இந்து மதத்தை பொறுத்தவரை அத்தி மரம்  மிகவும் மகத்துவமானது. இயற்கையிலேயே அதற்கு உள்ள சில தன்மைகளினால் முக்கியமான இந்து தெய்வ சிலைகள் அந்த மரத்திலான கட்டைகளில் செய்யப்பட்டு  ஆலயங்களில் பூஜிக்கப்படுகின்றன. அத்தி மரத்தைத் தவிர வேறு எந்த மரத்திலும்  தெய்வ  சிலைகள் செய்யப்படுவது இல்லை, மாறாக  பாறைக் கற்கள்  மற்றும் விசேஷ தன்மைகளைக் கொண்ட கற்களிலேயே சிலைகள் செய்யப்படுகின்றன. ஆலயங்களில் செய்யப்படும் அர்ச்சனை திரவியங்களினால் பிற மரத்திலான மரக்கட்டைகளில்  செய்யப்படும் தெய்வீக சிலைகள்   மெல்ல மெல்ல நாளடைவில்  பழுதடைந்து விடுகின்றன. ஆனால் அத்தி மரங்களில் செய்யப்பட்டு உள்ள சிலைகள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், அர்ச்சனை திரவியங்களினால் சேதமும் அடைவதில்லை என்பதினாலோ என்னவோ அத்தி மரத்தில்   கடவுள் சிலை வடிப்பதை சைவ, மற்றும் வைணவ ஆகமங்கள் அனுமதிக்கின்றன. அப்படி மகத்துவம் வாய்ந்த அத்தி மரத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ள தெய்வ  சிலைகள் படவேடு மகாமாயா ரேணுகாம்பாள் அம்மன்,  உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணன், காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமான் ஆலய குளத்தின்  உள்ளே  உள்ள அத்தி வரதர் எனப்படும் ஸ்ரீ விஷ்ணு பகவான்  மற்றும் கோழிக்குத்தி எனும் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வானமுட்டிப் பெருமாள் (ஸ்ரீ விஷ்ணு பகவான்) போன்றவை ஆகும்.  புதுவைக்கு அடுத்த வீரம் பட்டினம் என்ற மீனவ கிராமத்தில் கடலில் மிதந்து வந்த அத்தி மரத்தை செங்கேணி அம்மன் சிலையாக வடித்து பிரெஞ்சு நாட்டினர் ஆண்டு வந்திருந்த  காலத்தில் இருந்து வழிபடுகிறார்கள்.  அசுர குரு சுக்கிராச்சாரியார் அத்தி மரமாக  பிறவி எடுத்ததாக சதுர்மாசிய மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீ நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிப்புவைக் கிழித்துக் கொன்று வதம் செய்த பின்பு, பெருமாள் அத்தி மரப்பட்டையில் நகங்களைப் பதித்துச் சுத்தப்படுத்திக் கொண்டார் என புராண கதைகள் கூறுகின்றன.  இந்துக் கடவுளான ஸ்ரீ தத்தாத்திரேயர் அத்தி மரத்திலே வாசம் செய்வதாக குரு சரித்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த அத்தி மரத்தில்தான் ஸ்ரீ தத்தாத்திரேயர் அவதாரத்தில் அடங்கி உள்ள  ஸ்ரீ விஷ்ணு பகவான் வாசம் செய்வார் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்த இடத்தில் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அம்சங்களைக் கொண்டு தோன்றிய ஸ்ரீ தத்தாத்திரேயர் பற்றி  சிறு செய்தியை  குறிப்பிடுவது அவசியமாகும். ஏன் எனில் அவரே இந்த பிரபஞ்சத்தைப் படைத்த பரபிரும்மன் எனும் உருவமற்ற, நமது கண்களுக்கு புலப்படாத மஹா சக்தியின்,  வெளியுலக மாயத் தோற்றம் ஆகும் என்பதாக ஆன்மீகப் பண்டிதர்கள் கூறுவார்கள்.   அதை தெரிந்து கொள்ள வேண்டும் எனில் சிறு செய்தியாக இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட நிலையை புரிந்து கொள்ள வேண்டும். இந்து மதத்தை  பொறுத்தவரை இந்த பிரபஞ்சமே ஆண் மற்றும் பெண் தெய்வ சக்திகள் உள்ளடக்கி, மானிட கண்களுக்கு  புலப்படாமல், ஒரு உருவமற்ற ஜ்யோதியாக  இருந்த பரபிரும்மன் எனும் சக்தியால் படைக்கப்பட்டது என்பதாகும். இந்த பிரபஞ்சத்தை படைக்க விரும்பிய  உருவமற்ற பரபிரும்மன் தன் இடது புறத்தில் இருந்து முதலில்   இரு ஆண் சக்திகளை  வெளிப்படுத்தி, அதே சமயத்தில் வலது புறத்தில் இருந்து ஒரு  சக்தி  தேவியை வெளிப்படுத்தினார்.  இப்படியாக வெளிவந்த  சக்தி தேவியின் உருவம் க்ஷண நேரத்தில்  மூன்றாக பிரிந்து மேலும் இரு  தேவிகளுடன் காட்சி அளிக்க அதே  க்ஷண நேரத்தில் வலப்புற ஆண் சக்தியின் தொப்பிளில் இருந்து இன்னொரு ஆண் தெய்வமும் வெளிப்பட்டதாம். இப்படியாக பரபிரும்மனின் மூலம் வெளி வந்த மூன்று ஆண் மற்றும் மூன்று பெண் சக்திகளும் மூன்று ஜோடிகளாக இணைய, ஒவ்வொரு ஜோடிக்கும் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் எனும்  தெய்வீக தன்மைகள் தரப்பட, ரிஷி முனிவர்களை தொடர்ந்து உயிரினங்கள் படைக்கப்பட்டு இயக்கம் துவங்கியது.  இப்படியாக மூன்று ஆண் தெய்வங்களையும் தன்னுள் அடக்கி இருந்த பரபிரும்மன் கலியின் ஒரு கட்டத்தில் சில தெய்வ லீலைகளுக்காகவும், உலக ஜீவன்களின் நலனுக்காகவும்,   அத்ரி முனிவர் மற்றும் அனுசூயா தம்பதியினர் மூலம் பூமியிலே மூவரும் ஒன்றிணைந்த உருவமான  ஸ்ரீ தத்தாத்திரேயர் என்ற உருவத்தை கொண்டு அவதரித்தார். அப்படி தோன்றிய ஸ்ரீ தத்தாத்திரேயர்  அந்த மூன்று அம்சங்களில் ஸ்ரீ விஷ்ணு பகவானின் அம்சத்தை தன்னுள் அடக்கிக் கொண்டு அவதூதராக   காட்சி தந்த பின், தன்னுள் இருந்த இரு  பிற அம்சங்களான  சிவபெருமான் மற்றும் பிரும்மாவை துர்வாச முனிவர் மற்றும் சந்திரனாக மாற்றி அமைத்து விட்டாராம்.  அதனால்தான்  ஸ்ரீ தத்தாத்திரேயரை விஷ்ணுவின் அம்சம் என்பதாக வைஷ்ணவர்கள் போற்றி துதிக்கின்றார்கள். அப்படிப்பட்ட, அவதூத உருவில் காட்சி அளித்த, ஆன்மீக விடுதலை பெற்று இறைவனுடன் ஐக்கியமாகும் மேன்மையான ஆன்மீக போதனைகளை மட்டுமே தந்து கொண்டு  இருந்த, ஸ்ரீ தத்தாத்திரேயர் தங்கி இருந்த இடங்களே  அத்தி மர அடிவாரங்கள்தான்  என்பதினால்தான்  அத்தி மரத்தை  ஸ்ரீ தத்தாத்திரேயரின் அம்சம் என்பார்கள். அதனால்தான் அத்தி மரங்களில் தனது அம்சமான ஸ்ரீ விஷ்ணு பகவான் உருவில் இன்றும் அவர் வாசம் செய்வதாகவும் கூறப்படுகின்றது. 

