– I –
மேலே கூறப்பட்டு உள்ள வீரபத்திரர் தியான ஸ்லோகத்தின் அர்த்தம் என்ன என்றால் ”மரகத மணி போன்ற ஒளியுடையவர், கிண்கிணி அணிந்த காதினர் , சூரியன், சந்திரன், நெருப்பு இவை மூன்றையும் முக்கண்களாய் கொண்டவர், சூலம், தண்டம் ஆகியவற்றை ஏந்தியவரான அழகிய வீரபத்திரரை வணங்குவோம்” என்பது.
மயிலாடுதுறை – தரங்கம்பாடி பாதையில் சென்று செம்பொன்னார் கோயில் எனும் சிற்றூரை அடைந்தால் அங்கிருந்து சிறு பாதை ஒன்று பரசலூர் என்ற கிராமத்தை நோக்கிச் செல்வதைக் காணலாம். அங்கு சென்றால் திருப்பறியலூர் என்ற சிற்றூர் வரும். அதை கீழ்பரசலூர் என்றும் கூறுகிறார்கள். அங்குள்ளது வீரட்டேஸ்வரர் கோவில் எனும் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும். அதுவே வீரபத்திரருக்கு அமைந்துள்ள தனிக் கோவில் என்கிறார்கள். அனைத்து ஆலயங்களிலும் வீரபத்திரருக்கு தனி சன்னதி இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் இங்கு மட்டுமே இவ்வளவு பெரிய அளவில் தனி ஆலயம் உள்ளதாகக் கூறுகிறார்கள். ஆலயம் சுமார் 2000 வருடங்களுக்கு முந்தைய கால ஆலயம் ஆகும் . இந்த ஆலயத்தின் வரலாறு தட்ஷனுடன் சம்மந்தப்பட்டது.
சிவபெருமான் தீமைகளை அழிக்க எடுத்த மிக அபூர்வமான தோற்றங்களைக் காட்டும் ஆலயமும் அவர் மற்றவர்களுக்கு கருணைப் புரிந்த தலங்களும் நிறையவே உண்டு என்றாலும் சிவபெருமானின் வீர விளையாடலைக் குறிக்கும் மிக முக்கியமான தலங்கள் எட்டு உள்ளன. அந்த தலங்கள் திருவிற்குடி, வழுவூர், கண்டியூர், திருக்கோவலூர், திருஅதிகை, குறுக்கை, திருக்கடவூர், திருப்பரசலூர் ஆகியவை ஆகும். ஆகவே அந்த எட்டுத் தலங்களையும் அட்ட வீரட்டத் (எட்டு வீர) தலங்கள் என்பார்கள்.
அவற்றில் ஒன்றான வீரட்டேஸ்வரர் கோவில் பற்றிக் கூற வேண்டும் எனில் இது மிக விஷேசமான ஆலயம் என்றே கூற வேண்டும். தட்ஷனுடன் சம்மந்தப்பட்ட இந்த ஆலயத்தின் வரலாறும் பிற கதைகளில் இருந்து மாறுபட்டே உள்ளது.
பொதுவாகவே தட்சனின் யாகம் நடந்த இடம் வட மானிலத்தில் ரிஷிகேஷ் அல்லது ஹரித்துவாரில் உள்ளது என்றே நம்பிக்கை உள்ளது என்பதின் காரணம் அது இமயமலையின் அடிவாரத்தில் உள்ளதே. ஹரித்துவாரின் அருகில் உள்ள கங்கால் என்ற இடத்தில் உள்ள தக்ஷேஸ்வர மகாதேவர் எனும் ஆலயத்தை இதனுடன் இணைத்துக் கூறுகையில் இங்குதான் தட்ஷன் யாகம் செய்து, அந்த யாகத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளினால் வதம் செய்யப்பட்டு மீண்டும் ஆட்டு தலையை பெற்றதாக புராணக் கதையைக் கூறுகிறார்கள்.
ஆனால் சிவபெருமானின் மாமனாரான தட்ஷன் யாகம் செய்த உண்மையான இடம் ஹரித்துவாரோ ரிஷேகேசமோ அல்ல, யாகம் நடந்த இடம் பரசலூர் என்று கூறுகிறார்கள். இந்த ஆலய வரலாறு என்ன?
