக் கூறும் இந்த சாஸ்திரம் அகஸ்திய முனிவரால் எழுதப்பட்டு உள்ளதாக கூறுகின்றார்கள்.
  • இதில் உள்ள விவரங்களைக் கொண்டுதான் தெய்வங்களின் சிலைகளை வடிவமைத்தவர்களும்   தெய்வ சித்திரங்களை  வரைந்தவர்களும் வடிவமைப்பு செய்துள்ளார்கள் என்று கூறப்படுகின்றது.

——–
-8-

सुधासिन्धोर्मध्ये सुरविटपिवाटीपरिवृते
मणिद्वीपे नीपोपवनवति चिन्तामणिगृहे ।
शिवाकारे मञ्चे परमशिवपर्यङ्कनिलयां
भजन्ति त्वां धन्याः कतिचन चिदानन्दलहरीम् ॥

ஸுதாஸிந்தோர்மத்யே ஸுரவிடபிவாடீபரிவ்ருதே
மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமணிக்ருஹே ।
ஶிவாகாரே மஞ்சே பரமஶிவபர்யனகனிலயாம்
பஜந்தி த்வாம் தன்யா: கதிசன சிதானந்தலஹரீம் ॥

இந்த ஸ்லோகத்தை தினமும்
1000 முறை 12 நாட்கள்
தொடர்ந்து பாராயணம் செய்தால்
பந்தங்களில் இருந்து விடுபடுவார்கள்.
அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.

ஹே பராசக்தி
அமிர்த கடலின் நடுவில்
, கல்ப விருட்ஷங்கள் சூழ்ந்துள்ள, மணித்வீப தீவின் நடுவில்சிந்தாமணி  ரத்தினத்தால் நிர்மாணிக்கப்பட்ட  அரண்மனையின் அந்தப்புரத்தில், சதாசிவம் எனும் தத்துவத்திலான ஆசனத்தின் மீது  ஆனந்தமயமான  கோலத்தில் அமர்ந்து உள்ளவளே, பூர்வ ஜென்மங்களில் புண்ணியம் செய்தவர்களால் மட்டுமே உன்னை வணங்க முடிகின்றது.

  • விளக்கம்:
    ஸ்ரீ சக்கரத்தில் மத்திய பாகத்தில் ஒன்பது த்ரிகோணங்கள் ஒன்றையொன்று வெட்டிக் கொண்டு உள்ளன. அவை அனைத்துமே யோனி ரூபம் எனப்படும். அவற்றில் நான்கு த்ரிகோணங்கள் சிவ ஸ்வரூபம் என்றும், ஐந்து த்ரிகோணங்கள் சக்தி ஸ்வரூபம் என்றும் அழைக்கப்படுகின்றன.
  •     
  • வெட்டிக் கொண்டு உள்ள  ஒன்பது த்ரிகோணங்கள்  மூலம் நாற்பத்து மூன்று முக்கோணங்கள் உண்டாயிருக்கும். மத்திய பிந்துவையும் கோணமாகவே சேர்த்து நாற்பத்து நான்கு என்றும் சொல்வதுண்டு. இந்த நாற்பத்து நான்கு கோணங்கள் ஆறு ஆவரணங்களாக அமைந்திருக்கின்றன.
  • இவற்றின் நடுவில் உள்ள பிந்துவில்தான் பராசக்தி அமர்ந்து உள்ளாள். அதுவே  மணித்வீபம் எனப்படுகின்றது.  அதில் அமர்ந்து உள்ள தேவியின் வர்ணனையே இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டு உள்ளது.  சாதகர்கள் அதில் உள்ள தேவியையே ஸ்ரீ சக்கர பூஜை செய்து ஆராதிக்கின்றார்கள்.
  • ஆலயங்களுக்கு சென்று தெய்வங்களை வணங்கி துதிப்பதை போல எவர் வேண்டுமானாலும் ஆலயங்களில் அல்லது வீடுகளில் பராசக்தியை   வணங்கி துதிக்க முடியும் என்றாலும், முறைப்படி அவளை ஆராதித்து  துதித்து பயனடைய  பெரும் அளவிலான பூர்வ ஜென்ம புண்ணியம் செய்து இருக்க வேண்டும்; முக்கியமாக சாதகர்கள் அவளை தியானிப்பதற்கு பூர்வ ஜென்ம புண்ணியம் நிச்சயமாக அவர்களுக்கு அமைந்து இருக்க வேண்டும்; அப்படிப்பட்ட பாக்கியம் அனைவருக்கும் கிடைக்காது  என்பதாகவே இந்த ஸ்லோகத்தில் ஆதி சங்கரர் கூறி உள்ளார்.

——-
-9-

महीं मूलाधारे कमपि मणिपूरे हुतवहं
स्थितं स्वाधिष्ठाने हृदि मरुतमाकाशमुपरि ।
मनोऽपि भ्रूमध्ये सकलमपि भित्वा कुलपथं
सहस्रारे पद्मे सह रहसि पत्या विहरसे ॥

மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்
ஸ்திதம் ஸ்வாதிஷ்டானே ஹ்ருதி மருதமாகாஶமுபரி ।
மனோபி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே ॥

இந்த ஸ்லோகத்தை தினமும்
1000 முறை 45 நாட்கள் தொடர்ந்து
பாராயணம் செய்தால் நீண்டநாள்
காணாமல் போனவர்கள் வீடு திரும்புவர்

ஹே பராசக்தி,
சகலத்துக்கும் அடிப்படை ஆதாரமான
, மூலாதார சக்கரத்தில் உள்ள பிருதிவி தத்துவத்தையும், மணிப்பூரா சக்கரத்தில் உள்ள  ஜலத் தத்துவத்தையும், ஸ்வாதிஸ்தான சக்கரத்தில்  உள்ள  அக்னி தத்துவத்தையும்அனாஹத சக்கரத்தில் உள்ள வாயு தத்துவத்தையும், விசுத்த சக்கரத்தில் உள்ள ஆகாச தத்துவத்தையும், ஆக்ஞா சக்கரத்தில் உள்ள மனஸ் தத்துவத்தையும், சுஷும்னா வழித் தடம் மூலம் கடந்து சென்று, சஹஸ்ரரா எனும் ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரை மலர் போன்ற சக்கரத்தில் சதாசிவனுடன் ஆனந்தமாக காட்சி தருகின்றாய்.

  • விளக்கம்:
    இந்த ஸ்லோகமானது, ஸ்ரீ சக்கர தியான வழிபாட்டை மேற்கொள்ளும் சாதகர்கள், சுஷும்னா நாடி மூலம்  பயணித்து, ஏழு சக்கர நிலைகளான முதுகுத்  தண்டின் அடிப் பகுதியில் உள்ள மூல தானா சக்கரம், தொப்பிளுக்கு கீழே  உள்ள ஸ்வாதிஸ்தான சக்கரம், வயிற்றுப் பகுதியில் உள்ள மணிப்பூரா சக்கரம், மார்பின் மையத்தில் உள்ள அனாஹத சக்கரம், தொண்டையில் அடிப் பகுதியில் உள்ள  விசுத்த சக்கரம், இரு புருவங்களுக்கு இடையே உள்ள ஆக்ஞா சக்கரம் போன்றவற்றை கடந்து தலை மேல் உள்ள சஹஸ்ரரா எனும் ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரை மலரில் குடி கொண்டுள்ள தேவியின் இருப்பிடத்தை அடைந்தவுடன், அங்கு  சதாசிவா எனும் பரமேஸ்வரனுடன் ஆனந்த மயமாக காட்சி தரும்  சுத்த பிரும்மனான அந்த தேவியின் ஸ்வரூபத்தைக் கண்டு அவளிடம் இருந்து பரிபூரண அருளை எப்படி அடைகின்றார்கள் என்பதை எடுத்துக் காட்டும் விதத்தில் அமைந்து உள்ளது.
  • சுஷும்னா என்பது முதுகெலும்பு தண்டு வடத்தின்  மூலம்  பாம்பைப் போல வளைந்து  வளைந்து ஒவ்வொரு சக்கரங்கள் வழியாக  நேராக ஓடுகிறது.
  • தியான நிலையில் உள்ள சாதகனின்  பிராணன் சுஷும்னா நாடியில் பயணிக்கும் போது, ​​அது வழியில் அனைத்து சக்கரங்களையும் உற்சாகப்படுத்துகிறது. உயர்ந்த சிந்தனை மற்றும் உணர்வுக்கு காரணமான மனதின் செயலற்ற பகுதிகளைத் தூண்டுகிறது. எனவே, சுஷும்னா என்பது முக்தி அல்லது அறிவொளிக்கான பாதை என்று அறியப்படுகிறது.

———
-10-

सुधाधारासारैश्चरणयुगलान्तर्विगलितैः
प्रपञ्चं सिञ्चन्ती पुनरपि रसाम्नायमहसः ।
अवाप्य स्वां भूमिं भुजगनिभमध्युष्टवलयं
स्वमात्मानं कृत्वा स्वपिषि कुलकुण्डे कुहरिणि ॥

ஸுதாதாராஸாரை: சரணயுகலாந்தர்விகளிதை:
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புநரபி ரஸாம்நாயமஹஸ: ।
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிபமத்யுஷ்டவலயம்
ஸ்வம் ஆத்மாநம்க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி ॥

இந்த ஸ்லோகத்தை தினமும்
1000 முறை 6 நாட்கள் தொடர்ந்து
பாராயணம் செய்தால் ஆண்மை
மற்றும் உடல் வலிமை பெருகும்

ஹே பராசக்தி
மண்டலத்தில் இருந்துக் கிளம்பி
, சூஷ்ம  துவாரங்களைக் கொண்ட தாமரைக் கிழங்குகளை போன்ற ஆதார சக்கரத்தில் (மூலாதார சக்ரா), குண்டலம் போன்ற பாம்பின் தோற்றத்தில், கண்களுக்கு தெரியாத நிலையில்யோக நித்திரையில் ஆழ்ந்து உள்ள உனது  திருவடிகளிலிருந்து பெருகி வரும் அமிர்த வெள்ளமானது, இந்த உலகில் உள்ள எழுபத்திரண்டாயிரம்  உயிர் நாடிகளை நனைக்கின்றது. 

  • (விளக்கம்:
    இங்கு குண்டலம் என்பது சுருண்ட சக்தி அல்லது தூங்கும் பாம்பின் தோற்றத்தைக்  குறிக்கின்றது. ஆண்களின் தலைமுடி மீதுதான்  சந்திர மண்டலம் உள்ளது என்பதாக ஆன்மீகப் பெரியோர்கள் கூறுவார்கள். அதுவே சஹஸ்ரரா சக்கரம்  என்பதின் மேல் பகுதியில்  உள்ளது. அதற்கு  சான்று ‘பித்தா பிறை சூடி என்று போற்றப்படும்’ பரமசிவனின் முடியில் உள்ள சந்திரன் ஆகும்.
  • அந்த சந்திர மண்டலமே ஸ்ரீ சக்கரம் என்பதாக கூறப்படுகின்றது. அதில் உள்ள ஆயிரம் தளங்களைக் கொண்ட தாமரை மலரின் நடுவில் உள்ள ஆதார சக்கரம் என்பதில் உள்ள பிந்துவில்தான் தேவி பராசக்தி காணப்படுகிறாள்.
  • ஸ்ரீ சக்கர பூஜையில் மகிழ்வுறும் தேவியின் பாதங்களில் சமர்ப்பிக்கப்படும் ஜலமானது, அமிர்தம் போன்ற சக்தியை வெளிப்படுத்தி சரீரத்தின் உள்ளே உள்ள எழுபத்திரண்டாயிரம்  உயிர் நாடிகளை தட்டி எழுப்புகின்றபோது, ஸ்ரீ சக்கர உபாசனை செய்யும் சாத்வீகர்கள் மனோபலம், வாக்கு பலம் போன்ற அனைத்து பலத்தையும்  பெற்று சிரஞ்சீவிகள் ஆகிறார்கள் என்பது தத்துவம். இந்த தத்துவத்தை வெளிப்படுத்துவதே இந்த ஸ்லோகம்  ஆகும்.
  • தியான நிலையின் உச்ச சக்தியினால், மண்டை ஓட்டில் வெப்பமும் அழுத்தமும் தோன்றுகின்றது அப்போது பெருமூளையில் ‘மூளை தண்டு வட  திரவம்’ உருகி தொண்டையில் பாய்கிறது.  அது தொண்டை மூலம் விழுங்கப்படும்போது உடலில் உள்ள  72,000 நாடிகள் வழியாக பாய்ந்து சென்று, முழு உடலுக்கும் ஒரு பளபளப்பைத் தருகிறது. அதே சமயத்தில் மண்டை ஓட்டில் ‘மூளை  தண்டு வட திரவம்’ மீண்டும் உற்பத்தி ஆகி விடுகின்றது.