அத்தி மரத்தின் மகிமை என்ன தெரியுமா ?  இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணமுடையவை. ஸத்வம், ரஜஸ், தமஸ் என்பவற்றை பரபிரும்மனின்  மூன்று மூர்த்திகளின் தன்மைகளாக  சொல்கிறார்கள். அதனால்தான் சாத்வீக குணத்தை பிரதிபலிக்கும்  ஸ்ரீ விஷ்ணு பகவான் சாந்தமான அலைகளை  வெளிப்படுத்தும் அத்தி மரத்தில் வாசம் செய்வதாக கூறுவார்கள். அத்தி மரத்தில் இருந்து நல்ல அதிர்வலைகள் வெளிப்படும் என்பதினால் அத்தி மரப் பலகையில் உட்கார்ந்து தவம் செய்தால் பூமியினுடைய புவிஈர்ப்பு விசை நம்மை தாக்காமல் எந்த மந்திரத்தை உச்சரிக்கிறோமே அந்த மந்திரத்தினுடைய பலன் முழுமையாகக் கிடைக்கும்.  சாத்வீக தன்மைக் கொண்ட அதிர்வலைகள் வெளிப்படும் இம்மரத்தில் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும், மனம் அமைதி அடையும்போது தியானமும் எளிதாக கைகூடும் என்பதினால்தான் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அம்சங்களைக் கொண்ட ஸ்ரீ தத்தாத்திரேயர் அந்த மரத்தின் அடியில் யோக நிலையில் காணப்படுவார். இந்த நிலையில்தான் மாயவரத்தில் இருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் உள்ள மாப்படுகை எனும் கிராமத்தின் அருகில் உள்ள கோழிகுத்தியில்  ஸ்ரீ விஷ்ணு பகவானின் அவதார தோற்றமான ஸ்ரீ வானமுட்டிப் பெருமாள் சிலை, எதனால் அத்தி மரத்தில் தோன்றி உள்ளது என்ற உண்மைக்கு அர்த்தம் புரியும். அங்கு அவரை வணங்கித் துதிப்போர்க்கு பரபிரும்மனின் அவதார தோற்றமான, ஸ்ரீ விஷ்ணு பகவானின் அம்சமான  ஸ்ரீ தத்தாத்திரேயரின் பரிபூரண ஆசிகளும் கிடைக்கின்றது என்ற உண்மை புரியும். மேலும் அங்குள்ள ஆலயத்தில் அத்தி மரத்தில் இருந்து வெளிப்படும் சாந்த அலைகளும், ஸ்ரீ விஷ்ணு பகவானின் தெய்வீக அலைகளும் ஒன்றிணைந்து அமைதியான சூழ்நிலையை உருவாக்கி வைத்து உள்ளதினால் அங்கு சென்று சற்று நேரம் நிற்கும்போதே நம்மை சுற்றி சாந்தமான சூழ்நிலை உள்ளதைக் காணலாம்.  

