சண்டி சப்த சதி -4

சாந்திப்பிரியா

மகரிஷி மேதஸ் தொடர்ந்து கூறலானார். ‘மன்னா, சப்த சாதியை பாராயணம் செய்யும் முன் ஓத வேண்டிய அடுத்த மந்திரம் கீலகா எனப்படுவது. அது என்ன?

கீலகா மந்திரம்:- சப்த சதியை பாராயணம் செய்வதற்கு முன்பு, கவச மற்றும் அர்கலா எனும் மந்திரங்களை ஓதிய பின்னர் அடுத்து கீலகா எனும் மந்திரத்தையும் உச்சரிக்க வேண்டும். கீலகா என்பது குத்தூசி அல்லது ஒரு பூட்டை போன்றது. கீலகா மந்திரத்தை பாராயணம் செய்யாமல் சண்டி சப்த சதியில் உள்ள மந்திரங்களை ஓதக் கூடாது. இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம், சப்த சதியை பாராயணம் செய்பவர்கள் தனது ஆற்றல்களை சிதற விடாமல் ஒரே இடத்தில் கட்டி வைத்து விடுவார்கள். இல்லை என்றால் வேண்டுபவர்களது பிரார்த்தனையை ஏற்று அவர் முன் வெளித் தெரியாமல் சில கணங்களுக்கு துர்கா தேவியானவள் வந்து நிற்கும்போது சிதறிக் கிடக்கும் தனது ஆற்றல் மிக்க சக்திகளை ஒருங்கிணைத்து தன்னிடம் உள்ள அனைத்தையும் அவள் காலடியில் சமர்பித்து அவளிடம் முழுமையாக சரண் அடைய முடியாது. வந்து நிற்பவள் தேவியே என்பதை சில சமிக்கைகள் மூலம் வேண்டுபவர் மனதில் பதிவிடுவாள். (இங்கு கூறப்படும் முழுமையாக சரண் அடைவது என்ற தத்துவம் வேண்டுபவர்களுடைய செல்வங்களை அவள் காலடியில் சமர்ப்பிப்பது என்பதல்ல அர்த்தம். அது குறிப்பிடுவது என்ன என்றால் மனதில் மிதந்து கொண்டிருக்கும் உணர்ச்சிகள், எண்ணங்கள் மற்றும் பிற உலக பந்தங்களை பற்றிய நினைவுகள் என அனைத்தையும் சண்டி சப்த சதி பாராயணத்தை பாராயணம் செய்து முடிக்கும்வரை தன்னுள் இருந்து அழித்து விட்டு தேவியிடம் சரண் அடையும் நிலை ஆகும்). சாதனா செய்பவர் அனுபவம் மிக்கவர் என்றால் தனது மனதை வெற்றிடமாக வைத்துக் கொண்டு கீலகா மந்திரத்தை முறைப்படி பாராயணம் செய்து அடுத்த பாதையை நோக்கி நகர்வார். இலக்கை அடைய அடுத்த பாதையின் பூட்டை திறக்க வேண்டும் என்பதற்கு கீலகா மந்திரம் முக்கியமானது. கதவில் உள்ள பூட்டைத் திறக்காமல் வீட்டில் எப்படி ஒருவர் நுழைய முடியாதோ அதை போலவேதான் கீலகா போன்ற பூர்வாங்க மந்திரங்களை ஓதாமல் துர்கா தேவி அமர்ந்திருக்கும் இடத்திற்கு சாதகர் நுழைய முடியாது. இதனால்தான் உனக்கு கூறுகின்றேன் மன்னா, சண்டி சப்த சதியை பாராயணம் செய்யும்போது பாராயண மந்திரங்களில் மட்டுமே முழுமையான கவனம் இருக்க வேண்டும்.

ராத்திரி ஸூக்த மந்திரம்:- வேதத்தில் காணப்படும் ஸூக்தம் என்பது பிரார்த்தனையை குறிக்கின்றது. அது தேவியின் மேன்மையை புகழ்ந்து கூறும் ஸ்லோகம் ஆகும். அவற்றை இயற்றியது மனிதர்கள் அல்ல என்பது நிச்சயம் என்றாலும் வேறு யார் அவற்றை இயற்றியது என்பது தெரியவில்லை என்றாலும், கண்களுக்கு புலப்படாத தேவதைகளே, முக்கியமாக வாக் தேவதைகளே அவற்றை இயற்றி உள்ளதாக நம்புகின்றார்கள். ரிக் வேதத்தில் துர்கா தேவியை புகழ்ந்து பாராயணிக்கப்படும் ராத்திரி ஸூக்தம் என்பது மிக முக்கியமான ஸ்லோகம் ஆகும். அந்த மந்திரத்தை உச்சாடனம் செய்யும் கட்டத்தில் சாதனாவிகளுடைய ஆத்ம பலம் மற்றும் மனோபலம் உயர்ந்த நிலைக்கு சென்று விடுகின்றது .