——-
-11-

चतुर्भिः श्रीकण्ठैः शिवयुवतिभिः पञ्चभिरपि
प्रभिन्नाभिः शम्भोर्नवभिरपि मूलप्रकृतिभिः ।
चतुश्चत्वारिंशद्वसुदलकलाश्रत्रिवलय- (त्रयश्चत्वारि)
त्रिरेखाभिः सार्धं तव शरणकोणाः परिणताः ॥

சதுர்பி ஶ்ரீகண்டை: ஶிவயுவதிபி: பஞ்சபிரபி
ப்ரபின்னாபி: ஶம்போர்னவபிரபி மூலப்ரக்ருதிபி: ।
சதுஶ்சத்வாரிம்ஶத்வஸுதலகலாஶ்ரத்ரிவலய (திரயஸ்சட்வரி)
த்ரிரேகாபி: ஸார்தம் தவ ஶரணகோணா: பரிணதா: ॥

இந்த ஸ்லோகத்தை தினமும்
1000 முறை 8 நாட்கள் தொடர்ந்து
பாராயணம் செய்தால்
புத்ர யோகம் கிடைக்கும்

ஹே பராசக்தி
ஸ்ரீ சக்கரத்தில் சிவ ஸ்வரூபமாக நான்கு சக்கரங்களும்
, சக்தி ஸ்வரூபமாக ஐந்து  சக்கரங்களும்  ஒன்றுடன் ஒன்று  இணைந்து ஒன்பது சக்கரங்களாக காணப்படநீ வசிக்கும் பிந்து* ஸ்தானத்தை சுற்றி அஷ்ட தளங்கள்(எட்டு),  பதினாறு சோடச தளங்கள், மூன்று த்ரிவலய தளம், த்ரி ரேகைகள் எனப்படும் மூன்று ரேகைகள் மற்றும் நான்கு திக்குகளிலும், வாசல்களைக் கொண்ட பூபுத்ரயம் எனப்படும் நான்கு சுவர்கள்  என  ஸ்ரீ சக்கரம்  நாற்பத்தி நான்கு தத்துவங்களைக் குறிக்கின்றன. (*பிந்துவையும் சேர்த்தே நாற்பத்தி நான்கு தத்துவங்களைக் கொண்டது ஸ்ரீ சக்கரம்

  • விளக்கம்:
    இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ சக்கரத்தின் ஸ்வரூபம் விளக்கப்பட்டு உள்ளது. சிவ ஸ்வரூபமாக உள்ள நான்கு சக்கரங்களும், சக்தி ஸ்வரூபமாக  உள்ள ஐந்து சக்கரங்களும் முக்கோண வடிவில் ஒன்றை ஒன்று பிளந்து கொண்டு உள்ள நிலையில் காணப்படுகின்றன. அவற்றை  யோனிகள் என சாதகர்கள்  அழைக்கின்றார்கள்.
  • ஒன்றையொன்று வெட்டிக் கொண்டு உள்ள ஒன்பது த்ரிகோணங்கள்  மூலம் நாற்பத்து மூன்று முக்கோணங்கள் உண்டாயிருக்கும். மத்திய பிந்துவையும் கோணமாகவே சேர்த்து நாற்பத்து நான்கு என்றும் சொல்வதுண்டு. இந்த நாற்பத்து நான்கு கோணங்கள் ஒன்பது  ஆவரணங்களாக அமைந்திருக்கின்றன.
  • ஆவரணம் என்றால் மறைப்பு, ஆடை, சட்டை, கோட்டை என்று பல பொருள் இருந்தாலும் இங்கு கோட்டை என்பதாகவே அர்த்தம் கொள்ள வேண்டும் .
  • இவற்றின் நடுவில் உள்ள பிந்துவில்தான் ஸ்ரீ பராசக்தியானவள் காமேஸ்வரி எனும் பெயரில் பிந்துவாக, காமேசுவரி-காமேஸ்வரன் எனும் தோற்றத்தில் சிவனுடன் ஒன்றியவளாக எழுந்தருளியிருக்கிறாள்.
  • இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ சக்கரத்தின் வடிவமே விளக்கப்பட்டு உள்ளது. சாதாரணமான எந்த ஒரு யந்திரத்திற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. யந்திரங்கள் என்பது ஒவ்வொரு தெய்வத்தின் அல்லது அந்த தெய்வத்தின் ஆராதனை தேவதைகளின் சக்தியை அடக்கிக் கொண்டு உள்ளவை ஆகும் என்பதினால்  அந்தந்த தெய்வத்தின் பெயரைக் கொண்டே யந்திரங்கள் அழைக்கப்படுகின்றன.
  • யந்திரம் என்பது ஒரு தேவதையின் இருப்பிடமாக உள்ளது. ஒவ்வொரு தெய்வத்திற்கும்  பிரத்தியேகமாக ஒவ்வொரு யந்திரம் உண்டு. ஆனால்  சிவ பூசை மற்றும் விஷ்ணு பூசை  செய்பவர்கள் யந்திரங்களை வைத்து ஆராதிப்பது இல்லை. காரணம் அவர்களுக்கான சக்தி யந்திரங்கள் சாஸ்திரங்களில் கூறப்படவே இல்லை. சிவபெருமானை லிங்க வடிவிலும், விஷ்ணு பூஜையை,  சாளக்கிராமத்தை  வைத்தும் பூசை செய்கின்றார்கள்.
  • ஸ்ரீ சக்கரம் பராசக்தி யந்திரம் என அழைக்கப்படாமல் ஸ்ரீ சக்கரம் என்பதாகவே அழைக்கப்படுகின்றது. பல்வேறு ரூபங்களில் உள்ள தேவிகளுக்கும் ஸ்ரீ சக்கரத்தை வைத்தே பூசைகள் செய்யப்படுகின்றன என்பதின் காரணம் பல்வேறு ரூபங்களில் உள்ள அனைத்து தேவிகளுமே பராசக்தியின் நிழல் தெய்வங்களே ஆகும்.  இது தான் ஸ்ரீ சக்கரத்தின் சிறப்பு.
  • ஸ்ரீ சக்கரம் என்பது ஒன்பது ஆவரணம் என்னும் கோட்டைகளைக் கொண்டது. அவை ஒன்பது ஆவரண தேவதைகளினால் காவல் காக்கப்படுகின்றன.
  • முதலாவது ஆவரணம் என்பது ‘த்ரைலோக்ய மோகன சக்கரம்’ அல்லது ஸ்ரீபுரம் என்ற பெயரைக் கொண்டது.
  • இரண்டாம் ஆவணம் பதினாறு (16) இதழ் தாமரை தளங்களைக் கொண்ட சோடச தளம் அல்லது கலாச்ரம் எனப்படுவது ஆகும்.
  • மூன்றாவது ஆவரணம் எட்டு தாமரை இதழ்களைக் போன்ற தளத்தைக் கொண்ட வசு எனப்படும் ‘சர்வ சம்ஷோஷன சக்ரா’ என அழைக்கப்படுகின்றது.
  • நான்காவது ஆவரணம்   எனப்படும் ‘ஸர்வ ஸௌபாக்ய தாயக சக்ரம்’- பதினான்கு (14) சிறு முக்கோணங்களால் சூழப்பட்ட தளம் ஆகும்.
  • ஐந்தாவது ஆவரணத்தின் பெயர் ‘சர்வார்த்த சாதக சக்கரம்’ என்பதாகும். இதில் மேலும் கீழும் நோக்கிய நிலையில் பத்து முக்கோணங்கள் உள்ளன.
  • ஆறாவது ஆவரணமும் பத்து முக்கோணங்களைக் கொண்ட ‘சர்வ ரக்சாகரச் சக்கர’ தளம் ஆகும்.
  • ஏழாவது  ஆவரணம் ‘சர்வ ரோஹ சக்கரம்’ என்று கூறப்படும்.
  • எட்டு முக்கோண தளங்களைக் கொண்ட எட்டாவது ஆவரணத்திற்கு ‘ஸர்வ ஸித்திப்ரத சக்கரம்’  என்று பெயர்.
  • ஒன்பதாவது ஆவரண தளத்தின் உள்ளே மையப் பகுதியில் புள்ளி வடிவில் இருப்பதே ஸ்ரீபுரம் என்பது. அதையே பிந்து ஸ்தானம் என்கின்றார்கள். இந்த பிந்துவில்தான் பராசக்தி, காமேஸ்வரி எனும் பெயரில் பிந்துவாக, சிவ-காமேசுவரியாக, காமேஸ்வரன் எனும் சிவனுடன் ஒன்றியவளாக எழுந்தருளியிருக்கிறாள்.
  • இந்த பிந்து ஸ்தானத்தை ‘ஸ்ரீ சக்ராங்கித பிந்து மத்யவஸதீம்’ என்பதாக ஆதி சங்கரர் அருளிய மீனாட்சி பஞ்சரத்தினம் எனும் ஸ்லோகத்தில் குறிப்பிட்டு உள்ளார். மதுரை மீனாட்சி அம்மனின் பரிபூரணமான அருளை பெறுவதற்காக ஸ்ரீ ஆதி சங்கரரால் அருளப்பட்டதுதான் ஸ்ரீ மீனாட்சி பஞ்சரத்னம். பஞ்சரத்னம் என்றால் ஐந்து விதமான ரத்னங்கள் அல்லது ஆபரணங்கள் என்று பொருள்.

——–
-12-

त्वदीयं सौन्दर्यं तुहिनगिरिकन्ये तुलयितुं
कवीन्द्राः कल्पन्ते कथमपि विरिञ्चिप्रभृतयः ।
यदालोकौत्सुक्यादमरललना यान्ति मनसा
तपोभिर्दुष्प्रापामपि गिरिशसायुज्यपदवीम् ॥

த்வதீயம் ஸௌந்தர்யம் துஹினகிரிகன்யே துலயிதும்
கவீந்த்ரா: கல்பந்தே கதமபி விரிஞ்சிப்ரப்ருதய: ।
யதாலோகௌத்ஸுக்யாதமரலலனா யாந்தி மனஸா
தபோபிர்துஷ்ப்ராபாமபி கிரிஶஸாயுஜ்யபதவீம் ॥

இந்த ஸ்லோகத்தை தினமும்
1000 முறை 45 நாட்கள் தொடர்ந்து
பாராயணம் செய்தால் சிவன் அருள்
கிட்டும், ஊமை பேசும் சக்தி பெறுவான்

ஹே பராசக்தி,
பனி சூழ்ந்த மலையின் மன்னனின் மகளே
, உன் அழகை மேற்கோள் காட்டி வர்ணிக்க முடியாமல் மகா கவிகளான  பிரும்மா போன்றவர்கள்  கூட தவிக்கிறார்கள்.  உனது அழகை ரசிக்க  ஆசைப்பட்ட  ரம்பை, ஊர்வசி போன்ற  தேவதைகள் கூட விரதங்களை அனுஷ்டித்தும், உன் அழகை காண முடியாமல் போனதினால் தமது மனதிலேயே சிவஸாயுஜ்யத்தை ஏந்திக் கொண்டு உன்னைக் காண முயல்கிறார்கள்.

  • (விளக்கம்:
    இந்த ஸ்லோகம் தேவியின் அழகு எவ்வாறு எவராலும் எளிதில் கூற முடியாத அளவிலான சௌந்தர்ய ரூபமாக இருந்தது என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.
  • மாபெரும் தேவலோக மஹானுபாவர்களான பிரும்மா, விஷ்ணு மற்றும் இந்திரன் போன்றவர்களால் கூட தேவியின் அழகை எதனுடனும் ஒப்பிட்டு கூற முடியாத அளவிலான அழகை தேவி கொண்டு இருந்தாள்.
  • அதைக் கண்ட அழகிகளிலும் மேலான அழகைக் கொண்ட தேவலோக அழகிகளான ரம்பை மற்றும் ஊர்வசி போன்றவர்களும் தேவியின் அழகைக் காண ஆசைக் கொண்டார்கள். ஆனால் அவர்களால் தேவியின் அருகில்  சென்று அவளது அழகை சற்று நேரம் கூட காண முடியாத வகையில்  இருந்தது.  அதன் காரணம் அவர்கள் தம் அழகுடன் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டே இருக்கும்போதே தேவியின் அழகு மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே  இருந்தது என்பதே ஆகும்.
  • அதனால் இறைவனின் திருமேனியில் உள்ளேயே பிரவேசம் புரிந்து, திருமேனியிலேயே குடி கொண்டிருந்து, தேவியின் அழகைக் காண முயன்று, அதற்கான சிவஸாயுஜ்யம் போன்ற விரதங்களை அனுஷ்டித்தும் தோல்வி அடைந்து, தமது மனதிலேயே ஸாயுஜ்யத்தை ஏந்திக் கொண்டு  தேவியின் அழகை மனக் கண்ணில் காண முயன்றார்கள்.   
  • ஸாயுஜ்யம் என்பது இறைவனின் திருமேனியில் உள்ளேயே பிரவேசம் புரிந்து, திருமேனியிலேயே குடி கொண்டிருத்தல் என்பது ஆகும்.
  • சிவஸாயுஜ்யம் என்பது, சிவபெருமானின் திருமேனியில் உள்ளே பிரவேசம் புரிந்து, திருமேனியிலேயே குடி கொண்டிருத்தல் ஆகும். இந்த நிலை ஒருவரை முடிவாக கைலாயத்திற்கு அனுப்பி வைக்கும், கடவுளுடன் இணையும் நிலையைக் குறிக்கும். சிவஸாயுஜ்யம் குறித்து   முப்பதாவது (30) ஸ்லோகத்திலும் கூறப்பட்டு உள்ளது.

