
கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் சுமார் இருபது கிலோமீட்டர் தூரத்தில் திருவைகாவூர் எனும் ஊர் உள்ளது. ஆனால் இங்கு செல்வதற்கு குறைந்த அளவு பஸ் வசதியே உயல்லை என்பதினால் ஏதாவது தனி வாகனத்தில் செல்வது வசதியாக இருக்கும். அது போல ஸ்வாமி மலையில் இருந்தும் இங்கு செல்லலாம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் எனக் கூறப்படும் இந்த சிவபெருமானின் ஆலயம் தனி வரலாற்றைக் கொண்டு உள்ளது. இதை வில்வ வனம் என்றும் கூறுகிறார்கள். ஆலய வரலாறு என்ன என்றால் ஒரு முறை கொள்ளிடம் ஆற்றுக் கரையில் இருந்த இடத்தில் வேட்டை ஆடிக் கொண்டு இருந்த வேடன் ஒருவன் ஒரு மானைக் கண்டு அதைப் பிடிக்க அதைத் துரத்தினான். ஆனால் அதுவோ மிகவும் வேகமாக ஓடி அருகில் இருந்த காட்டிற்குள் சிவபெருமானை வேண்டியவாறு துதித்தவாறு தவத்தில் அமர்ந்து இருந்த முனிவரின் பின்னால் சென்று அவர் பர்ணசாலையில் ஒளிந்து கொண்டது. அதன் மீது அம்பை எய்ய எடுத்தவன் அந்த முனிவரின் பர்ணசாலையில் அது பதுங்கிக் கொண்டதைக் கண்டு முனிவரிடம் சென்று அதை கொண்டு எடுத்துச் செல்ல அனுமதி கேட்டான். அவர் அனுமதி இல்லாமல் அவர் வீட்டிற்குள் எப்படி நுழைவது? முனிவரோ அது பாவப்பட்ட பிராணி எனவும், தன்னிடம் வந்து தஞ்சம் அடைந்து விட்டதினால் அதை தன்னால் அவனுக்குத் தர இயலாது எனவும், ஆகவே அதை விடுத்து வேறு ஏதாவது மிருகத்தை வேட்டை ஆடிக் கொள்ளுமாறும் கூறிவிட்டு பர்ணசாளைக்குள் சென்று விட்டார்.
ஆனால் கோபமடைந்த வேடன் அவர் பேச்சை மீறிக் கொண்டு பர்ணசாலைக்குள் புக முயன்றபோது திடீர் என ஒரு புலி அந்த பர்ணசாலைக்குள் இருந்து வெளி வந்து அவன் மீது பாயத் தயார் ஆயிற்று. அதைக் கண்டு பயந்த வேடன் ஓடத் துவங்கினான். அதுவும் அவனை விடாமல் துரத்தியது. ஓடிச் சென்ற வேடன் அருகிலுள்ள சிறு ஆலயத்துக்குள் ஓடிச் சென்று அங்கிருந்த ஒரு மரத்தின் மீது ஏறிக் கொண்டான். அந்த காலங்களில் காடுகளில் நான்கு சுவர்களைக் கொண்ட ஆலயங்கள் இருந்தது இல்லை. வெறும் களிமண்ணால் மேடு ஒன்றை எழுப்பி அதற்குள் வழிபடும் தெய்வங்கள் வைக்கப்பட்டு இருக்கும். புலியும் அதற்குள் புகுந்து கொண்டது. புலி மரத்தடியில் அமர்ந்து கொண்டு அவன் கீழே இறங்கினால் மிடித்துக் கொள்வதற்காக காத்திருந்தது. உண்மையில் முனிவரின் வேண்டுகோளை ஏற்று சிவபெருமானே புலி உருவில் வந்து இருந்தார்.