இதனால்தான் அத்தி மரத்தில் வடிவமைக்கப்பட்ட  ஶ்ரீ விஷ்ணுவின் உருவச்  சிலை  மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.  அப்படிப்பட்ட  புனிதமான ஒரு சிலை காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமான் ஆலய குளத்தின்  உள்ளே  உள்ளது.  அந்த சிலையை  48 வருஷங்களுக்கு ஒரு முறைதான்  குளத்தில் இருந்து வெளியே எடுத்து, பூஜைகள் செய்து பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்படுகின்றது.   அதை தரிசிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பது இல்லை. ஆனால் அதே போன்ற அத்தி மரத்தில் செய்யப்பட்டு உள்ள பெருமாளை தினம் தினம் கோழிகுத்தியில்  உள்ள வான்முட்டி ஆலயத்தில்  தரிசிக்க முடிகின்றது.  இந்த ஆலயத்தில் உள்ள ஆலய மூர்த்தி செதுக்கப்பட்டு உள்ள அத்தி மரத்தின் அதிசயம் என்ன என்றால்  அதன் வேர்கள் இன்றும் பல இடங்களிலும் பரவி உள்ளன, வேர் காயாமல் ஈரப் பதமாகவே உள்ளது. அதற்கும் மேல் அதிசயம் என்ன என்றால் உயிருள்ள வேர்களைக் கொண்ட எந்த மரமும்  வளர்ந்து கொண்டே இருக்கும். இது இயற்கையின் நியதி ஆகும். அப்படி வளருகையில் அதில் காணப்படும்  உருவங்கள் மரத்தின் அளவிற்கேற்ப  மாறுபடும். ஆனால் ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் ஈரப் பதத்துடன் கூடிய வேர்களைக் கொண்டுள்ள மரம் வளரவும் இல்லை. மரத்தில் உள்ள சிலையும் எந்த சிதைபாடுகளும் இல்லாமல் உள்ளது  என்பது தெய்வ அதிசயம் அல்லவா?  இந்த இப்படி ஒரு அதிசயத்தை வேறு எந்த ஆலயத்திலும் காண இயலாது.  பூமியில் இருந்து ஆகாயத்தை தொடும் அளவுக்கு பிரம்மாண்டமாக காட்சி தரும் விஷ்ணு பகவானை இங்கு ஸ்ரீ வானமுட்டி பெருமாள் என அழைக்கின்றார்கள்.   12 ஆம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த இரண்டாம் குலோத்துங்க  சோழ மன்னனின் ஆட்சிக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்தது இந்த ஆலயம் என்கின்றார்கள்.  ஒரு காலத்தில், தற்போது  இந்த ஆலயம் உள்ள இடத்தில், மிகப் பெரிய அத்தி மரம் இருந்ததாகவும், உள்ளூர் மக்கள் அந்த அத்தி மரத்தின்  கீழே கல்லினால்  ஆன ஸ்ரீ பெருமாள் சிலை ஒன்றை வைத்து அந்த மரத்தையும், சிலையையும் வழிபட்டு வந்துள்ளார்கள்.  பூர்வ ஜென்மத்தில் பல கொலைகளுக்கு காரணமாக இருந்திருந்தினால்  ஏற்பட்டு இருந்த   பாபங்களினால் ( கொலைகளை ஹத்தி என்று கூறுவதுண்டு) மகரிஷி பிப்பலர் என்பவர்  ரோக தோஷங்களை அடைந்து,  தற்போது கோழிக்குத்தி  என்று அழைக்கப்படும் இடத்தில் இருந்த அத்தி மரத்தில் அவருக்கு காட்சி தந்த ஸ்ரீ பெருமாளின்  அருளுடன்  தனது நோயை   நிவர்த்தி செய்து கொண்டார் என்ற கதையை கேள்விப்பட்ட  இரண்டாம் குலோத்துங்க சோழன், தானும் அரசனாக இருக்கையில் பல கொலைகளுக்கு காரணமாக இருந்திருக்கின்றேனே, அதனால் தனக்கும் அந்த பாபங்களினால் (ஹத்தி) ரோக தோஷம் வந்து விடுமோ என்று அஞ்சி, முன்னெச்சரிக்கையாக அதற்கு நிவாரணம் செய்யும் வகையில் தற்போது ஸ்ரீ வானமுட்டிப் பெருமாள் ஆலயம் உள்ள இடத்தில்,  மக்கள் வணங்கி வந்திருந்த, ஸ்ரீ  தத்தாத்திரேயர் மற்றும் அவருடைய அம்சமான ஸ்ரீ விஷ்ணு பகவான்  இருவருக்கும் பிரீதியான,  புனிதமான   அதே அத்தி மரத்திலேயே  ஸ்ரீ பெருமாள் சிலையை வடிவமைத்து  அங்கேயே  தற்போதைய ஆலயத்தைக் கட்டி வழிபட்டதாகவும், இப்படியாக உருவானதே தற்போது உள்ள  இந்த ஆலயம் எனும்   செவி வழிக் கதை உள்ளது.     இதற்கு ஆதாரமாக இன்றும் ஆலய வளாகத்தின் சன்னதியின் வெளிப் பிராகாரத்தில் அந்த ஸ்ரீ பெருமாளின் சிலை உள்ளதைக் காணலாம். அந்த சிலையில் காணப்படும் ஸ்ரீ பெருமாளின் உருவமும் அத்தி மரத்தில் செதுக்கப்பட்டு உள்ள உருவமும் ஒரே தோற்றம் கொண்டவையாகவே உள்ளது.  இந்த ஆலயத்தின் மேன்மை குறித்து கூறிய பண்டிதர், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த ஆலயம் முதலில் ஏழு பிராகாரங்களைக் கொண்டு இருந்ததாகவும்,  அவை கால வெள்ளத்தில் அழிந்து விட்டதினால் இப்போது ஒரே ஒரு பிராகாரத்துடன் காட்சி அளிப்பதாகவும் கூறினார். மேலும் இந்த மரத்தின் தன்மையை ஆராய்ந்த பல மகான்கள் இந்த அத்தி மரம் 5000 ஆண்டுகளுக்கும் முற்பட்டதாகவே இருந்திருக்க வேண்டும் என்று கூறி உள்ளார்களாம்.