——
-13-

नरं वर्षीयांसं नयनविरसं नर्मसु जडं
तवापाङ्गालोके पतितमनुधावन्ति शतशः ।
गलद्वेणीबन्धाः कुचकलशविस्रस्तसिचया
हठात् त्रुट्यत्काञ्च्यो विगलितदुकूला युवतयः ॥

நரம் வர்ஷீயாம்ஸம் நயனவிரஸம் நர்மஸு ஜடம்
தவாபானகாலோகே பதிதமனுதாவந்தி ஶதஶ: ।
கலத்வேணீபந்தா: குசகலஶவிஸ்ரஸ்தஸிசயா
ஹடாத் த்ருட்யத்காஞ்ச்யோ விகலிததுகூலா யுவதய: ॥

இந்த ஸ்லோகத்தை தினமும்
1000 முறை 6 நாட்கள் தொடர்ந்து
பாராயணம் செய்தால்
காதல் வெற்றி அடையும்

ஹே பராசக்தி
உனது கடைக் கண் பார்வையின் அருளை பெற்றவன்   கிழவனோ
, அவலக்ஷணமானவனோ, சக்தியற்றவனாகவோ காம-ரசத்தை  அறியாதவனாக இருந்தாலும் கூட, அவனை மன்மதனாகவே எண்ணி, வெட்கத்தை துறந்த இளம் பெண்கள்அவிழ்ந்த தலை முடியோடு,  தோளில் இருந்து கீழே விழுந்த சேலையையோடு, இடுப்பில் கட்டி இருந்த ஒட்டியாணம் மற்றும் பட்டுத் துணி அவிழ்ந்து விழுந்ததைக்  கூட கவனிக்காமல் அவன் பின் ஓடுவார்கள்.

  • (விளக்கம்:
    இந்த ஸ்லோகத்தின் மூலம் தேவியின் கடைக்கண் பார்வையின் அருளை பெற்றவன் வாழ்க்கையில் எத்தனை பாக்கியத்தைக் பெறுகின்றான் என்பது வெளிப்படுகின்றது.
  • இதில் கூறப்பட்டுள்ள உதாரணங்கள் பெண்களின் காம ரசத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்து உள்ளவை அல்ல.
  • எவன் ஒருவன் வெளிப் பார்வைக்கு கிழவனாகவோ, அவலக்ஷணமானவனாகவோ, சக்தியற்றவனாகவோ, காம ரசத்தை  அறியாதவனாகவோ  காணப்படுகின்றானோ, பூர்வ ஜென்மங்களில் அவன் செய்து இருந்த புண்ணியங்களினாலும்,   அடுத்தடுத்த  ஜென்மங்களில்  தேவியின் அருளினால் அவன் பெறும்  குணாதிசயங்களினாலும்,  மூன்று லோகங்களிலும் உள்ள பெண்களால், அவனும்  மன்மதனாகவே பார்க்கப்பட்டு, அவன் மீது மோகம் கொள்ளும் அளவிலான பாக்கியத்தை அடைகின்றான்.
  • இந்த ஸ்லோகத்தில் மன்மதனைப் போல என்பதை, குணாதிசயங்களில் அனைவரையும் விட மேன்மையானவன் என்பதாகவும்,   மோகம் என்பதை  சமூகத்தில்  பெரும் மரியாதை பெற்றவனாக இருப்பான்  என்பதாகவும் பார்க்க வேண்டும்.
  • இதில் இருந்தே தேவியின் கண் பார்வையினால் கிடைக்கும் அருள் எத்தகைய சக்தி வாய்ந்தது  என்பது விளங்கும். தேவியின் கண்பார்வை பட்டதுமே கிடைக்கும் அருளின் நிலையே இப்படி என்றால் தேவியின் முழு அருளும் கிடைத்தவனின் நிலை   எத்தனை மேன்மையானதாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கக் கூட முடியுமா?

———
-14-

क्षितौ षट्पञ्चाशद् द्विसमधिकपञ्चाशदुदके
हुताशे द्वाषष्टिश्चतुरधिकपञ्चाशदनिले ।
दिवि द्विष्षट्त्रिंशन्मनसि च चतुष्षष्टिरिति ये
मयूखास्तेषामप्युपरि तव पादाम्बुजयुगम् ॥

க்ஷிதௌ ஷட்பஞ்சாஶத் த்விஸமதிகபஞ்சாஶதுதகே
ஹுதாஶே த்வாஷஷ்டிஶ்சதுரதிகபஞ்சாஶதனிலே ।
திவி த்விஷ்ஷட்த்ரிம்ஶன்மனஸி ச சதுஷ்ஷஷ்டிரிதி யே
மயூகாஸ்தேஷாமப்யுபரி தவ பாதாம்புஜயுகம் ॥

இந்த ஸ்லோகத்தை தினமும்
1000 முறை 45 நாட்கள் தொடர்ந்து
பாராயணம் செய்தால் வறுமை விலகும்

ஹே பராசக்தி
பிருதிவி தத்துவமான மூலாதார சக்கரத்தில்
56  ஒளிக் கதிர்கள் (கிரணங்கள்), ஜல தத்துவமாகிய மணிபூரகம் சக்கரத்தில்  52 ஒளிக் கதிர்கள், அக்னி தத்துவமாகிய ஸ்வாதிஸ்தான சக்கரத்தில் 62 ஒளிக் கதிர்கள், வாயு தத்துவமாகிய அனாஹத சக்கரத்தில்  54 ஒளிக் கதிர்கள், ஆகாச தத்துவமாகிய விசுத்தி சக்கரத்தில் 72 ஒளிக் கதிர்கள்மனஸ் தத்துவமாகிய ஆக்ஞா சக்கரத்தில் 64 ஒளிக் கதிர்கள்,  என்று மொத்தமாக 360 ஒளிக் கற்றைகள்  ஒளி வீசிக் கொண்டு இருந்தாலும், அவற்றை எல்லாம் தாண்டி  சஹஸ்ரரா கமலத்தின் மத்தியில் உள்ள உனது  பாதங்கள் அதிக ஒளி வீசியபடி உள்ளன.

  • (விளக்கம்:
    இந்த ஸ்லோகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள கிரணங்கள் என்பதின் அர்த்தம் ஒளிக் கதிர் மற்றும் காலத்தைக் குறிப்பதாக உள்ளது. காலத்தை மறைமுகமாக குறிப்பிட்டே அதை ஒளிக்  கதிர்கள் அல்லது கிரணங்கள் எனக் கூறப்பட்டு உள்ளது.
  • மூலாதாரம், ஸ்வாதிஸ்தானம், மணிபூரகம், அனாஹத, விசுத்தி, அஜ்ன போன்றவற்றில்  கூறப்பட்டு உள்ள  கிரணங்கள் எனப்படும்  கால நாட்கள் முறையே வசந்த காலம், மழைக் காலம், கோடைக்  காலம், இலையுதிர் காலம், பனிக் காலம் மற்றும் குளிர் காலத்தைக் காட்டும் வகையில் 360  நாட்களாக உள்ளன.  ஒவ்வொரு காலமும் குறிப்பிட்ட அளவிற்குள்தான்  அடங்கி உள்ளன.
  • ஆனால் தேவியின் திருப்பாதங்கள் ஒளி வீசும் கிரணங்களின் கால அளவு இந்த ஸ்லோகத்தில் குறிப்பிடவில்லை என்பதின் காரணம் பராசக்தி  கால தேசங்களுக்கும், நேரத்திற்கும்  அப்பாற்பட்டு நிற்பவள் என்பதே ஆகும். இந்த பிரபஞ்சத்தை  படைத்தவளுக்கு காலமும் நேரமும் இருக்க முடியுமா?
  • சுருக்கமாக கூறினால் பராசக்தியின் தாமரை பாதங்களிலிருந்து 360 கதிர்கள் உருவாகின்றன, அவை   நெருப்பு, சூரியன் மற்றும் சந்திரன் வழியாக இந்த உலகில் பிரதிபலிக்கின்றன. கதிர்கள் என்பது ஒளியை மட்டுமல்ல, ஆற்றல்  சக்தியையும்  குறிக்கிறது.
  • பிரபஞ்சம் இயங்கத் தேவையான உயிர் சக்தியே அண்ட சக்தி அல்லது ஆற்றல் சக்தியாகும். அதை தருவதே அன்னையின் பாதங்களில் இருந்து வெளியாகும் ஒளிக் கதிர் சக்தியாகும்.   நமது கண்களுக்கு தெரியாத அந்த சக்தி  அனைத்து  இடங்களிலும் வியாபித்து உள்ளது. பிரபஞ்சத்தில், விண்மீன் திரள்களுக்கு இடையில்   மற்றும் விண்வெளியில் உள்ளது.  அண்டத்தில்  உள்ள ஆற்றல்  சக்தி  மிகவும் சக்தி வாய்ந்தது,   அதனால் எதையும் வெளிப்படுத்த முடியும், இது நிரந்தரமானது மற்றும் அழிக்க முடியாதது. நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்துமே  அண்டத்தில் உள்ள ஆற்றல் சக்தியால்தான் இயங்குகின்றன.  இது நாம் வாழ்வதற்கான சக்தியைக் கொடுத்து   பிரபஞ்சத்திலும் சமநிலையை பராமரிக்கும் ஆற்றல் பெற்றதாகும்.

———-
-15-

शरज्ज्योत्स्नाशुद्धां शशियुतजटाजूटमकुटां
वरत्रासत्राणस्फटिकघटिकापुस्तककराम् ।
सकृन्न त्वा नत्वा कथमिव सतां संन्निदधते
मधुक्षीरद्राक्षामधुरिमधुरीणाः भणितयः ॥ or फणितयः

ஶரஜ்ஜ்யோத்ஸ்னாஶுத்தாம் ஶஶியுதஜடாஜூடமகுடாம்
வரத்ராஸத்ராணஸ்படிககடிகாபுஸ்தககராம் ।
ஸக்ருன்ன த்வா நத்வா கதமிவ ஸதாம் ஸம்ன்னிதததே
மதுக்ஷீரத்ராக்ஷாமதுரிமதுரீணா: பணிதய: ॥

இந்த ஸ்லோகத்தை தினமும்
1000 முறை 45 நாட்கள் தொடர்ந்து
பாராயணம் செய்தால் அறிவாற்றலும்,
கவன சக்தியும் அதிகரிக்கும்

ஹே பராசக்தி
இளவேனில் காலத்துச் சந்திரனைப் போன்று அலங்கரிக்கப்பட்டு உள்ள உனது தலை முடியில்
, நவரத்தினங்களில்  ஆன  கிரீடத்தை  தரிப்பவள். ஸ்படிக மாலையினையும், புத்தகத்தையும் இரண்டு கரங்களில் ஏந்திக் கொண்டு, மற்ற  இரண்டு கரங்களினால்  அபய மற்றும் வர முத்திரைகளைக் காட்டியவாறு காட்சி தரும் உன்னை,     ஒரு தடவை மட்டுமே வணங்கினாலும் போதும், அவர்களால்  தேன், பால், திராக்ஷை போன்ற இனிப்புகளை விட அதிக இனிப்பை  தரும் சொல் வளங்களை ஏன் பெற இயலாது?

