திருவிடைமருதூர் ஆலயம்
சாந்திப்பிரியா
அன்றைய சோழநாட்டின் ஒரு பகுதியான கும்பகோணத்தின் அருகில் உள்ளது திருவிடைமருதூர். கும்பகோணத்தில் இருந்து சுமார் ஆறு அல்லது ஏழு கிலோ மீட்டர் தொலைவிலும் மாயவரத்தில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள இந்த ஊரில் காவேரி ஆற்றின் கரையில் உள்ள மிகப் பிரபலமாக ஆலயமே மகாலிங்கேஸ்வரர் எனும் சிவன் ஆலயம். இந்த ஆலயம் திருவாவடுதுறை ஆதீன மடாதிபதிகளின் பொறுப்பில் உள்ளது. இந்த ஆலயத்தில் பல்வேறு பெயர்களைக் கொண்ட 27 சிவலிங்கங்கள் உள்ளன.
இந்த ஆலயத்தில் பல சிறப்புக்கள் உள்ளன. இந்த உலகில் ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜுனா, புட்டார்ஜுனா மற்றும் திருவிடைமருதூர் போன்ற மூன்று இடங்களில் மட்டுமே மருத எனும் மரம் உள்ள விருஷத்தை தல விருஷமாகக் கொண்ட சிவன் ஆலயங்கள் உள்ளதாகவும் உள்ளதாகவும் அவற்றின் மத்தியில் திருவிடைமருதூர் ஆலயம் உள்ளதினால் இதை இடைமருதூர் என்று அழைக்கின்றார்கள்.
இந்த ஆலயம் உண்மையில் ஏழு பிராகாரங்களைக் கொண்டது என்கிறார்கள். அதில் முக்கியமானவை வீதிக்கு அடுத்த தேர் ஓடும் பிராகாரம் , அடுத்தது அஸ்வமேத பிராகாரம், அடுத்து பிரணவ பிராகாரம் அல்லது சித்திரப் பிராகாரம், கொடுமுடிப் பிராகாரம் போன்றவை . இவற்றில் நான்கு பக்கமும் சேர்த்து சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவு நீண்டு உள்ள அஸ்வமேத பிராகாரத்தை ஒரு முறை சுற்றி வந்தால் அஸ்வமேத யாகம் செய்தப் பலன் கிடைக்கும் என்கிறார்கள். அது போல பிரணவ பிராகாரத்தில் 32 தோற்றங்களைக் கொண்ட விநாயகரின் சிலைகளும் 108 நடன லட்ஷனன்களை எடுத்துக் காட்டும் சிவபெருமானின் நடராஜ தோற்றங்களும் உள்ளனவாம். ஆலய வளாகம் ஏழு கோபுரங்களைக் கொண்டு உள்ளது. இந்த ஆலயத்துக்கு நாங்கள் சென்ற நேரம் மதியம் என்பதினால் அனைத்தையும் பார்க்க முடியவில்லை.
இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமான் மகாலிங்கம் என அழைக்கப்படுகிறார். சிவபெருமான் தனக்குத் தானே இங்கே பூஜை செய்து கொண்டதான ஐதீகம் உள்ளதினால் இந்த ஆலயத்தின் மூலவரை – மகாலிங்கம் அனைவரையும் விட மிகப் பெரியவர் என பொருள் தரும் மஹா லிங்கம் – என அழைக்கின்றார்கள். இன்னொரு காரணம் தேவர்கள் அமிர்த கலசத்தை எடுத்துக் கொண்டு சென்றபோது இந்த ஆலயப் பகுதியிலும் அந்தப் பாத்திரத்தில் இருந்து சிறிதளவு சிந்தியதினால்தான் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுபவர்கள் அனைத்து தோஷங்களும் விலகி சிரஞ்சீவியாக வாழ்வார்கள் எனக் கூறுகிறார்கள். இங்குள்ள பார்வதியின் பெயர் பெறுநலமமுலை அம்மை அல்லது பிரஹத்சுந்தரி என்கிறார்கள் .