அன்று மகா சிவராத்திரி . இரவு வர , பயத்தினாலும், பசியினாலும் அவதியுற்ற வேடன் புலி அந்த இடத்தைவிட்டு எப்போது போகும் எனப் பார்த்தவாறு தூங்காமல் மரத்தின் மீது கண் விழித்து உட்கார்ந்திருந்தான். அப்போது பதற்றத்தில் என்ன செய்வது எனப் புரியாமல் அவ்வாறு மரக்கிளையில் உட்கார்ந்து இருக்கும் போது மரத்திலுள்ள இலைகளை ஒவ்வொன்றாக பறித்துக் கீழே போட்டபடி பொழுதைப் போக்கினான். அவன் உட்கார்ந்து இருந்த மரமோ ஒரு வில்வ மரம். இருட்டு வந்து விட புலி உருவில் இருந்த சிவபெருமானும் மறைந்து விட்டார். அது அவனுக்குத் தெரியாது. அவன் அமர்ந்து இருந்த மரத்தின் கீழேதான் சிவ லிங்கமும் இருந்தது. ஓடி வந்த வேகத்தில் அவன் அதைக் கவனிக்கவில்லை என்றாலும் அவன் பிய்த்துப் போட்டுக் கொண்டு இருந்த வில்வ இலைகளோ அந்த சிவலிங்கத்தை அர்ச்சனை செய்வது போல அதன் தலை மீது விழுந்து கொண்டு இருந்தது. விடியற்காலை ஆயிற்று.

அன்று அந்த வேடனின் வாழ்க்கையில் இன்னொரு முக்கியமான நாள். அவன் வாழ்வு காலம் அன்றோடு முடிவடையா இருந்தது . அவனை நோக்கி யமதூதர்கள் வந்து கொண்டு இருந்தார்கள். வந்தவர்கள் ஆலயத்துக்குள் புகுந்து கொள்ள முயன்றபோது அவர்களை நந்திதேவர் தடுக்கவில்லை. காரணம் யமன் சிவபெருமானை தரிசிக்கவே வந்துள்ளார் என்ற நந்தி தேவர் எண்ணினார். ஆனால் அவர் தன் ஆலயத்தில் தன்னைக் கேட்காமல் புகுந்து மகா சிவராத்திரி அன்று தனக்கு வில்வ அர்ச்சனை செய்த வேடனை பிடித்துக் கொண்டு செல்வதா எனக் கோபமுற்ற சிவபெருமான் தக்ஷிணாமூர்த்தி உருவைக் கொண்டு யமதர்மராஜாரை துரத்தி அடித்து நந்தியைக் கடிந்து கொண்டார். தான் செய்த தவறை உணர்ந்த நந்தி தேவர் தன் மூச்சுக் காற்றை வீசி யமனை மேலே செல்ல விடாமல் தடுத்தார். மேலும், கீழும் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டு இருந்த யமராஜார் அங்கிருந்தே சிவபெருமானை துதித்து அவரிடம் தான் செய்த பிழைக்கு மன்னிப்புக் கேட்டார். அதனால் அவரை விட்டு விடுமாறு சிவனார் கூற நந்தி தேவர் தன் மூச்சுக் காற்றை தளர்த்திக் கொள்ள யமராஜர் அங்கிருந்து வேடனின் உயிரை பறித்துக் கொண்டு செல்ல முடியாமல் திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று. ஆனால் நடந்த எதையும் அறியாமல், தான் தன்னை அறியாமலேயே செய்த புண்ணியக் காரியத்தினால் தனக்கு பிறவி நீண்டுவிட்டதையும் உணராமல் புலி சென்று விட்டது என்பதைக் கண்டு மரத்தில் இருந்து இறங்கி சிவனை வழிபட்டு விட்டுச் சென்றான்.