சிவபெருமானிடம் இருந்தே பல வரங்களையும் பெற்ற தட்ஷன் ஒரு கட்டத்தில் கர்வம் கொள்கிறான். ஆகவே அவன் சிவனை அவமதிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு ஒரு முக்கியமான யாகத்தை தட்ஷன் நடத்தியபோது சிவனுக்கு தரப்பட வேண்டிய அவிர்பாகம் என்னும் முதல் மரியாதையைத் தராமல் ஆணவத்துடன் யாகம் நடத்தி சிவபெருமானை அவமதிக்க, அந்த நிகழ்ச்சியினால் மனம் வருந்திய தட்ஷனின் மகளான பார்வதி யாக குண்டத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள, அதைக் கண்டு கோபமுற்ற சிவபெருமான் தனது தலை முடியில் இருந்து வீரபத்திரரை தோற்றுவித்து தட்ஷனை அங்கேயே சிரச்சேதம் செய்து கொன்றார். வீரபத்திரர் சிவபெருமானின் ஜடையிலிருந்து பிறந்தவர் என்றும், இல்லை, கோபத்தினால் வியர்த்துப் போன சிவபெருமானின் உடலில் இருந்து வழிந்த வியர்வையிலிருந்து பிறந்தவர் என்றும் வீரபத்திரரின் அவதாரம் பற்றிய செய்திகள் உள்ளன. இது எவ்வாறாயினும், வீரபத்திரர் சிவாம்சம் என்றே கருத வேண்டும். சிவன் படைத்த வீரபத்திரருக்குத் துணையாக அங்கேயே காளியும் தோற்றுவிக்கப்பட்டாள். அவளும் வீரபத்திரருடன் சேர்ந்து யாகத்தை அழித்தாள் .
வீர பத்திரர் வெட்டிய தட்ஷனின் தலையை வேள்வித் தீயில் போட்டார். தட்ஷன் மனைவி வேதவல்லியின் வேண்டுகோளுக்கு இணங்க வெட்டுப்பட்ட தலையின் இடத்தில் ஒரு ஆட்டுத் தலையினைப் பொருத்தி, மீண்டும் தட்ஷனுக்கு உயிர் கொடுத்தார் சிவபெருமான். இப்படியான வரலாற்றுக் கதைப் பின்னணியைக் கொண்ட தட்ஷன் யாகம் செய்த இடமே தற்போது உள்ள பரசலூர் கோவில் என்று கூறுகிறார்கள். இங்குதான் தட்ஷனின் தலையை வெட்டி எறிந்த வீர பத்திரர் அவருக்கு ஆட்டுத் தலையைப் பொருத்தி உயிர் கொடுத்தார் என்றும் அதனால்தான் ஆட்டுத் தலையுடன் தட்ஷன் உள்ள சிலை ஆலய மண்டபத்தில் உள்ளது என சுட்டிக் காட்டுகிறார்கள். தட்ஷன் வேள்வி செய்த தலம் இந்த ஆலயம் உள்ள இடம் என்பதினால் இங்குள்ள நிலத்தை ஆழமாகத் தோண்டிப் பார்த்தால் மண் கருப்பாக இருப்பதைக் காணலாம். அது ஏன் என்றால் யாகம் செய்தபோது அதில் போடப்பட்டவை கருகி பூமியிலே புதைந்துள்ளது என்பார்கள். இது தட்ஷன் யாகம் செய்ததை உறுதிப் படுத்துவதாக உள்ளது. ஆகவே இந்த ஆலயம் உள்ள இடத்தை கரிக்குளம் என்றும் கூறுவது உண்டு
வீரபத்திரர் ரிஷிகேஷத்தில் அவதாரம் செய்து பரிசலூரில் தட்ஷனை சம்ஹாரம் செய்தவர் என்கிறார்கள். அதற்கும் காரணம் முன்னர் பல கட்டுரைகளில் குறிப்பிட்டது போல தேவர்களும், கடவுட்களும் நம்பவே முடியாத அளவு மிகப் பெரும் உருவைக் கொண்டவர்கள் என்றும் தட்ஷன் யாகசாலை ரிஷிகேசத்தில் இருந்து பரசலூர்வரை பரவி இருந்திருக்க வேண்டும் என்றும், யாக குண்டம் பரசலூர் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும் நம்புகிறார்கள்.
இந்த ஆலயத்தின் மகிமை என்ன?