  • (விளக்கம்:
    இங்கு பராசக்தி எனும் பராசக்தியின் தோற்றத்தின் மகிமை வெளிப்படுத்தப்பட்டு உள்ளது. அவளுடைய வெண்ணிறத்  தோற்றம் அமைதியான சத்வ குணத்தைக் குறிக்கின்றது.     தலையில்  உள்ள பிறை சந்திரனோ, அந்த தேவிக்குள்,  தலையில் பிறையை சூட்டி உள்ள பரமசிவனும் அடங்கி உள்ள உண்மையை வெளிப்படுத்துகின்றது. அதனால்தானோ என்னவோ ஸ்ரீ சக்கரத்தில் உள்ள தேவி காமேஸ்வரி- காமேஸ்வரனாக தோற்றம் தருகின்றாள்.
  • தேவியின் பல வடிவங்களில் ஒன்றான, இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டு உள்ள தோற்றத்தில் (சரஸ்வதி அம்சத்தில்), அவள் காட்டும் முத்திரைகள், அவள் தரும் அபயத்தையும், அருளையும் காட்டுகின்றன.
  • ஆதி சங்கரர் இயற்றிய வேறு சில ஸ்லோகங்களில்  இந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளார். அவற்றில் சில:
  • தேவி புஜங்கம்:- இது ஸ்ரீ சக்ரதேவி எனும் பராசக்தியை நோக்கி செய்யப்படும் பிரார்த்தனை. இது அவளது  பல்வேறு வடிவங்களையும் பண்புகளையும் புகழ்ந்து கூறும் ஸ்லோகம் ஆகும். அதில் அவர் கூறி உள்ளது:- ‘‘ஒரு முறையாவது  தேவியிடம் பிரார்த்தனை செய்பவர்களுக்கு,  பிரகாசமான நெக்லஸ் மற்றும் அற்புதமான ஆடைகளை அணிந்து கொண்டும்,  கையில் ஜெபமாலை மற்றும் புத்தகத்தை ஏந்திக் கொண்டும்  காட்சி அளிக்கும்  கருணையுள்ள பராசக்தி, கல்வியின் தெய்வம் கொடுக்கக் கூடிய  அளவைவிட  அதிகமான அறிவாற்றலை வழங்குகிறாள். – தேவி புஜங்கம், ஸ்லோகம்-13’’
  • கல்யாண விருஷ்டி ஸ்தவம் என்பது ஆதி சங்கரர் இயற்றி உள்ள மற்றொரு ஸ்லோகம் ஆகும் . இது தேவி பராசக்தியின் அருளைப் வேண்டுவதற்காக இயற்றப்பட்டு உள்ளது. அதில் அவர் கூறுகிறார்:- ‘‘தேவி, உனது  தாமரைப் பாதங்களில் பிரார்த்தனை செய்வது, ஒருவரை நன்கு கற்றறிந்தவர்களாக  ஆக்குகிறது, மேலும் அவர்களை வாக்கு வன்மை கொண்டவர்களாக மாற்றுகின்றது’’- கல்யாண விருஷ்டி ஸ்தவ -ஸ்லோகம் 7.
  • மற்ற இரு கைகளில் ஒன்றில் புத்தகத்தைக் காட்டுவது தன்னை வணங்குபவர்கள் பெரும் அறிவு பெற்ற ஜீவிகளாக இருப்பார்கள் என்பதையும், இன்னொரு கையில் உள்ள ஸ்படிக மாலை மூலம் தன்னை மந்திர ஜெபத்தினால் ஆராதனை செய்து வந்தால் தனது ஸ்வரூபம் அவர்களுக்கு புலப்படும் என்பதை  கூறுவது போல உள்ளது. நவராத்திரியில் பராசக்தியான துர்கா பரமேசுவரியையும், மகாலக்ஷ்மியையும், ஸரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம்.
  • மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், முப்பத்து முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும், அனைத்துமாக உள்ளவள் ஒரே பராசக்திதான். இந்த உண்மையைத்தான் லலிதா ஸஹஸ்ரநாமத்தில் பராசக்தியை வர்ணிக்கும்போது அவளே சிருஷ்டி செய்பவள் (ஸ்ருஷ்டிகர்த்ரீ – ப்ரஹ்ம ரூபா), அவளே பரிபாலனம் செய்பவள் (கோப்த்ரீ – கோவிந்த ரூபிணீ), அவளே சம்ஹாரம் செய்பவள் (ஸம்ஹாரிணீ – ருத்ரரூபா) என்று சொல்கிறது.
  • லலிதாம்பிகையாகவும், துர்க்கையாகவும் இருக்கிற பராசக்திதான் மஹாலக்ஷ்மியாகவும், ஸரஸ்வதியாகவும் இருக்கின்றாள். லக்ஷ்மி அஷ்டோத்தரத்தில் ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:’ என்று வருகிறது. ஸரஸ்வதி அஷ்டோத்தரத்திலும் இப்படியே ‘பிரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நம:’ என்று வருகிறது. படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் என அனைத்தையும் செய்வது ஒரே சக்திதான் என்று இந்த நாமங்கள் நமக்கு நன்றாக உணர்த்துகின்றன. ஒரே பராசக்திதான் வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக் கொண்டு வெவ்வேறு காரியங்களைச் செய்கிறது, ஸரஸ்வதியாகி ஞானம் தருகிறது

{நன்றி : Sage of Kanchi – https://mahaperiyavaa.blog/2018/05/09/200-devis-of-navarathri-by-maha-periyava/ } and  http://isatsang.blogspot.com/2015/06/soundarya-lahari-sloka-15.html 

——–
-16-

कवीन्द्राणां चेतःकमलवनबालातपरुचिं
भजन्ते ये सन्तः कतिचिदरुणामेव भवतीम् ।
विरिञ्चिप्रेयस्यास्तरुणतरश‍ृङ्गारलहरी-
गभीराभिर्वाग्भिर्विदधति सतां रञ्जनममी ॥

கவீந்த்ராணாம் சேத:கமலவனபாலாதபருசிம்
பஜந்தே யே ஸந்த: கதிசிதருணாமேவ பவதீம் ।
விரிஞ்சிப்ரேயஸ்யாஸ்தருணதரஶ‍ருனகாரலஹரீ-
கபீராபிர்வாக்பிர்விதததி ஸதாம் ரஞ்ஜனமமீ ॥

இந்த ஸ்லோகத்தை தினமும்
1000 முறை 45 நாட்கள் தொடர்ந்து
பாராயணம் செய்தால் வாக்கின்
வலிமை கூடும்/ வேதங்களில்
மேன்மையானவர்களாக இருப்பார்கள்

ஹே பராசக்தி,
சிறந்த கவிகளின் மனது தாமரை மலர்களுக்கு ஒப்பானது. அந்த தாமரை மலர்களை மலரச் செய்யும் இளம் வெய்யில் போன்ற
சிவப்பு நிறத்தவளும், அருணை எனும் பெயரைக் கொண்டவளுமான உன்னை, எவர் வணங்கி துதிக்கின்றார்களோ, அவர்கள் பிரும்மா போற்றிடும் சரஸ்வதி தேவியின் கடாட்ஷமான வாக்கு வலிமை பெற்று மற்றவர்களை மகிழ்விக்கின்றார்கள்.  

  • (விளக்கம்:
    இந்த ஸ்லோகமும் சரஸ்வதி தேவி அருளும் வாக்கு வலிமையின் சக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்து உள்ளது. பராசக்தியின் மகிமையை விளக்கும் சௌந்தர்யலஹரியில் ஏன் சரஸ்வதியின் பெருமை கூறப்பட்டு உள்ளது என நினைக்கலாம். அதற்கு காரணம் உண்டு.
  • அன்னை பராசக்தி தன்னிடம் இருந்த பெண் சக்திகளில் இருந்து முதலில் தோற்றுவித்தது மூன்று சக்திகள். அவை முறையே மஹா காளி, மஹா லக்ஷ்மி, மஹா சரஸ்வதி என்று தேவி மஹாத்மியம் கூறுகிறது.
  • ஆகவே அனைவருக்கும் கல்வி அறிவு மற்றும் வாக்கு  வலிமையை தனது ஸ்வரூபமான சரஸ்வதி  எனும் வித்யா தேவியின்  அம்சத்தின் மூலம் அளிப்பதினால்  இந்த ஸ்லோகத்தில்  பராசக்தியின்  மேன்மை அவள் அளிக்கும் வாக்கு வலிமை எனும் தன்மை  மூலம் எடுத்துக்  காட்டப்பட்டு உள்ளது. வித்யா எனும் பெயரே அறிவாற்றலைக் குறிக்கின்றது.
  • முந்தைய ஸ்லோகத்தில் சரஸ்வதி அம்சத்திலான அவள், சத்வ குணத்தைக் குறிக்கும் வெண்மை நிறத்திலான அன்னையாக உள்ளதாக அவளது தோற்றத்தின் வர்ணனை கூறப்பட்டது.  இந்த ஸ்லோகத்தில்  சரஸ்வதி அம்சத்திலான  அவள் சிவப்பு நிறத்திலான அருணை எனும் தேவியாக கூறப்பட்டு உள்ளாள்.
  • அருணை என்பது எட்டு கைகளைக் கொண்ட அம்சம். அதில் நான்கு கைகளில் பராசக்தியின்  கைகளில் உள்ள கரும்பிலான வில், மலர்களாலான அம்பு, பாசக் கயிறு மற்றும் அங்குசம் காணப்படபிற நான்கு கைகளிலும் சரஸ்வதியின் கைகளில் உள்ள புத்தகம், ஸ்படிக மாலைவர மற்றும் அபய முத்திரை சின்னங்கள் உள்ளன. பராசக்தியானவள் பல்வேறு சமயங்களில், பல்வேறு காரணங்களுக்காகபல்வேறு ரூபங்களில் காட்சி அளிக்கிறாள்.
  • ஆகவே இந்த ஸ்லோகத்தின் மூலம் சரஸ்வதியின் அம்சத்தை உள்ளடக்கி, எட்டு கைகளைக் கொண்ட பராசக்தி தரும் வாக்கு வலிமை எத்தகையது என்பது கூறப்பட்டு உள்ளது. இந்த ரூபத்தில் பராசக்தி தன்னுள் அடங்கி உள்ள சரஸ்வதியின் அம்சத்துடன் காட்சி அளிப்பதினால் அந்த ரூபம்  அருணை  எனப்பட்டது.
  • வாக்கு வலிமை என்பதற்கு உதாரணமே உஜ்ஜயினியை சேர்ந்த காளிதாசன்தான். அவர்தான் வாக்கு வலிமையை காளி தேவி மூலம் அடைந்த கவிஞர் ஆவார்.
  • மஹா பராசக்தியின் இன்னொரு அம்சம் காளிதேவி ஆவார். ஆகவே காளிதாசன் அடைந்திருந்த வாக்கு வலிமையையும் மஹா பராசக்தி அளித்ததே.  காளிதாசன் பராசக்தி மூலம் பெற்று இருந்த வாக்கின் வலிமைக்கு ஒரு சின்ன உதாரணம் கீழே உள்ள கதை.
  • ஒருமுறை உஜ்ஜயினியை ஆண்டு வந்திருந்த போஜ ராஜன் தனது அரச சபையில் ஒரு புதிரைப் போட்டார். தாமரை மலர்களில் இன்னொரு மலர் முளைத்து இருப்பதாக கூறப்படுகின்றது.  ஆனால் மலர்களால் மலர்களை பார்க்க முடியவில்லை என்பதில் காணப்படும் மலர்கள் என்ன என்றால்……………எனும் பொருளைத் தரும், பாதி ஸ்லோகத்தை கூறி விட்டு அந்த ஸ்லோகத்தின் பின் பகுதியை கூறுபவர்களுக்கு பரிசு தருவதாக கூறினார்.
  • அதற்கு யாராலும் பதில் தர இயலவில்லை, ஆனால் காளிதாசனோ சற்றும் சளைக்காமல் எழுந்து நின்று உத்தமமான பெண்களின் முகங்களே தாமரை மலர். அந்த தாமரை மலர் போன்ற முகத்தில் காணப்படும் நீலோத்பவம் எனும் மலர்களை போன்றவைகளே இரு கண்கள்.  அதனால்தான் நீலோத்பவ மலர்களால், அதே நீலோத்பவ மலர்களை பார்க்க முடியவில்லை (முகத்தில் உள்ள கண்களால் அதே கண்களை பார்க்க முடிவதில்லை‘) எனும் பொருளைக் கொண்ட ஸ்லோகத்தைக் கூற, அரசன் மூலம் பாராட்டையும் பெரும் பொருளையும்  காளிதாசன் பெற்றார்.
  • இதன் மூலம் பராசக்தி தனது அம்சமான அருணை எனும் சரஸ்வதி மூலம் வழங்கும் வாக்கு வலிமை எத்தகையது என்பது விளங்கும். அருணையின் இன்னொரு அம்சமே காளி தேவி என்பதினால் காளியும் அருணையும் ஒருவரே. ஒட்டு மொத்தமாக பார்க்கும்போது அருணை, சரஸ்வதி மற்றும் காளி எனும் மூன்று தேவிகளுமே வெவேறு ரூபங்களில் உள்ள ஒரே அம்சத்திலானவர்கள்தான்  என்பது புலனாகும்.

——
-17-

सवित्रीभिर्वाचां शशिमणिशिलाभङ्गरुचिभिः
वशिन्याद्याभिस्त्वां सह जननि संचिन्तयति यः ।
स कर्ता काव्यानां भवति महतां भङ्गिरुचिभिः
वचोभिर्वाग्देवीवदनकमलामोदमधुरैः ॥

ஸவித்ரீபிர்வாசாம் ஶஶிமணிஶிலாபனகருசிபி:
வஶின்யாத்யாபிஸ்த்வாம் ஸஹ ஜனநி
ஸஞ்சிந்தயதி ய: ।
ஸ கர்தா காவ்யாநாம் பவதி மஹதாம் பனகிருசிபி:
வசோபிர்வாக்தேவீவதனகமலாமோதமதுரை: ॥

இந்த ஸ்லோகத்தை தினமும்
1000 முறை 45 நாட்கள் தொடர்ந்து
பாராயணம் செய்தால் அறிவியல்களில்
நிபுணத்துவம் பெறுவார்கள்

ஹே பராசக்தி,
வாக்கில் இருந்து வெளி
வரும் வார்த்தைகளுக்கு அதிபதிகளும்,  வெண்மை  நிறத்திலான சந்திரக்  கல் போன்ற நிறத்தைக் கொண்ட  எட்டு தேவிகளின் சக்திகளை   உள்ளடக்கி உள்ள உன்னையும், வாக்கு தேவதைகளான வசினி  தேவதைகளையும்  ஒன்றாக சேர்ந்து உபாசிப்பவர்கள், வாக்கு வல்லமை  கொண்ட  ஆற்றலைப் பெறுவார்கள். மணம் நிறைந்த  தாமரை மலரைப் போன்று காணப்படும்  உன் முகத்தைப் போலஇனிமையான புலமை நிரம்பிய காவியங்களை இயற்றும் ஆற்றல்  படைத்தவர்களாக இருப்பார்கள்.

