

அத்தியாயம் -29
சித்த முனிவர் தொடர்ந்து கூறினார் ”இப்படியாக ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் பல மகிமைகளை நிகழ்த்தி வந்தபோது ஒருநாள் அவரை சுற்றி நின்றிருந்தவர்கள் அவரிடம் கேட்டார்கள். ‘ஸ்வாமி நீங்கள் வீபுதியைக் கொண்டு ஒரு சண்டாளனுக்கு பழைய ஜென்ம நினைவைக் கொண்டு வந்து வேத சாஸ்திரங்களில் அவனுக்கு இருந்த சாதூர்யத்தை வெளிப்படுத்தினீர்கள். அது போலவே அதே வீபுதியைக் கொண்டு அவன் நினைவை முற்றிலுமாக அழிக்கவும் செய்தீர்கள். அது எங்களுக்கு பெரும் வியப்பைக் கொடுக்கிறது. ஆகவே எங்களுக்கு வீபுதியின் மகிமைக் குறித்துக் கூறுவீர்களா?’ என்று கேட்டதும் குருதேவர் அதன் மகிமையை எடுத்துரைக்கும் ஒரு கதையைக் கூறத் துவங்கினார்.
‘கிரேதா யுகத்தின் ஒரு காலத்தில் வாமதேவர் என்ற முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மகா யோகி ஆவார். பெரும் பண்டிதர். தினமும் அவர் தனது உடல் முழுவதும் வீபுதி எனப்படும் பஸ்மத்தை பூசிக் கொண்டு இருப்பார். அங்கும் இங்கும் சுற்றி அலைந்து கொண்டு இருந்தவர் ஒருநாள் வனத்தின் வழியே சென்று கொண்டு இருந்தபோது ஒரு பிரும்ம ராக்ஷசன் அவரை தின்பதற்காக அவரைப் பிடித்துக் கொண்டான். அவர் தப்பி விடாமல் இருக்க அவரை நன்றாக கட்டிக் கொண்டு நின்ற போது அவர் உடலில் போட்டு இருந்த வீபுதி அந்த பிரும்ம ராக்ஷசன் உடலிலும் ஒட்டிக் கொள்ள அவன் அப்படியே மனித உருவை எடுத்து அவர் முன் நின்றான். அவருடைய கால்களில் விழுந்து வணங்கி தான் செய்த செயலுக்கு மன்னிப்பைக் கோரினான். அவனை ஆச்சர்யத்துடன் பார்த்த வாமதேவர் அவன் யார் என்றும் அதனுடைய பூர்வக் கதை என்ன என்றும் கேட்டார்.
அதற்கு பதிலளித்த அந்த மனிதன் அவரது கருணையினால்தான் தான் சாப விமோசனம் அடைந்து மனித உருவைப் பெற்றதாக கூறி விட்டு, தனக்கு 25 வருடங்களின் பூர்வ ஜென்மக் கதை நினைவுக்கு வருகிறது என்றும், தான் முன்னர் ஒரு பிறவியில் துர்ஜயா எனும் பெயரில் கொடுமைக்கார மன்னனாக இருந்தவர் எனவும், மிகக் கேவலமான வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு இருந்தவர் நன்கு குடித்து விட்டு ஒன்றும் அறியாதப் இளம் பெண்களைக் கடத்திச் சென்று பலவந்தமாக அவர்களை தமது ஆசைநாயகிகளாக வைத்துக் கொண்டதாகவும் இப்படியாக பல கொடுமைகளைப் புரிந்து கொண்டு இருந்தபோது ஒருநாள் இறந்தப் பின் நரகத்திற்கு செல்ல வேண்டி இருந்தது என்றும், அதன் பின் நூறு வருட காலத்துக்கு நரியாக, பேயாக, மிருகங்களாக பிறப்பு எடுத்து கேவலமான வாழ்வை மேற்கொண்டு கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளானதாகவும் கூறினான். அதன் பின் பல பிறவிகள் எடுத்தப் பின் முடிவாக பிரும்ம இராட்சசனாக 25 வருடங்கள் வாழ்ந்து வந்து கொண்டு இருந்த தற்போது வாமதேவரின் அருளினால் சாப விமோசனம் கிடைத்ததாகக் கூறி அவருக்கு நன்றி செலுத்தினான். ஆனால் தனக்கு எப்படி திடீர் என சாப விமோசனம் கிடைத்தது என்பது தெரியவில்லை என்றும் அதைக் கூறுமாறும் அவருடைய கால்களில் விழுந்து கேட்டான்.
