தேவி அங்கம்மாவின் தோற்றம்
சாந்திப்பிரியா

தேவி அங்கம்மாவை பார்வதியின் அவதாரம் எனவும் சப்த கன்னிகளில் அவளும் ஒருவள் எனவும் நம்புகிறார்கள். சிவன் புஜையே பூமியில் பெருகிக் கிடந்தபோது அதைக் கண்டு மனம் வருந்திய பார்வதியே சக்தி பூஜைக்கு பூமியில் முக்கியத்துவம் கொடுக்க அங்கம்மா என்ற அவதாரத்தை பூமியில் படைத்தாளாம்.அங்கம்மாவின் தோற்றம் பற்றி இரண்டு  விதமான கதைகள் நிலவுகின்றன.

அவற்றில் முதல் கதை இது.

முன்னொரு காலத்தில் கல்யாணா என்ற இராஜ்ஜியம் இருந்தது. அந்த நாட்டை ஆண்டு வந்தவர்கள் சாளுக்கிய மன்னர்களின் வழிவந்தவர்களாம். சாளுக்கியர்களை மராட்டிய மற்றும் கள்னட தேசத்து ஷத்ரியர்கள் என கருதுகிறார்கள். அந்த நாட்டு மன்னனும் மக்களும் சிவ பக்தர்கள். சிவனைத் தவிற வேறு தெய்வங்களை வணங்காதவர்கள். ஆகவே அவர்கள் சிவனைத் தவிற விஷணுவிற்கோ பார்வதிக்கோ முக்கியத்துவம் தராததினால் சக்தி வழிபாடே அழிந்து போயிருந்தது.

நாரத முனிவர் நாராயணர் பக்தர் என்பதினால் அவர் ஒரு முறை அந்த இராஜ்யத்திற்குப் போய் இருந்தபோது அவரை மன்னன் அவமதித்து திருப்பி அனுப்பி விட்டான். அதைக் கேட்ட பார்வதி வருத்தமும் கோபமும் அடைந்தாள். பார்வதியை விஷ்ணுவின் சகோதரி என்பார்கள். பார்வதிக்கு ஏற்பட்ட கோபத்தினால் அவள் உடல் உஷ்ணமடைந்து வேர்கத் துவங்கியது. நாகலோகத்தில் சென்று விழுந்த அந்த வியர்வைத் துளிகளில் இருந்து ஒன்பது கோடி சித்தர்களும் 101 சக்திகளும் உருவாயினர். அவர்களை முன்னணியில் இருந்தவர்கள் அங்கம்மாவும் அவளுடைய சகோதரர் போத்தராஜுவுமே. அகோர உருவைக் கொண்டு தோன்றியவர்களை கல்யாண நாட்டை சேர்ந்த மன்னனுக்கு பாடம் கற்பித்து வருமாறு பார்வதி அனுப்பினாள். அதே நேரத்தில் அங்கிருந்த மக்கள் அவளை வணங்கித் துதித்தால் அவர்களை காத்தருளுமாறு கூறி இருந்தாள்.

அங்கம்மாவும் அத்தனை சக்திகளும் சித்தர்களும் கல்யாண இராஜ்யத்தில் நுழைந்து தம்தை தடுத்து நிறுத்த முயன்ற மன்னனையும் மற்றவர்களையும் கொன்று தீர்த்தனர். அதன் பின் மெல்ல மெல்ல சாந்தம் அடைந்தவள் தன்னிடம் சரணடைந்த மற்றவர்களின் வேண்டுகோளை ஏற்று தான் கொன்று குவித்தவர்களுக்கு உயிர் பிச்சைத் தந்து எழுப்பினாள். அதன் பின் அவள் அருகில் இருந்த மகேந்திர கிரி என்ற ஊரில் சென்று தங்கினாள். அடிக்கடி பழம் விற்கும் பெண்மணிப் போல அந்த ஊருக்கு வருவாள். தம்மை தாக்குபவர்களை அழித்தாள். அந்த இராஜ்ஜியத்தில் பயத்தையும் நோயையும் பெருக்கி வந்தாள். மக்களை துன்புறுத்தி வந்த ஏழு அரசர்களை சிறை பிடித்து வந்து சில நாள் வைத்திருந்தப் பின் விடுதலை செய்தாள். பின்னர் தான் ஒரு குறி சொல்பவள் போல அந்த அரசர்களின் மனைவிகளிடம் போய் மஹேந்திர கிரியில் உள்ள அங்கம்மாவுக்கு விளக்கு ஏற்றி அவளை பூஜித்தால் அவர்களது துயரம் நீங்கும் எனக் கூறிவிட்டு வந்தாள். அவர்கள் அதை ஏற்றனர்.

அதன்படி அவர்களுடைய ஒரே மகனான கொம்மராஜு என்பவரை தானிய மாவினால் செய்த ஆட்டை தானிய வாளினால் செய்த வாளினால் வெட்டி சக்தி பூஜை செய்யுமாறு கூற அவர்களும் அதை செய்தனர். ஆனால் ஆட்டை வெட்டும்போது அது நிஜ ஆடாக மாறி வாளும் நிஜமாக மாற வெட்டப்பட்ட ஆட்டின் உடப்பில் இருந்து இரத்தம் பிறிட்டு வந்தது. அனைவரும் பயந்து நடுங்கினர். அந்த ஏழு மன்னர்களும் சிவபெருமானை துதித்து தம்தைக் காக்குமாறு ஓலம் எழுப்ப அவரும் வந்து அவர்களை தன்னுடன் கைலாயத்திற்கு அழைத்துச் சென்றார். அதை அங்கம்மா தடுத்து நிறுததினாள். கொம்மராஜு அவள் கால்களில் விழுந்து தம்மை மன்னித்து அருளுமாறும் அவளை தானே தூக்கிக் கொண்டு போய் இராஜ்யத்தில் சக்தி பூஜை செய்வதாக சத்தியம் செய்து அவளை தன் தோளில் தூக்கிப் போய் பூமியில் வைத்து பூஜைகள் செய்தாராம். அதனால்;தான் அங்கம்மாவின் சக்தி பூஜை பூமியில் தோன்றியதாம்.