இந்த ஆலயத்தின் மற்றும் ஒரு விசேஷம் என்ன என்றால் எந்த ஒரு ஆலயத்திலும் மூலவரை சுற்றி இருக்குமாறு பரிவார மூர்த்திகள் எனப்படும் குடும்ப தெய்வங்கள் அங்காங்கு சன்னதிகளில் அமர்ந்து இருப்பார்கள். ஆனால் அந்தப் பகுதியை சேர்ந்த சோழ நாடு முழுவதுமே அமிர்தம் விழுந்த இடம் என்பதினால் மஹாலிங்க ஸ்வாமியின் ஆலயம் நமது கண்களுக்குத் தெரியும் வகையில் திருவிடைமருதூரில் இருந்தாலும், மஹாலிங்கர் எனப்படும் சிவபெருமான் ஆலயம் சூட்ஷும ரூபத்தில் சோழநாட்டின் ஒரு எல்லை முதல் அடுத்த எல்லை வரை விஸ்தரித்து இருப்பதினால் அவரை சுற்றி ஆலய வளாகத்துக்குள்ளேயே இருக்க வேண்டிய பரிவார தெய்வங்களான விநாயகர் திருவாஞ்சுலையிலும், முருகன் ஸ்வாமிமலையிலும், சோமஸ்கந்தர் திருவாரூரிலும், நடராஜர் சிதம்பரத்திலும், பைரவர் சீர்காழியிலும், நந்தி ஆடுதுரையிலும், தக்ஷிணாமூர்த்தி ஆலங்குடியிலும், சந்தேகேஸ்வரர் திருப்பாடியிலும், சூரியனார் ஆலயத்தில் அனைத்து நவகிரகங்களும் அமர்ந்து உள்ளார்கள் என்றும், நமது கண்களுக்குத் தெரியும் மஹாலிங்க ஸ்வாமியின் ஆலயம் சோழ நாட்டில் ஒரு சன்னதி மட்டுமே என்றும் ஐதீகம் உள்ளது.
இந்த ஆலயத்துக்கு வந்து வேண்டி வணங்குவத்தின் மூலம் நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களினால் ஏற்பட்டு உள்ள அனைத்து தோஷங்களும், முக்கியமாக பிரும்மஹத்தி தோஷம் போன்றவை விலகும் என்ற ஐதீகம் உள்ளது. அதற்கான ஒரு கதைக் கூட வரகுண பாண்டியனின் வரலாற்றுக் கதையில் உள்ளது.
ஒருமுறை பாண்டிய மன்னனான வரகுண பாண்டியன் என்பவர் தன நாட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தபோது இரவாகி விட அதி வேகமாக ஓடி வந்து கொண்டு இருந்த அவர் ஏறி வந்த குதிரையின் காலடிக் குளம்புகளால் மிதிக்கப்பட்டு வழியில் படுத்து இருந்த அந்தணர் ஒருவர் மரணம் அடைந்தார். அதை கவனிக்காமல் அந்த மன்னன் சென்று விட்டார். தவறுதலாக ஒரு பிராமணரைக் கொன்று விட அவருக்கு பிரும்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டது. இறந்து போன பிராமணன் அவர் பின்னால் பிரும்மஹத்தியாக தொடர்ந்து சென்று கொண்டு மன வேதனையை அளித்து வந்தார். ஆகவே அந்த மன்னன் மதுரை சோமசுந்தரர் ஆலயத்தில் சென்று பிரும்மஹத்தி தோஷத்தைக் களைய பூஜை செய்தபோது அந்த மன்னன் கனவில் வந்த சிவபெருமான் தன்னை திருவிடைமருதூரில் வந்து வணங்கினால் அவரை தொடர்ந்து கொண்டு வந்து இருந்த பிரும்மஹத்தி பிரச்சனை முடிவுக்கு வரும் என்றார்.
அப்போது தஞ்சாவூர் சோழ மன்னன் ஆதிக்கத்தில் இருந்ததினால் பாண்டிய மன்னன் அந்த நாட்டின் மீதே படையெடுத்து சென்று சோழ மன்னனை விரட்டி விட்டு அந்த ஆலயத்துக்கு செல்ல வேண்டி இருந்தது . அவனை தொடர்ந்து வந்து கொண்டு இருந்த பிரும்மஹத்தியால் ஆலயத்துக்குள் நுழைய முடியாது என்பதினால் ஆலய வாயிலிலேயே அமர்ந்து கொண்டு மன்னன் வரவை எதிர்பார்த்து காத்து இருந்தது. ஆலயத்துக்குள் சென்ற மன்னனிடம் பண்டிதர்கள் பிரும்மஹத்தி தோஷத்தைக் களையும் பூஜை செய்து விட்டு பின் பக்க வாயிலினால் வெளியேறி விடுமாறு கூறினார்கள். ஆகவே மன்னன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த பிரும்மஹத்தி வாயிலிலேயே இன்றும் அமர்ந்து இருப்பதான ஐதீகம் உள்ளதினால் அந்த ஆலயத்துக்கு சென்பவர்கள் ஆலயத்தில் நுழைந்து விட்டு திரும்பிப் பார்க்காமல் இன்னொரு வழியே வெளியில் சென்று விட வேண்டும் என்கிறார்கள். ஆலயத்தின் நுழை வாயில் அருகில் முட்டி மீது தலையை வைத்துக் கொண்டு ஐயோ பாவம் என்பது போல ஒரு சிலை வைக்கப்பட்டு உள்ளது. அதுவே பிரும்மஹத்தியின் வடிவம் என்கிறார்கள்.
Thirumanjana Street
Thiruvidaimarudur – 612 104.
Telephone 0435-2460660 (or) Mr. Baskar (+91-9244291908)