உலக இயக்கம் அனைத்தும் தற்காலிகமாக மறைந்து இருக்கும் காலமே இரவு என்பது. (இங்கு இரவு என்பதை அறியாமை என்பதாக பொருள் கொள்ள வேண்டும்). அதுவே ஜீவ ராத்திரி அல்லது ஈஸ்வர ராத்திரி எனப்படும். அதாவது உயிருள்ள ஜீவன்கள் அனைத்துமே சலனங்கள் இன்றி ஓய்வெடுக்கும் காலம் அந்த நேரம். இரவு நேரத்தில் பலவித மர்ம தெய்வீக லீலைகள் நடந்து கொண்டு இருக்கையில் இரவின் அதிபதியான தேவியோ விழித்த நிலையில் இருந்து கொண்டு பிரபஞ்சத்தை பார்த்துக் கொண்டே இருக்கின்றாள்.  இரவு என்பது அஞ்ஞானத்தைக் குறிக்கும். பகல் என்றால் ஞானத்தைக் குறிக்கும். ஸூக்தம் என்றால் பிரார்த்தனை அல்லது பாராயணம் என்று பொருள்படும். ஆகவேதான் சந்தியா காலத்தில் தன் அறியாமையை அழித்து ஞானத்தை தர வேண்டும் என தேவியிடம் பிரார்த்தனை செய்து கொண்டு எட்டு மந்திர ஸ்லோகங்களைக் கொண்ட ராத்திரி ஸூக்த மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். ராத்திரி ஸூக்தம் மிக சக்தி வாய்ந்த மந்திர உச்சாடனை ஆகும். அதை போலவேதான் பகலிலும் பகல் தேவியானவளும் சூரிய பகவானின் மகளுமான உஷா தேவியை வேண்டிக் கொண்டு தேவி ஸுக்தத்தை பாராயணம் செய்ய வேண்டும். உலகில் உள்ள ஒவ்வொரு இயக்கமும் தற்காலிகமாக ஒய்வு எடுத்தாலும் அந்த வேளையிலும் சக்தியின் இயக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அதனால்தான் சப்த சதியை படிப்பதற்கு முன்னால் ராத்திரி ஸூக்தத்தையும் சப்த சதியை பாராயணம் பின்னால் தேவி ஸூக்தத்தையும் படிக்க வேண்டும் என்பது நியதி. சப்த சதியை பாராயணம் செய்யும் காலத்தில் இந்த இரண்டு ஸூக்தங்களையும் பாராயணம் செய்யாவிடில் சப்த சதியை பாராயணம் செய்ததின் பலன் கிடைக்காது.

நவாக்ஷாரி மந்திரம்:- நவ என்றால் ஒன்பது என்று அர்த்தம். அந்த ஒன்பது அட்ஷரங்களை கொண்ட மந்திரத்தை பாராயணம் செய்து ஒன்பது ரூபங்களைக் காட்டும் துர்கா தேவியை வேண்டி துதிப்பதையே சண்டி காயத்திரி என்பார்கள். நம்முடைய மனதில் உள்ள மாயையை ஒழித்திட தினமும் இருபது முறை சண்டி காயத்திரியை படிக்க வேண்டும் என்பார்கள். இதை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும்போதுதான் ஒருவர் பிரும்மன் என்ற நிலையை அடைவார். அங்கிருந்தே மாயையை விலக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். அந்த நிலையே ஆனந்தம் என்பது. அந்த நிலைக்கு அதிபதியானவளே ஆனந்தி எனும் தேவி. அவளே மாயையை அழிக்கும் சாமுடா தேவி என்பவள். இந்த நவாக்ஷாரி மந்திரத்தின் தெய்வங்கள் யார் தெரியுமா? அவர்களே மகா காளி, மகா லஷ்மி, மற்றும் மகா சரஸ்வதி என்பவர்கள். சப்த சதியின் முக்கிய மந்திரமே நவாக்ஷாரி மந்திரம். நவாக்ஷாரி மந்திரத்தை பாராயணம் செய்யாமல் சப்த சதியை படித்தால் அதற்கு பூரண பலன் கிடைக்காது.

