அத்தியாயம் – 45

சித்தமுனிவர் தொடர்ந்து கூறலானார் ”கல்லீஸ்வரம் என்ற கிராமத்து மக்கள் குருவின் புகழைக் கேள்விப்பட்டு அவரை தங்களுடைய கிராமத்திற்கு அழைக்க  விரும்பினார்கள். கல்லீஸ்வாரத்தில்  கல்லீஸ்வரா என்ற புகழ் பெற்ற  சிவன் ஆலயம் இருந்தது. அந்த கிராமத்திலும்  நரஹரி என்ற பெயரைக் கொண்ட புகழ் பெற்ற புலவர் இருந்தார். அவர் தினமும் கல்லீஸ்வரரை  போற்றி ஐந்து வரிகளைக் கொண்ட புதிய பாடலை  இயற்றி வந்தார். அவர் அந்த ஆலயத்திலேயே பூஜைகளையும் செய்து கொண்டு இருந்தார்.
ஸ்வாமிகளை  தம் கிராமத்துக்கு அழைத்த மக்கள் அவர் வருகை தரும்போது அவரை வரவேற்கும் வகையில் ஒரு பாடலை இயற்றித் தருமாறு நரஹரியிடம் கேட்டார்கள். ஆனால் நரஹரியோ தான் சிவபெருமானைத் தவிர வேறு யார் மீதும் பாடலை இயற்ற மாட்டேன் என்றும், அதுவும் மானிடர்கள் மீது நிச்சயமாக பாடலை இயற்ற மாட்டேன் என்றும்  கூறி விட்டார். தன்னிடம் வந்து கேட்டவர்களிடம் இப்படியாகக்  கூறி விட்டு ஆலயத்தில் சென்று பூஜைகளை செய்யத் துவங்கியவர் தன்னை மறந்து  பூஜையை முடிக்கும் முன்னரே சன்னதியில் உட்கார்ந்து கொண்டு அப்படியே தூங்கி விட்டார்.
உறங்கிக் கொண்டு இருந்தவருக்கு ஒரு அற்புதமான கனவு வந்தது. அந்தக் கனவில் ஆலயத்தின் சிவலிங்கம் தோன்றியது. அதில் சிவபெருமான் தோற்றம் தர   நரஹரி அப்படியே அதன் முன் விழுந்து நமஸ்கரித்து விட்டு எழுந்திருக்க அந்த சிவலிங்கத்தின் மீது சிவபெருமான் காணப்படவில்லை. அதற்கு மாறாக ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் சிரித்த முகத்துடன் அந்த ஆலய சிவலிங்கத்தின் மீது  அமர்ந்தபடி காட்சி தந்தார். நரஹரி அப்படியே அதிர்ந்துபோய் அதை நோக்க, அடுத்தகணம்  அங்கு சிவலிங்கம் இல்லை. ஸ்வாமிகள் மட்டுமே காட்சி தந்தார்.  சிரித்தபடி அவர் நரஹரியிடம் கேட்டார் ‘நரஹரி,  மானிடனான என் மீது பாடலை புனைய நீ  மறுத்தாய். ஆனால் இங்கு என் கால்களில் நீ ஏன் விழுந்து வணங்குகிறாய்?’. அதைக் கேட்ட நரஹரி திடுக்கிட்டு உறக்கத்தில் இருந்து விழித்து எழுந்தார். தான் அதுவரைக் கண்டது அனைத்தும் கனவே என்பதை உணர்ந்தார்.

அவர் சிறந்த பாண்டித்தியம் பெற்றவர் என்பதினால் அப்படியே உட்கார்ந்து கொண்டு யோசனை செய்தார். இத்தனை வருடங்கள் இல்லாமல் இன்று பூஜையின் பாதியிலேயே தான் ஏன் சன்னதியில் தூங்க நேரிட்டது? அந்தக் கனவு ஏன் வரவேண்டும்? அதுவும் சன்னதியில் ஏன் அந்தக் கனவு வர வேண்டும்? அனைத்து உண்மைகளையும் தீர யோசனை செய்தபின் நிஜத்தை புரிந்து கொண்டார். ஆலயத்தில் இருந்து ஓடோடிச் சென்று ஸ்வாமிகளின் பாதங்களில் விழுந்து வணங்கினார். தான் அறியாமல் செய்துவிட்ட அவமதிப்பை  மன்னித்துவிடுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டார்.

அடுத்தகணம் ஸ்வாமிகள் மீது அங்கேயே பாடல்களைப்  பாடத் துவங்கினார். கல்லீஸ்வரருக்கு பதில் அந்த இடத்தில் ஸ்வாமிகளே காட்சி தந்ததின் மூலம் பரமேஸ்வரனே அந்த ஸ்வாமிகள் என்பதை புரிந்து கொண்டதாகவும், அதற்குப் பிறகே அவருடைய சக்தியையும், அவதாரத்தையும் புரிந்து கொள்ள முடிந்ததாகவும் கூறிய பின்னர்  தான் அறியாமல் செய்து விட்ட பிழையை மன்னித்து விடும்படி ஸ்வாமிகளிடம்  மீண்டும் மீண்டும் வேண்டினார். அதன் பின் அந்த பண்டிதரான நரஹரியும் ஸ்வாமிகளின் மடத்துக்குச் சென்று அவருடைய ஆஸ்ரமத்திலேயே தங்கி அவருக்கு சேவகம் புரிந்து வந்தார். ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளும் அவரை ஆசிர்வதித்து தனது சிஷ்யனாக எற்றுக்கொண்டார் (இத்துடன் அத்தியாயம்-45 முடிவடைந்தது).

……….தொடரும் .