சாந்திப்பிரியா
அம்மை நோய் வந்தவர்கள் வீட்டில் உள்ளவர்கள், நகரத்திலோ கிராமத்திலோ எங்கிருந்தாலும், யாராக இருந்தாலும் ஜாதி பேதம் இன்றி அவர்கள் மாரியம்மன், சீதளமாதா மற்றும் ரேணுகா தேவி போன்றவர்களது ஆலயங்களுக்கு சென்று அன்னையின் கோபம் குறைய வேண்டும், அம்மை நோய் குணமாக வேண்டும் என்று வேண்டுதல் செய்வது பொதுவான வழக்கமாக இருந்து வருகிறது. பல்லாண்டுகளாக அம்மை நோய் என்றாலே பயந்திடும் மக்களின் மன பயம் குறைந்து கொண்டே வந்தாலும் ஓரளவு இனம் புரியாத பயமும் தொடர்வதால் இன்றும் மாரியம்மனின் கோபத்துக்கு ஆளாக விரும்பாத மக்கள் அவளை ஆராதித்து வேண்டுகின்றார்கள். ஆனால் இந்த வகை வழிபாட்டில் பெங்களூரில் கிடைத்த ஒரு செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. அம்மை நோய் தீர அந்த நோய் தேவதைகளை கட்டுப்படுத்தி வைத்து இருக்கும் மாரியம்மனை வழிபடும் மக்களைப் போலவே 18 ஆம் நூற்றாண்டில் பல உயிர்களை பலி கொண்ட பயங்கரமான பிளேக் எனும் வியாதியினால் அவதியுற்ற பெங்களுர் நகர மக்கள் பிளேக் அம்மன் எனும் பெயரில் ஒரு இனம் தெரியாத தேவியை வணங்கி, அவளுக்கு ஒரு வழிபாட்டு தலத்தையும் அமைத்து அங்கு வழிபட்டுள்ளார்கள். அந்த பிளேக் அம்மன் என்பவரை ராஜராஜேஸ்வரி அம்மன் என்று சிலர் குறிப்பிட்டாலும், அந்த ராஜராஜேஸ்வரி அம்மன் ஸ்ரீ சக்கர நாயகி அல்ல என்பது தெளிவு ஆகும். ஒருவேளை பிளேக் அம்மன் என்பவள் மாரியம்மனின் துணை தெய்வமாக இருக்கலாம். ஆனால் பிளேக் அம்மனின் அம்சத்தைப் பற்றிய எந்த ஒரு குறிப்பும் எந்த புராணத்திலும் இல்லை, கிராம தேவதையின் கதைகளில் கூட காணப்படவில்லை என்பதினால்தான் இந்த அம்மனின் அவதாரம் அதிசயமாக உள்ளது.
பிளேக் நோயைப் பற்றிய சிறு செய்தி. பிளேக் என்பது எண்டேரோ பாக்டீரியா எனும் நுண்ணுயிர்க் கி௫மியினால் பரவும் மிகக் கொடிய நோய். அது பெரும்பாலும் எலிகள் மூலமும் கொசுக்கள் மூலமும் பரவும். பிளேக்கில் மூன்று வகை பிளேக் வியாதிகள் உள்ளன. அவற்றில் மனித குல வரலாற்றிலேயே பல உயிர்களை பலி கொண்ட கருப்பு பிளேக் என்பது பயங்கரமானது. உடலில் கொப்புளத்தை ஏற்படுத்தி, அதில் இருந்து ரத்தம் சிந்த வைக்கும். அடுத்த சில மணி நேரத்தில் கடுமையான குளிர் ஜுரம், வாந்தி பேதி என வந்து தாங்க முடியாத உடல் வழியையும் தந்து ஓரிரு நாட்களிலேயே அந்த நோய் வந்தவர்களுக்கு மரணத்தைத் தந்து விடுமாம். 18 ஆம் நூற்றாண்டில் உலகின் சில இடங்களில் பரவி பல உயிர்களை பலி கொண்ட இந்த நோய், ஆராய்ச்சி, சுகாதாரம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தற்காலத்தில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டாலும் அது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடவில்லை என்கிறார்கள். மீண்டும் 19 ஆம் நூற்றாண்டில் அங்கும் இங்கும் சிறிதளவு தோன்றி வந்துள்ளது என்கிறார்கள். ஒன்று மட்டும் நிச்சயம். பிளேக் நோய் பற்றியவர்கள் உயிர் பிழைத்தது இல்லை. 18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, பாம்பே, கல்கத்தா, ஹைதராபாத் மற்றும் மைசூர் போன்ற இடங்களை இந்த வியாதி தாக்கி உள்ளது.இந்த நோயின் பயங்கரத்தை 1896 முதல் 1899 ஆம் ஆண்டுகளில் பாம்பே, கல்கத்தா, மைசூர், தார்வாட் மற்றும் ஹைதிராபாத்தில் வாழ்ந்திருந்த மக்கள் அனுபவித்து உள்ளார்கள்.