இந்த ஆலயம் சிறிதாக இருந்தாலும், அதில் உள்ள பெருமானை பல மணிநேரம் தரிசித்துக் கொண்டே இருக்கலாம் எனும் அளவில் அற்புதமான தோற்றத்தில் காணப்படுகின்றார்.  கைகளில் சங்கு, சக்கரம், கதை என ஆயுதங்களை ஏந்திக் கொண்டு அபய முத்திரை காட்டியவண்ணம் காட்சி தரும் பெருமானின் சிலையை மூலிகையினால் செய்யப்பட்ட கரிய பச்சை நிறத்தில் வண்ணம் பூசி உள்ளார்கள். ஆலயம் முழுவதும் அஜந்தா வண்ண ஓவியத்தில் காணப்படுகின்றது.

இந்த ஆலயத்தின் இன்னொரு அதிசயம் தனி சன்னதியில் உள்ள சப்த ஸ்வரூப ஒலி தரும் பகவான் ஹனுமான் ஆகும். சுமார் நான்கு அடி உயர  பகவான் ஹனுமாரின் சிலையில் காணப்படும் அவருடைய வாலின் நுனியில் ஒரு மணி கட்டப்பட்டு உள்ளது.  அந்த வாலின் நுனிப் பகுதி அவர் தலையை தொட்டபடி அமைந்து உள்ளது.  இங்குள்ள பகவான் ஹனுமானின் உடலில் எந்த பகுதியை தட்டினாலும் வெவ்வேறு ஒலிகள் எழும்புமாம். இங்கு வந்து அவரை வணங்கித் துதிப்பதின் மூலம் பூர்வ ஜென்ம கர்ம வினைகள் அகலும் என்பது நம்பிக்கை. சிறு மணி கட்டப்பட்ட வாலின் நுனிப் பகுதி தலையை தொட்டபடி உள்ள பகவான் ஹனுமானின் பல சிலைகள் கர்னாடகா மானிலத்தில்   பல ஆலயங்களில் காணப்படுகின்றது. நடன கலைஞர்கள், பாடகர்கள் போன்றோர் இங்கு வந்து இவரை வணங்கினால் மேலும் வளர்ச்சி அடைவார்கள் என்பது நம்பிக்கை.  இந்த  ஆலயத்தில் உள்ள  சப்தஸ்வரூப ஆஞ்சனேய  உருவச் சிலையில் அவரது வால் தலையின் மேல் பகுதியில் காணப்படாமல் அவரது சிலையின் பின்புறத்தில், அதாவது தலை பகுதிவரை  சென்று வளைந்து நிற்கின்றது. அந்த வாலின் நுனியில் ஒரு மணியும் கட்டப்பட்டு உள்ளது. இப்படி வடிவமைக்கப்பட்டு உள்ள சிலையை வேறு எந்த ஆலயத்திலும் காண இயலாது என்பது ஒரு அற்புதமான காட்சி ஆகும். இந்த அதிசய ஆஞ்சனேயரின் உருவ சிலையை ஆலய சிலையின் படங்கள்  பகுதியில் காணலாம்

இந்த ஆலயத்தின் தல வரலாறு என்ன?

