திருப்பாம்புரம்
சாந்திப்பிரியா
 ஆலயத்தின் மூலவர் 
கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் பாதையில் பேரளம் எனும் ஊரில் இருந்து சுமார் ஆறு அல்லது ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது  இன்னொரு அதிசயமான ஆலயம். அந்த ஆலயத்தின் பெயர் திர்பாம்புரம் என்பது.   திரு பாம்பு சுற்றிய  புறம் என்பதே  பெயர் மருவி திருப்பாம்புரம் என ஆகிவிட்டது.  இந்த தலத்தை உரசுபுறம், ஷேஷபுரி,  பாம்புரன்னகர் போன்றப் பெயர்களிலும் அழைக்கின்றார்கள்.
ஆலயத்தின் மூல தெய்வமான சிவலிங்கத்தை ஷேஷபுரீஸ்வரர், பாம்பீசர், பாம்புரநாதர், மற்றும் வன்னீஸ்வர் போன்றப் பெயர்களிலும் அவர் நாயகியான அம்பிகையை பிராமராமிகை அல்லது வண்டுசேர் பூங்குழலி  என்றும் அழைக்கின்றார்கள்.
 ராகுவையும், கேதுவையும் இணைத்துக் 
காட்டும் அஷ்டமகா  நாகம் எனும் சிலை 

இந்த ஆலயத்தில் உள்ள சில சிறப்புக்களில் ராகுவும், கேதுவும் இணைந்து ஒரே உருவமாக காட்சி தருவதும், அம்பிகை கிழக்கு நோக்கி நின்று கொண்டு இருப்பதையும் கூறலாம்.

இந்த ஆலயத்தில் மஹா விஷ்ணுவைத் தாங்கிப் பிடிக்கும் ஆதிசேஷ நாகம் வந்து சிவபெருமானை வணங்கியதான வரலாறு உள்ளது. அதன் பின்னணிக் கதையை ஆலயத்தில் எழுதி வைக்கப்பட்டு உள்ள தலப் புராணம் மூலம் அறிய முடிகின்றது .  தினமும் ஈசனை வந்து வணங்கிக் கொண்டு இருந்த விநாயகர் ஈசன் கழுத்தில் இருக்கும் தன்னையும் சேர்த்தே வணங்கி வருவதாக எண்ணிக் கொண்டு ஈசன் கழுத்தில் இருந்தக பாம்பு கர்வம் அடைந்தது. ஒரு நாள் அதைக் கவனித்த விநாயகர் கோபமுற்று அதுமுதல் நாகங்களின் சக்திகள் அனைத்தும் பலவீனமாகுமாறு  சாபம் கொடுத்து விட்டார்.  ஆகவே ஆதிசேஷன், ராகு, கேது உட்பட அனைத்து நாகங்களும் தத்தம் சக்தியை இழந்து நின்றன. அதனால் தமக்கு மீண்டும் இழந்த சக்தி கிடைக்க வழி கூறுமாறு அவர்கள் தன்னிடம் வந்து வேண்டியதினால் இரக்கம் கொண்ட சிவபெருமான் சிவராத்தரி அன்று நான்கு ஜாமங்களில் நான்கு திசைகளிலும் உள்ள தன்னை வந்து வணங்கி சாப விமோசனம் பெறுமாறு கூறி விட்டார். அதனால் நாகராஜனின் தலைமையில் சிவராத்தரி அன்று அனைத்து நாகங்களும் அணிவகுத்து முதல் ஜாமத்தில் குடந்தையில் உள்ள நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரத்தில் நாகனாதரையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரத்தின் பாம்புரனாதரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் வணங்கி வருவதான ஐதீகம் உள்ளது.  இவர்களைத் தவிர கார்கோடகன், அகஸ்தியர் மற்றும் பிரும்மா போன்றவர்களும் இங்கு வந்து ஈசனை வணங்கிச் சென்றதான வாய்மொழிக்  கதை உள்ளது. அதனால்தான் இந்த ஆலயத்துக்கு விஜயம் செய்பவர்கள் முதல் ஜாமத்தில் குடந்தையில் உள்ள நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரத்தில் நாகனாதரையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரத்தின் பாம்புரனாதரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் வணங்கி விட்டு வந்தால் மட்டுமே முழுமையானப் பலனைப் பெற முடியும் என்கிறார்கள். ஒரே நாளில் முடியாவிடில் கூட இரண்டு அல்லது மூன்று  நாட்களில்  இப்படி ஜாமம்  ஜாமமாக நான்கு ஆலயங்களிலும் சென்று வழிபடலாம் என்கிறார்கள்.