1898 ஆம் ஆண்டில் பெங்களூரில் உள்ள கன்டோன்மண்ட் பகுதிக்கு வந்து இறங்கிய ரயில்வே பிரிவை சார்ந்த ஒரு தொழிலாளி மூலம் இந்த வியாதி இங்கு பரவத் துவங்கியது.அடுத்து அது பிற பகுதிகளுக்கும் பரவியது. அந்த பயங்கரம் தொடர்ந்தபோது வெளி மானிலங்களில் இருந்து வந்த மக்களுக்கு நகரில் நுழைய பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. விசா அனுமதி போல அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே, தடுப்பு ஊசி போட்டுக் கொண்டு இருந்தவர்கள் மட்டுமே நகரில் வர அனுமதிக்கப்பட்டார்கள். பல மக்கள் நகரத்தை விட்டு வெளியேறி விட்டார்கள். ஆங்கிலேய அரசில் பணியாற்றிய ஐரோப்பியர்கள் கூட தமது குடும்பங்களை தம் நாட்டுக்கே திருப்பி அனுப்பினார்கள். இதனால் பெங்களுர் நகர மக்களின் வாழ்க்கையே மாறுதலுக்கு உள்ளானது.
இந்த நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த அனைத்து முயற்சிகளும் தோற்றுப் போன நிலையில் அங்காங்கே இந்த நோய் பரவிய இடங்களில் இருந்த மக்கள், முக்கியமாக தியாகராஜா நகர் மற்றும் சித்தபுரா போன்ற இடங்களில் இருந்த பெரியவர்கள் அதுவரை முன்பின் தெரிந்திராத பிளேக் அம்மனிடம் இந்த நோயைக் கட்டுப்படுத்தி தம்மைக் காப்பாற்றுமாறு வேண்டினார்கள். இந்த நோய்கு காரணமான தீமை தரும் கிருமிகளின் தன்மையை அறிந்திடாமல் இந்த நோய் பரவி மனித உயிர்களைக் காவு கொள்வதின் காரணம் தெய்வக் குற்றங்களான வேசித்தனம், வேதங்களைப் பழித்தல்,பேராசை, ஆன்மீக நாட்டம் இன்மை, முறைகேடான வாழ்க்கை போன்றவை பெருகியதினால் ஏற்பட்டுள்ளது என நம்பினார்கள். அதனால் கடவுளை வேண்டி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதைத் தவிற இந்த நோயின் கடுமையைக் குறைக்க வேறு வழி கிடையாது என்று நினைத்தார்கள்.
இதனால் முன்பின் தெரிந்திராத ஒரு அம்மனை பிளேக் அம்மன் எனக் கருதி அவளிடம் தெய்வ குற்றங்களுக்கான மன்னிப்பைக் கோரியது மட்டும் இல்லாமல் அவளுக்கு வழிபாட்டுத் தலமும் அமைத்தார்கள். இந்த நிலைக்கான காரணம் ஒரு பக்தரின் கனவில் தோன்றிய அம்மன் தானே பிளேக் அம்மன் எனவும், தம்மையும் மாரியம்மனை வணங்கித் துதிப்பது போல வணங்கி துதித்தால், தன் கட்டுப்பாட்டில் உள்ள பிளேக் நோயின் தன்மையைக் கட்டுப்படுத்துவதாகக் கூறினாராம். அந்த பக்தரின் மூலம் கிடைத்த விவரங்களின் அடிப்படையில்தான் நகரத்தில் இருந்த பெரியவர்கள் பிளேக் அம்மன் என்ற தேவியை வழிபாட்டு பிளேக் நோயைக் கட்டுப்படுத்த அவளிடம் வேண்டிக் கொள்ளத் துவங்கினார்கள். ஆனால் பிளேக் அம்மனும் மாரியம்மன் குடும்பத்தை சேர்ந்தவளா, மாரியம்மனின் துணை அவதாரமா அல்லது தானாகவே அங்கு வந்து அவதரித்தவளா என்பது விளங்கவில்லை. இப்படியாகத்தான் இந்தியாவில் வேறு எந்த இடத்திலுமே இருந்திடாத, தெரிந்திடாத பிளேக் அம்மன் எனும் தேவியை விநோதமாக பெங்களூரில் இருந்தவர்கள் மட்டுமே நம்பி அவளிடம் சரண் அடைந்தார்கள்.