முன் ஒரு காலத்தில் கொடகு நாடு என்ற பகுதியை ஆண்டு வந்திருந்த நிர்மலன் என்கின்ற மன்னன் ஒருவன் செய்திருந்த பூர்வ ஜென்ம பாவங்களினால் கடுமையான ரோக தோஷங்கள் ஏற்பட்டு இருந்தன. என்ன பரிகாரம்  செய்தும் அவனுடைய பாவங்கள் விலகவில்லை. அதன் விளைவாக அவனுக்கு உடலெங்கும் கடுமையான தோல் வியாதி ஏற்பட்டு அவனை வதைத்தது. ஆகவே அவர் தனது பண்டிதர்களின் ஆலோசனைப்படி கொடகு நாட்டில் இருந்த பல்வேறு ஆலயங்களுக்கும் விஜயம் செய்து தமது வியாதி நிவாரணம் அடைய பரிகாரம் செய்தவாறு இருந்தார். அப்படி பல்வேறு இடங்களுக்கும் சென்று கொண்டு இருந்தபோது வழியில் ஒரு இடத்தில் அடையாளம் தெரியாத ஒரு ஆசிரி (குரல்) அவர் வியாதி குணம் அடைய வேண்டும் எனில் காவேரிக்கு கரை ஓரத்தில் செல்லுமாறு கூறியது. அது மட்டும் அல்ல அந்த குரல் அவரை முதலில் மூவலூரில் ஸ்ரீ மார்க சஹாயேஸ்வரராக  காட்சி தந்து கொண்டு இருக்கும் ஸ்ரீ சிவபெருமானின் சன்னதிக்கு சென்று வணங்குமாறும், அங்கு அவருக்கு ஒரு விடை கிடைக்கும் எனவும் கூறியது. மார்க சஹாயேஸ்வரர் ஆலயம் மூவலூரில் உள்ளது. அங்கு சென்று அவர் சன்னதியில் பிரார்த்தனை செய்த மன்னனை அங்கிருந்து அருகில் உள்ள ஒரு கோடி பாபங்களையும் விலக்கும் அபூர்வ தலமான கோடிஹத்தி எனும் பாப விமோசனப்புரத்துக்கு சென்று அங்குள்ள அத்தி மரத்தின் அடியில் உள்ள பகவான் ஸ்ரீ விஷ்ணுவை தரிசித்தால் அவர் வியாதி பூரண குணம் அடையும் என கண்களில் புலப்படாத  நிலையில் இருந்தவாறு ஸ்ரீ சிவபெருமான் ஆசிரியாக குரல் கொடுத்தார். அந்தக் குரல் கூறியபடியே அந்த மன்னனும் பயணத்தை தொடர கோழிக்குத்தியை சென்று அடைந்தார். அந்தக் குரல் கூறியபடியே அங்கு இருந்த இலுப்ப மரக்காட்டிற்கு நடுவே இருந்த அத்தி மரத்திலேயே பெருமாள் அவருக்கு விஸ்வரூப தரிசனம் தந்தார். அவர் கைகளில் சங்கு, சக்கரம் மற்றும் கதை போன்றவை இருக்க அவர் மனைவி மஹாலக்ஷ்மி தாயாரும் அவர் மார்பிலே இருந்தவாறு காட்சி தந்தாள். அடுத்த கணம் அந்த மன்னனின் அனைத்து பாபங்களும் அடியோடு விலக வியாதிகளும் குணமாயின. புண்பட்ட மேனி பொன் மேனியானது. ஆகவேதான் அந்த இடத்துக்கு கோடிக் கணக்கான தோஷங்களை விலக்கும்  கோடிஹத்தி பாப விமோசனபுரம் எனப் பெயர் ஏற்பட்டது. அதுவே நாளடைவில் மருவி கோழிக்குத்தி என ஆயிற்று. அந்த மன்னனே பிற்காலத்தில் பிப்பலர் எனும் முனிவர் ஆனாராம்.  பிப்பலர் அருளிய சனி காயத்ரி மந்திரம் இது:-

