சிருங்கேரி சாரதா பீடம் 
ஸ்தாபிக்கப்பட்ட வரலாறு

சாந்திப்பிரியா  

 

பகவான் ஸ்ரீ ஆதி சங்கரர் வடநாட்டில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கு சங்கர மடங்களை ஸ்தாபனம் செய்தப் பின் தென் நாட்டு யாத்திரையை மேற்கொண்டு கொண்டு இருந்தார். அப்போது சிருங்கேரி அருகில் துங்கா நதிக்கரையில் அமர்ந்திருந்த அவர் அந்த நதிக் கரையில் ஒரு நாகமும் தவளையும் இருந்ததைக் கண்டார். அடுத்து ஒரு அற்புதம் நிகழ்ந்தது. கர்ப்பிணித் தவளை ஒன்று ஒரு குஞ்சை பிரசவித்து இருந்தது. கடுமையான வெய்யிலினால் தாய் தவளையும் அதன் குஞ்சுத் தவளையும் தவிப்பதைக் கண்ட நாகம் ஓடோடி அதன் அருகில் சென்று அவற்றின் மீது வெயில் படாமல் இருக்குமாறு குடைப் போல தன் தலையை விரித்து படமெடுத்து நின்றது. சற்று நேரம் கழிந்தப் பின் அதன் பின் அந்த தவளையும் நாகமும் அங்கிருந்து சென்று விட்டன. தவளையை கண்டால் அதைப் பிடித்து விழுங்கி விடும் நாகம் அதற்குக் குடை பிடித்து நின்ற இடம் தெய்வீகம் நிறைந்த இடமாக இருக்க வேண்டும் என அந்த அதி அற்புதமான காட்சியைக் கண்ட சங்கரர் நினைத்தார்.

சற்று நேரம் தியானத்தில் ஆழ்ந்து தமது ஞான திருஷ்டியினால் அந்த இடத்தில்தான் மாமுனிவரான ரிஷ்யசிங்கரின் ஆத்மா பல்லாயிரம் வருடங்கள் ஆன பின்னும் அங்கேயே ஸ்திரமாக இருந்துகொண்டிருப்பதை கண்டார். அந்த அருள் ஒளியினால் அங்கு தெய்வீகம் நிறைந்துள்ளதைக் கண்டு தென் திசையில் தாம் தவமிருந்து மடத்தை ஸ்தாபிக்க சரியான இடம் அதுவே என்பதையும் உணர்ந்தார். பன்னிரண்டு ஆண்டுகள் அங்கேயே தவமும் இருந்தார். தென் பகுதியில் ஒரு சங்கர மடத்தையும் நிறுவினார்.  இப்டியாகத்தான் சங்கர மடங்களில் ஒன்றாக சிருங்கேரி மடமும் ஸ்ரீ ஆதி சங்கரால் ஸ்தாபிக்கப்பட்டது.

அங்கு ஸ்ரீ ஆதி சங்கரருக்குப் பின்னர் அவருடைய முதல் சீடராக ஸ்ரீ சுரேஸ்வராச்சாரியார் எனும் குரு அந்த மடத்தின் குருபீடத்தில் அமர்ந்தார். அபார ஞானம், தூய பக்தி மற்றும் பல்வேறு நற்குணங்களைக் கொண்டிருந்த குரு ஸ்ரீ சுரேஸ்வராச்சாரியாரின் மனைவியான பாரதி மீது ஸ்ரீ ஆதி சங்கரர் மட்டற்ற மரியாதையும் நல்லெண்ணமும் அன்பும் கொண்டிருந்தார். அந்த மேன்மையான குரு பரம்பரையை வெளிப்படுத்தும் விதமாகவே எட்டாம் நூற்றாண்டு முதல் இன்றளவும் சிருங்கேரி மட குருமார்கள் தமது பட்டப் பெயரில் ‘பாரதி தீர்த்த’ எனும் பட்டதை சூட்டிக் கொள்வது வழக்கமாக அமைந்தது .