தான் எப்படி பாப விமோசனம் பெற்றேன் என்று அவரைக் கேட்டதும் அவர் கூறினார் ‘ராக்ஷசனே, நீ என்னைப் பிடிக்க முயன்றபோது நான் தப்பாமல் இருக்க நீ என்னை கட்டிப் பிடித்தாய். அப்படி என்னை கட்டிப் பிடித்தபோது என் உடம்பில் இருந்த வீபுதி உன் உடலில் ஒட்டிக் கொண்டது. அதுதான் உனக்கு விவேகத்தைக் கொடுத்தது. பஸ்மத்தின் மகிமையைக் கூற இயலாது. அதனால்தான் சிவபெருமான் கூட தன் உடல் முழுவதும் வீபுதியை பூசிக் கொண்டு இருக்கிறார்’. என்றதும் வீபுதியை பூசிக்கொண்டு உள்ள சிவபெருமானின் மகிமைக் கதையைக் கூறுமாறு வேண்டிக் கொள்ள வாமதேவர் அவனுக்கு அந்தக் கதையைக் எடுத்துரைத்தார்.
‘முன் ஒரு காலத்தில் தென் பகுதியில் ஒரு பிராமணன் வாழ்ந்து வந்தான். அவன் பிராமணர்கள் அனுஷ்டிக்க வேண்டிய நியமங்களை கடை பிடிக்காமல் இருந்து வந்தான். அதோடு கேவலமான வாழ்க்கையையும் வாழ்ந்து கொண்டு இருந்தான். ஆகவே அவன் மீது பொறாமைக் கொண்டவர்கள் அவனைக் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் தூக்கிப் போட்டு விட்டார்கள். அவன் உடலை தெரு நாய் ஒன்று வந்து கடித்துக் குதறத் துவங்கியது. அந்த நாய் ஸ்மசானங்களிலும் சென்று அங்குள்ள பிணங்களை தின்னும் பழக்கம் கொண்டது. அன்று அதற்கு ஸ்மசானத்தில் ஒன்றும் கிடைக்கவில்லை என்பதினால் ஸ்மசானத்தில் உருண்டு பிறந்தப் பின் அங்கு வந்திருந்தது என்பதினால் அதன் உடல் முழுவதும் சுடுகாட்டின் பஸ்மம் ஒட்டிக் கொண்டு இருந்தது. ஆகவே அந்த நாய் கொலையுண்டுக் கிடந்தவனைக் குதறியபோது அவன் உடம்பின் மீதும் அந்த பஸ்மம் விழுந்தது.
அதே நேரத்தில் யம தூதர்கள் இறந்து கிடந்தவனை யமலோகத்திற்கு கொண்டு செல்ல வந்தனர். அதே நேரத்தில் இன்னொரு பக்கத்தில் இருந்து சிவ தூதர்களும் வந்து அந்த மனிதனை கைலாயத்துக்கு கொண்டு செல்ல அங்கு வந்தனர். இறந்து போனவனின் உயிரை எடுத்துச் செல்வதில் இரு கணங்களுக்கும் இடையே சண்டை மூண்டது. யமதூதர்கள் யம லோகம் சென்று யமதர்மராஜனிடம் அது பற்றிக் கூறினர். அதனால் யமதர்மனே நேரடியாக அங்கு சென்று ஒழுக்கம் கெட்டவனை சிவகணங்கள் எப்படி சிவலோகத்துக்கு அழைத்துச் செல்லலாம் என சிவகணங்களை கேட்க அவர்கள் எங்களுக்கு சிவபெருமான் கொடுத்துள்ள உத்தரவின்படி இறந்து போனவர்களில் எவன் உடலில் பஸ்மம் உள்ளதோ, எவன் உடலில் ருத்திராட்ச மாலை சூட்டப்பட்டு உள்ளதோ அவர்களது ஆத்மாக்களை சிவலோகத்திற்கு நாங்கள் அழைத்துப் போக வேண்டும். ஆகவே இவனை சிவலோகத்துக்கே அழைத்துச் செல்கிறோம் என்றார்கள். அப்படி கூறிய பின் யமடெவரால் அவர்களை தடுக்க முடியவில்லை என்பதினால் இறந்து கிடந்தவனின் ஆத்மாவை அவர்கள் சிவலோகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அது முதல் இறந்து போனவர்கள் உடலில் பஸ்மம் பூசுவதோ, ருத்திராட்ச மாலைகளை அணிவிப்பதோ கூடாது என்ற நியமம் ஏற்பட்டது’.