ஓம் கோணஸ்த பின்கலே பப்ரு

கிருஷ்ணோ ரௌத்ராந்த கோயம்

சௌரி சனைச்ரே மந்த பிப்பலா தேன ஸமஸ்ஸதுத்

ஏதானி தச நாமானி பிராத ருத்தாய ய: படேத்

சனைச்சர கிருதா பீட நகதாசித் பவிஷ்யதி

ஆனால் வேறு சிலரோ அந்தக் கதையை வேறு விதமாகக் கூறுகிறார்கள். அந்தக் கதையின்படி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பிப்பலர் என்ற மகரிஷி எனும் மாபெரும் தவசீலர் இருந்தார். இறை பக்தியில் முழுமையாக மூழ்கி இருந்தவர்  எந்த நேரமும் இறைவனை வணங்கி வந்தார்,  தன்னை நாடிவந்த அன்பர்கள் பலருக்கும் நல்வழி காட்டி ஆசி வழங்கி வந்தார். ஆனாலும் அவருக்கு திடீரென கடுமையான சரும நோய் ஏற்பட்டது. தாங்க முடியாத சரும நோயினால் அவதிப்பட்ட பிப்பலர் ஒருநாள் பெருமாள் ஆலயத்திற்கு சென்று  ‘பரந்தாமா, இறைப் பணியில் ஈடுபட்டு என்னையே உனக்கு அர்ப்பணித்திருக்கின்ற எனது  பக்தியில் என்ன குறை கண்டாய்? உனது பக்தனான எனக்கு ஏன் இப்படி ஒரு வேதனையையும் சோதனையையும்  தந்து உள்ளாய்?  எனது சரீர வியாதியை போக்க மாட்டாயா?’ என மனமுருகி அழுதார்.  அன்று இரவே  பிப்பல மகரிஷின் கனவில் தோன்றிய பெருமாள், ‘முனிவரே நீர் இந்த ஜென்மத்தில் எனது இறை பணியில் உள்ளாய். அதனால் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் முன் ஜென்மத்தில் நீ அரசனாக இருந்தபோது சில உயிரிழப்பிற்குக் காரணமாக இருந்திருக்கிறாய். அதனால் நீ அடைந்துள்ள  பாவங்களினால்  இந்த ஜென்மத்தில் பிறப்பு  எடுத்து  சரீர நோயால் அவதிப்படுகின்றாய். ஆகவே அந்த பாவம் தீர,  காவிரிக் கரை ஓரத்தில் தவம் செய்த பின்,  உனது பயணத்தைத் தொடங்கு. வழியில் மூவலூரில் குடிகொண்டுள்ள ஸ்ரீ மார்க்கசகாயேஸ்வரரை  வணங்கித் துதிக்க உன்னுடைய பாவம் தொலைந்து நோய் விலக ஒரு வழி கிடைக்கும்’ என்று கூறிவிட்டு மறைந்தார்.  கனவில் தனக்கு கிடைத்த உபதேசத்தின்படியே பிப்பல  முனிவரும் காவேரிக்கு கரையில் தவம் செய்த பின் தனது யாத்திரையைத் தொடங்கி வழியில் உள்ள தலங்களை எல்லாம் தரிசித்தப் பின்னர் மூவலூரை  சென்றடைந்து அங்கிருந்த ஆலயத்தில் ஸ்ரீ மார்க்க சகாயேஸ்வரரை உருக்கமாக வழிபட்டார்.  அதனால் மனம் மகிழ்ந்த ஈஸ்வரன் ‘பிப்பலரே , இங்கிருந்து வடக்கு நோக்கிச் சென்றால் உன் பிரச்னைக்கு விடிவு கிடைக்கும்’ என்று கூறி மறைந்தார்.  பிப்பலரும் அப்படியே வடக்கு நோக்கி  நடக்கத் தொடங்கினார். சில நாட்களிலேயே  கோழிகுத்தி பகுதியை வந்தடைந்தபோது அவருக்கு உயர்ந்து வளர்ந்திருந்த ஓர் அத்தி மரம் தெரிய, அங்கு நிழலில் இளைப்பாற சென்றவருக்கு  அதே மரத்தின் அடியில் ஸ்ரீமன் நாராயணர், சங்கு சக்கிரம் ஏந்திய நான்கு கைகளுடனும், அபயஹஸ்த சின்னத்தை காட்டியபடியும்  வானளாவ உயர்ந்து நிற்கும் விஸ்வரூபமான தன் உருவத்தைக்  காட்டிபடியும்    பிப்பலருக்கு காட்சி அளித்தார். உடனே, பிப்பலரின் உடலில் இருந்த சரும வியாதி முற்றிலுமாக மறைந்தது. அவர் உடல் தங்கமயமாக ஜொலித்தது. சரும நோயிலிருந்து விடுபட்ட பிப்பலர், பின்னர் காவிரிக் கரையிலேயே, ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து தவத்தில் ஈடுபட்டார். இதையொட்டி ஓடும் காவிரி தீர்த்தத்தைப் ‘பிப்பல மகரிஷி தீர்த்தம்’ என்று அழைக்கிறார்கள்.  இப்படியாகவே இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டால் தோல் வியாதிகள் விலகும் என்ற நம்பிக்கை தோன்றியது. ஸ்ரீ மார்க்கசகாயேஸ்வரர் (வழிகாட்டும் வள்ளல்) ஆலயத்தின் முதல் பிராகாரத்தில் பிப்பலருக்கு தனி சன்னதி உள்ளது. இந்த  பிப்பல மகரிஷி தீர்த்த மகிமை எப்படிப்பட்டது என்றால் இன்றும் மாயவரத்தில் எந்த ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றாலும் முதலில் பிப்பல மகரிஷி தீர்த்தத்தில்  இருந்து எடுத்து வந்த  நீரை கொண்டே கும்பாபிஷேகத்தை துவக்குவார்களாம்.

இந்த தீர்த்தத்தில் நீராடினால் ஸ்ரீ வானமுட்டிப் பெருமாளின் அருளால்  அனைத்து உடல் உபாதைகளும், நோய்களும் தீரும். மேலும்   பாவப் பிணி, பிறவிப் பிணி ஆகிய அனைத்தும் நீங்கும்  என்ற நம்பிக்கை உள்ளது. அதனால்தான் எந்த இடத்தில் ஸ்ரீமன் நாராயணர் பிப்பல முனிவருக்கு விஸ்வரூபமாக அத்தி மரத்தின் அடியில் காட்சி தந்தாரோ அதே இடத்தில்  ஸ்ரீ வனமுட்டி பெருமானின் ஆலயமும் அமைந்துள்ளது. அங்கு அத்தி மரத்தில் விஸ்வரூப தரிசனத்தில் ஸ்ரீ பெருமான் காட்சி தருகின்றார். இந்தப் பெருமாளை வேண்டினால், பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், சனி தோஷம் உள்ளிட்ட பல தோஷங்களும்  விலகும் என்கிறார்கள்.

அது மட்டும் அல்ல இங்குள்ள வானமுட்டிப் பெருமானை தரிசித்தால் அவரை தரிசனம் செய்பவர்களுக்கு திருப்பதி வெங்கடாசலபதி, காஞ்சீபுரம் ஆதி வரதராஜ ஆலய பெருமான் மற்றும் சோழிங்கநல்லூர் யோக நரசிம்மர் போன்ற மூவரையும் தரிசித்த பலன் கிடைக்கும் எனவும் கூறுகிறார்கள். ஏன் எனில் பெருமாள் அங்கெல்லாம் எழுந்தருளியபோது அவருக்குள் அடக்கிக் கொண்டு இருந்த அதே சக்திகளை இங்கு எழுந்தருளியபோது  எடுத்து வந்தார் என்கின்றார்கள். இந்த ஆலயத்தில் உள்ள கல்வெட்டில் கூறப்பட்டு உள்ள செய்தி என்ன எனில் ஐம்பத்தியொரு (51) சனிக்கிழமை இங்கு வந்து பத்து பிராமணர்களுக்கு போஜனம் செய்வித்தால் சனிதோஷம் விலகும் என்பதே.