  • (விளக்கம்:
    இந்த ஸ்லோகத்தில் எதற்காக வசினி தேவதைகளை பராசக்தியுடன் சேர்த்து   வர்ணித்து உள்ளார் என்பது வியப்பாக தோன்றலாம்.  அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
  • வாக் தேவதைகள் எனப்படும் வசினி  தேவதைகள்   யார் என்றால், சரஸ்வதி தேவி வாக்கு வலிமை மற்றும் அறிவாற்றலை கொடுப்பவள் என்றால்அந்த வாக்கில் இருந்து  வெளி வரும் வார்த்தைகளின் அதிபதிகளாக வசினி தேவதைகள் இருக்கிறார்களாம். அது மட்டும் அல்ல  அவர்கள்   பராசக்தியின் மாளிகையில் காவலில்   உள்ள பரிவார தேவதைகள் ஆவார்கள்.
  • அவர்களின் பெயர்கள் வசினி, காமேஸ்வரி, மோதினி, விமலா, அருணா, ஜெயினி, பராசக்தி, மற்றும் கௌலினி என்பதாகும். ஸ்ரீ சக்ரத்தில் ஏழாவது ஆவரணத்திலுள்ள எட்டுக் கோணங்களில் இந்த எட்டுப் பேரும் பராசக்தியை சுற்றி அமர்ந்திருப்பார்கள்.
  • ஸ்ரீ சக்கர தேவியான பராசக்தியை பொறுத்த மட்டில், அவளை சுற்றி காவலுக்கு பல்வேறு நிலைகளிலான பல்வேறு தேவதைகள் காவலுக்கு உள்ளார்கள் என்றாலும் அந்த தேவதைகளில்  முக்கியமானவர்கள் வாக்கில் இருந்து வெளிவரும் வார்த்தைகளுக்கு அதிபதிகளாக உள்ள வாக் தேவதைகள் எனப்படும் வசினி தேவதைகள்   ஆவர். சரஸ்வதி வாக்கு வலிமையை தருபவள் என்றால் அந்த வாக்கில் இருந்து வெளி வரும் வார்த்தைகள் தெளிவாக இருக்க, அருள் புரிபவர்கள் இரண்டாம் நிலையிலான வசினி தேவதைகள்.
  • இந்த ஸ்லோகத்தில் எவன் ஒருவன் அறிவாற்றல்  பெற வேண்டும் என நினைக்கிறானோ, அவன் பராசக்தியை எட்டு வாக் தேவிகளுடன் சேர்ந்து தியானித்து  அவர்களது அருளை  பெற வேண்டும் என்று கூறுகிறது. சமஸ்கிருதத்தில் வாக் என்றால் வார்த்தைகள் என்று பொருள்.  சமஸ்கிருதத்தில் உயிரெழுத்துக்கள் மற்றும் மெய் எழுத்துக்களைக் கொண்ட 51 எழுத்துக்கள் உள்ளன. அந்த 51  எழுத்துக்களும்  எட்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு எட்டு வாக் தேவதைகளின் கட்டுப்பாட்டில் உள்ளன.
  • இந்த எட்டு வாக் வாசினிகளும் பராசக்தியின் கட்டளைப்படி லலிதா சஹஸ்ரநாமத்தை இயற்றியதால் அவளுக்கு மிக நெருக்கமானவர்கள். உபாசகர்கள் பராசக்தியின் மீது தியானம்  செய்யும்போது அவர்களுக்கு பொருளும் செல்வத்திற்கும் பதிலாக ஆத்ம விடுதலை கிடைக்கின்றதுஅதே சமயம் பக்தியுடன் அவளை ஆராதிக்கும்  சாதாரண பக்தர்கள் செல்வத்தையும் செழிப்பையும் பெற அவளுடைய அருள் வகை செய்கின்றது; செல்வத்துடனும், செழிப்புடனும், அறிவித்  திறனையும் சேர்த்துப் பெறுவதற்கு  வாக் தேவி என்று அழைக்கப்படும் எட்டு வாக் தேவிகளுடன் சேர்ந்து பராசக்தியை  வழிபட வேண்டியிருக்கும். இதுவே இந்த ஸ்லோகத்தின்   தத்துவம் ஆகும்.
  • வாக் தேவியர்கள் புதிதாக வெட்டப்பட்ட நிலவு கற்கள் போல முற்றிலும் தூய வெள்ளை நிறத்தில் தோன்றுகிறார்கள். சந்திரக் கல் உருகும் தன்மைக் கொண்டது என்பதினால் அவற்றை வாக் தேவியர்களுடன் ஒப்பிடுகிறார்கள். அதே போல அவற்றின் உருகும் தன்மையை வாயில் இருந்து வெளிப்படும் வார்த்தைகளுடன் ஒப்பிடுகிறார்கள்.
  • எப்படி ஒரு சந்திரக் கல் உருகுகின்றதோ அவ்வாறே, தம்மை வணங்கித் துதிக்கும் பக்தர்களது மன எண்ணங்களையும், உணர்வுகளையும் வாக் தேவதைகள் வார்த்தைகளாக உருவகப்படுத்தி அவர்களது வாயில் இருந்து வெளிப்பட வைக்கின்றார்கள், அல்லது அவர்களது எழுத்தில் பிரதிபலிக்க வைக்கின்றார்கள்.  எனவே வாக்கு வலிமை வேண்டும் என்று எவர் ஒருவர் நினைக்கிறாரோ அவர்கள்  பராசக்தியோடு, எட்டு வாக் தேவதைகளையும் சேர்த்து வழிபாடு செய்யும் பக்தர்களின் எண்ணம்  தூய்மையாக இருந்தால்  அவர்கள் பெரிய அளவிலான அறிவாற்றலைப் பெறுகிறார்கள் என்பது தெளிவாகிறது.
  • இருப்பினும், பராசக்தியை வணங்காமல் எட்டு வாக் தேவிகளை மட்டும் வணங்கினால் ஒருவருக்கு பேச்சுத் திறமை அல்லது அறிவாற்றலோ கிடைக்காது. அதன் காரணம் வாக் தேவியர்கள் பராசக்தியிடமிருந்து மட்டுமே அதற்கான சக்தியைப் பெறுகிறார்கள், மேலும் அவர்கள் பராசக்தியின் இருப்பிடத்தில் அவளுடைய காவல் தெய்வங்களாக பணியில்  இருக்கிறார்கள் (ஸ்ரீ சக்கர ஆவரணங்களை  படித்தால் அவர்கள் காவல் பணியில் உள்ள இடம் புரியும்).
  • அதனால்தான் இந்த ஸ்லோகத்தில் பராசக்தியின் மேன்மையை, வாக்கின் அதிபதியானவளும்  அவளுடைய அம்சமுமான சரஸ்வதி தேவி, மற்றும் அவளுடைய பரிவார தேவதைகளும், வார்த்தைகளின் அதிபதிகளுமான வசினி தேவதைகள் மூலம் கூறப்பட்டு உள்ளது.
  • ஆதி சங்கரர் இயற்றி உள்ள இந்த ஸ்லோகங்கள் மூலம் ஒன்று புலனாகின்றது. பராசக்தி கல்வி அறிவிற்காக வெளிப்படுத்திய சரஸ்வதி அம்சத்திலேயே  நல்ல வாக்கு வன்மை, இசை, இலக்கியம் மற்றும் நடனம் போன்ற கலைகளில் தேர்ச்சி, சங்கீத ஞானம், சகலகலா பாண்டித்யம், அனைத்து கலைகளையும்  எளிதாக அருள என்பவற்றுக்கென பல்வேறு  ரூபங்களில்  தேவிகள் வெளிப்படுத்தப் படுகின்றார்கள்.
  • அவர்கள் காளி; ஸ்ரீ ராஜ மாதங்கி எனும் சியாமளா தேவி; மாணிக்க மயமான வீணை வாசிக்கும் வாக்வாதினி தேவதைகள்; அருணைபரா சரஸ்வதி; பால சரஸ்வதி; தாரண சரஸ்வதி; நித்யா சரஸ்வதி; வஷினி; மோதினி; விமலா; ஜபினி; சர்துஸ்வரி  என்ற பெயர்களில் உள்ள தேவிகள் ஆவார்கள். அதனால்தான்  பல ஸ்லோகங்களிலும் கல்வித் திறன், கலை, அறிவாற்றல்  வாக்கின் வலிமை போன்றவற்றை  தரும் தெய்வங்களின் பெயர்கள் மாறுபட்டு  காணப்படுகின்றன என்றாலும் அவர்கள் அனைவருமே பராசக்தி உடலுக்குள் இருந்து வெளிப்படும் பல்வேறு ரூபங்கள்தானே தவிர வேறு ஒன்றும் இல்லை).

——
-18-

तनुच्छायाभिस्ते तरुणतरणिश्रीसरणिभिः
दिवं सर्वामुर्वीमरुणिमनि मग्नां स्मरति यः ।
भवन्त्यस्य त्रस्यद्वनहरिणशालीननयनाः
सहोर्वश्या वश्याः कति कति न गीर्वाणगणिकाः ॥

தனுச்சாயாபிஸ்தே தருணதரணிஶ்ரீஸரணிபி:
திவம் ஸர்வாமுர்வீமருணிமனி மக்நாம் ஸ்மரதி ய: ।
பவந்த்யஸ்ய த்ரஸ்யத்வனஹரிணஶாலீனநயனா:
ஸஹோர்வஶ்யா வஶ்யா: கதி கதி ந கீர்வாணகணிகா: ॥

இந்த ஸ்லோகத்தை தினமும்
1000 முறை 45 நாட்கள் தொடர்ந்து
பாராயணம் செய்தால் அவர்களின்
காதல் வெற்றி பெறும்.

ஹே பராசக்தி,
எந்த  ஒரு உபாஸகன்
, இளஞ் சூரியன் ஒளிக் கதிர்களுக்கு நிகரான இளம் சிவப்பு நிறத்திலான பராசக்தியின் உடலின் இருந்து வெளி வரும் ஒளியில், ஈரேழு உலகங்களும் மூழ்கிக் கிடப்பதாக மனதில்  எண்ணிக் கொண்டு  அவளை  உபாசிக்கின்றானோ, அவனிடம், மருண்டு நிற்கும் மான் குட்டியைப் போன்ற கண்களுடன் காணப்படும் ஊர்வசி போன்ற அப்சரஸ்கள்  கூட வசியமாகின்றார்கள்  எனும்போது சாதாரண பெண்களைக் குறித்துக் கூற முடியுமா?

  • (விளக்கம்:
    விடியற் காலையில் சூரியன் உதிக்கையில், சூரியன் வெளிப்படுத்தும் இளம் சிவப்பிலான ஒளிக் கதிர்களில் இந்த உலகமே இளம் சிவப்பாகத் தோற்றம் அளிக்கின்றது.
  • பராசக்தியின் ஆதிக்கத்தில் தான் இந்த பிரபஞ்சமே அடங்கி உள்ளது என்பதினால், அவளது உடலை தழுவிக் கொண்டு கீழே விழும் இளம் காலைப் பொழுதின் சூரிய ஒளிக் கதிர்கள், அவளது உடலின் நிறத்தை கிரகித்துக் கொண்டு, அதே நிறத்தோடு உலகின் மீது விழுகின்றது. அதனால்தான்  இந்த உலகமே விடியற் காலையில் இளம் சிவப்பு நிறத்தில்  காட்சி தருகின்றது.
  • ஆகவே பராசக்தியை உபாசனை செய்யும் உபாசகர்கள் தமது மனதிலும் எண்ணங்களிலும் இந்த உண்மையை ஆழமாக நிலைப்படுத்திக் கொண்டு  உபாசனை செய்யும்போது    தேவியின் எண்ணங்களினால் நிறைந்து உள்ள அந்த உபாசகர்கள்  தேவலோக  ரம்பைகளும் பொறாமைப்படும் அளவில் பிரகாசிக்கும் அளவிலான உடல் அழகை  பெறுகின்றார்கள்  என்பதாக இந்த ஸ்லோகத்தின் தாத்பர்யம் உள்ளது.
  • இந்த ஸ்லோகத்தின் அர்த்தத்தை மேலோட்டமாக பார்க்கக் கூடாது. இந்த உலகமே அன்னையின் நிறத்திலான இளம் சிவப்பில் காணப்படுவதாக ஒரு சாதகன் எண்ணினால், அவன் இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையுமே பராசக்தியின் ரூபமாகவே பார்க்கின்றான் என்பதாக அர்த்தம் கொள்ள வேண்டும். நாம் அந்த விளக்கத்தை  ஒளி என்றே பார்க்கின்றோம், ஆனால் சாதகனின் நினைவு  முழுவதுமே அன்னைதான் உள்ளாள்  என்பதினால் இளம் சிவப்பிலான ஒளி, அனைத்து இடங்களிலுமே அவளே வியாபித்து உள்ளாள்  என்ற உண்மையை முழுமையான தியானத்தில் உள்ள அவனுக்கு உணர்த்துகின்றது.  
  • தேவலோக ரம்பைகளும் பொறாமைப்படும் அளவில் பிரகாசிக்கும் அளவிலான உடல் அழகை  பெறுகின்றார்கள்  என்பதின் பொருள் என்ன என்றால் எப்படி இந்த சாதகனால் தனது சிந்தை முழுவதுமே பராசக்தியின் நினைவினால் மட்டுமே நிரப்பி  வைத்துக் கொள்ள முடிகின்றது, நம்மால் முடியவில்லையே என்ற  என்ற   ஆதாங்கத்தை வெளிப்படுத்தும் நிலை ஆகும்).