பிளேக் நோய் பரவியபோது பிளேக் அம்மனை வழிபட்ட காலகட்டத்தை சேர்ந்த சிலர் கூறுகையில் பிளேக் அம்மாவை தினமும் வணங்கிவிட்டு வீடு திரும்பிய மக்கள் தத்தம் வீட்டு வாயில்களில் ‘பிளேக் அம்மா நாளை வருக’ என கன்னடத்தில் எழுதி வைத்து விட்டு அதன் முன் கோலம் போடுவார்களாம் என்றும், அதனால் பிளேக் நோயைப் பரப்ப வீடுகளில் நுழைய வரும் பிளேக் அம்மனின் கணங்கள் வாயிலில் வந்து வாசகத்தைப் பார்த்து விட்டு அழையா விருந்தாளியாக வீடுகளில் நுழைய விரும்பாமல் திரும்பச் சென்று விடுவார்களாம். பிளேக் அம்மன் ஆலயத்துக்கு செல்பவர்கள் வெள்ளிக்கிழமைகளில் எலுமிச்சைப் பழத்தை வெட்டி அதனுள் உள்ள சக்கையை எடுத்து விட்டு அதில் எண்ணை ஊற்றி திரி வைத்து ஆலயத்தின் வெளியில் அந்த விளக்கை ஏற்றி வைத்து பிளேக் அம்மனை வழிபடுவார்களாம்.
இந்த நிலையில்தான் பெங்களூரில் உள்ள தியாகராஜா நகரிலும் பிளேக் அம்மன் ஆலயம் எழுந்தது. அங்குள்ள ஆலயம் (ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பிளேக் அம்மன் ஆலயம், 2ஆம் பிளாக், 2ஆம் மெயின் சாலை, தியாகராஜா நகர்) நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயமாம். முதலில் அங்கு இரண்டு பாறைக் கற்களையே பிளேக் அம்மனாகக் கருதி வழிபாட்டு வந்தார்களாம். ஆனால் காலப்போக்கில் அங்கு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி எனும் தேவியின் சிலையும் வைத்து வழிபடப்பட்டது. ஆனால் இந்த ஆலயம் மிகக் குறுகலான சாலையில் உள்ளது. அதைப் போல இன்னொரு பிளேக் அம்மன் ஆலயம் பனெர்கட்டா சாலை வழியே ஜிகினி செல்லும் சாலையில் அனெக்கல் தாலுக்காவிலும் உள்ளது. இந்த ஆலயம் பிரதான சாலையிலேயே அமைந்துள்ளது. ஆனால் ஆலயங்களில் சன்னதியில் இருந்த அம்மனை புகைப்படம் எடுக்க விடவில்லை.
நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட பிளேக் அம்மன் ஆலயத்துக்கு இன்றும் பக்தர்கள் திரளாகவே சென்று பல்வேறு வேண்டுகோள்கள் நிறைவேற வேண்டிக் கொண்டு எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள். பெங்களூரை கொடூரமாக தாக்கி பல உயிர்களை பலி கொண்ட பிளேக் நோய்க்கு அடையாளமாக இன்றும் இந்த இரண்டு ஆலயங்கள் சாட்சியாக நிற்கின்றன.
: மேலே உள்ள படம்:
தியாகராஜா நகரில் உள்ள பிளேக் அம்மன் ஆலயம்
——————————————————————–
: கீழே உள்ள படங்கள் :
ஜிகினி செல்லும் சாலையில் அனேக்கல் தாலுக்காவில்
உள்ள ஆலயத்தின் படங்கள்