அங்கம்மா பற்றி கூறப்படும் மற்றொரு கதை இது.

கல்யாண இராஜ்ஜியத்தை ஆண்டு வந்த ஏழு அரசர்களும் முதிராஜ் சகோதரர்கள். அவர்களும் முதலில் வால்மீகியைப் போலவே வழிப்பறிக் கொள்ளைகள் செய்து வந்தவர்களாம். அவர்ளுக்கு அந்த தொழில் அலுத்துப் போய்விட கடைசியாக ஒரு முறை பெரிய கொள்ளையை நடத்தி பணத்தை கொண்டு சென்று வாழலாம்; என எண்ணி பக்கத்து நாட்டின் அரசனின் கஜானாவை கொள்ளையடித்து தூக்கி வந்தனர். ஒரு காட்டுக்குள் சென்று அந்தப் பெட்டியை திறந்தபோது அதனுள் ஆபரணங்களுக்குப் பதில் சக்தியின் பூஜைப் பொருட்கள் மட்டுமே இருந்தனவாம். ஆகவே அதை தூக்கி எறிந்துவிட்டு செல்ல முயன்றபோது அவர்கள் கண்கள் குருடாகி விட்டன. அப்போது அவர்களுக்கு அங்கம்மா தேவியின் குரல் கேட்டதாம். தம்மை எடுத்துச் சென்று வழிபட்டால் அவர்கள் கண் பார்வை திரும்பவரும் என அந்தக் குரல் கூற அவர்கள் அதற்கு ஒப்புக் கொண்டு அந்த சாமான்களை எடுத்துப் போய் அங்கம்மாவிற்கு பூஜைகள் செய்யத் துவங்க வெகு விரைவில் அவர்கள் பெரும் பதவிகளையும் பொருட்களையும் பெற்றனர். ஆனால் அதன் பின் அவர்கள் செருக்குற்று தான்தோன்றித் தனமாகி சிவலிங்கத்தை மட்டுமே வழிபடத் துவங்கினர். தம் வாழ் நாளில் இனி ஒரு பெண்ணை வணங்க மாட்டோம் என முடிவு செய்தனர். தமக்குத் தந்த வாக்குறுதியை மீறினவர்களை பழி வாங்க எண்ணிய அங்கம்மா அவர்களை பக்கத்து நாட்டு மன்னன் மூலம் சிறை பிடிக்க வைத்தாள். அந்த ஏழு பேரில் ஒருவரான தர்ம சோட்டா சாரி என்பவருடைய மனைவிக்குப் பிறந்த இரவதேவராஜு என்ற பிள்ளை வளர்ந்து பெரியவனாகிய பின் புத்திசாலித்தனமாக அங்கம்மா மீது அபார பக்தி செலுத்தி அவளை துதித்து வணங்கி சிறை பிடிக்கப்பட்ட தந்தைகளை திரும்ப அழைத்து வந்தான். அதன் பின் அங்கம்மா அவர்களுக்கு தன் சுய உருவைக் காட்டினாள். அவர்கள் தம் தவறை உணர்ந்து இனி தம் இராஜ்ஜியத்தில் சக்தி வழிபாட்டிற்கு முக்கியத்துவம் தந்து அதை செய்வதாகக் கூறிய பின் தமது இராஜ்ஜியத்தில் அதை நிறைவேற்றினர். அங்கம்மாவும் அந்த இராஜ்ஜியத்திலேயே தங்கினாளாம்.

அங்கம்மாவும் அவள் ஆலயங்களும்
பார்வதியின் ரூபமான அங்காள பரமேஸ்வரியும் அங்கம்மாவின் ஒரு ரூபமாம். அவனைத் தவிற அங்கம்மா கன்காளி, எல்லம்மா, ஜக்கம்மா, காகட்டி தேவி, மும்பா தேவி, அங்காளி, மஹான்கால் அம்மா போன்ற ரூபங்களிலும் பல இடங்களில் உள்ள ஆலயங்களில் அங்கம்மா காட்சி தருகின்றாள். அங்கம்மாவை அங்காளம்மா எனவும் அழைக்கின்றனர். 

அங்கம்மாவிற்கு சேலத்தில் அதமன்கோட்டை, கேரளத்தில் எரட்டுப்பேட்டை, கர்னாடகத்தில் ஹோஸ்பெட், பெல்லாரியில் கரம்புடி, கூடூர், ஸ்ரீசைலம், தமிழ் நாட்டில் பஞ்சம்மதேவி, ஆந்திராவில் கமலாபூர், நந்திமண்டலம் மற்றும் கர்னூல் போன்ற இடங்களில் ஆலயங்கள் உள்ளன.

(இந்த கட்டுரையின் கருத்து முத்திராஜாவின் இணையதளத்தில் அவர்களது அனுமதியுடன் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. அங்கம்மாவின் முழு விவரங்களையும் அவளைப் பற்றிய பிற செய்திகளையும் படிக்க அவர்கள் இணையதளமான http://mudiraja.com/mudiraju மீது கிளிக் செய்து படிக்கவும்)