இரண்டு திவ்ய தேச ஆலயங்கள் -காஞ்சீபுரம்
பச்சை வண்ண மற்றும் 

பவள வண்ணப் பெருமாள் ஆலயங்கள்

சாந்திப்பிரியா

காஞ்சிபுரத்தில் இரண்டு வைஷ்ணவ ஆலயங்கள் எதிரும் புதிருமாக உள்ளன. பச்சை வர்ண பெருமாள் ஆலயம் மற்றும் பவள வர்ணப் பெருமாள் ஆலயம் எனும் அவை இரண்டையும் சேர்த்தே 108 திவ்ய தேசங்களில் ஒரே திவ்ய தேசம் என வைஷ்ணவர்கள் போற்றி வணங்குகிறார்கள். இரண்டு ஆலயத்திலுமே விஷ்ணு பகவானே மூல தெய்வமாக உள்ளார். இந்த இரண்டு ஆலயங்களையும் ஒரே நாளில் சென்று தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம் .
ஒருமுறை பிருகு முனிவர் தனக்கு மகளாக லஷ்மி தேவி பிறக்க வேண்டும் என்ற ஆசைக் கொண்டதினால் காஞ்சீபுரத்தில் உள்ள இந்த ஆலயப் பகுதியில் வந்து அங்கு தனது வேண்டுகோள் நிறைவேற யாகம் ஒன்றை செய்தாராம். அவருடைய யாகத்தை மெச்சிய லஷ்மி தேவியும் அவருக்கு மரகதவல்லி எனும் பெயர் கொண்ட மகளாக அந்த ஊரிலேயே பிறந்தாள். அதன் பின் பல காலம் பொறுத்து பிருகு முனிவர் மீண்டும் விஷ்ணுவை தனது மகளாகப் பிறந்துள்ள லஷ்மி தேவியை இந்த ஆலயம் உள்ள இடத்திலேயே வந்து மணக்க வேண்டும் என வேண்டி துதிக்க விஷ்ணுவும் இங்கு வந்து லஷ்மி தேவியை மீண்டும் மணந்து கொண்டதாக ஐதீகம் உள்ளது. மரகதம் என்றால் நல்ல பச்சை என்பதினால் மரகதவல்லியை மணந்து கொண்ட விஷ்ணு பகவான் இங்கு பச்சை வர்ண நிறத்தில் பச்சைவண்ண நாதர் என்றப பெயரில் நின்ற நிலையில் காட்சி தருகிறார். ஆலயத்தில் உள்ள தாயாரின் பெயரும் மரகதவல்லி என்பதே. இந்த ஆலயம் 500 அல்லது 600 வருடங்களுக்கு முந்தையது என்றும், இல்லை அது 1000 வருடத்துக்கு முற்பட்ட ஆலயம் என்றும் கூறுகிறார்கள். நான்கு கைகளுடன் காட்சி தரும் விஷ்ணு பகவான் ஒரு கையில் சங்கு, இன்னொரு கையில் சக்கரம் போன்ற இரண்டையும் ஏந்தி மற்ற இரண்டு கைகளில் ஒரு கையால் அனைத்து உயிர்களையும் காக்கும் முத்திரையையும், நான்காவது கை மூலம் பக்தர்களுக்கு அருள் புரிவதை காட்டும் முத்திரையும் கொண்டு நின்று கொண்டு உள்ளார்.
இந்த பச்சைவண்ண பெருமாள் ஆலயத்தின் எதிரில் அமைந்து உள்ள பவளவண்ண பெருமாள் ஆலயத்தில் ஆதிசேஷன் மீது படுத்துக் கொண்டு சிவப்பு நிறத்தில் விஷ்ணு பகவான் காட்சி தருகிறார். ஒருமுறை தேவலோகத்தில் பிரும்மாவை தொந்தரவு செய்து கொண்டு இருந்த அசுரர்களை அழித்து அந்த யுத்தத்தில் தன்மீது தெறித்து விழுந்த ரத்தங்களுடன் இங்கு வந்து அமர்ந்தார் என்றும் அதனால்தான் பகவான் இங்கு அதே சிவப்பு நிறத்தில் காட்சி தருகிறார் என்றும் கூறுகிறார்கள். இந்த ஆலய சன்னதியின் விசேஷம் என்ன என்றால் ஆலய மேல்கூரையில் எட்டு திசை அதிபர்களும் நிற்பதாகவும் அதனால் எண் திசை அதிபர்களும் வணங்கும் லஷ்மி தேவியை இங்கு வந்து வணங்கினால் செல்வம் பெருகும் என்றும் நம்புகிறார்கள். இந்த ஆலயம் 500 அல்லது 600 வருடங்களுக்கு முந்தையது என்று கூறுகிறார்கள்.
பச்சைவண்ண பெருமாள் ஆலயத்தில் உள்ள பெருமாள் அங்கு திருமணம் செய்து கொண்டுள்ளதால், திருமணத் தடை உள்ளவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து திருமணத் தடை விலக முழு தேங்காயை வாங்கி வந்து இந்த ஆலயத்தில் அதை உரிக்காமலேயே பூஜைகளை செய்துவிட்டு அதையே வீட்டிற்குக் கொண்டு சென்று பூஜை அறையில் வைத்து பூஜித்து வணங்கி வந்தால் வ்விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள்.
அதுபோலவே பவள வண்ண பெருமாள் ஆலயத்தில் சென்று எட்டு திசை அதிபர்களும் குடி கொண்டு உள்ளதாக கூறப்படும் அந்த சன்னதியின் கீழ் நின்று வணங்கித் துதித்தால் கிரக தோஷங்கள் நமது வீடுகளில் இருந்தால் அவை விலகும் என்றும், செல்வம் பெருகும் என்றும் நம்பிக்கை உள்ளது.
இந்த இரண்டு ஆலயங்களும் காஞ்சீபுரம் ரயில் மற்றும் பஸ் நிலையத்தின் அருகிலேயே உள்ளன.