———
-19-

मुखं बिन्दुं कृत्वा कुचयुगमधस्तस्य तदधो
हरार्धं ध्यायेद्यो हरमहिषि ते मन्मथकलाम् ।
स सद्यः संक्षोभं नयति वनिता इत्यतिलघु
त्रिलोकीमप्याशु भ्रमयति रवीन्दुस्तनयुगाम् ॥

முகம் பிந்தும் க்ருத்வா குசயுகமதஸ்தஸ்ய தததோ
ஹரார்தம் த்யாயேத்யோ ஹரமஹிஷி தே மன்மதகலாம் ।
ஸ ஸத்ய: ஸங்க்ஷோபம் நயதி வனிதா இத்யதிலகு
த்ரிலோகீமப்யாஶு ப்ரமயதி ரவீந்துஸ்தனயுகாம் ॥

இந்த ஸ்லோகத்தை தினமும்
1000 முறை 25 நாட்கள் தொடர்ந்து
பாராயணம் செய்தால்
பெண்களையும் மிருகங்களையும்
கூட அடக்கும் வசிய சக்தி பெறுவார்கள்.

ஹே பராசக்தி,
சிவபெருமானின் துணைவியே
ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் உள்ள பிந்துவை உனது  முகமாகவும், அதன் கீழே உள்ள இரு ஸ்தனங்களையும், அதன் கீழே  உள்ள யோனியையும்  தியானம் செய்து கொண்டு அதில் உள்ள மன்மதக் கலையை  எவன் ஒருவன் உபாசிக்கின்றானோ, அவன் அனைத்து ஸ்த்ரீகளையும் தன் வயப்படுத்துகின்றான். மூவுலகிலும்  சூர்யசந்திரர்களை போன்ற  ஸ்தனங்களாகக் கொண்டுள்ள  ஸ்த்ரீகளையும் கூட  தன் வயப்படுத்துகின்றான்.

  •  (விளக்கம்:
    இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்தால் ஸ்த்ரீ வசிய சித்தி கிடைக்கும் என்பது உண்மை. ஆனால் இது  ஸ்த்ரீ வசியத்திற்காக ஏற்பட்ட ஸ்லோகம்  அல்ல. மாறாக ஒருவனுக்கும் உள்ள காம மோக இச்சைகளை முற்றிலும் அழித்து அவனுக்கு மோட்ஷத்தை தரும் நிலையிலான ஸ்லோகமே இது.
  • ஒரு உபாசகன் பிந்துவை பராசக்தியின் முகமாக வைத்துக் கொண்டு அவளது அங்கங்களை மன்மதக் கலையாக வைத்துக் கொண்டு உபாஸிக்கையில், அவன் மனதில்  பராசக்தி ஒரு மிகப்  பெரிய உண்மையை ஆழப் பதிக்கின்றாள்.  நானே உனது தாயார்.  எனது  உடலில் இருந்து யோனி மூலம் வெளிப்பட்ட உனக்கு, எனது குருதியை  இந்த ஸ்தனத்தில் இருந்துதான்  பாலாக்கி கொடுத்து வளர்த்தேன். ஆகவே ஒவ்வொரு பெண்ணை பார்க்கும் போதும் அவளை  நீ என்னைப்  போன்ற தாயாகவே பாவிக்க வேண்டும். இப்போது முதல், இனி உன் முன்  ஒவ்வொரு பெண்ணாகவும் நானே  நிற்பேன்’. 
  • அதனால் அது முதல் மெல்ல மெல்ல அந்த உபாசகன்   குழந்தையின் மன நிலையில் சென்று ஒவ்வொரு பெண்ணையும் அவன் தனது தாயாரைப் போலவே பார்க்கத் துவங்குவான்.  அவன் மனதில் இருந்து ஒரு பெண்ணின் உடலில் உள்ள வசீகர அவயங்கள் மீதான மோகம் அழியத் துவங்க, ஒரு கட்டத்தில்  அவனிடம் உள்ள காம மோக இச்சைகள் அழிகின்றன.
  • தியான நிலையில் உள்ள அவனது எண்ணங்களில் அந்த தத்துவம் ஆழமாக  ஊடுருவிக் கொள்ள ஒரு கட்டத்தில் அவன் மனதாலும் எண்ணங்களினாலும் குழந்தையாகவே ஆகி விடுகின்றான். ஒரு  அந்த நிலைக்கு சென்று விடும்போது  மோட்ஷத்திற்கு செல்லும் பாதை அவனுக்கு திறத்து விடப்படுகின்றது.
  • அதனால்தான் இந்த ஸ்லோகத்தின் மூலம் பராசக்தியை உபாசிக்கும் ஒருவன்வசீகரமான பொலிவைப் பெற்றவுடன்,   அழகிய  சிறு  குழந்தையைக் கண்டால் எப்படி ஒரு பெண்  ஆசையோடு ஓடி வந்து கொஞ்சுவாளோ அதுபோன்று அவனது வசீகரத்தால் கவரப்பட்ட பெண்கள் அவனை நாடி ஓடி வரும்போது அவர்கள் அனைவரையுமே தனது தாயாராகவே அவன் பார்க்கின்றான். இதுதான் இந்த ஸ்லோகத்தை தியானிப்பதின் மகிமை ஆகும் ).

——-
-20-

किरन्तीमङ्गेभ्यः किरणनिकुरम्बामृतरसं
हृदि त्वामाधत्ते हिमकरशिलामूर्तिमिव यः ।
स सर्पाणां दर्पं शमयति शकुन्ताधिप इव
ज्वरप्लुष्टान् दृष्ट्या सुखयति सुधाधारसिरया ॥

கிரந்தீமனகேப்ய: கிரணனிகுரம்பாம்ருதரஸம்
ஹ்ருதி த்வாமாதத்தே ஹிமகரஶிலாமூர்திமிவ ய: ।
ஸ ஸர்பாணாம் தர்பம் ஶமயதி ஶகுந்தாதிப இவ
ஜ்வரப்லுஷ்டான் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதாரஸிரயா॥

இந்த ஸ்லோகத்தை தினமும்
1000 முறை 25 நாட்கள் தொடர்ந்து
பாராயணம் செய்தால் விஷங்கள்
முறியும், திருஷ்டி அகலும்
பிரயோகம் கிடைக்கின்றது

ஹே பராசக்தி,
சந்திர காந்தக் கல் போன்று பிரகாசிப்பவளே
,   உன்னை துதிக்கும் சாதகனுக்குஉன் உடலில் இருந்து பிரவாகம் போல வெளி வரும் ஒளிக் கதிர்கள் மூலம் அமிர்த மழையினை வாரி வழங்குகின்றாய். அதனால் அவன் கருடனைப் போன்ற சக்தி பெற்று நச்சுப் பாம்புகளின்  வீரியத்தை அடக்கும் சக்தியை பெறுகின்றான். ஜுரத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்  நிவாரணம் அளித்து, அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் அளவிலான சக்தியை பெறுகின்றான்.

  • (விளக்கம்:
    ஆனந்தலஹரியில் தரப்பட்டு உள்ள பல ஸ்லோகங்கள், நோய்களுக்கு நிவர்த்தி தரும் மந்திர சக்திகளைக் கொண்ட ஸ்லோகங்களாக உள்ளன. அதில் ஒன்றுதான் இந்த ஸ்லோகமும் ஆகும். இந்த ஸ்லோகத்தை கூறி பராசக்தியை எவர் ஒருவர் ஆராதிக்கின்றாரோ அவருக்கு நிச்சயமாக நோய்களை தீர்க்கும் சக்தி கிடைக்கும்.
  • எந்த ஒரு சாதகர் இந்த மந்திரத்தை வெகு சிரத்தையோடு தியானித்து பலன் அடைவார்களோ அவர்களுக்கு கருட பகவானின் ஆற்றலும் சக்தியும் கிடைக்கும் என்பது நிச்சயம்.  கருடனின் சக்தியைப் பெறும் சாதகர்களுக்கு  பாம்பின் விஷத்தை முறியடிக்கும் சக்தி கிடைக்கும், ஜுரங்களை முற்றிலும் கட்டுப்படுத்தும் சக்தியும், எந்த விதமான நோய்களையும் பார்வையால் பார்த்தே குணப்படுத்தும் சக்தியும் கிடைக்கும் என்பதே  இந்த ஸ்லோகத்தின் மகிமையாக உள்ளது.
  • ஆனால் இந்த சித்தியை அனைத்து சாதகர்களினாலும் அடைய   முடியாது என்பதின் காரணம் இதை தியானிப்பதற்கு பல நியமங்கள் உள்ளன, பல கட்டுப்பாடுகள் உள்ளன.
  • கருடன் ஒரு சாதாரணப்  பறவை அல்ல, அது ஒரு  தெய்வீகப் பறவை  ஆகும்.    திருமாலும் கருடனும் ஒருவரே’ என்று மகாபாரதத்திலுள்ள அனுசாசன பர்வத்தில் கூறப்பட்டு உள்ளது.
  • கருட பகவான் ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீர்யம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் காணப்படுகின்றார். திருமாலைப் போல அணிமா, மகிமா, லகிமா, கரிமா, ஈஸித்வம், வசித்வம், பிராபதி  மற்றும் பிராகாம்யம் ஆகிய எட்டு விதமான சக்திகளைக் கொண்டவராக உள்ளார் என்பதினால்தான்  தன்னை இந்த ஸ்லோகத்தின் மூலம் ஆராதிக்கும் சாதகர்களுக்கு, கருட பகவானின் இந்த சக்திகளை  தேவி பராசக்தி  வழங்குகிறாள்.
  • இப்படிப்பட்ட மகிமை வாய்ந்த கருட சக்தியை அனைத்து தெய்வங்களையும் தன்னுள் அடக்கி வைத்துள்ள பராசக்தியைத் தவிர வேறு எந்த தெய்வத்தினாலும் தர முடியாது.  அத்தனை ஏன், கருட பகவானால் கூட அப்படிப்பட்ட தனது சக்தியை பக்தர்களுக்கு தர முடியாது, கருடனை தனது வாகனமாக வைத்துள்ள மஹாவிஷ்ணுவினால் கூட  கருட சக்தியை எவருக்கும் தர முடியாது.

——–
-21-

तटिल्लेखातन्वीं तपनशशिवैश्वानरमयीं
निषण्णां षण्णामप्युपरि कमलानां तव कलाम् ।
महापद्माटव्यां मृदितमलमायेन मनसा
महान्तः पश्यन्तो दधति परमाह्लादलहरीम् ॥

தடில்லேகாதன்வீம் தபனஶஶிவைஶ்வானரமயீம்
நிஷண்ணாம் ஷண்ணாமப்யுபரி கமலாநாம் தவ கலாம்।
மஹாபத்மாடவ்யாம் ம்ருதிதமலமாயேன மனஸா
மஹாந்த: பஶ்யந்தோ தததி பரமாஹ்லாதலஹரீம் ॥

இந்த ஸ்லோகத்தை தினமும்
1000 முறை 11 நாட்கள் தொடர்ந்து
பாராயணம் செய்தால் அசாத்திய
மன தைரியம் பெறுவார்கள்

ஹே பராசக்தி,
மின்னல் கொடி போன்று தோன்றி மறைபவளாகவும்
, ஜ்யோதிர்மயமாகவும்சூரியன், சந்திரன் மற்றும் அக்னியின் உருவமாகவும் உள்ளவளே, ஆறு ஆதாரங்களான மூலாதாரம், ஸ்வாதிஸ்தானம், மணிபூரகம், அனாஹத, விசுத்தி, மற்றும் ஆக்ஞா போன்றவற்றின் மேல் பகுதியில் உள்ள ஸஹஸ்ராரம் எனப்படும்  ஆயிரம் தள   தாமரை  வனத்தில் வசிப்பவளே; காமம், மாயை மற்றும் அறியாமையை  போன்ற மன அழுக்குகளை அழித்துக் கொண்டு அங்கு செல்லும் ஞானிகள், உன்னை தரிசித்து   பேரானந்தத்தை   அடைகின்றார்கள். 

