சண்டி சப்த சதி -3
சாந்திப்பிரியா 

 

மகரிஷி மேதஸ் மேலும் கூறலானார் ”மன்னனே கேள். சப்த சதியை பாராயணம் செய்ய சில நியமங்களை மேற்கொள்ள வேண்டும். அதை பாராயணம் செய்யும்போது உரத்த குரலில்  பாராயணம் செய்யாமல், மெதுவாகவும், நமக்குள் மட்டும் கேட்கும் குரலிலும் மட்டுமே படிக்க வேண்டும். மந்திர உச்சாடனங்களை செய்கையில் அவற்றுக்கான விதி முறைகளை  கடை பிடிக்காமல், சப்தங்களை  முறைப்படி  உச்சாடனம் செய்யாமல்  படிப்பது  கெடுதலை தரும். ஏன் எனில் அதில்  உள்ள அத்தனை வார்த்தைகளும் மந்திர சக்திகளைக் கொண்டவை ஆகும்.

அதே சமயத்தில் வெவ்வேறு ஆன்மீக மற்றும் தனி மனித நோக்கங்களுக்காக  சாதனாத்விக்கள் (சாதனா செய்கிறவர்கள்)  சண்டி சப்த சதி பாராயணத்தை, முறையான உச்சாடனங்களுடனும்,  நியமங்களை அனுசரித்தும் சண்டி ஹோமம் எனும் பெயரில் செய்கின்றார்கள். அதை போலவே  பொதுமக்கள் சிலரும் சில வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ள  வீடுகளில் சண்டி ஹோமம்  செய்கின்றார்கள்.

பாராயணத்தைத் தொடங்குவதற்கு முன், நீங்கள் சில  சடங்குகளை செய்ய வேண்டும். சுத்தமான தரையிலோ அல்லது நன்கு சுத்தம் செய்யப்பட்ட இடத்திலோ உட்கார்ந்து கொண்டு  ஆசனம், பிராணயாமம்,  சங்கல்பம்  போன்ற அனுஷ்டானங்களை செய்த பின்னர் நவாக்ஷரி மந்திரத்தை உச்சாடனம் செய்ய வேண்டும். நவாக்ஷரி மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த துர்கா மந்திரமாகும். இந்த மந்திரத்தை ஓதினால் தாந்த்ரீக, கிரக மற்றும் பிற கோளங்களின் சக்திகளால் ஏற்படும் இடையூறுகள் நீங்கும். இந்த மந்திரத்தை  உச்சரிப்பதினால் மறைந்தும், வெளித்  தெரிந்தும் உள்ள தீய சக்திகள் அழியும்.  நவராத்திரி காலத்தில் இந்த மந்திரத்தை உச்சாடனை  செய்வது  சிறப்பானது ஆகும்.

அதே சமயம், தேவி மஹாத்மியத்தின்  ஸ்லோகங்களை  நேரடியாக ஒரு புத்தகம் படிப்பதை  போல (உச்சரிப்புககளுக்கு ஏற்ற  ஸ்வரங்கள், அல்லது சரியான உச்சரிப்பு இல்லாமல்) படித்தால், அது அவர்களுக்கு மன திருப்தியை அளிக்கலாம், ஆனால் விரும்பிய வேண்டுதல்கள் நிறைவேறாது. அதன் காரணம் ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள மந்திரங்கள் அந்தந்த   உச்சாடனங்களுக்கு ஏற்ற  அதிர் வலைகளை ஏற்படுத்தாமல் இருப்பதினால் அந்த உச்சாடனைகளுக்கு உள்ள தெய்வ சக்திகளை அழைக்க இயலாது.    மாயை என்பதில் இருந்து விடுதலை பெற வேண்டும் (ஞானம் பெற வேண்டும்)  என நினைப்பவர்கள்    ஒரு நல்ல குருவிடம் இருந்து தீட்சை பெற்று  பின்னர் அவர் கூறும் நியமங்களின்படியே சண்டி சப்த சதி பாராயணத்தை செய்ய வேண்டும்.

