சாந்திப்பிரியா

திருப்பராய்த்துறை என்ற சிறு கிராமம் திருச்சியில் இருந்து கரூர் செல்லும் வழித் தடத்தில் இருபது கிலோ தொலைவில் உள்ளது. குளித்தலையில் இருந்தும் அந்த ஆலயம் செல்லலாம். அந்த கிராமத்தில் உள்ள மிகப் பெரிய சிவன் ஆலயம் சோழ மன்னர்கள் ஆண்ட ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தது. ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் ஸ்வயம்பு லிங்கமாகும்.
முன்னொரு காலத்தில் இந்த தலத்தில் தம்மைப் பொறுத்தவரை கற்பில் சிறந்து விளங்கி வாழ்ந்து வந்து கொண்டு இருந்த தாருகாவன முனிவர்கள் என்பவர்கள் தான் என்ற அகந்தை கொண்டு அலைந்தனர். பல வரங்களையும் பல சக்திகளையும் பெற்று இருந்தவர்கள் தாம் பெற்ற அனைத்துமே தாம் செய்த வேள்விகள், யாகங்கள் மற்றும் தவத்தினால்தான் என்ற எண்ணத்தில் தம்மையே கடவுளுக்கு இணையாகக் கருதி வாழத் துவங்கினார்கள். அவர்கள் ஆலயங்களை மதிக்காமல் தாம் உள்ள இடங்களே ஆலயங்கள் எனக் கருதி வாழத் துவங்க அதைக் கண்ட மற்ற ரிஷி முனிவர்கள் சிவ பெருமானிடம் முறை இட்டனர். ஆகவே அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க நினைத்த சிவ பெருமான் விஷ்ணுவை அழைத்து அந்த தாருகாவன முனிவர்கள் முன்னால் மோகினியாகச் சென்று அவர்களின் கற்பை கலைக்குமாறுக் கூறினார். விஷ்ணுவும் அவர்கள் முன்னால் மோகினி உருவில் சென்று அவர்களை மயக்கி அவர்களின் தவத்தைக் கலைத்து அவர்களது சுயக் கட்டுப்பாட்டை இழக்க வைத்தார்.

அதே நேரத்தில் சிவபெருமானும் தன்னை ஒரு அழகான ஆண் மகனைப் போல மாற்றிக் கொண்டு முனிவர்களின் மனைவிகளிடம் சென்று பேச்சுக் கொடுத்து தன் அழகில் அவர்களை மயங்க வைத்து அவர்களின் கற்பையும் கலைத்தார். சிவபெருமானின் அந்த நாடகத்தை அறிந்து கொண்ட தாருகான முனிவர்கள் தாம் சிவ பெருமானைவிட அதிக சக்தி பெற்றவர்கள் எனவும் அவருக்கு தமது சக்தியைக் காட்ட வேண்டும் என்பதற்காகவும் ஒரு வேள்வியை துவக்கி அதில் எரிந்த ஹோம குண்டத்தில் இருந்து சில புலிகளையும் , மானையும், பாம்புகளையும் படைத்து அவற்றை சிவபெருமானை கொன்றுவிட்டு வருமாறு அனுப்பினார்கள். சிவபெருமானோ அந்த புலிகள் அனைத்தையும் கொன்று அவற்றின் தோலை தமக்கு உடையாக மாற்றிக் கொண்டு மானை தனது இடது கரத்தில் பிடித்து வைத்துக் கொண்டார். பாம்புகள் வந்தபோது அவற்றைக் கொன்று தனக்கு மாலையாக அணிவித்துக் கொண்டார். அடுத்து அந்த முனிவர்கள் பல பூதகணங்களை ஏவ அவர்கள் அனைத்தையும் நொடிப் பொழுதில் சிவபெருமான் துவம்சமாக்க முனிவர்கள் பயந்து போயினர். தாம் கடவுளுக்கு இணையானவர்கள் அல்ல, சாதாரண மனிதர்களை விட, முனிவர்கள் ரிஷிகளை விட உயர்ந்தவர்கள் , ஆனால் கடவுளுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதை உணர்ந்துகொண்டு சிவபெருமானிடம் தமது இறுமாப்புக்கு மன்னிப்புக் கேட்க அவர் அவர்களை மன்னித்து அவர்களுக்கு அங்கயே காட்சி தந்து சிவலிங்கமானார். சிவபெருமான் அவர்களுக்குக் காட்சி தந்த இடத்திலயே பின்னர் ஆலயமும் எழுந்தது. கிழக்கு நோக்கி லிங்க உருவில் காட்சி தருகிறார் தாருகனேஸ்வரர் அல்லது பரைத்துறைநாதர் என்ற சிவபெருமான். அவருடைய மனைவியான பார்வதியோ தெற்கு நோக்கி அமர்ந்தவாறு பசும்பொன் மயிலாம்பிகை அல்லது ஹேமா வர்ணாம்பிகையாக காட்சி தருகிறார்.
