சாந்திப்பிரியா

முன்னுரை

திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலாபதி தென் இந்திய மக்களுக்கு மட்டும் கடவுள் அல்ல. இந்த உலகின் அநேக கோடி மூலைகளிலும் உள்ளவர்களும் அவரை பிரார்த்திக்காமல் இருப்பதில்லை. காரணம் ஸ்ரீ வெங்கடாசலபதி என்றாலே செல்வத்தைத் தருபவர் என்ற நம்பிக்கை உண்டு. செல்வத்தை மட்டும் அல்ல, நாம் வேண்டியதையும் அருள்பவர் ஏழுமலையான் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. அனைத்துக்கும் மேலாக இந்த உலகின் கண்கண்ட தெய்வம், கலியுக வரதர் என்று அவரை ஆழமாக நம்புபவர்கள் ஏராளம், ஏராளம். வாழ்நாளில் ஒருமுறையேனும் திருப்பதிக்கு சென்று அந்தக் கடவுளை தரிசிக்காதவர்கள் தம் வாழ்நாளின் பெரும் புண்ணியத்தை இழந்து விட்டவர்கள் என்று நம்புபவர்கள்தான் எத்தனை பேர் ! அப்படிப்பட்ட அந்தக் கடவுள் இந்த பூமியில் அவதரித்தக் கதை மிகவும் அற்புதமானது, ஆனந்தத்தைத் தருவது.

ஆனால் அவர் ஜீவ சரித்திரம் வாய்மொழிக் கதையாகவே வம்சாவளியாக வந்துள்ளது. ஒரு மகாபாரதக் காவியத்தைப் போல, ஒரு ராமாயணத்தைப் போல, வேதங்களைப் போல அவருடைய ஜீவ சரித்திரம் எழுதி வைத்திருக்கப்படவில்லை என்றாலும், அவருக்குள்ள கோடானு கோடி பக்தர்களின் எண்ணிக்கை அவர் ஜீவ சரித்திரம் எழுதப்பட்டு இருந்தால் என்ன, எழுதி வைக்கப்படாமல் இருந்தால் என்ன, வாய் மொழி கதையாகவே இருந்தாலும், எம்மை வாழ வைத்த தெய்வத்தின் கதை என்றே நம்பி அவரைக் காணத் துடிக்கிறார்கள். திருப்பதி வெங்கடேசப் பெருமான் அவதரித்த கதை கிருஷ்ண அவதாரம் முடிந்து வெகு காலத்துக்குப் பிறகு நடந்தது என்பதே உண்மை. கிருஷ்ணருக்கும் திருப்பதி வெங்கடேசப் பெருமான் அவதரித்த கதைக்கும் என்ன தொடர்ப்பு என்று யோசனை செய்கிறீர்களா? அவர் ஜீவ சரித்திரம் படியுங்கள், அது புரியும்.

திருப்பதிக்குச் சென்று ஸ்ரீ வெங்கடாசலபதியை தரிசிக்க முடியாதவர்கள், நம் வேண்டுதலை ஒரு காகிதத்தில் எழுதி, ஒரு ரூபாயையும் மஞ்சள் துணியில் முடிந்து வைத்து விட்டு, அவற்றை ஸ்வாமி பீடத்தில் வைத்து அவர் ஜீவ சரித்திரத்தை தினமும் ஒருமுறை என தொண்ணூறு நாட்கள் தொடர்ந்து படித்து வந்தால் நாம் வேண்டியது நிறைவேறும் என்பார்கள். அது பிரார்த்தனை செய்யும் நம்பிக்கையின் அடிப்படை தன்மையை கொண்டது என்றும், தொண்ணூறு நாட்கள் தொடர்ந்து படித்து முடிந்ததும், நமக்கு என்று நேரம் கிடைக்குமோ அன்று நாம் உள்ள ஊரில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதியின் ஆலயத்துக்குச் சென்று, வேண்டுதலுக்கு முடிந்து வைத்த நாணயத்தையும், பிரார்த்தனையை எழுதி வைத்துள்ள காகிதத்தையும் உண்டியலில் சேர்த்து விட்டால் எண்ணம் நிறைவு பெற்று விடும் என்று என்னிடம் கும்பகோணத்தில் இருந்த திரு ஸ்ரீனிவாசச்சாரியார் என்ற ஒரு பண்டிதர் சில வருடங்களுக்கு முன்னர் கூறினார். அதையே இன்றும் சில அனுபவ பண்டிதர்கள் கூறுகிறார்கள்.

முழு புத்தகத்தையும் ஒரு நாளைக்கு ஒருமுறை என தொண்ணூறு  நாட்கள் படிக்க வேண்டும். ஜீவ சரித்திரத்தை பாராயணம் செய்யும் முறை பற்றி சிலருக்கு சில சந்தேகம் ஏற்படலாம் அதாவது புத்தகத்தை தொண்ணூறு நாட்களில் படித்து முடிக்க வேண்டுமா?  அப்படி என்றால் தினமும் எத்தனை பக்கங்களை படிக்க வேண்டும்?

இந்த பாராயண புத்தகத்தை ஒரு நாளைக்கு ஒரு முறை முழுவதும் படிக்க வேண்டும். ஒரே நேரத்தில் தொடர்ந்து படித்து முடிக்க நேரம் இல்லை என்றால் தவறில்லை.  நான்கு அல்லது ஐந்து பாகங்கள் என இரண்டு அல்லது மூன்று  வேளைகளாகவும் ஒரு நாளில் இதை பிரித்துக் கொண்டு படித்து முடிக்கலாம். ஆனால் ஒரு நாளில் அந்த புத்தகத்தை தொடர்ந்தோ அல்லது சில பகுதியாக   பிரித்துக் கொண்டு  முழுவதுமாக படித்து முடிக்க வேண்டும்.

இதற்குக் காரணம் அனைவராலும் திருப்பதிக்கு செல்ல முடிவதில்லை, அங்கு சென்றாலும் அவரை தரிசனம் செய்வதில் பல சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறார்கள், ஆகவே இந்த பூமியின் கண்கண்ட பிரதிக்ஷ்ய தெய்வமான அவரை எங்கிருந்தபடியும் நாம் முழு நம்பிக்கையுடன் துதித்து வேண்டினால் நமக்கு வேண்டியதை தந்தருள்கிறார் என்று அனுபவ பூர்வமான, தாம் அனுபவித்த சொந்த உண்மையைக் கூறுகிறார்கள். அதற்கு முன்னர் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்று திருப்பதி ஏழுமலையான் திருப்பதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகின்றார் என்றால் அதற்கு விதை போட்டவர் நாரத முனிவரே. அவர் மேற்கொண்ட முயற்சியினால்தான் திருப்பதி வெங்கடேஸ்வரர் அவதரித்தார். ஆகவே திருப்பதி வெங்கடேச பெருமானை நாம் தரிசிக்கப் போனால், நாரத முனிவரை முதலில் வணங்கி விட்டே திருப்பதி ஏழுமலையானை வணங்க வேண்டும் என்று நான் எண்ணுகிறேன். நாம் இனி அவர் ஜீவ சரித்திரத்தைப் படிப்போம்.

 பாராயணம் தொடக்கம்

கிருஷ்ணர் யசோதைக்கு கொடுத்த வாக்கு

மஹாபாரத யுத்தம் முடிந்தவுடன் பகவான் கிருஷ்ணர் தனது அவதாரத்தை முடித்துக் கொண்டு விட்டவுடன்  பகவான் விஷ்ணு வேறு அவதாரம் எதையும் எடுக்கவில்லை. ஆனால் கிருஷ்ணரின் மறைவுக்குப் பிறகு பூமியில் அதர்மம் ஓங்கத் துவங்கி இருந்தது. தர்ம நெறி மங்கத் துவங்கி, மக்கள் அவரவர் மனம் போன போக்கில் கட்டுக் கோப்பு இல்லாமல் வாழத் துவங்கினார்கள். கல்கி யுகம் பிறக்க இன்னும் சில யுகங்கள் பாக்கி இருந்தது. கல்கி யுகம் பிறக்கும் முன்னரே மீண்டும் நான் அவதரித்து இந்த பூமியைக் காப்பேன் என்று அர்ஜுனனுக்கு  பகவத் கீதை மூலம் பகவான் கிருஷ்ணர் கூறி இருந்தார். ஆனால் அவர் அவதரிக்க உள்ள சூழ்நிலையே காணப்படவில்லை. அதனால் பல காலத்துக்குப் பின்னால் ஏற்பட இருந்த விளைவுகளை மஹரிஷி நாரதர் எண்ணிப் பார்க்கத் துவங்கி கவலையுற்றார். அவர் மனம் பின்னோக்கி ஓடியது.

ஒருமுறை கோகிலத்தில் இருந்த யசோதை கவலையுடன் அமர்ந்து இருந்தாள். அப்போது அங்கு சென்றிருந்த மகரிஷி நாரதர் யசோதை கவலையுடன் இருப்பதைக் கண்டார். வீடு அமைதியாக இருந்தது. ‘என்ன தாயே, வருத்தமாக அமர்ந்து இருக்கிறீர்கள்? என்ன நடந்தது?’ என்று அவர் கேட்கவும் பகவான் கிருஷ்ணர் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. யசோதை துயரமாக இருக்கிறாள், மகரிஷி நாரதர் வேறு அங்கு இருக்கிறார். எதோ நடக்கிறது என்பதை உணர்ந்த பகவான் கிருஷ்ணர் ஒரு அர்த்த புஷ்டியுடன் மகரிஷி நாரதரை நோக்கி ‘என்ன நடந்தது’ என்று கண்களால் ஜாடைக் காட்டிக் கேட்டார். ‘தெரியவில்லையே என்று ஜாடைக் காட்டிய பின் யசோதையை காட்டி அவளையே கேள்’ என்பதை போல ஜாடைக் காட்டினார்.

பகவான் கிருஷ்ணர் யசோதையின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு ‘என்ன ஆயிற்று அம்மா, என்ன ஆயிற்று…….நீ ஏன் வருத்தத்துடன் இருக்கிறாய்?’ என்று கொஞ்சலாகக் கேட்க யசோதையின் கண்களில் நீர் நிரம்பி வழிந்தது. கண்களைத் துடைத்துக் கொண்ட யசோதை ‘கிருஷ்ணா, நான் இத்தனை துரதிஷ்டசாலியாக இருக்கிறேனே என்பதை நினைத்து கண்ணீர் வடிக்கிறேன்’ என்றாள். ‘என்ன அம்மா இப்படியெல்லாம் பேசுகிறாய்? நான் உன் அருகில் இருக்கையில் உனக்கு என்னம்மா கஷ்டம். எதற்காக தேவை இல்லாமல் மனத்தைக் குழப்பிக் கொண்டு இப்படி எல்லாம் பேசுகிறாய்?’ என்று பகவான் கிருஷ்ணர் கேட்க யசோதை கூறினாள் ‘கிருஷ்ணா, நான் இன்னும் எத்தனைக் காலம் இப்படியே இருக்கப் போகிறேன். நான் இறப்பதற்கு முன் உனக்கு ஒரு திருமணம் நடத்தி வைத்து, அந்த ஆனந்தத்தை கண்டு களிக்காமல் மறைந்து விடுவேனோ என்று என் மனதில் வேதனை வந்து விட்டது. நீ ஒரு திருமணம் செய்து கொண்டு என் ஏக்கத்தை போக்குவாயா?’ என்று மனம் வருந்தி அழலானாள்.

அதைக் கேட்ட பகவான் கிருஷ்ணரின் கண்களிலும் நீர் நிறைந்தது. அதை அவர் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தான் அவதரித்ததிற்கு காரணம் இருந்தது. அதை முதலில் நிறைவேற்றி முடிக்க வேண்டும். அதன் பின்னரே திருமணம் என்பதைக் குறித்து யோசனை செய்ய வேண்டும். இப்போது திடீர் என திருமணத்தைப் பற்றிக் கேட்டால் எப்படி நிறைவேற்றுவது எனக் குழம்பினார். அப்போது அவருக்கு ருக்மணியுடன் திருமணம் நடைபெற்று இருக்கவில்லை. ஆகவே யசோதைக்கு ஒரு வாக்கு கொடுத்தார் ‘அம்மா, நான் முறைப்படி திருமணம் செய்து கொள்ளும்போது அந்த திருமணம் உன் முன்னிலையில் நிச்சயமாக நடக்கும். நீயே அதை நடத்தி வைப்பாய். ஆனால் அது இப்போது நடக்காது என்பதற்கு சில காரணங்கள் உள்ளன. அந்தக் காரணங்களை என்னால் இப்போது கூற முடியாது.  நான் அடுத்த பிறவி எடுக்கும்போது நான் உனக்கு கொடுக்கும் இந்த வாக்குறுதியை சத்தியமாக நிறைவேற்றி வைப்பேன்’ என்றார். விதிப்படி அவர் ருக்மணியை கவர்ந்து வந்து திருமணம் செய்து கொள்ள வேண்டி இருந்ததினால்தான் அதை முன்கூட்டியே அவர் தாயாருக்கு தெரிவிக்க முடியவில்லை.
அதன் சில காலத்துக்குப் பிறகு யசோதை மறைந்து விட்டாள். அதன் பின் பல நிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்து விட்டன. யாதவ குலமும் அழிய, பகவான் கிருஷ்ணரும் மறைந்து விட்டார்.

இந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த மகரிஷி நாரதர் எண்ணலானார் ‘யசோதைக்கு கிருஷ்ணாவதாரத்தில் வாக்கு தந்துள்ள விஷ்ணு பகவான் மீண்டும் யாராக அவதரிப்பார்? யசோதை எப்படி அவருக்கு தாயாக பிறப்பாள்? அப்படி அவதரிக்கும் பகவான் விஷ்ணுவின் மனைவியாக லஷ்மி தேவி அல்லவா பிறக்க வேண்டும். அப்படி என்றால் லஷ்மி தேவியும் மீண்டும் ஏதாவது அவதாரத்தில் அவதரிக்க உள்ளாரா? அப்படி என்றால் அவை அனைத்தும் எங்கு நடக்க உள்ளது?’ என்றெல்லாம் எண்ணிக் கொண்டு அந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த மகரிஷி நாரதர் மனதில் கவலை சூழ்ந்து விட்டது.

யாதவ குலம் சின்னாபின்னமாகி அழிந்தப் பின் அப்போது துவங்கிய ஒழுங்கீனம் வேகமாக பூ உலகில் பரவி விட்டது. ஆகவே கூடிய விரைவில் பூவுலகப் பிறவிகள் ஒழுங்கின்றி தான் தோன்றித்தனமாக வாழ்வதைக் கட்டுப்படுத்தி அவர்களை நல் வழியில் கொண்டு செல்லவில்லை என்றால் கலி யுகம் பிறக்கும் முன்னரே மீண்டும் பிரபஞ்சம் அழிந்து விடும். கல்கி அவதாரத்துக்கும் பல யுகங்கள் பாக்கி இருந்தது. ஆகவே அதற்கு இடையில் பூமியில் நடைபெற்றுக் கொண்டு இருந்த தீய செயல்கள் தடுத்து நிறுத்த என்ன செய்யலாம்?. இதுவே அப்போது மகரிஷி நாரதர் முன் நின்றிருந்த கேள்விகள்.

நாரதர் கைலாயம் சென்ற கதை

இந்த காரணங்களை மனதில் ஏந்தி  இருந்த மகரிஷி நாரத முனிவர் கவலை அடைந்தார். ஆகவே பகவான் கிருஷ்ணர் அவதாரத்தில் இருந்த பகவான் விஷ்ணு யசோதைக்கு கொடுத்த வாக்கின்படி இப்போது நிச்சயமாக அவர் ஒரு அவதாரம் எடுக்க நியாயம் உள்ளது. ஆனால் அது எப்போது என்பது தெரியவில்லையே என மகரிஷி நாரதர் எண்ணினார். அதைக் குறித்து யாரிடம் சென்று யோசனை கேட்கலாம் என எண்ணியவர் தனது தந்தையின் நினைவு வர அவரைக் காண பிரும்ம லோகத்துக்கு கிளம்பிச் சென்றார். மகரிஷி நாரத முனிவர் பகவான் பிரும்மாவின் புதல்வர். பிரும்ம லோகத்துக்கு செல்லத் துவங்கிய மகரிஷி நாரதரை வழியிலேயே அவர் தந்தை பகவான் பிரும்மன் சந்தித்தார். ‘ என்ன நாரதா, இத்தனை அவசரம் அவசரமாக எங்கே போகிறாய்?’ என்று பகவான் பிரும்மா கேட்டதும், மகரிஷி நாரதர் தனது கவலையின் விவரத்தை எடுத்துரைத்தார். அதைக் கேட்ட பகவான் பிரும்மாவோ தானும் அதைக் குறித்து விவாதிக்கவே கைலாயத்துக்கு சென்று கொண்டு இருப்பதாகக் கூறி மகரிஷி நாரதரையும் தன்னுடன் அழைத்துச் செல்ல மகரிஷி நாரதரும் மகிழ்ச்சியுடன் தனது தந்தையுடன் கைலாயத்தில் இருந்த பகவான் சிவபெருமானின் சபைக்கு சென்றார்.

அவர்கள் கைலாயத்துக்கு சென்று இருந்த நேரத்தில் பகவான் சிவபெருமானின் அரச சபையில் அனைத்து தேவதைகளும், தேவ கணங்களும், கடவுட்களும், பூத கணங்களும் கூடி இருந்தார்கள். அப்போது அந்த சபையில் விஷ்ணு பகவான் இல்லை. பகவான் பிரும்மாவுடன் வந்த மகரிஷி நாரதருக்கு சிவபெருமான் தனி ஆசனம் தந்து அதில் அமரச் செய்து பெருமை தந்தார்.  முதலில் மகரிஷி நாரதரிடம் பேசிய பகவான் சிவபெருமான் அவர் முகத்தில் காணப்படும் கவலை ரேகைக்கான காரணம் என்ன என்று வினவினார். மகரிஷி நாரதரும் சற்றும் யோசனை செய்யாமல் தனது கவலைக் குறித்து அங்கு கூடி இருந்த அனைவரிடமும் கூறி, கிருஷ்ணாவதாரத்துக்குப் பிறகு எந்த அவதாரத்தையும் விஷ்ணு பெருமான் எடுக்கவில்லை என்பதினால், விஷ்ணு பகவான் மீண்டும் கலியுக வரதராக அவதரித்து, கலியுகம் பிறப்பதற்கு முன்னரே மக்களின் மனதில் தர்ம நெறி, பக்தி போன்றவற்றை வளர்த்து மக்களின் தீய செயல்களின் தாக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்கு என்ன வழி செய்யலாம் என்று அங்கு கூடி இருந்தவர்களிடம் ஆலோசனைக் கேட்டார்.

மகரிஷி நாரதர் பேசி முடித்ததும், வேறு சிலரும் அவர் கூற்றை பிரதிபலிப்பது போலவே தமது அபிப்பிராயங்களை எடுத்துக் கூற அனைத்தையும் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்த சபையினர் கால நிர்ணய கோலப்படி இந்த சங்கடத்திற்கு பிருகு முனிவர் மூலமே நிவாரணம் கிடைக்கும் என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளதினால், நாரத முனிவர் பிருகு முனிவரிடம் சென்று அவரை அதற்கு தக்க நிவாரணம் காண ஏதாவது செய்யுமாறு கேட்டுக் கொள்ள வேண்டும் என முடிவு செய்தார்கள். அதைக் கேட்ட மகரிஷி நாரதர் சங்கடம் அடைந்தார். தன் கவலையை எடுத்துரைக்க தான் அங்கு வந்து எதையோ கூறப் போய் தானே சங்கடத்தில் வீழ்ந்து விட்டோமே என கவலைக் கொண்டார்.

பிருகு முனிவர் மகா முன்கோபி. அவரிடம் நேரடியாக கேட்கப் போய்  அவர் மறுத்து விட்டால் காரியம் வீணாகி விடும். ஆகவே என்ன செய்வது? அவரை தம் வழிக்கு அழைத்து வர என்ன செய்யலாம் என்ற யோசனைகள் அவர் மனதை சூழ்ந்தன. அப்போது அவரைப் பார்த்து பகவான் சிவபெருமானும், பகவான் பிரும்மாவும் கூறினார்கள் ‘நாரதா, நீ பல்வேறு விளையாட்டுகள் நடத்தக் காரணமாக இருந்துள்ளாய். உனக்கு தெரியாத தந்திரங்கள் கிடையாது. உன்னை விட்டால் இந்த காரியத்தை வேறு எவராலும் வெற்றிகரமாக செய்ய முடியாது. ஆகவே இந்த காரியத்தில் உனக்கு பூரண வெற்றி கிடைக்க எங்கள் ஆசிர்வாதங்கள் உனக்கு இருக்கும்’ என்று பல்வேறாக அவரை புகழ்ந்து கூறினார்கள். அதைக் கேட்ட மகரிஷி நாரதரும் சரி வருவது வரட்டும், என்ன நடக்க வேண்டும் என்றுள்ளதோ, அதுவே நடக்கும் என தீர்மானித்தவர் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு பிருகு முனிவரைக் காண பூலோகத்துக்குக் கிளம்பிச் சென்றார். அனைத்து சம்பவங்களுமே கால நிர்ணயப்படி அல்லவா நடக்கத் துவங்கி இருந்தது !!

நாரத லீலை துவங்கியது

யோசனை செய்தவாறே பிருகு முனிவரை தேடிக் கொண்டு மகரிஷி நாரதர் பூலோகத்தை அடைந்தார். முனிவர்கள் ஒரு இடத்தில் தங்குவது இல்லை.  எங்கெல்லாம் யாகங்கள் நடைபெறுமோ அந்த யாகங்களில் கலந்து கொண்டவாறு இருப்பார்கள். ஆகவே யாகங்களில் தேடினால் அவரைக் கண்டு பிடித்து விடலாம் என்று எண்ணினார்.  மகரிஷி நாரதருக்கு கங்கைக் கரையில் பெரிய யாகம் ஒன்று நடைபெறுவதாகவும், அங்குதான் அனைத்து முனிவர்களும் உள்ளதாகவும் செய்தி கிடைக்க விரைந்து கங்கைக் கரையை அடைந்தார். அங்கு சென்று கேட்டால் பிருகு முனிவர் உள்ள இடம் தெரிந்து விடும். கங்கை நதியோ மிகப் பெரிய நதி. அதன் எந்தக் கரையில் போய் தேடுவது என்பது எளிதல்ல என்றாலும் யாகம் என்று கூறினாலே அது அநேகமாக இமயமலை அடிவாரப் பகுதியில்தான் நடைபெறும் என்பது மகரிஷி நாரதருக்கு தெரிந்து இருந்ததினால் இமய மலையின் அடிவாரத்தில் ஓடிய கங்கையில் இருந்த யாகசாலையைத் தேடி நடக்க அவர் எதிர்பார்த்தது வீணாகவில்லை. கங்கைக் கரையில் பெரிய யாகம் நடை பெற்றுக் கொண்டு இருந்தது. அந்த யாக சாலையில் பல முனிவர்கள் கூடி இருந்தார்கள். அங்கு   அவர் தேடிக் கொண்டு இருந்த பிருகு முனிவரும்  இருந்ததைக் கண்டார். யாகசாலையை மகரிஷி நாரதர் அடைந்ததும், அனைவரும் அவரை அன்புடன் வரவேற்று உபசரித்தார்கள். மகரிஷி நாரதர் மா முனிவர் அல்லவா!

யாகத்தின் இடைவேளையில் யாகத்தின் தலைமை முனிவரான காஷ்யபரிடம் அந்த யாகம் என்ன காரணத்துக்காக நடைபெறுகிறது என்று மகரிஷி நாரத முனிவர் கேட்க, காஷ்யபர் அது உலகின் பொது நன்மைக்காக நடைபெறுவதாகவும், கூடிய விரைவில்   கலியுகம் பிறக்க உள்ளதினால் அது பிறக்கும் முன் மக்கள் மனதில் நல்லொழுக்கத்தைப் பெருக்கி, ஆன்மீக பக்தியை வளர்த்து வைக்க வேண்டும் என்றும், அப்படி செய்தால் கலி யுகத்திலும் மக்கள் அமைதியுடன், தர்ம நெறியுடன் இருந்து வாழ வழி வகுக்கலாமே என்று ரிஷி முனிவர்கள் எண்ணுவதினால் அதற்கு உதவுமாறு மும்மூர்த்திகளிடம் அந்த வேண்டுகோளை வைக்கும் வகையில் அந்த யாகம் நடை பெறுவதாகவும் கூறினார்.

தான் வந்த வேலை சுலபமாக நடப்பதை எண்ணி மகரிஷி நாரதர் மகிழ்ந்தார். மகரிஷி நாரதர் புன்முறுவலித்தவாறு அவரிடம் கேட்டார் ‘முனிவரே, மிகவும் நல்ல விஷயத்துக்காக நீங்கள் செய்யும் இந்த யாகம் வெற்றி பெற வேண்டும் என்று மனப்பூர்வமாக ஆசி கூறுகிறேன். சரி வந்ததுதான் வந்தேன். நானும் இதில் கலந்து கொண்டு இந்த யாகத்தில் அதித்தியை ஏற்க வருவரிடம் ஆசிகளைப் பெற்றுக் கொண்டு செல்கிறேன்’ என்று பொடி வைத்துப் பேசிய பின் அங்கு அமர்ந்து கொண்டார்.

அதித்தி என்று மகரிஷி நாரதர் கூறியதும்தான் அங்கிருந்த ரிஷி முனிவர்களுக்கு ஞானம் வந்தது. ‘அடடா…அதித்தியாக மும்மூர்த்திகளில் யாரை அழைக்கலாம் என யோசனை செய்யாமலேயே யாகத்தை ஆரம்பித்து விட்டோமே, நல்ல வேளை மகரிஷி நாரத முனிவர் தக்க நேரத்தில் வந்து நம் கண்களை திறந்து விட்டார்’ என எண்ணியவாறு அதித்தியாக யாரை அழைக்கலாம் என அவர்களுக்குள் விவாதம் செய்யத் துவங்கினார்கள். யாராலும் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் மூர்த்தியை அழைப்பதில் உடன்பாடு ஏற்படாததினால், மகரிஷி நாரதரிடமே அதற்கான ஆலோசனையை அவர்கள் கேட்க அவர் கூறினார் ‘முனிவர்களே, இந்த யாகம் மிக முக்கியமான யாகம். உலக நன்மையை மனதில் கொண்டு இதை செய்கிறீர்கள். கலி யுகம் பிறக்கும் முன் மக்களுக்குத் தேவை அமைதியான எண்ணம், ஆன்மீக எழுச்சி மற்றும் பக்தி மார்க்கம் போன்றவை. அவை உண்மையில் ஏற்பட வேண்டும் என்றால் அதை அளித்து அருள் புரியும் வகையில் உள்ள குணம் கொண்டவர் ஒருவரே அதித்தியாக இந்த யாகத்துக்கு வர வேண்டும். ஆகவே மும்மூர்த்திகளில் யாரை அழைக்க வேண்டும் என நீங்கள் முடிவு செய்யுங்கள்’ என்றார். ஆனால் முனிவர்கள் அதை முடிவு செய்ய முடியாமல் திண்டாடுவதினால் மகரிஷி நாரதரே அதற்கான விடையைத் தருமாறு வேண்டினார்கள்.

மகரிஷி நாரதர் கூறினார் ‘இந்த பிரபஞ்சத்தில் மூன்று குணங்கள் கொண்டவர்களே உள்ளார்கள். அந்த மூன்று குணங்களான ரஜஸ், தமஸ் மற்றும் ஸாத்வீக குணங்களைக் கொண்ட கடவுளை பிரதிபலிப்பவர்கள் இந்த பிரபஞ்சத்தில் உள்ளவர்கள். இந்த பூமியில் அமைதி நிலவ வேண்டும், மனிதர்கள் ஸாத்வீகர்களாக, இரக்கம் கொண்டவர்களாக, பொறாமை இல்லாதவர்களாக, அக்கிரமம் செய்யாதவர்களாக, ஆன்மீக மனம் கொண்டவர்களாக, தர்ம நெறி உள்ளவர்களாக மனதார மாற வேண்டும் என்றால் அந்த சூழ்நிலையை கொடுக்க அந்த குணங்களைக் கொண்ட கடவுளால் மட்டுமே முடியும். ஆகவே அந்த குணங்களில் அமைதியான குணமான ஸாத்வீக குணம் கொண்டவர்களாக மனிதர்கள் பூமியில் மாற வேண்டும் எனில் அந்த குணத்தைக் காட்டும் கடவுளே அதித்தியாக வர வேண்டும். அப்படிப்பட்ட குணத்தைக் கொண்டவர் அங்கு வந்து யாக அவிர் பாகத்தை ஏற்று யாகத்தை நிறைவேற்றித் தர வேண்டும் என்ற வகையில் நீங்கள் யாரையாவது அழைக்கலாம்’ என்று மகரிஷி நாரதர் கூற சில முனிவர்கள் ‘நாரதப் பெருமானே தயவு செய்து அந்த மூன்று குணங்களின் முக்கிய ரூபமான சாத்வீக குணம் கொண்டவரை எமக்குக் அடையாளம் காட்ட முடியுமா?’ என்று கேட்டார்கள்.