  • (விளக்கம்:
    தியான நிலையில் உள்ள சாதகனின் குண்டலினி சக்தியானது தலையின் மேல் வழியாக வெளிச் சென்று,  சஹஸ்ராரம் எனும் சக்கரத்தை அடைந்தவுடன், அங்குள்ள  தெய்வீக ஆற்றலுடன் ஒன்றிணைகின்றது. அந்த நிலையை எட்டி விட்டதும்  அமைதியாக பேரானந்தம்  எனும் சமுத்திரத்தில் நீந்தியபடியே இருக்கின்றான். இதை எடுத்துக் காட்டுவதே இந்த ஸ்லோகம் ஆகும். அந்த நிலைக்கு மேலான நிலை வேறு எதுவுமே  கிடையாது என்பதினால்  அந்த நிலையை அடைய விரும்பும் சாதகர்கள் தமது  மன மலங்கள் எனப்படும் ஆசை, அகங்காரம், வெறுப்பு, காமம், மாயை மற்றும் அறியாமையை  போன்றவற்றை தமது மனதில் இருந்து   அழித்துக் கொண்டு தியானத்தில் ஈடுபட வேண்டும். மன மலங்களை அழித்துக் கொண்டு விட்டவர்களே ஞானிகள்.
  • தேவியின் தரிசனத்தைப் பெற  தியான நிலையில் அமர்ந்து கொள்ளும்  ஞானிகளின் சக்தியானது  ஆறு கீழ் நிலைகளில்  இருந்து படிப்படியாக மேலெழும்பும்.  ஆக்ஞா சக்கரத்தை அடைந்தவுடன் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மேலெழும்பிச்  சென்று  ஸஹஸ்ராரம் எனும் நிலையை  அடைந்தவுடன் அங்கு தேவியின் தரிசனத்தைப் பெற்று, ஆனந்த வெள்ளத்தில் மூழ்குவார்கள். தாமரை மலர் வனத்தைப் போன்ற நிலையிலான ஸஹஸ்ராரத்தில்தான் சந்திர, சூரிய, அக்னியின் உருவங்களை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள தேவியானவள் ஜெகத் ஜ்யோதியாக ஜொலித்தபடி இருந்தவாறு,  சாதகருக்கு காட்சி தந்து அவரை ஆனந்த வெள்ளத்தில் முழுக்க வைக்கிறாள். அந்த ஒளி வெள்ளத்தை  அனைவராலும் காண முடியாது.  சஹஸ்ராரத்தை எட்டி விட்ட சாதகர்களால் மட்டுமே காண முடியும்.

——–
-22-

भवानि त्वं दासे मयि वितर दृष्टिं सकरुणा-
मिति स्तोतुं वाञ्छन् कथयति भवानि त्वमिति यः ।
तदैव त्वं तस्मै दिशसि निजसायुज्यपदवीं
मुकुन्दब्रह्मेन्द्रस्फुटमकुटनीराजितपदाम् ॥

பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணா-
மிதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வமிதி ய: ।
ததைவ த்வம் தஸ்மை திஶஸி நிஜஸாயுஜ்யபதவீம்
முகுந்தப்ரஹ்மேந்த்ரஸ்புடமகுடனீராஜிதபதாம் ॥

இந்த ஸ்லோகத்தை தினமும்
1000 முறை 45 நாட்கள் தொடர்ந்து
பாராயணம் செய்தால் ராஜ்யங்களை
எல்லாம் வெல்வான்

ஹே பராசக்தி,
ஈஸ்வரனின் பத்தினியான பவானி தேவியே
, உனது கடைக் கண்  பார்வை, உன் பக்தன் என் மீது  விழுந்து கருணை புரிய வேண்டும் என்று ஒருவன் வேண்டிக் கொள்ள நினைத்து, ‘பவானிஎன்று ஆரம்பித்த உடனேயே, பிரும்மா, விஷ்ணு மற்றும் இந்திரனின் க்ரீடங்களின் ஒளியினால் தீபாராதனை செய்யப்பட்ட உனது பாதங்களில் கலந்து விடும் வகையில், அவனுக்கு நீ மோட்ஷத்தைத் தருகின்றாய்.

  • (விளக்கம்:
    பரமசிவனின் மனைவியான பராசக்திதான் இந்த ஸ்லோகத்தில் பவானி தேவி என்கின்ற அவளது இன்னொரு ரூபத்தில் கூறப்பட்டு உள்ளாள்.
  • பவானி தேவி எனும் தேவி பராசக்தியின் மற்றொரு வடிவம் (ரூபம்) ஆவார். பராசக்தி பிரபஞ்சத்தில், அந்தந்த நிலப்பரப்பின்  தேவைகளின்படியும், சாப விமோசனம் பெறவும், சாப விமோசனங்கள் தரவும், அசுரர்களை வீழ்த்தவும், தீய சக்திகளை அழிக்கவும் பல்லாயிரம் வடிவங்களிலும், அவதாரங்களிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றார்.
  • பிரார்த்தனைகள் என்பது பல்வேறு தரத்திலான செயல் திறன் மற்றும் வார்த்தைகளை உள்ளடக்கியவை. உண்மையான பிரார்த்தனை என்பது வேண்டுபவருக்கும் தெய்வத்திற்கும் இடையே நடைபெறும் உரையாடல்  மட்டும் அல்ல  இருவருக்கும் இடையிலான நேரடி தொடர்பை வெளிப்படுத்துவது ஆகும்.
  • வழிபடுபவன் மற்றும் வழிபடப்படும் தெய்வங்களுக்கு இடையிலான  இணக்கம் என்பது வழிபடுபவரின் உண்மைத் தன்மையிலான  பிரார்த்தனைகளை பொறுத்தே அமைந்து இருக்கும். அதுவே பிரார்த்தனை நிறைவேறுவதற்கான முதல்  நிபந்தனையாகும்.   வேண்டுபவர்கள் புரிதலுக்கு ஏற்ப, தெய்வங்களே வெவ்வேறு தரத்திலான அருளை வழங்குகின்றன.
  • இரண்டாவது நிபந்தனை பிரார்த்தனையின் நோக்கம். வெறும் வார்த்தை ஜாலங்களிலான பிரார்த்தனை அதன்  தன்மையை வலுப்படுத்துவதில்லை. அதில் உண்மைத் தன்மை இருக்க வேண்டும்; தூய்மை இருக்க வேண்டும்; ‘எனக்கு ஒரு கண் போனாலும் சரி, அடுத்தவனுக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் போன்ற  தன்மையிலான  சுயநலத்துடன் கூடியதாக இருக்கக் கூடாது. எவருக்கும் பாதிப்பில்லாமல் எனக்கு உன் அருள் வேண்டும் என்கின்ற பாவனை வேண்டும்.   தெய்வங்கள் அவற்றை புரிந்து கொள்வதினால்தான்  பிரார்த்தனைகளை ஏற்கின்றன அல்லது ஒதுக்கி விடுகின்றன.
  • உயர்ந்த மற்றும் தூய்மையான வழிபாட்டிற்கு தகுதியான நபர்  சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு  இருக்க வேண்டும்.  அவர் தன்னை ஒரு  கடமையை செய்யும் உபாசகராக நினைத்துக் கொள்ளக்  கூடாது. முழுமையான மனதுடன் உபாசனைகளில் ஈடுபட வேண்டும். மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளிப்புறத்தில் வேறுபட்டவராக இருக்கக் கூடாது.
  • தேவியின் கருணை அபாரமானது; அது எளிதில் விளக்க முடியாதது. பராசக்தியின் பாதங்களில் கலந்து விட வேண்டும் என்ற முடிவுடன் ஆத்மார்த்தமாக அன்னையை   தியானிக்கும் சாதகன், தூய்மையான மனதுடன் பவானி தேவி எனக்கு உனது பாதங்களில் ஐக்கியம்  ஆகி விட  அருள் புரிய வேண்டும்என்று வேண்ட நினைத்து  ஆத்மார்த்தமாக  அம்மா பவானிஎன்று  தனது  பிரார்த்தனையை துவங்குகிறான். வேண்டுபவரின்  உள்ளத்தில் உள்ளதை, வேண்டப்படும் தெய்வங்கள் புரிந்து கொண்டு அருள் புரிவதை போல,    ‘அம்மா பவானி‘  என்ற வார்த்தைகள் அவன் வாயில் இருந்து வெளி வந்த  அடுத்த கணம்   பவானி தேவி அவனுக்கு   சாயுஜ்யம்  எனும் மேன்மையான பதவியை தந்து விடுகின்றாளாம். சாயுஜ்யம் என்பது இறைவனின் திருமேனியில் உள்ளேயே பிரவேசம் புரிந்து, திருமேனியிலேயே குடி கொண்டிருத்தல் என்பது ஆகும்.
  • அதுவும் தெய்வங்களின் பாதத்தில் சரணடைந்து விடும் நிலையான மோட்ஷத்தை வேண்டுபவர்களுக்கு அவர்களது எண்ணம் முற்றிலும் உண்மையானது அல்லது பொய்யானது என்பதை உடனடியாக புரிந்து கொண்டு விடுவதினால், உண்மையான பக்தர்களுக்கு பக்தனே, நீ வெறும் வேண்டுதலை வைப்பவன் அல்ல, எனது பாதத்தில் கலந்து விட வேண்டியவன் என்பதினால் இனி நீயும் நானும் வேறல்ல, இருவருமே ஒருவரேஎன்ற பொருளில்  உடனடியாக வேண்டுதலை நிறைவேற்றி வைக்கின்றார்கள் என்ற தத்துவத்தை எடுத்துக் காட்டுவதே இந்த ஸ்லோகம் ஆகும்)

——-
-23-

त्वया हृत्वा वामं वपुरपरितृप्तेन मनसा
शरीरार्धं शम्भोरपरमपि शङ्के हृतमभूत् ।
यदेतत्त्वद्रूपं सकलमरुणाभं त्रिनयनं
कुचाभ्यामानम्रं कुटिलशशिचूडालमकुटम् ॥

த்வயா ஹ்ருத்வா வாமம் வபுரபரித்ருப்தேன மனஸா
ஶரீரார்தம் ஶம்போரபரமபி ஶனகே ஹ்ருதமபூத் ।
யதேதத்த்வத்ரூபம் ஸகலமருணாபம் த்ரினயனம்
குசாப்யாமானம்ரம் குடிலஶஶிசூடாலமகுடம் ॥

இந்த ஸ்லோகத்தை தினமும்
1000 முறை 45 நாட்கள் தொடர்ந்து
பாராயணம் செய்தால் கடன்
தொல்லை அழியும் , செல்வம் பெருகும்

ஹே பராசக்தி,
பரமசிவனின் இடது பாதியான  நீ
, சிவந்த உடலோடும், கொண்டை முடியில்   கிரீடம் போல  சந்திர கலையையும், கனத்த மார்பகங்களையும், முகத்தில்  மூன்று கண்களையும் கொண்டு  காட்சி அளிக்கின்றாய். சிவபெருமானின் இடது பக்கத்தை மட்டுமே அபகரித்துக் கொண்டு உள்ளாய் என எண்ணிக் கொண்டு இருக்கையில்திருப்தி அடையாமல்அவரது வலது பக்கத்தையும் அபகரித்துக் கொண்டு விட்டதை போல, உனது கனத்த மார்பகத்தினால்  முன்புறம் சற்றே குனிந்து உட்கார்ந்து இருக்கையில், உனது மார்பகம் அவருடைய வலது பாகத்தை மறைத்தபடி காணப்படுகின்றது.