சிதம்பர ரஹஸ்யத்தில் பரமேசுவரர் பார்வதிக்குக் கூறினாராம் “தேவியே! சண்டி சப்த சதியின் மகிமையைக் கூறுகிறேன், கேள். அதைப் படிப்பவர் ஏழ்மை மற்றும்  மாயையில் இருந்து விடுதலை அடைவார்கள் (இங்கு ஏழ்மை என்பது செல்வத்தை  குறிப்பிடும் வார்த்தை அல்ல. ஞானம் என்பதையே குறிப்பிடுகின்றது). சின்மயமான திரிபுரா என்பவள் மூன்று வடிவைக்  கொண்டவள். அசுரர்களை அழித்து தேவர்களுக்கு அருள் புரியும் பொருட்டுப் பரதேவதை காளி உருவைக் கொண்டாள். அவளே காலாந்தரத்தில் லக்ஷ்மியாகவும் ஸரஸ்வதியாகவும்  தோன்றினாள்’  சண்டிகா என்பவள் துர்கா தேவியின் ஒரு வடிவம். அவள் மேலான மற்றும் புனிதமான தெய்வம் ஆவார்.  உலகம் முழுவதும் புத்துணர்ச்சியை தருபவள்.  அவளிடம் சரணடைபவர்களை முழுமையாக  பாதுகாக்கிறாள். அவளையே  மூன்று உலகங்களின் தாய் என்றும் கூறுவார்கள்” என்று கூறிய பின்னர்  துர்கை எனும் சக்தியின் மகிமைகளையும் அவளை வணங்குவதினால் கிடைக்கும் நன்மைகளையும்  விரிவாக  விளக்கினார். (இங்கே ஒரு முக்கியமான செய்தியை குறிப்பிட வேண்டும். சிவபெருமானும் பார்வதி தேவியும் பிரபஞ்சத்தின் அனைத்து  நடப்புகளையும் அறிந்தவர்கள், அவர்களே அனைத்தையும்  நடத்தி வைக்கும் தெய்வங்களே என்றாலும், இந்த பிரபஞ்சத்தையே படைத்த பரபிரும்மன்  ஏற்படுத்தி இருந்த  சில தெய்வீக   விதிப்படி நடைபெறும் சில தெய்வீக நாடகத்தில்  சில செயல்களை செய்ய வேண்டி உள்ளதினால், அந்த லீலை முடியும்வரை  குறுகிய காலத்திற்கு தங்கள் தெய்வீக சக்திகளை இழக்கிறார்கள்.  இங்கே சிவன்  தனது மனைவிக்கு சண்டி சப்த சதியின் மகிமையை கூறும்போது , தாம் இருவருமே தெய்வம் என்ற  உண்மையை இழந்து அவளுக்கு துர்கா தேவியின் பெருமையை பற்றி தன்னிலை மறந்து  கூறுகின்றார். -சாந்திப்ரியா).

அவர் கூறியதைக் கேட்ட பரமேஸ்வரி அழகாகவும் கேலியாகவும் சிரித்தாள். அதைக் கண்ட சிவபெருமான் துணுக்குற்று அவளிடம் கேட்டார் “பத்தினியே, நீ ஏன் நான் கூறியதைக் கேட்டு கேலியாக சிரித்தாய்?” பரமேஸ்வரி கூறினாள் “நாதா,  துர்கை என்பவள்  என்னுள்  இருந்து உருவானவள்! அவளது  பெருமையை எடுத்துரைக்கும் சப்த சதியின் மேன்மையை குறித்து, அவற்றை நடத்திய என்னிடமே , நானே எடுத்த  அவதாரத்தை எனக்கே ஒரு புதிர் போலக் கூறினால் அதைக் கேட்டு சிரிக்க மாட்டேனா என்ன?” என்றாள்.  அதைக் கேட்டு தன் நிலைக்கு வந்த அடைந்த பரமேஸ்வரரும் தன்னை மறந்து அவளுடன் சேர்ந்து சிரித்தார். அவர்கள் சிரித்த சிரிப்பினால் உலகமே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. அவர்கள் ஆனந்தமயமாக சிரித்த அந்த ஷணத்திலே உலகில் எங்குமே  துன்பம் மற்றும் துயரங்கள் என்ற உணர்வுகளே இல்லாமல் மறைந்து போக அனைவரும் தெய்வங்களுடன் இன்பமயத்தில் மூழ்கி  இருந்தார்கள் எனும் நிலைமை ஏற்பட்டதின் காரணம் துர்கா சப்த சதி அல்லவா?