யமதர்மராஜரோ தனது பக்தியை இறைவனுக்குக் எடுத்துக் காட்ட எண்ணி , ஆலயத்தின் அருகிலேயே ஒரு குளம் வெட்டி, அதன் தீர்த்தத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து சில நாட்கள் அங்கு தங்கி இருந்து வழிபட்டுச் சென்றார். யமன் அமைத்த தீர்த்தம் யம தீர்த்தம் என்ற பெயரில் ஆலயத்தின் முகப்பு வாயிலுக்கு எதிரே இருக்கிறது. அது முதல் அந்த ஆலயத்தில் யார் உள்ளே நுழைகிறார்கள் என்பதைக் கண்காணிக்கும் விதத்தில் இங்குள்ள நந்தி இறைவனை நோக்கி அமர்ந்து கொள்ளாமல் வாசலைப் பார்த்தபடி அமர்ந்து உள்ளது இந்த ஆலயத்தின் விசேஷம்.

இத் தலத்தில் பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் துவாரபாலகர்களாக நின்று உள்ளார்கள் . அதற்குக் காரணம் பிரளய காலத்தில் தன்னுடைய படைக்கும் தொழில் அழியாமல் இருக்க பிரம்மா இங்கே ஒரு கிணற்றை தோண்டி அதில் குளித்து சிவபெருமானை வழிபட்ட பின் ஆலய துவாரகாலகனாக ஒரு புறத்தில் அமர்ந்து விட்டார்.
அரக்கனான சலந்திரன் என்பவனை அழிப்பதற்காக அவன் மனைவியிடம் ஒரு பொய் கூறி அவனை வதம் செய்த மகாவிஷ்ணுவை ஒரு பேடி எனக் கூறி சலந்தரனின் மனைவி சபித்தாள். ஆகவே ஒரு பெண்ணால் கிடைத்த சாபத்தை நீக்கிக் கொள்ளவே தீரவே மகாவிஷ்ணு இங்கு வந்து சிவபெருமானை துதித்து வணங்கி அவர் ஆலய முகப்பில் துவாரபாலகனாக நின்று தவம் புரிகிறார் என்கிறது இந்த ஆலயத்தின் தலபுராணம் என்று கூறுகிறார்கள் . இப்படி பிரும்மாவும், விஷ்ணுவும் துவாரகா பாலகர்களாக நிற்பது வேறு எந்த ஆலயத்திலுமே பார்க்க முடியாது.
மேலும் அக்னி தேவரும் இங்கு வந்து சிவபெருமானை வணங்கித் துதித்து ஒரு தீர்த்தத்தை உருவாக்க அதை அக்னி தீர்த்தம் என்று அழைக்கிறார்கள். நான்கு வேதங்களும் கூட இந்த ஆலயத்துக்கு வந்து சிவபெருமானை துதித்தபடி வில்வ மரங்களாக அமர்ந்து உள்ளார்கள் என்றும் கூறுகிறார்கள். அந்த நான்கு வில்வ மரங்களின் கிளைகளும் ஒன்றாகிப் பின்னிக் கொண்டு ஒரே மரம் போலக் காட்சி தருகிறது ஒரு அதிசயமான காட்சியாகும்.
ஆலயத்தின் மூலவர் மூலவர் வில்வவனநாதர் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளி கிழக்கு நோக்கிய சன்னதியில் அமர்ந்து இருக்க அவர் சன்னதியின் இடதுபுறம் வளைக்கைநாயகி எனும் பெயருடன் அன்னை தனி சன்னதியில் இருக்கின்றார். 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டதென்று கூறப்படும் இந்த ஆலயத்தில் சப்த கன்னிகைகளின் சன்னதி, வள்ளி தெய்வயானையுடன் முருகப்பெருமான், தக்ஷிணாமூர்த்தி, விநாயகர், துர்க்கை , சண்டீஸ்வரர், சூரியன், சந்திரன், சனிபகவான் என அனைவரும் தனி பீடங்களில் உள்ளார்கள். ஆலயத்தின் சுவற்றில் வேடன் முக்தி பெற்றக் காட்சிகள் காணப்படுகின்றன.