ஸ்ரீ வானமுட்டி பெருமாள் ஆலயத்திற்கும், ஸ்ரீ மார்க்கசகாயேஸ்வரர் ஆலயத்திற்கும்  நெருங்கிய தொடர்பு உள்ளது.  அதற்கு பல காரணங்கள் உள்ளன.  ரோக  தோஷத்தினால் அவதிப்பட்ட பிப்பல மகரிஷி தனக்கு கிடைத்த ஆசிரி வாக்கின்படி  முதலில் ஸ்ரீ மார்க்கசகாயேஸ்வரர் ஆலயத்தில் சென்று ஸ்ரீ சிவபெருமானை  வேண்டி துதித்தபோது, ஸ்ரீ  சிவபெருமானோ   பிப்பல மகரிஷியின் ரோக தோஷத்திற்கு தானே நிவாரணம் கொடுக்காமல்,  அவருடைய வியாதிக்கு நிவாரணம் பெற   ஸ்ரீ வானமுட்டி பெருமாளிடம்   அனுப்பினார். பரபிரும்மனின் உடலில் இருந்து வெளியானவர்களே ஸ்ரீ சிவபெருமான் மற்றும் ஸ்ரீ விஷ்ணு பெருமான்  என்பதினால் இருவருக்குமே ஒரே தன்மையிலான தெய்வீக சக்திகள் உண்டு என்றாலும் ஸ்ரீ  சிவபெருமானோ பிப்பல மகரிஷியை  எதற்க்காக ஸ்ரீ வானமுட்டி பெருமாளின் அருளை பெற்றுக் கொண்டு நிவாரணம் அடையுமாறு அவரிடம் அனுப்ப வேண்டும் ? அதற்கு ஒரு காரணம் உண்டு.

இந்த கால கணினியைப் போல உலகத்தை சிருஷ்டி செய்த பரபிரும்மனிடம்  மிகப் பெரிய கணினி இருந்துள்ளது என்பது தெளிவாகின்றது. தெய்வங்களும், அவதாரங்களும், எந்தெந்த இடங்களில், எந்தெந்த காலகட்டத்தில் அவதரிக்க வேண்டும், அவர்கள் தலைமையில் எத்தனை மானிட ஆத்மாக்கள் இயங்கி கொண்டு இருக்கும்  போன்ற அனைத்து செயல் திட்டத்தையும் நுண்ணியமாக வகுத்து, அதை பூமியில் செயல்படுத்தி உள்ளார்.  பலகோடி, கோடிக்கணக்கான  மானிட ஆத்மாக்களில், யார், எந்த தெய்வத்திடம்  சரணாகதி அடைய வேண்டும் என்பதை அவர்களது தலைவிதியாக நிர்ணயித்து  செயல்படுத்தில் உள்ள தத்துவத்தை புரிந்து கொள்ள இயலாது.   ஒருவருக்கு எந்த தெய்வத்தின் மூலம்  நிவாரணம் கிடைக்க  வேண்டும் என்று அவர்களது விதி எழுதப்பட்டு இருந்ததோ, அவர்களுக்கு   அந்த தெய்வம் மட்டுமே நிவாரணம் கொடுக்க வேண்டும், பிற தெய்வங்களுக்கு நிவாரணம் அளிக்கும் சக்தி இருந்தாலும் அதை அவர்கள்  பிற தெய்வங்களின் கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு பிரயோகிக்கக் கூடாது  என்ற தெய்வ நியதிகளை பிரும்ம நியதியாக வைத்து இருந்தது  வியப்பானது. அதாவது இன்னென்ன தெய்வங்களுக்கு இன்னென்ன அதிகார வரைமுறை என  தீர்மானிக்கப்பட்டு அவற்றை மீறும் தெய்வங்களின் அதிகாரங்களும் பறிக்கப்படுகின்றன என்பது பிரும்ம நியதியின் கூடுதல் அம்சமாக இருந்துள்ளது. ஒவ்வோர் தெய்வமும் குறிப்பிட்ட இடத்தில் சென்று அவதரிக்க வேண்டும் என்ற நுட்பமான வழிமுறைகளையும், அவை அவதரிக்க வேண்டிய இடங்களையும் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய மானிட ஆத்மாக்களையும்  பிரும்மா துல்லியமாக வடிவமைத்து வைத்து இருந்துள்ளார் என்பதின்  காரணம், அனைத்து தெய்வங்களும் ஒரே இடத்தில் சென்று அவதரிக்கக் கூடாது என்பதற்காகவேதான். இதனால்தானோ என்னவோ ஸ்ரீ சிவபெருமானினாலும் நிவாரணம் கொடுக்க முடியும் எனும்போது  ஸ்ரீ வானமுட்டி பெருமாளின் அருள் மூலமே பிப்பல மஹரிஷி நிவாரணம் பெற வேண்டும் என்று இருந்த  நியதியை மீறாமல் தன்னிடம் வந்த பிப்பல மகரிஷியை  ஸ்ரீ வானமுட்டி பெருமாளிடம்  அனுப்பி வைத்து உள்ளார்.   இதில்  இருந்தே  ஸ்ரீ சிவபெருமானும் ஸ்ரீ விஷ்ணுவும் வெவ்வேறானவர்கள்  அல்ல,  இருவரும் ஒரே தெய்வத்தின் நிழல் பிம்பங்கள்  என்ற உண்மை வலுப்படுகின்றது (இந்த பிரபஞ்சத்தை படைக்க விரும்பிய  உருவமற்ற பரபிரும்மன் மூன்று தெய்வங்களை உள்ளடக்கிய தெய்வம் எனும் கதை ஏற்கனவே துவக்க பத்திகளில்  தரப்பட்டு உள்ளது ). 

