சாந்திப்பிரியா

சமீபத்தில்தான் காஞ்சீபுரத்தில் இருந்து கலவை செல்லும் சாலையில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீ சஞ்சீவி ராயர் குளம் என்ற கிராமத்தில் உள்ள ஹனுமார் ஆலயம் பற்றிய செய்தி ஒருவர் மூலம் கிடைத்தது. இந்த ஆலயம் மிகப் பழமையானது என்றும், ஹனுமார் சஞ்சீவ மலையை தூக்கிக் கொண்டு சென்றபோது இங்கு வந்து இளைப்பாறியதாகவும், அப்போது அந்த மலையில் இருந்து ஒரு சிறு பகுதி இங்கு விழுந்ததாகவும் ஒரு கிராமியக் கதை உள்ளது. அதனால்தான் இந்த ஆலயத்தின் பெயரும் சஞ்சீவராயர் ஆலயம் என அமைந்ததாம். இந்த கிராமத்தை அய்யங்கார் குளம் என்றும் கூறுகிறார்கள். அதற்குக் காரணம் இந்த ஆலயத்தைக் கட்டியது ஸ்ரீ தாத்தாச்சாரியார் என்பவராம்.
ஸ்ரீ தாத்தாச்சாரியார் என்பவர் 1586-1614 A.D காலங்களில் ஆந்திராவை ஆண்டு வந்த விஜயநகர மன்னரான வேங்கட ராயர் என்பவரிடம் தலைமைப் பொறுப்பாளராக பணி புரிந்து வந்ததாகவும், காஞ்சீபுர மாவட்டத்தில் இருந்த காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் ஆலயம் , நிலபுலன்களையும் பிற இடங்களையும் அவர் அந்த மன்னர் சார்ப்பில் நிர்வாகித்து வந்ததாகவும் கூறுகிறார்கள். அந்த நேரத்தில்தான் ஒருநாள் அவர் வெளியூருக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பும் வழியில் இருந்த இந்த ஆலயம் உள்ள இடத்தை வந்தடைந்த போது அவரை வழிப்பறிக் கொள்ளையர்கள் வழி மறித்தார்களாம். உடனே அவர் ஹனுமார் மீதான தோத்திரங்களை கூறத் துவங்க அவரை வழிமறித்த கொள்ளையர்கள் அப்படியே ஓடி விட்டார்களாம் . அதனால் அவர் இந்த ஆலயமுள்ள இடத்தில் ஹனுமாருக்கு ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்து மன்னரிடம் அது பற்றிக் கேட்ட போது அவர் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை, மாறாக அவரும் இந்த ஆலயம் அமைக்க உதவி செய்தார் என்கிறார்கள்.

முன்னரே நான் கிருஷ்ணகிரி மற்றும் பெங்களுர் பனேர்கெட்டா ஹனுமார் ஆலயங்களைப் பற்றி இங்கு எழுதி உள்ள கட்டுரைகளில் குறிப்பிட்டு உள்ளது போல விஜயநகர மன்னர்கள் ஆட்சியில் தென் இந்தியப் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஹனுமார் ஆலயங்கள் மற்றும் ஹனுமார் வழிபாட்டு தலங்கள் பிரசித்தி பெற்று இருந்துள்ளது என்பது இதன் மூலம் விளங்குகின்றது. ஸ்ரீ தாத்தாச்சாரியார் பற்றி கூறப்படும் இன்னொரு செய்தி என்ன என்றால், அவர் முழுமையான லஷ்மி கடாட்ஷம் பெற்றவர் என்றும், பல்லாயிரக்கணக்கான திருமணங்களை நடத்தி வைத்து உள்ளவர் என்றும் கூறுகிறார்கள். அதாவது அவர் வம்சாவளியாக மிகப் பெரிய வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை எடுத்துக் காட்டவே இதைக் கூறுகிறார்கள் எனத் தெரிகின்றது.
இந்த ஹனுமான் ஆலயம் மிகப் பெரிய முக மண்டபத்தைக் கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது. அந்தப் பிராகாரத்தைத் தாண்டிச் சென்றால் உள்ள ஒரே ஒரு சன்னதியில் ஹனுமார் காணப்படுகிறார். ஆலயத்தைத் தொடும் வகையில் சுமார் 133 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய ஏறி ஒன்றையும் அவர் இந்த ஆலயம் மற்றும், பாசன வசதிக்காக ஆலயத்தின் முன்னால் நிர்மாணித்தாராம். இந்த ஆலயம் கட்டப்பட்டபோது ஹனுமாரே நேரில் வந்து ஆலயப் பணிகள் நல்ல முறையில் நடைபெற வழி வகுத்தார் என்றும் ஆலயக் கதை ஒன்று உள்ளது.

ஆலயத்தில் உள்ள ஹனுமார் சிலை ஸ்வயம்புவாக வந்தது என்கிறார்கள். ஸ்ரீ தாத்தாச்சாரியார் மகாலஷ்மியை ஆராதனை செய்தவர் என்பதினால் ஆலயத்தில் ஒரு மகாலஷ்மியின் சிலையும் உள்ளது. இந்த இரண்டையும் தவிர ஆலயத்தில் வேறு எந்த கடவுள் சிலையும் காணப்படவில்லை. சஞ்சீவி மலைத் துண்டு விழுந்ததாகக் கூறப்படும் இடத்தில் பூமிக்குக் கீழே பதினாறு கால் மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ள தாழ்வாரத்தில் காணப்படும் நடைவாளி கிணற்றில் எந்த காலத்திலுமே தண்ணீர் வற்றியது இல்லையாம். சித்ரா பவுர்ணமி தினத்தன்று காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் இருந்து உற்சவ மூர்த்தி இங்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பூமிக்கு அடியில் உள்ள மண்டபத்து கிணற்று நீரில் -திருநீராஞ்சனம் செய்தப் பின்- ஆலயத்துக்கு திரும்பி எடுத்துச் செல்லப்படுமாம்.
இந்த ஆலயத்துக்கு சென்று வணங்குவத்தின் மூலம் மன அமைதி கிடைக்கும், அலைபாயும் மனதின் துன்பங்கள் விலகும் என்றும் நம்பிக்கை உள்ளது.