அதையே எதிர்பார்த்துக் காத்திருந்த மகரிஷி நாரதர் கூறினார் ‘மகா முனிவர்களே, நீங்கள் கேட்டது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் அந்த மூன்று ரூபங்களை கொண்டவர் யார் என்பதை நான் எப்படி அடையாளம் காட்டுவது? அனைவருமே ஒரே குணத்தைக் பிரதிபலிப்பவர்கள் இல்லை என்பதும் உண்மை. அவ்வபோது அந்தந்த நிலைக்கேற்ப அவரவர் குணங்கள் வெளிப்படுகின்றன என்பதும் உண்மையே. ஆனால் இப்போது இந்த யாகத்துக்கு அதித்தியாக வர வேண்டியவர், இந்த யாகத்துக்கு வரும் நேரத்தில் எந்த மன நிலையில் இருக்க வேண்டும் என்பதே முக்கியம். இந்த யாகத்தில் எந்த மன நிலையில் அவர் வருவாரோ, அதே மன நிலை இந்த உலகில் நிலவ அவர் ஆசி கூறுவார். அப்போது அது பலிக்கும். பின் வரும் விளைவுகளை ஆராயாமல் கண்மூடித்தனமாக தான் நினைத்ததை நடத்தும் குணத்தைத் தரும் ரஜோகுணத்தை வெளிப்படுத்துபவர் இங்கு தேவை இல்லை. நாளை, நாளை என நாளைக் கடத்திக் கொண்டு உடனடியாக செய்ய வேண்டிய எதையும் உடனே செய்யாமல், வரும் போது பார்க்கலாம் என சோம்பேறித்தனமாக உள்ள நிலையான தமஸ் குணம் கொண்டவரும் இங்கு தேவை இல்லை. ஆனால் அனைத்தையும் விவேகமாக ஆராய்ந்து, அமைதியாக சிந்தித்து, ஆழமான உணர்வுகளைக் கொண்டு, சினம் கொள்ளாமல் சாந்தமாக இருக்கும் ஸாத்வீக குணம் கொண்டவரே இங்கு தேவை. ஆகவே இந்த யாகத்துக்கு அதித்தியாக வர வேண்டும் என்று நீங்கள் விரும்பும் மூர்த்தியானவர், யார் உங்களில் அவர்களை அழைக்கச் செல்கிறார்களோ, அந்த நேரத்தில் அவர்களிடம் மும்மூர்த்திகளில் யார் சாத்வீக குணத்தை வெளிப்படுத்த உள்ளார் என்பதைப் பொறுத்து அவரைத்தான் நீங்கள் அழைக்க வேண்டுமே தவிர முமூர்த்திகளில் அந்த ரூபங்களை பிரதிபலிப்பவர் யார் என்று பொதுவாக கேட்கக் கூடாது. நான் முன்னரே கூறியபடி அனைவருக்கும் அனைத்து குணமும் இருக்கும் என்பதினால் எந்த நேரத்தில் அதை பிரதிபலிக்க வேண்டும் என்பதல்லவா முக்கியம். அப்படிப்பட்ட குணத்தை வெளிப்படுத்துபவரை நீங்கள் அழையுங்கள். உங்கள் யாகம் வெற்றி பெறும்’ என்றார்.

அதைக் கேட்ட முனிவர்கள் ஆனந்தம் அடைந்தாலும், அவர்களில் தகுதியான யாரை அந்த காரியத்தை செய்ய அனுப்பலாம் என்பது பெரிய கேள்விக் குறியாக நின்றது.

பிருகு முனிவர் தூதுவரானார்

ஒவ்வொருவரும்  யாரை அதித்தியாக அழைக்கலாம் என்று ஆலோசனை செய்யத் துவங்க அவர்களுடைய கருத்தில் ஒற்றுமை ஏற்படவில்லை. ஆகவே அவர்கள் அனைவரும் மீண்டும் மகரிஷி நாரதரிடம் வந்து அவரிடமே யாரை அழைக்கலாம் என யோஜனை கேட்டார்கள். அதையே எதிர்பார்த்துக் காத்திருந்த மகரிஷி நாரதரும் சற்றும் தயங்காமல் அவர்களில் மிகவும் மூத்தவரும் அனுபவசாலியுமான பிருகு முனிவரை தேவலோகத்துக்கு அனுப்பி யாகத்தின் தன்மையை மும்மூர்த்திகளுக்கும் விளக்கிக் கூறி அவர்களில் ஒருவரை  அதித்தியாக வருமாறு வேண்டிக் கொள்ளலாம் என்றும், அப்படி பிருகு முனிவர் மும்மூர்த்திகளிடம் சென்று வேண்டிக் கொள்ளும்போது யார் முழு மனதோடு சம்மதிக்கிறார்களோ, யார் இன்முகத்துடன் சாந்தமாக விடை தருவாரோ அவர்களை பிருகு முனிவர் அழைத்து வரலாம் என்றும், ஒரு வேளை மூவருமே எந்த விதமான மறுப்பும் கூறாமல் வருவதற்கு சம்மதித்து விட்டால் மூவரையுமே அழைக்கலாம் என்றும் கூறினார்.

அதைக் கேட்ட முனிவர்கள்  ஆனந்தம் அடைந்தார்கள். ‘அடடா, பிருகு முனிவர் சென்று அழைத்தால் மும்மூர்த்திகள் மறுக்க மாட்டார்கள். அவர் அறிவு ஞானத்துக்கு மட்டும் அல்ல அவர் வயதுக்கும் ஏற்ற மரியாதையை தந்து அவரை கௌரவிப்பார்கள்’ என்று அவரவர் மனதுக்கு ஏற்ப கற்பனையில் மிதந்தார்கள். ஆகவே மகரிஷி நாரதர் கூறிய யோசனையை ஒரு மனதாக ஏற்றுக் கொண்ட முனிவர்கள் மகரிஷி நாரத முனிவரின் தலைமையில் பிருகு முனிவரிடம் சென்று அவரை அந்த யாகத்தின் பிரதிநிதியாக செல்ல வேண்டும் என அழைப்பு விடுக்க பிருகு முனிவரும் தன்னை அனைவரை விட உயர்ந்தவராக எண்ணுகிறார்களே என்ற இறுமாப்புக் கொண்டு அந்த யாகப் பிரதிநிதியாக மும்மூர்த்திகளிடம் செல்ல சம்மதம் தெரிவித்தார்.  யாகத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்கிய போது பிருகு முனிவரும் மேலுலகத்துக்கு உடனே விரைந்து சென்றார். பிருகு முனிவர் மற்றவர்களின் பிரதிநிதியாகச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதும், மேலுலகில் இருந்த விஷ்ணு பகவான் தன்னை மறந்து சிரித்துக் கொண்டார். பிருகு முனிவருக்கு ஒரு சாபத்தின் விளைவாக அவர் பெற்று இருந்த ஞான சக்தி அழிக்கப்பட வேண்டி இருந்தது. அது இப்போது நிறைவு பெற இருந்தது என்பதே அவர் மகிழ்ச்சிக்கு காரணம்.

முதலில் பிருகு முனிவர் பிரம்ம லோகத்தை அடைந்தார். அவர் பிரம்ம லோகத்தை அடைந்தபோது அங்கு பிரம்மா   தமது அரச சபையில் மனைவி சரஸ்வதி தேவி சகிதம் அமர்ந்து இருந்தார். பூதகணங்களும், தேவதைகளும் சபையில் நிறைந்து இருக்க பிருகு முனிவர் அங்கு சென்றதும், அவரை அனைவரும் மரியாதையுடன் வரவேற்றார்கள். ஆனால் பகவான் பிரம்மா   வேண்டும் என்றே அவரைக் கண்டு கொள்ளாமல் இருந்தார். ஆகவே கர்வமுற்ற பிருகு முனிவர் தாமாகவே அங்கிருந்த ஒரு ஆசனத்தில் சென்று அமர்ந்து கொண்டார். சபையில் எதோ முக்கியமான விவாதம் நடந்து கொண்டு இருந்தபோது, பிருகு முனிவர் நடுவில் குறுக்கிட்டு எதையோ கூற முயல, பகவான் பிரம்மா   அவரை கடிந்து கொண்டார். ‘அழையாமலேயே சபைக்கு வந்து, கூறாமலேயே ஆசனத்தில் அமர்ந்து கொண்டதும் அல்லாமல், விவாதத்தில் அவர் கருத்தைக் கேட்காதபோதே கருத்தைக் கூறுவது ஒரு பழுத்த முனிவருக்கு அழகா?’ என்று பகவான் பிரம்மா கூற வந்தது கோபம் பிருகு முனிவருக்கு. எழுந்தார் ‘பிரம்மனே, நான் அனைவரையும் விட அறிவில் சிறந்தவன். வெறும் கேளிக்கைக்காக இங்கு வரவில்லை. பூலோகத்தில் மக்களின் நன்மைக்காக நடைபெறும் யாகத்துக்கு பெருமையுடன் உம்மை அழைக்க வந்தேன். ஆனால் நீங்களோ என்னை உதாசீனம் செய்வதாக நினைத்துக் கொண்டு, அந்த யாகத்தின் பிரதிநிதியாக வந்துள்ள என்னை அவமதித்ததின் மூலம் அந்த யாகத்தை அல்லவா அவமதித்து விட்டீர்கள். நீங்கள் ஸாத்வீக குணத்துடன் நடந்து கொள்ளாமல் கோபத்தை முன் காட்டி ஒரு பழுத்த முனிவரின் மனத்தைக் காயப்படுத்தியாதும் இல்லாமல் சபை நடுவே அவமானப்படுத்தி விட்டீர்கள். ஆகவே நான் இப்போது உமக்கு சாபமிடுகிறேன், கேளுங்கள். எந்த மக்களின் நன்மையைக் கருதி யாகம் நடைபெறுகிறதோ, அந்த மக்களின் பிரதிநிதியான என்னை அவமதித்து விட்டதினால் இனி பூலோகத்தில் உள்ள எந்த மக்களும் உமக்கு ஆலயம் அமைத்து உம்மை பூஜிக்க மாட்டார்கள்’ என்று கோபத்துடன் சாபத்தை தந்துவிட்டு அங்கிருந்து உடனே கிளம்பி கைலாயத்துக்கு பகவான் சிவபெருமானைக் காணச் சென்றார். பகவான் பிரம்மாவோ முனிவரின் சாபத்துக்கு அஞ்சவில்லை. பிருகு முனிவர் வந்து அழைக்கும்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மும்மூர்த்திகளும் ஏற்கனவே முடிவு செய்திருந்ததுதானே!

பிருகு முனிவர் தூதுவரான கதை

பிரம்ம லோகத்தில் இருந்து கோபத்துடன் கிளம்பிச் சென்ற பிருகு முனிவரினால் தனது கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதே கோபத்துடன் சிவலோகம் சென்றவரை வாயிலிலேயே தடுத்து நிறுத்தின சிவ கணங்கள். ‘தற்போது பகவான் சிவபெருமான் பார்வதி தேவியுடன் எதோ முக்கியமான விஷயம் குறித்து பேசிக் கொண்டு இருக்கிறார் என்பதினால் யாரையுமே உள்ளே அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவு போட்டு உள்ளார். ஆகவே தாங்கள் அவர் அழைக்கும்வரை இங்கு அமர்ந்து கொண்டு இருங்கள்’ என்று ஒரு ஆசனம் தந்து சற்று நேரம் அதில் அமருமாறு கூறினார்கள். ஆனால் பிருகு முனிவரினால் அதை ஏற்க முடியவில்லை. தான் என்ற அகங்காரம் வெளித் தோன்றியது. ‘என்னை உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்த உங்களுக்கு அதிகாரம் இல்லை’ என்று சப்தம் போடத் துவங்கினார். அவர் கத்த, காவலில் இருந்த சிவ கணங்களும் அவரை தடுத்து நிறுத்த அந்த இடத்தில் கூச்சலும் குழப்பமுமாக இருக்க பகவான் சிவபெருமானின் காதுகளில் அந்த சத்தம் கொடூரமாக ஒலித்தது. முக்கியமாக எதையோ பார்வதிதேவியிடம் விவாதித்துக் கொண்டு இருக்கையில் இங்கு வந்து யார் குழப்பம் செய்கிறார்கள் என்று கோபத்துடன் தனது திரிசூலத்தை கையில் ஏந்திக் கொண்டு கோபமாக வெளியே வந்தவர் ‘இங்கு வந்து யார் கத்துகிறார்கள்?’ எனக் கேட்க, பிருகு முனிவர் ‘உம்மைக் காண வந்த என்னை தடுத்து நிறுத்த இவர்களுக்கு யார் அதிகாரம் தந்தது?’ என்று பகவான் சிவபெருமானையே பார்த்துக் கோபமாகக் கேட்டார்.

அதைக் கேட்ட பகவான் சிவபெருமானும் கோபமுற்றார். ‘என்னைப் பார்க்க வரும் முன் முறையாக அனுமதி கேட்காமல், என் வீட்டிற்கு முன்னால் வந்ததும் இல்லாமல் இங்கு வந்து என் அதிகாரத்தையே கேள்வி கேட்கும் நீங்கள் உங்களை பிரம்ம ரிஷி, கற்றறிந்தவர் என்று கூறிக் கொள்கிறீர்களே…….. வெட்கமாக இல்லை? கற்றறிந்தவர் என எண்ணும் நீங்கள் நடக்கும் முறை கண்ணியமானதா?’ என்று கோபமாகக் கத்தினார். அதைக் கேட்ட பிருகு முனிவர் இன்னமும் ஆத்திரம் கொண்டு ‘ சிவபெருமானே, நான் எதற்காக இங்கு வந்தேன் என்பதை தெரிந்து கொள்ளாமல் என்னை அவமதித்து விட்டீர்கள். நீங்கள் பார்வதி தேவியுடன் பேசிக் கொண்டு இருந்தால் என்ன? ஒரு நிமிடம் என்னை அழைக்கலாகாதா? நான் அறிவில் சிறந்தவன். பூலோகத்தில் மக்களின் நன்மைக்காக நடைபெறும் ஒரு யாகத்துக்கு அதித்தியாக வருமாறு பெருமையுடன் உம்மை அழைக்க வந்தேன். அதுவும் அந்த யாகத்தை நடத்தி வரும் ரிஷி முனிவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில் இங்கு அவர்கள் சார்பில் வந்தேன். ஆனால் நீங்களும் பகவான் பிரம்மா நடந்து கொண்டதைப் போலவே கண்ணியம் அற்ற முறையில் நடந்து கொண்டு , என்னை உதாசீனம் செய்வதாக நினைத்துக் கொண்டு, அந்த யாகத்தின் பிரதிநிதியாக வந்துள்ள என்னை அவமதித்ததின் மூலம் அந்த யாகத்தை அவமதித்து விட்டீர்கள். நீங்களும் பகவான் பிரம்மாவைப் போலவே ஸாத்வீக குணத்துடன் நடந்து கொள்ளாமல் யாகப் பிரதிநிதியாக வந்துள்ள என்னை அழிக்க வருவது போல திரிசூலத்தை ஏந்தி வந்ததின் மூலம் கோபத்தை முன் வைத்து அநாகரீகமாக நடந்து கொண்டு விட்டீர்கள். அப்போதே உங்களின் கல் போன்ற குணம் எனக்குத் தெரிந்து விட்டது. ஆகவே நான் இப்போது உமக்கு சாபமிடுகிறேன், கேளுங்கள். எந்த மக்களின் நன்மையைக் கருதி யாகம் நடைபெறுகிறதோ, அந்த மக்களின் பிரதிநிதியாக வந்துள்ள என்னை நீங்கள் அவமதித்து விட்டதினால் பூமியில் உமக்கு இனி சிவன் உருவில் உருவ பூஜை செய்ய மாட்டார்கள். குத்துக் கல்லைப் போல பார்வதியுடன் அமர்ந்து கொண்டு என்னை அழைக்காத உங்களை ஒரு குத்துக் கல்லைப் போன்ற உருவில் பூமியிலே உள்ளவர்கள் வழிபடட்டும்’ என்று சாபமிட்டு விட்டு அங்கிருந்து கோபமாகக் கிளம்பி வைகுண்டத்துக்கு பகவான் விஷ்ணுவைக் காணச் சென்றார்.

அந்த சாபத்தை ஏற்றுக் கொண்ட பகவான் சிவபெருமானோ அவர் செல்லும் முன் அவரிடம் கூறினார் ‘குத்துக்கல்லாகவே என்னை மக்கள் வழிபட்டாலும் என்னை சுற்றித்தான் இந்த பிரபஞ்சமே இயங்கும். நானே சக்தியுடன் கூடிய பரப்பிரும்மன்.  ஆகவே இந்த உலகில் உள்ளவர்கள் என்னில் துவங்கி என்னையே அடைவார்கள். பரப்பிரும்மனான என்னை சிவனும் பார்வதியுமாக உள்ள தத்துவத்தில்தான் இனி மக்கள் பார்க்க முடியும். எந்த நிலையிலும் சிவசக்தி என்ற தத்துவமான எங்களை தனியே பிரித்தே பார்க்க முடியாது’ என்பதை அறிந்து கொள்ளுங்கள்’. இப்படியாக பகவான் சிவபெருமானை லிங்க வடிவில் அவதரிக்கக் காரணமாக இருந்த பிருகு முனிவர் பகவான் விஷ்ணுவின் மன நிலை எப்படி இருக்குமோ தெரியவில்லையே என்று எண்ணியபடி மனதில் விரக்தியுடன் கிளம்பிச் சென்றார்.*(1)

பகவான் விஷ்ணு பெற்ற சாபமும் பிருகு முனிவர் 

ஆணவம் அழிந்த  கதையும் 

தமது நிலையை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டவாறு பகவான் விஷ்ணுவை பார்க்க சென்ற பிருகு முனிவர், வைகுண்டத்தில் பகவான் விஷ்ணு பகவான் தூங்கிக் கொண்டு இருந்ததைக் கண்டார். அவர் காலடியில் அமர்ந்து இருந்த லஷ்மி தேவியானவள் பகவான் விஷ்ணு பகவானின் கால்களை பிடித்து விட்டுக் கொண்டு இருந்தாள். பிருகு முனிவர் அங்கு சென்றதும், அவரை திரும்பிப் பார்த்த லஷ்மி தேவி அவர் வந்ததைக் குறித்து சற்றும் கவலைப்படாமல் பகவான் விஷ்ணுவின் கால்களை பிடித்து விட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவளைப் பொறுத்தவரை பகவான் விஷ்ணுவே அனைத்தும் அவருக்கு.

ஆனால் யாரோ வந்த சப்தத்தைக் கேட்டு சற்றே கண் விழித்த பகவான் விஷ்ணுவும், பிருகு முனிவர் நிற்பதைக் கவனிக்காதது போல இருந்தவாறு எழுந்து   லஷ்மிதேவியுடன் பேசத் துவங்கினார். வந்திருந்த பிருகு முனிவரை அவரும் கண்டு கொள்ளவில்லை. ஏற்கனவே எரிச்சலில் இருந்த பிருகு முனிவருக்கு ஆத்திரம் இன்னும் அதிகமாகியது. தான் வந்து நின்றிருந்ததை பார்த்து விட்டப் பின்னரும் தன்னை கவனிக்காதது போல இவர்களும் பேசிக் கொண்டு இருக்கிறார்களே என ஆத்திரம் பொங்க தான் என்ன செய்கிறோம் என்று சற்றும் யோசனை செய்யாமல் வேகமாக பகவான் விஷ்ணுவின் அருகில் சென்றார். அவர் மனைவி லஷ்மி தேவி அமர்ந்து இருக்கிறாளே என்று கொஞ்சம் கூடக் கூச்சப்படவில்லை. தனது காலால் பகவான் விஷ்ணுவின் படுக்கையை வேகமாகத் உதைத்து பகவான் விஷ்ணுவின் கவனத்தை தன் பக்கம் இழுத்தார். அதைக் கண்ட லஷ்மி தேவி திடுக்கிட்டு எழுந்தாள். தன் கணவரை தன் கண் எதிரிலேயே ஒரு முனிவர் அவமானப்படுத்துவதா என்று கோபமுற்றாள். *(2)

ஆனால் மஹாவிஷ்ணுவோ பிருகு முனிவரின் கண்ணியமற்ற செய்கைக்கு கோபப்படாமல் பிருகு முனிவர் சற்றும் எதிர்பாராத விதமாக தடாலென பிருகு முனிவரின் முன்னால் அமர்ந்துக் கொண்டதும் அல்லாமல் அடுத்த ஷணத்தில் பிருகு முனிவரின் காலில் இருந்த அறிவு நாணை பிடுங்கி எறிந்து விட்டார். பிருகு முனிவருக்கு காலில் ஆறாவது விரல் இருந்தது என்றும், அதில்தான் அவர் ஞானக் கண்ணின் சக்திகள் அனைத்தையும் அடக்கி வைத்திருந்தார் என்றும், அந்த ஆறாவது விரலே அறிவு நாண் என்றும் சில பண்டிதர்கள் கூறுவார்கள். பிருகு முனிவருடைய சக்திகளை அழித்து விட்ட பின் ஒன்றுமே நடக்காதது போல எழுந்த பகவான் விஷ்ணு ‘வாரும் முனிவரே, அமரும்’ என்று சர்வ சாதாரணமாகக் கூறினார். சக்தியை எல்லாம் திரட்டி காலில் ஒளித்து வைத்து இருந்த இடத்தில் இருந்து அது பிடுங்கி எறியப்பட்டதும் அனைத்து சக்தியும் அந்தக் கணமே பிருகு முனிவரை விட்டு அழிந்தது. பிருகு முனிவரின் கர்வபங்கம் அடக்கப்பட வேண்டும் என்று எண்ணிய மும்மூர்த்திகள் நடத்திய நாடகத்தின் ஒரு அங்கம்தான் அந்த நிகழ்ச்சியும்.

தன் ஞான சக்தி அனைத்தும் தன்னிடம் இருந்து போய் விட்டதை உணர்ந்த பிருகு முனிவரும் அடுத்த கணமே தனது தவறை உணர்ந்து அப்படியே பகவான் விஷ்ணுவின் கால்களில் தடாலென விழுந்து வணங்கி பகவான் விஷ்ணுவின் கால்களைப் பிடித்துக் கொண்டு தான் அகம்பாவத்தினால் செய்த தவறை மன்னிக்குமாறு மன்றாடிக் கேட்டார். அவர் பாதங்களில் தனது தலையை வைத்துக் கொண்டு தான் செய்த தவறை மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டு அழுதார்.

ஒன்றுமே நடக்காததை போல அவரை எழுப்பி அமர வைத்த பகவான் விஷ்ணுவோ அவர் வந்த காரியத்தைக் குறித்துக் கேட்டார். பிருகு முனிவரும் தான் வந்த நோக்கத்தைக் கூறிவிட்டு, அவர் யாக முடிவில் அதித்தியாக வந்து யாக அவிர் பாகத்தை ஏற்றுக் கொண்டு உலக மக்களின் ஷேமத்திற்காக அருள் புரிய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள தான் நிச்சயமாக யாக முடிவில் வந்து அதித்தியை ஏற்பதாக பகவான் விஷ்ணு அவருக்கு வாக்கு கொடுத்து அனுப்பினார்.

பிருகு முனிவரும் அவரிடம் மீண்டும் தன் பிழையை மன்னிக்குமாறு மீண்டும்  வேண்டிக் கொண்டப் பின் தனது சக்திகள் அனைத்தையும் இழந்து விட்ட நிலையில் யாக சாலைக்கு திரும்பினார். ஆனால் போகும் முன் மறந்து போய் லஷ்மி தேவியிடம் மன்னிப்பைக் கேட்கவில்லை. அதற்கும் ஒரு காரணம் இருந்துள்ளது. அப்படி அவர் லஷ்மி தேவியிடம் மன்னிப்பைக் கேட்டு இருந்தால் பகவான் வெங்கடாசலபதியின் அவதாரமே இருந்திராது! ‘தன் கணவரை தன் எதிரில் அவமானப்படுத்திய முனிவரை தன் இஷ்டத்துக்கு மன்னித்து அனுப்பி விட்டார் தன் கணவர், ஆனால் ஒரு பெண் எதிரில் அவமரியாதையாக நடந்து கொண்ட பிருகு முனிவரை தன்னிடம் மன்னிப்பைக் கேட்க சொல்லி இருக்க வேண்டாமா? ஆண்களே சுயநலவாதிகளாக இருக்கிறார்களே’ என வருந்தியவள், தனது ஆத்திரத்தை பகவான் விஷ்ணுவிடம் காட்டியப் பின் இனி தான் அவருக்கு மனைவியாக இருக்க விரும்பவில்லை என்று கூறி விட்டு கோபமாக விடுக்கென எழுந்து அங்கிருந்து சென்று விட்டாள்.

அதன் பின் விஷ்ணு பகவான் தான் வாக்கு கொடுத்தது போல பூமிக்குச் சென்று முனிவர்களின் யாகத்தை நிறைவு செய்து தந்தப் பின், விரைவில் மீண்டும் தான் பூமியில் அவதரித்து உலகைக் காப்பேன் என ரிஷி முனிவர்களுக்கு உறுதி கூறி விட்டு வைகுண்டம் சென்று விட்டார். காலக்கோள் தனது ஆட்டத்தை துவக்கியது. அதுவே திருப்பதி ஏழுமலையானின் ஜீவ சரித்திரத்தின் முக்கிய முதல் கட்டம். விஷ்ணு பகவான் மீண்டும் உலக மக்களின் நன்மைக்காக, கிருஷ்ணாவதாரம் எடுத்ததைப் போல கல்கி அவதாரத்துக்கு முன்னால் இன்னொரு பிறவி எடுக்க வேண்டும். அது இனி நடக்கும். லஷ்மி தேவியானவள் தனக்கேற்பட்ட சாபத்தின் காரணமாக பூமியில் இன்னொரு பிறவி எடுத்து பகவான் விஷ்ணுவை மீண்டும் மணம் செய்து கொள்ள வேண்டும். அதற்கான காரணமும் அமைந்து விட்டது. ஆனால் அந்த புதிய பிறவியில் விஷ்ணுவும் வேறு அவதாரத்தில் இருப்பார், லஷ்மி தேவியும் வேறு அவதாரத்தில் இருப்பாள் என்றாலும் அந்த அவதாரத்துக்குப் பிறகும் அவர்கள் பகவான் விஷ்ணு மற்றும் லஷ்மி தேவியாகவே மீண்டும் இருப்பார்கள். இப்போது நடந்தது உலக ஷேமத்திற்காகத்தான். அது நடக்க வேண்டும் என்பது விதியாக இருந்ததினால்தான் நடந்துள்ளது என்று நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த மகரிஷி நாரதர் நினைத்தார். அது நடைபெற தானும் ஒரு முக்கிய நாடக பாத்திரமாக இருந்ததை எண்ணிப் பெருமைக் கொண்டார்.

நிற்க, சம்மந்தமே இல்லாமல் எதற்காக லஷ்மி தேவி கோபமடைந்து பகவான் விஷ்ணுவை விலகிச் செல்ல வேண்டும்? அதற்கான காரணத்தை அறிந்துக் கொள்ள வேண்டும் எனில் அவளது பூர்வ ஜென்மக் கதையை தெரிந்து கொள்ள வேண்டும். அதுவே இப்போது நீங்கள் படிக்க உள்ள கதை. ராமாயணம் நடந்து கொண்டு இருந்த கால கட்டம் அது. அந்த நேரத்தில் விஷ்ணு பகவானும், லஷ்மி தேவியும் வேறு பிறவி எடுக்க வேண்டி இருந்தது. விஷ்ணு பகவான் ராமராக பிறவி எடுத்து விட்டார். அது போலவே லஷ்மி தேவியும் சீதையாக பிறப்பு எடுத்திருந்தாள். ஒருவருக்கொருவர் அதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. ஆனால் இருவருமே பின்னர் கணவன் மனைவியாகி இருந்தார்கள்.

லஷ்மி தேவியின் பூர்வ ஜென்மக் கதை

பகவான் ராமர் மற்றும் சீதா தேவி பூமியிலே பிறவி எடுத்து இருந்த அதே நேரத்தில் அயோத்திப் பட்டணத்தின் அருகில் இருந்த நாட்டை பத்மவாசன் என்றொரு மன்னன் ஆண்டு வந்தார். அவர்  விஷ்ணு பகவான் பக்தர். நீதி நெறி தவறாமல் ஆட்சி செய்து வந்தவருக்கு குழந்தைப் பேறு இல்லையே என்றக் குறை இருந்ததினால், பல ஆண்டு காலம் லஷ்மி விரதம் இருந்து லஷ்மி தேவியைப் போல ஒரு பெண் தனக்குப் பிறக்க வேண்டும் என வேண்டி வந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கனவு நனவானது. அவருக்கு மிக அழகிய பெண் குழந்தைப் பிறந்தது. அங்க லட்சணம் அனைத்துமே லஷ்மி தேவிக்கு இணையாகவே இருந்தது. பல கலைகளிலும் வல்லவளாக வளர்ந்து வந்த பெண் பருவம் அடைந்தாள். அவளால் பல மாய உருவங்களையும் எடுக்க முடிந்திருந்தது. பல சக்திகளையும் அடைந்து இருந்தாள்.