தல விருட்ஷமான  வன்னி மரத்தில் பிரார்த்தனைக்காக  
கட்டப்பட்டு உள்ள ஒரு குழந்தையின் தொட்டில்

இத்தலம் குடந்தை, திருநாகேஸ்வரபுரம், நாகூர், காலஹஸ்தி , மற்றும் கீழ்பெரும்பள்ளம் போன்ற ஐந்து இடங்களில் உள்ள பெருமைகளை சேர்த்து அமைக்கப்பட்டு உள்ள பஞ்சலிங்க ஸ்தலம் என்பதினால் இது சர்வரோக நிவாரணத் தலம் எனப்படுகின்றது. இந்த தலத்தில் ராகுவும் கேதுவும் ஏகசரீரமாக இருந்து தம் நெஞ்சில் இறைவனை வழிபட்டதினால் ராகு-கேது சடலம் என்ற  புகழைப் பெற்றது. ஞாயிறு, செய்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இந்த ஆலயத்தில் எப்போதாவது மல்லிகை மற்றும் தாழம்பூ போன்ற மலர்களின் மனம் வீசும் என்றும், அப்போது நிச்சயமாக அந்த ஆலயத்தில் ஏதேனும் ஒரு பாம்பின் நடமாட்டமுள்ளதாகவும் கூறுகிறார்கள். மேலும் இந்த ஆலயத்தில் 2002 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதியன்று ஒரு பாம்பு சிவலிங்கத்தின் மீது அமர்ந்து கொண்டு சுமார்7 முதல்  8  அடி நீளமுள்ள தன் சடையை அதன் மீது உரித்து விட்டுச் சென்ற காட்சி அபூர்வமானதாம். அதைப் படம் எடுத்து ஆலயத்தில் வைத்து உள்ளார்கள். அந்தப் பாம்பின் சடையும் அப்படியே பிரேம் போட்டு மாட்டி வைத்து உள்ளார்கள்.

 
ஆலய தல வரலாற்றைக் கூறும் பலகை 

ஆதிசேஷன் அங்கு வந்தபோது இறைவனை துதித்து வழிபட அமைத்தக் குளமே சிற்றம்பலக் குட்டை என்ற பெயரில் உள்ள குளமாம்.
இந்த ஆலயத்தில் சென்று வணங்கினால் நாக தோஷங்கள் விலகும் , குழந்தைப் பேறு இல்லாதாவர்கள் அந்த பாக்கியத்தைப் பெறுவார்கள், நீண்ட காலமாக உடல் நலமுற்று இருப்பவர்கள் உடல் நலம் அடைவார்கள் போன்ற நம்பிக்கைகள் உள்ளன. இந்தத் தலம் தேவாரம் பாடல் பெற்றத் தலம் ஆகும்.  இங்குள்ள அஷ்டமகா நாகம் எனப்படும் நாகத்திற்கு முன்னால் எலுமிச்சை  விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள். ஆலயத்துக்கு விஜயம் செய்தால் எங்கெங்கு எந்த வரிசையில் தீபங்கள் ஏற்றி  வழிபட வேண்டும் என்பதையும் எழுதி வைத்து உள்ளார்கள். ஆலயத்தின் தல விருத்ஷமான வண்ணை மரத்தடியில் உள்ள நாகத்திற்கு மஞ்சள் கட்டிய நூலைக் கட்டி தாலிபாக்கியம் பெற வேண்டுகிறார்கள். குழந்தை வரம் வேண்டுவோர் வன்னி மரத்தில் சிறு தொட்டிலைக் கூடக் கட்டிவிட்டு வேண்டிச் செல்கிறார்கள்.

 ஆலய  சன்னதியில்  ராகு -கேது  . இதன் முன்னால்தான் 
எலுமிச்சைப் பழ விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள். 
 

சோழ மன்னர்கள் ஆட்சியில் கட்டப்பட்டு அல்லது புதுப்பிக்கப்பட்டு உள்ள இந்த ஆலயம் மிகப் பழமையானது என்பதை ஆலயத்தில் உள்ள கல்வெட்டின் மூலம் அறிய முடிகின்றது.

ஆலய விலாசம் 
 
The Executive Officer
Arulmigu seshapureeswarar Kedhu Temple,
Kudavasal T.K,
Thirupampuram,
Thiruvarur Dt.
Phone : 0435- 2469555
E Mail : info@tirupampuramraahukethu.org