மகரிஷி மேதஸ் சப்த சதி பாராயண முறையை கூறிக் கொண்டு இருந்தபோது இடையே சிறிது நேரம் அவர் மெளனமாக இருக்க ​​சப்த சதி என்பதின் உள்ளடக்கங்கள் என்ன என்பதை சுருக்கமாகச் சொல்லுமாறு மன்னரும் வணிகரும் வேண்டிக் கொண்டார்கள். அதைக் கேட்ட மகரிஷியும் அவர்களுக்கு  சொல்லத் துவங்கினார். “சப்த சதி என்பது துர்கா தேவி எடுத்த மூன்று முக்கிய அவதாரங்களையும் அதில் அவள் நடத்திய திருவிளையாடளையும் பற்றிக் கூறுகின்றது. முதல் அவதாரக் கதையில் வேதங்களை திருடிக் கொண்டு ஓடிய மது மற்றும் கைதபா என்ற அசுரர்களை பிடிக்க பிரம்மா அவர்களை துரத்தியபோது அந்த அசுரர்கள் பிரும்மாவை அச்சுறுத்தியுள்ளார். விஷ்ணுவின் கண்களில் தங்கியிருந்த தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் யோகநித்ரா எனும் தேவியை வேண்டி பிரம்மா பிரார்த்தனை செய்தார். அவள் துர்கா தேவியின் அவதாரமான தேவி மகாமயா என்றும் அழைக்கப்பட்டாள். மஹாமாயா தேவியிடம் அந்த அசுரர்களைக் கொன்று வேதங்களை மீட்டெடுக்க வேண்டும் என்பதினால் ஆழ்ந்த யோக உறக்கத்தில் இருந்த விஷ்ணுவை எப்படியாவது எழுப்பும்படி பிரம்மா பகவான் கேட்டுக்கொண்டார். அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட தேவி மகாமாயா விஷ்ணுவை அவரது யோக நித்திரையில் இருந்து எழுப்பி, அந்த அசுரர்களை அவர்களுக்கு இருந்த விதிப்படி வஞ்சகத்தால் கொல்ல வைத்தார். அவர்கள் விஷ்ணுவால் கொல்லப்பட்டாலும்,  அவர்களை வஞ்சகத்தால் கொல்ல வைத்தவர் துர்கா தேவி அவதாரத்தில் இருந்த மஹாமாயிதான்.  தீய சக்திகளான அசுரர்களை பல்வேறு யுத்தங்களில் அழித்த துர்கா தேவி அதற்காக வஞ்சகத்தின் மூலம் அழிப்பது போன்ற பல்வேறு யுத்த முறைகளைப் பயன்படுத்தினார். எல்லோரிடமும், தெய்வங்களில் கூட மாயையை உருவாக்கும் சக்தி அவளுக்கு இருக்கிறது. அவள் மனதை கட்டுப்படுத்தும் சக்தியை பயன்படுத்தும் பொழுதெல்லாம் அவளை மகாமயா தேவி என்றே அழைத்தார்கள்.

இரண்டாவது தேவியின் மிகவும் பிரபலமான வடிவமான மஹிஷாசுரமர்தினியின் கதை ஆகும். பண்டைய காலத்தில் இந்திரன் தலைமையிலான தேவதைகள் மஹிஷாசூரன் எனும் அசுரனின் தலைமையிலான அரக்கர்கள் சேனைக்கு எதிராக போராடினார்கள். அதன் காரணம் அசுரன் மஹிஷா இந்திரனின் சக்திகளை தனது சக்திகளாக மாற்றிக் கொண்டான். பிரபஞ்சத்தின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றி தேவர்களையும் இந்திரனையும் கூட துரத்தி அடித்தான். ஆகவே தேவர்கள் அனைவரும் விஷ்ணு பகவான் மற்றும் சிவபெருமானிடம் சென்று பாதுகாப்பு கோரியபோது, அதைக் கேட்டு கோபம் கொண்ட அவர்களது சக்தியில் இருந்து கம்பீரமான சிங்கத்தின் மீது அமர்ந்து இருந்த கோலத்தில் மகிஷாசுரம்தினி என்ற பெண் வடிவத்தில் தேவி வெளிவந்து மஹிஷாவின் அசுரர் சேனையுடன் போரிட்டு அந்த அரக்கனின் தலையை துண்டித்து அழித்தாள்.

மூன்றாவது ஷும்பா மற்றும் நிஷும்பா என்று அழைக்கப்படும் அசுரர்களைக் கொன்ற கதை ஆகும். அவர்கள் இந்திரனையும் மற்ற தேவர்களையும் அவர்களது இருப்பிடங்களில் இருந்து துரத்தி அடித்து அவர்கள் இருப்பிடங்களை கைப்பற்றினார்கள். அதனால் அவதிப்பட்ட தேவர்கள் பார்வதி தேவியின் உதவியை நாடியபோது, அவள் உடலில் இருந்து ​​தேவி அம்பிகா என்று அழைக்கப்படும் அவதாரத்தை வெளிவரச் செய்து அந்த அசுரர்களை வஞ்சகத்தால் கொன்று தேவர்களைக் காப்பாற்றினார்”.

இப்படியாக மகரிஷி கூறிய பரமேஸ்வரி தேவியின் மகிமையைக் கேட்டு மனம் மகிழ்ந்து போன மன்னரும் வணிகரும் சண்டி சப்த சதியின் ஆராதனை நியமத்தை மேலும் தொடருமாறு வேண்டினார்கள்.

………..தொடரும்