வயதுக்கு வந்து விட்டப் பெண்ணுக்கு திருமணம் செய்ய நினைத்த மன்னன் சுயம்வரம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அவள் திருமணம் செய்து கொள்வதற்கு மறுத்தாள். தன் மனதில் பகவான் ராமபிரானே உள்ளதினால், அவரையே தான் மணக்க விரும்புவதாக கூறினாள் (அப்போது ராமருக்கு சீதையுடன் திருமணம் ஆகவில்லை. பகவான் ராமரோ பகவான் விஷ்ணுவின் அவதாரம்). ஆனால் பத்மவாசனோ அது நடக்க முடியாதக் கனவு என்றும், பகவான் ராமர் மிகப் பெரிய சக்ரவத்தியான  தசரதனின் மகன் என்றும், சிறிய மன்னரான தன் பெண்ணை அவருக்கு திருமணம் செய்து கொடுப்பதில் பல சிக்கல்கள் உள்ளது என்றும் தன் மகளுக்கு எடுத்துரைத்தார். ஆனால் அதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் தனது தந்தை ஏற்பாடு செய்திருந்த சுயம்வரத்தை தடுத்து நிறுத்தும் சக்தியும் அவளுக்கு இல்லை. காரணம் அந்த காலத்துப் பெண்கள் குடும்ப நியமங்களை தாண்டியது இல்லை. அவர்கள் மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம் போல பெற்றோர்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தவர்கள்.

சுயம்வர நாளும் நெருங்கியது. பல இடங்களில் இருந்தும் மன்னர்களும் ராஜ குமாரர்களும் வந்திருந்தார்கள். அந்த சுயம்வரத்தில் ராவணனும் வந்து இருந்தான். அவன் பேரழகியாக இருந்த பத்மவாசனின் பெண்ணை கண்டதும் அவள் மீது ஆசைக் கொண்டு அவளை மணக்க விரும்பினான். சுயம்வரம் துவங்கியது. கையில் பூ மாலையுடன் அந்தப் பெண் வந்திருந்த அனைவரையும் சுற்றி வந்தாள். ஆனால் யார் கழுத்திலும் மாலையிடவில்லை. அப்போது ராவணனைத் தாண்டிப் போகையில் அவளிடம் ராவணன் தன்னை மணக்குமாறு கேட்டான். ஆனால் அவளுக்கு அவனை மணக்க விருப்பம் இல்லை. மறுத்தாள். ஆகவே கோபமுற்ற ராவணன் அவளை பலவந்தமாக இழுத்துச் செல்ல முயல அவள் தந்தை அதை தடுக்க ஓடி வந்தார். அவரை தனது வாளினால் ஒரே வெட்டில் வெட்டி வீழ்த்தினான் ராவணன். அனைவரும் அலறி ஓடினார்கள்.

ஆனால் அந்தப் பெண்ணும் சக்தி அற்றவள் அல்ல என்பதினால் அந்த கலவரத்தில் ஒரு மாய உருவை எடுத்தவள் காட்டிற்குள் ஓடி விட்டாள். அங்கு பெரிய யாகம் ஒன்று நடந்து கொண்டு இருந்தது. வேதங்களை ஓதியவாறு அங்கு பெரிய யாகம் ஒன்றை செய்து கொண்டு இருந்த ரிஷிகளின் ஆஸ்ரமங்களின் பக்கத்தில் மறைந்து கொண்டவள் பின்னர் அங்கேயே தங்கி இருந்தவாறு தவம் செய்யலானாள். அதே நேரத்தில் அவளை துரத்திக் கொண்டு ஓடி வந்த ராவணன்  வானத்தின் மீது சுற்றித் திரிந்து கொண்டு  அவளை தேடத் துவங்கினான். சில நாட்கள் கழிந்தன. அவனும் தேடுவதை நிறுத்தவில்லை. ஆனால் அவளையும் கண்டு பிடிக்க முடியவில்லை.

அதே நேரத்தில் அங்கு வந்து தவம் இருக்கத் துவங்கிய அந்தப் பெண் யார் என்று யாருக்கும் தெரியாததினால், வேதங்களை ஓதும்போது அங்கு வந்திருந்த அந்தப் பெண்ணிற்கு வேதவதி என்று பெயர் சூட்டி அவளை முனிவர்கள் அழைத்தார்கள். எத்தனை நாள்தான் பதுங்கி இருக்க முடியும்? ஒருநாள் ஆகாய மார்கமாக அவளை தேடிக்கொண்டு   இருந்த ராவணன் வனத்தில் திரிந்து கொண்டு இருந்த அவளைப் பார்த்து விட்டான். கீழே இறங்கி வந்து மீண்டும் அவளை பிடித்து தூக்கிக் கொண்டு போக முயன்றபோது அவனிடம் இருந்து மீண்டும் தப்பி ஓடியவள், வேறு வழி இன்றி அங்கு எரிந்து கொண்டு இருந்த யாகத் தீயில் விழுந்து மறைந்து விட்டாள்.

போகும் முன் ராவணனுக்கு சாபம் ஒன்றைக் கொடுத்தாள். ‘ராவணா, நீ பெண் இனத்தையே அவமானப்படுத்த நினைத்தாய். ஆனால் ஒன்றை புரிந்து கொள். எந்த பெண் இனத்தை நீ அவமதித்தையோ, அதே பெண் இனத்தினால்தான் உனக்கும் மரணம் வரும் என்பது சத்தியம்’ என்று கூறி விட்டு தீயில் குதித்தாள். அதனால்தான் ராவணனுக்கு சீதையினால் மரணம் வந்தது.

அக்னிக்குள் விழுந்த அவளை அக்னி பகவான் காப்பற்றி அவளை தன்னுடன் உருவமற்ற உருவில் வைத்துக் கொண்டு பாதுகாத்து வரலானார். அது முதல் அவள் அக்னிக்குள் வாசம் செய்யத் துவங்கினாள். அவளை ஏன் அக்னி பகவான் தீயிலேயே மறைந்து இருக்குமாறுக் கூறி இருந்தார்? அதற்குக் காரணம் அக்னி பகவானுக்கு மட்டுமே தெரியும். ராவணன் சும்மா இருக்க மாட்டான், அவன் அனைத்துக் கலைகளிலும் சிறந்தவான். ஆகவே ஒரு வேளை அக்னியில் குதித்தது போல நாடகமாடி விட்டு அவள் மறைந்து வாழ்ந்தால் அவளைக் கண்டு பிடித்து விடலாம் என்று நினைத்தவாறு அவ்வப்போது அங்கு வந்து அவளைத் தேடி அலைவான். ஆகவே அவன் கண்களில் இருந்து அவளை காப்பாற்றி வைத்து இருக்க வேண்டும் என்பதற்காகவே அவளை உருவமற்ற உருவில் அக்னிக்குள் வாழுமாறு கூறி இருந்தார். அதுவும் நல்லதற்காகவே அமைந்து விட்டது. அப்படி அவர் வேதவதியை அக்னிக்குள் மறைத்து வைத்து இருந்ததினால்தான் அவரால் அந்த உருவமற்ற உருவத்திற்கு லட்சுமி தேவி மூலம் சீதா தேவியின் மாய உருவை தந்து அன்னை சீதையைக் காப்பாற்ற முடிந்தது. அன்னை சீதையை அவர் எப்படி காப்பாற்றினார் என்று யோசிக்கிறீர்களா?  மேலே படியுங்கள்.

காலம் ஓடிற்று. அயோத்தியாவில் பகவான் ராமபிரான் அன்னை சீதையை மணம் புரிந்து கொண்டு சந்தர்ப்பவசத்தினால் வனவாசம் செய்ய வந்தார். அப்போது அவர் மனைவி அன்னை சீதையை வஞ்சகமாக ராவணன் கவர்ந்து சென்றான். ஆனால் ராவணன் எண்ணி இருந்தது போல ராவணன் கவர்ந்து சென்றது அன்னை சீதையை அல்ல. அவள் உருவில் அக்னி தேவரின் வேண்டுகோளின்படி லட்சுமி தேவியால் படைக்கப்பட்டு இருந்த சீதா தேவியின் மாய உருவான வேதவதியைதான் அவன் தூக்கிச் சென்றான். எப்படி?

பகவான் ராமன் காட்டில் இருந்தபோது அன்னை சீதையைக் கவர ராவணன் போட்டுக் இருந்த வஞ்சக திட்டத்தை தன் சகோதரர்களுடன் இலங்கையில் ராவணன் விவாதித்துக் கொண்டு இருந்தபோது அதை அக்னி பகவான் ஒட்டுக் கேட்டு விட்டார். அக்னி இல்லாத இடம்தான் எது? ஆகவே அக்னியினால் ராவணனின் வஞ்சக திட்டம் அறிந்து கொள்ளப்பட, ஓடோடி வந்தவர், பகவான் ராமன் மானை தேடிக் கொண்டு சென்றிருந்த நேரத்தில் ராவணன் வந்து அன்னை சீதையைக் கவரும் முன்னரே, அன்னை சீதையிடம் வந்து ராவணனின் வஞ்சக நாடகத்தை எடுத்துக் கூறி அவளை தன் இடத்துக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக இருக்குமாறு கூறி விட்டார். அதே நேரத்தில் அக்னியில் இருந்த அந்த உருவமற்ற வேதவதி உருவத்திற்கு லட்சுமி தேவி மூலம் சீதா தேவியின் மாய உருவை தந்து அந்த பர்ணசாலையில் அந்த மாய உருவை இருக்குமாறு கூறி அனுப்பினார். சீதா தேவியின் மாய உருவான வேதவதியும் அக்னி பகவானின் ஆணையை ஏற்று அங்கு அன்னை சீதையின் மாய உருவில் இருக்க, அதை அறியாத ராவணன் அவளையே அன்னை சீதை என நினைத்து வேதவதியை கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்துக் கொண்டான். அந்த விஷயம் வெளியில் தெரிந்தால் ராவணன் வேதவதியைக் கொன்று விடுவான் என்பதினால், பகவான் ராமர் வேதவதியை உயிருடன் மீட்கும்வரை அன்னை சீதையை தன் வீட்டிலேயே மறைந்து இருக்குமாறும், அந்த விஷயம் தான் கூறும்வரை வெளியில் தெரியக் கூடாது என்றும் அக்னி பகவான் அன்னை சீதையிடம் சத்தியம் பெற்று இருந்தார். அன்னை சீதையும் அதற்கு உடன்பட்டாள்.

அதன் பிறகு ராம-ராவண யுத்தம் நடந்து முடிந்தது. அடுத்தடுத்து நடைபெற்ற பல இராமாயண நிகழ்வுகளுக்குப் பின்னரே தனது கற்பை நிரூபிக்க சீதையை அழைத்து வந்து அக்னி பிரவேசம் செய்யுமாறு பகவான் ராமர் கூற, அன்னை சீதையின் மாய உருவில் இருந்த வேதவதிதான் அந்த அக்னியில் குதித்தாள். அது  பகவான் ராமருக்கு தெரியாது. அதன் பிறகு அக்னியில் இருந்து வேதவதியும், அன்னை சீதையும் தீயினால் பாதிக்கபடாமல் ஒன்றாக வெளி வந்தார்கள். அக்னியில் இருந்து அன்னை சீதையுடன் வெளிவந்த வேதவதி, தான் பகவான் ராமபிரானை மணக்க விரும்பிய கதையைக் கூறி தன்னையும் மணந்து கொள்ளுமாறு அவரிடம் வேண்டினாள். ஆனால் பகவான் ராமர் அதை எற்க மறுத்தார். அவளுக்கு அறிவுரை கூறினார். அந்த அவதாரத்தில் தான் ஏக பத்தினி விரதம் பூண்டு அவதரித்து இருந்ததினால், மீண்டும் சில காலம் பொறுத்து வேதவதியின் உருவில், அன்னை சீதையான லஷ்மி தேவியையே பத்மாவதி எனும் பெயரில் அவதாரம் எடுப்பாள் என்றும் அந்த நேரத்தில் ஸ்ரீனிவாசர் என்ற மனித உருவில் தான் அவதரிக்கும்போது அவளை மணப்பேன் எனவும் வாக்கு கொடுத்தார். அதன் பின் வேதவதி அப்படியே மறைந்து விடுகின்றாள். அதாவது சீதா தேவியின் உடலுக்குள் சென்று மறைந்து விடுகின்றாள். பின்னர் சீதா தேவியும் பூமியில் சென்று மறைந்து விடுகின்றாள். இப்படியாக சீதா தேவியின் அவதாரமும் முடிவுக்கு வந்து விடுகின்றது. அதனால்தான் லஷ்மி தேவியானவள் பத்மாவதி என்ற உருவில் அவதரித்து ஸ்ரீனிவாசர் உருவில் அவதரித்த விஷ்ணு பகவானை மீண்டும் மணக்க நேரிட்டது. அவள் லஷ்மி தேவியின் இன்னொரு ஒரு அவதாரமே என்பது அப்போது யாருக்கும் தெரியாது. அந்த இரகசியத்தை பின்னர் விஷ்ணு பகவான் அவளை ஸ்ரீனிவாசராக அவதரித்து அவளை மணந்து கொண்டபோதுதான் வெளிப்படுத்தினார். ஆமாம் லஷ்மி தேவி எப்படி பத்மாவதியாக பிறப்பு எடுத்தாள்? அது ஒரு பெரிய கதை.  *(3)

லஷ்மி தேவி பத்மாவதியாகப் பிறந்த கதை

முன்னொரு காலத்தில் இப்போது திருப்பதி என்றழைக்கப்படும் இடத்தின் அருகில் இருந்த நாட்டை சுதர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் மகவு பிறந்தது. அந்த ஆண் மகனின் ஜாதகத்தை ஆராய்ந்த பண்டிதர்கள், அந்தப் பிள்ளையின் முன் பிறவி அபாரமான பிறவி என்றும், அவன் பகவான் விஷ்ணுவின் ஆசிகளைப் பெற்றே இந்தப் பிறவியை எடுத்துள்ளான் என்றும், வரும் காலத்தில் அவன் ஆகாயம் அளவு விரிந்து இருக்கும் வகைக்கான பெருமையுடன் இருப்பான் என்றும் கூறியதினால் அவனுக்கு ஆகாசராஜன் என்று பெயரிட்டு அன்போடு வளர்த்தார்கள். சுதர்மன் ஒரு வேட்டைப் பிரியன். அவன் அடிக்கடி வனங்களுக்குச் சென்று வேட்டை ஆடுவார். அது போல ஒருமுறை அவர் வேட்டைக்கு சென்று கொண்டு இருந்தபோது, இடையில் ஒரு பெரிய நீர் நிலையைக் கண்டார். அதன் பெயர் கபில தீர்த்தம் என்பதாகும். வேட்டை ஆடிக் களைப்புற்ற மன்னன் அந்த நீர் நிலைக்குச் சென்று நீரைப் பருகிக் கொண்டு இருந்தபோது ஒரு நாக தேவதை அந்த நீரில் ஆடிப்பாடி திரிவதைக் கண்டார். அவளைப் பார்த்த உடனேயே அவள் மீது அவருக்கு மோகம் ஏற்பட்டு விட்டது. அத்தனை அழகான வனப்புடன் அவள் காட்சி அளித்தாள். அவளைக் கண்டு மனதைப் பறி கொடுத்த மன்னன் தொடர்ந்து சில நாட்கள் அங்கு வந்து அவளுடன் அன்புடன் பழகத் துவங்கினான். அந்த நாக தேவதையும் சுதர்மனின் அழகில் மனதைப் பறி கொடுத்து அவனைக் காதலித்தாள். ஆனால் இருவருக்கும் ஒரு பெரிய பிரச்சனை. இருவரும் வெவ்வேறு பிரிவினர்- ஒருவர் மனிதர், மற்றோருவளோ நாக வம்சத்தை (பாம்பு) சேர்ந்தவள். அவளால் சில நாட்களே நீருக்கு வெளியில் இருக்க முடியும். மீதி நாட்கள் அவள் நாகலோகத்துக்கு சென்று விட வேண்டும். இல்லை எனில் அவளை வெளியில் வர விட மாட்டார்கள். இன்னொன்று, அவளுக்கு ஒரு பகுதி வரை மனித உடல், மீதி பாம்பு உடல். ஆகவே எப்படி இருவரும் எப்படி திருமணம் புரிந்து கொள்வது? ஆகவே அது குறித்து நன்கு ஆலோசனை செய்ததும், வேறு வழி இன்றி இருவரும் கந்தர்வ விவாகம் செய்து கொண்டார்கள்.

நாக கன்னிகை சில நாட்களுக்குத்தான் நீருக்கு வெளியில் கன்னிகையாக இருக்க முடியும். மற்ற நேரத்தில் அவள் பாதாளத்துக்குள் சென்று நாக மங்கையாகவே வாழ முடியும் என்பதினால் கந்தர்வ விவாகம் செய்து கொண்டப் பின் அவள் நீரின் வெளியில் இருக்கும்போதெல்லாம் அந்த மன்னன் வந்து அவளுடன் இணைந்து இருந்தார். நாக கன்னிகை நாகராஜரின் மகள். நாகராஜனோ, ஆதிசேஷனின் வம்சாவளியை சேர்ந்தவர் என்பதினால் அவர்கள் சில விசேஷ சக்திகளை பெற்று இருந்தார்கள். ஆதிசேஷனே நாக வடிவில் மனிதத் தலையுடன் பதஞ்சலி என்ற பெயரில் மனிதப் பிறவி எடுத்த ரிஷி என்றும் கூறுவார்கள். அவர் ஐந்து அல்லது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு வெளியிலேயே வாழ்ந்திருந்த முனிவர். அதனால்தான் ஆதிசேஷனின் வம்சத்தினரான நாக தேவதைகளினால் மனித உருவுடன் இருக்க முடிந்தது. அதனால்தான் மனித உருவில் இருந்த அவளால் சுதர்மனுடன் இணைந்து கொள்ள முடிந்தது.

இப்படி சில நாட்கள் அவர்கள் சந்தோஷமாக இருந்து கொண்டிருக்கையில் அவள் கருவுற்றாள். அவர்களுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. நாக கன்னிகை நீருக்கு வெளியில் கன்னிகை உருவில் இருந்ததினால் அவர்களுக்கு பிறந்த குழந்தையும் மனித உருவிலேயே அமைந்து இருந்தது. அதே நேரத்தில் அந்த நாக கன்னியுடன் தான் காதல் வயப்பட்டு இருந்ததை சுதர்மன் தந்து மனைவிக்கு ஏற்கனவே கூறி இருந்தார். அந்த காலங்களில் மன்னர்கள் எத்தனை பெண்களை தன்னுடன் வைத்துக் கொண்டாலும், அதை பிழையாகப் பார்த்தது இல்லை என்பதினால் அவர் மனைவி அதை பெரியதாகப் பொருட்படுத்தவில்லை.

சுதர்மன் தனது மனைவியிடம் எதையுமே மறைக்காமல் அனைத்தையுமே கூறி இருந்ததினால், வேறு வழி இன்றி அந்த நாக கன்னிகை மூலம் பிறந்தக் குழந்தையை அரண்மனைக்கு எடுத்து வந்து தனது மனைவியிடமே கொடுத்து அந்தக் குழந்தையையும் தன் குழந்தையுடன் சேர்த்தே வளர்த்து வந்தார். அந்தக் குழந்தைக்கு தொண்டைமான் என்று பெயரிட்டார். ஆகாசராஜனும் தொண்டைமானும் ஒன்றாகவே வளர்ந்து வந்தார்கள். காலப் போக்கில் சுதர்மனும், அவரது மனைவியும் மரணம் அடைய மூத்தவரான ஆகாசராஜன் மீது அரசுப் பொறுப்பு விழுந்தது. அவர் அரச பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும் தனது தந்தைக்குக் கொடுத்த வாக்கின்படி தனது சகோதரரை நல்ல முறையில் காப்பாற்றி வந்தார். அந்த தொண்டைமான்தான் பிற் காலத்தில் ஸ்ரீனிவாசருக்கு முதலில் ஆலயம் அமைத்தவர். இன்றுள்ள ஆலயம் அந்த தேவ ஆலயத்தின் (கற்களால் கட்டப்படாத தேவ ஆலயம்) மீது எழுந்துள்ள ஆலயமே ஆகும் என்பதாக நம்புகின்றார்கள் .

ஆகாசராஜனின் அரசாட்சியில் மக்கள் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். வெகு காலம் ஆகியும் அவனுக்கு குழந்தைப் பேறு இல்லை. ஆகவே மனம் ஒடித்து போனவன் குழந்தை வரம் வேண்டி பல யாகங்களை செய்தவண்ணம் இருந்தான். அவர் வேண்டாத தெய்வங்கள் இல்லை. செய்யாத தானங்கள் இல்லை. எதற்குமே பலன் தெரியவில்லை என்பதினால் முடிவாக புத்திர காமேஷ்டி யாகம் ஒன்றை செய்யத் துவங்கினார். அந்த யாகத்தில் நெல்லை  நெய்வித்தியமாகப் படைத்து, யாக முடிவில் ஒரு விளை நிலத்தில் மன்னனே கலப்பையினால் சிறு இடத்தை உழுது, அந்த நெல்லை அதில் பயிரிட்டு மனைவியுடன் லஷ்மி நரசிம்ம பூஜையை அந்த நிலத்திலேயே செய்து ‘ஐயனே இந்த நெல் முளைத்து பயிராகி தானியத்தை தருவது போல எனக்கும் ஒரு குழந்தை எனும் தானியத்தை தர வேண்டும்’ என வேண்டிக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று பண்டிதர்கள் கூற மன்னனும் முழு நம்பிக்கையுடன் அந்த யாகத்தை செய்து முடித்தப் பின், அந்த நெய்வித்தியம் செய்த நெல்லை ஒரு விளை நிலத்துக்குப் எடுத்துப் போய், லஷ்மி நரசிம்ம பூஜையை அந்த நிலத்திலேயே செய்து முடித்தப் பின் அந்த நெல்லைப் விதைக்க கலப்பையால் ஒரு இடத்தை உழத் துவங்கினார்.

என்ன ஆச்சர்யம், நிலத்தை உழத் துவங்கியவனின் கலப்பையில் எதோ இடிக்கும் சப்தம் கேட்க, உழுவதை நிறுத்தி விட்டு, அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தார். அங்கு பூமியை தோண்டினால் அதில் ஒரு பெட்டி புதைந்து இருந்தது தெரிய வந்தது. எதோ ஒரு புதையலாக இருக்கலாம் என அதை வெளியில் எடுத்துப் பார்த்தவர் அதிர்ந்து நின்றார். அதில் ஒரு அழகிய பெண் குழந்தை இருந்தது. அது எப்படி இருந்தது என்றால் பத்மாசனத்தில் அமர்ந்து இருந்த காட்சியில் சிரித்துக் கொண்டு இருந்தது. மன்னனும் மக்களும் விக்கித்து நின்றார்கள். பூமியில் புதைந்து இருந்த பெட்டியில் உயிருடன் குழந்தையா? நம்பவே முடியவில்லை. ராஜ குரு ஓடோடி வந்தார். மன்னனிடம் கூறினார் ‘மன்னா, இது சாதாரணக் குழந்தை அல்ல. இது சரித்திரம் படைக்க வந்துள்ள தெய்வீகக் குழந்தை. இந்தக் குழந்தையின் முகத்தில் ஓடும் ரேகைப் பார்! அப்படியே லஷ்மி கடாட்ஷம் அல்லவா நிறைந்துள்ளது. முதலாவது பூமியில் புதைந்து இருந்த பெட்டியில் உயிருடன் இருந்தது தெய்வீக அதிசயமே. மேலும் முன்னர் மன்னன் ஜனகருக்கு பூமியில் புதைந்து இருந்த பெட்டியில் இருந்து சீதை கிடைத்தது போலவேதான் உமக்கும் இவள் கிடைத்து இருக்கிறாள். ஆகவே இவள் சீதையின் அம்சமான லஷ்மி தேவியாகக் கூட இருக்கலாம். தயங்காதே. குழந்தை இல்லாத உனக்கு விளை நிலத்தில் இருந்து தானியத்தை தரும் நெல் பயிர் போல தெய்வமே ஒரு குழந்தையை தந்துள்ளது. ஆகவே சற்றும் யோசனை செய்யாமல் இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு போய் உன் குழந்தையாக வளர்த்து வா. இனி நீதான் இந்தக் குழந்தையின் தகப்பன்’ என்று கூறினார்.

அதைக் கேட்ட மன்னனும் சற்றும் தயங்கவில்லை. தன் மனைவியிடம் அந்தக் குழந்தையைத் தந்து அதை நன்கு பேணி வருமாறு கூறினான். குழந்தையை அரண்மனைக்கு எடுத்து வந்து பெரும் விழாக் கொண்டாடி அனைவருக்கும் தானங்கள் செய்தார். பெட்டியில் இருந்தக் குழந்தை பத்மாசனத்தில் இருந்தக் காட்சியில் இருந்ததினால் அதற்கு பத்மாவதி என்று பெயர் சூட்டி வளர்க்கலாயினர். அந்த பத்மாவதிதான் லஷ்மி தேவியின் அவதாரம்.

ஒவ்வொரு கடவுளுக்கும் பல அவதாரங்கள் உண்டு. சில நேரங்களில் அவர்கள் ஒரே நேரத்தில் பல அவதாரங்களை எடுப்பார்கள். அவற்றில் உண்மை அவதாரத்தை தவிர மற்ற அனைத்துமே துணை அவதாரங்கள். இருப்பது போல காணப்பட்டு, அப்படியே மறைந்தும் விடுவார்கள் என்று முன்னர் கூறி இருந்தேன் அல்லவா ! இப்படியாகத்தான் லஷ்மி தேவியானவள் முன் பிறவியில் தான் எடுத்த சீதையின் அவதாரத்தில் தன்னைக் காத்துக் கொள்ள ஒரு நிழல் அவதாரத்தை எடுத்திருந்தாள். லஷ்மியே முன் ஜென்மத்தில் வேதவதியாக தோன்றி அன்னை சீதையைக் காப்பாற்றியவள். ஆனால் அந்த ஜென்மத்தில் லஷ்மி தேவியின் துணை உருவே வேதவதி என்பதை அறிந்திடாத பகவான் ராமபிரான் வேதவதியும் தன்னை மணந்து கொள்ளுமாறு அனைவர் முன்னிலையிலும் அவரைக் கேட்டபோது அவளை ஸ்ரீனிவாச அவதாரத்தில் மணப்பதாக உறுதி அளித்து இருந்ததினால் லஷ்மி தேவியானவள் இப்போது வேதவதிக்காக, அதாவது தனது மாய அவதாரத்துக்கு கிடைத்த உறுதி மொழியைக் காப்பாற்ற தானே பத்மாவதி எனும் பெயரில் அவதரித்து ஆகாசராஜனின் குடும்பத்தில் வளர்ந்து வரலானாள். அவள்தான் ஸ்ரீனிவாசரை மணக்க உள்ளவள். ஆமாம் லஷ்மி தேவி ஏன் ஆகாசராஜனுக்கு மகளாக அவதரிக்க வேண்டி இருந்தது? அது ஒரு சிறியக் கதை.

அது சரி, லஷ்மி தேவி பத்மாவதியாக அவதரித்து விட்டாள். ஸ்ரீனிவாசர் எங்கே அவதரித்து உள்ளார்? அவர் கதை என்ன? முதலில் ஆகாசராஜனுக்கு லஷ்மி ஏன் பிறந்தாள் என்பதை தெரிந்து கொண்டப் பின், ஸ்ரீனிவாசர் பிறந்த கதையையும், ஸ்ரீனிவாசர்- பத்மாவதியின் திருமணக் கதையையும் படிக்கலாம். ஆகவே இப்போது ஆகாசராஜனுக்கு ஏன் லஷ்மி தேவி மகளானாள் என்ற கதையைப் பார்க்கலாம்.

லஷ்மி தேவி ஏன் ஆகாசராஜனுக்கு மகளாகக் கிடைக்க வேண்டும் என்பதின் காரணம் லஷ்மி தேவி கோபத்தினால் பகவான் விஷ்ணுவை பிரிந்து சென்று விட்ட கதை ஸ்ரீனிவாசர் பிறந்தக் கதையுடன் ஒன்று சேர்ந்தது. ஆகாசராஜன் முன் பிறவியில் வராக ஷேத்திரம் எனும் நாட்டை ஆண்டு வந்த ஒரு சோழ மன்னனாக இருந்தவர். அந்த சோழ மன்னன் பகவான் விஷ்ணுவின் சாபத்தினால் சில காலத்துக்கு ஒரு பிசாசாக இருந்தப் பின்னர் மீண்டும் மனித உருவில் ஆகாசராஜனாகப் பிறந்தவர். இனி லஷ்மி தேவி விஷ்ணுவை பிரிந்து சென்றக் கதையையும் அதன் பின் அவள் ஆகாசராஜனின் மகளாக பிறந்தக் கதையையும் படிக்கலாம்.

லஷ்மி தேவி விஷ்ணுவை பிரிந்தாள்?

