திருப்போரூர் முருகன் ஆலயம்
சாந்திப்பிரியா
சென்னையில் இருந்து நாற்பத்தி ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் செங்கல்பட்டைத் தாண்டி உள்ளதே திருப்போரூர் முருகன் ஆலயம். அது பத்தாம் நூற்றாண்டை சார்ந்த பல்லவன் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம். அதில் உள்ள முருகனின் சிலை ஸ்வயம்புவாம். அந்த ஆலயத்துக்கு செல்ல நல்ல பாதை உள்ளது. அந்த ஆலயத்தின் வரலாறு சுவையானது. அது குறித்துப் பல கிராமியக் கதைகள் நிலவுகின்றன.
சுமார் நானூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் 1645 ஆம் ஆண்டு வாக்கில் அந்த இடத்தின் அருகில் இருந்த கிராமத்தில் சிதம்பர ஸ்வாமிகள் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் மதுரை மீனாஷி தேவியின் பக்தர். ஒரு நாள் தேவி அவர் கனவில் வந்து திருப்போரூரில் முருகனுக்கு ஒரு ஆலயம் அமைக்குமாறு கட்டளை இட்டாள். ஆனால் சுவாமிகளோ அந்த தேவி தன் முன்னால் வந்து தனக்கு தரிசனம் கொடுத்தால்தான் அதை செய்வேன் எனப் பிடிவாதமாக அவளைக் காண வேண்டும் என சாப்பிடாமலேயே விரதம் இருந்தார். ஆகவே ஒரு நாள் அவர் முன்னால் மீனாஷி தேவி தோன்றி அவர் தலையை தொட்டு ஆசி கூறினாள். அவரும் அதன் பின் திருப்போரூர் பகுதிக்கு கிளம்பிச் சென்றார். அந்த இடம் அப்போது அடர்ந்த காடாக இருந்தது. போக்குவரத்து வழிகூட இல்லை. ஆனாலும் தனக்கு மதுரை மீனாஷி கட்டளை இட்டபடி அவள் கூறி இருந்த இடத்தை அடைந்தபோது எந்த இடத்தில் ஆலயத்தை அமைப்பது எனக் குழம்பி நின்றார். அப்போது முருகப் பெருமானே ஒரு சிறிய பையனாக அவர் முன் வந்து எந்த இடத்தில் ஆலயம் அமைக்க வேண்டும் என அவரை அழைத்து சென்று காட்டியப் பின் மறைந்து விட்டார். அப்போது அங்கு ஒரு புற்று இருந்ததைக் கண்டார். அந்தப் புற்றை விலக்கியபோது அதனுள் வள்ளி, தேவயானை சமேத முருகன் சிலை கிடைத்ததாகவும் அதுவே தற்பொழுதைய திருப்போரூர் ஆலயத்தில் உள்ள சிலை எனவும் நம்புகிறார்கள்.

அது மட்டும் அல்ல , அந்த இடம் அப்போது ஒரு முஸ்லிம் மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. அவருடைய மகளுக்கு தீராத வியாதி இருந்தது. மன்னரது ஆஸ்தான பண்டிதர்கள் அந்த மன்னனிடம் சிதம்பர சுவாமிகளை சென்று பார்த்து அவரை வணங்கினால் அவரால் அதை குணப்படுத்த முடியும் என்று கூற அந்த மன்னனும் அவரிடம் சென்று தனது மகளின் நோயை குணப்படுத்துமாறு கேட்க அவரும் முருகனை வேண்டிக் கொண்டு அந்த மன்னனின் மகளை பூரண குணப்படுத்தினார். அதனால் மனம் மகிழ்ந்த அந்த மன்னனும் ஆலயம் அமைக்க நிலமும் தந்து மற்ற உதவிகளும் செய்துள்ளதாக ஒரு கதை உள்ளது.

அங்கு முருகப் பெருமான் வந்தது எப்படி? சூரபத்மனை வதம் செய்தப் பின் முருகன் அந்த அசுரனின் மற்ற அசுரர்களை துரத்தி வந்து திருப்போரூரில் வதம் செய்தாராம். அதனால்தான் திரு என்ற முருகன் போர் புரிந்த இடம் என்பதினால் அது திருப்போரூர் என ஆயிற்றாம். மேலும் அந்த இடத்தில் வள்ளியும் தேவயானியும் அசுரனோடு முருகன் யுத்தம் செய்தபோது தேவர்களைக் காத்து நின்றார்களாம். அங்குதான் முருகனும் வள்ளியும் சேர்ந்து அகஸ்தியருக்கு பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை போதித்தார்களாம். மேலும் கான்வ முனிவரின் சாபத்தைப் பெற்ற விஷ்ணு பகவான் தனது மனைவி லஷ்மியுடன் அங்கு வந்து சிவபெருமானை துதித்து சாப விமோசனம் பெற்றாராம். அங்குதான் சிவபெருமான் தமது குடும்பத்தினருடன் வான்மிகநாதர் என்ற பெயரில் வசிக்கின்றாராம் . அந்த ஆலயத்தின் அருகில் உள்ள குளத்து நீர் முருகப் பெருமானின் ஏற்பட்டது என்கிறார்கள்.

ஆலயத்தில் முருகனின் பல வகைகளான சிலைகளும் உள்ளன. போர்புரிபவரைப் போலவும் குழந்தை வடிவிலும் அவர் காட்சி தருகிறார். அந்த ஆலயத்தில் உள்ள பனை மரத்தின் அடியில் உள்ள எறும்புப் புற்றின் அருகில் வள்ளி சமேத முருகப் பெருமான் தேவயானையுடனும் இருந்தவாறு காட்சி தருகிறார்.