ஆகவேதான் கூறுகிறேன் மன்னா, நீயும் மேலான தேவியான அந்த துர்கா தேவி எனும் பரமேஸ்வரியை முழுமையாக சரணடைவாய். அவளை தொடர்ந்து பக்தியோடு  ஆராதித்தால் தக்க நேரத்தில் அவளே நீ இழந்த அனைத்தையும் உனக்கு மீட்டுத்  தருவதும் அல்லாமல்,  இகலோக இன்பங்களையும் ஸ்வர்க்கத்தையும் மோக்ஷத்தையும் உனக்கு அளிப்பாள்”. இப்படியாகக் கூறியவர் சப்த சதியை பாராயணம் செய்ய தேவையான  நியமங்களை ஒவ்வொன்றாக  கூறலானார். அதற்கு முன்னர் துர்கா சப்த சதியை பாராயணம் செய்யத் தேவையான  கீழ் தந்துள்ள  குரு மந்திரத்தை உபதேசித்து, தீக்ஷையையும் தந்தார்.

கவசம் :-சப்த சதியின் 700 வசனங்களில் உள்ள மந்திரங்களை உச்சரிக்கும்போது அது சக்தியை மூர்க்கமாக எழும்பி சாதனாவை செய்பவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம். ஏனெனில் அவர்கள் மாத்ரு தேவதைகளுடன் தொடர்பு கொண்டுதான் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டியிருக்கும், அவர்களில் சிலர் தேவியின் யுத்த கணங்களாக இருந்தாலும் சில காரணங்களுக்காக சாதனாவை உடைக்க முயற்சிக்கலாம் ஆகவே பத்து திக்குக்களின் சக்திகளான சப்த மாத்ருகைகள் , பல இடங்களிலும் பல கோலத்துடன் காட்சி தரும் சக்திகள் என அனைவரையும் அழைத்து வணங்கி, பாராயணம் செய்பவர் தனது உடலின் புற மற்றும் அக உறுப்புக்கள், சுவாசிக்கும் பிராண்ணன், மனைவி, உடன் பிறந்த மக்கள், புத்திர புத்திரிகள், செல்வம் என அனைத்தையும் காக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு மேலே செல்ல வேண்டும். ஆகவே சப்த சதியை பாராயணம் செய்யும் முன் மற்ற இடைஞ்சல்களில் இருந்து நம்மைக் காத்தருள ஓத வேண்டிய மந்திரத்தையே கவச மந்திரம்” என்று கூறிய மகரிஷி கவச மந்திரத்தையும் அவர்களுக்குக் போதனை செய்து தீக்ஷை தந்தார்.

அர்கலா: – மகரிஷி மேதஸ் அடுத்த மந்திரத்தை உபதேசிக்கத் துவங்கினார். சக்தியின் தலையீட்டைக் கோரும் அடுத்த பிரார்த்தனை அர்கலா என்பதாகும். இது ஒரு போல்ட் போல செயல்பட்டு கேடயத்தை (கவச மந்திரம்) சாதனாவை செய்பவருடன் உறுதியாக இணைத்து வைக்கின்றது. சக்தியின் தலையீட்டைக் கோரும் அடுத்த பிரார்த்தனையான அர்கலா எதையும், எல்லாவற்றையும் வெட்டுகின்ற ஒரு வாளைப் போன்றது . இது இலக்கை நோக்கிய பாதையில் வெற்றிகரமாக பயணிக்கும் சாதனாவை செய்பவற்கு ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் பிற இடையூறுகளை அழிக்க உதவுகிறது. அதனால்தான், கவச்சா, அர்கலா, கீலகா மற்றும் நவாக்ஷரி மந்திரங்களை உச்சரிக்காமல், தேவி மஹாத்மியத்தை பாராயணம் செய்யக் கூடாது . தேவியின் அருளை வேண்டி இந்த ஸ்லோகங்களை பாராயணம் செய்யாமல் சண்டி சப்த சத்தியில் உள்ள ஸ்லோகங்களை பாராயணம் செய்தால் தங்கள் இலக்கை அடையவோ அல்லது எந்த நன்மையையும் பெறவோ முடியாது.

………..தொடரும்