முன்னர் கூறியபடி முனிவர்கள் செய்த யாகத்தில் அதித்தியாக மும்மூர்த்திகளில் யாரையாவது அழைக்கலாம் என எண்ணி பிருகு முனிவர் சென்றபோது நடந்தக் கதையைப் பார்த்து விட்டோம். அதில் பகவான் விஷ்ணுவை லஷ்மி தேவிக்கு முன்னால் பிருகு முனிவர் அவமானப்படுத்தி விட்டுச் சென்று இருந்தார். அதனால் லஷ்மி தேவி கோபம் அடைந்தாள். தனது கோபத்தை கணவரிடம் காட்டிய பின் அவரை விட்டு விலகிச் சென்று விட்டாள் என்பதையும் படித்தோம் அல்லவா. இப்படி பல முறை அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்திருந்ததினால் லஷ்மி தேவி கிளம்பிச் சென்றதை பகவான் விஷ்ணு பெரியதாகப் பொருட்படுத்தவில்லை ஆகவே அவள் எங்கு சென்று விட்டாள் என்பதோ, உண்மையிலேயே தன்னை விட்டு சென்று விட்டாளா என்பதும் பகவான் விஷ்ணுவிற்கு தெரியவில்லை. அவருடைய எண்ணமெல்லாம் தான் யாகத்துக்கு செல்ல வேண்டும், அதன் பின் பூமியில் ஸ்ரீனிவாசராக இன்னொரு அவதாரம் எடுத்து உலகைக் காப்பாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும், அவை அனைத்துமே கலியுகம் பிறக்கும் முன் செய்யப்பட வேண்டியவை. அதன் தான் வாக்கு கொடுத்தது போல பூமிக்குச் சென்று முனிவர்களின் யாகத்தை நிறைவு செய்து தந்தப் பின், விரைவில் மீண்டும் பூமியில் தான் அவதரித்து உலகைக் காப்பேன் என ரிஷி முனிவர்களுக்கு உறுதி கூறி விட்டு வைகுண்டம் சென்று செல்ல வேண்டும். இந்த எண்ணம் மட்டுமே அவரை சுற்றி இருந்தது.

வைகுண்டத்துக்குத் திரும்பியதும் அவர் லஷ்மி தேவியை காண அவள் அறைக்குச் சென்றபோதுதான் அவள் அங்கு இல்லை என்பது தெரிந்தது. சரி வெளியில் எங்காவது சென்று இருப்பாள் என நினைத்துக் காத்திருந்தார். ஆனால் லஷ்மி தேவி வரவே இல்லை. சில நாட்கள் ஆகியும் லஷ்மி தேவியைக் காணவில்லை. அவள் எங்கு சென்று இருப்பாள் என்று தேடத் துவங்கியபோதுதான் அவருக்கு ஒரு உண்மை நிதர்சனமாகத் தெரிந்தது. அவள் தன்னை விட்டு உண்மையிலேயே விலகிச் சென்று விட்டாள் . *(4)

நடந்ததை நினைத்து பகவான் விஷ்ணு கவலைக் கொண்டார். ஒரு சிறிய விஷயத்திற்காக இப்படி தன்னை விட்டு லஷ்மி தேவி விலகிச் சென்று விட்டாளே என்று துக்கம் ஏற்பட்டது. லஷ்மிதேவியும் வைகுண்டத்தை விட்டுச் சென்றப் பின் வைகுண்டம் களை இழந்து காணப்பட்டது. படோபகாரங்கள் இல்லை. வைகுண்டத்தில் இருந்தவர்களோ ஏனோ தானோ என்று இருந்தார்கள். எங்கு சென்றாலும் ‘பெருமானே, லஷ்மி தேவி எங்கே சென்று விட்டாள். அவள் இல்லாமல் இந்த லோகம் வெறிச்சோடிக் கிடக்கிறதே. லஷ்மி தேவி இங்கு இல்லாததினால் முன்னைப் போல பூமியிலும் மக்கள் எம்மை ஆராதித்து அழைக்காமல் பூஜை புனஸ்காரங்களை செய்வதில்லை. அதனால் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய அவிர் பாகம் கூட எங்களுக்கு கிடைப்பது இல்லையே. நாங்கள் ஒரு விதத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் போல இருப்பதாக அல்லவா உணர்கிறோம்’ என்று கூறி கண்ணீர் விட்டார்கள். அவற்றைக் கேட்ட பகவான் விஷ்ணு கவலைக் கொண்டார். ஆகவே அவளைத் தேடிக் கொண்டு லோகம் லோகமாக- இந்தரலோகம், சந்திரலோகம், தேவலோகம், பாதாளம், கைலாயம் என அனைத்து இடங்களிலும் சுற்றி அலைந்தவர் அவளை எங்குமே காணாமல் முடிவாக பூமிக்கு வந்து சேர்ந்தார்.

லஷ்மி, லஷ்மி என கூக்குரல் எழுப்பி அவளை அழைக்கத் துவங்கி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தார். ஆனால் அவர் குரல் மதிப்பின்றி இருந்தது. லஷ்மி தேவியோ அவர் கூப்பிட்ட குரலை ஏற்று வரவே இல்லை. அவள் இந்தியாவின் தென் பகுதியில் இருந்த கொல்லாபுரம் என்ற ஊரில் இருந்த வனத்துக்குச் சென்று தவத்தில் இருந்ததினால் அவள் எங்கு சென்று என்ன அவதாரத்தை எடுத்து மறைந்து இருப்பாள் என புரியாமல் திகைத்தவர், அன்ன ஆகாரம் இன்றி பித்து பிடித்தவர் போல அவளை தேடிக் கொண்டு அலைந்து கொண்டு இருந்தபோது ஒரு சோழ மன்னன் ஆட்சிப் பகுதியில் இருந்த வனப் பகுதியில் சென்று அங்கிருந்த ஒரு பள்ளத்தில் உட்கார்ந்தார். அங்கு அமர்ந்தவர் அப்படியே மயங்கி உட்கார்ந்து விட்டார். பல காலம் அப்படியே கிடந்தவர் மீது கரையான் புற்றும் எழுப்பி அவரை மூடி விட்டது. ஆனால் அவருடைய வாய் மட்டும் லஷ்மி….லஷ்மி என முனகிக் கொண்டே இருந்தது.

பலகாலம் ஆகியும் பகவான் விஷ்ணுவோ மற்றும் லஷ்மி இருவருமே வைகுண்டத்தில் இல்லை என்பதாலும், வைகுண்டமே களை இழந்து காணப்பட்டதாலும் அதைக் குறித்துப் பேசலாம் என பகவான் விஷ்ணுவை தேடிக் கொண்டு சென்ற மகரிஷி நாரதருக்கு வைகுண்டத்தில் லஷ்மியைக் காணாமல் பகவான் விஷ்ணு அவளைத் தேடிக் கொண்டு பூலோகம் சென்று விட்டிருந்தது தெரிய வந்தது. ஆகவே சற்றும் தாமதிக்காமல் பகவான் விஷ்ணுவைத் தேடி அலைந்தவர் பகவான் விஷ்ணு மயங்கிக் கிடந்த நிலையை பார்த்து அதிர்ந்து போனார். ஒரு புற்றில் மறைந்துக் கிடந்த பகவான் விஷ்ணுவின் குரல் மூலம் அவர் உள்ள இடத்தைக் கண்டு பிடித்தார்.

புற்றின் உள்ளே இருந்து லஷ்மி……லஷ்மி என பகவான் விஷ்ணு முனகிக் கொண்டு இருந்தது மட்டுமே தெரிந்தது. அப்போதுதான் தனது ஞான திருஷ்டியினால் பகவான் விஷ்ணு மயங்கி அமர்ந்து இருந்த நிலை அவருக்கு புரிந்தது. அவரை குரல் கொடுத்து அழைத்தார். ஆனாலும் பகவான் விஷ்ணு பதில் கொடுக்கவில்லை. தேவலோகத்தை சேர்ந்தவர்கள் எந்த காரணத்தையும் கொண்டும் பூமியில் பிரம்மனால் படைக்கப்பட்டு உள்ள எந்த ஜீவனையும் ஹிம்சிக்கக் கூடாது. அப்படி செய்ய வேண்டும் எனில் அந்த ஜீவன்களை அழிக்கத் தக்க காரணம் இருக்க வேண்டும். ஆனால் இப்போதோ பூமியில் அமர்ந்துள்ள பகவான் விஷ்ணுவை சுற்றி அரண் ஒன்றை எழுப்பி ஒரு கவசம் போல சுற்றி அவர் வெயிலிலும், மழையிலும் நனையாமல் இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் கரையான்கள் ஒரு புற்றைக் கட்டி உள்ள நிலையில் அதை எப்படி அழிப்பது? அப்படி அந்த புற்றை அழித்தால் அத்தனைக் கரையான்களும் அல்லவா கொல்லப்பட்டு விடும். இந்த எண்ணத்தினால் உந்தப்பட்ட மகரிஷி நாரதர் தனது தந்தை பகவான் பிரும்மனிடம் ஓடோடிச் சென்று பகவான் விஷ்ணுவின் நிலைமையை எடுத்துக் கூறினார். அதைக் கேட்ட பகவான் பிரும்மாவும் பதற்றம் அடைந்து மகரிஷி நாரதரை அழைத்துக் கொண்டு பகவான் சிவபெருமானை காணச் சென்றார்.

பகவான் சிவபெருமான் அவர்கள் வந்த விவரத்தை கேட்டு அறிந்து கொண்டார். ஆனால் அவரோ சற்றும் பதட்டப்படவில்லை. அவர் கூறினார் ‘பிரும்மனே, கவலைப்பட வேண்டாம். லஷ்மி தேவியும் மனம் உடைந்து ஒரு கொல்லாபுரம் எனும் ஒரு ஊரில் உள்ள வனத்தில் தவத்தில் அமர்ந்து இருக்கிறாள். அவளாலும் விஷ்ணுவின் பிரிவைத் தாங்க முடியவில்லை. அவள் விஷ்ணுவை மீண்டும் அடைய வேண்டும் என்றுதான் தவத்தில் இருக்கிறாள். ஆனால் அவள் விஷ்ணுவை பிரிந்து சென்று விட்டதினால் அவளால் உடனே அவரை அடைய முடியாது. அதற்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டும். இது விதி. அதனால்தான் அவள் தவத்தில் அமர்ந்து இருக்கிறாள். நடப்பது அனைத்துமே விஷ்ணு மற்றும் லஷ்மிக்கு ஏற்பட்ட பூர்வ ஜென்ம விதியின் காரணமே. அதை இப்படித்தான் அனுபவித்து அவர்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்ற விதிக்கு ஏற்பவே அதன் முதல் பகுதி முனிவர்கள் செய்திருந்த யாகத்தினால் துவங்கி விட்டது. விஷ்ணு பூமியில் ஸ்ரீனிவாச அவதாரத்தை எடுத்து அந்த அவதாரத்தில்தான் மீண்டும் லஷ்மியை அடைய முடியும். ஆகவே விஷ்ணுவும் லஷ்மியும் மீண்டும் மனித உருவில் அவதாரம் எடுத்து மணம் புரிந்து கொண்டு தமது சக்தியை வெளிப்படுத்த வேண்டும். அதுவரை நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்’. என்றார்.

அதைக் கேட்ட மகரிஷி நாரதருக்கும் பகவான் பிரும்மாவிற்கும் அழுகையே வந்து விட்டது. தேவை இல்லாமல் இப்படி ஒரு காரியம் நடக்க நான் காரணமாகி விட்டேனே என மகரிஷி நாரதர் விசனப்பட்டார். ஆனால் அவற்றை இப்போது யோசனை செய்ய நேரமில்லை. ‘இப்போது உடனடியாக நாம் செய்ய வேண்டிய காரியம் பட்டினியாகக் கிடக்கும் பகவான் விஷ்ணுவிற்கு ஆகாரம் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று பகவான் சிவபெருமானிடம் மன்றாடிய பகவான் பிரும்மாவை சமாதானப் படுத்தினார் பகவான் சிவபெருமான். பகவான் விஷ்ணு இப்போது பூமியில் உள்ளதினால் பூலோகவாசியாக உருவை எடுத்துதான் நம்மால் அதை செய்ய முடியும். அதற்கான ஒரே வழி இந்த காரியத்தை செய்ய லஷ்மி தேவியும் உடன்பட வேண்டும். ஆகவே அவளையும் அழைத்துக் கொண்டு பூலோகம் சென்று ஏதாவது செய்யலாம் என முடிவு செய்தார்கள்.

லஷ்மி தேவியைப் பார்க்கப் போகும் வழியில் என்ன உருவம் எடுத்து அந்த வனத்தில் போய் தங்குவது? எப்படி பகவான் விஷ்ணுவிற்கு உணவு அளிப்பது என்று பல்வேறாக யோசனை செய்தார்கள். அவர்கள் மூவரும் லஷ்மி தேவி தவத்தில் இருந்த இடத்தை அடைந்தார்கள். லஷ்மிதேவியை தவத்தில் இருந்து எழுப்பி நடந்ததை கூற , லஷ்மி தேவியும் பதைபதைத்துப் போனாள். எப்படியாவது அவரைக் காப்பாற்றி என்னை அவருடன் சேர்த்து வைக்க நீங்கள்தான் அருள் புரிய வேண்டும் என பகவான் சிவபெருமானிடம் அவள் மன்றாடிக் கேட்டாள்.

பகவான் சிவபெருமான் லஷ்மி தேவியிடம் கூறினார் ‘சரி நீ ஒரு ஆட்டு இடைச்சி அவதாரத்தை எடுத்து வா. நானும் பிரும்மாவும் கன்றும் பசுவுமாக அவதரிக்கிறோம். எங்களை ஓட்டிக் கொண்டு சென்று இந்த ஊர் மன்னனிடம் விற்று விடு. அவன் கொட்டகையில் உள்ள பசுக்களை ஒரு இடையன் தினமும் ஓட்டிச் சென்று புற்களை மேய விடுகிறான். அப்படி அவன் பசுக்களை அழைத்துச் செல்கையில் மகரிஷி நாரதர் அவனை திசை திருப்பி இந்த வனப்பகுதிக்குள் தினமும் வருமாறு செய்ய வேண்டும். அப்படி வனப் பகுதிக்குள் வரும்போது, தினமும் நான் பகவான் விஷ்ணு உள்ள இடத்துக்குச் சென்று அவருக்கு பாலை ஆகாரமாக தருகிறேன். அதன் பின் அவர் ஸ்ரீனிவாசராக அவதாரம் எடுக்கும்போது, நீயும் ஆகாசராஜரின் மகளாகப் மாறி விட்டால் அதன் பிறகு அவரை திருமணம் செய்து கொள்ள நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்’ என்று கூறவும், அதைக் கேட்ட லஷ்மி தேவி மனம் மகிழ்ந்து உடனே அவர்கள் கூறியபடி இடைச்சி வேடத்தில் அங்கு தோன்ற, பகவான் சிவனும் பகவான் பிரும்மாவும் பசுவும் கன்றுமாக மாறினார்கள்.

ஆனால் அப்போது அவர்கள் லஷ்மி தேவியை பகவான் விஷ்ணு உடனே மணக்கப் போவது இல்லை. ஸ்ரீனிவாசராக உள்ள பகவான் விஷ்ணு பூர்வ ஜென்மத்தில் வேதவதிக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முதலில் லஷ்மியின் துணை அவதாரமான பத்மாவதியை மணந்து கொண்டப் பின்னரே அடுத்த சில நாட்களில் லஷ்மி தேவியையும் தன்னுடன் இணைத்துக் கொள்ள உள்ளார் என்ற விவரத்தைக் கூற விரும்பவில்லை. அப்படி செய்தால் காரியம் கெட்டு விடும் என நினைத்தார்கள்.

அடுத்தப் பிரச்சனை மன்னனின் அரண்மனையில் உள்ள பசுக்களோடு எப்படி சேர்ந்து கொள்வது? ஆட்டு இடைச்சி வேடத்தில் இருந்த லஷ்மி தேவி நகருக்குள் பசுவையும் கன்றையும் ஓட்டிச் சென்று அரண்மனைக்கு அருகில் பலருக்கும் பால் விற்கத் துவங்கினாள். வந்தவர்களிடம் எல்லாம் தன்னால் அவற்றைப் பேணிக் காக்க முடியவில்லை என்றும் ஆகவே அவற்றை விற்று விட தயாராக உள்ளதாகவும் புலம்பினாள். அந்தப் பசுவோ ஒரே வேளைக்கு ஒரு பெரிய அண்டா நிறைய பால் தருவதைக் கண்டும், அந்தப் பசுக்களின் அழகு சௌந்தர்யமாக இருந்ததினாலும் பலரும் அதை வாங்க ஆசைப்பட்டார்கள். ஆனால் அவர்கள் கொடுக்க வந்த விலை மிகக் குறைவு என்று அவற்றை ஏற்க இடைச்சி உருவில் இருந்த லஷ்மி தேவி மறுத்து வந்தாள்.

அதற்குள் அந்த செய்தி அரசனின் காதுக்கும் எட்டியது. அன்றுதான் சொல்லி வைத்தால் போல அரசனுக்கு பிறந்த நாள் வந்தது. அரசவை ராஜ குருவும் அன்று கன்றுடன் கூடிய புதிய பசுவை வாங்கி அவற்றுக்கு பூஜை செய்து அரண்மனையில் வைத்துக் கொண்டால், அவருக்கு அதிருஷ்டம் பெருகும் என்று அரசரிடம் கூற, என்ன விலைக் கேட்டாலும் கொடுத்து விட்டு அந்த பசுவையும் கன்றையும் அந்த இடைச்சியிடம் இருந்து வாங்கி வருமாறு அரசர் உத்தரவிட்டார். இப்படியாக பசுவும் கன்றும் அரண்மனை பசுக் குடிலுக்கு வந்து அங்கிருந்த பசுக்களுடன் சேர்ந்துவிட்டது. அதை அரசருக்கு விற்றப் பின் லஷ்மி தேவி மீண்டும் வனத்துக்கு சென்று விட்டாள்.

மறுநாள் முதல் ஏற்கனவே செய்திருந்த ஏற்பாட்டின்படி அரச மாளிகை ஆட்டு இடையன் எப்போதும் போல மாடு மேய்க்க வனத்துக்குப் போகும்போது மகரிஷி நாரதர் ஒரு இடையன் போன்ற இன்னொரு வேஷத்தில் வனத்துக்குச் சென்று அவனுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு, பேசிக் கொண்டே செல்வது போல அவன் செல்லும் பாதையை திசை திருப்பி பகவான் விஷ்ணு அமர்ந்து இருந்த புற்றின் அருகில் இருந்த புற்கள் மீது சென்று மாடுகளை மேய வைக்க ஏற்பாடு செய்தார். அங்கு நிறைய புற்கள் இருந்ததினால் இடையனும் ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு பசுக்களை அந்தப் பகுதியில் இருந்தப் புற்கள் மீது மேய விட்டான்.

அந்த தறுமணத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட பசுவும் கன்றுமாக இருந்த பகவான் சிவனும், பகவான் பிரும்மாவும் பகவான் விஷ்ணு அமர்ந்திருந்த புற்றின் அருகில் சென்று அதன் மீது ஒரு ஓட்டையை ஏற்படுத்தி அதன் மூலம் பகவான் விஷ்ணுவின் வாயில் பாலை சுரந்து அவருக்கு தந்தார்கள். பகவான் விஷ்ணுவும் லஷ்மி, லஷ்மி என முனகிக் கொண்டே அந்தப் பாலை பருகினாலும், அங்கேயே தன்னை மறந்து அமர்ந்திருந்தார். அடுத்த வேலை புற்றில் இருந்து அவரை வெளியில் வரவழைக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்பதை யோசனை செய்தவர்கள் இன்னோர் உபாயத்தை செய்ய கையாள வேண்டி இருந்தது.

சில நாட்கள் ஆன பின் அந்த மாடு கறக்கும் பால் மிகவும் குறைந்து போவதாக தொழுவத்தில் கூறினார்கள். ஆகவே அந்த மாட்டு இடையன் அந்தப் பசு நன்றாக புல்லைத் தின்கிறதா என்று கவனிக்க ஆரம்பித்தான். அப்போதுதான் ஆட்டு இடையன் ஒருநாள் எதேற்சையாக அந்த பசுவும் கன்றும் அந்தப் புற்றின் அருகில் சென்று தினமும் அதில் இருந்த ஒரு ஓட்டையில் பாலை சுரப்பதைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்தான். ஆகவே அதைத் தடுக்க அவன் அவற்றை வேறு இடத்துக்கு  இழுத்துச் சென்று மேய விட்டாலும் எப்படியாவது ஒரு முறை அவை அவனுடைய கவனத்தை திருப்பி அங்கு சென்று பாலை சுரப்பதைக் கண்டான். அவன் சில நாட்கள் அதை கவனித்தப் பின் அங்கு சென்று பார்த்தபோது அங்கு ஒரு பெரிய புற்று உள்ளதையும், அதன் உள்ளே இருந்து எதோ குரல் வருவதையும் கண்டு அந்த செய்தியை மன்னனின் மன்னனின் கவனத்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தான்.

மன்னும் மற்றவர்களும் முதலில் அதை நம்பவில்லை. ஆனால் தொழுவத்தில் இருந்தவர்கள் அந்த பசு சில நாட்களாக பால் சுறப்பதை பாதிக்கும் அதிகமாக குறைத்துக் கொண்டு விட்டது என்பதையும் தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்க, அதற்கு எதோ ஒரு காரணம் இருக்கும் என்று எண்ணியவர்கள் மறுநாள் அந்தப் பசுவும் கன்றும் எந்த இடத்தில் சென்று பாலை சுரக்கிறதோ அங்கு சென்று அந்தப் புற்றில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம் என முடிவு செய்தார்கள்.

அதற்கு முன்னால் மன்னன் அந்த ஆட்டு இடையனை அழைத்து ‘இன்று கடைசி முறையாக போய் அங்கு நடப்பதைப் பார். இன்றும் அப்படியே நடந்தால் என்னிடம் ஓடி வந்து உடனே செய்தியைக் கூறு. ஆனால் நீ கண்டது பொய்யாக இருந்தால் உன் தலையை வெட்டி விடுவேன்’ என பயமுறுத்தி அனுப்பி வைத்தான். ஆகவே அன்றும் எப்போதும் போல ஆட்டு இடையன் வனத்துக்கு பசுக்களை ஓட்டிச் சென்றான். மறைந்து இருந்து கொண்டு அந்த பசுவும் கன்றும் எங்கு சென்று பாலை சுரக்கிறது என்று கவனித்தப் பின் அது பாலை என்றும் சுரக்கும் இடத்திலேயே சென்று அன்றும் சுரக்கத் துவங்குவதைக் கண்டப் பின் மன்னனின் கண்டிப்பான எச்சரிக்கையினால் எங்கே தன் தலை வெட்டப்பட்டு விடுமோ என பயந்து, ஆத்திரம் அடைந்து அந்த மாட்டினால்தானே தனக்கு இத்தனை தொந்தரவும் வந்தது என்று எண்ணிக் கொண்டு பசுவையும் கன்றையும் தனது தடியால் அடிக்கப் பாய்ந்து சென்றான்.

அதை புற்றில் இருந்து கவனித்த பகவான் விஷ்ணு அப்படியே வெளியில் பாய்ந்து வந்து அந்த அடி மாட்டின் தலையில் விழாமல் தடுக்க முயல அந்த அடி அவர் தலையில் விழுந்தது. அவர் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு மாட்டின் மீது வழிந்தது. அதைக் கண்ட இடையன் அப்படியே மூர்ச்சைப் போட்டு விழுந்தான்.

அடுத்த கணம் அந்த பசு மாடு கத்திக் கொண்டே அரண்மனைக்கு ஓடி மன்னன் முன்னால் சென்று நின்றது. மாட்டின் மீது ரத்தம் வழிந்து இருந்ததைக் கண்ட மன்னன் திடுக்கிட்டு எழுந்து என்ன நடந்தது எனக் கத்தியவாறு அதன் அருகில் செல்ல, அந்த மாடும் தன்னுடன் வருமாறு தலையால் ஒருவித செய்கையை காட்டி விட்டு ஓடத் துவங்கியது. அனைவரும் அதன் பின்னால் ஓட அது வனப் பகுதியில் இடையன் மயங்கிக் கிடந்த இடத்தை அடைந்தபோது, அங்கு இருந்த பகவான் விஷ்ணு கோபத்துடன் அந்த அரசனுக்குக் காட்சி தந்தார். அதே நேரத்தில் ஆட்டு இடையனும் மூர்ச்சை தெளிந்து எழுந்து கொண்டு நடந்த விவரத்தைக் கூறினான். மன்னன் தன் எதிரில் நின்றிருந்த பகவான் விஷ்ணுவின் பாதங்களில் விழுந்து வணங்கி நடந்த தவறுக்கு மன்னிப்பைக் கோரினான். ஆனால் அதற்குள் பகவான் விஷ்ணு மக்கள் செய்யும் தவறு மகேசனையே சாரும் என்பதினால் தன்னை அடித்த இடையன் தானாக அதை செய்யவில்லை, அப்படி செய்ய அவன் உணர்ச்சிகளைத் தூண்டியதற்கான குற்றம் மன்னனையே போய் சேரும் என்பதினால் அவன் பிசாசாகக் கடவது என அவனுக்கு சாபமிட்டுவிட அந்தஷணமே மன்னன் ஒரு பிசாசாகி விட்டான்.

தன்னை மன்னித்து விட்டு மீண்டும் மனிதப் பிறவி எடுத்து பாப நிவாரணம் செய்ய அருள் புரியுமாறு அந்த பிசாசு உருவில் இருந்த மன்னன் பகவான் விஷ்ணுவிடம் கெஞ்சத் துவங்க பகவான் விஷ்ணுவும் அதன் மீது கருணைக் கொண்டு, இன்னும் சில காலத்திலேயே அந்த பிசாசின் வாழ்வு முடிந்து விடும் என்றும், அதன் பின்னர் அது சோழ வம்சத்திலேயே ஒரு மன்னனின் மகனாகப் பிறந்து சோழ நாட்டை அரசாள்வான் என்றும், அப்போது அவனுக்குப் பிறக்கும் அவனுடைய மகளை தான் மணப்பேன் என்றும் வாக்கு கொடுத்தார். அது போலவே, அந்த ஆட்டு இடையனும் எந்த தவறையும் தானாக செய்யாமல் அரசனின் பயமுறுத்தலால் உந்தப்பட்டு அப்படி செய்திருந்ததினால் தன்னை முதலில் தரிசனம் செய்தவன் அந்த இடையன் என்பதினால் தான் ஸ்ரீனிவாசராக அவதரித்து எந்த ஆலயத்தில் அமர்வேனோ அந்த ஆலயத்தில் அவன் வம்சத்தை சார்ந்தவர்களே முதல் தரிசனத்தைப் பெறுவார்கள் என்றும் அவனுக்கு அருள் புரிந்தார். ஆகவேதான் அந்த ஆட்டு இடையனின் வம்சாவளிகளே திருப்பதியில் முதல் தரிசனத்தைப் பெறுவதாகக் கூறுகிறார்கள்.

சோழ மன்னனுக்கு பிசாசாக மாற சாபம் கொடுத்தப் பின், அதற்கு அடுத்த ஜென்மத்தில் அவன் மீண்டும் மன்னனாக பிறக்கவும் பகவான் விஷ்ணு அருள் புரிந்தப் பின் பசுவும் கன்றும் மறைந்து விட்டன. அந்த பிசாசு வடிவில் இருந்த சோழ மன்னனே பின்னர் சுதர்மன் எனும் மன்னனின் மகனாகப் பிறந்த ஆகாசராஜன். அந்த ஆகாசராஜனுக்கு மகளாகக் பூமியில் கிடைத்தவளே பத்மாவதி.

முன்னரே கூறியது போல பத்மாவதி எனும் பெயரில் ஆகாசராஜன் மூலம் லஷ்மியின் துணை அவதாரமும் பூமியில் இருந்து அவதரித்து விட்டாள். பிசாசாக மாறிய சோழ மன்னனின் செய்கை மூலம் விஷ்ணு பகவானும் பூமியில் மனித உருவில் ஸ்ரீ வராஹா ஷேத்திர வனத்தில் பூமியில் தோன்றி விட்டார். இனி அவர்கள் இணைந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் லஷ்மி தேவி மீண்டும் பகவான் விஷ்ணுவுடன் இணைவாள். இந்த பூமிக்கு கண்கண்ட தெய்வமாக பகவான் விஷ்ணுவும் லஷ்மியும் ஒன்றிணைந்து மக்களுக்கு செல்வ மழையையும், வேண்டியதைத் தரும் கலியுக வரதராகவும் மாற வேண்டும். அந்தப் பின்னணியில் இப்போது விஷ்ணு பகவான் எழுமலையானான சரித்திரக் கதை துவங்குகிறது.

சோழ மன்னனுக்கு பிசாசாக மாற சாபம் கொடுத்தப் பின், அதற்கு அடுத்த ஜென்மத்தில் மீண்டும் மன்னனாகவும் பகவான் விஷ்ணு அருள் புரிந்தப் பின் அனைவரும் சென்று விட்டார்கள். அனைவரும் சென்று விட்டப் பின் அடுத்த கணம் விஷ்ணு பகவான் அவர்களுக்கு தெரியாமல் ஒரு மனித உருவில் அவதரித்து தனது தலையில் ரத்தம் வழிய அடுத்த காட்சியை நிறைவேற்ற காட்டில் நடக்கலானார். தூரத்தில் ஒரு குடுசை தெரிந்தது. அதன் வாயிலில் ஒரு பெண்மணி நின்று கொண்டு இருந்தாள்.