இரண்டாவதாக ஸ்ரீ மார்க்கசகாயேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ சிவபெருமானுக்கு முன் காணப்படும் நந்தி தேவருடைய தலை எதனால்  வலதுபுறமாக திரும்பிப் பார்த்தபடி உள்ளது என்பதை குறித்து  விளக்க வேண்டும்.  ஸ்ரீ மார்க்கசகாயேஸ்வரர் ஆலயத்தின்  வலப்புறத்தில்தான் ஸ்ரீ வானமுட்டி பெருமாள் ஆலயம் இருந்தது.  தன்னிடம் நிவாரணம் கோரி வந்திருந்த  பிப்பல மகரிஷியை தனது ஆலயத்தின் வலது பக்கத்தில்  இன்னொரு ஆலயத்தில் குடி கொண்டு இருந்த ஸ்ரீ வானமுட்டி பெருமாளிடம் செல்லுமாறு அனுப்பிய ஸ்ரீ சிவபெருமான் அவருக்கு வழிகாட்டுமாறு ஸ்ரீ நந்தி தேவரிடம் கூற, அவரும் பிப்பல மகரிஷி  செல்ல வேண்டிய திசையைக் காட்டும் விதத்தில் தனது தலையை வலது பக்கமாக திருப்பிக் காட்டி அப்படியே அமர்ந்து விட்டார் என்பது ஒரு செய்தி. இதில் அடங்கி உள்ள இன்னொரு தத்துவத்தைப் பார்க்கும்போது நமக்கு புரிவது என்ன என்றால் ஸ்ரீ சிவபெருமானும் ஸ்ரீ விஷ்ணு பெருமானும் வெவ்வேறு  அவதாரங்களில் உள்ள ஒரே தெய்வங்களே  என்பதினால்தான் ஸ்ரீ சிவபெருமானை நமஸ்கரித்த வண்ணம்  அமர்ந்து இருந்த  ஸ்ரீ நந்தி தேவர், பிப்பல ரிஷிக்கு வழிகாட்டும் நேரத்தில்  வலப்புற திசையில் இருந்த ஸ்ரீ விஷ்ணு பெருமானுக்கும் தமது நமஸ்காரங்களை தெரிவிக்கும் வகையில் வலது  பக்கத்தை நோக்கி தலையை திரும்பி உள்ளார் என்பதே ஆகும். சாதாரணமாக நாம் பூமியில் விழுந்து வணங்குகையில் நேராக மற்றும் இரு புறத்தையும் நோக்கி தலையை திருப்பி வணங்கிய பின்னரே எழுந்திருப்போம் என்பதின் காரணம் மூன்று பக்கங்களிலும் உள்ள தெய்வங்களுக்கும் வந்தனங்களை தெரிவிப்பது என்ற தத்துவம் இங்கு கவனிக்க வேண்டியதாகும்.  

மூன்றாவது என்ன என்றால் ஒரு காலத்தில் ஸ்ரீ வானமுட்டி பெருமாள் ஆலயம்  ஏழு பிராகாரங்களைக் கொண்டு இருந்ததாகவும் அந்த ஏழாவது பிராகாரம் ஸ்ரீ மார்க்கசகாயேஸ்வரர் ஆலயத்தை தொட்டபடி ஒன்றிணைந்த நிலையில் இருந்து  இரு ஆலயமும் ஒன்றிணைந்த  ஸ்ரீ சிவா விஷ்ணு ஆலயம்  போன்ற ஒரு தோற்றத்தை தந்தபடி இருந்ததாகவும் காலப்போக்கில்  பிராகாரங்கள்  அழிந்து அந்த இடங்களில் கிராமங்கள் விஸ்தரிக்கப்பட்டு விட்டன என்பதினால் இரு ஆலயங்களும் தனித் தனி ஆலயங்களாக அமைந்து விட்டன என்றும்  கருத்து கூறுகின்றார்கள் .

1200 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய ராஜகோபுரம். அதைக் கடந்து உள்ளே நுழைந்ததும் பலி பீடமும், கொடி மரமும், கருடாழ்வார் சன்னிதியும் உள்ளது. கருவறையில் 14 அடி உயரத்தில் வானமுட்டி பெருமாளின் தோற்றத்தைக் கண்டு நாம் சிலிர்க்காமல் இருக்க முடியாது. பெருமாளின் வலது மார்பில் தாயார் தயாலட்சுமி உள்ளார். இடதுபுறம் பூமாதேவியின் சிலை வடிவம் உள்ளது. மிகப் பெரிய அத்தி மரமே பெருமாளாக மாறி இருப்பதால், மரத்தின் வேரே திருவடிகளை தாங்கி நிற்கும் அதிசயத்தை உலகில் வேறு எங்கும் நாம் காண இயலாது. மூலவர் அத்தி மரத்தால் ஆனவர் என்பதால், அவருக்கு எந்தவித அபிஷேகமும் கிடையாது. வெறும் சாம்பிராணி காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 8.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது கோழிகுத்தி கிராமம். மயிலாடுதுறையில் இருந்து செல்ல மினி பஸ், ஆட்டோ வசதி உள்ளது.

ஆலய விவரம்:

மூலவர் : வானமுட்டிப் பெருமான், பக்தப் பிரியன் மற்றும் வரதராஜன் என்பன

உற்சவர் : யோக நரசிம்ம பெருமான்

தாயார்: மஹாலக்ஷ்மித் தாயார்

தல விருட்ஷம்: அத்தி மரம்

 

ஆலயத்தின் சில காட்சிகள் 

ஆஞ்சனேய  உருவச் சிலையின் 

முன்புற மற்றும் பின்புற தோற்றம்