வாமதேவர் கூறியக் கதையைக் கேட்ட ராக்ஷசனும் அவரிடம் கேட்டது ‘ஸ்வாமி, பஸ்மம் என்பது என்ன? அதன் மகிமை என்ன ?’. அதற்கு வாமதேவர் கூறினார் ‘பஸ்மம் என்பது நான்கு எரிக்கப்பட்ட புனித பொருள் ஆகும். அதில் பசுவின் சாணம், ஹோமங்களில் எரிக்கப்படும் பொருட்கள், யக்யங்களில் எரிக்கப்படும் பொருட்கள் மற்றும் இறந்து போனவர்களது உடல் கூட அடக்கமாகும். மந்தார மலை மீது ஒருமுறை தேவ கணங்கள் கூடி இருந்தார்கள். அந்த கூட்டத்தில் பார்வதியும் சிவபெருமானும் பங்கேற்றனர். அதில் சிவபெருமானின் சேவகர்கள், எட்டு கோடி தேவதைகள், அஷ்ட திக்குப் பாலகர்கள், 12 ஆதித்தியர்கள், எட்டு வசுக்கள் என அனைவரும் அமர்ந்து இருந்தார்கள்.
ஏழு பிரபைகள் என்ற பொருட்களான தங்கம், இரத்தினம், நீலமணி, புஷ்பராகம், முத்து, வைடூரியம், பச்சை கற்கள் போன்றவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டு இருந்த ஆசனத்தில் பத்து கரங்களுடன் சிவபெருமான் அமர்ந்து இருக்க, அவருடைய உடல் முழுவதும் பஸ்மம் தீட்டப்பட்டு இருக்க, மிருகத்தின் தோலினால் ஆன ஆடை, கழுத்தைச் சுற்றி மா]லப் போல பாம்பு, கங்கையும் பாதி நிலவும் கொண்டையில் இருக்க, வேல், உடுக்கை, கத்தி, பசுபாசாஸ்த்திர, அம்புக்கள், அங்குசம் போன்ற ஆயுதங்களும் மற்ற கைகளில் இருந்தன.
அப்போது அங்கு வந்த சனத் குமரர்கள் சிவனிடம், ‘மஹாதேவப் பெருமானே, உத்தமமான மனித குல மேம்பாட்டிற்கு தர்ம, அர்த்த, காம, மோட்ச என்ற நான்கு நிலைகளைத் தந்துள்ளீர்கள். அவற்றை எளிதில் பயில முடியாது என்பதினால் உங்கள் அருளைப் பெற்றுக் கொண்டு அவற்றை எளிதில் பயின்று எப்படி சமஸ்காரம் என்ற பந்தத்தில் இருந்து வெளி வர முடியும் என்பதை எங்களுக்கு விளக்குவீர்களா?’ என்று ஆர்வத்துடன் கேட்டார்கள்.
அதற்க்கு சிவபெருமான் கூறினார் ‘நான் மூன்று வரிகளைக் கொண்ட பஸ்மத்தை நெற்றியிலும், உடம்பெங்கும் பூசி உள்ளதைக் கவனித்தீர்களா? அப்படி நீங்கள் அனைவருமே அதை பூசிக் கொண்டு இருந்தால் உங்களது பாவங்கள் அழிந்து போகும். பசுவைத் திருடியவன் , தங்கத்தை திருடியவன், பொய் கூறி வஞ்சித்தவன், மற்றவர்களின் மனைவியை அபகரித்தவன் என குற்றம் புரிந்தவர்களது பாவங்கள் கூட இந்த வீபுதி எனும் பஸ்மத்தை பூசிக்கொள்ளும்போது அழிந்து விடும். அதை அணிபவர்களுக்கு முக்தி கிடைக்கும்’.
இப்படியாக பஸ்மத்தின் மகிமையை அந்த பிரும்ம ரக்ஷசனுக்கு கூறிய வாமதேவர் அந்த பிரும்ம ராக்ஷசன் மீது சிறிதளவு வீபுதியை தூவ அந்த பிரும்ம ராக்ஷசனும் தன்னுடைய பழைய உருவைப் பெற்று அவருடைய கால்களில் விழுந்து வணங்கினான். அவனுடைய பாபங்கள் அன்றோடு அழிந்தன. வாமதேவர் சிவபெருமானின் அவதாரமாகப் பிறந்தவர். குருவை மிஞ்சிய கடவுள் இல்லை என்பதினால் பிரும்ம ராக்ஷசனும் மோட்ஷத்தை அடைந்தான்’ என்று ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் திருவிக்ரமபாரதி மற்றும் பிற சிஷ்யர்களுக்கு கூறினார்” (இப்படியாக அத்தியாயம்- 29 முடிவடைந்தது).