அதன் அருகில் மனித அவதாரத்தில் இருந்த பகவான் விஷ்ணு பகவான் சென்று நின்று கொண்டபோது உள்ளே இருந்து கிருஷ்ண நாமம் ஒலித்துக் கொண்டு இருந்ததைக் கேட்டதும் தன்னுடைய பூர்வ ஜென்ம நினைவு பகவான் விஷ்ணுவிற்கு மீண்டும் வந்து விட்டது. ஆனாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் உள்ளே இருப்பது யார் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு ‘அம்மா… தாயே தயவு செய்து வெளியில் வருவீர்களா?’ எனக் குரல் கொடுத்தார். யாரோ ஒருவர் வந்து வாயிலில் நின்று கொண்டு தன்னை வெளியில் அழைப்பதைக் கேட்ட பெண்மணி வெளியில் வந்து அங்கு நின்றிருந்த அவரை நோக்கினாள். அவர் தலையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டு இருந்ததைக் கண்ட அவள் ‘ குழந்தாய்..என்ன ஆயிற்று ?… வா..வா இங்கு வந்து அமர்ந்து கொள்.. ஏதாவது மிருகம் உன்னை அடித்து விட்டதா?… வா..உள்ளே வா… முதலில் உன் காயத்துக்கு மருந்து போடுகிறேன். அதன் பின் பேசலாம் ‘ என்று கூறியப் பின் அவர் தலைக்கு கை மூலிகையில் செய்த மருந்தைத் தடவி கட்டுப் போட்டப் பின் அவர் யார் என்பதைக் குறித்து விஜாரிக்கத் துவங்கினாள்.

அவளைக் கண்டதுமே பகவான் விஷ்ணுவிற்கு அவளே பூர்வ ஜென்மத்தில் யசோதையாக இருந்த தன்னுடைய தாயார் என்பது புரிந்து விட அவளிடம் கேட்டார் ‘அம்மா…என்னை உங்களுக்கு தெரியவில்லையா?….நான்தான் அம்மா, பூர்வ ஜென்மத்தில் உனது மகனாக இருந்த கிருஷ்ணர்’ என்று கூறி தன் சுய உருவைக் காட்ட அவள் ஓடி வந்து அவரைக் கட்டித் தழுவி தேம்பித் தேம்பி அழுதாள். ‘கிருஷ்ணா, இப்போதுதான் பூர்வ ஜென்ம நினைவு எனக்குள் எழுந்துள்ளது…உன்னை யார் என்று கேட்காமல் இருந்திருக்கலாம் அல்லவா….. கிருஷ்ணா நீ இந்நாள் வரை எங்கு இருந்தாய்? என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தாய்? இந்த ரத்தக் காயம் உனக்கு எப்படி ஏற்பட்டது’ என்று கேட்டு அழத் துவங்கியதும் அவளுக்கு ஆறுதல் கூறினார் கிருஷ்ணராக தோற்றம் தந்து நின்று கொண்டு இருந்த பகவான் விஷ்ணு பகவான். அதன் பின் அவளுக்கு நடந்தக் கதை அனைத்தையும் கூறிவிட்டு, தான் இனி அங்கேயே அவளுக்கு மகனாக தங்குவதாகவும், ஆனால் அவருக்கும் அங்கு பிறந்து இருந்த லஷ்மி தேவிக்கும் திருமணம் ஆகும்வரை அந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது என்றும் சத்தியம் பெற்றுக் கொண்டார். *(5)

வகுளாதேவி எனும் பெயர் கொண்ட அந்தப் பெண்மணி பூர்வ ஜென்மத்தில் யசோதையாக இருந்தவள். ஆனாலும் இருவருமே இன்னொரு பிறவி எடுத்து இருந்ததினால் அவர்களுக்கு அந்த மனித உருவில் இருந்தவர்கள் செய்ய வேண்டிய சில கடமைகள் இருந்தன. பகவான் விஷ்ணு லஷ்மி தேவியை திருமணம் செய்து கொள்ளும் முன்னால், தங்குவதற்கு நல்ல இடம் வேண்டும் என்பதற்காக அருகில் இருந்த வராஹப் பெருமானின் ஆலயத்துக்குச் சென்று அவரை வேண்டிக் கொள்ளலாம் என்று கூறி பகவான் விஷ்ணுவை அங்கு அழைத்துச் சென்றாள். அந்த வகுளா தேவிக்கு கோவிந்தராஜன் என்ற பெயரில் ஒரு மகனும் இருந்தார். அவரையே ஸ்ரீனிவாசருக்கு இனி உடன் பிறவா அண்ணன் என்று கூறி இருவருக்கும் வகுளா தேவி உறவை ஏற்படுத்தித் தந்தாள்.

வராஹப் பெருமானின் ஆலயத்துக்குச் சென்று அவரை வேண்டிக் கொண்டதும், பகவான் விஷ்ணுவை அடையாளம் கண்டு கொண்ட வராகர் அவர் முன் தோன்றி அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். மனித அவதாரத்தில் இருந்த பகவான் விஷ்ணுவும் தான் வந்தக் காரியத்தைக் கூறி விட்டு தனக்கு தங்க இடம் வேண்டும் என்று கூறியதும், வராகப் பெருமானோ தனக்கு தக்க காணிக்கை செலுத்தினால் அங்கு தங்கிக் கொள்ள தான் அனுமதிப்பதாகக் கூறினார். அது என்ன காணிக்கை?

ஒவ்வொரு அவதாரத்துக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உண்டு. அதை அவர்கள் நிறைவேற்றிக் கொள்வார்கள். பகவான் விஷ்ணுவோ ‘வராஹப் பெருமானே, என்னிடம் தற்போது லஷ்மி இல்லை என்பதினால் என்னிடம் பணம் இல்லை. ஆகவே எனக்கு இப்போது தங்க இடம் கொடுத்தால், நான் எப்போது இந்த இடத்தில் ஒரு ஆலயத்தில் குடி அமர உள்ளேனோ அந்த நேரம் வரும்போது யார் என்னை தரிசனம் செய்ய வருவார்களோ அவர்கள் முதலில் உம்மை வணங்கியப் பிறகே என்னை வந்து தரிசிக்கலாம் என்று கட்டளை இடுகிறேன். உம்மை வந்து தரிசிக்காமல் என்னை வந்து தரிசித்தால் அவர்களுக்கு என்னை தரிசித்த பலன் கிடைக்காது என்று உறுதி தருகிறேன். அதை ஏற்றுக் கொண்டு எனக்கு தங்க இடம் கொடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ள வராஹப் பெருமான் அதை ஏற்றுக் கொண்டு அவரை அங்கேயே தங்கிக் கொள்ள அனுமதித்தார். அதனால்தான் இன்றும் திருப்பதிக்கு செல்பவர்கள் முதல் நெய்வித்தியத்தை பகவான் வராஹருக்குப் படைத்த பின்னரே வெங்கடேசப் பெருமானுக்கு படைக்க வேண்டும் என்ற நியதி ஏற்பட்டது. அதுவே வராஹப் பெருமான், பகவான் விஷ்ணுவிடம் இருந்து பெற்றுக் கொண்டக் காணிக்கை. *(6)

இப்படியாக பூர்வ ஜென்மத் தாயாரான வகுளா தேவியின் அரவணைப்பில் இருந்த அவதாரப் புருஷரான பகவான் விஷ்ணுவிற்கு ஸ்ரீ வராஹா ஸ்வாமியின் ஆலயத்தில் தங்க இடம் கிடைத்ததும் அவருக்கு ஸ்ரீனிவாசன் என்ற பெயரை வகுளாதேவி சூட்டினாள். பகவான் விஷ்ணுவின் அவதாரமான இந்த பகவான் ஸ்ரீனிவாசரே முன் அவதாரத்தில் பகவான் கிருஷ்ணராக இருந்தவர். யசோதைக்கு அவள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்வதாக முன் அவதாரத்தில் பகவான் கிருஷ்ண அவதாரத்தில் இருந்தபோது கொடுத்திருந்த வாக்கைக் காப்பாற்ற வகுளாதேவிக்கு இப்போது மகனாக வந்துள்ளார்.

அவர்கள் இருவரும் வராஹப் பெருமான் கொடுத்திருந்த இடத்தில் சிறிய குடிலை அமைத்துக் கொண்டு அங்கு வாழத் துவங்கினார்கள். அதே நேரத்தில் பகவான் ஸ்ரீனிவாசன் என்ற பெயரைக் கொண்ட பெருமாள் வனத்துக்குச் சென்று வேட்டை ஆடத் துவங்கினார். வேட்டை ஆடி மிருகங்களைக் கொல்வது பாபமில்லையா என்று கேள்வி எழும்பலாம். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. ஸ்ரீனிவாசப் பெருமாள் வேட்டை ஆடியதும் ஒரு மாயையே. பூர்வ ஜென்மங்களில் பலர் செய்திருந்த பாவங்களினால் அவர்கள் இந்த ஜென்மத்தில் மிருகங்களாகப் பிறந்து இருந்தார்கள். அவர்களுக்கு சாப விமோசனம் பகவான் விஷ்ணுவின் மூலமே கிடைக்க இருந்தது. அதனால்தான் ஜடப் பொருளான ஒரு மிருக உருவில் இருந்த அந்த ஆத்மாக்களை அதனதன் காலம் முடிந்ததும் பகவான் ஸ்ரீனிவாச அவதாரத்தில் இருந்த விஷ்ணு பகவான் விடுதலை செய்யவே இந்த வனத்துக்கு வந்ததும் அல்லாமல் வேடனாகவும் மாறி இருந்தார். இறந்தவை வெறும் மாயையான ஜடப் பொருட்களே. அதனுள் இருந்த ஆத்மாக்கள் அவரால் விடுதலை செய்யப்பட்டு அடுத்தப் பிறவியை எடுக்கச் செல்ல அவற்றில் சில சொர்கத்தையும் அடைந்தன.

ஒரு கட்டத்தில் பத்மாவதியாக அவதரித்து உள்ள லஷ்மி தேவியை அடைவதற்கு ஒரு நாடகம் தேவையாக இருந்தது. ஆகவே அவர் தன்னை ஒரு வேடனாக காட்டிக் கொள்ள வேண்டும். மிருகங்களை முன் வைத்தே அவர் பத்மாவதி அவதாரத்தில் இருந்த லஷ்மி தேவியின் இருப்பிடத்துக்குச் செல்ல வேண்டும். அகவே தனது பூத கணங்களை சில மிருகங்களாக அந்த வனத்தில் அவதரிக்கச் சொல்லி இருந்தார். *(7)

இப்படியாக அவர்கள் அந்த வனத்தில் வராஹ ஸ்வாமியின் ஆலயத்துக்கு உட்பட்ட பகுதியில் வாழ்ந்து கொண்டு இருந்த போது ஒரு நாள் அவர் சிலருடன் சேர்ந்து காட்டில் வேட்டை ஆடிக் கொண்டு இருந்தபோது பத்மாவதி அரண்மனைக்கு அருகில் இருந்த பகுதியைக் காண நேரிட்டது. அந்த இடத்தில் ஒரு பெரிய யானை வந்து கொண்டு இருந்ததைக் கண்டு அதன் மீது அம்பை வீசி அதை காயப்படுத்த அந்த யானை பிளரிக்கொண்டு ஓடத் துவங்கியது. அதைத் துரத்திப் பிடிப்பதாகக் கூறி விட்டு தன்னிடம் இருந்த வெண் குதிரை மீது ஏறிக் கொண்டு அதைத் துரத்தத் துவங்கினார். ஆனால் அந்த யானையோ அதை விட வேகமாக ஓடி அரண்மனை நந்தவனத்தில் இருந்த நீர் குளத்தின் அருகில் சென்று நின்றது. அதன் அருகில் பகவான் ஸ்ரீனிவாசர் சென்று இறங்கியதும், அந்த யானை அவரை வணங்கி விட்டு மறைந்து விட்டது. ஆனால் அவர் அப்போது மனித உருவில் இருந்ததினால் அவருக்கு அது தன்னை வணங்கியது ஏன் என்பது தெரியவில்லை. அவரை வணங்கிய யானை ஒரு ஜென்மத்தில் அவரால் முதலையின் வாயில் இருந்து காப்பற்றப்பட்ட கஜேந்திரன் ஆகும். அது ஏன் இந்த ஜென்மத்தில் இங்கு வந்து பிறந்தது என்பது தனிக் கதை. அது இங்குள்ள பகவான் ஸ்ரீனிவாசர் சரித்திரத்துடன் அதிகம் சம்மந்தப்பட்டது இல்லை என்பதினால் அதை இங்கு கூறவில்லை. எங்கு சென்று மறைந்து கொண்டது என்பதும் புரியவில்லை. அந்த யானை அங்கிருந்து எங்கோ சென்று விட்டதும் பகவான் ஸ்ரீனிவாசர் தனது குதிரையில் இருந்து இறங்கி அந்த தாடகத்தில் நீர் அருந்தினார். அசதியாக இருந்ததினால் அப்படியே அங்கிருந்த மர நிழலில் படுத்துக் கொண்டு இளைப்பாறியபோது அந்த இடத்துக்கு பத்மாவதி தனது தோழிகளுடன் ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் வந்தாள்.

பத்மாவதி மீது காதல் கொண்டார் பகவான் ஸ்ரீனிவாசர்

ஆடிப்பாடிக் கொண்டு வந்தவளைக் கண்டதுமே பகவான் ஸ்ரீனிவாசருக்கு அவள் மீது தன்னை அறியாமலேயே காதல் பிறந்தது. எத்தனைப் பேரழகியாக இருக்கிறாள், இவள் எனக்கு மனைவியாகக் கிடைத்தால் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணினார். அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவரை பத்மாவதியும் நோக்கினாள். யாரது அரண்மனைத் தோட்டத்தில் வந்து அமர்ந்து உள்ளார் என்பதைப் பார்ப்பதற்காக தனது தோழிகளுடன் அவர் அருகில் சென்றதும் அவர் வேறு மனிதர் என்பது புரிந்தது. அவள் அவரிடம் கேட்டாள் ‘ஐயா, நீங்கள் யார்? இங்கு எப்படி வந்தீர்கள்? இது அரண்மனை தோட்டம் ஆயிற்றே’ என்று கேட்க அவர் எழுந்து நின்று கொண்டு தான் சேஷாசலம் என்ற ஊரில் இருந்து வருவதாகவும் ஒரு மதம் பிடித்த யானையை துரத்திக் கொண்டு தனது குதிரையில் வந்து கொண்டு இருந்தபோது, அந்த யானை அந்த இடத்தில் வந்தப் பின் எங்கோ மறைந்து ஓடி விட்டது. வேண்டும் என்றே தான் அங்கு வரவில்லை. ஆனால் வழி தவறி வந்து விட்டாலும், தாகமாக இருந்ததினால் அந்த தாடகத்தில் இருந்து தண்ணீரைக் குடித்தப் பின் இளைப்பாறிக் கொண்டு இருந்ததாகவும், அப்போதுதான் பேரழகு மிக்க அவளைக் கண்டதாகவும் , அவள் யார் என்றும் கேட்டார்.

அதைக் கேட்ட அவள் கூறினாள் ‘ ஐயா, தவறாக வந்ததுதான் வந்து விட்டீர்கள். ஆனால் வந்ததும் இல்லாமல் என் அழகைக் குறித்து விளக்குவது நியாயமல்ல. ஒரு பெண்ணைப் பார்த்து முதல் எடுப்பிலேயே அவள் அழகை விமர்சிப்பதா? நான் யார் என்பதை அறியாமல் இப்படிக் கேட்டு விட்டீர்கள் என்று நினைக்கிறேன். என் தந்தை இந்த நாட்டு மன்னனான ஆகாசராஜன் என்பவர். நான் அவருடையப் பெண்ணான பத்மாவதி ….ஆகவே உடனே இங்கிருந்து கிளம்பி ஓடி விடுங்கள்’ என்றாள் .

ஆனால் அவரோ விடாக் கொண்டன், கொடாக் கண்டன் என்பதினால் கேட்டார், ‘அழகு வதனியே, உன்னைக் கண்டதுமே என்னை அறியாமல் உன் மீது மோகம் வந்து விட்டது. நான் என்ன செய்வேன்? தவறாக எண்ணாதே. நான் வேடன் ஆனாலும் உன்னை மணந்து கொண்டு உன்னை தக்க பாதுகாப்போடு வைத்திருப்பேன். என்னை மணக்க நீ சம்மதிப்பாயா?’ என்று எடுத்த எடுப்பிலேயே தன் மனதில் இருந்த எண்ணத்தை கூறி விட்டார்.

அதைக் கேட்ட பத்மாவதி நாகமாக சீறினாள் ‘அற்ப பதரே….நீ என்ன பைத்தியமா?. …என்ன ஆணவம் இருந்தால் வேடனான நீ ராஜகுமாரியான என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்பாய். உன்னைப் போன்றவர்களுக்கு பாபம், பரிதாபப்படுவது தவறு. இங்கிருந்து ஓடுகிறாயா, இல்லை சேவகர்களை அழைத்துத் துரத்தட்டுமா என?’ எனக் கோபமாகக் கேட்டு விட்டு சேவகர்களை கூவி அழைத்தாள்.

அவர்கள் வருவதற்கு முன்னரே ‘அழகிய பெண்ணே, தயவு செய்து என் காதலை நிராகரித்து விடாதே….. நான் உன்னை நெஞ்சார நேசிக்கிறேன். என்னை தயவு செய்து மணந்து கொண்டு என் காதல் ஏகத்தை நீக்கு’ என்று மன்றாடத் துவங்க, அவர் மீது தோழிகள் கற்களை வீசி அடிக்கத் துவங்கினார்கள். அப்படி கற்களை வீசியபோது அவர் வெண் குதிரை மீது தகாத இடத்தில் பெரிய பெரிய கற்கள் வீழ்ந்ததினால் அந்த குதிரையும் அங்கேயே மரணம் அடைந்து விழுந்தது. அதற்குள் அங்கு ஓடி வந்த காவலாளிகள் அவரை அடித்து உதைத்து அனுப்பினார்கள். அவர்கள் அடித்ததில் உடலெல்லாம் படுகாயமுற்று ரத்தம் வழிந்த உடலுடன் அவர் மெல்ல தள்ளாடிக் கொண்டு அரண்மனை தோட்டத்தை விட்டு வெளியேறினார்.

உடம்பெல்லாம் ரத்தம் வழிய வந்த தனது மகனை ஓடி வந்து அணைத்துக் கொண்டு பதறியபடி அவரை உள்ளே அழைத்துச் சென்றாள் வகுளாதேவி. ‘ என் மைந்தனே…உனக்கு என்ன ஆயிற்று? உடலெல்லாம் அடிபட்டு ரத்தக் காயமாகி உள்ளது….என்ன ஆயிற்று மகனே?…என்ன ஆயிற்று?..’ .என பதறிக் கேட்டாள். அதைக் கேட்ட பகவான் ஸ்ரீனிவாசர் நடந்த அனைத்தையும் அவளிடம் கூறினார். அவர் உடல் காயங்களுக்கு மருந்துகளை போட்டவாறே, அவர் கூறியதைக் கேட்டுக் கொண்டு இருந்த வகுளாதேவி கூறினாள் ‘ மகனே உன் மனது எனக்குப் புரிகிறது. ஆனால் நாம் எங்கே, அந்தப் பெண் எங்கே? அவள் ஒரு ராஜகுமாரி. நாமோ ஏழை வேடுவர்கள். ஆகவே எட்டாத கனிக்கு ஆசைப்பட்டு இப்படி உடலை புண்படுத்திக் கொண்டு வருவது முறையா? தயவு செய்து நான் கூறுவதைக் கேள். அவளை மறந்து விடு. உனக்கு நமது தகுதிக்கு ஏற்றப் பெண்ணை நானே திருமணம் செய்து வைக்கிறேன்’ என்று பலவாறாக அவருக்கு அறிவுரை செய்தாள்.

அப்போது மீண்டும் அவருக்கு தனது உண்மை அவதாரம் மனதில் வந்தது. நாடகத்துக்கு ஏற்பவே அவருடைய அவதார நினைவு அவ்வப்போது அவருக்கு வந்து கொண்டு அவரை வழி நடத்திச் செல்லும் என்பது விதி. ஆகவேதான் இந்த தருமணத்திலும் அவர் நினைவு அவருக்கு வந்தது. இனியும் தன் அவதாரத்தை அவள் நினைவில் இருந்து அதிக நாள் மறைத்து வைத்திருக்கலாகாது, அதை வெளிப்படுத்தும் தருணம் வந்து விட்டாலும் அதே சமயத்தில் இன்னும் சில நாட்கள் அது அவர்கள் இடையே ரகஸ்யமாகவே வைத்திருக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் உணர்ந்தார். ஏற்கனவே அவளிடம் வந்து சேர்ந்தபோது தான் யார் என்பதையும், அவர்களுடைய பூர்வ ஜென்மக் கதையையும் அவள் நினைவில் கொண்டு வந்தப் பின், அவற்றை அவள் நினைவில் இருந்து மறக்கடித்து வைத்து இருந்தார். ஆனால் இப்போது அதை மீண்டும் வெளிப்படுத்தும் நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்தார்.

தன் தாயாரை ஒரு கணம் உற்றுப் பார்த்தார். அவர் பார்த்தப் பார்வையில் அவளுக்கு பழைய நினைவுகள் மீண்டும் தோன்றின. அவர் கூறத் துவங்கினார் ‘ அம்மா, நான் இந்தப் பிறவியில் ஸ்ரீனிவாசனாக மனித உருவில் அவதரித்து உள்ளதினால், அந்த உடலுக்கான சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவித்தே ஆக வேண்டும். இதுவே நியதி. நான் விஷ்ணுவாக இருந்தால் என்ன? இப்போது அந்த உடலில் நான் இல்லை என்பதினால் இந்த மனித உடலுக்கான சில கடமைகளை செய்யவே வந்துள்ளேன். உனக்கு முன் ஜென்மத்தில் கொடுத்த வாக்கின்படி உன்னையும் இந்தப் பிறவியில் என்னோடு என் தாயாராக இணைத்துக் கொண்டு விட்டேன். நான் கிருஷ்ணராக இருந்தபோது நடந்தக் கதை மட்டும்தானே உனக்கு இதுவரை தெரியும். இப்போது நான் ராமனாக அவதரித்து இருந்தபோது நடந்த சிறிய சம்பவத்தைக் கூறுகிறேன். அதையும் இப்போது கேள்.

நான் ராமனாக இருந்தபோது சீதையை மணம் செய்து கொண்டு சந்தப்ப வசத்தினால் வனவாசம் சென்றேன். அப்போது ராவணன் சூழ்ச்சி செய்து என் மனைவியான சீதையைக் கவர்ந்து செல்ல ஏற்பாடு செய்தபோது அந்த நிலையில் இருந்து சீதையைக் காப்பாற்ற அக்னி பகவான் ஒரு மாய சீதையை உருவாக்கி ராவணனை ஏமாற்றி அவளைக் கடத்தச் செய்தார். அந்த ராவணனுடன் யுத்தம் செய்து சீதையை நான் மீட்டுக் கொண்டு வந்தப் பின் அவளை அக்னி பிரவேசத்துக்கு உட்படுத்தி கற்பை சோதித்தபோது, தீயில் இருந்து சீதையும், மாய சீதையாக இருந்த வேதவதி எனும் பெண்ணும் வெளி வந்தார்கள். வேதவதி வேறு யாருமல்ல. அவளும் லஷ்மியின் ஒரு அம்சம்தான். அக்னியில் வெளி வந்த வேதவதி ராமர் உருவில் இருந்த விஷ்ணுவான என்னை மணக்க விரும்பினாள். ஆனால் அந்த ராமாவதாரத்தில் நான் ஏகபத்தினி விரதம் பூண்டு இருந்ததினால் அவளை அடைய முடியாமல் போயிற்று. ஆகவே உனக்கு கிருஷ்ணாவதாரத்தில் ஒரு வாக்கு தந்தது போல வேதவதிக்கு ராமாவதாரத்தில் ஒரு வாக்கு தந்தேன். அதன்படி நான் ஸ்ரீனிவாசராக அவதரிக்கும்போது அவளையும் மானிடப் பிறவியில் அவதரிக்க வைத்து அவளை மணப்பதாக வாக்கு தந்தேன்.

அதன்படி அவளே பத்மாவதியாக அவதரித்து இருக்கிறாள். ஆகவே நான் அவளை எப்படியாவது மணந்து கொண்டே ஆக வேண்டும். ஆனால் சில காரணங்களுக்காக நான் யார் என்பதையோ, அவள் யார் என்பதையோ இப்போது வெளியில் கூறக் கூடாது. நாங்கள் அவதரித்து உள்ள இந்த மனித உடல் சில வேதனைகளை அனுபவித்தால்தான் நாங்கள் முன்னர் பெற்றிருந்த சாபம் இந்த உடல்களோடு அழியும். இல்லை என்றால் அது மீண்டும் அடுத்த அவதாரத்திலும் எங்களை தொடர்ந்து கொண்டு இருக்கும். ஆகவே நீ இந்த விஷயத்தை இரகசியமாகவே வைத்திருந்து, நான் இந்த மனித உடலில் செய்யும் அனைத்துக் காரியங்களுக்கும் உதவி செய்ய வேண்டும். இந்த உண்மைகள் எப்போது வெளிப்பட வேண்டுமோ அப்போது நானே இந்த உலகுக்கு வெளிப்படுத்துவேன். அதை மீறி நீ யாரிடமாவது இதைக் கூறி விட்டால், எங்கள் திருமணம் நடைபெறாது என்பது மட்டும் அல்ல, எங்கள் அவதாரமும் இந்த யுகத்தில் முடிந்து விடும். மீண்டும் பல யுகங்கள் நாங்கள் மீண்டும் மணந்து கொள்வதற்குக் காத்திருக்க வேண்டும்’ என்றார்.

அதைக் கேட்ட வகுளா தேவியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. ‘மகனே, உனக்கு என்னால் இந்த அவதாரத்தில் எந்த கஷ்டமும் நேராது. என்னால் இந்த தேவ ரகசியம் யாருக்கும் வெளிப்படாது. மாறாக உனக்கு எத்தனை உதவிகள் செய்து இந்த திருமணம் நடைபெற வேண்டுமோ அதற்கான வழி முறைகளை செய்வேன் என உன் மீதே சத்தியம் இட்டுக் கூறுகிறேன்’ என்று கூறிவிட்டு உறங்கச் சென்றாள். அன்று இரவு முழுவதும் பகவான் ஸ்ரீனிவாசருக்கு உடல் உபாதையும், மன உபாதையும் குறையவே இல்லை. மனித உருவில் இருந்ததினால் தன்னை மறந்து ‘ராஜகுமாரி, ராஜகுமாரி’ என்று முனகியவாறே படுத்திருந்தார். மறுநாள் முதல் அவரால் வேட்டைக்கும் போக முடியாமல் சோகம் அவரை சூழ்ந்திருந்தது.

இது இங்கே இப்படி இருந்தது என்றால், அங்கு அரண்மனையிலோ, பகவான் ஸ்ரீனிவாசரை துரத்தி அடித்த பத்மாவதியும் உறக்கம் இல்லாமல் தவித்தாள். அவளை மீறி வேடரான ஸ்ரீனிவாசரின் முகம் அவள் முன் தோன்றித் தோன்றி அவளை வாட்டியது. அவரை சேவகர்கள் அடித்து உதைத்து துரத்திய சம்பவம் மனதை குடைந்தது. தன்னால்தானே அவருக்கு அத்தனை ரத்த காயமும் நேரிட்டது என்று மனம் வேதனைப்பட்டது. அவள் மனதில் நீங்காத வருத்தம் சூழ்ந்தது. தினமும் அந்த தாடகத்தின் அருகில் சென்று அவர் அமர்ந்திருந்த இடத்தில் சென்று நின்று கொண்டு மெளனமாக கண்ணீர் விட்டு அழுது விட்டு திரும்புவாள். ஆனால் அவள் மன நிலை அவளது தோழிகளுக்கும் அவளது பெற்றோர்களுக்கும் தெரியவில்லை. ஆனால் நாளாக நாளாக அவள் சரிவர சாப்பிடவில்லை, சரிவர உறங்கவில்லை. கேளிக்கைகளிலும், உல்லாசங்களிலும் ஆர்வமும் காட்டவில்லை. எதையோ பறி கொடுத்து விட்டவளைப் போல தனிமையில் அமர்ந்திருந்தபடி யோசனையில் ஆழ்ந்து இருந்தாள் .