  • (விளக்கம்:
    இந்த ஸ்லோகத்தின் மூலம் சிவனும் சக்தியும் ஒன்றே என்ற தத்துவம் வலிமையாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.
  • சிவபெருமானின் உருவம் பளிங்கு போன்ற வெண்மை நிறமானது, ஆனால் அவரது இடது பாதியான தேவியின் உருவமோ சிவப்பு நிறத்திலானது.
  • அவர்கள் இருவரும் பக்கத்து பக்கத்தில் அமர்ந்து கொண்டு இருக்கையில், அவளது கனத்த மார்பகத்தினால் அவள்  முன்புறம் சற்றே குனிந்து உட்கார்ந்து இருக்கையில், அவளது மார்பகம் சிவபெருமானின் வலது பக்கத்து இதய பகுதியை  மறைந்து கொண்டு உள்ளதை பார்க்கும்போது அவள் சிவபெருமானை மெல்ல மெல்ல முற்றிலும் தன் உருவால் மறைத்து விடுவாளோ என்று எண்ணத் தோன்றுகின்றது. அர்த்தநாரீஸ்வரர் என்ற தோற்றத்தில் இருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு இருந்தபோது, பராசக்தி  ‘தானே சிவம், சிவமும் தன்னிலே’ என்பதை எடுத்துக் காட்டும் விதத்தில் அவருடைய முழு உருவத்தையும் மறைத்துக் கொண்டு தனது உருவைக் காட்டுகிறாள் என தத்துவார்த்தமாக  ஆதி சங்கரர் இந்த ஸ்லோகத்தில் கூறி உள்ளார்.
  • சிவபெருமான் பளிங்கு கல்லை போன்ற வெண்மை நிறத்தில் இருந்தாலும் பராசக்தியின் சிவப்பு நிறத்தில் அது கலந்து விடுவதினால் இருவரும் சேர்ந்து இருக்கையில் இருவருமே சிவப்பு நிறத்திலான தோற்றத்தில்தான் காட்சி அளிக்கின்றார்களாம். சிவப்பு நிறத்தில்  காட்சி  தருவதினால் இரண்டாக இணைந்து உள்ள ரூபத்தில் வெண்மை நிறத்தவரான சிவபெருமானை பார்க்க முடியாமல் அந்த ரூபம் பராசக்தி என்றே எண்ணத் தோன்றுகின்றது. சிவபெருமானைப் போலவே தலை முடி மீது சந்திரனையும் சூட்டிக் கொண்டு இருக்கின்றாள், மூன்று கண்களையும் கொண்டு காட்சி தருகின்றாள் என்பதை எல்லாம் பார்க்கும்போது  சிவபெருமானையே தன்னுள் கிரகித்துக் கொண்டு விட்டாளோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
  • சௌந்தர்யலஹரியின் பல ஸ்லோகங்கள் தேவியின் அங்க அழகை விவரமாக விவரித்து உள்ளன. அவை  வெளிப் பார்வைக்கு விரசமாக தோற்றம் அளிக்கலாம். ஆனால்  அதை படிக்கும் உண்மையான பக்தர்கள், தனது தாயார் ஸ்தானத்தில் உள்ள அன்னை சாமுத்ரிகா லஷணத்தை பிரதிபலிக்கின்றாள் என்பதை உணர்வார்களே தவிர அன்னையின் அழகை வேறு கோணத்தில் பார்க்க மாட்டார்கள்.
  • சாமுத்ரிகா லட்சணம் என்பது ஒருவரின் உடல் அமைப்புகளை பற்றி கூறும் சாஸ்திரம் ஆகும்.  ஆண்கள் மற்றும் பெண்களுடைய  உடலின் ஒவ்வொரு பகுதியும். எவ்வாறான அளவில்,எந்த  கோணத்தில்,இருக்க  வேண்டும் என்பது பற்றி  அகஸ்திய முனிவரால் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது.   மேலும் சிலைகளை செதுக்கும் சிறப்பிகளும் மற்றும் சிற்பங்களை வரையும் கலைஞர்களும் அந்த  அளவீடுகளைப் பின்பற்றுகிறார்கள்.
  • ஆதி சங்கரர் ஒரு பரிசுத்தமான யோகி. அவர் தியான நிலையில் இருந்தபோது பராசக்தியையும் பரமேஸ்வரரையும் நேரடியாக பார்த்தபோது, அவர்கள் எப்படி அவருக்கு தோற்றம் அளித்தார்களோ அவற்றைத்தான்   ஸ்லோகங்களில் விளக்கிக் கூறி உள்ளார்.
  • பராசக்தி இந்த ஜகத்திற்கே தாயார் என்பதினால், ஒரு பிறந்த குழந்தை தனது தாயாரின் அழகை அதன் மனதிற்குள்ளேயே, அது என்ன என்று தெரியாமல் ரசிப்பதை போலவேதான் ஆதி சங்கரரும் அன்னையின் உருவத்தை ஒரு குழந்தையாக இருந்தவாறு விளக்கி உள்ளார்).

——–
-24-

जगत्सूते धाता हरिरवति रुद्रः क्षपयते
तिरस्कुर्वन्नेतत्स्वमपि वपुरीशस्तिरयति ।
सदापूर्वः सर्वं तदिदमनुगृह्णाति च शिव-
स्तवाज्ञामालम्ब्य क्षणचलितयोर्भ्रूलतिकयोः ॥

ஜகத்ஸூதே தாதா ஹரிரவதி ருத்ர: க்ஷபயதே
திரஸ்குர்வந்நேதத்ஸ்வமபி வபுரீஶஸ்திரயதி ।
ஸதாபூர்வ: ஸர்வம் ததிதமனுக்ருஹ்ணாதி ச ஶிவ-
ஸ்தவாஜ்ஞாமாலம்ப்ய க்ஷணசலிதயோர்ப்ரூலதிகயோ:॥

இந்த ஸ்லோகத்தை தினமும்
1000 முறை 20 நாட்கள் தொடர்ந்து
பாராயணம் செய்தால் பேய் பூதங்கள்
மீதான பயம் விலகும், சூனியம்
வைத்திருந்தால் அது அழியும்

ஹே பராசக்தி,
பிரும்மா இந்த லோகத்தை படைக்கின்றார்
, விஷ்ணு   படைத்தவற்றைக் காப்பாற்றுகிறார், ருத்திரனோ பிரளய காலத்தில் (நான்கு யுகங்களின் முடிவில்) பிரபஞ்சத்தை அழிக்கிறார். அவர்களுக்கும் மேலான ஈஸ்வரரோ அந்த மூவரையும் தன்னுள் கிரகித்துக் கொண்டு தானும் மறைந்து விடுகின்றார். ஆனால் மெல்லிய கொடி போன்ற உனது முகத்தில் உள்ள புருவத்தின் உத்தரவை ஏற்று பிரபஞ்சத்தை படைக்க சதாசிவன் மீண்டும் அந்த நால்வரையும் தோற்றுவிக்கின்றார்.

  • (விளக்கம்:
    இந்த ஸ்லோகத்தில், தெய்வங்களில் முதலும் முழுவதுமான பராசக்தியே  தன் விருப்பப்படி பிரபஞ்சத்தை உருவாக்கி மீண்டும் அழிக்கிறாள் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.
  • பராசக்தியின் சரீரத்தில் உள்ளடங்கியவரும், பிரபஞ்சத்தை உருவாக்கும் சக்தியும் கொண்டவருமான, சிவபெருமானின் உச்ச வடிவமான சதாசிவனின் மேன்மையையும் இந்த ஸ்லோகம் எடுத்துக் காட்டப்பட்டு உள்ளது.
  • அனைத்து யுகங்களின் முடிவிலும் தோன்றும் பிரளய காலத்தின் போது, சதாசிவன் தனது அடுத்த கீழ் நிலை வடிவமான  ஈஸ்வரராக தோன்றி  பிரம்மா, விஷ்ணு மற்றும் ருத்ரர் ஆகிய மூன்று கடவுள்களையும் விழுங்கி, பிரபஞ்சத்தை மறையச் செய்கிறார். அவரும் மறைந்து விடுகின்றார், அதாவது சதாசிவனாகி தேவியுடன் இணைந்து விடுகின்றார் ஆனால்  பராசக்தி மறைவதில்லை.
  • இவ்வாறு, பரமேஸ்வரியின் சரீரத்திற்குள் உள்ளடங்கி நிற்கும் சதாசிவன், ஈஸ்வர ரூபத்தையும், அவர் மூலமாக ருத்ரனாகவும் தோற்றங்கள் எடுக்கின்றார். பிரபஞ்சம் மறைந்த சில காலத்திற்குப் பிறகுமீண்டும் முழுமையான தெய்வமான பராசக்தி மூலம், சதாசிவன் தோன்றி, அவளுடைய கட்டளையை ஏற்று   மீண்டும் பிரபஞ்சத்தை தோற்றுவிக்கின்றார்.
  • பராசக்தி தனது முகத்தில் உள்ள புருவங்களின் அசைவுகள் மூலம் அவருக்கு பிரபஞ்சத்தைப் படைக்க உத்தரவு பிறப்பிக்கசதாசிவனும் ஈஸ்வர ரூபத்தில் தோன்றி பிரம்மா, விஷ்ணு மற்றும் ருத்ரனை தோற்றுவித்து பிரபஞ்சத்தை படைக்கயுகங்களின் தோற்றமும் சக்கரமும்  சுழல்கின்றன.

 ———-
-25-

त्रयाणां देवानां त्रिगुणजनितानां तव शिवे
भवेत् पूजा पूजा तव चरणयोर्या विरचिता ।
तथा हि त्वत्पादोद्वहनमणिपीठस्य निकटे
स्थिता ह्येते शश्वन्मुकुलितकरोत्तंसमकुटाः ॥

த்ரயாணாம் தேவாநாம் த்ரிகுணஜனிதாநாம் தவ ஶிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர்யா விரசிதா ।
ததா ஹி த்வத்பாதோத்வஹனமணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே ஶஶ்வன்முகுலிதகரோத்தம்ஸமகுடா: ॥

இந்த ஸ்லோகத்தை தினமும்
1000 முறை 45 நாட்கள் தொடர்ந்து
பாராயணம் செய்தால்
அதிகார பிராப்தி கிடைக்கும்

ஹே பராசக்தி,
ரஜஸ்
, சத்வ, மற்றும் தமோ குணங்களைக் கொண்ட மூன்று தெய்வங்களான பிரும்மா  விஷ்ணு, மற்றும் ருத்திரன் போன்ற மூவரும், நவரத்தினங்களில் ஆன தமது கிரீடங்களின்  மேல்புறத்தில் கைகளை  தூக்கி வைத்துக் கொண்டு, எப்போதுமே பராசக்தியை வழிபட்டுக் கொண்டு  இருப்பதினால், ஒருவர் பராசக்தியின் பாதங்களுக்கு செய்யும் பூஜையானது அந்த மூன்று தெய்வங்களின் சிரஸிற்கும் சேர்த்தே செய்யப்படும் விதத்திலான பூஜையாக அமைந்து விடுகின்றது.

  • (விளக்கம்:
    பராசக்தியை பரபிரும்மன் என்றும் கூறுவது உண்டு. பரபிரும்மன் என்பது அசைவற்றது, நிலையானது, அழிவற்றது போன்ற பல குணங்களைக் கொண்டது மட்டும் அல்ல கண்களுக்கு தெரியாத சக்தி ஆகும்.  அந்த பரபிரும்மன் எல்லா குணங்களுக்கும் அப்பாற்பட்ட சக்தி ஆகும். படைப்பாற்றலைக் கொண்ட சதாசிவனை  உள்ளடக்கிய சக்தி. சதாசிவன் சில சமயங்களில் சிவன் அல்லது ஈஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார் என்பதின் காரணம் சதாசிவனிடமிருந்து ஈஸ்வரன் வெளிப்பட,  ஈஸ்வரனில் இருந்து ருத்திரன் என்ற பெயரில் சிவன் வெளிப்படுகிறார்.
  • ருத்ரன் பிற இரு தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு ஆகிய இருவருடன் சேர்ந்து ஈஸ்வரரிடம் இருந்து வெளி வந்தவர்.   சதாசிவம் எனும் சக்தி பொதுவாக  சிவன் என்றும் ஈஸ்வரன் என்றும் கூறப்படுகின்றது. எதுவாக இருந்தாலும் சதாசிவனும் பராசக்தியும் ஒன்றிணைந்த சக்திகள், ஒருவரிடம் இருந்து இன்னொருவரை பிரிக்க முடியாத சக்திகள் ஆகும்.
  • பிரம்மா, விஷ்ணு மற்றும் ருத்திரன் ஆகிய மூவரும் முறையே சத்வ, ரஜஸ் மற்றும் தமஸ் எனும் மூன்று குணங்களை கொண்டவர்கள். அந்த அனைத்து குணங்களும் பராசக்தியிலிருந்து பெறப்பட்டவை.
  • சத்வ குணம் என்பது தூய்மை மற்றும் அறிவைக் குறிக்க, ரஜோ குணம் என்பது பேரார்வத்தின் செயல்பாடு மற்றும் தமோ குணம் என்பது செயலற்ற தன்மை அல்லது அறியாமை என்பவற்றைக் குறிக்கின்றன.
  • அந்த மூன்று தெய்வங்களும் பராசக்தியின் கீழ் நிலை தெய்வங்கள் ஆகும். இது முந்தைய ஸ்லோகத்தில் விளக்கப்பட்டு உள்ளன.
  • பராசக்தி அழிவற்றவள், நிலையானவள் என்பதினால் அந்த மூன்று தெய்வங்களும், நவரத்தினங்களில் ஆன தமது கிரீடங்களின்  மேல்புறத்தில் கைகளை  தூக்கி வைத்துக் கொண்டு, எப்போதுமே பராசக்தியை வழிபட்டுக் கொண்டு  நிலையாக வணங்கி வருகின்றார்கள் என்பதினால் பக்தர்களால் நேரடியாக பராசக்தியின் பாதங்களை பார்க்க முடிவது இல்லை. எனவே பராசக்தியை வழிபடுபவரினால்  செய்யப்படும் எந்தவொரு பிரார்த்தனையும் அந்த மூன்று தெய்வங்களைக் கடந்தே செல்கின்றன.
  • பக்தர்களின் பிரார்த்தனைகள் பராசக்தியின் பாதங்களை அடைவதற்கு முன், மூன்று தெய்வங்களை அந்த பிரார்த்தனையின்  பகுதி அடைந்து அவர்களை தாண்டிக் கொண்டு பராசக்தியின் பாதங்களை  அடைகின்றன என்பதினால்  பராசக்தியின் பாதங்களில் போடப்படும் மலர்கள் நமஸ்கரித்த வண்ணம் உள்ள மூன்று தெய்வங்களின் தலையிலும் விழுகின்றது என்பதினால், இந்த ஸ்லோகத்தை தியானித்தவாறு பராசக்தியை வழிபடுகையில் பிற மூன்று தெய்வங்களையும் ஆராதனை செய்த பலன் கிடைக்கும் என்பது இந்த ஸ்லோகத்தின் தத்துவம்.

………….ஆனந்தலஹரி  தொடர்கின்றது  26 -50