அவளுக்கு ஒருவேளை வயதுக் கோளாறாக இருக்கலாம், தானே சரியாகிவிடும் என்று அதிகம் கவனம் செலுத்தவில்லை. இப்போது தோழிகள் கூறுவதைக் கேட்டால் எதோ நிலைமை சரி இல்லைப் போல உள்ளதே என எண்ணியவள், தனது கணவர் ஆகாசராஜனிடம் சென்று பத்மாவதியின் திடீர் மாற்றத்திற்கான காரணத்தைக் குறித்துக் கூறினாள். சில நாட்களுக்கு முன்னர்தான் மகரிஷி நாரத முனிவர் அங்கு வந்திருந்தபோது அவரை நமஸ்கரிக்குமாறு தன் மகளிடம் கூறியபோது, அவரை நமஸ்கரித்த பத்மாவதியிடம் மகரிஷி நாரதர் ‘எங்கே உன் கைகளைக் காட்டு’ என்று கூறி அவள் கைகளைப் பார்த்துவிட்டு, ‘கூடிய விரைவில் உனக்கு விவாகப் பிராப்தம் உள்ளதம்மா. உன்னை கைபிடிக்க உள்ள மணமகன் நாராயணரின் அவதாரமாகவே இருப்பார்’ என்று கூறி விட்டுச் சென்றிருந்தார். ஒருவேளை அந்த நிலைமை இப்போது வந்துள்ளதோ என்று எண்ணியவர்கள் உடனே அவர்கள் ராஜ குருவை அழைத்து விஷயத்தைக் கூறி என்ன செய்யலாம் என ஆலோசனைக் கேட்க அவரும் நல்ல ஜோசியரை அழைத்து அவள் ஜாதகத்தை ஆராயலாம் என்றார். சரி இரண்டொரு நாட்கள் அவள் நடத்தையை கண்காணித்தப் பின் அவளையே அழைத்து விசாரிக்கலாம் என எண்ணினார்கள்.

அரண்மனையில் நிலைமை இப்படியாக இருக்க இதற்கு இடையே பகவான் ஸ்ரீனிவாசரின் வீட்டில் என்ன நடந்தது? தனது மகன் உறக்கம் இன்றி தவிப்பதைக் கண்ட வகுளாதேவி இனியும் காலம் கடத்துவது தவறு என்று எண்ணினாள். பகவான் ஸ்ரீனிவாசரிடம் ‘மகனே இனியும் தாமதிப்பது முறை அல்ல . நானே இந்த நாட்டு மன்னன் ஆகாசராஜரிடம் சென்று உனக்காகப் பெண் கேட்கிறேன். நீ கூறும்படி தக்க வேளை வந்து விட்டதினால், அவர் உனக்கு தன் மகளாக பத்மாவதியை திருமணம் செய்து கொடுக்க மறுக்க மாட்டார். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ நீயும் உன்னால் ஆனதை மறைமுகமாக செய். நாளை நல்ல நாளாக உள்ளது. பௌணமி கூட நாளை துவங்குகிறது. ஆகவே வளரும் பௌர்ணமியான நாளையே இந்த காரியத்தை துவக்குகிறேன்.’ என்றாள். அதைக் கேட்ட பகவான் ஸ்ரீனிவாசர் மனம் மகிழ்ந்தார். ‘சரி அம்மா, நீ நாளையே சென்று மன்னனிடம் பக்குவமாகப் பேசிப்பார்’ என்று கூறிவிட்டு தான் வேட்டைக்குப் போவதாக கிளம்பிச் சென்றார்.

வெளியே கிளம்பிச் சென்றவர் தனது தாயாரிடம் கூறாமல் ஒரு குறி சொல்லும் குறத்தி போல வேடம் கொண்டார். கையில் மந்திரக் கோலைப் போன்ற ஒன்றை ஏந்திக் கொண்டு, தலையில் கூடையும் வைத்துக் கொண்டு ‘ ஐயா …அம்மா…குறி சொல்வோம்….குறி சொல்வோம்…ஐயா…அம்மா ‘ எனக் கூவிக் கொண்டே அரண்மனை வாயிலாக மெதுவாகச் செல்லத் துவங்கினார். வரும்போது கை நிறைய அவள் போட்டுக் கொண்டு இருந்த வளையல்கள் குலுங்கி குலுங்கி ஓசை எழுப்பின. அந்த காலங்களில் குறி சொல்லும் குறத்திகளுக்கும், குடுகுடுப்பைக்காரர்களுக்கும் அதிக மவுசு உண்டு. அவர்கள் விடியற்காலையில் கூறிக் கொண்டு செல்வது நடக்கும் என்பது நம்பிக்கையாக இருந்தது. அந்த நேரத்தில் அரண்மனை வழியே ‘ஐயா, அம்மா.. குறி சொல்வோம்….குறி சொல்வோம்…ஐயா…அம்மா ‘ என கூவிக் கொண்டே சென்று கொண்டிருந்த குறத்தி உருவில் இருந்த பகவான் ஸ்ரீனிவாசனை உடனே அழைத்து வருமாறு தாரிணி தேவி காவலரை அனுப்பி குறத்தியை வரவழைத்தாள். தன் கணவரையும், மகளையும் அழைத்து வரச் சொல்லி விட்டு குறத்தியை அழைத்து தன் பெண்ணிற்கு குறி சொல்லுமாறு கேட்டாள்.

குறத்தி பூமியில் அமர்ந்து கொண்டு பத்மாவதியின் கையைப் பிடித்துக் கொண்டு கூறத் துவங்கினாள். ‘அம்மணி…இந்தக் குறத்தியின் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் குறத்தியின் வார்த்தைகள் இல்லையடி…அது சாட்ஷாத் மகமாயி அம்மனின் வார்த்தைகள்…அம்மா, மகமாயி….இந்தப் பெண்ணின் கையில் உள்ள ரேகைக்கு சரியான விடையை நீதான் கூறவேண்டும்…தாயே மகமாயி….இந்த அபலையின் மனதில் உள்ளதை நீதான் எடுத்துக் கூற வேண்டும்’ என்றெல்லாம் கூறிக் கொண்டே மந்திரக் கோலினால் பலமுறை பத்மாவதியின் தலையை சுற்றி விட்டு பூமியைத் தொட்டு விட்டு சிறிது மண்ணை எடுத்து வீசினாள். பத்மாவதியின் கைகளை முகர்ந்து பார்த்தாள்.

‘அடி அற்புதப் பெண்ணே ….அம்மணி…உன் நினைவில் பகவான் திருமால் அல்லவா குடி கொண்டுள்ளார் …அடடா.. இந்த உலகை தன் கையால் அளர்ந்தவர், கடலைக் குடைந்து பூமியை எடுத்து வந்தவர், தங்க நிறம் போல ஜொலிக்கும் நீல நிறத்தவன், சீதாதேவியை மணந்தவன், மும்மூர்த்திகளில் ஒன்றானவன் … அவனைப் போன்ற ஒருவனல்லவா உனக்கு மாப்பிள்ளையாக வருவான் ….அடடா…..அம்மணி….கேளடி இன்னும் சேதி …இந்த மகமாயி வார்த்தை பலிக்காமல் போகாதாம்மா… சூரியன் திசை மாறிப் போவானா?….சந்திரன்தான் திசை மாறிப் போவானா?…. அடியே உன் மாப்பிள்ளை மட்டும் திசை மாறுவானோ??….மாட்டானடி பெண்ணே… மாறவே மாட்டார் …விரைவிலேயே உன்னை கைபற்ற அவன் வருவானடி…காத்திரு…காத்திரு…பெண்ணே …உன் மணாளன் யார் தெரியுமா….. இதோ பார் …இந்த வெற்றிலையைப் பார்… என்று கூறி விட்டு தன் இடுப்பில் இருந்த சுருக்குப் பையில் இருந்த வெற்றிலையை எடுத்து அதில் மையைப் போல எதையோ தடவி, இதோ பார் என அனைவர் முன்னிலையிலும் காட்ட, அந்த வெற்றிலையில் பகவான் ஸ்ரீனிவாசர் வேடனாக இருந்த உருவில் காட்சி அளிப்பதை கண்டு அனைவரும் வியந்தார்கள். அதைக் கண்ட பத்மாவதியோ ‘அம்மா, இந்த வேடரே என் மனக் காயத்துக்குக் காரணம்’ என்று நாணமுற்று கத்தி விட்டு உள்ளே ஓடினாள். வந்திருந்த குறத்திக்கு நிறைய சன்மானம் கொடுத்து அனுப்பிய பத்மாவதியின் பெற்றோர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் அமர்ந்தார்கள்.

குறத்தி வடிவில் இருந்த பகவான் ஸ்ரீனிவாசரோ தனது காரியம் வெற்றி பெற்று விட்டதை நினைத்து மனதில் சந்தோஷப்பட்டுக் கொண்டு வீட்டுக்குச் சென்றார். வழியில் மறக்காமல் மீண்டும் வேடவனாக உருவெடுத்து சில காய் கனிகளை பறித்துக் கொண்டு வேட்டை ஆடிவிட்டு வந்தவரைப் போல வீட்டுக்குள் சென்றுவிட்டார். மறுநாள் வகுளா தேவி அரசரைக் காணக் கிளம்பினாள்.

குறத்தி குறி சொல்லி விட்டுப் போனதும் அரசனும் அரசியும் யோசனையில் ஆழ்ந்தார்கள். இதென்னடா கூத்து, நம் பெண் ஒரு வேடனைக் காதலிக்கிறாள். குறி சொல்ல வந்த குறத்தியோ அந்த வேடன்தான் மாப்பிள்ளையாகப் போகிறார் என்கிறாள். மகரிஷி நாரதரோ வரவுள்ள உன் கணவர் பகவான் நாராயணனின் அவதாரமாக இருப்பார் என்று நம் பெண்ணிடம் கூறினார். இதென்ன குழப்பமாக உள்ளதே என்று நினைத்தார்கள்.

அதற்கு முன்னால் தனது பெண்ணை அழைத்து ஆகாசராஜன் பேசினார். ‘மகளே, உண்மையாகவே நீ அந்த வேடனைதான் விரும்புகிறாயா? உனக்கு நல்ல மாப்பிள்ளையாக நாங்கள் பார்த்து ஏற்பாடு செய்து தருகிறோமே அம்மா….. உன்னால் அந்த வேடனை திருமணம் செய்து கொண்டு காட்டில் வசிக்க முடியுமா? நீ எங்கே, அந்த வேடனின் வசதி எங்கே?……நன்கு யோசனை செய்து பார்த்து கூறம்மா ‘ என்று அறிவுரை செய்ய, பத்மாவதியோ ‘ அப்பா…நான் உங்கள் மனதுக்கு எதிராக எதையும் செய்ய விரும்பவில்லை. ஆனால் எப்போது மனதார ஒருவரை காதலித்து அவரே என் கணவனாக வர வேண்டும் என ஒரு பெண் நினைத்து ஏங்கத் துவங்குவாளோ அப்போதே அவளுக்கு அந்த ஆண்தான் கணவராகி விடுகிறார். அதை விடுத்து அவள் வேறு புருஷனை மணந்தால் அது அவள் கற்பை இழந்ததற்கு சமமாகி விடும் என்பது அனைத்து சாஸ்திரமும் தெரிந்த உமக்கும் தெரியாமல் இருக்காது. வேடனாக இருந்தால் என்ன? காட்டில் வசித்தால் என்ன? அவர் வசிக்கும் அந்தக் காட்டையும், இந்த நாட்டையும் ஆள்வதும் நீர்தானே. பகவான் ராமருடன் சீதாபிராட்டி சென்று பதினான்கு வருடங்கள் வனவாசம் செய்யவில்லையா? காட்டில் வசிப்பவர்கள் இறந்தா போய் விட்டார்கள்? ஆகவே என் மனதில் முழுமையாக நிறைந்துள்ள அந்த வேடரைத் தவிர என்னால் வேறு யாரையும் மணம் செய்து கொள்ள முடியாது. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா’ என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டாள் .

இப்படி பல்வேறு குழப்பத்தில் அவர்கள் மூழ்கி இருந்தபோதுதான் வகுளா தேவி அங்கு வந்தாள். அவளைக் கண்டதும் அவளை அன்புடன் வரவேற்றார் மன்னர். ‘ நீ யாரம்மா? யோகினியைப் போல தோற்றம் தரும் நீங்கள் எங்களை எதற்காக பார்க்க வந்தீர்கள் ? ‘ என்று கேட்க வகுளா தேவி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள் . ‘மன்னா என் பெயர் வகுளாதேவி. என் மகனின் பெயரே ஸ்ரீனிவாசன் என்பது. அவன் ஒரு வேடன். அவன் உமது மகளை பார்த்ததில் இருந்து அவளைக் காதலித்து விட்டான். அவளையே மணக்கவும் விரும்புகிறான். ஜோதிடர்கள் அவனை பகவான் நாராயணனின் அத்தனை அம்சமும் நிறைந்தவன் என்று கூறுகிறார்கள். அவனுக்கு ராஜ சம்மந்தம் உள்ளதாகவும் கூறுகிறார்கள். ஆகவேதான் உங்கள் மகளைக் காதலிக்கும் அவனுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்ள வந்தேன்’ என்று நேரடியாகவே பேச்சைத் துவக்கி விட்டாள்.

அதைக் கேட்டதும் மன்னனும் அவர் மனைவியும் ஆச்சர்யப்பட்டுப் போனார்கள். இதென்ன ஒன்று மாற்றி இன்னொன்று எங்கள் மகளின் திருமணத்தைக் குறித்தப் பேச்சு அடுத்தடுத்து நடக்கிறது. மகரிஷி நாரதர் கூறிவிட்டுச் செல்ல, குறத்தி குறி சொல்ல அது போலவே இவளும் வந்து தனது மகனை பகவான் நாராயணனின் அம்சம் என்று கூறிக் கொண்டு வருகிறாள். இவளைப் பார்த்தால் ஒரு யோகினியைப் போலத்தான் உள்ளது. பொய்யாக எதையுமே கூற வாய்ப்பில்லை என நினைத்தவர்கள் ‘அம்மா உங்கள் மனதை நாங்கள் புண்படுத்த விரும்பவில்லை. இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற விதி இருந்தால் உங்கள் மகனுக்கு எங்கள் பெண் மனைவியாவாள். ஆனால் சம்பிரதாயங்கள், நியமங்கள் என்று பலவும் இருப்பதினால் நாங்கள் எங்கள் ராஜகுருவான சுக மகரிஷியுடன் ஆலோசனை செய்து விட்டு உங்களுக்குக் கூறுகிறோம். ஆகவே நாளை வரை நீங்கள் பொறுத்திருங்கள். அதற்கு முன்னால் உங்கள் மகனின் ஜாதகத்தை எமக்குக் கொடுக்க முடியுமா’ என்று கேட்டார்கள். அவளும் ‘ அதற்கென்ன மன்னா, நான் அனைத்தையும் அல்லவா கொண்டு வந்துள்ளேன். நியமப்படியே நீங்கள் அனைத்தையும் செய்யுங்கள். பிராப்தம் என்று இருந்தால் இது நடக்கட்டும். ஆனால் ஒன்று மட்டும் கூறுகிறேன். சந்தர்ப்ப வசத்தினால்தான் நாங்கள் தற்போது செல்வத்தை இழந்து நிற்கிறோம். ஆனால் நாங்கள் இழந்த செல்வம் விரைவில் எங்களுக்கு மீண்டும் கிட்டும்’ என்று மனதில் பகவான் ஸ்ரீனிவாசர் அவளுக்குக் கூறி இருந்த உண்மைகளை ஏந்தி அப்படிப் பேசியப் பின் பகவான் ஸ்ரீனிவாசரின் ஜாதகத்தை அவர்களிடம் தந்து விட்டு அங்கிருந்துக் கிளம்பிச் சென்றாள்.

அவள் சென்றப் பின் ஆகாசராஜன் உடனடியாக சுக முனிவரை அழைத்து வரச் சொல்லி நடந்த அனைத்தையும் கூறி அவருடைய ஆலோசனைக் கேட்டார். அனைத்தையும் ஆராய்ந்த சுக முனிவர் கூறினார்’ மன்னா இந்த திருமணம் நிச்சயமாக உன் பெண் பத்மாவதிக்கும் ஸ்ரீனிவாசனுக்கும்தான் நடக்கும் என்பது தெரிகிறது. காரணம் ஸ்ரீனிவாசனின் ஜாதகப்படி அவருக்கு பகவான் நாராயணரின் அனைத்து அம்சங்களும் ஒன்று கூட குறைவில்லாமல் ஒத்து உள்ளது. அவரே கூட பகவான் நாராயணரின் அம்சமாக இருக்கலாம் என்று என் மனம் கூறுகிறது. ஆகவே எந்த சங்கடமும் இல்லாமல் இந்த திருமணத்துக்கு மனதார ஒப்புதல் தந்து திருமணத்தை நடத்தி வையுங்கள். நடப்பவை நல்லதாகவே இருக்கப் போகின்றன என்று அனைத்து சமிக்கைகளும் சொல்கின்றன. அதற்குக் காரணம் தேவ சமிக்கைகளின்படி இந்த உலகில் பகவான் விஷ்ணு மீண்டும் அவதரிக்கும் நேரம் வந்துள்ளது. அதுவும் அவர் ஒரு வனத்தில் இருந்து வெளி வர உள்ளார் என்பதும் , நாம் அரசாளும் இந்த நாட்டில்தான் ஒரு ஆலயத்தில் அவர் அமர உள்ளார் என்பதும் தேவ சமிக்கைகளாக தெரிகின்றன. ஆகவே தயங்காமல் திருமணத்தை நடத்தி வையுங்கள்’ என்று கூற அதைக் கேட்ட மன்னனும் தாரிணி தேவியும் மனம் மகிழ்ந்தார்கள். பகவான் ஸ்ரீனிவாசன் மற்றும் பத்மாவதியின் திருமணத்துக்கு இசைவு தெரிவித்து வகுளா தேவிக்கு உடனடியாக ஆனந்த செய்தியை அனுப்பினார்கள்.

பகவான் குபேரரிடம் பகவான் விஷ்ணு கடன் வாங்கிய கதை

மன்னனிடம் இருந்து திருமணத்திற்கு ஒப்புதல் கிடைத்ததும் பகவான் ஸ்ரீனிவாசருக்கும் வகுளா தேவிக்கும் ஆனந்தம் ஆகி விட்டது. அது போல பத்மாவதியும் மிக்க மகிழ்ச்சி அடைந்தாள் . இனி அடுத்தக் காரியமாக திருமணத்துக்கு வேண்டிய அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும்.

ஆனால் பகவான் ஸ்ரீனிவாசரின் திருமணம் நடைபெற உள்ள செய்தி கிடைத்ததும் வைகுண்டத்தில் இருந்த பகவான் நாராயணன் கவலையோடு அமர்ந்து இருந்தார். அப்போது மகரிஷி நாரதர் அங்கு அவரைக் காணச் சென்றார். அவர் கவலையுடன் இருப்பதைக் கண்ட மகரிஷி நாரதர் ‘ நாராயணா நீங்கள் ஏன் கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கிறீர்கள்? பூலோகத்தில் மனித உருவில் ஸ்ரீனிவாசராக உள்ள நீங்கள் விரைவில் லஷ்மியை திருமணம் செய்து கொண்டு உங்கள் தெய்வீகத்தை வெளிப்படுத்தி விட்டு மீண்டும் வைகுண்டத்துக்கு திரும்பி வர உள்ளீர்கள். ஆகவே இப்போது ஏன் வினசத்துடன் இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதைக் கேட்ட பகவான் நாராயணனோ ‘ நாரதரே இப்போது வைகுண்டத்தில் லஷ்மி தேவி இல்லாததினால் என்னிடம் திருமணம் செய்து கொள்வதற்கு தேவையான செல்வம் இல்லை. தேவலோகத்தில் உள்ள அனைவரும் என் திருமணத்துக்கு வருவார்கள். அவர்கள் அனைவருக்கும் சாப்பாடு போட்டு உபசரிக்க வேண்டும். அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டு உபசரிப்பது என்றால் எத்தனை பணம் தேவையாக இருக்கும். ஆகவேதான் எப்படி அதற்கான ஏற்பாடுகளை செய்வது என யோசனை செய்து கொண்டு இருக்கிறேன்’ என விஷ்ணு பகவான் கூறினார். இங்கு செல்வம் இருந்தால்தானே அங்கு பூமியிலும் பகவான் ஸ்ரீனிவாசனின் கையில் பணம் புழல ஏற்பாடு செய்ய முடியும். அதற்கு என்ன செய்வேன் என்றுதான் யோசனை செய்கிறேன்’ என்று கூறினார்.*(8) .

வைகுண்டத்தில் பகவான் விஷ்ணுவிற்கு செல்வம் வந்தால்தான் பூவுலகிலும் பகவான் ஸ்ரீனிவாசராக மனித உருவில் உள்ளவருக்கும் யார் மூலமாவது செல்வம் கிடைக்கும். வேடராக உள்ள அவரை நம்பி யார் பெரும் அளவிலான பணத்தைக் கடன் கொடுப்பார்கள்? ஆகவே பகவான் ஸ்ரீனிவாசருடன் பத்மாவதிக்கு திருமணம் ஆகும் வேளையில் தேவ லோகத்திலும் பெரும் அளவிலான திருமண வைபவம் நடைபெறும், அப்போது அனைவரையும் அங்கு விஷ்ணு பகவான் திருப்திபடுத்தி செய்து தேவலோக சம்பிரதாய முறைப்படி அனுப்ப வேண்டும் என்பதை இப்படிக் பூடகமாக குறிப்பிட்டு உள்ளார்கள். உண்மையில் பூலோகத்தில் பகவான் ஸ்ரீனிவாசருடன் பத்மாவதிக்கு நடந்த திருமணத்தில் அப்படிப்பட்ட செலவுகள் நடைபெறவில்லை. பகவான் ஸ்ரீனிவாசருடன் சம்மந்தப்பட்டவர்களும், பத்மாவதியுடன் சம்மந்தப்பட்டவர்களும் பூலோகவாசிகளாக இருந்தார்கள். பூமியில் பகவான் விஷ்ணுவின் அவதாரப் புருஷனான பகவான் ஸ்ரீனிவாசருக்கு திருமணம் நடந்த அதே வேளையில் மேலுலகில் பகவான் விஷ்ணுவிற்கும் லஷ்மியின் அவதாரமான வேதவதிக்கும் திருமணம் சம்பிரதாயமாக நடைபெற்றது. அதன் பின் பகவான் விஷ்ணுவின் ஆலயம் திருப்பதி வெங்கடேஸ்வரர் என்ற பெயரில் எழுகிறது என்பதே திருப்பதி ஏழுமலையானின் கதை. இனி கதை தொடர்கிறது.

பகவான் விஷ்ணுவின் கவலையைக் கண்ட மகரிஷி நாரதர் கூறினார் ‘நாராயணா….இதற்காக ஏன் கவலைப்பட வேண்டும்? திருமணத்துக்கான செலவை சமாளிக்க குபேரனை சந்தித்து அவரிடம் நாம் ஏன் கடனாக பணத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடாது? அவர்தானே லஷ்மி தேவியின் செல்வத்தைக் காத்து வருகிறார்?’ என்று கூற அது நல்ல யோசனையாகத் தெரிய உடனே இருவரும் இணைந்து பகவான் குபேரரை பார்க்கச் சென்றார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல குபேரர் பகவான் லேசுப்பட்டவர் அல்ல. அவர் பணம் தருவதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால் அதில் ஒரு நிபந்தனை போட்டார். தான் தரும் பணத்திற்கு பகவான் திருமால் வட்டியும் சேர்த்துத் தர வேண்டும். அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்ட பகவான் திருமால் அவருக்கு ஒரு பத்திரமும் எழுதிக் கொடுக்க வேண்டியதாயிற்று. மூவாயிரத்து முன்னூற்று அறுபத்தி நான்கு ராம தங்க நாணயத்தை கடனாக பெற்றுக் கொண்டு, இனி தான் பூமியில் குடி கொண்டப் பின் தனக்குக் கிடைக்கும் அனைத்துக் காணிக்கையிலும் வட்டியாக ஒரு பகுதியை செலுத்திக் கொண்டு, தான் வட்டியை மட்டும் முதலில் செலுத்திக் கொண்டு இருப்பதாகவும், கலியுக முடிவில் வட்டியையும் முதலையையும் சேர்த்துத் தருவதாகவும் பத்திரம் எழுதிக் கொடுத்து கடனைப் பெற்றுக் கொண்டார்.*(9)

செல்வத்தைத் தரும் அவருடைய மனைவியையும் மக்கள் மறக்கக் கூடாது. அவளது செல்வத்தைக் கடனாகப் பெற்றுக் கொண்டு பூமிக்குச் சென்று மக்களுக்குக் அதைக் கொடுத்தால் அந்த செல்வத்தை தான் கொடுத்ததாக நினைத்துக் கொண்டு தன்னிடம் நன்றி காட்டி காணிக்கை தருவார்கள். லஷ்மிதேவியை மறந்து விடுவார்கள். அவர்கள் தரும் அந்த காணிக்கை லஷ்மிதேவியின் செல்வத்தினால் கிடைத்ததாக கருத வேண்டுமே தவிற தனக்காக கிடைத்ததாகக் கருத்தாக கூடாது. ஆகவே செல்வத்தை லஷ்மியின் சார்ப்பில் தான் கொடுத்தாலும் அதைக் கொடுப்பவள் லஷ்மிதேவியே என்பதை மக்கள் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். தமக்கு செல்வம் கிடைக்க அருள் புரியும் அவளையும் மறக்காமல் அவளிடம் பக்தி செலுத்தி அவ்வப்போது அவளுக்கும் காணிக்கை அளிக்க வேண்டும். அப்படி அளிக்கப்படும் காணிக்கை என்பதே பக்தியை வெளிப்படுத்தும் வட்டி என்பது.

பக்தி எனும் வட்டியை செலுத்த பணத்தைத் தந்தவரிடம் நேரிடையாக சென்றே ஆக வேண்டும். நேரிலே சென்று தெய்வத்தை தரிசிக்கும்போது பக்தியும் பெருகும். பக்தி பெருகும்போது ஆன்மீகமும் அவர்கள் உள்ளத்தில் தானாகவே வளரும். ஆன்மீக உணர்வு பெருகும்போது ஒருவருக்கு நல்ல குணங்கள் தன்னால் ஆழமாக வேர் ஊன்றும். நற்குணங்கள் வேர் ஊறும் போது தீமைகள் குறையும். பாவ எண்ணங்கள் அழியத் துவங்கும். மேன் மேலும் அதிக மக்கள் கடவுளை வணங்கித் துதிக்கும்போது நல்லவை தானாகப் பரவும். இதுவே கலி காலத்தில் நிகழ உள்ள தீமையைக் குறைக்கும் வழி முறை.

ஆகவே இதையெல்லாம் மனதில் ஏந்திக் கொண்டுதான் விஷ்ணு பகவான் நற்குணம் எனும் செல்வத்தை மக்களிடையே பரப்ப பகவான் ஸ்ரீனிவாசர் எனும் பெயரில் ஒரு கடனாளியாக மாறி செல்வத்தை பூமிக்கு கொண்டு வருகிறார். நற்குணங்களும், பக்தியும், நல்ல பண்புகளும் நிறவி உள்ள இடத்தில் லஷ்மி தேவி நிரந்தரமாகக் குடி இருப்பாள். இங்கு கடனாளி எனும் வடிவிலான பகவான் விஷ்ணு மக்களைப் பிரதிபலிக்கும் ஒரு உதாரணப் புருஷர். கடனாளி என்பது தன்னைப் படைத்த கடவுளுக்கு கடமைப்பட்டவன் என்பதாகும். வட்டி செலுத்துவது என்பது குறைவின்றி வாழ தனக்கு வழி செய்த அந்தக் கடவுளுக்கு கடமைப்பட்டவன் அவ்வப்போது வெளிக் காட்டும் பக்தி என்பது ஆகும்.

அசலுடன் கூடிய வட்டியும் சேர்ந்து செல்வத்தைப் பெருக்குவதைப் போல லஷ்மியின் கருணையை தன் மூலம் பெறுபவர்கள், தன்னிடம் வந்து காணிக்கையாக பக்தி எனும் வட்டியை செலுத்த வரும்பொழுது, அவர்களுக்குள் நற் குணங்களையும் தன்னால் மேன் மேலும் பரப்ப முடியும். செல்வத்தை தருபவர் என நினைத்து தன்னிடம் சிறுவர் முதல் வயதான வரையிலான பலகோடி மக்கள் வரும்போது, அவர்களிடையே உள்ள தீமைகளை அழித்து அவர்கள் உள்ளத்தில் பக்தியைப் பரப்பினால் கலியுகத்தின் தீமைகள் குறையும். ஆகவேதான் கலியுகம் பிறக்கும் முன்பே பூமியில் பக்தியும், நல்லொழுக்கமும் பெருக வேண்டும் என்பதை ஒரு தத்துவார்த்தமாக கூறவே மக்களைப் பிரதிபலிக்கும் பகவான் விஷ்ணுவை வட்டி தரும் கடனாளியாகக் காட்டி உள்ளார்கள்.

விஷ்ணு மற்றும் பத்மாவதியின் திருமண வைபவம்

திருமண தேவைக்கான செல்வம் கிடைத்ததும், தனது மூத்த சகோதரரான கோவிந்தராஜரை அழைத்த பகவான் ஸ்ரீனிவாசர் (கோவிந்தராஜர் வகுளாதேவியின் மூத்த மகன் ஆவார். அதை ஏற்கனவே கூறி உள்ளேன்) அனைவருக்கும் வந்து தங்கும் இடமும் உணவருந்தவும் வசதியை ஏற்படுத்தித் தருமாறு கூறினார். ஆகவே கோவிந்தராஜரும் தயங்காமல் பூலோகத்தில் வைகுண்டத்துக்கு இணையான இடத்தை தற்போது திருப்பதி மலை உள்ள இடத்திலேயே விஸ்வகர்மாவின் உதவிடன் செய்தார். அதே சமயம் கருட பகவானை அழைத்த பகவான் ஸ்ரீனிவாசர் யாரை எல்லாம் திருமணத்துக்கு அழைக்க வேண்டும் என்பதை வகுளா தேவி மற்றும் மகரிஷி நாரத முனிவருடன் கலந்து ஆலோசனை செய்தப் பின் அனைவருக்கும் தமது பூத கணங்கள் மூலம் திருமண செய்தியை அனுப்பி அவர்களுக்கு தாம்பூலம், பழங்களைக் கொடுத்து அழைக்கச் சொல்லுமாறும், அந்த வேலையை பகவான் கருடனே செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். நிறைய கடனை பகவான் குபேரனிடம் இருந்து பெற்று வந்திருந்ததினால் செலவு செய்ய பணத்துக்குப் பஞ்சமே இல்லை எனும் அளவில் காரியங்கள் நடைபெற்றன.

அதே நேரத்தில் ஆகாச ராஜனும் தனது மகளுடைய திருமண வைபவத்தை நன்கு நடத்த அந்த ராஜ்யத்தையே அலங்கரித்தார். அனைவர் வீடுகளிலும் தோரணங்கள் கட்டியும், கோலங்கள் போட்டு அலங்கரிக்கவும் ஏற்பாடு செய்ததும் அல்லாமல் மக்களுக்கும் பல பரிசுகளை வழங்கினார். அனைவருக்கும் வித விதமான உணவுகளை தந்து அவர்களை உபசரித்தார்.

திருமண நாளும் வந்தது. தேவ லோகத்தில் இருந்தும் பூலோகத்தில் இருந்தும் அனைவரும் வந்து அங்கு குமுழி இருந்தார்கள். பகவான் சிவன், பார்வதி தேவி , பகவான் பிரும்மா, சரஸ்வதி தேவி , மஹரிஷி நாரதர், பிருகு முனிவர், சுக முனிவர், நந்தி தேவர், பகவான் கருடர் மற்றும் பல லட்சக் கணக்கான தேவர்களும், ரிஷி முனிவர்களும், தேவ கணங்களும் கூடி  இருந்தார்கள்.

வசிஷ்ட முனிவர் புரோகிதர் பாகத்தை ஏற்று திருமணத்தை நடத்தினார். ஆரத்தி எடுத்து, பாத பூஜைகள் செய்து, மங்கள வாத்தியங்களை முழங்கி நல்ல நேரத்தில் நவரத்தினங்கள், பவழங்கள், கோமேதகம், வைடூரியம் போன்ற கற்களை செதுக்கிய மாலையில் செய்த திருமங்ககலியத்தை அனைவர் முன்னாலும் பகவான் ஸ்ரீனிவாசர் பத்மாவதியின் கழுத்தில் கட்டினார். ஆனால் அங்கு வராத முக்கியமான ஒருவர் யார் என்றால் அது லஷ்மி தேவியாகும். அவள் கொல்லாபுரத்தில் தவத்தில் இருந்ததினால், அவளுடைய ராமாயணக் கால மாய அம்சமான வேதவதியின் மறு ஜென்ம அவதாரமான பத்மாவதிக்கும் பகவான் ஸ்ரீனிவாசர் உருவில் இருந்த பகவான் விஷ்ணுவிற்கும் இடையே அப்போது திருமணம் நடந்தது அவளுக்குத் தெரியாது.

இருவருக்கும் திருமணம் ஆனப் பின்னர் ஆகாசராஜன் கண்ணீர் மல்க தனது மகளை பகவான் ஸ்ரீனிவாசருடன் அனுப்பி வைத்தார். திருமணம் முடிந்து அவர்கள் கிளம்பிச் சென்ற பின்னரே அவர்கள் இருவருமே மனித அவதாரம் எடுத்துள்ள பகவான் விஷ்ணு மற்றும் லஷ்மி தேவி என்பதை மற்றவர்கள் அனைவரும் அறிந்தார்கள் ஆகா….இத்தனை நாளும் நாம் அவர்களை தெய்வப் பிறவிகள் என்று அறிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே என்று மனம் தவித்தார்கள் ஆனால் அதற்குள் அவர்கள் ஷேத்ராடனம் செய்யக் கிளம்பினார்கள். அப்படிச் செல்கையில் அவர்களை வழியில் அகஸ்திய முனிவர் சந்தித்தார். அவர் அவர்களிடம் கூறினார் ‘பிரபோ திருமணம் ஆகி ஆறு மாதத்துக்கு மலை மீது ஏறிச் செல்லக் கூடாது என்பது சாஸ்திரத்தின் ஒரு விதியாகும். ஆகவே மலை மீது சென்று கொண்டிருக்கும் நீங்கள் ஆறு மாத காலம் என் ஆஸ்ரமத்தில் தங்கி வசித்தப் பின் மலையேறிச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதனை ஏற்றுக் கொண்ட இருவரும் அகஸ்தியரின் ஆஸ்ரமத்திலேயே சில காலம் தங்கி இருந்தார்கள்.

பகவான் ஸ்ரீனிவாசரான பகவான் விஷ்ணுவும் பத்மாவதியும் சில காலம் வசிஷ்டரின் ஆஸ்ரமத்தில் தங்கிக் கொண்டு இருந்தபோது ஒரு நாள் ஆகாசராஜன் உடல் நலமின்றி இருப்பதினால் உடனே அவர்களை கிளம்பி வருமாறு செய்தி வர இருவரும் மீண்டும் அரண்மனைக்குக் கிளம்பிச் சென்றார்கள். உண்மையைக் கூறினால் ஆகாசராஜன் அவர்கள் வரும்வரை தனது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்தார். அவர்கள் வந்ததும் பகவான் ஸ்ரீனிவாசரின் கைகளைப் பிடித்துக் கொண்டு தான் மரணம் அடைந்து விட்டப் பின் அந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு தக்க ஏற்பாட்டை செய்துவிட்டுப் போக வேண்டும் என்றும், தனது மகனான வசுதானன் மற்றும் அவருடைய தம்பியான தொண்டைமான் இருவரையும் அவரே ஒற்றுமையுடன் இருந்து நாட்டை ஆளச் செய்ய வழி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டப் பின் மரணம் அடைந்தார்.

ஆகாசராஜர் மரணம் அடைந்து அனைத்துக் காரியங்களும் முடிந்த உடனேயே அவருடைய பிள்ளையான வசுதானன் மற்றும் அவருடைய தம்பியான தொண்டைமான் இருவருக்கும் யார் அரசுப் பொறுப்பை ஏற்பது என்பதில் சண்டை வந்தது. அப்போது அவர்கள் இருவருமே ஆகாசராஜரின் இரு பகுதிகளை ஆண்டு வந்த சிற்றரசர்களாக இருந்ததினால் குதிரைப் படையை திரட்டிக் கொண்டு போர் முனைக்கு வந்தார்கள்.

அதுவும் நடந்து கொண்டிருந்த நாடகத்தின் ஒரு அங்கம்தான். அதற்குக் காரணம் தொண்டைமான் பூர்வ ஜென்மத்தில் ஒரு பெண் பித்தராக இருந்தவர். ஆனால் அவர் பகவான் விஷ்ணு பக்தராகவும் இருந்தார். ஆகவேதான் அவரை பகவான் விஷ்ணு நல்வழிப்படுத்தி பெண்களை துன்புறுத்திய பாவத்தைக் களைய அடுத்த ஜென்மத்தில் பூவுலகில் அரச வம்சத்தில் பிறவி எடுத்து, பல மனக் கஷ்டத்தை அனுபவித்தப் பின் அரசாண்டு அதே பூவுலகில் தனக்கு ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என அதற்கான பிராயச்சித்தம் கூறி இருந்தார். ஆகவேதான் தொண்டைமான் இந்த ஜென்மத்தில் ஆகாசராஜரின் தம்பியாகப் பிறப்பு எடுத்திருந்தார்.

நிற்க, யுத்தத்தை துவக்கிய இருவருமே பகவான் ஸ்ரீனிவாசர் விஷ்ணு அவதாரம் என்பதினால் அவருடைய துணையை நாடினார்கள். ஆகவே இருவருமே தனக்கு வேண்டியவர்கள் என்பதினால் சோழி குலுக்கிப் பார்த்தார். அதில் கிடைத்த வழிகாட்டுதலின்படி வேறு வழி இன்றி பகவான் ஸ்ரீனிவாசர் தன்னிடத்தில் இருந்த சக்ராயுதத்தை தொண்டைமானுக்கு கொடுத்து விட்டு யுத்தத்தில் தானே நேரடியாக வசுதனன் பக்கத்தில் சேர்ந்து கொண்டு போர் புரிந்தார். சண்டை பயங்கரமாக நடந்தது. ஒரு கட்டத்தில் தொண்டைமானின் மகன் வேறு வழி இன்றி பகவான் ஸ்ரீனிவாசர் கொடுத்த சக்கரத்தை அவர் மீதே வீச அது தாக்கி பகவான் ஸ்ரீனிவாசர் நினைவை இழந்தார்.

அந்த நிலையைக் கண்ட அனைவரும் யுத்தத்தை உடனடியாக நிறுத்தி விட்டு அவரை மீண்டும் சுய நினைவுக்கு கொண்டு வருவதில் முழு முனைப்புடன் ஈடுபட்டார்கள். கண் விழித்த பகவான் ஸ்ரீனிவாசரிடம் அனைவரும் மன்னிப்பைக் கேட்டு அவர் எப்படி சொல்கிறாரோ அப்படியே அவர்கள் நடப்பதாக உறுதி மொழிக் கூற அவரும் ராஜ்யத்தை இரண்டாகப் பிரித்து ஒன்றை தொண்டைமானுக்கும், இன்னொன்றை வசுதனனுக்கும் அரசாளக் கொடுத்தார் அனைவரும் அதை முழு மன நிறைவோடு ஏற்றுக் கொண்டார்கள். அதன் பின் மீண்டும் பகவான் ஸ்ரீனிவாசரும், பத்மாவதியும் அகஸ்தியர் ஆஸ்ரமத்துக்கு கிளம்பிச் சென்று விட்டார்கள்.

அப்போது ஒரு நாள் தொண்டைமானின் கனவில் பகவான் விஷ்ணு தோன்றினார். அவர் அவரிடம் கூறினார் ‘ மன்னா, நீ பூர்வ ஜென்மத்தில் எனக்கு ஒரு வாக்கு கொடுத்தாய். நீ அடுத்தப் பிறவி எடுத்து ராஜாங்கத்தை ஆளும்போது, எனக்கு ஒரு ஆலயம் அமைத்துத் தருவாய் என்பதே அந்த வாக்குறுதி. அதன்படி நீயும் இப்போது அரசனாகி விட்டாய். ஆகவே எனக்கு ஷேசாசலத்தில் ஒரு ஆலயம் அமைத்தால் அங்கு நானே வந்து குடி புகுவேன். அங்கு வந்து நான் ஆலயத்தில் அமர்ந்து கொண்டு கலியுகம் முடியும்வரை மக்களைக் காத்து வருவேன். ஆகவே அங்குள்ள பகவான் வராஹ ஸ்வாமியின் ஆலயத்துக்கு அருகிலேயே எனக்கு ஆலயம் அமைக்க ஏற்பாடு செய்’.

அதைக் கேட்ட தொண்டைமான் விழித்தெழுந்ததும் ஒரு விஸ்வகர்மாவை அழைத்து வந்து ஆலயம் அமைக்க ஏற்பாடுகளை செய்து பெரிய ஆலயம் ஒன்றை அமைத்தார். கண்களுக்குப் புலப்படாமல் இருந்த அந்த ஆலயத்துக்கு அனைத்து தேவர்களும், முனிவர்களும், கடவுட்களும் பூலோகத்து மக்களும் வந்தார்கள். அங்கு பகவான் விஷ்ணு வந்து குடியேறியதும் பகவான் பிரும்மா தானே வந்து இரண்டு விளக்குகளை ஏற்றி வைத்து கலியுகம் முடியும்வரை அவை அங்கு ஓளி வீசிக் கொண்டு இருக்கும் என்று கூறினார். அந்த ஆலயத்தில் நடைபெற்ற விழாவை பகவான் பிரும்மாவே இருந்து நடத்தியதினால் அந்த விழாவை பிரும்மோத்சவம் என்று அழைத்தார்கள். *(10)

பூமியில் தொண்டைமானால் கட்டப்பட்ட ஆலயம் கட்டப்பட்டு கொண்டு இருந்த நேரத்தில் பகவான் ஸ்ரீனிவாசர் தனது மனைவியான பத்மாவதியுடன் அங்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் தொண்டைமானுக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டு விட்டது. கனவில் தனக்கு பகவான் விஷ்ணு ஒரு ஆலயம் அமைக்க கட்டளை இட்டதைத் தொடர்ந்து அவரது தெய்வீக அவதாரம் எனக் கருதப்படும் பகவான் ஸ்ரீனிவாசரும் அல்லவா இங்கு நேரில் வந்துள்ளார். ஆகவே பகவான் விஷ்ணுவே நேரில் வந்து ஆலயத்தில் குடி புக உள்ளார் என்பது நிரூபணம் ஆகிவிடும் போல உள்ளதே என எண்ணியவர் மனதில் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.

தொண்டைமானின் நாட்டில் இப்படியாக பல அதிசய நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கையில் மகரிஷி நாரதர் சும்மா இருப்பாரா? அவர் அடுத்து செய்ய வேண்டிய இன்னொரு முக்கியமான காரியமும் இருந்ததே. முதலில் விதிப்படி பகவான் விஷ்ணுவுடன் வேதவதியான பத்மாவதியை திருமணம் செய்து வைத்தாகி விட்டது. அடுத்து தவத்தில் உள்ள உண்மையான லஷ்மி தேவியை இனி பகவான் விஷ்ணுவுடன் இணைத்து வைக்க வேண்டும். பகவான் விஷ்ணுவின் ஸ்ரீனிவாச அவதாரமும் வெளிப்பட வேண்டும். இதை மனதில் கொண்ட மகரிஷி நாரதர் உடனடியாக லஷ்மி தேவி தவம் இருந்த கொல்லாபுரத்துக்கு கிளம்பிச் சென்றார்.

லஷ்மி தேவி தவம் இருந்த யாத்துக்குச் சென்றவர் அவள் கண் விழிக்கும் வரைக் காத்திருந்தார். எப்போதும்போல லஷ்மி தேவி தவத்தையும் பூஜையையும் செய்து முடித்தப் பின் வெளியில் வர அங்கு மகரிஷி நாரதர் நின்று கொண்டு இருந்ததைக் கண்டாள். ‘என்ன நாரதரே, உமக்கு என்ன ஆயிற்று? எதற்காக இங்கு வந்து நின்று கொண்டு இருக்கின்றீர்கள் ? உள்ளே வந்து அமர்ந்து இருக்கலாம் அல்லவா ‘ என்று விசாரிக்க மகரிஷி நாரதர் கூறினார் ‘ அம்மா, நான் சொல்ல என்ன உள்ளது? நீங்கள் இங்கு உங்கள் கணவருடன் இணைய வேண்டும் என்று தவம் இருந்து கொண்டு இருக்கையில் ஷேசாசலபுரத்தில் உங்கள் கணவர் விஷ்ணுபிரான் பத்மாவதி என்று ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு உல்லாசமாக இருக்கிறாரே என்பதினால் எனக்கு உங்கள் மீது இரக்கம் வந்துவிட்டது. ஆகவேதான் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும் வகையில் உங்களுக்குத் துணையாக இருக்கவே இங்கு வந்தேன்’ என்று பீடிகையுடன் ஒரு செய்தியைப் போட்டார்.

அது போதாதா லஷ்மி தேவியின் கோபத்தைக் கிளற? ‘என்ன என் நாதன் இன்னொருவளை மணந்து கொண்டு விட்டாரா. இதோ இப்போதே கிளம்பிச் சென்று நியாயம் கேட்கிறேன். தயவு செய்து என்னுடன் கிளம்பி வந்து அவர்கள் உள்ள இடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்’ என்று அவரிடம் கெஞ்சிக் கேட்கத் துவங்க அதையே எதிர்பார்த்திருந்த மகரிஷி நாரதரும் சற்றும் தயங்காமல் லஷ்மி தேவியை அழைத்துக் கொண்டு ஷேசாசலத்துக்குச் சென்றார்.

லஷ்மி தேவி ஷேசாசலத்தை அடைந்தபோது பகவான் ஸ்ரீனிவாசர் தனது மனைவியான பத்மாவதியுடன் அங்கு இருந்த நதிகள், ஓடைகள், நீர் நிலைகள் என பல்வேறு இடங்களுக்கும் சென்று விட்டு புதியதாக நிர்மாணிக்கப்பட்ட ஆலயத்துக்குள் பிரவேசித்தார். அங்கு அவர்கள் நின்று கொண்டு இருந்த சமயத்தில் லஷ்மி தேவி கோபத்துடன் உள்ளே நுழைய அவளைக் கண்டதும் ஸ்ரீனிவாசர் ஸ்ரீனிவாசரும் பத்மாவதியும் நிலை குலைந்தார்கள். பத்மாவதியோ இவள் யார் நாம் உள்ள இடத்தில் வந்திருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டே இருக்கையில் உள்ளே வந்த லஷ்மி தேவியோ ‘பெண்ணே நீ யார் என் கணவருடன் சல்லாபித்துக் கொண்டு நிற்கிறாய்’ என்று கோபமாகக் கேட்க, பத்மாவதியோ ‘அடியே பெண்ணே…என்னய்யா யார் என்று கேட்கிறாய்? நான்தான் இவருடைய மனைவி. எங்களுக்கு இப்போதுதான் திருமணம் ஆகி உள்ளது. நீ என்னடா என்றால் என் கணவர் என்கிறாய். என்ன என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாய்?’ என்று முறைக்க இருவரும் நீ…நான் என வாதம் செய்து கொண்டு அடிக்காத குறையுடன் சண்டைப் போட்டுக் கொண்டு இருந்ததைக் கண்ட பகவான் ஸ்ரீனிவாசர் அவர்கள் இருவருமே தனது மனைவிகளே என்று கூறி இருவரையும் சமாதானப்படுத்த முயல, இருவரும் அவருடன் சண்டை போடத் துவங்கினார்கள்.

ஆகவே அதை சமாளிக்க முடியாமல் போனவர் சற்று பின்னே சென்று நின்று அப்படியே அங்கு சிலையாக மாறி விட்டார். அவர் சிலையானதும் பெரிய சப்தம் கேட்டது. அந்த சப்தத்தைக் கேட்டு திரும்பிய இருவரும் பகவான் ஸ்ரீனிவாசர் சிலையாக நிற்பதைக் கண்டு அந்த சிலைக்கு அருகில் சென்று அதைக் கட்டி அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டு அழுதார்கள். சிலையில் இருந்த ஸ்ரீனிவாசரான விஷ்ணு கூறினார் ‘ அம்மா லஷ்மி, நான் இப்போது இங்கு திருமணம் செய்து கொண்டுள்ளது வேறு யாருமல்ல. பத்மாவதி எனும் இவளும் உன் மாய அவதாரமே. நீ பெற்றிருந்த ஒரு சாபத்தினால் நீ இரு அவதாரங்களை எடுத்து இங்கு வந்து என்னை அடைய வேண்டி இருந்தது.

ஒரு அவதாரத்தில் நீ சீதையாகப் பிறந்து இருந்தபோது, உன்னுடைய பல்வேறு அவதாரங்களில் ஒன்றான வேதவதி என்பவள் வந்து சீதையாக இருந்த உன்னைக் பாதுகாக்க வேண்டிய அவசியம் வந்தது. உன்னைப் பாதுகாத்துக் கொள்ள நீயே ஏற்படுத்தி இருந்த மாய உருவமான வேதவதிடம் சீதையின் உருவில் இருந்த உன்னை சாட்சியாக வைத்துக் கொண்டு அல்லவா அவளை நான் ஸ்ரீனிவாசர் அவதாரத்தில் மணம் செய்து கொள்வதாக வாக்கு தந்தேன் என்பது உன் நினைவுக்கு இப்போது வருகிறதா? அதைக் காப்பாற்றவே இப்போது இவளை மணக்க வேண்டி இருந்தது’ என்று கூறவும் லஷ்மியும் தேவியும் பத்மாவதியும் ஒருவருடன் ஒருவர் கட்டி அணைத்துக் கொண்டு தாம் அனாவசியமாக சண்டை போட்டுக் கொண்டதற்கு பகவான் விஷ்ணுவிடம் மன்னிப்பைக் கோரினார்கள்.

அவர்களைப் பார்த்த பகவான் விஷ்ணு லஷ்மி தேவியிடம் கூறினார் ‘ லஷ்மி, கலியுகம் பிறக்கும் முன்னால் உன் மூலம் சில காரியங்கள் நடைபெற வேண்டும் என்பதினால்தான் இங்கு உன்னையும் வரவழைத்தேன். இங்கு நீ என்னுடன் லஷ்மியாக இருந்து கொண்டு மக்களுக்கு போக பாக்கியத்தை கொடுக்க வேண்டும். அதை அனுபவிப்பவர்கள் பல தவறான காரியங்களை செய்து கொண்டு இருந்தவண்ணம் அதற்கு பரிகாரம் தேட என்னிடம் வேண்டும்போது பணமும் பொருளும் பல்வேறு பிரார்த்தனைகளையும் செய்வார்கள். அதைக் கொண்டு உன்னை மணப்பதற்காக நான் குபேரனிடம் இருந்து பெற்ற கடன்களை திரும்ப செலுத்திக் கொண்டே இருப்பேன். அவர்கள் பணமும் கொடுப்பார்கள். காணிக்கையாக பொருட்களையும், ஏன் தமது தலை முடியைக் கூட கொடுப்பார்கள். நான் பெறும் அனைத்து காணிக்கைகளிலும் ஒரு பகுதியை வட்டியாகக் குபேரனிடம் கொடுப்பதாகக் கூறி உள்ளேன். அந்தக் கடன் தீர கலிகாலம் ஆகிவிடும். ஒருபுறத்தில் நீ செல்வத்தைக் கொடுக்கக் கொடுக்க, மக்கள் செய்யும் தவறுகளும் பெருகிக் கொண்டே போகும். அப்போது தாம் செய்யும் தவறுகளுக்கு பயந்து அதற்கு பிராயசித்தம் தேட இங்கு வந்து என்னை வணங்குவார்கள். இங்கு வருபவர்களின் அனைத்து துயரங்களையும் நான் தீர்த்துக் கொண்டே இருப்பேன் என்பதினால் அப்படி தவறு செய்பவர்கள் இங்கு வந்து இந்த இடத்தையே பூவுலக வைகுண்டமாகக் கருதி அதே செல்வத்தை நம்மிடம் காணிக்கை என்ற பெயரில் திருப்பித் தருவார்கள் என்பது மட்டும் அல்ல, அவர்களின் கஷ்டங்கள் அதனால் குறைவதைக் கண்டு பூவுலகில் பக்தி பெருகும். அதற்கு நானும் நீயும் காரணமாக இருக்க ஸ்ரீனிவாச அவதாரம் எடுத்த காரணமும் நிறைவாகும். ஆகவே நீயும் வந்து என் வலது மார்பில் அமர்ந்து கொண்டு இந்த காரியத்தை செய். உன்னுடைய மாய உருவமே பத்மாவதி என்றாலும் நீயே அவள் உருவில் என் இடது மார்பில் அமர்ந்து இருப்பாய். இப்படியாக நீ மீண்டும் இரு உருவங்களுடன் என்னை சுற்றி இரு புறத்திலும் இரு அவதாரங்களாகவே இருப்பாய்.

அதே சமயத்தில் பக்தர்களைக் காப்பாற்ற நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப உன் மாய உருவமான பத்மாவதியும் பத்மசாரோவரத்தில் சென்று ஒரு ஆலயத்தில் அமர்ந்து கொள்வாள். நான் தினமும் இரவு அங்கு வந்து பத்மாவதி எனும் – உன் அவதாரத்தோடுதான் – தங்கி இருப்பேன். மற்ற நேரத்தில் இங்கிருந்தபடி பக்தர்களுக்கு நீ கொடுக்கும் செல்வத்தை கொடுத்துக் கொண்டும், மீண்டும் அதை அவர்களிடம் இருந்தே பெற்றுக் கொண்டவண்ணம் அவர்களின் குறைகளை களைந்து கொண்டு இருப்பேன். இப்படியாக நீ தரும் செல்வம் உன்னிடமே மீண்டும் மீண்டும் வந்து கொண்டு மீண்டும் மக்களிடையே ஒரு முடிவற்றப் பயணமாக தொடர்ந்து கொண்டு செல்லும். இங்கு வரும் மக்கள் காணிக்கையாக எதை வேண்டுமானாலும் கொடுக்கக் கூறுவேன். ஏன் அவர்கள் தலை முடியைக் கூட காணிக்கையாகப் பெற்றுக் கொள்வேன். தலை முடியைக் கொடுப்பது ஒரு இழிவான செயல் அல்ல. மனிதர்களுடைய அழகை பிரதிபலிக்கும் ஒரு முக்கியமான உடல் பாகம் ஆகும் அது. ஒன்று தலை முடியை அழகு செய்யாமல் முனிவர்கள், ரிஷிகளைப் போல அதை அப்படியே விட்டு விட வேண்டும். அப்படி விட்டு விடப்படும் தலை முடி அடையாக, சிக்காக மாறி விட்டாலும் சரி அதற்க்கு முக்கியத்துவம் தராமல் அப்படியே விட்டு விட வேண்டும். அல்லது கடவுளுக்கு முன் வரும்போது அதை துறந்து விட்டு வர வேண்டும். ஆகவேதான் தலை முடியை கொடுப்பதை ஒரு பக்தியை வெளிப்படுத்தும் சடங்காக காட்டி என்னிடம் வரும் வேளையில் தமது வெளித் தெரியும் அழகினையும் ஆசைகளையும் அழித்துக் கொண்டு தமது பக்தியை மட்டும் வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாக அந்த சடங்கை செய்து கொண்டு வர வேண்டும் என்பதை காட்டும் சடங்காக்கி ஆலய மகிமையை பிரபலப்படுத்திக் கொண்டு இருப்பேன். அந்த தலைமுடி கழித்தல் கூட பூவுலகில் உள்ள செல்வத்தை இங்கு கொண்டு வந்து சேர்க்கும் ஒரு கருவியாக அமையும். தேவி இதற்கு நீ உடன்பட வேண்டும்’ என்று பகவான் ஸ்ரீனிவாச அவதாரத்தில் இருந்த பகவான் விஷ்ணு கூறவும், அதைக் கேட்ட பத்மாவதியான லஷ்மி தேவியும் மேல்மங்காபுரத்தில் உள்ள ஆலயத்தில் சென்று அங்கு சிலையாக அமர்ந்தாள். அதனால்தான் ஸ்ரீனிவாசப் பெருமான் மேல்மங்காபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் திரும்புகிறார்.

இதற்கு இடையில் மகனைத் தேடி வந்த வகுளாதேவியை தனது கழுத்தில் தொங்கும் துளசி மாலையாக மாற்றிக் கொண்டார் பகவான் ஸ்ரீனிவாசர். தனது சகோதரர் கோவிந்தராஜரையும் தன்னுடன் இருக்கும் வகையில் அதே இடத்தில் கீழ் திருப்பதியில் சென்று வசிக்குமாறு கூறினார். இப்படியாக பகவான் விஷ்ணு, திருப்பதியில் பகவான் ஸ்ரீனிவாசர் எனும் அவதாரத்தில் தனது மனைவி லஷ்மி தேவியுடன் பல்வேறு ரூபங்களில் இருந்து கொண்டு கலியுகத்தில் மக்களைக் காத்து வருகிறார்.

ஏழு மலைகளைக் கொண்ட திருப்பதி மலை முழுவதுமே பகவான் வராஹ ஸ்வாமியின் கட்டுப்பாட்டில் உள்ளதினால் மலையில் ஏறி பகவான் வெங்கடாசலபதியைக் காண்பவர்கள் முதலில் பகவான் வராஹா ஸ்வாமியை தரிசித்த பின்னரே மேலே செல்ல வேண்டும். அதற்குக் காரணம் அங்கு வசிக்க திருப்பதியான் வந்தபோது அவருக்கு ஒரு உறுதிமொழி கொடுத்தார். அதன்படி அவருக்கு அங்கு தங்க வாடகை கொடுக்க வேண்டும். அதற்கு இணையாக முதலில் பகவான் வராஹ ஸ்வாமிக்கு நெய்வித்தியம் செய்த பின்னரே பகவான் வெங்கடாசலபதியாக உள்ள தனக்கு நெய்வித்தியம் செய்வார்கள் என்பதே வாடகை பணம் ஆகும். அது போலவே திருச்சானூரில் குடி அமர்ந்துள்ள பத்மாவதியை தரிசிக்காமல் திருப்பதிக்கு மட்டும் சென்று விட்டு வந்தால் பகவான் வெங்கடாசலபதியின் பூரண அருள் கிடைக்காது.*(11)

திருப்பதியான்  ஜீவ சரித்திர பாராயணம் முடிவுற்றது

*(1) சிறு விளக்கம் :- இதனால்தான் பகவான் சிவபெருமான் சிவலிங்க உருவில் பூவுலகில்  தோற்றம் தரத் துவங்கினார். சிவலிங்கத் தத்துவம் என்ன பார்வதி தேவி ஆவுடையார் வடிவில் சிவபெருமான் பாதங்களில் அமர்ந்து கொண்டு இருக்கிறார். தான் வசிக்கும் இமயமலையையே ஒரு குத்துக் கல்லைப் போன்ற உருவில் உருவாக்கி, பகவான் சிவபெருமான் அதற்குள் வசிக்கத் துவங்க, அந்த மலையை சுற்றி  பார்வதி தேவி வலம் வரத் துவங்கி, பகவான் சிவபெருமானின் கோபத்தை தணித்து அவரை குளிர்ச்சி அடைய வைக்க, அனைத்து பக்கங்களில் இருந்தும் கங்கை நீரை அவரை சுற்றி ஓட வைத்து அந்த நீரை தன் இரு கைகளினாலும் ஒரு அணைப் போல தடுத்து நிறுத்தி வைத்திருந்தபடி அவரை அர்சிக்க அதுவே சிவசக்தி தத்துவ உருவமாக அமைந்தது.

ஆவுடையாரின் ஒரு பக்கத்தில் காணப்படும் நீண்ட பகுதி பார்வதி தேவியின் கைகள் என்றும் அவர் ஆவுடையார் உருவில் அமைத்த கங்கை நீரில் நின்றபடி பகவான் சிவபெருமானை வணங்கிய நிலையில் உள்ளதினால்தான் அந்த ஆவுடையாரை தாண்டிக் கொண்டு செல்லக் கூடாது என்று சிலர் கூறுவார்கள். வடநாட்டில் இந்தப் பழக்கம் அதிகம் உண்டு. சிவலிங்கத்தை வழிபடும்போது, ஆவுடையாரின் ஒருபுறத்தில் இருந்து இன்னொருபுறம் சென்று விட்டு அதே வழியாக மீண்டும் திரும்பி வந்து விடவேண்டும் என்று இந்தக் காரணம் புரியாமலேயே பல ஆலயங்களில் கூறுவார்கள். சிவனை கீழே விழுந்து நமஸ்கரித்து வணங்கும்போதும் ஆவுடையாரின் நீண்ட பகுதியில் தலையைத் தொட்டு அல்லது கைகளால் அதை தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்வதின் மூலம் பகவான் சிவனை வணங்கும் பார்வதியின் கைகளை வணங்குவதாகவும், அதன் மூலம் பகவான் சிவனுக்கு ஆராதனை செய்வதாக அர்த்தம் ஆகிறது என்கிறார்கள்.

பிருகு முனிவரின் சாபத்தினால்தான் சிவனும் பார்வதியும் ஒன்றிணைந்துள்ள தத்துவமான லிங்க உருவில் பார்வதியையும் சிவபெருமானையும் மக்கள் பூமியில் வழிபடத் துவங்கினார்கள் என்பதல்ல உண்மை. பிருகு முனிவர் மூலம் தங்களுடைய சிவசக்தி தத்துவத்தை சிவபெருமான்-பார்வதி வெளிக் காட்டினார்கள் என்பதே உண்மை. அதனால்தான் பகவான் சிவன்-பார்வதி தேவி இருவரும் தனித் தனி உருவங்களில் உள்ள சிலை வடிவில் அவர்களுக்கு ஆலயங்களில் பூஜைகள் நடைபெறுவதில்லை.

தனித் தனி சன்னதியில் ஏன் சிவலிங்கத்தையும் பார்வதியையும் வைத்து பூஜிக்கிறார்கள் என்பதின் காரணம், என்னதான் தெய்வமாக இருந்தாலும், மக்கள் தம் இருவரையும் சேர்த்து ஆராதிப்பதைப் போல தனது நாயகனான பகவான் சிவபெருமானை தானும் பூஜிக்க வேண்டும் என பார்வதி தேவி எண்ணுவதினால்தான் அவளுக்கும் தனி சன்னதிகள் அமையக் காரணமாக இருந்துள்ளன. அந்த நிலையை பார்வதியேதான் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறாள். தனி சன்னதியில் அமர்ந்தவாறு சிவபெருமானை பூஜித்துக் கொண்டு இருக்கும் அவளையும் மக்கள் அதனால்தான் அந்த தனி சன்னதிக்குச் சென்று வணங்குகிறார்கள்.

*(2) சிறு விளக்கம் :- ஒரு சிலர் பகவான் விஷ்ணுவின் இதயத்தில் பிருகு முனிவர் உதைத்ததினால் பகவான் விஷ்ணு எழுந்ததாகக் கூறுவார்கள். அது சரியான செய்தி அல்ல. ஒரு சாதாரண முனிவர் லஷ்மி தேவியின் இதயத்தையே உடைத்து விட்ட நிலையை, எடுத்துக் காட்டும் விதமாக தன் காலினால் அவர் படுத்திருந்த பகவான் ஆதிசேஷனை உதைத்தாக சில பண்டிதர்கள் கூறுவார்கள். பகவானின் ஜீவ சரித்திரமே அங்கொன்றும், இங்கொன்றுமாகக் கிடைத்த கல்வெட்டுச் செய்திகளின் அடிப்படையிலும், கிராமிய வாய்மொழிக் கதைகள் மூலமுமே பரவி எழுத்து வடிவில் அமைந்தது என்று நம்புகிறார்கள். இதற்குக் காரணமும் ஒன்று உண்டு. ஏழுமலையான் அவதரித்த கதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நைமிஷாரண்யா ஷேத்திரத்தில் அவ்வப்போது நடைபெற்று வந்திருந்த ரிஷி முனிவர்களின் சத்சங்கத்தில் கூறப்பட்டக் கதை என்பது புராண அடிப்படையிலான நம்பிக்கை என்பதே.

*(3)  சீதா அவதாரம் – சிறு விளக்கம் : இங்கு சீதா தேவி அவதாரம் குறித்த ஒரு ஒரு சிறிய விளக்கத்தை கூற வேண்டி உள்ளது. சீதா தேவி மஹாலக்ஷ்மியின் இன்னொரு அவதாரம். விஷ்ணு பெருமான் பல அவதாரங்கள் எடுத்தபோது மஹாலக்ஷ்மியே அவருடைய ஒவ்வொரு அவதாரத்தில் அவருடைய மனைவியாக இருக்க வேண்டும் என்ற நிலையில் பல்வேறு அவதாரங்களை எடுக்க நேரிட்டு அவரை மணந்து கொள்ள வேண்டி இருந்தது. இந்த நிலையில்தான் ராமாவதாரத்தில் சீதை எனும் அவதார கோலத்தில் விஷ்ணுவின் அவதார ராமரை மணந்து கொண்டாள்.

இராமாயண காலத்தில் ராமபிரான் காட்டில் இருந்தபோது அன்னை சீதையை ராவணனிடம் இருந்து காப்பாற்ற, லட்சுமி தேவி மூலம் அவளது அவதாரமான சீதை உருவில் இன்னொரு துணை அவதாரமாக ஒரு மாய உருவை அக்னி பகவான் எடுக்க வைத்து இருந்தார். இப்படியாக லட்சுமி தேவியானவள், சீதா தேவியைத் தவிர தவிர இன்னொரு மாய ரூபத்தையும் வெளிப்படுத்தி இருந்தாள். அவள் பெயர் வேதவதி என்பது ஆகும். மாய உருவம் என்றாலும் அந்த ரூபத்திற்கும் சீதையின் குணாதிசயங்கள் இருந்தன, உணர்வுகளும் இருந்திருந்தன என்பதினால் அந்த மாய உருவமும் ராமபிரானையே தனது கணவராக வரித்துக் கொண்டு இருந்துள்ளாள். இதனால்தான் அவளும் ராமபிரானை மணக்க விரும்பினாள்.

தனது கற்பை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருந்த சீதா தேவியானவள் அக்னி பிரவேசம் செய்ய வேண்டி இருந்ததல்லவா. அப்போதுதான் லட்சுமி தேவியானவள் தன்னால் படைக்கப்பட்டு இருந்த மாய சீதா தேவியையும், சீதா தேவியுடன் மறைய வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள். இல்லை என்றால் பகவான் ராமபிரானுடன் இரண்டு மனைவிகள் அல்லவா சேர்ந்தே இருக்க வேண்டும். அதனால்தான் அக்னி பிரவேசத்திற்குப் பின்னர் நடைபெற்ற இராமாயண நாடகத்தில் சீதா தேவியின் அவதாரம் முடிவுக்கு வர வேண்டிய தருமணத்தில் மட்டுமே அக்னியில் இருந்து வேதவதியும், அன்னை சீதையும் தீயினால் பாதிக்கப்படாமல் ஒன்றாக வெளி வந்து மறைகின்றார்கள். சீதாதேவியின் அவதாரத்தையும் முடித்து வைக்கும் வகையில் பூமாதேவி மூலம் சீதா தேவியின் அவதாரத்தை பூமிக்குள் மறைய வைத்து விடுகின்றார். சீதா தேவி பூமியிலே சென்று மறைந்து விட மஹாலக்ஷ்மியின் சீதை எனும் அவதார கோலம் முடிந்து விடுகின்றது. பின்னர் மஹாலக்ஷ்மியே சீதையின் உருவில் இருந்தபோது தானே படைத்த மாய உருவமான வேதவதி எனும் மாய உருவின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையிலும், ராம அவதாரத்தில் இருந்த விஷ்ணு வேதவதி எனும் மாய உருவிற்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றவும் பின்னர் பத்மாவதி எனும் அவதாரத்தில் வெளி வருகின்றாள்.

ஆக விஷ்ணுபிரானின் அனைத்து அவதாரங்களிலும் மஹாலக்ஷ்மியே அவரது மனைவியாக பல்வேறு ரூபங்களில், பெயர்களில் வெளி வந்து அவரை மணக்கிறாள். விஷ்ணுபிரானின் முந்தைய அவதாரமான பகவான் ராமரும் மஹாலக்ஷ்மியின் அவதாரமான சீதையும் தத்தம் அவதாரங்களை இராமாயண காலத்தோடு முடித்துக் கொண்டு விடுகின்றார்கள். இதை மனதில் வைத்துக் கொண்டு இந்த கதையை தொடர்ந்து படிக்க வேண்டும். பகவான் ராமபிரான் திருப்பதி வெங்கடாசலபதியாக அவதரித்து விட்டார் எனும்போது பூமியிலே மறைந்து போன சீதாதேவி மறு அவதாரம் எடுக்கவில்லையா, எடுத்தார் என்றால் என்ன அவதாரம் எனும் சந்தேகங்களுக்கு தரப்பட்ட விளக்கமே இது. சீதை தனி தெய்வமல்ல அவர், லட்சுமி தேவியின் ஒரு துணை அவதாரமே என்பதினால் சீதா அவதாரம் முடிந்த பின் அவர் லட்சுமி தேவியாக அல்லவா மாறி விடுகின்றார் .

கதையை மேலே தொடரும் முன் இங்கு ஒரு செய்தியை விளக்க வேண்டும். பரப்பிரும்மனால் படைக்கப்பட்ட மும்மூர்த்திகளுக்கு மூன்று மனைவிகள் இருந்தார்கள். மும்மூர்த்திகளைப் போலவே அவர்களின் மனைவிகளினாலும் ஒரே நேரத்தில் பல்வேறு மாய அவதாரங்களை எடுக்க முடியும். வெவ்வேறு அவதார தோற்றத்தை அந்த மாய உருவங்கள் வெளிப்படுத்தினாலும், அனைத்து அவதாரங்களும் அவர்களின் பிம்பங்களே. ஒவ்வொரு கடவுளுக்கும் பல அவதாரங்கள் உண்டு. சில நேரங்களில் அவர்கள் ஒரே நேரத்தில் பல அவதாரங்களை எடுப்பார்கள். அவற்றில் உண்மை அவதாரத்தை விட்டு மற்ற அனைத்துமே துணை அவதாரங்கள். அந்த துணை அவதாரங்களுக்கு அதிக காலம் ஒதுக்கப்படுவது இல்லை. இருப்பது போல காணப்பட்டு, அப்படியே மறைந்தும் விடுவார்கள். ஆகவேதான் லஷ்மி தேவியானவள் ஒரே நேரத்தில் சீதை மற்றும் வேதவதியாக தோன்ற முடிந்தது. மேலும் ஒரே தெய்வம், அதே ரூபத்தில், ஒரே நேரத்தில், பல இடங்களிலும் காட்சி அளிக்க முடியும். மூல தெய்வம் ஓரிடத்தில் இருக்க தமது உடலில் உள்ள சக்தி கணங்களை பல்வேறு இடங்களிலும் சென்று தன்னுடைய உருவில் தோற்றம் (அதை மாயத் தோற்றம் என்று கூறுவார்கள்) தரும் நிலையே அதுவாகும். இந்த அவதார தத்துவம் பகவான் தத்தாத்திரேயர் சரித்திரத்தில் கூறப்பட்டு உள்ளது.

ஓரே ஆத்மா எப்படி பல உடல்களாகத் தோன்ற முடியும் என்று யோசிக்கிறீர்களா? கடவுட்களுக்கு ஆத்மா என்பது கிடையாது. உண்மையில் முதலில் பரப்பிரும்மன் படைத்தது பல லட்சக் கணக்கான ஜீவன்களைக் கொண்ட மும்மூர்த்திகளைதான். அதாவது பரப்பிரும்மன் என்ற உருவமில்லாத சக்தி தன்னுள் உள்ள சக்தியையும் சிவனையும் வெளிக் காட்டி அதன் பின் தான் படைத்த இரு மூர்த்திகளையும் இரண்டிரண்டாகப் பிரித்து ஆண் பெண் என்ற தத்துவத்தை வெளிப்படுத்தினார். அதனால்தான் மும்மூர்த்திகளையும் குறித்துக் கூறும்போது, அவர்களுடைய மனைவிகளான மூன்று தேவிகளும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். ஆகவேதான் பல லட்ஷக்கணக்கிலான ஜீவ அணுக்களை தன்னுள் அடக்கி வைத்துள்ள அந்த மும்மூர்த்திகள் மற்றும் அவர்களுடைய மனைவிகளினால் பல உருவங்களை ஒரே நேரத்தில் அவ்வபோது எடுக்க முடிகிறது. இதுதான் பரப்பிரும்மனினால் நிர்ணயிக்கப்பட்டு உள்ள தத்துவத்தின் ரகசியம்.

*(4) சிறிய விளக்கம்:- ஒரு சிறிய விளக்கத்தை இங்கு தர வேண்டி உள்ளது. கடவுள் என்றால் அனைத்தும் தெரிந்து இருக்கும் என்கிறார்கள். அப்படியானால், லஷ்மி செய்வது பகவான் விஷ்ணுவிற்கு தெரியாதா? அவள் எங்கு சென்றாள் என்பதும் அவருக்கு புரியாமல் இருக்குமா? அப்படி தெரியாது என்றால் கடவுள் சக்தி படைத்தவர் என்பதை ஒப்புக் கொள்ள முடியும் ? அது கேலிக் கூத்தாக உள்ளதே என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அது சரியான எண்ணம் அல்ல.

பூமியில் மனிதர்கள் உள்ளது போன்ற நிலைதான் தெய்வீக லோகத்தில் உள்ள தெய்வங்களின் நிலையும் . ஒரு தெய்வம் செய்வதை இன்னொரு தெய்வத்தினால் அறிந்து கொள்ள முடியாது என்பதுதான் தத்துவார்த்தமான உண்மை என்பதின் காரணம் அவர்கள் ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

பராசக்தி படைத்த பிரபஞ்சத்தில் அனைத்து தெய்வங்களுமே பராசக்தி நடத்தும் பொம்மலாட்ட பொம்மைகளைப் போலவே உள்ளார்கள். இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டபோதே இன்னென்ன நாடகங்கள் நடைபெறும் என்பது காலக் கோளினால் வரையுறக்கப்பட்டு விட்டது. ஆகவே அதன்படித்தான் அனைத்தும் நடைபெறும். மனிதர்கள் செய்வது அனைத்தையும் தெய்வத்தினால் அறிந்து கொள்ள முடியும் என்றாலும் காலக் கோளினால் வரையுறக்கப்பட்டு விட்ட நாடகத்தில் எப்போது தெய்வங்கள் மனிதப் பிறவிகளோடு இணைந்து செயல்படத் துவங்குகிறார்களோ அப்போது முதலே அந்த நாடகத்தின் தெய்வங்களினால் அந்த நாடகத்தின் அனைத்து காட்சிகளையும் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியாது என்பது பரப்பிரும்மனின் தேவ தத்துவம். ஆகவே ரிஷி மூலம் மற்றும் நதி மூலம் போன்றவற்றை ஆராயலாகாது என்று கூறுவார்களே அதைப் போல நடக்கும் தெய்வ நாடகத்தை அதிகம் ஆராயாமல் நாம் அவர்களுடைய மனித அவதார வாழ்க்கையை மட்டுமே படிக்க வேண்டும்.

. *(5) சிறு விளக்கம் :-இங்கு ஒரு சிறிய விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆகாசராஜருக்கு மகளாக கிடைத்தது லஷ்மியின் மாய அவதாரமான வேதவதிதான். அவளும் லஷ்மி தேவியேதான் என்றாலும் முதலில் விஷ்ணுவானவர் முன் பிறவியில் வேதவதியாக இருந்த லஷ்மி தேவியை மணந்தப் பின்னரே, தவத்தில் அமர்ந்து உள்ள உண்மையான லஷ்மி தேவியை ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்தது. ஆகவே ஸ்ரீனிவாச அவதாரத்தில் லஷ்மி தேவியுடன் மீண்டும் இணைந்தாலும், முதலில் அவளுடைய மாய அவதாரத்தை மணந்து கொண்டப் பின்னரே லஷ்மியுடன் இணைந்தார்.

*(6) சிறு விளக்கம்:- இந்த இடத்தில் ஒரு விளக்கத்தைக் கொடுக்க வேண்டி உள்ளது. பகவான் விஷ்ணுவை அடையாளம் தெரிந்து கொண்டு விட்ட பகவான் வராஹர் எப்படி அவருக்கு இடம் கொடுக்க மறுக்க முடியும்? பகவான் வராஹரே, பகவான் விஷ்ணு எடுத்த அவதாரம்தானே என்ற கேள்வி எழும். நியாயமான கேள்விதான். இந்தக் கதையில் தற்போது பகவான் விஷ்ணுவின் நிலை அவர் ஒரு மானிட உருவம் படைத்தவர். அந்த மானிட உருவத்துக்கு ஏற்றாற்போலத்தான் பூமியில் நிகழ்வுகளை நடத்திக் கொள்ள முடியும். நான்தானே பகவான் விஷ்ணு என்று எண்ணிக் கொண்டு அவரால் எதையும் செய்ய இயலாது. இது நிர்ணயிக்கப்பட்ட நியதி. அதே நேரத்தில் முன்னரே நான் கூறி உள்ளது போல ஒரு கடவுளினால் ஒரே நேரத்தில் பல அவதாரங்களை எடுத்துக் கொண்டு இருக்க முடியும் என்பதும் நியதி. பகவான் வராஹராக உள்ள பகவான் விஷ்ணுவின் அவதாரத்துக்கு என சில தனிப்பட்ட சக்திகள் அந்த அவதாரத்தில் உண்டு. அதை பகவான் விஷ்ணுவினாலும் தடுக்க முடியாது. காரணம் அந்த அவதாரம் எடுக்கும்போதே அதற்கென சில நியமங்கள், நியதிகள், சக்திகள் போன்றவற்றுடன்தான் அந்தந்த அவதாரத்தை எடுக்கிறார்கள். இப்போது மனித அவதாரத்தில் உள்ள விஷ்ணு பகவான் பகவான் வராஹரின் முன்னால் சக்தி அற்றவராகவே இருப்பார். ஆகவே பகவான் வராகர் வைக்கும் கோரிக்கைகளை விஷ்ணு பகவான் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அதனால்தான் பகவான் வராஹராகவே உள்ள விஷ்ணுவும், ஸ்ரீனிவாசராக உள்ள விஷ்ணுவும் ஒருவரே என்றாலும் கூட, பகவான் ஸ்ரீனிவாச அவதாரத்தில் உள்ள பகவான் விஷ்ணு அந்த அவதாரத்தில் வேறு கடவுள் ஆவார் . அது போலவேதான் அவர் ஆலயத்தின் அருகில் உள்ள சன்னதியில் உள்ள பகவான் வராஹரும் வேறு கடவுள்தான் பகவான். அதனால்தான் வராஹர் அவதாரத்தில் உள்ள பகவான் விஷ்ணுவிற்கு மரியாதை கிடைத்தப் பிறகே (நெய்வித்தியம் படைத்தலில்) பகவான் ஸ்ரீனிவாசர் அவதாரத்தில் உள்ள பகவான் விஷ்ணுவும் மரியாதை பெறுகிறார். இவை அனைத்துமே பரப்பிரும்மனின் நாடகத்தின் தவிர்க்க முடியாத காட்சிகள்.

*(7) சிறு விளக்கம் :- இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைக் கூற வேண்டும். பகவான் ஸ்ரீனிவாசர் உருவில் விஷ்ணு பகவான் அவதரிப்பதற்கு முன்னரே என்னென்ன நேரத்தில் என்னென்ன நடக்க வேண்டும், எந்தெந்த பூத கணங்கள் எப்போது அங்கு அவதரித்து, அங்கு நடக்க உள்ள நாடகத்துக்கு எந்த விதத்தில் துணை புரிய வேண்டும், ஒன்றன் பின் ஒன்றாக என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்றெல்லாம் ஏற்பாடு செய்து வைத்து வைக்கப்பட்டு இருந்தன. அதற்குக் காரணம் அவர் பகவான் ஸ்ரீனிவாசராக அவதரித்தப் பின் அந்த மனித உருவத்தில் இருந்து கொண்டு அவற்றை செய்ய இயலாது. அவர் இயங்க இருந்தது ஒரு சக்தி அற்ற மனித உருவில். அந்த பகவான் ஸ்ரீனிவாச உருவில் சில காலம் இருந்தபடி மனித உருவிலான காட்சிகளை நடத்திக் காட்ட வேண்டும். அப்போது அவரால் தெய்வீகத்தைக் வெளிப்படுத்தி அந்த சக்தியை பயன்படுத்த முடியாது.

ஆனால் அவர் நடத்தும் நாடகம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை அடையும்போது அவர் தெய்வீகமும், அவர் யார் என்பதும் வெளிப்படும். அதுவரை தெய்வம் என்ற நிலையில் இல்லாத மனித உருவிலான வாழ்கைதான் அவர் வாழ வேண்டும். அதனால்தான் அவர் ஸ்ரீனிவாசராக (பெயர் கொண்ட நிலை) மாறுவதற்கு முன்னரே வகுளாதேவிக்கு தான் யார் என்பதைக் காட்டி விட்டு, இந்த ஜென்மத்தில் அவளுடைய பாத்திரம் என்ன என்பதையும் கூறி விட்டு அவள் தனக்கு திருமணம் செய்து பூர்வ ஜென்ம தாக்கத்தை நிறைவேற்றிக் கொள்வாள் என்றார். அதன் பின் தனக்கு ஒரு பெயர் வைக்குமாறு கூற அவளும் அவருக்கு ஸ்ரீனிவாசன் எனப் பெயரிட்டதுமே அவர் தெய்வீகத்தை துறந்து விட்டு மனித உருவில் முழுமையாக மாறினார். வகுளா தேவியும் அவள் வாயினால் ஸ்ரீனிவாசன் என்ற பெயரை அவருக்கு வைத்ததுமே தன் பூர்வ ஜென்மைக் கதையை மறந்து விட்டாள். இனி இருவருக்குமே அவர்கள் யார் என்பது சில காலம் பொறுத்து பகவான் ஸ்ரீனிவாசர் அவதாரத்தில் உள்ள பகவான் விஷ்ணு தானாகவே வெளிப்படுத்தும்போது மட்டுமே தெரிய உள்ளது.

.*(8)  சிறு விளக்கம் :- இங்கு ஒரு செய்தியை விளக்க வேண்டும். அவ்வப்போது பகவான் விஷ்ணுவையும் லஷ்மிதேவியையும் சம்மந்தப்படுத்தி கதை செல்வதினால், இந்தக் கதை நிகழ்ந்தது பூமியிலா இல்லை தேவ லோகத்திலா என்ற சந்தேகம் எழக் கூடும். கதை நடந்தது பூமியில்தான். ஆனால் அதில் இரண்டு தெய்வங்கள் பகவான் ஸ்ரீனிவாசர் உருவிலும், பத்மாவதி உருவிலும் சம்மந்தப்பட்டு உள்ளனர். அவர்கள் இருவரும் மனித உடலில் பிறந்து சாப விமோசனம் அடைகிறார்கள் என்பது மட்டும் அல்ல கலி யுகத்தைக் காக்க பகவான் விஷ்ணுவிற்கு தொண்டைமான் எனும் மன்னன் மூலம் ஒரு ஆலயம் அமைவதும் அவர்கள் கதை மூலமே நடைபெறுகிறது, அவர்கள் மூலமே பகவான் விஷ்ணுவும், லஷ்மிதேவியும் பூமியில் உள்ளவர்களுக்கு தரிசனம் தந்துள்ளார்கள் என்பதெல்லாம் உண்மை என்பதினால் பூலோகக் கதை மற்றும் தேவலோகக் கதை என இரண்டுமே அவ்வப்போது கலந்தே வருகிறது

.*(9) சிறு விளக்கம் :- கடவுளும் வட்டியை வாங்கிக் கொள்வாரா என்று ஒருவர் நினைக்கலாம். பகவான் குபேரனிடம் ஏன் பகவான் விஷ்ணு வட்டிக்கு பணத்தைப் பெற்றுக் கொண்டார் என்பதற்கும் ஒரு தத்துவார்த்தமான, ஆழமான அர்த்தம் உள்ளது. லஷ்மி தேவியானவள் வைகுண்டத்தை விட்டுச் சென்று விட்டதும் அவளோடு செல்வமும் சென்று விட்டது. மிச்சம் இருந்ததை மட்டும் பகவான் குபேரன் பாதுகாத்து வந்தார். அதே நேரத்தில் செல்வம் இல்லாவிடில் பூமியில் உள்ளவர்கள் எப்படி வாழ முடியும்? ஆகவே பூலோகத்தில் உள்ளவர்கள் செல்வம் (லஷ்மி) இல்லை என்பதினால் தவிக்கக் கூடாது. தன்னால் காணாமல் போய் விட்ட லஷ்மிதேவியைக் தேடிக் கண்டு பிடிக்கும் வரை பூமியில் உள்ளவர்கள் செல்வம் இல்லாமல் தவிக்கக் கூடாது என்பதை உணர்ந்த பகவான் விஷ்ணு லஷ்மிதேவியின் செல்வத்தைப் பாதுகாத்து வந்திருந்த பகவான் குபேரனிடம் சென்று தன் பெயரில் உத்திரவாதத்துடன் கடன் வாங்கிக் கொண்டு பூவுலகில் அதைக் கொடுக்கச் சென்றார்.

*(10) சிறு விளக்கம்:- இந்த ஆலயம் முதலில் தேவ லோகத்தில் அதே இடத்திற்கு மேல் பகுதியில் விச்வகர்மாவினால் பிரும்மாண்டமாகக் கட்டப்பட்டது என்றும், அதில் மேல்கூறிய அனைத்து வைபவமும் நடைபெற்றப் பின்னரே, அது அப்படியே கீழிறங்கி வந்து தொண்டைமான் கட்டிய ஆலயத்தின் பூமிப் பகுதிக்குள் மறைந்து கொண்டது என்பதினால்தான் இந்த ஆலயத்தில் உண்மையாகவே விஷ்ணு பகவான் பகவான் ஸ்ரீனிவாசராக குடி உள்ளார் என்பதும் ஒரு நம்பிக்கையாக உள்ளது.

.*(11) சிறு விளக்கம் :- திருப்பதி மலையைக் கட்டிய விவரம் சரிவரத் தெரியவில்லை அதை முதலில் கட்டியவர் சோழ மன்னனான தொண்டைமான் என்பது சரியான செய்தி அதற்குப் பிறகு பல மன்னர்களும் விஜயநகர மன்னர்கள் வரை அதை மேலும் கட்டி சிறப்பித்து உள்ளார்கள் திருப்பதி வெங்கடேஸ்வரர் ஏழு மலைகளுக்கு உள்ளே அமைந்துள்ளதினால் அவரை ஏழு மலையான் என்று அழைக்கிறார்கள். அவரை வேண்டித் துதிப்பவர்களுக்கு அனைத்து செல்வமும் கிடைக்கும் என்பதில் ஐயமே இல்லை.